வந்தியதேவனும் குந்தவையும்
அத்தியாயம் 10
தீரஜ் பெரிய தொழில் குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அங்கு சில பிரபலமானவர்கள் நடிகர் நடிகைகள் வந்திருக்க பாபிரஸி யூடியூப் மீடியாக்களும் அவர்களை படம்பிடிக்க நின்று கொண்டிருக்க, அங்கு எல்லோரும் தேர்ந்தெடுத்த வெள்ளை ஆடையை உடுத்தி வர அவர்களுக்கு நடுவில் ராம் மட்டும் கையில் கிடைத்த சாம்பல் நிற சட்டையை அணிந்து வந்து தனித்துவமாக காட்சியளித்தான். மீடியாவின் கவனம் இவன் யாராக இருக்கக்கூடும் என்று தம்ப்நெய்ல்காக யோசித்து கொண்டிருக்க, லட்டு போல சிக்கியது ஷ்ரத்தா அவனை தோளோடு பிடித்து தூக்கிய காட்சி. விடுமா மீடியா உடனே ராமை தீரஜின் நண்பன் என மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முன்பே யார் இந்த புது ஆள் அவனுக்கு ஷ்ரத்தாவுக்கும் என்ன தொடர்பு இருக்கும் என்ற ரீதியில் வீடியோ வெளியிட்டார்கள். கள்ளக்காதலன் என்றும் கூட தலைப்பு வைத்து போட்டிருப்பார்கள் ஆனால் சித்தார்த் ரைஸாதாவின் ஆட்களால் அந்த வீடியோ 1 நிமிடம் கூட இன்டர்நெட்டில் இருந்திருக்காது, அடுத்து சேனல் நடத்தவும் வழி இருந்திருக்காது. இப்போது கூட இப்படி போட்டால் அதை நீக்க பணம் கேட்கலாம் என்ற ஆசையில் தான் செய்கிறார்கள்.
ஷ்ரத்தாவின் கணவன் இஷாந்த் கூட அவர்களை பார்க்கத்தான் செய்தான் ஆனால் அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அவனுக்கு தான் அவர்கள் மூவரையும் தெரியுமே, தம்பிக்காக அழும் அவன் நண்பனுக்கு சக மனிதியாக அவள் தோள் கொடுக்கிறாள் என்பதே அவன் எண்ணம். ஆனால் ஏற்கனவே மகளுக்கும் மருமகனுக்கும் சண்டை என்று கேள்விப்பட்ட சித்தார்த் இதை மனதில் வேறாக சித்தரித்தார். ராம் தான் அவர்கள் சண்டைக்கு காரணம் என்று அவர் தேவையே இல்லாமல் முடிச்சு போட்டவர், ராமின் எதிர்கால கனவுகளை சிக்கலாக்க முனைந்தார்.
ஒரு வாரம் போயிருக்கும் மும்பைக்கு ராம் சென்றிருந்தான். ஆபீஸ் சோகத்தில் மூழ்கி இருந்தது. அதற்குள் அந்த வீடியோ ராம் கண்ணில் படும் வரை ஷேர் செய்துவிட்டு காணாமல் ஆக்கி இருந்தனர். ராம் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை, அவனுக்கு யாரிடமும் தன்னை நிரூபிக்கும் அவசியம் இல்லை, அப்படியே இருந்தாலும் 'நம்புனா நம்புங்க இல்ல போங்க' என்று சொல்லிவிடும் குணம் உடையவன் இதை எல்லாம் சட்டை செய்வானா என்ன? அவன்பாட்டுக்கு நண்பனின் நினைவிலிருந்து வெளிவர சென்னையில் ஆபீஸில் வேலையே கதி என்று அல்லவா இருந்தான். அவன் ஷ்ரத்தாவின் நிலை பற்றி கூட யோசிக்க தோணாது இருந்துவிட்டான். அவன் அப்படித்தான் பெரிதாக எதற்குமே அலட்டிக் கொள்ளமாட்டான்.
இப்போது வந்தது அடுத்த புராஜக்ட் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தான், எந்த ஒரு காரணத்திற்காகவும் நண்பன் உருவாக்கிய இந்த கம்பனி மேல் களங்கம் வந்துவிட கூடாது என்று முன்பைவிட பல மடங்கு முனைப்பு இப்போது வந்திருந்தது, கூடவே நண்பனின் கனவை நிறைவேற்ற இந்த கம்பனி அவன் கையை விட்டு சென்றுவிட கூடாது என்பதையும் நினைவில் நிறுத்திக் கொண்டான்.
அந்த நேரம் ஷ்ரத்தா சோர்வாக அவன் அறையுள் நுழைந்தாள், அவள் கண்கள் சிவந்து இருந்தது ஆனாலும் அவனை பார்த்து சிரித்தாள். அவன் இவ்வளவு நேரம் மனதிடமாக இருந்தவன் அவள் சோர்ந்த முகத்தை பார்த்ததும் அவனுக்கு சிரிக்கக் கூட முடியவில்லை, அவர்களின் முக்கியமான பங்குதாரர் கதவை திறந்து கொண்டு சிரித்தபடி என்றுமே வரமாட்டானே… நினைத்து பெருமூச்சு விட்டான் ராம்.
அவளோ, "எப்படி இருக்க ராம்" என்று கேட்டபடி அவன் எதிரில் அமர்ந்தாள்.
"பெட்டர்ன்னு தோணுது… நீ ரொம்ப டல்லா இருக்க…" என்று அவன் மெதுவாக தயங்கி பேசினான். தீரஜ் இல்லாத அவர்களின் முதல் உரையாடல் இது, எப்போதுமே அவர்களுக்கு இடையில் அவன் இருப்பான், மூவருக்கும் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் தெரியும், ஆக மூன்றையும் கலந்து பேசி ஒருவருக்கு ஒருவர் புரியவைப்பது வழக்கம் அதை செவ்வனே செய்து இந்த கூட்டணியை கட்டிக்காத்தது தீரஜ் தான். இன்று அவன் இல்லாது நேரடியாக பேச ராம் கொஞ்சம் நண்பனை நினைத்து கலங்கித்தான் போனான்.
அவளிடம் அவன் கேட்டதற்கு பதில் வரவில்லை மாறாக, "அக்ச்சுவலி நான் இப்போ வந்தது இனி நான் வரமாட்டேன் ன்னு சொல்லத்தான் வந்தேன். ஹோம் மேக்கர் அவதாரம் எடுக்க போறேன். இந்த கம்பனிய விக்குறதுக்கு இஷாந்த் சொல்லிட்டு இருக்காரு நல்ல ஆஃபர் வந்துருக்கு, அதான் சொல்லலாம்னு நினைச்சேன். இப்ப இருக்குற புராஜக்ட் ஒரு 15 நாளில் முடிஞ்சிரும் தானே அது வரை ஹோல்ட் பண்ணி வைக்க சொல்லி கேட்டுருக்கேன் சோ வேலைய முடிச்சதும் நீயும் ரிலிவ் ஆகிக்கலாம் உனக்கு செட்டில் பண்ண வேண்டிய பணம் பத்தி இஷாந்த் சொல்லுவாரு அண்ட் அதுக்கு நான் ரெஸ்பொன்சிபில்.
உனக்கும் இனிமே அலைய வேண்டியதில்லை உனக்கு சந்தோஷம் தான, சோ உன் லாங்குவேஜ்ல சொல்லனும்னா சங்கத்த கலைக்க போறோம்" என்று போலியாக சிரித்தாள்.
அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த ராம், "இந்த முடிவு எடுக்க அந்த வீடியோ தான காரணம்" என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.
அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவன், "யார் கிட்ட எக்ஸ்பிலைன் பண்ணனும் நான்" என்று கேட்க அவளோ, "அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம், இஷாந்த் கிட்ட கம்பனிய விக்க சொல்லி ஆரம்பிச்சதே அவர்தான், ஐ அம் ஹெல்ப்லஸ் ராம், எனக்கும் இஷாந்த் க்கும் இடைல இருக்குற பிரச்சனைக்கு நீ தான் காரணம்ன்னு நினைக்குறாரு, அப்பா என்ன நம்பல ராம்" என்று விம்மினாள்.
ராம் அப்போது கூட அவளின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி கேட்கவில்லை, இந்த அபாண்டமான பழியை தன்னிலிருந்து நீக்கி கம்பெனியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினான். சித்தார்த்தை நேரில் சந்தித்து பேசத் தயார் ஆனான்.
சித்தார்த் வீட்டில் இஷாந்த்தும் இருக்க இருவரையும் ச
மாளிக்க கிளம்பிவிட்டான்.
"சர் எனக்கு அந்த கம்பெனி வேணும் பீகாஸ் நானும் தீரஜ்ஜும் நிறைய சாதிக்கனும்ன்னு நினைச்சு கனவு கண்டுருக்கோம் அதை நான் நிறைவேற்றும்ன்னு ஆசை படுறேன் அதுவும் அவன் உருவாக்கின இந்த கம்பனி மூலமா இன்னைக்கு அந்த கனவை ஒரு அடிப்படை இல்லா சந்தேகத்தால் உடச்சுராதீங்க" என்று ராம் பொறுமையாக தண்ணிலையை பொதுப்படையாக பேசி விளக்கினான்.
"சந்தேகமா யார் மேல அந்த அளவுக்கு நாங்க இறங்கி போகணும்னு எங்களுக்கு அவசியமில்லை எனக்கு உன்கிட்ட கம்பெனிய கொடுக்க எந்த பிரச்சனையும் இல்லை உனக்கு வாங்க பணம் இருந்தா இங்க நிண்ணு பேரம் பேசு" என்று சிரித்தான், இஷாந்த் கூடவே சித்தார்த். ஏற்கனவே இஷாந்த் ஷ்ரத்தா சண்டைக்கு காரணம் அவள் வேலைக்கு செல்கிறேன் குழந்தை வேண்டாம் என்று சொல்லுவது தான். திருமணமான புதிதில் அவன் குழந்தை வேண்டாம் என்றான் அதுக்கு அவளை ஒத்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். இப்போதும் குழந்தை வேண்டும் என்று கட்டாயப்படுத்த அவள் ஈகோ தட்டி எழும்பியது. அதனால், உண்டான பிரச்சனை இப்போது கம்பெனியை மூடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுருக்கிறது. ஆம், கம்பெனியை மூடிவிட்டால் ஷ்ரத்தாக்கு புகழிடம் ஏது? நிச்சயம் இஷாந்த் சொல்படி நடந்து கொள்வாள் என்று சித்தார்த் இந்த யோசனையை இஷங்த்க்கு கொடுக்க அவனும் விற்க தீர்மானித்துவிட்டான். ராம் தான் பிரச்சனை செய்வான் அவனையும் இப்படி பணம், வீடியோ என்று மிரட்டி ஓட விடலாம் என்று முடிவு செய்தனர்.
ஆனால் ராமிடம் அது முடியுமா, "இஷாந்த் நான் என்னமோ நினைச்சேன் நீங்க இவ்வளவு பூமெரா இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை கம்பனியோட டிசைடிங் அத்தாரிட்டி ஷ்ரத்தா ஆர் தீரஜ் இல்ல நான்தான் தீரஜ் எனக்கு எல்லா சுதந்திரம் கொடுத்து தான் உள்ள கூட்டிட்டு வந்தான். அவனோட கம்பனி பணத்த கூட எனக்கு ஹாண்டல் பண்ண அஃபிஷியலா அதிகாரம் இருக்கு அதை வச்சி நீங்க கேட்டத செய்ய முடியும் பட் தீரஜ் பணத்த அவங்கிட்டயே ஏன் குடுக்கணும் அதை கம்பனியிலயே போட்டு லாபம் பாத்துட மாட்டேன். சோ என்ன தாண்டி கம்பனிய தொட முடியாது. கோர்ட்ல கேஸ் வேணாலும் போட்டுக்கோங்க ஐ டோண்ட் கேர். நானும் சரி ஷ்ரத்தாக்காக பேசிப்பாக்கலாம்ன்னு தான் வந்தேன், அவளை வீட்டுல உக்கார வைக்க தீரஜ் ஓட உழைப்ப நாசமாக்க நினைக்குரீங்க. இப்போ சொல்றேன் நான் அவ வேலைய மதிக்குறேன் சோ அவள் நினைச்சா மட்டும் தான் கம்பனில இருந்து வெளிய போக முடியும்" என்று கடுமையாகவே பேசினான், ராம்.
"வேலையா அப்படி என்ன வேலை தெளிவாக சொல்லு" இஷாந்த் வார்த்தையை விட ஷ்ரத்தா கொதித்து எழுந்துவிட்டாள். எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த ஷ்ரத்தா கடைசியா இஷாந்த் மேல் வைத்து இருந்த கொஞ்ச அன்பையும் தூக்கி போட்டுவிட்டு வெளியேறிவிட்டாள்.
சித்தார்த்தும் எவ்வளவோ மிரட்டினார்கள், ராம் மடியில் கனம் இல்லை அதனால் நெஞ்சில் பயமின்றி நின்றான்.