ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி

Status
Not open for further replies.

Anjali

Well-known member
Wonderland writer
கனவிலே மிதக்கும் விழிகள் - கதை திரி
 

Anjali

Well-known member
Wonderland writer
கனவிலே மிதக்கும் விழிகள்


அத்தியாயம் - 1

ஆதவனின் அக்னி கரங்கள் தனது உக்கிரம் மொத்தத்தையும் காட்டும் உச்சி வெயில் பொழுது….

தனது அருகில் அமர்ந்திருந்த சதிஷின் தொடையை கிள்ளி "டேய் என்னடா இன்னுமா டைம் ஆகலை' எனக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சிடுச்சு… அது புரியாம சைன்ஸ் சார் வேற, முடிக்காமல் அவர் பாட்டுக்கு பாடம் நடத்திக்கிட்டே போறாரு... பசியில் காதெல்லாம் அடைத்து ஏதோ ஊமைப்படம் பார்க்கிற மாதிரி இருக்குடா" என்றான் ரமேஷ் .

"இந்த கருப்பன் எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலை, இன்னும் மணி அடிக்காம... இன்னைக்கு வேற எனக்கு பிடிச்ச சாப்பாடு" என வயிற்றை பிடித்து கொண்டு ஜன்னல் வழியாக தெரியும் மணி அடிக்கும் இரும்பு தட்டு தொங்கும் இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் ஏழாவது படிக்கும் ரமேஷ்.

"டேய்..இன்னைக்கு திங்கட்கிழமை தானே டா, அப்படினா இன்னைக்கு என்ன சாப்பாடு" ? என கேட்ட சதிஷை பார்த்து "ஏண்டா ! என்ன சாப்பாடுன்னு கூட உனக்கு தெரியாதா...? நீயெல்லாம் எப்படி தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்ககுற..? எனக்கெல்லாம் எந்த நாளில் எந்த சாப்பாடுன்னு மனப்பாடமா தெரியும்" என பெருமையாக யூனிஃபார்ம் காலரை தூக்கி விட்டுக்கொள்ள…

சதிஷோ "நீ சரியான சாப்பாடு ராமன்' நான் என்ன உன்ன மாதிரியா"...? என நண்பர்கள் இருவரும்...அங்கு ஒருவர் உயிர் போக பாடம் எடுத்துக் கொண்டிருப்பதை கண்டுகொள்ளாமல் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டிருந்தனர்.

பின்னர் சற்று நேரத்திலேயே தங்கள் சண்டையை மறந்து…காலையில மட்டும் ஒன்பது மணிக்கு முன்னாடி சீக்கிரமா மணி அடிச்சிடுறாங்க, ஆனால் மதியம் சாப்பிடும் போதும், சாய்ந்திரம் வீட்டுக்கு போகும் போது மட்டும் தான் எப்பவும் இப்படி லேட் ஆகுது.. முதல்ல இந்த கருப்பனை ஒரு வழி பண்ணனும் டா. அவன் தான் எல்லாத்துக்கும் காரணம்" என பள்ளியில் வேலை செய்யும் ஊழியனை திட்டிக்கொண்டே 'புத்தகத்தை எல்லாம் மூடி வைத்துவிட்டு, தட்டை மட்டும் லேசாக பள்ளி பையிலிருந்து இருந்து வெளியே எடுத்து வைத்தவன், மணி அடித்தவுடன் ஓடுவதற்கு தயாராக இருந்தான்.

சரியாக அதேநேரம்.. டிங்.. டிங்.. டிங்.. என மணியோசை கேட்க, இப்போது பார்வை தங்கள் ஆசிரியர் மேல் திரும்பியது…"அய்யயோ ! ஒருவேளை பெல் அடிச்சது சார் காதுல விழலையோ" என பரிதாபமாக அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, வெளியே மற்றைய வகுப்பு மாணவர்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை ஒரு ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் ஆசிரியர் விடைபெற்று செல்ல..கூண்டில் இருந்து பறந்து செல்லும் பறவையை போல சிரித்துக் கொண்டே வெளியில் ஓடினர் அனைவரும். அதற்குள் ஒரு பெரிய வரிசையே உணவு வழங்கும் இடத்தில் நிரம்பி இருக்க,கடுப்புடன் வரிசையில் நின்றனர் இருவரும்.

இன்று வெஜிடபிள் ரைஸ்,அவித்த முட்டை ஆசையோடு அதை வாங்கி மரத்தடியில் அமர்ந்த இருவரும்...மீண்டும் யாரையோ தேட தொடங்கினர்.

"இன்னைக்கு நேரமே சரியில்ல டா…. முதலில் ஸ்கூல் பெல்,அப்பறம் நம்ம சயன்ஸ் சார்,இப்போ இவங்க ரெண்டு பேரும்…தட்டுல இருக்குற முட்டை வேற என்னை 'சாப்பிடு சாப்பிடுன்னு சொல்றது போலவே இருக்கு" என தங்கள் நிலையை வெறுத்தப்படி அமர்ந்திருக்க...அப்போது சதிஷ் "டேய் அதோ பாருடா" என ஒரு திசையில் கைகாட்டி சொல்ல…

அங்கே தன் தோழியுடன் அடிமேல் அடிவைத்து பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி. பிங்க் கலர் செக்ட் டாப்,சிமெண்ட் கலர் பாண்ட் மற்றும் ஓவர் கோர்ட் என பள்ளி சீருடையில்...இடை வரை தாண்டிய முடியை பின்னலிட்டு மடித்து ரிப்பனால் கட்டியிருக்க... நெற்றியில் சிறிய மெரூன் பொட்டு,காதில் சிறிய ஜிமிக்கி என குழந்தைத்தனம் மாறாத முகத்தில்… தனது பேச்சிலோ செய்யலிலோ கொஞ்சமும் சிறுபிள்ளை தனத்தை வெளிப்படுத்தாமல் ஒரு நிமிர்வுடன் வந்தவள் தன் நண்பர்கள் அருகே அமர்ந்தாள்.

"ஏன் இன்னும் ஆடி அசைஞ்சு வர வேண்டியது தான...மனுஷனுக்கு இருக்குற பசி தெரியாமல்" என வாய்த்திறந்தவனை முந்திக்கொண்டு…"ஏண்டா... உனக்கே நீ கேட்கிற கேள்வி அநியாயமா தெரியலை.
நீ படிகிறது ஏழாவது, நான் ப்ளஸ் டூ " அதுவும் இன்னைக்கு கெமிஸ்ட்ரி பிராக்டிகல் சொல்லிக் கொடுத்தாங்க, அதனால் லேப்ல இருந்தோம், அதான் வர லேட் ஆகிடுச்சு" என அமர முயன்றவள் அப்போது தான் அங்கு இன்னும் ஒருவர் இல்லாததை கண்டு

"டேய் எங்கடா சின்னகுட்டி" என்க...இருவரும் தலையில் கைவைத்து "என்னது திரும்பவும் முதலில் இருந்தா"..? எனக்கு இன்னைக்கு சாப்பாடே வேண்டாம்.நான் விரதம் இருக்க போறேன்" என்றான் ரமேஷ்.

"ஏண்டா நான் தான் வர லேட் ஆகிடுச்சு' நீங்களாவது அழைத்து வந்திருக்கலாம் இல்ல " என சொன்னவாறே ஆறாம் வகுப்பை நோக்கி நடந்தாள் வர்ஷினி.

அங்கு அறையே காலியாக இருக்க..ஒரு இருக்கையில் தலையை கவிழ்த்த நிலையில் படுத்திருந்த தர்ஷினி அருகில் சென்றவள்... "சின்னகுட்டி" என குரல் கொடுக்க...விழியில் நீர் தேங்க தன் அக்காவை பார்த்தவுடன் 'உதடு பிதுக்கி அழ தயாராக,அவளை இடையோடு அணைத்து கண்ணீரை துடைத்தாள் மித்ரவர்ஷினி.

"என்னடா எதுக்கு அழற' யாராவது ஏதாவது சொன்னாங்களா"..? என கேட்க...அவளோ தேம்பியவாறே "மாத்ஸ் சார் என்ன திட்டிட்டாங்க தெரியுமா? நேத்தே புது நோட் வாங்கிட்டு வர சொன்னாங்க.. நான் அம்மா கிட்ட சொன்னேன், ஆனா அம்மா நாளைக்கு வாங்கி தரேன்னு சொல்லிட்டாங்க..?" என திரும்பவும் அழுகையை ஆரம்பிக்க, "சரி அழாதே நாளைக்கு கண்டிப்பா வாங்கலாம். இப்போ என் செல்லக்குட்டி சாப்பிட வருவியாம், அப்போ தான் நானும் சாப்பிடுவேன்" என்க...அவளும் ஆல்ரெடி பசியில் இருந்ததால் உடனடியாக தன் அக்காவுடன் சென்றுவிட்டாள்.

எப்படியும் அக்கா கிட்ட சொன்னால் கண்டிப்பாக நடந்துவிடும் என்பது திவ்யதர்ஷினியின் நம்பிக்கை. அதனால் தான் அதுவரை இருந்த கவலை மறந்து அவளுடன் நடந்தாள். தன் தாயை விட எப்போதும் ஒருபடி மேல் தான் மித்ரா இவளுக்கு. இருவருமே சென்று உணவை வாங்கி வந்தனர்.

அனைவரும் சாப்பிட அமர…"நாங்களே சீக்கிரம் வந்துட்டோம். ஆனா மகாராணி வர இவ்வளவு நேரமா" என கேட்டுக்கொண்டே சாப்பிட தொடங்கினர்.

பள்ளியில் பத்தாவது வரை அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு உண்டு. ஆனால் மேல்நிலை வகுப்பான பதினொன்றாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு இல்லையென்றாலும் விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்,யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

அதுவும் தர்ஷினி ஒழுங்காக சாப்பிடாமல் ஒல்லியாக இருப்பாள்.பள்ளியில் தரும் உணவை சாப்பிட்டாலும் வீட்டு உணவு என்றால் ஒரு பிடி அதிகமாக சாப்பிடுவாள். இந்த உணவைவிட வீட்டில் உண்ணும் பழைய சாதம் எல்லாருக்கும் அமுதம் தானே..? அதனால் பிளஸ் ஒன் சேர்ந்தது முதல் வீட்டில் விழும் வசவுகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன் தங்கைக்காக உணவு எடுத்து வந்துவிடுவாள் வர்ஷினி.

அதுவும் இன்று லெமன் ரைஸ்,உருளைக்கிழங்கு பொரியல் இருவருக்குமே பிடித்த லன்ச்..வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையும் முட்டையையும் தங்கையிடம் கொடுத்துவிட்டு, பள்ளியில் கொடுத்த உணவை சாப்பிட தொடங்கினாள்.

அனைவரும் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டே உணவை ஒருவழியாக சாப்பிட்டு முடித்தனர்.

மாலை பள்ளி முடிந்தவுடன் நால்வரும் ஒன்றாக பேசிக்கொண்டே தங்கள் வீடு நோக்கி செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். இன்றும் வர்ஷினி தன்னுடைய சைக்கிளை தள்ளிக்கொண்டே, வாண்டுகளோடு அரட்டை அடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.

அதுவரை முகத்தில் உறைந்திருந்த புன்னகை, இப்போது துணி கொண்டு துடைத்தது போல் வெறுமையாக இருந்தது. எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இருவருமே ஏதோ பொம்மை போல் உள்ளே நுழைந்தனர்.

வாசலை கடக்கும் முன்பே 'யாரு கண்ணில் படக்கூடாது' என்று நினைத்தார்களோ அவரே இருவரை தடுத்து நிறுத்தினார்.

"ஏய் நில்லுங்கடி..பள்ளிக்கூடம் முடிஞ்சு எவ்வளவு நேரம் ஆகுது,நானும் வருவீங்க வருவீங்கன்னு வாசலையே பார்த்துட்டு இருக்கேன்.ஊரு பிள்ளைங்க மொத்தமும் வீடு போய் சேர்ந்திருக்கும். ஆனா நீங்க மட்டும் ஆடியசைஞ்சு வரீங்க..? உங்களை சொல்லி குத்தமில்ல, எல்லாம் உள்ள ஒன்னும் தெரியாதவ போல இருந்துக்கிட்டு உங்களை ஆட்டுவிக்கிறா இல்ல, உங்க ஆத்தாகாரி அவளை சொல்லனும்" என இவர்களில் ஆரம்பித்து அவர்களது தாயில் முடித்தார்.

'உன்னை பார்க்க பிடிக்காமல் தான் நாங்களே லேட்டாக வரோம், அது தெரியாமல் பேச்சை பார்' என மரகத பாட்டியின் திட்டிற்கு மனதுக்குள்ளேயே கவுண்டர் கொடுத்து கொண்டு வெளியே பயந்தது போல் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தனர் இருவரும்.

"ஏதோ சொல்லுவாங்களே 'எருமை மாட்டு மேல மழை பெய்த மாதிரின்னு' அது போல என்ன சொன்னாலும் வாங்கிட்டு நிற்க தான் தெரியும்.இனிமே இப்படி பண்ணமாட்டேன்னு வாயை திறந்து சொல்லுதுங்களா" என நிறுத்தாமல் திட்டிக் கொண்டே இருக்க...வாசலில் கேட்ட கார் சத்தத்தில் மரகதம் பாட்டியின் வாய் சட்டென்று மூடிக்கொண்டது.

"ஆஹா !... வில்லி கேரக்டரில் இருந்து நல்லவர் கேரக்டருக்கு நடிக்க ஸ்டார்ட் ஆகிட்டாங்க. நீ வா சின்ன குட்டி இனிமேல் வாயை திறக்காது இந்த ஓல்டு லேடி" என தங்கையோடு உள்ளே நுழைந்தாள்.

கடகடவென அறைக்குள் நுழைந்த இருவரும் மின்னல் வேகத்தில் யூனிபார்மை மாற்றிக்கொண்டு கையில் புத்தகத்தோடு ஹாலில் வந்து அமர்ந்தனர்.

காரில் இருந்து இறங்கிய சண்முகசுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். வெள்ளை வேட்டி சட்டையில் முறுக்கு மீசையோடு முகத்தில் சிரிப்பென்பது சிறிதும் இன்றி எந்நேரமும் ஓர் முறைப்போடு திரியும் மனிதன். வர்ஷினி,தர்ஷினியின் தந்தை.

பேருக்கு மட்டுமே தந்தை. ஒருநாளும் அன்பாக பேசியதாக இருவருக்குமே நினைவில்லை. இவ்வளவு ஏன் இதுநாள் வரை சாப்டீங்களா என்று கூட கேட்டதில்லை.அவர்களுக்கும் இது வருட கணக்காக பழகிவிட்டது.

அவர்களை பொறுத்தவரை "அப்பா என்பவர் வெறும் ரேங்க் கார்டில் கையெழுத்து போட மட்டும் தான்" என்பது மனதுக்குள் ஆழமாக பதிந்துவிட்டது.

மற்றபடி அவர்களின் மொத்த தேவையையும் பார்த்துக் கொள்வது அவர்களின் தாய் சாந்தி தான். அவர் ஒன்றும் வேலைக்கு சென்று வரும் வருமானத்தில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ளவில்லை. வீட்டு செலவுக்கு என கொடுக்கப்படும் சொற்ப பணத்தை மிச்சம் பிடித்து மகள்களுக்கு செய்வார்.

அதுவும் இல்லையென்றால் நினைக்கவே மனம் கனத்து போகும் சாந்திக்கு...இது ஒன்றும் பணத்திற்கு கஷ்டப்படும் குடும்பம் இல்லை.

அந்த ஊரிலேயே விரல்விட்டு என்னும் பணக்காரர்களில் ஒருவர்.பெரிய மச்சி வீடு,தோட்டம்,வயல்,சர்க்கரை ஆலை என நல்ல வசதிமிக்க குடும்பம் தான், ஆனால் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் எது தேவை என பார்த்து செய்ய தான் மனம் இல்லை.

சண்முகசுந்தரம் உள்ளே நுழையும் போதே வெளி திண்ணையில் அமர்ந்திருக்கும் அன்னையிடம் "என்னம்மா சாப்பிட்டியா..?" என இரு வார்த்தைகளாக பேசாமல் வரமாட்டார். ஆனால் மனைவியிடமோ மகள்கள் இடமோ பேச மட்டும் இதுவரை வாய்த்திறந்ததில்லை.

உள்ளே நுழைந்தவர் ஹாலின் ஒரு மூலையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சோஃபாவில் அமர்ந்தார்.

அதற்குள் அவர் வந்ததை அறிந்த சாந்தி கையில் செம்பு நிறைய தண்ணீருடன் ஹாலுக்கு வந்துவிட... அவரை நிமிர்ந்து கூட பார்க்காமல் தண்ணீரை வாங்கி பருகியவர் அறைக்குள் நுழைந்து கொண்டவர்,சிறிது நேரத்தில் வெளியே கிளம்பி சென்றும் விட்டார்.

அதுவரை புத்தகமும் கையுமா அமர்ந்திருந்த இருவரும் அதனை கீழே வைத்துவிட்டு எழுந்தனர்.

"அம்மா பசிக்குது மா ஏதாவது செஞ்சி கொடு" என்ற மகளின் தலையை கோதியவாறு கலங்கும் விழிகளை மறைத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் சாந்தி.

சொந்த வீட்டில் கூட உரிமையாக பிடித்ததை கேட்டு வாங்கி சாப்பிட கூட முடியாத நிலையில் இருக்கும் மகள்களை நினைத்து கண்ணீர் மட்டுமே அவரால் சிந்த முடிந்தது. ஏனென்றால் அவரும் ஒரு அடிமை வாழ்க்கையை தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

'தன் வயிற்றில் பிறக்காமல் வேறு எங்கேயாவது பிறந்திருந்தால் இந்நேரம் சந்தோஷமா வாவது இருந்திருப்பார்களோ என நினைக்காமல் இருக்க முடியவில்லை'…
அனைத்தையும் எண்ணி கலங்கியபடி அவர்களுக்கு சாப்பிட சிற்றுண்டி செய்ய தொடங்கினார்.

வகை வகையாக செய்து கொடுக்க முடியவில்லை என்றாலும் வீட்டில் உள்ளதை வைத்து அடிக்கடி ஏதாவது செய்து கொடுப்பார், பிள்ளைகள் ஏங்கி போய்விட கூடாதே என்பதால்…

வீட்டில் இருந்த இட்லி மாவில் வெங்காயம், கேரட், பீன்ஸ்,பச்சைமிளகாய் என அனைத்தையும் வதக்கிக் கொட்டி கார குழி பணியாரம் செய்து முடித்தவர் அவர்கள் இருவருக்கும் தட்டிலிட்டு கொடுக்க...அவர்களுக்கு அதுவே மகிழ்ச்சியாக இருந்தது.

இருவரும் பேசியபடி சாப்பிட்டு கொண்ட வெளியே எட்டி பார்க்க...பாட்டி திண்ணையில் அமர்ந்தபடி ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு தன் தங்கையிடம் கையசைக்க... அவளும் சென்று டிவியை ஆன் செய்தாள்.

மரகதம் பாட்டியோ, தந்தையோ இருக்கும் போது தொலைகாட்சி பார்க்க முடியாது. அதுவும் மரகதம் திட்டும் திட்டில் காதில் இருந்து இரத்தமே வந்துவிடும்.அதன்பின் டிவி பார்க்கும் ஆசையே விட்டுவிடும் இருவருக்கும்.

பள்ளியில் தினமும் உடன் பயிலும் பிள்ளைகள் வந்து சொல்லும் டிவி நிகழ்ச்சியை ஒரு நாளாவது பார்க்க வேண்டும் என்ற ஆசையோடு வருபவர்களை... தன் பேச்சாலயே ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுவார் மரகதம்.

அதனால் எப்போதும் அவர் இல்லாத நேரத்தில் தான் திருட்டு தனமாக டிவி பார்ப்பது. வயலில் வேலை நடந்தால் மட்டுமே அங்கு செல்வார்,மற்ற நேரத்தில் எப்போதும் வீட்டில் தான் இருப்பார் என்றாலும் சத்தமாக பேசினால் மட்டுமே காதில் விழும்.அதுவும் திண்ணையில் அமர்ந்திருந்தால் சாப்பிடும் போது தான் உள்ளே வருவார். அதனால் அந்த நேரத்தை இருவரும் தினமும் பயன்படுத்தி கொள்வார்கள்.இன்றும் அதுவே தொடர்ந்தது.

ஒலியின் அளவை மட்டும் குறைத்து இருவரும் பார்க்க தொடங்கினார்கள். அவர்களுக்கு காவலுக்கு இருப்பது போல் வாசல் கதவின் அருகில் அமர்ந்து கொண்டு தன் மாமியார் மேல் ஒரு கண்ணை பதித்தபடி இருந்தார் சாந்தி. அவரால் முடிந்தது மகள்களின் இதுபோன்ற சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்ற தன்னால் முடிந்ததை செய்வது ஒன்று தானே…

டிவி பார்க்கும் போது தான் மித்ராவிற்கு தங்கை சொன்னது நினைவு வந்தது.

"அம்மா.. திவ்யா ஏதோ நோட் வாங்கனும்னு சொன்னா...இன்னைக்கு டீச்சர் வேற திட்டிடாங்கனு ஒரே அழுகை" என சொல்ல, அவரும் பெருமூச்சை வெளியிட்டவர் உள்ளே சென்று பணம் எடுத்து வந்து கொடுத்தார்.

"இன்னைக்கு தான்டா பால்காரர் காசு தந்தார், நேத்தே திவ்யா சொன்னா ஆனா அப்போ காசு இல்ல" என சொல்லியபடி சின்ன மகளை அணைத்துக் கொண்டார்.

அவருக்கு கவலை முழுவதும் சின்னவள் மீது தான்.பெரியவள் எந்த சூழ்நிலைக்கும் தன்னை உடனடியாக பழகிக் கொள்வாள்.மிகவும் தைரியமானவள், இந்த வயதிலேயே தாய்க்கும் சேர்த்து ஆறுதல் சொல்லுவாள்.

ஆனால் சின்னவள் பயந்த சுபாவம் உடையவள் எதற்கும் சகோதரியின் துணையை நாடுவாள். ஆறாவது தான் படிக்கிறாள் என்றாலும் பார்க்க என்னவோ இப்போது தான் நான்காவது படிக்கும் பிள்ளை போல் இருப்பாள். அதுவும் தந்தையை கண்டாள் அப்படி ஒரு பயம். அதனாலேயே அவள் மேல் தாயும் மித்ராவும் அதிகமாக கவனம் கொள்வார்கள்.

அதன்பின் நேரம் செல்ல... பாட்டி உள்ளே வரும் நேரத்தில் டிவியை அணைத்துவிட்டு மீண்டும் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.

முதலில் மரகதம் தனது இரவு உணவை முடித்துக் கொண்டு உள்ளே சென்றுவிட...அதற்குள் வெளியே சென்ற அவர்களின் தந்தையும் வந்துவிட்டார்.

அவரும் உண்டுவிட்டு டிவி பார்க்க அமர்ந்துவிட்டார்.அதன் பின்னரே மகள்கள் இருவருக்கும் உணவை எடுத்துக் கொண்டு பின் வாசலுக்கு வந்தார். அங்குள்ள படிகளில் தோட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்த இருவர் அருகே அவரும் அமர்ந்தார்.

இது மொத்தமும் அவர்களுக்கான நேரம்..தங்கள் அன்னையோடு காலை முதல் நடந்தது அனைத்தையும் பகிர்ந்தபடி உணவை உண்டனர். மித்ரா தனியாக சாப்பிட சின்னவளுக்கு சாந்தியே ஊட்டிவிட்டார்.

மணி பத்தை நெருங்க...அனைவரும் உறங்க சென்றனர்.ஆல்ரெடி சண்முக சுந்தரம் அவர் அறைக்கு சென்றுவிட இவர்களும் தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.

மெத்தையில் வர்ஷினி தர்ஷினி இருவரும் உறங்கிவிட...கீழே தரையில் பாய் விரித்து சாந்தி உறங்க தொடங்கினார்.

மறுநாள் காலையில் உறக்கம் களைந்து எழுந்த மித்ரவர்ஷினி...தன் மேல் ஒரு காலும் கையும் போட்டு உறங்கும் தங்கையை பார்த்து சிரித்தபடி அவள் நெற்றியில் முத்தமிட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

முகம் கழுவி வந்தவள் படிக்க அமர்ந்தாள்…. பிளஸ் டூ என்பதால் எப்போதும் காலையில் சிறிதுநேரமாவது படிக்க ஒதுக்குவாள்.
அவளை பொறுத்தவரை படிப்பு ரொம்ப முக்கியம். ஒருவேளை தன் தாய் படித்திருந்தால் அவருக்கு இந்த நிலை வந்திருக்காது என பலமுறை எண்ணியிருக்கிறாள். அதனாலேயே படிப்பிற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பாள்.மாலை தங்கையொடு செலவழிப்பவள் காலை அவள் தூங்கும் நேரத்தில் படிப்பாள்.பள்ளியிலும் எப்போதும் படிப்பில் முதல் இடம் தான்.

பின்னர் மணி ஆறரை என காட்ட எழுந்து தன் காலைக்கடன்களை முடித்துவிட்டு தங்கையை எழுப்பினாள். "சின்ன குட்டி... சின்ன குட்டி... எழுந்துறுடா, ஸ்கூலுக்கு டைம் ஆய்டுச்சு" என எழுப்ப...அக்கா இன்னும் கொஞ்சநேரம் என மீண்டும் தூக்கத்தை தொடங்க,அவளுக்காக கொஞ்ச நேரம் பொருத்தாள்.

சற்றுநேரம் கழித்து திரும்பவும் எழுப்ப..அவளும் எழுந்து அமர்ந்தாள். அவள் எழுவதற்கு முன்பே மித்ரா குளித்து ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்து தயாராக இருக்க…"அய்யோ அக்கா ரொம்ப டைம் ஆகிடுச்சா" என்றபடி கடகடவென பல் துலக்கி, காக்கா குளியல் ஒன்றை போட்டுவிட்டு பத்துநிமிடத்தில் யூனிஃபார்ம் போட்டு தயாராகிவிட்டாள் சின்னவள்.

"நீ வேகமா செய்ற ஒரே வேலை குளிக்கிறது மட்டும் தான் சின்னகுட்டி" என பேசியபடி அவளுக்கு தலையை வாரிவிட்டு பள்ளி பையோடு வெளியே வந்தனர்.

அந்த நேரத்திற்கு எல்லாம் அவர்களின் தந்தை சென்றிருக்க...அரக்க பறக்க ஆளுக்கு இரு இட்லிகளை முழுங்கிவிட்டு பள்ளிக்கு சென்றனர்.

"சின்ன குட்டி பத்தரமா பிடிச்சிக்கோ" என சொன்னவாறே மித்ரா சைக்கிளை செலுத்த... 'அவளும் விழுந்து விடுவோமோ' என்ற பயத்தில் மித்ராவின் இடையை சுற்றி கைகளை கோர்த்து கட்டிக்கொண்டாள் தர்ஷினி.


சற்றுநேரத்தில் அவர்களின் வாண்டு கூட்டமும் இணைத்துக்கொள்ள.. அதுவரை தொலைந்திருந்த சிரிப்பு தானாக வந்து ஒட்டிக்கொண்டது இருவரிடமும்.
 

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 2

அந்த பெரிய வீட்டில் உள்ள அனைவருமே காலைநேர பரபரப்பில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தனர். ஒருவனை தவிர…

" அனு... பசங்க ஸ்கூலுக்கு எடுத்துட்டு போக சாப்பாடு செஞ்சி முடிச்சிட்டா, நீ போய் அவங்களை கிளப்புற வழியை பார். இப்போவே மணி ஆகிடுச்சு" என தன் மருமகளை கிளம்பினார் மீனாட்சி அந்த குடும்பத்தின் தலைவி.

மருமகளை அனுப்பிவிட்டு திரும்பிய மீனாட்சி தன் அருகே நின்றிருந்த சாரதாவை பார்த்து…"சாரா சின்னவர் வயலுக்கு கிளம்பிட்டார் பாரு, நீ போய் அவருக்கு சாப்பாடு பரிமாறு" என அவரையும் அனுப்பி
வைத்துவிட்டு தனியாகவே மற்ற வேலையை பார்க்க தொடங்கினார்.

திரும்பும் திசையெங்கும் பச்சை பசேல் என்ற வயல்வெளிகளும்,கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் கன்மாய்களும் என வளமிக்க தேனூர் கிராமம்.

அந்த ஊரின் பெயரில் மட்டும் தேன் இல்லை,அங்கு வாழும் மக்களும் அப்படியே. அவர்கள் காட்டும் அன்பும் அரவணைப்பும் தேனை விட தித்திப்பானது என்றால் அது மிகையில்லை.

அந்த ஊரின் பெரிய குடும்பம் என அனைவராலும் அழைக்கப்படும் ஊர் தலைவர் சத்யநாதனின் இல்லம் . அந்த ஊரிலேயே கொஞ்சம் பெரிய அதே நேரம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையான கிராமிய வீடு.

விஸ்வநாதன் சாவித்திரி தம்பதியரின் மூத்த மகன் சத்யநாதன் தந்தைக்கு அடுத்து இப்போது ஊர் தலைவராக இருப்பவர். அவரின் மனைவி மீனாட்சி இல்லத்தரசி.

அவர்களுக்கு ரெண்டு மகன்கள் மூத்தவன் மனோகரன் தங்கள் குடும்ப தொழிலை கவனித்துக் கொண்டிருப்பவன்.அவனின் மனைவி அனுராதா. அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகள் மட்டும் இருக்க….

இளையவன் மதியழகன் இருபத்தி ஐந்து வயது வாலிபன். வீட்டில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் ரொம்பவும் அடாவடி குறும்புக்காரன், வீட்டுக்கு வெளியே வந்தால் எப்படி மாறுவான் என யாராலும் கணிக்க முடியாது.அப்படிப்பட்ட அபூர்வ பிறவி.

சத்யநாதனுக்கு அடுத்து சோமநாதன், அண்ணனுக்கு துணையாய் அனைத்து தொழிலையும் பார்த்துக் கொள்கிறார். அவரின் மனைவி சாரதா. இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன்.மகள் இப்போதுதான் காலேஜ் படித்துக் கொண்டிருக்க...மகன் பதினொன்றாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான்.

சகுந்தலா அந்த வீட்டில் முடிசூடா ராணியாக வலம் வரும் விஸ்வநாதன் சாவித்திரியின் மகள், சத்யநாதன் சோமநாதனின் தங்கை. கணவரோடு அண்ணன் வீட்டிலேயே தங்கிவிட்டவருக்கு ஒரு மகளும் ஒரு மகனும்.

அனு அறைக்குள் நுழைய... இன்னும் படுக்கையைவிட்டு எழாமல் உறங்கிக் கொண்டிருக்கும் கணவனை கண்டு தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

"என்னங்க... என்னங்க..மணி என்னன்னு தெரியுமா..? மாமாங்க ரெண்டு பேரும் எப்பவோ கிளம்பிட்டாங்க.நீங்க இன்னும் எழும்பாம இருந்தா என்ன அதர்த்தம். உங்கள அப்பவே எழுப்பிட்டு தான போனேன்" என கத்திக் கொண்டிருக்கும் மனைவின் கையை அவளே அறியாமல் சட்டென்று இழுக்க… அவள் அவன் மேலேயே விழுந்தாள்.

"அய்யோ ! என்னங்க பண்றீங்க..? விடுங்க யாராவது வர போறாங்க..?" வெட்கத்தில் முகம் சிவக்க அவனின் முகம் பார்க்க தவிர்க்க….திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆன பின்னும் தன் சிறு தொடுகைக்கு கூட முகம் சிவக்கும் மனைவியை பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை மனோகரனுக்கு.

"என்னடி புது பொண்ணு மாதிரி இப்படி வெட்கப்படுற… நீ இப்படியெல்லாம் பண்ணா நான் எப்படி இன்னைக்கு வேலைக்கு போறது" என தன் மூக்கால் அவளின் கன்னம் உரச...அவனிடம் எப்போதும் போல் இன்றும் மயங்கிதான் போனாள் பெண்ணவள்.

அவள் நெற்றியில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்தவன் "அனு"…. என மென்மையாக அழைக்க,அவனின் அழைப்பில் மெல்ல விழி மலர்த்தியவளின் கண்ணோடு கண் கலந்து "இன்னைக்கு கண்டிப்பா வேலைக்கு போகணுமா " என்க...அப்போது தான் தங்கள் இருக்கும் நிலையை உணர்ந்தவள் செல்ல சிணுங்களோடு அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றாள்.

அவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் வெட்கம் தடுக்க…"கண்டிப்பா போகணும்,இன்னைக்கு கரும்பு வேற வெட்டுறாங்கனு அம்மாச்சி சொன்னாங்க, நீங்க இல்லனா மாமாக்கு தான் கஷ்டமா இருக்கும்" என பொறுப்பான மருமகளாய் சொல்ல...அவனும் அவள் நேற்றியோடு நெற்றி முட்டி "இதுதான்டி உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது" என சொன்னபடி அணைப்பை இறுக்க முயல...அவன் கையில் சிக்காமல் நழுவி ஓடியவள் "சீக்கிரம் கிளம்புங்க நான் போய் அந்த வாலு எங்க இருக்குனு பாக்குறேன்" என்று சொல்லிவிட்டு நிற்காமல் ஓடிவிட்டாள். நின்றால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது என உணர்ந்தவலாக…


அங்கு தனது அறையில் குப்புற படுத்துக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதியழகன்...தன் முதுகில் உணர்ந்த பாரத்தில் மெல்ல சிரித்தபடி மீண்டும் உறங்க...இப்போது அவன் தலைமுடி பலமாக இழுக்க பட்டது.

"சித்தப்பா ஏந்துரு ஏந்துரு...சித்தாப்பா...ஆ" என தன் மழலை குரலில் அவன் காதுக்குள் கத்த… சட்டென்று திரும்பியவன் குழந்தையை விழாமல் பிடித்துக் கொண்டே மெல்ல கண்களை திறந்தான்.

"ஏய் வாலு அப்பாக்கு தூக்கம் வருதுடா…. என் செல்லம் இல்ல இன்னும் கொஞ்சம் நேரம் அப்பா தூங்குறேன்" என்க...அவளோ "ம்ஹும் முடியாது முடியாது" என சிணுங்க தொடங்கினாள்.

அவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது அவனுக்கா தெரியாது.

"அம்மு அப்பா உன் மடியில படுத்துக்குறேன், நீ அப்பா தலையை கோதிவிடு" என்றவன் அவளை மெத்தையில் வாகாக அமரவைத்து மடியில் படுத்துக் கொண்டான்.அவள் மேல் பாரம் தாங்காதவாறு தலையணையை பாதி தலையை வைத்துக்கொண்டு மீதியை மகள் மடியில் வைத்துக்கொண்டான்.

சின்னவளுக்கு அது மிகவும் பிடித்த ஒன்று. அவன் எப்போது மடியில் படுத்தாலும் அவன் சொல்லாமலேயே தலையை கோதுவாள். இந்த செய்கையை தன் பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்டவள், இப்போதும் தன் சின்ன தந்தையின் சிகைக்குள் தன் பஞ்சு போன்ற குட்டி விரல்களை நுழைத்து கோத தொடங்கினாள்.

"அப்பா நான் கதை சொல்லவா"..? என்க அவனும் "ம்ம்... சொல்லுடா செல்லம்" என்றான்.

தன் பாட்டியிடம் கேட்ட கதையை தந்தைக்கு சொல்ல தொடங்கினாள். "ஒரு ஊர்ல ஒரு பெரிய வீடு இருந்துச்சாம்,அதுல" என கண்களை விரித்து கைகளை அசைத்து ஓவியம் போல் கதை சொல்ல தொடங்க...ஓர கண்ணால் அவளின் செய்கையை ரசித்துக் கொண்டிருந்தான் மதி.

அவளை வீடு முழுவதும் தேடி கொண்டிருந்தாள் அனு. "தியா...தியா" என அழைத்து கொண்டே தேடியவள் முன் வந்து நின்றான் அவளின் கணவன். அதற்குள் வேலைக்கு செல்ல தயாராகி வந்தவன், "இப்போ எதுக்கு வீடே அதிர்ற மாதிரி கத்துற..? மதி எழுந்தானா இல்லையா" என்க...அவளோ "இல்லையே அவரு இன்னும் எழுந்துக்கலை" என்றாள்.

"அப்போ கண்டிப்பா அவனோடு தான் இருப்பா..? மேடம் தான் அவனில்லாமல் இருக்க மாட்டாங்களே… என்றவன், முதல்ல எனக்கு சாப்பாடு போட்டுட்டு போய் அவளை கூப்பிடு" என்றவன் டைன்னிங் டேபிளில் அமர்ந்தான்.

அவனுக்கு முன்பே இரு தந்தைகளும் சாப்பிட்டு கொண்டிருக்க அவனும் சென்று அமர்ந்தான். அவனுக்கு அருகில் இருந்து பார்த்து பார்த்து பரிமாறியவள்,அவனை வேலைக்கு அனுப்பிவிட்டே மகளை தேடி சென்றாள்.

தியாவோ கண்ணும் கருத்துமாக தன் தந்தைக்கு கதை சொல்லியபடி தலையை கோதிக்கொண்டிருக்க…
அப்போது அறைக்குள் நுழைந்தாள் அவளின் அன்னை.

எப்போதும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவான். ஆனால் நேற்று வேலையின் காரணமாக நள்ளிரவை கடந்தே வந்ததினால் தான் தியா எழுப்பும் அளவுக்கு தூக்கத்தில் இருந்தான்.

உள்ளே வந்த தாயை பார்த்து சிரித்தவாறே. "அப்பா தூங்குறாங்க எழுப்ப கூடாது" என அவன் தூக்கம் களையாதவாறு மெலிதான குரலில் சொல்ல... அவள் செய்கையில் கோபமாக வந்த அனுக்கு கூட சிரிப்பு வந்துவிட்டது.

"சிரிச்சே மயக்கிடுறா" என மகளை செல்லமாக திட்டியபடி... "மதி... மதி... எழுத்துரு உன்னால தான் அவ ஸ்கூலுக்கு கூட கிளம்பாம இருக்கா. எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான்" என தன் கொழுந்ததனை எழுப்ப...அதற்கு மேல் படுத்தாமல் எழுந்தமர்ந்தான்.

"குட் மார்னிங் அண்ணி" என்றவன் தன் மகளை கையில் அள்ளிக்கொண்டான். "என் அம்முகுட்டி எவ்ளோ அழகா கதை சொல்றாங்க" என குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவன்,

" சீக்கிரம் போய் ஸ்கூலுக்கு கிளம்புங்க அப்போதான் அப்பா வண்டியில் அழைச்சிட்டு போவேன்... இல்லனா தாத்தாவோட தான் போகணும்" என்க,

"இல்ல இல்ல... என அவரசரமாக தலையாட்டி மறுத்தவள் 'தாத்தா கார் நல்லாவே இல்ல தானம்மா, அப்பா புல்லட் தான் சூப்பர்" என தன் அன்னையை துணைக்கு அழைத்தவள், அவனோடு வண்டியில் செல்லும் ஆசையில் உடனடியாக தன் அன்னையோடு கிளம்பிவிட்டாள் பள்ளிக்கு தயாராக.

அதன் பின் துரிதமாக தனது காலைக்கடன்களை முடித்துவிட்டு கீழே வருவதற்குள் அரைமணி நேரம் கடந்திருந்தது மதியழகனுக்கு.

தன் அன்னை பரிமாற காலை உணவை உண்டு முடித்தவன் தனது புல்லட்டை கிளப்பினான்.

முன்னாள் தியாவை சரியாக அமரவைத்து கிளம்பும் நேரம்…"அத்தான் என்னையும் காலேஜில் இறக்கிவிடுறீங்களா..? பிளீஸ் அத்தான் ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிடுச்சு" என்ற தன் அத்தை மகள் மதுமிதாவை பார்த்து.....

"ஏன் எங்க உன் தாடிமாடு அண்ணன்.அவனை கொண்டு விட சொல்லவேண்டியது தானே" என்றவனை இடுப்பில் கைவைத்து முறைத்தவள் "ஏன் அப்போ நீங்க விடமாட்டீங்க அப்படிதானே" என்றவள் திரும்ப முயல…. "ஏய் லூசு வந்து வண்டியில் ஏறு" என்றான்.

முதலில் தியாவை அவள் பள்ளியின் உள்ளே வரை கொண்டு விட்டு வந்தவன்,அடுத்து மதுவை அவள் கல்லூரியில் இறங்கினான்.

"பாய் அத்தான்... சாயத்திரம் கூட்டிட்டு போக வருவீங்க தானே" என்றவளை பார்த்து…"ஏண்டி நான் என்ன வெட்டியாவா இருக்கேன். உனக்கு ரெண்டு வேலையும் டிரைவர் வேலை பார்க்க..உன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி வரசொல்லு" என்றவன் தனது ரோயல் என்ஃபீல்டு புல்லட்டை கிளப்பினான்.

சாலையின் இருபுறமும் மரங்களும் வயல்களும் நிறைந்திருக்க...புல்லட் செல்லும் வேகத்திற்கு அந்த காலைநேர குளிர் காற்று முகத்தில் மோதியது. அவனை போலவே அடங்காமல் சிலிர்த்து நிற்கும் சிகை கூட காற்றில் அசைந்தாடி அவனுக்கு தனி அழகை கொடுத்தது என்றால் அது மிகையில்லை.
தலையில் அணிய வேண்டிய ஹெல்மெட்டோ பரிதாமாக முன்னால் தொங்கி கொண்டிருந்தது.அவன் அழகை கெடுக்க மனமில்லாமல்.

தேனூர் கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட பதினெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மதுரை நகரம். மதியின் வேகத்தில் அரைமணி நேரத்திற்கு முன்பே மதுரை டவுனை அடைந்தவனின் புல்லட் மதுரை மாநகராட்சி காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.

வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்க.... அவனின் முறுக்கேறிய தேகத்திற்க்கு அந்த காக்கி சட்டை மிக கச்சிதமாக பொருந்தியது.

சிறுவயது முதலே போலீஸ் ஆகவேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தவன் கல்லூரியை முடித்துவிட்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டு பயிற்சிக்கு பின் இதோ மதுரை நகரத்தின் டி.எஸ்.பி யாக பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகியிருக்கிறது.


சிறு வயதிலேயே பெரிய பதவியில் இருந்தாலும் அதனை பெரிதாக காட்டிக்கொள்ளாமல், உடன் பணிபுரியும் அனைவரின் வயதிற்கும் அனுபவத்திற்கும் உரிய மரியாதையை கொடுப்பவன்.அதனாலேயே அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.

கம்பீரமாக உள்ளே நுழைந்தவன்,அனைவரின் மரியாதையையும் தலையசைத்து ஏற்றுக்கொண்டு தனக்கென இருக்கும் அறைக்குள் நுழைந்து அன்றைய அலுவல்களை பார்க்க தொடங்கினான்.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்தான் கதிர். அந்த காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர். உள்ளே நுழைந்தவன் மதியின் பதவிக்கான மரியாதையை வழங்கிவிட்டு எதிரில் அமர்ந்தான்.

"டேய் உன் மனசுல என்ன தான்டா நினைச்சிட்டு இருக்க...அவ்ளோ கஷ்டபட்டு பிடிச்ச அந்த குற்றவாளியை அசால்ட்டாக வெளியே விட்டுட்ட" என அவன் தன் உயர் அதிகாரி என்பதையெல்லாம் மறந்து நண்பனாக திட்ட தொடங்கினான்.

அவனோ காதுக்குள் கையை நுழைத்து குடைந்தவன்…"டேய் போதும்டா திட்னது. என்னை திட்டணும்னா முதல் ஆளா வந்துடுவ" என நண்பனை இவனும் சாடியவாறு "டேய் அவனை உள்ள வச்சு நமக்கு என்னடா ஆக போகுது. அவன் பின்னாடி யாரு இருக்கானு தெரியணும் அப்போதான் நம்மளால அடுத்த ஸ்டேப்பை எடுக்க முடியும்" என்க…

"இல்லடா அதுக்காக இவனை வெளிய விடனுமா..? எனக்கென்னமோ கொஞ்சம் ரிஸ்க் எடுக்குற மாதிரி இருக்கு அதான் கேட்டேன்" என்க...அவனும் "ரிஸ்க் தான் ஆனா நமக்கு வேற வழியில்லடா" என்றான்.

அதுவும் சரியாக தான் பட்டது கதிருக்கு. ஆனாலும் மனதுக்குள் ஏதோ நெருடலாகவே இருந்தது. பெரிதாக ஏதோ நடக்க போவது போல்….முயன்று தன் முகத்தில் அதனை வெளிக்காட்டாமல் வேறு பேச்சிற்கு மாறினான்.

பின்னர் இருவரும் அந்த வழக்கை பற்றி பேசியபடி அடுத்து செய்யவேண்டிய வேலையை தொடங்கினர்.

இங்கு பள்ளியில் அன்றையில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு ஸ்பெஷல் கிளாஸ் தொடங்கியிருக்க…."டேய் ஒழுங்கா நான் சொல்றதை கேளுங்க டா. ஒரு மணிநேரம் லேட்டா போனா என்னடா ஆக போகுது. பிளீஸ் டா நான் வரவரைக்கும் சின்னகுட்டி தனியா இருக்கணும், நீங்க இருந்தீங்கனா உங்களோட விளையாடிட்டு இருப்பா" என ரமேஷ் சதீஷ் என்ற இரண்டு வாண்டுகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மித்ரவர்ஷினி.

"அக்கா இன்னைக்கு பசங்களோட கிரிக்கெட் மேட்ச் இருக்கு" என்றவனின் தலையில் ஓங்கி கொட்டியவள் "ஆமாண்டா நீங்க போய் விளையாடி தான் வேர்ல்டு கப் ஜெயிக்க போறாங்க" என இவளும் அவர்களுக்கு சரிசமமாய் பேச…

இறுதியில் அவள் பேச்சை ஜெயிக்க முடியாமல் "நீ ரொம்ப கெஞ்சிறது நாள போன போகுதுனு ஒத்துக்குறோம்" என்றபடி கெத்தாய் சொன்னவர்கள் தர்ஷினியை அழைத்துக்கொண்டு கிரவுண்டிர்க்கு சென்றனர்.

இவளும் "ஹேப்பா இவனுங்களை ஒத்துக்க வைக்கிறதுகுள்ள நாக்கு தள்ளிடும் போல" என எண்ணியபடி தன் வகுப்பை நோக்கி சென்றாள்.

அவர்களோடு விளையாடி கொண்டிருந்த தர்ஷினி "ரமேஷ் எனக்கு அந்த புள்ளியங்காய் மட்டும் பரிச்சி தாயேன்" என்க… அவனோ "ஏய் நான் உன்னைவிட ஒரு வயசு பெரியவன், அதனால மரியாதையா அண்ணான்னு சொல்லு" என்றான்.

அவளோ "அப்படியெல்லாம் சொல்ல முடியாது. நீ பண்ணலனா பரவாயில்லை சதீஷ் நீயாவது பறிச்சி கொடு " என்க, அவனும் அதையே சொன்னான்.

"நீங்க யாரும் எதுவும் பண்ணவேண்டாம் போங்க, எனக்கு எங்க அக்கா இருக்கு. எங்க அக்கா வந்து எனக்கு பறிச்சி தரும்" என்றவள் அவர்களிடம் முகத்தை திருப்பி கொண்டு தன் அக்காவிற்காக காத்திருக்க தொடங்கினாள்.

கிளாஸ் முடித்துவிட்டு வந்த மித்ரவிடம் "அக்கா எனக்கு அது வேணும்" என புளியங்காய்யை காட்டி கேட்க…

"சின்னகுட்டி அது சாப்பிட்ட சளி பிடிக்கும்" என சொன்னதை காதில் வாங்காமல் எனக்கு வேணும் என அடம்பிடிக்க... வேறு வழியின்றி திரும்பி ரமேஷை பார்க்க….அவனோ "அழுதே சாதிச்சிடுதுடா இந்த குட்டி சாத்தான்" என திட்டியபடி மரத்தில் ஏறினான்.

புளிப்பு சுவையை முகத்தை சுருக்கி ரசித்து சாப்பிட்ட தர்ஷினியை பார்த்து சாப்பிடாமலேயே முகம் சுருங்கியது மித்ராவிற்கு அதன் சுவையை எண்ணி….

"அக்கா பல்லு கூசுது இந்தா நீயும் சாப்பிடு" என அவளுக்கு ஒன்றை கொடுக்க...அவளோ வேண்டாம் நீயே சாப்பிடு, என சொல்லிவிட கையில் உள்ள அனைத்தையும் தனியாக உண்டு முடித்தாள் தர்ஷினி. பின்னர் அனைவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

எப்போதும் போல இன்றும் வீட்டை நெருங்கியதும் முகம் தானாக வெறுமையை தத்தெடுத்து கொண்டது இருவருக்கும்.

மாலை தங்கள் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு மதி,கதிர் இருவரும் தங்கள் ஊரை நோக்கி வண்டியை செலுத்தினர். இருவருமே ஒரே ஊர், பள்ளியில் இருந்து ஒன்றாக படித்தவர்கள்.இருவருக்குமே போலீஸ் ஆகவேண்டும் என்பதே கனவாக இருந்தது. ஒரே மாதிரியான சிந்தனையை கொண்டதால் என்னவோ நாளுக்கு நாள் அவர்களின் நட்பும் அதிகரித்தது.

போகும் வழியில் மதியின் மொபைல் சிணுங்க….வண்டியை சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்றான். சிறிதுநேரத்தில் பேசி முடித்தவன் ஃபோனை அணைத்து பாக்கெட்டில் வைத்துவிட்டு நண்பனை பார்க்க…"என்னடா டிரைவர் வேலையா..?" என சிரித்துக்கொண்டே கேட்க...அவனும் சிரித்தபடி தலையாட்டினான்.

"அப்போ சரிடா நான் கிளம்புறேன், நீ உன் கடமையை செய்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட...மதி தன் வண்டியை மதுவின் கல்லூரியை நோக்கி செலுத்தினான்.


சாதாரணமான இந்த விஷயம் பின்னாளில் நிறைய பிரச்சனைக்கு காரணம் ஆக போவதை இவனும் அறியாமலேயே போனான்.


 
Last edited:

Anjali

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 3

அன்றும் வழக்கம் போல் அக்கா தங்கை இருவரும் பள்ளி முடிந்து நண்பர்களோடு கதையளந்து கொண்டே வர….

"வர்ஷு அக்கா.. அடுத்த வருஷத்தில் இருந்து நீங்க ஸ்கூலுக்கு வரமாட்டீங்க தானா"..? அப்போ காலேஜ் படிக்க போய்டுவீங்களா ? என ரமேஷ் பேச்சை தொடங்க…

அதுவரை சிரித்து கொண்டு வந்த தர்ஷினி முகம் சட்டென்று வாடிவிட….அதை அறியதா வர்ஷினியும் "ஆமாடா இந்த வருஷம் மட்டும் தான் ஸ்கூல். அது முடிஞ்சதும் காலேஜ் தான்" என சந்தோஷமான குரலில் சொன்னாள்.

"நீ என்னக்கா படிக்க போற..?" என்ற சதிஷின் கேள்விக்கு...

"எனக்கு டாக்டர் ஆகனும் டா...எப்படியாவது நல்ல மார்க் எடுக்கணும்.அதுக்கப்பறம் ஒரு எக்ஸாம் இருக்கு அதுமட்டும் பாஸ் ஆகிட்டா போதும், என் கனவெல்லாம் நிறைவேறிடும்" என கண்களில் கனவுகள் மின்ன சொன்னவளின் மனதிற்கு தெரியும் அது அத்தனை சாத்தியம் இல்லை என்பது.

நல்ல மதிப்பெண் எடுப்பதோ, ஏன் கஷ்டமான மெடிகல் எண்ட்ரன்ஸ் எக்ஸாமில் பாஸ் ஆகுவது கூட அவளுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஏனென்றால் அவள் மேல் அவளுக்கு அதித நம்பிக்கை உள்ளது.

கண்டிப்பா பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிடுவோம் என்று...ஏற்கனவே அவளின் இயற்பியல் ஆசிரியர் அவளின் ஆர்வத்தை அறிந்துக் கொண்டு அவளுக்கு உதவ...அவரின் உதவியுடன் இப்போதிருந்தே மெடிகல் எக்ஸாமிற்கும் தன்னை தயார்படுத்தி கொண்டிருப்பவளுக்கு அது ரெண்டுமே பெரிதான விஷயமாக தெரியவில்லை.

அனைத்தும் அவளுக்கு சாதகமாக இருந்தும்….அவள் கனவை களைப்பதற்கு தடையாக இருப்பது என்னவோ அவளின் குடும்பம். ஆம் குடும்பம் தான், அதிலும் முக்கியமாக தன் தந்தையும் பாட்டியும் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் தன் பிள்ளைகளின் கனவுகளை பெற்றோர்கள் தான் நிறைவேற்ற நினைப்பார்கள்.

ஏன் இன்னும் சில வீடுகளில் படிக்கமாட்டேன் என சொல்லும் பிள்ளைகளை திட்டி படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கட்டாயமாக படிக்கவைக்கும் பெற்றோர்களும் உண்டு.

ஆனால் இவளின் நிலையோ...நன்றாக படித்தும்,படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தும்,அதற்கான வசதி வாய்ப்புகள் இருந்தும் முடியாத நிலை.

எளிமையாக சொல்ல போனால் அலாதி பசியில் இருக்கும் போது, கண் முன் அறுசுவை உணவு இருந்தும் சாப்பிட விடாமல் கையை கட்டிப்போட்டு இருக்கும் நிலையில் அவள் இருக்கிறாள்.

ஏன் பெண்ணாக பிறந்தோம் என ஒவ்வொரு நாளும் நினைக்காத நாளில்லை.ஏனோ ஒவ்வொரு நாளையும் கடத்துவது கடினமாக இருந்தது அவளுக்கு. ஆனால் அதனை வெளிக்காட்டாமல் அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். தன் சிறு முகமாற்றம் கூட தாயை நோக செய்துவிடும் என்று அவளுக்கும் நன்றாகவே தெரியும். தாய்க்கு இருக்கும் கவலையில் தன்னை பற்றிய கவலையை சேர்க்க விரும்பவில்லை அவள்.

அனைத்தையும் நினைத்து மருகியவள் அப்போது தான் தங்கையின் முக மாற்றத்தை கண்டுக் கொண்டாள்.

சட்டென்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு "ஏய் சின்னக்குட்டி என்னாச்சு டா" என தங்கையின் முகம் தாங்கி வினவ,அவளோ "அப்போ அடுத்த வருஷம் நீ என்னோட ஒண்ணா ஸ்கூலுக்கு வர மாட்டியா..? அப்போ என்ன யாரு தினமும் அழைச்சிட்டு போவா..? நீ ஸ்கூலுக்கு வரலைன்னா அப்போ நானும் ஸ்கூலுக்கு வரவும் மாட்டேன், படிக்கவும் மாட்டேன்" என அழ தொடங்க,

"ஏய் சின்னக்குட்டி இங்க பாரு, இன்னொரு வாட்டி நான் படிக்க மாட்டேன்னு சொன்ன அடி வாங்குவ என்கிட்ட" என முதன்முறை தங்கையிடம் கோபமுகம் காட்டினாள்.

"நான் ஸ்கூலுக்கு மட்டும் தான் வரமாட்டேன், மத்தபடி உன் கூடவே தான் இருப்பேன் புரியுதா...நான் இல்லனா கூட நீ எப்பவும் படிக்காம மட்டும் இருக்க கூடாது சரியா" என குழந்தைக்கு சொல்வது போல் பொறுமையாக எடுத்து சொல்ல….அவளோ ஒரே வார்த்தையில் "நீ என் கூடவே இருந்தா கண்டிப்பா படிப்பேன்" என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாள்.

"உன்னை திருத்தவே முடியாது போடி அரட்டை" என தங்கையை திட்டியபடி நடையை தொடர்ந்தாள் வர்ஷினி.

எப்போதும் போல் வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் மரகதம் பாட்டியின் சத்தம் தான் ஓங்கி ஒலித்தது. என்ன ஒரு மாற்றம் என்றால், இன்று அவர்களுக்கு பதில் அவர்களின் அன்னைக்கு திட்டு விழுந்து கொண்டிருந்தது.

ஏனோ அந்த வீடே சிறை போல் தான் தோன்றியது மூவருக்கும். அனைவருக்குமே தோன்றும் ஒரு விஷயம் தான்.. ஊரெங்கும் சுற்றி திரிந்தாலும் தன் வீட்டை அடைந்தால் தானாக மனதில் ஒரு நிம்மதி பிறக்கும், அனைத்தையும் எதிர்கொள்ளும் ஒரு தெம்பு கிடைக்கும். அது மனிதர்களுக்கும் சரி மற்ற உயிரினங்களுக்கும் சரி பொதுவானது. ஆனால் இவர்களுக்கு அப்படியே தலைகீழ் தான்.வீட்டை விட்டு வெளியே சந்தோஷத்தை தேடி செல்லும் நிலை.

பாட்டியின் சத்தத்தில் வாசலிலேயே நின்றுவிட்டனர் இருவரும்

மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரச்சனை வருவது சகஜம் தான் ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகும், கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழிந்தும் இதே நிலை என்பது மிகவும் கொடுமையானது அல்லவா...

திருமணமான புதிதில் மருமகளை தாங்கு தாங்கென தாங்கிய மரகதம் தான் இப்போது ஒவ்வொரு வார்த்தையையும் ஊசியை போல் அவர் இதயத்தை குத்தி கிழிப்பதும்.

இந்த மனிதர்களில் தான் எத்தனை மாற்றங்கள்...நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

"இந்த சீமையிலேயே இல்லைன்னு உன்ன போய் மருமகளாய் கூட்டிட்டு வந்தேன்ல என்னைய சொல்லனும், உன்ன என் குடும்பத்தை வளர்க்க வந்த ஸ்ரீ தேவின்னு நினைச்சேன். இப்போ தானே தெரியுது குடும்பத்தையே அழிக்க வந்த மூதேவின்னு" என பெற்ற பிள்ளைகள் முன்பே கத்தியவர்,நிறுத்தாமல் மீண்டும் தொடர்ந்தார்….

"என் குடும்பமே இப்படி பட்டு போச்சே...என் மகனோட என் வம்சமே முடிஞ்சி போச்சே" என பன்னிரெண்டு வருஷமா பேசும் வசனத்தை இன்றும் வார்த்தை மாற்றாமல் பேசியவரை கண்களில் கண்ணீரோடு ஒரு விரக்தியாக மட்டுமே பார்க்க முடிந்தது சாந்தியால்…

இந்த வார்த்தைகள் தன்னை தொடர்வது எப்போது தான் முடியுமோ..? ஒருவேளை தான் இல்லாமல் போனால் கூட இந்த வார்த்தைகள் தன்னை தொடரும் போல என்றே தோன்றியது சாந்திக்கு.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் ஆண்பிள்ளை தான் குடும்ப வாரிசு என சொல்லிக் கொண்டு திறிவார்களோ தெரியவில்லை. ஏன் பெண்பிள்ளைகளும் அதே குடும்ப வாரிசு தான் என்பது எப்போது தான் உணர்வார்கள்.

இன்னும் எத்தனை பாரதியார் வந்தாலும் பெண்ணுக்கு விடுதலை என்பது கிடைக்காது போல. அவர் கற்பனையில் கண்ட புதுமைப்பெண் கடைசிவரை கற்பனையாகவே போய்விடுமோ என்ற பயமே மேலோங்கியுள்ளது. இன்றும் பெண்களுக்கு சமஉரிமை என சொல்வது அனைத்தும் வெறும் ஏட்டோடு முடிந்துவிடுகிறது. நடைமுறைக்கு வருவததில்லை என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.

சில பெண்கள் அடிமை தனத்தில் இருந்து வெளியேறி படிப்பு, வேலை என முன்னேற்ற பாதையை நோக்கி வந்து கொண்டிருந்தாலும்...இன்னும் சிலர் இப்போதும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள். தங்களுக்கான அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டு ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என கடமைக்கு நாட்களை கடத்திக்கொண்டு இருக்கின்றனர்.அவர்களுள் ஒருவர் தான் சாந்தியும்.

பிறந்த வீட்டில் ஒரு மகாராணியயை போல் வலம் வந்தவர் தான் இவரும், ஆனால் திருமணத்திற்கு பின் ஒரு மகாராணி போல் வேண்டாம், ஒரு சாதாரண உயிருள்ள உணர்வுள்ள மனுஷியாக கூட மதிக்கப்படாமல் உணர்வுகள் அனைத்தும் மறுத்துபோய் ஒரு வாழக்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

அதுவும் மரகதம் போன்ற சில மூடர் கூட்டங்கள் ஆணும் பெண்ணும் சமம் என்பதை இன்னும் ஏற்காமல் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரும் ஒரு பெண் தான் என்பதை சிந்திக்கவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை. பெண்ணுக்கு பெண் தான் நிறைய சூழல்களில் எதிரியாக இருக்கிறார்கள்.

அதுவரை நடந்தது அனைத்தையும் வாசலில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த இருவருக்குமே தன் தாயை அப்படி ஒரு நிலைமையில் பார்க்க முடியவில்லை.

தர்ஷினி தன் அன்னையின் கலங்கிய விழிகளை பார்த்தவுடன் தேம்பியபடி அழ தொடங்க…

மித்ரவர்ஷினிக்கோ கோபம் அதிகரித்தது. முதன்முறை பாட்டியை எதிர்த்து பேச தொடங்கினாள். "இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை பாட்டி..? இன்னும் எத்தனை நாள் தான் இதையே சொல்லி இப்படி சாகடிப்பீங்க..? உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா..?உங்க மனசு என்ன கல்லா..?" என குரலை உயர்த்த…

தன் முன் குரலை உயர்த்தி பேசும் பேத்தியை முறைத்தவர்… "ஓஹோ ! நீ இவ்வளவு பேசுவியா..? இன்னைக்கு வரட்டும்டி என் மவன் அப்பறம் இருக்கு ஆத்தாளுக்கும் மகளுக்கும்.என்னையே எதுத்து பேசுற அளவுக்கு தைரியம் வந்துடுச்சா"..? என தேவையில்லாமல் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

"எல்லாம் படிக்கிற திமிர், அதான் இப்படி மரியாதை இல்லாம பேச வைக்குது என நினைத்து கொண்டவர், இனிமே நீ எப்படி படிக்கிறன்னு நானும் பாக்குறேன்டி" என எண்ணியபடி தன் மகனின் வருகைக்காக காத்திருந்தார்.

"வர்ஷினி முதல்ல பாட்டிக்கிட்ட மன்னிப்பு கேளு இப்படிதான் மரியாதையில்லாமா பேசுவியா"..? என சாந்தி மகளை கடிந்து கொள்ள,

அதற்கும் "அய்யய்யோ ! நல்லா நடிக்கிறடியம்மா, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுற கதையா... நீயே உன் மகளை பேசவிட்டுட்டு இப்போ ஒன்னும் தெரியாதவ மாதிரியே மன்னிப்பு கேட்க சொல்றியே, உன்னோட சாமர்த்தியம் எல்லாம் எனக்கு வரதுடியம்மா" என தாடையில் கைவைத்து ஏளனமாக சொல்ல…

எப்படி பேசினாலும் குறை சொல்பவரிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றவரை அடுத்து பேசவிடாமல்..

"நீ சும்மா இரும்மா, இன்னும் எத்தனை நாள் தான் அவங்க பேசுறதை கேட்டுகிட்டே இருக்கிறது. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிந்தாகனும்,யாரு என்ன பண்ணாலும் எனக்கு கவலையில்ல" என ஆதங்கமாக கேட்க..

"வர்ஷினி உன்னை உள்ள வர சொன்னேன்" மகளின் கைபிடித்து உள்ளே இழுத்து சென்றார்.எங்கே இது பெரிய பிரச்சனையாக மாறிவிடுமோ என்று அஞ்சியவராக.

கொஞ்சமும் மரியாதை இல்லாமல் தன்னை கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைந்தவர்களையே பார்த்திருந்தவர்...இப்போது வாசலையே பார்க்க தொடங்கினார்.

சற்று நேரத்தில் சண்முகசுந்தரம் வந்துவிட ...அதுவரை ஏதோ தைரியத்தில் தாயை திட்டிவிட்ட கோபத்தில் பாட்டியை எதிர்த்து பேசியவளுக்கு வெளியே தந்தையின் கார் சத்தத்தை கேட்டவுடன் மனதில் தானாக பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

அவர் உள்ளே நுழைந்ததும் கண்களில் நீலி கண்ணீரோடு "யப்பா சண்முகம் இனிமே என்னால இந்த வீட்டுல இருக்க முடியாதுப்பா. நான் என் மக வீட்டுக்கே போறேன். நான் ஒரு கூறுகெட்ட சிறுக்கி என் மகன் என் மகன் வீடுன்னு உரிமையில இருந்தேன். இப்போதான தெரியுது, இந்த வீட்ல எனக்கு இருக்கிற உரிமை என்னன்னு" என வராத கண்ணீரை முத்தானையில் துடைத்தவர் மேலும் தொடர்ந்தார்…

"எனக்கு மருவாதி இல்லாத வீட்டுல என்னால இனி ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாதுப்பா" என நடந்தது அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி சொல்ல…. தாயின் வார்த்தையில் ஏற்கனவே வெளியே ஒரு பிரச்சனையால் டென்ஷனில் இருந்தவரின் கோபம் முழுவதும் இப்போது மனைவி மீதும் மகள் மீதும் திரும்பியது.

"சாந்தி….தி" என வீடே அதிரும் படி கத்த...பல வருடங்கள் கழித்து தன் பெயரை கொண்டு அழைக்கும் கணவனை எண்ணி சந்தோஷத்திற்கு பதில் பயமே வந்தது சாந்திக்கு. அவரின் குரலே சொல்லியது அவர் கோபத்தின் அளவை.

"அம்மா போகாதே" என அன்னையின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட வர்ஷினியை பார்த்து, ஒட்டாத ஒரு புன்னகையை சிந்தியவர் அவள் கையை விடுவித்துவிட்டு வெளியே வந்தார்.

சாந்திக்குமே கணவனின் கோபம் ஒருவித பயத்தையும் படப்படப்பையும் கொடுக்க மெல்ல அவரை நோக்கி நகர்ந்தார்.

கடும்கோபத்தில் இருந்தவருக்கு மனைவியின் பொறுமையான அன்னநடை கூட மேலும் கோபத்தை அதிகமாக்கியது.

"கூப்ட்ட குரலுக்கு உடனே வந்து நிற்க தெரியாதா..? ஆடி அசைஞ்சி வர என கத்தியவர், உன் மனசுல என்னடி நினைச்சிட்டு இருக்க, இந்த வீட்டுக்கு நீ தான் மகாராணின்னு நினைப்பா. சொல்லுடி கேக்குறேன் இல்ல பதில் சொல்லு, வாயில என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்க" என்றவர் அவளுக்கு பேச வாய்ப்பளிக்கும் முன்பே "அப்படி உன் மனசுல ஏதாவது ஆசை இருந்தால் அத இப்போவே அழிச்சிடு".

"எங்க அம்மா சொல் பேச்சு கேட்டு இருக்கிறதா இருந்தா இங்க இரு. இல்லனா போய்கிட்டே இருக்கலாம். நீ இல்லன்னு யாரும் இங்க அழ போறதில்லை. எனக்கு என் அம்மா தான் முக்கியம்" என்றவர்,

திரும்பி அருகில் நின்ற மகளை ஒரே ஒரு பார்வை மட்டுமே பார்த்தார், அதற்கே அவள் கைகால் நடுங்கத் தொடங்கியது. இருந்தாலும் தைரியத்தை வரவைத்து கொண்டு "ப்பா பாட்டி தான் முதல்ல அம்மாவை திட்டுனாங்க, அதான் ஏன்னு கேட்டேன். அம்மாவை மட்டும் இத்தனை கேள்வி கேட்டீங்க... அவங்களை எதுவும் சொல்ல மாற்றீங்க..?" என வருத்தம் நிறைந்த குரலில் முதன்முறை வாய்த்திறக்க…


எங்கிருந்து தான் அவருக்கு அவ்வளவு கோபம் வந்ததோ...தன்னையே எதிர்த்து பேசும் மகளின் மேல் எழும் கோபத்தையும் சேர்த்து அருகில் நின்ற மனைவியிடம் காட்டிவிட்டார்.

"பளார்" என்ற சத்தத்தோடு மனைவியின் கன்னத்தில் அறைய...அவர் அடித்த அடியில் இரண்டடி தள்ளி தரையில் சென்று விழுத்திருந்தார் சாந்தி.

திகுதிகுவென எரியும் கன்னத்தில் வலியை உணர்ந்த போது தான் கணவர் தன்னை அடித்தத்தையே உணர்ந்தார்.

இத்தனை வருடத்தில் இதுவே முதன்முறை அவர் கைநீட்டி அடித்தது… இத்தனை நாளும் அவரிடம் பேசாமல் ஒதுக்கி வைத்தாரே தவிர அடித்தது இல்லை. ஒரு நொடி பொறிக் கலங்க,அவர் அடித்த அதிர்ச்சியில் இருந்தே அவரால் வெளியே வர முடியவில்லை. பார்வை மட்டும் அவரையே வெறித்துக் கொண்டிருந்தது.

"இன்னொரு வாட்டி இதுமாதிரி நடந்துச்சு அப்பறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன்" என்றவர், அடித்ததும் தன் வேலை முடிந்தது என அறைக்குள் நுழைந்து கொண்டார்.

மரகதத்திற்கே இது சற்று அதிர்ச்சி தான்.ஏதோ தன் மகன் திட்டிவிட்டு சென்று விடுவான் என்று நினைத்திருக்க...அவனின் அடியை எதிர்பார்க்கவில்லை. பின்னர் அனைவரையும் இளப்பமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டார்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ சின்னவள் திவ்யதர்ஷினி தான். இத்தனை நாளும் தந்தையின் முறைப்பையும் திட்டையும் மட்டுமே கேட்டு பழகியவளுக்கு தந்தையின் இந்த பரிமாணம் மிகவும் புதிது.

தாயின் அடியில் நடுநடுங்கி போய் நின்றவள் இப்போது பெருங்குறலெடுத்து அழ தொடங்க,

வாங்கிய அடியை மறந்து அவளை நெருங்கிய சாந்தியை அணைத்துக்கொண்டு அழுதவள் யாரின் சமாதானத்தையும் கேட்பதாக இல்லை.

வர்ஷினியோ தன்னால் தான் தாய்க்கு இந்த நிலை என்று குற்றவுணர்ச்சியில் தவித்தாள்.

ஆகமொத்தம் மூன்று பெண்களின் மனமோ வெவ்வேறு சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தது.

பெண்ணாய் பிறப்பதே சாபம் என நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில்…

அங்கே மதியின் வீட்டில் தன் செல்ல கொள்ளு பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தார் சாவித்திரி, மதியின் பாட்டி.

"என் செல்லம் இல்ல இன்னும் ஒரு வாய் வாங்கிக்கோ டா" என சாப்பாடு ஊட்டிக்கொண்டிருக்க...அவளோ அவர்கள் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள்.

"போ பாத்தி எனக்கு சாப்பாடு வேணா, ஐஸ்கிரீம் தான் வேணும்" என ஓட இவரும் தன் வயதை மறந்து அவளை பின் தொடர்ந்தார்.

அங்கும் இங்கும் ஓடி ஆட்டம் காட்டி கொண்டிருந்தவளை அப்படியே தலைக்கு மேல் தூக்கிப்போட்டு பிடித்தான் அப்போதுதான் வேலை முடிந்து வந்த மதியழகன்.

தன் சின்ன தந்தையை பார்த்தவுடன் மேலும் உற்சாகம் அதிகரிக்க.."அப்பா.. ஆ" என அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள் தியா.

"அப்பத்தா, உனக்கென்ன இப்போதான் இளமை திரும்புறதா நினைப்பா...நடு வீட்ல ஓடிப்பிடிச்சு விளையாடிட்டு இருக்க என கேலி பேசியவனை பார்த்து..

"என்னடா எனக்கு வயசாகிடுச்சுன்னு சொல்லிக் காட்டுறியா"..? இரு இரு என் வீட்டுக்காரர் கூப்பிடுறேன்" என்றவர்…. வீட்டின் கொல்லை புறத்தை நோக்கி பார்வையை செலுத்தியவராக தன் கணவரின் வருகைக்காக பார்த்திருக்க..

"அப்போ இல்லன்னு சொல்றியா.? அப்படினா எங்க என்ன பிடி பார்ப்போம்" என அவனும் குழந்தை போல் தன் பாட்டியோடு விளையாட...சிறிது நேரம் ஆட்டம் காட்டியவன் வேண்டுமென்றே பாட்டியின் கையில் சிக்கினான்.

"அவன் காதை பிடித்து கிள்ளியவாறே "டேய் வாலு, அப்படியே உன் குணம் தான்டா இவளுக்கும். நீயும் சின்ன வயசுல இப்படிதான் எங்களை ஓட விடுவ...அப்படியே அப்பனுக்கு பிள்ளை தாப்பாம பிறந்திருக்கு" என தன் பேரனையும் கொள்ளு பேத்தியும் திட்டுவது போல் செல்லம் கொஞ்ச…

அப்போது அங்கு ஆஜரானார் அந்த வீட்டின் மூத்தவர் விஸ்வநாதன்.

"டேய் வந்ததும் வரததுமா உடுப்பை கூட மாத்தாம இங்க என்ன என் பொண்டாட்டி கிட்ட வம்பு வளக்குற" என தன் முரட்டு குரலில் சொன்னவாறே பெரிய மீசையை முறுக்க...அவனும் அவருக்கு எதிரில் நின்று தன் மீசையையை முறுக்கினான்.

"ஓஹோ ! அது எப்படி தாத்தா இப்போதான் பாட்டி உங்களை கூப்பிட நினைச்சாங்க,அதுக்குள்ள நீங்களே வந்து நிக்குறீங்க..?" என்க…

"அவரோ அதெல்லாம் சொல்லனும்னு அவசியமில்லை டா மனசுல நினைச்சாலே போதும். இத்தன வருஷம் கூட வாழ்ந்து இதைக்கூட உணர முடியலனா அது என்னடா வாழக்கை" என சொன்னவாறே மனைவியை காதலாக பார்க்க…

"ஆஹா ! செம தாத்தா… உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போதே எனக்கு பொறாமையா இருக்கு. எனக்கும் உங்க இரண்டு பேர் மாதிரி வாழணும் போல இருக்கு" என நினைக்கும் போதே ஒரு முகம் மனதில் தோன்றி மறைந்தது.
 

Anjali

Well-known member
Wonderland writer
"இதுயென்ன நான் இப்படி எல்லாம் நினைக்கிறேன். நோ மதி நடக்கவே முடியாத விஷயத்தை பத்தி தேவையில்லாமல் நினைக்காதே….அதெல்லாம் நமக்கு செட் ஆகாது" என தனக்கு தானே சொல்லிக் கொண்டவனின் கவனத்தை தன்னை நோக்கி திருப்பினாள் தியா.அவனும் தன்னை மீட்டுக்கொண்டவன் மகளிடம்...

"அம்முக்குட்டி பாட்டியை எதுக்கு இப்படி ஓடவிடுறீங்க ? என மூக்கோடு மூக்கை உரச,கிலுங்கி சிரித்தவாறே "எனக்கு ஐஸ்கிரீம் தான் வேணும் சப்பாது வேணாம்" என மழலை குரலில் சொல்ல …

"அவனோ நைட் ஐஸ்கிரீம் சாப்ட்டா சளி பிடிக்கும் டா...இப்போ பாட்டி தறதை சாப்பிடுவீங்களாம். நாளைக்கு அப்பா ஸ்கூல் கூட்டிட்டு போகும் போது நீ கேட்டதெல்லாம் வாங்கி தரேன்" என ஐஸ் வைக்க ...அவளோ பெரிய மனிஷி போல் தாடையில் கைவைத்து யோசிப்பது போல் சைகை செய்ய,அதனை ரசித்தவாறே பார்த்துக் கொண்டிருந்தான் மதி.

அவன் சொன்னதன் பின்பு அவளும் அடம்பிடிக்காமல் உணவை உண்ண… தாத்தா பாட்டியிடம் தியாவை கொடுத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்திருந்தான். சற்று நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக் வெளியே வர...வீட்டின் அனைவருமே ஒன்றாக கூடி இருந்தனர் கூடத்தில்.
அனைவரின் பேச்சும் அவனை பற்றியதாகவே இருந்தது.

"அப்பறம் இன்னைக்கு என்ன பஞ்சாயத்து..? யாரு என்ன பண்ணது' என்றவன் நிமிர்ந்து அங்கு நிற்கும் தன் அத்தை மகனை பார்த்து கண்ணாடி த்தவனாக 'என்னடா உன் மேட்டர் தெரிஞ்சிடுச்சா… மூஞ்சியை இஞ்சி திண்ண குரங்கு மாதிரி வச்சிருக்க" என்க,

அனைவருமே ஒரேநேரத்தில் திரும்பி அவனைத்தான் பார்த்தனர்."என்னடா ரகு என்ன மேட்டர்" என்க...அவனோ மதியை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

'அடப்பாவி உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்னை நானே செருப்பாலயே அடிச்சிக்கணும்' என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க…

"டேய் மச்சான் செருப்பு வெளிய இருக்கு டா. வேணும்ன்னா போய் எடுத்துட்டு வரவா"..?" என நக்கல் நிறைந்த குரலில் நீ இப்போ என்ன நினைப்பண்ணு எனக்கு தெரியாதா என்பது போல் பார்க்க…

அவனுக்கோ இன்னும் கோபம் அதிகரித்தது.இவனை வச்சுக்கிட்டு மனசுல கூட எதுவும் நினைக்க முடியலை என எண்ணிக் கொண்டவன் அனைவரின் பார்வையும் தன் மேல் இருப்பதை உணர்ந்து என்ன சொல்லி சமாளிப்பது என புரியாமல் மதியையே உதவிக்கு கண்களால் அழைத்தான்.

அவனும் விளையாட்டை மூட்டைக் கட்டி வைத்தவன். "எதுக்கு எல்லாரும் இப்படி ஷாக் ஆகுறீங்க ? நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல... சும்மா சொன்னேன், உங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்னு .ஆமா எல்லாரும் நான் வரும் போது ஏதோ தீவிரமாக பேசிட்டு இருந்தீங்களே அது என்ன..?" என பேச்சின் திசையை மாற்றினான்.

"அது ஒன்னுமில்லப்பா மதி... இந்த வருஷதோட மதுக்கு படிப்பு முடியுது. இன்னும் ஆறு மாசம் கூட இல்ல..அதான் உங்க இரண்டு பேருக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்" என்க...அவனுக்கோ இது மிக பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

"அப்பா என்ன விளையாடுறீங்களா..? நான் இப்போதான் வேளையிலேயே ஜாயின் பண்ணிருக்கேன். அதுவும் இப்போதான் இருபத்தி ஐந்து வயது முடிய போகுது அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்" என்க,

"உனக்கு அவசரம்னு யாருடா சொன்னது...நம்ம மது ஜாதகத்தில் தான் இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு இருக்காம்.இன்னைக்கு தான் நம்ம ஜோசியர் சொன்னாரு. அதான் எப்படியும் உங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம்ன்னு எப்பவோ முடிவாகிடுச்சே.... அதான் அப்பறம் எதுக்கு தள்ளி போடனும்" என்றவரை பார்த்து,

"அப்பா இன்னும் எந்த காலத்தில் இருக்கீங்க…?சும்மா ஜோசியர் சொன்னாரு அவங்க சொன்னாங்கன்னு இன்னும் படிப்பக் கூட முடிக்காத மதுக்கு எதுக்கு கல்யாணம்".

"எதுவா இருந்தாலும் இன்னும் இரண்டு மூணு வருஷம் போகட்டும்.எனக்கும் அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எல்லாம் பக்குவம் இல்லை. பிளீஸ்ப்பா புரிஞ்சிக்கோங்க" என்றவன் எப்படியாவது இந்த பேச்சை முடிக்க பார்த்தான். ஆனால் குடும்பத்தினர்களோ தங்கள் முடிவில் உறுதியாக இருந்துவிட்டனர்.

 
Status
Not open for further replies.
Top