இமைத்திறந்த கனவுகள்
அத்தியாயம் 1
"வானே
வானே வானே
நான் உன்
மேகம் தானே
என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
சொல்ல முடியாத
காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத
ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
வானே….
வானே வானே
நான் உன்
மேகம் தானே”
என்ற திரைப்பட பாடலானது பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மிதமான ஒலியில் ஒலித்துக்கொண்டிருந்தது.
பிற்பகல் நேரம் மூன்றை கடந்தும் கூட சூப்பர்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் பொருட்களை வாங்க குவிந்தவண்ணம் இருந்தனர். வாடிக்கையாளர்களுக்காக பணியாளர்களும் சுறுசுறுப்பாக சுழன்றுக்கொண்டிருந்தனர்.
மதிய உணவுஇடைவேளைக்கு கூட செல்ல முடியாமல் தவித்த சிலரை கண்காணிப்பாளர்கள் ஆட்களை சுழற்சி முறையில் மாற்றி உணவு உண்ண அனுமதிக்கொடுத்தனர்.
இந்த கடை சென்னை மாநகரத்தின் டிநகர் பிரதான சாலையின் கிளைத்தெருவில் நெருக்கடியான பகுதியில் அமைந்துள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் மகிழுந்துகளையும் இருசக்கர வாகனங்களையும் நிறுத்தும் அளவிற்கு அங்கு இடவசதியில்லை.
அழகுசாதன பொருட்கள் ,மளிகை பொருட்கள் என அனைத்து வகையான பொருட்களை உள்ளடக்கிய இந்த சூப்பர் மார்க்கெட்டில் ஆண்,பெண் என பேதமின்றி அறுபதுக்கு மேற்பட்டோர் கடையிலும்,சிலர் சேமிப்பு கிடங்கிலும் வேலை செய்கின்றனர்.
கடை அமைந்துள்ள அதே தெருவின் கடைக்கோடியில் உள்ள பழைமையான திருமண மண்டபம் ஒன்று தான் தற்போது இந்த கடையின் சேமிப்பு கிடங்காவும்,பொருட்களை அளவு வாரியாக பிரித்து கடையின் பெயர் தாங்கிய நெகிழிகளில் அடைக்கும் பணிகளும் அங்குதான் நடைபெறுகிறது.
அதுமட்டுமின்றி பணியாளர்கள் உணவு உண்ணவும் கழிப்பறை செல்லவும் இங்குதான் வரவேண்டும்.தொழில் ஸ்தாபனத்தில் இதற்காக எல்லாம் பணியாளர்களுக்கு அனுமதி இல்லை என்பது அந்த ஸ்தாபனத்தின் உரிமையாளர் துரைப்பிள்ளையின் கட்டளை.
கடையிலுள்ள சிறு குடோன் போன்ற அறையில், தற்போது ஒலித்த பாடலைக்கேட்டு மெய்மறந்த வண்ணமாக தன்னைமறந்து அங்குள்ள பொருட்களின்மீது சாய்ந்து கண்மூடியபடியே நின்றிருந்தாள் நம் கனவு கதையின் ராணி பூந்தென்றல்.
இவளைத்தேடி அங்கு வேகமாக வந்த ஒருத்தி, அவள் நின்ற அழகைக்கண்டதும் இவளுக்கு எரிச்சல் தான் மண்டியது.
தன் எரிச்சலை அவளிடம் காட்டும்விதமாக அருகில்வந்து அவளின் தலையில் நறுக்கென்று கொட்டு வைத்தாள் பூந்தென்றலின் தோழி நதியா.
இசையில் மூழ்கியிருந்தவளின் தலையில் சுள்ளென்று ஏற்பட்ட வலியில் முகத்தை சுளித்த வண்ணம் கண்களை பட்டென்று திறந்தாள் பூந்தென்றல்.
தன்னை முறைத்தபடி எதிரில் நின்ற தோழியைக்கண்டதும்,ஒருநொடி முழித்தாலும் அடுத்த நொடியே தான் உணவு உண்ண செல்லாமல் நிற்பது நினைவு வரவும் மானசீகமாக நெற்றியில் அடித்துக்கொண்ட பூந்தென்றல்,
“சாரி நதி, இனிமே இப்படி பண்ணமாட்டேன்” தன்னால் பசியோடு நிற்பவளைக்கண்டு மெலிதாக சிரித்தபடியே கெஞ்சினாள்.
நதியாவோ அதற்கும் முறுக்கிக்கொண்டு அவளுக்கு முதுகு காட்டியபடி திரும்பி நிற்க,
நதியாவின் செயலில் சிரிப்பு தோன்றினாலும்,அவளை தன்புறம் திருப்பி அவளின் வலதுகை விரல்களோடு தன் கைவிரல்களை கோர்த்துக்கொண்டே,“வா போலாம் பசிக்குதுன்னு சொன்னியே”என அவளின் முகத்தை பார்த்தபடியே இயல்பாக பேசினாள்.
தன் தோழியின் செயலில் கோவத்தை மேலும் இழுத்து பிடிக்க முடியாத நதியா, “கோவமா வருது பூ,அந்த சொட்டையே இப்பதான் சாப்பிட போங்கனு சொன்னான்னு நானே கடுப்புல இருக்கேன்…”என கொலைபசியில் இருக்கும்போது சாப்பிட அனுமதி கிடைத்தும் செல்லாமல் இசையை ரசித்துக்கொண்டிருப்பவளிடம் தனது கடுப்பை வாரி ஊற்றினாள்.
அதற்கும் சிரித்த பூந்தென்றல் கேலியாக, “நீ மட்டும் இப்ப என்ன பண்ணுறியாம்? நேரம் ஆக்கலையா?” என்று கேட்டதும் தான் தாமதம் அவளின் கையை பட்டென்று உதறிய நதியா,
ஒன்றும் பேசாமல் வேகமாக அங்கிருந்து சென்றாள்.
தோழியின் குழந்தை தனமான செய்கையை ரசித்தபடியே பூந்தென்றலும் டிபன் பாக்ஸ் உடன் ஓட்டமும் நடையுமாக அவளை பின்தொடர்ந்தாள்.
கோவம் நடையுமாக சாப்பிடும் இடத்திற்கு வந்த நதியா,காலியாக இருக்கும் மேசையில் இருவருக்கும் இடம்பார்த்து அமர்ந்துவிட்டாள்.
நதியாவின் பின்னால் வந்த பூந்தென்றல்,அவளின் அருகே அமர்ந்தபடியே பக்கவாட்டாக திரும்பி பார்த்தவாறே தனது டிபன் பாக்ஸ்யை திறந்தாள்.
தோழி தன்னை பார்ப்பதும் தெரிந்தாலும்,அமைதியாக தனது உணவை கையில் எடுத்த நதியா அடுத்தநொடியே முகத்தை சுளித்தாள்.
முகத்தை சுளித்தபடியே தன்னருகில் அமர்ந்தவளின் உணவை பார்த்தவளுக்கு கண்கள் விரிய,அவள் உணவை கையிலயெடுக்கும்முன் அந்த உணவை நுகர்ந்து பார்த்தவளுக்கு புளித்தவாசம் வந்தது.
சட்டென்று அவளின் டிபன் பாக்ஸ்யை மூடிவிட்டு, தன் தோழியை மூக்கு விடைக்க முறைத்தாள்.
அவளின் திடீர் முறைப்பு புரியாத பூந்தென்றல், “என்னடி சாப்பிட விட மாட்டுற?”என கேட்டவளின் கன்னத்தை பிடித்து அதில் சிறிதாக திறந்த வாய்க்குள் தான் கொண்டுவந்த உணவை உருண்டையாக திணித்தாள்.
தோழியின் செயலில் முழித்தாலும் வாயில் திணித்த உணவு உருண்டையை மெலிதாக முழுங்கியபடியே அடுத்து கேக்க வாய் திறக்கும்முன் அடுத்த உருண்டையையும் திணித்துவிட்டிருந்தாள் நதியா.
இவர்களோடு உடன் பணிபுரியும் மூன்று பெண்கள் இவர்கள் அமர்ந்து இருக்கும் மேசைக்கு எதிரே இருவரையும் யோசனையாக பார்த்தபடி அமர்ந்தனர்.
மூவரும் ஒருத்தரைஒருத்தர் பார்த்துக்கொள்ள ஒன்றும் புரியாமல் முதலில் வாய்திறந்த பத்மா, “என்னடி நடக்குது இங்க?”என்றவள் கேள்விக்கு பூந்தென்றல் சாப்பிட்டுக்கொண்டே மெலிதாக சிரிக்க,நதியா ஒன்றுமில்லை என கூறியவாறே தன் வேலையை தொடர்ந்தாள்.
பூந்தென்றலும் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டே நதியாவின் முகம் பார்த்தபடியே இருந்தாள்.பின்பு இதற்கும் வாய் திறந்தால் நிச்சயம் கோவங்கொள்வாள் என்று அமைதியாகி போனாள்.
நதியாவின் அமைதியைக்கண்டு, ‘என்ன இவ இம்புட்டு அமைதியா இருக்கா’என உள்ளுக்குள் சிந்தித்த பத்மா, “இந்தா நதி உன் மாமனுக்கு ஊட்டுறதா நினைச்சு பூக்கு ஊட்டுறியா?”வெளியில் அவளை வம்பிலுப்பதுபோல கேட்டு வைத்தாள்.
அவளின் கேள்வியில் உதட்டை சுளித்த நதியா சலிப்பாக, “ஏன் உன் ஊட்டுக்காரர் இன்னைக்கி உரண்டை இழுக்காம மனுஷன் வேலைக்கு கிளம்பிட்டாரா?”என இவளும் அவளுக்கு சரியாக கேலியாக வினவினாலும் பூந்தென்றலுக்கு உணவு ஊட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை.
பத்மா இவர்களுடன் பணிபுரியும் சகதோழி. பூந்தென்றலும் நதியாவும் இருபதின் மூன்று வயதுடையவர்கள்,பத்மா இவர்களைவிட ஆறு வயது பெரியவள்.
“ம்முக்கும் போடி நீ,உன்கிட்ட பேச வந்தா இப்படிதான் வம்பு இழுப்ப”பத்மா சலித்துக்கொண்டாலும் வாய் மூடாமல்,
“அதைவிடு இப்ப என்னத்துக்கு பச்ச பிள்ளையை மிரட்டி ஊட்டுறவ போல பூவை இப்போ வச்சு செஞ்சுக்கிட்டு இருக்க?” என்றவளின் கேள்வியில் முறைத்த நதியா, “யாரு வச்சு செய்யுறா நானா.பேசாம போ கா” என்றவள் பூந்தென்றலை முறைக்கவும் தவறவில்லை.
நதியா பேச்சுவாக்கில் தனக்கே அனைத்து உணவையும் ஊட்டிவிடுவதைக்கண்ட பூந்தென்றல்,
“எனக்கு போதும் புள்ள. எல்லாத்தையும் எனக்கே ஊட்டிவிடுற உனக்கு வேணாமா.நீயும் சாப்பிடு பசி தாங்க மாட்ட” என்றவளின் பேச்சைக்கேட்ட நதியா, மீதி உணவை அவள் சாப்பிடத்தொடங்கினாள்.
நதியா சாப்பிடும் வேகமே அவள் எவ்வளவு பசியில் இருக்கிறாள் என்பதை உணர்ந்த பூந்தென்றலுக்கு தனக்காக யோசிக்கும் தோழியை நினைத்து மகிழ்ச்சிக்கொண்டாலும், அதேவேளை அவளுக்கு தான் மிகுந்த சிரமம் கொடுக்கிறோம் என்று எண்ணி தன்னையே நொந்துக்கொண்டாள்.
இவர்கள் இருவரையுமே பார்த்தபடியே உணவருந்திய பத்மாவிற்கு ஒன்றும் புரியாமல் தலையை சொறிந்தாள்.
ஏன் என்றால் பூந்தென்றலும் நதியாவும் இணைபிரியா தோழிகள்.ஒருவரைவிட்டு ஒருவரை காண முடியாது.
எப்போதும் தங்களுக்குள் பேசிக்கொண்டும் சிரித்தபடியே நகமும் சதையுமாக இருந்தவர்கள் இன்று இப்படி இருப்பதைக்கண்டால் மற்றவருக்கு குழப்பம்.
தானும் சாப்பிட்டு முடித்து, தென்றல் உணவை குப்பையில் கொட்டிவிட்டு கை கழுவி உணவு பாத்திரங்களை சுத்தப்படுத்திவிட்டு தன் தோழியின் அருகே அமர்ந்த நதியா,
“ஏன் இப்படி பண்ணுற பூவு? எனக்கு தான் சாப்பாடு விஷயத்தில இப்படி பண்ணா கோவம் வரும் தெரியும்ல உனக்கு”நிதானமாகவே பேசினாள்.
இப்போது நிமிர்ந்து அவளை பார்த்த பூந்தென்றல், “அது..”என்று இழுக்க,
“நேரத்துக்கு சாப்பிட பழகுன்னு எவ்வளவு முறை சொல்லிருக்கேன்.அதுவும் இப்போ எல்லாம் அந்த வானே பாட்டை அதிசயமா தான் ரசிக்குற. இந்தா வரேன் சொல்லிட்டு அரைமணி நேரமாவா வெய்ட் பண்ண வச்சுட்ட.
அப்புறம் என்னடி சாப்பாடு கொண்டுவந்த நீ,டிபன் பாக்ஸ்யை திறந்ததும் அப்படியொரு வாடை. அதை நீ திங்க வேற போற. எனக்கு இருக்க கோவத்திக்கு இன்னும்தான் மண்டை காய்ஞ்சு போச்சு”என்று நதியா மனதாங்கலாக பேசவும் பூந்தென்றலின் முகம் சட்டென்று வாடிபோயிற்று.
“சாரி பிள்ள” என்று சொல்லும்போதே பூந்தென்றலின் கண்களும் கலங்கி போனது.
இதுபோதுமே நதியாவின் கோவம் தணிய,அவள் தன்னைப்பற்றி அக்கறை எடுக்க மாட்டிறாளே என்று தான் நதியாவின் கோவம், ஆதங்கம் எல்லாம். இதனை பலமுறை அன்பாக சொல்லியும் கெஞ்சியும் கேக்கவில்லை என்றுதான் என்றில்லாமல் இன்று கோவம்பட்டாள். அதிலும் இவளுக்கு இது கோவமே என்று கூறமுடியாது,சற்று முறுக்கிக்கொண்டது போல தான்.ஆனால் இதற்கே பூந்தென்றல் கண்ணீரை சிந்தினாள்.
பூந்தென்றலின் கண்ணீரை கண்டதும் மனம் இளகிய நதியா, தன் தோழி முகத்தை தன்புறம் திருப்பி கையினால் கண்ணீரை துடைத்தவள்,
“இன்னைக்கு பீரியட்ஸ் டி உனக்கு,இப்படி சாப்பிடாம இருக்கலாமா நீயே சொல்லு.அப்பவே அந்த சொட்டைக்கிட்ட சொல்லிவிட்டு வா சாப்பிடுவோம் சொன்னா பயந்து இவ்வளவு நேரம் ஆக்கிட்ட.சரி அதைக்கூட விடு,நமக்கு இப்படி சாப்பிட்டு பழகி போச்சு தான்.
ஆனால் டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வரேன் போய்ட்டு பாட்டை கேட்டு நிக்குறவ. ஏன் காலையில வயிறு வலினு துடிச்சுட்டே இருந்தியே மறந்து போச்சா?இல்லை என்கிட்ட சொல்லாம ஏதும் இருக்கா?” கனிவாகவே கேட்டாள்.
எப்பொழுதும் சிட்டுகுருவி போன்று சிரித்தப்படியே வலம் வருவபவள் இன்று ஏனோ மனவாட்டத்தோடு இருப்பதைக்கண்ட நதியாவுக்கும் காரணம் புரியவில்லை. ஒருவேளை அவள் மாதவிடாய் வலினால் இருக்கலாம் என எண்ணியவளுக்கு அவளின் முகம் வேறு ஏதோ வலியை உணர்த்த தான் அறியா ஒன்று உள்ளது என ஊகித்தப்படியே கேட்டு பார்த்தாள்.
நதியா தன்னை சரியாக புரிந்துக்கொண்டு போட்டுவாங்குவதை உணர்ந்த பூந்தென்றல் எப்போதும் போல தன்னுடைய வலியை தனக்குள்ளே மறைத்துக்கொண்டாள். தன்னைப்பற்றி அவளுக்கு அனைத்தும் தெரிந்தாலும்,அவளுக்கும் தெரியாத பக்கமும் ஒன்று தனக்கு இருப்பதை வெளிக்காட்ட பூந்தென்றலுக்கு விரும்பவில்லை.
நொடியில் நிதானித்த பூந்தென்றல், “ஒன்னுமில்ல பிள்ள,வயிறு வலி வேற ஒன்னுமில்ல”என சமாளித்தபடியே நதியாவின் முகம் காண,
இவள் கூற்றை தான் நம்பவில்லை என்பதை முகத்தில் காட்டாதவாறு, ‘சோத்துக்குள்ள பூசணிக்காய் மறைச்சா தெரியாம போகுமா, ஒருநாள் வெளில வரத்தான் வேணும் அப்போ பார்த்துக்குறேன்’ என மனதில் கூறி யாவறே,
“சரி இன்னைக்கு ஏன் சாப்பாடு கெட்டுபோச்சு?”என்றவளின் நேரடி கேள்வியில் தயங்கிய பூந்தென்றல்,
“அது…அது..”என இழுத்தவாறே,
“சாப்பாடு இல்லடி தீர்ந்து போச்சு, அதான் நேத்து சாப்பாட்டை எடுத்துட்டு வந்தேன்”என இதற்கும் பொய்யுரைக்க விரும்பாமல் உண்மையை கூறிவிட்டாள்.
தோழியின் பதிலில் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்ட நதியா, “ஏன் என்கிட்ட சொன்னா நான் உனக்கு கொண்டுவர மாட்டேனா?”என சற்றுகுரலை உயர்த்தி ஆதங்கமாக கேட்க,
அவளின் கத்தலில் கைபிடித்த பூந்தென்றல், “அய்யோ பைய பேசு நதி,என்னத்துக்கு கத்துற.மணி ஆச்சுன்னு தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன் இனிமே உன்கிட்டயே கேக்குறேன் நீ மறுபடியும் மலை ஏறாத”என கண்களை சுருக்கி மெல்லிய குரலில் பேசினாள்.
“நீ ஹாஸ்டல் மாத்து,சாப்பாடு சரியில்லனா..”என்பவளை மேலும் பேசுவிடாமல் அவளின் வாய்மேல் கைவைத்த பூந்தென்றல்,
“நாம வந்து ரொம்ப நேரம் ஆச்சு, போவோம் அப்புறம் பேசிக்குவோம்”என்று இருவரும் பாதியில் விட்டுவந்த வேலையை நினைவுபடுத்தினாள்.
அதில் முகத்தை தூக்கிவைத்த நதியா, “நிறுத்து,இந்த விஷயத்தில நான் சொன்னா கேட்கவா போற. சரி நீ போய் பாத்ரூம் போய்ட்டு உன் வேலையை முடிச்சுட்டு வா சீக்கிரம்”என ஆதங்கமாக கூறினாலும் அவளுக்கு தான் கொண்டு வந்திருந்த ஒன்றை கொடுத்து அனுப்பி வைத்தாள்.
பூந்தென்றல் அங்கிருந்து சென்றதும், அவளை கவலை தோய்ந்த முகமாகவே நோக்கிய நதியா, “நீ ஏன் டி இப்படி இருக்க?” என மனதுக்குள் நொந்துக்கொண்டாள்.
பத்மாவும் இவர்கள் உரையாடல்களை எல்லாம் கேட்டபடியே உணவை முடித்து கைகழுவிட்டு வந்தவள் தனியாக இருந்த நதியாவிடம், “ஏண்டி இன்னைக்கு வித்தியாசமா நடந்துக்குற?”என கேக்கவும்,
நதியாவும் நடந்தவற்றை கூறி ஆதங்கப்பட,
“சரிடி ஏதோ பிடிச்ச பாட்டு கேட்டு நின்னுட்டா.ஆனால் நீ ஏன் அவளுக்கு உன் சாப்பாட்டை ஊட்டிவிட்ட”என தான் முன்னர் கேட்க நினைத்ததை இப்போது சரியாக கேட்க,
அதற்கு முகத்தை சுருக்கியபடியே, “நீ வேற,அவள் சாப்பாட்டை திறந்ததும் ஊளை வாடை. அந்த கருமத்தை இவளும் எடுத்துட்டு வந்திருக்கா அதான் என்னோட சாப்பாட்டை ஊட்டுனேன்” பதிலளித்தாள்.
“அவ ஹாஸ்டல் சாப்பாடு நல்லா இருக்காதா டி.அது விஜயா அக்கா ஹாஸ்டல் தானே”
“அந்த நொஜயா ஹாஸ்டல் தான். பாதகத்தி ரூம்க்கு சாப்பாட்டுக்குன்னு காசு வாங்கிட்டு சாப்பாடு கொஞ்சம் கூட சரியில்ல.இந்தா இவளும் வாயில்லா பூச்சில அவளுக்கு வசதியா போச்சு”என கோவமாக ஆரம்பித்து வருத்தமாக முடித்தாள்.
பத்மா அடுத்து வாய் எடுக்குமுன் பூந்தென்றல் வந்துவிட இருவரும் தங்களை பேச்சை தொடரவில்லை.
பின்னர், கடைக்கு சென்று பாதியில் விட்ட தங்கள் வேலையை தொடர்ந்தனர்.
நேரம் இரவு எட்டு,
தங்கள் பணிநேரம் முடிந்ததும் தங்களது ஹாண்ட்பாக்யை எடுத்துக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்து தங்கள் இருப்பிடங்களை நோக்கி நடக்க தொடங்கினர் தோழிகள் இருவரும்.
நதியா தனதருகே அமைதியாக நடந்து வருபவளைக்கண்டவள், “என்ன பூ சைலண்ட் ஆ வர.மதியம் கோவப்பட்டதுக்கு வருத்தமா?” தன்னால் தான் அவள் அமைதி சாயலை பூசிக்கொண்டிருகிறாளோ என உண்மையான வருத்தத்தோடு கேட்க,
அவள் கேட்ட விதத்தில் சிரித்தபடியே, “என்ன பிள்ள,இப்படி கேட்ட.இந்த உலகத்திலே என்மேல அக்கறையா கோவப்படுறது நீ ஒருத்தி தான்.அதுல எனக்கு சந்தோஷம் தான் வருத்தம் இல்ல கிருத்தம் இல்ல”என நதியா போலவே கூற,
“சரிதான் பூ ஸ் பாக் ஆ பிள்ள” என்பவளுக்கு,புருவத்தை உயர்த்தி என்ன என்று ரீதியில் பூந்தென்றல் முழித்தாள்.
“இல்லை காலையில இருந்து வழக்கத்தை விட வாழ்வே மாயம்னு திரிஞ்ச. நானும் பிள்ளைக்கு வயிறு வலி போலனு நினைச்சா, பாட்டை கேட்டு ரசிச்சு சிரிக்குற.அதுமட்டுமா திட்டுனத்துக்கு பேசாம ஊமை போல இருக்க. அதான் கன்பூஸ் ஆகிட்டேன்”
கிண்டலாக பேசிய தோழியின் தோளில் அடித்த பூந்தென்றல், “பேசுவடி பேசுவ.வயிறு வலியில இருந்தது உண்மைதான் ஆனால் அந்த பாட்டை கேட்டதும் மனசுக்கு இதமா இருந்துச்சு நதி. ஏதோ அந்த பாட்டுல ஒரு மயக்கம் தான்” கூறும் போதுகூட பெருமூச்சு விட்டபடியே தொடர்ந்தவள்,
“ நான் கூட சாப்பாடு கெட்டு போச்சுன்னு கவனிகல,ஆனால் நீ எனக்கு அம்மாவா மாறி ஊட்டும்போது மனசே கலங்கிருச்சு நதி.யாருமில்லாத இந்த பூவுக்கு நீ மட்டும்தான் சொந்தம் நீயும் இல்லாட்டி நான் அனாதை தான்”என தான் வார்த்தைக்கு அனாதை என்று கூறும்போது பூந்தென்றலின் இதயத்தில் ஏற்பட்ட வலியை அவளால் அழுதால் கூட போக்கிவிட முடியாதென தோன்றியது.
தன் தோழி இவ்வாறு பேசினால் அவளின் மனதின் வலியை உணர்ந்த நதியாவுக்கே ஏதோ ஒன்று தொண்டையை அடைப்பதுபோல் இருந்தது.
சிலநிமிடங்கள் அமைதியாகவே இருவரும் நடந்துவர,முதலில் மவுனத்தை உடைத்தது பூந்தென்றல் தான்.
அவளுக்கு வலிகளை அனுபவித்து விழுங்குவது பழகி போன ஒன்று,எந்த வருத்தத்தையும் கடந்துவர நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள மாட்டாள் அதுவே அவளின் குணங்களில் ஒன்று தான்.
“என்ன குஷ்பூ,இன்னைக்கு உன்ற மாமனை பத்தி பேசவே இல்லை”பூந்தென்றல் எதனை கூறினால் தன் தோழி வாய் திறப்பாள் என கணித்தப்படி கூற,
அது சரிதான் என்பதுபோல, குஷ்பூ என்ற அழைப்பைக்கேட்டதும் தற்போது ஓடிய எண்ணத்தை ஒதுக்கிய நதியா அந்த அழைப்பைக்கேட்டதும் அவளின் கன்னங்கள் வெட்க புன்னகை பூசியது.
“போடி!”என நதியா வெட்க புன்னகையோடு சிணுங்க,
இதைக்கண்ட பூந்தென்றல் இதழ் பிரித்து சிரித்தவாறே, “ஆத்தி அந்த குஷ்பூல என்னதான் இருக்கோ.நான் கூப்பிடுறதுக்கே இம்புட்டு வெக்கம்னா.அப்போ அண்ணா கூப்பிடும் போது… ஆஅ..”என நதியாவை கிண்டலடித்தப்படியேயே வந்தாள்.
“அது என் மாமன் சின்னத்தம்பி பிரபுனா நான் தானே குஷ்பூ” என கண்கள் மின்ன சிரித்தாள்.