ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இமைத்திறந்த கனவுகள்-கதை திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்-3

அடுத்த ஒரு வாரமும் மெல்ல நகர்ந்து சென்றது.
அன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பூந்தென்றலுக்கு பொழுது நதியாவின் இல்லத்தில் விடிந்தது.

நதியாவின் தந்தை இரு நாட்களாக கண்ணில் படவில்லை என்பதால்,சனிக்கிழமை மாலையே பூந்தென்றலை தனது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள் நதியா. இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் சேர்ந்து அலைபேசியில் கொரியன் தொடர்களை பார்த்துவிட்டு விடியகாலையில் தான் உறங்கினர்.

இது வழமையாக நடப்பது என்பதால்,நதியாவின் தாய் மட்டும் எழுந்து தனது வேலையை கவனிக்க தொடங்கினார்.

நேரம் பத்தைக்கடந்தும் இருவரும் கட்டிக்கொண்டு நடுஇரவு போன்று வாயை பிளந்தவாறே உறங்கிக்கொண்டிருக்க, இதற்குமேல் பொறுக்காத நதியாவின் அம்மா இருவரையும் தட்டி எழுப்பினார்.

நதியா அம்மாவின் அதட்டலில் பூந்தென்றலிடம் மட்டுமே சிறு அசைவு தென்பட அங்கிருந்து நகர்ந்துவிட்டார். எப்படியும் பூந்தென்றல் எழுந்து நதியாவையும் எழுப்பிவிடுவாள் என்ற நம்பிக்கையில்.

நீண்ட நேரம் அலைபேசியை இருட்டில் பார்த்ததால் என்னவோ படுத்திருந்தவாறே கண்களை லேசாக திறந்த பூந்தென்றலுக்கு இரு கண்களும் நன்றாக எரிந்தது.

எரிச்சலில் முகத்தை சுருக்கியபடியே கண்களை திறந்தவள் தனது அருகில் உறங்கிக்கொண்டிருந்த தோழியை கண்டவாறு சோம்பல் முறித்த பூந்தென்றல் குறும்பு புன்னகையோடு நதியாவின் காதருகே சென்று, “வாங்க பிரபு அண்ணா!எப்போ வந்தீங்க?.நதியா அண்ணா வந்துட்டாங்க எழுந்திரி.அட எழுந்திரி தாலி கட்ட பிரபு அண்ணா வந்தாச்சு”சத்தமாக கத்தினாள்.

பூந்தென்றல் சத்தத்தில் அடித்துப்பிடித்து எழுந்து அமர்ந்த நதியா திருதிருவென்று முழித்தாள்.

சிலநிமிடங்கள் கடந்தும் நதியா ஒன்றும் புரியாமல் கண்களால் வீட்டை சுற்றி அலைய விட்டவளுக்கு,அருகில் பூந்தென்றல் சிரிப்பின் ஓசைகேட்டதும் அவளின் தூக்கம் முற்றிலும் தொலைந்துவிட்டது.

வலதுகையை தலைக்கு முட்டுக்கொடுத்து நதியாவின் புறம் திரும்பியவாறே படுத்திருந்த பூந்தென்றல், “மாமா மாமா மாமா ஏன் மா ஏன் மா”என ராகமாக பாடியாவறே இதழ் பிரித்து சிரித்தாள்.

பூந்தென்றல் குறும்பில் நதியாவின் தாய்க்கும் சிரிப்பு வந்துவிட அவரும் சத்தமாக சிரித்துவிட்டார்.
இருவரின் சிரிப்பை மாறி மாறி பார்த்த நதியாவுக்கும் சிரிப்பு தோன்றினாலும்,வெளியில் அவளை முறைத்தபடியே,
“பச்ச பிள்ளையை தூங்கவிடாம கத்தி எழுப்புவிட்டு,கிண்டலா பாட்டா டி பாடுற?”என கேட்டவாறே பூந்தென்றலின் மீது ஏறி அமர்ந்து வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட,அவளோ கூச்சத்தில் நெளிந்தவாறே சிரித்தாள்.

“ஐயோ போதும் பிள்ள என்னால முடியல.சிரிச்சே வயிறு வலிக்குது”என்றவளின் கெஞ்சலை செவி சாய்க்காத நதியா,
“வலிக்கட்டும் பயபுள்ள சாது மாதிரி இருந்துட்டு என்னமா நக்கல் பண்ணுற.மவளே இரு உன்னை இன்னைக்கி சிரிக்க வச்சே சாவு அடிக்கிறேன்”என்றவாறே அவளை மேலும் கீச்சுமுட்டியே சிரிப்பினால் கண்ணீர் வர செய்தாள்.

இருவரின் சிரிப்பை ரசித்த நதியாவின் அம்மா தனது மகளிடம், “போதும் நதி,அவளைவிடு.பிள்ளைக்கு கண்ணீரே வந்துருச்சு. விளையாட்டுனது போதும் இரண்டு பேரும் எழுந்து பல்லை விலக்கிட்டு சாப்பிடுங்க நானு கறிகடைக்கு போய்ட்டு வந்துறேன்”என இருவரிடம் கூறிவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு பணத்தை எடுத்து சரிபார்த்தாவாறே கூடையில் போட்டுவிட்டு வீட்டின் வாயிலை நோக்கி நிமிர்ந்தவர் அதிர்ந்து கையிலுள்ள கூடையை தவறிவிட்டார்.

இருகையை எடுத்து வாயில் வைத்த நதியா அம்மா அதிர்ச்சியில் கலங்கிய கண்களுடன், “ஏய்!! நதி சீக்கிரமா வாயேன்”என பெருங்குரலில் அழைக்க, அறைக்குள் விளையாடிய வண்ணம் இருந்த இரு தோழிகளுமே நதியா அம்மாவின் அழைப்பில் தானாக எழுந்து கூடத்திற்கு ஓடி வந்தனர்.

நதியா அம்மாவின் அருகில் வந்த இருவருக்கும் வாயிலைக்கண்டதும் அதிர்ச்சி தான்.

தன்னை மூவரும் அதிர்ந்து பார்ப்பதில் இதழ்களில் புன்னகையை தவழவிட்டப்படியே வீட்டிற்குள் வந்தான் தனபிரபு.

ஒருநொடி ஆனாலும் நான்கு வருடங்கள் கடந்து தன்னவளை நேரில் கண்டவன் அவள் வந்துநின்ற கோலத்தை கண்டதும் தடுமாற்றமாகி பார்வையை தனது சகோதரியின் பக்கம் திருப்பினான்.

நதியா அம்மா தன் தம்பியை கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குபிறகு திடீரென்று கண்டதும் உணர்ச்சிபெருக்கில் ஆனந்த கண்ணீரோடு அணைத்துகொண்டார்.
பூந்தென்றல் அப்போது தான் தன்னையும் நதியாவையும் கண்டாள். இருவரும் நைட்டியில் இருந்தாலும் பூந்தென்றலிடம் விளையாடும்போது நதியா தனது நைட்டியை தூக்கி முழங்கால் தெரியும் அளவிற்கு கட்டியிருந்தாள்.
அவளின் அம்மா அழைத்ததும் அறையில் இருந்து கூடத்திற்கு அவ்வாறே வந்த நதியா தனபிரபுவை நேரில் கண்டதும் இமைக்க மறந்து நின்றிருந்தாள்.

உடனே பூந்தென்றல் நதியாவை இழுத்துக்கொண்டு வேகமாக அறைக்குச்சென்றதும் நைட்டியில் இருந்து சுடித்தாருக்கு மாறிவிட்டாள்.
சிலையாக நின்ற தோழியை பூந்தென்றல் உலுக்க,அதில் சுயம்பெற்ற நதியா ஒன்றும்பேசாமல் பூந்தென்றல் தந்த உடையை மாற்றிக்கொண்டாள்.

இதுவரை சிரித்துக்கொண்டிருந்தவள் தனது மாமனைக்கண்டதும் அவளுக்கு அதிர்ச்சி என்பதை தாண்டி தோழியின் பிரிவே முதலில் தெரிந்தது. இரண்டு மாதத்தில் வந்துவிடுவான் என்று எண்ணியவளுக்கு இன்றே அவனைக்கண்டதும் சந்தோஷம் தூக்கம் இரண்டும் சேர்ந்தே அவளை தாக்கியது போன்ற ஒன்று நெஞ்சை அழுத்தியது.

தோழியின் முகவாட்டத்தைக்கண்ட பூந்தென்றல் அவளின் தோள்தொட்டு தன்புறமாக திருப்பி, “என்ன பிள்ள,அண்ணன கண்டதும் ஏன் இப்படி மூஞ்சை தூக்கி வச்சிருக்க?சிரி கொஞ்சம்”என வெளியில் உள்ளவர்களுக்கு கேக்காதவாறு சன்னமான குரலில் கூறினாள்.

தன் தோழியின் முகத்தை நேருக்குநேர் கண்ட நதியா மெலிதாக புன்னகைத்தவாறே,அறை கதவை திறந்துக்கொண்டு வெளியேறினாள்.

தனது தோழியின் மனதை படிக்கமுடியாத பூந்தென்றல் உணரவில்லை தன்னை நினைத்துதான் வரப்போகும் கணவனுக்கான முக்கியத்துவத்தை கொடுக்க தவறுகிறாள் என்பதை.

மனதின் உள்ளே குழப்பம் தோன்றினாலும்,நதியா முகத்தை இயல்பாக வைத்தபடியே தனபிரபு முன்புவந்து நின்றாள்.

அக்கா தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் நல விசாரித்துவிட்டு கொண்டனர்.

பூந்தென்றல் அடுப்பறைக்கு சென்று அனைவருக்கும் டீ போடுவதற்காக பாலை வைத்துவிட்டு,குடிக்க தண்ணீர் எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்து நதியாவின் கையில் செம்பை திணித்து தனபிரபுவிடம் கொடு என்று கண்களால் கூறினாள்.

தன் அக்காவோடு தனபிரபுவின் வாய் பேசினாலும் அவனின் கண்கள் நதியாவிடமே நிலைத்து நின்றது.தன்னைக்கண்டதும் சந்தோஷத்தில் ஓடிவந்து கட்டிக்கொள்வாள் என்று நினைத்து வந்தவனுக்கு அவளின் அதிர்ச்சி முதலில் புரிந்தாலும் இப்போது அவனை காணும் அவளின் பார்வையின் அர்த்தம் புரியவில்லை.

“ஏன் தன்னை பிடிக்கவில்லையா?தன் வரவை எதிர்பார்க்கிறேன் என்று அடிக்கடி அவள் கூறுவது மனதில் இருந்து இல்லையா?சொல்லாமல் வந்தது தவறோ?”என்று எண்ணும் நிலைக்கு தனபிரபு மூளை குடைந்தது.

நதியா தன்முன்னே செம்பை நீட்டவும் அமர்ந்திருந்தவனின் விழிகள் நிமிர்ந்து தன்னை காணாமல் குனிந்து இருப்பவளின் விழிகளை தேடி தோற்று,ஒன்றும் கூறாமல் வாங்கிக்கொண்டான்.

அப்பொழுது தான் தம்பியை கண்டதும் அவனுக்கு ஒன்றும் குடிக்க கொடுக்காத தன் மடத்தனத்தை நினைத்த நதியாவின் தாய் அருகில் நின்ற மகளிடம், “நதி மாமனுக்கு சீக்கிரம் டீயை போட்டு கொண்டா” அவரசப்படுத்தினாள்.

“ம்ம்ம்”என்று தலையசைத்தப்படியே நதியா நகர,அதற்குள்

“நான் போட்டேன் மா”என சிரித்த முகத்தோடு அனைவருக்கும் டீயோடு அங்குவந்த பூந்தென்றல் தனபிரபுவிடம்,”அண்ணா டீ எடுத்துக்கோங்க”என நீட்டினாள்.

பூந்தென்றலைக்கண்டதும் மெலிதாக சிரித்தவாறே கையிலிருந்த செம்பை கீழே வைத்துவிட்டு அவள் நீட்டிய டீயை எடுத்து ஒருமிடறு பருகிய தனபிரபு,

“நல்லா இருக்கியா தங்கச்சி?”அன்பாக விசாரித்தான்.
“நான் நல்லா இருக்கேன் அண்ணா.நீங்க சட்டுனு வந்து சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க.ரொம்ப சந்தோஷம் அண்ணா”என உள்ளம் நிறைந்த புன்னகையுடன் பூந்தென்றல் கூறியதும்,

தனபிரபுவின் பார்வை நதியாவை குற்றம் சாட்டுவது போன்று நோக்கியது.

மற்ற இருவருக்கும் டீ கொடுத்துவிட்டு தனக்கும் எடுத்தவள் டீயை பருகியபடியே தனது தோழியையும் தனபிரபுவையும் மாறி மாறி பார்த்தாள்.

தனபிரபுவின் பார்வை நதியாவிடம் இருப்பதை நொடியில் கவனித்த பூந்தென்றல் நதியா அம்மாவிடம், “அம்மா நீங்க பேசிட்டே இருக்காம கடைக்கு போய்ட்டு மீனு இறால் நண்டுனு வாங்கிட்டு வாங்க”என கண்களால் இருவரையும் சைகை காட்டினாள்.

பூந்தென்றல் சைகையால் தனபிரபு நதியாவை காட்டவும் அப்போதுதான் இருவருக்கும் தனிமை கொடுக்காமல் தான் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை உணரவும் மானசீகமாக தலையில் அடித்த நதியா அம்மா தனது தம்பியிடம் கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு முதலில் கிளம்பினார்.

அவர் கிளம்பிய அடுத்த நொடியே தனது டீயை வேகமாக வாயில் சரித்த பூந்தென்றல், “அண்ணா நான் ரூம்க்கு போய்ட்டு கொஞ்ச நேரத்தில வந்துறேன்”என தனபிரபுவிடம் சொல்லிவிட்டு நதியாவிடம் தலையசைத்து கிளம்பினாள்.

இப்போது தனபிரபு நதியா என இருவர் மட்டுமே அங்கு தனித்து விடப்பட்டிருந்தனர்.

தன்னுடன் அலைபேசியில் எப்போதும் வாயடிக்கும் நதியா,நேரில் ஒன்றும் பேசாமல் அமைதியாக நிற்பதைக்கண்டவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது.

நாற்காலியில் இருந்து வேகமாக எழுந்து நதியாவை விட்டு இரண்டடி தள்ளி நின்றபடியே அவளை உறுத்து விழித்தான்.

தன் மாமனை நேரில் கண்டதும் என்ன சொல்லமுடியாத உணர்வில் தவித்தவளுக்கு தற்போது அவனின் அருகாமை மூச்சு அடைப்பது போன்று இருந்தது.

தான் அருகில் நிற்பது அறிந்தும் தலைகுனிந்து இருப்பவளை பார்த்தவன், “நான் வந்தது பிடிக்கலனு முகத்துக்கு நேரா சொல்லிரு நதியா. நான் வந்த வழியிலே போயிறேன்”என அவன் கூறியதை கேட்டதும் அதிர்ந்து தலைநிமிர்ந்து பார்த்தாள்.

“ஏ.எ.. எ ன்ன..மா..மா .இப்படி “தனபிரபுவின் முறைப்பில் கேக்க வந்ததை பாதியில் கேக்காமல் நதியா முழுங்கினாள்.

“இங்க பாரு நதியா,கல்யாணம் நீ நினைக்குற போல விளையாட்டு காரியமில்லை.நான் எப்போ ஊருக்கு வரேன் சொன்னதுல இருந்து உன் போக்கே சரியில்ல.

முன்ன உன்னை பார்க்க வந்தா சிரிச்சிட்டே வாங்க மாமானு பேசுவ.இந்த நாலு வருஷத்துல உரிமையா பேசி காதலிக்க ஆரம்பிச்ச அப்புறம் நேரில இன்னைக்கு தான் பார்க்குறோம்.எம்புட்டு ஆசையா வந்தேன் தெரியுமா டி,என்னமோ நான் செத்து போன போல முகத்தை தூக்கி வச்சிருக்க” என மன ஆதங்கத்தை வார்த்தையால் தனபிரபு கொட்ட,அவனின் கடைசி வார்த்தையில் நதியாவின் இதயத்துடிப்பு நின்றே விட்டது.

வரபோகும் மனைவி தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும்.தனக்கு மட்டுமே அவள் இதயத்தில் முதல் இடம் என்பது எல்லாம் புது மாப்பிள்ளையின் எதிர்பார்ப்பு என்பது நிதர்சனம்.

அதிலும் அவளுக்காக தானே என் பத்துவருட காத்திருப்பு,பிறந்ததிலிருந்து தந்தையின் அன்பையே பெறாதவளுக்கு தானே எல்லாம் நினைத்து பார்த்து பார்த்து செய்பவன் விரும்புவது தான்போல அவளும் என்மீது அன்பும் அக்கறையும் ஏக்கமும் தான்.

எப்போது பேசினாலும் பாதிநேரம் அவளின் தோழியை பற்றியே பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை.தங்களுக்கான நேரத்தில் தங்களை மட்டுமே எண்ணவேண்டும் என்பது அவனின் கருத்து ஏன் போராசை என்று கூறலாம் அந்த அளவிற்கு தங்கள் எதிர்காலம் பற்றி இப்போதுவரை அவள் பேசவில்லை.அதுயென் என்று தனபிரபுவுக்கும் புரியவில்லை,அவள் மற்ற பெண்களை போன்று அதுவேண்டும் இது வேண்டும் கேட்டால் தகுதிக்கு மீறியிருந்தாலும் வாங்கி தர நான் இருக்கும்போது இவளுக்கு ஏன் அது புரியவில்லை என்று தான் சில மாதங்களாக அவன் சிந்தனையில் ஓடிக்கொண்டிருப்பது.

“உனக்கு சர்ப்ரைஸ் பண்ணனும் வரதை சொல்லாம, நேத்து தான்டி வந்தேன்.அசதி இருந்தும் உன்னை பார்க்கணும் ஆசையில் வண்டியிலே வந்துட்டேன்.
எனக்கு இருக்கப்போல உனக்கு என்மேல ஆசை எதிர்பார்ப்பு இருக்காதா நதியா.போன் ல பேசும்போது நல்லாதானே பேசுன,உன்னை நேரில் பார்க்க ஆசைப்பட்டு வந்த எனக்கு செருப்படி கொடுத்த போல இருக்கடி”

தனபிரபு கோவத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வார்த்தைகளை விடுவதை உணர்ந்த நதியா இப்பொழுது தன் வாயை திறந்தாள்.

அவனருகில் வந்து அவன் கையை இருகையால் பிடித்தபடி, “மாமா இப்படியெல்லாம் பேசாதிங்க. நீங்க வந்தது சந்தோஷம் தான் மாமா,ஆனால்..”மேலும் கூறாமல் அவனின் முகத்தை பார்த்தாள்.

அவள் கையை பட்டென்று எடுத்துவிட்டவன், “சீக்கிரம் நம்மள கூட்டிட்டு போயிருவான் உன் பிரின்ட்யை பிரிஞ்சுருவோம்னு வருத்தமா போச்சு அதானே”அவள் கூற வந்ததை இவன் கூறியதும் அதுதான் உண்மை என நதியா தலையசைத்தாள்.

தான் கூறியதற்கு இல்லை என்று கூறுவாள் என சிறு நட்பாசை கொண்டவனுக்கு மேலும் வலியை நதியா கொடுத்தாள்.

அதில் அவனுக்கு சுர்ரென்று கோவம் தலைக்கேற அவளைவிட்டு விலகியபடி, “நீ அப்டியே உங்க அப்பன் போல தான்டி.சுயநல பிடிச்சவா,நீ பிறந்ததுனால தான் என் அக்கா வாழ்க்கையே போச்சு. அது இதுவரை உன்னை ஒரு வார்த்தை சொல்லி இருக்குமா சொல்லு.

பெத்த தாயோட தியாகம் அன்பு கண்ணுக்கு தெரியல.உனக்காக சோறு தண்ணி இல்லாம உழைச்சு வீடு கட்டி கல்யாணம் பண்ணனும் முப்பத்தி நாலு வயசு வரை பொட்ட பையனா இருக்கேன் என்னை பத்தி நினைக்கல. அஞ்சு வருசமா பழகுன அந்த பிள்ள முக்கியமா போச்சு உனக்கு”

“மாமா பூவை பத்தி தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க?”என நதியாவும் கோவத்தோடு கேக்க,

“யார் வாழ்க்கயில தான் கஷ்டமில்ல.என் அக்கா நீ நான் னு,இங்க பாரு நதியா அந்த பிள்ளை உன்னை நம்பி ஒண்ணும் பிறக்கல.அது வாழ்க்கைய அதுக்கு பார்த்துக்க தெரியும், உதவி கேட்டா பண்ணு. ஆனால்,அதுக்காக உன் வாழ்க்கையோட சேர்த்து என்னையும் நோகடிக்காத. தயவுசெஞ்சு கெஞ்சி கேக்குறேன்டி உன் பூவை பத்திமட்டும் ரொம்ப யோசிக்காத டி,என்னை பத்தியும் யோசி”என கோவமாக ஆரம்பித்தவன் தனது மனவலியை புரிந்துகொள் என இறுதியில் கெஞ்சியும் விட்டான்.


தனபிரபு கோவத்தினால் பேசும்போது பெரிதாக எடுத்துக்கொள்ளாத நதியா,அவன் இறுதியில் கெஞ்சலோடு கேக்கவும் நதியா நெஞ்சில் கைவைத்தபடியே நின்றவாறே மடங்கி அமர்த்துவிட்டாள்.

நதியா கண்ணீர் விட்டு அழ வில்லை,கண்கள் விரிந்தபடியே இருந்தது.

அவள் தற்போது நினைப்பதைக்கூட முகத்தில் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தவில்லை.நட்பு காதல் இரண்டையும் அவளின் மனதராசு தட்டில் வைத்தால் நடுமுள் சமமாகவே நிற்கும். தன்னவன் தன்னை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளானா?என்ற கேள்வியோடு துவண்டுவிட்டாள் மனதளவில்.


அவளையே பார்த்துக்கொண்டிருந்த தனபிரபு அவள் அசையாமல் வெளிறிய முகத்தோடு இருப்பதைக்கண்டவன் அவளருகில் செல்லும்முன், “உள்ளே வரலாமா?”என்ற குரல் கேட்டு தன்னிச்சையாக வாசலை பார்த்தான்.

பூந்தென்றல் குரலைக்கேட்டதும் நதியா கண்களை மூடினாள்.மூடிய கண்களிருந்து தற்போது கண்ணீர் உருண்டோட,அவளை பார்த்தவாறே பூந்தென்றல் உள்ளே வந்தாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
பூந்தென்றலை சற்றும் எதிர்பாராத தனபிரபு என்ன பேசுவது என்று தெரியாமல் நதியாவை பார்த்தான். கண்கள் மூடியபடியே அழுபவதைக்கண்டதும் தான் அவரசப்பட்டு பேசிவிட்டோமோ என்று தற்போது உணர்ந்தவன் யாரையும் பாராமல், “நீங்க பேசுங்க, நான் கிளம்புறேன்”என சொல்லிவிட்டு எதனிக்க முயன்றான்.
பூந்தென்றல் முந்திக்கொண்டு,“ஒரு நிமிஷம் அண்ணா,நான் தான் இடையில வந்துட்டேன் நானே போயிறேன்”என அவள் இரு அர்த்தத்தில் கூற,நதியா கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள்.

நதியாவை பார்வையால் மன்னித்துவிடு என்பதுபோல் கண்களால் இறைஞ்சிய பூந்தென்றல், வேகமாக அறைக்குச்சென்று தனது பர்ஸை எடுத்துக்கொண்டு வந்தாள்.
இருவரிடமும் கூறிவிட்டு விடுதிக்கு செல்ல வெளியே வந்த பூந்தென்றல் தெருவரை சென்றபின்னர் தான் பர்ஸை நதியா வீட்டில் விட்டு வந்தது நினைவுவரவும் வேகமாக வந்தவள் தனபிரபுவின் பேச்சைக்கேட்டு வீட்டின் வாசலருகே நின்றுவிட்டாள்.
“தங்கச்சி” தனபிரபு பேச முற்பட, பூந்தென்றல் அவனின் காலில் விழுந்தேவிட்டாள்.
பூந்தென்றல் செய்கையில் இருவருமே பதற, முதலில் நதியா ஓடிவந்து பூந்தென்றலை தூக்கி நிறுத்தினாள்.

தனபிரபுவிடம் கையெடுத்து கும்பிட்ட பூந்தென்றல், “மன்னிச்சுறுங்க அண்ணா,என்மேல வச்ச அன்பால நதியா இப்படி நடந்துக்குவானு எனக்கு தெரியல.யாருமில்லைனு நினைச்சப்ப கடவுள் கொடுத்த வரமா தான் நதியாவை நினைச்சேன்.ஆனால் அவளுக்கு சாபமா நானே மாறுவேன்னு நினைக்கல.

இது உங்க இரண்டு பேர் பிரச்சினையா இருந்தா நான் நடுவுல வந்துருக்க மாட்டேன்.ஆனால் நானே உங்க இரண்டு பேருக்கு இடையில் வந்து…”மேலும் பேச முடியாமல் குற்ற உணர்ச்சியில் பூந்தென்றல் குலுங்கி அழுதாள்.

அவளை தோளோடு நதியா அணைக்க முற்பட அவளிடமிருந்து விலகிய பூந்தென்றல், ஒன்றும் பேசாமல் மீண்டும் அறைக்குள் சென்று ஒரு அட்டைப்பெட்டி ஒன்றை தூக்க முடியாமல் தூக்கி கொண்டுவந்து தனபிரபுவின் முன்பு வைத்தாள்.

பூந்தென்றல் தன்னை விலகியதிலே மிரண்ட நதியாவுக்கு இனி அவள் என்ன முடிவு எடுப்பாள் என ஊக்கியத்தவளும் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள்.

தனபிரபு தன்முன் பூந்தென்றல் வைத்த அட்டைப்பெட்டிய கேள்வியோடு அவளை தவிப்போடு பார்க்க, பூந்தென்றல் தனது அழுகையை கட்டுப்படுத்தி முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு,

“நதியா பண்ணது தப்புதான் அண்ணா நான் இல்லன்னு சொல்லல. என்மேல வச்ச அன்பால உங்களை தெரிஞ்சோ தெரியாம காயப்படுத்திட்டா அதுக்கு நான் தான் காரணம்” மேலும் தொடர்ந்த பூந்தென்றல்,

“இது உங்களுக்காக அவள் வாங்கி சேர்த்தது. நீங்க வரும்போது கொடுக்கணும் ஆசைப்பட்டு வாங்கி வச்சா.இதுவே உங்களுக்கு புரியும் நினைக்குறேன்” கூறிவிட்டு நதியாவை பார்த்தாள். அவளோ வெற்று பார்வையை இவள் மீது வீசி நினைத்ததை கூறிவிடு என்ற ரீதியில் சிலையாக நின்றாள்.

பூந்தென்றலின் கண்கள் கண்ணீர் சிந்தினாலும் வரவழைக்கப்பட்ட புன்னகையோடு தனபிரபுவை நோக்கி, “வாழ்த்துக்கள் அண்ணா உங்க கல்யாணத்துக்கு,கடைசியா என்னை மன்னிச்சுறுங்க அண்ணா”என கூறும்போதே அவள் குரல் தழுதழுத்தது.
பூந்தென்றல் வார்த்தையை கேட்டு இதோ தான் நினைத்தப்படி கூறிவிட்டாளே என மனதிற்குள் நொந்த நதியா வெளியில் இருகைகளினால் வாயை பொத்தி சத்தம் வராமல் உடல் குலுங்க அழுதாள்.

நதியாவின் அழுகைக்கேட்டதும் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல மனம் ஏங்கினாலும் திரும்பி அவள் முகத்தை பாராமல் பூந்தென்றல் அங்கிருந்து ஓடினாள்.

தலையில் கைவைத்து தனபிரபு நாற்காலியில் அமர்ந்தவனுக்கு நதியாவை ஏறுயெடுத்து பார்க்க முடியவில்லை.

அவனை பொறுத்தவரை நட்பு என்றாலும் ஒரு எல்லைக்கோடு வேண்டும் அதுவும் கணவன்-மனைவி உறவில் எந்த உறவின் தலையிடுதல் இருக்க கூடாது விரும்புபவன்.

இதனை நதியாவிடம் பொறுமையாக எடுத்து நேரில் கூறவேண்டும் என்பதால் தான் இதுவரை அவளிடம் அலைபேசியில் கூட கூறவில்லை.இன்று நதியாவின் புறக்கணிப்பு அவனுக்கு கோவத்தை வரவழைத்துவிட்டது. அதனால் வார்த்தைகளை விட்டுவிட்டான் தான்.ஆனால் பூந்தென்றலை காயப்படுத்த ஒருபோதும் நினைத்ததில்லை.அவளுக்காக நதியா கேட்டதை நிறைவேற்ற வேண்டும் என்றுயெல்லாம் நினைத்திருந்தான்.

பூந்தென்றல் தனது வார்த்தைகளை கேட்டது,குற்றஉணர்ச்சியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு,நதியா தனக்காக வாங்கிய பொருட்களை எடுத்துக்காட்டி,கல்யாணத்திற்கு வாழ்த்து கூறி மொத்தமாக பிரிந்து சென்றது என அனைத்தையும் நினைத்தவனுக்கு குற்ற உணர்ச்சியாகியது.

பூந்தென்றலை நதியாவிடம் பிரிக்க வேண்டும் அவன் கனவில் கூட நினைக்கவில்லை.

இப்போது நதியா திரும்பி தன்னை கேள்விகேட்டால் தான் என்ன செய்வது என உள்ளுக்குள் நடுங்கிபோனான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்-4

சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த நதியா அம்மா,நாற்காலியில் அமர்ந்தவாறே குனிந்தபடி இருந்த தனபிரபுவையும்,
அங்கு மூலையில் கால்களுக்குள் முகத்தை புதைத்தப்படி அமர்ந்திருப்பவளை கண்டதும் நதியா அம்மாவிற்கு பக்கென்றது.

இருவரிடத்தில் பிரச்சனையோ என தவித்த தாயின் உள்ளம்,தயக்கத்தைவிட்டு தனது தம்பியிடமே கேட்டுவிட்டாள்.

நதியாவை ஒருகணம் பார்த்த தனபிரபு நடந்ததை ஒன்றுவிடாமல் தனது அக்காவிடம் கூறியவன் தயக்கமாக அவரின் முகம் நோக்கினான்.

நடந்ததை புரிந்துக்கொண்ட நதியா அம்மாவிற்கு யாரின்மீதும் கோவம் எழவில்லை.இதுயெல்லாம் திருமண ஆகும் பெண் மாப்பிள்ளை இடையில் நடப்பது என்று புரிந்தாலும் திருமண முன்பே இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு வந்துவிட்டதே என்ற வருத்தமே தோன்றியது.

பாவம் இடையில் பூந்தென்றல் பாதிக்கப்பட்டுள்ளாளே என கலங்கிய நதியா அம்மாவின் நெஞ்சில் பாரமேரிய உணர்வு.

ஒன்றும் பேசாமல் நதியா அம்மா,தனது மகளின் அருகில் அமர்ந்து அவளின் தலையை தொட்டாள்.

தன் அம்மா தொட்டத்தும் நிமிர்ந்த நதியா, “ஏன் மா மீனு வாங்கிட்டு வர இம்புட்டு நேரமா?.போ கையை கழுவிட்டு வா,சேர்ந்து சாப்பிடுவோம்” என அழுதுவடிந்த முகத்தை கையினால் துடைத்துவிட்டு,எதும் தன்னை பாதிக்கவில்லை என்ற ரீதியில் எழுந்து குளியலறை புகுந்துவிட்டாள்.

சற்றுநேரத்தில் வெளியில் வந்த நதியாவின் முகம் சோகத்தில் மூழ்கிருந்தாலும்,மூவருக்கும் சாப்பாட்டை எடுத்துவைத்துவிட்டு தனபிரபுவை பார்த்தாள்.

அவன் நதியா இயல்பாக பேசினாலும் அவள் குரலின் மாற்றம் உணராதவன் இல்லையே அதை எண்ணி வருந்தினான்.

“வாங்க மாமா சாப்பிடலாம்.கண்டதை நினைச்சுட்டு இருக்காம வந்து சாப்பிட்டு ரூம்ல படுங்க”என நதியா அவனின் கைபிடித்து அமரவைத்து அவனுக்கு பரிமாறினாள்.

தனபிரபு சாப்பிடாமல் நதியா முகம் நோக்கியவன், “சாரி நதி,ஏதோ கோவத்துல வார்த்தையை விட்டுப்புட்டேன்.நீ கவலைப்படாத நான் பூந்தென்றல கூட்டிட்டு வரேன்”என எழுந்தவனை கைபிடித்து தடுத்த நதியா,

“நீங்க கோவத்துல சொன்னாலும் சரியா தான் சொலிருக்க மாமா. உன் இடத்துல நானா இருந்தாலும் உன்னைபோல தான் பேசிருப்பேன். நான் புரிஞ்சுக்கிட்டேன் மாமா இனிமே பார்த்து நடந்துக்குறேன்”தன் தவறை திருத்திக்கொள்வதாக கூறி புன்னகைத்தாள்.

நதியாவின் பேச்சில் மேலும் தனபிரபு குற்றணர்ச்சியில் தவித்தான்.

“மன்னிச்சுறுடி மாமன் உன்மேல உரிமையில் கோவப்பட்டாலும் பூந்தென்றல காயப்படுத்தி அனுப்பிட்டேன் நானே கூட்டி வரேன்”என்றவனிடம்,
மறுப்பாக தலையசைத்த நதியா கசந்த புன்னகையை இதழில் விட்டபடி, “நீங்களே நினைச்சாலும் அவள் இனிமே என்கிட்ட பேசக்கூட மாட்டா.அவளால் என் வாழ்க்கையில பிரச்சனைனு தெரிஞ்ச அப்புறம் ..”பேசமுடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு.

“நீங்க சாப்பிடுங்க எனக்கும் பசிக்குது” நதியா தன் பசியை முன்னிறுத்த தனபிரபு மேலும் பேசாமல் உண்ணத்தொடங்கினான்.

மூவரும் உண்டு முடித்தபின், நதியா அம்மாவும் நதியாவும் மதிய உணவை சமைக்க ஆரம்பிக்க தனபிரபு ஓய்வுகொடுக்க கட்டிலில் படுத்தவனுக்கு தன்னவளின் நட்பை பிரித்துவிட்டோம் என வருந்தினாலும், இப்போதாவது தன்னை நதியா புரிந்துகொண்டால் போதும் என சற்று சுயநலமாகவே சிந்தித்தான்.

நதியா வீட்டிலிருந்து கிளம்பிய பூந்தென்றல் நேராக விடுதி அறைக்கு வந்து கட்டிலில் தொப்பென்று விழுந்தாள்.

தனபிரபு நதியாவிடம் கூறிய அனைத்து வார்த்தைகளும் அவளின் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

நதியாவை நட்பை தாண்டி உடன்பிறந்த சகோதரி போல அல்லவா நினைத்து உயிரை வைத்திருந்தாள். இன்று அவளின் கல்யாண வாழ்க்கை தொடங்கும் முன்பே தன்னால் இருவருக்கும் சண்டை வந்துவிட்டதே நினைத்து கலங்கினாள்.

அவளின் வாழ்க்கைக்காக அவளை பிரிந்த வலியைக்காட்டிலும் இனிமேல் இருவரின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தனது வலியை பழகி கொள்ள தான் ஆகவே வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டாள்.

ஒருமணி நேரம் கடந்தபிறகு படுக்கையிலிருந்து எழுந்த பூந்தென்றல்,மாற்று உடை எடுத்துக்கொண்டு தனது அறையை விட்டு குளியலறைக்கு சென்றாள்.

சில நிமிடங்களிலே குளித்துவிட்டு நேராக அறைக்கு வந்து சோர்ந்தவாறே மெத்தையில் அமர்த்துவிட்டாள்.

தனது ஈர கூந்தலை உலர்த்தக்கூட எண்ணாமல் கண்கலங்கியபடியே இருந்தாள் பூந்தென்றல்.

அன்றைய நாள் தோழிகள் இருவருக்கும் ரணமாகவே கழிந்தது.

மறுநாள் பொழுது யாருக்கும் காத்திராமல் தனது வேலையை செய்ய, நேற்று குளித்த ஈர தலையோடு உறங்கிய பூந்தென்றல் மெல்லகண்ணின் கருமணிகளை அசைத்தவாறே இமைகளை திறந்தாள். நதியாவின் நினைவில் சாப்பிடகூட மறந்து பட்னியோடு துங்கியதால் எழுந்ததும் பசி வயிற்றை கிள்ளியது. ஈர தலையோடு தூங்கியதால் தலை வேறு ஒருபக்கம் கிண்ணென்று வலித்தது.

மெல்ல தலையை பிடித்தவாறே எழுந்து அமர்ந்தபடியே தனது அறையை பார்த்தாள். இவளோடு தங்கியிருக்கும் இரு பெண்களும் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருப்பதால் இந்த தனிமை கிட்டியது அவளுக்கு. நேற்றிருந்த மனநிலைக்கு தனிமையும் கண்ணீரையும் தான் துணையாக வைத்துக்கொண்டதால் தற்போது மனம் சிறிது தெளிவுடைந்த உணர்வு பூந்தென்றலுக்கு தோன்றியது.

தனக்கு பிரிவு என்பது புதிது இல்லையே என்ற கசந்த புன்னகையை சிந்தியபடியே,எழுந்து அன்றைய நாள் ஓட்டத்தை தொடர ஆயுத்தமானாள்.

குளித்து சாப்பிட்டு விடுதியைவிட்டு வெளியே வந்த பூந்தென்றலின் கண்கள் தானாக,தினமும் இவளும் நதியாவும் சந்திக்கும் இடத்தை பார்த்ததும் கண்ணீர் பெருக்கெடுத்தது இருந்தும் அதனை வெளிக்காட்டதவாறு கடைக்கு புறப்பட்டாள்.

இவள் வேலைக்கு தனியாக வந்ததைக்கண்ட கடையில் வேலைபார்க்கும் சகதோழிகளிடம் உண்மையை மறைத்து வெளியில் சிரித்தமுகமாகவே, “நதியோட மாமா வந்துட்டாரு,கூடிய சீக்கிரம் கல்யாணம் அதான் இனிமே நதி வரமாட்டா”என்ற தகவலை சொல்ல,அவர்களிடத்தில் சந்தோஷம் இருந்தாலும் இனி நதியாவை காண முடியாது என வருத்தங்கொண்டனர்.

முன்னவே நதியா அம்மா கூறியதுதான் தனது தம்பி வந்துவிட்டால் நீ வேலைக்கு செல்லக்கூடாது என்று நதியாவிடம் கூறியதை வைத்து எல்லாருக்கும் பூந்தென்றல் தகவலாக கூறினாள். உண்மையில் என்ன என்பது தனக்கும் தெரியாதே என அவளின் அன்பு மனம் தவித்தது.

நேற்று இவள் பேசிவிட்டு வந்தபிறகு என்ன ஆனதோ என்ற தவிப்பு அவளை வாட்டியது. நதியா அம்மாவிடம் அலைபேசியில் கேட்டு விடலாம் என்று எண்ணிக்கொண்டு தனது வேலையை பார்க்க சென்றாள்.

அன்றைய மதியமே, கடைக்கு வந்த நதியா அம்மா பூந்தென்றலை தனியாக அழைத்து பேசி சென்றார். கடையில் தங்கள் இருவரின் விலகளையும் தெரிவித்துவிட்டு சம்பள பாக்கியை பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார்.

வேலை முடிந்து இரவு விடுதி அறைக்கு வந்து படுத்த பூந்தென்றல், இன்று நதியா அம்மா தன்னிடம் கூறிய வார்த்தைகளை அசைபோட்டு பார்த்தாள்.
“ சாப்பிடியா கண்ணு?”

“ம்ம் சாப்பிட்டேன் மா,நீங்க நதியா சாப்பிட்டிங்களா?”

“சாப்பிட்டோம்”

“அம்மா நேத்து நான் வந்த அப்புறம் ஏதும் பிரச்சனை..”என பூந்தென்றல் தயக்கமாக இழுக்க,

அவளின் கையை பிடித்துக்கொண்ட நதியா அம்மா, “பிரச்சனை எல்லாம் இல்லைமா,நான் வந்ததும் பிரபு எல்லாத்தையும் சொன்னான்.எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு மன்னிச்சுறு”என கேட்டதும், பதறிய பூந்தென்றல்,

“அம்மா என்ன நீங்க என்கிட்ட மன்னிப்பு கேக்கிறீங்க, எனக்கு தான் கஷ்டமா இருக்கு. என்னால தான் அண்ணா வருத்தப்பட்டாங்க” கூறும்போதே அவளின் குரல் கம்மியது.
“உன்னால எல்லாம் இல்லை,அதைவிடுமா நாங்க வர வியாழக்கிழமை ஊருக்கு கிளம்புறோம்.அங்க போய்ட்டு தான் கல்யாணத்துக்கு தேதி குறிக்கணும் நேத்து தம்பி சொல்லிட்டு போய்ட்டான்.”

“சந்தோஷம் மா”

“நான் நாள் குறிச்சுட்டு கண்டிப்பா பத்திரிக்கை வைக்க இங்க வருவேன்.நீயும் கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும்”

“கண்டிப்பா வருவேன் மா,என்னோட நதி கல்யாணம் நான் இல்லாம எப்பிடி”

“என்னால உன்னை என்னோட ஊருக்கு கூட்டிட்டு போக முடியல மா,இந்த அம்மாவை தப்பா நினைக்காத”என நதியா அம்மா கலங்கிவிட,
“அய்யோ அம்மா எனக்கு எல்லாம் புரியுது.நானும் கிராமத்துல வளர்ந்தவ தான்,நதியா ஆசைப்படுறானு என்னை கூட்டிட்டு போக முடியாது. நீங்க உங்க தம்பி வீடுனு இருக்கலாம் ஆனால் வயசு பொண்ணா நானும் கூட வந்தா கண்டிப்பா அண்ணா பெயர் கெட்டு போகும்.

அப்டியே நீங்களோ நதியாவோ கூப்பிட்டா கூட நான் வந்துற மாட்டேன்மா.என்னோட வாழ்க்கை அப்டி, எனக்கு இங்க தான். என்னோட பிரச்சினையில உங்களையும் இழுத்துவிட நான் எப்பவும் விரும்பல”என தனது மனதில் உள்ளவற்றை மறைக்காமல் உள்ளதை கூறிவிட்டாள் பூந்தென்றல்.

தனபிரபு நதியா திருமணம் முடிந்தபின் அவர்கள் ஊரிலே வாடகை வீட்டில் தான் தங்குவர்.அதுவரை நதியா அம்மா சொந்தகார வீட்டில் தங்கிக்கொள்வார்.புது வீடு கட்டியபிறகு தான் அங்கே மூவரும் குடிபுகுவர்.

இந்த நிலையில் பூந்தென்றல் உடன் சென்றால் அவள் நிலைமை. கிராமத்து ஜனங்களும் உறவுகளும் இதனை அவலாக மென்று முழுங்குவர் என்று நதியா அம்மா எண்ணினார்.


நதியா பூந்தென்றலையும் தன்னோடு அழைத்து சென்று அவளுக்கும் அங்கே மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து ஒரே ஊரில் வாழ வேண்டும் என நதியா அம்மாவிடம் ஒருமுறை தனது ஆசையை கூற,இதனை தன் மகளிடம் பேசி அவளை காயப்படுத்தாத நதியா அம்மா நேராக பூந்தென்றலிடம் முன்னவே பேசியுள்ளார்.

அப்பவே பூந்தென்றல் தான் வரமாட்டேன் என உறுதியாக கூறியிருந்தாள்.


இப்பொழுது இந்த ஊரைவிட்டு செல்வது என முடிவுயெடுத்த நதியா அம்மாவால் இன்னொரு மகளாக எண்ணிய பூந்தென்றலை தனியாக விட்டு செல்ல மனமில்லை. இருந்தாலும் மனசை தேற்றிக்கொண்டு பூந்தென்றலிடம் கவனமாக இருக்கவேண்டும் என தாயாக அறிவுரை கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.


என்னதான் உறவாக எண்ணி அன்பு கொண்டாலும் நடப்பு என்று வரும்போது அவரவர் வாழ்க்கை என்றுதான் செல்ல வேண்டும் இது தான் நிதர்சனம்.


நாட்கள் நகர, நதியா அம்மாவும் நதியாவும் ஒரேடியாக சென்னையை விட்டு தங்கள் ஊருக்கு செல்லும் நாளும் வந்தது.

அன்றைய காலைபொழுதில் சீக்கிரமே எழுந்த பூந்தென்றல், குளித்து முடித்து அருகிலுள்ள கோவிலில் சென்று அமர்த்துவிட்டாள்.
என்னதான் நதியாவின் பிரிவு என்பது முன்னவே தெரிந்து இருந்தாலும் இப்படியொரு சூழ்நிலை வந்து மொத்தமாக பிரிந்துவிடுவோம் என பூந்தென்றல் எண்ணியது கூட இல்லை.


பேச்சுவார்த்தை கூட இல்லாமல் இதோ நினைத்தாலும் காண முடியாத தொலைவுக்கு தோழி செல்கிறாள் என மனவேதனையோடு அந்த கடவுளிடம் மனதார தோழிக்காக வேண்டிக்கொண்டாள்.

இங்கு நதியா இல்லத்தில், பூந்தென்றல் சென்றய நாள்முதல் நதியாவிடம் உள்ள குறும்பும் சிரிப்பும் தொலைந்து போய்விட்டது.


தன் அம்மாக்காகவும் மாமாக்காகவும் வெளியில் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டவளால் மனதளவில் உடைந்து போயிருந்தாள். எது சரி எது தவறு என்று அவள் ஆராயவில்லை, ஒன்றை மட்டும் எண்ணிக்கொண்டாள்.

பூந்தென்றலின் பிரிவு தற்காலிகமானது தான்,விரைவில் சேர்ந்துவிடுவோம் என உறுதியாக தன்னுள் நம்பிக்கையாக இருந்தாள்.

காரணம், தற்போது தன்னை புரிந்துகொள்ளாமல் இருக்கும் மாமனுக்கு தன் அன்பை முழுதாக செலுத்தி தனது வாழ்வை நிலைப்படுத்தி தனக்காக வாழும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும். நிச்சயம் இப்போது இல்லையென்றாலும் எதிர்காலத்தில் தனபிரபு புரிந்துகொள்வான் இல்லை தன் காதல் புரியவைக்கும் என்று அசையாத நம்பிக்கையை தன்னுள் வளர்த்துக்கொண்டாள்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம்-5
இரண்டு மாதங்களுக்கு பிறகு,

கோடை வெயிலில் தார்சாலைகள் கூட வெப்ப அனல் தாக்கத்தால் உருகிவிடும் அளவுக்கு வெயில் வாட்டியது.

இன்று ஒரு வேலைக்கான நேர்முக தேர்வு ஒன்றில் கலந்துகொண்டு,தன் இருப்பிடத்திற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்துமிடத்தில் நின்றிருந்தாள் பூந்தென்றல்.

இந்த இரண்டு மாதத்தில் எத்தனை நேர்முக தேர்வுக்கு சென்றும் அவளுக்கு வேலை கிடைத்தப்பாடில்லை. வெயில் தாக்கத்தால் வேர்த்து வழிய நின்ற பூந்தென்றலின் எண்ணமெல்லாம் இன்றைய நிகழ்வை எண்ணி யே சுற்றியது.

இன்று ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளர் வேலைக்கு நேர்முகத்தேர்வில் இவளுக்கு கிட்டத்தட்ட வேலை கிடைத்துவிட்டது.ஆனால் இவள் ஒரு அனாதை என்று தெரிந்ததும் அவர்கள் உடனே இவளை நிராகரித்துவிட்டார்கள்.

நதியா தன்னுடன் உடனிருந்தவரை அந்த வார்த்தையை கூட சொன்னால் கோவத்தில் திட்டிவிடுவாள். திட்டிய மறுநிமிடமே அணைத்து தனக்காக கண்ணீர் சிந்தி,அந்த எண்ணத்தை தோன்றாமலே பார்த்துக்கொள்வாள்.

இன்று அவள் போனதும் தான் ஒரு அனாதை என்பதை விடுதி அறையில் தங்கியுள்ள யமுனா முதல் இப்பொழுது நேர்முகத்தேர்வு நடத்துபவர் வரை எண்ணும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டனர்.

அவளின் மனம் சிந்தும் வேதனையை விட வெயிலின் தாக்கம் கூட பூந்தென்றலை பாதிக்கவில்லை போலும். தான் செல்லும் பேருந்து வந்து சென்றும் அசையாமல் கண்களை திறந்துவைத்தபடியே நின்றிருந்தாள்.

அவளின் அலைபேசியின் அழைப்பின் மூலமாக தான் நிகழ் உலகிற்கு வந்த பூந்தென்றல்,தனது பையிலிருந்து அலைபேசியை எடுத்து பார்க்க அவள் வேலை செய்யும் கடை மேலாளரிடம் இருந்துதான் வந்தது.


அவரின் அழைப்பைக்கண்டதும், வெளிப்படையாக நெற்றியில் அடித்துவிட்டு, தனது கைக்கடிகாரத்தை பார்க்க நேரம் மணி பன்னிரெண்டு என காட்டியது.

நேரத்தை பார்த்ததும் அவளின் தற்போதைய இருந்த மனநிலை முற்றிலும் தொலைந்து ஒரு படபடப்பு தொற்றிக்கொண்டது.

“அய்யோ ஒரு மணிக்குள்ள வந்திரணும் தான் லீவு மேனஜர் கொடுத்தாரு.இப்பவே மணி பண்ணிரென்டு ஆச்சே,கடவுளே!!எனக்கு ஏன் சோதனை” என அவள் மெல்லமாக முணுமுணுக்கும் போது, அடுத்த அழைப்பு மேலாளரிடம் இருந்த வர,

ஒரு பதட்டத்தோடு அலைபேசியை எடுத்து காதில் வைக்க, அந்தபுறம் மேலாளர் கத்திய சத்தத்தில் காதைவிட்டு அலைபேசியை தள்ளி பிடித்துக்கொண்டாள்.

எவ்வாறோ ஒருவழியாக அவரிடம் சமாதானம் பேசி,சீக்கிரம் வருகிறேன் என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்த பூந்தென்றல் பேருந்து வருகிறதா என்று கண்களில் பதட்டத்தோடு நின்றாள்.

பதினைந்து நிமிடங்கள் கடந்தும் பேருந்து வரவில்லை, நேரம் ஆக ஆக பூந்தென்றல் பதட்டம் அதிகரித்தது.

நதியா திருமணத்திற்காக,நேர்முகத்தேர்விற்காக என நிறைய நாள் விடுப்பு எடுத்துவிட்டதால் இனி விடுப்பு எடுத்தால் நிச்சயம் வேலை அங்கில்லை என மேலாளர் எச்சரித்துதான் இன்று அனுமதி கொடுத்தார்.அதுவும் அரைநாள் விடுப்பு தான்.

தற்போது என்ன செய்வது சிந்தித்த பூந்தென்றல், ‘பேசாமல் காசை பார்க்காம ஆட்டோ பிடிச்சு போயிருவோம்.இந்த வேலையும் விட்டுட்டா செலவுக்கு என்ன பண்ண முடியும்.யாரிடம் உதவி கேக்கப்பது’என தனக்குள்ளே யோசித்தவள், பேருந்து நிறுத்துமிடத்தை விட்டு சாலையில் நடக்க தொடங்கினாள்.

அவளிற்கு இருந்த பதட்டத்தில் ஓட்டம் நடையுமாக சாலையில் நடந்துக்கொண்டே ஆட்டோ ஏதும் கிடைக்கிறதா பார்த்தாள்.

அவளின் கெட்டநேரம் அந்த சாலையில் கடுமையான வாகன நெருக்கடி என்பதால் ஆட்டோ ஒன்றுக்கூட கிடைக்கவில்லை.

நடந்து சாலையை கடந்து அடுத்த சாலைக்கு வந்தவளுக்கு தூரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதைக்கண்டதும் மனதுக்குள் கடவுளிடம் நன்றி கூறிவிட்டு ஓடினாள்.

நல்லவேளையாக ஆட்டோவில் ஓட்டுநர் இருக்க அவரிடம் தான் செல்லும் இடத்தை கூறி கொஞ்சம் பேரம்பேசிவிட்டு ஆட்டோவில் ஏறினாள்.

பூந்தென்றலுக்கு கடை தோழி பத்மாவிடமிருந்து அழைப்பு வர எடுத்து காதில் வைத்தாள்.

“எங்க இருக்க பூவு?”
“இதோ வந்துட்டே இருக்கேன் அக்கா,அதுக்குள்ள மேனஜர் கால் பண்ணி திட்டிட்டாரு” என சற்று வருத்தமாக சொன்னாள்.

“அந்த சொட்டை மண்டைக்கு என்ன வேலை.நீ வரலைனா கடையில் ஒரு வேலை நடக்காத. சரியா ஜொள்ளு வழிச்சான் அதைவிடு போன விஷயம் என்னாச்சு?”

“கதைக்கு ஆகலை அக்கா”

“இதுவுமா சரி சுணங்கிக்கிட்டு இருக்காதா பார்த்து வா.நான் வச்சுறேன்”என பத்மா இவளுக்கு ஆறுதலாக கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க, பூந்தென்றலிடம் பெருமூச்சு வெளிப்பட்டது.

அகல சாலைகளில் இருந்து கிளைத்தெரு வழியாக நுழைந்த ஆட்டோ சட்டென்று திடீர் குலுக்களோடு நின்றது. அந்த அதிர்வில் பூந்தென்றல் தடுமாறி ஆட்டோ கம்பியை ஆதரவுக்காக பற்றிக்கொண்டாள்.
“என்னாச்சு அண்ணா,ஏன் சொல்லாம இப்படி நிறுத்தினீங்க?” என்றவளுக்கு,

“நடு வீதியில் ஒருத்தன் பைக்கோட விழுந்துகெடக்கான் சாவு கிராக்கி. குடி கபோதிகளனால ஒழுங்கா ஆட்டோ கூட ஓட்ட முடியல”என்றவனின் பேச்சை கேட்டவாறு, ஆட்டோவிலிருந்து இறங்கி சென்று பார்த்தாள்.

வீதியின் நடு பகுதியில் வண்டியோடு இடதுபுறமாக சரிந்து கிடந்தான் ஒருவன்.

அவனின் இடது கால்மேல் தான் வண்டிபாரம் கிடந்தது. இடதுபுற நெற்றியில் சாலையிலுள்ள கல் ஒன்று குத்தி ரத்தம் கசிந்தது. அவனின் நிலையைப்பார்த்த பூந்தென்றலுக்கு குடித்துவிட்டு கிடப்பதுபோன்று இல்லை.

உடனே அருகில் சென்று அவனின் வெறுமையான முகத்தை பார்த்தவள் திரும்பி, “அண்ணா குடிச்சிட்டு கிடக்க போல இல்ல.கொஞ்சம் பாருங்களேன்” என்றவளுக்கு,

“நமக்கு ஏன்மா வம்பு,நீ சீக்கிரம் போகணும் சொன்ன” என சலிப்பாக பதிலளிக்கும் போது அந்தபுறம் வண்டியில் வந்த இரு இளைஞர்களை நிறுத்தி அவர்களிடம் உதவி கேட்டாள்.

அதில் ஒருவன் விழுந்து கிடந்தவன் அருகில் சென்று பார்த்துவிட்டு பூந்தென்றலிடம், “சரக்கு ஸ்மெல் கொஞ்சம் கூட வரல,மயங்கி தான் விழுந்துக்கணும்” என்று சொன்னதும், ஆட்டோக்காரர் சென்று அவனை பிடித்துக்கொள்ள இரு இளைஞர்களும் சேர்ந்து வண்டியை நகர்த்த, அப்போது அவன் “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்”என வலியில் முகம் சுளித்தான்.

அவன் வண்டியின் கம்பி அவனின் இடது தொடையில் குத்தி காயம்ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

உடனே பூந்தென்றல் தனது கைக்குட்டை ஒன்றை கொடுத்து ரத்தம் வந்த இடத்தை இறுக்கி கட்டி ஆட்டோவில் ஏற்ற சொன்னாள்.

அதன்படி அவனை மூவரும் ஆட்டோவில் ஏற்ற,பூந்தென்றல் அங்கு அவன் கால்சட்டையில் விழுந்த பர்ஸ் மற்றும் அலைபேசியை எடுத்து பத்திரப்படுத்தி கொண்டாள்.

“சரி வாமா ஹாஸ்பிடல் போய் சேர்த்துட்டு நம்ம கிளம்புவோம்” ஆட்டோக்காரர் கூற தலையசைத்தவள் கிளம்ப எத்தனிக்கும் போது தான் அடிப்பட்டவனின் வண்டியை ,

அந்த இரு இளைஞரிடம் கொண்டுவந்து மருத்துவமனையில் நிறுத்துமாறு கேட்டுக்கொள்ள,சரியென்று அவர்களில் ஒருவன் வண்டியை எடுத்தான்.

“அண்ணா பக்கத்திலுள்ள ஹாஸ்பிடல் சீக்கிரம் போங்க”என ஆட்டோக்காரரை அவசரபடுத்தியவாறு, ஆட்டோவில் சாய்ந்துபடியே மயக்கத்தில் இருப்பவனை கண்டாள்.

அவன் நெற்றியில் இருந்தும் ரத்தம் கசிய,தனது பையிலிருந்த இன்னொரு கைக்குட்டை எடுத்து கட்டிவிட்டாள்.
சிறிது நிமிடத்தில் மருத்துவமனையில் அடிப்பட்டவனை சேர்த்துவிட்டு,அவன் அறைக்கு வெளியே பூந்தென்றலும் ஆட்டோக்காரரும் காத்திருக்க வண்டியை மருத்துவமனையில் நிறுத்திய இளைஞர்கள் சாவியை பூந்தென்றலிடம் கொடுத்தனர்.

அவர்கள் உதவிக்கு பூந்தென்றல் நன்றி கூறினாள். அதன்பின்னர், அவர்கள் இருவரும் கிளம்பிய அடுத்தநொடியே வேலை இருக்கு என்று ஆட்டோக்காரரும் கிளம்பிவிட்டார்.

அடிப்பட்டவனை பரிசோதித்த மருத்துவர் பூந்தென்றலை அழைப்பதாக செவிலியர் அறைக்குள் அழைக்க, அவளும் உள்ளே சென்றாள்.

அங்கு அடிப்பட்டவன் படுத்திருக்க அவனருகில் நின்ற மருத்துவர் பூந்தென்றலை நோக்கி “நீங்க தான் பேசண்ட் அட்டெண்ட்டரா?”என்ற கேள்விக்கு, பூந்தென்றல் ஆமாம் என முழித்தவாறே தலையசைத்தாள்.

“என்னாச்சு டாக்டர்?”என தயங்கியபடியே கேக்க,

“டூ த்ரீ டேஸ் சரியா சாப்பிடல அண்ட் ஓவர் ஸ்ட்ரெஸ் டிப்ரெஸ்ஸன் அதுனால தான் மயங்கி விழுந்துக்காரு. வண்டி ஓட்டும்போது விழுந்தனால கால் தலையில அடிபட்டு இருக்கு.நத்திங் சீரியஸ்” என கூறிய மருத்துவர் அருகிலிருந்த செவிலியரிடம் ,

“சிஸ்டர் இவரோட டீடெயில்ஸ் வாங்கி அட்மிஷன் போட்டுருங்க.காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு ட்ரிப்ஸ் போட்டுருங்க அவர் எழுந்ததும் சொல்லுங்க”என மருத்துவர் அங்கிருந்து செல்ல பூந்தென்றலும் அறைக்கு வெளியே வந்து நின்றுக்கொண்டாள்.

அடிப்பட்டவனுக்கு ஒன்றுமில்லை என்றதும் அப்பாடா என்று மூச்சிவிட்ட பூந்தென்றல் தனது கைகடிகாரத்தை பார்க்க மணி 12.45 ஆனது.

மணியைக்கண்டதும் அவளின் விழிகள் தெறித்துவிடும் அளவுக்கு அதிர்ச்சியில் விரிந்தது.

“ஆத்தி மணி ஆக போகுதே என்ன பண்ண” என நெஞ்சில் கைவைத்து புலம்பிக்கொண்டு இருக்கும்போது,அறையைவிட்டு வெளிய வந்த செவிலியர் இவளிடம் அடிப்பட்டவனின் விபரம் கேக்க இவளோ முழித்தவாறே கையை பிசைந்தாள்.

“என்னமா சொல்லு சீக்கிரம் எனக்கு வேலை இருக்கு”
“அக்கா எனக்கு அவர் யாருன்னு தெரியாது”
“அப்போ டாக்டர் கேட்டப்பா சொல்ல வேண்டியது தானே”
“அட்டெண்டெடர் யாரு தானே கேட்டாரு,என்ன ரிலேஷன் என்னன்னு கேக்கலையே”
இந்த பெண் சரியாக தானே சொல்கிறாள் எண்ணிய செவிலியர், “அது டாக்டர் மயக்கம் தானே அதான் கேக்கல.வேற கேஸ் பார்க்க அவசரத்துல போயிட்டாரு”

“சரி அக்கா இப்போ என்ன பண்ணுறது”

“அந்த பையன் போன் இருந்தா யாருக்கும் கால் பண்ணி கேளு”

“அவர் பர்ஸ் போன் என்கிட்ட தான் இருக்கு.ஆனால் போன்ல பட்டர்ன் போட்டு லாக் பண்ணி இருக்காரு” என்றவள் தனது கைகடிகாரத்தை ஒருமுறை பார்த்துவிட்டு,

“அக்கா எனக்கு வேலைக்கு நேரமாச்சு,நீங்களே அவர் எழுந்ததும் கேட்டுக்கோங்க நான் கிளம்புறேன்” என பவ்வியமாக கேட்டவளுக்கு,

“என்ன பா விளையாடுரியா,அட்மிஷன் போடாம அட்மின் பண்ண மாட்டோம் நாங்க. அவசரம்னு நீ கெஞ்சி கேக்கவும் தான் அந்த பையனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு இருக்கோம்.இப்போ டாக்டர்க்கிட்ட நீ சரியா உண்மையை சொல்லவுமில்ல, இப்போ கிளம்புறேன் சொல்லுற”வெடுக்கென்று செவிலியர் பதிலளித்தாள்.

“அக்கா” என பூந்தென்றல் கெஞ்ச,

“முடியாது ஒழுங்கா அந்த பையன் முழிக்குற வர இங்கதான் இருக்கணும் சொல்லிட்டேன்”கண்டிப்பான செவிலியர் கூறியதும், பூந்தென்றல் உதட்டை பிதுக்கி முகத்தை சுருக்கினாள்.

பின்பு, ஏனோ நினைவு வந்தவளாக அவனின் பர்ஸயை பிரித்து பார்த்தாள்.

அதில் அவனின் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை,பணம் கார்டு இருந்தது.


அதிலுள்ள ஆதார் அடையாள அட்டையை எடுத்து அவனின் பெயரினை பார்த்தவளின் இதழ்கள் அமுதத்தமிழன் என உச்சரித்தது.

அதேநேரம் சரியாக அவனின் அலைபேசி ஒலித்தது.
பூந்தென்றல் எடுத்து அலைபேசியின் முகத்திரையில் பார்க்க ஆப்பிள் என்று பெயரில் தான் அழைப்பு வந்துக்கொண்டிருந்தது.

இவளும் எடுத்து ஹலோ என்று சொன்னதும் மறுமுனையில் சிறிது அமைதிக்கு பின்னர் பேசினர்.

பூந்தென்றல் நடந்தவற்றை கூறி தான் செல்லவேண்டும் வேலை இருக்கிறது என தன் நிலைமையை மேலோட்டமாக கூறினாள்.

மறுபுறம் பேசியவருக்கு இவள் சரி சரி என்று பதிலளித்துவிட்டு, அலைபேசியை வைத்தவளிடம் செவிலியர் கேள்வி கேட்டாள்.

“அக்கா அவரோட பிரண்ட் தான் பேசுனாங்க. அவங்க இப்போ வராங்க அதுனால என்னை கிளம்ப சொல்லிட்டாங்க.நான் அவரோட திங்ஸ் எல்லாம் தரேன் நீங்க கொடுத்துருங்க ப்ளீஸ்”என செவிலியரிடம் கூறிவிட்ட பூந்தென்றல் அறை கதவை திறந்து உள்ளே படுத்திருந்தவனை ஒருநிமிடம் பார்த்துவிட்டு கிளம்பினாள்.

மருத்துவமனைக்கு வெளியே வந்து மணியை பார்க்க ஒன்றை தாண்டி இருந்தது.
‘சமாளிச்சு தான் ஆகணும்’என மனதை தைரியப்படுத்தியவாறே அங்கு நின்றிருந்த ஆட்டோவில் ஏறி சென்றாள்.

பூந்தென்றல் கிளம்பிய அரைமணி நேரம் கடந்த பிறகு, மருத்துவமனை முன்பு கார் ஒன்று நின்றது.

கார் பின்பக்கத்தில் இருந்து இறங்கிய ஒருவன் வேகமாக உள்ளே ஓடினான்.

ஆறடி உயரமும் முறுக்கேறிய தசைகோளங்கள் ஏன் அவனின் முடி திருத்தம் என கிட்டத்தட்ட ராணுவ வீரன் போன்று இருந்தவன் வேகத்தில் நடந்துவருவதே ஒடுவதுபோல தெரிந்தது.


நேராக அமுதத்தமிழன் (தமிழ் என்றே வைத்துக்கொள்வோம்) அனுமதிபட்டிருந்த அறையை விசாரித்து,அவன் அறை கதவை படார் என்ற வேகத்தோடு திறந்தான் ருத்ரன்.


இவன் கதவை திறந்த சத்தத்தில் உள்ளிருந்த செவிலியரே சற்று மிரண்டுவிட்டாள் என்றால் அவன் தோற்றத்தைக்கண்டு பயபந்து உருண்டது அவளுக்கு.

இருந்தும் வரவழைத்த தைரியத்தோடு, “சார் இது…இதுயென் .ன உங்க வீடா.ஹாஸ்பிடல் இப்படி கதவை உடைக்குற போல திறக்குறீங்க” என்ற செவிலியர் கேள்விக்கு,
திமிராக வாயில் சுவிங்கம் மென்றபடியே உள்ளே வந்து “எப்போ எழுவான்”என கண்களால் அமுதத்தமிழனை காட்டி கேட்டான்.

அதற்கு முகத்தை சுருக்கிய செவிலியர், “எழுற நேரம் தான்”கூறிவிட்டு தனது வேலையை பார்க்க,

தமிழன் மெதுவாக கண்களை திறந்தான்.
அவன் சாலையில் மயங்கி வண்டியோடு விழுந்தாலும் முழுவதுமாக மயக்கத்தில் செல்லவில்லை. அவனின் அரை மயக்கத்தில் ஒரு பெண் தனக்காக பேசி இங்கு அனுமதித்தது வரை காதில் விழுந்தது.

அதனால் அவன் கண் திறந்ததும் தனக்கு உதவி செய்த பெண்ணை தான் முதலில் தேடினான். ஆனால் அவனின் கண்களுக்கு அவளுக்கு பதிலாக முரடன் நிற்பதைக்கண்டவன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்.

தமிழ் கண் திறந்ததும் கண்களை சுழற்றி தேடுவதும் பின்பு தன்னைக்கண்டதும் மூடுவதையும் கண்ட ருத்ரன் அவன் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்தவாறே அவனை குறுகுறுவென்று பார்த்தான்.

“இப்போ நான் என்ன வயசுக்கு வந்துட்டேனா இப்படி பார்த்துட்டே இருக்க” என கண்கள் மூடியபடியே தமிழ் கடுப்போடு வினவ,

“அச்சோ உனக்கு நினைவு இருக்கா,நான் கூட நீ கோமாக்கு போய்ட்டு வந்துட்டு இருக்கியா நினைச்சேன் அமுல்பேபி” நக்கல் தொனிந்த குரலில் சொன்னான் ருத்ரன்.

அதற்கு தமிழ் பட்டென்று கண் திறக்க,
“என்ன மச்சி ஏதோ மயங்கி விழுந்துட்டேன் சொன்னாங்க.நான் கூட ரொம்ப வாரிக்கிட்டியோ நினைச்சேன். கம்மியா தான் இருக்கு அடியெல்லாம்”கூறிவிட்டு ருத்ரன் சத்தமாக சிரிக்க, தமிழோ இது எதிர்பார்த்தது போல அமைதியாக இருந்தான்.

சிரித்துக்கொண்டிருந்த ருத்ரன் கண்கள் இடுங்க தமிழை தற்போது முறைக்க,அவனோ அசராமல் இவனை தான் பார்த்தான்.

தமிழின் இடது தொடையில் அடிபட்டது என்பதால் அந்த காலின் பாண்ட்யை பாதியோடு வெட்டி மருந்திட்டு கட்டு போட்டிருக்க,அவனின் பாண்ட்யை தான் பார்த்து முறைத்தான் ருத்ரன்.

“ஏன்டா எருமை என்னோட பாண்ட்யை போட்டுட்டு வந்தியா,அடேய் என்னடா எங்க என்னோட பாதி பாண்ட் காணாம்”
அதற்கு தமிழ் பதில் சொல்லுமுன், “ஆ விசா எடுத்து துபாய்க்கு போயிருச்சு எருமை மாடு”என கடுகடுவென முகத்தை வைத்தபடியே வந்தாள் ஓவியா.

இருவரையும் கண்ட தமிழ் நிம்மதி போச்சே என்று ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டபடியே அந்த அறையில் நின்றிருந்த செவிலியரை பாவமாக பார்த்தான்.

செவிலியரோ மூவரையும் புரியாத புதிராக பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏய் பீட்ரூட் கொழுப்பா டி,என்னோட பேவரைட் பாண்ட்.அதை இந்த பன்னாடை போட்டுவந்தா மயங்கி விழுவான்”

“தடியா, அவனே பாவம் அடிபட்டு கிடக்கான்.நீ என்ன னா பாண்ட்னு சொல்லிட்டு இருக்க”என்றபடியே தமிழ் அருகில் சென்ற ஓவியா அவனின் காயத்தைக்கண்டு பொய்யாக வருத்தப்பட்டப்படியே,

“இப்படியா டா போய் விழுவ,கவனமா பார்த்து விழுக வேணாம்.இப்போ பாரு ஹாஸ்பிடல் செலவு வேற”

ஓவியா கூற்றில் தமிழ் அவளை முறைக்க,

“என்ன முறைப்பு,போன வாரம் பிரியாணி வாங்கி தான்னு கேட்டேன். வாங்கி கொடுத்தியா டா அதான் உனக்கு நல்லா வேணும்” அவனுக்கு பழிப்பு காட்டி ஓவியா சிரிக்க,தமிழோ மானசீகமாக நெற்றியில் அடித்துக்கொண்டான்.


அங்கிருந்த செவிலியரோ ஓவியா பேச்சைக்கேட்டு அதிர்ந்து நின்றாள்.

“வாயை மூடிட்டு போடி முதல, பிரியாணி கோரியணி னு”ருத்ரன் ஓவியாவின் கையை பிடித்து அந்தபுறம் இழுத்துவிட்டு தமிழின் முகத்தின் அருகில் குனிந்து,

“மச்சி ஒழுங்கு மரியாதையா என் பாண்ட்யை கொலை பண்ணத்துக்கு பதில் செய்யற. இல்லை மவனே” என ருத்ரன் இழுக்க,

“சீ நாயே பக்கத்துல வராத நாறுது, இப்போ என்ன காசு வேணும் அவ்வளவுதானே” என்ற தமிழ், கடுப்போடு செவிலியரிடம் தனது பர்ஸயை கேட்டான்.

அவரும் பூந்தென்றல் கொடுத்த அவனின் பொருட்களை கொடுத்துவிட்டு, “தம்பி கேக்குறேன் தப்பா நினைக்க வேணாம்.யாரு இவங்க” தன் மனதில் அறித்தவற்றை கேட்டுவிட்டாள்.

பின்ன ஓவியாவும் ருத்ரன் பேசும் பேச்சை கேக்க முடியலவில்லை.

செவிலியர் கேள்விக்கு ருத்ரன் அருகில் நின்ற ஓவியா தோள்மேல் கையைப்போட்டு, “உயிர் தோழர்கள்”என ஒற்றை புருவத்தை தூக்கியப்படியே கர்வமாக சொன்னான்.

“என்னது பிரின்ட்ஸ் ஆ!” செவிலியர் வாயை பிளந்தாள்.

இதனைக்கண்டு தமிழ் உட்பட மூவரின் இதழ்களும் புன்னகைத்தது.

செவிலியர் அதே அதிர்ச்சி குறையாமல் தமிழை பார்த்து, “தம்பி நானும் எவ்வளவு பேசண்ட் பார்க்க பிரின்ட்ஸ் வந்து அழுது கத்தி பார்த்து இருக்கேன்.இப்படி பாண்ட் போச்சு பிரியாணி வாங்கி தரல சண்டை போடுற பிரின்ட்ஸ் இப்போ தான் பார்க்குறேன்” பரிதாபமாக கூறினாள்.

“தெர்மாகோல் போட்ட கடலில் தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க சிஸ்,அப்படி ஒரு சாபம்” தமிழ் சொன்னதும்,

“என்னது சாபமா?” ஓவியா பொங்க,

“இரு பீட்ருட், ஐயாவுக்கு சாபமா வரமானு பிசிக்கல் டெஸ்ட் வச்சு கேட்டுருவோம்”என ருத்ரன் கையை முறுக்கிக்கொண்டு தமிழ் அருகில் வர,அவனோ சற்று அஞ்சாமல் பார்த்தான்.

“சார் போங்க பின்னாடி, அவருக்கு அடிபட்டு இருக்குனு பார்க்காம அடிக்க போறீங்க”ருத்ரன் விளையாட்டுத்தனம் புரியாமல் செவிலியர் அதட்டினாள்.

“ஓகே ஒகே”ருத்ரன் சிறுபிள்ளை போல சொல்லிக்கொள்ள,

தமிழோ சன்னமாக சிரித்துவிட்டு, செவிலியரிடம், “சிஸ் என்னை இங்க சேர்ந்த பொண்ணு எங்க?”என்றவனுக்கு,

“என்னது பொண்ணா!”ஓவியா அதிர்ச்சியாக வாயில் கைவைக்க,அவளை தமிழ் முறைத்த முறைப்பில் இளித்துவிட்டு வாயை மூடிக்கொண்டாள்.

தமிழிடம் செவிலியர், “அந்த பொண்ணுக்கு அவரச வேலைன்னு கிளம்பிருச்சு.உங்க பர்ஸ் போன் அப்புறம் உங்க பைக் வெளியே தான் நிக்குது அதோட சாவி”என்று கொடுத்துவிட்டு செவிலியர் செல்ல எத்தனிக்க,

தனது வண்டி சாவியை வலதுகையில் வாங்கிய தமிழ், “சிஸ் அந்த பொண்ணு பெயர்?” என்றவனுக்கு, தெரியாது என தலையசைத்துவிட்டு சென்றாள்.

ஆட்டோவில் அவள் தனக்கு துணிவைத்து கட்டியபோது லேசாக கண்திறந்து பார்த்தான்.

அரைமயக்கத்தில் அவளின் முகம் சரியாக தெரியவில்லை என யோசித்தப்படியே தனது நெற்றியை தொட்டு பார்த்தான் அமுதத்தமிழன்.
 
  • Like
Reactions: Avj

T 24

Well-known member
Staff member
Wonderland writer
இங்கு மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் கிளம்பிய பூந்தென்றல் அரைமணிநேரத்தில் தான் வேலைபார்க்கும் கடைக்கு வந்துவிட்டாள்.

நேராக கடையிலுள்ள சிறு குடோனில் இவளுடைய பையை வைத்துவிட்டு,தான் அணிந்திருக்கும் சுடிதார் மேல் கடையின் யூனிப்பார்ம் ஆன கடையின் பெயர் பதிக்கப்பட்டு இருக்கும் நீல நிற கோர்ட் போன்ற ஒன்றை அணிந்துக்கொண்டு வெளியே வர,அவளை மேலாளர் அழைப்பதாக ஒரு பெண் கூறினாள்.

பூந்தென்றல் பயத்தில் சற்று எச்சிலை கூட்டி விழுங்கியபடியே, மேலாளர் அறைக்கு சென்றாள்.

கடையின் மேல்தளத்திலுள்ள மேலாளர் அறைக்கதவை திறந்துக்கொண்டு பூந்தென்றல் உள்ளே செல்ல,அறை வெறுமையாக காட்சியளித்தது.

வெறுமையான அறையைக்கண்டு பூந்தென்றல் முழித்தது ஒரு நொடி தான்,அடுத்தநொடியே அவளின் கழுத்தில் விழுந்த சூடான மூச்சுகாற்றில் உடல் ஒருமுறை தூக்கிபோட்டவாறே அதிர்ந்து திரும்பியபடியே இரு அடிகள் பின்னே வைத்தாள்.

அவளுக்கு முன்னே அவளை தாப பார்வை பார்த்தவாறே நின்ற மேலாளரைக்கண்டதும் பூந்தென்றல் உடலே அருவருத்து போனது.

பயத்தில் வார்த்தைகள் தந்தியடிக்க, “கூ.. ப்.. பி.. டீங்க னு…சொன்னா..ங்க சார்” என்றவளுக்கு,

தனது கையை மேலே உயர்த்தி முறுகுவலித்த மேலாளர் ரவி, “எங்க கூப்பிட்டாலும் வருவியா?” என இரு பொருள்பட கூற, பூந்தென்றலுக்கு உடலே நடுங்கியது.


அவள் படித்த கல்லூரியில் கூட காதல் என தொல்லை கொடுத்தவர்கள் தான் உண்டு.அவர்கள் எல்லாரிடமும் பூந்தென்றலுக்காக நதியாவே பேசிவிடுவாள். ஏன்,கடையில் வேலைக்கு சேர்ந்த புதிது முதல் தற்போதுவரை இவளை காதல் என கூறி பின்னாடி திரிபவர்களை நதியா உண்டு இல்லை பண்ணிவிடுவாள்.

ரவியின் பார்வை எல்லைமீறும் போது கூட, நதியா முறைக்கும் முறைப்பில் அடங்கிவிடுவான். இதுநாள்வரை பார்வையிலும் வார்த்தையிலும் சிலநேரம் சில்மிஷம் செய்த ரவி இன்று துணிந்து இறங்கிவிட்டான்.


“சரர்…சா..ரர்”பூந்தென்றல் பதற, அதற்கு சிரித்தபடியே ரவி அவளின் கிட்டவர அவளோ பயத்தில் பின்னே நகர்ந்து சென்றாள்.

ஒருகட்டத்தில் பூந்தென்றல் சுவற்றில் மோதி நிற்க, தனது கையை முன்னே நீட்டி பூந்தென்றல் கன்னத்தை ரவி தடவினான்.

இதுவரை பயத்தோடு இருந்தவள் தன்னை தீண்டவும் உள்ளத்தில் பொங்கிய கோவத்தோடு அவன் கையை தட்டிவிட்டு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் பூந்தென்றல்.

தன்னை அறைந்தவளை ரவி அதிர்ச்சியாக நோக்க, அவனை அனல் பார்வை பார்த்தவாறு தனது ஆட்காட்டி விரலை காட்டி கொண்ணுறுவேன் என எச்சரித்துவிட்டு அறை கதவை திறந்துக்கொண்டு நேராக குடோன் அறைக்கு சென்றாள்.

அறைக்கு சென்றும் அவளின் கோவம் குறையவில்லை. அவளின் ஏறி இறங்கிய நெஞ்சமே கோவத்தின் அளவைக்காட்டியது.

பூந்தென்றல் வந்துவிட்டாள் என அறிந்ததும் வேலைக்கு இடையில் வந்த பத்மா, அறையில் சிலையாக நிற்பவளைக்கண்டு தோள்தொட்டு அழைத்தாள்.


பத்மா அழைத்ததும் அவளை வெறித்து பார்த்த பூந்தென்றல் ஒன்றுமில்லை என கூறிவிட்டு மனவலியை முழுங்கிக்கொண்டு தனது வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.

பத்மாவும் ரவி திட்டிருப்பான் அதனால் இவ்வாறு உள்ளாள் என எண்ணிக்கொண்டு தனது வேலையை தொடர்ந்தாள்.

பூந்தென்றல் கண்களும் கைகளும் இயந்திர கதியாக வேலையை செய்தாலும் மனமோ ரணமாக எரிந்தது.

“ம்ம்ம்”என அவளுக்கு முன்னே வந்து ரவி உரும,அவனை ஈனபிறவி போல பார்த்த மங்கையவள் பெருமூச்சுடன் வேலையை தொடர்ந்தாள்.

பூந்தென்றல் தன்னை அறைந்ததும் வெளியே வந்து பிரச்சனை செய்துவிடுவாள் என ரவி பயந்துவிட்டான்.
அவள் அமைதியாக வேலை செய்வதைக்கண்டதும் அமைதிக்கொண்டான்.

‘பிள்ளை பூச்சி யார் இருக்கா மூதேவிக்குன்னு நினைச்சா என்னையே அடிச்சுட்டில,உன்னை அசிங்கமா போட்டோ எடுத்து கூனி குறுக வைக்கிறேன்’ என அவளை சரியான நேரத்தில் பழி தீர்க்க ரவி துடித்தான்.

நேரங்கள் கடந்தாலும் பூந்தென்றல் நெஞ்சமோ அமைதியடைவில்லை.

பணிநேரம் முடிந்து விடுதி அறைக்கு வந்ததும் மாற்றுஉடை எடுத்துக்கொண்டு முதலில் குளித்து வரலாம் என குளியலறை சென்றாள்.

குளித்தாவது தன் தீட்டு கழியும் என நீண்ட நேரம் தண்ணீரில் நின்றாள்.

சிறிதுநேரத்தில் குளித்து முடித்து வரும்போது அறையில் உள்ளவர்கள் படிப்பதைக்ககண்டதும் ஒன்றும் பேசாமல் நேராக மொட்டை மாடிக்கு சென்று இருளில் அமர்ந்துக்கொண்டு பிறைநிலவை பார்த்தவாறு கண்ணீர் வடித்தாள் பூந்தென்றல்.


இதேநேரம் கணவனோடு உணவு அருந்தி கொண்டிருந்த நதியாவிற்கு புரையேறியது. கண்களில் கண்ணீர் சிந்தும் அளவுக்கு அவள் இறும, அவள் அருகில் இருந்த தனபிரபு பதறி தன் மனைவிக்கு தண்ணீர் குடிக்க கொடுத்து அவளின் முதுகை தடவி ஆசுவாசப்படுத்தினான்.

“பார்த்து சாப்பிடுமா” தன் கணவனின் அக்கறையான செய்கையில் உள்ளம் மகிழ்ந்த நதியா ம்ம்ம் என மீதி உணவை உண்ணத்தொடங்கினாள்.

வாயில் நிறைத்த உணவு தொண்டையில் இறங்கவில்லை நதியாவிற்கு, அவளின் சிந்தனை முழுவதும் இந்த நிமிடம் தோழியே வியாபித்து இருந்தாள்.

‘கண்ணீர் வர அளவுக்கு புரை ஏறுதுனா பூவுக்கு எதும்’என எண்ணி தனக்குள்ளே தவித்தாள்.
 
Top