முதல் நாள் பள்ளிக்கூடத்தில் யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தவளிடம் இதயக்கனி வந்து "என்ன ஆச்சு இங்கயே நிக்கிற. கிளாஸ்ரூம் போகலையா?" எனக் கேட்டான்.
"இல்லை ஃபர்ஸ்ட் டே ஸ்கூல், கிளாஸ் எங்க இருக்குன்னு தெரியல அம்மா வந்து கிளாஸ் ரூமுக்குள்ள போகிறதுக்கு முன்னாடி பிரின்ஸிபல் சார் பார்த்துட்டு போக சொன்னாங்க" எனக் கூறினாள்.
இதயக்கனி தன் தலையைச் சொறிவது போல் மறைந்து நின்றுக் கொண்டிருந்த பாரிவேந்தனைப் பார்க்க அவனோ கண் ஜாடையில் பதில் சொல்லுமாறு செய்கை செய்ய இதயக்கனி நறுமுகையை பார்த்து "ஆமா உன் பேர் என்ன? எந்த கிளாஸ் எந்த ஸ்டாண்டர்ட்?" எனக் கேட்க.
"என் பெயர் நறுமுகை நான் லெவன்த் ஸ்டாண்டர்ட்."
"ஓ லெவன்த் ஸ்டாண்டர்ட் சரி சரி பிரின்ஸிபல் ரூம் அதோ இருக்கு பார். அதுதான் பிரின்ஸிபல் ரூம். சரி இப்போ பெல் அடிக்கப் போறாங்க நாங்க போறோம்" என உளறியவனைப் பார்த்து.
"நாங்களா! போறீங்களா! நீங்க மட்டும் தானே இருக்கீங்க இங்க. உங்க கூட யாரும் இல்லையே?" என நறுமுகை கேட்க.
தன் நாக்கைக் கடித்துக்கொண்டு "இல்ல நறுமுகை ஏதோ ஞாபகத்தில் சொல்லிட்டேன் மன்னிச்சிடு நான் போறேன்" என அவசர அவசரமாகக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.
'தேங்க்ஸ் சொல்றத்துக்குள்ளயும் போயிட்டாங்களே, என்னவோ இந்த ஸ்கூல்ல இருக்கிற பசங்க எல்லாம் ஒரு ரகமா தான் இருக்காங்க' என்று யோசித்தவள் பிரின்ஸிபல் அறையை நோக்கிச் சென்றாள்.
மெல்ல எட்டிப்பார்த்து அறைக்கதவைத் தட்டி "எக்ஸ்கியூஸ் மீ சார் மே ஐ கம் இன்?" எனக் கேட்க
"எஸ் கம் இன்" என்று பிரின்ஸிபல் குரல் கொடுக்க அவளோ மெல்லப் பயந்துக் கொண்டு அறையினுள் நுழைந்து "சார் ஐயம் நறுமுகை லெவன்த் ஸ்டாண்டர்ட் நியூ அட்மிஷன்" என்று தன் கையிலிருந்த கடிதத்தை நீட்டினாள். அதை வாங்கிப் படித்துப் பார்த்த பிரின்ஸிபல்,
தன் மேஜையின் மேல் இருந்த கேள்வித்தாளை எடுத்து நறுமுகை முன் நீட்டினார். "கொஸ்டின் ஆன்சர் ஃபினிஷ் பண்ணிட்டு லெவன்த் ஏ செக்ஷன் கிளாஸில் ஜாயின் பண்ணிக்கோ." எனச் சொல்லியவரைப் பார்த்து திருதிருவென முழித்தாள்.
'என்னது கொஸ்டின் ஆன்சர் எழுதணுமா இந்த அம்மா நம்மகிட்ட சொல்லவே இல்லையே! இந்த அம்மா இருக்கே,எப்ப பாரு நம்மள மாட்டி விடுகிறதிலே வேலையா இருக்கு. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் கண்டிப்பா இந்த ஸ்கூல் பக்கம் கால் அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டேன். இப்படி வந்து வசமா மாட்டிக்கிட்டேன்.' என மனதில் நினைக்க அப்படியே நின்றுக் கொண்டிருந்தவளிடத்தில் பிரின்ஸிபல்,
"டேக்கிங் நறுமுகை" எனக் கூறினார். நறுமுகையோ அவரிடமிருந்த கேள்வித்தாளை வாங்கிக்கொண்டு "சார் எங்க உட்கார்ந்து ஆன்சர் எழுதணும்?" எனக் கேட்டாள்.
அவரோ ஒரு நிமிடம் யோசித்து "ம் பிளஸ் டூ கிளாஸ் ரூம் பக்கத்தில் இருக்கும் அந்த கிளாஸ் ரூம்ல போய் உட்கார்ந்து எழுது. யாருகிட்டயும் ஆன்சர் கேட்கக்கூடாது ஓகே வா" எனச் சொல்லி அனுப்பி வைத்தார்.
அவளோ 'என்னது பிளஸ் டூ கிளாஸ் ரூமா! நம்ம மானத்தை வாங்காமல் இந்த பிரின்ஸிபல் விடமாட்டார் போலயே.' என நினைத்தபடி வெளியேறியவள் பன்னிரெண்டாம் வகுப்பை நோக்கி நடந்தாள்.
பன்னிரெண்டாம் வகுப்பில் சிலர் கத்திக்கொண்டும், சிலர் படித்துக்கொண்டும் சிலர் ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் செய்துக் கொண்டு இருக்க. நறுமுகை காலடியில் சத்தத்தைக் கேட்டு ஆசிரியர்தான் வருகிறார் என நினைத்து அனைத்து மாணவர்களும் எழுந்து நின்று நறுமுகை வகுப்பறைக்குள் காலடி எடுத்து வைக்க அனைவரும் "குட் மார்னிங் டீச்சர்" என்று கோரஸாக சொல்ல, நறுமுகை முதலில் பயந்து போனாலும் பின் டக்கென சிரிப்பு வர வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். மாணவர்களுக்கோ மொக்கை ஆனது.
சிலர் நறுமுகையைப் பார்த்து முறைக்கச் சிலரோ டீச்சர் இல்லப்பா நியூ ஸ்டூடண்ட் போல எனச் சலித்துக் கொண்டு உட்கார கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த பாரிவேந்தன் நறுமுகையைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். 'இவள் நம்ம கிளாஸா ஆனா இதயக்கனி லெவன்த் தானே சொன்னான்' என ஒரு நிமிடம் யோசித்தான்.
வேலன் "டேய் மச்சான் இவள் நம்ப கிளாஸ் போலடா" எனச் சொல்ல இதயக்கனி "நான் கேட்கும் போது பொய் சொல்லிவிட்டாளா" என்று கூற பாரிவேந்தன் அவன் கையை நறுக்கென்று கிள்ளி டக்கென அவன் வாயை பொற்றினான். சத்தம் வெளியே கேட்டுவிடக் கூடாது என்று.
இதைப் பார்த்த வேலனுக்கு அப்பாடா இப்போ தான் எனக்கு நிம்மதி என்னையா அடிவாங்க வைக்கிற இப்போ நீயும் நல்லா வாங்குனியா என்று மனதில் எடுத்த சபதத்தை நிறைவேற்றியதை எண்ணி சந்தோஷப்பட்டான். ஃபர்ஸ்ட் இருக்கையில் அமர்ந்து இருந்த அந்த கிளாஸ் லீடர் ராஜீவ்காந்தி "உனக்கு என்ன வேணும் நீ இந்த கிளாஸ் நியூ ஸ்டுடென்ட்டா?" எனக் கேட்க.
அவளோ இல்லை எனத் தலையாட்டி "பிரின்சிபல் சார் இந்த கொஸ்டின் பேப்பர் கொடுத்து பிளஸ் டூ கிளாஸ்ல உட்கார்ந்து ஆன்சர் எழுதிக்கிட்டு வர சொன்னார்" எனக் கூறினாள்.
அவள் சொன்னதும் மற்ற மாணவர்களுக்கும் என்னவென்று புரிய "சரி இங்க வந்து உட்கார்ந்து எழுது" என ராஜீவ்காந்தி தன் இருப்பிடத்தைக் காட்ட, நறுமுகை தயங்கிக் கொண்டே நின்றாள்.
"இங்க டீச்சர் இல்லையா?"
"இன்னும் வரல"
"ஆனால் பெல் அடிச்சுட்டாங்கலே" என தன் சந்தேகத்தைக் கேட்க.
"ம் அடிச்சுட்டாங்க தான், டீச்சர் ஏதாவது மீட்டிங்ல இருப்பாங்க. இப்ப வந்திடுவாங்க, நீ வந்து உட்கார்ந்து ஆன்சர் எழுது. ஆமா நீ எந்த ஸ்டாண்டர்ட்?"
"நான் லெவன்த் ஸ்டாண்டர்ட்" எனச் சொல்லிவிட்டு பெண்கள் இருக்கும் பக்கம் சென்று அமர நினைக்க. அவர்களோ ஒருத்தர் கூட அவள் உட்கார இடம் தராமல் அவளை அங்க போ, இங்க போ என்று அவளை உட்கார விடாமல் செய்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாரிவேந்தனுக்கு கோபம் வரச் சட்டென தன் முன் மேஜையில் தட்டினான். பாரிவேந்தனின் கோபத்தைப் பற்றி அறிந்திருந்த சக மாணவர்கள் அமைதியாகி விட பாரிவேந்தனின் கண்சாடை புரிந்துக் கொண்ட இதயக்கனி நறுமுகையை தன்னருகில் அழைத்து "இங்க வந்து உட்கார்ந்து எழுது" எனக் கூறினான்.
நறுமுகைக்கோ இதயக்கனியைப் பார்த்ததும் சற்று நிம்மதி வர, அவன் அருகில் போக அப்பொழுதுதான் பாரிவேந்தன் அங்கு அமர்ந்து இருப்பதைப் பார்த்தவள் அடுத்த அடி எடுத்து வைக்காமல் தயங்கியபடி நின்றுக் கொண்டிருந்தாள்.
அவள் ஏன் தயங்கி நின்றுக் கொண்டிருக்கிறாள் என்று பாரிவேந்தனுக்கு புரிய, அந்த இருக்கையில் இருந்து எழுந்து அடுத்த இருக்கையில் போய் அமர்ந்தான். முதல் நாளே அவளின் தயக்கத்திற்கான காரணத்தை அறிந்து அவளுக்காக யோசித்தவனின் செயல் இதயக்கனிக்கு ஆச்சரியமாக இருந்தது.
நறுமுகையோ அவன் எழுந்துச் சென்றதும் இதயக்கனி அருகில் சென்று அமர்ந்து "தேங்க்யூ" எனச் சொல்லிவிட்டு ஆன்சர் எழுத ஆரம்பித்தாள்.
'நன்றி எனக்குச் சொல்லக் கூடாது பாரிக்குத் தான் சொல்லவேண்டும்...' என மனதில் நினைத்தவன் வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
ஒரு சில கேள்விக்கு விடை தெரியாமல், கொஸ்டின் பேப்பரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நறுமுகையைப் பார்த்து இதயக்கனி "என்ன ஆச்சு ஆன்சர் தெரியலையா?" எனக் கேட்டான். அவளோ பாவமாகத் தலையை ஆட்ட அவளைப் பார்த்துக் கொண்டிருந்த பாரிவேந்தனுக்கு சிரிப்புதான் வந்தது. இதைப் பார்த்த நறுமுகை "இதயக்கனி உங்கள் ப்ரெண்ட் கிட்டச் சொல்லி வையுங்கள் என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று அப்புறம் ஏதாவது திட்டுவேன்" எனக் கூறியவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு விடை எழுத ஆரம்பித்தாள்.
அதன்பின் அவள் எழுதும் அழகை ரசித்தபடி அமர்ந்திருந்தான் பாரிவேந்தன். ஒவ்வொரு கேள்விக்கும் விடை எழுத அவள் யோசிப்பதைப் பார்த்தவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான். பென்சிலை வைத்து தலையைச் சொறிவது, வாயில் கடிப்பது, கன்னத்தில் வைத்து யோசிப்பது போல் பாவனை செய்வது என ஒவ்வொன்றையும் அணுஅணுவாக ரசித்தான்.
இது தவறு என அவன் மூளை சொன்னாலும் மனமும் புத்தியும் சொல் பேச்சைக் கேட்கவில்லை. பதினேழு வயது ஆன பாரிவேந்தனுக்கு நறுமுகையின் செயல் புதியதாகத் தோன்றியது அவன் இதயத்தில் சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியதை அவன் நன்றாகவே உணர்ந்தான்.
அவள் விடை எழுதி முடிக்க ஆசிரியர் அந்த வகுப்பிற்குள் நுழையச் சரியாக இருந்தது.
"யார் நீ! புதுசா இருக்க எந்த கிளாஸ் உனக்கு?" என ஆசிரியர் கேட்க, அவள் பதில் கூறும் முன் ராஜீவ்காந்தி எழுந்து "டீச்சர் இந்த பொண்ணு லெவன்த் ஸ்டாண்டர்ட், பிரின்ஸிபல் சார் கொஸ்டின் பேப்பர் கொடுத்து ஆன்சர் எழுதிக்கிட்டு வர சொன்னார் அதான் எழுதிக்கிட்டு போறாள்." எனச் சொன்னான்.
"ஓ சரி, யூ கேரி ஆன்" எனக்கூறிவிட்டு அட்டன்டன்ஸ் எடுக்க ஆரம்பித்தார் ஆசிரியர். பின் நறுமுகை விடைத்தாளை எடுத்துக்கொண்டு பிரின்சிபல் அறைக்குச் சென்று கொடுத்துவிட்டுத் தனது வகுப்பறைக்குச் சென்றாள். முதல் நாள் வகுப்பறை மாணவர்கள் அனைவரும் அவளுக்கு புதியதாக இருக்க முதலில் சற்று தயங்கியவள் ஆசிரியர் உள்ளே அழைத்து அவளை அறிமுகப்படுத்தி விட்டுப் போய் அமரச் சொல்ல. அவளும் தன்னை பற்றிக் கூறிவிட்டு எங்கு அமர்வது என்று பார்த்தபடி கடைசி இருக்கையில் போய் அமர்ந்தாள் பின் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்க இன்னொரு பெண்ணின் குரல் கேட்டது.
"மே ஐ கம் இன் சார்?"
"எஸ் கமிங். யாருமா நீ?" என ஆசிரியர் கேட்க அந்த புதியவளோ,
"சார் ஐ அம் பாரதி, நியூ அட்மிஷன் பிரின்ஸ்பல் சார் தான் லெவன்த் ஏ செக்ஷன் போகச் சொன்னார்." என்று தன்னை பற்றி அறிமுகம் செய்துக் கொண்டாள்.
ஆசிரியரோ "ஓ! இன்னிக்கு இரண்டு நியூ அட்மிஷன்" எனச் சொல்லிவிட்டு பாரதியை வகுப்பறைக்குள் போகச் சொன்னார். பாரதியோ, தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு நேராக நறுமுகை அமர்ந்திருந்த மர மேசையில், சென்று அவள் அருகில் அமர்ந்தாள்.
நறுமுகை அருகில் அமர்ந்த பாரதி, நறுமுகையைப் பார்த்து "ஹாய் ஐம் பாரதி" எனத் தன்னை பற்றி அறிமுகம் செய்துக் கொள்ள, நறுமுகையும் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துக் கொண்டாள். இருவரும் முதல் நாளன்றே நல்ல தோழிகள் ஆனார்கள். பின் அன்றைய நாள் இனிதே முடிய இரு தோழிகளும் ஏதோ பலநாள் பழகியது போல் பேசி சிரித்து மகிழ்ந்து தன் இல்லம் நோக்கிப் புறப்பட்டனர்.
பாரிவேந்தன் என்ன தான் அவன் வகுப்பறையிலிருந்தாலும் அவன் மனம் முழுவதும் நறுமுகை இருக்கும் வகுப்பறையைச் சுற்றியிருந்தது.
அந்த நாள் முழுவதும்.
பின் தன் இல்லம் வந்த பாரி புத்தகப்பையைத் தூரம் வீசி விட்டு முகம் கைகால்களைக் கழுவிக்கொண்டு சீருடையை மாற்றிக் கொண்டு தினமும் செல்லும் பகுதி நேர வேலை செய்யும் இடத்திற்குச் சென்றான். அவன் தந்தை இறந்ததிலிருந்து அவன் அன்னை வேலை செய்து குடும்பத்தை நடத்தினாலும் ஏனோ அவனுடைய செலவிற்கு அவன் படிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் கிடைக்கும் வேலைகள் அனைத்தையும் செய்வான். மற்ற பிள்ளைகளைப் போல் கௌரவம் பார்க்க மாட்டான்.
இந்த வேலை செய்தால் மற்றவர்கள் தன்னை அசிங்கமாக நினைப்பார்கள் கிண்டல் கேலி செய்வார்கள் என்றெல்லாம் யோசிக்காமல் தனக்குக் கிடைத்த வேலையை அழகாக நேர்த்தியாகச் செய்து முடிப்பான். அதனாலேயே பாரிவேந்தன் என்றாலே தனி மதிப்பு மரியாதை உண்டு. செண்பகத்திற்கு தன்னுடைய மகன் இவ்வளவு சிறிய வயதில் ஊரார்கள் அவனைப் புகழ்ந்து பேசும் அளவிற்கு உயர்ந்து உள்ளான் என்பதில் மனநிறைவோடு இருந்தார் தன்னுடைய வளர்ப்பு சரியாக உள்ளது என்று.
பின் பாரிவேந்தன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வர அவன் தங்கை முல்லையோ அவனைப் போட்டுக்கொடுக்க வாசலில் காத்துக்கொண்டு இருந்தாள். அவன் வருவதைப் பார்த்த அவள் "அம்மா! அம்மா! வந்துட்டான். அம்மா வந்து என்னனு கேளுமா காலையில் ஏன் என்னை விட்டுப் போனான்னு கேளும்மா." என தன் தமையன் வீட்டிற்கு வந்த விஷயத்தை தன் தாயிடம் கூறினாள்.
பாட்டியோ "ஏன் டி அவன் வந்ததும் போட்டு குடுக்குறியா பாவம் புள்ள காலையில் பள்ளிக்கூடத்துக்குப் போய் படிச்சுட்டு வந்து அந்த களைப்போடு வேலையைச் செஞ்சிட்டு வரான். அவனை உங்க ஆத்தா கிட்ட மாட்டி விடுறியா? அவன்கிட்ட பல்லை இளிச்சிட்டு அண்ணா இது வாங்கிட்டு வா. அண்ணா அத வாங்கிட்டு வா அண்ணானு சொல்லுவல்ல அப்ப இருக்குடி உனக்கு. என் பேராண்டி கிட்டச் சொல்லி உனக்கு ஏதும் வாங்கிட்டு வர வேண்டாமென்று சொல்றேன் பாரு." எனப் பாட்டி கூற.
முல்லையோ "ஏய் கிழவி உன் வேலை என்னவோ அதை பாரு. அண்ணன் தங்கச்சிக்குள்ள நடுவுல வராத. அப்புறம் அந்த வெத்தலையும் பாக்கையும் வைச்சு நசுக்குவல்ல இடுக்கி அதை ஒளிச்சி வைத்து விடுவேன். அப்புறம் வெத்தலை பாக்கு போடவே முடியாது உன்னால் ஜாக்கிரதையாக இருந்துக்கோ" என மிரட்டினாள்.
"அடி சிறுக்கி மவளே யாரைப் பார்த்து கிழவி சொன்ன நாக்கை இழுத்து வச்சு அறுத்துப் புடுவேன் அறுத்து. என் வெத்தலைப் பெட்டி மேல கைய வெச்சு பாருடி அந்த கையை உடைச்சி நாய்க்கு எலும்புத் துண்டாக ஆக்கி படையல் போடுவேன்" எனப் பாட்டியும் அவளுடன் ஒத்தைக்கு ஒத்தை பேச செண்பகமும் அடுப்பறையிலிருந்து வெளியே வந்து "அட! அட! பாட்டியும் பேத்தியும் கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இருங்க அவனே இப்பதான் வேலை முடிச்சுட்டு வந்து இருக்கான். அவன் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கட்டும். எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம். காலையில் ஸ்கூலுக்கு வேற போகணும்ல. இந்த வருஷத்தோடு கடைசி வருஷம். வேலைக்கு போகாதடா பள்ளிக்கூடத்துக்கு மட்டும் போடான்னு சொன்னா எங்கேயாவது கேட்கிறானா. நம்பத் தான் இவன் கிட்டக் காட்டு கத்து, கத்த வேண்டியதா இருக்கு. நம்ம சொல்றது எங்க காதில் வாங்குறான். எங்கேயாவது நல்லபடியா படிச்சு நல்ல மதிப்பெண் எடுப்போம் இல்ல. பள்ளி விட்டு வந்த உடனே கிளம்பி வேலைக்கு போயிடுறான். அப்புறம் எப்ப தான் வீட்டுப் பாடம் படிக்கிறது. ஏதாவது சொன்னா மூக்கு மேல கோவம் மட்டும் வருது துரைக்கு." என ஆதங்கப்பட்டவர் பாரி அமைதியாகவே இருக்க "ஏன்டா பாரி காலையிலே ஏன்டா இந்த புள்ளையா அப்படியே விட்டுட்டுப் போன பாவம்ல்ல புள்ள அதையும் சேர்த்து ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனா என்னடா. எவ்வளவு தூரம் தான் புத்தகப்பையை எடுத்துக்கிட்டு நடப்பா. உன் கூட்டாளி பையனை கூட்டிட்டு போகிறதுக்கு, உன் தங்கச்சியை கூட்டிட்டு போனா என்ன ஆக போகுது உனக்கு. அவளுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கும்ல." என தாய் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் நினைப்பு முழுவதும் இன்று தன்னை பொறுக்கி என்று திட்டிய நறுமுகையைச் சுற்றியே இருந்தது.
அங்கே நறுமுகையின் தாய் வேதவல்லி நறுமுகையிடம் "இன்று முதல்நாள் பள்ளிக்கூடம் எப்படிப் போனது" என்று விசாரித்துக் கொண்டிருக்க அவளோ "நல்லதா போச்சுமா இன்னைக்கு என் கூட சேர்ந்து இன்னொரு பொண்ணுக்கும் அட்மிஷன் நானும் அந்த பொண்ணும் இப்ப ஃபிரண்ட்ஸ் ஆகிவிட்டோமே." எனச் சொல்லிக் குதித்துக் கொண்டே சோபாவில் தொப்பென்று உட்கார்ந்தாள்.
"சேர்ந்த அன்னைக்கே நீ ஆரம்பிச்சுட்டியா பழைய ஸ்கூல்ல தான் ஃபிரண்ட்ஸ், ஃபிரண்ட்ஸ்னு இருந்த இங்கேயும் இப்படியா சேர்ந்த உடனே கூட்டாளியை சேர்த்துக்கிட்டியா?" என தாய் கண்டிக்க.
"அட போம்மா பிரண்ட்ஸ் இல்லாத லைஃப் சுத்த போர்" என்று அவள் சொல்லி விட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.
"என்னதான் சொல்றது இவளை. சொல்ற பேச்சைக் கேட்கிறாளா" என தாய் தலையிலடித்துக் கொண்டு இரவு உணவைத் தயாரிக்கச் சென்றுவிட்டார்.
நறுமுகையையே நினைத்துக்கொண்டு இருந்த பாரிவேந்தன் அங்கே உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க. இங்கே இவளோ இன்று ஒருத்தனைப் பொறுக்கி என்று திட்டியதை அவ்வளவு ஏன் இன்று பாரிவேந்தன் என்ற ஒருத்தனை சந்தித்ததையே மறந்து விட்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
நறுமுகை அப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஒருமாதம் கடந்துவிட்டதே தவிர... பாரி ஒரு நாளும் அவளைக் காணாமல் கடந்து போனது இல்லை. இந்த ஒரு மாதத்தில் பாரியின் மேல் இருந்த தப்பான அபிப்பிராயம் பற்றி சுத்தமாக மறந்தே போனாள். அட பாரிவேந்தன் ஒருத்தன் இருப்பதையே மறந்து விட்டாள் நறுமுகை.
பள்ளிக்கூடம் வந்தால் முழுநேரமும் பாரதியுடனே நேரத்தைக் கழிப்பது, விளையாடுவது அரட்டை அடிப்பது என இருவரின் நட்பு காலையில் ஆரம்பித்து மாலை பள்ளிக்கூடம் முடியும் வரை தொடர்ந்தது. இருவரும் சேர்ந்து நன்றாகப் படிக்க ஆரம்பித்தனர்.
மற்றவர்கள் இவர்கள் இருவரின் நட்பைப் பார்த்து பொறாமை கொண்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஆனால் இவர்கள் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் எனப் பல மாணவர்கள் மனதில் ஓடிக் கொண்டு தான் இருந்தது.
ஒரு மாதம் தன் தாயுடன் கையை பிடித்தபடி கதையை அளந்துக் கொண்டு பள்ளிக்கூடம் வந்துக் கொண்டிருந்த நறுமுகைக்கு அவள் தாய் மிதிவண்டி வாங்கி கொடுத்ததை பார்த்து
"அம்மா என்னம்மா இது யார் கேட்டா இப்போ உங்களைச் சைக்கிள் வேணும்னு."
"ஏன்டி உனக்கெல்லாம் சைக்கிள் வாங்கி கொடுக்கிறதே பெரிய விசயம் சைக்கிள் வாங்கிக் கொடுத்ததை நினைச்சி சந்தோஷப்படாம இப்படிக் கோபப்பட்டுக் கேட்கிற" என நறுமுகையின் பாட்டி சரஸ்வதியும், சித்தியும் வீட்டின் வாசலிற்குள் நுழைந்துக் கொண்டு கேட்க.
நறுமுகையோ "இதோ வந்துடுச்சிங்க, குரங்கும் எருமையும்" என்று வாய்க்குள் முனங்கினாள்.
"வாம்மா, வாடி மேகலா எப்படி இருக்கீங்க இரண்டு பேரும்... அம்மா என் தம்பி சந்தோஷும், என் கடைக்குட்டி தங்கச்சி தீபாவும் எப்படி இருக்கிறார்கள். மேகலா ரேவதி எப்படி இருக்கா?" என ஆசையோடு வேதவல்லி கேட்க.
"ம்ம் நல்லா தான் இருக்காங்க." என்று சலித்துக் கொண்டு சொன்னார் மேகலா.
வேதவல்லி வந்தவங்களுக்கு தண்ணீர் எடுத்துட்டு வந்து கொடுத்துவிட்டு நறுமுகையைப் பள்ளிக்குத் தயார்ப் படுத்தினார்.
"என்ன நறுமுகை எப்படி இருக்க. இன்னும் சேட்டையெல்லாம் செய்துட்டு தான் இருக்கியா. புது பள்ளிக்கூடத்திலாவது உன் வாலை சுத்திக்கிட்டு இருக்கியா?" என மேகலா கேட்க.
"நான் ஒன்னும் குரங்கு இல்லை சேட்டை பண்ண... அப்புறம் வால் இருக்க நான் எருமையும் இல்லை" என்று அவர்களைச் சாடையாகச் சொல்ல.
மேகலாவோ மனதில் 'குட்டி பிசாசு எப்படி பேசுது பாரு. இதை என் தம்பிக்குக் கட்டிக் கொடுத்தா வாழ்க்கை முழுக்க... இதுக்கு பணிவிடை நாங்க செய்யுற மாதிரி ஆகிடும். என்ன நடந்தாலும் சந்தோஷுக்கு இந்த பிசாசைக் கட்டியே கொடுக்கக் கூடாது.' என்று மனதில் உறுதியோடு இருந்தார்.
நறுமுகையோ "பாட்டி தீபா எப்படி இருக்கா. நல்லா இருக்காளா..? இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் வேற நல்லா படிக்கிறாளா!" என்று ரேவதியை ஒருமையில் அழைத்துக் கேட்பதைப் பார்த்த சரஸ்வதி.
"அடியே அவள் உன்னுடைய சித்தி, கொஞ்சமாவது மரியாதையோடு பேசு. எங்க முன்னாடி அவளை அவ, இவனு சொல்லுற அப்போ வெளியே எப்படிக் கூப்பிட்டுப் பேசுவ" என அவளை அதட்ட,
"என்னுடைய சித்தியா இருந்தாலும் எனக்கும் அவளுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். அப்படி இருக்கும் போது என்ன மரியாதை கொடுத்துப் பேசணும்! வெளியெல்லாம் பார்க்கும் போது நல்லா மரியாதையோடு தான் பேசுறேன்." எனக் கூறிவிட்டு தன் உதட்டைச் சுழித்து ஒழுங்கு காட்டி விட்டு தன் தாயிடம் திரும்பி
"அப்போ இனிமே நீங்க என் கூட ஸ்கூலுக்கு வர மாட்டீங்களா அம்மா?" என்று கவலையுடன் கேட்டாள் நறுமுகை.
"ஆமாண்டி நீ இன்னும் சின்னக் குழந்தை பாரு, உன் கூட கையை பிடிச்சுக்கிட்டு ஸ்கூல் வர்றத்துக்கு வேற வேலை வெட்டி இல்லையா. ஒழுங்கா இன்னிலிருந்து சைக்கிள்ல போற வழியை பாரு." என அவளை அதட்டி அனுப்பி வைத்தார். அவளோ முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு சைக்கிளை மிதித்தபடி செல்வதைப் பார்த்தவருக்கு "உலகத்துல அங்கங்கே புது சைக்கிள் வாங்கி கொடுத்தா பசங்க அம்புட்டு சந்தோசப்படும். இவ என்னடான்னா அழுதுக்கிட்டு போறா.இன்னும் சின்ன குழந்தையாவே இருக்கா" என்று வேதவல்லி வெளியே புலம்பினார்.
ஆனாலும் உள்ளுக்குள் வருத்தமடையத் தான் செய்தார். இத்தனை நாட்கள் கையை பிடித்துக்கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டு சேட்டைகள் செய்துக் கொண்டே இருப்பவளை இன்று தனியாக அனுப்பி வைத்தது அவருக்குச் சற்று வலி ஏற்படத் தான் செய்தது. இன்னும் எத்தனை நாட்கள் கூட இருக்க முடியும், என்ற எண்ணம் உதித்து இந்த முடிவை எடுத்தார் நறுமுகையின் தாய்.
"வேதவல்லி உன் பொண்ணுக்கு நீ நிறைய இடம் கொடுக்கிற. புருஷன் இல்லாமல் பொம்பளை புள்ளைய தனியா வைச்சிட்டு நீ வளர்க்கிறது எல்லாம் சரி தான். ஆனால் அடக்கம் ஒடுக்கம் என்னனு சொல்லிக் கொடு. பெரியவங்க கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியா மாட்டிக்கிது அவளுக்கு." என்று சரஸ்வதி கூறிக் கொண்டே போக.
வேதவல்லியோ, "அம்மா போதும் நிறுத்துறீயா, என் பொண்ணை எப்படி வளர்க்கணும்னு எனக்குத் தெரியும்... சின்ன பிள்ளை விளையாட்டா பேசுறதைப் பெரிசா எடுத்துக்குற. என் பொண்ணு அடக்க ஒடுக்கமா தான் இருக்கா. நீங்க என்ன விசயமா வந்தீங்க அதை சொல்லிவிட்டு கிளம்புங்க... எனக்கு வேலைக்கு நேரமாகுது." என்று கூறிவிட்டு தலையைச் சீவ ஆரம்பித்தார். எந்த தாயும் தன்னுடைய வளர்ப்பைப் பற்றிப் பேசும் பொழுது எந்தத் தாயும் கோபப்படத் தான் செய்வாள். அதே தான் வேதவல்லியும் செய்தார்.
அதுவும் கணவன் இல்லாமல் ஒரு பெண் பிள்ளையைத் தாய் தனியாக இருந்து வளர்ப்பது என்பது மிகவும் கடினமான வாழ்க்கை எத்தனை இன்னல்களைத் தாண்டி, தங்களை எதிர்த்து வரும் தடைகளையும் தகர்த்து நறுமுகையை இவ்வளவு தூரம் நல்ல விதமாக வளர்த்து இருக்கிறார் வேதவல்லி. அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் ஏதோ விளையாட்டாகப் பேசியதை எடுத்துக்கொண்டு அவர் தாய் சரஸ்வதி கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் பெற்ற தாயே இப்படிப் பேசுகிறாரே என்று.
"அது சரிமா உன் பிள்ளைய நீயே தலையில் தூக்கி வச்சுக்கோ நாங்க வந்த விஷயத்தை சொல்றேன். அது வந்த என்னன்னா நம்ம கொள்ளுப்பாட்டி இடம் இருக்குல்ல அதை விக்கவேண்டும் அதற்கு உன்னுடைய கையெழுத்து வேண்ணும். அது வாங்கத் தான் வந்தோம்" எனச் சரஸ்வதி சொல்ல மேகலா இடத்தோட பத்திரத்தை எடுத்து நீட்டினார்.
இதைக் கேட்ட வேதவல்லி அதிர்ச்சியில் "என்னது விற்க போறீங்களா? அது காலம்! காலமா இருக்கிற இடம் அது ஒன்று மட்டும் தான். எங்க எல்லாருக்கும் இருக்கிற ஒரே சொத்து அதை விற்று என்ன செய்யப் போறீங்க" என்று வேதவல்லி கேட்க.
சரஸ்வதி வாயைத் திறக்கும் முன் மேகலா நடுவில் புகுந்து "அது ஒன்னும் இல்ல நம்ம சந்தோஷுக்கு ஒரு கைத்தொழில் வைத்துத் தரலாம்னு யோசித்து இந்த முடிவை எடுத்துருக்கோம். எத்தனை நாள் தான் அவனும் ஊதாரியாக திரிஞ்சிட்டு இருப்பான். அவனுக்கு ஒரு பொறுப்பு வந்துட்டா அவன் வாழ்க்கையே அவன் பார்த்துப்பான்ல. அதான் இந்த முடிவு" என மேகலா கூற சரஸ்வதி தன் மகள் மேகலாவை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு அவரும் ஆமாம் என்று கூறினார்.
இப்ப ஏன் மேகலா பொய் கூறுகிறார் என்று சரஸ்வதி யோசித்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு இருந்தார். பெற்ற மூத்த மகளிடம் பொய் கூறுவதை நினைத்து ஒரு துளி கூட வருந்தாமல் இருந்தார்.
வேதவல்லியும் தம்பியின் எதிர்காலத்தை எண்ணி சிறிது நேரம் யோசித்தவர் தன் சொந்தம் தானே என நினைத்தவர் அவர் உயிர் கலந்த மகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் கையெழுத்துப் போட்டார்.
"அப்போ சரி நாங்க வந்த வேலை முடிஞ்சிது புறப்படுறோம்." என்று சொல்லிக் கொண்டே மேகலா எழுந்துக் கொள்ள...
சரஸ்வதியோ, "ஒரு நிமிசம் இருடி, வேதா கிட்ட ஒன்னு கேட்கணும்." என்று சொன்னவர் வேதவல்லியிடம் "ஆமா உன் பொண்ணு நறுமுகையை என் பையன் அதான் உன் தம்பிக்கு தானே கட்டிவைக்க போற." என்று தன் மனதின் ஆசையைக் கேட்க.
மேகலாவோ 'ஏய்,ஆத்தா இப்போ எதுக்கு அந்தக்குட்டி பிசாசு உன் மருமகளா வரணும்னு
நினைக்கிற?' என மனதில் தன் தாயைத் திட்டிக் கொண்டு இருந்தார்.
வேதவல்லியோ "இப்போ எதுக்கு அம்மா இதைப் பத்தி பேசுற... அவளே இப்போ தான் பதினொன்றாம் வகுப்பு படிக்க ஆரம்பிச்சி இருக்கா. சின்ன பொண்ணும்மா இன்னும் ஒரு ஐந்து வருஷம் போகட்டும். அப்புறம் இதைப் பத்தி முடிவு பண்ணலாம். தம்பியும் அதுக்குள்ள நல்ல நிலைமைக்கு வந்துடுவான்." என்று கூறியவரைப் பார்த்து,
"ம்கூம் ஐந்து வருஷம் வரை நீ உயிரோடு இருப்பியா? உன் சாவு எப்போனு உனக்கே நல்ல தெரியும்... இன்னும் ஆறுமாசமோ இல்லை ஒரு வருஷமோ... அதுக்குள்ள உன் பொண்ணோட கல்யாணத்தைக் கண் குளிர பார்த்துட்டு போய் சேரலாம்ல. அந்த காலத்தில வயசுக்கு வந்ததுமே கல்யாணத்தை முடிச்சி பொண்ணுங்களை புருஷன் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க... இந்த காலத்தில அப்படியா நடக்குது... கோடி கோடியா பணத்தைக் கொட்டி படிக்க வைக்கிறீங்க. படிச்சி முடிச்சாலும் கல்யாணம் முடிஞ்சி பொண்ண புருஷன் வீட்டுக்கு தானே அனுப்ப போறீங்க... அதுக்கு எதுக்கு இம்புட்டு பணம் கட்டி படிக்க வைக்கணும்" என சரஸ்வதி பேசியதைக் கேட்t8 வேதனை வந்தது வேதவல்லிக்கு.
பெற்ற தாய் நீயே இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்ப என்று கேட்டதை நினைத்தவர் கண்ணீரோடு, "ஏன்ம்மா உனக்கு என் மேல பாசமே இல்லையா. நான் எப்போ சாவேனு காத்துக்கிடக்கியா?" எனக் கேட்க.
"அடியே நான் அந்த அர்த்தத்தில சொல்லல டி... நீ வைச்சு இருக்கிறது ஒரே பொண்ணு. நீ! உசுரோட இருக்கிறப்பவே அவளுக்கு ஒரு நல்லதை பண்ணிட்டா. நீயும் சந்தோஷமா போய் சேருவதான் சொன்னேன்." என்று மீண்டும் வார்த்தையால் அவரின் இதயத்தை வார்த்தையால் குத்தினார் சரஸ்வதி.
"எனக்கு எதாவது ஒன்னு ஆச்சுனா ஏன், என் பொண்ணை அதான் உன் பேத்தியை நீ நல்லபடியா பார்த்துக்க மாட்டியா?" என வேதவல்லிக் கேட்க.
சரஸ்வதியோ, "என்ன தான் இருந்தாலும் பெத்தவள் முன்ன நின்னு செய்யுற மாதிரி வருமாடி" என்று வார்த்தை ஜாலத்தில் பேசுபவரைப் பார்த்து வெற்று புன்னகை உதிர்த்து விட்டு தனக்கு வேலைக்கு நேரம் ஆகுது என்று "நீங்கள் கிளம்புறீங்களா இல்லை இங்கேயே இருக்கீங்களா." என்று கேட்டார்.
"நாங்க இங்கே இருந்து என்ன பண்றது நாங்க கிளம்புறோம்" என மேகலா சரஸ்வதியின் கரத்தை பிடித்துக் கொண்டு கிளம்பினார். வேதவல்லியோ மனதில் ரணத்தோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு வீதியில் நடக்க ஆரம்பித்தவர் மனதில் தன் நிலைமையை நினைத்து வருந்தினார். தன்னிலை யாருக்கும் வரக் கூடாது என்று.
"ஏன்டி மேகலா எதுக்கு வேதா கிட்டப் பொய் சொன்ன?"
"பின்ன என்னம்மா, அந்த ஆண்டவன் உனக்கு கேன்சர் நோய் கொடுத்து விட்டான் அதனால் நீ இன்னும் கொஞ்சம் காலம் தான் உயிரோட இருக்க போறனு சொல்லி கையெழுத்து வாங்க சொல்றியா அம்மா. இல்ல இப்படிச் சொன்னால் தான் அவள் கையெழுத்துப் போடுவாளா? அவ உயிரோடு இருக்கும் போதே கையெழுத்து வாங்கி அந்த சொத்தை நம்பப் பேரில் மொத்தமா மாத்திக்கலாம் இல்லனா பின்னால் அந்தத் திமிர் பிடிச்ச நறுமுகை இருக்காளே! அவள் சொத்து கேட்டு பிரச்சனை பண்ணுவாள். அதுக்கு தான் இப்படி தம்பி பெயர் சொல்லி கையெழுத்து வாங்கினேன்." எனக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் மேகலா சொல்ல. இதைக் கேட்டு ஒரு தாயாய் சரஸ்வதி துடிக்கவில்லை என்றாலும் ஏன் டி இப்படி எல்லாம் பேசுகிற என்று ஒரு வார்த்தை கூட மேகலாவை பார்த்துக் கேட்கவில்லை.
"அதுவும் சரிதான் டி மேகலா, நீ சொன்னது தான் சரி. நல்ல வேளை நான் உளறி இருப்பேன்" என்று சொத்தின் மேல் ஆசைக் கொண்டு சரஸ்வதி கூறினார் . இருவரும் சொத்து தங்கள் பெயரில் மாறப்போகிறது என்று சந்தோஷத்தோடு தங்கள் வீட்டிற்குச் சென்றனர்.
"என்னடா மச்சி இன்னிக்கு பாப்பா அம்மா கூட கைய பிடிச்சுக்கிட்டு வராமல் சைக்கிள்ல வருது" என்று தெரு முக்கில் மதில் சுவர் மீது அமர்ந்து சைக்கிளை மிதித்துக் கொண்டு வரும் நறுமுகையைப் பார்த்து இரண்டு பையன்கள் கிண்டல் செய்தனர்.
அவர்கள் பேசியதைக் காதில் வாங்கிய நறுமுகை கோபத்தோடு தன் சைக்கிளை நிறுத்திவிட்டு "டேய் யாரை பார்த்துடா பாப்பானு சொன்னீங்க. பல்லை உடைச்சிடுவேன்" என்று வெடுக்கெனப் பேச மதில் சுவரிலிருந்து கீழே குதித்து அவள் அருகில் வந்து,
"இதோ பாருடா பாப்பா ரொம்ப துள்ளுது" என ஒருத்தன் கூற இன்னொருத்தனோ அவளின் சைக்கிள் சாவியைச் சைக்கிளிலிருந்து எடுத்தான்.
இதை எதிர்பாராத நறுமுகை "இப்ப எதுக்கு சாவியை எடுக்குறீங்க சாவியைக் கொடுங்க நான் ஸ்கூலுக்கு போகணும் நேரமாகுது" என கூற சாவியைப் பிடுங்கியவன்.
"இங்க பாருடா பாப்பா அப்படியே பம்முது" எனச் சொல்லி "ஆமா இன்னைக்கு உங்க அம்மா கூட வராம, நீ தனியா வந்திருக்க. அவ்வளவு தைரியம் வந்துருச்சா உனக்கு?" எனக் கேட்க.
"நான் எங்க அம்மா கூட வருவேன். இல்லை சைக்கிளில் தனியே வருவேன். அதைப் பத்தி நீங்க ஏன் கேட்குறீங்க முதல்ல சாவியை குடுங்க இல்லனா பிரின்ஸிபல் சார் கிட்டச் சொல்லுவேன்." எனச் சொல்ல,
அவர்களோ "ஐயோ!ஐய்யோ! நாங்க பயந்துட்டோம்" பிரின்ஸ்பல் சார் பெயர் சொன்னதும் பயப்படுவது போல் பாவனை செய்ய நறுமுகை ஒன்றும் புரியாமல் முழித்தாள்.
"என்ன பார்க்குற அவரு உனக்குத் தான் பிரின்ஸ்பல் சார், எங்களுக்கு இல்லை. போய் சொல்லு எங்களுக்கு என்ன பயமா என்ன! யாருகிட்ட வேணாலும் போய் சொல்லு." என அவள் தலையில் தட்டி அனுப்பி வைத்தனர்.
அவளோ "அண்ணா ப்ளீஸ் அண்ணா! சாவியை கொடுத்துடுங்க. ஸ்கூலுக்கு டைம் ஆகுது" என்று மூக்கை உறிஞ்சியபடி கேட்க.
"என்னது அண்ணாவா! இங்க பாரு அண்ணா கிண்ணானு சொன்ன வாயை உடைச்சிடுவேன்." என்று சொல்லிக்கொண்டு கையை ஓங்கிக் கொண்டு போக, அவளோ அழுதே விட்டாள்.
அவள் அழுவதைப் பார்த்த இருவரும் "சரி சரி அழுவாத, நீ என்ன பண்றன்னா சாயங்காலம் ஸ்கூல் விட்டு வரும் பொழுது இவனை லவ் பண்றேன்னு சொல்ற. அப்போதுதான் உன்னோட சைக்கிள் சாவியைத் தருவோம்".
"நான் ஏன் இந்த அண்ணாவை லவ் பண்றேன்னு சொல்லணும்" என்று நறுமுகை சிறுபிள்ளை போல் கேட்க.
"அண்ணன் சொல்லாதேன்னு சொன்னா. திரும்பத் திரும்ப அண்ணான்னு சொல்ற மூஞ்ச பேத்துடுவேன் பார்த்துக்கோ. என்ன திமிரா! இந்த திமிர் எல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சிக்கோ புரியுதா. நான் உன்னை லவ் பண்றேன். நீயும் என்னை லவ் பண்ற அவ்வளவுதான். போ கிளம்பி சாயங்காலம் வந்து லவ் பண்றேன்னு சொல்லிட்டு சாவியை வாங்கிட்டு போ" என்று சாவி பிடுங்கியவன் கூறிவிட்டு தன் அருகிலிருந்த நண்பனை அழைத்துக் கொண்டுச் சென்றான்.
"என்னடா மச்சி டக்குனு லவ் பண்றேன்னு சொல்லிட்டு"
"ஆமா மச்சி இந்த பொண்ண பார்த்த முதல் நாளே லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். டெய்லி அவங்க அம்மா கூட போயிட்டு வருமா அதான் சொல்ல வாய்ப்பே கிடைக்கலை. இன்னிக்கு தானே வந்து சிக்கி விட்டாள். அதன் லவ்வா சொல்லிட்டேன்." என இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டுச் செல்வதை பார்த்தபடி
நறுமுகைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுதபடி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பள்ளிக்கூடம் வந்தவள் சைக்கிளை நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தன் வகுப்பறையை நோக்கிச் சென்றாள். இவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த பாரதி "என்னடி அழுதுக்கிட்டே வர?" என்று சற்று பதட்டத்துடன் கேட்க. நறுமுகையோ சற்று நேரத்திற்கு முன் நடந்தது அனைத்தும் சொன்னாள்.
"பிளடி ராஸ்கல், என்ன தைரியம் இருந்தால் அவனுங்க அப்படி பண்ணுவானுங்க. வா பிரின்ஸ்பல் சார் கிட்ட இப்பயே இத பத்தி சொல்லலாம்" என்று அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். ஆனால் இவள் போதாத நேரம் இன்று பிரின்ஸ்பல் வேறு ஒரு பள்ளிக்கூட மீட்டிங்கு போய் இருப்பதை பியூன் சொல்ல.
"இப்போ என்னடி பண்ணலாம் பாரதி?" என்று நறுமுகை பயத்துடன் கேட்க.
"தைரியமா இருடி ஏன் பயப்படுற, எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். சாயங்காலம் நம்ம இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போகலாம் பயப்படாத சரியா." என்று அவளுக்குத் தைரியம் கூறினாள் பாரதி.
வழக்கமாக நான்கு மணிக்கு பள்ளிக்கூட பெல் அடிக்க. நறுமுகை பயத்துடன் பாரதியைப் பார்க்க அவளோ கண்சாடையில் பயப்படாத... என்று சமாதானப் படுத்தியவள் வகுப்பு ஆசிரியரிடம் சென்று நறுமுகை கூறியதை அப்படியே சொல்ல. ஆசிரியரோ "அதெல்லாம் சும்மா மிரட்டி இருப்பாங்க... பயப்படாம போங்க... நான் நம்ம பியூனை துணைக்கு அனுப்புறேன்." என்று தைரியம் சொல்லிவிட்டு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கச் சென்றுவிட்டார்.
பாரதி, நறுமுகையின் மிதிவண்டியை தள்ளியபடி வர நறுமுகையோ பயத்தில் கைகளைப் பிசைந்துக் கொண்டு சுற்றிமுற்றி பார்த்தபடி வந்தாள். பியூனோ இவர்கள் பின்னால் பத்து அடி தள்ளி நடந்து வர "என்னடி நீ சொன்ன பசங்களைக் காணும்?"
"ஏன்டி இதுக்கு இன்னொரு சாவி இருக்கும் தானே வீட்டுக்குப் போனதும் அதை எடுத்துப் பூட்டி வைச்சிடு." என்று பாரதி யோசனை சொல்ல.
பியூனோ,"அம்மாடிங்களா இதுக்கு அப்புறம் நீங்க வீட்டுக்கு போயிடுவீங்களா?" எனக் கேட்க.
பாரதியோ "ம்ம் போய்விடுவோம் அங்கிள் ரொம்ப நன்றி அங்கிள்." எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்தவள் "சரிடி நான் இந்த பக்கம் போகணும்... நீ அந்த பக்கம் போகணும்... அப்போ நான் கிளம்பவா டி?"
"ஏய் ப்ளீஸ் டி வீடு வரைக்கும் வாடி ரொம்ப பயமா இருக்கு." எனப் பதற்றத்தில் அவள் கரம் பற்றி இழுக்க.
"அடியே அதோ தெரு முனையில் உன் வீடு நேரா போனா வந்திடும் இதுக்கு பயமா... ஒழுங்கா போயிடு... நான் தான் இரண்டு தெரு தள்ளி போகணும். அவனுங்க இதுக்கு மேல வர மாட்டானுங்க." என்று நறுமுகையைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள்.
வீட்டுக்கு வந்த நறுமுகையை கவனித்தபடி அனைத்து வேலைகளையும் செய்து முடித்த வேதவல்லி "அடியே கழுதை இப்போ சாப்பிட வரியா இல்லையா..." என ஐந்தாவது முறையாக அழைத்தும் நறுமுகை அறையை விட்டு வராமல் இருக்க கையில் ஜல்லிக்கரண்டியை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றார்.
"அடியே, எத்தனை வாட்டி கூப்பிடுறது, சாப்பிட வாடினு. அம்மணி அப்படி என்ன தான் பண்றீங்க ரொம்ப நேரமா?" என்று கேட்டபடி கதவைத் திறக்க நறுமுகையோ அங்கு நல்ல உறக்கத்திலிருந்தாள்.
"என்னடா இது ஆச்சரியமா இருக்கு என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னிக்கு அம்மணி இவ்வளவு சீக்கிரம் தூங்கிட்டாங்க. அதுவும் சாப்பிடாமல் தூங்கிட்டா. இது உண்மையா பொய்யா நடிக்கிறாளா இல்லை நிஜமா தூங்கிட்டாளா?" என்று சந்தேகத்துடன் தன் மகள் அருகில் போக, அவளோ நல்ல உறக்கத்திலிருந்தாள்.
"சரி அவளை தொல்லை செய்ய வேணாம் நல்லா தூங்கட்டும்" என்று அறையை விட்டுச் சென்றார்.
"டேய் பாரி என்னடா பண்ணிட்டு வந்து இருக்க. கொஞ்சம் ஆச்சு உனக்கு அறிவு இருக்கா. என்ன காரியம் பண்ணி இருக்கத் தெரியுமா." என இதயக்கனி கோபத்துடன் அவனிடம் கேட்டுக்கொண்டிருக்க பாரிவேந்தனோ,
தன் கையை உதறியபடி "அவனைக் கொல்லாமல் விட்டேன்னு சந்தோசப்படு" என்று கூறினான்.
"டேய் லூசு தனமா பேசாதடா. நம்ம இப்போ பிளஸ் டூ படிக்கிறோம். இந்த வருஷம் நம்மளுக்கு பப்ளிக் எக்ஸாம். அது நல்லபடியா முடிச்சு நல்ல பெயரை எடுத்து அதோடு போகணும். நீ இப்படி பண்ணிட்டு வந்து இருக்க இது நாளைக்கு நம்ம ஸ்கூல் பிரின்ஸிபல் காதுக்கு போச்சுனா உன்மேல பிளாக் மார்க் விழுந்திடும். அது ஏன் உனக்கு புரியல ரோட்ல எவனோ ஒருத்தன் நறுமுகையை கலாய்ச்சான்னா நீ போய் அவனை அடிப்பியா. அப்படி என்ன பண்ணிட்டா அவ உனக்கு... அது கூட விடு டா... அவளோட ஞாபகத்துல நீயோ! இல்ல உன் பெயரோ நினைப்புல இருக்கும்னு நினைக்கிறீயா. உன்னையெல்லாம் எப்போதே மறந்து போய் இருப்பா. ஆனால் நீ இந்த ஒரு மாசமா அவள் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்க. ஏதோ பாடிகார்ட் மாதிரி. உனக்கு அவளைப் பத்தி தெரிஞ்ச அளவுக்குக் கூட அவளுக்கு உன்னைப் பத்தி தெரியாதுடா. அப்படிப்பட்டவளுக்காக நீ இரண்டு பேரை அடிச்சிட்டு வந்து இருக்க. அவனுங்க போலீஸ்க்கு போனா என்னடா பண்ணுவ." என்று இதயக்கனி தன் நண்பனின்
மேல் மிகுந்த அக்கறையுடன் கேட்டுக் கொண்டு இருக்க.
அவனோ நறுமுகையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த இதயக்கனிக்கு கோபம் தலைக்கேற அந்த போட்டோவை வாங்கிக் கிழித்துப் போட போட்டோவை கிழித்த அடுத்த நொடி இதயக்கனியை ஓங்கி ஒரு அறைந்தான் பாரிவேந்தன்.
அவன் அறைந்த வேகத்தில் இதயக்கனி கீழே விழ அவனைப் பார்த்து "உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னுடைய குல்ஃபி போட்டோவை கிழிச்சிப் போட்டு இருப்ப... நண்பனா இருந்தாலும் ஒரு எல்லை இருக்குடா." என்று கோபத்துடன் கேட்டவனைப் பார்த்து,
"என்னடா சொன்ன? எல்லையா நட்புக்குள்ள எதுக்கு டா எல்லையோடு இருக்கணும். ஓ சார் அந்த அளவுக்கு போய்ட்டீங்களா? இப்போ வந்தவளுக்காக உன் கூடவே இருந்த என்னையே பிரிச்சி பார்க்கிறீயா? அதுவும் உன்னைப் பத்தி தெரியாத ஒருத்திக்காக. இந்த பைத்தியக்காரத்தனம் உன்னையே ஓர் நாள் பைத்தியக்காரனா மாத்த போகுது. நீ எது வேணாலும் பண்ணிக்கோடா... இனிமேல் நான் எதிலும் தலையிட மாட்டேன்." என்று அவனைத் திட்டிவிட்டுச் சென்ற இதயக்கனியை பார்த்தபடி நின்று இருந்தவனின் மனதில்.
"சாரிடா கனி அந்த பசங்க என் குல்ஃபியை லவ் பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்றானுங்கடா. அவளுடைய முகத்தில் தெரிந்த பயத்தை நீ பார்த்து இருந்த... நான் செய்ததை தான் நீயும் செய்து இருப்ப. அவள் பயந்ததைப் பார்க்கும் போது எவ்வளவு வலிச்சிது தெரியுமா?" என்று போனவனைப் பார்த்துக் கூறியவன் 'எப்படி இருந்தாலும் என் உயிர்டா நீ... எங்கே போய்ட போற... திரும்பி என்கிட்ட தானே வருவ...' என மனதில் நினைத்து உறங்கச் சென்றான்.
மறுநாள் பள்ளிக்கூடம் வந்த பாரதி, நறுமுகையின் முகவாட்டத்தைப் பார்த்து "ஏய் நறுமுகை அந்த பசங்க திரும்ப எதாவது பிரச்சனை பண்றாங்களா?"
"இல்லைடி அவனுங்களை இன்னிக்கு காலையில் பார்க்கவே இல்லை."
"அப்புறம் ஏன்டி உம்முனு இருக்க?"
"அது வந்து..." என இழுத்தவள் சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு "கொஞ்சம் கிட்டவாயேன்." என தன் தோழியை அருகில் அழைத்து... தன் புத்தகப்பையைத் திறந்து காட்டினாள்.
"என்னடி கிட்டக் கூப்பிட்டு பேக் காட்டுற"
"லூசு ஒழுங்கா பாரு" என்று பையிலிருந்து க்ரீட்டிங் கார்டு மற்றும் ஒரு வெள்ளை ரோஜாவை எடுத்து நீட்டினாள்.
"ஏய் என்னடி இது, சூப்பரா இருக்கு யார் கொடுத்தா இந்த க்ரீட்டிங் கார்டு செம்மையா இருக்கு டி" என்று க்ரீடிங் கார்டை பிரித்துப் படித்தாள்.
என் உயிர் குடைக்குள்
உன் காதல் மழைத்துளி
பிடிக்கக்
காத்துக் கொண்டிருக்கிறேன்
மழையெனப் பொழிவாயா
இல்லை முகிலென இருப்பாயா
மழை முகிலாக நான்...
இதிலிருந்த வரிகள் நறுமுகையைக் கவர்ந்ததோ இல்லையோ பாரதியைக் கவர்ந்தது என்பது தான் உண்மை "வாவ் செம லைன். யாரு டி கொடுத்தா பரவாயில்ல டி லவ் ப்ரோபோஸ் கார்ட் எல்லாம் வந்து இருக்கு உனக்கு" என்று நறுமுகையைக் கிண்டல் செய்ய.
அவளோ "சும்மா கிண்டல் பண்ணாத யார் என் பேக்ல வச்சிட்டு போனானு எனக்கே தெரியல. நான் லன்ச் சாப்பிட்டு முடிச்சிட்டு வந்து பார்த்தா இது என் பேக்ல இருக்கு" என்று நறுமுகை சொல்ல.
"பார்ரா மறைந்திருந்து உன்னை சைட் அடிக்கிறாங்க போல டி, மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன... அந்த மாதிரி டி." என்று கிண்டல் செய்ய... தன் தோழியின் முகம் வாடிப் போவதைப் பார்த்தவள், "அதெல்லாம் சரி உனக்கு ஒயிட் ரோஸ் ரொம்ப பிடிக்கும்னு எப்படி இதை வைச்சிட்டு போனவனுக்குத் தெரியும். சரியா ஒரு ஒயிட் ரோஸ் வச்சிருக்காங்க. இதப் பார்த்தா நம்ம கிளாஸ்ல தான் யாரோ இந்த வேலையை பார்த்து இருக்காங்க. அதுவும் உன்னை பத்தி நல்லா தெரிஞ்சவங்க தான் பண்ணியிருக்காங்க." என பாரதி கூற.
நறுமுகையும் "அது தான் டி எனக்கும் சந்தேகமா இருக்கு யாருனே தெரியல. இது மட்டும் நம்ம சாருக்கு தெரிஞ்சா நம்ம கதி அவ்வளவு தான்" என்று பயத்தோடு சொல்ல.
பாரதியோ "இதோ பாருடா நம்ம கதிய! என்னவோ எனக்கும் லவ் ப்ரோபோஸ் வந்த மாதிரி சொல்ற உனக்கு மட்டும் தான் வந்து இருக்கு சோ நீ என்னை இந்த விஷயத்தில் இழுக்காத நீயாச்சு உனக்கு லவ் ப்ரோபோஸ் பண்ணவச்சு நேரில் வந்து லவ் சொல்லத் தைரியம் இல்லாமல் கார்டு அண்ட் ஒயிட் ரோஸ் வைச்சு இருக்கான். அதை நினைச்சு நீயே இவ்வளவு ஃபீல் பண்ற விட்டுத் தள்ளு. நீ இதை கண்டுக்காத மாதிரி இரு." எனச் சொன்னவள் அந்த க்ரீட்டிங் கார்டு வாங்கி மீண்டும் பையில் வைத்துவிட்டு வெள்ளை ரோஜாவை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டாள்.
இதைப் பார்த்த நறுமுகை ஏன் இவ்வாறு செய்கிறாள் என்று புரியாமல் அவளிடம் கேட்க அவளும் "சும்மா இருடி எப்படி இருந்தாலும் உனக்கு இன்னிக்கி லவ் ப்ரோபோஸ் பண்ணவன் கண்டிப்பா இந்த வெள்ளை ரோஜா உன் தலையில் இருக்கா இல்லையான்னு பார்ப்பான். உன் தலையில் இல்லாமல் என் தலையிலிருந்தா செம காண்டாகி என் முன்னாடி வந்து கேட்பான் இல்லனா திட்ட செய்வான். அப்போ யார்னு நம்ம கண்டு பிடிச்சுடலாம் எப்படி என் ஐடியா" என்று பாரதி சிரித்துக்கொண்டே சொல்ல நறுமுகையும் இதற்குச் சம்மதித்தாள்.
"சரி வா அடுத்த பீரியட் நமக்குப் பி.டி பீரியட் கபடி மேட்ச் இருக்கு இந்த வாட்டி நம்ம தான் வின் பண்ணனும் ஓகே வா இதெல்லாம் மைண்ட்ல போட்டுட்டு ஒழுங்கா விளையாடாமல் இருக்காத சரியா?" என்று அவளை சமாதானம் செய்து அழைத்துக் கொண்டுச் சென்றாள்.
பாரதி கபடி மேட்ச் என்று சொன்னதும் அதில் கவனத்தைச் செலுத்தினாள் நறுமுகை எப்படியாவது இந்த டைம் வெற்றி பெற வேண்டும் என்ற முழு ஈடுபாட்டுடன் செயல்பட ஆரம்பித்தாள்.
இவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்தே இரண்டு விழிகள் பார்த்துக் கொண்டு இருந்தது நறுமுகை கூந்தல் தான் கொடுத்த வெள்ளை ரோஜா சூடிக்கொண்டு இருக்கிறதா இல்லையா என்று ஆசையுடன் பார்த்த அந்த விழிக்கு ஏமாற்றமே மிஞ்சியது தான் வைத்த வெள்ளை ரோஜா யாருக்கு உரிமை கொண்டாட வேண்டுமோ அவளின் கேசத்தில் இல்லாமல் வேறொரு கூந்தலுக்கு உரிமை கொண்டாப்படுவதைப் பார்த்து மிகவும் நொந்துபோனது அந்த விழிகளின் மனம்.
கொரியர் அலுவலகத்தில் வேதவல்லி அனுப்ப வேண்டிய பார்சலில் அந்த ஊரின் ஸ்டாம்ப் ஒட்டிக் கொண்டு இருந்தவருக்கு தலைசுற்றி மயங்கிச் சரிந்தார். மயங்கிச் சரிந்தவரை கூட வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் பதற்றத்துடன் வந்து அவரைத் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். மயக்கம் தெளிந்து மேலாளரிடம் வந்து வேதவல்லி மன்னிப்பு கேட்டார்.
"ஏன்மா வேதவல்லி உனக்குத் தான் உடம்பு முடியலன்னு தெரியுதுல அப்புறம் எதற்கு வேலைக்கு வர உன்னுடைய நோய்க்கு ட்ரீட்மெண்ட் எடுக்கலாம்ல" என்று மேனேஜர் அக்கறையுடன் கேட்க.
அவரோ "ட்ரீட்மென்ட் எடுக்கிற அளவுக்குக் கையில் பணம் இல்லை சார்." என்று கூறினார்.
"ஏம்மா ட்ரீட்மென்ட் எடுக்கிறவர்கள் எல்லாரும், கையில் காசு வைச்சுட்டா இருக்கிறாங்க. அங்க இங்க கடன் வாங்கி தான் ட்ரீட்மென்ட் எடுக்கணும். உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா. அதை யோசித்துப் பாருமா. நாளை, பின்ன ஏதாவது நடந்துச்சுன்னா அந்த பொண்ணுக்கு யார் துணையாய் இருப்பாங்க. அதை மனசுல வைச்சுட்டு கடன் வாங்கியாவது உன் உயிரைக் காப்பாற்ற வழிய பாரும்மா. இந்த காலத்துல சொந்த பந்தத்தையெல்லாம் நம்பி உன் பொண்ணை விட்றாத" என்று மேலும், சில பல அறிவுரைகளை வழங்கி மீதி வேலையை நாளை வந்து பார்த்துக்க சொல்லி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு வந்த வேதவல்லி தன் மகளின் எதிர்காலத்தை நினைத்துத் தவித்துப் போனார்... தான் இவ்வுலகில் இல்லை என்றால் தன் மகளின் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பார்க்கக் கூட அவரால் முடியவில்லை. பல சிந்தனைக்குள் மூழ்கியவர் தன் மகளின் படிப்பை விட அவளின் வாழ்க்கையே கண்முன் தோன்றியது. எப்படியாவது நறுமுகைக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
தன் தம்பியை தன் மகளுக்குக் கட்டி வைத்தாலும் தன்னையே வார்த்தையால் நோகடிப்பவர்கள் தன் மகளையும் வார்த்தைகளால் நோகடிப்பார்கள். சிறுபிள்ளை அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது என்று மனதில் நினைத்தவர் வெளியில் வேற இடத்தில் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்.