அத்தியாயம் 03
தாலி கைக்கு வரும் வரைக்கும் தான் ரஜீவனால் இயல்பாக இருக்க முடிந்தது.. மஞ்சள் கயிற்றில் பொற்காசுகளுடன் திருத்தமாக அமைந்திருந்த பொன் தாலி கையில் ஊஞ்சல் ஆடும் போது அவனுக்குள்ளும் ஏதேதோ மாற்றங்கள்.. சிறு நொடிகளில் இது நித்யாவின் கழுத்தில் ஏறி விடும்.. அதன்பின் ஊர் உலகத்திற்கு அவனது உடல் பொருள் ஆவி எல்லாவற்றுக்கும் அவள் உரிமையானவள் அவனின் சரி பாதி.. தொண்டைக்குள் உருண்ட கசப்பை எச்சில் கூட்டி விழுங்கினான். எப்போதும் போல் உணர்வுகளை தனக்குள் புதைத்துக் கொள்ளாமல் உண்மையாக அவற்றை பகிர்ந்து கொண்டிருக்க வேண்டுமோ.. தாயை விழிகளால் நிரப்பினான். வியர்த்து விறுவிறுத்து போய் மகனை கண் கலங்க பார்த்திருந்தார் பூரணி. இதுதான் அவன் விதி என்றால் மாற்ற முடியுமா ஏற்றுக்கொள்ள தானே வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் போலும். ஆச்சரியமாக தாயை ஒட்டி நின்ற ஐங்கரன் முகத்தில் கூட அவ்வளவு அன்பு மகனைத்தான் சந்தோஷமாக பார்த்திருந்தார். ஏதாவது அதிசயத்தை பிரபஞ்சம் நிகழ்த்தட்டும் என்று நினைத்தபடி நித்தியா பக்கம் கொஞ்சமாக திரும்பி தாலியை அவளை நோக்கி உயர்த்தும் போது அவன் மனக்கண் முன் தோன்றிய ஒரு மதி முகத்தை வலுக்கட்டாயமாக தள்ளி விட்டு நித்தியாவை ஏறெடுத்து பார்க்க வியர்வையில் தொப்பலாக நனைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள், கூப்பி இருந்த கைகளில் ஒரு நடுக்கம் வேறு.. பாவம் சும்மாவே தன்னைக் கண்டால் அவளுக்கு உதறும் இனிமேல் அவளின் மீதி வாழ்நாள் முழுவதும் தன்னோடு தான் என்ற போது பயம் வராமல் என்ன வரும்..
மணப்பெண்ணுக்கு வெகு பக்கத்தில் கொண்டு சென்ற தாலியை கட்டாமல் மாப்பிள்ளை தயங்கவும் வள்ளி தான் "ஐயரே மந்திரம் சொல்லுங்க"! என்று ஓங்கி உரத்த குரலில் நினைவு படுத்தினார்.. அவனை கொஞ்சம் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த ஐயரும் சட்டென்று "மாங்கல்யம் தந்துனானே" என்று தொடங்கவும் எங்கிருந்தோ நீண்ட ஒரு கை அந்த தாலியை பறித்து வீசவும் சரியாக இருந்தது.. தாலி கையில் இருந்து பறிக்கப்பட்ட நொடியே வள்ளி "அய்யய்யோ!!" என்று கூச்சலிடவும் விருட்டென்று எழுந்த ரஜீவன் எழுந்த வேகத்தில் அருகில் நின்று தவித்த அந்த இளைஞனின் கன்னத்தை பதம் பார்த்தான்.. நல்ல உலக்கை போன்ற கையால் ஒரு அடி தான் அந்த ஒரு அடிக்கே சுழன்ற படி சென்று ஓம குண்டத்தின் மீது விழப்போனவனை வேகமாக பாய்ந்து நித்தியா தான் காப்பாற்றினாள்..
எல்லோரும் ஆளாளுக்கு கூக்குரல் இடுவதும் வந்தவனையும் ஐங்கரன் குடும்பத்தையும் கேள்வி கேட்பதையும் பார்த்து விட்டு தன்னிடத்தில் இருந்து நைசாக எழுந்த ஐயர் மேடையை விட்டு கீழே இறங்க போக அவரை தடுத்தார் பூரணி.
நடந்த நிகழ்வில் அரண்டு போனார் அதற்காக மகனின் திருமணம் கலைவதை காண முடியாமல் அயிரை தடுத்து நிறுத்தினார்.
"சாமி கீழே இறங்காதீங்க முகூர்த்த நேரம் இறங்கி போகிறீர்களே??" என்றார் வருத்தமாக..
"மனையை விட்டு மாப்பிள்ளை எழுந்தாயிற்று பெண்ணும் எழுந்து விட்டாள் நல்ல நேரமும் போயிடுச்சு பின்ன நான் எழுந்தது மட்டும் குற்றமா முதல்ல உங்க குடும்ப பிரச்சனை எல்லாம் தீர்த்துட்டு என்னை கூப்பிடுங்க.. அடுத்த முகூர்த்தத்துக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு.. இப்ப எங்க கல்யாணம் நடக்க ஏதோ சம்பவம் தான் நடக்க போகுது.. ஏற்கனவே இந்த மாப்பிள்ளை பையனை பார்த்து படபடன்னு வந்துச்சு.. சுட சுட ஒரு டீ குடிச்சா தான் இனி தெம்பா மேற்கொண்டு வேலையை பார்க்க முடியும்.. கூட இருந்தவங்களையே கடிச்சு குதறிக்கிட்டு இருந்தான் யார் பெத்த புள்ளையோ ஒத்தை அடிக்கே இன்னும் எழும்பாம கிடக்கிறான்".. பூரணியிடம் குரலை உயர்த்திப் பேசிக் கொண்டே படி இறங்கியவர் கடைசி வார்த்தைகளை தனக்குள்ளே முணங்கிக் கொண்டு பந்தி நடக்கும் பக்கம் நகர்ந்தார்.. போகும் அவரை தடுக்க வழி இல்லாமல் மேடை பக்கம் திரும்பியவர் ரௌத்திரமாக நின்ற மகனை கண்டு கலங்கினார்..
கீழே விழுந்தவனை நித்தியா பற்றி தூக்கி எழுப்பி விட அவளின் கரிசனத்தை கூர்மையாக பார்த்து இருந்த ரஜீவன் சுற்றி இருந்தோரை அலட்சியப்படுத்திவிட்டு நிதானமாக கைகளை கட்டிக் கொண்டு பேசினான்..
"யார் இவன்?!"
ஆளாளுக்கு வாய்க்கால் தகராறு பண்ணிக் கொண்டிருந்தவர்கள் திடீரென அவர்கள் கூக்குரலை மீறிக்கொண்டு ஒலித்த அவன் குரலில் யாரை கேள்வி கேட்கிறான் என்று பதட்டமாக பார்க்க நித்யா கையை பிசைந்து கொண்டு நின்றாள்..
"உன்னைத் தான் கேட்கிறேன் யார் இவன்??"
"அது வந்து".. மகள் திணறுவதை பார்த்த வள்ளி தானே முன்னால் வந்து
"என்னப்பா நித்யாவை எதுக்கு பயம் காட்டுற மாதிரி பேசுற இந்த பொறுக்கி பையன் யாரோ டேய் யாருடா நீ எதுக்கு எங்க வீட்டு கல்யாணத்துக்குள்ள வந்து பிரச்சனை பண்ணுற யாராவது சொல்லிக் கொடுத்தாங்களா இப்படியெல்லாம் பண்ணச் சொல்லி இந்த காலத்து மனுஷங்களுக்கு பணமும் பகட்டுமா வாழ்ந்தாலே பொறாமை தான், இது என்ன புதுவிதமா காசு வசூலிக்கிற திட்டம் எதுவுமா.. யார் கிட்ட வந்து சதி வேலை எல்லாம் பாக்குற மாப்பிள்ளைக்கு எப்படி கோபம் வந்துச்சு பார்த்தல்ல.. மரியாதையா வெளியே போ இல்லை இங்கு நடக்கிறதே வேற"..
கடைவாயில் ரத்தம் ஒழுக வள்ளியை நிமிர்ந்து பார்த்த அந்த இளைஞன் பயமாகத் திரும்பி ரஜீவனை பார்த்தான்..
வள்ளி குதிக்க தொடங்கவும் சுற்றி நின்றோரும் அந்தப் பையனை மாறி மாறி கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள்.. ஊரே திரண்டு கேள்வி கேட்டாலும் வாயை திறக்காமல் கல்லுளிமங்கன் போல் நின்றவன் பார்வை முழுவதும் நித்தியா மீது தான்.
அவனுக்கு இனிமேல் அவன் என்ன காரணத்தை சொன்னாலும் அது ஒரு சதி திட்டமாகத் தான் பார்க்கப்படுமோ என்று யோசனையாக இருந்தது.. நடந்த குழப்பங்களால் வாயடைத்துப் போயிருந்த ஐங்கரன் கூட தங்கை குதிப்பதை பார்த்து விட்டு ஒருவேளை அப்படித் தானோ ஆனால் இவன் எல்லாம் பிளான் பண்ணி பணம் கேட்க வந்தவன் மாதிரியா இருக்கான்.. சோத்துக்கு செத்தவன் மாதிரி இருக்கும் இவனுக்கு எல்லாம் திட்டம் தீட்ட தெரியுமா??.. நமக்கு யார் எதிரி ஆள் வைத்து ஒரே மகனின் திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு, ஊரைக் கூட்டி பிரம்மாண்டமாக திருமணம் செய்யும் நேரத்தில் என்ன இது அசம்பாவிதம்.. மகன் நிற்கும் தோரணையிலே இனி யார் வாயை கொடுத்தாலும் நார்நாராக கிழித்து விடுவான் என்று தெரிந்தது..
அந்தத் தோரணை சிறிதும் குறையாமல் "நீங்க ரெண்டு பேரும் இப்ப வாயை திறக்க போறீங்களா இல்லையா?" என்று ஒரு அதட்டலை அவன் போட ரஜீவன் போட்டிருக்கும் பட்டு சட்டையை மீறி புடைத்திருக்கும் புஜங்களை திகிலாக பார்த்த அந்த இளைஞன் இதற்கு மேலும் வாயை திறக்காமல் இருந்தால் அவன் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று புரிந்து நடுங்கிய குரலில் தொடங்கினான்..
"சார் இந்த கல்யாணத்தை நிறுத்துங்க சார்!!.."
"ஏன்?.." ரஜீவன் தான் கேட்டான்
"நானும் நித்தியாவும் மூணு வருஷமா காதலிக்கிறோம்.. ஒரு மாசத்துக்கு முன்னாடி பிரேக் அப்னு சொல்லி என்னை விட்டுட்டு போயிட்டாள் ஆனால் மானசீகமாக எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு என்னால அவளை மறக்க முடியல!.."
"பொய் பொய்!" என்று அலறிய வள்ளியை புறக்கணித்து விட்டு
"இதுக்காகவா நான் அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிற.. அதுதான் பிரேக்கப் ஆயிடுச்சே"...
இதை ரஜீவன் சொன்ன போது நம்ப முடியாமல் மூன்று ஜீவன்கள் திகைத்து விட்டது.. முக்கியமாக பூரணியும் கர்ணனும் அருகருகே நின்றிருந்ததால் திகைப்பாக திரும்பி ஆச்சரியமான ஒரு பார்வை பரிமாற்றலை செய்து கொண்டனர்..
தன் காலடியில் விழுந்திருந்த தாலியை பத்திரமாக எடுத்து தன் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டிருந்த அவளுக்கும் இந்த வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வருவது திகைப்புத் தான் நன்றாக நிமிர்ந்து கூட்டத்துக்கு நடுவில் நின்று சொல்வது அவன் தானா என பார்த்திருந்தாள்.. நிச்சயமாக அவனே தான். இந்த ஆளுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா.. நித்தியாவை இழந்து விட கூடாதுனு பேசுறாரா?? அந்த பொண்ணை தான் விரும்புறாரு போலையே.. மின்னல் வேகத்தில் அவள் மனம் எங்கெங்கோ பறந்து விட்டது..
"நான் இன்னும் நித்தியாவை தான் விரும்புகிறேன்! அவள் தான் என் உயிர்.."
"அதனால??"
"என்னப்பா அவனோட பேசிகிட்டு இருக்க.. டேய் எங்க வீட்டு பொண்ண பத்தி என்னடா வாய்க்கு வந்த மாதிரி பேசுற.. முதல்ல காதலிச்சோம்னு சொன்ன அப்புறம் பிரேக் அப் ஆகிடுச்சுன்னு சொல்ற இப்ப மறுபடியும் விரும்பிக்கிட்டு இருக்கேன்னு சொல்ற உன் இஷ்டம் போல நீ பேசிகிட்டு இருப்ப நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு நாங்கள் கதை கேட்கணுமா?" என்று கோபமாக ஐங்கரன் அவனை நெருங்கப் போக தந்தையை கைநீட்டி தடுத்த ரஜீவன்
"நீ காதலிக்கிற பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்க கூடாது அதுக்காகவா இந்த கல்யாணத்தை நிறுத்துன அவள் தான் உன்னை வேணாம்னு ஒதுங்கிட்டானு சொல்றியே!.." என விசாரித்தான்
"மாப்பிள்ளை கண்டவன் பேச்சு எல்லாம் கேட்டுக்கிட்டு என் மகளை பத்தி பேசாதீங்க.. நித்தியா யாரையும் லவ் பண்ணல ஏண்டி கல்லு மாதிரி நிக்கிற வாய தொறந்து சொல்லேன் அத்தான் நான் யாரையும் லவ் பண்ணலன்னு சொல்லு.. எவனோ ரோட்டுல போறவனை கூட்டிட்டு வந்து பேச விட்டு வேடிக்கை பார்த்து கிட்டு இருக்கீங்க என்ன அண்ணா இது என் பெண்ணை குற்றவாளி மாதிரி நிற்க வைத்து மாப்பிள்ளை கேள்வி கேட்கிறாரு தடுக்காம சும்மா நிக்கிறீங்க யார் இவன் என் பொண்ண பத்தி தப்பா பேசிகிட்டு இருக்கான் முதல்ல போலீசுக்கு கால் பண்ணுங்க அவங்க வந்து நாலு தட்டு தட்டி இவன கூட்டிக் கிட்டு போகட்டும்!.." வந்தவன் மேல் இருந்த கோபத்தை விட ரஜீவன் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்பதே அவரை கடுப்பாக்கியது.. உரிமையில் எப்போதும் போல அவனே இவனே என பேச முடியாமல் மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று குழைவது வேறு கஷ்டமாக இருக்க வார்த்தைகளை கவனமாக விட்டுக் கொண்டிருந்தார்..
"கொஞ்சம் பொறுமையா இரு வள்ளி
பொம்பள புள்ள விஷயம் எடுத்த உடனே போலீச கூப்பிட சொல்ற.. அதுதான் ரஜீவன் கேள்வி கேட்கிறானே!"
"அது தானே பிரச்சனை!!" என்று தனக்குள் முணங்கிக் கொண்ட வள்ளி மறுபடியும் கோபமாக ஏதோ தொடங்கவும் அவரை ஒரு பார்வை பார்த்த ரஜீவனை கண்டு கப்சிப் என்று அடங்கிப் போனார்
"நீ சொல்றதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு?.." என்றான் அந்த இளைஞனை நேராக பார்த்து
இப்போது பூரணிக்கே மகன் கேள்வி கேட்பது சங்கடமாக இருந்தது.. சரியோ பிழையோ இப்படி மண்டபத்தில் ஊரே பார்க்க நாத்தனார் மகளாய் இருந்தாலும் என்னை மதிக்காத பெண்ணாக இருந்தாலும் அவளை காதலிப்பதாக சொல்லும் ஒருவனிடம் மகன் அது சம்பந்தமான ஆதாரங்களை கேட்பது சரியாக படவில்லை..
"ரஜீவ் நாம அந்த ரூம்ல போய் பேசலாமே" என்றார் பொறுப்பாக ஐங்கரனுக்கு கூட மனைவியின் மன ஓட்டம் புரிந்தது நன்றியுடன் அவரை திரும்பிப் பார்த்து விட்டு அவரும் மகனிடம் அதே வேண்டுகோளை வைக்க
தாயை முறைப்பாக பார்த்து விட்டு
"இருக்கட்டும் அம்மா அது தான் இவ்வளவு தூரம் ஊர் அறிய எல்லா பேச்சுக்களும் நடந்து விட்டதே.. இனி என்னத்த காப்பாத்த ஒளிச்சு மறைச்சு பேசணும் இவ்வளவு பேர் முன்னாடி தைரியமாக வந்து தாலியை பறித்து வீசுறதுனா இது எல்லாம் பணத்துக்காக பண்றது மாதிரியா இருக்கு?? அதுக்கு அடுத்தது நம்ம என்ன கோடீஸ்வரர்களா உட்பூசல்களை மறைக்க கோடி கோடியா தண்டம் அழுக, பணத்துக்காக வந்திருந்தால் இப்படி ஊரே கூடி நிற்கும் போது வரமாட்டான் பொய்யான குற்றச்சாட்டோட ஆதாரம் இல்லாம இறங்கினால் தர்ம அடி விழும்னு அவனுக்கே தெரியும்.. நைட்டோட நைட்டா அப்பாவிடமோ என்னிடமோ வந்து பேசி இருப்பான் அவன் பக்கம் ஏதோ உண்மை இருப்பதால் தானே அசராம நிக்கிறான் அவனை பேச விடுங்க அவன் பக்க நியாயத்தை பேசட்டும் அவனுக்கு வேண்டியது பணம் கிடையாது!.." என்க
"ஆமா சார் நித்தியா என் உயிர்"
"உன் உயிர் என்னை கல்யாணம் செய்வது பிடிக்காமலா இப்படி பண்ண, இல்லை பணம் எதிர்பாக்குறியா??"
"இல்லை சார் எனக்கு பணம் வேணாம் எனக்கு நித்தியா வேணும் நித்தியா வயித்துல வளர்ற என் குழந்தை வேணும்" என்றான் திடமாக
"உங்ககிட்ட ஒரு உயிரை கேட்கல எனக்கு சொந்தமான இரண்டு உயிரை கேட்கிறேன். கொடுத்துடுங்க சார்" அத்தனை பேர் முன்னிலையிலும் கூனிக்குறுகி நின்றவன் திடீரென ரஜீவன் முன் மண்டியிட்டு கைகூப்பி கண்ணீர் வடித்தான்.
காதலுக்காக மட்டும் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று இலகுவாக இருந்த ரஜீவன் கூட குழந்தை என்றதும் அதிர்ந்து போய் விட்டான்.. உண்மையாக காதலித்து விட்டு அந்தப் பெண்ணை இழக்க முடியாமல் இப்படி செய்கிறான் என்று யோசித்து இருந்தவனுக்கு அந்த இளைஞன் கண்ணீர் குரலில் குழந்தை வேண்டும் என்றதும் அத்தை போடும் கூச்சலோ அப்பாவின் திகைப்போ தாயின் தவிப்போ எதுவுமே பார்வையில் படவில்லை.. கோபம் கண்ணை மறைக்க கழுத்தில் இருந்த மாலையை தூக்கி தூர போட்டு விட்டு வேகமாக முன்னேறி தலை குனிந்து அழுது கொண்டிருந்த நித்தியாவுக்கு விட்டான் ஒரு அறை..
அத்துணை சலசலப்பிலும் அவன் அடித்த அடியின் எதிரொலி மண்டபம் முழுவதும் கேட்க அவ்வளவு தான் நித்தியா "மன்னிச்சிடுங்க அத்தான்!" என்று அப்படியே விழுந்து கதறி தீர்த்து விட்டாள்..
"ச்ச்சீ!.." என்று ஒரு வார்த்தையோடு கையை உதறிக் கொண்டே பின்னடைந்தவன் மேடையை விட்டு வேகமாக இறங்கி மணமகன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்..
இப்போது நெஞ்சு வலி வருவது ஐங்கரனின் முறையாக இருந்தது.. நெஞ்சை பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்து விட்டவர் தங்கையை பார்த்த பார்வையில் அவர் கூனி குறுகிப் போய் நின்றார்.. சொந்தங்கள் இப்போது வள்ளி குடும்பத்தை வசைபாட தொடங்கியது. இறங்கிப் போன மகனை பின்தொடர்வதற்கு திரும்பிய பூரணி கணவன் சரிவதைக் கண்டு அவரிடம் ஓடி அவரை தாங்கிக்கொள்ள மனைவியின் கரத்தைப் பற்றி கண்ணில் வைத்துக் கொண்டு விம்மினார் ஐங்கரன்
"அவன் மனசை உடைத்து விட்டேனே பூரணி.. தனியா இருந்தாலும் அமைதியா இருந்தாலும் மன நிம்மதியோடு இருந்திருந்தானே ஊர் பார்க்க அவனை எங்க கொண்டு வந்து நிறுத்திட்டேன் பார்த்தியா.. அவனை பார்த்தாலே பெருமையா தானே இருக்கும் யாரைப் பார்த்தாலும் உங்க புள்ள போல வருமானு எவ்வளவு பெருமையா பேசுவாங்க இதுவரைக்கும் நமக்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பானா பெற்றதிலிருந்து பெருமையை மட்டும் தானே தேடி கொடுத்தான்.. கண்டவங்க பேச்சை எல்லாம் கேட்டு நம்ம பிள்ளையை ஊரே கை கொட்டி சிரிக்கிற மாதிரி பண்ணிட்டேனே நானெல்லாம் என்ன தகப்பன்!.. உனக்கும் என் மகனுக்கும் என்னால எவ்வளவு அவமானம்.. நான் இழுத்து விட்டது தானே இது? இந்தப் பாவத்தை எங்க போய் கரைப்பேன். என் புள்ள துடி துடிச்சு போயிட்டானே ஊர் வாய் எல்லாம் நம்ம குடும்பத்தை அவலா மெல்ல போகுது. நான் பாவி பூரணி நான் பாவி!."
"வருத்தப்படாதீங்க நான் அவனிடம் பேசுறேன் அழாதீங்க!.."
"என்னை என்பாட்டில் வாழவிடுங்க என்று சொன்னான் கௌரவமா எல்லோருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்தான் கல்யாணமே வேணாம்னு சொன்னான் கட்டுனா இவளைத்தான் கட்டணும்னு அவன் மனச கரைச்சு அவனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திட்டேன் இனி எப்படி என் புள்ள மணமேடை ஏறுவான் கல்யாணம் வேணாம் வேணாம்னு சொன்னவனை கூட்டிட்டு வந்து கட்டாய கல்யாணம் பண்ண பார்த்து நான் செஞ்ச பிழை தான் இனி எப்பயும் கல்யாணம் நடக்காது போலையே"..
"நம்ம பையன் என்னங்க தப்பு பண்ணான் அவனுக்கு திருமணம் நடக்கும்.. ரொம்ப ரொம்ப சந்தோசமா மனைவி குழந்தை நீடுழி வாழ்வான்"
"என் பிள்ளை வாழ்க்கையை நானே அழிக்க பார்த்திருக்கிறேன் இனிமேல் யார் கிட்ட போய் அவனுக்கு பெண் கேட்பேன் சொல்லு"..
"அது.. நான் சொல்லுறேன்.. கோபப்படாமல் யோசிங்க கண்ணபிரான் அய்யா கிட்ட கேளுங்க.. அவங்க பேத்திய கேளுங்க!.."
"என்ன சொல்லுற நீ.. இப்பவா கீர்த்தனா மகளையா, பெரியவங்க ஒத்துக்குவாங்களா??"
"ஆமா ஜனனியை பெண் கேளுங்க!!"
என்று கணவரிடம் சொன்னவர் அவர் மனதில் தோன்றியவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொண்டார். என்னென்னவோ மனதில் ஓட இது எல்லாம் சரி வருமா என சிந்தித்து கொண்டிருக்கும் போதே ஒரு கிளாஸில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து "இதை குடிங்க அங்கிள்!" என்று நீட்டிய ஜனனியை விழிவிரிய பார்த்தார் ஐங்கரன்...
வாசகர்களுக்கு அன்பு வணக்கம் நெடிய முயற்சிக்குப் பிறகு என்னுடைய நாவலை உங்கள் பார்வைக்கு இந்த தளத்தில் பதிவிடுகிறேன். கதையை வாசித்து உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்தவும் ஈசன் அருளோடு ஞாயிறு முதல் அத்தியாயம் பதிவிடப்படும். ஆரம்பிக்கலாமா??
aadvikapommunovels.com
லைக்குகளும் கருத்துக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது.