“ஏன்டி என்னையும் இப்படி திருட வைக்கற?” என்று ராகுல் திட்ட, அதை எல்லாம் கண்டுகொள்ளாதவள், அவனை அமைதிப்படுத்தியவாறே அந்த வீட்டினுள் நுழைந்தாள். ராகுலும் சரி, ஆர்கலியும் சரி என்னதான் விளையாடியவாறு இருந்தாலும், வேளை என்று வந்துவிட்டால் புலி தான். அதனால், ஆர்கலி தற்போது இங்கே வந்திருப்பதற்கும் ஏதேனும் காரணம் இருக்குமென்று யூகித்தவன் அமைதியாக அவளை பின்தொடர்ந்தான். அந்த இருட்டு சிறிதே பயம் கொள்ள வைக்க, அதிலிருந்து வெளிவரவே இந்த கலாய் எல்லாம்.
‘அடியே ஆர்கலி! உன் நிலைமை எப்படி இருக்கு பாத்தியா? நீ உரிமையா வந்துபோக வேண்டிய வீடு! ஆனா இப்படி திருட்டுத்தனமா வர்ற! இது எங்க போய் முடியப்போகுதோ!’ என்று தனக்குத் தானே கலாய்த்தவாறு மறுஅடி எடுத்து வைத்தாள் ஆர்கலி.
ஆம்… அவள் வந்திருப்பது விழியனின் வீடு. அவனை மற்றவர்கள் தவறு செய்கிறான் என்று கூறக் கூற, அவன் அவ்வாறு இல்லை என்று கத்த வேண்டும் போல வெறி. அதை செய்யவும் முடியாது. அது மட்டுமில்லாது, இவளது அடுத்த கவர் ஸ்டோரியே இந்த கேஸ் தான். ஆனால், அதனைப் பற்றி எந்த தகவலும் வெளியே தெரியாதபடி மறைத்து வைத்திருந்தார்கள். என்னென்னவோ செய்து செய்தி சேகரிக்க விழைந்தாலும் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சம்பந்தப்பட்டவர்களையும் யாருக்கும் தெரியவில்லை. தெரிந்த ஒன்றிரண்டு பேரை சென்று விசாரித்தாலும், இல்லை என்று சாதித்தனர். மீறி திரும்பத் திரும்ப வந்தால் போலீசில் சொல்ல வேண்டியதிருக்கும் என்று மிரட்டினர். இதை எல்லாம் யோசித்தவள், வேறு வழியில்லாது விழியனின் வீட்டை சோதனையிட்டு பார்க்க விழைந்தாள். இது தவறுதான். அவன் வீட்டில் அதற்கானவை அனைத்தையும் வைத்திருந்தால் அதுவும் தவறுதான். ஆனால், சில சமயங்களில் சரியில்லாதவற்றைக் கூட செய்யவேண்டியதாகிறது. அதற்காகவே இந்த களவாடும் முயற்சி. கூடவே, அவன் நிரபராதி என்பதற்கு ஆதாரம் எதுவும் கிட்டாதா என்ற நட்பாசை. அதனாலேயே அவன் இரவுநேர ரோந்துக்கு சென்றிருந்த சமயமாகப் பார்த்து வந்திருந்தாள். அவன் எந்த காவலும் வைத்திருக்காதது வசதியாகப் போயிற்று அவளுக்கும். ஆர்கலிக்கு உள்ளே வந்தது தான் தெரியும். ஆனால், எங்கே சென்று தேடுவது என்பதே தெரியவில்லை.
ராகுலை ஒரு பக்கம் அனுப்பிவிட்டு இவள் மறுப்பக்கம் தேடிக்கொண்டிருந்தாள். வெகுநேரம் தேடியும் ஒன்றுமே கிட்டவில்லை. அதுவும் தேடல் அனைத்தும் இருளிலேயே நடக்கிறது. எது எங்கிருக்கிறது என்பதை அறியாத ஒரு நிலை. இவ்வாறு அவள் நடந்துகொண்டிருக்க, எங்கேயோ தடுக்கி விழுந்தாள் ஆர்கலி.
“அம்மா…” என்று மெலிதான சத்தத்தோடு விழுந்தவளுக்கு வலியைத் தாண்டி ஓசை வெளியே கேட்டுவிடுமோ என்ற பயமே அதிகமாக இருக்க, உதட்டைக் கடித்து வலியைப் பொறுத்தவாறு எதனால் விழுந்தோம் என்று பார்த்தாள். அது ஒரு கார்ப்பெட். நல்ல தடிமனாகத் தான் இருந்தது. அதன் ஓரம் மடங்கியிருந்ததோ இல்லை, இவள் பார்க்காமல் காலை வைத்தாளோ! எப்படியோ விழுந்துவிட்டாள்.
“ஆனாளப்பட்ட என்னையே இந்த கார்பெட் விழ வெச்சிருச்சே! இதை எல்லாம் இந்த உலகம் பாத்தா என்னன்னு நினைக்கும்?” என்று நினைத்தவள், சந்தேகம் வராமல் இருக்க அதை சரி செய்யப்போனாள். அப்போதுதான் ஏதோ படத்தில் பார்த்த அண்டர்கிரவுண்ட் பதுக்கல்கள் நினைவிற்கு வர, இங்கே ஏதேனும் டாக்குமெண்ட்ஸ் வைத்திருக்கிறானா? என்று தேடிப்பார்த்தாள். தரை தெளிவாக இருந்தது.
அதன்பின், இருக்கும் சிறு சிறு ஓட்டைகளையும் அவள் விடவில்லை. எவ்வளவு நேரம்தான் தேடுவது? விழியன் வருவதற்குள் முடிக்க வேண்டும் அல்லவா? அதனால், இரண்டு அல்லது மூன்று முறை தேடலாம் என்று யோசனை.
என்னதான் அவனை காதலிப்பதாக உரைத்துவிட்டாலும், இன்னும் அவள் பேனா புத்தி அவனை நம்ப மாட்டேன் என்றே மல்லுக்கட்டி நிற்கிறது. அதனை சரிகட்டவும் தான் அவள் இங்கே தேடுவதே! அவன் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில், எங்கேனும் அதற்கான சாட்சி அல்லது ஆதாரம் கிட்டுமே!
பெர்ஃபெக்ட் மர்டர் செய்தவர் யாருமே இல்லை. அவ்வாறு நினைத்துக்கொள்ளலாமே தவிர, அந்த கொலையோ, கொலையானவரே கொலைக்கான சாட்சியாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதுபோக, என்னதான் தடயங்களை அழித்தாலுமே அங்கே குற்றவாளிக்கே தெரியாமல் ஏதேனும் இருக்கத்தான் செய்யும். அதுவும், குற்றம் செய்யப் பயன்படுத்துபவற்றை பொதுவாக மறைக்க உபயோகிக்கும் இடம் அவர்கள் ஆளுகைக்க்கு உட்பட்ட இடமாக இருக்க வாய்ப்பு அதிகம். எனவே தான் அங்குலம் அங்குலமாக தேடினாள் பெண்.
ஒவ்வொரு தேடலிலும் அவள் மனம் மாரியாத்தாவிடம் சரணடைந்தது அவள் மட்டுமே அறிந்தது. இது வெறும் கேஸ் மாத்திரம் அல்லவே! விழியன் குற்றவாளியாக இருக்கும்பட்சத்தில் அவள் வாழ்வில் தோற்றும் போவாளே! ஆனால், அவன் குற்றத்தை மூடி மறைக்கும் எண்ணம் மட்டும் அவளுக்கு இல்லவே இல்லை.
என்றுமே அவள் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதும் இந்த நேர்மையைத்தான். அவளது இந்த எதிர்பார்ப்பே பிறரிடம் இருந்து அவளை தள்ளி நிறுத்தும். அதனை அவள் கண்டுகொண்டதும் இல்லை. செய்தாயென்றால் செய்தாய் என்று சொல், அதை விட்டுவிட்டு, தவறை மூடி மறைக்க பார்க்காதே என்பது அவளது கொள்கை. ஆனால், அதனை மற்றவர்களிடமும் எதிர்பார்த்தால்? அதே நோக்கத்தோடு தான் இங்கும் வந்திருந்தாள். இந்த நேர்மையோடு இவள் இத்துறையில் நிலைத்து நிற்பதெப்படி?
முடிந்துவிட்டது… கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்துவிட்டது. வீட்டை அங்குலம் அங்குலமாக புரட்டிப் போட்டாயிற்று. விழியனுக்கு சந்தேகம் வராதபடி அவள் இங்கே தேடிக்கொண்டிருக்க, வெளியே வேறு ஒன்று நடக்க இருந்தது.
தன் ஒரு வார முயற்சியின் பலனாக கண்டே பிடித்துவிட்டாள் விழியனது சீக்ரெட் ரூமை.
அங்கே சென்று பார்த்தவளுக்கு ஒன்றுமே புரிய்வில்லை என்பது மாத்திரமே உண்மை. ஒரு பெரிய போர்ட் வைத்து ஒவ்வொரு கொலையும் எங்கெங்கே எந்தெந்த நேரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும் இன்னும் சில குறிப்புகளையும் எழுதி வைத்திருக்க, அதனை கிரகித்துக்கொண்டவள், மேலும் ஏதேனும் கிட்டுமா என்று நோக்கலானாள்.
அங்கே கிடைத்தவை சில பல கேஸ்கட்டுகளும் அதனுள்ளே அவன் எழுதியிருந்த குறிப்பு பேப்பர்களும் தான். அவற்றை எல்லாம் தன் கைப்பேசியில் பதிவு செய்து கொண்டவளுக்கு கிட்டியது அவன் டைரி.
இது எங்கே இங்கே? என்று நினைத்தவாறே அவற்றை எடுத்தவளுக்கு அதிலும் கிட்டியதெல்லாம் அவன் கேஸ்களைப் பற்றிய குறிப்புகளே! ‘அதான பாத்தேன்! என்னடா… மானே தேனேன்னு புலம்பினதை எல்லாம் இங்கே வந்து வெச்சுருக்கானேன்னு ஒரு நிமிஷத்துல தப்பா இல்ல நினைச்சுட்டேன்!’ என்று மானசீகமாக அங்கலாய்த்தவள், அதனைப் புரட்ட, அந்த டைரியில் ஒரு புக்மார்க் தட்டுப்பட்டது.
‘என்னவாக இருக்கும்?’ என்ற யோசனையோடே அதை விரித்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது, கூடவே அதிர்ச்சியுடனும்.
*****
“சற்றுமுன் கிடைத்த செய்தி:
**** மடத்தில் **** மரணம். தன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு ஓய்வு அறையில் இருந்தவர் சீடர்கள் சென்று பார்க்கும்போது இறந்துகிடந்தார். உடனே போலீசாருக்கு தகவல் வர, அவர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர்”.
அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி மீண்டும் ஒரு கொலை. அதுவும், சாதாரணமானவர் இல்லை. பல அரசியல்வாதிகளும் நடிகர் நடிகைகளும் போற்றும் ஒரு ஆன்மீகப் பிரபலம்.
*****
“ஹாய் ஜில்லு… மாமனுக்கு செம்ம டென்ஷன். அதான் உன்ன இங்க வரச் சொன்னேன். நீ வருவியான்னு யோசனையோடே இருந்தேன். நல்லவேளை, வந்துட்ட” என்றவன், சுற்றும் முற்றும் பார்த்து, “ஆனா, ஏன் இப்படி எல்லாரும் இருக்குற இடத்துல மீட் பண்ணலாம்ன்னு சொன்ன? வேற எங்கேயாவது பார்த்துருக்கலாம்ல… தனியா…” என்றவனுக்கு தன் காதலியோடு தனியாக இருக்கவேண்டும் என்ற ஆவல்.
இந்த குடில்களை உடைய ரெஸ்டாரெண்ட் தனிமையை அளிக்கும் தான். இருந்தாலும்? இதில் அவன், எதிரிலிருப்பவளின் முகபாவனைகளை கவனிக்க தவறிவிட்டான். பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், அவள் தன்னியல்பில் இல்லையென.
“என்ன சொல்ற நீ?” என்றவன் தன் கண்களை கூர்மையாக்கிக் கேட்க, அவன்முன் விசிறியடித்தாள் அந்த டைரியை.
அவள் விசிறியடித்த பக்கத்தை கண்டவன் விழிகள் விரிந்தது. அதில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் பெயர்களோடு இன்னும் சில பெயர்கள் எழுதியிருக்க, இறந்தவர்கள் பெயர்கள் அடிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கொல்லப்பட்டிருந்த அந்த ஆன்மீகவாதியின் பெயரருகில் ஒரு கேள்விக்குறி!
இதோ கதையின் அடுத்த பதிவு. படித்துவிட்டு மறக்காமல் கருத்துகளை பதிவு செய்யவும். அதுதான், உங்களுக்கு ஏற்றாற்போல் என்னை மெருகேற்ற உதவும்.
நிலவு 13
ஆர்கலி கேட்ட கேள்விக்கு அவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால். கட்டுக்கடங்காத கோபம் உள்ளே பிரவாகமெடுத்தது. ஆனால், அதனை வெளிப்படுத்தும் சூழல் இப்போதில்லை. அந்த கோபத்தையும் தாண்டி ஒரு வேதனை, இவள் என்னை நம்பவில்லையா? என.
சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது தானே காதல்? என்று நினைத்தவனை அவன் மனமே சாடியது. அவள் சந்தேகப்படுவதற்கு உனக்குள் மர்மங்கள் என எதுவுமே இல்லையா? என்று. ஆம்! இருக்கிறதுதான். அதை உரைத்தால் அவள் அவனை நிரந்தரமாகப் பிரிந்துபோவதற்கு கூட வாய்ப்பிருக்கிறது தான். ஆனால், என்றேனும் அதை சொல்லாமல் மறைக்கத் தான் முடியுமா? இல்லையே! சொல்லித் தானே ஆகவேண்டும்? என்ன, பயத்தினால் அதனை தள்ளிப் போட்டுக்கொண்டே செல்கிறான். அதனால் மட்டுமே இவளிடம் இருந்து பிரச்சனை வருமென்று இவன் நினைத்திருக்க, யூகிக்காத இடத்திற்கெல்லாம் சிக்ஸர் அடிக்கிறாள் இவள். ‘ஆண்டவா! உனக்கு என்னோட ஜோடி சேர்க்க வேற ஆளே கிடைக்கலியா?’ என்று தான் வணங்கும் கடவுளை வேண்டியவன் மனதிற்குள்ளே புன்னகைத்துக்கொண்டான், இப்போதும் அவள் மீது பொங்கி வழியும் காதலை எண்ணி.
‘கொல்றடி!’ என்று அவளை கொஞ்சிக் கொண்டவன், “லுக் ஆழி! ஐ கேன் எக்ஸ்ப்ளைன். ஆனா, இது இடமில்லை. வேறு எங்காவது போலாம் வா!” என்றவன் அழைக்க, அதை மதிப்பில் எடுத்துக்கொள்ளாதவளோ, ‘இங்கேயே எதுவாக இருந்தாலும் சொல்லு!’ என்ற பாவனையில் நின்றிருந்தாள்.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதாவது கொலைகள் அனைத்தையும் அவன் தான் செய்திருந்தான் என்றால், அதை வெளிவராமல் தடுக்க அவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; அதாவது, அவளையும் சட்டத்தினுள் மாட்டிவிடலாம். எனவே, ரிஸ்க் எடுப்பது சரியாக படவில்லை அவளுக்கு. ஆனால், அவள் அறியவில்லை, ஆர்கலிக்கு ஆபத்து ஏற்படுமானால், எந்த எல்லைக்கும் சென்று அவளை காத்திடுவான் என்பது. அதை அவள் கண்கூடாக பார்க்கும் நாளும் வரும். அப்போது தான் அவன் காதலின் அளவும் அவளுக்குப் புரியும், அவன் யாரென்பதும் தெரியும்.
“ஆழி… ப்ளீஸ். எல்லாமே எல்லா இடத்துலையும் பேசிட முடியாது. அதுவும் இப்போ நாம பேசப்போற விஷயம்” என்றவன், அவள் முகத்தில் இருந்த நம்பாத தன்மையில் மேலும் அடிவாங்கினான்.
கரைந்துபோவது தான் காதல் என்பார்கள். இவன் அவளுள் முழுவதும் கரைந்து போக தயார் தான். ஆனால், இவளும் அதே அளவு விருப்பத்துடன் இருக்க வேண்டுமே! இங்கே சந்தேகக்கண்ணோடு பார்ப்பவளை என்னவென்று சொல்ல? உன் காதல் இவ்வளவு தானா? என்று நினைத்தவனுக்கு வார்த்தைகள் தொண்டையினுள் சிக்கிக் கொண்டது.
‘போடி!’ என்று தூக்கிப் போட்டுவிட்டும் செல்ல முடியாது. இவள் தான் இனி இவனுக்கு என்று முடிவாகிவிட்டது. இதனை அவன் மாற்ற முடியாது, மாற்றவும் விரும்பவில்லை இவன்.
இதுவே அவன் எதிரில் நிற்பது வேறு யாராவதாக இருந்தால் அவன் நடவடிக்கையே வேறு. இது ஆர்கலி என்பதால் மட்டுமே இவ்வளவு கெஞ்சிக் கொண்டிருக்கிறான்.
அவன் விடாப்பிடியாக கேட்டுக்கொண்டே இருக்க, சிறிது மலையிறங்கி வந்தவள், “சரி, உங்க கார்ல வந்து உக்காருவேன். அங்கேயே பேசி முடிக்கனும். வேற எங்கேயும் வர மாட்டேன். நாம பேசி முடிக்கற வரைக்கும் கார் கீ என்கிட்ட தான் இருக்கனும்” என்று தன் கண்டிஷன்ஸ்களை கூற, அதை கேட்டு சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
அவளை கடத்திக் கொண்டு போவதென்றால் ஒரு நொடி போதும் அதை செயல்படுத்த. அது தெரியாமல் அவனோடு மோதி விளையாடுபவளை கண்டால் சிரிப்பு வராமல் இருந்தால் தான் அதிசயம்.
அவள் கூறியதற்கு ஒத்துக்கொண்டவன், அதன்படியே எல்லாம் செய்தான். அதை மறுமுறை சரிபார்த்துவிட்டே அவள் தன்னிடத்தில் அமர்ந்தாள். டிரைவர் சீட்டில் அவள் அமர்ந்திருக்க, அருகிலேயே அவன். மாற்று சாவி ஏதாவது வைத்திருந்தால்?
அவன் புறம் திரும்பியவளை இப்போது முறைத்தான் அவன். “என்னோட வீட்டுல நான் இல்லாத நேரத்தில அத்துமீறி நுழைஞ்சிருக்க, ரைட்?” என்று குரலில் மிளகாய் ஏற்றி அவன் கேட்க, ஆமென்று தலையாட்டினாள் அவள்.
“இதுக்கு என்ன செய்யலாம் தெரியுமா உன்ன?” என்று கேட்டவனை பயத்தோடு பார்த்தாள். ‘அப்போ களியும் கேப்பையுமா கொஞ்ச நாளைக்கு?’ என நினைத்தவள் அறியவில்லை, தற்போது எல்லாம் பிரியாணியே அளிக்கிறார்கள் என.
‘எந்த தைரியத்தில் சட்டம் தெரிந்த அவனிடமே இதை காட்டினோம்?’ என்று தன் அதிமேதாவித்தனத்தை மெச்சியவள், அதை வெளிக்காட்டாமல், “எது எப்படியோ, நான் நினைச்சது சரியாப் போச்சு. என் புத்தி சரியா தான் சொல்லிருக்கு. அதனால தான் காதல் வந்தா கண்மண் தெரியாம போகும்னு சொல்வாங்க போல. முழுசா தெரியாம கிணத்துல விழாம இருந்தேனே!” என்று அவள் கோபமாக பேசிக்கொண்டிருந்தாலும், விழிகள் அவள் விழியனைக் கண்டு ‘நீயா இவை அனைத்தையும் செய்தது?’ என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
‘இல்லை என்று சொல்லிவிடேன்! இதற்கு காரணம் ஏதாவது சொல்லேன்’ என்று அவள் மனம் கேட்க, ‘இப்போ சொல்றது மட்டும் உண்மையா இருக்கும்னு எப்படி நம்ப?’ எனக் கேட்டது. அவை இரண்டுக்கும் நடுவில் நடந்த போராட்டத்தில் தலை பாரமாக கணக்க, ஸ்டேயரிங்கிலேயே தலையை சாய்த்துக்கொண்டாள்.
அதில் பதறியவன், “ஆர்கலி” என்று அவளை பற்ற வர, அவன் தொடும்முன் கைநீட்டி தடுத்தவள், “ஐ’ம் கம்ப்லீட்லி ஆல்ரைட்” என சொல்லி சில நிமிடங்களில் தன்னை மீட்டெடுத்துக்கொண்டு அவனைக் கண்டாள்.
“சொல்லுங்க, இதுக்கு என்ன கதை சொல்லப்போறீங்க? ஆல்ரெடி உங்கமேல இந்த கேஸ்ல ஏகப்பட்ட அலிகேஷன்ஸ். இதுல இந்த டைரி ஒன்னு போதும், நீங்க தான் குற்றவாளின்னு சொல்ல. நான் ஒரு முட்டாள். இதை அப்படியே ரிலீஸ் பண்ணாம உங்ககிட்ட வந்து கேட்டுட்டு நிக்கறேன் பாருங்க” என்று அவள் சொல்ல, “நான் பேசறதுக்கு, இது என்னன்னு சொல்றதுக்கு கூட எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க மாட்டியா? இந்த அளவு அவசரத்தோட இருக்காத ஆர்கலி! வாழ்க்கைல நிறைய படுவ” என்றவன் கூற, ஆழி ஆர்கலி ஆனதையும் உணரவில்லை, அவன் கூற்றில் உள்ள உண்மையையும் அவள் உணரவில்லை.
அதை உணரும்போது தான் இருக்கும் நிலையை அவள் அறியவில்லை, அதைக் கண்டு தன் இதயம் உறைந்து போகும் என்பதை அவனும் அறியவில்லை. அறியாதவையும் தெரியாதவையும் நடப்பது தானே வாழ்க்கை!
“என்ன சொல்லனுமோ சொல்லுங்க” என்றவள், ‘சாட்சியம் இருக்க, அதை நம்பாமல் எப்படி இருக்க?’ என்று கேட்டது. ஏனென்றால், அந்த டைரியில் பெயர் மட்டுமா இருந்தது. அவர்கள் இறந்த நாளும் கூடவே தான் இருந்தது. அவள் டைரியை கைப்பற்றிய நாளில் தான் அந்த ஆன்மீகவாதி இறந்தார். அதே நாள் தான் டைரியில் அவர் பெயருக்கு நேராக இருந்தது. எவ்வாறு விழியனுக்கு அவர் கொல்லப்படும் நாள் தெரியும்?
“நான் அந்த லிஸ்ட் ரெடி பண்ணது உண்மைதான். ஆனா, அது முழுக்க முழுக்க நான் சென்னை சார்ஜ் எடுக்கனும்னு சொன்னதும், யார் எல்லாம் இங்க வாண்டட்ன்னு எடுத்த குறிப்பு. இதுக்கும் நடக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என்னவோ நான் வரிசையா எழுதுன நபர்களை கொலை செய்யற மாதிரி சொல்ற? அவனே ராண்டமா செலக்ட் செய்துட்டு இருக்கான். நான் அதை குத்துமதிப்பா எழுதி வெச்சேன்” என்று அவன் கூற,
“அப்போ, **** கொலைக்கான டேட் என்ன செய்ய போறீங்க?”
“அவர் அந்த நாள்ல ஒரு ப்ரோக்ராம் போக வேண்டியது. அதனால, இதுவா இருக்குமோன்னு எழுதி வைச்சது” என்றவன் குரலில் அப்பட்டமான எரிச்சல், இப்படி துருவி துருவி கேட்கிறாளே என்று. பாவம், மனைவி என்பவளின் டெஃபனிஷன் அறியாதவன்! விடு, ஆர்கலி கத்துகொடுப்பா!
“அப்போ ஏன் அவர்கிட்டயோ உங்க மேலிடத்துலையோ இன்ஃபார்ம் செய்யல?”
“ஆமா… செத்தவனுக நாட்டுக்கு நல்லது பண்ணி செத்துப்போன தியாகச் செம்மல்கள் பாரு! ஒருத்தன் கள்ளக்கடத்தல், இன்னொருத்தன் திருட்டு, இப்போ இறந்தானே, இவனால எத்தனை குடும்பம் நாசமாகிருக்கு தெரியுமா? இப்படிப்பட்டவங்கள ஒருத்தன் தேடித் தேடி கொல்றான்னா, அவன் இது எல்லாத்தையும் பொறுத்துக்க முடியாத நல்லவனா தான இருப்பான்?” என்று அவன் எதிர்கேள்வி கேட்க,
“தப்பு தண்விழியன், ரொம்ப தப்பு. நல்லவங்களோ, கெட்டவங்களோ, அது ஒரு உயிர். உயிரை அழிக்கற உரிமை யாருக்குமே இல்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வரையறை நல்லவங்களுக்கு. எங்கேயோ படிச்சேன், ஒரு சைக்கோ கில்லர், அவன் வேலைக்காரங்கள அவன் சொல்லுக்கு அடிபணியலைன்னா கொல்வானாம். அவனுக்கு கீழ்படியாமை நல்ல பழக்கம் இல்லைன்னு பதிஞ்சு இருக்கு. அதுக்காக அவனை விட்டிற முடியுமா? தண்டனை கொடுக்கத் தான் செஞ்சாங்க. இது அவனைப் பொறுத்தவரை vigilante crime (விழிப்புணர்வு கொலைகள்)-ஆக இருந்தாலும், கோர்ட்டும் சட்டமும் அதை கொலைகளா மட்டும் தான் பார்க்கும். இதேதான் இதுலையும் அந்த குற்றவாளி சிக்குனதும் ஆகப்போகுது. எனக்கும் தெரியும், அவங்க கெட்டவங்கன்னு. அதுக்காக அவங்கள தண்டிக்கற உரிமை நமக்கு இல்ல. லா-க்கு மட்டும் தான் இருக்கு” என்றவள், தன் மூச்சை நன்கு இழுத்துவிட்டு, “இதுக்கு நீ காரணமா இல்லையான்னு தெரிஞ்சுக்க தான் வந்தேன். ஆனால், நீ சொல்றதைப் பார்த்தா, நீ சம்பந்தப்பட்டிருக்கியோ இல்லையோ, குற்றவாளிய தேடாம அவனுக்கு ஹெல்ப் பண்றன்னு நல்லா புரியுது. இனியும் உங்கிட்ட பேசி பிரயோஜனமில்ல. நானே அந்த குற்றவாளிய கண்டுபுடிச்சுக்கறேன்” என்றவள் காரிலிருந்து இறங்கப்போக, “அவள் கைபிடித்து தடுத்தவன், உன் வேலையே இன்வெஸ்டிகேஷன்-தான்ன்னு தெரியும்” என கூற, அதில் அதிர்ந்து அவனைப் பார்த்தாள் பெண்.
‘இவனுக்கு எப்படி தெரியும்? நான் செலிப்ரிட்டி சைட்-ன்னு தான சொல்லிருந்தேன்?’ என்றவள் பார்க்க, “எனக்கு முதல்ல இருந்தே தெரியும். நீயா சொல்லுவேன்னு நினைச்சேன். ஆனா, நீ சொல்லல. எங்கிட்ட உன் காதல சொல்லும்போது கூட சொல்லல. இதோ, இப்போ கூட. இதுலயே தெரியுது, உனக்கு என்மேல இருக்கிற நம்பிக்கை. காதல்ங்கற உறவுல நம்பிக்கை தான் அஸ்திவாரம். அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் ரொம்ப நாள் தாங்காது, இப்போ நம்ம உறவு மாதிரி. இனி நான் உன்னை தேடி வரவே மாட்டேன். உனக்கு நான் வேணும்னா என்கிட்ட வா. அதுவரைக்கும், பீ சேஃப். இந்த கேஸ இனியும் ப்ரோசீட் பண்ணாத. நிறைய கேஸ் இந்த உலகத்துல, ஏன், நம்ம தமிழ்நாட்டுல, இந்த சிட்டிலேயே இருக்கு. அத்தனை செக்யூரிட்டிய தாண்டியும் போய் கொலை செய்திருக்கான்னா, அவன் சாதாரணமானவன்னு எனக்கு தோணல. இத கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி போய் அவன் கைல மாட்டிக்காத” என்றவன்,
“ஒன் லாஸ்ட் டைம்!” என அவளை இறுக அணைத்து விடுவித்தான். அதில் மந்திரித்து விட்டவள் போல் இறங்கியவள் அவனைப் பார்த்தவாறே தன் கையில் இருந்த சாவியை அங்கேயே வைத்துவிட்டு இறங்க, அவளை ஒரு நொடி ஆழ பார்த்துவிட்டு வண்டியை எடுத்தான் விழியன். அவன் கைகளில் அந்த கார் அதிவேகத்தில் பறந்தது.
காலம் முழுவதும் வரும் என்று நினைத்த காதல் காணலாகிப் போன வலி இருவருக்கும். இதற்கு இந்த பாழாய்போன காதல் வராமலே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, இருவர் விழிகளிலும் மரணவேதனை.
“சார்…” என்றபடி வந்து நின்றார் அந்த போலீஸ். அவருக்கு தற்போது விழியனிடம் பேச முடியுமா என்றிருந்தது. ஏனென்றால், சில காலமாக அவன் மனநிலை அப்படி. அவன் இங்கு பொறுப்பேற்ற நான்கில் இருந்து ஐந்து மாதமாகப் பார்க்கிறார், இதுபோல் அவன் இருந்ததே இல்லை. எப்பொழுதும் அவன் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒரு எனர்ஜியை வைத்திருப்பான். அது தனக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் நல்ல ஒரு ஃபீல் தரும் என்பது அவன் எண்ணம். மனம் நன்றாக இருந்தால், செய்யும் வேலையில் குறை எதுவும் இருக்காது இல்லையா? அதற்காக தான் இவ்வாறு அவன் கடைபிடிப்பது. எவ்வளவுக்கெவ்வளவு கெடுபிடியாக வேலையில் இருப்பானோ, அதே அளவு மற்றவர்களின் சூழலையும் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செய்பவன்.
சமீபகாலமாக அப்படியில்லை. அவனிடம் அந்த உற்சாகம் வெகுவாக மிஸ்ஸிங். எதனால் என்பது தெரியாமல் இருந்தாலும், அதனால் குழம்பியவர்கள் ஏராளம். அவனிடம் சென்று கேட்கவும் முடியாதே! அமைதியாக வேலை பார்த்தனர்.
இன்று அவனிடம் பேசியே ஆகவேண்டிய நிலை இவருக்கு. அதற்கான வேலையும் வந்துவிட்டது. கடிவானோ என்று நினைத்தவாறே உள்ளே நுழைந்து மெதுவாக அழைத்தார் அவனை.
ஆழ்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தவன் அவரை பார்த்தான். அந்நொடி அவன் பழைய கம்பீரம் மீண்டு வந்திருந்தது. “சொல்லுங்க ராஜாராமன். என்ன விஷயம்?” என்று கேட்க,
அவன் முன் அந்த ஃபைலை வைத்துவிட்டு, “நீங்க விசாரிக்க சொன்ன கேஸ் ஃபைல்ல ஒரு ஃபைல் ப்ரீவியஸ் க்ரிமினல் ரெக்கார்டோட இருக்கு சார். அவன் மனைவிய தம்பியும் அம்மாவும் சேர்ந்து கொலை பண்ணிருக்காங்க. அதுல இருந்து சாட்சி இல்லைன்னு வெளிய வந்து கொஞ்ச நாள்லயே இறந்துட்டாங்க. ஆனா, இவன் அந்த கொலையப்போ வெளியூர் போயிருந்தான், அப்படியே ஆள் எஸ்கேப். இது எல்லாம் நடந்தது 1994. அப்போ அவ்வளவா வசதி இல்லைங்கறதால தேட முடியல. பட், ரொம்ப பர்ஃபெக்டா இவன் Identity theft (மற்றவர்களின் அடையாளத்தை திருடி அதைக் கொண்டு வேறோர் ஆளாய் மாறி வாழ்வது) செய்துருக்கலாம்ன்னு ஒரு டவுட். அதைத் தான் இவன் செய்திருக்கான் போல. பழைய கேஸ் சஸ்பெக்ட்ஸ், குற்றவாளின்னு தேடவும், இவன் போட்டோ மாட்டுச்சு சார். அந்த கேஸ் ஃபைல் தான் இது” என்றவர் அவ்வளவுதான் என்பதைப் போல் பார்க்க, அவரை போகச் சொன்னவன், அந்த ஃபைலை எடுத்து பார்த்தான்.
அதில் இருந்த கேஸ் தான் 11-ஆவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் வருவது. (காதலுக்கு மட்டுமல்ல, கொலைக்கும் அற்ப காரணங்களே போதுமானது!)
அந்த இரண்டு கேஸ் ஃபைல்களையும் படித்துப் பார்த்தவனுக்கு அந்த கொலையாளியின் திறமையை நினைத்து வியப்பே மேலோங்கியது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை. அதனைப் பற்றி மக்கள் மறந்தும் போயிருந்தனர். ஆனால், அப்போது பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று அது. அதில் சம்பந்தப்பட்ட அந்த நபரை தேடாத இடமில்லை. அப்போதைய அனைத்து வகையான தொழில்நுட்பங்களையும் உபயோகித்திருந்தார்கள். இருந்தாலும், இன்றைய காலகட்டத்தைப் போல் உலகம் இல்லையல்லவா? எனவே அவன் எங்கோ காற்றோடு காற்றாக கலந்தாற்போல் காணாமல் போயிருந்தான். அத்தகைய ஒருவனை தேடியெடுத்து கொன்றவனை என்னவென்று சொல்ல? மனதுக்குள்ளே சபாஷ் போட்டுக்கொண்டான் விழியன்.
அத்தோடு, இந்த இரண்டையும் காட்டினாலே போதும் அவனுக்கு, தன் மேல் குற்றமில்லை என ஆர்கலியிடம் நிரூபித்தும் விடலாம். ஆதாரம் காட்டி பெறுவதா காதல்? அப்போது, நான் யாருமே இல்லையா அவளுக்கு? என்று காதல் கொண்ட மனம் கேட்டது. அவனுக்கு வேண்டுமானால் ஜென்மாந்திர உறவாக இருக்கலாம், ஆனால், அவளுக்கோ சில நாள் உறவல்லவா? அதை மறந்துவிட்டான் இந்த காதற்காவலன்.
விழியனுக்கு முதலிலிருந்தே தெரியும், இங்கே கொல்லப்படுபவர்கள் அனைவருமே ஏதேனும் தவறு செய்தவர்கள் தானென்று. அதுவும், அவர்களால் சிலரோ பலரோ ஏதேனும் வகையில் பாதிக்கப்பட்டிருந்தனர். அதனாலோ என்னவோ, இந்த கேஸில் அவன் தன் மனசாட்சிக்கு விரோதியாக செயல்பட வேண்டியிருந்தது.
என்னதான் மக்களுக்கு சேவை செய்யும் உத்தியோகம் என்றிருந்தாலும், அதுவும் ஒரு வரையறையோடு தானே இருக்க முடிகிறது? எவனோ முகம் அறியாதவன் தாங்கள் செய்ய வேண்டியதை செய்யும்போது அதனை அவன் ஏன் தடுக்கப்போகிறான்? அந்த ஆபத்பாண்டவனை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றும்பொருட்டே இந்த கண்கட்டி வித்தை. இந்த கொலைகள் எதுவரை தொடரும் என்பது அவனுக்கு தெரியாது. ஆனால், இது சட்ட விரோத செயல்கள் செய்பவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பது திண்ணம். அதன் காரணமாகவே கொலைகாரனை விரைந்து பிடிக்க பல இடங்களில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டே வருகிறது.
விழியனும் அவர்கள் சொல்வதை எல்லாம் செய்கிறான் தான், இன்னும் சொல்லப்போனால், வெகு தீவிரமாக விசாரணை செய்துகொண்டிருக்கிறான், யாருக்கும் தெரியாதவாறு. அதன் நோக்கம், அவனை காட்டிக்கொடுப்பதற்காக இல்லை, அவனை ஒரு முறை சந்திக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!
இது நடக்குமா இல்லையா என்பது தெரியவில்லை விழியனுக்கு. ஆனால், நடந்தால், அவனிடம் ஒரு முறையேனும் சொல்ல வேண்டும், ‘நீ மட்டும் இவற்றை சட்டப்படி செய்யும் ஏதேனும் தொழிலில் இருந்திருந்தால் அதில் பெரியதாக சாதித்திருப்பாய்’ என!
பாவம், அவனுக்கு எங்கே தெரியப்போகிறது, இது விட்ட கதை, தொட்ட கதை என! அந்த முற்றும் வைத்த கதை ஒரு காற்புள்ளியுடன் தொடரப்போகிறது, அதனால் முற்றுப்பெறப்போவது அவன் காதலா காதலியா?
இருக்கும் கோபத்தை எங்கே சென்று காட்டுவது என்று தெரியாமல் இருந்தாள் ஆர்கலி. இதோ, இப்போது கூட அவளிடம் இருந்து சிறு அடி இடைவெளியில் அவள் கோபத்திற்கான காரணம் அவளைத் தொடர்ந்தவாறே இருந்தது. இதற்கெல்லாம் காரணமானவனை ஏதாவது செய்யவேண்டுமென்று நினைக்க, அவள் எண்ணத்தின் நாயகனே எதிரில் நின்றான்.
‘டேய்… உனக்கு அறிவிருக்கா?’ எனக் கேட்க நினைத்தவள், இருக்கும் இடம் உணர்ந்து தனிமைக்கு நகர, அவள் விருப்பம் புரிந்தவனும் அவளை அமைதியாக பின்தொடர்ந்தான்.
“சொல்லு… எதுக்கு என் பின்னாடி ஷாடோ போட்டிருக்க?”
“உன் பாதுகாப்புக்கு தேவைப்பட்டிருக்கு” என்றான் அவன் தோள்களை குலுக்கி.
“நான் கேட்கவே இல்லையே!”
“செய்ய வேண்டியது என் கடமை!”
“ஆயிரம் பேர் இருக்காங்க பாதுகாப்பு இல்லாம. அவங்களுக்கு கொடு. எனக்கு தேவையில்ல.”
“அவங்க அத்தனை பேருக்கும் நான் காவலனா குடுப்பேன். அவங்களோட, ஏன் அவங்கள விட நீ எனக்கு முக்கியம்”
“ஏன்?” என்றவள், அதுவரை விலக்கியிருந்த தன் விழிகளை அவனை நோக்கி திருப்ப, அவன் காந்தக் கண்களில் தன்னை தொலைத்தவாறு நின்றிருந்தாள் ஆர்கலி.
காதல் கொள்ள கண்ணால் அழைக்கிறான்
தன் செய்கையால் என் மனத்தை அழிக்கிறான்
என் செய்வேன்! நான் என் செய்வேன்?
காதல் கொன்று கடமை ஆற்றவா?
கடமை கொன்று காதல் காக்கவா?
காதல் வேண்டும், கயவனாயில்லாமல் வா!
மனதோடு பேசிக்கொண்டிருந்தவளை ஆசையோடு பார்த்திருந்தான் விழியன். அவன் அறிவான், அவளுக்கு தன்மீதான கோபம் இன்னும் தீரவில்லை என. இருந்தாலும், அவளை பாராமல் அவன் நாளாவது ஓடுவதாவது? அதனாலேயே ஏதேனும் சாக்கிட்டு அவளை தொலைவில் இருந்தேனும் பார்த்துவிடுவான். அதை அவளும் அறிந்திருந்தாள் என்பது தான் காதலோ?
ஆர்கலியின் தற்போதைய கோபம் எதனால்? அவள் எங்கு செல்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை பார்ப்பதற்காக ஒரு ஆளை நியமித்திருக்கிறான் விழியன். அவரும் அவளையே காலை முதல் மாலை வரை தொடர்கிறார். நைட் ஷிஃப்ட் வேற ஒருத்தர்! இதனால், வாழைத்தாரை மொத்தமாக தின்ற குரங்கைப் போல் திரிகிறாள் பெண்.
‘என்னால எங்கேயும் நிம்மதியா போக வர முடியல. எதுவும் செய்ய முடியல. இந்த கேஸைப் பற்றி விசாரிக்க நினைச்சா, உடனே வந்து ஆஜர் ஆகுறான். உனக்கு ஆபீஸ்ல வேலை எல்லாம் எதுவுமே கிடையாதா?ன்னு கேட்டா, சின்னதா ஒரு சிரிப்பு மட்டும் தான். இவனை என்ன தான் செய்ய?’ என்று நினைத்தவாறே முருங்கைக்காய் ஆய்ந்து கொண்டிருந்தவள் த விரல்களை வெட்டிக்கொண்டது தான் மிச்சம்.
இரத்தம் சொட்டச் சொட்ட, அதை தாய் தந்தையர் கவனித்துக்கொள்ள, இவள் நினைப்பெல்லாம் அவன் பின்னே சுழன்றது. ‘ஏன் இப்படி?’ என்று கேட்ட பெற்றோரிடம் வேலையைக் காரணம் காட்டி அறையினுள் புகுந்துகொண்டவளை அவள் அம்மா கலக்கத்தோடு பார்த்தாரென்றால், அவள் தந்தையோ கலவையான உணர்வுகளோடு பார்த்தார், இது எதற்கான அறிகுறியென்று.
இவை அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு கண்முன் நின்றவன் தான் அனைத்திற்க்கும் காரணம் என்பது புரியவர, அவனை முறைத்தாள்.
“என்னை விட்றியா? அதான் நீ வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்ல்ல. அதுக்கு அப்புறமும் என்னை இப்படி தொடர்ந்து வர்றதுக்கு பேரு ஸ்டால்கிங். இது தப்புன்னு தெரியாதா இந்த போலீஸ் ஆஃபீசர்க்கு?” என்று கேட்டாள் தன் புருவம் தூக்கி, கைகளை கட்டிக்கொண்டு.
அதைக் கேட்டதும் அவன் முகத்தில் சிறு வலி. அது அவள் அகத்துள் புகுந்து உள்ளே இறங்கியதோ? அவளுக்கும் அதே உணர்வு மனதில். அதை ஒதுக்கித் தள்ளியவள், அவனை பார்க்க,
“நீ என்னை லவ் பண்ணு, பண்ணாம போ. அது இப்போ பிரச்சனையில்ல. நீ இப்போதைக்கு எந்த ஆபத்திலும் போய் மாட்டிக்காம இருக்கனும். அதுக்காக தான் இந்த பாதுகாப்பு” என்றான் அவன்.
“ஹும்… என்னை பாதுகாத்துக்க எனக்கு தெரியும். நீ எதுவும்…” என்று ஆரம்பித்தவளின் வாக்கியம் அப்படியே நின்றது, அவன் அவள் கைகளைப் பிடித்து அருகில் இழுத்ததால். அதில் அதிர்ந்தவள் அவனையே பார்த்திருக்க, அவளை மேலும் நெருங்கியவன் முகம் அவள் கழுத்தில் பதிந்தது.
ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே! அவன் தற்போது செய்ய நினைத்ததை செய்திருந்தால், அவர்கள் இருவரும் இனி ஒருவரே! ஆனால், அதை செய்வதற்கு அவன் மனம் தடுத்தது. யாராக இருந்தாலும், அவர்கள் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலுமே, அதை செய்வதற்கு அந்நபரின் சம்மதம் அவசியம் அல்லவா?
தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவன், அவள் முகம் நோக்கி நிமிர, பல மின்னல்கள் ஒன்றாக தன்னை தாக்கிய உணர்வில் நின்றிருந்தாள்.
“ஹே!” என்றவன் அவள் முகத்தின் முன் சொடுக்கிட, அதில் தன்னுலகத்தில் இருந்து வெளிவந்தவள் அங்கிருந்து நகரப்போனாள், எதிலிருந்தோ தப்புபவள் போல்.
அவளை மீண்டும் ஒருமுறை தடுத்தவன், “ஒழுங்கா வேற ஏதாவது ஆர்டிக்கல் போடு. இந்த விஷயம் வேண்டாம். தோண்டத் தோண்ட பூதம் கெளம்புது” என்றான்.
அதில் அவன் கையை தட்டி விட்டவள், “நீ சொல்றத கேட்க நான் ஆளில்ல” என்றவள் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள். சென்ற வேகத்திலேயே மீண்டும் திரும்பி வந்தவள், “அந்த போலீச போகச் சொல்லு. என் பின்ன யாரும் வந்தா, உன்மேலயே நான் கேஸ் குடுக்க வேண்டி வரும். கொடுக்க வெச்சிறாத” என்று பொறிந்தவள், வந்த வழியே திரும்பிச் சென்றாள்.
அவள் செய்கையைக் கண்டு தனக்குள்ளே சிரித்துக்கொண்டவன் கண்களில் சிறு வலி எட்டிப் பார்த்தது.
“என்னை எப்போ தான் புரிஞ்சுக்கப் போற?”
*****
அன்று அலுவலகத்தில் நுழைந்தவனிடம் உயரதிகாரி பார்க்க விரும்புவதாக கூறப்பட, உடனே அவரை காணச் சென்றவன் கண்டதோ, அவரோடு மேலும் இரண்டு மூத்த அதிகாரிகளைத்தான்.
“குட் மார்னிங் சார்!” என்று சல்யூட் அடித்தவனை எதிர்கொண்டவர்கள் முகம் கடுமையிலும் கடுமையாக இருந்தது.
‘திரும்பவும் கேஸ்ல ஏதாவது டெவலப்மெண்ட் இருக்கான்னு கேட்கப் போறாங்க’ என்று நினைத்தவாறு வந்தவன் முகம் தற்போது யோசனையை தத்தெடுக்க, அது அவர்கள் வாயிலிருந்தே வரட்டும் என்று நின்றிருந்தான்.
“உங்க மேல ஒரு அல்லிகேஷன் வந்திருக்கு” என்றார் அந்த மும்மூர்த்திகளுள் ஒருவர்.
‘அந்த அரைக்காப்படி ஏதோ கோர்த்து விட்டுருக்கு போல!’ – மனதில்.
மிடுக்கோடு, “மே ஐ க்னோ வாட் இட் இஸ் சார்?” – வெளியே.
அவன் முன்னே ஒரு சில புகைப்படங்களை வைத்தனர். “இது நேத்து நைட் உங்களுக்கு சொந்தமான ஒரு இடத்துல இருந்து கைப்பற்றப்பட்டது. கோடிக்கணக்கான மதிப்பிலான கள்ளநோட்டுகள். இதற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?” என்று அவர்கள் கேட்க, இது சற்றும் அவன் எதிர்பார்க்காத விடயமாக இருந்ததால் அவன் அதிர்ந்து நின்றிருந்தான்.
“ஸார்! ஐ கேன் எக்ஸ்ப்ளைன். இந்த நோட்டுகளை நான் க்ரைம்சீன்ல பிடிச்சேன். ஆனா, இதை யாரு மொத்தமா டீல் செய்யறாங்கன்னு எந்த க்ளூவும் இல்ல. இவ்வளவு பெரிய அமொண்ட்டா இருக்குறதால, கண்டிப்பா தேடுவாங்கன்னு தான் ஒளிச்சு வெச்சேன்” என்றவனின் கூற்றை யாரும் ஏற்பதாக இல்லை.
“நீங்க சொல்றது நம்பற மாதிரி தெரியல மிஸ்டர் தண்விழியன். நீங்க கொஞ்ச நாள் வீட்டில ரெஸ்ட் எடுங்க, டேக் அ ப்ரேக், ட்ராவல் ஃபார் சம்டைம்” என்றவர்கள், அவன் சொல்ல வருவதை கேட்காமல் வேறு ஒருவரை உள்ளே அழைத்தனர்.
“இவர் மிஸ்டர் சதீஷ். இவருகிட்ட உங்க கேஸ் சம்பந்தப்பட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ஹேண்ட்ஓவர் பண்ணிருங்க” என்க, அங்கே தன்னிடம் எந்த கேள்வியுமே கேட்கப்படாமல் பழி போடப்பட்டதாக உணர்ந்தான் விழியன்.
இருவரும் வெளியே வர, விழியன் அருகே வந்த சதீஷ், ஒரு நக்கலான சிரிப்போடு நகர்ந்தான். அப்போதே இது யாருடைய வேலை என்பது புரிந்துபோனது.
சதீஷ், விழியன் மாற்றலாகி வராமல் இருந்திருந்தால், தற்போது அவனிடத்தில் இருந்திருக்க வேண்டியவன். அதன்காரணமாக விழியன் வந்ததில் இருந்தே அவர்கள் இருவருக்கும் நடுவில் எதுவும் சரியாகவே இல்லை. தற்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான் என்பது மட்டும் புரிந்தது விழியனுக்கு.
ஆனால், யாருமே அறியாத அவன் பதுக்குமிடத்தை அறிந்தவர் யார்?
“அண்ணா… இத நாம செஞ்சே ஆகனுமா?” என்று கேட்டான் ஒருவன்.
“ஆமா… துட்டு வாங்கிட்டல்ல கை நீட்டி! செஞ்சு தான் ஆகனும். உன் வீட்டு நிலைமைய நினைச்சு பாரு” என்றவன், தான் செய்யும் வேலையை தொடர்ந்து செய்யலானான்.
முதலாமவன் இந்த வேலைக்கு புதியது. அதனால், அவன் சிறிது பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தவாறே மணலை தோண்டிக்கொண்டிருந்தான். இதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை. என்ன செய்வது? வீட்டில் பசியோடு இருக்கும் பிள்ளைகள் முகம் கண்முன் வர, தன்னை அழைத்து வந்தவனோடு இணைந்து அந்த செயலை செய்யலானான்.
நிமிடத்திற்கொரு முறை அவன் கண்கள் சுற்றுப்புறத்தை ஆராயவும் தவறவில்லை.
“டேய்… என்னடா தடவுற? சீக்கிரம் வந்த வேலைய முடிச்சுட்டு கிளம்பலாம். நேரமாகுதுல்ல!” என்றவன் மீண்டும் வேலையில் கவனமானான். அவனுக்கு இது பழக்கப்பட்ட ஒன்று தான். எனவே, எந்த பயமும் இல்லாமல் இருந்தான். முதலாமவன் தான், ‘பேயோட குடும்பம் நடத்த விட்டிருவானோ!’ என்று நினைத்தவாறே இருந்தான்.
ஆம்! அவர்கள் இருவரும் இருந்தது இடுகாட்டில், நள்ளிரவைத் தாண்டிய ஒரு நேரத்தில். செய்துகொண்டிருந்ததோ, ஒரு பிணத்தை தோண்டியெடுத்துக் கொண்டிருந்தனர். ஏன்? எதற்காக? என்பதை பார்ப்பதற்கு முன்னே, இவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம் இப்போது.
முதலாமவன், மாரிமுத்து ஒரு கட்டத்தில் சுற்றுப்புறம் நோக்கும்போது, இரண்டாமவன், சுடலையின் பின்னே சற்று தூரத்தில் தெரிந்தது ஒரு உருவம், ஆறடியில்.
யார் அது என்று அவன் யோசிக்கும்போதே அந்த உருவம் அவர்களை நோக்கி வந்தது. அதில் அதிர்ந்தவன், பின்னோக்கி செல்ல, “டேய்… தோண்டுடா…” என்றான் சுடலை, மாரி பின்னால் செல்வதைக் கண்டு.
அதற்குள் சுடலையை நெருங்கியிருந்தது அந்த உருவம். அவன் கழுத்தோடு பிடித்து தன்னை நோக்கி திருப்பிய அது, சுடலையின் கழுத்தைக் குறிபார்த்தது. இதை அதிர்வோடு பார்த்திருந்தான் மாரி. அவனால் கத்தக்கூட முடியவில்லை. அதன் முகத்தையும் பார்க்க முடியவில்லை. ஆனால், மனிதன் தான். சாட்சாத் மனிதனே தான். இதுவரை நரமாமிசம் உண்பவர்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறானே தவிர, கண்டதில்லை மாரிமுத்து. இதோ, கண்டேவிட்டான். கால்கள் வெடவெடக்க அங்கிருந்து ஓடினான் மாரி.
இடுகாட்டின் வாயிலில் இருந்த காரின் மேல் ஓடி வந்து பொத்தென்று விழுந்தவனைக் கண்டு அவர்கள் இருவருக்காகவும் காத்திருந்த மேலும் மூன்று பேர்,
“என்னடா ஆச்சு? அண்ணன் எங்க?” என்று கேட்டனர்.
அவர்களிடம் புரியாத பாஷையில் ஏதோ உளறியவன், அவன் கைகாட்டிய திசையில் ஓட, “போகாதீங்க…” என்ற மாரியின் குரல் அந்த நிசப்தத்தில் எட்டுக்கட்டில் ஒலித்தது.
அதையும் மீறி அங்கே சென்றவர்கள் கண்டது, உயிரற்ற சடலமாக சுடலையைத்தான்.
*****
மறுநாள் செய்தியில்,
“தொடரும் கொலைகள். என்ன தான் நடக்கிறது தலைநகரில்? நேற்று இரவு ஒரு நபர் **** இடுகாட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது இதே முறையில் செய்யப்பட்ட ஐந்தாவது கொலையாகும். இதுவரை நடந்த கொலைகளுக்கு எந்த பதிலும் அளிக்காத காவல்துறை, இவை தொடர்கொலைகள் தான், செய்வது ஒரு நபரோ பலரோ இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியிருக்கிறது. இந்நாள் வரை இந்த கொலைகளை விசாரித்துவந்த தண்விழியனிடம் இருந்து இந்த கேஸ் சதீஷ் என்பவரிடம் கைமாறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது”
இந்த செய்தியைக் கண்ட விழியன் தன் முன் இருந்த டீப்பாயை எட்டி உதைக்க, அந்த கண்ணாடி டீப்பாய் பலநூறாக உடைந்தது. அதில் தெரிந்த அவன் முகத்தைக் கண்டவன், “சாரிடா! என்னால செய்ய முடியல!” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
நகரின் வேறொரு பகுதியில்:
“யோவ்… ரெண்டு நாளா இப்படி ஜுரத்துல படுத்துக்கெடக்கிற. நீ இப்படி இருந்தா நா என்னதா செய்யுறது? புள்ளைங்க எல்லாம் அழுவுறது தெரியலியா?” என்று மனைவி எகிற, அவளிடம் தன் உடல்நிலையைக் கூட கருத்தில் கொல்லாமல் எகிறினான் அவன்.
“அப்படி இன்னய்யா நடந்துச்சு?” என்று அறியும் ஆவலோடு அவனருகே அமர்ந்தாள் அவன் சகதர்மினி.
தான் பார்த்ததை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருக்க, அவளிடம் அனைத்தையும் உரைத்தான் மாரிமுத்து.
விளைவு அடுத்த சில நாட்களில் தெரிந்தது. அவன் வீட்டின்முன் போலீசார் வந்து நின்றனர், அவனை அள்ளிக்கொண்டு செல்ல.
(ராஜா காது கழுதைக் காது!)
*****
“டேய்… என்னடா பண்ணி வெச்சிருக்கான் அவன்? இதுக்கு தான் தெரியாத ஆளுங்கள எல்லாம் இங்க வேலைக்கு சேர்க்க கூடாதுங்கறது!” என்று இரைந்தான் அந்த முக்கியப்புள்ளி.
இவனுக்கு வெளியே எண்ணற்ற தொழில்கள். ஆனால், அவற்றை விட இதில் சம்பாதிக்கும் லாபம் கணக்கில் அடங்காதது. அது தற்போது வெளிவரும்போல் இருந்தது. அந்த கோபமே அவனை நிதானம் இழக்கச் செய்தது.
“அவன் சுடலை அண்ணனுக்கு தெரிஞ்ச ஆளுண்ணே!” என்று தலையை சொறிந்தான் அவன் கையாள்.
“அவனுக்கு தெரிஞ்ச ஆள்ன்னா, கண்டவனை எல்லாம் வேலைக்கு வைப்பானா? இப்போ யாருக்கு பிரச்சனை? அவன் போய் சேர்ந்துட்டான். இவன் போலீஸ் கஸ்டடில ஏதாவது சொல்லிட்டான்னா, நம்ம எல்லாரும் எண்ண வேண்டியதுதான். இதுவரை பணத்த எண்ணுனோம், இனி கம்பிய எண்ணனும்” என்று எகிறினான் அந்த பெரியவர்/ன்.
“இப்போ என்னண்ணா பண்ணா?” என்று கேட்டவன் முகத்திலும் சிறை சென்றுவிடுவோமோ என்ற கவலை.
சிறிதுநேரம் யோசித்தவன், “அவனை போட்று” என்றான்.
“அண்ணே!” என்று அதிர்ச்சியில் கூவினான் கையாள்.
“என்னடா… பழகுன பாசமா? இந்த தொழில்ல பாசம் நேசம் எல்லாம் வைக்க கூடாதுடா. என்ன தளபதி படமா ஓட்டறோம்? ஒழுங்கா போய் நான் சொன்னத செய்யற வழியப்பாரு. நமக்கு என்ன கொலை புதுசா?” என்றவன், அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்து செல்ல, அவன் பின்னோடே சென்றான் அந்த கையாள், தன் பாஸின் திட்டத்தை செயல்படுத்த.
*****
“முக்கியச் செய்தி:
தொடர்கொலைகளின் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்பட்ட மாரிமுத்து சிறையினுள்ளேயே சக கைதிகளால் கொலை செய்யப்பட்டார். சிறையினுள் நடந்த கலவரத்தின் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.”
இந்த செய்தியை பார்த்த அந்த உருவம் சிரித்துக்கொண்டது.
‘விரிச்ச வலைல கரெக்ட்டா வந்து மாட்டுறானுங்க’ என்று நினைத்தவன், அடுத்து செய்ய வேண்டியவற்றைப் பற்றி சிந்திக்கலானான்.