இதயம் ஒரு கோவில்
அத்தியாயம் 02
மணமகளின் அறையில் வெகு நேரமாக தன் ஃபோனை தேடிக் கொண்டிருந்த நித்தியா அது கையில் கிடைக்காமல் களைத்துப் போய் அமர்ந்து விட்டாள்..
ஸ்விட்ச் ஆஃப் செய்தாளா என்று சுத்தமாக நினைவில் இல்லை.. கடந்த சில இரவுகளாக அவள் தூங்குவதே இல்லை ஃபோனை தூக்கி எறியவும் முடியாமல் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும் முடியாமல் இரண்டும் கெட்டானாக அவதிப்பட்டு கொண்டிருக்கிறாள்.. பெயர் தான் மணமகளின் அறை எப்போது பார்த்தாலும் இருபது முப்பது பெண்கள் இதற்குள் தான் அமர்ந்து இருக்கிறார்கள்.. இவள் அறையை விட்டு வெளியேறியப் பின் யார் கண்ணிலாவது பட்டு விட்டால் இடைவிடாமல் அழைத்துக் கொண்டிருக்கும் அலைபேசியை யாராவது ஆன் செய்து பேசி விட்டால் ஒரு பிரளயமே நடந்துவிடும்.. எங்கே போய் தொலைந்ததோ.. போட்டிருந்த அடர்த்தியான மேக்கப்பையும் மீறி வியர்த்து ஊற்றியது..
அவள் அணிந்திருந்த அதிக வேலைப்பாடு மிக்க உயர்தர காஞ்சிப் பட்டு அவள் உடலில் ஆயிரம் கூர்மையான ஊசிகளாக புண்ணாக்கியது.
சத்தமில்லாமல் இன்னும் சில மணித் துளிகளை கடந்து விட்டால் போதும் இவ்வளவு மெதுவாகத் தான் நேரம் ஓட வேண்டுமா?? கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கம் வருவது போல் இருக்க வேகமாக சென்று குளிர்ந்த நீரை வாயில் ஊற்றி தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.. கிடைத்த தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்க கூட முடியாமல் ஓடி ஆடிக் கொண்டிருக்க வேண்டிய நிலை.. படார் என்ற கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் அவள் தாயார் வள்ளி. அடர் நீல காஞ்சிப் பட்டு பொருத்தமான பொன்நகை, அத்தனையும் தாய்மாமனின் சேமிப்பு. ஒரே மகனுக்காக வாரியிறைத்திருந்தார். தாயை இவள் கோபமாக பார்க்க அவருக்கு அதெல்லாம் பொருட்டு இல்லை போல அவர் வந்த காரியத்திலேயே கண்ணாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.. அங்கிருந்து பைகளையும் தட்டுகளையும் என்னவோ தேடி ஆராய்ந்தவர்
"ரெடி தானே இன்னும் கொஞ்ச நேரத்துல மனைக்கு போகணும்".. என கட்டளை குரலில் பேச
"ம்ம்... ம்ம்!!..." என சலிப்பாக தலை ஆட்டினாள்.. மகளிடம் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் மறுபடியும் விருந்தினர்களை கவனிக்க விரைந்து விட்டார் வள்ளி.. அவர் சென்ற நொடியோடு பொத்தென்று கட்டில் மேல் விழுந்தவள் தலையை கைகளால் அழுந்த பற்றிக் கொண்டாள்...
பூரணிக்கு ஐயர் ஒன்று மாற்றி ஒன்று வேலை சொல்லிக் கொண்டிருக்க அவரால் திருமண மனையை விட்டு நகர முடியவில்லை.. ஆரம்பத்திலேயே வள்ளி தான்
" ஐயர் பக்கத்திலேயே இருந்து உதவி பண்ணுங்க அண்ணி! உங்களுக்குத்தான் எல்லாத்தையும் முன்னுக்கு நின்னு செஞ்சு பழக்கம் யார் உதவியும் இல்லாமல் டக்கு டக்குனு எல்லாத்தையும் செய்து முடித்து விடுவீர்கள்.." என்று பாசமாக சொல்வது போல் எல்லா வேலையும் அவர் தலையில் கட்டி விட்டு ஹாயாக நகர்ந்து விட்டார்.. பொம்மை போல் அமர்ந்து ஐயர் சொல்பவற்றை முறையாக செய்து கொண்டு இருந்த மகனை கண்ணில் நிரப்பிக் கொண்டு அவரும் ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தார்.. அவன் முகமே கல்லை போல் இறுகிக் கிடந்தது. பொலிவற்ற கர்ப்பகிரக சிலையை போல அவன் தோற்றம் பெற்றவரை உலுக்கியது.
தங்கை குடும்பத்துடன் இணைந்து விருந்தினர்களை இன் முகமாக வரவேற்றுக் கொண்டிருந்த ஐங்கரன் கூட்டத்துடன் கூட்டமாக வந்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தைப் பார்த்ததும் வேகமாக அவரே முன்னால் சென்று அவர்களை வரவேற்றார்..
"ஐயா நல்லா இருக்கீங்களா??.."
"நான் நல்லா இருக்கேன் தம்பி நீ நல்லா இருக்கியா??.."
"எனக்கு ஒரு குறையும் இல்லை ஐயா நீங்க வருவீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல.. எனக்காக உடம்பு முடியாத போதும் இவ்வளவு தூரம் பயணம் பண்ணி வந்ததுக்கு ரொம்ப நன்றி!.." சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த வயோதிபரான கண்ணபிரானின் கரங்களை பிடித்துக் கொண்டு ஐங்கரன் நன்றி பெருக்கோடு நின்றிருந்தார்.
"ஏன்பா இப்படி பிரிச்சு பேசுற நீயும் எங்களுக்கு ஒரு மகன் போல தானே!" அவரின் பரவசத்தை சந்தோஷமாக பார்த்த கண்ணபிரானின் மனைவி ராதை அவர் தோள்களில் தட்டிக் கொடுத்தார்.
"தெரியும் அம்மா வாங்க வாங்க உள்ள போகலாம்.. இது இது?..."
"எங்கள் பேத்தி!.."
"கீர்த்தனாவின் பொண்ணா?? எவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துட்ட உன் ஐயர் சாங்கியத்தின் போது நாங்க வந்து இருந்தோம் அப்புறம் இப்போது தான் பார்க்க முடிகிறது!.."
பாட்டி அறிமுகப்படுத்தும் போதே ஐங்கரனை நோக்கி கை குவித்திருந்தவள் அவரது நல விசாரிப்புக்கு பணிவான ஒரு முறுவலுடன் தாத்தாவின் வீல்ச்சேரை தள்ளிக் கொண்டு முன்னேறி விட்டாள்...
ஓம குண்டத்தின் புகை கண்ணில் எரிச்சலை உண்டாக்கி இருமலை தர கஷ்டமாக இருந்தாலும் எப்போதும் போல இறுக்கமாக அமர்ந்திருந்த ரஜீவன் இடையிடையில் பார்வையை மட்டும் உயர்த்தி கண்ணை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டான்.. புகை உண்டாக்கிய வெப்பத்தால் ஏற்கனவே கடுகடு என்று இருந்தவனை மண்டபத்தில் ஒலித்த ஒரு பாடல் கோபத்தின் உச்சாணி கொம்பில் தூக்கி வைத்து விட்டது..
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
ஒரு தல காதல தந்த
இந்த தருதல மனசுக்குள் வந்த
காதலிக்க கைடு இல்ல
சொல்லி தர வா வாத்தி
சேர்த்து வச்ச ஆசை எல்லாம்
அள்ளி தர வா வாத்தி
என் உசுர உன் உசுரா
தாரேன் கை மாத்தி
அடியாத்தி இது என்ன ஃபீலு
உன்னால நான் ஃபெயிலு
புடிக்காம ஓட்டுனேன் ரீலு
இனிமேல் நான் உன் ஆளு
ஏதேதோ பழைய நினைவுகளால் முகம் சிவந்து போனவன் மறுபடியும் பார்வையை உயர்த்த உயர்ந்த பார்வை மறுபடியும் கீழே இறங்கவே இல்லை..
"இவள் இவள் எப்படி வந்தாள் இங்க என்ன பண்ணுறா?? இவளை யாரு மண்டபத்துக்குள் அனுமதித்து இருப்பாங்க.. கடைசியா எப்ப பார்த்தது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியா ஆறு வருடத்துக்கு முன்னாடியா அன்னைக்கு அந்த கத்து கத்திட்டு எந்த தைரியத்துல இங்க வந்து இருக்கா
இந்த குட்டிச்சாத்தான் எவ்வளவு அழகாக மாறி இருக்கு.. எத்தனை கோட்டிங் மேக்கப்போ.. என்ன பண்ணாலும் பிசாசு பிசாசு தான் பார்வையை பாரேன்.. இவளை இல்லை முதல்ல இந்த பாட்டை நிறுத்தணும்!!...." பார்வையை கொஞ்சமும் விலக்காமல் மனதுக்குள் எதிரில் வந்த நபரை பொரிந்து தள்ளியவன் இப்போது வாயைத் திறந்து "கர்ணா!!" என்று அலற மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த ஐயர் நடுநடுங்கிப் போனார்.
முதல் வரிசையில் அருகில் உள்ள பிளாஸ்டிக் சேரை கொஞ்சம் நகர்த்தி விட்டு தாத்தாவின் வீல் சேரை நிறுத்தி வைத்தவள் பாட்டியை அமர சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த காலி இருக்கையில் நிமிர்வாக அமர்ந்து ரஜீவன் முகம் நன்றாக தெரியும் படி அமர்ந்து கொண்டாள்.. உட்காரும் போது தான் அவன் பார்வையும் தன் மேல் இருப்பதைக் கண்டு இன்னும் கொஞ்சம் பார்வையை கூர்மையாக்கிட அவன் கர்ணாவை அழைப்பது கேட்டது.
"திமிரு திமிரு எப்படி பார்க்கிறா பாரு
கொஞ்சம் கூட பயமே இல்லை!.."
இவ்வளவு நேரமும் பிடித்து வைத்த பிள்ளையாரை போல அமர்ந்திருந்த மாப்பிள்ளை கோபமாக தனக்குள் ஏதோ முணுமுணுக்கவும் அதனை வித்தியாசமாக பார்த்த ஐயர் அவர் அருகில் பூமாலைகளை வைத்துக் கொண்டிருந்த பூரணியை அழைத்து காதை கடித்தார்.. வேலை மிகுதியில் கொஞ்ச நேரம் கவனிக்காமல் விட்ட மகனை மறுபடியும் கவனமாக பார்க்க அவன் பார்வை முழுவதும் முதல் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு பெண்ணிடம் போய் சேர்ந்தது.. அந்தப் பெண் அருகில் இருந்த முதியவருடன் ஏதோ பேசிக் கொண்டிருக்க இவரை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்தியது அந்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த நபர் தான்..
"இது கண்ணபிரான் ஐயா தானே பக்கத்தில் இருப்பது யாரு அவங்க பேத்தியா இருக்குமோ அந்த பொண்ணை ஏன் இவன் வெறிக்க வெறிக்க பார்க்கிறான்"..
ரோபோ போல் எதையும் காட்டாமல் இருக்கும் மகனின் முகத்தில் நவரசமும் பொழிந்தது..
திருமண நாளன்று ஒரு பக்கம் வீடியோ ஓடிக் கொண்டிருக்க இவன் ஏன் கோபமாக இருக்கிறான் என்று புரியாமல் அவன் அருகில் வந்த பூரணி தயக்கமாக அவனிடம்
"தம்பி ஐயர் கூப்பிடுகிறார்!" என்க தாயின் குரலில் வேகமாக அவர் பக்கம் திரும்பியவன்
"இன்னும் எவ்வளவு நேரம் இப்படி உட்கார வைத்திருப்பீர்கள் உங்கள் வளர்ப்பு மகள் நித்யாவை வர சொல்லுங்க சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு போகணும் தலை வலிக்குது எனக்கு! இப்படியே நேரத்தை போக்கிக்கிட்டு இருந்தா நிஜமா உங்களுக்கு நெஞ்சு வலி வரும்" என அந்த அப்பாவியை கடித்து குதற
"சரிப்பா சரிப்பா!!.." என்றவர் மகனின் நெஞ்சு வலி கதையில் தடுமாறி வேகமாக கீழிறங்கி சென்று வள்ளியிடம் மணமகளை அழைத்து வரச் சொன்னார்..
இடைப்பட்ட நேரத்தில் கையில் ஒரு கூடையுடன் மேடை ஏறிய அவன் நண்பன் கர்ணன்
"ஏன்டா கூப்பிட்ட... மாப்பிள்ளை இப்பதான் உனக்கு கல்யாண களையே வந்திருக்கு பாரேன் வெக்கத்துல முகம் எல்லாம் எப்படி சிவந்து போயிருக்கு!!.." என அவனுக்கு திருஷ்டி வழிக்க முற்பட
நின்றபடி மனையில் அமர்ந்திருந்தவனிடம் குனிந்து கொண்டு பேசியவனின் கழுத்தை பிடித்து தன் பக்கம் இழுத்தவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் விழிகளை மட்டும் அந்தப் பக்கம் திருப்பி காட்டிட ஏற்கனவே ஓம குண்டத்துக்கு பக்கத்தில் இருப்பதால் கண்ணெல்லாம் கரிக்க புகை மண்டலத்துக்கு நடுவில் தெரிந்த அந்த முகத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டான் கர்ணா..
"ஐயையோ இவ என்ன இங்க பண்ணுறா?"
"அதை ஏன்டா பரதேசி என்கிட்ட கேக்குற??"
"சாரி மச்சி மைண்ட் வாய்ஸ் சத்தமா கேட்டுருச்சு"..
இவளை பத்தி இவன் கிட்ட கேட்காம யார்கிட்ட கேட்பது. அவளைத் தெரிந்தவன் இவன்தானே!
"உன் மைண்ட் வாய்ஸை மூடிகிட்டு அவளை இங்கிருந்து போக சொல்லு"..
"டேய் நான் எப்படி டா??"
"பயப்படுறியா கர்ணா??"
"பயம் எல்லாம் இல்ல ஆனால் பயம் தான்!"
"அந்த சில்வண்டுக்கு பயப்படுறியே காண்டாமிருகம், ஆம்பளையாடா நீ?"..
"துரை தான் பெரிய சிங்கம் ஆச்சே நீங்க அந்த சில்வண்டை துரத்துங்க பார்ப்போம்?.."
தீயாய் முறைத்த நண்பனை பார்த்து அசடு வழிய சிரித்தவன் அவன் பார்வையில் கடுமை கூடுவதை பார்த்தபின் கீழே இறங்கி நகர போக மறுபடியும் அவனை அழைத்த ரஜீவன்
"முதல்ல டீஜேகாரனை இந்த பாட்டை நிறுத்த சொல்லு அதுக்கப்புறம் என்னடா இது கையில் பூக்கூடை நீ என்ன மணப்பெண் தோழியா!!" என கடிந்தான்.
"இல்ல மச்சி மணப்பெண் தோழிக்கு புடவை மடிப்பு சரியா இல்லை அதுதான் உதவி பண்ணிக்கிட்டு இருந்தேன்"..
"செருப்பு பிஞ்சிடும்.. கல்யாண வீட்டில் காவாலித்தனம் பண்றியா?"
"டேய் இல்லடா அந்த பொண்ணோட அம்மா தான் அந்த பொண்ணுக்கு உதவி பண்ணாங்க அந்த பொண்ணு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர வரைக்கும் நான் வந்தவங்களுக்கு பன்னீர் தெளிச்சு சந்தனம் கொடுத்தேன், உயிர் நண்பன சந்தேகப்பட்டுட்டியே"
"சாரி.. உன் வரலாறு அப்படி. போ போய் அவளை துரத்தி விடு புரியு
தா!!" என்றான் ஒரு விதமான தொனியில்
'நம்ம கிட்ட தான் வெட்டி வீராப்பு எல்லாம்.. அவள் கிட்ட வாயை கொடுக்க தைரியம் இல்லை.. ச்ச்சே.. ஒரு கப் பாயாசத்துக்காக இந்த கல்யாணத்துக்கு வந்தால் இவன் அவள் கிட்ட அனுப்புறான் அவளை துரத்தி விடுவது எல்லாம் நடக்குற காரியமா.. அவள் நமக்கு ஒரு பாயாசத்தை போடாம இருக்கனும்'... என புலம்பிய படி கீழிறங்கி போனான் கர்ணன்..
அவன் தாயிடம் எரிந்து விழுந்ததையும் நண்பனை அரட்டியதையும் கேட்டுக் கொண்டிருந்த ஐயர் 'சரியான ரவுடி மாப்பிள்ளையாக இருப்பான் போல, நான் சொல்லும்போது தான் மணமகளை அழைத்து வர வேண்டும்' என்று சொல்ல நினைத்து விட்டு அவன் திரும்பி என்ன என்று பார்க்கவும் "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ!.." என உளறிவிட்டார்..
அவ்வளவு நேரமும் அவன் மேல் மட்டும் வைத்திருந்த பார்வையை கொஞ்சம் திருப்பி மணமகளின் அறை வாயிலை பார்க்க தாயுடன் நடந்து வந்த நித்தியா கண்ணுக்குத் தெரிந்தாள்.. அழகான பெண் தான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவளின் திடமெல்லாம் அந்தப் பெண் ரஜீவனுக்கு அருகில் சென்று அமரும் வரை தான்.
அவன் அருகில் அவள் அமர்ந்த நொடியில் இவள் இதயத்தில் யாரோ கத்தி எடுத்து பாய்ச்சியது போல துடித்துடித்து போய் விட்டாள்.. உருவங்கள் மங்கலாக கண் கலங்கவும் குனிந்து புடவையை சரி செய்வது போல விழி விளிம்பில் நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்த கண்ணீரை சுண்டி விட்டவள் ரஜீவனுக்கே சவால் விடுவது போல நிமிஷத்தில் கல்லென முகத்தை மாற்றிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.. அவளிடம் தாலி இருக்கும் தட்டை நீட்டி அர்ச்சதை எடுத்துக் கொள்ளச் சொல்லவும் ஒரு கணம் அந்த தாலி மீது பார்வையை நிலைக்க விட்டு மனதார அவன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு கை நிறைய அர்ச்சதையை அள்ளினாள். தன்னால் அவள் பார்வை தாத்தா பாட்டியிடம் திரும்பியது இவர்கள் மட்டும்தான் எனக்கு நிரந்தரம் என்று அவளுக்குள்ளேயே உறுதி எடுத்துக் கொண்டு மனம் துடிக்க மணமேடைக்கு பார்வையை திருப்பினாள்.
எழுந்து நின்று தாலி கட்டுக்கு தயாராக தாலி மேடை ஏறி ஐயர் கைகளுக்கு போய் ரஜீவனின் கைக்கு இடம் மாறியது.. இங்கே இவளுக்கு அழுகையை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த உடலில் ஒரு நடுக்கம் தோன்றி உள்ளங்கையில் பிடித்திருந்த அர்ச்சதை சிதறுவது தெளிவாக தெரிந்தது.. இதோ சொல்லப் போகிறார்கள் சொல்லப் போகிறார்கள் என்று தவிப்பாக மேடையை பார்க்க கொஞ்சம் நெருங்கிய உறவுக் கூட்டம் மணமக்களை மறைத்து மறைத்து மனையை சூழ இந்த இறுதி நிமிடங்களில் அவன் உருவத்தை கண்களில் நிரப்பி கொள்ள முயன்றபடி படபடப்பாக முன்னேறியவள் "கெட்டிமேளம் கெட்டி மேளம்"!! என்று ஐயரின் குரலில் உறைந்து நிற்க திடீரென்று பக்கவாட்டில் இருந்து மின்னல் வேகத்தில் மணமக்களை நெருங்கிய ஒரு இளைஞன் ரஜீவனின் கையில் இருந்த தாலியை பிடுங்கி தூர வீசிட அது பறந்து வந்து அவளின் காலடியில் விழுந்தது..
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
வாசகர்களுக்கு அன்பு வணக்கம் நெடிய முயற்சிக்குப் பிறகு என்னுடைய நாவலை உங்கள் பார்வைக்கு இந்த தளத்தில் பதிவிடுகிறேன். கதையை வாசித்து உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்தவும் ஈசன் அருளோடு ஞாயிறு முதல் அத்தியாயம் பதிவிடப்படும். ஆரம்பிக்கலாமா??
aadvikapommunovels.com