பகுதி - 10
இவர்களை நோட்டமிட்ட கண்களுக்கு சொந்தகாரனோ உடனே ராசு எண்ணிற்கு அழைக்க, அவர் முக்கியமான வேலையில் இருந்ததால் இவனின் அழைப்பை ஏற்கவில்லை.. "ஐயாவூக வேற இப்படி பண்றாங்க??" என்று யோசித்து மறுபடியும் மறுபடியும் போன் செய்து பார்க்க, சிறிது நேரத்தில் அந்த எண் ஸ்விட்ச் ஆப் என்று வர. நொடிந்து கொண்டான்..
ராசு ஏதோ முக்கிய வேலையென வேந்தனை வேண்டாம் என்று விட்டு வேறு ஒரு டிரைவருடன் நேற்று இரவே கிளம்பி விட்டிருந்தார்.. இப்படி வெளியூர் ஏதாவது சென்றால் தன் மகளை மட்டுமில்லாமல் மற்றவர்களையும் அவர்களுக்கு தெரியாமல் கவனிக்க ஆள் ஏற்பாடு செய்து விட்டு தான் செல்வார்..
அதே போன்று இந்த முறையும் அவருக்கு நம்பிக்கையான ஆட்களுக்கு கட்டளையிட்டு சென்று விட, நிலாவையும் பகலனையும் பின் தொடர்ந்து வந்த ராமசாமி வேந்தனிடம் நிலா பேசிய அனைத்தையும் கேட்டு விட்டு ராசுவிற்கு அழைக்க முயல, அவர் தான் எடுத்தபாடில்லை..
நிலா பேசி விட்டு சென்றதில் இருந்து வேந்தனின் மனது ஏதோ போன்றே இருக்க, எதிலும் நாட்டமில்லாமல் தவித்து கொண்டிருந்தான் மனதளவில்.. இது ஏன் என்று அவனுக்கே விளங்காமல் தன்னைய சமன்படுத்தி கொள்ள முயன்றும் பலன் என்னவோ பூஜ்யம் தான்..
தோட்டத்தில் யோசனையில் அமர்ந்திருந்த வேந்தனை ஏதேச்சையாக பார்த்த வனிதா அவனிடம் வந்து "வேது கண்ணா" என்று மென்னையான குரலில் அழைக்க, அவரை பார்த்ததும் எழுந்து நிற்க முயன்றவனை அமர வைத்து தானும் அவன் அருகில் அமர்ந்தவர், "என்ன ஆச்சுடா..காலைல இருந்தே உன் முகம் சரியில்ல.. உடம்பு ஏதாவது சரியில்லையா?? நம்ம வேணா ஹாஸ்பிட்டலுக்கு போலாமா???" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டார்..
அவரை பார்த்து மென்புன்னகையை வீசியவன், "எனக்கு ஒன்னுமில்ல மேடம்.. மனசு தான் ஏதோ ஒரு மாதிரி இருக்கு அதான் ஏன்னு தெரில.." என்று உள்ளே சென்ற தோய்ந்த குரலில் சொன்ன வேந்தனின் தலையை ஆதரவாக கோதிய வனிதா, "நம்ம மனசு தான் நமக்கு முதல்ல எதிரியே" என்றார் அர்த்தத்துடன்..
"இதையை நானும் ஏத்துக்கறேன் மேடம்.." என்று பவ்யமாய் கை கட்டி சொன்ன வேந்தனை செல்லமாய் முறைத்து பார்த்தார் வனிதா..
பின்பு தயக்கமாக வேந்தன், "மேடம் கொஞ்சம் நேரம் கூட மடில படுத்துக்கட்டுமா???" என்று திணறலுடன் கேட்டவனின் கண்களில் அவ்வளவு வலி தென்பட, வனிதாவிற்கு பேச்சே வராமல் தலையை மட்டும் அசைத்ததும் கீழே அமர்ந்த வேந்தன் அவர் மடியில் தலை வைத்து படுத்து கண் மூடி தன்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முயன்றான்.. இதுதான் இவன் வாழ்வின் கடைசி நாள் என்பதை இவர்கள் அறியவில்லை போலும்!!!
ராசுவிற்கு மீண்டும் மீண்டும் ராமசாமி போன் செய்ய முயல, அவரோ மாலை நேரத்துக்கு பிறகு தான் போனையே எடுக்க, இவன் என்ன சொல்ல வருகின்றான் என்பதை கூட கேட்காமல் இவனை கிழிகிழிவென்று கிழித்து விட்டார்.. கட்சி அலுவலகத்தில் இந்த முறை இவருக்கு பதிலாக வேறு ஒருவர் தான் அந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்று முடிவாகி விட, ராசுவும் முடிந்த அளவிற்கு நானே நிற்கின்றேன் என்று காலையிலிருந்து எவ்வளவோ எடுத்து சொல்லியும் தலைவர் மசிவதாக இல்லை..
அந்த கோவத்தில் வெளியில் வந்தவர் இவன் சும்மா சும்மா அழைப்பதை பார்த்து கடுப்புற்று வாயிற்கு வந்தபடி திட்டி விட, அப்போதும் ராமசாமி பதிலேதும் பேசாமல் அவர் திட்டுவதை மௌனமாக வாங்கி கொண்டார் அவர் வாங்கி தரும் குவாட்டர் பாட்டிலுக்காக..
தன் கோவம் வடிந்ததும் என்னவென்று கேட்க, "ஐயா நம்ம சோடை போய்ட்டோமுங்க.. நிலா பாப்பா நம்மகிட்ட வண்டி ஓட்டறதுக்கு புதுசா வந்துருக்க அந்த பயலை காதலிக்கறேனு அது இதுனு பேசிட்டு இருந்ததை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேங்க.. ( அடேய் அப்ப மத்தவங்க மட்டும் என்ன அஞ்சாறு கண்ணைய வெச்சுட்டு திரியறோம்??) அதுவ சொல்ல தானுங்க ஐயா நானு போனு போட்டேங்க" என்று பவ்யமாய் முழுவதையும் சொல்லி முடிக்க, அந்த புறம் இருந்த ராசுவுக்கோ கோவத்தில் நரம்பு அனைத்தும் புடைத்தது போன்று மாறியது..
அதே கோவத்தில் "நான் அங்க வர்றதுக்குள்ள அந்த ரெண்டு அநாதை பயலுகளும் ஊர்லயே இருக்க கூடாது.. நம்ம ஆளுகளை கூட்டிட்டுபோய் அவனுகளை முதல்ல அங்கிருந்து துரத்தி விடுங்கடா.. இனி ஒரு நிமிசம் கூட அந்த ரெண்டு பயலுகளையும விட்டு வெக்க கூடாது" என்று காட்டு கத்தலாய் கத்தியவர் போனை அணைத்து விட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டே, "டேய் முனிசு சீக்கிரம் வண்டியை எடுடா.. எவ்ளோ சீக்கிரம் ஊருக்கு போக முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போவனும்" என்று கட்டளையை பிறப்பித்தவர், "என்ன தைரியம் இருந்தா என் பொண்ணையே காதலிப்பான் அந்த ஒன்னுமில்லாதவன்.." என்று கோவத்தில் பல்லை நரநரவென கடித்தார்..
மதியம் இருந்தே பகலனும் கவனித்து கொண்டுதான் இருந்தான் நிலாவை.. அவளிடம் இருக்கும் துள்ளல் சுத்தமாக வடிந்து போய் காணப்பட, ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்தவன் ரனுவிடம் மெதுவாக என்னவென்று கேட்க சொன்னான்..
ரனுவும் யோசனையாக "என்ன நிலா ஆச்சு.. நானும் பார்க்கறேன் நீ சரியா சாப்பிடவும் இல்ல ஏதோ யோசிச்சுட்டே இருக்கே?? உடம்பு ஏதாவது சரியில்லயா??" என்று அக்கறையாக கேட்ட ரனுவின் தோளில் சாய்ந்தவள், "தெரில காரு.. மனசுக்குள்ள என்ன என்னவோ பண்ற மாதிரி இருக்கு.. மனசும் படபடனு அடிக்கற மாதிரி இருக்கு" என்றாள் சிதைந்த குரலில்..
"ம்ம்ம்ம்க்கும் ஒரு அப்பாவியை போட்டு இப்படி படாபடுத்துனா அப்படிதான்டி இருக்கும்" என்று தோளை இடித்து கொண்டு பகலன் சொல்ல, இதற்கு மேல் நிலா சும்மா இருப்பாள் என்று நினைக்கிறீர்களா?? அவனை கலாய்த்தே ஒரு வழியாக்கி விட, இப்போது அவளின் மனது சிறிது தெளிவாய் இருந்தது..
ரனுவை வீட்டில் இறக்கி விட, இருவரையும் உள்ளே வர சொல்ல, நிலா திறக்க போன கார் கதவை லாக் செய்த பகலன், " எம்மா ஷியா மறுபடியும் இவ ஒரு பஞ்சாயத்தை கூட்டறதுக்கா?? நாங்க மறுபடியும் இன்னொரு நாள் வர்றோம்" என்று பாவமாக சொன்னவன் இறுதியில் அழகான புன்னகையுடன் அவளிடம் இருந்து விடைபெற்று கிளம்பினான்.. இதுதான் இவர்களை பார்க்கும் கடைசி தருணம் என்பதை இவளும் அறியலர் போலும்!!!
வீட்டில் அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்தவனின் கண்ணில் நிலாவின் உறுதியான முகம் வந்து செல்ல, படக்கென்று கண்ணை திறந்தவன் தன்னை தானே நொந்து கொண்டான்.. செழியனும் இதை கவனித்து கொண்டிருந்தாலும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை..
திடுதிடுவென இருபதுக்கும் மேற்பட்ட ஆட்கள் கையில் கட்டையுடன் உள்ளே வந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்க, இவர்களுக்கு தான் ஒன்றும் புரியாமல் நிறுத்துங்க நிறுத்துங்க என்று கத்த, அவர்கள் தான் கேட்பதாய் இல்லை..
இதற்கு மேலும் பொறுமையில்லாமல் அவர்கள் எட்டி மிதித்த வேந்தன், "இப்ப நிறுத்தல இவன் கழுத்து தனியா வந்துரும்" என்று ஒருவன் கையில் கொண்டு வந்திருந்த அருவாளையே திருப்பி அவன் கழுத்திலேயே வைத்து கர்ஜனையாய் கத்த, "என்ன பூச்சாண்டி வேலை காட்டறீயா???" என்று வேந்தனை ஒருவன் அடிக்க நெருங்க, அவனை தீக்குழம்பாய் முறைத்தவன், கழுத்தில் வைத்து பிடித்திருந்த அருவாளை நொடி நிமிடத்தில் சரக்கென்று ஒரே இழுவாய் இழுத்து விட, அந்த ஆளோ ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தான்..
அவனின் செயலில் அடிக்க வந்தவன் மட்டுமின்றி மற்றவர்கள் சிறிது நடுங்கி போய் பின்வாங்கி விட, அருவாளை வாயில் பிடித்த வேந்தன் சேரில் கிடந்த தன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு "இப்ப வாங்கடா பார்க்கலாம்.. எனக்கு எப்பவும் பயங்காட்டறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது.." என்றான் காட்டத்துடன்..
பயந்து ஓடினால் ராசு தங்களை கொன்றாலும் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து நின்றவர்கள் செழியனை பார்த்ததும் ஒருவன் சட்டென அவனை இழுத்து கழுத்தில் கத்தியை வைத்து விட, வேந்தனோ பதறி விட்டான்..
"அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அப்பறம் யாரும் உயிரோட இருக்க முடியாது.." என்று அவர்களை சுட்டெரித்தவாறே சொன்ன வேந்தனை பார்த்து நக்கலாய் சிரித்தவர்கள், "அதுக்கு முன்னே இவனோட உசுரு காத்துல பறந்துருக்கும்" என்று விட்டு சிரிக்க, தன் தம்பிக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று சிறிது பயந்தவன் கோவத்தை விட்டு விட்டு "இப்ப நான் என்ன பண்ணனும்" என்றான் கண்ணை மூடி திறந்து..
"அப்படி வா வழிக்கு.. எங்க கிட்டயே உன் வேலையை காட்டறீயா?? ஒன்னுமில்லாதவனுக்கு என்ன ஐயாவூக பொண்ணு கேட்குதோ?? ஐயாவூக வர்றக்குள்ள இங்கிருந்து ஓடிரு இல்ல உன் உசுரு போகாது இவனோட உசுரு தான் போவூம்.. இப்பவும் எதாவது எடுக்கு மடக்கா பண்ணலாம்னு யோசிச்சே அவ்ளோதான் சொல்லிபுட்டேன்.. ஒழுங்க ஊரை விட்டு ஓடற வழியை பாரு.." என்று ஒருவன் சொன்னதை கேட்டதும் தான் வேந்தனுக்கே விளங்கியது எதற்கு இவர்கள் இப்படி செய்தார்கள் என்றே!!
"எல்லாம் அந்த லூசுனால.. நான்தான் முதல்ல இருந்தே சொன்னேன் கேட்டாளா அவ?? எனக்கு வர்ற கோவத்துக்கு" என்று நினைத்து பல்லை கடித்தவன் இவர்கள் மேல் இருந்த கோவம் முழுவதும் நிலாவின் மீது கொழுந்து விட்டு எரிய தொடங்கியது..
பின்பு அதே கடுகடுப்புடன்," உன் ஐயாவோட பொண்ணு என் பின்னால சுத்துனா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?? முடிஞ்சா போய் அந்த பொண்ணுகிட்ட சொல்லி புரிய வெச்சு தாராளமா வேற ஒருத்தருக்கு கட்டி வைங்க எனக்கு எந்த கவலையும் இல்ல.. இனி நீங்க இருக்க சொன்னாலும் எனக்கு இந்த ஊரும் வேணாம் உங்க ஐயா கொடுத்த பெரிய வேலையும் வேணாம்.. என்னவோ உங்க ஐயாவூக தான் பெரிய மகாராணியை வளர்த்தி வெச்சிருக்கற நினைப்பு??? நீங்க சொல்றது என்னடா நானே சொல்றேன் எனக்கு அந்த லூசு வேணாம்.." என்று தெனாவட்டாய் ஆரம்பித்தவன் இறுதியில் அலட்சியமாக சொல்லி முடித்தான்..
அப்படி இருந்தும் கோவம் இன்னும் குறையாமல் உள்ளுக்குள் ருத்ரதாண்டவம் ஆடி கொண்டிருக்க, தலையை அழுத்த கோதிய வேந்தன், "இங்க பாரு உங்களுக்கும் எனக்கு எந்த சண்டையும் இல்ல.. இப்ப என்ன நாங்க இந்த ஊரை விட்டு போகனும் அவ்ளோ தானே.. போறோம் போதுமா?!" என்று அழுத்தமாய் சொன்னதும் தான் செழியனின் கழுத்தில் இருந்து கத்தியையே எடுத்தனர்..
"உனக்கு எதுவுமில்ல தானேடா??" என்று வேந்தன் வாய் வழியாய் கேட்காமல் இருந்தாலும் அவனின் கண்ணிலேயே அந்த கேள்வி தொக்கி நிற்க, தனக்கு எதுவுமில்லயென்று மெலிதாய் புன்னகைத்தான் செழியனும்..
அவனின் கன்னத்தை தட்டியபடி உள்ளே சென்று துணிகளை எடுத்து வைக்க தொடங்க, செழியனும் பெருமூச்சுடன் உடைந்ததை சுத்தபடுத்த தொடங்கினான்.. இவ்வளவு நாட்களில் வேந்தனை பற்றி தெரிந்த வைத்திருந்ததால் அடியாட்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை தூக்கி கொண்டு வெளியில் சென்று விட்டனர்..
ஒருபுறம் நிலாவின் சின்னபிள்ளை தனமும் கள்ளகடபமில்லாத அன்பும் செழியனை கலங்க வைத்தாலும் எப்போதும் தன் அண்ணன் தான் முக்கியம் என்று நினைத்து அவர்களிடம் சொல்ல சொல்லி துடிதுடிக்கும் தன் மனதை அடக்கியவன் கிளம்ப தயாரானான்..
வேந்தனை பற்றியே நினைத்து கொண்டு நிலா அமர்ந்திருக்க, யாருக்கும் தெரியாமல் அவள் அறைக்கு வந்த வேந்தன் கதவை சாத்திவிட்டு, அவளை குறும்பாய் பார்த்து கொண்டே சத்தம் வராதவாறு அவளின் பின்னால் சென்றவன் அவளின் கழுத்தில் கூச்சத்தை ஏற்படுத்த, என்னவோ என்று பதறி துள்ளி எழுந்து நின்றாள் பேதையவள்..
அங்கு வேந்தனை எதிர்பார்க்காத நிலாவின் சிப்பி விழிகளோ ஆச்சரியத்தை கூட்டி அவனின் காந்த விழிகளையே பார்த்திருக்க, அவளிடம் நெருங்கியவன் அவளின் இடையை அழுத்தி பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்தான்..
இன்னும் திகைப்பில் இருந்து மீளாமல் அப்படியே நிலா நின்றிருக்க, அவளின் முடியை காதோடு ஒதுக்கி விட்டு அவளின் காது மடலை அழுத்தமாய் இருந்த தன் உதட்டை கொண்டு கூச செய்து தன் குறும்புகளை காட்ட அவனின் செயலில் பேதையவளின் உடம்பே சில்லிட்டு குளிர்ந்து போனது..
அவனின் செயலில் பெண்ணவளின் கன்னம் வேறு செவ்வானமாய் சிவந்து போயிருக்க, அதை தனது கரம் கொண்டு மெலிதாய் தடவியவனின் சட்டையை கொத்தாய் பற்றிய நிலா கண்ணை இறுக்கமாய் மூடி கொண்டாள்..
அவளையே பார்த்தவன் அவளின் சிவந்திருந்த கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க, ஆடவனின் சவரம் செய்யபடாத தாடி வேறு அவளின் கன்னத்தை குத்தி குத்தி கூசத்தை ஏற்படுத்தி அவளை நிலைகுலைய செய்தது என்னவோ உண்மை தான்..
வேந்தனின் ஒவ்வொரு செயலும் நிலாவை இன்னும் அவன் மேல் பித்து கொள்ள செய்ய, கண்ணை திறந்தவன் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டு, "உண்மையாவே நீ என்கிட்டயே வந்துட்டியா மகி பேபி.." என்று அத்தனை காதலாய் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் தன் காதல் காவியத்தை பெண்ணவளின் உதட்டில் வரைய தொடங்கி இருந்தான் அவளின் காதலன்...
தொடரும்...