அத்தியாயம் 1
அந்த வீடு சுற்றிலும் இருந்த வீடுகள் மற்றும் ஊரில் இருந்து ஒதுக்கு புறமாக இருந்தது. வனத்திற்கு அருகில் ஏகாந்தமாய் இருந்தது தன் தனிமையில். வெளி இடையூறு இன்றி நாட்களை கழிக்க நினைப்பவர்களுக்கு வசதியாய்...
அந்த வீட்டை வழக்கம் போல் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார் அந்த காவலர். யாரும் இருப்பது போல் தெரியவில்லை.
"ஒரு மாசமா நானும் இதே வேலையாத்தான் அலையறேன். இந்த வீட்டுல ஆள் இருக்கற மாதிரியே இல்லை ஆனா இல்லாத மாதிரியும் இல்லை."
எனத் தனக்குள் முனுமுனுத்தபடி வந்தவர் . கண்களில் அந்த வீடு பார்வைக்கு ஆள் இல்லாத மாதிரி இருந்தாலும் உணர்வுக்கு ஆள் இருப்பது போல் தான் இருந்தது .
வழக்கம் போல தனது கையில் இருந்த உணவுப் பொட்டலத்தை எதிரில் இருந்த பிள்ளையார் கோவில் மர நிழலில் அமர்ந்து பிரித்து உண்டார். பிறகு அங்கேயே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க துவங்கினார்.
இவர் தினம் வருவதையும் விசாரிப்பதையும் பார்த்த அருகில் உள்ளவர்களில் மாடு மேய்ப்பவர் இவரைப் பார்த்தததும்
"ஐயா ?"
"ம்…"
"நேத்து இங்க ஒரு ஆள பார்த்தேனுங்க?"
"நேத்திக்கா எப்ப "
"சாயந்திரம்"
" உடனே என்னய வந்து பார்த்து சொல்லியிருக்கலாம்ல."
' வீட்டுல ஒரு அவசரம்ன்னு போன நேரத்துக்குள்ள வந்துட்டு போயிட்டான் போல' என்ற எண்ணம் மேலோங்கியது.
"ஐயா நீங்க சொல்லலியே அப்புறம் நான் வீட்டுக்கு போகயில பார்த்தது ஆனா அவனும் உடனே போயிட்டான் உள்ள போகல."
"ஓ அவன் இந்த வீட்டுகாரன் இல்லையா ."
" தெரியலீங்கய்யா கொஞ்சம் பொச பொசன்னு இருட்டி வேற போச்சு நானும் கறவைக்கு நேரமாச்சுன்னு மேற்கொண்டு எதுவும் கிட்ட போய் கேட்கலீங்க ."
"சரி இனி ஆள் நடமாட்டம் எதாவது பார்த்தா சொல்லு."
"சரிங்க"
என்று போகப் போனவர்
"ஏதாச்சும் ரொம்ப முக்கியமான சாமாச்சாரமங்க "
என்பதையே சற்று தயங்கி தயங்கிதான் கேட்டார்.
"ஆமா யா இன்ஸ்பெக்டர் ஐயா பார்த்துட்டு வரச்சொன்னாறு."
என்றகாவலரிடம்
"நான் வேணும்னா இன்னித்தி இருந்து பார்த்து கையோட கூட்டிட்டு வரேனுங்க"
என்றதில் வீட்டு நினைவு வர நன்றாக இருக்கும் என்று நினைத்தாலும் அதை செய்ய கூடாது என்ற அறிவுறுத்தலும் நினைவுக்கு வர
"ஒன்னும் தேவையில்லை நீ போ."
என்று லேசான எரிச்சலிலும் உரைக்க அவன் செல்ல போக.ஏதோ தோன்ற
"ஏ நில்லு"
" சொல்லுங்கய்யா "
"உங்கிட்ட போன் இருக்கா?"
"இருக்குங்க."
" உன் நம்பர சொல்லு "
அவன் சொல்ல
"உன் பெயர் "
அவன் சொல்ல பதிந்தவர் அதிலிருந்து அவருக்கு அழைக்க அதை மாடு மேய்ப்பவர் எடுத்து பார்க்க
"இது என் நம்பர் பதிவு பண்ணி வைச்சிக்க. யாராவது வந்தா சொல்லு "
"சரிங்க " என அவன் சென்று விடஅவர் தனது வேலை பார்க்க துவங்கினார். சற்றைக்கு எல்லாம் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வர எடுத்தவர் எதிர் முனை கூறியதில்
" ஐயா "
"சரிங்கய்யா"
என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.
…..... ……. ……….. …………….
அந்த இருளோடு இருளாக கண்காணித்தபடி இருந்த அவன் இன்னும் கவனம் கொண்டான்.அவன் கண் முன் சென்று கொண்டிருந்தது அந்த கருஞ்சிறுத்தை . அதைப் சில நாட்களாக பின்தொடர்ந்து வந்தவனுக்கு இன்று தான் கண்ணுக்கு கிடைத்தது. அதனை புகைப்படங்களாக சேமிக்க துவங்கினான்.
சில நொடிகள் அல்லது சில நிமிடங்கள் தான் அவர்களுக்கான நேரம் இதற்க்காக வாரம் நாட்கள் ஏன் மாதம் வருடம் கூட காத்திருக்க வேண்டி வரும். உயிரும் போகலாம்...
அரிய தருணங்கள் இவை வாய்க்கவும் செய்யலாம். வாய்காமலும் போகலாம். இருந்தாலும் பொறுமை நிதானம் அனைத்தும் தாண்டிய அர்ப்பணிப்பும் ஆர்வமும் முக்கியம்.
இன்னும் அதே இடத்தில் காத்திருக்க இருள் விலகத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அந்த இருளின் மிச்சமாய் இன்னும் ஒன்று. கடந்த காலங்கள் சில சமயம் உயிர் கொண்டால்... இப்படித் தான் இருக்குமோ எனும் வண்ணம் மகிழ்வும் மிரட்சியும் இணைந்து கம்பீரமாய் இப்போது அவன் முன்னம். ..
தங்கம் போல மின்னும் விழியும் அந்த தூயகருமையும் மெல்ல நகர்ந்து நிமிர்ந்து சுற்றும் பார்த்த அது மெல்ல தன் உடலை வளைத்து நெரித்து விட்டு அந்த மரத்தில் தன் நகங்களை கூர் தீட்டி பார்த்து விட்டு நகர்ந்தது.அது வரை அனைத்தையும் பதிவு செய்தவன் முகத்தில் மகழ்ச்சி ரேகை.
அங்கிருந்த தனது புகைப்பட கருவி இருளிலும் பார்க்க உதவும் தனது தொலை நோக்கி மற்றும் பொருட்கள் அனைத்தையும் சேகரித்தவன்.
ஒரு மெல்லிய சீழ்கையுடன் நடக்க அங்கும் இங்குமாய் பறந்த பறவைகளையும் அதன் ஒலிகளை கேட்டவன் அது போல சீழக்கையடிக்க அதில் சில பறவைகள் பறக்க , ஒன்று கழுத்தை வளைத்து இவனை தன் இணையோ என்று தேட அதை கண்டு கொண்டவன் மீண்டுமாய் அதே சீழ்கை ஒலியை எழுப்ப அந்தப் பறவை இப்போது வெகு உண்ணிப்பாக கேட்க துவங்கியது. அவன் மீண்டும் ஒலி எழுப்ப அது மீண்டும் ஒலி எழுப்ப தற்போது இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பு வந்திருந்தது.
பிறகு மீண்டுமாய் ஒரு சீழ்கை நான் உன்னை பிறகு சந்திக்கிறேன் என்பது அடித்து காட்டியவன் தனது கூடாரத்தை நோக்கி நடந்தான். டென்ட்டுக்குள் நுழைந்த அவன் முன் அவர் அமர்ந்து இருந்தார்.
அறுபதுகளில் இருந்தாலும் தோற்றம் அப்படி இல்லை. அவரைப் பார்த்த அவன் கண்விழிகளில் சிறு விரிவு அவ்வளவே அவன் அவரை அறிந்து கொண்டதற்கான பிரதிபலிப்பு அவரிடம் அதை எதிபார்த்த அவரும் அப்படியே அமர்ந்திருக்க தனது பொருட்களை அதன் இடத்தில் வைத்தவன். அவரைக் கருத்தில் கொள்ளாமல் அருகில் இருந்த ஒடைக்கு சென்று நீர் எடுத்து வந்தான்.
அங்கிருந்த நெருப்பில் தேனீர் தயாரிக்க துவங்கினான். அவரும் அவனை பார்த்தபடி இருந்தார் ஒரு வார்தை பேசவில்லை. அவருக்கும் தனக்குமாய் இரு கோப்பைகளை எடுத்து வந்தவன் ஒன்றை அவருக்கு கொடுத்தவன் மற்றொன்றுடன் அவர் எதிரில் அமர்ந்து கொண்டான்.
"தேடுறீங்க போல "
"ம்"
"முதல் அங்க உட்கார்ந்து இருக்குறவன போச் சொல்லுங்க."
"சொல்லியாச்சு."
என்றவரை பார்த்த அவன் பார்வை "என்ன விஷயம்"
எனும் கேள்வியை தாங்கியிருந்தது. அதற்கான பதிலாய்
அவன் முன் ஒரு கோப்பை வைத்தார் . அதை திறந்து தன் பார்வையை அதில் பதித்தான்.
"அதில் ஒருவர் இருந்தார். "
இவன் கண்கள் அதில் பதிய அதைக் கண்டவர்
"நாராயணன் ஆர்கியாலஜிஸ்ட் இவரு இப்ப செண்ணைல இருக்கார் அவர் இமயமலையில் உள்ள சில இடங்களுக்கு ஆராய்ச்சிக்காகப் போறார் நீங்க அவர் கூட ஜாயின் பண்ணனும் "
" எப்ப"
"நாளைக்கு காலைல. "
என்ற அவரை நிமிர்ந்து பார்க்க இப்பபோது அவர் தன் முன்பு இருந்த தனக்கான டீயை எடுத்துக் கொண்டவர் வெளியே வந்து நின்று கொண்டார்.அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேல் ஒரு இலங்கு ஊர்தி வட்டமிட்டு கீழே இறங்க துவங்கியிருந்தது .
அதன் பின்னர் நிற்கவில்லை. தன் கூடாரத்தை பிரித்து கட்டியவன் பொருட்களை சேகரித்து முடித்தான்.
கையில் இருந்த கோப்பை அருகில் இருந்த நெருப்பிற்குள் வீசியிருந்தான். அதைக் கண்டவர் அவன் விஷயத்தை விளங்கிக் கொண்டுவிட்டான் என்று புரிந்தது கொண்டார். அவர் கண்களில் சிறு நிம்மதியும் மெச்சுதலும் .
அதற்குள் இலங்கு ஊர்தி கீழே வந்திருக்க அதிலிருந்து ஒருவன் இறங்கி வந்து அவர் கையில் ஒரு உறையைக் கொடுத்து விட்டு தள்ளி சென்று நின்று கொண்டான்.
"விஷ்யூ ஆல் சக்சஸ். " என அவனைத் தழுவிக் கொண்டவர் அவனை விடுத்து இலங்கு ஊர்தியில் ஏறிக் கொண்டார்.
…………… ………… …–....
அந்த இன்ஸ்பெக்டர் தன் உயர் அதிகாரிகள் முன் தலை கவிழ்ந்து நின்றார்.
"ஒருத்தன் ஒரே ஒருத்தன் அவன ஒரு மாசாமா வாச் பண்றீங்க இதுவரைக்கும் அவனப் பார்க்கலை அவனப் பத்தி ஒரு தகவல் கிடைக்கலன்னா என்ன அர்த்தம் ."
" ஸார் நானே நேர்ல போய் பார்க்கலாம்ன்னா அதுவும் கூடாதுன்னு சொல்லிட்டீங்க ."
"ஆமா நாங்க சொன்ன எல்லாத்தையும் கேட்ட மாதிரி. யோவ் ஒரு ஆள கண்காணிக்கறது எப்படினு தெரியாதாயா"
"சார் ..."
"என்ன சார் நீ அனுப்பி வைச்ச ஆள் என்னென்ன பண்ணான்னு அவன் வீடியோ அனுப்பி வைச்சிருக்கான்."
"சார் "
" போங்க அவர நாங்க பார்த்துக்கறோம்"
"சார் ஸாரி சார். பட் அவர் மேல எந்த கேஸும் இல்லை. ஊர்லயும் அவர எப்பவாது தான் பார்க்க முடியும் .இந்த ஊர்காரர்ன்னாலும் அடிக்கடி வெளியூர் போறவறு எப்பவாது தான் வருவாருன்னு சொல்றாங்க .போன் எதுவும் இல்லை. பொண்டாட்டி பிள்ளை அண்ணன் தம்பி எதுவும் இல்லை .சொந்தக்காரங்க யாரும் வரப் போக இல்லை அதான் ..."
"அப்படியா ரொம்ப சந்தோஷம். உங்க தகவலுக்கு போய்ட்டு வாங்க..
இப்படியே எல்லா கேஸையும் விசாரிங்க விளங்கிடும். உங்கள எல்லாம்..."
"யோவ் அவரப் போ சொல்லு யா நான் ஏதாவது சொல்லிடப் போறேன் ரிட்டயர்ட் ஆகப் போற கேஸ் வேற."
என கத்தவும் அங்கிருந்தவர்களில் ஒருவர்
"நீங்க போங்க ரத்னவேலு "
"வரேங்க ஐயா. "
என்று விட்டு அவர் வெளியேறினார். அவருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. என்ன ஏதுன்னு சொல்லாம ஒருத்தன விசாரின்னாங்க இப்ப அது சரியில்லைன்னு திட்டு வேற....? மொட்டையா என்ன விசாரிக்க? எனக் குழம்பியபடி இருப்பிடத்திற்கு திரும்பினார்.
………….
இமய மலையின் லடாக் பகுதிக்குள் நுழைந்து கொண்டு இருந்தது. அவர்கள் வாகனம்.
"தாடாளன் "
"சொல்லுங்க சார் "
"உனக்கு யார் யா தாடாளன்னு பெயர் வைச்சது. ? "
"எங்கப்பா சார்?"
"எங்க இருந்துய்யா இப்படி பெயர் எல்லாம் கண்டு புடிக்கிறீங்க?"
"எங்கப்பாவுக்கு தமிழ் மேல கொஞ்சம் பற்று அதிகம் அதே சமயம் பெருமாள் மேல பக்தியும் அதிகம் அதனால திரிவிக்கிரமன் ங்கற பெருமாள் பெயர ஆண்டாள் பாசுரத்தில்,
தாடாளன் அதாவது
தாள்+ ஆளன் தாடாளன் தாள்- அடி ,
ஆளன் -அளந்தவன், ஆண்டவன்
மூன்று அடிகளில் உலகை அளந்தவன் என்ற பெயர் அவருக்கு பிடிச்சி போய் வைச்சிட்டாரு."
"டெனிசோவன்ஸ்ன்னா என்னன்னு தெரியுமா?"
"தெரியாதுங்கய்யா?"
"என்னது தெரியாதா?"
"ஆமாங்க தெரியாது."
"அப்புறம் எப்படிய்யா இங்க வந்த ?"
"நாங்க எங்க சார் வந்தேன் நான் சிவனேன்னு தமிழ்நாட்டுல இருக்க கோயில் குளம் கல்வெட்டு பார்த்துட்டு இருந்தேன். மேல் அதிகாரிங்க தான் ஏதோ இமய மலைக்கு சீனியர் ஆபிசர் போறோரு நீயும் போன்னு போட்டு விட்டுட்டாங்க வேலைல சேரும் போது கொஞ்சம் மலையேறத் தெரியும் சொன்ன ஒரே காரணத்துக்கு இப்படி செய்வாங்கன்னு யாரு கண்டா."
"ஒரே ஊர்(நாடு) காரங்கன்னு போட்டு இருப்பாங்க யா "
என்றவர்கள் தங்களின் பேச்சை நிறுத்திக் கொண்டு இறங்கினர். ஏனெனில் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது.