வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.... இதோ கதையின் அடுத்த பதிவு. சென்ற எபிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி,
நிலவு 07
‘அம்மாடி… இதுதான் காதலா… அட ராமா… இது என்ன வேதமோ…’ என்று பாடல் பின்னனியில் ஒலிக்க, அதற்கு ஏற்ப மரத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்தனர் விழியனும் அவன் ஆழியும்.
அவன் இவளைத் துறத்த, பெண் ஓடி களைத்தோ அந்த விளையாட்டு சலித்தோ அவன் வசப்படும் நேரம் திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் ஆர்கலி.
‘ச்சே! கனவா? நல்லவேளை…’ என தன்னை ஆசுவாசப்படுத்தியவள் மீண்டும் ஒரு முறை தன் நினைவலையை மீட்ட, கனவில் வந்த கெட்டப்பில் தோன்றினாள் பெண்.
தலையைக் குலுக்கிக் கொண்டவள், ‘அடியே ஆர்கலி, சாரி கூட ஓகே! ஏதோ நமக்கும் ஒரு ட்ரெடிஷனல் லுக் குடுக்குதுன்னு விட்டுப்போம். அந்த சோடாபுட்டி கண்ணாடி… உனக்கு செட்டே ஆகல… உவேக்…’ என்று நினைத்தவள், ‘ஆமா, நம்ம கூட இருந்தது யாரு?’ என மீண்டும் மீட்டியவாள், ‘அடேய்… நீயா? ஏண்டா என்னை படுத்தற?’ என திட்டியவள் காதில் இருந்து புகை தான் வந்தது. பாக்கியராஜ் தோற்றத்திலும் அழகாக இருந்து தொலைத்தானே!
ஏன் இவ்வாறு அவன் நினைவாக இருக்கிறது? என்ற அவள் மனம் கேட்ட கேல்விக்கு பதிலளிக்கவோ, அதை யோசிக்கவோ விரும்பாமல், அவளை விட்டு ஓடிய தூக்கத்தை தன்னோடு பிணைத்துக் கட்டும் வழியைத் தேடினாள். அந்தோ பரிதாபம்.
‘சரி! அதான் தூக்கம் போயிடுச்சே! வேற வேலை ஏதாவது இருந்தா பார்ப்போம்! சண்டே அதுவுமா கூட இப்படி சீக்கிரமா எழுந்து உட்கார்றது எல்லாம் மகாபாவம். அத செய்ய வேண்டியதா போயிடுச்சே!’ என நினைத்தவள், காலைக் கடன்களை முடித்துவிட்டு தனக்கு ஒரு கோப்பை காபி கலந்து டீவி முன் அமர்ந்தாள். அது தன் போக்கிற்கு கடனே என கத்திக்கொண்டிருக்க, உலக யூத் கொள்கைப்படி தன் கைப்பேசிக்கு கண்ணையும் கருத்தையும் கொடுத்து அமர்ந்திருந்தாள் பெண்.
அப்போது வழக்கமான முக்கியச் செய்தி இசை வர, ‘எப்போவும் மாலைக்கு தான் இந்த ம்யூசிக் போட்டு பி.பி. ஏத்துவாங்க. இப்போ என்ன காலங்காத்தாலேயே!’ என்று நினைத்தவாறு அவள் நோக்க,
“சற்று முன் கிடைத்த தகவல். சென்னையில் மற்றுமோர் கொலை. நேற்று தென்சென்னை பகுத்தியில் உள்ள ஒரு பிரபலமான பப்பில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டார். உடனே அவ்விடத்தில் இருந்து அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர் பற்றியோ, மற்றைய விவரங்களோ காவற்துறையில் இருந்து தரப்படவில்லை. இந்த தொடர்கொலைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.”
இதைக் கேட்கவும் ஆர்கலிக்கு தலை சுற்றியது. ‘திரும்பவுமா?’ என்று நினைத்தவள், அதனைப் பற்றிய சில வெளிவராத தகவல்கள் அறிய சிலரை அழைக்க நினைத்தாள். மணி ஆறையும் நெருங்காது இருக்கவே சிறிது தயக்கம் கொண்டவளுக்கோ, ‘நம்ம வேலைக்கு எங்க நேரமும் காலமும்?’ என்ற நினைப்பு துடைத்தெடுக்க, அழைத்தவள் தலையில் இடியாய் விழுந்தது அந்த விடயம்.
*****
சனிக்கிழமை இரவு, மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருக்க, அதனைப் பற்றி கவலையில்லாமல் குதுகலித்துக்கொண்டிருந்தது அந்த க்ளப்.
அதில் தன் கையில் இருந்த திரவத்தை அருந்தியவாறு யோசனையில் அமர்ந்திருந்தான் தண்விழியன்.
‘நானும் எப்படியெல்லாமோ யோசிச்சு பாத்துட்டேன். என்னமோ மிஸ் ஆகுது. டேய்… யோசிடா… நல்லா யோசி. என்னமோ நீ விட்டுட்ட’ என நினைத்தவாறே அமர்ந்திருக்க, அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.
அவனுள் இருந்த போலீஸ் மூளை உடனே அடித்தவனை அடிக்க கையோங்கியவாறே திரும்ப, “டேய்… டேய்… அடிச்சு கிடிச்சு தொலைச்சிறாத. நான் உனக்கு ஒரே ஒரு பெஸ்ட்டு பிரண்டு…” என்றலறினான் அவன் தோழனான அர்னால்டு. (பேரு தான் அப்படி. ஹாலிவுட் அர்னால்ட் போல் யாரேனும் யோசித்துக்கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல. கற்பனையே பொறுப்பு. ஆளை யோசிக்காதவர்கள் வடிவேலுவில் இருந்து பரோட்டா சூரி வரை யாரை வேணாலும் யோசிச்சுக்கலாம்)
“போடா **. இப்படியா கூப்பிடுவ? பேர சொல்றதுக்கு என்ன?” என்று அவன் கேட்டபோதே அவன் தேவதை அழைத்தது நினைவிற்கு வர, அவன் வதனம் புன்னகை பூசிக்கொண்டது.
“டேய்… மச்சா… என்னடா… சிரிக்குற? ராத்திரில உலாத்தாதன்னு சொன்னா, எங்க கேக்குற? மோகினி ஏதாவது அடிச்சிருச்சா?” என உலுக்கினான் அர்னால்ட்.
“நீ வேற ஏன்டா? என்னை எந்த பேயும் அடிக்கல. நான்தான் யாரையாவது போட்டு தாக்குற மூட்ல இருக்கேன்” என்றவன் அலுத்துக்கொள்ள,
“என்ன மச்சி… அந்த கேஸா?” எனக் கேட்டவன், தண்விழியிடன் இதைப் பற்றி பதில் வராதெனத் தெரிந்தபோதும் நண்பனாய் தன் கடமையை தவறாது செய்தான்.
“ரொம்ப டென்ஷன் ஏத்திக்காத மச்சான். உனக்கும் நல்லதில்ல, நீ தேடுறவங்களுக்கும் நல்லதில்ல. கூலா யோசி. அப்போதான் தெளிவா இருக்க முடியும். தெளிந்த நீருல தான் மீன்பிடிக்க முடியும். உன் மனசுல கைய விட்டு கலக்கிட்டே இருந்தா எந்த மீனும் கிடைக்காது” என்று அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக, அதனை விதியே என கேட்டுக்கொண்டிருந்தான் விழி.
அவனை முழுவதும் அறிந்துள்ளவன் இவன் மட்டுமே. எத்தனை தடங்கல் வந்தாலும் அவனை என்றுமே தனித்து விடுவதில்லை இந்த இன்னுயிர் தோழன். அதனாலேயே அர்னால்ட் கூறுபவை எதுவாகினும் அவனிடம் மறுத்துக் கூற மாட்டான். தற்போதும் அவன் அறிவுரை கடுப்பேற்றினாலும் எதிர்த்து எதுவும் பேசாமல் இருப்பதற்கு காரணமும் அதுவே.
இவர்களின் நிலவரம் இவ்வாறு இருக்க, க்ளப்பின் மேல் உள்ள ஒரு ரூமினுள் சென்ற ஊழியன் அதிர்ந்து கத்தியது அந்த டிஸ்கோத்தே சத்தத்திலும் தெளிவாக கேட்க, அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தனர்.
அந்த அதிர்ச்சி கூட இல்லாமல், சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான் விழி. முதல் மாடியில் இருந்த அந்த அறையைத் தேடி நுழைந்தவன் கண்டதென்னவோ அதன் வாயிலிலிருந்து அதிர்ந்து செய்வதறியாது பீதியுடன் ஓடி வந்துகொண்டிருந்த ஒரு வெண்ணிற உடையணிந்தவன் தான்.
விழியைக் கண்டதும் சிறிது ஆசுவாசமடைந்தவன், அடுத்த நொடியே மீண்டும் அச்சம் தன்னைக் கவ்விக்கொள்ள, “சார் சார்… எனக்கு எதுவும் தெரியாது சார். நான் எதுவும் பண்ணல சார்!” என்று உளர ஆரம்பித்தான்.
“சரி! நீ எதுவும் பண்ணல. பயப்படாத” என்று நீண்ட எட்டுகளை எடுத்து வைத்தபடியே அவனைத் தேற்றியவன், அந்த அறைக்குள் நுழைந்தான்.
அறையே அலங்கோலமாய்க் கிடக்க, அதன் நடுவே இருந்த கட்டிலில் இரத்தம் சிந்த கவிழ்ந்து படுத்திருந்தான் ஒருவன். அவனை நெருங்கிய விழி, உயிர் இருக்கிறதா எனப் பரிசோதிக்க, தன் கூட்டை விட்டு எப்போதோ பறந்திருந்தது அது.
அப்போதுதான் யாரென்று முகம் கண்டவன், அதிர்ந்திருந்தான், இரு காரணங்களால்.
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...
இதோ கதையின் அடுத்த பதிவு. சென்ற எபிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த எபி இன்று இரவே அல்லது நாளை காலை.
நிலவு 08
(கீழே நடக்கும் உரையாடல்கள் யாவும் மராத்தியில். ஆனால், தமிழில் தந்திருக்கிறேன்.)
“சொல்லுங்க மிஸ் அபிமித்ரா கிர்லோஸ்கர்” என்றவாறு தன் முன் அமர்ந்திருந்த பெண்ணவளை நோக்கினான் விழியன். அவன் கூர்விழிகளே அவளைக் கொன்றுபோடுவதாய்.
தன் இருக்கையில் மெத்தனமாக சாய்ந்திருப்பது போல் தெரிந்தாலும், ‘உனக்கு தெரிந்ததும் சொல்லவைப்பேன், உனக்கு தெரியாததையும் வரவைப்பேன்’ என்னும் பாவனை அவனிடம்.
‘பார்வையிலேயே கொல்றானே!’ என நினைத்தாலும் அவள் கண்களோ அவனையே அளவெடுத்தபடி இருந்தது.
அவளைக் கண்டுகொண்டவன் தன் முன் இருந்த மேஜையை பலமாக தட்டி, “கேட்ட கேள்விக்கு பதில்” என்று சீற, அதில் வெளிவந்தவள், “ம்ம்ம்… என்ன கேட்டீங்க?” என்று வினவினாள்.
அவளுக்கு எங்கே இவன் கேள்வி காதில் விழுந்தது? வந்ததில் இருந்துதான் இவனை பார்த்துக்கொண்டிருந்தாளே!
அபிமித்ராவை முறைத்தவன், “சபரீஷ் கூட நீங்க தான் அந்த இடத்தில, ஐ மீன், அந்த ரூமில இருந்திருக்கீங்க. ஆனால், அவர் இறந்தபின்ன ரூம்பாய் அவரை பார்க்க போனப்போ நீங்க அங்க இல்ல” என்றான்.
“அதனால நீங்க என்ன சொல்லவரீங்க?” என்று கண்களை இடுக்கியவாறு கேட்டாள் அவள்.
‘என்னையே கேள்வி கேட்கிறாளா? என்ன திமிர்?’ என்று அவன் மனதுக்குள் புகையும் போதே, ‘உன்னை நான் கேள்வியே கேட்டதில்ல?’ என ஒற்றை புருவம் உயர்த்தி வந்து நின்றாள் அவன் மனதிற்கினியவள்.
அதில் தடுமாறிய மனதை பிடித்து நிறுத்தியவன், எதிரில் இருப்பவளைப் பார்த்தான். அவள் இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
முகப்பாவனைகளை சட்டென்று மாற்றியவன், “சொல்லுங்க. நீங்க ஏன் அவர்கூட போனீங்க?” என்று அவன் கேட்டதும், அவள் முகம் ரௌத்திரத்தை தத்தெடுத்தது.
“******” என்று அவள் முனங்க, “எக்ஸ்க்யூஸ் மீ! பிஹேவ் யுவர்செல்ஃப்” என்றான் அவன், அவள் நடத்தையில் விருப்பமின்மையைக் காட்டி.
“என்ன? ஒரு பொண்ணு இப்படி எல்லாம் பேசுதேன்னு தோணுதா? என்னைப் பத்தி தப்பா கூட நினைச்சிருப்பீங்களே!” என்றவள், அவன் பதிலை எதிர்பார்க்காமல் மீண்டும் தொடர்ந்தாள்.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? அவன் அங்க கொல்லப்படாம இருந்திருந்தா, நானே அவனை கொன்னுருப்பேன். அவன் எல்லாம் வாழவே கூடாது” என்றவள் முகத்தில் அத்தனை வெறுப்பு.
இப்பொழுது அவளை அளவெடுத்தான் விழியன். இருபதை எட்டியிருக்காத பாவை; எளிய பருத்தி சுடிதார் அணிந்திருந்தாள். ஒப்பனை ஏதும் இல்லாமலே நான் அழகி என்று எடுத்துக்கூறும் முகம். ‘எல்லாவற்றையும் கடந்துவிட்டேன். இனி எது நடந்தாலும் எனக்கு கவலையில்லை. யாரை கண்டும் பயப்பட நான் ஆளில்லை’ என்பது போன்ற நடத்தை. நான் குற்றம் ஏதும் செய்யவில்லை என்னும் பாவனை அவளிடத்தில். அது அவனுக்கும் தெரியும் தான். ஏனென்றால், அந்த வழிப்பறி கொலையிலும் நடந்தது இதே தானே! அந்த கணவன் மனைவி இருவருக்கும் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு அது நினைவிலும் இல்லை. இருவரையும் மனநல மருத்துவரிடம் அழைத்துக் காட்டி, அவர் செய்த சோதனையிலும் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிந்தபின் தான் அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவித்ததே! அந்த பரிசோதனை முடிவுகளை கோர்ட்டில் சாட்சியாக காட்ட முடியாது என்றாலும், அவர்கள் இருவரும் சென்ற பின்னரே அந்த கொலை நடந்திருக்கிறது என்பதால் மட்டுமே இதுவும் சாத்தியமாயிற்று. இங்கோ, அதற்கும் வழியில்லை. ஏனென்றால், மித்ரா அந்நேரம் அங்குதான் இருந்திருக்கிறாள்.
இவளை கைது செய்தேயாக வேண்டும். ஏனென்றால், அந்த இடத்தில் இவள் இருந்ததற்கான சாட்சியங்கள் தெளிவாக இருந்தது. அங்கிருந்து, அத்தனை பாதுகாப்பையும் தாண்டி, யாருக்கும் தெரியாமல் வெளியேறியிருக்கிறாள், கிட்டத்தட்ட அவள் கொலை செய்து வெளியேறியது போலத்தான். அவன் கொலை செய்யப்பட்ட முறையைத் தவிர்த்து மற்றதை வைத்துப் பார்க்கும்போது இவளையே கொலையாளி என்கிறது அனைத்து தடயங்களும்.
சென்றமுறை அந்த தம்பதியிடம் விசாரித்தது அனைத்தும் அவன் முன் வந்துபோனது. ‘ஹிஸ்டரி ரிபீட்ஸ் இட்செல்ஃப்’ என்று நினைத்தவாறு அபிமித்ராவை விசாரிக்க ஆரம்பித்தான்.
“அவர்மேல அப்படி என்ன வெறுப்பு?”
“அவர்? அந்த நாய்க்கு மரியாதை ஒன்னு தான் கேடு!” என்று நெருப்பை உமிழ்ந்தவள், “நான் இப்போ இந்த நிலைமைக்கு இருக்குற காரணமே அவன் தான்” என்றாள்.
“ஏது? கொலைக்குற்றவாளியாகவா?”
ஒரு முறைப்போடு அவனப் பார்த்தவள், “இல்ல, ஹை-சொஸைட்டி ப்ராஸ்டிட்யூட்” என்க, அவளிடம் இருந்து சத்தியமாக அப்படி ஒரு வாக்கியத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.
“வாட்!” என்றவன் அதிர, அவனை நோக்கியவள் விழிகளில் அத்தனை வழி.
*****
மராட்டியத்தின் தென்மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அது. அங்கிருந்து கர்நாடக எல்லை மிகவும் பக்கம் என்பதால் அங்கு சென்று வேலை தேடுபவர்களும், தங்கள் இதர தேவைகளுக்கு செல்பவர்களும் மிக அதிகம். இதன் காரணமாகவும், எங்கெங்கே எல்லைகள் இருக்கின்றனவோ, அங்கே மொழிகளில் சங்கமிப்பு அதிகமாக இருக்கும் என்பதாலும், அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு மராட்டி, கன்னடம் இரண்டுமே அத்துப்படி. தாய்மொழியும் தேவை, வயிற்றுப்பாட்டு மொழியும் தேவையாயிற்றே!
கோழி கூவும் முன்னமே அங்கே பல வீட்டில் தங்கள் வேலைகளைத் துவங்கிவிடுவர். எந்த ஊராக இருந்தாலும், ஓட்டமில்லாத வாழ்க்கை வாய்ப்பதில்லை. எதற்காகவோ ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இங்கே பெரும்பாலானவர்களுக்கு அன்றைய ஓட்டத்தில் தான் அவர்கள் வயிறு நிரம்புவதற்கான அச்சாரமே இருக்கிறது.
அத்தகைய ஒரு வீட்டில் காலையிலேயே கச்சேரி களை கட்டியது.
“ஆயி (மராட்டியில் அம்மா)… சொன்னா கேளுங்க. இந்த முடியாத நிலைமைல போய் வேலை செய்யனுமா? உங்கள தான் டாக்டர் நல்லா ஓய்வெடுக்க சொன்னாங்கல்ல? பேசாம வீட்டுல தங்குங்க” என்ற அந்த பதினேழு வயது குருத்தை கண்டவருக்கு பெருமை பொங்கியது.
கணவன் இறக்க, கைக்குழந்தையோடு நிற்கதியாய் நின்றவரை கைக்கொடுத்து தூக்கிவிட யாருமில்லை. யாரையும் எதிர்பாராமல் தன் கையை மட்டுமே நம்பி, இதோ, பெண்ணை வளர்த்துவிட்டார். அவளும் தாயின் சுமை உணர்ந்து படித்து, இதோ பன்னிரண்டாம் வகுப்பில் அடியெடுத்தும் வைத்துவிட்டார். ‘எவ்வாறேனும் அவளை ஒரு பட்டப்படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும். அதுவரையேனும் என்னை உயிரோடும் நடமாடும்படியும் வைத்திரு ஆண்டவா!’ என்று வேண்டியவர் அறியவில்லை அவர் வேண்டுகோள் கிடப்பில் போடப்பட்டதை.
“வேண்டாம்மா… நீ உன் படிப்பப் பாரு. நான் வேலைக்கு போறேன். என்னைக்குமே நீ இப்படி எல்லாம் பேசக்கூடாது. உன்னை என்னை மாதிரி கல்லு, மண்ணு தூக்கவா பாடுபட்டு வளர்த்தேன்? நீ நல்லா படிச்சு ஒரு வேலைக்கு போகனும். உனக்கும் இந்த நிலைமை வேண்டாம்மா” என்றவர் தன் வீட்டைச் சுற்றி கண்களை ஓட்ட, அங்கே இருந்ததோ நான்கு சுவர்களும், இருக்கிறேன் என்று சொல்வதற்காக வேயப்பட்ட ஓலைக்கூரையும் தான். வீட்டிற்கு கதவு கூட இல்லை. அதற்கு பதில் சேலையை தொங்க விட்டிருந்தனர். இதிலிருந்தே தெரிந்திருக்கும் பெண்களிருவருக்கும் கிடைக்கும் இரவு உறக்கத்தைப் பற்றி.
“நீங்க கவலையே படாதீங்கம்மா. நான் படிக்கத்தான் போறேன். ஆனா, நீங்க இப்படி இருக்கும்போது உங்கள வேலைக்கு அனுப்பிட்டு எப்படி நான் நிம்மதியா இருக்க முடியும்? இப்போ எனக்கு லீவ் தான? உங்களுக்கு சரியாகற வரைக்குமாவது நான் போயிட்டு வரேன்” என்றவள், தன் தாயின் முகம் மறுப்பைக் காட்டவும், அவரை தன் பாணியில் கொஞ்சியும் கெஞ்சியும் வழிக்குக் கொண்டுவந்தவள் கிளம்பியும் விட்டாள்.
அவளுக்கும் வண்டி வண்டியாக ஆசை இருந்தது, படிக்க வேண்டும் என்று. ஆனால், நிதர்சனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? இப்போது அவள் படிப்பை விட தாயின் ஓய்வு முக்கியம், அவர் உடல்நிலை முக்கியம். அதனால், அதற்கு முக்கியத்துவம் அளித்து இதோ தனக்கு பழக்கப்படாத வேலைக்கு செல்ல தயாராகிவிட்டாள். பார்ப்போம், படிப்பதற்கு எண்ணற்ற வழிகளா இல்லை? என்பதே அவள் எண்ணமாக இருந்தது.
தன் தாய் வேலை செய்யும் இடத்திற்கு சென்று பார்த்தாள் அவள். வானுயரக் கட்டிடம் பிரமாண்டமாக நின்றிருந்தது, பாதி முடிந்தும் முடியாத நிலையில். அவளைப்போலவே சித்தாள் வேலைக்கு வந்த பெண்மணிகள் தங்கள் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். இவளுக்கோ எங்கே செல்வது என்று புரியாத நிலையில் நின்றிருந்தாள்.
“அக்கா!” என்றதொரு குரல் கேட்க, திரும்பினாள் அவள். அங்கே அவளை ஒத்த வயதுடைய பெண் நின்றிருந்தாள்.
“வழிய மறைச்சுட்டு நிக்கறீங்கக்கா” என்றவள், மித்ரா வழிவிடவும், அவளைத் தாண்டி நடந்தாள். என்ன நினைத்தாளோ, மீண்டும் மித்ராவிடம் வந்தவள், “நீங்க யாரு? ஏன் இங்க நிக்கறீங்க?” எனக் கேட்க,
“நான் இங்க வேலைக்கு…” என்று ஆரம்பிக்க, அதற்குள் ஒருவன் வந்து அனைவரையும் அன்றைய வேலையைத் துவங்குமாறு கத்த,
“அக்கா… இங்க நிக்க வேண்டாம். வாங்க. நான் உங்கள கூட்டிட்டு போறேன்” என்றவள் அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் விட, அவரும் இவளிடம் விசாரித்துவிட்டு வேலையைக் கொடுத்தார்.
அன்றிலிருந்து மித்ரா தினமும் சித்தாள் வேலைக்கு செல்வது வழக்கமாயிற்று. தாயார் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவளுக்கு தன் படிப்பை மூட்டை கட்டிவிட வேண்டிய நிலை. அதையும் தைரியத்தோடு ஏற்றுக்கொண்டாள் பெண். இதுதான் நமக்கு வாய்த்தது என்றால், கவலைப்பட்டு என்ன பயன் என்பது அவளது எண்ணம்.
காலங்கள் சில ஓட, அவள் முதன்முதலில் பார்த்த பெண் உற்ற தோழியாய் மாறினாள். அவள் பெயர் சாவ்யா. அவளும் மித்ராவைப் போலவே. இருவரது வாழ்வும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது, அவர்கள் இருவரும் அவன் கண்களில் விழும்வரை.
அவன், இவர்கள் வாழ்வை புரட்டிப் போடப் போகிறவன். சாவ்யாவின் சாவுக்கும், மித்ராவின் வாழ்நாள் நரகத்திற்கும் காரணமானவன். யாரவன்?
இதோ கதையின் அடுத்த பதிவு. கொஞ்சம் பெரிய பதிவு தான். அதனால் தான் டிலே ஆகிவிட்டது.
நிலவு 09
கொலை நடந்த அன்று,
இறந்தவன் பல நாட்களாக போலீஸாருக்கு தண்ணி காட்டிவரும் குற்றவாளி. அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம். சில நேரங்களில் குற்றவாளிகள் கண்முன்னே இருந்தாலுமே அவர்களை கைது செய்யவிடாமல் கைகள் கட்டப்பட்டுவிடுகிறது பலநேரங்களில். அவ்வாறு தப்பித்தவனுள் இவனும் ஒருவன். ஆனால், சமுதாயத்தில் முக்கியமானதொரு புள்ளி. இரண்டாவது, அவன் முன் நடந்த கொலைகளைப் போலவே கொல்லப்பட்டிருக்கிறான்.
“ஓ காட்…” என தன் தலையில் கைவைத்தவன், உடனே போலீசாருக்கு அழைத்து விடயத்தைக் கூறிவிட்டு, அங்கே ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று ஆராய்ந்தான்.
அப்போதுதான் அவன் கண்ணில் பட்டது அது, ஒரு சிறிய டாலர். அதனை யாரும் வரும்முன்/பார்க்கும்முன் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டவன், காவல்துறையினர் வந்ததும் அவர்களோடு சேர்ந்து விசாரிக்கலானான்.
முதலில், கொலையைப் பார்த்ததும் அங்கிருந்தவர்களை ஓரிடத்தில் அமர்த்தியிருந்தான். இது ஒரு தொடர்கொலை அல்லவா? குற்றவாளி தப்பிவிடக் கூடாது என்பதற்காக இது. போலீசார் வரும்வரை பொறுமைகாக்க அவனுக்கு இயலவில்லை.
தடவியல் நிபுணர் வரும்வரை அங்கே யாரையும் செல்ல விடாமல் தடுப்பதற்கு க்ளப் பணியாளர்களையே காவலுக்கு வைத்துவிட்டு அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்றான் அவன். இது பொதுவாக செய்யும் நடைமுறை தான். ஒரு குற்றம் நடந்திருக்கும்போது அங்கே மக்கள் கூடாமல், போலீசாருக்கு தகவல் கொடுப்பது அவசியம். அவ்விடத்தில் தடயங்கள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அவற்றை தடவியல் நிபுணர் சேகரிப்பார் (கைரேகை, தலைமுடி என என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்). அவ்விடத்தில் பலர் கூடும்போது குற்றவாளிகளின் தடயங்கள் அழிந்துபோக வாய்ப்புண்டு. எனவே, அவ்விடத்தை பாதுகாத்து வைப்பதும், சின்ன சின்ன தடயங்களைக் கூட அப்போதே குறிப்பெடுத்துக்கொள்வதும் அவசியம்.
இங்கே மக்கள் இருக்கும் அந்த பெரிய ஹாலிற்கு வந்தான் விழியன். அனைவரும் பீதியோடு இருந்தார்கள். நல்லவேளை, யாருமே பார்க்கவில்லை அந்த சடலத்தை. எவ்வாறு இறந்தான் என்பது அவர்களுக்கே இன்னும் சரியாக தெரியாத வேளையில், இந்த கொலைகளைப் பற்றி பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் அனைத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிடுவதை அவன் விரும்பவில்லை. அது போலீசார் அடுத்து என்ன செய்யப்போகின்றனர் என்பதை கொலைகாரன் கண்டுகொள்ளவும் செய்துவிடுமே! எனவே, எந்த தகவலும் வெளியே கசியாதது மிக முக்கியம். அதை திறம்பட செய்தான் விழியன்.
கூடியிருந்தவர்களை விசாரிக்கும்போது எந்த உபயோகமான தகவலும் கிடைக்கவில்லை. இருந்தவர்கள் அனைவரும் தத்தமது உலகத்தில் சஞ்சரிக்க வந்தவர்கள், மற்றவர்களைப் பற்றிய எந்த அக்கறையோ கவலையோ இல்லாது தங்களுள் தொலைந்தவர்கள். எனவே, அடுத்து அவ்விடத்தின் கேமிராவை பரிசோதித்தான் விழியன்.
அதில், இறந்தவன் க்ளப்பினுள் வந்ததில் இருந்து அவன் செய்கைகளை கவனிக்கும்போதுதான் ஒன்று அவர்கள் கவனத்திற்கு வந்தது. அவன் காரில் இருந்து இறங்கி, ரூமினுள் செல்லும் வரை ஒரு பெண் அவன் உடனிருந்தாள். ஆனால், அவன் கொல்லப்பட்ட ரூமில் அவளுமில்லை, அவள் இருந்ததற்கான தடயமும் இல்லை.
அந்த பெண் யார்? இதே யோசனையோடே அவன் தன் வீட்டிற்கு வர, வீட்டு சாவிக்காக பாக்கெட்டினுள் கை விடும்போது தான் தட்டுப்பட்டது அந்த டாலர். சட்டென்று ஏதோ தோன்ற, அந்த டாலரை ஆராய, அது விற்கப்பட்ட கடையின் விபரம் இருந்தது.
விடிந்தவுடனே அங்கே சென்று விசாரிக்க, விரைவில் அதன் உரிமையாளர் முகவரி கிடைத்தும் விட்டது அவனுக்கு. சற்று பெரிய இடம் தான். முதலில் அவன் யாரிடம் தந்தேன் என்பதை சொல்லவே இல்லை. ஆனால், டாலர் அவன் பெயரில் வாங்கப்பட்டிருப்பதும், அது கொலை நடந்த இடத்தில் கிடைத்திருப்பதாலும் சந்தேகத்தின் பெயரில் அவன் கைது செய்யப்படலாம் என்று சொன்னவுடன் அளித்துவிட்டான் அதனை உபயோகப்படுத்துபவர் ஜாதகத்தையே!
அவ்வாறு தான் அபிமித்ராவினை கண்டுகொண்டது. அந்த சி.சி.டி.வி.யில் இருந்தது இவள் தான் என்பது உறுதியானதும் அவளை போலீஸ் உடனே கஸ்டடியில் எடுத்து விசாரிக்க ஆரம்பித்தது.
*****
அபி அங்கே வேலைக்கு சேர்ந்து ஆறு மாதம் போல் ஆகியிருந்தது. அதுவரை நன்றாக சென்றுகொண்டிருந்த அவர்கள் வாழ்வினை திசை திருப்பவென்றே வந்தான் அவன். அவன், சபரீஷ்.
சவரீஷ், சென்னையே சேர்ந்த ஒரு கட்டுமானத் தொழிலதிபன். இது வெறும் கண்துடைப்பே! அவனது உண்மையான வேலை, பெரிய புள்ளிகள் வேண்டுவதை சப்ளை செய்வது, பெண்கள் உட்பட. அதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த தொழில்.
நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் தங்கள் கட்டுமானப் பணி நடக்குமிடங்களுக்குச் செல்வான். அங்கே அவனுக்குத் தோதான பெண்கள் மாட்டினால் எவ்வாறேனும் அவர்களை சென்னைக்கு கொண்டுவந்துவிடுவான். அதன்பின் அப்பெண்களின் வாழ்க்கை மிகப்பெரிய ? தான்.
அவ்வாறு அங்கும் வந்தவன் கண்களில் விழுந்தாள் அபிமித்ரா. அவன் அங்கிருக்கும் தன் ஆட்களிடம் அவளை கண்காணிக்குமாறு கூறிவிட்டு செல்ல, இது எதுவுமே அறியாமல் தன் அலுவல்களை செய்துகொண்டிருந்தது அந்த சின்னச் சிட்டு.
ஒரு நாள், சாவ்யா மித்ராவின் அருகில் வந்தாள். அவள் முகமோ அழுதழுது சிவந்திருந்தது. அதைப் பார்த்த மித்ரா, என்னவென்று கேட்க, அப்போதுதான் சொன்னாள் சாவ்யா தான் கர்பமாக இருப்பதை. இது மித்ராவிற்கும் அதிர்ச்சிதான். யார் காரணம், என்ன செய்வது என ஒன்றும் புரியவில்லை மித்ராவிற்கு. சாவ்யாவிடம் விசாரிக்க, தானும் சூப்பர்வைசரும் பல மாதங்களாக காதலிப்பதாகக் கூறினாள். அவன் தன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் சொன்னாள். அதைக் கேட்ட மித்ராவோ, ‘அட அசட்டுப் பெண்ணே! அவன் சொன்ன எல்லாத்தையும் நம்பி இப்படி வயித்தை தள்ளிட்டு வந்து நிக்கறியே!’ என்று நினைத்தாலும் அதனை வெளியில் சொல்லவில்லை.
சூப்பர்வைசரான அந்த மோகனிடம் சென்று பேசிவிடச் சொன்னாள் மித்ரா. சாவ்யாவும் சென்று பேச, அவனோ, இவ்விஷயம் கேட்டு அதிர்ச்சியடைந்தாலும், சாவ்யாவை திருமணம் செய்துகொள்ள தான் தயாராக இல்லை என்றான். ஏன் என்றவள் கேட்டபோது சாதியையும் அந்தஸ்தையும் காரணமெனக் காட்டினான். காதலிக்கும்போது இவை எல்லாம் எங்கே சென்று ஒளிந்துகொள்ளுமோ! ஒருவேளை, அதனால் தான் காதலுக்கு கண்ணில்லை என்கின்றார்களோ?
மோகன் அவ்வாறு சொன்னதும் அவனை விட்டுவிடவில்லை சாவ்யா. அவனை விடாது தொடர்ந்தாள். ஊர் முழுவதும் சொல்லிவிடுவேன், போலீசில் புகாரளிப்பேன் என பலவாறாக மிரட்டினாள். எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை அவன். இந்த குழந்தை எனதில்லை என்பேன் என்றான். அதற்கு கடைசி அஸ்திரமாக டி.என்.ஏ. டெஸ்டை எடுத்தாள் அவள். சாவ்யாவிற்கோ, நாளாக ஆக வயிறு காட்டிக்கொடுத்துவிடுமே என்ற பயம். வீட்டில் இதுவரை தெரிந்துவிடாமல் இருக்கவே படாதபாடு பட்டுவிட்டாள் சாவ்யா. இதில் முதலில் இருந்தே போலீசுக்கு செல்லலாம், வீட்டில் சொல்லலாம் என்று குதிக்கும் மித்ராவையும் சமாளித்தாக வேண்டியிருந்தது.
சாவ்யா தன் பிரம்மாஸ்திரத்தை எடுத்த இரண்டாவது நாள் மாலை வேலை முடியும் தருவாயில் அவளை அழைத்திருந்தான் மோகன். கருவுற்றிருந்த நிலையிலும் வேலைக்கு சென்று கொண்டுதான் இருந்தாள் சாவ்யா.
மறுநாள் காலை வீட்டில், காதலித்தவனைக் கரம்பிடிக்கிறேன் என்றொரு கடிதம் எழுதிவைத்துவிட்டு வந்துவிடுமாறும், வரும்போது அவளுக்கு சாட்சிக் கையெழுத்து போட மித்ராவையும் அழைத்துவருமாறும், ஒரு ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் முடிந்ததும் இருவருமே இந்த மாநிலத்தையே விட்டு வேறு எங்காவது செல்லப்போவதாகவும் கூறினான்.
அதனை நம்பியவளும் அதை அப்படியே செயல்படுத்த, அன்றோடு இரண்டு பெண்களின் வாழ்வில் இருந்த சூரியன் அஸ்தமித்தது.
மறுநாள் காலையில் வழக்கம்போல் கிளம்பியவள் வழியில் மித்ராவையும் அழைத்துக்கொள்ள, இருவரும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்து அவர்கள் எதிர்பார்த்த கார் வந்ததும் அதில் ஏறினர். அதில் ஏறிய சிறிது நேரத்திலேயே இருவரும் மயக்கமடைய, அதன்பின் சாவ்யா தன் விழிகளை திறக்கவே இல்லை.
மயக்கத்திலேயே அவளைக் கொன்று செல்லும் வழியில் ஒரு கிணற்றில் வீசிவிட்டு சென்றிருந்தனர். (சில காரணங்களால் முழுமையாக நினைத்ததை எழுதவில்லை. இவ்வாறே இருக்கட்டும்.)
மறுநாள் கண் திறந்த அபிமித்ரா கண்டதென்னவோ இருட்டறையே! இருளடைந்த அவள் வாழ்வைப் போல.
அந்த அறையில் அவளுக்கான உணவு, குளியலறை இரண்டும் இருந்தது. அதுவே அவள் தட்டுத்தடுமாறி தடவித் தடவி கண்டுகொண்டது. இருந்தும் உண்ண அவளுக்கு விருப்பமில்லை. தான் இங்கிருப்பது தனக்கு ஆபத்து என்பது மட்டும் உணர்ந்தவள், அங்கிருந்து தப்பப் பார்க்க, அந்தோ, எந்த வழியுமில்லை. யார் கையிலாவது மாட்டும்முன் சாவது மட்டுமே வழி எனத் தோன்ற, அதற்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால், அந்தோ பரிதாபம்!
தன் நிலையையும், தன்னைக் காணாமல் தாய் எவ்வாறு இருப்பார் என்ற கவலையிலுமே நாட்கள் இரண்டு ஓட, சொர்க்கவாசல் என திறந்தது கதவு. அதன்வழியே நுழைந்தவன் முகம் தனக்கு பரிட்சயமானதாக இருக்க, என்ன யோசித்துப்பார்த்தும் அவன் யார் என்பதை நினைவில் மீட்ட முடியவில்லை.
அவளருகே வந்தவன், அவள் முழங்கை பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று குழியலறையுள் விட்டவன், “இன்னும் பத்து நிமிஷத்துல குளிச்சுட்டு வர. உனக்கான துணி எல்லாம் இங்கே இருக்கு” என்று சுட்டிக் காட்டியவன் அங்கேயே நின்றுகொண்டான்.
“என்னால முடியாது. யார் நீ? என்னை வெளியே விடு” என்று அவள் திமிர, ஒரு அடி வைத்தவன், “நீயா குளிக்கலைன்னா நான் செய்வேன்” என்றவன் கண்கள் அவள் உடலில் பதிய, சட்டென்று கதவை சாற்றிக்கொண்டாள்.
இத்தனை நாள் இருட்டில் இருந்த அந்த அறை இப்போது தான் சற்று வெளிச்சத்தோடு இருந்தது. அவன் இருக்கும் தைரியத்தில் அறையில் கரெண்ட் கொடுத்திருப்பார்கள் போல. அதன் உதவியோடு அங்கே மேற்புறத்தில் இருந்த கண்ணாடி சாளரத்தின் வழியே நோக்க, பெரிய மதில் சுவருக்குள் அமைந்த அந்த வீட்டைச் சுற்றி காவலுக்கு ஆள் இருப்பது புரிந்தது.
அதற்குள், வெளியே இருந்து, “இன்னும் எவ்வளவு நேரம்?” என்று கேட்க, அதற்கு அவள் பதிலே சொல்லவில்லை. அதில் எரிச்சலடைந்தவன், கதவை விடாமல் தட்ட, தன் தலையை மட்டும் வெளியே நீட்டியவள், “நீ வெளிய போ! நான் வரேன்!” என்று திடமாக சொன்னவள், குளிக்க ஆரம்பித்தாள். அந்த இடைபட்ட நேரத்தில் என்ன செய்வதென்றும் யோசித்துவிட்டாள். ஆனால், அதனை செயல்படுத்தத்தான் எந்த வழியும் இல்லாமல் போகப்போகிறது.
குளித்துவிட்டு வெளியே வந்தவளை மற்றொரு அறையில் தள்ள, அங்கே இவளைப் பார்த்து இளித்தவாறு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் அமர்ந்திருந்தார். கதவை கை வலிக்க வலிக்க தட்டியும் ஒரு பிரியோஜனமும் இல்லை அவளுக்கு. கடைசியில் அவனிடமே கெஞ்ச, அவனோ அதனை காது கொடுத்து கேளாதவன் போல் அவளை நெருங்கினான். தயவு தாட்சண்யம் பார்த்தால் கொடுத்த பணம் என்னாவது?
அவனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ளப் போராடியவள் கையில் மாட்டியது அந்த அலங்கார ஜாடி. அதனை எடுத்து அவன் தலையில் அடிக்க, அந்த அவன் அலறலில் வேளியே இருந்த மற்ற அவன்-கள் ஓடி வந்தார்கள். அதன்பின் அவளுக்கு கொடுத்த தண்டனைகளை எல்லாம் சொல்லி மாளாது.
அதற்கு அடுத்த முறை அவளுக்கு கட்டிலடங்கா பாதுகாப்பு. இவ்வாறே இரண்டு வருடங்கள் ஓடிவிட, அவாள் பலருக்கு விருந்தாக்கப்பட்டாள், அதில் சிலர் அவளால் தாக்கவும் பட்டனர்.
ஒரு கட்டத்தில் தாக்குதல்களை நிறுத்தி பொறுமையைக் கைப்பிடித்தாள் மித்ரா. தப்பிக்கும் மார்க்கம் கிடைக்கும் போது தப்புவதற்கு தெம்பு வேண்டும் இல்லையா?
இவள் அமைதியை சம்மதம் என நினைத்து சில மாதங்களுக்குப் பின் அழைத்து வந்திருந்தான் இந்த க்ளப்பிற்கு. வந்த இடத்தில் தான் சபரீஷின் கொலை நடந்தேறியிருந்தது.
*****
அனைத்தையும் அபிமித்ரா சொல்லி முடிக்க, இன்று இது போதும் என நினைத்தவன், விசாரணை குறிப்புகளையும் டேப் ரிக்கார்டரையும் எடுத்துக்கொண்டு வெளிவந்தான்.
அதற்கெனவே காத்திருந்தாற் போல் வந்த காவலாளி ஒருவர், விழியனைப் பார்த்து, அவனைக் காண ஒருவர் வந்திருப்பதாகக் கூற, அங்கே அவன் கண்டது தனக்கு முதுகு காட்டியவாறு அமர்ந்திருந்த ஆர்கலியைத் தான்.
அவன் கேட்டதற்கு பதில் கூறாது அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவள், “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும். இப்போ உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியுமா?” என்று கேட்டாள்.
அவள் முகத்தைக் கண்டவனுக்கு அவள் செய்கை வித்தியாசமாகப் பட, உடனே அவளை அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கி பயணித்தான்.
*****
விழியனின் வீட்டில்,
இருவரும் உள்ளே நுழைய, அவளை வழக்கமான இடமான ஹாலில் அமரச் செய்துவிட்டு, தண்ணீர் எடுத்துவந்து தர, அதனை ஏதோ அமிர்தம் போல் பருகினாள் ஆர்கலி. அவளுக்கு அது தற்போது வெகுவாக தேவைப்பட்டதோ என்னவோ!
தன்னை நிதானப்படுத்திக்கொண்டவள், அவனை நோக்கி, “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே!” என்று கேட்டவள், அவன் இல்லை என்று தலையசைக்கவும், மெல்ல அவனிடம்,
“எங்கள முதன்முதல்ல பாத்தீங்களே! அன்னைக்கு தான் முதல் கொலை நடந்திருக்கு. நீங்க குடுத்த ஸ்டேட்மெண்ட் படி பார்த்தா, எங்கள அனுப்பி விட்ட 10 டூ 15 நிமிஷத்துல இந்த சம்பவம் நடந்திருக்கு. நீங்க தான் அந்த ஸ்பாட்டுக்கு முதல்ல போயிருக்கீங்க. எங்களையும் அவசர அவசரமா அங்க இருந்து கெளம்ப வெச்சீங்க. சோ, இப்படி ஒரு சம்பவம் ஆல்ரெடி நடக்கப்போறது உங்களுக்கு தெரிஞ்சு எங்கள அங்க இருந்து அப்புறப்படுத்தின போல இருக்கு. அடுத்த சம்பவமும் சரி, இப்போவரைக்கும் நடக்குறதும் சரி, எல்லாத்துக்கும் நீங்க ஏதாவது ஒரு வகைல அந்த ஏரியால அப்போ ட்யூட்டியாவோ இல்லை, முதல்ல போற போலீசாவோ இருந்திருக்கீங்க. இதெல்லாம் வெச்சு பாக்கும்போது…” என்று நிறுத்தியவள் அவன் முகம் பார்க்க, அவனோ கல்லாக இறுகி ‘ம்ம்ம்’ என்று மட்டும் சொன்னான்.
அதில் எச்சிலை கூட்டி விழுங்கியவள், “நீங்க இந்த சம்பவங்கள்ள ஏதாவது ஒரு வகைல சம்பந்தப்பட்டிருக்கலாம்னு எனக்கு தோணுது. நீங்… நீங்க இந்த கொலை எல்லாம் செய்யலை இல்ல?” என தன் உயிரைக் கண்களில் தேக்கியபடி அவனைப் பார்த்து கேட்டாள். அவன் பதிலில் தான் தன் வாழ்வே அடங்கியிருப்பதைப் போன்றதொரு பார்வை.
“நீங்க இந்த சம்பவங்கள்ள ஏதாவது ஒரு வகைல சம்பந்தப்பட்டிருக்கலாம்னு எனக்கு தோணுது. நீங்… நீங்க இந்த கொலை எல்லாம் செய்யலை இல்ல?”
தன்னையே பர்த்துக்கொண்டிருந்தவளை தீவிழிப் பார்வை பார்த்தான் விழியன். அவனால் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை. எனவே, அவளுக்கு மறுபுறம் திரும்பி தன்னை கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தான். அப்போது மட்டும் ஆர்கலி அவனை பார்த்திருக்க வேண்டும்! அவன் முயற்சிகள் எல்லாம் வீண் என்பது போல் அவள் உரைத்த சொற்கள் அவன் எரிமலை நெஞ்சை குளிர்வித்தே விட்டது.
“எனக்கு தெரியும், ஒரு போலீசா உங்ககிட்ட இப்படி கேட்கறது தப்புன்னு. ஆனா, ஒரு ஜார்னலிஸ்டா பாக்கும்போது உங்களத் தான் தப்பா சொல்லுது. அதனால தான் உங்ககிட்டயே வந்து நிக்கறேன். இது கூட என்னோட பத்திரிக்கை தர்மப்படி தப்புதான். ஆனா, எல்லா நேரமும் புத்தி சொல்றத கேட்க முடியாதே!”
“என் புத்தி உங்கள நம்ப வேண்டாம் சொல்லுது! என் மனசு உங்க கால சுத்தி கெடக்குது. நான் எத கேட்க?”
“மொத தடவை உங்கள அந்த வனாந்திரத்துல பார்த்தபோதே எனக்கு ஏதோ நீங்க எனக்கு ரொம்ப முக்கியம்ன்னு ஒரு ஃபீல். அத மாத்த ட்ரை பண்ணப்போ தான் உங்கள அந்த க்ரைம் சீன்ல பாத்தேன். உங்கள ஃபாலோ பண்ணிட்டு வந்தது மனசக் கேட்டுன்னா, கேள்வியா கேட்டது, உங்கள என்மேல கோபப்பட வெச்சு, திட்ட வைக்க தான். அப்படியாவது இந்த பழம் புளிக்கும்ன்னு ஒதுங்கிப் போக நினைச்சேன். ஆனாலும், இந்த வெட்கங்கெட்ட மனசு இந்த யூனிஃபார்ம்காரன் தான் வேணும்னு நின்னுது. அதுக்கு பின்ன நடந்தது எல்லாம் எனக்குள்ள நடந்த போராட்டமே தான். நான் என்ன பண்ணட்டும்? என் புத்தி சொல்ற, நீங்க கெட்டவர்ங்கற பேச்ச கேக்குறதா? இல்ல, மனசு சொல்ற, நீங்க நல்லவர்ங்கற பேச்ச கேக்குறதா?” என்றவள், அடுத்து, அவன் முன் வந்து நின்று, “நீங்க நல்லவரா? கெட்டவரா?” என்று நாயகன் குழந்தைமுகத்தை வைத்துக்கொண்டு வினவவும், அவளை உடனே தன் கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டான்.
அவன் ஸ்பரிசத்தில் இம்மை மறுமை அனைத்தும் மறந்து போனது அவளுக்கு. அவன் விழிகளுக்கும் விழுந்தே மற்றோர் உலகத்திற்கு சென்றுவிடுபவள், அவன் தொடுகையில் எட்டாவது கிரகத்தையும் தாண்டி அவனோடு ‘ஊலாலா’ பாடிக்கொண்டிருந்தாள்.
விழியனுக்கோ நெஞ்சு விம்மி தெரித்தது சந்தோஷத்தில். இதுவரை தொங்குபாலம் போல் தொங்கிக் கொண்டிருந்த அவன் காதல் ஒருவழியாக எந்த சேதாரமும் இல்லாமல் அவன் கை சேர்ந்ததே! அவள் தன்னவள் என்று கண்டுகொண்ட நொடியிலிருந்து அவன் பட்ட பாடு சொல்லி மாளாது. ஏனென்றால், சாரோட எஸ்.டி.டி. (ஹிஸ்டரி) அப்படி!
இவனே அவளை எவ்வாறு நெருங்க என்று யோசித்துக்கொண்டிருந்த தருணத்தில், அதற்கு அவசியமே இல்லை என்னும் விதத்தில், இதோ அவன் சொர்க்கம் அவன் கைகளில் இப்போது.
அவளின்றி அவன் வாழ்க்கையில்லை! அவனின்றி அவள் முழுமையில்லை. இதை அவன் அறிவான். தற்போது அவள் காதலையும் பெற்றுவிட்டான். ஆனால், இந்த காதலில் அவள் உறுதியுடன் கடைசிவரை அவன் துணை நிற்பாளா?
எது எப்படியோ, இனி அவன் ஆழியை அவன் விடுவதாக இல்லை.
தன் கைசேர்ந்த கடலை (ஆர்கலி என்றால் கடல் என்று பொருள்) இன்னும் தன்னுள் சேர்த்து அந்த சமுத்திரத்துள் புதைந்துவிடுபவன் போல் அவளுள் கரைந்து அவள் மணத்தை சுவாசித்தவாறே, “ஏண்டி… நான் நல்லவனா கெட்டவனான்னு கேட்கற? காதல் இதெல்லாம் பார்த்துட்டா வரும்? இன் கேஸ், நான் கெட்டவன்னு சொன்னா என்ன பண்ணுவ? விட்டுட்டு போயிடுவியா?” என்று கேட்டவன் நெஞ்சத்தில் இருந்து தன் தலையை நிமிர்த்தி அவனை நோக்கி இல்லை என்றவாறு தலையசைத்துவிட்டு மீண்டும் அவன் இதயத்துடிப்பை கேட்க ஆவல்கொண்டு சாய்ந்துகொண்டாள்.
“அதெல்லாம் பண்ண மாட்டேன். என்ன, குற்றத்தின் அளவு பொறுத்து உங்கள போலீஸ்ல மாட்டிவிட்டு கம்பி எண்ண வைச்சிருவேன்” என்றவள் தன் நாக்கைக் கடித்துக்கொண்டாள், அவனே போலீஸ் தான் என உணர்ந்து.
அவள் செய்கை கண்டு வாய்விட்டு சிரித்தவன், “நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ ஆழி! இந்த உலகத்துல நூறு சதவீதம் நல்லவன்னும் யாரும் கிடையாது, நூறு சதம் கெட்டவன்னும் யாரும் கிடையாது. அந்த ரேஷியோ வேணா ஒருத்தருக்கொருத்தர் மாறுபடும். உனக்கு நல்லவனா தெரியுற நான் வேற யாருக்காவது கெட்டவனா தெரியலாம். அப்படி என்னை பார்த்த எவனாவது என்மேல கொலைவெறில சுத்தலாம். இதெல்லாம் யோசிச்சுட்டு இருந்தா வாழ முடியாது. ஆனா, ஒன்னு மட்டும் சொல்றேன். யாருக்காவது நான் செய்யற தப்பால நன்மை விளையுதுன்னா கண்டிப்பா அதை செய்வேன்” என்றவன் அவள் கண்களில் அப்பட்டமான பயத்தைக் காணவும், அவள் கேட்ட முதல் கேள்விக்கான பதிலாக, “நான் ஒன்னும் அவ்வளவு கெட்டவன் இல்ல, துளியூண்டு நல்லவன் தான்” என தன் விரல்களை மடித்துக் காட்ட, அதில் கலகலவென சிரித்தாள் பெண். அதைக் கண்டு அவன் மனமும் லேசானது.
இவர்கள் இருவரையும் தொலைவில் இருந்து கண்ட அந்த உருவம் சத்தம் எழுப்பாமல் ஒரு சாளரத்தின் வழியே வெளியேறியது.
*****
காதலர்கள் சேர்ந்தால் காலம் நின்றுவிடுமா என்ன? அதுபாட்டுக்கு தன் வேலையை செய்ய, நேரத்தை கண்டுகொள்ளாமல் கட்டுண்டு இருந்தனர் இருவரும்.
சட்டென்று தன் தலையை தூக்கியவள், விழியனை நோக்கி, “தனு… இந்த கொலை எல்லாம் நீங்க இங்க வந்ததில இருந்து தான் ஆரம்பிச்சது. அதனால, நீங்கதான் பேர் வாங்க இப்படி எல்லாம் செய்யறீங்கன்னு எங்க பத்திரிக்கை வட்டாரத்துல ஒரு பேச்சு. அத கேட்டதும்தான் ஓடி வந்தேன்” என்க,
அவளை முறைத்தவன், “அப்போ அந்த விஷயத்த முதல்ல க்ளாரிஃபை பண்ணி பேர் வாங்கத்தான் நீ என்னை தேடி வந்திருக்க?” என்று கேட்க, அவன் கண்களிலே அவள் தனக்காக தன்னை தேடி வரவில்லை என்ற வலி அப்பட்டமாக.
“எனக்கு ஆல்ரெடி இந்த டவுட் இருந்துச்சு தான். ஆனால், மத்தவங்க உங்கள சந்தேகப்படும்போது தாங்கமுடியலப்பா. அதான் உடனே உங்கள தேடி வந்தேன்” என அவன் முகம் பார்த்தாள், தன் மீது கோபமாக இருக்கிறானோ என்றெண்ணி.
அவனோ அவ்வாறு இல்லை என்பது போல் சொல்லி, “அடியே! என் முந்தைய ரெக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்துப்பாரு டி. நான் ஏன் இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யனும்? அவன் சொன்னான், இவன் சொன்னான்னு எதையாவது நினைச்சு குழம்பாதே! சரியா?” என்றான்.
அதற்கு சம்மதமாகத் தலையாட்டியவள், “எதுக்கும் யாரு குற்றவாளின்னு சீக்கிரம் கண்டுபிடியுங்க தனு. உங்க பேர் தான் பஞ்சர் ஆகுது” என்று அங்கலாய்க்க, அதில் சிரித்தவன்,
“அந்த பஞ்சரையும் வாளியையும் நாங்க பாத்துக்கறோம். நீங்க எங்கள மட்டும் பாருங்க” என்று கொஞ்சலாக கேட்க,
“ஐ… ஐயாக்கு ஆசைதான். ஹலோ பாஸ்… உங்கள நம்பி மட்டும் இல்ல, எங்கள நம்பியும் மொத்த சென்னையும் ஒப்படைச்சிருக்காங்க. அதை பார்க்க வேண்டாம்” என்றவள் அவன் பிடியில் இருந்து நழுவி சிட்டாக பறந்துவிட்டாள்.
ஆர்கலியை இன்னும் சிறிது நேரம் தன்னோடு நிறுத்திக்கொள்ள நினைத்தவன், நேரமாவதை உணர்ந்து அவள் போக்கிற்கே விட்டுவிட்டு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான்.
பின், வானத்தை நோக்கி, “அம்மா, அப்பா, என்னைப் பத்தி தெரிஞ்சப்போ ரொம்ப கவலைப்பட்டீங்கள்ள, என் வாழ்க்கை என்ன ஆகும்ன்னு? இப்போ எனக்கே எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா. என் சுகம், துக்கம் எல்லாத்தையும் பங்குபோட. ஆனா இதை பார்க்க நீங்க யாரும் இல்லாம போயிட்டீங்களே!” என்றவன் முகம் வேதனையை தத்தெடுத்திருந்தது.
*****
“சார்” என்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும், “வாங்க” என்றவன், உள்ளே வந்தவரைப் பார்த்து, “நான் கேட்ட ஃபைல்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தாச்சா?” என்று கேட்க,
தன் கையில் கத்தையாக இருந்த ஃபைல்களை அவன் மேஜையில் வைத்தவர், “சார், கடந்த இரண்டு வருஷத்துல, அதாவது, நீங்க இங்க டியூட்டி ஜாயின் பண்றதுக்கு முன்னாடி இங்க நடந்த கொலைகள் சம்பந்தப்பட்ட ஃபைல்ஸ் சார் இது எல்லாம். நீங்க கேட்ட மாதிரி குற்றவாளிகள் தனியா, பொதுமக்கள் தனியான்னு எடுத்துட்டு வந்திருக்கேன். அடையாளம் காணப்படாத சடலங்கள் கூட இருக்கு” என்றவர் அவனுக்கு வேறு ஏதாவது தேவையா எனக் கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் சென்றதும் அந்த ஃபைல்களை எடுத்து ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான் விழியன். அவனுக்கு ஆர்கலி சொல்லிச் சென்றதே நினைவில் ஆடியது.
‘நீங்க வந்ததுல இருந்து தான் இந்த கொலைகள் நடக்குறதா பேச்சு!’
ஒருவேளை அவன் வருகைக்கு முன்பே இது ஆரம்பிக்கப்பட்டிருந்தால்? அது யார் கவனத்திற்கும் வராமல் போயிருந்தால்?
இதோ கதையின் அடுத்த பதிவு. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
நிலவு 11
மதுரை, தூங்கா நகரம். இங்கே தொழில் செய்ய வருபவர்கள் ஏராளம். அவ்வாறு வடக்கில் இருந்து வந்த ஒரு குடும்பம் தான் அவர்களுடையது. பூர்வீகம் மதுரையாகவே இருந்தாலும், அந்தக் காலத்தில் துணிகளுக்கு புகழ் பெற்ற இடமான குஜராத்தை தேடி சென்றனர் தொழிலுக்காக. அங்கேயே சில வருடங்கள் தங்கி தொழில் பழகியவர்கள் மீண்டும் பூர்வீகமான மதுரைக்கே வந்தனர். அந்த குடும்பத்தின் இளைய மகன் குஜராத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண்ணையே காதலித்து திருமணமும் செய்திருக்க, அவர்களையும் தங்களோடு அரவணைத்துக்கொண்டது அந்த குடும்பம்.
மதுரைக்கு வந்ததும் அனைவரும் தங்கள் வழியில் பிரிந்து போய்விட, சந்திரன் என்ற அந்த இளைய மகனும் தனக்கு தெரிந்த ஒரே தொழிலான துணிக்கடைத் தொழிலை கையில் எடுத்தான். காலப்போக்கில் அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்க, மூத்தமகனுக்கு சூரியக்குமார் என்றும், இளைய மகனுக்கு உதயகுமார் என்றும் பெயரிட்டு வளர்த்திவந்தனர்.
சூரியகுமாரும் திருமண வயதை எட்டியபோது அவனுக்கு தங்களுக்கு நன்கு தெரிந்த குடும்பத்தில் இருந்தே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அந்த பெண், நந்தினியும் வசதியான இடம் தான். இவர்களின் திருமணம் நடந்த சில மாதத்திலேயே அவர்களின் தந்தை இறந்துவிட, குடும்பமும் தொழிலும் பெரியவனான சூரியக்குமார் கைக்கு வந்தது.
அவர்கள் தொழில் காரணமாக சில சமயம் வடஇந்தியா செல்வது அவசியம். அவ்வாறு உதயகுமார் சிறுவயதில் இருந்தே வீட்டில் திருடும் பழக்கம் உள்ளவன். அது சமீபகாலமாக கொஞ்சம் கையை மீறி போய்விட்டது என்றே சொல்லலாம். அவ்வாறு ஒரு முறை சூரியக்குமார் குஜராத் சென்றிருந்த சமயம், உதயகுமார் தன் கைவரிசையை அங்கே காட்டினான். அவன் கெட்ட நேரமோ என்னவோ, அன்று அகப்பட்டுக்கொண்டான் நந்தினியிடம்.
அவள் இதனை கணவன் வந்தவுடன் கூறப்போவதாக மிரட்டிச் செல்ல, அதனை தடுப்பதற்காக அவள் தலையில் ஓங்கி அடித்து மாடியில் இருந்த ஒரு தனி அறையில் அடைத்துவைத்தான் அவன். பின், பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.
இரவில் நேரம் சென்று வீட்டிற்கு வந்தவன் கண்டது என்னவோ ஹாலில் அமர்ந்திருந்த தன் தாயைத்தான்.
‘வெளியே போனவங்க எப்போ இங்க வந்தாங்க? பார்த்திருப்பாங்களோ? இன்னுமா மயக்கம் தெளியல?’ என்று நினைத்தவாறே அவன் அவரை நெருங்க, “டேய்… அந்த நந்தினிய எங்க தேடினாலும் காணோம்டா…” என்று கூறினார். என்றுமே அவன் தாய்க்கு நந்தினியைப் பிடித்ததில்லை.
அவரை சமாதானப்படுத்தி மாடிக்கு அழைத்துச் சென்றவன், கதவைத் திறக்க, அங்கே இறந்து கிடந்தாள் நந்தினி. அதனைக் கண்டவர் பதறியடித்து அவளருகே அமர்ந்து அவளை மடியில் கிடத்தியவாறு, “என்னடா செஞ்ச?” என்று கேட்க,
“அடிச்சேன். செத்துட்டா போல இருக்கு!” என்று தோள்களை குலுக்கியவாறு கூறினான்.
“அடப்பாவி! வாழ வந்த பொண்ண இப்படி கொண்ணுட்டியேடா…” என்று தன் தலையில் அடித்து அழுதவரைக் கண்டவன்,
“ஷூ… சும்மா சத்தம் போடாத. பக்கத்துல எவனாவது கேட்டுறப் போறான். ஒழுங்கா நான் சொல்றதக் கேளு. இல்லைன்னா, உனக்கும் இதே நிலைமை தான். போலீஸ்க்கு ஃபோன் பண்ணி நான் சொல்றபடி சொல்லு” என்றவன் அதன்படியே அவரை நடக்கவும் வைத்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் போலீஸ் வந்தது, திருட்டைப் பற்றி விசாரிக்க. திருடர்கள் வந்து தங்களை தாக்கிவிட்டு திருடிச் சென்றனர் என்று தானே அவர்கள் அழைத்தது! ஆனால், வந்தவர்கள் கண்டதென்னவோ திருட்டோடு சேர்ந்து கொலையும் தான்.
முதல் விசாரணையை உதயகுமார் மற்றும் அவன் தாயிலிருந்து ஆரம்பிக்க, இருவரும் அதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சுற்றி சுற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் இருவரும் திணற, விரைவில் மாட்டிக்கொண்டனர் இருவரும்.
கோர்ட்டில் அவர்கள் மாற்றி மாற்றி வாக்குமூலம் கொடுக்க, போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்காமலும் இருக்க, இருவருக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்க முடியாது என்று கோர்ட் அவர்களை விடுதலை செய்துவிட்டது.
அதன்பின் இருவருமே குஜராத்திற்கு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் அந்த காலத்தில் பரபரப்பாக எல்லோராலும் பேசப்பட்ட சம்பவமாக இருந்தது. இது நடந்து சில காலத்திற்கு பின்னர், அந்த தாய், மகன் இருவருமே கொல்லப்பட்டனர். யாரோ அவர்களை ஆள் வைத்து கொலைசெய்திருந்தார்கள்.
ஆங்… சொல்ல மறந்துவிட்டேனே! சூரியக்குமார் வெளிமாநிலத்தில் இருக்கும்போது அவன் மனைவி கொல்லப்பட்டிருந்தாள். அதன்பின் அவனை எங்கேயும் காண முடியவில்லை. மனைவியின் இறுதிச் சடங்கிற்கும் அவன் வரவில்லை. ஆனால், அவன் தாய், தம்பி இருவருக்குமான வழக்குக்கான செலவு மட்டும் தவறாமல் கிடைத்திருக்கிறது, எங்கிருந்தோ! ஒரு புகழ்பெற்ற லாயரை அவர்களிருவருக்கும் நியமிக்கும் அளவிற்கு!
*****
அனைத்து கேஸ் பைல்களையும் ஆதி முதல் அந்தம் வரை ஆராய்ந்தவன் தனக்கு சந்தேகமானவற்றை எல்லாம் ஒரு கையேட்டில் குறித்து வைத்திருந்தான். அவற்றை எல்லாம் எடுத்து படிக்கும்போது தான் ஒரு பிரேதப் பரிசோதனை பற்றிய அறிக்கை அவன் கண்களில் விழுந்தது.
இறந்தவன் அடையாளம் தெரியாத ஒரு நபர். அவன் இறந்ததற்கான காரணமாக எழுதப்பட்டிருந்தது, இறப்பிற்கான காரணம் தெளிவாக அறியமுடியவில்லை என.
அந்த உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். Craniofacial superimposition மூலமாக அதற்கு வரையப்பட்டிருந்த உருவமும் அங்கே இருந்தது. அதனைக் கண்டவனுக்கு யோசனை.
ஒரு அடையாளம் தெரியாத பிணம் என்றால், அதனை மற்ற காணாமல் போனவர்கள் புகைப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். அவ்வாறும் வரவில்லை என்றால், அவன்/அவள் யாரும் தன்னை தேடமுடியாதவாறு எங்கேனும் சொல்லிச் சென்றிருக்க வேண்டும், அல்லது தேட யாருமே இல்லாமல் இருப்பார்கள். இதில் எது?
எதையோ யோசித்தவன், அந்த புகைப்படத்தை அளித்து தேடப்படும் குற்றவாளிகள்/குற்ற வழக்கில் சம்மந்தப்பட்டவர்களில் தேடச்சொன்னான்.
*****
“எப்பப்பாத்தாலும் நியூஸ் தானா? இதுல அப்படி என்னதான் இருக்கு?” என்று சலித்தவாறே திருமூர்த்தியின் அருகே அமர்ந்தார் மேகலா.
“உலக நடப்பு எல்லாமே அரை மணி நேரத்தில சொல்றாங்க. அதை பார்க்காம இப்படி சலிச்சுக்கற” என்றவரிடம்,
“அதுக்குன்னு ரெண்டு மணி நேரமா இதையாவா பாத்துட்டு இருப்பீங்க?” என்று தன் தோளில் மேவாயை இடித்துக்கொண்டார் மேகலா. அவர் கவலை அவருக்கு.
இது அவர் சீரியல் பார்க்கும் நேரம். அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்தமர்ந்தால், அசையமாட்டேன் என்கிறார் மனிதர். இதில் கீறல் விழுந்த டேப் போல் ஒரே நியூஸை திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக திரும்பவும் நியூஸ் ஓட, இந்த முறை வந்ததோ ஒரு விவாத நிகழ்ச்சி. அதுதான் இருக்கிறதே மொத்த தமிழ்நாட்டிற்கும் சில நாட்களாக ஹாட் நியூஸாக அந்த தொடர்கொலைகள். அதனைப் பற்றியே இன்றைய நிகழ்ச்சி.
ஒவ்வொருவராக வாதம்-விவாதம் செய்ய, அதுவரை சிரித்தவாறு தந்தை-தாயின் சேஷ்டைகளை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஏன்தான் இன்று சீக்கிரமே வந்தோமோ என்றானது.
ஆர்கலி இவ்வாறு மாலைநேரம் வீட்டில் இருப்பது அதிசயத்திலும் அதிசயம். ஆனால், அவ்வாறான நாட்களை அவள் பெரிதும் விரும்புவாள். என்னதான் வெளியில் இருந்து பார்க்கும்போது தாய் தந்தைக்கு அடங்கிப் போவதுபோல் தோன்றினாலும், வீட்டினுள் நடப்பது எதிர்பதமே! இருவருக்குள்ளும் இருக்கும் அந்த காதலை காண்பது அவளுக்கு என்றுமே ரசனையாக இருக்கும். அவர்களும் சண்டையென்றால் அறைக்குள் மட்டும் வைத்துக்கொண்டு, தங்கள் சிறு செய்கைகளாலும் காதலை ஒருவருக்கொருவர் உணர்த்தியவாறே இருப்பர். மனிதர்க்கு வயதானாலும் இந்த காதலுக்கு மட்டும் என்றும் வயசாகாது. இந்த பானம் அருந்தியவர்களுக்கும் மனம் இளமையாகவே இருக்கும் போல!
அவர்களைப் பார்த்துக்கொண்டே தானும் விழியனும் இதேபோல் காதலோடு வாழ வேண்டும் என்று கனவு கண்டவளை தரையிறக்கியது அந்த நிகழ்ச்சி.
விவாதம் சூடு பிடித்துக்கொண்டிருக்க, ஒரு பக்கம் அந்த கொலையாளியை ராபின்ஹுட்டாக மாற்றியிருந்தார்கள் சாமானியர்கள். அதுவுமே பேசுபொருளாக மாறியிருந்தது அங்கே.
மக்களுக்கு எவ்வாறு புரியவைப்பது, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என!
அந்த விவாதத்தை கேட்டவளுக்கு ‘ஐயோ!’ என்றானது. அங்கே அவளவன் பெயர்தான் பந்தாடப்பட்டுவந்தது. அதைக் கேட்டுதான் நொந்தவாறு அமர்ந்திருந்தாள் அவள்.
ஆர்கலி நேற்று விழியனிடம் கேட்டதை இன்று அனுமானமாக கதைபரப்பிக் கொண்டிருக்க, அதை தாங்கவே முடியவில்லை அவளால். ‘அவனை எப்படி இவங்க இப்படி பேசலாம்?’ என்று கோபம் பொங்க, அதை அடக்கியவாறு அமர்ந்திருந்தாள்.
அப்போது சட்டென அந்த தொலைக்காட்சி அணைந்தது, அனைத்தது அவள் தந்தை.
“என்னங்க… ஆஃப் பண்ணிட்டீங்க? நல்லா போயிட்டிருந்ததே!” என்று மேகலா கேட்க,
“ஆமா… வீதில நடக்கற சண்டைய மாதிரியே நாலு பேர கூப்பிட்டு வைச்சு சண்டை போட்டுட்டு இருக்காங்க, அதை நீயும் வேற பாத்துட்டு இருக்கே” என்றவர் நகரப் பார்க்க,
“எவ்வளவு இண்டரஸ்டிங்கான கேஸ்…” என்றவர் தொடர்ந்து, “ஏங்க… ஒருவேள, அந்த போலீஸ் தான் அடெண்ஷன் சீக்கிங்-க்கு இப்படி பண்ணுறாரோ?” என்று கேட்க, தாயை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள் ஆர்கலி.
அதற்கு எதிர்ப்பு அவள் தந்தையிடம் இருந்து வந்தது இப்போது, அவளே எதிர்பார்க்காத வகையில்.
“என்னம்மா இப்படி பேசற? அந்த பையனோட முதல் போஸ்டிங்-ல இருந்து இப்போ வரைக்கும் எங்கேயும் ஒரு வருஷம் அல்லது, ஒன்றறை வருஷத்துக்கு மேல இருந்ததில்ல. நேர்மை, அத்தனையிலும். அப்படி இருக்குற பையன தான் நீ இப்படி சொல்ற. ஆனா, போன இடத்துல எல்லாம் மக்கள்கிட்ட நல்ல பேரு. இப்போகூட இந்த கேஸ்-ல எந்தளவு வேலை செஞ்சுட்டு இருக்காருன்னு பாக்கறியல்ல? அப்படியும் இப்படி கேட்டா? அத்தனை இடத்துக்கும் செக்யூரிட்டிய டைட் பண்ணிருக்காரு. அப்படியும் நடக்குதுன்னா, கொலைகாரன் எத்தனுக்கு எத்தனா இருக்கான் போல” என்றவர் கூற,
“பிள்ளையும் கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்றதுன்னு ஒரு பழமொழி இருக்குல்லங்க?” என பதில் கேள்வி கேட்டார் மேகலா.
“அப்படி பிள்ளைய தானா கிள்ளி விடிருந்தா அது இப்போ கத்தற கத்தல் தாங்க முடியாம சமாதானப்படுத்திருக்கனும். ஏன், மேலிடத்துல இருந்து அத்தன ப்ரஷர் அந்த பையன் மேல. அது தாங்க முடியாம யாரையாவது உள்ள தூக்கி போடவோ, இல்ல எண்கவுண்டர் பண்ணவோ எவ்வளவு நேரமாகும்? இத்தனைக்கும் அந்த பையனோட ரெக்கார்ட்ல அவ்வளவு எண்கவுண்டர்ஸ் இருக்கு. ஆனாலும் அத பண்ணாம நிஜமான குற்றவாளிய கண்டுபுடிக்கனும்னு ராப்பகலா தேடுது. அதப்போய் இப்படி சொல்றாங்க, அதுக்கு நீயும் ஒத்து ஊதற” என்றவர் அறைக்குள் சென்றுவிட, மகிழ்வில் இருந்தாள் ஆர்கலி.
அவள் தந்தைக்கும் அவளுக்கும் என்னதான் ஏழாம் பொருத்தம், ஏழரையாம் பொருத்தம் அனைத்தும் இருந்தாலும், இவர் கூறுவது உண்மையாக இருக்கும் என நம்பினாள் அவள். ஏனென்றால் அவருக்கு இதுபோன்ற விஷயங்கள் வந்தால் அது நம்பிக்கையானதாக மட்டுமே இருக்கும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அது அவர் மனதைத் தாண்டி வாய் வழியாக வரும்.
இப்போது அவரே விழியனுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க, தன் காதலும் கைகூடிவிடும் என்றே நம்பினாள் அவள். அவ்வாறு நாம் நினைப்பதெல்லாம் நடப்பதென்றால் தெய்வத்திற்கு என்ன வேலை? அந்த விதிக்கு என்ன வேலை?