ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காதல் தாராயோ நெஞ்சமே கதை திரி

Status
Not open for further replies.

Dikshita Lakshmi

Well-known member
Wonderland writer
காதல் நெஞ்சம் - 3

"மச்சி வேலா, நம்ம சென்னை சிட்டியில் சிக்னலுக்கு பஞ்சமில்லைடா... வீட்ல இருந்து சைட்க்கு போகுறதுக்குள்ள எத்தனை சிக்னலை கடந்து வந்துட்டோம்ல." என பைக்கின் பின்னால் அமர்ந்து இருந்த வேலனிடம் குறை கூறிக் கொண்டு இருந்தான் இதயக்கனி.

"ஆமா டா கனி, இதோட மூனு ட்ராபிக் சிக்னலை தாண்டி வந்து இப்போ நாலாவது சிக்னல நின்னுட்டு இருக்கோம். இதுல இந்த வெயில் வேற மண்டை காயுது." என தன் நண்பன் பின்னால் அமர்ந்தபடி புலம்பியவனிடத்தில் இதயக்கனி

"டேய் வேலா சிக்னலை விட போறாங்க கெட்டியா புடிச்சுக்கோடா கீழே விழுந்து தொலைய போற." என தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

"ஏன் டா, நான் ஒல்லியா இருக்கேனு கிண்டல் பண்றீயா?" என தன் உடலமைப்பை நினைத்துக் கேட்க.

இதயக்கனியோ "ச்சி இல்ல மச்சி, நீ ஒல்லியாலாம் இல்லடா. நம்ம ஸ்கூல் டீச்சர் ஒரு குச்சியை வைத்து அடிப்பாங்கல்ல. உனக்கு ஞாபகம் இருக்கா?"

"ம் இருக்கு, இப்போ அதுக்கு என்ன?"

"ஹா ஹா... அது தான் டா அந்த குச்சியை விட ரொம்ப மோசமா இருக்க மச்சி. பயங்கரமான குச்சியை விட அநியாயத்திற்கு ஒல்லியா இருக்கடா. காற்று அடிச்சாலாம் நீ பறந்து போக மாட்ட... உன் பக்கத்தில வந்து யாராவது டேய் வேலானு கூப்பிட்டாவே போதும். புஸ்ஸ்ஸ்னு காணாம போயிடுவ!" என்று இதயக்கனி வேலனை சொல்லிவிட்டு முன் கண்ணாடி வழியாகப் பார்த்துச் சிரித்தான்.

இதைக் கேட்ட வேலனோ, அவனை முன் பக்கம் முறைத்துக் கொண்டு இருக்க. சிக்னல் விட்டதைப் பார்த்தவன் இதயக்கனியை பிடித்துக் கொள்ளாமல் தன் கரத்தை மார்புக்கு நடுவில் கட்டிக் கொண்டு அமர்ந்து இருக்க இதயக்கனியோ பைக்கை ஸ்டார்ட் செய்தவன் வண்டியை அந்த நெரிசலில் மெல்லச் செலுத்தினான்.

சிறிது தூரம் சென்றும் வேலன் எதுவும் பேசாமல் வருவதை நினைத்தவன் "என்ன மச்சி கோச்சிக்கிட்டியா! சாரி டா சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். சீரியஸா எடுத்துக்காத." எனக் கூற அப்போதும் அமைதியாக இருக்க இதயக்கனியோ "டேய் வேலா அதான் சொல்றேன்ல. சும்மா வம்பிழுக்க சொன்னேன்... ரொம்ப தான் பண்ற. ஒழுங்கா பேசுடா" எனச் சொல்லிவிட்டு கண்ணாடி வழியாகப் பார்க்க... வேலனின் உருவம் தெரியாமல் போக. பின்னால் திரும்பிப் பார்த்தவன் வேலன் தன் பின்னால் இல்லை என அறிந்து சட்டென பைக்கை நிறுத்தி வண்டியிலிருந்து இறங்கி பைக் பின்னால் சென்று அடியில் எங்கேயாவது சிக்கிக் கொண்டானா என நினைத்து குனிந்து பார்த்தான்.

'எங்கே போனான் இவன் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கி கோவிச்சிட்டு போய்ட்டானா..?' எனத் தவடையில் கை வைத்துக் கொண்டு யோசிக்க. இவனைத் தொடர்ந்து வந்த பைக்காரன் ஒருவன்.

"ஹலோ ப்ரோ உங்க பின்னாடி உட்கார்ந்து வந்தவர்... நீங்க சிக்னல பைக் எடுக்கும் போதே பின் பக்கமா விழுந்துட்டாரு. போய் என்னாச்சினு பாருங்க." என்று சொல்லி விட்டுச் சென்றார்.

இதயக்கனி பைக் ஸ்டார்ட் செய்யும் போதே சொன்னான். நல்லா பிடிச்சிக்கோ டா விழுந்திட போறேன்னு... ஆனால் வேலனோ முறுக்கிக் கொண்டு அவனைப் பிடிக்காமல் அமர்ந்து இருந்த சமயம் இதயக்கனி வண்டியை எடுக்க... சட்டெனப் பிடிமானம் இல்லாமல் பேலன்ஸ் செய்ய முடியாமல் பின்னால் பப்பரப்பா என்று இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு விழுந்து கிடந்தான். இதைப் பார்த்த அனைவரும் சிரித்தபடி கடந்துச் செல்ல. இதயக்கனி தன் பைக்கை ஓரம் கட்டிவிட்டு தன்னோட ஆருயிர் நண்பனைக் காண ஓடோடி வந்தான்.

அங்கே தன் இடுப்பைப் பிடித்துக் கொண்டு சாலையோரம் அமர்ந்து இருந்த வேலனைப் பார்த்தவனுக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் கட்டுப்படுத்த ஒரு கட்டத்திற்கு மேல் சிரிப்பைக் கட்டுப்படுத்த திணறியவன் தன் இருகரம் தட்டி சிரித்தே விட்டான்.

"ஏன்டா வேலா நான் தான் அப்போவே சொன்னேன்ல. நல்லா பிடிச்சிட்டு உட்காருடானு... இப்போ பாரு எப்படி இருந்த வேலன் இப்படி ஆகிட்டான் மாதிரி போஸ்ல இருக்க." என்று சொல்லிச் சிரிக்க. வேலனோ கோவத்துடன் கீழே இருந்த கல்லை எடுத்து இதயக்கனி மேலே வீசி எறிந்தான்.

இவர்கள் இப்படி என்றால் அங்கோ பாரிவேந்தன், தன் வாழ்க்கையில் யாரைச் சந்திக்கக் கூடாது என நினைத்துக் கொண்டு இருந்தானோ... அவளை பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தவனுக்கு மனம் முழுவதும் ஒரு வித உணர்ச்சி தோன்ற... எத்தனையோ இரவுகள் தன்னோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியவளை மீண்டும் திரும்பப் பார்த்தவனுக்கு.

நீ தான் இவ்ளோ
நாள் என் கிட்டப் பேசி
என்கூட கண்ணாமூச்சி
ஆடிட்டு இருந்தவளா...?
என்னைக் காதலிக்கிறாய்
என்று நினைத்து
என்னைச் செல்ல சித்திரவதை
செய்தவள் நீ தானே..?

என மனவரிகள் ஓட. சற்று முன் அவள் நின்ற காட்சி மீண்டும் அவனின் கண்முன் வந்து நிழலாடியது.

பேருந்திற்காக நின்று இருந்தவள் திரும்பிப் பார்க்க தன்னை இடிக்க வந்த வண்டி இன்னும் அதே இடத்தில் இருப்பதைப் பார்த்தவள் "சரியான பைத்தியமா இருப்பான் போல" என்று முணுமுணுத்தாள்.

அவனுக்குத் தன்னை சுற்றி இத்தனை வண்டிச் சத்தங்கள் சாலையில் நடக்கும் நிகழ்வுகளில் சத்தம் கேட்டாலும். அவள் முணுமுணுத்த அந்த வார்த்தை அவனோடு செவியில் நன்றாக விழுந்தது.

"ஆமா டி பைத்தியம் தான். பத்து வருஷமா உன்னை மட்டுமே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன்ல. நான் பைத்தியம் தான்." என்று தன் கரங்களைப் பார்க்க, அதில் நறுமுகை என்று அவள் பெயரைப் பச்சையாக வடிவமைத்ததைப் பார்த்து உள்ளுக்குள் கலங்கி நின்றான்.

"என்னை இம்சை பண்ற டி. இப்போ எதற்காக மீண்டும் என் கண் முன் வந்தாய். திரும்பி நான் உன்னைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாம். நீ ஏன் டி எனக்கு சொந்தமாகாமல் போன..?" என்று கலங்கிய மனதை கட்டுப்படுத்த மிகவும் தவித்துப் போனான். அவனின் மனசாட்சியோ பாரி இவ்வாறு நினைப்பது தவறு என உரைத்துக் கொண்டு இருந்தது.

"என்னாச்சி வேந்தன் உனக்கு இப்போ நறுமுகை வேறு ஒருவனுக்கு சொந்தக்காரி. அவளைப் பார்த்ததும் எதற்கு உன் மனசு உன் பேச்சை கேட்காமல் தடுமாறுகிறது. இது ரொம்ப தப்பு ஏற்கனவே அவளுக்கு என்னை கண்டாவே பிடிக்காது. இதில் நான் அவளை உருகி உருகி காதலிச்சேன்னு தெரிஞ்சா என்னை மனுஷனா கூட மதிக்க மாட்டா. முதல இங்கே இருந்து கிளம்பணும்" என்று வண்டியை ஸ்டார்ட் செய்ய. அவனின் மணி பர்ஸ் பின் பாக்கெட்டில் இருந்து நழுவி கீழே விழ இதைக் கண்ட நறுமுகை.

"ஹலோ உங்க பர்ஸ் கீழே விழுந்துடுச்சி" என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்து பர்ஸை எடுத்து நீட்டினாள். பர்ஸை மறந்து விட்டு எங்கே பைக்கை எடுத்துக் கொண்டு பறந்து விடுவானோ என நறுமுகையே எடுத்துக் கொடுக்க. வேந்தனின் இதயமோ வேகமாகத் துடிக்க கை நடுக்கத்துடன் வாங்கியவன் எவ்வளவு இழுத்துப் பிடித்தாலும் நறுமுகையைப் பார்த்ததும் அவன் உதடுகள் வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பித்து விட்டது.

"எப்படி இருக்க நறுமுகை..?" எனத் தன்னையும் மீறி அவள் பெயர் சொல்லி நலம் விசாரித்தான். நறுமுகைக்கோ ஆச்சரியமாக ஆனது.

"உங்களுக்கு என்னைத் தெரியுமா?" என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.

நறுமுகை அப்படிக் கேட்டதும் தான் தன்னையும் மீறி அவளின் பெயரைச் சொல்லி விட்டோம் எனப் புரிய. பெருமூச்சை ஒன்றை விட்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.

"ம் தெரியும்! நறுமுகை. என்னை யார்னு தெரியுதா நறுமுகை?" என ஒரு வித ஆவலுடன் கேட்டான்.

நறுமுகையோ "மன்னிச்சிடுங்க தெரியவில்லை" என அவள் சொன்னதைக் கேட்டவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் நாம் இப்போது இருக்கும் உருவத்தைப் பார்த்தால் தன்னுடைய நண்பர்கள் கூட தன்னை அடையாளம் தெரிந்துக் கொள்ள முடியாது தேவதாஸ் மாதிரி இருக்க என்று கேலி செய்வார்கள். அப்படி முகம் முழுவதும் தாடியும் மீசையும் இருந்தால் யாருக்குத் தான் டக்கென தெரியும் என இன்றும் அவளுக்காக வாதாடிய மனதை அவனோ கேவலமாகத் திட்டிக் கொண்டான்.

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்தவள் "என்னாச்சி அமைதியா ஆகிட்டீங்க..?"

"ஹாங் அதெல்லாம் ஒன்னும் இல்லை நறுமுகை. நான் வேந்தன் பாரிவேந்தன் நம்ம இரண்டு பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் தான் படித்தோம். இப்போ ஞாபகம் வருதா?" என அவன் தன் பெயரைக் கூறியதும் தன்னை பற்றி எதாவது நினைவில் இருக்குமா என்ற ஆவலோடு அவளின் முகபாவனையைக் கண்டான்.

நறுமுகைக்கோ பாரியின் பெயரைக் கேட்டதும் தான் படித்த பள்ளிக்கூட நிகழ்வுகள் சட்டென கண்முன் தோன்ற. முதல் நாள் பள்ளிக்குச் சென்ற போது, இப்போது சற்றுமுன் தனக்கு நடந்த காட்சி அன்றும் நடந்து நினைவுக்கு வர. பாரியை பார்த்து "ஞபாகம் வந்துடுச்சி வேந்தன். இதே போல முதல் நாள் பள்ளியிலும் நடந்துச்சி தானே" எனச் சொல்ல. பாரிக்கு றெக்கை இல்லாமல் வானத்தில் பறப்பது போல் தோன்றியது. பத்து வருடத்திற்கு முன் இருவரும் சந்தித்த காட்சியை நறுமுகை இன்னும் மறக்காமல் இருப்பதை நினைத்துப் பார்த்தவனுக்கு தலை கால் புரியவில்லை. அத்தனை மகிழ்ச்சியாக இருந்தான். ஆனால் அதை ஒரு துளி கூட வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவளிடத்தில்

"பரவாயில்லை என்னை ஞாபகம் வைச்சு இருக்கீங்க."

"பின்ன பள்ளியோட ரௌடி ஆச்சே எப்படி மறக்க முடியும்" எனச் சொல்லப் பாரிக்கோ மனதில் குடி கொண்ட அனைத்து சந்தோஷமும் சட்டென்று காற்றில் பறந்து போனது. இன்னும் நறுமுகை தன்னை ரௌடியாக தான் நினைத்துக் கொண்டு இருக்கிறாள் போல் என்று யோசித்துக் கொண்டு நடுரோட்டிலே நின்று இருந்தவனைப் பார்த்து,

"வேந்தன் சார் இந்த பக்கம் ஓரமா வாங்க. எவ்வளவு நேரம் ரோட்டில் நின்றுக் கொண்டு இருப்பீங்க. லாரிக்காரன் வந்தான் உங்களைத் தூக்கி வீசிட்டு போய்விடுவான்" என்று நறுமுகை கூற.

பாரிவேந்தனோ 'உன்னைப் பார்த்த இந்த கணம் மரணம் என்றாலும் எனக்குச் சந்தோஷமே. உன் விழிகளைப் பார்த்துக் கொண்டே இறந்து போவேனடி என் குல்பி' என அவன் மனதில் நினைக்க, நறுமுகையோ,

"திரும்பவும் கனவா, அட வாங்க சார்." என அவனை அழைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பில் அருகில் சென்று நின்றாள். "சரி சொல்லுங்க எப்படி இருக்கீங்க. வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா? என்ன வேலை செய்யுறீங்க. எத்தனை பசங்க இருக்காங்க?" என வழக்கமாகப் பார்த்துக் கொள்ளும் நண்பர்களைப் போல் கேள்விகள் அடுக்கிக் கொண்டே போனவளிடம்.

தயக்கத்தோடு வார்த்தைகள் தடுமாற்றத்தோடு "நறுமுகை நம்ம ஏன் ஒரு காபிக் குடிச்சிட்டு பேச கூடாது?" என அவன் முதல் முறை அவளை தன்னோடு காபி அருந்த அழைக்க. அவளோ தனக்கு சீனியர் அதுவும் இத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கிறோம். முதல் தடவை பார்த்த பயம் இப்போது கொஞ்சம் ஒட்டிக் கொண்டு இருந்தாலும் அவள் வாழ்க்கையின் மூலம் அனுபவித்த வலி நறுமுகையைத் தைரியமானவளாக மாற்றியது. பின் தன் கை கடிகாரத்தைப் பார்த்தவள் இன்னும் நேரம் இருப்பதை உணர்ந்து சரியெனத் தலையாட்டி அருகிலிருந்த டீ கடைக்குச் செல்ல.

நறுமுகையோ, "டீ கடைக்கு வேண்டாம் இதோ இந்த ஹோட்டலுக்கு போகலாம்" என்று அழைத்தாள். பாரியும் சரியெனத் தலையாட்டி தன் வண்டியைத் தள்ளிக் கொண்டு நடந்தான். வண்டியை பார்க் செய்துவிட்டு இருவரும் ஹோட்டலுக்குள் சென்று அமர்ந்து சர்வரை கூப்பிட்டுப் பாரி "ஒரு டீ, ஒரு காபி" எனக் கூற. நறுமுகையோ, "இல்லை அண்ணா காபி இப்போ வேண்டாம் ஒரு நைஸ்தோசை எடுத்துட்டு வாங்க" என்று சொல்லிய போது தான் அறிந்தான் அவள் காலை டிபன் சாப்பிடத் தான் இங்கே அழைத்தாள் என்று.

"வேற எதாவது வேணுமா மேடம்?"

"வேந்தன் உங்களுக்கு டிபன் எதாவது" எனக் கேட்க. அவனோ டீ மட்டும் போதும் எனக் கூற. வெயிட்டரிடம் "இல்லைண்ணா நீங்க போங்க. வெயிட்டர் திரும்பி நடக்க.

பாரியோ "அண்ணா ஒரு நிமிஷம் தோசையில் சாம்பார் வைக்கிற கிண்ணத்தில் அதற்குப் பதிலா தேங்காய் சட்னி வைச்சுட்டு வாங்க." என்று தன்னையும் மீறி அவள் வழக்கமாக எப்படிச் சாப்பிடுவாளோ அதைப் பற்றிக் கூறினான். சர்வரோ சரியெனத் தலையாட்டிவிட்டுப் போக. நறுமுகையோ பாரிவேந்தனை கேள்வியாக நோக்கினாள்.

பாரிக்கோ அப்போது தான் புரிந்தது தான் ஆர்வகோளாறில் உளறியது. 'சரி எதாவது சமாளிப்போம்' என்று மனதில் யோசித்தவன் அவளின் விழிகளைக் காண அதில் தன்னை தொலைத்துக் கொண்டு இருந்தவன் அவளின் பேச்சில் தன்னை மீண்டும் மீட்டு எடுத்துக் கொண்டு வந்து "அது வந்து இங்கே சாம்பாரை விடத் தேங்காய் சட்னி நல்லா இருக்கும் அதான். அது மட்டும் இல்லை ஸ்கூல் படிக்கும் நாட்களில் நீ அதிகம் விரும்பி சாப்பிடுவது இதைத் தானே" எனச் சொல்லியவனின் மனதில் உன்னால் தானே டி நானும் அடிமையாகினேன் தோசைக்கும் தேங்காய் சட்னிக்கும் என எண்ணினான்.


"ஓ இதெல்லாம் நோட் பண்ணி இருக்கீங்களா? நீங்க பள்ளிக்கு வருவதே சண்டை போட தான்னு நினைச்சேன்" என்று நறுமுகை கூறிக் கொண்டே இருக்கும் போது அவளின் சித்தி போன் செய்யப் பதற்றத்துடன் போனை எடுத்துப் பேசினாள்.

கருத்து திரி 👉👇


 

Dikshita Lakshmi

Well-known member
Wonderland writer
காதல் நெஞ்சம்- 4


ஹோட்டலில் பாரியுடன் டிபன் ஆர்டர் செய்து விட்டுப் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் நறுமுகையின் சித்தி அவளுக்குக் கால் செய்ய
சற்று பதற்றத்துடன் போனை அட்டன்ட் செய்து...

"ஹலோ சொல்லு சித்தி."

"எங்க டி இருக்க..?"

"அ... அது வந்து சித்தி ரொம்ப பசி எடுத்துடுச்சி அதான் பஸ்டாப் பக்கத்தில் இருக்கிற ஹோட்டல டிபன் சாப்பிட வந்தேன்" என்று கூற.

"சரி டி அங்கேயே இரு, நானும் சித்தப்பாவும் வரோம்" எனச் சொல்லிவிட்டு போனை கட் செய்ய. பாவம் நறுமுகைக்கு என்ன செய்வது என்று புரியாமல் சங்கடத்தில் முழித்தாள். வேந்தனிடம் எப்படிக் கூறுவது தங்களை ஒன்றாகப் பார்த்தால் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று அவனிடம் கூற முடியாமல் பாரியின் முன் நெளிந்துக் கொண்டு இருந்தாள்.

நறுமுகையின் சிறு கண்ணசைவைக் கூட புரிந்து வைத்து இருந்தவன் அவளின் முகத்தில் படர்ந்த குழப்பத்தை அறியதவானா என்ன!

"என்னாச்சி எதாவது பிரச்சனையா?"

"அது வந்து எப்படி சொல்றதுனு தெரியல சங்கடமா இருக்கு."

"எதுவா இருந்தாலும் சொல்லு நறுமுகை."

"இல்ல என் சித்தி போன் பண்ணாங்க, அவங்க இங்க இப்போ வரேன்னு சொன்னாங்க. அதான்" என்று அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்தினாள்.

அவள் என்ன கூற வருகிறாள் என்று அவனுக்கு புரிந்தது டேபிளிலிருந்து எழுந்து "இதைச் சொல்லவா அவ்வளவு தயங்கின, லூசு! சரி நீ இங்க உட்கார்ந்து சாப்பிடு நான் எதிரில் இருக்கிற டேபிளில் உட்கார்ந்துக் கொள்கிறேன்." என அவளின் நிலைமையை அவள் சொல்லாமலே புரிந்துக் கொண்டு எழுந்துச் சென்ற வேந்தனின் செயல் அவளுக்கு புதியதாகத் தோன்றியது. வெயிட்டர் தோசையை எடுத்துக் கொண்டு வர இருவரும் வேறு வேறு டேபிளில் அமர்ந்து இருப்பதைப் பார்த்து குழம்பினான்.

'இப்போ இந்த தோசையை யாரிடம் கொடுக்கிறது?' என யோசித்துக் கொண்டே பாரிவேந்தனின் டேபிளிடம் போகப் பாரியோ கண்சாடை செய்து அவளிடம் கொடுக்கும் படி கூறினான். சர்வரும் சரியெனத் தலையாட்டிக் கொண்டு தோசையை அவள் டேபிளில் வைத்த சமயம் நறுமுகையின் சித்தியும், சித்தப்பாவும் அவள் முன் வந்து அமர்ந்தனர். இதைப் பார்த்த சர்வர் ஒன்றும் புரியாமல் பாரியை பார்க்க, அவனோ உதட்டில் ஒற்றை விரலை வைத்து உஷ் என்று சொல்ல அமைதியாக அங்கே இருந்து நகர போனவனைத் தடுத்தார் நறுமுகையின் சித்தப்பா வெங்கடேஷன்.

"ஏன்ப்பா நில்லு ஏன் எங்க கிட்ட எல்லாம் ஆடர் வாங்கிட்டு போக மாட்டியா?" என சற்று குரல் உயர்த்திப் பேச, சர்வரோ தன்னிச்சையாக கேஷில் அமர்ந்து இருந்த முதலாளியைப் பார்க்க. அவரோ பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார். இவனுக்கு அப்பாடா என்று ஆகியது. இவர் கத்தல் முதலாளி காதில் விழுந்து விட்டால் தன் வேலைக்கே ஆப்பு எனப் பயந்தவன்...

"மன்னிச்சிடுங்க சார், என்ன வேணும்?" எனக் கேட்டு இருவருக்கும் ஆன ஆடரை வாங்கிக் கொண்டுச் சென்றான். நறுமுகைக்கு சற்று பயம் வந்து தொற்றிக் கொண்டது. தோசையில் கை வைக்கும் முன் தன் கைப்பையில் ஏதோ தேடுவது போல் பணம் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தவளுக்குத் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

வெறும் இரு நூறு ரூபாய் மட்டுமே இருப்பதைப் பார்த்தவளுக்கு வேற என்ன செய்வது என்றே புரியவில்லை. அதிலும் அவளிடம் இருக்கும் கடைசி பைசாவும் இது தானே.

நறுமுகையின் ஒவ்வொரு அசைவையும் எதிர்த்திசையில் அமர்ந்து டீ குடித்தபடி பார்த்துக் கொண்டு இருந்தான் பாரிவேந்தன். அவனைச் சுற்றி நடக்கும் அத்தனையும் இவன் கண்களுக்கும் சரி செவிகளுக்கும் சரி எதுவும் உணராமல் அவளை மட்டுமே பார்த்தபடி அமர்ந்து இருந்தான்.

அவள் கண்களில் ஏதோ ஒரு வலியை உணர்ந்தான். என்ன தான் உதட்டில் சிரிப்பை வரவைத்துப் புன்னகைத்தாலும் ஏனோ அவனுக்கு நறுமுகையின் சிரிப்பு போலியாகவே தோன்றியது. அவள் நெற்றி வகிட்டில் திலகம் இல்லை என்பதை இப்போது தான் கவனிக்கிறான். திருமணத்திற்குப் பிறகு பெண்கள் நெற்றி வகிட்டில் திலகம் வைப்பது குறைந்துக் கொண்டு வருகிறது என்று அவன் மனதில் எண்ணம் தோன்றினாலும் ஏனோ அவன் கண்கள் தானாக அவளிள் கழுத்தைப் பார்த்தது மெல்லிய செயின் மட்டுமே ஒன்று இருக்க ஏதோ உறுத்தல் ஏற்பட்டு காலில் மெட்டி இருக்கிறதா என்று கவனிக்க அதுவும் இல்லாமல் போக குழப்பத்தில் ஆழ்ந்தான் பாரிவேந்தன்.

"ஏன்டி வீட்ல சாப்பிட்ட சொன்னா பெரிய வெட்டி வீராப்பு மாதிரி முறுக்கிக்கிட்டு ஹோட்டல வந்து சாப்பிடுற. என்ன பணம் கொட்டிக் கிடக்கோ" என்று அவள் சித்தி மேகலா கேட்க நறுமுகையோ,

"அப்படி எல்லாம் எதுவும் இல்லை சித்தி, அப்போ பசிக்கல அதான் அப்படியே வந்துட்டேன். இப்போ பசியெடுத்தது சரி வெறும் வயிற்றோடு வேலைக்குப் போக வேண்டாமேனு தான். அது மட்டும் இல்லை அங்க போனா சாப்பிட நேரம் கிடைக்கலனா" என்று ஏதோ ஒரு சாக்கு சொல்லிவிட்டுச் சாப்பிடத் தொடங்கியவளுக்கோ பில்லை பற்றியே சிந்தனை ஓடியது. கண்டிப்பாக இவர்கள் சாப்பிட்டதற்கு பில் கொடுக்க மாட்டார்கள். டீ கடைக்குப் போன வேந்தனை ஹோட்டலுக்கு அழைத்தது நான், அப்படி இருக்கிறப்ப அவர் குடிக்கிற டீக்கும் சேர்த்து பில் கொடுக்க வேண்டி வரும்.

என்ன பண்ணலாம் நறுமுகை எதாவது யோசி இல்லனா எல்லார் முன்னாலும் அசிங்கமாகிடும் என மனதில் ஓடியது. இதனால் சாப்பிட்ட தோசை கூட அவளுக்கு தொண்டைக்குள் இறங்கவில்லை.

"அது சரி டி, அங்கே உனக்காகப் பழைய சோறு எடுத்து வைச்சேன். இப்போ அது வீணாப் போச்சி. நீ ஹோட்டல்! ஹோட்டலா சாப்பாட்டைச் சாப்பிடத் தான் தினமும் வீட்டில் சாப்பிடுவது இல்லையா. நல்லா இருக்குதுடி உன் எண்ணம் மத்தவங்க பழைய சோறு சாப்பிடவேண்டும்... நீ மட்டும் நல்லா வகை வகையா ரகம் ரகமா சாப்பிடுவ. ச்சே என்ன எண்ணம் டி உனக்கு." என சொன்னதும் ஏனோ தானோ என்று முழுங்கிக் கொண்டு இருந்தவளுக்கு சற்றென்று தோசை தொண்டையில் சிக்கிக் கொண்டது போலாகியது. கண் கலங்கியவள் அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்று மிகவும் சிரமப்பட்டுச் சிரிப்பை வர வைத்தாள்.

"அப்படி எல்லாம் இல்ல சித்தி, கொஞ்சம் மயக்கம் வர மாதிரி இருந்துச்சி வேலைக்குப் போனா நின்னுட்டே இருக்கணும் அதான்" என்று ஏதோ சமாளித்தாள். ஆனால் அதற்கு மேல் அவள் ஒரு வாய் கூட சாப்பிடாமல் தட்டில் வட்டமிட்டுக் கொண்டு இருந்தாள்.

நறுமுகையின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு இருந்தவன் அவளின் கலங்கிய விழியைப் பார்த்தவனுக்கு இதயம் வலித்தது. நறுமுகையின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று சரியில்லை என நினைத்தவன் அதை அவளிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று நினைத்து டீயை குடித்து முடித்தான்.

மேகலாவும், வெங்கடேஷனும் சாப்பிட்டு முடித்துவிட்டு கையை கழுவிக் கொண்டு நறுமுகையிடம் "சரி சரி நாங்க கிளம்புறோம். நீ பில்ல கொடுத்துட்டு வேலைக்கு போற வழியை பாரு." எனக் கூறிவிட்டு அடுத்த நொடியே அங்கே இருந்து பறந்தனர்.

அவர்கள் இருவரும் போனதும் தன் கையை கழுவிக் கொண்டு வந்து தன் கைப்பையைப் பார்த்தாள் வேறு எதாவது பணம் கையில் அகப்படுகிறதா என்று பார்த்தவளுக்கு அவளிடம் இருக்கும் இரு நூறுகளைத் தவிர வேறு எந்த பணமும் கையில் அகப்படவில்லை.

"இப்போ என்ன செய்ய போற நறுமுகை கையில் பணம் இல்லாமல் உன்னை யாரு ஹோட்டலுக்கு சாப்பிட வர சொன்னா. அவன் தான் டீ குடிக்கலாம்னு சொன்னான்ல. பெரிய இவளாட்டும் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்த! இப்படி அசிங்கப்படவா? இப்ப வேற வழி இல்லை. வேந்தன் கிட்டத் தான் மீதி பணம் வாங்கி பில்லை கொடுக்க வேண்டும். சம்பளம் வந்ததும் வேந்தனிடம் பணத்தைக் கொடுத்துவிடலாம்." என்று முடிவு செய்தாள்.

ஆனால் இவள் மனசோ, அவனிடம் நீயும் உன் வீட்டு ஆளுங்களும் சாப்பிட்டதுக்குப் பணம் கேட்டால் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என எண்ணம் தோன்ற இப்போது இதை விட்டால் வேறு வழியும் இல்லை. டியூட்டிக்கு வேற நேரம் ஆகுது என்று முடிவு செய்தவள் பாரிவேந்தன் அமர்ந்து இருந்த இருக்கையைப் பார்க்க அங்கே அவன் இல்லாமல் இருப்பதைப் பார்த்தாள்.

'அச்சச்சோ இவனும் போயிட்டானா! சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டான். தன்னோடு ஒரு பெண் வந்தது கூட ஞபாகம் இல்லாமல் போய்ட்டானே. இப்ப பணத்திற்கு என்ன பண்றது?' என்று யோசித்தவள் தன் கையிலிருந்த கைப்பேசியைப் பார்த்தவளுக்கு வேறு வழியில்லை இதைத் தான் அடமானம் வைக்க வேண்டும் என்று நினைத்து பில் கட்டும் இடத்திற்குச் சென்று பில்லை கேட்க. அவரோ,

"பில்லுக்கு பணம் கொடுத்துட்டாங்கமா" என்று கூறினார்.

"இல்லை சார் நான் இன்னும் என் பில்லுக்கு பணம் தரல"

"உங்க பில்லை தான் அதோ அந்த தம்பி கட்டிட்டாரு."

கேஷியர் கை நீட்டிக் காட்டிய இடத்தை பார்க்க அங்கே பாரி விரல் இடுக்கில் தம் வைத்து புகைபிடித்துக் கொண்டு நின்றான். 'ஓ வேந்தன் தான் பணம் கொடுத்ததா?' என மனதில் நினைத்தவள் கேஷியரை பார்த்து பல்லைக் காட்டிவிட்டு தன் கை நிறைய அங்கே உள்ள பல்லி மிட்டாயை எடுத்து தன் கைப்பையில் போட்டுக் கொண்டு அருகிலிருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டுச் சென்றாள்.

இதைப் பார்த்த பாரியோ "இன்னும் அப்படியே இருக்கா மாறவேயில்லை" என சொல்லிக் கொண்டு சிரித்தவன் அவள் அருகில் வருவதைப் பார்த்து தன் கையிலிருந்த சிகரெட்டை சட்டு சட்டென்று இழுத்து ஊதித் தள்ளி கீழே போட்டு காலால் நசுக்கி புகையை கையால் ஆட்டி காற்றில் கலந்து விட்டான்.

இதை கவனித்தபடி வந்த நறுமுகை "ஏன் வேந்தன் என்னைப் பார்த்ததும் தம்மை கீழே போட்டீங்க..?"

"இல்ல அது வந்து உனக்கு சிகரெட் அடிச்சா பிடிக்காதுல அதான்"

"ஓ என்னைப் பத்தியெல்லாம் தெரிஞ்சி வைச்சு இருக்கீங்க. அப்போ எதுக்கு இப்போ அடிச்சீங்க?"

'என்ன உன்னைப் பத்தி எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறேனா. அது என்னடி எல்லாம் உன்னை முதல் முதலில் பார்த்த அந்த தருணத்திலிருந்து நீ எனக்கனவள் என்று உன்னுடைய சிறு அசைவைக் கூட கவனித்துப் புரிந்து வைத்து இருப்பவன் நானடி. என்னிடம் போய் இப்படிக் கேட்கிறாய்' என்று பாரியின் மனம் அவளிடம் சண்டையிட வார்த்தையோ,
"இல்ல நறுமுகை முழுசா அடிச்சிட்டு தான் கீழே போட்டேன். எனக்கு டீ குடித்ததும் சிகரெட் அடித்து பழக்கமாகிடுச்சி அதான்" என சொல்லியவனை பார்த்து.

"இந்த பழக்கம் நீங்களா ஏற்படுத்திக்கொண்டது தானே வேந்தன். ஏன் உங்களால் இதை விட முடியவில்லை" என்று கேட்க. முதல் முறை தன் மனம் கவர்ந்தவள் தன்னிடம் கேட்கும் விசயத்தை முடியாது என்று மறுக்க மனம் இல்லாமல் அவள் கண்ணைப் பார்த்து.

"உனக்கு வாக்கு கொடுக்கிறேன் நறுமுகை இனி இந்த பாரிவேந்தன் எதற்காகவும் சிகரெட்டை அடிக்க மாட்டான் இன்றிலிருந்து இதை விட்டு விடுகிறேன்" என தன்னோடு பல காலம் பழகிய யார் சொல்லியும் கேட்காமல் இந்த பழக்கத்திற்குக் காரணமானவளே சொன்னதும் அடுத்த நொடியே புகை பிடிக்கக் கூடாது என்று முடிவு செய்தான்.

வேந்தன் செய்வதை விசித்திரமாகப் பார்த்தாள் நறுமுகை.

"என்ன நறுமுகை அப்படிப் பார்க்கிற?"

"இல்லை இது உண்மையாகவே என் பள்ளியின் சீனியர் தானானு பார்க்கிறேன். உங்களை ஒரு டெரர் பீஸ்ஸா பார்த்து இருக்கேன். ஆனால் இப்படிச் சொன்னதும் சமத்து பிள்ளையா கேட்கிற வேந்தனை இன்று தான் பார்க்கிறேன்."

"ம் நீ அப்படி நினைச்சி இருந்தால் நான் என்ன பண்ணட்டும்?" என்று சொன்னவன் "சரி நீ எப்போ ஊர்ல இருந்து இங்க வந்த? ஏதோ வேலைக்கு எல்லாம் போகிற மாதிரி தெரியுது"

பாரி சட்டென்று அவளைப் பத்தி கேட்டதும் என்ன பதில் சொல்வது என்று யோசித்தவள் பொய்யான காரணத்தைச் சொன்னாள்.

"அது வந்து நான் இங்க வந்து ஒரு மாசம் ஆக போகுது. பாட்டி வீட்டில் தான் இருக்கேன். அவர் வெளிநாட்டுக்குப் போய் இருக்காரு. திரும்ப வர ஐந்து வருஷம் ஆகும் அதான் இங்கே வந்துட்டேன். வீட்ல சும்மா இருக்க பிடிக்கல அதான் ஒரு பல் மருத்துவமனையில் நர்ஸா ஒர்க் பண்றேன்" என அவன் கேட்ட ஒரு கேள்விக்கு அவளைப் பற்றி பாதி உண்மையும் பாதி பொய்யும் கலந்து சொன்னாள்.

அவள் சொன்ன விதத்திலே பொய் என அறிந்துக் கொண்டான் பாரிவேந்தன்.

கருத்து திரி.

 

Dikshita Lakshmi

Well-known member
Wonderland writer
5- காதல் நெஞ்சம்

வேந்தன் நம்பி இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினாள்.

பாரியும் அவள் கூறுவது ஏன் எனக்கு உண்மையாகத் தோன்றவில்லை என்று மனதில் சிந்திக்க. சரி இப்போது எதுவும் கேட்டுக் கொள்ள வேண்டாம் என்று அமைதியாக, நறுமுகை சொன்னது உண்மையென்பது போல் தலை அசைத்தான்.

பின் "சரி வா நறுமுகை உன்னை நானே நீ வேலை செய்யுற இடத்தில் இறக்கி விட்டுடுறேன்" என்று அவளை அழைக்க நறுமுகைக்கோ என்னவோ போல் ஆனது. இதுவரை தன் சொந்தங்களின் பைக்கில் தவிர வேற எந்த ஆடவனின் வண்டியிலும் ஏறி பயணம் கொள்ளாதவள் இன்று பாரிவேந்தன் சட்டென்று கூப்பிடவும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முழித்தாள்.

நேரம் வேறு கடந்துக் கொண்டே இருக்க பாரியிடம் பதில் எதுவும் அளிக்காமல் பேருந்து வருகிறதா என்று பார்த்தாள். கண்ணுக்கு எட்டின தூரம் வரை பஸ் தென்படாமல் இருக்க ஒரு முறை பஸ் ஸ்டாப்பை சுற்றி கண்களை அலையவிட்டாள். எப்பொழுதும் தன்னுடன் பஸ்சில் ஏறி பாதியில் இறங்குபவர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க. அங்கேயோ, பழவண்டிக்காரரும், இரண்டு பள்ளி சிறுமிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டு நிற்க அவர்கள் அருகில் ஒரு ஐயா குடை பிடித்துக் கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டு இருக்க அவரோடு பின்னால் ஒரு இளைஞன் காதில் கைப்பேசியை வைத்துக் கொண்டு மும்மரமாக யாருடனோ பேசிக் கொண்டு இருந்தான்.

அவன் பேசுவது கண்டிப்பாக அவனுடைய காதலியிடமாகத் தான் இருக்க வேண்டும். காரணம் ஏன் என்றால் அவன் பேசுவது அவனுக்கே கேட்குமா என்றே தெரியவில்லையே. இதை அனைத்தும் நோட்டமிட்ட நறுமுகை அவளுடன் தினசரி பஸ்சில் ஏறுபவர்கள் இல்லாமல் இருக்க தன்னோட பஸ் சென்று இருப்பதை புரிந்துக் கொண்டவள் ஏதோ யோசனையுடன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். அதில் எட்டு நாற்பது என்று நேரம் காட்டியது.

"அய்யோ நேரம் எட்டு நாற்பதா, நான் சரியா ஒன்பது மணிக்கெல்லாம் கையெழுத்து போட வேண்டுமே" என்று தன் பணி நேரத்தைச் சொல்ல.

பாரியோ, "அதான் சொல்றேன் வா, வண்டில ஏறு உன்னைச் சரியா ஒன்பது மணிக்கெல்லாம் நீ வேலை செய்யுற இடத்தில் இறக்கி விடுகிறேன்" என்று பைக்கில் ஏறியபடி மீண்டும் அழைத்தான்.

நறுமுகைக்கோ போவதா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.

'என்ன தான் தெரிந்தவர் என்றாலும் பத்து வருஷம் கழித்து பார்த்த அன்றே அவருடன் பைக்கில் போவது சரியா?' என மனதிற்குள் ஓட இப்போது இதை விட்டாலும் தனக்கு வேற வழியில்லை. ஆட்டோவில் சென்றால் இங்கே இருந்து நான் வேலை செய்யும் இடத்திற்குச் செல்லவே எப்படியும் இருநூறு ரூபாயாவது வாங்குவார்கள். இப்போது தன்னிடம் இருப்பதும் அது மட்டுமே, அதையும் செலவு செய்து விட்டால்... மீண்டும் சம்பளம் போடுகிற வரைக்கும் என்ன செய்வது. வீட்டில் கேட்டா கண்டிப்பா தர மாட்டாங்க. இப்போ என்ன பண்றது வேந்தனின் பைக்கில் போவதைத் தவிர வேற வழியில்லை எனப் புரிந்துக் கொண்டாள்.

"அது எப்படி வேந்தன் ஒன்பது மணிக்கெல்லாம் விடுவீங்க. நான் பஸ்சில் போனாவே முக்கால் மணி நேரம் ஆகும். நீங்க எப்படி இருபது நிமிடத்தில் நான் வேலை செய்யும் ஹாஸ்பிட்டல் கிட்ட விடுவீங்க."

"என்ன முக்கால் மணி நேரமா? ஆமா நீ எந்த இடத்தில் வேலை செய்யுற..?"

"அதுவா நம்ம ஆவடிக்கு முதல் ஸ்டாப் திருமங்கலம்" என்று சொல்ல. பாரியோ தன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு.

"நறுமுகை சீக்கிரம் வண்டியில் ஏறு. கோயம்பேடு தாண்டி போறதுக்குள்ள நேரம் கடந்திடும். ஏன்னா நம்ம சென்னையோட டிராஃபிக் பத்தி நான் சொல்ல வேண்டியது இல்லை. அதுவும் கோயம்பேடு கிட்ட இந்நேரம் கூட்டம் பாதி கூடி இருக்கும்" என்று சொல்லவும் தான் அவளுக்கே நினைவு வந்தது சென்னை சிட்டியின் போக்குவரத்து நெரிசலைப் பற்றி. பின் வேறு வழியின்றி முதல் முறையாக பாரிவேந்தனின் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

ஆனால் அவனைத் தொடாமல் ஏறி அமர்ந்து பின்னால் இருந்த கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். இருவருக்கும் இடையில் இன்னொருவர் அமரும் அளவிற்கு இடம் விட்டு அமர்ந்து இருந்தவளை, பார்த்தவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஏன் தொட்டுப் பழகினால் தான் காதல் வருமா என்ன? என்ற எண்ணத்தோடு பைக்கை எடுத்தான். சற்று வேகத்துடன் பைக்கை செலுத்திக் கொண்டு இருக்க. பின்னால் நறுமுகையோ பயத்தில் கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் வேண்டியபடி அமர்ந்து வந்தாள்.

'கடவுளே காப்பாற்று' என்று.

இப்போது தான் பாரி முதல் முறை தன் பைக்கில் முன் பக்கம் பார்க்கும் இரு கண்ணாடிகளையும் எடுத்ததை நினைத்து வருந்தினான். அவனின் தேவதையின் முகத்தை முன் பக்கம் பார்க்க முடியாமல் போனதை நினைத்து. பாரி சொன்னது போல் சரியாக எட்டு ஐம்பத்து ஐந்துக்கு அவள் வேலை பார்க்கும் மருத்துவமனையின் முன் வண்டியை கொண்டு வந்து நிறுத்த அப்பாடா என்று போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது அவளுக்கு.

"ரொம்ப நன்றி வேந்தன், சரியா நேரத்திற்குக் கொண்டு வந்துட்டீங்க. ஆனால் அதற்குனு இம்புட்டு வேகமா வண்டியை ஓட்டியது தான் கொஞ்சம் பயம் வந்துடுச்சி." எனச் சொல்லியவள் "சரி வேந்தன் நான் கிளம்புகிறேன். இன்னொரு நாள் பார்க்கலாம்"

"இன்னொரு நாளென்றால் எப்போது நறுமுகை?" எனச் சட்டென ஒரு வேகத்தில் கேட்டான்.

நறுமுகையோ "ம்ம் தெரியல வேந்தன் பார்க்கலாம் எப்போனு" என்று கூறிவிட்டு அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் செல்ல. பாரியோ எப்படியாவது அவளின் நம்பரை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அங்கேயே நிற்க. பாதி தூரம் போனவள் தன் தலையில் அடித்துக் கொண்டு திரும்ப வந்து "வேந்தன் இன்னிக்கு நீங்கச் செய்த எல்லா உதவிக்கும் ரொம்ப நன்றி. நான் இந்த மாசம் சம்பளம் வாங்கிட்டு உங்க பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுறேன்" என்று சொல்ல.

"என்ன பணம் நறுமுகை?" என்று புரியாமல் கேட்டான்.

"அதான் வேந்தன் ஹோட்டல்ல என் பில்லுக்கும் சேர்த்து பணம் கொடுத்தீங்கல்ல அதான்"

"ஓ அதுவா, அதெல்லாம் வேண்டாம் நறுமுகை உன்னைக் காபி சாப்பிட அழைத்தது நான். அப்போ நான் தானே பில்லை கொடுக்கவேண்டும்" என்று சொல்ல.

அவளோ "இல்லைப்பா இருந்தாலும் டிபன் சாப்பிட்ட அழைத்தது நான், அப்புறம் திடீர்னு சித்தியும் சித்தப்பாவும் வந்துட்டாங்க. அவங்க சாப்பிட்டதற்குப் பணம் நான் தான் கொடுத்து இருக்கணும்" என்று கூற.

பாரியோ "இப்படியே பேசிட்டு நிற்க போறியா நறுமுகை நேரம் ஆகுது பாரு. போ, இதைப் பற்றி நம்ம பிறகு பேசிக் கொள்ளலாம்" என்று சொல்ல. அவளுக்கோ நேரம் ஆவது நினைவு வந்து அவசரம் அவசரமாக ஒரு காகிதத்தில் அவளின் கைப்பேசி நம்பரை எழுதி அவன் கையில் கொடுத்துவிட்டுப் பறந்தாள்.

தான் கேட்க நினைத்துத் தயங்கிய விசயத்தை நறுமுகை சுலபமாகக் கொடுத்துவிட்டுப் போவதை எண்ணி மகிழ்ச்சியுடன் அவளின் நம்பரை தன் கைப்பேசியில் ஏற்றுவதற்குள் அவனின் இதயத்தில் ஏற்றிக் கொண்டான். கைப்பேசியில் நம்பர் ஏற்றுவது கூட என்றோ ஒரு நாள் அழிந்து விடும். ஆனால் தன் இதயத்தில் ஏற்றும் நம்பர் எப்போதும் அழிந்து போகாது என்ற நினைப்போடு அவளின் அலைப்பேசியின் எண்ணை தன் மனதில் மனப்பாடம் செய்துக் கொண்டான்.

பின் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வோடு அங்கே இருந்து போக மனம் இல்லாமல் வண்டியை எடுத்துக் கொண்டு அவள் வேலை செய்யும் மருத்துவமனையை பார்த்தபடி சென்றான்.

ஆயிரம் கேள்விகளோடு அந்த இடத்திலிருந்து வந்தவன் நேராக தன் நண்பர்களை சந்திக்கும் இடத்திற்குச் சென்று தன் உயிர் நண்பன் இதயக்கனிக்கு அழைப்பு விடுவித்து விட்டு அருகிலிருந்த டீ ஸ்டாலில் ஒரு டீயை வாங்கிப் பருகிக் கொண்டு இருந்தவன் நறுமுகையை நினைத்துக் கொண்டு பாரி கடைசி சொட்டு டீ குடித்து முடிக்கவும் இதயக்கனி வரவும் சரியாக இருந்தது.

தன் நண்பனை ஆச்சரியமாக பார்த்தபடி "அண்ணா இரண்டு சிகரெட்" எனச் சொல்லி அதை வாங்கிக் கொண்டு ஒன்றை தன் வாயில் பற்ற வைத்து மற்றொன்றைப் பாரியிடம் நீட்ட அவனோ அதை மறுக்க இதயக்கனி அவன் வாயில் வைக்கப் போக அதை பிடுங்கி தூக்கி தூரம் போட்டான். இதயக்கனியின் வாயிலிருந்ததையும் பிடுங்கி தூரம் எறிந்தான்.

"டேய், டேய், டேய் ஒரு சிகரெட் விலை பதினேழு ரூபாய் டா. அதை அசால்ட்டா தூக்கி போடுற. நீ எப்போவும் டீயை குடிச்சிட்டு அடிக்கிறது தானே. இன்னிக்கு என்ன புதுசா ஞானம் பிறந்துடுச்சோ? என்னுடையதும் சேர்த்துத் தூக்கி எறியுற" என்று புலம்பியபடி இன்னொரு சிகரெட்டை வாங்க அவன் தலையில் அடித்தான் பாரி.

"எம்மா யம்மா யம்மா, வலிக்குது விடுடா" எனச் சொல்ல.

"நான் தான் சொல்லிட்டே இருக்கேன்ல. நீ மரியாதையே இல்லாமல் திரும்ப இன்னொரு சிகரெட்டை வாங்க போற. அதான் பிடிக்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்டோம்ல. அப்புறம் எதுக்குடா திரும்ப அந்த கன்றாவியை எல்லாம் வாங்குற"

"என்னது கன்றாவியா, முடிவு பண்ணிட்டோமா! டேய் பாரி இதை நான் பழகியதே உன் கூட சேர்ந்து தானே டா இப்போ புதுசா அடிக்கக் கூடாதுனு சொல்ற?" எனக் கூற.

பாரியோ "அதான் மச்சி சொல்றேன். நம்மளோட எந்த பழக்கமும் இடையில் வந்தது தான். நம்ம பிறந்ததிலிருந்து பழகுனது இல்லை. நம்மளா ஏற்படுத்திக்கிட்ட பழக்கம் தான். இதை விடுறது நம்ம கையில் தான் இருக்கு" என்று சொல்லும் தன் நண்பனை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு.

"மச்சி பாரி உண்மையாகவே நீ தானா? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. இப்படி எல்லாம் சொன்னா, பாரியே அவங்க மூக்குல பஞ்ச் கொடுத்துட்டு வருவான். உண்மையாவே இது பாரியா நம்ப முடியலையே." என்று அவன் தாடியைப் பிடித்து இழுத்தான்.

"டேய் எருமை வலிக்குது டா. நான் தான் டா இதுல உனக்கு என்ன சந்தேகம்" எனச் சொல்லி அவன் வயிற்றில் ஒரு குத்து விட.

"யம்மாடியோ, ஆமாடா மச்சி உண்மையாவே நீ பாரி தான். ஆமா எப்படி டா திடீரென்று இப்படி ஒரு ஞானம் வந்தது. நீ அவ்வளவு நல்லவன் இல்லையே?"

"ம்ம்ம் ஆமாடா கனி, ஞானம் தான். இத்தனை வருடங்களாக யாரை ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என்று நினைத்து வெறுமையுடன் வாழ்ந்துக் கொண்டு இருந்தேனோ! இன்று அவளைப் பார்த்துவிட்டு வந்த ஞானம்" எனச் சொல்ல.

தன்னையே அறியாமல் இதயக்கனி உதடுகளோ, "நறுமுகை" எனக் கூறியது.

"அவளே தான்டா கனி. நான் சொன்னதும் எப்படி அவ தான்னு சரியா சொன்ன பார்த்தியா. அதான்டா மச்சி நமக்குள்ள இருக்கிற நட்பு" எனச் சொல்ல. அடுத்த கணம் பாரியின் கன்னத்தில் அறைந்தான் இதயக்கனி. தன் நண்பன் தன்னை அடித்ததும் சிரித்துக் கொண்டே "தெரியும்டா மச்சி நான் நறுமுகையை பார்த்துட்டு வந்தேன்னு சொன்னா நீ என்னை இப்படி தான் அடிப்பனு தெரியும் மச்சி" எனச் சொல்லி எதிர்த்து அடிக்காமல் தன்னுடைய இன்னொரு கன்னத்தைக் காட்டினான்.

இதயக்கனி, பாரியை அடித்ததும் பெட்டிக் கடையிலிருந்த இரண்டு மூன்று பேர் இவர்களை பார்க்க. கனியோ தன் நண்பனின் கன்னத்தில் மீண்டும் அடிக்கப் போக அப்போது பார்த்து வேலன் அங்கே வந்தான் பாரியின் இன்னொரு நண்பன்.

"டேய் கனி ஏன் டா பாரியை அடிக்கிற?"

"நான் மட்டும் இல்லைடா இவன் பண்ணிட்டு வந்த காரியத்தை கேட்டா. நீயும் கூட சேர்ந்து மொத்துவ.!"

"அப்படி என்னடா பண்ணான்..?" என்று வேலன் இதயக்கனியிடம் இருந்து சிகரெட்டை வாங்கி உதட்டில் வைத்து ஊதியப்படி கேட்க இதயக்கனியோ "துரை அவரோட இதயத்தை சுக்கு நூறா உடைத்துட்டு போனா ஏமாத்துக்காரியை பார்த்துட்டு வந்து இருக்கான்" என்று சொல்லவும். ஊதிய புகையால் வேலனுக்கு மூச்சு முட்டி புரை ஏறியது.

இதயக்கனி நறுமுகையைத் தவறாகப் பேசியதைக் கேட்ட பாரிக்கு கோபம் வர இதயக்கனி வயிற்றில் குத்தி, "இங்க பாரு கனி என் நறுமுகையைப் பத்தி தப்பா பேச யாருக்கும் உரிமை இல்லை. இதுக்கு மேல ஒரு வார்த்தை அவளைப் பத்தி பேசாத" என விரல் உயர்த்தி எச்சரிக்கையிட்டு தன்னோட பைக்கை எடுத்துக் கொண்டு கோபமாகக் கிளம்பினான்.

பாரிவேந்தன் கோபமாகப் பேசிவிட்டுப் போவதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டு இருந்த வேலன் "உண்மையா சொல்றியா கனி. எப்போ அவளைப் பார்த்தான்?" என்க.

"இப்போ தான் டா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்ததா சொன்னான். எனக்கு ரொம்ப பயமா இருக்கு வேலா. ஏன்டா நறுமுகை இத்தனை வருஷம் கழித்துத் திரும்ப வந்து இருக்கா. அவளுக்குத் தான் கல்யாணம் ஆகிடுச்சில. திரும்ப வந்தது மட்டும் இல்லாமல் பாரியை ஏன் மீட் பண்ணவேண்டும்?" என்று பல கேள்விகள் இதயக்கனி மனதில் மட்டும் இல்லை. வேலன் மனதிலும் பாரியின் மனதிலும் இதே ஓடியது.

"எனக்குப் பயமா இருக்கு கனி இனிமேல் பாரியின் நிலைமையை நினைத்து" எனக் கனி சொன்னதையே வேலன் சொல்ல.

கனியோ, "ம்ம்... எனக்கும் தான் நறுமுகைக்காக எது வேணாலும் செய்யக் கூடியவன். அவள் எப்போ திரும்ப போவாளோ அப்போது தான் நிம்மதியா இருக்கும்" எனக் கூறினான். இரு நண்பர்களும் பாரியின் நிலையை நினைத்து வருந்தினர்.

ஆனால் இருவருமே தன் நண்பனை மட்டும் நினைத்து கவலை கொண்டனர் தவிர. நறுமுகையைப் பற்றி சற்று கூட எண்ணவில்லை என்றே சொல்ல வேண்டும்.
 

Dikshita Lakshmi

Well-known member
Wonderland writer
காதல் நெஞ்சம்- 6

இரவு எட்டு மணி போல தன் பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பிய நறுமுகை பஸ்ஸில் ஏறி அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்துப் பார்க்க. அதில் நேரம் எட்டு பத்து எனக் காட்டியதைப் பார்த்து விட்டு மிஸ்ட்கால் நான்கு ஐந்து முறை வந்து இருப்பதைப் பார்த்தாள்.

யார் என்று பார்க்க இரண்டு முறை புது எண்ணிலிருந்தும் பிறகுத் தன் இல்லத்திலிருந்து வந்து இருப்பதையும் பார்த்தவளுக்கு தன் பிள்ளைகளாகத் தான் இருக்கும் என்று யூகித்து டையல் செய்ய முதல் ரிங்கிலே போனை எடுத்தான் அவளின் முத்துப்பிள்ளை யஷ்வந்த்.

"சொல்லுடா செல்லம்"

"எப்போ அம்மா வருவீங்க?" என யஷ்வந்த் தன் தாய் நறுமுகையிடம் தினமும் கேட்கும் கேள்வியைக் கேட்டான். இது தினமும் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது எப்போதும் இது நடக்கிற நிகழ்வு தான் அவள் பிள்ளைகளிடம் இருந்து.

இவளும் சலித்துக் கொள்ளாமல் இதோ இன்னும் அரைமணி நேரத்தில் வந்து விடுவேன் எனப் பதில் அளித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வரை தன் பிள்ளைகளிடம் போனில் பேசியபடி போவாள். சரியாக வீட்டின் வாசல் வந்ததும் போன் கட் செய்து தன் கை கால்களை அலம்பியபடி இருக்க. இரு பிள்ளைகளும் "அம்மா" எனக் கத்திக் கொண்டு அவளை நோக்கி ஓடி வந்தனர்.

எத்தனை கவலை, கலைப்பு இருந்தாலும் ஒரு தாயிக்கு தன் பிள்ளைகளைப் பார்த்ததும் அனைத்தும் காற்றில் பறந்து போய்விடும். அப்படி தான் நறுமுகைக்கும், எப்போதும் தன் பிள்ளைகளின் முன் சிரித்த முகத்தோடே இருப்பாள். தான் கலங்கிவிட்டால் எங்கே பிள்ளைகளும் கலங்கி விடுவார்களோ என்ற அச்சத்திலே எத்தனை துயரத்திலும் பிள்ளைகள் முன் கண் கலங்கியதும் இல்லை. தன்னம்பிக்கையை உடைந்து போக விட்டதும் இல்லை.

யஷ்வந்த் தன் தாயைக் கண்டதும் "அம்மா! அம்மா, இன்னிக்கு நம்ம பாப்பாவ சின்னப்பாட்டி அடிச்சிட்டாங்க. பாவம் பாப்பா அம்மா வேணும்னு அழுது அழுதே என் மடியில படுத்து தூங்கிடுச்சி." என யஷ்வந்த் கூற தாயின் உள்ளமோ துடித்துவிட்டது. எதற்காகச் சித்தி(மேகலா) அடித்தார்கள் எனக் கேட்க. யஷ்வந்த்தோ "அங்க இருந்த கேக் எடுத்து சாப்பிட்டா ம்மா அதை சின்னப்பாட்டி பார்த்திடுச்சி அதான் திருடி சாப்புடுறீயானு கேட்டு செம அடி." எனச் சொன்னதைக் கேட்ட நறுமுகைக்குக் கோபம் வர. அதைப் பிள்ளைகள் முன் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கோபத்தை கட்டுப்படுத்தி தன்னோட மற்றொரு பிள்ளை யவனராணி பெண்குழந்தையைப் பார்த்து, "அம்மாவ மன்னிச்சிடுங்க என் தங்கப்பிள்ளை. ரொம்ப வலிச்சிதா?" என தன் கண்ணீரை உள்வாங்கியபடி கேட்க.

சின்னக் குழந்தையான யவனராணியோ,
"டொம்ப... வலிச்சிது" என தன் மொழியில் பேச அவளை வாரியணைத்துக் கொண்டு உச்சியில் முத்திரைப்பதித்து "இப்போ சரியா போச்சா." என்று இவளும் குழந்தை போல் பேச. குழந்தையோ, "வலி போச்சி." என தன் தாயின் கன்னத்தில் முத்தம் பதித்தாள். பின் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல அங்கே அவளுடைய சித்தி மேகலாவும், சித்தப்பா வெங்கடேஷனும். பாட்டி சரஸ்வதி, பாட்டியின் பிள்ளைகள் சந்தோஷ் நறுமுகையின் தாய் மாமன். மற்றும் தீபா நறுமுகையின் கடைசி சித்தி இருவரும் அன்னையின் மடியில் ஆளுக்கு ஒரு பக்கம் தலை வைத்தபடி டிவியும் போனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தனர். சித்தியின் பொண்ணு ரேவதியோ புத்தகம் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தாள். நறுமுகையின் அம்மா வேதவல்லி கூட பிறந்தவங்க தான் மேகலா அடுத்து சந்தோஷ் அடுத்து தீபா இவங்க மூன்று பேரும். சரஸ்வதிக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் அதில் மூத்தவர் வேதவல்லி சில காலத்திற்கு முன் இறந்து விட மற்ற மூன்று பிள்ளைகளோடு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்.

சரஸ்வதி பாட்டியின் மடியில் அவர்கள் பிள்ளைகள் தலையில் வைத்துக் கொண்டு படுத்து இருக்கும் காட்சியைப் பார்த்ததும் ஏனோ நறுமுகை மனம் வெம்பியது. தன் அன்னையில்லையே என்ற எண்ணம் இப்போது எல்லாம் நறுமுகைக்கு அதிகமாகவே வரத் தொடங்கி இருந்தது.

நறுமுகை வந்ததும், அவர்களோ ஒருத்தி வேலையை முடித்துவிட்டு வந்து நிற்கிறாள் என்ற எண்ணம் கூட இல்லாமல் டி.வியை பார்த்தப்படி இரவு உணவைத் தயாரிக்கச் சொல்ல "இன்னும் சாப்பாடு செய்யவில்லையா?" என்ற அதிர்ச்சியில் கேட்டாள் என்பதை விட. இரவு ஒன்பதை கடந்தும் இன்னும் தன் சின்ன சிறுப்பிள்ளைகள் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை நினைத்து வேதனையுடன் கேட்டாள்.

"என்னடியம்மா எதிர்த்து கேள்விக் கேட்கிற? நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம். எம்புட்டு வேலை பார்த்துட்டு இப்போ தான் அக்கடானு உட்கார்ந்து இருக்கோம். இனிமேல் தான் சமைக்கணும். உன் புள்ளைங்க பசி தாங்க மாட்டாங்களே அதான் உன்னையே செய்யச் சொன்னேன்." என்று மேகலா கூறியதைக் கேட்டவளுக்கு இவர்களிடம் வீணாகப் பேசுவதை விட. தானே சமைத்து விடலாம் என்று உள்ளேச் சென்று உடையை மாற்றிவிட்டு பிள்ளைகளிடத்தில் "இரண்டு பேரும் விளையாடிட்டு இருங்க. அம்மா பத்து நிமிசத்துல டிபன் எடுத்துட்டு வரேன்." என அவர்களைச் சமாதானப்படுத்தி விட்டு நகர அவள் கரம் பிடித்து "அம்மா ரொம்ப பசிக்குது." எனச் சொல்ல தாயின் உள்ளம் தவித்துப் போனது.

"இருடா தங்கம் அம்மா இதோ டிபன் ரெடி பண்ணியதும் முதல உனக்குக் கொண்டு வரேன்டா." எனச் சொல்லிவிட்டு சமையல்கட்டிற்குள் சென்றாள். கண்களைச் சுழலவிட்டவள் இட்லி மாவும் தேங்காயும் இருப்பதைப் பார்த்து சட்டு சட்டென்று இட்லித் தட்டுகளை எடுத்து எண்ணெய்யைத் தடவி ஒரு ஒரு குழிக் கரண்டி மாவைத் தட்டுக் குழியில் ஊற்றி அடுப்பைப் பற்ற வைத்து வேக வைத்தாள். அதற்குள் தேங்காயை எடுத்துப் பூ போல் துருவி மிக்ஸிஜாரில் போட்டு அனைவருக்கும் ஏற்றார் போல் காரத்திற்குப் பச்சைமிளகாய் போட்டு கைபிடி அளவு பொட்டுக்கடலை சேர்த்து நான்கே பூண்டு பல் சிறு இஞ்சி, இரண்டு மூன்று தழை கொத்தமல்லி கூடவே உப்பையும் போட்டு சட்டினியை அரைத்து முடிக்கவும்... முதல் தட்டு இட்லி ஆவி வரவும் சரியாக இருந்தது. மடமடவென இட்லியை எடுத்து இரண்டு தட்டில் வைத்து சட்டினியைத் தாளித்து வைக்க மேகலாவின் பொண்ணு ரேவதி வந்து
"அய்யா இட்லி ரெடி." என்று அவளிடம் இது யாருக்கு எடுத்து வைத்துள்ளீர்கள் எனக் கூட கேட்காமல் இட்லியை சாப்பிட்டபடி எடுத்துச் சென்றாள்.

நறுமுகையால், எதுவும் பேச முடியாமல் போனது. பாவம் இவளுக்கும் பசியெடுத்து இருக்கும். என ஒரு தாயாய் சிந்தித்தவள் வேறு தட்டுகளை எடுத்து இட்லியை வைத்துக் கொண்டுச் சென்றாள். இதைப் பார்த்த மேகலாவோ "ஏன்டிம்மா வீட்ல பெரியவங்க இருக்காங்க. நேரத்துக்குச் சாப்பிட்டு மாத்திரை போடணும். சுகர் பேஷண்ட் வேற. முதல அம்மாவுக்கு அதான் உன் பாட்டிக்கு கொடுக்காமல் உன் புள்ளைங்களுக்குக் கொண்டு போறீயா." என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டார்.

"இல்ல சித்தி பாவம் பசங்க ரொம்ப பசியா இருக்காங்க. அடுத்த தட்டு இட்லி ஊற்றி வைத்து இருக்கிறேன். ஆவி வந்ததும் பாட்டிக்குக் கொண்டு வரேன்."

"இந்த அக்கறை காலையில நீ ஹோட்டல வாயிக்கு வக்கனையா சாப்பிடும் போது தெரிஞ்சி இருக்கணும். இப்போ வந்து பாசம் அது இதுனு சீனை போடுற." என மேகலா கேட்டுக் கொண்டு இருக்க.

சரஸ்வதி(மேகலாவின் அம்மா) மேகலாவின் தலையில் தட்டி "ஏன்டி புள்ளைங்க பசி தாங்க மாட்டாங்க. இவ்வளவு நேரம் நீ சமைக்காம இருந்துட்டு வேலையை முடிச்சிட்டு வந்தவ கலைப்பு தெரியாமல் சமைச்சி தன் புள்ளைங்க பசியைப் போக்க இட்லி எடுத்துட்டு போறா. அதை ஏன்டி வழி மறைச்சிட்டு நின்னு கதை பேசுற. இதே அவளோட பாட்டி என் மேல உண்மையான அக்கறை வைச்சு இருந்தா முதல எனக்கு தானே கொண்டு வந்து கொடுத்து இருப்பா." என வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல் பேசும் தன் பாட்டியைக் கண்டு வெற்று புன்னகை உதிர்த்துவிட்டு தான் கொண்டு வந்த இட்லித் தட்டுகளைச் சரஸ்வதியிடம் ஒன்றும் மற்றொன்றை மேகலாவிடமும் கொடுத்துவிட்டு மன ரணத்தோடு மீண்டும் சமையல்கட்டிற்குள் நுழைந்தாள்.

தன் கட்டுப்பாட்டை மீறி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேறு தட்டுகளை எடுத்து வைத்தவளின் மனதில் பாட்டியின் இருபிள்ளைகள் நினைவுக்கு வர. இந்த முறை அவர்கள் கேட்காமலே இட்லித் தட்டுகளை அவர்கள் முன் நீட்டினாள். இதைப் பார்த்த இருவரில் நறுமுகையின் மாமா சந்தோஷ் மட்டும் வாங்கிக் கொள்ள. கடைசி சித்தியான தீபா "நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன். இப்போது வேண்டாம்" என மறுத்துவிட்டார்.

பிறகு அரக்க, பறக்க இரண்டு தட்டுகளில் டிபனை எடுத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்று பார்க்கப் பாவம் இருபிள்ளைகளும் பசியில் அப்படியே உறங்கிப் போனார்கள். அக்காட்சியைப் பார்த்தவளுக்கு அழுகை கோவம் என இரண்டும் சேர்ந்து அவள் கணவன் மேல் உண்டானது. ஆனால் அதை விட தன் மேல் அவளுக்குக் கோபம் வந்தது. தன்னோட ஒரு முடிவு தன் பிள்ளைகளை இந்த அளவுக்குப் பாதித்துக் கொண்டு இருக்கிறதே. இதற்கு முற்றுப் புள்ளி இல்லையா? எப்போது எங்கள் மூவரின் வாழ்க்கைக்கும் விடிவுகாலம் பிறக்கும் என நறுமுகை கடவுளிடம் மனதிற்குள் புலம்பிக் கொண்டே தன் பிள்ளைகளை எழுப்பப் போக. யஸ்வந்த்தின் கரத்திலே நறுமுகையின் போன் ஆன்னில் இருப்பதைப் பார்த்தவள் யாரோ பேசும் சத்தம் கேட்க. யாரென்று பார்க்க புது நம்பராக இருக்கே. என்று யோசனையோடு தன் காதில் வைத்து மெல்ல.

"ஹலோ யாருங்க?" எனக் கேட்டாள்.

"அப்பாடா இப்போவாவது பேசினீயே நறுமுகை. எவ்வளவு நேரமாக கத்திட்டு இருக்கேன். போன் வைக்கவே மனசு வரல. பசங்க அவ்வளவு ஆசையா என்கிட்ட பேசிட்டே இருந்தாங்க அப்படியே தூங்கிட்டாங்க போல." என்று எதிர்முனையில் சொல்லியதைக் கேட்டவளுக்கு அது யார் குரல் என்று உணர்ந்துக் கொள்ள ஒரு நொடி தேவைப்பட்டது.

"வேந்தன் நீங்களா?" எனக் கேட்க.

"ஆமா நறுமுகை நான் தான் பாரிவேந்தன்."

"எப்போ போன் பண்ணீங்க?"

"ஒரு முக்கால் மணி நேரம் இருக்கும். பசங்க எடுத்தாங்க. உன்னைக் கேட்டேன் சாப்பாடு எடுத்துவரப் போய் இருக்காங்கனு சொன்னாங்க... சரி அம்மா வந்தா இந்த நம்பருக்குத் திரும்பக் கூப்பிட சொல்லுங்கள்னு சொல்லிட்டு வைக்கப் போனேன். ஏன் எங்க கிட்டலாம் பேச மாட்டீங்களானு கேட்டதும்... நானும் பேச ஆரம்பித்து விட்டேன். எங்க பேச்சு அப்படியே போச்சு பசங்களும் பசியில் தூங்கிட்டாங்க போல. அதான் எனக்கு போன் கட் பண்ண மனசே வரல. நீ வந்ததும் சொல்லிவிட்டு வைக்கலாம்னு இருந்தேன்." என பாரிவேந்தன் கூற. அதைக் கேட்ட நறுமுகைக்கோ வேந்தனின் இந்த குணம் புதியதாகவே தோன்றியது.

யாரைப் பற்றியும் கவலைக் கொள்ளாத வேந்தனா இது. காலையிலிருந்து எனக்கு அவரின் ஒரு ஒரு செயலும் புதியதாகவே கண் முன் காட்சியாகத் தோன்றுகிறதே. என் பிள்ளைகளின் பசியை உணர்ந்துக் கொள்ளும் அளவுக்கு அன்பானவரா வேந்தன் என்று அவனைப் பற்றி சிந்தித்தவள் வேந்தனிடம் ஒரு வார்த்தை கூட பேசத் தோன்றாமல் லைன் கட் செய்துவிட்டு இருபிள்ளைகளையும் எழுப்பி டிபனை ஊட்டி விட்டு மீண்டும் அவர்களைத் தூங்க வைத்து சமையல்கட்டிற்குள் சென்று மீதம் இருக்கும் மற்ற வேலைகளை முடித்துவிட்டு வந்து படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை.

இன்னும் எத்தனை நாள் இப்படியே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டு இருப்பது. கணவன் நிராகரிக்கப்பட்ட பெண் தன் இருபிள்ளைகளோடு வாழ்வது என்பது மிகக் கடினம். என்ன தான் சுற்றி உறவு, சொந்தம் பந்தம் இருந்தாலும். எல்லாம் ஒரு எல்லை தான். அந்த மனுஷனை கட்டின பாவத்திற்கு நான் கஷ்டப்படலாம் ஆனால் என் பிள்ளைகள் ஏன் கஷ்டப்பட வேண்டும். அவரை பிரிந்து வந்து தனியாக என் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையிலிருந்த எனக்கு! என்னால் ஏன் இங்கே இருந்து சென்று தனியாக என் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ முடியவில்லை. அதற்குக் காரணம் இந்த சமுதாயமா? இல்லை எனக்குள் இருந்த நம்பிக்கை குறைந்து விட்டதா என அவள் யோசித்துக் கொண்டே இருக்க. மணி ஒன்றாகியதைக் கவனித்தாள்.

நாளை எப்படி இருந்தாலும் லீவ் தான் சற்று தாமதமாக எழுந்துக் கொள்ளாலாம் என நினைத்து உறங்கினாள். நாளை விடியல் இவர்கள் மூவரின் வாழ்க்கைக்கு ஒரு புதிய ஒளி வீசமா!

அங்கே பாரிவேந்தனோ, கோபத்துடன் வீட்டிற்கு வந்தவன் கோபம் குறையாமல் தனது அறைக்குள் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு இருந்தவனின் கோபம் அறிந்த அவனது தங்கை முல்லை சமாதானப்படுத்தினாள். தங்கையின் முகத்தைப் பார்த்ததும் தன் கோபத்தை விட்டவன் இன்று நறுமுகையைப் பார்த்த விசயத்தையும் அதன் பின் நடந்ததையும் இப்போது அவள் பிள்ளைகளிடத்தில் பேசியதையும் கூறி முடித்தான். முல்லைக்கோ என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இத்தனை வருடம் யாருக்காகக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டு இருந்தானோ இன்று அவளைப் பார்த்துவிட்டு அமைதியாக வீட்டிற்கு வந்து இருக்கிறான். இதுவே இந்நேரம் பழைய பாரியாக இருந்து இருந்தால் வயிறு முட்டச் சரக்கு அடித்துக் கொண்டு தள்ளாடியபடி வீட்டிற்குள் நுழைந்து இருப்பான். ஆனால் இன்றோ நேரம் போனது கூட தெரியாமல் இருந்த தமையனைப் பார்த்த முல்லைக்குப் பாவமாக தெரிந்தது.

"சரிண்ணா தூங்கு நேரம் ஆகுது பார் நாளைக்கு வேற ஞாயிற்றுக்கிழமை. செம வேலை இருக்கும். இன்னிக்கு முழுக்க இந்த கிழவிக்கிட்ட திட்டு வாங்கிட்டே இருந்தேன். அதுலே எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு." எனச் சொல்லும் தங்கையைப் பார்த்து, "திட்டு வாங்கியதற்கேவா. இன்னும் வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சா அம்புட்டு தான் போல. சரி போ போய் தூங்கு. நானும் நிம்மதியா தூங்க போகிறேன்." என்று சொல்லிவிட்டு தன் தங்கையை அனுப்பி விட்டு கட்டிலில் படுத்தவனுக்கு உறக்கம் வரவேயில்லை நறுமுகையின் நினைவே அவனை இம்சை செய்தது.

என்ன ஆயிற்று அவளுக்கு ஏன் இங்கே வந்து தங்கி வேலைக்குப் போகிறாள். அவள் கணவன் எங்கே? குழந்தைகளிடம் பேசிய போது "பாப்பாக்கு ரொம்ப பசிக்குது அப்பா ஏன் எங்களை விட்டு போன?" என்று அச்சிறுகுழந்தையின் குரல் என்னை இப்படிப் போட்டு வாட்டி வதைக்கிறதே. குழந்தை முழுமையாகக் கூறி முடிப்பதற்குள் யஷ்வந்த் போனை பிடுங்கிப் பேச ஆரம்பித்துவிட்டான். அப்படி என்ன கூற வந்தாள் யவனராணி என யோசித்தவன் என்ன பேசினோம் என்று நறுமுகையிடம் கூறாமல் இருந்து விட்டான்.

எவ்வளவு முயற்சி செய்தும் நித்திரை தேவி அவனை அழைக்காமலே சென்று விட்டாள். பாவம் பாரிவேந்தனின் உறக்கம் இன்று நறுமுகையால் தொலைந்து போனது. மெல்ல எழுந்தவன் தன் அறையின் உள்ளே இருக்கும் கபோர்டில் இருந்த இரும்புப் பெட்டியை எடுத்தவன் அதிலிருந்த நாட்குறிப்பைக் கையில் எடுக்க. அதிலிருந்த நறுமுகையின் புகைப்படங்கள் கீழே விழுந்தன. அதை அனைத்தும் எடுத்தவன் சிரித்த முகத்துடன் இருந்த நறுமுகையின் புகைப்படத்தைப் பார்த்தான். ஓராயிரம் முறை இப்புகைப்படத்தை கண்டு இருப்பான். ஆனால் எப்போதும் பார்த்தாலும் புதியதாக பார்ப்பதைப் போலவே பார்த்துக் கொண்டு இருக்கிறான். நறுமுகையின் முகத்தை மெல்ல வருடியவனின் மனம் ரயில் தண்டவாளம் போல் முன்னோக்கிப் போகாமல் பின் நோக்கி ஓடியது.

நறுமுகையின் வாழ்க்கைக்கும்... அவளின் குழந்தைகளின் எதிர்க்காலத்திற்கும் விடியலைக் கொடுப்பானா பாரிவேந்தன்...
 

Dikshita Lakshmi

Well-known member
Wonderland writer
காதல் நெஞ்சம் - 7

பத்து வருடத்திற்கு முன்...

பாரிவேந்தன் பள்ளிக்குக் கிளம்பி விட்டு தன் மிதிவண்டியை மிதித்தபடி தன்னோடு ஆருயிர்த் தோழனான இதயக்கனியை அழைத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான். பாரியின் தங்கை முல்லையோ ஒரு பக்கம் தலைமுடியைப் பின்னல் இட்டு மடித்துக்கொண்டு மறுபக்கம் மீதி முடியைப் பின்னாமல் ஓடிவந்து தெருவை எட்டிப் பார்க்க தன் தமையனான பாரிவேந்தன் இன்றும் அவளை விட்டுவிட்டு அவன் நண்பன் இதயக்கனியை அழைத்துக் கொண்டுச் செல்வதைப் பார்த்து விட்டு "அம்மா! அம்மா! அந்த தடியன் இன்னிக்கும் என்னை விட்டுப் போய்ட்டான்." என்று சிணுங்கிக் கொண்டு கூறினாள்.

"ஆமாண்டி நீ சீவி சிங்காரிச்சு பத்து மணி நேரம் அந்த கண்ணாடி முன்னாடி நின்னுட்டுருப்ப அதுவரை என் பேராண்டி உனக்காக காத்துக் கிடக்கணுமா" என்று முல்லையின் பாட்டி வாயில் வெற்றிலை பாக்கை மென்றுக் கொண்டு ஒழுங்கு காட்ட முல்லைக்குக் கோபம் வந்தது.

"ஏய் கிழவி பார்த்துட்டே இரு ஒரு நாள் இல்லை ஒரு நாள் பேத்தி தான் முக்கியம்னு சொல்ல வைக்கிறேன்." என இன்னொரு ஜடையை தன் தாயிடம் சீவிக்கொண்டு தன் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வீதியில் நடக்க ஆரம்பித்தாள்.

"ஏன் அத்தை அவகிட்ட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கீங்க பாவம் சின்னப் புள்ள புத்தகப்பையைத் தூக்கிட்டு நடந்து போகணும்ல... இந்த பாரி பையனால இன்னும் ஒரு ஐந்து நிமிஷம் இருக்க முடியல. அதுக்குள்ள வெண்ணீரை காலில் ஊற்றின மாதிரி பறக்கிறான். வரட்டும் சாயங்காலம் இருக்கு அவனுக்கு சரி இந்த வருஷத்தோடு பள்ளிக்கூடம் முடிய போகுதேன்னு அமைதியாய் இருந்தா ரொம்ப ஓவரா ஆடுறான் வரட்டும் ஒரு வழி பண்றேன்." எனச் செண்பகம் புலம்பிக்கொண்டே வீட்டு வேலையை முடித்துவிட்டு வேலைக்கு கிளம்பினார்.

"அம்மா நான் என் பழைய ஸ்கூலேயே படிக்கிறேன் அம்மா இந்த புது ஸ்கூல் எனக்குச் சுத்தமா பிடிக்கல" என பதினாறு வயதே ஆன அழகு புதுமைப் பெண்ணான நறுமுகை தன் தாயின் கரத்தை பிடித்து இழுத்தபடி பள்ளிக்கூட வாசலில் நின்றுக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

"மச்சி சீக்கிரம் போடா இன்னிக்கு நாம ஸ்கூல்ல இரண்டு நியூ அட்மிஷன் வர போறாங்க, நம்ம சீனியர் கொஞ்சம் சீன் போட்டு வரலாம்" என்று பாரிவேந்தனிடம் கூறினான் இதயக்கனி. பாரிவேந்தன் தன் சைக்கிளை ஓட்டியபடி வர அவன் பின்னால் ஏதேதோ உளறிக் கொண்டு வந்த இதயக்கனியை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு பள்ளிக்கூட நுழைவாயிலில் நுழையப் போக இவர்கள் இருவரின் தோழனான மற்றொரு தோழன் வேலன் இவர்களுக்காக அருகிலிருந்த பெட்டிக்கடையில் நின்றுக் கொண்டு போற வரப் பெண்களைக் கிண்டல் செய்தபடி வாயில் புளிப்பு மிட்டாய் சப்பிக் கொண்டு நின்றான். இதைப்பார்த்த பாரிவேந்தன் தன் மிதிவண்டியை ஓரம்கட்டிவிட்டு இதயக்கனியோடு அருகில் சென்று அவனை முறைத்தான்.

"என்ன பாரி என்னை பார்த்துக்கிட்டே வர, ஆமா என்ன இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா ஸ்கூல் வந்துட்ட இன்னிக்கு பிரேயர்ல ஏதாவது நீ செய்தி வாசிக்க போறியா?" என வேண்டுமென்றே வேலன் கிண்டலாகக் கேட்கப் பாரியும் அவனைக் கீழே குனிய வைத்து கும்முகும்முனு குத்தினான்.

"ஏன்டா போற வர பொண்ணுங்களை கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கியா? அவங்க நம்ம ஸ்கூல் பொண்ணுங்க தானே! நம்ம ஸ்கூல் பொண்ணுங்களை நம்மளே கிண்டல் பண்ணலாமா." என மீண்டும் அவனை அடிக்க இக்காட்சியை முதல் முதலாகப் பள்ளிக்கூடத்துக்கு வந்துக் கொண்டிருந்த நறுமுகை கண்ணில் பட முதலில் விளையாட்டாக அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் போல என்று மனதில் நினைத்தாள், ஆனால் அவர்கள் பேசிக்கொள்வது காதில் விழவில்லை அவளுக்கு.

பாரியிடம் அடி வாங்கிக் கொண்டிருந்த வேலன் அவனிடம் இருந்து நழுவிக் கொண்டு ஓடி வந்தவன் இவளைக் கடக்கும் போது "சரியான ரவுடி பையன் டா நீ எப்படி அடிக்கிற" என வார்த்தையைக் கூறி விட்டுச் சென்றது அவள் காதில் விழ மனதில் பாரியை பற்றிய நினைப்பு சட்டென்று பதிந்துவிட்டது பாரியின் மேல் முதல் சந்திப்பே தவறாக நினைக்க வைத்தது.

( அடப்பாவி வேலன் இது உன் வேலை தானா பாரி உனக்கு ஆப்பு வெளியே இல்லடா உன் கூடவே இருக்கானுங்க டா. அவனுங்க தான் உனக்கு ஆப்பு வைக்கிறதே.)

பின் பாரி பெட்டிக்கடையில் இரண்டு புளிப்பு மிட்டாய் வாங்கி ஒன்றை இதயக்கனி இடமும் மற்றொன்றை தன் வாயில் வைத்தபடி சைக்கிளை எடுக்க அவன் காதில் பழைய பாடல் இளையராஜாவின் இசையில் "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே" என்னும் பாடலை கேட்டான். அந்த பாடல் பாரி மனதில் ஒட்டிக் கொள்ள ஏனோ அந்தப் பாடலை அவன் உதடுகளும் முணுமுணுத்தது.

"டேய் பாரி இது ரொம்ப பழைய பாட்டு டா இப்போ இருக்கிற நியூ சாங் எதாவது பாடுடா உன் வாய்ஸ்க்கு செமயா இருக்கும்." என இதயக்கனி சொல்லப் பாரியின் பார்வையோ அங்கே வாட்ச்மேனிடம் இருவர் வம்பிழுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் தன் சைக்கிளை மீண்டும் ஓரம் கட்டி விட்டு கீழே இறங்கி தன் கரத்தில் அணிந்து இருந்த காப்பைக் கையில் மேலே ஏற்றிக் கொண்டு அலை அலையாகப் படர்ந்த தலை கேசத்தை கையால் சரிசெய்தபடி அவர்கள் அருகில் சென்று அவர்களின் தலையில் நாலு தட்டு தட்டி விரட்டி விட்டான். மீண்டும் இக்காட்சியைப் பார்த்தபடி தன் பாதங்களை எடுத்து வைத்தாள் நறுமுகை அப்பள்ளிக்கூடத்தில்.

முதல் நாளே பாரியின் மேல் தவறான அபிப்பிராயம் அடுக்கடுக்காக அவள் மனதில் பதிய மீண்டும் தன் தாயின் கரத்தை பிடித்தபடி அங்கே நின்றுக் கொண்டிருந்தாள். "தான் இனி இந்த ஸ்கூலில் படிக்கப் போவதாக இல்லை என்னைப் பழைய ஸ்கூலில் சேர்த்து விடுங்கள்" என மன்றாடினாள்.

இங்கோ வாட்ச்மேன் தன் கரத்தை கூப்பி நன்றி தெரிவிக்க "ஏன் அங்கிள் அவங்களை பார்த்தால் சின்ன பசங்க மாதிரி இருக்கு. நாலு தட்டு தட்டி அனுப்பாமல் ஏன் பயந்துக்கிட்டு இருக்கீங்க. பதினேழு வயதான நானே அவங்கள பார்த்துப் பயப்படாமல் விரட்டிவிட்டேன். நாற்பது வயசான உங்களால் அவர்களை விரட்ட முடியவில்லையா?" எனக் கேட்க

"அது இல்ல தம்பி அவனுங்க என் சொந்தக்கார பயலுங்க தான் பணம் கேட்டு சண்டை போட்டானுங்க. அவங்களை என்னால் எதுவும் பண்ண முடியாது. நல்ல வேளை நீ வந்த" என அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு தன் பணியைச் செய்யத் தொடங்க. பாரி மீண்டும் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூட நுழைவாயிலில் நுழைந்தான்.

இதயக்கனி "மச்சி இதற்கு அப்புறம் சைக்கிளை எங்கேயும் நிப்பாட்டிடாம வழக்கமா நிறுத்துற இடத்தில் நிறுத்து. அப்பப்போ கீழே இறங்கி ஏற முடியல டா. பேண்ட் ரொம்ப டைட்டா இருக்கு இன்னிக்கின்னு பார்த்து" என இதயக்கனி வெட்கமே இல்லாமல் சொல்ல, பாரி திரும்பிப் பார்த்து "த்தூ" என்று அவனைத் திட்டினான்.

இரட்டை ஜடைகளை முன்னால் போட்டுக்கொண்டு... இரண்டு புத்தகத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்தை வேடிக்கை பார்த்தபடி சிணுங்கிக் கொண்டு நடந்து போனவள் பின்னால் பாரியின் சைக்கிள் வருவதைக் கவனிக்கத் தவறினாள். பாவம் தன் எதிரே ஒரு பெண் போகிறாள் என்று பார்க்காமல் இளையராஜா பாடலை மீண்டும் பாட "மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே" எனும் பாடலை முணுமுணுத்துக் கொண்டு தன் நண்பனை திரும்பி திட்டிக் கொண்டே வந்தவன் சட்டென்று பிரேக் போட.

"ஐயோ அம்மா" என்று கத்தினாள். அவன் எதிரே கண்களை மூடிக்கொண்டு காதைப் பிடித்துக் கொண்டு பயத்தில் நின்றிருந்த அவளை பார்த்த பாரிவேந்தன் அப்படியே மெய்மறந்து போனான். விழி மூடி காதுகளை கரங்களால் பொற்றிக்கொண்டு... காதோரதில் இருக்கும் மயிர்இறகை போன்ற இரு முடிகள் காற்றில் பறக்க உதடுகள் பயத்தில் நடுங்கி கரத்திலிருந்த புத்தகங்கள் கீழே சிதறிக் கிடக்க அவள் அணிந்த துப்பட்டா காற்றில் பறந்துக் கொண்டிருந்தாலும் மேனியிலிருந்து நழுவி விடாமல் சேஃப்டி பின் குத்தி எதற்காகத் துப்பட்டா அணிந்துக் கொள்ள வேண்டும் என்று அறிந்து அதற்காக அணிந்து இருந்தவளின் அழகைப் பார்க்க அவனுக்கு தன் இரண்டு விழிகள் போதவில்லை.

பின்னால் அமர்ந்து வந்த கனியோ பாரியின் முகபாவனையை வைத்தே புரிந்துக் கொண்டு "நடத்து நடத்து" எனக்கூறிவிட்டு சைக்கிளிலிருந்து கீழே இறங்கி நறுமுகை புத்தகத்தை எடுத்துக் கொண்டிருக்க அவள் தாயும் தலையில் அடித்துக் கொண்டு "இதுக்கா இம்புட்டு பயம்" என சொல்லிக்கொண்டு கனியோடு தன் மகளின் புத்தகத்தை எடுக்க ஆரம்பித்தார்.

நறுமுகையே ஒற்றை விழி பார்வையால் திறந்து பார்த்து தன் மீது சைக்கிள் மோதவில்லை என்ற நிம்மதியில் பாரிவேந்தனை கன்னாபின்னாவென்று கத்த தொடங்கினாள்.

"சைக்கிள் ஓட்டும்போது கண்ணு என்ன வானத்தில் இருக்கா ரோட்டை பார்த்து ஓட்டி வர முடியாதா ஆடத் தெரியாதவனை மேடை ஏறச் சொன்னதுபோல், சைக்கிளை ஓட்ட தெரியாத உனக்குச் சைக்கிள் கேட்குதாம்" எனச் சொல்லிவிட்டு தன் புத்தகத்தை எடுக்கக் குனியப் போக! கனியும் வேதவல்லியும் அதற்குள் புத்தகத்தை எடுத்துக் கொண்டு எழுந்தனர். நறுமுகைக்கு இது சற்று நிதானத்தைக் கொடுத்தது.

"ஏன் டி அந்த தம்பி திட்டிக்கிட்டே இருக்க! வந்த முதல் நாளே ஆரம்பிச்சிட்டியா உன்னுடைய வாய்க்கொழுப்பை" என அவள் தாய் வேதவல்லி கண்டிக்க.

"அட அம்மா இவங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்காத" என தன் தாயிடம் சொல்லி விட்டு இதயக்கனிடம் "ரொம்ப நன்றிங்க" எனக் கூறிவிட்டு தன் புத்தகத்தை வாங்கிக் கொண்டுச் செல்ல திரும்புகையில் அவளின் நீளமான துப்பட்டா பாரியின் மிதிவண்டியில் மாற்றிக் கொண்டு அவளை நகர விடாமல் செய்தது.

நறுமுகையோ தன் மேல் மோத வந்தவன் தான் தன் ஷாலை பிடித்து இழுக்கிறான் 'சரியான பொறுக்கியா இருப்பான் போல' என்று தவறாக எண்ணித் திரும்பிப் பார்க்க அங்கே பாரி தன் சைக்கிளின் முன் கம்பியில் மாட்டிய நறுமுகையின் துப்பட்டாவைக் கிழித்து விடாமல் மெல்ல எடுத்துக் கொடுத்தான். சைக்கிள் கம்பிக்கும் வலிக்காமல் அவள் அணிந்திருந்த துப்பட்டாவிற்கும் வலிக்காமல் ஒரு இன்ச் கூட கிழியாமல் அவ்வளவு அழகாக எடுத்துக் கொடுத்த அவனைப் பார்த்து நறுமுகை தாய் வேதவல்லி நன்றி கூற நறுமுகையோ "பொறுக்கி" என முனகிக்கொண்டே பள்ளிக்கூடத்திற்குச் சென்று விட இதயக்கனி,

"என்ன மச்சி நடக்குது இங்க? அவ அப்படி திட்டுகிறேன்ற பெயரில் உன்னை டேமேஜ் பண்ணிட்டு போறா. நீ என்னடான்னா இப்படிப் பல்லை காட்டிக்கிட்டு நிற்கிற என்னடா பாரி விழுந்துட்டியா?" எனக் கேட்ட தன் நண்பனின் தலையைத் தட்டி அழைத்துக் கொண்டுச் சென்றான்.

அதன்பின் நறுமுகை இருக்கும் திசைக்கே இவன் கால்களும் போக இவன் பின்னால் இதயக்கனி போக... இதயக்கனி பின்னால் வேலனும் சென்றான்.

"டேய் யாருடா அந்த பிகரு செமயா இருக்கா" என வாயை விட அடுத்த நொடி பளார்ர்ர் என்று சத்தம் வர இவர்களுக்கு முன்னால் சென்ற நறுமுகை திரும்பிப் பார்க்க இன்னும் பாரியின் மேல் வெறுப்பு உண்டானது. வேலன் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு பாவமாகக் கனியை பார்க்க அவனோ வாயை பொத்திக்கொண்டு சிரித்தான்.

'சிரிக்கிறியா நீ இருடா உன்னையும் அடிவாங்க வைக்கிறேன்' என வேலன் தன் மனதில் சபதம் எடுத்து வெளியே சிரித்தான். (நல்லா சபதம் எடுக்குறீங்க டா நீங்க.)

வேதவல்லியோ "இங்க பாருடி இந்த வருஷம் பதினொன்றாம் வகுப்பு தான்னு அசால்ட்டா இருக்காத. ஒழுக்கமா படிக்கிற வேலையைப் பாரு எப்ப பார்த்தாலும் பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ்னு சுத்திக்கிட்டு இருக்காத. முன்னாடி படிச்ச ஸ்கூல்ல பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ்னு இருந்ததால்தான், உன்னை வேற ஸ்கூலுக்கு மாத்துனேன். இங்கேயும் அதையே பண்ணாத பொம்பளை புள்ள அதை மனசில் வைச்சுட்டு ஒழுக்கமாய் இருக்கிற வழியை பாரு நான் கிளம்புறேன். ஸ்கூல் மணி அடிக்கப் போகுது எந்த கிளாஸ்னு கேட்டுக்கிட்டு போ." என அவளுக்கு மேலும் பல சில அறிவுரைகளை வழங்கி விட்டுச் சென்றார் வேதவல்லி.
 
Status
Not open for further replies.
Top