அத்தியாயம் 1
அதிகாலை மணி ஆறு...
மேகக் கதவை கரம் நீட்டி தொட்டு, தட்டி, திறந்து கொண்டு கதிரவன் மெதுவாக எட்டி பார்க்க ஐந்து மணிக்கெல்லாம் துயில் கலைந்து எழுந்துவிட்ட பறவைகள் கீச்சிட்டு கானம் பாட இனிமையாக புலர்ந்திருந்தது அன்றைய காலை பொழுது...
ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்த வைஷாலி தலைக்கு குளித்து விட்டு ஈர கூந்தலை வெள்ளை நிற துண்டால் சுற்றி தலையில் கட்டிக்கொண்டு இளஞ்சிவப்பு நிற பருத்தி புடவை அணிந்து வந்தவள் அருகே இருந்த ரேடியோவில் சுப்ரபாதத்தை ஒலிக்க விட்டாள்...
தாய் சரோஜினியும் விளக்கேற்றி பூஜையை தொடங்கி இருக்க, காற்றில் கமழ்ந்து வந்த சாம்பிராணி மணத்துடன் சுப்ரபாதமும் சேர்ந்து கொள்ள அந்த வீடே தெய்வீக களை பூண்டிருந்தது...
ஜாகிங் செல்ல ஆயுத்தமாகி மாடிப்படியில் இறங்கி வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணகுமார்.
"குட் மோர்னிங் ப்பா" மாடிப் படியில் ஏறிக் கொண்டிருந்தவளின் முன்னே எதிர்ப்பட்ட தந்தைக்கு குரலில் துள்ளலுடன் காலை வணக்கம் வைத்தாள் வைஷாலி. மகளை பார்த்து மெலிதாய் முறுவலித்து "வெரி குட் மோர்னிங் மா" என்றார்.
ஒரு கணம் அவரது பார்வை அவ்விடத்தை ஆராய்ந்து விட்டு மீண்டும் அவள் முகத்தில் நிலைக்க "மது எங்க... இன்னுமும் தூங்குறாளா?" என்று கேட்டார்.
"ம்ம்... அவளை எழுப்ப தான் போயிட்டிருக்கேன்" என்றாள் வைஷாலி.
"எத்தனை தடவை சொன்னாலும் நேரத்துக்கு எழும்புறதில்லை. இஷ்டத்துக்கு தூங்குறது; இஷ்டத்துக்கு எழும்புறது. ஒரு டிசிப்ளின் வேண்டாமா...செல்லம் அதிகமாகி போச்சு... எல்லாம் உன்னையும் உங்க அம்மாவையும் சொல்லணும்" என்றவரை பார்த்து மென்மையாக புன்னகைத்த வைஷாலி "பாவம் ப்பா அவள்... ராத்திரி எல்லாம் படிச்சிட்டு லேட் ஆஹ் தான் தூங்க போனா... எழுப்பினதும் இப்போ எழுந்துப்பா" என்று தந்தையை சமாதானம் செய்தாள்.
"சரி சரி... அவளை ஒன்னு சொல்லிட கூடாதே உடனே சப்போட்டுக்கு வந்துடுவ... முதல்ல அவளை போயி எழுப்பி விடு… நான் ஜோகிங் முடிஞ்சு வரதுக்குள்ள அவள் எழுந்து ரெடி ஆகியிருக்கணும்னு சொல்லு..." என்று விட்டு சென்று விட்டார்.
மது வீட்டில் இருந்தாலே தாமதமாக எழுந்துக் கொள்வதற்காக தந்தையிடம் வாங்கி கட்டி கொள்வதும் அதை சமாளிக்க மதுஷிகா இல்லாத சேட்டைகளை எல்லாம் செய்து தந்தையை சமாதானம் செய்வதும் வாடிக்கையாக நடப்பது தான். அதை நினைத்து சிரித்து கொண்ட வைஷாலி மதுவின் அறையை நோக்கி சென்றாள்.
தாய், தந்தை, வைஷாலி மற்றும் மதுஷிகா என்று கண்ணுக்கு கண்ணாக இரண்டு பெண் பிள்ளைகளையும் கொண்ட அழகிய குடும்பம் அது.
கிருஷ்ணகுமாரின் தாயும், அவரின் தங்கை ஈஸ்வரி, கணவர் சேகர் மற்றும் மகன் தானவீரனும் கூட அந்த வீட்டில் தான் வசிக்கிறார்கள்.
ஒற்றை மகளை பிரிய விரும்பாத தாயின் ஆசைக்கிணங்க வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதித்த சேகரை தேடி பிடித்து ஈஸ்வரிக்கு மணமுடித்து வைத்தார் கிருஷ்ணகுமார்.
கிருஷ்ணகுமார் சொந்தமாக டிரான்ஸ்போர்ட் வியாபாரம் செய்து வருகிறார்.
தந்தை இறந்த பின்பு பூர்வீக சொத்துக்களின் உதவியுடன் இளமையில் நண்பர் ஒருவரோடு இணைந்து சிறியதாக ஆரம்பித்த டிரான்ஸ்போர்ட் தொழில் அது.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட சிறு மனகசப்பால் அதிலிருந்து பிரிந்து வந்தவர் சரோஜினியை மணமுடித்த பின் தனக்கென்று தனித்து ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பித்திருந்தார்.
முதலில் தத்தளித்து கொண்டிருந்த வியாபாரம் வைஷாலி பிறந்த பிறகு தான் நல்ல லாபத்தை ஈட்டி கொடுக்க அவருக்கும் சரி அவருடைய அன்னை ஜெயலக்ஷ்மிக்கும் சரி வைஷாலியின் மீது ஒரு தனி பிரியம் தான்.
அவருடைய முன்னேற்றத்துக்கு காரணம் வைஷாலி பிறந்த ராசி தான் என்று ஜெயலக்ஷ்மியும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க அது அவர் மனதிலும் பதிந்து போனது.
அதற்காக அவருக்கு மதுஷிகா வேண்டாத மகள் என்றெல்லாம் இல்லை. இரு பெண்களும் அவருக்கு இரு கண்களை போல தான்.
ஆனால், வைஷாலி பிறந்த ராசி தான் அவரின் அதிர்ஷ்டம் என்று நம்ப தொடங்கியிருந்தவருக்கு, தனது சொல் பேச்சு கேட்டு, அடக்கமாக, பொறுப்பாக, சாந்தமாக, அழகு பதுமையாக வளர்ந்து நின்ற மகள் மீது சற்றே அதிகப்படி பிரியம் அவ்வளவு தான்.
ஆனால், ஜெயலக்ஷ்மிக்கு அப்படி இல்லை. அவருக்கு வைஷாலி மீது எவ்வளவு பிரியமோ அந்த அளவுக்கு மதுஷிகாவின் மீது வெறுப்பு இருந்தது.
காரணம் வேண்டாத மருமகளின் சாயலில் அவள் பிறந்தது தான்.
சரோஜினி மற்றும் கிருஷ்ணகுமாரினுடையது பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்க பட்ட திருமணம் தான். இருந்தாலும் மணமுடித்து வந்த அடுத்த மாதமே மருமகளிடமிருந்து நல்ல செய்தி வேண்டுமென்று எதிர்பார்த்திருந்த ஜெயலக்ஷ்மிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அவர்களுக்கு திருமணமாகி இரண்டாண்டுகள் கடந்த நிலையில் மகள் ஈஸ்வரியும் கூட மணமுடித்து கற்பமாகியிருந்தாள். ஆனால், சரோஜினியின் கர்ப்பப்பை நிறையவில்லையே என்ற ஜெயலக்ஷ்மியின் வருத்தம் நாளடைவில் அவர் மீது வெறுப்பாக மாறியிருந்தது.
அதன் விளைவு கிருஷ்ணகுமார் வீட்டில் இல்லாத வேளைகளில் சரோஜினிக்கு குத்தல் பேச்சுகளும் சுடு வார்த்தைகளும் தான்.
திருமணமாகியும் வீட்டோடு இருக்கும் தன்னை யாரும் அவமதித்து விடுவார்களோ என்ற எண்ணத்தில் உழன்றுகொண்டிருந்த ஈஸ்வரிக்கும் ஜெயலக்ஷ்மி மருமகளை நடத்தும் விதம் சாதகமாகி போனது. அவரும் சரோஜினியிடம் கடுமையாகவே நடந்துக்கொள்ள ஆரம்பித்திருந்தார்.
நான்காம் ஆண்டு முடிவில் சரோஜினி தாய்மை அடைந்து குழந்தையை பெற்றெடுத்த பின்பும் அவர் மீது வளர்த்து வைத்திருந்த வெறுப்பு பழகி போய் விட்டது போலும். அதை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
மகனின் மூத்த மகள் அதிர்ஷ்டத்தோடு மட்டும் அல்லாமல் தந்தையை உரித்து வைத்து பிறந்திருக்க அவள் மீது இயல்பாகவே பாசம் வந்த ஜெயலக்ஷ்மிக்கு தாயின் சாயலில் பிறந்த மதுஷிகாவின் மீது பிடித்தம் இல்லாமல் தான் போனது.
வைஷாலி போல் அமைதியாகவும் அடக்கமாகவும் இல்லாமல் துடுக்கு தனமாகவும், பதிலுக்கு பதில் பேசி விடும் குணமும், குறும்பும் அதோடு சேர்ந்துக்கொள்ள அதற்கு மேலும் சொல்ல வேண்டுமா... மருமகளுடன் சேர்த்து இரண்டாவது பேத்தியின் மீதும் வெறுப்பை உமிழ்ந்தார்.
ஆனால், மதுஷிகா அதற்கெல்லாம் அஞ்சுபவள் இல்லை. அவர்களின் குத்தல் பேச்சுக்களை எல்லாம் தோளில் படிந்த தூசை தட்டி விடுவது போல் அசால்டாக கடந்து போய் விடுவாள்.
அவள் வீட்டில் இருக்கும் நேரம் குறும்புக்கும் கலகலப்புக்கும் பஞ்சமே இருக்காது.
அமைதியும் மென்மையுமான வைஷாலிக்கு அப்படியே நேர் எதிரான குணம் கொண்டவள் மதுஷிகா. பேச்சில் எப்போதும் துள்ளலும் இதழ்களில் புன்னகையும் கொண்டவளுக்கு அசட்டு தைரியமும் அதிகம்.
அறைக்குள் நுழைந்த வைஷாலி கட்டிலை பார்க்க மதுஷிகா போர்வையை தலையுடன் போர்த்தியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.
நேரே சென்று அவள் தொடையில் ஒரு அடி போட்ட வைஷாலி " மது எழுந்திரு... இன்னும் என்ன தூக்கம்… அப்பா ஜோகிங் போயிட்டு வரதுக்குள்ள நீ ரெடியா இருக்கணும்னு சொல்லிட்டு போயிருக்காரு. எழுத்துரு டி" என்று மதுஷிகாவை உலுக்கி எழுப்பினாள்.
"இன்னும் கொஞ்ச நேரம் க்கா" என்ற சிணுங்கலுடன் போர்வைக்குள்ளாகவே புரண்டு படுத்தாள் மது.
"எழுந்துருன்னு சொல்லுறேன்ல " என்ற வைஷாலி அவள் போர்வையை இழுக்க மதுஷிகா உள்ளிருந்தபடி அதை இறுக்கமாக பிடித்து கொண்டு "தென் மோர் மினிட்ஸ் க்கா... ப்ளீஸ்" என்று கெஞ்சி கொண்டே தூக்கத்தை தொடர்ந்தாள்.
"எப்படியோ போ. இன்னிக்கும் அப்பா கிட்ட திட்டு வாங்க போற" என்று அவளை திட்டி கொண்டே அருகே இருந்த அலமாரியை திறந்த வைஷாலி அன்று மது அணிவதற்கான உடையை தேர்ந்தெடுத்து மேசை மீது வைத்தாள்.
வழக்கமாக மது உடுத்துவதற்கான ஆடை அணிகலன்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை வைஷாலியிடம் கொடுத்திருக்க அவளும் அதை தங்கைக்காக ஆசையாக செய்வாள்.
"இங்க பாரு மது, உன் டிரஸ் இங்க வச்சிருக்கேன். சீக்கிரம் எழுந்து குளிச்சு ரெடி ஆகி வா." என்று கொண்டே அவள் மீண்டும் கட்டிலில் படுத்திருந்த மதுவின் புறம் திரும்ப போர்வைக்குள் வெளிச்சம் தெரிந்தது.
மதுஷிகா போர்வைக்குள் திறன்பேசியை வைத்து பார்த்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. சில நொடிகளில் திறன்பேசியை அணைத்து வைத்தவள் மீண்டும் உறக்கத்தை தொடரும் எண்ணத்தில் புரண்டு படுக்க கடுப்பான வைஷாலி வேகமா சென்று அவள் தலை வரை போர்த்தியிருந்த போர்வையை வெடுக்கென்று பறித்தெடுத்தாள்
"என்னடி எழுந்து ஃபோன் பார்த்துட்டு மறுபடி தூங்குற. அதுதான் முழிப்பு வந்திருச்சுல பிறகு எழுந்து போய் குளிக்குறதுக்கு என்ன?" என்று மெலிதாக கடிந்து கொண்டாள்.
"உம்ஹும்... முடியாது... இன்னிக்கு என்ன டேன்னு தெரியும் தானே " என்று கேட்டாள்.
"சண்டே. அதுக்கென்ன?" கேட்டாள் வைஷாலி.
"சண்டே தான்... பட் சண்டெல என்ன டே " என்று புதிர் போட்டாள் மது.
"தெரியல டி... இம்சை பண்ணாமல் நீயே சொல்லு" வைஷாலியின் குரலில் மெலிதாய் எரிச்சல் எட்டி பார்த்தது
"கவர் சோங் டே க்கா ... தாமஸ் ஓட கவர் சோங் டே... எவ்ரி வீக் சண்டே டாம் ஓட கவர் சோங் வீடியோ பார்த்த பிறகு தான் எனக்கு விடியும்...இன்னும் வீடியோ வரல. வந்த பிறகு நானே எழுந்துப்பேன். இப்போ தொல்லை பண்ணாமல் என்ன தூங்க விடு க்கா " என்றவள் விட்ட தூக்கத்தை தொடர மீண்டும் போர்வைக்குள் புகுந்துகொண்டாள்.
தங்கையின் சேட்டையை பார்த்து இருபுறமும் சலிப்பாக தலையாட்டிக் கொண்ட வைஷாலி "சரியான டாம் பைத்தியம்... அவ்வளவு ஆசைனா அவரையே கட்டிக்க வேண்டியது தானே" என்று சொல்ல சற்றே போர்வைக்கு வெளியில் எட்டி பார்த்த மது "அவர் ஓகே சொன்னா நான் வேணம்னா சொல்ல போறேன்." என்று விட்டு மீண்டும் போர்வையை இழுத்து தலை வரை மூடிக் கொண்டாள்.
****
மேசை மீது இருந்த அவன் திறன்பேசியில் அலாரம் அடிக்க இமை திறவாது தலை வரை போர்த்தியிருந்த போர்வையை விலக்கி கைகளை மட்டும் நீட்டி மேசை மீது தொட்டு துளாவியபடி அலைபேசியை எடுத்தவன் அதை அப்படியே முகத்துக்கு நேராக கொண்டு சென்று அதில் வால்பேப்பராக மிளிர்ந்து கொண்டிருந்த தன்னவளின் முகத்தில் விழி மலர்ந்தான் டாம் என்கின்ற தருண் தாமஸ்.
இதழ்களில் ஒரு புன்னகை. மொத்தமாக தன்னை மூடியிருந்த போர்வையை அகற்றி விட்டு எழுந்து கொண்டவன் நேரே சென்று அருகே இருந்த ரேடியோவில் அவனுக்கு பிடித்தமான மெல்லிசை கானம் ஒன்றை ஒலிக்க விட்டான்.
பூந்துவாலையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டே பாடலுக்கு ஏற்றாற்போல் தன்னவளுடன் நடனமாடுவது போன்ற கற்பனையில் மென்மையாக இங்கும் அங்குமாக அசைந்தாடிய படியே திரும்ப அங்கே இருந்த ஆள் உயர கண்ணாடி அவனுடன் சேர்த்து அவன் நடவடிக்கையையும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
கற்பனையில் தன்னவளுடன் நடனம் ஆடுவது போன்ற நினைவில் தான் செய்து கொண்டிருக்கும் சிறுபிள்ளை தனமான செயலை நினைத்து ஒரு வெட்க புன்னகை சிந்தியவன் கண்ணாடியை பார்த்து "என்னடா ஆச்சு உனக்கு..." என்று பின்னந்தலையை வருடி கொண்டே குளிக்க சென்றான்.
குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன் நேரத்தை பார்க்க அது காலை மணி ஆறரை என்று காட்டி கொண்டிருந்தது. அருகே இருந்த மடிக்கணினியில் முன்னே அமர்ந்தவன் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த அவனுடைய கவர் சோங் விடியோவை அவனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருந்தான்.
கவர் சோங் பாடுவது அவனுடைய பொழுதுபோக்கு. அதற்காக “தாமஸ் வைப்ஸ் “என்ற யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றான்.
பிசினெஸ் உலகில் தருணாக அனைவருக்கும் அறிமுகமானவன் அவனுடைய யூடியூப் விசிறிகளுக்கு என்றுமே "டாம்" (Tom) தான்.
படிப்பு முடிந்து குடும்ப தொழிலை கையில் எடுத்துக்கொண்டவன் வியாபார உலகில் ஜாம்பவானாக இருந்தாலும் அவனுக்கு மன திருப்தியையும் நிம்மதியையும் தருவது இந்த பாடல்களும் அவன் குரலை ரசிக்கும் அவனது ரசிகர்களும் தான். அதற்காகவே என்ன தான் வேலை வேலை என்று ஓடினாலும் அவனுடைய இந்த பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்க தவறியதில்லை.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமை காலை ஆறரை மணிக்கெல்லாம் அவனுடைய புது காணொளியை பதிவேற்றம் செய்வது அவனுடைய வழக்கம். அதை செய்த பிறகு தான் அவனுக்கு அடுத்த வேலையே...
பதிவேற்றம் வெற்றிகரமாக முடிந்த பின்னே மனதில் அப்படி ஒரு நிறைவான உணர்வு.
கோடி கணக்கில் வியாபார ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் போது கூட அவன் இவ்வளவு நிறைவாக உணர்ந்ததில்லை...
ஆனால், ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தனது குரலில் பாடிய கவர் சோங் காணொளியை பதிவேற்றியதும் அவனுக்குள் வரும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது...
அவன் மனதுக்கு பிடித்த விடயம் ஆயிற்றே அதுவே அந்த மனநிறைவுக்கு காரணம்...
இம்முறை ஜோதா அக்பர் படத்தில் இடம்பெற்ற முழுமதி என்ற பாடலை தான் அவன் குரலில் கவர் சோங் ஆக உருவாக்கியிருந்தான்.
கால் தடமே பதியாத…
கடல்தீவு அவள்தானே…
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்…
கேட்டதுமே மறக்காத…
மெல்லிசையும் அவள்தானே…
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்…
ஒரு கரையாக அவளிருக்க…
மறுகரையாக நான் இருக்க…
இடையில் தனிமை தளும்புதே நதியாய்…
கானல் நீரில் மீன் பிடிக்க…
கைகள் நினைத்தால் முடிந்திடுமா…
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே…
ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…
அவனவள் நினைவால் பாடிய பாடல்... குரலில் காணத்தோடு காதலும் கசிந்தோடியது.
பதிவேற்றிய அடுத்த ஐந்தாவது நிமிடம் "யுவர் வாய்ஸ்...ஜஸ்ட் பியோர் மாஜிக்… மனசே உருகிடுது" என்று கமெண்ட் வந்து விழ அவன் இதழ்கள் தானாக பிரிந்து முத்துப்பற்கள் தெரிய சிரித்துக்கொண்டான்.
அவனது பரம ரசிகை அவள். யாரென்றே தெரியாத பெண். அவனது ஒவ்வொரு காணொளிக்கும் தவறாமல் லைக், கமெண்ட் செய்பவள். அவளுடைய கமெண்டுகளிலும் அவன் பாட்டின் மீதும் குரலின் மீதும் அவ்வளவு ரசனை இருக்கும். அதுதான் அவளை நினைவில் வைத்திருக்கிறான்.
வழக்கமாக அவன் காணொளிக்கு வரும் கருத்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வெறும் லைக் மட்டும் போட்டு விடுவது அவனது வழக்கம். ஆனால், இன்று தன்னவளின் நினைவு தந்த இதமான மனநிலையில் இருந்தவன் அவனுக்கு முதலில் வந்த கருத்துக்கு பதிலும் அனுப்பி வைத்தான்.
"க்ளாட் யு லைக்ட் இட்" என்று அருகில் ஒரு இதய வடிவ இமோஜியும் சேர்த்து அவளுக்கு பதில் எழுதியிருந்தான்.