நேசம் : 2
"அம்மா…" என்று அழைத்துக் கொண்டே மீரா கதவை திறந்து உள்ளே வர, "அஞ்சு" என்று அவளுக்கு முன்பாக ஓடி வந்த நிலாவை முறைத்தவள், "நிலா பெரியவங்களை பெயர் சொல்லி கூப்பிட கூடாது சொல்லி இருக்கேன்ல, பாட்டி சொல்லு" என்று திருந்த, அரை கணம் நின்று அன்னையை வெறித்த குட்டியோ, "அஞ்சு பாட்டி" என்று கத்திக் கொண்டே தன் தந்தை வழி பாட்டியான அஞ்சம்மாளை தேடி ஓடினாள்.
"அவனை பார்த்துட்டு வந்தாலே மரியாதை எல்லாம் பறந்து போகுது. என்ன தான் நான் மரியாதை சொல்லி கொடுத்து, டிசிபிலினா வளர்த்தாலும், அப்பனுக்கு இருந்தா தானே பிள்ளைக்கு ஒட்டும்" என்று துள்ளி குதித்து ஓடும் மகளை திட்டுகிறாளா? கொஞ்சுகிறாளா? என்றே தெரியாது நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், வாங்கி வந்த மளிகை சாமான்களை கிச்சனில் வைக்க சென்று விட்டாள்.
நிலாவோ, தகப்பன் வாங்கி கொடுத்த சாக்லேட் பாக்ஸை தன் அஞ்சு பாட்டியிடம் காட்டி, "யார் வாங்கி கொடுத்தா சொல்லுங்க?" என்று கண்கள் மின்ன கேட்க,
அவரும் காலையிலேயே மீரா பேரன்ஸ் மீட்டிங் என்று சொல்லி சென்றதை நினைவு கூர்ந்து, தன் மகனை தான் பேத்தி பார்த்து வருகிறாள் என்பது புரிந்து போக, ஆசையாக பேத்தியை அள்ளி மடியில் வைத்தவர்,
"கிருஷ்ணாவ பார்த்தியா? எப்படி இருக்கான்?" என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்.
பெத்த பிள்ளை ஆயிரம் தவறு செய்து இருந்தாலும், தாய் பாசம் இல்லாது போகுமா? அவன் செய்த ஒரே ஒரு தவறு அனைவரையும் விட்டு ஒதுக்கி வைத்து காலம் சதி செய்ய, அதில் சிக்கி தவிப்பது என்னவோ! அவனை பெற்றெடுத்தவளும், அவன் பெற்றெடுத்தவளும் தான்.
"நல்லா இருக்கார். உங்களையும் கேட்டதா சொல்ல சொன்னார்." என்று அன்னை மகனுக்கு நடுவே குட்டி மெசஞ்சர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரே ஊரில் இருந்தும், மகனை பார்க்க முடியா துர்பாக்கிய நிலை அந்த தாய்க்கு. இத்தனைக்கும் அவரை யாரும் கட்டி போட்டு தடுக்கவும் இல்லை. அவர் நினைத்தால் எந்த வழியிலாவது மகனை பார்த்து இருக்கலாம். அவன் போன் நம்பர் கூட அவரிடம் இருக்கிறது. ஆனால் ஒருமுறை கூட அவன் எண்ணிற்கு அழைத்து பேச தோன்றவில்லை.
நெஞ்சை அடைக்கும் மகன் பிரிவை அவன் மகளை கொஞ்சி தீர்த்து கொள்கிறார். தாயாக மகனின் தவறை மன்னிக்க முடிந்த அவரால், ஒரு பெண்ணாக முடியாது போனது தான் உயிருக்கு உயிரான மகனை பிரிந்து இருக்க காரணம்.
அவன் செய்த பாவத்திற்கு விமோச்சனம் தேடாது, அவனை நெருங்க கூடாது என்று எவ்வளவு தான் உறுதியாக இருந்தாலும், பிள்ளை பாசம், மகனை எண்ணியதும் அந்த அன்னை விழிகள் துளிர்க்க,
நிலாவோ, "அஞ்சு பாட்டி அப்பாவும் ஏன் நம்ம கூட இல்ல? எல்லாரும் ஒரே வீட்ல இருந்தா நல்லா இருக்கும்ல" என்று கேட்டு அவரை சங்கடப் படுத்தினாள்.
என்ன பதில் சொல்வார் அவரும்? "அப்பாவுக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு சீக்கிரமே உன் கூடவே வந்து இருப்பார்" என்று சமாதானம் செய்ய, நிலாவோ, "மீராம்மா இங்க இருந்து தானே வேலைக்கு போறா… அதே போல அப்பாவும் போகலாம் தானே" ஆள் மட்டுமல்ல அறிவும் வளர்ந்து கொண்டே போக, அவள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாவில்லை.
"இந்த கேள்வியெல்லாம் உன் அம்மாகிட்ட கேட்க வேண்டியது தானே" என்று அவர் மீராவை கோர்த்து விட்டு நழுவ பார்க்க, நிலாவோ "அம்மாகிட்ட கேட்டா பதில் சொல்ல மாட்றா." என்றவளை, 'அப்போ நான் மட்டும் இழிச்சவாயா?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தவர்,
"என் பையன் வாங்கி கொடுத்த சாக்லேட் எனக்கும் பங்கு உண்டு" என்று பேச்சை திசை திருப்பி பேத்தியுடன் சண்டை போட, "இல்ல அப்பா மொத்தமும் எனக்கு மட்டும் தான் தந்து இருக்காங்க" என்று சொல்லி குட்டி கொடுக்க மறுக்க, பாவமாக முகத்தை வைத்தே சிறுமியை ஏமாற்றி தன் பங்கை வாங்கி கொண்டார் கள்வனின் அன்னை.
அவர்கள் சம்பாசைகளை பார்த்துக் கொண்டிருந்த அவர் கணவர் நெல்லையாண்டானோ, ‘இதெல்லாம் ஒரு பொழப்பு’ என்பது போல் தலையில் அடித்து கொள்ள, அவருக்கு ஒரு இதழ் சுழிப்பை பதிலாக கொடுத்த அஞ்சம்மாளும் பேத்திக்கு மேல் கழுவி, உடை மாற்ற அழைத்து சென்று விட்டார்.
மூன்று படுக்கையறைகள் கொண்ட பிளாட் அது. மீரா, நிலா, கிருஷ்ணாவின் பெற்றோர்கள் மட்டுமின்றி நிலாவின் பெற்றோர்கள் என எல்லாரும் அங்கே தான் தாமசம்.
அளவான வருமானம் நிறைவான வாழ்க்கையா என்று கேட்டால், மனது நிறையாது வாழ்க்கை எப்படி நிறையும். பிள்ளைகள் தனித்திருக்க எந்த தாய் தந்தை நிம்மதி நிலைத்திருக்கும்.
நெல்லையாண்டார் மற்றும் மீராவின் தந்தை அந்துவன் இருவரும் மின்சாரவாரியாத்தில் பணி புரிந்தார்கள். தொழில் சம்மந்தமாக இணைந்த நட்பு, பல தடைகள், மனஸ்தாபங்கள் தாண்டி இன்றும் இணைந்து இருக்கிறார்கள்.
இரவு உணவு மீரா கைவண்ணத்தில் தயாராகியிருக்க, அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பேத்தி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் விளக்கம் சொல்லியே சாப்பிட்டு முடித்தார்கள். அவர்களுக்கு சுகர் மாத்திரை, பிரஸர் மாத்திரை என்று எல்லாம் எடுத்து கொடுத்து விட்டே தன் அறைக்கு வந்தாள் மீரா.
நிலாவுக்கு எங்கே பிடிக்கிறதோ அங்கே தான் தூக்கம். சில நாள் அஞ்சு பாட்டியை அணைத்தபடி, சில நாள் சசிகலா பாட்டியை கட்டிக் கொண்டு, அந்து தாத்தா மீது காலை போட்டு தூக்கம் தொடரும்.
மீரா என்றால் சிறிது பயம் தான். தூங்கும் போது கூட ஒழுக்கம் சொல்லி கொடுப்பாள். ஆடை விலக, காலை பப்பரப்பே என்று விரித்து கிடந்தால் அடி விழும். அதற்கு பயந்தே அவளுடன் தூங்க வர மாட்டாள்.
மீரா… திருமணம், பிறந்த நாள் விழாக்கள், இன்னும் பிற சுப நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி வரும் ஈவன்ட்ஸ் ஆர்கனிஷிங் கம்பெனி ஒன்றை சுயமாக நடத்தி வருகிறாள்.
மாப்பிள்ளை, பெண் மட்டும் ரெடியாகா இருந்தால் போதும், ஊரே வாயை பிளக்கும் அளவிற்கு திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்து விடுவாள்.
வேலைகள் எல்லாம் பட்ஜெட் போட்டு பல திட்டங்களுடன் திறம்பட செய்து கொடுக்கும் திறமைசாலி தான். எதையும் தாங்கும் தைரியமான பெண். அதனாலோ என்னவோ அவளை அதிகம் வதைக்கிறார்கள் பகவான் கிருஷ்ணரும், அவள் கிருஷ்ணனும்.
மாலை மகளை பார்த்து விட்டு வேலை என்று ஓடியவன், வீடு திரும்பவே இரவு பனிரெண்டு மணி ஆகி இருந்தது. தனி வீடு, எல்லா வசதியுடன் கூடிய பெரிய வீடு தான். பாதி நாள் ஏன் வீட்டுக்கு வருகிறோம் என்ற சலிப்பை கொடுக்கும் அமைதியான வீடு.
‘ஒன்றுக்கும் உதவாதவன்’ என்று மட்டம் தட்டிய தந்தை முன் சாதித்து காட்ட வேண்டும் என்ற வீராப்புடன் இரவு பகல் பாராது உழைத்தவன், ஈட்டிய பொருள்கள் ஏராளம். ஆனால் தொலைத்தது அதை விட ஏராளம்.
தூக்கம் மட்டுமல்ல, நிம்மதியை கூட மொத்தமாக தொலைத்து போனான். காலில் சக்கரம் கட்டி கொண்டு சொந்த காலில் நிற்க வெறியுடன் ஓடிய போது எதுவும் உணரவில்லை. எல்லாம் ஈட்டி தலை நிமிரும் போது தான் உணர்ந்தான். தலை சாய்க்க அன்னை மடியில்லை, தன் புகழை மெச்சி கொள்ள தந்தை உடன் இல்லை என்பதை.
அவ்வளவு பெரிய வீடு மட்டுமல்ல, அவன் வாழ்வும் வெறுமையாக தான் இருக்கிறது.
வெறுமையான வீட்டில் களவு போக எதுவுமில்லையே. அவன் மனம் திறக்காது இதயம் கொள்ளை போகாது. இதயம் கொள்ளை போகாது, இன்பம் உள்ளே நுழையதே!
எத்தனை வலுவான பூட்டு போட்டு பூட்டி இருந்தாலும், அதை திறக்கும் கள்ள சாவி காதலுக்கு உண்டு தானே. பார்க்கலாம் இவன் திடமும், அவள் உறுதியும் எத்தனை காலம் என்று.
விடியாத இரவும் இல்லை,
விளங்காத புதிரும் இல்லை.
விண்ணை தொடும் பறவை என்றாலும்,
மண்ணில் தானே தரையிறங்கியாக வேண்டும்.
*****
குடும்ப பாரம் சுமக்கும் பெண்டினம், பிள்ளை பேறு, ஓய்வில்லா வாழ்க்கையில், தன் உடலை பேணா மறந்திருக்க, சந்தனத்தில் குழைத்த மஞ்சள் நிற மேனியால் உயரத்திற்கு ஏத்த எடை என்றாலும், வயிற்றை கிளித்து பிள்ளை வெளி வந்ததில், இப்போதும் ஐந்து மாதம் என்பது போல் கரையாத குட்டி தொப்பையை மறைத்துபடி நேர்த்தியாக சாரி உடுத்தி, கூந்தலை அள்ளி அழகாக கொண்டை போட்டு, காலை கதிரவன் செந்நிற ஒளியை பரப்பி வானில் பவனி வரும் போதே மீராவும் தன் வேலைக்கு கிளம்பி இருந்தாள்.
நிலாவுக்கு இன்று விடுமுறையாதலால், தாத்தா பாட்டியை ஒரு வழி பண்ண தயாராகி விட்டாள். பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால், கடப்பாரை கம்பியை வைத்து தள்ளி தான் எழுப்ப வேண்டும். விடுமுறை நாட்கள் மட்டும் விடியற்காலையிலேயே எழுந்து தொல்லை கொடுக்க ஓடி வந்து விடுவார்கள்.
இரவு, நேரம் கடந்து தூக்கத்தை நாடியவனுக்கு நித்ரா தேவி கருணையே காட்டவில்லை போலும், அவனும் விடியற்காலையே எழுந்து டிரட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தான்.
இலக்கை நோக்கி ஓடுபவனுக்கு எல்லை உண்டு. அவன் ஓய்வெடுக்கும் நேரமும் ஒரு நாள் வரும். ஆனால் இல்லறம் தாங்கும் பெண்ணுக்கு ஏது எல்லை? எப்போது ஓய்வு?
மீரா காலையில் அவள் அலுவலகத்துக்கு வரும் போதே அன்று மாலை நடக்கவிருக்கும் ஒரு விழாவுக்கான ஏற்பாடுகள் தான் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகபெரிய ஆர்டர் தான் இந்த விருது வழங்கும் விழா. இதுவரை குடும்ப நிகழ்வுகளை மட்டுமே நடத்தி வந்தர்வர்களுக்கு இது முற்றிலும் புதிதாக தான் இருந்தது. சற்று சவாலான வேலையாக கூட இருந்தது. அலங்காரங்கள் முதல் சாப்பாடு வரை எல்லாம் மெச்சும் படி இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக தான் இருந்தாள்.
அவளே விழா நடைபெற இருக்கும் அரங்கிற்கு நேரில் சென்று அனைத்தையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள்.
மாலை சினி ஆக்டர்ஸ், பிஸினஸ்மேன்ஸ், யூடியூப்பர்ஸ், சிங்கர், டான்சர் என்று பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருபவர்களுக்கான விருது வழங்கும் விழா கோலாகலமாக ஆரம்பம் ஆக, பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் வருகை புறிந்திருந்தனர்.
விழாவும் ஆடல், பாடல் என்று இனிதே ஆரம்பமானது.
நாற்காலிகளுக்கு கூட வெண்ணிற உடை அணிந்து, சிவப்பு நிற ரிப்பன் கட்டி, வட்ட மேஜையை சுற்றி நான்கு நாற்காலிகள் வீதம் அழகாக இருக்கைகள் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
சர்வீஸ் ஆட்கள், நிகழ்ச்சி நடுவே விருந்தினர்கள் தேவைகளை கேட்டு நிறைவேற்றி கொண்டிருக்க, அங்கு ஓரமாக நின்று அவர்களை தான் கண்காணித்து கொண்டிருந்தாள் மீரா.
அவள் கவனம் மொத்தமும் தன் வேலையில் இருக்க, ஒற்றை பெயர் அவள் சிந்தையை சிதறடித்தது.
அவளை சிதைப்பது யாராக இருக்க கூடும், சாட்சாத் அவள் கிருஷ்ணா பகவானே தான்.
சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது என்ற அறிவிக்கையை தொடர்ந்து மேடையில் கிருஷ்ணாவின் புகைப்படம் பெரிய திரையில் ஒளிர,
மீரா விழிகள் கூட அதில் தான் உறைந்து இருந்தது.
எந்த உணர்வையும் அவள் முகம் பிரதி பலிக்க வில்லை. அவன் விருது வாங்குவதை எண்ணி மகிழவும் இல்லை, வெதும்பவும் இல்லை.
வெறுமையான மனநிலையில் தான் திரையை பார்த்து கொண்டிருந்தாள்.
இங்கே பலத்த கரகோஷங்கள் நடுவே இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவும் மிடுக்குடன் எழுந்து வந்தான்.
மேடையை நோக்கி வேக நடையுடன் வந்தவன் கால்கள் சற்று தளர்ந்தது மேடைக்கு சற்று தள்ளி நின்று கொண்டிருந்த மீராவை பார்த்து.
‘இவள் எங்கே இங்கே?’ கடந்து செல்லும் அரை கணத்தில் புருவம் சுருக்கி, இமைக்கும் நொடிக்குள் அவளை பார்த்தானே தவிர, அவனும் அவளை ஒரு பொருட்டாக கருதவில்லை.
ஆனால் தன் வெற்றியை அவள் கண் முன் கொண்டாடுவதில் பரம சுகம்.
பல நாள் பட்டினி கிடந்தவனுக்கு, பிரியாணி கிடைத்த உணர்வு. யார் முன்பு தலை குனிந்தானோ, யாருக்காக தந்தையால் நிராகரிக்கப்பட்டானோ அவள் முன்பு வெற்றி வாகை சூடுகிறான்.
இதழ்களில் ஏளன புன்னகை உறைய, விழிகளிலோ கர்வம் மிளிர, அவளை பார்த்த படியே நிமிர்வுடன் மேடை ஏறியவன், மரியாதையுடன் விருதை வாங்கி கொண்டான்.
சதுரங்க ஆட்டத்தின் ராஜா ராணி தான் இருவரும்.
அவளை அவன் எதிரியாக எண்ணிக் கொண்டிருக்க,
அவனுக்கே தெரியாது,
அவன் ராஜ்ஜியம் அமைப்பதே அவள் பாதுகாப்பில் தான் என்ற ரகசியம்.