ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வானவில் கோட்பாடு - கதை திரி

Status
Not open for further replies.

T23

Moderator
அத்தியாயம் 5

7ஈ – நிருபமாவின் வீடு

“மீ கீர்த்தி ஆண்டிக்கு என்னாச்சு மீ? இனிமே கீர்த்தி ஆண்டி என் கூட விளையாட வரமாட்டாங்களா?” என்று வினவிய தன் நான்கு வயது மகன் அஜுவை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தாள் நிருபமா. அவள் கண்கள் கீர்த்தியை நினைத்து தானாக கண்ணீர் சிந்தியது.

“எத்தனை சிறிய பெண். அதற்குள் அவளுக்கு இப்படியொரு நிலைமை வர வேண்டுமா? துறு துறுவென அலைபாயும் கண்கள் கீர்த்திக்கு. ஒரு நிமிடம் அமைதியாக இருக்க மாட்டாள். சில நேரம் இவளுக்கு “ஹைபர் ஆக்டிவ் டிஸாடரோ” என்று நினைக்கும் அளவிற்கு பரபரப்பாக இருப்பாள்”

நிருபமா ஒரு தனியார் வங்கியில் பணியாற்றுகிறாள். வேலை பளூ அதிகம் கொண்ட பணி தான். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறாள். விவாகரத்திற்கு விண்ணம் செய்திருக்கிறாள். இன்னமும் கிடைக்கவில்லை.

வீட்டினரின் துணை இல்லாத காரணத்தினால், அவ்வப்போது ஏதேணும் உதவி தேவைப்படும் தருணங்களில் அவள் தேடுவது கீர்த்திகாவைத் தான். “கீர்த்தி பேங்க்ல இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு. அஜூவை டே கேர்ல இருந்து கூட்டிட்டு வந்து உன் வீட்டில வச்சிருக்கியா டா? ப்ளீஸ்?” என்றோ,

“அஜுக்கு இன்னைக்கு ரொம்ப காய்ச்சல் கீர்த்தி! என்னாலையும் பேங்க்ல லீவ் போட முடியலை. ஒரு ஹாஃப் டே பார்த்துக்க முடியுமா? நான் மதியம் எப்படியும் லீவ் சொல்லிட்டு வந்துடுவேன்” என்றோ உதவி கேட்பாள். எப்போது வினவினாலும் தவறாமல் உதவி செய்வாள் கீர்த்திகா. ஒரு முறை கூட சடைந்து கொண்டதில்லை.

“இன்னைக்கு பீனிக்ஸ் மால் போனேனா? மெர்டோ ஷாப்ல ஆஃபர் போட்டிருந்தான். இந்த ஹேண்ட் பேக் உனக்காக வாங்கினேன். அன்னைக்கு என் ஹேண்ட் பேக் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னியே! அதனால வாங்கினேன்” என்று கீர்த்தி தனக்குச் செய்யும் உதவிக்குக் கைமாறாக அவ்வப்போது ஏதேணும் அழகு சாதனப் பொருட்களோ, கைபைய்யோ வாங்கிக் கொடுப்பாள் நிருபமா.

“ஐய்யோ இதெல்லாம் எதுக்குக்கா?” என்று ஒரு பேச்சிற்குக் கூட அலட்டிக் கொள்ளாமல் மறுப்பு சொல்லாமல் ஆசையுடன் வாங்கிக் கொள்வாள் கீர்த்திகா. தென்மாவட்டத்தில் இருந்து திருமணம் முடித்து நகரத்திற்கு வந்திருந்த கீர்த்திகாவிற்கு நகரத்தின் நாகரீக போகங்கள் மிகவும் பிடித்தம் என்பதை நிருபமா சடுதியில் கண்டு கொண்டாள்.

அதை தனக்குச் சாதகமாக அவ்வப்போது உபயோகப்படுத்தியும் கொண்டாள். நிருபமாவைப் பொறுத்த வரையிலும், வீட்டினரின் துணையோ உதவியோ அவளுக்கு இருக்கவில்லை. வங்கி வேலை என்பதால் வருமானத்திற்குக் குறை என்றில்லாவிட்டாலும், அவ்வப்போது மற்றவரின் உதவிகள் தேவைப்படத்தான் செய்தன.

அந்த அப்பார்ட்மெண்டின் ஒரு சில மனிதர்களிடம் அவ்வளவாக பேச்சு வைத்துக் கொள்ளமாட்டாள் நிருபமா. தனியாக வசிக்கும், விவாகரத்திற்காக காத்திருக்கும் 35 வயது பெண்ணை இந்த சமூகம் எப்படியெல்லாம் பேசும், எவ்வாறெல்லாம் பழி போடும் என்று நிருபமாவிற்கு நன்றாகத் தெரியும்.

“புருஷன் கூட சேர்ந்து வாழலைன்னு கொஞ்சமாச்சும் வருத்தம் இருக்கா அந்தாம்மாவுக்கு? லிப்ஸ்டிக் என்ன? மேக்கப் என்ன? ஸ்லீவ்லெஸ் ரவிக்கை என்ன?” என்று இவள் காதுபடவே பேச்சுகள் எழும். அதனால் முடிந்த மட்டில் தன் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள்.

அந்த ஃப்ளோரில் 7ஏ அபிராமி இவளைக் கண்டால் எப்போதும் முறைக்கும் ரகம். 7பியில் இருக்கும் பிரேம் இவளை ஏறெடுத்தும் கூடப் பார்க்கமாட்டான். அவன் வீட்டின் வேலைக்கார செல்லம்மா அவ்வப்போது வம்பு பேச எதாவது கிடைக்குமா என்பது போலவே பேசுவாள். அதனால் அவளுடனும் பெரியதாகப் பேச்சு வார்த்தைக் கிடையாது.

நிருபமா தானாக வலிய சென்று நட்பு பாராட்டிக் கொண்டது கீர்த்திகாவிடம் தான். அவர்கள் அந்த வீட்டிற்குக் குடிவந்து ஒரு வருடமே ஆகியிருந்த போதிலும், கீர்த்திகா நிருவுடன் சட்டென ஒட்டிக் கொண்டாள்.

நிருபமாவின் ஆடை அலங்காரமும், அதிராத பேச்சும் நளினமும் கீர்த்திகாவிற்குப் பிடித்துப் போனது.

“உங்க லிப்ஸ்டிக் நல்லா இருக்கேக்கா. எனக்கும் நல்லா இருக்குமா இந்த கலரு? போட்டுப் பார்க்கவா?” என்று உரிமையுடன் கேட்டு போட்டுப் பார்க்கும் கீர்த்தியை நிருபமாவிற்குப் பிடிக்கும்.

அதிலும் கீர்த்தியின் பிசினஸ் ஆர்வத்தைப் பற்றி கேட்கக் கேட்க நிருபமாவிற்கு சிரிப்பாக இருக்கும். ஏனென்றால் கீர்த்தி அப்படித் தான் பேசுவாள்.

“எப்படியாவது பெருசா வளர்ந்தரணும்க்கா. இந்த படத்தில காட்டற மாதிரி ஒரு பெரிய கம்பெனிக்கு முதலாளியா ஜம்பமா, கார்ல போய் அப்ப்ப்ப்ப்ப்படி கெத்தா இறங்கணும்கா” என்று அடிக்கடி சொல்லும் கீர்த்திக்கு பிசினஸ் செய்வதில் பெரும் ஆர்வம் இருந்தது.

“இந்த சம்மர் சீசன்ல ஜூஸ் கடையும், மோர் கடையும் சூப்பரா போகுதுக்கா. கொஞ்சம் காசு சேர்த்து எப்படியாவது ஒரு இடத்தை[ப் பிடிச்சு ஜூஸ் கடை போட்டறணும்” என்பாள் ஒரு முறை.

“நம்ம ஃப்ளாட்லயே இருவது குழந்தைங்க இருக்குக்கா. பேசாம நானே ஒரு டேகேர் ஆரம்பிச்சா என்னக்கா? ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் வேலை பார்த்தா போதும். அப்படியே அந்த டே கேரை ஒரு கிட்ஸ் ஸ்கூல் ஆக்கிடலாம் வருங்காலத்துல? எப்படிக்கா என் ஐடியா?” என்பாள் ஒரு முறை.

இப்படி கீர்த்திகாவிடம் “30 நாளில் பணக்காரன் ஆவது எப்படி?” என்று புத்தகம் போடும் அளவிற்கு பிசினஸ் ஐடியாக்கள் கொட்டிக் கிடந்தன.

“ஏன் கீர்த்து எப்பவும் எதாவது செஞ்சுட்டே இருக்க! ரிலாக்ஸ்டா இருக்கலாம்ல. கல்யாணம் ஆகி ஒரு வருஷமாச்சு. இப்படில்லாம் அது இதுன்னு யோசிக்காம ரிலாக்ஸ்டா இருந்தா தானே சீக்கரம் உனக்கும் விக்னேஷ்கும் குழந்தை உண்டாகும்” என்று ஒரு நாள் சொல்லிவிட்டாள் நிருபமா.

எல்லா விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொண்டு பதிலளிக்கும் கீர்த்தி, நிருபமாவின் இந்தக் கிண்டலையும் அவ்வாறே இயல்பாக கடந்து போவாள் என்றே எதிர்பார்த்த நிருபமாவுக்கு கீர்த்தியின் செய்கை அதிர்ச்சியளித்தது.

அதுவரையிலும் சிரிப்புடன் கலகலவென பேசிக் கொண்டிருந்த கீர்த்தி, குழந்தை என்ற பேச்சு வரவும் நொடியில் ஆளே மாறிவிட்டாள். அதுவரையில் நிருபமாவுடன் மகிழ்ச்சியாக அளவளாவியவள், சட்டென கண்களில் நீர் தட்ட தேம்பத் துவங்கிவிட, நிருபமாவிற்குத் தான் சங்கடமாகிப் போனது.

“ஐய்யோ கீர்த்தி! அழாத கீர்த்தி! நான் சும்மா ஃபன்னுக்கு தான் அப்படி சொன்னேன். நீ சீரியஸா எடுக்காதம்மா ப்ளீஸ். எதுக்கு இப்போ இப்படி அழுகற? கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆகுது.” என்று ஒருவாராக அவளைச் சமாதானப்படுத்திய போதும், கீர்த்தியின் கண்கள் நீண்ட நேரம் நீர்திரையிட்டே இருந்தன.

“அவருக்கு என்னை அவ்வளவா பிடிக்கலை நிருக்கா! எப்போ பேசினாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுவார். ரொம்ப குடி வேற. இதெல்லாம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா இவரை நான் திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டாங்க. நல்லா நம்ப வச்சு ஏமாத்திட்டாரு நிரூக்கா” என்று தன் கணவன் விக்னேஷ் பற்றி லேசாகத் துவங்கினாள்.

நிருபமா எப்போதுமே அடுத்தவர் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை. அதில் நாகரீகமான நடத்தை என்பதைக் காட்டிலும் நிருபமாவின் சுயநலம் அதிகமாக வெளிப்படும். “அவங்களைப் பத்தி நான் தெரிஞ்சுக்க நினைச்சு கொஞ்சம் பேசிப் பழகினாலும், உடனே என்னைப் பத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. உன் வீட்டுக்காரர் என்ன செய்யறார்? எதனால பிரிஞ்சு இருக்கீங்க? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போலாமே? பையனுக்காகவாது சேர்ந்து வாழலாம் இல்லையானு” எதாச்சும் பேச வருவாங்க.”

“இவங்க கேட்கற கேள்விக்கு உண்மையாவே நான் பதில் சொன்னாலும், என் முன்னாடி நல்ல விதமா பேசற மாதிரி பேசிட்டு, பின்னாடி போய் என் கேரக்டர் சரியில்லன்னு பேசுவாங்க.””

“”எதுக்கு இவங்க கூடலாம் பேசிப் பழகணும்?நம்ம வேலையைப் பார்த்தோமா, சாப்பிட்டோமா, அஜுவைப் பார்த்தோமான்னு இருந்தாலே போதும். அப்படியும் போர் அடிச்சா, மூவி, நெட்ஃப்ளிக்ஸ்னு இருக்கவே இருக்கு. தேவையில்லாத காம்ப்ளிகேஷன் எதுவுமே எனக்குத் தேவையில்ல” என்ற முடிவுடன் தான் நிருபமா இருந்தாள்.

அதனால் அதிகம் முகம் கொடுத்து யாரிடமும் பேசிப் பழகுவதைத் தவிர்த்து வந்தவளுக்கு, கீர்த்திகா அழுது கொண்டே தன் கணவன் விக்னேஷைப் பற்றி குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் துவங்கவும் கொஞ்சம் அசவுகரியமாக இருந்தது. “சரி, நம்மளால தானே அழுகறா! பாவம் அவளுக்கு என்ன மனக்குறையோ என்னவோ! கொஞ்சம் எங்கிட்ட கொட்டித் தீர்த்தா சரியா போகும்னா நல்லது தானே!” என்று தோன்றியது.

அதனால் கீர்த்திகா தன் கணவனைப் பற்றிப் புலம்பியதைக் கொஞ்ச நேரம் செவி மடுத்தாள். “அவருக்கு தினமும் குடிக்கணும்கா. குடிக்காம ஒரு நாள் கூட வீட்டுக்கு வர மாட்டார். கல்யாணத்து அன்னைக்கு நைட் கூட குடிச்சுட்டு தான் வந்தார்கா. சரி, ஃப்ரெண்ட்ஸ் கம்பல் பண்ணதுனால அப்படி இருக்கும். தினமுமா குடிக்கப் போறாருன்னு நானும் சாதாரணமா விட்டுட்டேன். ஆனா இங்க வந்து பார்த்தா தான் தெரியுது அவரோட சுயரூபமே. குடிக்காம அவரால் இருக்கவே முடியாது நிரூக்கா"”

“நீ உங்க வீட்டு ஆளுங்ககிட்ட சொல்லிப் பார்க்கலாமே கீர்த்தி! ஒரு பிரச்சனைன்னா நாலு பேர் உனக்காகப் பேச வரமாட்டாங்களா?”

“லவ் மேரேஜ்கா. பெத்தவங்களை எதிர்த்து இவரை நம்பி சென்னை வந்தேன்.”

“சரிடா, கொஞ்சம் நல்ல மூடா இருக்கப்போ உங்க வீட்டுக்காரரை உட்காரவச்சு பேசி புரியவைக்க முயற்சி செய்லாம்ல”

“அதெல்லாம் ரொம்ப பேசினேங்கா. எப்படி பேசினாலும் எனக்கு ரொம்ப பணத்தாசை, நான் ரொம்ப பேராசை பிடிச்சவ, வீட்டை ஒழுங்கா பார்த்துக்கலை, அவருக்கு ஒழுங்கா சமைச்சு போடலை, அது இதுன்னு என் மேல பழி போட்டு பேச்சை திசை திருப்பிடுவாருக்கா” என்றாள் கீர்த்திகா கண்ணீரின் ஊடே. இது பொதுவான எல்லா ஆண்களுமே செய்வது தானே! தன் மீது இருக்கும் குற்றத்தை திசை திருப்ப, மனையாளின் மீது குறை சொல்லி, அவளைக் கத்த வைத்து பேச்சை மாற்றிவிடும் பழக்கம் இயல்புதானே!

விக்னேஷும் அதே போலத்தான் செய்துள்ளான் என்பது நிருபமாவிற்குப் புரிந்த போதும், அதை அப்போதைக்கு கீர்த்திகாவிடம் சொல்லவில்லை. கீர்த்தி கூறிய குறைகளை மட்டுமே கேட்டுக் கொண்டாள்.

“நீங்க தான் அடிக்கடி பார்க்கறீங்களே! குடிச்சுட்டு நேரங்கெட்ட நேரத்தில வீட்டுக்கதவை வந்து இடிப்பாரு. திறக்கலைன்னா அவளோ கோவம் வரும். கோவத்தில செல்ஃபோன், டிவின்னு கைக்கு கிடைக்கறதைத் தூக்கிப் போட்டு உடைப்பாரு! இதெல்லாம் பழகிடுச்சுக்கா! இந்த கொடுமைக்கு நடுவுல எப்படிக்கா ஒரு குழந்தைய கொண்டு வர எனக்கு மனசு வரும்?” என்று கண்ணீர் முத்துகள் கன்னத்தில் கோலமிட, கீர்த்திகா வினவியது, சரியான கேள்வி தான் என்று நிருபமா நினைத்தாள்.

“நான்லான் சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டத்துல தான் வள்ர்ந்தேங்க்கா. எனக்குக் கிடைக்காத விஷயங்கள், நல்ல படிப்பு, வசதி இதெல்லாம் என் குழந்தைக்குக் குடுக்கணும்னு ஆசைப்படறேன். கொஞ்சமாச்சும் சொல்லிக்கற மாதிரி ஒரு நிலைமைக்கு வந்துட்டு தான்கா குழந்தை பெத்துக்கணும். நான் நினைக்கறது தப்பில்லைல நிருக்கா”

“தப்பில்ல கீர்த்தி! வெளிய இருந்து நான் என்ன ஆறுதல் வேணா சொல்லலாம். என்ன அறிவுரை வேணா குடுக்கலாம். ஆனா, உன் நிலைமை என்னன்னு உனக்குத் தான் நல்லா தெரியும். நான் என் கணவர்கிட்ட இருந்து பிரிஞ்சு வந்தப்போவும் எனக்கு நிறைய ஆறுதலும், அறிவுரையும் சொல்ல நிறைய பேர் வந்தாங்க. ஆனா, என் நிலைமை என்ன, என்ன காரணத்தினால நான் பிரிஞ்சு வந்தேன்னு எனக்குத் தானே தெரியும். எங்க ரெண்டு பேர்த்துக்கும் நடுவுல எந்த பொருத்தமும் இல்லை கீர்த்தி! பேசிக்கா எந்த பொதுவான விஷயமும் இல்ல.” என்று ஆறுதல் கூறினாள் நிருபமா.

கீர்த்திகாவின் அழுகை மட்டுப்பட்டிருக்க, தன்னைப் பற்றி பேசலானாள் நிருபமா. “அவர் செய்யற வேலை மேல எனக்கு அக்கரை இருந்ததில்ல. அவருக்கும் அதே தான். நானோ, பையனோ, குடும்பமோ எதையும் பத்தி அவர் கவலைப்பட மாட்டார். பொறுப்பெடுத்துக்க மாட்டார். ஒரே வீட்டுல இருந்துட்டு, அவர் இதை செய்யாம போறப்போ எனக்கு கோபம் ஆத்திரம்னு வந்து, சண்டை போட்டுட்டு இருப்பேன். அப்பறமா ஒரு நாள் யோசிச்சு பார்த்தப்போ இதெல்லாம் தேவையில்லன்னு தோணுச்சு. இப்படி வலுக்கட்டாயமா ஒருத்தர் மேலே ஏன் என் வாழ்க்கையைத் திணிச்சு நிம்மதியில்லாம வாழணும்னு யோசிச்சேன்.”

“எனக்கு வேலை இருக்கு, சம்பளம் வருது, என் தேவைகளை என்னால பார்த்துக்க முடியும், என் பையனுக்கு நல்ல படிப்பையும் எதிர்காலத்தையும் என்னால தனியாவே கொடுக்க முடியும். அப்படி இருக்கறப்போ, இந்த சொசைட்டிக்காக பயந்து, ஸ்டேட்டஸைக் காப்பாத்திக்கறதுக்காக ஒண்ணா சேர்ந்து ஏன் இருக்கணும்னு தோணிச்சு. இதை அவர்கிட்ட சொன்னப்போ, வேண்டாம்னு ஒரு பேச்சுக்குக் கூட மறுப்பு சொல்லலை. உடனே சம்மதம் சொல்லிட்டார்.”

“பையனோட படிப்பு செலவை அவர் ஏத்துக்கறதாவும் வக்கீல்கிட்ட சொல்லிட்டார். ம்யூட்ஃயுவல் கன்சர்ன்ல டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டோம். நாங்க டைவர்ஸ் பண்ணப் போறோம்னு கேள்வி பட்டதுமே எல்லாரும் என்ன பிரச்சனை, என்ன கவலை, அதை சரி பண்ணிக்கப் பார்க்கலாமேன்னு மட்டும் தான் பேசினாங்க. சண்டை போட்டுக்கற அளவுக்கு கூட எங்க ரெண்டு பேர்த்துக்கும் நடுவுல பேச்சு வார்த்தையே இல்லைனு நான் சொன்னதைப் புரிஞ்சுக்க யாருமே முன்வரலை.”


“பிரிஞ்சு போகணும்னா ஏதாவது பிரச்சனைன்னு ஒன்னு இருந்தே தான் ஆகணுமா? மனசு ஒத்துப் போகலை. சேர்ந்து வாழ்ந்து ஒருத்தர் வாழ்க்கையை இன்னொருத்தர் அழிக்க விரும்பலைங்கறது ஒரு காரணமா யாரும் ஏத்துக்கலை.” என்று கீர்த்திக்கு ஆறுதல் சொல்லத் துவங்கிய நிருபமா அவளையும் மீறி அவள் கதையைச் சொல்லியிருந்தாள். ஏதோ ஒரு விதத்தில் தன் வாழ்க்கை கீர்த்திக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான் நிருபமா பேசியது.
 

T23

Moderator
கீர்த்திகாவிற்கும் நிருப்பமாவின் வாழ்க்கை ஒரு படிப்பினையாக அமைத்திருக்க வேண்டும். “ஆமாக்கா, நீங்க செஞ்சது சரியா தப்பா, தேவையா தேவையில்லையான்னு உங்களுக்குத் தான் தெரியும். தோ, உங்க இந்த தன்னம்பிக்கைக்குக் காரணம் உங்க மனசு மட்டும் இல்லைக்கா, உங்க வேலையும் தானே! மாசம் ஆனா, சம்பளம் வந்துடும்கறது எவளோ பெரிய தெம்பு குடுக்கும். என் படிப்புக்கு இந்த மாதிரி நிறைய சம்பளத்தில வேலை கிடைக்காதுக்கா! அதனால தான் அதையும் இதையும் பண்ணி ஒரு பிசினஸ் டெவலப் பண்ணனும். அதில சம்பாரிக்கணும்னு துடிக்கறேன்.” என்று தன் நடவடிக்கைக்கான காரணத்தை கீர்த்திகா சொன்ன போது அது சரியாகத் தான் இருந்தது.

அவள் கஷ்டம் என்னவென்று அவளுக்குத் தானே தெரியும். இடையில் தான் யார் அவளை பற்றி தீர்ப்பு வழங்க என்ற தெளிவு ஏற்பட்டிருந்தது. இதெல்லாம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. கீர்த்திகாவுடனான நட்பு நல்ல முறையிலேயே வளர்ந்து கொண்டிருந்திருக்கும், அந்த ஒரு நிகழ்வு மட்டும் நடவாமல் போயிருந்தாள்.

அந்த நிகழ்வு குறித்து எண்ணிப் பார்ப்பதை நிருபமா அரவே தவிர்த்திருந்தாள். எத்துனை தூரம் முயன்ற போதும், அந்த நிகழ்வையும், அது மனதில் புகுத்திய உணர்வுகளையும் ஒதுக்கிவிட்டு கீர்த்தியுடன் சகஜமாகப் பேச எத்தனித்தாலும் அது முடியாமல் போனது.

ஏன் தனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது? என்ற விடை தெரியா கேள்வியுடன் கீர்த்தியிடம் சற்றே ஒதுக்கம் காமித்துப் பழகத் துவங்கியிருந்தாள் நிருபமா.

அதிலும் இப்போதெல்லாம் கீர்த்திகாவைக் காணும் போது முன் போல இலகுவாகப் பேச முடிவதில்லை. அவள் மனதில் முள்ளாய் அந்த சம்பவம் வந்து வந்து போய்க் கொண்டிருக்க, இயல்பாக இருக்க முடியாமல் போய்விட்டது.

“சரி, இதுவும் நல்லதிற்குத் தான்!” என்று மனதை ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டுவிட்டிருந்தாள் நிருபமா.

கீர்த்திகா இறந்து போன செய்தி கேட்டு, உண்மையில் நிருபமா துடித்துப் போனது என்னவோ நிஜம் தான். ஒருகணம் அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. முன்தினம் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட, யு.பி.எஸ்ஸின் கம்மிய மின் அழுத்தத்தில் மெல்லமாக இயங்கிய மின்விசிறியால் இரவு வெகு நேரம் வரையிலும் நிருபமாவிற்குத் தூக்கம் வரவில்லை.

அதிகாலையில் ஆழ்ந்து உறங்கிப் போனவள், சற்றே தாமதமாகத் தான் கண்விழித்தாள். தேநீர் கோப்பையும் பால்கனிக்கு வந்தவளுக்கு கீழே குழுமியிருந்த கூட்டம் பிரமிப்பூட்டியது. என்ன ஏதேன்று தெரியாவிடினும், அங்கே நின்றிருந்த ஆம்புலன்ஸ் வண்டியும், போலீஸ் வாகனமும் அச்சமூட்டின. பதற்றத்துடன் கீழே வந்தவளுக்கு இறந்து போனது கீர்த்திகா என்று தெரிந்தவுடன் மயக்கமே வந்துவிட்டது.

“நேத்து காலையில கூட ஆபீஸ் கிளம்பறப்போ பார்த்தேனே! பைக்கான்னு அழகா கை அசைச்சாளே! இவளுக்கா இப்படி ஒரு நிலைமை! கடவுளே” என்று மனம் விம்மியது. அவள் காண்பது கனவா நிஜமா என்றே புரிபடாமல் தவித்துப் போனாள் நிருபமா.

மேலே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் அஜு எழுந்து கொண்டு தேடுவானே என்ற பரிதவிப்பில் மீண்டும் அவள் ஃப்ளாட்டிற்கு வந்துவிட்ட போதும், அன்றைக்கு ஏனோ வேலைக்குச் செல்ல நிருபமாவின் மனம் ஒப்பவில்லை. மனம் முழுக்க கீர்த்திகாவையே சுற்றிச் சுற்றி வந்தது. கீர்த்திகாவை விடவும், அவள் கணவன் விக்னோஷையே சுற்றி வந்தது.

நிருபமாவிற்குத் தெரியும் அவள் எண்ணம் தவறானது என்று. அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது இல்லை என்று அவள் மனதிற்குக் இரும்புக் கடிவாளம் தான் இட்டிருந்தாள். ஆனால், அந்த இரும்புத்திரையை விக்னேஷின் சோர்ந்த முகமும், அவன் கண்ணீர் திரையிட்ட விழிகளும் அசைத்துப் பார்த்திருந்தது என்னவோ உண்மை.

அந்த ஒரு நாள் மாலைப் பொழுதில் மொட்டை மாடியில், நிருவுக்கும் விக்னேஷிற்கும் இடையில் நடந்த சம்பாஷணைகளை எந்த ரகத்தில் எடுத்துக் கொள்வது என்று இன்றளவும் நிருபமாவிற்கு குழப்பம் தான்.

அந்த தினத்திற்குப் பிறகு, கீர்த்திகாவை வேறு விதமாக பார்க்கத்தோன்றியது. காரணமில்லாமல் கீர்த்திகாவின் மேல் கோபம் ஏற்பட்டது. கோபம் கொள்ளும் அடுத்த நிமிடமே, “சே! எதனால் இந்த சம்பந்தமில்லாத கோபம் இவள் மேல்!” என்ற எண்ணம் உடனே தோன்றிவிடும். இப்படி மாறி மாறி குழம்பத் துவங்க, நிருபமா இயல்பாக கீர்த்திகாவிடமிருந்து சற்றே விலகிப் போகத் துவங்கினாள்.

பழைய தினங்கள் போல நீண்ட நேர அரட்டைகளோ, அளவலாவல்களோ குறைந்து போயின. மொட்டை மாடியில் விக்னேஷுடன் நடந்த விஷயங்களைப் பற்றி கீர்த்தியிடம் சொல்லும் தைரியம் நிருவுக்கு எழவில்லை. என்ன சொல்லி புரியவைப்பாள்? என்ன ருசு இருக்கிறது தன்னிடம்? எதுவுமே இல்லையே! அப்படியிருக்க ஒருவர் மீது அபாண்டமாகப் பழியைப் போட எவ்வாறு இயலும்?

கீர்த்திகாவிடம் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் ஒவ்வொரு தருணங்களிலும் இந்தக் கேள்விகள் எல்லாம் மனதில் அலைமோதி நிருபமாவை தடுத்துவிடும்.

“சாரி கீர்த்தி! ஐம் வெரி சாரி! நீ உயிரோட இருக்கறப்போவே உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டிருக்கணும். பட், கேட்க முடியலை. ஐம் ரியலி சாரி கீர்த்தி! என்னை மன்னிச்சிரு!” என்று அன்று மானசீகமாக அவள் மனது குமுறியது. கீர்த்தியின் தலை சிதறிய உடலைக் கண்டதும் துடித்துப் போனது. தன்னால் ஏதேணும் செய்திருக்க இயலுமோ? தன்னால் இந்த மரணத்தை சம்பவிக்காமல் இருக்கும் படி செய்திட முடிந்திருக்குமோ? என்ற அர்த்தமற்ற கேள்விகள் மழை மேகமாய் சூழ்ந்து கொண்டது.

அவள் மனதின் கருமை போலவே, வெளியே மீண்டும் வானம் கருக்கல் கட்டிக் கொண்டு மற்றொரு அடைமழைக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

 

T23

Moderator
அத்தியாயம் 6

பெங்களூரில் இருந்து சென்னை வந்த விமானத்திலிருந்து முதல் ஆளாக வெளியே வந்தது விக்னேஷ் தான். அவன் அவசரம் கண்டு “ஏ, லுக் அவுட்!” என்று கொஞ்சம் போல சிடுசிடுத்த சக பயணிகள், அவன் முகத்தில் வழிந்த சோகம் கண்டு மேற்கொண்டு ஏதும் பேசாமல் அமைதியாயினர்.

கையில் பெரியதாய் பெட்டிகள் எதுவும் இல்லாத காரணத்தினால், வேகமாக இமிக்ரேஷனை முடித்துக் கொண்டு விமான நிலையத்திலிருந்து வெளிப்பட்டான். அவன் சென்னை வந்து இறங்கியதுமே அவன் அழைத்துப் பேசவென அவனுக்கு ஒரு காவலாளியின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது.

அதை அழைக்கவும், அங்கே அவனுக்காக போலீஸ் ஜீப்பில் காத்திருந்த கான்ஸ்டபிள் இந்திரன் விக்னேஷை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காவல் நிலையம் நோக்கி விரைந்தார்.

“சார், என் வைஃப்க்கு என்னாச்சு சார்? எப்படி சார் இப்படி? நான் ஊருக்கு கிளம்பறப்போ கூட நல்லா தானே சார் இருந்தா? திடீர்னு என்னாச்சு சார்?” என்று ஜீப்பில் ஏறிய நொடியில் இருந்தே கான்ஸ்டபிள் இந்திரனிடம் கதறிக் கொண்டே வினவினான் விக்னேஷ்.

“உங்களை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு வர சொல்லி மட்டும் தான் எனக்கு ஆடர் விக்னேஷ் சார். கேஸ் டீட்டெயில்ஸ் எல்லாம் இன்ஸ்பெக்டர் சார் சொல்லுவார்.”

“சார், எப்படி இறந்தான்னாவது சொல்லுங்க சார். யாராவது ஏதாவது பண்ணிட்டாங்களா சார். மொட்டையா இன்னைக்கு காலையில உங்க வைஃப் இறந்துட்டாங்க உடனே சென்னை கிளம்பி வாங்கன்னு ஒரு ஃபோன் கால் வருது. என்ன ஏதுன்னு நான் பதறிப் போயிருக்கேன் சார். ப்ளீஸ், உங்களுக்குத் தெரிஞ்சதை சொல்லுங்க சார். ப்ளீஸ் சார்” என்று மீண்டுமாய் கான்ஸ்டபிள் இந்திரனிடம் வினவிய விக்னேஷைப் பார்க்க, இந்திரனுக்குப் பாவமாகத் தான் இருந்தது.

ஆனால், இன்ஸ்பெக்டர்ம் வெற்றிவேலின் குணம் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த காரணத்தினால், தான் எதையும் உளறக்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தான் இந்திரன்.

விக்னேஷின் அடுத்தடுத்த எந்த கேள்விக்கும் எந்த பதிலுமே இந்திரன் சொல்லவில்லை. “இன்னும் பத்து நிமிஷம் பொறுத்துக்கோங்க. ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் சார் உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுவார்.” என்று மட்டுமாக பதிலளித்த இந்திரன், வண்டியை செலுத்துவதில் கவனமானான்.

விக்னேஷின் கண்கள் வெளியே அவசர கதியில் இயங்கிக் கொண்டிருந்த சென்னை மாநகரத்தை வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தது. தன் உலகம் இங்கே அப்படியே ஸ்தம்பித்துப் போயிருக்க, வெளியே அவரவர் உலகம் இன்னமும் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருப்பதை எண்ணி ஒரு வகையான கோபம் மூண்டது.

அவன் கண் வழியே அவன் வாழ்வும், கீர்த்தியுடன் அவன் வாழ்ந்த நாட்களும் கண்ணீராய் கரைந்து போய் கொண்டிருந்தன. பெருமூச்சு ஒன்றை எடுத்து தன்னை சமன் செய்து கொண்ட விக்னேஷ்,

“சார், என் கீர்த்திகா எங்க சார்? எங்க சார் வச்சிருக்கீங்க? அதாவது சொல்லுங்க சார்” என்று அடைக்கும் தொண்டையுடன் வினவினான்.

இம்முறையும் கான்ஸ்டபிள் இந்திரன் எந்த மறுமொழியும் சொல்ல மாட்டான் என்று நினைத்த விக்னேஷிற்கு, “உங்க கஷ்டம் புரியுது மிஸ்டர்.விக்னேஷ். உங்க மனைவிய ராயபேட்ட ஹாஸ்பிடலுக்கு காலையிலையே கொண்டு போயாச்சு. நீங்க அவங்க அப்பா அம்மாவுக்கு தகவல் சொல்லணும்னா சொல்லிடுங்க” என்று கம்மிய குரலில் பதிலளித்தான்.

இந்திரனின் பதில் விக்னேஷை சமாதானப் படுத்தப் போவதில்லை தான் என்றபோதும், இதையேணும் இவனுக்குச் சொல்வோமே என்ற எண்ணத்தில் தான் இந்திரன் பதிலளித்தான். இதைக் கேட்டதும், இன்னமும் சற்றே பெரிய கேவலாக எழுந்தது விக்னேஷிடம்.

அதுவரையிலும், இதெல்லாம் ஏதோ தவறு. யாரையோ அழைப்பதற்கு பதில் தன்னைக் கூட்டிச் செல்கின்றனர். இது வேறு ஏதோ கீர்த்திகாவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிய மனது, கான்ஸ்டபிள் கூறிய வார்த்தைகளில் தொனித்த நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

கன்னத்தில் கோடிட்ட நீர் திரையை துடைக்கவும் மறந்து போனவனாய் வண்டியில் அமர்ந்திருந்தான். அவன் மனதைப் போலவே வெளியேவும் கீர்த்திகாவின் மரணத்தை எண்ணி தேம்பிக் கொண்டிருந்தது பொன் வானம்.

*****

விக்னேஷை, இன்ஸ்பெக்டர் வெற்றிவேலின் அறைக்கு வெளிய அமர வைத்துவிட்டு உள்ளே சென்றான் கான்ஸ்டபிள் இந்திரன். வெற்றி, சப் இன்ஸ்பெக்டர் நெல்சனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

“சார், அந்த பொண்ணோட ஹஸ்பெண்ட் விக்னேஷை கூட்டிட்டு வந்துட்டேன் சார்.”

“ம்ம். நேரா ஏர்போர்டில இருந்து தானே வர்றீங்க. வழியில எங்கையும் நிறுத்தலை தானே!” என்று வெற்றி வினவினான்.

“இல்லை சார். நீங்க சொன்ன படி எங்கையும் நிறுத்தாம, நேரா ஸ்டேஷனுக்குத் தான் கூட்டிட்டு வந்திருக்கேன் சார்.”

“குட். வழியில அந்தாளு எப்படி இருந்தான்? ஐ மீன், உங்ககிட்ட தன் வைஃப் பத்தி புலம்பினானா? ஏதாவது கேள்வி கேட்டானா?”

“சார், வைஃப்க்கு என்னாச்சு? எப்படி இப்படின்னு ஜீப்பில ஏறினதுமே கேட்டார் சார். நான் எல்லா டீடெயிலும் ஸ்டேஷன்ல சொல்லுவாங்கன்னு சொல்லி கூட்டிட்டு வந்திருக்கேன்.”

“குட். நீங்க எதும் சொல்லிடலை தானே!”

“இல்ல சார்.. வந்து.. பாடிய எங்க வச்சிருக்காங்கன்னு மட்டும் சொன்னேன் சார். சாரி சார்” என்று தலையை லேசாகக் கவிழ்த்த வண்ணம் பதில் கூறினான் இந்திரன்.

அவனை ஆழ்ந்து ஒரு பார்வை நோக்கிவிட்டு, “சரி, இட்ஸ் ஆல்ரைட். அதனால எந்த பிரச்சனையும் இல்ல. நீங்க போங்க. நான் சொல்லறப்போ அவரை உள்ளே அனுப்புங்க.” என்று மொழிந்த வெற்றி, நெல்சனிடம் திரும்பி, “நீங்க விக்னேஷை டீ குடிக்க கூட்டிப் போங்க.அப்படியே பேச்சு குடுங்க. எதாச்சும் லீட் கிடைக்குதான்னு பார்ப்போம். டீ குடிச்சதுக்கு அப்பறமா என்னைப் பார்க்க கூட்டிட்டு வாங்க” என்றான்.

நெல்சன் தலையசைத்து விடைபெற்று, அறையிலிருந்து வெளிப்பட்டான். வாயிலில் தலையை கவிழ்த்தபடிக்கு அமர்ந்திருந்த விக்னேஷின் முன்னே சென்று நிற்கவும் விக்னேஷ் தலையை நிமிர்ந்து நெல்சனை ஏறிட்டான்.

“கீர்த்திகாவோட ஹஸ்பெண்ட் நீங்க தானே!” என்று வினவ, தலையை மட்டுமாய் அசைத்தான் விக்னேஷ்.

“இன்ஸ்பெக்டர் சார் வேற ஒரு கேஸ்ல கொஞ்சம் பிசியா இருக்கார். ஒரு ஹாஃப் எ நவர்ல கூப்பிடுவார். வாங்க அதுவரைக்கும் வெளிய நிக்கலாம்” என்று சொல்லிவிட்டு, விக்னேஷின் பதிலுக்குக் காத்திறாமல் காவல் நிலையம் விட்டு வெளியேறினான். விக்னேஷிக்கு நெல்சனை பின் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போக, மெல்ல எழுந்து சென்றான்.

காவல் நிலையத்தின் எதிர்சாரியில் ஒரு தேநீர் நிலையம் நோக்கி நகர்ந்த நெல்சன், விக்னேஷிற்கும் தனக்குமாக தேநீர் தருவித்தான். இதற்குள் விக்னேஷின் கைப்பேசி விடாமல் அழைக்கவும், நெல்சன், “எடுத்து பேசுங்க பரவாயில்ல” என்று விட்டு மெளனமாக விக்னேஷை கவனிக்கலானான்.

“சொல்லுடா. ம்ம்ம்.. சென்னை வந்துட்டேன். ம்ம்ம்.. ஸ்டேஷன் வந்துட்டேன். ம்ம்ம். சரி. வா. இங்க தான் இருக்கேன். ம்ம்ம்” என்று விட்டு கைப்பேசியை அணைத்த விக்னேஷ், தன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நெல்சனிடம், “என்னோட ஃப்ரெண்ட் சார். துணைக்கு வரவான்னு கேட்டான், அதான் வரசொன்னேன்” என்றான்.

“ம்ம்ம்.” என்றுவிட்டு நெல்சன் தன் தேநீரில் கவனமாவது போல காட்டிக் கொள்ள, சற்று நேரத்திற்கெல்லாம் விக்னேஷின் நண்பன் வந்து சேர்ந்திருந்தான். சற்றே பதற்றமாக விக்னேஷை நோக்கி வந்தவன், “டே, என்னாச்சு மச்சான்? எப்படிடா ஆச்சு இதெல்லாம்?” என்று வினவினான்.

அருகே நெல்சன் நின்றதை உணர்ந்து, “சார். நான் யாசர். விக்கி கூட ஒண்ணா வேலை பார்க்கறேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“என்னாச்சுடா விக்கி. எப்போடா நடந்தது இது? நீ பெங்களூர்ல இருந்து எப்போ வந்த?” என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்க, வந்தவன் தோளில் கட்டிக் கொண்டு சற்றே உடல் குலுங்க அழுத விக்னேஷ், முடிந்த மட்டும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “எல்லாம் முடிஞ்சது டா. போயிட்டா டா! என்னை அனாதையா விட்டுட்டுப் போயிட்டா” என்று விரக்தியான புன்னகை ஒன்றை சிந்தினான்.

“விட்றா அழாதடா. நீ என்னடா பண்ண முடியும்? நீ உன்னால முடிஞ்ச அளவு, ஏன் உன் சக்திக்கு மீறின அளவு செலவு செஞ்சு அவங்களை நல்லா தான் பார்த்துகிட்ட! மனசுவிடாத விக்கி” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த யாசரின் வார்த்தைகள் நெல்சனை சற்றே சஞ்சலப்படுத்தின.

“டீ குடிக்கறீங்களா?” என்று வம்படியாக யாசரின் கையில் தேநீர் கோப்பையைத் திணித்த நெல்சன், “சக்திக்கு மீறி செலவு செஞ்சார்னு சொன்னீங்களே! என்ன செலவு செஞ்சார் அப்படி?” என்று யாசர் கூறிய ஒரு வார்த்தையில் இருந்து வினா தொடுத்தான்.

இதை யாசர் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. யாசரை விடவும் விக்னேஷின் முகத்தில் ஒரு விதபதற்றம் வந்து ஒட்டிக் கொண்டது. அதுவரையிலும் விக்னேஷின் முகத்தில் தென்பட்ட இழப்பின் அவலம் சற்றே பின்னுக்குப் போய்விட அவ்விடத்தை பயம் வந்து கவ்வினாற் போல இருந்தது.

விக்னேஷின் முகமாற்றத்தையும், யாசரின் தடுமாற்றத்தையும், என்ன பதில் சொல்வது என அவன் விக்னேஷின் முகத்தில் கண்பதித்த விதத்தையும் தவறாது மனதில் குறித்து கொண்டன நெல்சனின் விழிகள்.

“அது வந்து சார்.” என்று யாசர் தடுமாற, யாசரை முந்திக் கொண்டு, “அது, நான் கீர்த்திகாக அதிகமா செலவு செய்வேன் சார். அவ என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லாம வாங்கிக் குடுப்பேன். அதை சொல்லறான்.” என்று சமாளிப்பாக முடித்துக் கொண்டான் விக்னேஷ்.

ஆனால், இந்த பதிலைச் செல்லும் போது, விக்னேஷின் விழிகள், யாசரின் முகத்தில் சென்று சென்று மீண்டது. “நீ எதுவும் சொல்லாதே! நான் பேசிக் கொள்கிறேன்” என்று சொல்லாமல் சொல்லியது.

இதையும் கவனித்திருந்த நெல்சன், ஒரு முடிவுக்கு வந்தவனாக, மூவர் அருந்திய தேநீருக்கும் சேர்த்து தானே பணம் கொடுத்துவிட்டு, மீண்டும் காவல் நிலையம் நோக்கி நடக்கத் துவங்கினான்.

உள்ளே செல்லவும், மற்ற இருவரையும் வெளியே இருக்கச் சொல்லிவிட்டு வெற்றிவேலின் அறைக்குள் சென்ற சப் இன்ஸ்பெக்டர் நெல்சன்,

“சார்..” என்று மென்மையாக அழைத்தான்.

“சொல்லுங்க நெல்சன். விக்னேஷ் ஆள் எப்படி? எதாவது லீட் இருக்கா?”

“எஸ் ஸார். ஆள் வெளி பார்வைக்கு ரொம்ப அப்பாவி போலத் தான் தெரியறான். ஆனா முழுசும் அப்படி இல்லையோன்னு தோணுது. அவனோட ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு யாசர்னு ஒரு ஆள் வந்திருக்கான் ஸ்டேஷனுக்கு. அவனை கொஞ்சம் தட்டிக் கேட்டா உளறுவான்னு தெரியுது. சாதாரணமா பேசறப்போவே யாசர் முன்னுக்கு பின்ன பேசினான். ஆனா அதை விக்னேஷ் சமாளிச்சுட்ட மாதிரி இருக்கு.”

“ஐ.சீ. அப்போ ஒண்ணு பண்ணுங்க. நீங்க அந்த யாசர்கிட்ட பேச்சுகுடுத்துப் பாருங்க. விக்னேஷை உள்ளே அனுப்புங்க. அப்பறம், கீர்த்திகாவோட அடாப்ஸி ரிப்போர்ட் வந்திருச்சு. பார்த்துருங்க” என்ற படிக்கு ஒரு ஃபைலை நெல்சனின் பக்கம் நீட்டினான் வெற்றிவேல்.

ஃபைலை வாங்கி கண்களைப் பாயவிட்ட நெல்சன் சில நிமிடங்களில் திரும்ப ஃபைலை மேஜையின் மீது வைத்தான். “டைம் ஆஃப் டெத் விடியக்காலை 2 மணியில இருந்து 4 மணிக்குள்ளன்னு போட்டிருக்கு. காஸ் ஆஃப் டெத் – கீழ விழுந்ததில ஸ்கல் உடைஞ்சு இறந்திருக்கா.”

“ஆமா நெல்சன். வேற மார்க்ஸ் எதுவும் உடம்பில இல்ல. தள்ளி விட்டிருந்தா எதாவது ஸ்கிரேச் மார்க்ஸ் நகத்தில இருந்திருக்கும். அப்படியும் எதும் இல்ல. ஒருவேளை விபத்தாவோ இல்ல தற்கொலையாவோ கூட இருக்கலாமோன்னு தோணுது.” என்றான் நெல்சன் கம்மிய குரலில்.

“ம்ம்ம் உங்க அனுமானம் சரியா இருக்கலாம். விபத்தா இருந்தா, அந்த நேரத்தில அதுவும் மழை பேயறப்போ இந்த பொண்ணு மொட்டை மாடிக்குப் போக வேண்டிய அவசியம் என்ன? இன்னொரு முக்கியமான பாயிண்ட் ரிப்போர்டோட அடுத்த பேஜ்ல இருக்கு. அதை கவனிச்சீங்களா?” என்று வெற்றி கண்களைச் சுருக்கிக் கொண்டு நெல்சனை ஏறிட, நெல்சன் மீண்டும் அவசரமா அந்த காகிதங்களை மற்றொரு தடவை படிக்கலானான்.

அந்தக் காகிதத்தின் அடியில் ஒரு வரி மட்டும் நெருடலாகத் தென்பட்டது. “பஞ்சர் மார்க்ஸ் இன் லெஃப்ட் எல்போ” என்று போட்டிருந்தது.

“ஸார், இது..” என்று வெற்றியை ஏறிட, வெற்றி தலையை மட்டுமாய் அசைத்தவன், “எஸ். இடது எல்போகிட்ட சில பஞ்சர் மார்க்ஸ் இருக்கு. அதாவது ஊசி குத்தப்பட்ட தடயம். இதை வச்சு பார்க்கறப்போ அந்த பொண்ணுக்கு ட்ரக் குடுத்து மயக்கம் ஏற்படுத்தி, மொட்டை மாடில இருந்து தூக்கி கீழ போட்டிருக்க நிறைய வாய்ப்பிருக்குன்னு எனக்குத் தோணுது.” என்று கூறி நிறுத்தினான்.
 

T23

Moderator
அத்தியாயம் 7

“சார். இது சாத்தியமா?” என்று நெல்சன் சந்தேகமாகத் தான் வினவினான்.

“ஏன் சாத்தியப்படாது. கொலை பண்ணனும், ஆனா அது தற்கொலையோ இல்ல விபத்து மாதிரியோ தெரியணும்னு நினைச்சு, யாராவது அந்த பொண்ணுக்கு மயக்கம் ஏற்படுத்தி அந்த பொண்ணை கீழ தூக்கி வீசியிருக்கலாமில்லையா? வாய்ப்பிருக்கு தானே!” என்று வெற்றி சொல்லச் சொல்ல, நெல்சனின் மனதில் அதுவரையிலும் இது விபத்தோ அல்லது தற்கொலையோ தான் என்ற எண்ணம் கொஞ்சம் மாறிப் போயிருந்தது.

“அடெம்ப்ட் மர்டரா இருக்கவும் வாய்ப்பிருக்கும் போலையே சார்” என்றான் நெல்சன் சந்தேகமாக.

“ம்ம்ம். ஆமா. இந்த கையில ஊசி குத்திருக்க மார்க் இல்லைன்னா, இதை தற்கொலையா விபத்தாங்கற ஆங்கிள்ல பார்க்கலாம். ஆனா இப்போ அப்படியில்ல. இது ஒரு ப்ளான் பண்ண மர்டரா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு.” என்றான் வெற்றிவேல்.

அமோதிப்பாகத் தலையசைத்த நெல்சன், “கரெக்ட் சார்.” என்றான்.

“ஒ.கே. நீங்க அந்த ஃப்ரெண்ட் யாசர் கிட்ட பேச்சுகுடுங்க. அப்பறம் விக்னேஷை உள்ள வர சொல்லிடுங்க” என்று கூற, சல்யூட் அடித்துவிட்டு வெளியேறினார் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன்.

*****

நெல்சன் விக்னேஷையும், யாசரையும் வெற்றிவேலின் அறைக்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றதுமே விக்னேஷ் யாசரிடம் கடிந்து கொள்ளத் துவங்கினான்.

“டேய், அந்த எஸ்.ஐகிட்ட எதுக்குடா கண்டதையும் உளர்ற? நீ எனக்கு சப்போர்டிவ்வா இருக்க வந்தியா இல்ல என்னை மாட்டிவிட வந்தியா?” என்று பற்களை நறநறவெனக் கடித்துக் கொண்டு வினவினான்.

“டேய் விக்கி. நான் எதார்த்தமா தான்டா சொன்னேன். அதில இருந்து அந்த எஸ்.ஐ பாயிண்ட் எடுத்து கேட்பான்னு நான் நினைக்கலைடா. சாரி டா”

“விடு. இனி பார்த்து பேசு. அந்தாள் என்ன கேட்டாலும்,எனக்கு அவளோவா எதுவும் தெரியாது. எனக்கு விக்னேஷ் ரொம்பலாம் பழக்கம் இல்ல. கூட வேலை பார்க்கறோம். ஹாய் பாய்ன்னு பேசிக்குவோம்னு மட்டும் சொல்லு. போதும். வேற என்ன விஷயம் கேட்டாலும் தெரியாதுன்னே மெயிண்டெயின் பண்ணு.”

“சரிடா. டேய்.. நீ பேசறதைப் பார்த்தா.. எனக்கு…” என்று விக்னேஷின் முகத்தை ஆழ்ந்து நோட்டம் விட்ட யாசரை முறைத்துப் பார்த்த விக்னேஷ்,

“சொல்லு, சொல்லி முடிச்சிரு. என் பொண்டாட்டிய நான் கொலை பண்ணிட்டனான்னு தானே சந்தேகப்படற! அதை கேட்டு முடிச்சிறேன்.” என்றான் விரக்தியுடன்.

“டேய் அப்படியில்லடா. நீ கொஞ்சம் திணறவும் அப்படி கேட்டுட்டேன். உன்னைப் பத்தி தெரிஞ்சும். நீ அந்த பொண்ணை எவளோ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட,அவளுக்காக எவளோ பார்த்து பார்த்து கவனிச்சுகிட்டன்னு தெரிஞ்சும் உன்னை நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது. சாரி டா.” என்றான் யாசர் உண்மையான வருத்தத்துடன்.

“விடுடா. அதான் அவளே இல்லைன்னு ஆகிடுச்சு.” என்ற விக்னேஷின் கண்கள் மீண்டும் பனித்தன.

“சாரிடா மச்சி. நான் உன்னை அப்படி கேட்டிருக்க கூடாது” என்றான் யாசர் மீண்டுமாக.

“ம்ம்.. நீ மனசில இருக்கறதை கேட்டுட்டதே நல்ல விஷயம் தாண்டா. பரவாயில்ல விடு.” என்றான் விக்னேஷ்.

“விக்கி. உன் மேல தான் எந்த தப்பும் இல்லையே! அப்பறம் ஏண்டா அந்த எஸ்.ஐ கேட்ட கேள்விக்கு நீ தடுமாறின!”

“டேய், இவளோ வருஷம் கூட பழகின உனக்கே ஒரு செகண்ட் நான் கொலை பண்ணியிருப்பனோன்னு சந்தேகம் வந்துச்சுல்ல. அப்படியிருக்கப்போ அந்த எஸ்.ஐ என்னை கொலைகாரங்கற எண்ணத்தோட தான் பார்ப்பாண்டா. அவனா எதாவது கிடைக்குமான்னு தேடிட்டு இருக்கப்போ நாமளா போய் வாலண்டியரா வாய் குடுக்கக் கூடாதுல. அதனால தான் கொஞ்சம் பயந்தேன்”

“அதும் சரி தான். ஆனா எப்படி இருந்தாலும் எல்லா விஷயமும் நீ போலீஸ்கிட்ட சொல்லித்தானடா ஆகணும். உன் மனைவி பத்தி எனக்கும் முழுசுமா தெரியாதுதான். நீ குறை சொல்லற மாதிரி என்னைக்குமே கீர்த்திகா சிஸ்டர் பத்தி சொன்னதில்ல.”

“குறை சொல்லற மாதிரி எதுவும் இருந்ததில்லடா” என்று சொல்லும் போதே விக்னேஷின் குரல் நிறைய இடறியது. தன் உற்ற நண்பனிடமே பொய் சொல்கிறோமே என்று தடுமாறியது. ஒரு நொடிப்பொழுதில் தன் மனப்போராட்டங்களில் இருந்து தன்னை மீட்டெடுத்தவன்.

“அவ ஒரு சின்ன குழந்தை மாதிரி டா. நிறைய விஷயம் ஆசைப்படுவா. அதை செய்யலைன்னா கோவிச்சுக்குவா. பேசமாட்டா. இப்படி சின்ன சின்னதா தான் குறைகளே தவிர, பெருசா எதுவும் இல்ல டா.”

“ம்ம்ம், இதெல்லாம் எல்லா வீட்டுலையும் இருக்கறது தானே விக்கி!”

“அதான்டா நானும் சொல்லறேன். சாதாரணமான விஷயத்தை கூட இந்த போலீஸ்காரங்க பெரிய பூதக்கண்ணாடி வச்சு பார்ப்பானுக. அதனால தான் அவங்ககிட்ட பேசறப்போ சுதாரிப்பா பேசுன்னு சொல்லறேன். நீ எனக்கு உதவி செய்ய தான் ஸ்டேஷன் வந்த! இதுனால உனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ எதுவும் கெடுதல் வந்திடக் கூடாது. எனக்கும் தான்”

“புரியுதுடா” என்று கூறிய யாசர், அமைதியாக விக்னேஷ் சொன்ன விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். யாசரின் சிந்தனை இப்படியிருக்க, விக்னேஷின் மனதில் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

“போலீஸ்கிட்ட என்ன சொல்லணும். எல்லாமே சொல்லிடறது பெட்டரா! அவங்களால கண்டுபிடிக்க முடியுமா? ஒருவேளை அவங்களால கண்டுபிடிக்க முடியாமையே போயிருச்சுன்னா நாமளா தேவையில்லாம நிறைய சொல்லி, சிக்கி கிட்ட மாதிரி ஆகிடுமே! என்ன உண்மைய சொன்னாலும் மொத ஆளா நம்மளைத் தான் சந்தேகப்படுவாங்க.”

“இப்போ மட்டும் என்ன? இப்போவும் நான் குற்றவாளியான்னு ப்ரூவ் பண்ணதான் பார்ப்பாங்க. அதுக்காக எப்படி போட்டு வாங்கி பேசலாம்னு தான் யோசிப்பாங்க. அவங்களைப் பொருத்த வரைக்கும் இந்தக் கேஸை எவளோ சீக்கரம் முடிக்க முடியுமோ அவளோ முடிக்க நினைப்பாங்க. சோ, மொதல்ல சிக்கர ஆட்டைத் தான் பலிகடா ஆக்குவாங்க.”

“மனைவி செத்துப் போனா, முக்கிய குற்றவாளி கணவனோ, கணவன் வீட்டைச் சார்ந்தவங்களோ தான். இங்க என் அப்பா அம்மாலாம் ஊர்ல இருக்காங்க. அதனால அவங்க மேல டவுட் வர வாய்ப்பில்ல. சோ, நா கொன்னதா முடிவுக்கு வந்து கேஸை க்ளோஸ் பண்ண தான் வாய்ப்பு தேடிட்டு இருப்பாங்க. நாமளா வாலண்டியரா போய் சிக்கிரக் கூடாது. அவனுக விசாரனைக்கு ஒத்துப் போற மாதிரியே காட்டிக்கணும். அப்போ தான் என் மேல சந்தேகம் வராம இருக்கும்” என்று பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தது.

இருவரின் சிந்தனையையும் கலைக்கும் வண்ணம் அங்கே மீண்டும் தோன்றிய எஸ்.ஐ நெல்சன், “விக்னேஷ் நீங்க உள்ள போங்க. இன்ஸ்பெக்டர் வெற்றி சார் கூப்பிடறார்.” என்றான். விக்னேஷுடன் சேர்ந்து யாசரும் எழுந்து கொள்ள, அவன் தோளில் கைவைத்து அழுத்திய நெல்சன், “நீங்க இருங்க, நீங்க எங்க போறீங்க” என்று யாசரை வெளியே தள்ளிச் சென்றான்.

விக்னேஷ் யாசரை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்துவிட்டு, சர்கிள் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் என்று பெயர்பலகை தென்பட்ட அறையினுள் சென்றான்.

*****

யாசரை வெளியே அழைத்துச் செல்லும் வேளையில், விக்னேஷ் யாசரை ஆழமாகப் பார்த்த விதத்தை நெல்சன் கண்டுகொண்டான். விக்னேஷின் பார்வை புரிந்து யாசரின் உடல் சற்றே நிமிர்வடைவதையும், மனதில் ஒரு வித உறுதி தோன்றுவதையும் உணர்ந்த நெல்சன், “ரொம்ப நெஞ்சை நிமித்தாதடா. அடிச்சு நொறுக்கிறுவேன்” என்று மனதினுள் சொல்லிக் கொண்டு, யாசரின் தோளில் பிடித்திருந்த கைகளை இறுக்கினான்.

இந்த வித்யாசம் யாசருக்கும் புரிந்து போனது போல விடைத்திருந்த அவன் தோள்கள் தானாக ஆசுவாசமடைந்தன. காவல் நிலையத்தின் வெளிய வீற்றிருந்த புளியமரத்தின் பக்கத்தில் போலீஸ் ஜீப்கள் நிறுத்தப்பட்டிருக்க, அதன் அருகாமையில் அழைத்து வந்த நெல்சன், ஒரு வண்டியின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு கால்களைப் பக்கவாடில் வெளிப்பக்கமாகத் தொங்கவிட்டான்.

“அப்பறம், சொல்லுங்க மிஸ்டர் யாசர். உங்களுக்கு விக்னேஷ் எப்படி பழக்கம்? எத்தனை நாளாத் தெரியும்?” என்று திட்டமாக வினவினான்.

யாசரின் உடல் பாவனையில், “இதெல்லாம் எனக்கு தெரிந்த கேள்வி தான். ஏற்கனவே விடை சொல்லிப் பார்த்துக் கொண்டேனே” என்பது போன்ற உணர்வு வெளிப்பட்டது. அதே தோரனையில், “அது நானும் விக்னேஷும் ஒண்ணா வேலை பார்க்கறோம் சார். ரொம்ப பழக்கமெல்லாம் இல்ல. ஜஸ்ட் தெரிஞ்சவர் அவளோ தான்” என்று மனப்பாடம் செய்வதன் போல ஒரே மூச்சில் ஒப்புவித்தான்.

அவன் பேசிய விதத்தில் இருந்தே விக்னேஷ் இப்படி இப்படிப் பேச வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது போலவே இருந்தது. யாசரின் அவசரமான பேச்சைக் கேட்கவும் நெல்சனுக்கு சிரிப்பு வந்தது.

“சரி, எவளோ தூரம் சாமாளிக்கறன்னு பாக்கறேன்” என்று நினைத்துக் கொண்ட நெல்சன், “ஓ. பரவாயில்லையே! இந்தக் காலத்தில இப்படி ஒரு மனுஷனா? நல்லவர் யாசர் நீங்க. அவளோ பழக்கம் இல்லாத உங்க ஃப்ரெண்டுக்காக போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்திருக்கீங்கன்னா பெரிய விஷயம் தான்”என்று மெச்சுதலாய் ஆரம்பித்தான்.

நெல்சனின் பேச்சைக் கேட்கவும் யாசரின் மனதில் ஒருவித நிம்மதி படர்வதை கண்கூடக் காணமுடிந்தது. “அப்பாடா, நாம சொன்னதை இளிச்சவாயி போலீஸ்காரன் நம்பிட்டான்”என்று நினைத்திருக்கக் கூடும்.

“அது வந்து. ஆமா சார். நான் நான் கொஞ்சம் ஹெல்பிங் டெண்டன்சி உள்ள ஆளு தான்” என்றான் எதாவது பேசவேண்டும் என்பதற்காக.

“ம்ம்ம். இருக்கட்டும்.. சரி, எவளோ வருஷமா நீங்க விக்னேஷ் கூட வேலை பார்க்கறீங்க?”

“அட இது சாதாரண கேள்வியாச்சே” என்று எண்ணிய யாசர், “ஒரு ஆறு வருஷமா சார்.” என்று பதிலளித்தான்.

“ஆறு வருஷம். நல்லது. நல்லது. ஆறு வருஷம் பழகியிருந்தாலும் விக்னேஷ் பத்தி கொஞ்சமா தான் தெரியும் உங்களுக்கு. அப்படித்தானே”

“ஆமா சார். எனக்கு அவளோவா பழக்கமில்ல சார்.”

“ம்ம்ம். இருக்கட்டும். அப்படித்தான் இருக்கணும்.”

“ஆமா சார். இந்தக் காலத்தில யாரையும் நம்ப முடியாது பாருங்க” என்றான் யாசர் தானாகவே. ஒவ்வொரு கேள்விக்கும் நெல்சனிடம் இருந்து ஒரு சிறிய சிரிப்பு வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது. அதன் அர்த்தத்தை யாசர் கொஞ்சமும் உணரவில்லை.

“ஆமா, யாரையும் நம்பக் கூடாது. தூங்கறப்போ கூட கால் கட்டைவிரலை ஆட்டிகிட்டே தான் தூங்கணும்.”

“ஆமா சார். விழிப்பா தான் இருக்கணும்.”

“ம்ம்ம் சரி, விக்னேஷுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?”

“அது ஒரு ஒன்னரை வருஷத்துக்கு முன்னாடி இருக்கும் சார்.”

“கல்யாணம் எங்க நடந்துச்சு? சென்னையிலையா?”

“இல்லையே சார். கீர்த்திகா ஊரு நாகர்கோவில் பக்கம். கல்யாணம் அங்க தான் நடந்துச்சு சார்.”

“பார்ரா, கீர்த்திகா எந்த ஊருன்னு கூட தெரிஞ்சிருக்கு. ஆனா விக்னேஷ் அவளோ பழக்கமில்ல. அப்படித்தானே” என்றான் நெல்சன் சிரிப்பை கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல்.

நெல்சன் கேட்ட விதத்தில் சற்றே பதற்றம் அடைந்த யாசர், கொஞ்சம் சுதாரித்தான். நெல்சன் இதுவரையிலும் சிரித்த சிரிப்பிற்கான காரணம் கொஞ்சம் புரிபடுவது போலத் தோன்றியது.

சரியாக அந்த நேரம் பார்த்து, நெல்சனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. “நீங்க கேட்ட மாதிரி நாகர்கோவில் ரெஜிஸ்டர் ஆபீஸ்ல இருந்து கீர்த்திகா விக்னேஷ்வரனோட மேரேஜ் சர்டிஃபிகேட் காபி உங்களுக்கு வாட்ஸ்ஸப் பண்ணியிருக்கேன் சார்” என்று ஏட்டு மூர்த்தி கைப்பேசியில் அழைத்து செய்தி கூறினார்.

“ம்ம்ம்ம் ஒ.கே நான் பார்த்துக்கறேன்” என்று வாட்ஸ்ஸப்பைத் திறந்த நெல்சன், நேராக சாட்சிக் கையெழுத்து இட்டிருந்த பெயர்களைக் கூர்ந்து நோக்கினான். அதில் விக்னேஷின் பெயருக்கு சாட்சி இட்டவர்கள் பெயரில் முதலாவதாக இருந்தது, “மொஹம்மது யாசர்”என்ற பெயர். அதைக் கண்டதும் இன்னமும் சிரித்துக் கொண்ட நெல்சன்,

தன் கைப்பேசியை யாசரின் பக்கம் நீட்டி, “யாசர், இது என்னன்னு தெரியுதா?” என்று கேட்டுவிட்டு, யாசரின் கையெப்பம் இருந்த இடத்தைப் பெரிதாக ஜூம் செய்து காட்டினான்.

நெல்சனின் கைப்பேசியைக் கண்டதுமே அதுவரையில் யாசர் காட்டிக் கொண்டிருந்த தோரனை சட்டென மாறிப் போனது. நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் பூத்துவிட, ஆடுதிருடி மாட்டிக் கொண்டவன் போலத் திருதிருவென விழித்தான் யாசர்.

“எங்களை எல்லாம் இன்னும் பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்கீங்க இல்ல! ம்ம்ம்? உன் ஜாதகத்தையே பத்து நிமிஷத்துல எடுத்துட முடியும் எங்களால. அப்படியே நீ சொல்லற கதையை தலையாட்டிகிட்டே கேட்டுட்டு, போயிட்டு வா ராசான்னு உன்னை வழியனுப்பி வச்சிருப்பேன்னு நினைச்சியோ?” என்று குரலில் கடுமையை ஏற்றி, கண்சிமிட்டாமல் வினவிய நெல்சனைக் கண்டு கதிகலங்கிப் போனான் யாசர். “சார்ர்ர்ர்ர்” என்ற ஒற்றை வார்த்தையில் அவன் அதுவரையிலும் காட்டிவந்த விட்டேற்றியான தோரனை மாறிவிட்டது.

“உனக்குத் தெரிஞ்ச உண்மையை ஒழுங்கா சொல்லிட்டா உனக்கு நல்லது. நாங்க என்ன உனக்கு எதிரியாடா? இன்னது நடந்தது, இதைப் பத்தி இவளோ எனக்கு தெரியும், இதெல்லாம் தெரியாதுன்னு உண்மையை சொன்னா எங்க வேலை குறையும்ல. நீ காதுல சுத்தற பூவை சுத்தி முடிக்கற வரைக்கும் நாங்க பாவமா காத்திருக்கணும். ம்ம்ம்?” என்று எகிறினான்.

“சார், சார் நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது சார்.”

“இன்னொரு தடவை தெரியாதுன்னு சொன்ன, நீயும் அந்த பொண்ணைக் கெடுக்கப் பார்த்த, அதனால அந்த பொண்ணு மேல இருந்து குதிச்சிருச்சுன்னு சொல்லி கேஸை க்ளோஸ் பண்ணிருவேன் பார்த்துக்க” என்று சொன்னதும் யாசர் நடுநடுங்கிப் போனான்.

“ஐய்யோ சார். இப்படி அபாண்டமா பேசாதீங்க சார்.கீர்த்திகா உண்மையிலையே எனக்கு தங்கச்சி மாதிரி தான் சார்.நம்புங்க சார். இதெல்லாம் என் பொண்டாட்டி கேட்டா என்னை உயிரோட கொளுத்திடுவா சார்” என்று நடுங்கிப் போனான்.

“தெரியுதா! அப்பறம் என்ன இதுக்குடா சுத்தி வச்சு கதை சொல்லற! ஒழுங்கா உனக்கு என்ன தெரியுமோ அதை சொல்லு. உன் ஃப்ரெண்டு அந்த விக்னேஷ் தான் கொலை பண்ணானா? சொல்லு” என்றான் நெல்சன்.

“ஐய்யோ சார். அவன் அப்படிப்பட்டவன் இல்ல சார். ரொம்ப நல்லவன் சார். அந்தப் பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துகுவான் சார்.” என்றான் யாசர் குரல் தழுதழுக்க.

“அப்பறம் எதுக்குடா அவனை நீ காப்பாத்தப் பார்க்கற? சொல்லு! உண்மையை சொல்லிட்டா உனக்கு நல்லது” என்று சொல்லி நிறுத்த யாசர் முகத்தின் வியர்வையை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

“இதப்பாரு யாசர், உனக்கும் இந்த கேஸுக்கும் சம்பந்தமில்லன்னு எனக்குத் தெரியும். நீ உன் ஃப்ரெண்டுக்காக இதையெல்லாம் பேசறன்னும் தெரியும். உண்மைய மறைக்க மறைக்க நிஜமான குற்றவாளி நம்மளை விட்டு தள்ளித் தள்ளி போயிட்டு இருப்பான். அதைப் புரிஞ்சுக்கோ. என்ன? உனக்குத் தெரிஞ்சதை மறைக்காம சொல்லு” என்று அமைதியாக யாசரின் முகத்தில் கண் பதித்தான்.

“சார் அந்த பொண்ணு, விக்னேஷோட மனைவி கீர்த்திகா அவளோ சரியில்ல சார்” என்ற யாசரின் முதல் வார்த்தைகள் கேட்டு யாசர் கூறியதை கூர்ந்து கவனிக்கலானான் நெல்சன்.
 

T23

Moderator
அத்தியாயம் 8

உள்ளே வெற்றிவேலின் அறையினுள் சென்ற விக்னேஷிடம் தன் எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியைக் காட்டி அமருமாரு சைகை செய்த வெற்றி, “டீ எதாவது குடிக்கறீங்களா?” என்று தன்மையாகவே துவங்கினான்.

“இல்ல சார் வேண்டாம். கீர்த்திகாக்கு என்னாச்சுன்னு நீங்களாவது சொல்லுங்க சார். என்னச்சு அவளுக்கு” என்று சற்றே பரிதவிப்புடன் வெற்றியை ஏறிட்டான் விக்னேஷ்.

“ஐம் ரியலி சாரி மிஸ்டர்.விக்னேஷ். உங்க மனைவி இறந்தது, அதுலையும் இவளோ சின்ன வயசில, இப்படி அகாலமா மரணமடைஞ்சது உங்களுக்கு பெரிய அதிர்ச்சியா இருந்திருக்கும். வி ஆர் சாரி ஃபார் யுவர் லாஸ்” என்று உண்மையான வருத்தத்துடன் கூறிய வெற்றி,

“இந்த நேரத்தில உங்களைக் கூப்பிட்டு விசாரிக்கறோம்னு நீங்க தப்பா நினைக்க கூடாது. எங்க ட்யூட்டியைத் தான் நாங்க பார்க்கறோம். எங்க ஸ்டேஷனுக்கு இன்னைக்கு காலையில சுமார் 7மணி அளவில கால் வந்துச்சு. உங்க அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் பகதூர் தான் முதல்ல பாடிய பார்த்திருக்கார். எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணாங்க.” என்று முடிந்த அளவு குரலில் கடுமை காட்டாமல் பேசினான்.

விக்னேஷ் அமைதியாக வெற்றியை ஏறிட்ட போதும், அவன் கண்கள் தன்னிட்சையாக கலங்கிப் போயின. சட்டையின் கைபாகத்தால் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

“சாரி விக்னேஷ். உங்க கஷ்டம் எங்களுக்குப் புரியலைன்னு நினைக்காதீங்க. புரியும். உங்களை மாதிரி தினமும் பத்து பேரை நாங்க ஃபேஸ் பண்ணறோம். அதனால உங்க எமோஷன்ஸ் எங்களுக்குப் புரியும் விக்னேஷ். உங்கள மாதிரியே நாங்களும் எமோஷனலா யோசிச்சுட்டு சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா சொல்லுங்க? உங்க மனைவி இறந்தது தற்செயலா, கொலையா இல்ல விபத்தான்னு கண்டுபிடிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு எங்களுக்கு இருக்கு தானே!” என்று வினவ, விக்னேஷ் தலையை மீண்டுமாய் அசைத்தான்.

“ம்ம்ம். சோ, சொல்லுங்க, உங்க மனைவி எப்படிப்பட்டவங்க.?” என்று கேட்கவும் விக்னேஷ் விருட்டென்று நிமிர்ந்து வெற்றியை ஏறிட்டான். அவன் கண்களில் ஒரு நொடிப் பொழுது பயம் வந்து சென்றது. “எதற்காக பயப்படுகிறான்?” என்ற கேள்வி அந்த இமைக்கும் நொடியில் வெற்றியின் மனதில் மின்னல் போல நிழலாடியது.

விக்னேஷின் தடுமாற்றத்தைத் தான் கவனிக்கவில்லை என்பது போலக் காட்டிக் கொண்ட வெற்றி, “எப்படிப்பட்டவங்கன்னா? என்ன விஷயம் பிடிக்கும் பிடிக்காது, அப்பார்ட்மெண்ட்ல எப்படி பேசி பழகுவாங்க? யார்லாம் ஃப்ரெண்ட்ஸ். அவங்களோட டெய்லி ஆக்டிவிட்டீஸ் என்ன? இந்த மாதிரி விபரங்கள் கேட்கறேன்.”

“இது விபத்தா, தற்கொலையா இல்ல, கொலையான்னு தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம் இல்லையா. நீங்க என்ன நினைக்கறீங்க. உங்க மனைவியை கொலை பண்ணற அளவுக்குக் கோபமோ, வருத்தமோ யாருக்காவது இருக்கா?”

“ஸார், தற்கொலை செஞ்சுக்கற அளவுக்கு கீர்த்தி கோழை இல்ல சார். அவளுக்கு நிறைய ஆசைகள் இருக்கு. இருந்துச்சு. சொந்தமா பிசினஸ் பண்ணனும். பணம் சம்பாதிக்கணும், கார் வாங்கணும், ஃப்ளாட் வாங்கணும், பிள்ளைக பிறந்தா பெரிய ஸ்கூல்ல படிக்கவைக்கணும்னு நிறைய ஆசைப்படுவா சார்."”

“ம்ம்ம். அப்ப தற்கொலையா இருக்க வாய்ப்பில்லன்னு சொல்லறீங்க. அப்படித்தானே!”

“ஆமா சார். அவளுக்கு தற்கொலை செஞ்சுக்க என்ன காரணம் இருக்க முடியும் சார்.? எதுவும் இல்லையே!”

“ம்ம்ம்ம். உங்களுக்கோ, அவங்களுக்கோ எதிரிகள், விரோதிகள் இந்த மாதிரி எதாவது?”

“அப்படி எதுவும் இல்லை சார்.”

“ம்ம்ம், கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, உங்க வைஃப்க்கு முன்னாள் காதலன் பாய் ஃப்ரெண்ட்னு இப்படி எதாவது?” என்று வெற்றி பேசி முடிப்பதற்குள் விக்னேஷ் பதறிப் போனான்.

“ஐய்யோ என்ன சார்? இப்படிலாம் கேட்கறீங்க. எங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒன்னரை வருஷம் தான் ஆச்சு சார். நாங்க சந்தோஷமா தான் வாழ்ந்தோம். கீர்த்தி அப்படியெல்லம் இல்ல சார். நல்ல பொண்ணு சார்” என்றான் சிறிய கேவலுடன்.

“ஸாரி விக்னேஷ். உங்களைக் காயப்படுத்தணும்னு நான் அப்படிக் கேட்கலை. காலையில வேலைக்குப் போனா, நீங்க சாயந்தரமா தான் வர்றீங்க. கீர்த்தி வேலைக்கும் போகலை. வீட்டில இருக்கற ஹவிஸ் வைஃப். அவங்க மனசளவில எப்படி இருந்தாங்கன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.”

“இல்ல சார். அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்ல சார்.” என்று பட்டெனக் கூறிய விக்னேஷ் திடமாக வெற்றியின் கண்களைச் சந்திக்க விரும்பவில்லை. இதை வெற்றியும் மனதில் பதித்துக் கொண்டான்.

“ம்ம்ம். சரி. அதை விடுங்க. உங்க வைஃப் பத்தின மத்த பொதுவான விஷயங்கள் பத்தி சொல்லுங்க. எந்த ஊரு, என்ன படிச்சிருக்காங்க. ஃப்ரெண்ட்ஸ், பழக்கவழக்கம் இதெல்லாம்” என்று சொல்லிக் கொண்டே வெற்றி தன் இருக்கையில் லாவகமாக அமர்ந்து கொள்ள, விக்னேஷ் தன் மனையாளைப் பற்றி சொல்லத் துவங்கினான்.

“எனக்கு நாகர்கோவில் சொந்த ஊர் சார். அப்பா, அம்மா, அக்கா ஃபேமிலி அங்க தான் இருக்காங்க. அப்பா நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில ஜூஸ் கடை வச்சிருக்கார் சார். ரொம்ப ஆஹா ஓஹோன்னு இல்லாட்டியும் ஓரளவு நல்ல வருமானம் தான் சார். அக்காவை, அம்மாவோட தம்பிக்கே கல்யாணம் பண்ணி குடுத்திருக்கு. அவங்களும் பக்கத்தில தான் இருக்காங்க”

“ம்ம்ம்ம், உங்க வைஃப் வீட்டில எப்படி?” என்றான் வெற்றிவேல்.

“கீர்த்திவீட்டில மூத்த பொண்ணு சார். அவளுக்கு அப்பறம் ஒரு தம்பியும் தங்கச்சியும் உண்டு. அவ அப்பா, ஒரு பரோட்டா கடையில சப்ளையரா வேலை பார்க்கறார் சார். அம்மா வீட்டில தான் இருக்காங்க.”

“அப்ப உங்க வைஃப் வீட்டில உங்க வீட்டை விட வசதி கொரச்சல் தான். இல்லையா?” என்று வெற்றி வினவ, விக்னேஷ் ஆமாம் என்று தலையசைத்தான்.

“கீர்த்தியோட அப்பா வேலை பார்க்கற பரோட்டா கடை என் அப்பா கடைக்கு பக்கத்தில தான் சார். அவங்க அப்பாவை பார்க்க கீர்த்தி வரப்போ போறப்போ எனக்கு பழக்கம்.”

“ஓ… நீங்க சென்னையில எத்தனை வருஷமா வேலை பார்க்கறீங்க?”

“நான் காலேஜ் ஐடிஐ படிச்சேன் சார். மேல படிக்க ஆசைபட்டேன். ஆனா இங்க அம்பத்தூர்ல ஒரு கம்பெனில ஐடிஐ படிச்ச பசங்களுக்கு 8ஆயிரம் சம்பளம் குடுத்து தங்க இடமும் சாப்பாடும் போடறாங்கன்னு பேப்பர்ல விளம்பரம் பார்க்கவும், இங்க வந்து ஜாயின் பண்ணேன் சார்.”

“ம்ம்ம். கேட்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க மாச சம்பளம் இப்போ எவ்ளோ?” என்று கேட்க, விக்னேஷ் சற்றே சங்கடப்பட்டான் தான்.

“அட சும்மா சொல்லுங்க விக்னேஷ்.” என்று வெற்றி தூண்ட, “பி.எஃப் பிடிச்சது போக கைக்கு பத்தொன்பதாயிரம் வருது சார்.” என்று விக்னேஷ் சொல்ல, வெற்றியின் மனதில் அந்த சந்தேகம் சற்றே உதமாகியது.

“விக்னேஷ் ஒரு க்ளாரிஃபிகேஷனுக்கானுக்காகக் கேட்கறேன். உங்க சம்பளம் வெறும் பத்னொன்பதாயிரம்னு சொல்லறீங்க. ஆனா நீங்க குடியிருக்கற ஏரியா திருவான்மியூர்ல. இந்த அப்பார்ட்மெண்ட்ல எவளோ கூட்டி குறைச்சு பார்த்தாலும் வாடகை பன்னெண்டாயிரம் வந்துருமே!” என்று வெற்றி சரியாக வினவியிருக்க, விக்னேஷ் சற்றே திணறினான்.

“சார், அது வந்து, வாடகை பன்னெண்டாயிரம் அப்பறம் மெயிண்டனஸ் சேர்த்து பதினாலாயிரம் சார்.”

“வாங்கற சம்பளத்தை மொத்தமா வாடகைக்கு குடுத்துட்டு மத்த செலவுக்குகெல்லாம் என்ன பண்ணுவீங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. ஜஸ்ட் ஒரு க்யூரியாஸிட்டி”

“சார். அது, தாராளமா செலவு பண்ண முடியாது தான் சார். ஆனா சமாளிச்சிருவோம் சார். மாசக் கடைசில கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஃப்ரெண்ட்ஸ், தெரிஞ்சவங்கன்னு கைமாத்து வாங்கி ஒப்பேத்திடுவோம் சார்”

“ம்ம்ம்ம். ஆனா, உங்க சம்பளத்துக்கு இந்த வீடும் இந்த ஏரியாவும் கொஞ்சம்..” என்று வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தான் வெற்றி.

“சார். தெரியும் சார். என் ஃப்ரெண்ட்ஸ், கூட வேலை பார்க்கறவங்கன்னு எங்கிட்ட இதைப் பத்தி சொல்லாத ஆள் இல்ல சார். கீர்த்தி என் கிட்ட ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டு கேட்ட ஒரே விஷயம் இது மட்டும் தான் சார். அவ சின்ன வயசுல இருந்தே காம்பவுண்ட் வீட்டுல நிறைய ஆளுங்களோட தான் வளர்ந்தா, ஒரு காமன் டாய்லெட் தான் இருக்குமாம். அதுக்கு காலையில அவளோ சண்டையா இருக்குமாம்.”

“அவ கல்யாணம் பண்ணப்போ எங்கிட்ட கேட்ட ஒரே விஷயம், நல்ல ஒரு வீடா பார்த்து குடி போகணுங்கறது மட்டும் தான் சார். மத்தபடிக்கு, ஒரு வேளை சாப்பிடாம இருந்து கூட சமாளிச்சுக்குவோம். அதனால தான் சார், இந்த ஏரியா, இந்த வீடு, இந்த தகுதிக்கு மீறின செலவு எல்லாமே!” என்று முட்டிக் கொண்டு வந்த அழுகையை விழுங்க சிரமப்பட்டு தோற்று போய் தேம்பினான் விக்னேஷ்.

“சாரி, விக்னேஷ். ப்ளீஸ் காம் டவுன். என்னால உங்க மனநிலையை புரிஞ்சுக்க முடியுது.”

“இல்ல சார். நான் என்ன நிலைமையில இருக்கேன்னு எனக்கே புரியலை சார். என் கீர்த்திக்கு என்னாச்சு சார். ?” என்று சின்னக் கேவலுடன் வினவியவனைச் சற்றே பரிதாபமாகப் பார்த்த வெற்றி, கேஸ் பற்றி தனக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டான்.

“கீர்த்திகாவோட பேரண்ட்ஸ்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா? ஊர்ல இருந்து எப்போ வராங்க?”

“பண்ணிட்டேன் சார். இந்நேரம் கிளம்பி இருப்பாங்க. எப்படியும் அவங்க சென்னை வந்து சேர ஈவினிங் இல்ல நைட் ஆகிடும் சார்.”

“சரி, விக்னேஷ், செகண்ட் அடாப்ஸி ரிப்போர்ட் வந்ததும் சொல்லறேன். நீங்க பாடிய ஹாஸ்பிடல்ல இருந்து கலெக்ட் பண்ணிக்கலாம். அபீஷியலா கீர்த்திகா டெத் மேல டவுட் இருக்கு. தற்கொலைங்கறதுக்கோ, விபந்துங்கறதுக்கோ சாலிடான எவிடெண்ஸ் இல்ல. சோ, அது வரையிலும் கேஸ் ஓபன் தான். எப்போ கூப்பிட்டாலும் ஸ்டேஷன் வர வேண்டி இருக்கும். சரியா!” என்றான் வெற்றி.

விக்னேஷ் தலையை மட்டுமாய் அசைத்துக் கொண்டான். காவல் நிலையத்திலிருந்து வெளியே வரவும் அங்கே எஸ்.ஐ நெல்சனும், விக்னேஷின் நண்பன் யாசரும் உரையாடிக் கொண்டிருப்பதைக் காணவும் சற்றே பகீர் என்றிருந்தது விக்னேஷிற்கு.

“அய்யோ இவன் என்னலாம் உளறி கொட்டிகிட்டிருக்கான்னு தெரியலையே! இவனை வரச் சொல்லியிருக்கவே கூடாது.” என்ற கலவரம் நெஞ்சை முட்ட, அவசரமாக அவர்கள் இருவரின் அருகிலும் சென்றான் விக்னேஷ்.

*******

விக்னேஷை இன்ஸ்பெக்டர் வெற்றிவேலின் அறைக்குள் அனுப்பிவிட்டு, யாசரை வெளியே தள்ளிக் கொண்டு வந்த நெல்சன், யாசரிடம் மிகவும் தன்மையாகவே பேச்சைத் துவங்கினான்.

“இதப்பாருங்க யாசர். நீங்க இந்த கேஸை பொருத்தவரைக்கும் மூணாவது மனுஷன். உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்கள், அது எவளோ சின்ன விஷயமா இருந்தாலும் சொல்லிடுங்க. அதான் உங்களுக்கு நல்லது. இந்த கேஸ் இன்னமும் கொலையா தற்கொலையாங்கற கேள்வில இருந்தே வெளிய வரலை. சோ, எந்த சின்ன விவரமா இருந்தாலும் அது எங்களுக்கு உபயோகமா இருக்கும்.” என்று நிதானமாக யாசரின் முகத்தைப் பார்த்தபடிக்கே பேசினான்.

யாசரின் முகத்தில் கவலைக் கோடுகள் தென்பட்டன. புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள, மனதிற்குள் பலவிதமான யோசனைகள் வந்து செல்வதை முகத்திலிருந்து மறைக்க முயன்று தோன்று போயிருந்தான் யாசர். பெருமூச்சுடன் நெல்சனை ஏறிட்டவன், “சார்,நீங்க கேட்க வர்ற கேள்வி எனக்கு நல்லா புரியுது சார். விக்னேஷ் ஒரு வேளை கீர்த்திகாவை கொலை பண்ணியிருப்பானோன்னு சந்தேகப்பட்டு கேட்கறீங்க! விக்னேஷை எனக்கு 7,8 வருஷமா தெரியும் சார். அவன் அப்படிபட்டவன் இல்ல சார்” என்று சற்றே படபடப்புடன் பேசினான்.

“யாசர், ஒன்னு நல்லாத் தெரிஞ்சுக்கோங்க. எந்த மனுஷனையுமே நல்லவன், கெட்டவங்கற கோட்பாடுக்குள்ள அடுக்க முடியாது. அவன் இருக்கற சந்தர்ப்பம், சூழ்நிலை, மனநிலை இதெல்லாம் தான் ஒருத்தனை நல்லவனாவோ கெட்டவனாவோ ஆக்குது. இது மறுக்கப்பட முடியாத உண்மை. அதனால,எந்த முன் முடிவுக்கும் வரமா, உங்களுக்குத் தெரிங்க விஷயங்களை மட்டும் பகிர்ந்துக்கோங்க.” என்ற நெல்சனின் குரலில், அவன் வயதுக்கும் மீறிய ஒரு தெளிவு இருந்தது.

நெல்சன் கூறியதை மனதினுள் அசை போட்டவண்ணம் அமைதியாக இருந்தான் யாசர். ““சொல்லுங்க யாசர். கீர்த்திகா சரியில்லன்னு ஒரு வார்த்தை சொன்னீங்க. என்ன விதத்தில சரியில்ல. சொல்லுங்க. உங்க கிட்ட தன் மனைவி பத்தி விக்னேஷ் எதாவது தவறுதலா சொல்லியிருக்காரா? மறைக்காம சொல்லிடுங்க.” என்று சற்றே கறாரான குரலில் வினவினான் நெல்சன்.

“சார். விக்னேஷ் ரொம்ப ஹானஸ்டான ஆசாமி சார். நல்ல மரியாதை தெரிஞ்சவன். மத்தவங்க மனசுக்கும் ஆசைக்கும் மதிப்பு குடுக்கறவன். தன் மனைவி கீர்த்திகா பத்தி தேவைக்கு அதிகமா ஒரு வார்த்தை கூட பேசமாட்டான் சார். வீட்டில என்ன சண்டையா இருந்தாலும், அதனால தன் மனசில என்ன கவலை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்காம தான் இருப்பான் சார்.”

“என்ன ஒரேயடியா விக்னேஷைப் பத்தி புகழ்றீங்க. தண்ணி அடிச்சுட்டு வந்து ரொம்ப கலாட்டா பண்ணுவார்ன்னு அவங்க அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன்ல இருந்து பக்கத்துவீட்டில குடியிருக்கறவங்க வரைக்கும் விக்னேஷை தப்பா தானே சொல்லறாங்க”

“சார். அவன் குடிப்பான் தான் சார். ஆனா, அது கூட இப்போ சமீபமா தான் சார். இன்னும் ஓபனா சொல்லணும்னா, அவன் கல்யாணத்துக்கு அப்பறமா தான் சார் இப்படி குடிக்கவே ஆரம்பிச்சான். அது வரைக்கும் டீடோட்டலர் சார் அவன். பேச்சுலரா பசங்க கூட ரூம்ல தங்கியிருந்தப்போ கூட அவன் குடிச்சதில்ல சார்.” என்று மீண்டும் தன் நண்பனுக்கு வக்காலத்து வாங்கினான் யாசர்.

“அப்போ கல்யாண வாழ்க்கையில பிரச்சனைன்னு தான் குடிக்கறாரா?” என்று நெல்சன் வினவ, யாசர் சற்றே தயங்கினான்.

“சார், செத்தவங்களைப் பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு எங்க குரான்ல சொல்லியிருக்கு. ஆனா, இதை நான் சொல்லலைன்னா உயிரோட இருக்கற என் நண்பனுக்கு ஆபத்துன்னு நினைச்சு நான் இதைச் சொல்லறேன். அந்த பொண்ணு கீர்த்திகா, ரொம்ப செலவாளி சார். தகுதிக்கு மீறி நிறைய ஆசைப்படும். விக்னேஷோட நல்ல மனசை தன்னோட பேராசைக்கு உபயோகப்படுத்திக்கும் சார்”

“விக்னேஷ் உங்ககிட்ட தன் மனைவி பத்தி எதுவும் சொல்ல மாட்டார்னு சொல்லறீங்க. அப்போ இந்த விஷயம்லாம் எப்படி தெரியும் உங்களுக்கு?”

“சார், நான் தான் கூடவே இருந்து பார்க்கறேனே சார். கல்யாணம் ஆன புதுசுல அவன் 5ஆயிரம் ரூபாய்ல எங்க ஏரியால தான் சார் வீடு பார்த்து புது பொண்டாட்டி கூட குடிவந்தான். எங்களுக்கு ஓட்டேரி பக்கம் வீடி சார். அவளோ டீசண்டா இருக்காதுன்னு வைங்களேன். வெளி பைப்ல தண்ணி பிடிக்கணும். குடிக்க கார்பரேஷன் வாட்டர் தான். ஹவுசிங் போர்ட் வீடுன்னு நாங்க வாங்கற இருபதாயிரம் சம்பளத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கான வீடு தான் சார்.”

“சரி..”

“அது அந்த பொண்ணுக்கு சுத்தமா பிடிக்கலை சார். கல்யாணம் கட்டி வந்து ஒரு மாசம் கூட எங்க ஏரியால இருக்கல சார்.வேற வீடு பாரு பாருன்னு தினமும் சண்டை போட்டு, இதோ இந்த அப்பார்மெண்டுக்கு கூட்டி வந்துச்சு அவனை. அவனும் சரி, புது பொண்டாட்டி, இவளோ ஆசைப்படறாளே, செலவு முன்ன பின்ன ஆனாலும் சமாளிக்கலாம்னு இங்க வந்தான் சார்.”

“ம்ம்ம்ம்”

“அந்த பொண்ணு வேலைக்கும் போல சார். வீட்டில தான் இருக்கும். என் வைஃப் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு போறா சார். அங்க கூட வர்றியா வேலைக்குன்னு கூப்பிட்டுச்சு. அதுக்கு, “ஐய்ய இந்த வேலையெல்லாம் பார்க்கத்தான் நான் சென்னை வந்தனா?”ன்னு ஒரு மாதிரி முகத்தில அடிக்கறாப்ல சொல்லிடிச்சு சார்.”

“ம்ம்ம்ம் சோ, அந்த பொண்ணு செலவாளி. புரியுது.அதுக்கும் விக்னேஷ் குடிச்சுட்டு வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?”

“சார், அந்த பொண்ணை நல்லா வச்சுக்கணும்னு ஆசைப்பட்டு, அவ செலவுக்கு ஈடு கொடுத்தான் சார். அங்க இங்க கைமாத்து, கடன்னு வாங்கி, உருட்டி பெரட்டி சமாளிப்பான். இப்போ சமீபமா ஒரு கந்துவட்டிக்காரன்கிட்ட பணம் வாங்கியிருப்பான்னு நினைக்கறேன் சார். முழுசா சொல்ல மாட்டேங்கறான். அடிக்கடி அந்தாளு ஆபீஸ்கிட்ட வந்து விக்கியை மெரட்டிட்டுப் போவான். அதில இருந்து தான் சார் குடிக்கவே ஆரம்பிச்சான்.”

“ஓ. எவளோ கடன் வாங்கியிருக்கார் எதாவது தெரியுமா?”

“அது சரியா தெரியலை சார். அவளோலாம் எங்கிட்ட சொன்னதில்ல சார். இன்ஃபாக்ட் யார்டையுமே சொல்ல மாட்டான் சார். எல்லாமே தனக்குள்ளையே வச்சு பூட்டிக்கற ரகம் சார் அவன்.”

“ம்ம்ம். வேற எதாவது விஷயம் இருக்கா?”

“சார். எனக்கு தெரிஞ்சது இவளோ தான் சார். அந்த பொண்ணுக்காக இவன் நிறைய கஷ்டப்பட்டிருக்கான் சார்.”

“ம்ம்ம், லவ் மேரேஜ் தானே அவங்களுக்கு?”

“ஆமா சார். இவங்க அப்பா கடைக்கு பக்கத்து கடையில அந்த பொண்ணு கீர்த்திகா அப்பா வேலை பார்க்கறார் சார். ஒரே ஊரு தான்.”

“வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணாங்களா?இல்ல..”

“இல்ல சார். ரிஜிஸ்டர் கல்யாணம் தான். இவன் வீட்டுல அந்த பொண்ணு வீட்டை விட கொஞ்சம் வசதி சார். அதனால அந்த பொண்ணை ஒத்துக்கலை.”

“அந்த பொண்ணு வீட்டுல எப்படி? அவங்களுக்கும் இஷ்டம் இல்லையா”

“ஊருக்குள்ள பிரச்சனை ஆகிருச்சு சார். அந்த பொண்ணு வேற ஜாதி. அதனால ரெண்டு வீட்டுலையும் கல்யாணத்துக்கு ஒப்பலை. அதுவுமில்லாம..” என்று சற்றே தயங்கினான் யாசர்.

“ம்ம் சொல்லுங்க.. யாசர்.”

“அது, கல்யாணத்துக்கு ரொம்ப அவசரப்படுத்தினது அந்த பொண்ணு தான் சார். விக்னேஷ் இன்னும் கொஞ்ச மாசம் போகட்டும். கொஞ்சம் காசு சேர்த்துட்டு அப்பறம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு இருந்தான் மொதல்ல. அப்பறம் ஒரு தடவை ஊருக்கு போனவன், என்னை அவசரமா கிளம்பிவர சொன்னான். பார்த்தா அடுத்த நாள் கல்யாணம்ங்கறான்.”

“எதனால அவளோ அவசரமா கல்யாணம் பண்ணிகிட்டாங்க.?”

“அது அந்த பொண்ணு வீட்டில அவளோட மாமா பையனுக்கு இந்த பொண்ணை நிச்சயம் பண்ணறதா பேச்சு வந்திருக்கு. அதனால அந்த பொண்ணு பயந்துருச்சு போல” என்று கூறிய யாசர், “சார், நான் திரும்ப என் நண்பனுக்கு சப்போர்ட் பண்ணறேன்னு தவறுதலா நினைக்காதீங்க. உண்மையாவே விக்னேஷ் நல்லவன் சார். அவனால அந்த பொண்ணுக்கு ஒரு சின்ன மனகசப்பு கூட ஏற்பட்டிருக்காது சார். அப்படி தங்கம் தங்கமா தான் பார்த்துகிட்டான் சார்.” என்று கூறி நிறுத்தினான்.

யாசர் சொன்னதை வைத்துப் பார்க்கையில் விக்னேஷின் மேல் தான் அதுவரையிலும் கொண்டிருந்த பிம்பம் சற்றே மாறிப் போய், நிறைய குழப்பம் ஏற்பட்டிருந்தது நெல்சனுக்கு.

“ஒரு வேளை குழப்ப வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்ட கதையோ இது?” என்ற யோசனையுடன் நின்றிருந்தவனின் கவனம், அப்போது வெற்றிவேலின் அறையில் இருந்து வெளிவந்திருந்த விக்னேஷின் வரவால் கலைந்து போனது.
 
Status
Not open for further replies.
Top