ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தக் லைஃப்- Thug life கதை திரி

Status
Not open for further replies.

திரை 16

இப்படியே சில தினங்கள் கடந்திருக்கும் அமரன் அவனின் படப்பிடிப்புகளில் மும்முரமாகிவிட துஷாராவும் கூட வழக்கம் போல அவளின் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள்.​

இருவரும் இரவு நேரத்தை தவிர பெரிதாக சந்தித்துக்கொள்ளவுமில்லை.​

அவளை அணைத்துக்கொண்டு உறங்குவதை தவிர அமரன் அவளை வேறு எதுவுமே செய்யவில்லை. அவளுக்கான உணவு, உடை என்று எதிலும் குறையும் தடையுமில்லை. வேலைக்கு செல்வதில் கூட கட்டுப்பாடு இல்லை. அவளின் குடியிருப்பின் தனிமை கொடுத்த சுதந்திரத்தை இங்கே அவனும் கொடுத்திருந்தான். அதிலும் இரவில் வீட்டிற்கு வர தாமதமானால் அழைத்து வரும் நேரத்தை விசாரித்துக்கொள்வான். அவன் அழைக்காவிட்டால் விஜயிடமிருந்து அழைப்பு வரும்.​

சொல்லப் போனால் அமரனுடன் ஒன்றாக இருப்பதை ஊடகத்தினருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வதை தவிர அவளுக்கு இந்த சிறை வாசத்தினால் வேறு எந்த தொந்தரவுமே இல்லை.​

அதிலும் முன்பெல்லாம் அசதியின் காரணமாக பல நாட்கள் பட்டினியாக உறங்கியிருக்கின்றாள். ஆனால், அவனுடன் இருக்கின்ற இத்தினங்களில் வயிறு நிரம்பாமல் அவள் உறங்கியதேயில்லை. எத்தனை மணிக்கு வீடு வந்து சேர்ந்தாலும் அவளுக்கான உணவு மேசையில் தயாராக இருக்கும். அவள் வரும் நேரம் பார்த்து உணவை எடுத்து வைக்கவும் கோமதி பணிக்கப்பட்டிருந்தார்.​

அன்று அவனுடைய வீட்டிற்கு வரும் போது அவளின் சுதந்திரத்தை பறித்து சிறகொடித்துவிடுவான் என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்தது தான். ஆனால், இன்று அவன் செய்துகொண்டிருப்பது எல்லாம் அதற்கு மாறாக தான் இருக்கின்றது,​

அவனின் இந்த கையாள்கை அவளை மேலும் குழப்பியது. புலி பதுங்குவது பாய்வதற்கு தானோ என்கின்ற எண்ணம் அவளுக்குள் ஆழமாகவும் பதிய தொடங்கியிருந்தது.​

எந்த சூழலையும் சுலபமாக சமாளிக்க தெரிந்த துஷாராவிற்கு அந்த வீடு, விஜய், அவன் என்று எல்லாமே பழக்கத்திற்கு வந்திருந்தாலும் எப்பொழுதும் விழிப்புடன் தான் இருந்தாள். அவன் பின்னும் மாயவலை எதுவாக இருந்தாலும் அதில் விழுந்துவிட கூடாது என்கின்ற கவனம் அவளுக்குள் இருந்துகொண்டே தான் இருந்தது.​

இப்படியாக நாட்கள் கடந்திருக்க அன்று தீனதயாளனுக்கு விருது வழங்கும் நிகழவுக்கான நாளும் வந்து சேர்ந்திருந்தது. அதே நிகழ்வில் துஷாராவும், அமரனும் கூட சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த வில்லன் என்னும் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.​

துஷாரா அவ்விருது நிகழ்விற்காக ஆர்வமாக தயாராகிக்கொண்டிருந்தாள்.​

அவளின் அலங்காரங்கள் எல்லாம் பெரியதாக ஒன்றுமில்லை. எப்பொழுதும் அணியும் ஜீன்ஸ் ஷர்ட்டிற்கு பதிலாக மஞ்சள் நிறத்தில் அனார்கலி வகை சுடிதார் அணிந்துக்கொண்டாள். அது அழகிய வேலைப்பாடுகளுடன் அவளுக்கு மிக பொருத்தமாக இருந்தது. மிதமாக ஒப்பனையும் செய்துக்கொண்டாள்.​

அந்நேரம் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அமரன். படப்பிடிப்பு முடிந்து இப்பொழுதுதான் வீட்டிற்கு வருகின்றான்.​

தயாராகிக்கொண்டிருந்தவளை எற இறங்க பார்த்தவன்.​

"ரொம்ப சந்தோஷமா இருக்க போலயே? உன்னை அவார்டுக்கு நாமினேட் தான் பண்ணியிருக்காங்க? கிடைக்குமோ கிடைக்காதோ" என்றான் நக்கலாக.​

அந்நேரத்திற்கெல்லாம் தயாராகிமுடித்திருந்தவள் உதட்டை சுளித்து அவனை முறைத்து பார்த்தபடியே மெத்தை மீதிருந்த கைப்பையை எடுக்க அவளின் பார்வை அதன் அருகே இருந்த தெடி பேரில் படிந்தது.​

அதை எடுத்து முத்தமிட்டபடியே "இன்னிக்கு அப்பாவுக்கு அவார்ட் கிடைக்க போகுது டா குட்டி. அதை வச்சே என்னை மிரட்டிய சில பேரெல்லாம் வயிறெரிஞ்சு சாகட்டும்" என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னாள்.​

அதில் ஏற்கனவே களைப்பில் சோர்ந்திருந்த அவனின் முகம் மேலும் இறுகிப்போக அவளை முறைத்தபடியே குளியலறைக்குள் புகுந்துக்கொண்டான்.​

அவனை கடுப்பேற்றி பார்த்த திருப்தியுடன் ஒரு எகத்தாள புன்னகை சிந்தியவள் விருது விழாவிற்கு கிளம்பியும் விட்டாள்.​

அவள் அரங்கத்திற்குள் நுழைந்ததும் அங்கே சிறப்பு பிரமுகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்வரிசையில் தான் தீனதயாளன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் அருகேயே போடப் பட்டிருந்த இருக்கையில் அன்புச்செல்வி மற்றும் அனிஷாவும் அமர்ந்திருந்தனர்.​

எப்பொழுதும் போல் அவரை பார்த்த துஷாராவின் பார்வையில் ரசனையும் பெருமிதமும் பொங்க புன்னகை முகமாகவே அவரின் அருகே சென்று அவரை அனைத்துவிடுவித்து வாழ்த்துக்கள் சொல்லியவள் அன்புச்செல்வி மற்றும் அனிஷாவிடமும் பேசிவிட்டு தனக்கான இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.​

விருது விழா ஆட்டம் பாட்டம் என்று கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.​

திரைத்துறை பிரபலங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக விருதுகளும் வழங்கப்பட சிறந்த இயக்குனருக்கான விருது துஷாராவுக்கு தான் கிடைத்தது.​

மேடையில் ஏறி விருதைப் பெற்றுக்கொண்டவள் அவளின் முதல் ஹீரோவான தனது தந்தையின் கையால் அவ்விருதை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்புவதாக சொல்ல நிகழ்ச்சி தொகுப்பாளினி தீனதயாளனை மேடைக்கு அழைத்திருந்தார்.​

அதில் தீனதயாளனும் மேடையேறி அவளுக்கு அவ்விருதை வழங்க அதை பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாள் துஷாரா.​

அந்த தந்தை மகளின் பாசப்பிணைப்பை கண்டு அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.​

அதனையடுத்து மேலும் சில விருதுகள் வழங்கப்பட சிறந்த வில்லன் பிரிவுக்கான நேரமும் வந்திருந்தது. அந்த விருதிற்கான நியமனங்களின் பெயர்கள் மேடையில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க அதில் அமரனின் பெயரும் இடம் பெற்றிருந்தது.​

அவனின் பெயரை கேட்டதும் சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த துஷாராவின் கவனம் தன்னிச்சையாக மேடையில் பதிந்தது.​

"தெ பெஸ்ட் வில்லன் அவார்ட் கோஸ் டூ.... நன் அதர் தென் அமரன்" என்று அறிவித்த நேரம் மேடையில் இருந்த திரையில் அவன் அரங்கத்திற்குள் நுழையும் காட்சி ஒளிபரப்பப்பட்டது.​

கருப்பு நிற கோர்ட் சூட் மற்றும் கருப்பு நிற கண்ணாடி சகிதம் சிகப்பு கம்பளத்தில் கம்பீரமாக நடந்து வந்துக்கொண்டிருந்தான் அமரன்.​

அவன் தோரணைக்கு ஏற்றவாறு பின்னணி இசையும் ஒலிக்க​

"ஷூட்டிங் காரணமாக கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேண்டா...அப்படிங்குற மாதிரி கம்பீரமா வந்துட்டிருக்காரு தெ வான் அண்ட் ஒன்லி அமரன் சார்" என்று தொகுப்பாளினி ஆரவாரமாக அறிவித்த நேரம் சரியாக அரங்கத்திற்குள் நுழைந்திருந்தான் அமரன்.​

அவனை பார்த்ததும் அரங்கமே அதிரும் வண்ணம் கரகோஷங்களும் ஒலிக்க அதனூடே நேரே மேடைக்கு ஏறியவன் விருதினையும் பெற்றுக்கொண்டான்.​

அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்கு அவன் தகுதியானவன் தான் என்றாலும் கூட அதில் துஷாராவிற்கு கடுப்பாக தான் இருந்தது.​

மேடையில் நின்றிருந்தவனையே அவள் அழுந்த பார்த்துக்கொண்டிருந்த நேரம் "திமிர் பிடிச்சவன்...ஆனால், ரசிக்காமல் இருக்க முடியலைல" என்றாள் அருகிலிருந்த பெண்ணொருத்தி.​

அது வேறு யாருமல்ல அமரனால் திரைத்துறையில் வாய்ப்புகள் இழந்து பாதிக்கப்பட்ட மீரா தான்.​

துஷாரா அவளை புருவம் சுருக்கி பார்க்க "இவன் கிட்ட ஒரே ஒரு கிஸ் தான் கேட்டேன். அதுக்கு பெரிய இவனாட்டம் என்னை கிழே தள்ளிவிட்டுட்டான் தெரியுமா? பெரிய அழகன்னு நினைப்பு" என்றாள்.​

"நீங்க கேட்டிங்களா?" என்று கேட்டாள் துஷாரா.​

அவன் கேட்டான் என்றால் கூட நம்பியிருப்பாள். சினிமா வட்டார தகவல்கள் அவனை அப்படித்தானே சித்தரித்து வைத்திருக்கின்றன.​

ஆனால், இவள் கேட்டு அவன் தள்ளிவிட்டானாமே? இந்த இராவணனுக்குள் ஒரு ராமனா என்னும் எண்ணம் தான் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.​

"நம்ம இண்டஸ்ட்ரியில் இதெல்லாம் சகஜம் தானே. பார்க்க அழகா ஹோட்டா இருக்கானேன்னு கேட்டேன். அதுக்கு ரொம்ப தான் ஓவரா பண்ணான். கோவத்துல கொஞ்சம் திட்டிட்டேன். அதுக்கு போய் என்னோட மொத்த கெரியரையும் காலி பண்ணிட்டான். திமிர் பிடிச்சவன். இப்போ வாய்ப்பே இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம்" என்று புலம்பினாள் அவள்.​

அவள் பேசப் பேச துஷாராவின் மூளை வேறொரு திட்டத்திற்குள் சென்றுவிட அவளின் இதழ்களில் ஒரு வன்ம புன்னகை.​

"நான் அடுத்து ஒரு படம் பண்ணப்போறேன் அதுல வாய்ப்பு கொடுத்தா பண்ணுவிங்களா?" என்று கேட்டாள்.​

"என்ன இப்படி கேட்டுட்டீங்க? சின்ன ரோல்லா இருந்தா கூட சொல்லுங்க பண்ணுறேன். அந்த நிலைமையில தான் நான் இப்போ இருக்கேன்" என்றாள் பரிதாபமாக.​

என்ன செய்வது மொத்தமாக காணாமல் போவதற்குள் ஏதாவது செய்து மீண்டும் திரைத்துறைக்குள் வந்துவிட வேண்டிய கட்டாயம் அவளுக்கு.​

"சின்ன ரோல் எல்லாம் இல்லை. இந்த படத்தோட ஹீரோயினே நீங்க தான்" என்றாள்.​

"வாவ்... நிஜமா தான் சொல்லுறிங்களா மேடம்?" என்று அவள் கண்கள் மின்ன துஷாராவின் கையையே பிடித்துவிட்டாள்.​

"அதுவும் அந்த ஆன்டி ஹீரோகூட தான் நடிக்க போறீங்க" என்றவளின் பார்வை மேடையில் நின்றிருந்த அமரனில் பதிந்தது.​

"வாட், அவன் கூடவா? அதுக்கு அவன் ஒத்துக்கணுமே" என்று அதிர்ச்சியில் ஆரம்பித்து ஆற்றாமையில் முடித்திருந்தாள் மீரா.​

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு ஓகே தானே?"என்றாள் துஷாரா.​

"கண்டிப்பா மேடம்" என்று அவளும் ஒப்புக்கொள்ள உள்ளுக்குள் வன்மமாக சிரித்துக்கொண்டாள் பெண்ணவள்.​

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியும் அடுத்தடுத்த விருதுகள் என்று தொடர்ந்து இறுதியாக சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதில் வந்து நின்றது. தீனதயாளன் திரைத்துறையில் செய்துகாட்டிய சாதனைகள் எல்லாம் காணொளியாக்கப்பட்டு திரையில் ஒளிபரப்பப்பட்டது.​

அக்காட்சிகள் முடிய தீனதயாளனும் மேடைக்கு அழைக்கப்பட்டு விருது வழங்கி சிறப்பிக்க பட்டார். துஷாராவும் மேடைக்கு அழைக்கப்பட்டிருக்க அவளும் மேடையேறியிருந்தாள்.​

மகளுக்கும் தகப்பனுக்குமான தருணம் அது.​

பெருமையில் இருவரின் முகமும் பூரித்திருந்தன.​

அவர்களின் மகிழ்ச்சி அரங்கத்தில் இருந்த அனைவரின் முகத்திலும் புன்னகையை மலர செய்திருக்க ஒருவனின் பார்வையில் மட்டும் அனல் தகிக்க அவர்களை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.​

விருது நிகழ்ச்சியும் நிறைவை அடைந்திருக்க அமரனும் கிளம்பிவிட்டான்.​

அரங்கத்தை விட்டு வெளியேற சென்றவனின் விழிகள் ஒரு நொடி தன் தந்தையை விட்டு நீங்காமல் அருகேயே நின்றிருந்த துஷாராவின் மீது வன்மமாக படிய இறுகிய முகத்துடனே கிளம்பியிருந்தான்.​

குடும்பம், நண்பர்கள் என்று அனைவரையும் சேர்த்து சந்திக்கும் இத்தகைய சூழல் எப்பொழுதாவது அமைவதில் அனைவரிடமும் பேசிவிட்டு தாமதமாக தான் வீடு சென்று சேர்ந்திருந்தாள் துஷாரா.​

உள்ளே நுழைந்தவளிடம் "சாப்பிடுறீங்களாம்மா" என்று கோமதி கேட்க "நான் சாப்பிட்டேன். நீங்க போய் தூங்குங்கக்கா" என்றுவிட்டு அறைக்கு சென்றாள்.​

அவள் உள்ளே நுழைந்த நேரம் அறை இருளில் மூழ்கியிருந்தது. அவளின் பார்வை மெத்தையில் பதிய மெத்தை காலியாக இருந்தது.​

"அந்த டீமன் இன்னும் வரல போல" என்று முணுமுணுத்துக்கொண்டே விளக்கை போட்டபடி திரும்பியவளுக்கு தூக்கி வாரி போட்டது.​

அங்கே இருந்த சோபாவில் தான் கால் மேல் கால் போட்டுகொண்டு தலையை பின்னுக்கு சாய்த்தபடி விழிமூடி அமர்ந்திருந்தான் அமரன். அவன் மடியில் துஷாராவின் தெடி பேர் வேறு இருந்தது.​

நெஞ்சில் கை வைத்து நீவிக்கொண்டவளை தலை உயர்த்தி பார்த்தவன் "சுச்சுச்சு...ரொம்ப பயந்துட்டியா டார்லிங்?" என்றான்.​

அவனின் கரமோ அந்தக் கரடி பொம்மையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது.​

அவள் அவனை முறைத்து பார்க்க "அங்க உன் அப்பன் கூட அப்படி சிரிச்சிட்டிருந்தியே என்னை மட்டும் ஏன் டார்லிங் முறைச்சு முறைச்சு பார்க்குற" என்றான்.​

"என் அப்பாவும் நீயும் ஒண்ணா? நீயெல்லாம் அவர் கால் தூசுக்கு கூட வரமாட்ட" என்றாள்.​

"ஆஹான்" என்றவனின் கரம் அந்த பொம்மையில் அழுத்தத்தை கூட்ட "ஏய் உன்னை யாரு அதை எடுக்க சொன்னது. மரியாதையா கொடு. அது என் அப்பா எனக்கு கொடுத்தது"என்று சீறினாள்.​

"ஓஹ் இன்டெரெஸ்ட்டிங்" என்று ஒரு மாதிரி வன்மமாக சிரித்தவனின் கருவிழிகள் சட்டென கூர்மை பெற அந்த பொம்மையை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தான்.​

"அதை எதுவும் பண்ணின உன் கையை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று அவள் சொல்லி முடிக்கவில்லை கையினாலேயே அதை கிழித்து அதனுள் இருந்த பஞ்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக உருவி அவள் முன்னே தூக்கி போட்டான் அவன்.​

"சைக்கோவாடா நீ" என்றபடி அவள் அவனை நெருங்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன் அவளை பார்த்துக்கொண்டே அந்த பொம்மையையும் அவன் கையில் எஞ்சியிருந்த பஞ்சையும் மொத்தமாக கீழே போட்டிருந்தான்.​

கீழே விழுந்து கிடந்த பொம்மையை பார்த்தாள். மொத்தமாக சிதைந்திருந்தது. மண்டியிட்டு அதன் அருகே அமர்ந்தாள். ஆத்திரமாக வந்தது.​

வேக வேகமாக அதனை சுற்றி கிடந்த பஞ்சுகளை அள்ளி எடுத்து அதனுள் திணித்தாள். அவள் வேகத்திலேயே அவளின் சினத்தின் அளவு தெரிந்தது.​

சினத்தை கட்டுப்படுத்த முயன்றதில் கண்களில் கண்ணீர் வேறு கோர்த்துக்கொள்ள அப்படியே நிமிர்ந்து அவனை பார்த்தாள்.​

அவன் முகத்தில் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லை.​

"கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உனக்கெல்லாம்" என்றாள்.​

அவள் அருகே மண்டியிட்டமர்ந்து அவள் தாடையை அழுந்தப் பற்றி தன்னைப் பார்க்க செய்தான்.​

"உன் விஷயத்தை பொருத்தவரைக்கும்… சுத்தமா இல்லை" என்றான்.​

கலங்கியிருந்த விழிகளால் அவள் அவனை பார்த்திருக்க "ச்சுச்சுச்சு பாவம்...உயிரே இல்லாத பொம்மைக்கே இப்படி பதறுறியே..." என்று பொய்யாக பரிதாபப்பட்டவன் ஒரு எகத்தாள புன்னகையுடன் எழுந்துச் சென்றான் .​

சற்று முன் இருந்த அவளின் மகிழ்ச்சியான மனநிலையை கொஞ்ச நேரத்தில் சிதைத்து விட்டு சென்றான்.​

செல்லும் அவன் முதுகையே எரித்து விடுவது போல பார்த்திருந்தவள் அவன் பார்வையிலிருந்து மறைந்ததும் மீண்டும் அந்த பொம்மையை பார்க்க அவள் விழிகளில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு அதன் மேலேயே விழுந்திருந்தது.​

அவள் பொக்கிஷமாக வைத்திருந்த பொம்மைக்கு அவன் செய்த கொடுமைக்கு பிறகு துஷாரா அவனிடம் பேசுவதையே மொத்தமாக நிறுத்தியிருந்தாள். அவனாக வம்பு வளர்த்தாலும் அமைதி காத்தாள். இரவில் அவன் அணைத்துக்கொண்டாலும் திமிறுவதில்லை.​

அவளின் அந்த அமைதி அவனுக்குள் நெருடலாக தான் இருந்தது. அவளுக்குள் என்ன ஓடுகின்றது என்ற சிந்தனை அவனுக்குள்.​

இப்படியே நாட்கள் நகர அவர்களின் புது படத்திற்கான பூஜை போடப்பட்டு அதற்கான வேலைகளும் தொடங்கியிருந்தன.​

அப்படத்தில் மீரா தான் கதாநாயகி என்று விஜய் தகவல் தெரிவித்த போதும் கூட "வேணும்னே பண்ணுறா...விடு பார்த்துக்கலாம்" என்று திட்டினானே ஒழிய அன்று துஷாராவிற்கு கொடுத்த வாக்கின் படி மீராவை அப்படத்திலிருந்து மாற்ற சொல்லவுமில்லை.​

எல்லாமே துஷாராவின் எண்ணப்படியே தான் நடந்தது. அனைத்து வேலைகளும் துரித கதியில் நடந்து முடிய இதோ அடுத்த வாரம் முதல் நாள் படப்பிடிப்பு என்னும் நிலையில் வந்து நின்றிருந்தார்கள் அனைவரும்.​


 

திரை 17​

அன்று அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கான நிரல்கள் வகுக்கப்பட்டிருந்தன.​

துஷாரா அமரனுக்கு முன்பே தயாராகி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தாள்.​

அமரன் வருவதற்குள் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிடும் எண்ணம் அவளுக்கு. நிச்சயம் அமரன் வந்தால் எங்கே என்ன தவறை கண்டுபிடிக்கலாம் அதில் எப்படி அவளை குறை சொல்லலாம் என்று தேடுவான்.​

ஆகாத மருமகள் என்றால் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் தானே.​

அப்படி அவன் குறை சொல்லிவிட இடம் தரக்கூடாது என்று உறுதியாக இருந்தாள். அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக்கொண்டாள்.​

அனைத்தும் தயாராகி முடிவதற்கும் அமரன் வந்து சேர்வதற்கும் நேரம் சரியாக இருந்தது.​

காரிலிருந்து இறங்கியவன் யாரையும் பார்க்கவில்லை. இயக்குனர் என்னும் முறையில் துஷாராவிற்கு மரியாதை நிமித்தம் ஒரு தலையசைப்புக் கூட இல்லை.​

எதையும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேரே தனது கேரவேனிற்குள் நுழைந்துக்கொண்டான்.​

இருக்கையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த துஷாரா அவனை அழுத்தமாக பார்த்துவிட்டு திரும்ப அவனுக்கு பின்னால் வந்த விஜய் மென்மையாக புன்னகைத்து விட்டு சென்றான்.​

பதிலுக்கு புன்னகைத்துக்கொண்டவள் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் கையில் வைத்திருந்த அன்றைய நாளுக்கான காட்சி தொகுப்பில் தலையை நுழைத்துக்கொள்ள "செம்ம ஆட்டிடியூடில்ல? சமாளிக்குறது கஷ்டம் தான் போல" என்றான் அவளின் அருகே நின்றிருந்த அகிலன்.​

"எதிர்பார்த்தது தானே. விடு" என்றவளுக்கும் உள்ளுக்குள் அதே எண்ணம் தான்.​

படப்பிடிப்புக்கான அனைத்தும் தயார்நிலையில் இருக்க "அமரனை..." என்று தொடங்கியவள் சற்று நிறுத்தி "அமரன் சாரை வரச் சொல்லு" என்றாள் அகிலனிடம்.​

அவர்களுக்குள் ஆயிரம் இருந்தாலும் பொதுவெளியில் அவனுக்கான மரியாதையை அவள் கொடுத்துதான் ஆகவேண்டும். இல்லையேல் அதுவே தேவையில்லாத கிசுகிசுக்களை உருவாக்கிவிடும். இருக்கும் பிரச்சனையில் புதிதாக இன்னொன்றுக்கு வழிவகுக்க அவள் தயாரில்லை.​

அகிலனும் கேரவேனின் கதவை தட்டி விட்டு உள்ளே எட்டி பார்த்தவன் "ஷாட் ரெடி சார்" என்றான்.​

அம்ரிதா அவனுக்கு ஒப்பனை செய்துகொண்டிருக்க கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தமர்ந்திருந்த அமரன் "உங்க டைரக்டரை வந்து கூப்பிட சொல்லு" என்றான் இருந்த நிலை மாறாமல்.​

"ஓகே சார்" என்று பவ்யமாக தலையை ஆட்டியபடி கதவை அடைத்த அகிலனோ "வரவனுங்க பூரம் இப்படி தான் இருக்கானுங்க. எல்லாரையும் அவங்களே வந்து கூப்பிடணும்னா அப்போ நான் எல்லாம் எதுக்கு இருக்கேன்" என்று கருவிக்கொண்டே அங்கே அமர்ந்திருந்த துஷாராவை பார்த்தான்.​

இதைப் போய் சொல்லி அவளிடம் வேறு வாங்கி கட்டிக்கொள்ள வேண்டுமே என்று நினைக்கும் போதே "இந்த படம் ஆரம்பமே அமர்க்கலமா இருக்கேடா அகிலா"என்று நொந்துகொண்டவன் "அப்பனே முருகா...உன் குழந்தையை நீதான் காப்பாத்தணும்" என்று வானத்தை அண்ணார்ந்து பார்த்து ஒரு அவசர வேண்டுதலும் போட்டுவிட்டு அவளிடம் ஓடினான்.​

அவளுக்கு முன்னே நின்றவனை புருவம் சுருக்கி பார்த்தவள் "என்னடா?" என்றாள்.​

"நீங்க வந்து கூப்பிடணுமாம்" என்றான் அவன்.​

நெற்றியை நீவியபடி சலிப்பாக நீண்ட மூச்சை இழுத்து விட்டவள் எழுந்துக்கொள்ள சட்டென எட்டி அவளின் அருகே இருந்த நீர் பாட்டிலை எடுத்து தனக்கு பின்னால் ஒளித்து வைத்துக்கொண்டான் அகிலன்.​

அவள் அவனை விசித்திரமாக பார்க்க "எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்" என்றான் அவன்.​

அவன் சொல்லிய விதத்தில் அவளுக்கே சிரிப்பு வந்துவிட்டது.​

"வாட்டர் பாட்டிலை ஒளிச்சு வச்சுட்டா அடிக்கமாட்டேனா?" என்றபடி அவன் தலையில் ஓங்கி நங்கென்று கொட்டி விட்டு சென்றாள்.​

"ஆஹ்" என்று தலையை தேய்த்துவிட்டவனோ "கொட்டுறதே கொட்டுறீங்க மோதிர கையாள கொட்டுங்க மேடம். நல்லதாவது நடக்கட்டும்" என்றான் உரத்த குரலில்.​

"ஆஹ்... நீயே நல்ல மோதிரமா பார்த்து வாங்கி கொடு" என்று சொல்லிக்கொண்டே அவள் நடக்க அங்கே அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே கேரவேனின் கதவில் தான் சாய்ந்து நின்றிருந்தான் அமரன்.​

அகிலனுடன் விளையாட்டாக பேசிக்கொண்டு சென்றதில் அவளின் இதழ்களில் புன்னகை மீதமிருக்க அப்படியே அவன் முன்னே சென்று நின்றவள் "ஷாட் ரெடி" என்றாள்.​

அவளை கூர்ந்து பார்த்தான் அமரன்.​

அவளின் இதற்கடையில் மீதமிருந்த புன்னகையை பார்த்தான்.​

அவளிடமிருந்து தனக்கு கிடைக்காத ஒன்று அடுத்தவனுக்கு கிடைப்பது உள்ளுக்குள் என்னவோ செய்தது. அவனுக்குள் எழும் அந்த உணர்வு அவனுக்கே அதிர்ச்சி தான்.​

அதை தடுக்க வேண்டும். இல்லையேல் தனது இலக்கில் இருந்து தவறி விடுவான் என்பது அவனுக்கே தெரியும். தலையை மெல்ல உலுக்கிக்கொண்டான்.​

"என்னை தவிர மத்த எல்லார் கிட்டயும் நல்லாவே சிரிக்க வருதே உனக்கு" என்றான்.​

அவள் அவனை முறைத்து பார்க்க "பாரு, என்னை பார்த்ததும் சட்டுனு முகத்தை மாத்துறியே" என்றான்.​

"சிரிப்பெல்லாம் மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட தான் வரும்" என்றாள்.​

"யாரு? அவனா?" என்றபடி தலையை சற்றே சாய்த்து அவளுக்கு பின்னால் எட்டி அங்கு நின்றிருந்த அகிலனை பார்த்தான்.​

அவளும் அகிலனை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் அவனை பார்த்தவள் "ஏன் இருக்க கூடாதா?" என்றாள்.​

கேரவேனிலிருந்து கிழே இறங்கியவன் அவளை நெருங்கி நின்றான்.​

அவள் ஒரு அடி பின்னால் வைத்து நகர்ந்து நிற்க இருவருக்குமான இடைவெளியை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டவன் "யூ ஆர் மைன் துஷாரா. அதை மறந்துடாதே" என்றான்.​

பதிலுக்கு தானும் ஒரு நக்கல் புன்னகை சிந்தியவள் "என் உடம்பு மட்டும் தான்... மனசில்லை" என்றாள்.​

இருவரின் விழிகளும் மோதிக்கொண்டன.​

அவன் அவளை அழுத்தமாக பார்க்க ஒரு நொடி மௌனமாக அவனது பார்வையை எதிர்கொண்டவள் "ஷாட் ரெடி சார்" என்று சொல்லிவிட்டு​

திரும்பி நடந்தாள்.​

"திமிர் பிடிச்சவ" என்று முணுமுணுத்துக்கொண்டவனின் இதற்கடையில் இரகசிய புன்னகை ஒன்று தோன்றிமறைய அவனும் அவளுடன் நடந்தான்.​

அவனின் பார்வை அந்த இடத்தை அலசியது.​

எல்லாமே முன்பே பேசியது போல அவளின் இஷ்டப்படிதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவருமே அவளின் தேர்வு தான்.​

சுற்றி இருந்தவர்களின் பார்வை அவன் மீது மரியாதை கலந்த பயத்துடன் படிந்தன. அவர்களில் சிலர் ஏற்கனவே அவனுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள். அதில் அவனது குணமும் நன்கறிந்தவர்கள்.​

அவர்களை எல்லாம் பார்த்துக்கொண்டே நடந்தான் அமரன்.​

"எல்லாமே உன் இஷ்டப்படி பண்ணியிருக்க போல. சும்மா சொல்லக் கூடாது, குட் செலக்ஷ்ன் தான்" என்று பாராட்டியவன் சற்று நிறுத்தி "ஆல் தி பெஸ்ட்" என்று ஒரு மார்க்கமாக சொல்லிக்கொண்டே தனது இடத்திற்கு சென்று நின்றுவிட்டான்.​

அகிலன் அவனுக்கான காட்சியை விளக்கிச் சொல்ல அதை கேட்டுக்கொண்டவன் "ஓகே ரெடி" என்றான்.​

இன்றைய காட்சி வெறும் அமரனுக்கு மட்டுமானது. அதில் அவனும் சில துணை நடிகர்களும் நடிக்க வேண்டியிருந்ததில் அனைவரும் தயார்நிலையில் இருக்க படப்பிடிப்பும் தொடங்கியிருந்தது.​

"குவயேட் ஒன் செட், ரோல் கேமரா" என்று அகிலனின் குரல் கேட்க "கேமரா ரோலிங்" என்று ஒளிப்பதிவாளரிடமிருந்து பதில் வந்தது.​

"ரோல் சவுண்ட்" என்று அடுத்து வந்த அவனின் குரலில் "சவுண்ட் ரோலிங் என்றார் அதற்கு பொறுப்பானவர்.​

ஒளிப்பதிவு கருவிக்கு முன் க்ளேப்பர் போர்டை பிடித்தபடி நின்றிருந்த துணை ஒளிப்பதிவாளர் "சீன் பைஃவ், டேக் வான்" என்று சொல்லியபடி க்ளேப் அடித்திருக்க "அக்ஷன்" என்றாள் துஷாரா.​

இப்படியே பலமுறை க்ளேப் அடிக்கப்பட்டு பல மணிநேரங்கள் கடந்திருக்கும் இதுவரை ஒரு டேக் கூட சரியாக அமையவில்லை.​

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க "கட், கட், கட்" என்று கத்தியிருந்தாள் பெண்ணவள்.​

அதனை தொடர்ந்து அடுத்த பத்தாவது முறையாக மீண்டும் அதே காட்சி படமாக்கப்பட்டது. இல்லை இல்லை படமாக்க முயற்சிக்கப்பட்டது.​

அந்தளவிற்கு அவளின் பொறுமையை சோதித்து கொண்டிருந்தான் அமரன்.​

"சீன் பைஃவ், டேக் டென்" என்ற குரல் கேட்க "அக்ஷன்" என்றவளின் பார்வை அமரனில் அழுத்தமாக படிந்தது.​

அவனோ அவளை நக்கலாக பார்த்துக்கொண்டே மீண்டும் அந்தக் காட்சியை சொதப்பியிருக்க "கட், கட்" என்று மைக்கில் கத்தியவள் நெற்றியை நீவிக்கொண்டே அமர்ந்துவிட்டாள்.​

அவன் வேண்டுமென்றே செய்துகொண்டிருக்கின்றான் என்று அவளுக்கும் தெரியும்.​

அவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி நையாண்டி செய்தான்.​

உன் இஷ்டத்திற்கு எல்லாமே செய்தாலும் நான் நினைக்காமல் உன்னால் இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாது என்கின்ற தோரணை அவனிடம்.​

ஆத்திரமாக வந்தது அவளுக்கு. எல்லோர் முன்னிலையிலும் அவனை எதுவும் சொல்லவும் முடியவில்லை.​

அவனை முறைத்துக்கொண்டு அமர்ந்திருக்க எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் "என்ன மேம் இப்படி பண்ணுறார்? எவ்வளவு கஷ்டமான சீனைக் கூட சிங்கிள் டேக்கில் முடிச்சிடுவாருன்னு கேள்வி பட்டிருக்கேன். இது ஒரு ஜுஜுபி சீன். இதுக்கு இத்தனை டேக் வாங்குறாரே" என்று அகிலன் கேட்டதுதான் தாமதம் அவளுக்கு அமரன் மீதிருந்த மொத்த கோபத்திற்கும் அவன் தான் வடிகாலாக வேண்டியிருந்தது.​

கையில் இருந்த மைக்கை அவனை நோக்கி வீசியிருக்க அது "ஆத்தி" என்று விலக முயன்று தோற்றவனின் மார்பை பதம் பார்த்திருந்தது.​

''போன ஜென்மத்துல ஏதோ பாவம் பண்ணியிருப்பேன் போல. அதான் இந்த ஜென்மத்துல இந்த ராட்சசி கிட்ட மாட்டிட்டு சாகுறேன்" என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் "மேம்" என்க "பிரேக்" என்று கடுப்பாக சொல்லியவள் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.​

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அமரனோ சத்தமாக சிரிக்க தொடங்கியிருந்தான்.​

எழுந்துச் சென்றவளை அவனின் சிரிப்பொலி பின்தொடர பற்களை கடித்தபடி கண்களை அழுந்த மூடி திறந்து கொண்டவளுக்கு, தான் அவனிடம் தோற்றுக்கொண்டிருக்கும் உணர்வு மேலெழுவதை தவிர்க்கமுடியவில்லை.​

படப்பிடிப்பு தளத்திலிருந்து சற்று தள்ளி வந்து நின்றுக்கொண்டாள். தலை வேறு விண்ணென்று தெறித்தது. முதல் நாளுக்கே இப்படி. இனி அடுத்தடுத்த தினங்களில் அவன் என்னவெல்லாம் செய்வான் என்று யோசிக்கவே அவளுக்கு தலை சுற்றியது.​

தலையை பிடித்துக்கொண்டே நின்றிருந்தாள்.​

"மனசுக்கு பிடிச்சவனை இப்படி தான் மைக்கால் அடிப்பியா?" என்று அடக்கிய சிரிப்பினூடே கேட்டபடி அவளின் அருகே வந்து நின்றான் அமரன்.​

அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள் எதுவும் பேசாமல் மீண்டும் முன்னே திரும்பிக்கொள்ள அவள் முன்னே காபி கப்பை நீட்டியிருந்தான்.​

அதை ஒரு பார்வை பார்த்தவள் "வேண்டாம்" என்றாள்.​

"அட... சும்மா குடி. இன்னும் நிறைய பார்க்கணுமே. அதுக்கெல்லாம் எனெர்ஜி வேணாமா" என்றான்.​

அவன் பேச பேச அவளுக்கு கோபம் தான் வந்தது.​

அவன் கையிலிருந்த காபி கப்பை வெடுக்கென்று வங்கிக்கொண்டவள் அதன் உஷ்ணத்தை கூட பொருட்படுத்தாமல் மடமடவென குடித்து முடித்திருந்தாள்.​

அவன் நிச்சயமாக அவளின் இச்செயலை எதிர்பார்க்கவில்லை.​

ஆவி பறக்கப் பறக்க அவன் கொண்டு வந்திருந்த காபியை அப்படியே வாயில் சரித்துக்கொண்டிருந்தாள் பெண்ணவள். அவன் மீதிருந்த மொத்த கோபத்தையும் இப்படி வெளிப்படுத்தியிருந்தாள்.​

"ஏய், பார்த்து சுட போகுதுடி" என்று அவன் சற்றே பதற அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் காலி கப்பை அவன் கையிலேயே திணித்தவள் "இன்னும் பார்க்க எவ்வளவோ இருக்கே சார் இந்த சூட்டுக்கெல்லாம் பயந்தா முடியுமா?" என்று சொல்லிவிட்டு சென்றாள்.​

என்னதான் கோபத்தில் அவள் அப்படி செய்திருந்தாலும் அவளின் நாவிற்கு அது தெரியுமா? சூடான காபி சுட்டதில் பெரும் எரிச்சல். நேரே தனது இருக்கையில் வந்தமர்ந்தவள் அருகே இருந்த தண்ணீரை எடுத்து பருக சென்ற சமயம் அவளின் முன்னே பனிக்கூழை நீட்டியிருந்தான் விஜய்.​

அவனை ஏறிட்டு பார்த்தவள் "என்ன, நண்பன் செய்யுற பாவத்துக்கு பரிகாரமா?" என்றாள் கடுப்பாக.​

மெல்ல சிரித்தவன் "அப்படியும் சொல்லலாம்" என்றான்.​

அவள் அவனை முறைக்க "உனக்கு கோபம் அவன் மேல தானே? நான் கொடுத்தா கூட வாங்கிக்க மாட்டியா?" என்று அவன் மென்மையாக கேட்க பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டவள் "கொடு" என்று வாங்கிகொண்டாள்.​

அவளின் நா எரிச்சலுக்கு அந்த பனிக்கூழ் என்னவோ இதமாக தான் இருந்தது.​

தூர நின்று அவள் பனிக்கூழ் உண்பதை அமரன் பார்த்துக்கொண்டிருக்க அவனை நிமிர்ந்து பார்த்த விஜய் 'ஓகேயா?' என்று துஷாராவிற்கு தெரியாமல் கட்டை விரலை தூக்கி காட்ட 'ம்ம்ம்' என்று கண்களை அழுந்த மூடி திறந்திருந்தான் அவன்.​

இப்படியாக அடுத்தடுத்த நாட்களும் படப்பிடிப்பு தொடர அமரனின் அழிச்சாட்டியங்களும் தொடர் கதையாகியிருந்தன.​

ஒளிப்பதிவு கருவி சரியில்லை, அது வைக்கப் பட்டிருக்கும் கோணம் சரியில்லை, வானிலை சரியில்லை, வசனம் சரியில்லை, உடை சரியில்லை, உணவு சரியில்லை என்று ஆரம்பித்து படப்பிடிப்பில் கொடுக்கப்படும் டீ, காபி கூட சரியில்லை என்று சில்லறை விடயங்களில் வந்து நின்றான்.​

ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதே அவளுக்கு மலையை பிளக்கும் காரியமாக தான் மாறியிருந்தது. அவள் ரசித்து செய்யும் வேலையையே வெறுக்க வைத்துவிடுவான் என்பது போல தான் அவனின் ஒவ்வொரு செய்கையும் இருந்தது.​

முடிந்தவரை அவனது தொந்தரவுகளை தாங்கி நின்ற பெண்ணவளுக்கு அன்று அவள் வெகுவாக எதிர்பார்த்திருந்த காட்சியை படமாக்கக்கூடிய நாளும் வந்து சேர்ந்திருந்தது.​

 
Last edited:

அன்று ஒரு சண்டை காட்சிதான் படமாக்க வேண்டியதாக இருந்தது.​

பெரிய கண்டெய்னர் வகை கனரக வாகனத்தின் மீதிருந்து ஓடி வந்து அடுத்து நின்ற அதே போன்ற வாகனத்தில் குதிக்க வேண்டும். இரண்டிற்கும் கணிசமான அளவு இடைவெளி இருந்தது.​

அந்தக் காட்சியை படமாக்க வேண்டிய ஏற்பாடுகள் தான் அங்கு செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.​

அவனுக்கான சாகச காட்சிகளில் எல்லாம் உடல் போலிகள் வைத்துக்கொள்ளாமல் அவனே நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்க அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப் பட்டிருந்தன.​

"சீன்ஸ் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டியா?" என்று தனக்கருகே நின்றிருந்த அகிலனிடம் கேட்டாள் துஷாரா.​

"இப்போ பண்ணிடுறேன் மேம்" அவன் கிளம்ப "நில்லு, நானே பார்த்துகிறேன்” என்றபடி அவன் கையிலிருந்த காட்சித்தொகுப்பை பெற்றுக்கொண்டு அமரனிடம் சென்றாள்.​

பொதுவாக படப்பிடிப்பு தளத்தில் அவள் அவனை நெருங்குவதில்லை. எதுவாக இருந்தாலும் அகிலனிடம் தான் சொல்லி அனுப்புவாள். அவனிடம் நேரடி பேச்சுக்களை முடிந்தவரையில் தவிர்த்திருந்தாள்.​

வீட்டில் நினைத்தாலும் அவனை விட்டு ஒதுங்கி இருக்க முடியாது. அவன் அதற்கு விடுவதுமில்லை. தினசரி அவளுக்கு இரவு கவிழ்வதும் பொழுது புலர்வதும் அவனது மார்பில் தான்.​

படப்பிடிப்பு தளங்களில் அவன் கொடுக்கும் காயங்களுக்கு எல்லாம் இரவு நேரங்களில் அவனது இருதய துடிப்பே மருந்தாகி போகும் மாயம் என்னவென்று அவளும் அறியாள்.​

ஒவ்வொரு இரவும் தனது செவிகளை நிறைக்கும் அவனது இதயத் துடிப்பின் சத்தம் அவளின் அலைக்கழிப்பை குறைத்து அமைதிப்படுத்துவது பெண்ணவளுக்கே அதிசயமாக தான் இருக்கும்.​

அது அவனுடனே இருப்பதினால் வந்த பழக்கமா அல்லது அவன் பால் ஈர்க்கப்படுகின்றாளா என்பது அவளுக்கே குழப்பம் தான்.​

ஆனால், அதை பற்றி யோசிக்க கூட அவள் விரும்பவில்லை. அதற்கான பதில் அவளுக்கு தேவையுமில்லை. அவர்களுக்குள் இருக்கும் இந்த விசித்திர உறவு நிரந்தரமானதும் இல்லை என்பதில் தெளிவாக இருந்தவள் வெளியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவனிடமிருந்து விலகியே நின்றுக்கொண்டாள்.​

பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துக் கொண்டிருந்தவனின் முன்னே கருப்புவெள்ளை நிறத்தில் கட்டம் போட்ட ஷர்ட் மற்றும் ஜீன்ஸுடன் வந்து நின்றவளை ரசனையாக பார்த்தவன் "என்ன டார்லிங் நீ வந்திருக்க? எங்க உன்னோட அல்லக்கை?" என்றான்.​

"அல்லக்கை இல்லை AD . அதுக்கான மரியாதையை கொடுத்து பழங்குங்க சார்" என்றாள்.​

"மனசுக்கு பிடிச்சவனை பத்தி சொன்னதும் கோபம் வருதா டார்லிங்?" என்றவனின் கருவிழிகள் கூர்மை பெற அவனை கண்டுகொள்ளாமல் கையில் இருந்த காட்சி தொகுப்பை பார்த்தவள் அன்றைக்கான காட்சிகளை விளக்கப்படுத்தினாள்.​

சற்று நேரத்திற்கெல்லாம் அவளுடன் சண்டை பயிற்சியாளரும் சேர்ந்துகொண்டார்.​

"கொஞ்சம் ரிஸ்கி சீன் சார் இது. பாடி டூப் போடலாமா?" என்று அவர் கேட்க "நோ ராயன், இட்ஸ் ஃபைன்" என்றான்.​

"ஆல்ரைட். ராயன் சார், வேற எதுவும் இருந்தா தெளிவா சொல்லிடுங்க. இன்னும் பத்து நிமிஷத்துல டேக் போகலாம்" என்றபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் துஷாரா.​

தனது இடத்தை நோக்கி நடந்தவளின் விழிகள் ஒரு நொடி அமரன் அணிந்திருந்த பாதுகாப்பு உபகரணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தவனின் மீது படிந்தன.​

அவள் அவனை அழுத்தமாக பார்த்தபடி மெல்ல தலையசைக்க அவனும் பதிலுக்கு தலையசைப்பிலேயே பதிலிறுத்தான்.​

சரியாக பத்து நிமிடங்களுக்கு பிறகு "டேக் போகலாமா மேம்?" கேட்டான் அகிலன்.​

தனக்குள் மூழ்கியிருந்தவள் "ஆங்..." என்றபடி சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.​

"ஷாட் ரெடி மேம். டேக் போகலாமா?" என்று மீண்டும் கேட்டான் அவன்.​

"ம்ம்ம்" என்ற துஷாரா அண்ணார்ந்து அந்த கண்டெய்னரை பார்த்தாள்.​

அமரன் அதன் மீது தான் தயார் நிலையில் நின்றுக்கொண்டிருந்தான். வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்திருந்தவனின் உடலை சுற்றி பாதுகாப்பு கயிறுகள் பொருத்தப்பட்டிருந்தன.​

உயரத்தில் நின்றிருந்தாலும் பயம், நடுக்கமென்று எதுவும் அவன் முகத்தில் தெரியவில்லை. இதுவெல்லாம் பழக்கமான ஒன்று தான் என்பதாலோ என்னவோ வெகு இயல்பாகவே நின்றிருந்தான்.​

ஆனால், இது எல்லாம் இன்னும் சற்று நேரத்தில் மாறப்போகின்றது. அவனுக்கு வலிக்க போகின்றது. வலியில் துடிக்க போகின்றான். அதுவும் அவளால் அது நிகழ போகின்றது. உள்ளுக்குள் தான் செய்வது பிழை என்று தெரிந்தாலும் அவன் அதற்கு தகுதியானவன் தான் என்று நினைத்துக்கொண்டே அவனை பார்த்தவளின் பார்வையில் அழுத்தம் கூடிற்று.​

சரியாக அந்நேரம் "ரோல் கேமரா" என்ற அகிலனின் குரல் கேட்டதும் "சீன் ஃபோர்டீன், டேக் வான்" என்று க்ளெப் போர்டும் அடிக்கப்பட்டிருக்க ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு "ஆக்ஷன்" என்றாள் துஷாரா.​

அதில் அவன் நின்றிருந்த கண்டெயினரிலிருந்து வேகமாக ஓடிவந்து அடுத்த கண்டெயினருக்கு பாய்ந்திருந்தான் அமரன்.​

அங்கிருந்த அனைவரின் பார்வையும் அவன் மீதிருக்க மிகுந்த தோரணையுடன் பாய்ந்திருந்தான்.​

அவன் அடுத்த கண்டெயினரை அடைவதற்குள் திடிரென்று அவன் அணிந்திருந்த பாதுகாப்பு கயிறு அருந்திருந்தது.​

எதிர்பார்க்கவில்லை அவன்.​

அருகே பற்றிக்கொள்ளவும் எதுவுமே இல்லை.​

அப்படியே பொத்தென்று கீழே விழுந்தவன் "ஆஹ்" என்று கையை பிடித்துக்கொண்டு அலறினான்.​

இப்படியான கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் அதிகப்படி பாதுகாப்பிற்காக கீழே போடப்பட்டிருந்த ஸ்டண்ட் காட்சிகளுக்கான பிரத்தியேக மெத்தையில் தான் விழுந்திருந்தான் அவன்.​

ஆனால், அவனின் போதாதா காலத்திற்கு பாதி உடல் மெத்தையையும் மீதி உடல் தரையையும் தொட்டிருந்தது. அதில் அவன் கரத்தை வேறு தவறுதலாக ஊன்றியிருக்க கையில் தான் பலத்த அடி.​

நடந்த விபரீதத்தில் சுற்றியிருந்தவர்கள் அரண்டுவிட்டனர்.​

"ஐயோ என்னாச்சு, மெடிக்" என்று அகிலன் கத்த, "அமர்" என்று அவனை நோக்கி ஓடியிருந்தான் விஜய்.​

அவனை தொடர்ந்து மற்றவர்களும் அமரனை சூழ்ந்துக்கொள்ள இன்னும் தனது இடத்திலேயே உறைந்துப்போய் அமர்ந்திருந்த துஷாராவின் பார்வை அங்கே வலியில் துடித்துக்கொண்டிருந்த அமரனின் மீது படிந்தது.​

அதே க்ஷணத்தில் மருத்துவ உதவியாளர் அவனை பரிசோதித்துக்கொண்டிருக்க கீழே படுத்துக்கிடந்தவனின் பார்வை துஷாராவின் மீது படிந்தது.​

முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவனது பார்வையை அவள் சந்தித்திருக்க அவனின் புருவங்கள் மெல்ல இடுங்கின. வலியினால் அல்ல நடந்த விபத்திற்குப் பின் இருக்கும் சூத்திரதாரியை அவன் அறிந்துக்கொண்டதினால்.​

அவனது பார்வையை சந்தித்தப்படியே மெல்ல எழுந்து நின்றவள் அவனை நோக்கி சென்றாள்.​

கீழே படுத்துக்கிடந்தவனின் அருகே சென்று மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு நின்றவள் "என்னாச்சு?" என்றாள்.​

"கை ஃப்ரேக்சராகியிருக்க வாய்ப்பிருக்கு மேம்" என்றான் அந்த மருத்துவ உதவியாளன்.​

"அகில்" என்று அவள் அவனை பார்க்க "ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணியச்சு மேம்" என்றான்.​

அவளும் "ஓகே" என்று சொல்லியிருக்க அடுத்த அரைமணி நேரத்தில் மருத்துவ ஊர்தியும் வந்திருந்தது.​

அமரனை அதில் ஏற்றிய நேரம் அங்கே சூழ்ந்திருந்த ஏனையவர்களும் கலைந்து செல்ல அவனின் அருகே நின்றவளை பார்த்தவன் "வேணும்னே பண்ணியிருக்கல்ல" என்று கேட்டான்.​

அதில் அவனின் அருகேயே நின்றிருந்த விஜய் கூட விழிகள் விரிய அவளை அதிர்ந்து பார்க்க "என் தெடியை (teddy) தொட்டா கையை உடைச்சிடுவேன்னு சொன்னேன் தானே" என்றாள்.​

அவளின் பதிலில் மேலும் அதிர்ந்த விஜயோ "அடிப்பாவி" என்றபடி வாயில் கைவைத்துக்கொள்ள அமரனிடம் வலியினூடே மிக மிக மெலிதான புன்னகை.​

பொருள் விளங்கா புன்னகை.​

அவளை ஆழ்ந்து பார்த்தப்படி "ராட்சசி" என்று அவன் முணுமுணுத்த நேரம் அவனை மருத்துவ ஊர்திக்குள் ஏற்றி கதவையும் மூடியிருந்தனர்.​


 
Last edited:

திரை 18

அமரனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபின் அதோடு அனைத்தும் முடிந்துவிடவில்லை. நடந்த சம்பவத்திற்கான காரணங்களை கண்டறியும் பொறுப்பு ப்ரொடக்ஷ்ன் சேஃப்டி ஆஃபிசருக்கு இருக்க விபத்து நடந்த இடம், பாதுகாப்பு உபகரணங்கள் என்று அனைத்தும் ஆராயப்பட்டன.​

அதனை தொடர்ந்து அந்த காட்சிக்கு தொடர்புடையவர்களும் விசாரிக்கப்பட்டனர். அதில் துஷாராவும் உள்ளடக்கம் தான்.​

பொதுவான கேள்விகளுடன் அன்றைய விசாரணைகள் முடிந்திருந்தன.​

அதோடு முழு விசாரணை முடியும் வரை படப்பிடிப்பை ஒத்திவைக்கவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்க அன்று இருந்த ஏனைய வேலைகளை முடித்துக்கொண்டு துஷாரா வீடு வந்து சேர்ந்திருந்தாள்.​

கோமதியை தவிர வீட்டில் யாருமே இல்லை. விஜய் கூட அமரனுடன் மருத்துவமனையில் தான் இருந்தான்.​

அறைக்குள் நுழைந்தவள் விளக்கை போட்டாள்.​

எத்தனை நாட்கள் என்னும் விவரம் தெரியாவிட்டாலும் இன்னும் சில தினங்களுக்கு அமரன் மருத்துவமனையில் தான் இருப்பான் என்று யூகித்துக்கொண்டவளுக்கு அவன் களவாடியிருந்த தனிமை மீண்டும் கிடைத்துவிட்ட உணர்வு.​

அவனுடன் ஒரே அறையை பகிர்ந்துகொள்வதில் அவளின் நடவடிக்கைகளில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். அமரன் அவளை கட்டுப்படுத்துவதில்லை என்றாலும் ஒரு பெண்ணாக தனக்கு தானே அவள் விதித்துக்கொள்ளும் கட்டுப்பாடுகள் அவை.​

உதாரணத்திற்கு குளித்துவிட்டு குளியலறையிலேயே உடை மாற்றுவது. வழக்கமாக இரவு நேரங்களில் அணிந்துக்கொள்ளும் குட்டி ஷார்ட்ஸுகளுக்கும், இரவு உடைகளுக்கும் பதில் டிஷர்ட் மற்றும் ட்ராக் சூட் அணிந்துக்கொண்டு உறங்குவது என்று இதுபோன்ற சின்ன சின்ன கட்டுப்பாடுகளை அவளாகவே கடைபிடித்துக்கொண்டிருந்தாள்.​

அவளை தீண்டவேண்டும் என்று அவன் முடிவெடுத்துவிட்டால் இதுவெல்லாம் அவனுக்கு ஒரு விடயமேயில்லை என்று அவளுக்கு தெரியும். ஆனால், அது போன்ற ஆடைகளில் தன்னை பார்க்கும் உரிமையை அவனுக்கு வழங்கவிரும்பவில்லை அவள்.​

இன்று எந்த தடையுமின்று தனது இஷ்டத்திற்கு இருக்கலாம் என்ற சுதந்திர உணர்வில் மெல்ல புன்னகைத்துக்கொண்டாள்.​

மெத்தையை பார்த்தாள். புது மெத்தைவிரிப்பு மடிப்பு கலையாமல் நேர்த்தியாக இருந்தது. அதை பார்த்துக்கொண்டே கைப்பையை தூக்கி மெத்தை மீது போட்டாள்.​

அப்படி செய்வது அமரனுக்கு சுத்தமாக பிடிக்காது என்று அவளுக்கு தெரியும். அவனுக்கு பொருட்கள் எல்லாம் உரிய இடத்தில் நேர்த்தியாக இருக்கவேண்டும்.​

இன்று அவள் இஷ்டத்திற்கு அந்த அறையை திருப்பி போட்டாலும் கேட்க தான் அவன் இல்லையே.​

இதழ்களில் பூத்த புன்னகை பெரியதாக விரிய பூந்துவாலையை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றுவிட்டாள்.​

குளித்துமுடித்து உடைமாற்றி வந்தவள் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். வேலை மும்முரத்தில் இரவு மணி பத்தை தொட்டிருந்ததை கூட அவள் உணரவில்லை.​

அந்நேரம் கதவை தட்டியிருந்தார் கோமதி "என்னக்கா?" என்று அவள் கேட்க "மணி பாத்தாச்சு. சாப்பிட வாங்கம்மா" என்றார்.​

"இல்லை இப்போ வேண்டாம். வேலையை முடிச்சதும் நானே சாப்பிட்டுக்குறேன். நீங்க போய் தூங்குங்க" என்றபடி மீண்டும் கவனத்தை மடிக்கணினிக்கு திருப்பிக்கொண்டாள்​

"சரிம்மா" என்றவர் அங்கேயே சற்று தயங்கி நின்றுகொண்டிருக்க மீண்டும் அவரை நிமிர்ந்து பார்த்தவள் "என்னக்கா?" என்றாள்.​

"சாருக்கு ஷூட்டிங்கில் அடிபட்டுடிச்சாம்ன்னு சொன்னாங்க? இப்போ எப்படி இருக்கார்?" என்று கேட்டார்.​

"கை முறிஞ்சிருக்கலாம்னு சொன்னாங்க. எனக்கு சரியா தெரியலக்கா" என்றவள் மீண்டும் மடிக்கணினியில் விழிகளை பதிக்க "ஐயோ கடுவுளே, அவருக்கா இப்படி நடக்கணும்" என்று வருத்தப்பட்டார் அவர்.​

துஷாரா நிமிர்ந்து அவர் முகத்தை பார்த்தாள். நிஜமாகவே அவரின் முகத்தில் வருத்தம் தோய்ந்திருந்தது.​

"என்னக்கா, அவருக்கான்னு அதிர்ச்சியா கேட்குறீங்க? பண்ணுற பாவத்துக்கெல்லாம் இப்படி ஏதும் தண்டனை கிடைக்க தானே வேணும்" என்று அவள் பேச்சுக்கொடுக்க "பாவமா, என்னம்மா பேசுறீங்க?" என்றவர் சற்று நிறுத்தி "நீங்க எதை நினைச்சு பேசுறீங்கன்னு எனக்கு தெரியலம்மா. ஆனால், என்னை பொறுத்தவரை அவர் ரொம்ப நல்ல மனுஷன். அப்போ என் பொண்ணுக்கு அஞ்சு வயசு தான் இருக்கும். அவளுக்கு உடம்பு சரியில்லை இதயத்துல என்னவோ கோளாறுனு எல்லாம் டாக்டர்ஸ் சொன்னாங்க. அது என்ன ஏதுன்னு எனக்கு இப்ப வரை புரியலை. கட்டுன புருஷனும் சீக்காளி புள்ளையை பெத்து கொடுத்திருக்கியேன்னு என்னை போட்டு அடிக்காத நாள் இல்லை. இவக்கூட இருந்து இன்னொரு புள்ளை பெத்துக்கிட்டா அதுவும் சீக்காளியாத்தான் போகுமுன்னு என் மாமியாரும் மனசாட்சியே இல்லாமல் பேசி அந்தாளுக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. இதுக்கிடையில அவளுக்கு அடிக்கடி உடம்பு மோசமாகிடும். ஆஸ்பித்திரி செலவுக்கு சொந்தக்காரங்க கிட்ட போய் நின்னேன். புருஷனே கை விட்டுட்டான். இதுல சொந்தக்காரங்களை சொல்லவா வேணும். ஒருத்தனும் உதவிக்கு வரல. கையில கழுத்துல கிடந்ததை வித்து முடிஞ்ச வரை சமாளிச்சேன். ஆனால், என்னை மாதிரி ஏழைங்க கொஞ்சம் நிம்மதியா இருந்துட்டா அந்தக் கடவுளுக்கு தான் பொறுக்காதே. ஒரு நாள் அவளுக்கு ரொம்பவும் உடம்புக்கு முடியல. தெரிஞ்சும் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பார்த்துக்க சொல்லிட்டு வேலைக்கு வந்துட்டேன். வேலைக்கு வந்து அரைமணி நேரம் கூட இருந்திருக்காது உன் பொண்ணு மயங்கி விழுந்துட்டா பேச்சு மூச்சே இல்லைன்னு கால் வந்துச்சு. நான் என்ன பண்ணுவேன்னு சொல்லுங்க? அப்படியே உறைஞ்சு போயிட்டேன். என் நல்ல நேரத்துக்கு என்னை கவனிச்ச சார் தான் என்ன ஏதுன்னு கேட்டு என் கூடவே வீடு வரைக்கும் வந்து என் புள்ளையை ஆஸ்பித்திரியிலும் சேர்த்துவிட்டார். அதுவும் பணக்காரங்க பார்க்குற ஆஸ்பித்திரி. இங்க பணம் ரொம்ப ஆகும் என்னால கொடுக்க முடியாதுன்னு நான் சொன்னப்ப ரொம்ப கோபப்பட்டார். நடந்ததை எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கிட்டார். முன்னாடியே ஏன் என்கிட்ட சொல்லலைன்னு கோபப்பட்டார். பிறகு என் பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ணி முடிச்சு, என் புருஷன் மேல முதல் பொண்டாட்டி இருக்கும் போதே ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு போலீஸ் கம்பளெயிண்ட் கொடுத்து அவனை உள்ள தள்ளி கடைசியில் எனக்கு சட்டப்படி விவாகரத்து வாங்கி கொடுக்குற வரைக்கும் எல்லாமே சார் தான் பாத்துக்கிட்டார். என் கிட்ட அதுக்காக ஒரு பைசா கூட வாங்கல" என்றார்.​

பழைய கதைகளை நினைவுக்கூர்ந்ததில் கண்களை கரித்துக்கொண்டு வர புடவை தலைப்பால் ஈரவிழிகளை துடைத்துக்கொண்டார் கோமதி.​

அவரை ஆழ்ந்து பார்த்தவளுக்கு தனக்கு தெரியாத அமரனின் அடுத்த முகம் வியப்பாக இருந்தது. இதே போன்ற மென்மையை அவன் விஜயிடத்தில் காட்டியும் அவள் பார்த்திருக்கின்றாள்.​

திரையுலகிற்கு ஒருமுகமும் நிஜ உலகிற்கு இன்னொரு முகமும் என்று இருப்பவன் தன்னிடம் காட்டும் முகம் தான் எது என்றும் அவளுக்கு புரியவில்லை.​

புதிராக இருக்கின்றான்.​

அவன் கோமதிக்கு செய்த உதவி அவள் மனதை நெகிழ்த்தியிருந்தாலும் அவன் மீதிருக்கும் கோபம் அவனின் நற்குணத்தை அங்கீகரிக்க மறுத்தது.​

அதில் "பணம் இருக்குறவங்க இல்லாதவங்களுக்கு செய்யுறது தானேக்கா" என்றாள் அசட்டையாக.​

மெல்ல சிரித்த கோமதியோ "பணம் மட்டும் இருந்தா பத்தாதும்மா... கொடுக்குற மனசும் இருக்கணும். உங்களுக்கு வேணும்னா இது சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனால், என்னை பொறுத்தவரை ரொம்ப பெரிய விஷயம்மா. இன்னிக்கு நானும் என் பொண்ணும் வாழுற நிம்மதியான வாழ்க்கைக்கு சார் தான் காரணம். வெறும் அவ உசுரை காப்பாத்தினதோட விட்டுடல. இப்போ என் பொண்ணு கான்வெண்டு ஸ்கூலில் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறா. சார் தான் படிக்க வைக்கிறார். நல்லா படிச்சா மேற்கொண்டு பெரிய படிப்பெல்லாம் கூட படிக்க வைக்குறேன்னு சொல்லியிருக்கார். இந்த புண்ணியம் அவரை மட்டுமில்லை அவரின் தலைமுறையவே காக்கணும். எனக்கு மட்டுமில்லை இன்னும் எத்தனையோ பேருக்கு கூட சார் உதவி பண்ணியிருக்கார். ஆனால், பாருங்க இந்த பத்திரிக்கைகாரங்களுக்கு அவரை பத்தின தப்பான கிசுகிசு மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது போல. என்னத்தை சொல்ல" என்று சலித்துக்கொண்டவர் சற்று நிறுத்தி "நான் ஒருத்தி, விட்டா பேசிட்டே இருப்பேன். அப்போ நான் கீழ போறேன்மா. எதுவும் வேணும்னா கூப்பிடுங்க " என்றபடி கதவை அடைத்துவிட்டு சென்றுவிட்டார்.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டுக்கொண்டவளின் விழிகள் தன்னிச்சையாக அங்கே சுவற்றில் ஆள் உயரத்திற்கு மாட்டி வைக்கப்பட்டிருந்த அமரனின் புகைப்படத்தில் படிந்தன.​

புகைப்படத்தில் தெரிந்த அவனது விழிகள் கூட அவளை ஊடுருவி பார்ப்பதை போன்ற உணர்வு.​

சட்டென முகத்தை திருப்பிக்கொண்டாள்.​

அவனிலிருந்து கவனத்தை திருப்பி வேலையை தொடர்ந்தாள். முடியவில்லை. மனம் மீண்டும் மீண்டும் அவனை பற்றியே சிந்திக்க தொடங்கியிருந்தது.​

கடுப்பாக மடிக்கணினியை மூடிவைத்தவள் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். பசித்தது தான். ஆனால், சாப்பிட தோன்றவில்லை.​

நடு இரவில் உறங்கிக்கொண்டிருந்தவளின் கரங்களோ தன்னையும் அறியாமல் மெத்தையில் அவனை தேடி துளாவிற்று. அவனது இருதய துடிப்பின் ஒலியையோ அல்லது அவனது மார்பின் கதகதப்பையோ எதை தேடினாளோ அது அவளுக்கு தான் வெளிச்சம்.​

மெத்தையை துளாவிய அவளின் கரங்களுக்கு அருகே வெறுமையாக இருந்த காலி இடமே தட்டுப்பட கண்களை மெல்ல திறந்து பார்த்தாள்.​

சட்டென திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள் பெண்ணவள். என்ன செய்துகொண்டிருக்கின்றாள் அவள். உறக்கத்தில் அவனை தேடியிருக்கின்றாள். அவனின் அணைப்பை தேடியிருக்கின்றாள். நிஜத்தில் அவனை வெறுக்கின்றாள். ஆனால், உறக்கத்தில் அவளின் ஆழ்மனது அவனை தேடுகின்றது.​

சட்டென கன்னத்தில் கைகளை வைத்து தனக்கு காய்ச்சல் ஏதும் அடிக்கின்றதா என்று பரிசோதித்து பார்த்துக்கொண்டாள்.​

அதற்கான அறிகுறிகள் ஒன்றுமே இல்லை.​

அப்படியே கைகளை கன்னத்தில் அழுத்தியபடி விழிவிரித்து அமர்ந்துகொண்டவளுக்கு தன்னை நினைத்தே பேரதிர்ச்சி தான்.​

ஒருவேளை கோமதியின் கதையை கேட்டு வந்த தடுமாற்றமாக கூட இருக்கலாம் என்று தனக்கு தானே அவள் சமாதானம் சொல்லிக்கொண்ட சமயம் அவளின் வயிறு வேறு பசியில் உறுமியது.​

"வயிறு வேற சத்தம் போடுதே" என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்ட நேரம் அன்று அமரன் அவளின் பசியாற்றிய நினைவு வேறு வந்து போக அப்படியே மீண்டும் மெத்தையில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.​

மனதில் ஒரு வித குற்றவுணர்வு எட்டிபார்ப்பதையும் தவிர்க்க முடியவில்லை.​

அவளின் பார்வை அமரனின் புகைப்படத்தில் நிலைத்தது.​

அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.​

ஆராய்ந்து பார்த்தாள்.​

அழுத்தமான முகம், மயக்கும் விழிகள், அதுகொண்ட கூரிய பார்வை, அடர்ந்த புருவங்கள், செப்பமான உதடுகள். மொத்தத்தில் ஆளுமையான தோற்றம். ஆம், அழகன் தான். வில்லனாக இருந்தாலும் பெண்கள் ஏன் அவன் மீது மையல்கொள்கின்றனர் என்று இப்பொழுது புரிந்தது .​

அவனையே சற்று நேரம் பார்த்திருந்தவளின் விழிகள் எப்பொழுது உறக்கத்தை தழுவின என்று அவளுக்கே தெரியாது.​

அடுத்த நாள் காலையில் அலைபேசி சிணுங்கிய சத்தத்தில் தான் எழுந்திருந்தாள்.​

கண்களை கசக்கிக்கொண்டு எழுந்தமர்ந்தவள் "சொல்லு அகில்" என்றாள்.​

"ஷூட்டிங் மறுபடியும் ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாங்க மேம். அமர் சார் இல்லாத சீன்ஸ் எல்லாம் முதலில் ஷூட் பண்ணிடலாம்னு யோசிச்சேன். புது ஷூட்டிங் அட்டவணை உங்களுக்கு அனுப்பி வச்சிருக்கேன். பார்த்து ஓகே பண்ணிட்டீங்கன்னா மத்த ஏற்பாடெல்லாம் பண்ணிடுவேன்" என்றான்.​

"அதுக்குள்ள எப்படி ஓகே பண்ணாங்க?" என்று அவள் கேட்க "அமர் சார் தான் இன்வெஸ்டிகேஷன் எல்லாம் வேணாம். அது தன்னோட கவனக்குறைவால் நடந்த விபத்துன்னு சொல்லிட்டாராம். பாதிக்கப்பட்ட அவரே சொல்லிட்டதனால எந்த பிரச்சனையும் இல்லையாம். ஷூட்டிங் கன்டினியூ பண்ணலாம்னு சொல்லிட்டாங்க" என்றான் அகிலன்.​

"ஓஹ்… சரி. பார்த்துட்டு சொல்லுறேன்" என்று அலைபேசியை வைத்தவள் எழுந்து தயாராகி நேரே மருத்துவமனைக்கு தான் சென்றாள்.​

அமரன் மனதில் என்ன தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அவளுக்கு புரியவேயில்லை. இந்த விபத்திற்கு அவள் தான் காரணம் என்ற அவனின் வாக்குமூலம் ஒன்று போதும் அவளின் மொத்த திரைத்துறை வாழ்க்கையும் அஸ்தமித்து போவதற்கு.​

அவனை நிராகரித்ததற்காக பழிவாங்குவது மட்டும் தான் அவனது நோக்கமென்றால் இந்த வாய்ப்பு போதுமே .​

பிறகு ஏன் அவளை காட்டிக்கொடுக்கவில்லை. குழப்பமாக இருந்தது அவளுக்கு.​

அவனிடமே தெளிவுபடுத்திக்கொள்ள எண்ணி அவனை தேடிக்கொண்டு மருத்துவமனைக்கே சென்றிருந்தாள்.​

அவனது அறை கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அமரன் மட்டும் தான் அறைக்குள் இருந்தான். கட்டிலில் இலகுவாக சாய்ந்தமர்ந்திருந்தவனின் வலது கையில் ஆர்ம் ஸ்லிங் போடப்பட்டிருக்க இடது கையில் அலைபேசியை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.​

உள்ளே நுழைந்தவளை பார்த்ததும் "மிஸ் மீ... டார்லிங்?" என்று சிறு புன்னகையுடன் புருவங்களை உயர்த்தி கேட்க அவளின் முறைப்பையே பரிசாக பெற்றுக்கொண்டான் அவன்.​

அதில் மெலிதாக சிரித்துக்கொண்டவன் "இல்லையா? பின்ன எதுக்கு காலையிலேயே என்னை தேடி வந்திருக்க?" என்று கேட்டான்.​

அவனின் கேள்விக்கு பதில் சொல்ல அவள் வாயை திறக்கும் முன்னரே "ஆஹ்..ஆஹ்...வெயிட். லெட் மீ கெஸ்... கை மட்டும் தான் உடைஞ்சிருக்கா இல்லை உயிருக்கு ஏதும் ஆகியிருக்குமான்னு பார்க்க வந்திருக்க ரைட்?” என்றான்.​

அவன் குரலில் கிண்டல் இருந்தது.​

"கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா செத்திருப்ப அமர்" என்றாள் துஷாரா.​

"சுச்சுச்சு அன்போர்ச்சுனேட்லீ, இன்னும் சாகலையே. கை கூட உடையலையாம்.லேசான முறிவுதானாம். அடுத்தமுறை இன்னும் பெட்டரா திட்டம்போடு என்ன?" என்றான் மீண்டும் அதே கிண்டல் தொனியில்.​

அவனது பேச்சில் உள்ளுக்குள் லேசாக எட்டி பார்த்த குற்றவுணர்வும் கூட மறைந்துப் போயிருக்க அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அவன் கட்டிலுக்கு அருகே வந்து நின்றவள் "என் கிட்ட இனி விளையாடக் கூடாதுன்னு உனக்கு ஒரு பாடம் கத்துக்கொடுத்தேன். நீ பேசுறதை பார்த்தா அந்த பாடத்தை சரியா கத்துக்கலன்னு நினைக்கிறேன்" என்றாள்.​

அதில் வாய் விட்டு சத்தமாகவே சிரித்தான் அமரன். அவனின் சிரிப்பு சற்றே தனிய அவளை ஆழ்ந்து பார்த்தான்.​

இருவரின் விழிகளும் சங்கமித்துக்கொண்டன.​

"நல்லாவே கத்துக்கிட்டேன். உன் கிட்ட நான் ரொம்ப… ரொம்ப ஜாக்கிரதையா விளையாடனும். இல்லைனா கண்டிப்பா விழுந்திடுவேன்னு கத்துக்கிட்டேன். யூ ஆர் வெரி டேஞ்சரஸ்" என்றான் அவளின் விழி வழி ஊடுருவி உயிர் தொடும் பார்வையுடன்.​

அவனது பூடகமான பேச்சில் ஒரு வித நெகிழ்வு. விழிமொழியிலோ வன்மத்தை அன்றி வேறொன்று.​

சட்டென்று அவனிலிருந்து பார்வையை அகற்றிக்கொண்டாள்.​

"மிரட்டி சாதிக்க முடியாததை மயக்கி சாதிக்க நினைக்கிறியா?" என்றாள்.​

"மயங்கிடுவியா?" என்று அவன் கேட்க பற்களை கடித்தவள் "என்ன ட்ரை பண்ணுற அமர்?" என்று கேட்டாள்.​

"புரியல…" என்று அவன் புருவங்கள் உயர்த்த "எதுக்கு இன்வெஸ்டிகேஷன் வேண்டாம்னு சொன்ன? என்னால தான் நடந்துச்சுன்னு தெரியும் தானே. எதுக்கு காட்டிக்கொடுக்கல?" என்று கேட்டாள்.​

"ஓஹ்... என்னடா இவன் நாமதான் செஞ்சோம்னு தெரிஞ்சும் நம்மை காட்டிக்கொடுக்காமல் காப்பாத்தியிருக்கானே. இவன் ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டியா டார்லிங்...." என்று இழுத்தவன் "ஹா...ஹா...ஹா" என்று சத்தமாக சிரித்தான்.​

அவள் அவனை புரியாமல் பார்க்க "உன்னை காட்டி கொடுத்தா உன் கெரியரோட சேர்த்து நாம ஆடுற இந்த கண்ணாம்பூச்சி ஆட்டமும் முடிஞ்சு போயிடும். ஆனால், உன்னோட நான் இன்னும் விளையாடி முடிக்கலையே டார்லிங்" என்றான்.​

அவன் விழிகளில் பழைய வன்மம் மீண்டும் வந்து குடியேறியிருக்க அவனது கருவிழிகள் கருமையடைவதை அவளால் நன்கு உணர முடிந்தது. அவளின் முதுகுத் தண்டுகூட சில்லிட்டு போகும் உணர்வு.​

"டீமன்" என்று அவள் வாய்விட்டே திட்ட சரியாக அந்நேரம் "ம்கூம்..." என்று குரலை செருமிக்கொண்டே உள்ளே நுழைந்தான் விஜய்.​

"எப்போ வந்த?" என்று துஷாராவை கேட்க "இப்போ தான்" என்றாள்.​

"ஷூட்டிங் கன்டினியூ பண்ணலாமுன்னு சொல்லிட்டாங்க தெரியும்ல?" என்று அவன் கேட்க "ம்ம்ம்... அகில் சொன்னான்" என்றாள்.​

"ஒகே" என்று சொன்னவனின் விழிகள் அமரனுக்கருகே இருந்த மேசையை பார்க்க அவனுக்கான காலை உணவு இன்னமும் தீண்டப்படாமலே இருந்தது.​

"நீ இன்னும் சாப்பிடலையா?" என்று கேட்டுக்கொண்டே உணவை திறந்தவன் அதை அமரனுக்கு கொடுக்க "இந்த கையை வச்சுட்டு எப்படி சாப்பிடுறது?" என்றான்.​

"நர்ஸ் கிட்ட கேட்குறது தானே" என்று விஜய் சொல்ல "அந்த பொண்ணே என்னை குறுகுறுன்னு பார்க்குது. அன்கம்பேர்ட்டபிளா இருக்கு டா" என்றான்.​

"இதெல்லாம் ஒரு காரணமாடா?" என்று சலித்துக்கொண்ட விஜய் அவனுக்கு உணவை ஊட்டிவிட போக "நீ எதுக்கு இதை எல்லாம் பண்ணுற?" என்றான் அமரன்.​

"நான் இல்லாமல் வேற யாரு பண்ணுவாங்க?" என்று விஜய் கேட்க அமரனின் பார்வை துஷாராவின் மீது படிந்தது.​

அதை கவனித்த துஷாரா "என்னை எதுக்கு பார்க்குற?" என்று கேட்க "கையை நீதானே உடைச்ச…" என்றான் அவன்.​

அமரனின் எண்ணம் விஜயிற்கும் புரிந்துவிட இதழ்மடித்து சிரிப்பை அடக்கியபடி அவனும் துஷாராவை பார்த்தான்.​

"அதுக்காக எல்லாம் என்னால உனக்கு சேவகம் செய்ய முடியாது" என்றாள் கறாராக.​

"அப்போ ஊட்டி விட மாட்ட?" என்றான் புருவமுயர்த்தி.​

"அதுக்கு வேற ஆளை பாரு" என்று அவளும் வீம்புக்கு நிற்க "பார்க்கலாமே..." என்று ஒரு வித கேலியாக சொன்னவன் "விஜய், அவள் தங்கச்சிக்கு போன் போடு" என்றான்.​

"இப்போ எதுக்கு அவளுக்கு?" என்று சற்றே பதறியபடி ஒரு எட்டு முன்னே வந்து நின்றாள் பெண்ணவள்.​

"கவெர்மெண்டை ஏமாத்தின கேசுல உங்கப்பாவோட சேர்த்து என்னை கொலை செய்ய முயற்சி பண்ணதுக்காக உங்கக்காவையும் தூக்கி உள்ள வச்சிடுவேன்னு சொன்னா அவளே எனக்கு ஊட்டி விடுவா தானே" என்றான்.​

துஷாரா கடுப்பில் பல்லை கடிக்க "பல்லை பிறகு கடிச்சிக்கோ. இப்போ எனக்கு பசிக்குது. நீ வரியா, இல்லை..." என்று அவன் ராகமாக இழுத்து நிறுத்த விறுவிறுவென விஜயின் அருகே வந்து அவன் கையிலிருந்த கரண்டியை பிடிங்கி எடுத்தவள் அமரனுக்கு உணவை ஊட்டியும் விட்டாள்.​

அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க "இப்படி சிடு சிடுன்னு முகத்தை வச்சிட்டு சாப்பாடு கொடுத்தா உடம்பில் ஒட்டுமா? நல்லா சிரிச்சிட்டே கொடு டார்லிங்" என்றான் வேண்டுமென்றே.​

அதில் துஷாராவிற்கு ஆத்திரம் ஏகத்திற்கும் எகிறினாலும் அதை காட்டத்தான் முடியவில்லை.​

வருந்தி வரவழைத்து போலி புன்னகை ஒன்றை இதழ்களில் நிரப்பிக்கொண்டவள் "போதுமா?" என்றாள் கடுப்பாக.​

"மச் பெட்டர்" என்றான் அவன்.​

அவர்கள் இருவரின் சம்பாஷணைகளையும் இதழ்களுக்குள் அடக்கிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த விஜய் 'சும்மாவே வச்சு செய்வான். இதுல அவன் கையை வேற உடைச்சு விட்டிருக்கா. பையன் ஓடவிடுவானே' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.​

அவள் அவன் முகத்தை கூட பாராமல் ஏனோ தானோ என்று உணவை ஊட்டிக்கொண்டிருக்க அவனது விழிகளோ அவளை விட்டு அகல மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தன.​

அவளை பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்.​

பார்த்துக்கொண்டே என்பதை விட ரசித்துக்கொண்டே என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். விலகி நிற்க சொல்லி அவன் மூளை சொன்னாலும் நெருங்கி செல் என்று மனம் உத்தரவிடுகின்றதே அவனும் தான் என்ன செய்வான்.​

ஒருவழியாக அவனுக்கு உணவையும் ஊட்டி முடித்தவள் எழுந்துக்கொள்ள "வாயை துடைச்சு விட உன் தங்கச்சி வரணுமா?" என்றான்.​

அவனை எரிச்சலாக பார்த்தவள் அங்கிருந்த திசுவினால் அவன் இதழ்களையும் சுத்தம் செய்துவிட்டாள்.​

அவன் மீது இருந்த கடுப்பை எல்லாம் அதில் காட்ட அவள் அழுத்தி துடைத்ததில் அவனுக்கே இதழ்களில் எரிச்சல் எடுத்துக்கொண்டது.​

"ஏய் போதும் விடுடி" என்று அவள் கையை தட்டிவிட்டவன் "ஒரு பேஷன்ட்கிட்ட இப்படி தான் நடந்துப்பியா? கல்நெஞ்சக்காரி" என்றான்.​

அவன் இதழ்களிலோ இருக்கிறதா இல்லையா என்பதுபோல் ஒரு விஷம புன்னகை வேறு ஒளிந்திருந்தது.​

அதையும் விஜய் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.​

"என்னால கஷ்டப்படுறியோன்னு கொஞ்சமே கொஞ்சம் அனுதாபப் பட்டேன். ஆனால், ஒன்னு இல்லை ரெண்டு கையையும் சேர்த்து உடைச்சு விட்டிருக்கணும்னு இப்போ தோணுது" என்று கடுகாய் பொரிந்தவள் அங்கிருந்து வேகமாக வெளியேற அவள் பேச்சில் சத்தமாக ஒலித்த அமரனின் சிரிப்பொலிதான் அவளை பின்தொடர்ந்தது.​

"துஷாரா, இரு நானும் வரேன்" என்றபடி அவளை தொடர்ந்து வெளியேற சென்ற விஜயின் பார்வை இன்னும் சிரித்துக்கொண்டிருந்த அமரனின் மீது ஒரு மார்கமாக படிய "என்னடா?" என்றான் அவன்.​

"ஒண்ணுமில்லையே" என்று தோள்களை உலுக்கியபடி அங்கிருந்து வெளியேறியிருந்த விஜயிற்கு என்னவோ துஷாராவின் மீது படியும் அமரனின் பார்வையும் அவனது கையாள்கையும் சற்றே வித்தியாசமாக தான் இருந்தது.​


அன்பு வாசகர்களுக்கு வணக்கம். அத்தியாயம் தாமதமாக போடுவதற்கு மன்னிக்கவும். கடந்த வாரம் முழுக்க வேலை மிக மிக அதிகம். ஆடிட், கஸ்டமர் விசிட் என்று பிழிந்து எடுத்துட்டாங்க. இந்த வராமும் அது தொடரும் போல தான் இருக்கு. இருந்தாலும் கிடைச்ச இடைவெளியில் எழுதியிருக்கேன். வாசிச்சிட்டு எப்படி இருக்குன்னு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்.

 
Status
Not open for further replies.
Top