ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இமைத்திறந்த கனவுகள்-கதை திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்-6

“அக்கா அக்கா பூ அக்கா” என்ற விளிப்பில் மங்கையவளின் உணர்வுகள் விழித்தாலும்,இமைகள் இரண்டும் உறக்கத்திற்கு கெஞ்சினர். இருந்தும் வலுக்கட்டாயமாக பசைபோன்று ஒட்டிய இமைகளை மெல்ல பிரித்து தன்முன் உள்ளவளை பார்த்தவாறே கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள் பூந்தென்றல்.

மேலாளர் ரவியிடம் நடந்த கசப்பான சம்பவத்திற்கு பிறகு இரு வாரங்கள் கடந்தாலும் பெண்ணவளின் மன காயம் ஆறவில்லை. கடமைக்கு என்று அவளின் நேரங்கள் கடந்தாலும் அவளுள்ளம் வேலை மாற்றம் வேண்டி தவமிருந்தது.

முன்பைவிட மேலாளர் ரவியின் தாப பார்வை தன்மீது விழவில்லை என்று பெண்ணவள் நெஞ்சம் அமைதியுற்றாலும், அவனின் தொடர்ச்சியான வேலை நெருக்கடியில் உடலே சோர்ந்து போய்விட்டது.


முன்னர் பில்லிங் பிரிவில் இருந்தவளை சம்பந்தமே இல்லாமல் குடோனுக்கு சென்று பொருள் எடுத்துவருவது,மேல் தளத்தில் விற்பனை பிரிவில் நிற்க வைப்பது என பூந்தென்றல் தானாக தன்னிடம் கெஞ்சும் அளவுக்கு நெருக்கடி கொடுத்தான். சில நாட்கள் பசியை கூட மறந்து விட்டாலும் அவள் திடமாக எதிர்கொண்டாள்.

விடுதிக்கு வந்தால் ஓய்வு மட்டுமே அவளின் தற்போதைய விருப்பமாக இருந்தது.

இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் உடல் சோர்வினால் காலை உணவுவேளை முடிந்தும் உறங்கிக்கொண்டிருப்பவளை அறையிலுள்ள சுபா என்ற பெண் எழுப்பினாள்.

சுபா அழைப்பில் எழுந்த பூந்தென்றல் தூக்கத்தில் ஒற்றை கண்ணை மட்டும் லேசாக திறந்தபடியே தன்முன் நிற்பவளிடம், “எதுக்கு எழுப்பின சுபா?” என கொட்டாவி விட்டப்படியே கேட்டு உடலை முறுக்கி சோம்பல் முறித்தாள்.

“மணி 11 ஆக போகுது இன்னும் எழல அதான் எழுப்பினேன்” என்றவளுக்கு, மெலிதாக புன்னகைத்தபடியே கண்களை நன்றாக திறந்த பூந்தென்றல்,
“கொஞ்சம் உடம்பு அசதி இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். ஆனால் இன்னும் தூங்கனும் போல இருக்கு” என கூறும்போதே அவளின் குரல் மெலிந்து ஒலித்தது.
.”இப்போயெல்லாம் ரொம்ப வேலையா?” என மற்றோரு பெண் லதா கேள்விக்கு, ஆமாம் என தலையசைத்த பூந்தென்றல் உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.

சிறிதுநேரத்தில் அறைக்குள் வந்த பூந்தென்றலிடம், தன் நண்பியின் சகோதரி வேலை செய்யும் அலுவலகத்தில் வேலை இருப்பதாக சுபா கூறினாள்.

மேலாளர் ரவியை நினைத்து பூந்தென்றல் ஒவ்வொரு நாளும் பயந்தபடியே வேலைக்கு சென்று வருகிறாள். ஏனென்றால் அடிபட்டகருநாகம் ஆச்சே எப்பொழுது கொத்தி விஷத்தை கக்குவான் என்ற பயம் மேலோங்கி நின்றது அவளிடத்தில்.
வேறு வேலை கிடைக்காத பட்சத்தில் இருக்கும் வேலையை விட்டால் தன்நிலையை நினைத்து அச்சம்கொண்டாள்.

அதனால் உடனே சுபாவிடம் விவரம் கேட்டு இந்த வேலை கிடைக்க உதவி செய்ய சொன்னாள்.

“அக்கா இதுக்கு ஏன் உதவின்னு பெரிய வார்த்தை பேசுற, உனக்கு தான் அந்த வேலை நான் இப்போவே பேசுறேன்” என சுபா தனது அலைபேசியில் இருந்து பூந்தென்றலின் வேலைக்காக தோழியிடம் பேசிவிட்டு வைத்தாள்.


சுபா அலைபேசியில் பேசுவதை மனதில் கடவுளிடம் வேண்டுதல் வைத்தவாறே கண்களில் தவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தாள்.


“நான் பேசிட்டேன் அக்கா,அவங்க உன் ரிஸும் அனுப்ப சொன்னாங்க”என்றவளுக்கு உடனே தனது அலைபேசியில் இருந்து சுபாவிற்கு அனுப்பி வைத்தாள்.


சுபா உடனே தனது மடிக்கணினியில் பூந்தென்றல் மின்னஞ்சலை திறந்து கம்பனி மின்னஞ்சலுக்கு அவளின் தகவலை அனுப்பி வைத்துவிட்டு தன்னருகில் உள்ளவளை பார்க்க அவளோ கண்மூடி இருந்தாள்.

அவளின் நிலையை யாரிடம் சொல்லி உதவி கேட்பது என்று புரியவில்லை. தன்மேல் உயிரை வைத்த உயிரும் இவ்வுலகத்தில்லை,தன்னை உயிராக நேசித்த தோழியின் வாழ்க்கைக்கும் இடைஞ்சலாக மாறி நட்பையே இழந்துவிட்டாள். ஒரு பெண் தனியாக உள்ளாள் என்றால் எத்தனை பிரச்சனைகள் எத்தனை வன்மம பார்வை ஏன் மேலாளர் ரவி தன்னை தீண்டியே விட்டான். ஏன் இந்த வாழ்க்கை யாருக்காக? எதற்கு வாழ வேண்டும்?என்ன லட்சியம் இருக்கிறது என்னிடத்தில்?ஒற்றை சத்தியத்திற்காகவா இப்படியான போராட்ட வாழ்க்கை?எனக்கு என்ன வேண்டும் என்பது கூட என்னால எண்ண முடியவில்லையே?இந்த வயதில் திருமணத்தை எண்ண வேண்டும்.திருமணமா போதும்டா சாமி” என கண்மூடி தனக்குள்ளே மருகிக்கொண்டிருந்த பூந்தென்றலை அருகிலிருந்த சுபாவும்,லதாவும் ஒன்றும் விளங்காமல் ஒருவரொருவர் முகத்தை பார்த்தனர்.


தனக்குள்ளே உழன்றவள் ஒருவழியாக மெல்ல கண்திறக்க, சுபா மடிக்கணினியை பார்த்தவள் பெருமூச்சுடன் அருகில் அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இருவரையும் கண்டு மெலிதாக புன்னகைத்தாவறே,

“நான் சாப்.. சாப்பிட்டு வரேன்” என தழுதழுத்த குரலில் கூறிவிட்டு அறையைவிட்டு வேகமாக வெளியேறினாள்.
பூந்தென்றல் செய்கையைக்கண்ட இரு பெண்களுக்கும் வருத்தமாகியது.

லதாவை அயர்வாக பார்த்த சுபா தனது மடிக்கணினியை பார்க்கும்போது தான் அவளின் புருவங்கள் முடிச்சிட்டது.
அதேநிலையில், “ஏய் லதா இங்க வாயேன்”என சத்தமான அழைப்பில் லதாவும் சுபா அருகில் அமர்ந்து அவளும் மடிக்கணினியை பார்த்தாள்.


அவளுக்கு புரியாமல், “என்னடி ரிப்ளை ஈமெயில் வந்து இருக்கா”என்று கேட்டாள் லதா.


“இல்ல லூசு, அக்கா ஜாப் வெப்சைட்ல லாக்இன் பண்ணிருக்கும் போல” என சொல்லிக்கொண்டே அந்த வேலைவாய்ப்பு இணையதளத்திற்கு சென்று அலசி ஆராய்ந்தாள்.

சில நொடிகளில் ஒரு பெரிய கம்பெனியிடமிருந்து வேலைவாய்ப்பு வந்திருக்க, உடனே சுபா அதை திறந்து முழுவிவரத்தை பார்த்தாள்.

“சுபா இது பிஏ போஸ்ட்க்கு டி”என லதா சொல்வதை காதில் வாங்காமல், சுபா அந்த வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு பூந்தென்றல் விவரத்தை பூர்த்தி செய்து விண்ணப்பித்தாள்.

சுபா செய்வதை பார்த்த லதா அதிர்ந்து, “ஏய் என்னடி நீ பாட்டுக்கு அப்ளை பண்ணிட்டு இருக்க” அதட்டினாள்.

லதா வாயை தன் கையால் மூடிய சுபா, “கத்தாத பூ அக்காக்கு கேக்க போகுது”என்றவளின் கையை விளக்கிவிட்ட லதா எழுந்து அறைக்கு வெளியே பார்த்துவிட்டு கதவை சாற்றினாள்.


சுபாவை முறைத்தவண்ணம் வந்த லதா, “என்ன பண்ணி வச்சிருக்க?” என்றவளுக்கு,

“நல்ல கம்பெனி லதா,அக்காக்கு வேலை கிடைச்சா நிச்சயம் அவ வாழ்க்கை மாறும்.படிக்க தனியா வந்த நம்மனாலே குடும்பத்தை விட்டு இருக்க முடியல.அது நிலைமையை யோசி” சுபா கூறினாள்.

“எல்லாம் சரிதான்”என லதா தயங்கினாள்.

“லதா அப்ளை பண்ணியிருக்கோம்.அந்த போஸ்ட்க்கான குவலிபிகேஷன்,எஸ்பிரின்ஸ் அக்காகிட்ட இல்லை. பை சான்ஸ் லக் ல ஜாப் கிடைச்சா அதான் பண்ணேன்” .
“சரி பார்ப்போம்” என லதா சொல்ல, இருவரும் தாங்கள் விட்ட படிப்பை தொடர்ந்தனர்.

ஒருவேளை சுபா விதியை அறிந்து கூறினாலா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையில் பூந்தென்றல் வாழ்க்கையில் நிகழபோகும் மிகப்பெரிய மாற்றத்திற்கான வழியை தான் சுபா ஏற்படுத்திவிட்டாள். அந்த மாற்றம் அவளுக்கு பல வலிகளையும் சந்தோஷத்தையும் ஒருசேர வாரி வழங்க காத்துக்கொண்டிருக்கிறது.

அன்றைய இரவே பூந்தென்றல் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்ட மின்னஞ்சல் வந்திருப்பதை லதா சுபா இருவரும் அதிர்ச்சி குறையாமல் மடிக்கணினியை பார்த்தனர்.

சென்னை மாநகரத்தின் புகழ்பெற்ற கட்டுமான நேர்மையான நிறுவனம் என்றால் பத்து சொல்லலாம்.அதில் இந்த கம்பெனி பெயரும் இடம்பெறும் “S.K construction company pvt ltd”.

இரண்டு நாட்கள் கழித்து நேர்முகத்தேர்விற்கு செல்ல வேண்டும் என்பதை மட்டுமே சுபா பூந்தென்றலிடம் கூற,அவளும் சுபா முன்னர் சொல்லிய கம்பெனி என்று நினைத்துக்கொண்டு சரி என்றுவிட்டாள்.


இப்பொழுது சொன்னால் பூந்தென்றல் வேண்டாம் என்று மறுத்துவிடுவாள் என பெண்கள் இருவரும் மறைத்துவிட்டனர்.

அன்றைய நாள் முழுக்க சோகசாயலில் திரிந்தவள்,மறுநாள் வேலைக்கு செல்லவேண்டுமா என முதன்முறை எண்ணிக்கொண்டாள்.

நம் வாழ்க்கையின் அடுத்தபடியை அடைய சில வலிகளை எதிர்கொள்ள தான் வேண்டும் என்பதை இந்த வெகுளி பெண்ணிற்கு யார் உரைப்பது என நினைத்த மேகவள் கூட தன் கண்ணீரை இரவுமுழுதும் மழையாக பொழிந்துவிட்டு சூரியனை துயில் எழுப்பினாள்.

வழக்கம்போல பூந்தென்றல் கிளம்பி கடைக்கு வந்து பில்லிங் பிரிவில் நின்று தனது வேலையை பார்க்க ஆரம்பிக்கும்போது வந்த மேலாளர் ரவி, “ஏய் உனக்கு மேல வேலை.பத்மாவோட இன்னும் இரண்டு பேர் லீவு ஜீவ்வெல் செக்ஷன்க்கு போ” என அதிகார குரலில் கட்டளையிட்டான்.


ரவி குரலைக்கேட்டதும் அவன் நிற்கும் திசையை கூட பார்க்காமல், அவன் கூறியபடியே மேல் தளத்திற்கு சென்றவளை பார்த்தவாறே தனது இடதுபக்க கன்னத்தை தடவினான்.

தன்னிடம் மரியாதையில்லாமல் செல்லும் பெண்ணவளை கண்டவன் உள்ளுக்குள் பொருமினான்.

மேல் தளத்திற்கு வந்து அங்குள்ள கவரிங் நகை பிரிவில் விற்பனையரளாக பூந்தென்றல் நிற்க,அவளோடு இன்னொரு பெண்ணும் இருந்தாள்.

சில நேரங்களில் கடைக்கு வாடிக்கையாளர்கள் வர தொடங்கினர்.

கீழ் தளத்தில் தான் உணவு பொருட்கள் இருப்பதால் அங்குதான் கூட்டம் நிரம்பி வழியும். மேல் தளமுழுக்க பெண்கள் அழகுசாதன பொருட்கள் காலணிகள் கைப்பைகள் கவரிங் பேன்சி நகைகள்,பரிசளிப்பு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நிரம்பி இருக்கும். மேல் தளத்தில் கூட்டம் இருக்கும் என்றால் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரிவிகளில் தான் இருக்கும்.


பூந்தென்றலும் வரும் வாடிக்கையாளர்கள் கேக்கும் நகைகள் எடுத்துக்கொடுத்து விளக்கம் கூறி ஓய்ந்தே விட்டாள். பத்தில் இருவர் மட்டும் தான் வாங்கி செல்வர் மீதியரோ பார்க்க மட்டும் வருவேர்.

அதில் ஒரு பணக்கார குண்டு பெண்மணியும் நவநாகரீக இளம் பெண்ணொருத்தி வந்தார்கள்.

அவர்கள் ஒவ்வொரு டிசைனாக கேக்க பூந்தென்றலும் சலிக்காமல் எடுத்துக்காட்டினாள். கிட்டத்தட்ட ஒருமணி நேர முடிவில் ஆண்டிக் நகையை எடுத்துக்கொண்டு பீல் போடும் இடத்திற்கு இருவரும் நகரவும் தான் மூச்சே விட்டுக்கொண்டாள்.

சில நிமிடங்களில் அந்த தளமே சற்று கூச்சலும் சலசலப்பும் ஆனது.

வாடிக்கையாளர் ஒருவரிடம் நகையை காட்டிக்கொண்டிருந்த பூந்தென்றல் அருகே வந்த ஆண்டிக் நகை வாங்கிய குண்டு பெண்மணியும் பெண்ணும் அவளை திட்ட தொடங்கினர்.


“என்னடி பார்க்குற திருடி நாயே” என அந்த பெண் பூந்தென்றலை திருடி என்று கூறியதும் பூந்தென்றல் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

அதில் கலங்கிய கண்களுடன், “மேடம் என்ன பேசுறீங்க?” என தான் என்ன செய்துவிட்டேன் தன்னை திருடி என்று சொல்கிறார்கள் என புரியாமல் கேட்டாள்.

“அறைஞ்சேன் வை”என அந்த பெண் கோவத்தில் பூந்தென்றலை அறையவதற்காக கையை அவளின் கன்னம் அருகே கொண்டுவந்து இழுத்துக்கொண்டார்.

பெண்ணவள் அந்த பெண்மணி செயலில் பயந்துவாறே கண்ணீருடன் தன்னை சுற்றியுள்ள எல்லாரும் முன் தான் அவமானப்பட்டு நிற்பதைக்கண்டு உடைந்துவிட்டாள்.

ஏதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டு விரைந்து வந்த ரவி, பூந்தென்றலை திட்டிக்கொண்டிருந்த பெண்மணியிடம் என்னவென்று விசாரித்தான்.

“வாங்க சார், நீங்க தான் மேனஜரா,என் பெண்ணோட டைமெண்ட் தோட்டை உங்க ஸ்டாப் திருடிட்டா.இதோ இவ தான்”என அந்த பெண்மணி பூந்தென்றலை கைகாட்டி குற்ற சுமத்த, அவளின் விழிகள் நன்றாக விரிந்து அதிர்ச்சியை காட்டியது.

கண்ணீருடன் அதிர்ந்து நின்ற பூந்தென்றலை பார்த்த ரவிக்கு மனதுக்குள் மழை சாரல் அடித்த உணர்வு.
அதனை முகத்தில் கட்டாதவாறு வெளியில் முகத்தை கோவமாக வைத்துக்கொண்ட ரவி அதிர்ந்து நின்றவள் அருகில் நெருங்கி, “சொல்லுடி திருடுனத எங்க வச்சிருக்க?”என்றவனின் சொல்லில் பூந்தென்றல் திடுக்கிட்டு பின்னே நகர்ந்தாள்.

“சார் என்ன நடந்தது கேக்காம இப்படி நீங்களே பழி போடுறீங்க” என அந்த தளத்திலுள்ள பணியாளர்கள் மேலாளர் ரவி பேச்சில் அதிர்ந்து நியாயம் கேட்டனர்.

“சூ என்ன நடந்துருக்கும்னு எனக்கு தெரியும்.என்கிட்டையே யாராச்சும் குரலை உயர்த்துனா கிழிச்சுறுவேன் சொல்லிட்டேன். கூட்டம் சேர்க்காம எல்லாரும் போங்க” என அவன் தொண்டை கிழித்து கத்தியத்தில் பணியாளர்கள் வேறுவழியின்றி தங்கள் வேலையை தொடர,அங்கிருந்த வாடிக்கையாளர்களையும் செல்லுங்கள் என ரவி தன்மையாக கூறி அனுப்பினான்.


இப்பொழுது அங்கு பூந்தென்றல், ரவி அந்த இரு பெண்கள் மட்டுமே இருந்தனர்.

“என்ன சார் எங்களையும் அனுப்பி வைக்க போறீங்களா?”ஆத்திரமாக விழுந்த அந்த பெண்மணி கேள்விக்கு,

“இல்லை மேடம் வியாபாரம் நேரம் அதான்.நீங்க கவலைப்பட வேணாம்” என்றவன் அழுத்தமாக பூந்தென்றலை பார்த்து,

“எப்டி திருடன உண்மையை சொல்ல போறியா இல்லையா?” என இவள் தான் திருடினால் என்று இவனே சாட்சி கூறியதுபோல அதட்டினான்.

தன்னை சரியான நேரத்தில் பழி வாங்குபவனை என்னவென்று சொல்வது என கலங்கிய பூந்தென்றல், தன் கண்ணீரை துடைத்துவிட்டு “நான் சத்தியமா திருடல சார்.தயவுசெஞ்சு நம்புங்க” கையெடுத்து தன்னை வேண்டுமென்றே குற்றம் சாட்டுபவனிடமே வேறுவழியின்றி கெஞ்சினாள்.

“ஏய் ஜீவ்ள்ஸ் போட்டு விடும்போது நீதானே ஸ்டுபிட் என் இயரிங்யை திருடுன. அது எவ்வளவு காஸ்டிலி தெரியுமா.ஒழுங்கா கொடுடி” என அந்த இளம்பெண்ணும் பூந்தென்றல் தோள் இருபுறமும் கைவைத்து உழுக்க,அவளோ கதறி அழுதாள்.

அவள் அழுகையை ரசித்த ரவி, “மேடம் கண்டிப்பா இயரிங் இவகிட்ட தான் இருக்கும்”என்றவன் பேச்சிற்கு,

“அப்போ பரிசோதனை பண்ணி பார்க்குறேன்” என அந்த பெண்மணி அருகில்வர,
அவரை வேகமாக தடுத்த ரவி, “மேடம் இங்க வேணாம்.என் ரூமுக்கு கூட்டிட்டு போய் செக் பண்ணுவோம்”என அந்த பெண்மணியிடம் கூறிவிட்டு, பூந்தென்றல் அருகில் குனிந்து “இவளை அவுத்து பார்த்தா தான் தெரியும்” என மெலிதான குரலில் அவளுக்கு கேட்கும்மட்டும் கூறினான்.

ரவி பேச்சை பூந்தென்றலினால் ஜீரணிக்க முடியவில்லை. இவன் தன்னை இப்பொழுது என்ன செய்ய போகிறான் என நினைக்கும்போதே அவளின் இதயம் நின்றே விட்டது.

அதிர்ச்சியில் உறைந்து நின்றவள் கையை பிடிக்க ரவி தன் கையை கொண்டுச்செல்ல முற்பட அப்பொழுது அவனின் கையை இரும்பென பற்றி தடுத்தது ஒரு வலிய ஆணின் கரம்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்-7

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவி தன்னிடம் அத்துமீறுவதாக கூறுவதைக்கேட்ட பூந்தென்றல் ஜீரணிக்க முடியாமல் உறைந்துபோய் நின்றாள்.

அப்போது பூந்தென்றல் கையை பற்ற முற்பட்ட ரவியின் கையை தடுத்தான் ருத்ரன்.

வாயில் சுவிங்கம் மென்றுபடியே ரவியின் கையினை பிடித்துக்கொண்டு, “ஹலோ பொண்ணே!”என சத்தமாக பூந்தென்றலை அழைத்தான்.

அவள் தான் இந்த உலகத்தில் இல்லையே தனது உயிரை இப்பொழுதே துறந்துவிடும் நோக்கில் மூச்சுடைக்க நிற்பதைக்கண்ட ருத்ரன் புருவங்கள் யோசனையில் சுருங்கியது.

அவளின் எண்ணம் புரிந்தவன் நொடியில் அவளருகில் இருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டான்.

தன் கையை வலுவாக பற்றியவனை அதிர்ந்து பார்த்த ரவி உட்பட அந்த இரு பெண்களும் ருத்ரன் தோற்றத்தைக்கண்டு மவுனமாக நின்றனர்.

பொருட்கள் கீழே விழுந்த சத்தத்தில் திடுக்கிட்ட பூந்தென்றல் தனது எண்ணத்தை கைவிட்டு, வெளிறிய முகத்தோடு புதியவனை சந்தேகமாக பார்த்தாள்.

பொருட்கள் சிதறியதில் ரவிக்கு கோவம் எழ, “சார் யாரு நீங்க? எங்க கடைக்கு வந்து பொருளை போட்டு உடைக்குறிங்க? உடைஞ்ச பொருளுக்கு காசு எடுத்து வைக்குறிங்க இல்ல” என்று அதிகாரமாக பேசிக்கொண்டே தனது கையை விடுவிக்க முயற்சித்தான்.

அதற்கு ரவியின் கைமணிக்கட்டை மேலும் இறுக்கி பிடித்த ருத்ரன், “ஸ்டாப் இட்”என்று அவனிடம் அழுத்தமாக கூறிவிட்டு,
தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் பூந்தென்றல் புறம் திரும்பி, “இவங்க சொல்லுறது ஆமாம்வா? இல்லையா? பட் உண்மையா தான் சொல்லணும்” என அவளிடம் மட்டுமே தன்மையாக கேட்டான்.

தன்மீது பழி போட்டார்கள் என்று அவளிடம் பதட்டமில்லை மாறாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்பது மட்டுமே அவளின் கண்களில் பிரதிபலித்தது.

“நீங்க யாரு சார் இதை கேக்க?” என்று இதுவரை வாய்க்கு ஓய்வு அளித்த குண்டு பெண்மணி ருத்ரனிடம் பாய்ந்தாள்.


அதற்கு ருத்ரன் தனது புருவங்களை மேலேற்றி இறக்கி, “சொல்லுறேன்” என்றான்.

பூந்தென்றல் பேசாமல் நடுங்கிக்கொண்டே இருப்பதைக்கண்ட ருத்ரன்,ரவியிடம் கண்காணிப்பு கேமரா உள்ள அறையை எங்கு என்று கேட்டவனுக்கு ரவி வழியை சொன்னான். சொல்லும்போதே அவனின் உதடு நக்கலாக சிரித்தது.

அதனை ருத்ரன் கண்களும் கண்டுக்கொண்டு, “வா மா” என பூந்தென்றலிடம் அழைத்து திரும்பியவன் மீண்டும் அவளின்புறம் திரும்பி, “நீ தப்பு பண்ணலனு நான் நம்புறேன்.நம்பிக்கை இருந்தா வா”என்றவன் ரவி கையை விட்டுவிட்டு முன்னால் நடந்தான்.

ருத்ரன் பேச்சில் பூந்தென்றல் கண்களுக்கு மெல்லிய நம்பிக்கை வெளிச்சம் தென்பட,அவன் பின்னே சென்றாள்.

“சார் என் நகை எனக்கு கிடைக்கல போலீஸ்க்கு போயிருவேன்” என அந்த பெண்மணி ரவியை மிரட்ட,

“மேடம் அவகிட்ட இருந்து உங்க நகையை வாங்கி தரேன்.நீங்க என்னை நம்பி போங்க” என்று அந்த இருவரையும் அனுப்பிவிட்டு, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்து விஷம சிரிப்பு சிரித்தபடியே தனது பாண்ட் பாக்கெட்யுள்ள வைர தோடை தொட்டு பார்த்தான் ரவி.

ஆம்,அந்த இளம்பெண் மேல்தளத்திற்கு வருவதற்காக தன் அம்மாவோடு மின்தூக்கி ஏறியபோது அவளின் கைப்பட்டு ஒருபக்க தோடு அங்கையே விழுந்தது. முடியை விரித்துவிட்டு இருந்ததால் அவளால் கீழே விழும்போது உணரவில்லை. ஆனால் அவர்களோடு வந்த ரவி கண்டுவிட்டான்.

பின் அமைதியாக அவர்களை பூந்தென்றல் பிரிவிற்கு வலுக்கட்டாயமாக சிறப்பு சலுகை என்ற பெயரில் அனுப்பி வைத்துவிட்டு, அவர்கள் சென்றதும் தோடை எடுத்து பாண்ட் பாக்கெட்டில் வைத்தான்.

பூந்தென்றல் பிரிவில் கண்காணிப்பு கேமரா பழுது என்பது முன்கூட்டியே தெரியும் என்பதால் இது அவன் நிகழ்த்திய சதிவேலை.

பூந்தென்றல் மீது பழியை போட்டால் யாரும் அங்குள்ள கேமரா தானே சோதனை செய்வார்கள் என்ற எண்ணம் அவனிடத்தில்.

‘என்னையா அடிச்ச அனாதை நாயே,இன்னைக்கு என்கிட்ட சிக்கிட்ட. உன்மேல திருடி பட்டம் கட்டி சோதனை செய்யுறேன்னு உன்னை முழுசா பார்த்து ஸ்ஸ்ஸ்ஸ் அப்டியே வீடியோவும் யாருக்கு தெரியாம எடுப்பேன். அப்புறம் இந்த தோடை உன் பையில வச்சு ஜெயிலுக்கும் அனுப்புவேன்டி’ என மனதுக்குள்ளே திட்டத்தை போட்டுதான் நிகழ்த்தி இருந்தான்.

இங்கு கண்காணிப்பு கேமரா அறையில் ருத்ரன் பூந்தென்றல் பிரிவில் கேமரா உபயோகத்தில்லை என்று தெரிந்துக்கொண்டான். அவன் சற்று யோசிக்காமல் மின்தூக்கி கேமராவை சோதனை செய்ய, இப்போது ரவிக்கு தூக்கி போட்டது.

அனைவரின் கண்களும் தொடு திரையில் இருக்க ரவியோ பயத்தில் ருத்ரனை மேலிருந்து கீழ் பார்த்தான்.

அவன் தோற்றத்தை வைத்து நிச்சயம் காவல் அதிகாரியாக தான் இருப்பான், அதான் அவனின் மூளை படுவேலை செய்கிறது என கணித்துக்கொண்டான்.

அதில் சரியாக ரவி தான் தோடை எடுப்பதைக்கண்ட அந்த இரு பெண்களும் அதிர்ந்து ரவியை முறைக்க, பூந்தென்றலுக்கு அப்போது மனதில் நிம்மதி பிறந்தது.

இதுவரை கண்களில் வழிந்த செயற்கை ஊற்றை நிறுத்தியபடியே நன்றி உணர்வோடு ருத்ரன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள்.

ஆனால்,அவனோ பெயருக்கு ஏற்றால் போல் ருத்ர மூர்த்தியாக நின்றான். அவனுக்கு கோவத்தில் கழுத்து நரம்புகள் விடைத்தது.

அதே கோவத்தோடு ரவியின் புறம் திரும்ப அவனோ நெஞ்சில் தோன்றிய பயத்தில்,தானாக தோடை எடுத்து அந்த பெண்மணியிடம் நீட்டி சமாளிக்க முயன்றான்.

அந்த பெண்மணியும் திட்டிவிட்டு நகர பார்க்க, “ஹலோ என்ன கிளம்பிட்டீங்க. ஒழுங்கா அந்த பொண்ணுகிட்ட மன்னிப்பு கேக்கணும் அப்புறம் கிளம்பனும் சொல்லிட்டேன்” என கண்கள் சிவக்க கோவத்தோடு ருத்ரன் சொன்னான்.

“முடியாது” என அந்த பெண்மணி மறுக்க,

“ஓஓ” என்று ருத்ரன் இழுக்க,

“நாங்க எவ்வளவு பெரிய இடம் தெரியுமா.சம்பளத்துக்கு வேலை பார்க்குற இந்த ..”என அந்த பெண்மணி தனது பேச்சை முடிக்கும் முன் ருத்ரன் அறைந்த அறையில் ரவி சுருண்டு கீழே விழுந்திருந்தான்.

அதில் அம்மா மகள் இருவருமே அதிர்ந்தனர்.

“எப்டி எப்டி எங்க இப்போ சொல்லுங்க. ஒரு பொண்ணு மேல திருட்டு பழி சுமத்தி அவளை காயப்படுத்தி அடிக்க கூட போனீங்க. இப்போ ஆதாரம் இருக்கு அந்த பொண்ணுக்கு ஆதரவா,அவ நினைச்சா உங்க மூணு பெயரு மேல கம்பலைன்ட் கொடுத்தா என்னாகும் யோசிங்க”

“ஆமாம் நான் ரிப்போர்ட் பண்ணுவேன்”என பூந்தென்றல் தன்னை நிரூபித்த தைரியத்தில் ருத்ரன் பேச்சைக்கேட்டு பேச, கீழே விழுந்திருந்த ரவி உட்பட மூவரும் பயந்துவிட்டனர்.

தன்மீது திருட்டு பழியை கூட ஜீரணித்துக்கொண்டு மன்னித்து விடுவாள் பெண்ணவள் ஆனால் தன்னை சோதனை என்ற பெயரில் ரவி செய்ய போவதாக கூறிய வார்த்தைகளை பூந்தென்றலால் மன்னிக்க முடியவில்லை.

ஒரு பெண் எதை வேண்டுமானாலும் பொறுத்து கொள்வாள் தனது மானத்துக்கு ஒரு களங்கம் ஏற்படும் என்றால் நிச்சயம் தாங்கிகொள்ளவே மாட்டாள். சாந்தரூபினியாக இருக்கும் பூந்தென்றல் கூட இப்போது காளியாக மாறிவிட்டாள் அவளை பொறுத்தவரை.

ருத்ரன் மெச்சுத்தலாக பூந்தென்றலை பார்த்தவன் விழிகள் அந்த இருவரிடமும் நிலைக்க, அவர்கள் சரியென்று என்று அறையைவிட்டு வெளியேறினர்.

இப்பொழுது கேமரா அறையில் இருந்த பணியாளர்களையும் வெளியே அனுப்பிய ருத்ரன், “ஏன் டா நாயே, அந்த பொண்ணு மேல வேணுமே பழியை போட்டு அசிங்கப்படுத்தி அவளை என்ன சொன்ன நீ”என கீழே கிடந்தவன் இடதுகையை வளைத்து முகுதுபுறமாக கொண்டுவந்து அழுத்த,அதில் வலி தாங்காமல் ரவி அலறினான்.

அவன் அலறல் சத்தம் வெளியே இருப்போருக்கும் கேட்டது.

ரவி அலறலை பூந்தென்றல் கண்கள் சிரிக்க ரசித்து பார்த்தாள்.
என்னதான் அன்று அவள் அறைந்தாலும் அவன் தன் தவறை உணரக்கூட இல்லையே. இன்று அவள் அலறல் அதுவும் அவளை தீண்டிய அதேகை வலியினால் ரவி துடிக்க அவளுக்கு மனமெல்லாம் எரிந்த ரணம் குறையத்தொடங்கியது.

பெண்ணவள் சிரிப்பை வைத்தே இவனால் இவள் ஏதோ முன்னர் பாதிக்கப்பட்டு இருப்பாள் என்பதை புரிந்துக்கொண்ட ருத்ரன்,ரவியை இழுத்துக்கொண்டு பூந்தென்றல் காலின் அருகே தள்ளிவிட்டான்.

எதிர்பாராமல் ரவி தன் காலில் விழுந்துகிடக்கவும், புரியாமல் ருத்ரனை பூந்தென்றல் கண்கள் நோக்க,

அதற்கு சிரிப்பை உதிர்த்தவன், “ம்ம் மன்னிப்பு கேளு டா நாயே” என ரவியின் வயிற்றில் கால்வைத்து மிதிக்க, அவனோ வலியில் துடித்தபடியே பூந்தென்றலிடம் மன்னிப்பு வேண்டினான்.

அதில் உள்ளம் குளிர்ந்த பெண்ணவள் ருத்ரனிடம் கைகூப்பி கண்களால் நன்றி கூற, “உன்மேல பொய்யா பழி போட்டா அழுகாத.இதுக்காக உன் மூச்சை அடைச்சு சாக முயற்சி பண்ணுற. ஒண்ணு தெரிஞ்சுங்கோ உன்னோட கண்ணீருக்கு கூட இங்க யாரும் தகுதியில்லை.

என் நண்பன் அடிக்கடி சொல்லுவான் பொண்ணுங்க கண்ணீர் விலைமதிப்பு மிக்கதுனு.இனிமே அதை இவனை போல உள்ள ஆட்களுக்காக வீணாக்காத” என்று அவளிடம் சற்று அழுத்தம் திருத்தமாக சொன்னான்.

பின்னர் ரவியோடு வெளிய வந்து அனைவர் முன்னிலையில் ரவி வாயால் உண்மையை கூறவைத்து, பூந்தென்றல் குற்றத்தை நிரூபித்தது மட்டுமில்லாமல் அந்த குண்டு பெண்மணி அவளின் மகள் ரவி என மூவரும் பெண்ணவளிடம் மன்னிப்பு கேட்க வைத்த பின்னரே ருத்ரன் மூவரையும் விட்டான்.

இதனைக்கண்ட அங்குள்ள மற்ற பணியாளர்கள் எல்லாம் ஓஓ வென்று கத்தி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

அதில் முகம் கருத்த ரவி அங்கிருந்து ஓட,மற்ற அனைவரும் கலைந்து சென்றனர்.

ருத்ரன் அருகில்வந்த பூந்தென்றல் மீண்டும் நன்றி கூற, “அதுயெல்லாம் வேணாம். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா பூனைக்குட்டி” என அவளை உரிமையோடு பெயர் வைத்து உதவி கேட்டான்.

அவனின் அழைப்பில் பூந்தென்றலுக்கு சிரிப்பு வந்துவிட்டது. உரிமையான கண்ணியமான பார்வையோடு அழைக்கும் அழைப்பு மட்டுமில்லை இன்று அவள் உயிரோடு இருப்பதற்கு அவன் தானே காரணம் அதனால் தவறாக படவில்லை அவளுக்கு.

“சொல்லுங்க சார், கண்டிப்பா பண்ணுறேன்”

“என் பிரண்ட் ஒருத்திக்கு கிப்ட் வாங்க வந்தேன் கொஞ்சம் செலக்ட் பண்ணி தரியா.எனக்கு இந்த பொண்ணுங்க விஷயம் எல்லாம் ஒண்ணுமே தெரியாது பிலீஸ்” என ருத்ரன் கேட்டதும், பெண்ணவள் பம்பரம் போன்று சுற்றி அவனுக்கு பிடித்தது போன்று எடுத்துக்கொடுத்தாள்.

அவனும் வாங்கிக்கொண்டு ஒரு சிரிப்போடு பூந்தென்றலிடம் விடைபெற்று கீழே வந்தவன், அங்கிருந்த ரவியிடம் உனது வீடியோ என்னிடம் உள்ளது என மிரட்டிவிட்டும் செல்லவும் தவறவில்லை.

அன்றைய நாள் பெண்ணவளுக்கு போராட்டம் அழுகை என்று தொடங்கினாலும் இறுதியில் அவளுக்கு அவளின் மனதிற்கு அனுபவித்த வலிக்கு மருந்திட்டு தன் நிம்மதியை மீட்டு எடுத்துக்கொண்டாள் என்றே சொல்லலாம்.
எல்லாம் சரியாக தனக்கு நடக்கும் என அவள் நினைப்புக்கு கடவுள் அடுத்த அடியை கொடுத்தார்.

பூந்தென்றல் விஷயம் இன்று அந்த கடையில் தீயாக பரவி அது முதலாளி காதுக்கும் சென்றையடைய, ரவி மீது குற்றம் இருந்தாலும் அவனின் விசுவாசமே முதலில் தெரிந்தது அவர்க்கு.

இப்படியே விட்டால் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு திமிரு வந்துவிடும். அதுமட்டுமின்றி பூந்தென்றல் இங்கே தொடர்ந்தால் தனது கடையின் பெயரும் அல்லவா கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் அவளின் பாக்கி சம்பளத்தை கொடுத்து வேலைவிட்டு நீக்கிவிட்டார் கடையின் முதலாளி.

வேலை பறிபோனதில் பூந்தென்றல் இதயத்தில் இடியே விழுந்தது. இனி தன்னிலை என்னவாகும். அடுத்தவேளை சோற்றுக்கும் இடத்திற்கும் என கலங்கியபடியே அறைக்கு வந்து படுத்துவிட்டாள்.

ருத்ரன் கூறிய வார்த்தைகள் அவளின் செவியை தாண்டி உள்ளம் அடைந்ததே என்னவோ எப்போதும் கலங்கும் பெண்ணவள் இதற்கு சிறிதும் கலங்கி அழவில்லை.

நன்றாக அன்றிரவு சாப்பிட்டு, ரவி தன்னிடம் மன்னிப்பு கேட்டதை எண்ணி மனதை அமைதிப்படுத்தி அந்த திருப்தியில் கண்ணயர்ந்தாள்.

இவள் வேலை இழந்த விஷயம் சுபா லதா இருவருக்கும் வயிற்றை கலக்கியது. அந்த நேர்முக தேர்வுக்கு சென்று நிச்சயம் வேலை வாங்கிட வேண்டும் என்று பூந்தென்றல் மிக நம்பிக்கையாக வேறு பேச, அவர்கள் பேசும் திரணற்று அமைதியாகி போனர்.

கடையில் அவளுக்கு நேர்ந்த துயரமும்,வேலை இழந்ததை எண்ணி வருத்தமாக இருப்பவளிடம் இது உனக்கான நேர்முகதேர்வு இல்லை. தவறுதலாக அழைப்பு வந்திருக்கிறது, சென்றால் நிச்சயம் வேலை கிடைக்காது என உண்மையை உடைத்து சொல்ல தயங்கியபடியே சுபா,லதா இருவரும் அவளுக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டர்.

பூந்தென்றலும் இருக்கும் மனநிலையில் தனது நேர்முகத்தேர்வு அழைப்பை மட்டுமே பார்த்தாள் தவிர அந்த நிறுவனத்தை பற்றியோ இப்போது என்ன வேலைக்கு நேர்முகத்தேர்வு நடக்கிறது என்பதை ஆராயாமல் விட்டது அவளின் தவறோ சரியோ என்பது புதன்கிழமை பொழுது விடிந்தால் தெரியும்.

மறுநாள் முழுக்க ஓய்வு என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு மறுநாள் நேர்முகத்தேர்வுக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டாள்.

அன்றைய நாள் கழித்து புதன்கிழமை காலை பொழுது விடிந்தது.

நதியாவின் பிரிவிற்கு பிறகு பூந்தென்றல் காலை பொழுது ஒரு சோர்வோடு பிறக்கும். ஆனால் இன்று எழும்போதே மனதிற்கு அவ்வளவு சந்தோசம்.ஏன் என்று அவள் ஆராயாமல் உதட்டில் பூத்த புன்னகையோடு எழுந்து நேர்முகத்தேர்வுக்கு தயாராக தொடங்கினாள்.

என்றைய நாளும் இல்லாமல் இன்றைய நாளில் சீக்கிரமே விழித்த தோழிகள் இருவரும் பூந்தென்றல் முகத்தை பார்த்தவாறே இருந்தனர்.

அவளும் சீக்கிரமே கிளம்பி இருவரிடமும் கூறிவிட்டு, கீழே சென்று தனது உணவை முடித்துவிட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்கத்தொடங்கினாள்.
ஜன்னல் வழியாக அவள் உருவத்தைக்கண்ட தோழிகள் இருவரும், “ எனக்கு கஷ்டமா இருக்கு சுபா. பாவம் அக்கா வேலை கிடைக்காம வந்தாலும் பரவாயில்லை.நம்மள நம்பி ஏமாறி வரப்போகுது” என லதா சுணக்கமாக கூற,

“நல்லதே நடக்கும் நம்புவோம். அக்கா மனசுக்கு தப்பா நடக்காது” என லதா பேச்சில் கலக்கமுற்ற சுபாவும் ஏதோ குருட்டு தைரியத்தில் பேசினாள்.


பின்னர் இருவரும் கிளம்பி கீழே உணவு இடத்திற்கு வந்து அமர்ந்து சாப்பிட தொடங்கினர்.

அங்கு யமுனா தோழி ஒருத்தி யமுனாவுக்காக என்று தட்டில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்ல,அவளிடம் சுபா என்னவென்று பேச்சுக்கொடுத்தாள்.

அவள் ஒரு உளறுவாய் என்பதால், “அது அவளுக்கு உடம்பு சரியில்லை.லீவு போட்டு படுத்துகிடக்கா” என்று கூற,

“எங்க வேலை பார்க்குறாங்க?” என்று சுபா ஒரு கம்பனி பெயரை சொல்லி கேட்டாள்.

அதற்கு தலையசைத்து மறுத்த அவள், “அது இரண்டு மாசம் முன்ன, இப்போ S K கன்ஸ்டர்கக்ஷன் கம்பனி இருக்குல்ல அங்க தான் ரிசபினிசிட் ஆ வேலை பார்க்குறா” என கூறிவிட்டு செல்ல, தோழிகள் அதிர்ந்து கண்களை விரித்தனர்.

இவர்களுக்கு யமுனா அங்குதான் வேலை செய்வது முன்னவே தெரிந்து இருந்தால் நிச்சயம் பூந்தென்றலை தடுத்து இருப்பார்கள்.

“ஏய் யமுனாக்கு இது தெரிஞ்சா” என லதா அதிர,

“அதான் அவள் இன்னைக்கு போகலையே” சுபா மெலிந்த குரலில் கூற,

“எனக்கு தலை சுத்துது”

“சும்மா இருடி, வேலை கிடைச்சா தானே பயப்படனும் பார்க்கலாம்”

“என்னமோ யமுனாவுக்கு ஏன் தான் அக்காவை பிடிக்கல”

“எனக்கும் சரியா தெரியாதுடி விடு பார்த்துக்கலாம்”என தோழிகள் தங்களுக்குள் இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டனர்.

இதனை ஏதும் அறியாமல் பேருந்து ஜன்னல் ஓரத்தில் தென்றலை ரசித்துக்கொண்டு பயணித்தாள் நேர்முகத்தேர்வு நடக்கும் S. K கன்ஸ்டர்கக்ஷன் கம்பெனிக்கு.
 
Top