ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இதயம் ஒரு கோவில் கதை திரி

Status
Not open for further replies.
இதயம் ஒரு கோவில்

நமசிவாய வாழ்க
🙏
அத்தியாயம் 01


அறைக்கு வெளியில் இவ்வளவு நேரம் கேட்ட சத்தங்கள் ஓய்ந்து ஒரு மயான அமைதி நிலவியது. ஜன்னலுக்கு வெளியில் வானம் இருள் கப்பி இருக்க மேகங்களின் வரி வடிவங்கள் கண்ணுக்கு உறுத்தாமல் புலப்பட்டது... நாளை பௌர்ணமி தான் இன்று நிலவும் முழுதாக தெரிந்தாலும் மங்கிப் போய் பிரகாசம் இல்லாமல் அவனைப் போலவே டல்லடித்தது...
குண்டூசி விழுந்தால் கூட பேரோசையாக கேட்கும் அளவுக்கு அமைதி சுட அந்த அறைக்குள் அவன் காலடி ஓசையை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.. எங்கோ தூரத்தில் நாயோ நரியோ எதுவோ ஊளையிட்டது வேறு அசந்தர்ப்பமாக இடையிட
விடிந்ததும் நல்ல காரியம் நடக்கும் இடத்தை மயானத்தோடு ஒப்பிடுவது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அவன் இருந்த மனநிலை அதை இலகுவாக செய்து கொண்டிருந்தது..இந்த நொடி அவன் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க அழைத்துச் செல்வது போல் காட்சிப்பிழைகள் கூட தோன்றிக் கொண்டிருக்கிறது.. கட்டி இருந்த உயர்தர பட்டு வேட்டி விசுக் விசுக் என்று காற்றிலாட இவ்வளவு நேரம் கால் வலிக்க நடை பயின்றவன் முதல் முறையாக அவன் அமைதியை அவனே வெறுத்தான்.. மண்டபத்தில் மணமகனுக்கென்று ஒதுக்கி இருந்த அறையில் வீற்றிருக்கும் ஆளுயர கண்ணாடியில் தன்னையே ஒரு முறை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டான் ரஜீவன்.. ஆறடி உயரமும் கட்டுமஸ்தான உடலும் மிதமான தாடியும் இயல்பாகவே சிவந்த நிறமும் சதாகாலமும் முகத்தில் ஒரு இறுக்கமும் பளிங்கால் செய்த கிரேக்க சிலை போல் ஜம்மென்று அவன் பிம்பம் கண்ணாடியில் பிரதிபலித்தது..


அவனைக் கடந்து செல்வோர் முதல் கொண்டு அவனுக்குத் தெரிந்தவர்கள் வரை முதல் பார்வையில் அவன் பளீர் அழகில் அசந்து போகும் யாரும் அடுத்த நொடியே நிர்மலமான முகத்துடன் அழுத்தமாக பார்ப்பவனை கண்டு திடுக்கிடலுக்கு ஆளாவார்கள்..

"என்ன பூரணி இவன் இப்படி இருக்கான்.. உன் மகன் சிரிக்கவே மாட்டானா??.." என்று தந்தை ஐங்கரனும்

"என்ன அண்ணா இது யாரையோ பார்க்கிற மாதிரி என்னை பார்க்கிறான் சொந்த அத்தை கிட்ட சிரிச்சு பேசினா முத்தா கொட்டிடும்??.." என அத்தை வள்ளியும்

"எப்ப பார்த்தாலும் என்ன பார்வை அத்தான் இது.. வெட்டவா குத்தவானு சும்மா கலகலன்னு தான் இருங்களேன்!!.." என‌ அத்தை மகள் நித்திய கல்யாணியும்

"ஐயோ இவனா.. நான்லாம் லட்சக்கணக்கு கடன் வாங்கினவன் கிட்ட கூட பயந்து நடுங்கறதில்லை இவனும் இவன் பார்வையும்".. என தனக்குள்ளே பம்மும் மாமா செந்தில் நாதனும்

"அய்யய்யோ இன்ஜினியர் வந்துட்டாரு.. பயங்கர கோபத்தில் வாராரே யாருக்கோ செம டோஸ் விழப் போகுது!!.." என சம்பந்தம் இல்லாமல் புரளியை கிளப்பும் தொழிலாளர்களும்

"எக்ஸ்பிரஷனை மாத்துங்க சார் என்ன சொன்னாலும் சேம் எக்ஸ்பிரஷன் உங்ககிட்ட நார்மலா பேசக் கூட முடியல!!.." என‌ வழியும் அவன் பிஏ ஸ்வேதாவும்

"ஏண்டா எப்ப பார்த்தாலும் முறைச்சிக் கிட்டே இருக்க நார்மலா தான் இரேன்".. எனக் கடியும் நண்பன் கருணாவும்

இப்படி யார் என்ன சொன்னாலும் அவர்கள் இன்னும் அஞ்சும் வகையில் ரௌத்திரமாக முகம் மாறுமே தவிர வாயைத் திறந்து பதில் கூட பேச மாட்டான்..

எது அவனை மாற்றியதோ இயல்பாக இருந்ததை விட இறுக்கமாக இருக்கும் போது அவன் நிம்மதியாக இருப்பதாக உணர்ந்து விட்டதால் அதை கைவிடும் எண்ணமே அவனுக்கு இல்லை.. தேவை என்று நாலு வார்த்தை பேசுவதோடு சரி வீணாக வார்த்தைகளை கூட விடமாட்டான்.. நல்ல படிப்பு நல்ல தொழில் நல்ல வருமானம் வாழ்க்கையில் முன்னேற்றம் அவன் பாட்டுக்கு அவன் வகுத்த பாதையில் சென்று கொண்டு தான் இருக்கிறான்..

ஓயாமல் படிப்பதால் தான் எப்போதும் தனியாக இருக்கிறான் என்று மெச்சிக் கொண்டிருந்த பெற்றோருக்கும் கூட ஒரு கட்டத்துக்கு மேல் ஒரு துறவியைப் போல் திரிபவனை கண்டு வயிற்றில் புளியை கரைத்து விட்டது.. மெதுவாக அவனிடம் ஆரம்பித்த தந்தை அவன் அலட்சியமாக இருப்பதைக் கண்டு விட்டு மனைவியைத் தான் திட்டி தீர்த்தார்.. அவன் அன்னை அன்னப்பூரணி,
பூரணியும் வாயில்லாத பூச்சி போலத் தான் அந்த வீட்டில்
காதலுடன் தொடங்கிய மண வாழ்வு என்றாலும் புகுந்த வீடு அவருக்கு அதிகமாக சங்கடங்களை தான் தந்தது. அதன் பலன் புகுந்த வீட்டினர் அனைவரும் அவரை அடிமையாக நடத்தினர். கணவருக்காக ஆரம்பத்தில் அமைதியாக இருந்தவள் பிறகு மகனுக்காக அதையே இன்று வரை தொடர்கிறார்.

ரஜீவனின் ஒவ்வாமையால் குடும்பமே திணறிக் கொண்டிருந்தபோது பூரணியின் சகவாச தோஷம் தான் நல்லா இருந்த பிள்ளை ‌ எதிலுமே மனம் ஒட்டாமல் வாழ்கிறான் என்று வள்ளியும் தன் பங்குக்கு அண்ணனை உசுப்பி விட வீடு ரணகளமாக மாறிவிட்டது.. ரஜீவனின் தந்தை ஐங்கரனின் பூர்வீக வீடு அது.. ஒற்றைப் படுக்கையறை வீட்டை தன் உழைக்கும் காலத்திலேயே இரண்டு மாடி வீடாக மாற்றி கீழ் வீட்டில் தங்கையை பெற்றோருடன் குடியமர்த்திவிட்டு அவருக்காகவே காத்திருந்த காதலி பூரணியை மனைவியாக மாற்றி இரண்டாம் மாடிக்குக் குடியேறினார்... தாய் தந்தை இறப்புக்கு பின் ‌ தங்கை வள்ளியை அவள் விரும்பிய செந்தில் நாதனுக்கு மனம் முடித்து கீழ் வீட்டையும் அவள் பெயருக்கு எழுதிக் கொடுத்து விட்டார்.. இரண்டு வீட்டுக்கும் பொதுவாக இருந்த மொட்டை மாடியை இரண்டு குடும்பமும் பயன்படுத்திக் கொள்ளும்.. எல்லாம் ரஜீவன் இன்ஜினியராக மாறும் வரை தான் வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடத்தில் மொட்டை மாடியில் இரண்டு படுக்கையறை வீடு ஒன்றை கட்டிக் கொண்டவன் அதிலேயே தங்கவும் தொடங்கி விட ஆரம்பத்தில் பெருமைப்பட்டுக் கொண்ட பூரணியை தவிர்த்து எல்லோரும் ஒரேடியாக ஒதுங்கிக் கொண்டானே இது என்ன தான்தோன்றித்தனம் என்று புகைய தொடங்கி விட்டனர்..

மாற்றி மாற்றி கேள்வி கேட்ட பெரியவர்களை பதிலுக்கு ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வேலையை பார்க்க கிளம்பி விடுவான், வீட்டின் பக்கவாட்டு பக்கம் வள்ளியின் வீட்டோடு ஆரம்பித்து ரஜீவன் பெற்றோரின் வீட்டை கடந்து அவனது தனிக் குடித்தினத்துக்கு படியேறி வரவேண்டும்..நீண்ட படி.. அவன் வேலை முடிந்து திரும்பும் நேரங்களில் இப்போதெல்லாம் படிக்கு அருகில் வந்து காத்திருக்கும் பெரியவர்களை வெளிப்படையாக முறைத்து விட்டு மனதுக்குள் "வீட்டுக்குப் போகும் என்ட்ரன்ஸை அந்தப் பக்கமாக வைத்து இருக்கலாம்".. என தாமதமாக யோசித்தான்.. மாதக் கணக்காக இதுவே தொடர எதற்குமே கலங்காமல் அனைவரையுமே துச்சமாக ஒதுக்கி விட்டு 'சித்தன் போக்கு சிவன் போக்கு' போல் தனித்து நின்றவனை தாயின் கண்ணீர் தான் அசைத்துப் பார்த்தது..
தந்தை குடும்பம் போல் எகிறாமல் தன்மையாக" உனக்கு என்ன பிரச்சனை ரஜீவ் அம்மா கிட்ட சொல்லுடா?" என்று கண்ணீர் விட்ட தாயை ஒதுக்க முடியாமல்

"பிரச்சனை எல்லாம் ஒன்றுமில்லை இப்படி இருப்பது நல்லா இருக்கு அவ்வளவு தான்" என்றதோடு தனக்காக கட்டிய வீட்டில் போய் கதவடைத்துக் கொண்டவனை‌ கண்டு பேந்த பேந்த விழித்த தாயார் இதை எப்படி கணவன் குடும்பத்திடம் சொல்வது என்று தவித்துப் போனார்.

ஏதாவது காரணமாக சொன்னால் கூட அதில் இருந்து மீட்க வழி தேடலாம் காரணமே இல்லாமல் சன்னியாசி போல் திரிபவனை என்ன செய்வது?

பயந்து பயந்து மனைவி சொன்ன விஷயத்தை கேட்ட மறு நொடியில் இருந்து ஐங்கரன் தாம் தூம் என்று குதிக்க கணவன் மனைவி சண்டைக்கும் சம்பந்தமே இல்லாமல் இடை புகுந்த வள்ளி தான் இதுக்கெல்லாம் திருமணம் தான் சரி என்று தீர்ப்பு கொடுத்தார்.. மனைவியிடமும் கலந்து பேசாமல் மகனிடமும் தகவல் சொல்லாமல் தங்கை சொன்ன ஐடியாவை கப் என்று பிடித்துக் கொண்ட ஐங்கரனும் அடுத்த கட்ட வேலைகளில் இறங்க தொடங்கி விட்டார்..

"பையன் கிட்ட ஒரு வார்த்தை" என்று ஆரம்பித்த பூரணி கணவனும் நாத்தனாரும் பார்த்த பார்வையில் பஸ்பமாகாமல் தப்பித்தது கடவுள் செயல் தான்..

இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும் ரஜீவனுக்கு ஏன் யோசிக்காமல் சரி என்று சொல்லி தலையாட்டினேன்.. இதைத் தான் விதி என்பார்களோ இல்லையென்றால் தாய் பாசம் மிஞ்சி விட்டதா??..
முகம் வெளிறி கட்டிலில் பூரணி படுத்திருக்க அவருக்கு இருபுறமும் பிரம்ம ராட்சதர்கள் போல் நின்ற தகப்பனையும் அத்தையையும் ஒரு மார்க்கமாக பார்வையால் அளவிட்ட படி தாயை பார்த்து
"என்ன ஆச்சு??.."என்பவனை ஐங்கரன் எரிப்பது போல் பார்த்தார்.

பெற்ற தாய்க்கு என்னவோ என்ற
பயமில்லை, பதட்டமில்லை‌ 'மணி என்ன??' என்பதை போல சாதாரணமாக கேள்வி கேட்டவனை வேறு நேரமாக இருந்தால் பூரணி கூட வருத்தமாக தான் யோசித்து இருப்பார்..
என்னை பற்றி என் மகனுக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லையா! என எண்ணி எண்ணி கலங்கும் தாயுள்ளம் தான் அவரது. ஆனாலும் இங்கு நடக்கும் காரியமே வேறு என்பதால் இப்படியே மகன் தப்பித்து விடட்டும் என்று நினைத்த படி ஏதோ சொல்ல போக அவரை வேகமாக தடுத்த தந்தை

'அவன் தாய்க்கு நெஞ்சு வலி என்றும் அதுவும் அவனால் தான்' என்றும் கோபமாக கூறினார்..

"நான் என்ன பண்ணேன்?" என்று இன்னும் சாதாரணமாக ஆரம்பித்தவனை பேச விட்டால் காரியம் கெட்டு விடும் என உணர்ந்தாற் போல யாரும் பேச முதல் குறுக்கே பாய்ந்த வள்ளி பக்கம் பக்கமாக பேச ஆரம்பித்து விட்டார்..

வள்ளி மணிக்கணக்காக பேசியதெல்லாம் மண்டையில் ஏறாவிட்டாலும் அவர் பேச்சின் சாராம்சம் ஒன்று தான்
எதிலும் ஈடுபாடு இல்லாமல் ஏனோ தானோ என்று அவன் வாழ்வதால் அவன் பெற்றோருக்கு தாங்க முடியாத மன உளைச்சல் அந்த வருத்தம் தான் அவன் தாயை படுக்கையில் தள்ளி விட்டது.. நாலு பேரை போல் திருமணம் பிள்ளை குட்டி என்று அவன் சந்தோஷமாக வாழ்வதால் மட்டுமே அவர்களையும் சந்தோஷப் படுத்த முடியும்.. விடாமல் பேசும் வள்ளியை நிர்ச்சலனமாக பார்த்த படி நிற்கும் மகனை வினோதமாக ஐங்கரன் பார்க்க வேதனையாக பூரணி பார்த்தார்.. வள்ளி மூச்சு விடாமல் பேசி அவனிடம் ஒரு பதிலும் வராததால் அண்ணனை கேள்வியாக பார்த்தார்.

'இந்த அண்ணா என்ன ஒன்னும் சொல்லாம சும்மா இருக்காரு எவ்வளவு எடுத்து சொன்னேன் இப்ப அவரும் கொஞ்சம் கோபமா பேசினால் தானே அடுத்த காரியம் நான் நினைத்தபடி நடக்கும்' தங்கையின் மன ஓட்டம் புரிந்தது போல அவரும் தன் பங்குக்கு என்னவோ சொல்ல தொடங்கினார்..

யார் பேசுவதும் அவன் காதில் விழவில்லை.. பார்வையை கொஞ்ச நேரம் தாயின் முகத்தில் நிலைக்க விட்டவன்

தந்தையின் குரலில் அவர் பக்கம் திரும்பி தலையை மட்டும் ஆட்டி விட்டு வேகமாக வெளியேறி விட்டான்... இப்போது தான் நிஜமாகவே பூரணிக்கு நெஞ்சு வலித்தது..

"பொண்ணு வேற யாரும் இல்ல நம்ப நித்தியா தான் உனக்கு கல்யாணத்துக்கு சம்மதம் தானே?.." என ஐங்கரன் கூறிக் கொண்டிருக்கும் போது எதை பற்றி யோசித்து தலை ஆட்டினானோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.. அந்த இரவு பூரணி எவ்வளவு நேரம் அழுது கரைந்தார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அன்று அறையை விட்டு வெளியேறிய மகன் இன்று மண்டபத்திற்கு வரும் போது தான் முழுதாக பூரணி கண்ணில் பட்டான்.. சுரத்தே இல்லாமல் யார் திருமணத்துக்கோ வருவது போல் அசட்டையாக உள்ளே வந்தவனை கண்ணீரோடு பார்த்தவர் மனதுக்குள் கடவுளைத் தான் சாடினார்..


ரஜீவனுக்கு பெண் நித்தியா என்று தெரிந்த பின் எந்த பரவசமும் வரவில்லை.. வள்ளி குடும்பத்தில் தான் குதூகலம் எல்லாம் தன் கையை மீறி போய் விட்ட ஒரு செயலுக்காக‌ வருந்துவதெல்லாம் இதுவரை அவன் வாழ்க்கையில் நடந்ததே இல்லை... பெரியவர்கள் கையில் அவன் பிடிபடா விட்டாலும் அவன் அவர்களை அவதானித்துக் கொண்டுதான் இருந்தான்.. முக்கியமாக நெஞ்சு வலி வந்ததாக படுக்கையில் கிடந்த தாயார் இரண்டு வீட்டு வேலைகளையும் செய்வதையும் சேர்த்து தான் பார்த்தான்... அவன் தனிமை தானே இவர்களை வாட்டுகிறது.. ஒரு துணை வந்து விட்டால் சும்மா சும்மா எல்லோரும் அவனை‌ சீண்டிக் கொண்டிருப்பது இனி நடக்காது என்ற‌ நிம்மதி கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரச் செய்து விட்டது.. முக்கியமாக மணப்பெண்ணாக அத்தை மகளை தேர்ந்தெடுத்தது தாயின் புத்திசாலித்தனமான முடிவு என தோன்றியது, அவனை‌ சின்ன வயதில் இருந்து தெரிந்த பெண் தானே அவளை இவன் நினைப்பதை போல் ஆட்டி வைக்கலாம், ரஜீவனை பொறுத்தவரை நித்தியா ஒரு மண்டு.. சரி அவன் திட்டத்தை பற்றி அவனைப் பார்த்துக் கொள்ளட்டும் குறைந்தது திருமண திட்டங்களை பற்றியாவது குடும்பத்துடன் பேசினானா என்றால் அதுவும் இல்லை.. எல்லாம் தந்தையின் விருப்பத்தின் படியே அரங்கேறியது.

போகப்போக மறுபடியும் தனக்கு ஏன் திருமணம் தனியாக இருப்பதே சுகம் என்று தோன்றிக் கொண்டே இருக்கவும் திருமணத்தை நிறுத்த தான் யோசித்தான் ஆனால் யாரிடம் என்ன சொல்லி நிறுத்துவது என்று சிந்தித்து காலம் போய்விட்டது. இப்படி வாய் திறக்காமல் நின்றதால் தான் இப்போது கல்யாணம் மண்டபம் வரை வந்து நிற்கின்றான் ஆனாலும் சகஜமாக நடிக்க கூட முயலவில்லை.. நான் இப்படித் தான் இதில் என்ன மற்றவர்களுக்கு கஷ்டம்.. எல்லோரும் அவனது அமைதியை குற்றமாக கருத அவனை அறியாமலே அதனை ரசித்த ஒரு ஜீவனை மனம் நினைத்துப் பார்த்தது.. அவன் மௌனம் பற்றியும் இறுக்கம் பற்றியும் வெவ்வேறு அபிப்பிராயங்களை பலர் கொண்டிருக்க எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல் அந்த ஜீவனின் கருத்து இருந்தது..

"வெவ்வெவெவேவே.... எப்போ பார்த்தாலும் உர்ருனு மூஞ்சியை வச்சிருந்தால் நீங்க நல்லவரா என்ன என்னை இம்ப்ரஸ் பண்ண பாக்குறீங்களா?" குதித்துக் கொண்டு சண்டைக்கு வந்த அந்த முகம்.. காளான் சைசில் இருந்து கொண்டு பாதி பனை மரமாக வளர்ந்திருந்தவனிடம் வாக்குவாதம்..

"இம்ப்ரஸ் பண்ண பார்க்கிறேனா?"
அந்த ஜீவனின் நெருக்கம் அவனை மதியிழக்க செய்தது. அந்த நினைப்பே அவனை ரௌத்திரம் ஆக்கியது அந்த ஒற்றைக் கருத்து தான் அந்த ஜீவனிடமிருந்து நம் (ர)ஜீவனை விலகிப் போகவும் செய்தது.
 
Status
Not open for further replies.
Top