ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழித்து விடு பெண்ணே

pommu

Administrator
Staff member


அன்று ஞாயிற்றுக் கிழமை, தாமதமாக எழுந்த பத்து வயதேயான நந்தினி அவசரமாக குளித்து சாப்பிட ஆரம்பித்தாள். எழுந்ததில் இருந்தே "குட்டி பாப்பா இப்போ முழிச்சு இருக்குமா? சாப்பிட்டு இருக்குமா? நான் தான் போய் ஊட்டி விடணுமா?" என்கின்ற ஆயிரத்தெட்டு கேள்விகள். அவசரமாக சாப்பிட்டவளிடம் "மெதுவா சாப்பிடு நந்தினி" என்று அவள் தாய் அதட்ட, பயத்தில் மெதுவாக சாப்பிட்டு முடித்தள் கைகளைக் கழுவிக் கொண்டே " அம்மா நான் முன் வீட்டு பாப்பா கூட வெளாடிட்டு வரேன் " என்று சொல்லிக் கொண்டே முன் வீட்டுக்கு ஓடிச் சென்றாள்.

அங்கே சென்றதுமே இரண்டே வயதான குழந்தை அவளை பார்த்து வாய் விட்டு சிரிக்க, அது வரை அவள் நினைவுகளிலேயே மூழ்கி இருந்தவள் அந்த குழந்தையை நெருங்கி "அக்காவை தேடுனீங்களா? " என்று கேட்டுக் கொண்டே அவளை தூக்கி மடியில் வைத்து கொஞ்ச ஆரம்பித்தாள். அந்நேரம் குழந்தையின் தாயோ " பாப்பாவை கொடும்மா.. குளிக்க வச்சு கொண்டு வரேன் " என்று சொல்ல, குழந்தையை கொடுத்து விட்டு அங்கே இருந்த நாய்க்குட்டியை பார்க்க போனவளை அழைத்தார் குழந்தையின் தந்தை கணேசன்.

கணேசனுக்கு நாற்பது வயது இருக்கும்.. சாமி பக்தி உடைய ஆச்சாரமானவர் அவர்.

ஊரில் பெரிய மனிதன் என்னும் மரியாதையுடன் இருப்பவரே நந்தினியை அழைத்து தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். சின்ன வயதில் இருந்தே அவருடன் விளையாடி பழகியவளுக்கு அவர் மடியில் அமர்ந்து இருப்பது தவறாக தெரியவே இல்லை. ஆனாலும் இன்று ஒரு வித்யாசமான உணர்வு.. அவள் கைகள் பற்றி எங்கோ எல்லாம் கொண்டு சென்றவர் " இங்க கொஞ்சம்.வாங்க " என்னும் குரல் கேட்டு சட்டென விலக்கிக் கொண்டே " என்னம்மா " என்று கேட்டபடி உள்ளே சென்றார் . நந்தினிக்கோ ஒரு சலனம் மனதில் " அங்கிள் என்ன பண்ணினார் இப்போ?? " என்று யோசித்தவளுக்கு பாலியல் பற்றிய அறிவு குறைவாகவே இருந்தது. ஆனாலும் அவர் செய்த செயல் அவளுக்கு பிடிக்காமல் இருக்க , மனதில் அதை பற்றியே இரு நாட்கள் யோசனை.

தாயிடம் சொல்வதா வேண்டாமா என்கின்ற தயக்கம்.. அவள் குழந்தையுடன் விளையாட செல்லும் போதெல்லாம் அவளை தூக்கி மடியில் வைப்பது , கன்னத்தில் முத்தம் வைப்பது என்று நடந்து கொண்ட போதிலும் நந்தினியை குழந்தையாக பார்த்த அவர் மனைவிக்கும் அது தப்பாக தெரியவே இல்லை.

கணவன் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்ட பதிவிரதை அவர். இப்படியே நாட்கள் நகர ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு சென்ற நேரம் குழந்தையை அணைத்தபடி தாய் தூங்கி கொண்டே இருக்க , ஹாலில் அமர்ந்து இருந்தார் கணேசன். அவளோ அவரிடம் " பாப்பா தூக்கமா? நான் அப்புறம் வரேன் அங்கிள் " என்று சொல்ல அவரோ " என் கூட சாமியறைக்கு கொஞ்சம் வா " என்று அழைக்க அந்த பாத்து வயதான சிறுமியும் அவருடன் பின்னே சென்றாள்.

அவரோ " சாமி கும்பிடு " என்று சொல்லிக் கொண்டே பின்னால் நின்றவர் அவள் இடை பற்றி அவள் அணிந்த டீஷர்ட்டினுள் கை விட்டு அவளது மேனியை வருட ஆரம்பிக்க அந்த பிஞ்சு பாலகிக்கோ தூக்கி வாரிப் போட்டது.

பாலியல் பற்றி எந்த அறிவும் இல்லை என்றாலும் அவர் செய்வது தவறென்று உணர " அம்மா கூப்பிடுறாங்க அங்கிள் " என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து ஓடி வந்து இருந்தாள் அந்த புத்திசாலி சிறுமி... அது தான் அவள் அங்கு சென்ற இறுதி நாள். இதை எப்படி தாயிடம் சொல்வது என்கின்ற தயக்கம். தாயிடம் மனம் விட்டு பேசாத அவளுக்கு இதனை சொல்லும் அளவுக்கு தைரியம் இருக்கவில்லை.. அதன் பிறகு இரு நாட்கள் அவளை முன் வீட்டு பெண் குழந்தையுடன் விளையாட அழைத்த போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி தவிர்ப்பவள் கணேசன் இல்லாத நேரம் மட்டும் முன் வீட்டுக்கு சென்றாள்.

நாட்கள் கடந்து வருடங்கள் கழிய, பதின் வயதின் விளிம்பில் இருந்தாள் நந்தினி. அன்று பத்திரிகை படித்துக் கொண்டு இருந்த நந்தினி கண்ணில் ஒரு கட்டுரை தென்பட்டது. " குழந்தைகளுக்கான பாலியல் துஷ்பிரயோகம் " என்ற தலைப்பில் இருந்த கட்டுரையை வாசித்தவளது தொண்டை அடைத்துப் போனது. " அப்போ எனக்கு நடந்தது பாலியல் துஷ்பிரயோகமா?? " என்று பல வருடங்கள் கழித்து உணர்ந்தவளுக்கு உடலில் ஒரு அருவருப்பு.. இன்றும் அங்கிள் என்று சாதாரணமாக கணேசனுடன் பேசினாலும் அந்த நினைவு பசுமாராத்தாணியாக அவள் மனதில் பதிந்திருக்க மனதில் ஒரு வெறுப்பு தோன்றியது.. குழந்தைகளின் அறியாமை தானே இப்படியான ஆண்களின் மூலதனம். தனக்கு நடந்ததன் பெயர் கூட அறியாமல் அவள் இருந்து இருக்கிறாள்.

இரண்டு நாட்களாக மீண்டும் ஒரு சோர்வு இதனை நினைத்து.. " அம்மாவிடம் சொல்லி விடுவோமா?? " என்னும் எண்ணம் மனதில் வர " என்னை தப்பா நினைப்பாங்களா? " என்றெல்லாம் காரணமே இல்லாத பயம் சூழ மீண்டும் அந்த விடயத்தை முழுங்கி கொள்கிறாள்.

பட்டம், பதவி, காதல், திருமணம் என்று நாட்கள் நகர்ந்த போதிலும் அவள் மனதில் என்றும் இது அழியாத நினைவு தான். கணவனிடம் சொல்லலாமா என்றும் ஒரு நாள் நினைத்தவள் அத்தனையும் முழுங்கி கொள்கிறாள்.

அவளுக்கொரு பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தையும் எட்டு வயதை அடைந்திருக்க பாடசாலையில் இருந்து வரும் போது அவள் கையில் ஒரு டோல் இருந்தது. நந்தினியோ " யாரும்மா இது தந்தா? " என்று கேட்க அவளோ " முன் வீடு கணேசன் தாத்தா கொடுத்தார். வீட்ல நிறைய டோல் இருக்காம்..விளையாட வர சொன்னார் " என்று சொல்ல அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

இன்று கணேசனின் மகளோ வேலை செய்து கொண்டு இருக்க, அவரோ மனைவியை இழந்த தப்புதாரனாக இருந்தார்.

அடுத்த கணமே அவள் கையில் இருந்த டொலைப் பறித்தவள் விறு விறுவென சென்றது கணேசனின் வீட்டுக்கு தான். அவரோ ஹாலில் இருந்து " வாம்மா நந்தினி " என்று அழைக்க அவரை கலங்கிய விழிகளுடன் பார்த்தவள் அவர் முகத்தில் டோலை எறிய அவரோ அதிர்ந்து பார்த்தார். அவளோ கையை நீட்டி " இருபது வருஷத்துக்கு முதல் ஒன்னும் தெரியாமலே என்னை நானே காப்பாத்திக்கிட்ட நந்தினி நான்.. ஆனா அப்படி பயந்து ஓடுற நந்தினியா இனியும் இருக்க மாட்டேன்.. என் பொண்ணு மேல உங்க நுனி விரல் பட்டா கூட நடக்கிறது வேற... இப்போ வரை நான் சும்மா இருக்க ஒரே காரணம் நான் தூக்கி.வளர்த்த உங்க பொண்ணு நல்லா வாழணும்னு தான்..தாயில்லாத பொண்ணு அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான். உங்களால அவ தலை குனிய கூடாதுனு தான்.. இந்த இரக்கம் என் பொண்ணு மேல தூசு படும் வரைக்கும் தான். என் பொண்ணு மேல உங்க மூச்சு காத்து கூட படக் கூடாது " என்று மிரட்டலாக சொல்லி விட்டு வெளியேறியவளுக்கு மனதில் இதுவரை இருந்த ஒரு பாரம் இறங்கிய உணர்வு.

கணேசனோ அவள் மிரட்டலில் கதி கலங்கி விட்டார். அவள் முன் வீட்டுக்கு சென்று விட்டு வருவதைப் பார்த்த அவள் குழந்தை "அம்மா டோல் ?" என்று அழுதபடி கேட்க, அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவள் "உனக்கு என்ன வேணும்னாலும் அம்மா வாங்கி தரேன்.. யார் என்ன தந்தாலும் வாங்க கூடாது ஓகேயா?' என்று கேட்க, அவளோ "அப்போ எனக்கு அதே போல டோல் வேணும்" என்றாள் சிணுங்களாக, அடுத்த கணமே குழந்தையை அணைத்துக் கொண்டவள் " கண்டிப்பா திவ்யா" என்று சொல்லிக் கொண்டாள். இரு நாட்கள் கழித்து, அவளது ஸ்கூல் பஸ் வரும் நேரம் மகள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவள் "யாரும் ஏதும் தந்தா என்ன சொல்லணும்?" என்று கேட்க அவளோ "வேணாம் அங்கிள், அம்மா யார் கிட்டயும் எதுவும் வாங்க வேணாம்னு சொல்லி இருக்காங்கன்னு சொல்லணும்" என்றாள். "தெரிஞ்சவங்களா இருந்தா கூட, உன்னை இங்க இங்க எல்லாம் தொட்டா என்ன சொல்லணும்?" என்று அவளை சுட்டிக் காட்டி கேட்க அவளோ "கையை எடுங்க அங்கிள், அப்பா கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லணும், அவங்களை விட்டு ஓடி வரணும், அண்ட் அப்படி ஏதும் நடந்தா உங்க கிட்ட உடனே வந்து சொல்லணும்.. " என்று சொல்ல, அவளோ மென் புன்னகையுடன் அவள் நெற்றியில் முத்தமிட்ட போதும் கூட மனதில் இன்றும் ஒரு கலக்கம் ஒரு பெண் குழந்தையின் தாயாக. அவள் தாய் சொல்லிக் கொடுக்காததை சொல்லிக் கொடுத்த போதிலும் இந்த சமூகத்தை நினைத்து ஒரு அருவருப்பு.

உறவினர், அயலவர் என்று ஒரு பெண்ணுக்கு வேலியாய் இருக்க வேண்டியவர்களே பயிரை காம இச்சைக்காக மேயும் காலமிது.. ஆழ்ந்த மூச்செடுத்தபடி குழந்தையை அழைத்துக் கொண்டே வாசலுக்கு சென்றவள் சந்தியில் இருந்த ஆட்டோவைக் கண்டதுமே "பை திவ்யா" என்று சொல்ல, அவளும் "பை அம்மா" என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவள் ஆட்டோவில் சென்று ஏறும் வரை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள். அவள் செல்லும் போது முன்னால் இருந்து கணேசன் பாண் வாங்கிக் கொண்டே நடந்து வந்தவர் திவ்யாவைக் கண்டதுமே ரெண்டடி தள்ளி வீதி ஓரத்தில் நடக்க, அதைக் கண்ட நந்தினியின் இதழில் ஒரு புன்னகை.

இந்த சிறு கதையை வாசிக்கும் பெண்களில் கூட ஐம்பது சதவீதமானவர்கள் பாலியல் துன்புறுத்தல் என்று அறியாமலே சின்ன வயதில், பக்கத்து வீட்டு அண்ணா, முன் வீடு அங்கிள், சொந்தகார மாமா, என்று நெருங்கியவர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளான அனுபவமும், இன்று நிதர்சனம் அறிந்தும் அதனை வெளியே சொல்ல முடியாத தயக்கமும் கண்டிப்பாக இருக்கும்.. இப்படியானவர்களது மூலதனம் குழந்தைகளின் அறியாமையும், பயமுமே ஆகும். உங்கள் பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். அத்து மீறி கை வைத்தால் " அம்மா கிட்ட சொல்லுவேன்" என்று சொல்லும் தைரியத்தைக் கொடுங்கள். உங்கள் குழந்தை உங்களுக்கு வேண்டும் என்றால் குழந்தையாக தெரியலாம், இந்த காம இச்சை உள்ளவர்களுக்கு உங்கள் குழந்தை அவர்கள் இச்சையை தீர்க்கும் ஒரு பெண்ணாக தான் தெரிவாள்..

-நல்லவர் வேடமிட்டு திரியும் காமுகர்களிடம் இருந்து நமது பெண் குழந்தைகளைக் காப்போம்..
 

ருத்விகா

New member
Wonderland writer
❤❤❤❤உண்மை தான் அக்கா. வீட்டில் எங்கே தவறாக நினைத்து விடுவார்களோ, இல்லை தன் மீதே குற்றத்தை திசைதிருப்பி விடுவார்களோ என்ற காரணத்தாலே பல குழந்தைகள் வெளியில் கூறுவதில்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் தைரியத்தில் தான் பிள்ளைகளின் தைரியமும், மனபலமும் இருக்கிறது. சொந்த வீட்டிலே இது போன்ற பாலியல் அத்துமீறல் நடக்கும் போது தான் சற்று வலியும் ரணமும் அதிகமாகி போகிறது.

அருமையான பதிவு அக்கா ?????
 

Sabari

New member
Nan dairiyamaga 4time edhir konda oru nigalvu?anal odi vandhu viten ?thirupi thita vayathilai?anneram enaku 8vayathu
 
Top