அத்தியாயம் 4
7பி – பிரேம் குமாரின் வீடு
அதிகாலையில் அப்பார்ட்மெண்டில் நடந்த களோபரங்கள் ஓரளவு ஓய்ந்திருக்க, குளித்து முடித்து உணவு மேஜையின் முன் வந்து அமர்ந்தான் பிரேம் குமார்.
பிரேமிற்கு 33 வயதாகிறது. இன்னமும் திருமணம் ஆகவில்லை. அதைப் பற்றிய கவலையோ, அக்கரையோ அவனுக்கு இருந்ததில்லை. அவனுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டு அவன் திருமணத்தை எடுத்து நடத்தும் அளவிற்கான சொந்தம் என்பது அவனுக்கு வாய்க்கவில்லை. சிறு வயது முதலே தந்தையை இழந்தவன் என்பதால், அவன் மொத்த சொந்தபந்தமும் அவன் அன்னை மட்டுமே. படிக்கும் காலத்தில் ஒரு காதல் உண்டானது தான். ஆனால் அதுவும் இப்போது வேறு ஒரு திருமண பந்தத்தில் கட்டுண்டு கிடக்க, அவனுக்கு என்று இந்த பரந்து விரிந்த உலகத்தில் அவன் அன்னையையும், அலுவலகத்தில் சில நண்பர்களையும் தவிர வேறு உறவுகள் இல்லை.
அவன் அன்னையும் இரு வருடங்கள் முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட, அவன் வாழ்க்கையும், அவன் தேவைகளும் பெருமளவு சுருங்கிப் போயின.
அன்னையைப் பார்த்துக் கொள்ளவும், சமைக்கவும் முழு நேர வேலைக்கார அக்காவை நியமித்திருந்தான். இவன் அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்த பின்பு தான் வேலையாள் செல்லம்மா அவள் வீட்டிற்குச் செல்ல இயலும் என்பதால், வேலை முடிந்ததும் அடுத்த நொடி நேராக வீட்டிற்குப் பறந்து வந்துவிடுவான்.
சமைத்து வைத்திருக்கும் உணவை உண்டு முடித்து, தாய்க்கு மருந்து எடுத்துக் கொடுத்து அவரின் இரவு தேவைகளைக் கவனித்து முடிக்கவே பிரேமிற்குச் சரியாக இருக்கும். அலுவலகத்தில் ஒன்றிரண்டு காதல் அம்புகள் அவன் பக்கமாக நீண்டன தான்.
“என் கடமைகள் பத்தி தெரிஞ்சு, என் கூட சேர்ந்து படுத்த படுக்கையா இருக்க அம்மாவையும் கவனிச்சுக்கணும்னு கண்டிஷனோட இருக்கப்போ யார் சரின்னு சொல்லுவா?” என்று காதல் கணைகளை ஆரம்பத்திலேயே தவிர்த்து விடுவான்.
“அப்பா. அம்மா கூட இருக்கக்கூடாது. சொந்த வீடு வேணும். கார் வேணும். பேங்க் பேலன்ஸ் வேணும்னு எவளோ பெரிய லிஸ்ட் கேட்கறாங்க இப்போதைய கல்யாணத்துல. இதெல்லாம் எதுவுமே எனக்கு இல்லை. இருக்கறது வாடகை வீடு, ஆபீஸ்க்கு போக வர பைக், அம்மாவோட அவசர செலவுக்கு உதவ கொஞ்சம் ஃபிக்சட் டெபாஸிட். இதைத் தவிர வேற என்ன இருக்கு என்கிட்ட?” என்று பலசமயம் தோன்றும் பிரேமிற்கு.
அவன் வாழ்நாளின் அப்போதைய முதன்மையான முக்கியத்துவம் இப்போதைக்கு அவன் அன்னை மட்டுமே. “அம்மா கொஞ்சம் கொஞ்சமா பலவீனமா ஆகிட்டே தான் வர்றாங்க பிரேம். எழுவது வயசுக்கு மேல ஆகிட்டதால ஹெல்த் இம்ப்ரூவ்லாம் ஆகாது. இருக்கற வரைக்கும் நல்லா பார்த்துக்கோங்க” என்பது தான் மருத்துவரின் அறிவுரை.
தன் அன்னையின் நிலைமை அவனுக்கே நன்றாகத் தெரியும் தான். அதனால் அவரைப் பார்த்துக் கொள்ளும் கடமை ஒன்று மட்டுமே இப்போதைக்கு அவன் மனதில் இருக்கும் ஒரே பொறுப்பு.
“அம்மாவுக்குப் பின்னர்?” என்ற கேள்வி அவ்வப்போதும் மனதில் எழும் தான். அதற்கும் அவனிடம் ஒரு திட்டம் இருந்தது. அம்மா இருக்கும் வரையிலும் மட்டுமே இந்த ஊரில் இருக்க வேண்டும். அதன் பின்னர் ஏதாவது வெளிநாட்டிற்குச் சென்று தன் மீத வாழ்வை கவலைகள் பொறுப்புகள் இன்றி கழிக்க வேண்டும்.
“எனக்குன்னு இப்போதைக்கு எந்த கமிட்மெண்ட்ஸும் இல்ல. அம்மாவைப் பார்த்துக்கணும். அவங்க காலத்துக்கு அப்பறம் ஃபாரின் போய் செட்டில் ஆகிடணும். அவ்வளவு தான்” என்பது மட்டுமே அவனது எண்ணம்.
இப்படி திட்டமாகச் சென்று கொண்டிருந்த பிரேமின் வாழ்க்கையில், அன்றைய தினம் காலையில் அப்பார்ட்மெண்டில் ஏற்பட்ட மரணம் என்பது ரொம்பவும் விசித்திரமான ஒன்று.
“அந்த பொண்ணு எப்படி இறந்திருக்கும்?” என்ற யோசனையுடன் காலை உணவான முட்டை ஆம்பிலட்டை வெறித்துக் கொண்டே இருந்தவனின் கைப்பேசி அலறியது.
மறுமுனையில் அவன் அன்னையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கார அக்கா செல்லம்மா தான் பேசினார்.
“தம்பி, அப்பார்ட்மெண்ட் கேட்கிட்ட போலீஸ் நிக்கறாங்க தம்பி. என்னை உள்ள விடமாட்டேங்கறாங்க. நீங்க கொஞ்சம் சொல்லுங்க.” என்றார் செல்லம்மா.
“நீங்க ஃபோனை அங்க இருக்க போலீஸ்ட குடுங்கக்கா நான் பேசறேன்” என்று கூறிய பிரேம், செல்லம்மாவை உள்ளே அனுமதிக்கும் படி வேண்டிக் கொண்டான். “சார், என் அம்மாவுக்கு பக்கவாதம். பெட் ரிட்டன். செல்லம்மாக்கா வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறமா தான் நான் ஆபீஸ் போகவே முடியும். ப்ளீஸ் அவங்களை உள்ள விடுங்க. நான் ஏற்கனவே இது பத்தி உங்க இன்ஸ்பெக்டர் மிஸ்டர்.வெற்றிவேல் சார்கிட்ட பேசிட்டு தான் மேல வந்தேன் சார்” என்று ட்யூட்டியில் இருந்த கான்ஸ்டபிளிடம் கூறிய பின்பு தான் செல்லம்மாயை உள்ளே அனுமதித்தனர்.
காவலர்களைக் கண்ட அதிர்ச்சியுடன் வீட்டினுள் நுழைந்த செல்லம்மா, “என்ன தம்பி நடந்துச்சு! அப்பார்ட்மெண்டில ஒரே போலீஸா இருக்கு! கேட்ல வாட்ச்மேன் பகதூரையும் காணோம்.?” என்று ஆர்வம் பொங்க விசாரித்தார்.
ஏற்கனவே அலுவலகத்திற்கு தாமதம் ஆகிவிட்டிருந்த படியால், செல்லம்மாயின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க பிரேமிற்கு நேரம் இருக்கவில்லை. “அக்கா, எனக்கு ஆபீஸ்க்கு டயமாச்சு. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க. மெடிசன்லாம் சரியா எடுத்து குடுங்க.” என்று கட்டளை இட்டுவிட்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அவன் ஃப்ளாட்டில் இருந்து வெளிப்படவும், 7ஏவில் இருந்து அரவிந்த் வெளியே வரவும் சரியாக இருந்தது. அரவிந்தைப் பார்த்து சினேகத்துடன் தலையை அசைத்துவிட்டு, லிஃப்டிற்காக காத்திருந்தான் பிரேம்.
“ரொம்ப விசிச்சிரமான நாள் இல்லயா?” என்று அரவிந்த், சின்ன கவலையுடன் பிரேமிடம் வினவினான். அரவிந்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல், சின்ன தலையசைப்பை மட்டுமாய் பரிசளித்த பிரேம், “ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங். இப்போவே ரொம்ப லேட் ஆகிடுச்சு” என்று மன்னிப்பாக பதிலளித்துவிட்டு, லிஃப்டிற்காக காத்திறாமல், படிகளில் இறங்கியிருந்தான்.
*****
பிரேம் அலுவலகம் சென்றதும், அவன் சாப்பிட்டுச் சென்ற தட்டையும், அடுப்படியையும் சுத்தம் செய்து முடித்து, அவன் அன்னைக்கு பணிவிடை செய்து மருத்து கொடுத்த செல்லம்மா, அடுத்த வேலையாக 7ஏ அபிராமியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.
அவளுக்கு அங்கே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளாமல் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது. 7சி கீர்த்திகாவின் ஃப்ளாட், 7டி காலி ஃப்ளாட். 7சி வீடு முன்னாடி கான்ஸ்டபிள் வேற நிக்கறாங்க. 7ஈ அந்த நிருபமா இந்நேரம் வேலைக்குப் போயிருக்கும். ஆக, இந்த ஃப்ளோர்லயே சும்மா இருக்கறது அபிராமி பொண்ணு தான். அதுகிட்ட என்னாச்சுன்னு கேட்போம்” என்ற ஆர்வமிகுதியில் அபிராமியின் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்.
கதவைத் திறந்த அபிராமியிடம், “ஏம்மா, கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காத, என்னாச்சு நம்ம ஃப்ளாட்ல இன்னைக்கு. ஏதாவது திருடன் பூந்துட்டானா? ஏன் போலீஸ்லாம் வந்திருக்கு?” என்று வினவிய செல்லம்மாயை சற்றே அயற்ச்சியுடன் தான் ஏறிட்டாள் அபி.
அவ்வப்போது, “காபி பொடி கொடு. டீ போட இஞ்சி இருக்கா?” என்பது போல பேச்சுத் துணைக்கு ஆள் தேடிக் கொண்டு இது போல செல்லம்மா வருவாள் தான்.
அபிராமிக்கும் பொழுது போக்க ஏதுவாக இருக்கும். அவள் குடிகாரக் கணவனைப் பற்றியும், பக்கத்து வீட்டு லம்பாடி பற்றியும், கஞ்சா குடிக்கும் தன் மகன் பற்றியும் வெகுவாக புலம்பிவிட்டு, கொஞ்சம் கண்ணீர் சிந்தி, அபிராமி கொடுக்கும் டீயைக் குடித்துவிட்டுச் செல்வது வழக்கம்.
அங்கே பிரேமின் வீட்டைப் பற்றி குறை சொல்ல செல்லம்மாவிற்கு பெரியதாய் எந்த வம்புகளும் இருப்பதில்லை. செல்லம்மா குடிக்கவென, தனியாக கால் லிட்டர் பால் வாங்கிக் கூட பிரேம் ஃப்ரிட்ஜில் வைத்துச் செல்வான். அப்படிப் பட்டவனைப் பற்றி பெரியதாக என்ன குறை சொல்ல முடியும் செல்லம்மாவால்?
7ஈ நிருபமா மேடம் காலையில் சென்றால், இரவு தான் வீட்டிற்கு வருவாள். “டே கேரில்” இருந்து மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து அவனுக்கு உணவளித்து, உறங்க வைக்கவே நேரம் போதாது. இதில் எந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றியெல்லாம் கொஞ்சம் அக்கறை கொள்ளாத ரகம் நிருபமா.
அதே போன்று அந்த ஃப்ளோரில் வசிக்கும் அபியைப் பற்றி, 7சி கீர்த்திகாவிடமோ, 7ஈ நிருப்பமாவிடமோ வம்பு பேச முடியாது. 7சி கீர்த்திகாவும், அபிராமியும் தோழிகள் என்றில்லாவிட்டாலும் அவ்வப்போது நன்றாக சிரித்துப் பேசி பழகுவதை செல்லம்மா கண்டிருக்கிறாள்.
“அபிராமியம்மா ஏதாவது குழந்தைக்காக ட்ரீர்மெண்ட் போகுதா?” என்று ஒரு முறை கீர்த்திகாவிடம் எதார்த்தமாக வினவ, அடுத்த தினமே விஷயம் அபிராமியின் காதுகளுக்குச் சென்றிருந்தது. வேலைக்கு வந்த அடுத்த நிமிடம், வீடு தேடி வந்து செல்லம்மாவிடம் நறுக்கென்று கேள்வி கேட்டுவிட்டாள். அதிலும் வீட்டில் அப்போது பிரேம் வேறு இருந்தன. அவன் முன்னாலேயே, “இந்த மாதிரி என்னைப் பத்தி எதாவது வம்பு தும்பு பேசிட்டு இருக்கறதா காதுல விழுந்துச்சு, நடக்கறதே வேற!” என்று கர்ஜித்திருந்தாள் அபிராமி.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ரொம்ப காலம் அபியின் கண்களில் படாமல் ஒதுங்கிப் போவாள் செல்லம்மா. இது நடந்து ஒரு வருடமே ஆகியிருக்கும். அவ்வப்போது காபி பொடி, இஞ்சி என ஏதாவது கேட்க அபிராமியின் தயவு தேவைப்பட்டது செல்லம்மாவிற்கு.
அதிலும் இப்போது, அங்கே நடப்பது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வேறு. கதவினைத் திறந்த அபிராமியின் கண்கள், லேசாக கலங்கி இருந்ததைக் காணவும் துணுக்குற்ற செல்லம்மா,
“என்னாச்சு அபிராமிம்மா. கண்ணுலாம் கலங்குனாப்ல இருக்கு?” என்று கரிசனமாகக் கேட்கவும், அதுவரையிலும் இந்த ஆறுதல் பேச்சை தன் ரோபோ வீட்டுக்காரன் அரவிந்திடம் எதிர்பார்த்திருந்த அபிராபி பொசுக்கொன்று மனமுடைந்து போனாள்.
“ஐய்யோ அழுவாத அபிம்மா. என்னாச்சுன்னு சொல்லு” என்று வாசலிலேயே நின்று சத்தமாக வினவ, “ஷ்ஷ். கத்தாத! உள்ள வா மொதல்ல” என்று படிகளின் அருகே அமர்ந்திருந்த போலீஸின் செவிகளில் விழுந்துவிட்டதா என ஒரு நொடி எட்டிப்பார்த்துவிட்டு, செல்லம்மாவை வீட்டின் உள்ளே இழுத்துச் சென்றாள் அபிராமி.
“உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா?” என்று செல்லம்மாவிடம் வினவ, அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
காலையில் இருந்து அங்கே நடந்த விவரங்களைத் தனக்குத் தெரிந்த வரையிலும் செல்லம்மாவிடம் சொல்லிமுடித்த அபிராமி, “எதுக்கும் ஜாக்கரதையாவே இரு என்ன?போலீஸ் எல்லார்த்தையும் விசாரிக்கணும்னு சொல்லியிருக்காங்க.” என்றாள் அபி.
அபிராமியின் குரலில் இனம் காண முடியாத ஒரு வித பதற்றம் இழையோடியது. “எனக்கு என்னாத்துக்கு பயம் வரணும் அபிம்மா? நானா அந்த கீர்த்தி பொண்ண கொலை பண்ணேன்? நேத்து நைட்டு வீட்டுக்குப் போனவ, இதோ இப்போ சித்த முந்தி தான உள்ள வர்றேன். எந்த போலீஸ் வந்து என்ன மிரட்டினாலும் எனக்கு ஒன்னும் பயமில்ல” என்று படோபடமாகவே செல்லம்மாவிடமிருந்து பதில் வந்தது.
செல்லம்மாவின் திடமான பதிலைக் கேட்கவும் அபிராமிக்கு இன்னமும் பதற்றமாகவே இருந்தது. “எனக்கு மட்டும் என்ன பயம்? நா நானா அப்பறம் கீர்த்திய கொன்னேன்?” என்று கேட்டுவிடும் முன்பே அபியின் நெற்றியில் வியர்வை பூக்கள் மொட்டுவிட்டிருந்தன.
அபிராமியின் பதட்டத்தை செல்லம்மா மறவாமல் மனதில் பதிந்து கொண்டாள். “சும்மா ஒரு பேச்சுக்கு, குழந்தை இல்லைன்னு ஆஸ்பத்திரிக்குப் போகுதான்னு கேட்டதுக்கு என்னா பேச்சு பேசிச்சு இது? ஆனா இப்போ எதுக்கு இம்மாம் பயப்படுது? எதாச்சும் எக்குத் தப்பா செஞ்சிருக்குமோ? அதனால தான் பயப்படுதோ” என்று செல்லம்மாவின் மனம் வேக வேகமாக கணக்கிட்டது.
செல்லம்மாவின் எண்ணம் பற்றிய எந்த கவலையும் இல்லாமல், அபிராமி தன் பேச்சைக் கேட்க ஒரு ஆன்மா கிடைத்ததே என்ற நிம்மதியில், காலையில் இருந்து தன் மனதை அரித்துக் கொண்டிருந்த பாரத்தை செல்லம்மாவிடம் பகிர்ந்து கொண்டாள்.
“கீர்த்தியை என்னால அப்படிப் பார்க்கவே முடியலை செல்லம்மா. சாகர வயசா அவளுக்கு? மிஞ்சிப் போனா 25,26 வயசு தான் இருக்கும். கண்ணை மூடினாலே அவ தலை சிதறி இறந்து கிடந்தது தான் கண்ணுக்குள்ள வருது.” என்று சொல்லச் சொல்லவே பயத்தில் அபியின் உடல் நடுங்கியது.
“சரி, சரி, விடு அபிம்மா. யார் தலையில என்ன எழுதியிருக்கோ அது படி தானே நடக்கும். நம்ம கையில என்ன இருக்கு? சரி, நீ என்ன நினைக்கற? அந்த கீர்த்தி பொண்ணு எப்படி இறந்திருக்கும்? குடிக்கார புருஷன் கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சு மாடில இருந்து குதிச்சு தற்கொலை பண்ணியிருக்குமோ?” என்று அபிராமியிடம் வினவினாள் செல்லம்மா.
கீர்த்திகா எப்படி இறந்தாள் என்று ஆராயும் மனநிலையில் அப்போது அபிராமி இருக்கவில்லை. அவள் மனம் முழுக்க வேறு விதமான கவலை அப்பிக்கிடந்தது.
“கீர்த்தியோட ஃபோன் இப்போ போலீஸ் கையில கிடைச்சிருக்குமா? நான் கீர்த்திக்கு அனுப்பின மெசேஜ்லாம் அவ டெலீட் பண்ணிட்டேன்னு சொன்னாளே! உண்மையிலையே டெலீட் பண்ணியிருப்பாளா? இல்லை சும்மா சொல்லியிருப்பாளா? அந்த மெசேஜை வச்சு போலீஸ் என்கிட்ட கேள்விகேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?” என்று பயத்தில் அவள் கைகள் வெடவெடத்தன.
இதைப் பற்றி எவரிடம் என்ன சொல்லி, தன் ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ள இயலும்? கட்டினவனிடம் கூட சொல்லிட முடியாதே! அப்படியிருக்க போலீஸ் கேள்வி கேட்டால் என்னவாது என்ற பயத்தில் அபியின் நெஞ்சு வேக வேகமாகத் துடித்தது.