வணக்கம் நண்பர்களே!
ஒரு டீசரை பகிர்ந்துக்கலாம்னு வந்திருக்கேன். இதோ கதையின் முன்னோட்டம். கதை, முழுவதும் எழுதி முடிந்ததும் பதிவிடுகிறேன். அதுவரை அப்பப்போ டீசர் வரும்.
முன்னோட்டம்:
“அப்பா… அவன்கிட்ட என்ன இல்ல? நான் பாத்த வரைக்கும் ரொம்ப நல்ல பையன், அவன் எல்லாருக்கும் என்னென்ன செய்யறான்னு பாக்குறீங்க தான? அவன நல்லா தெரியும்ப்பா எனக்கு. ஏன், நீங்களே அவனுக்கு செர்டிஃபிகேட் குடுக்கல? பொண்ண குடுக்க மட்டும் கசக்குதா?” எனக் கேட்ட மகளிடம் என்ன கூறுவதென்று தெரியாமல், வாய்க்கு வந்த ஒரு காரணத்தை கூறினார் அவள் தந்தை.
“அவனுக்கு குடும்பம்ன்னு ஒன்னு இல்லம்மா. தனியா வளர்ந்தவன், பொண்டாட்டி, பிள்ளைன்னு வரும்போது எப்படி நடந்துப்பான்?”
“என்னை கல்யாணம் செய்துட்டா என் குடும்பம் அவன் குடும்பம் தானப்பா? அவன் கண்டிப்பா என்னை நல்லா பார்த்துப்பான்” என்று தன் காதலை நியாயப்படுத்தும் மகளை எவ்வாறு தடுப்பதெனத் தெரியாமல் கையறுநிலையில் நின்றார் அவள் தந்தை.
*****
அந்த சவுக்குத் தோப்புக்குள் உசைன் போல்ட்டுக்கே சவால் விடும் நோக்குடன் ஓடிக்கொண்டிருந்தாள் ஆர்கலி. இருக்காதா பின்னே? அவன் ஓடுவது முதலிடத்திற்காகவென்றால், இவள் தற்போது ஓடிக்கொண்டிருப்பது தன்னுயிர் காக்கவல்லவே?
தன் பின்புறம் திரும்பி பார்த்தவாறே ஓடியவள் ஏதோ ஒன்றின்மீது பலமாக மோத, அதில் தடுமாறி கீழே விழுந்தவள், தன்னை சுதாரித்து எதிரில் பார்க்க, அவள் முன்னே நின்றிருந்தான் அவன்.
அந்த நெடிய உருவத்தையும் இருளிலும் பளபளத்த அதன் இரை தேடும் கண்களையும் கண்டவளுக்கு தன் இறுதி நிமிடம் உறுதியாக தெரிந்துபோனது.
‘வேண்டாம் வேண்டாம்னு சொன்னியே விழி! நான் கேட்கவே இல்லயே! உன்னப் பார்க்காமையே இப்போ சாகப் போறேனே!’ என்று காதலனை நினைத்து வருந்தியவளுக்கு தன் மரணம் வலி இல்லாததாய் முடிந்திட வேண்டும் என வேண்டுவதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. எதிரில் இருக்கும் மனிதன் தப்பிக்கும் மார்க்கம் இருந்தாலும் தப்பிக்க விடப்போவதுமில்லை.