ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உள்ளம் அலைபாயுதே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 10

“இன்னும் எவ்வளவு நேரத்துக்கு முகத்தை தூக்கி வச்சு கொண்டிருக்க போற” என்று ப்ரியாவிடம் கேட்டான் கௌதம்.

கௌதமின் அண்ணி மற்றும் குழந்தையை காண அவர்களின் இல்லத்துக்கு வந்தவளை வாசலிலே வைத்து அவள் வந்தது கூட யாருக்கும் தெரியாமல் மாடிக்கு கூட்டி கொண்டு வந்திருந்தான் கௌதம்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து நகை வாங்க சென்றதன் பின் இன்று தான் சந்திக்கிறார்கள்.

ப்ரியா கௌதமை அலைபேசியில் அழைக்கும் நேரமெல்லாம் ஒன்று அவன் கைபேசி அணைக்கப்பட்டு இருக்கும், இல்லை யாருடனாவது அலைப்பேசி அழைப்பில் இருப்பதாக வரும். ஒரு கட்டத்திற்கு மேல் கௌதமுக்கு அழைப்பை மேற்கொள்வதே விட்டுவிட்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன் கௌதமே அவளுக்கு அழைக்க, அழைப்பை நிராகரித்தாள்.

மாடிக்கு அவளை அழைத்து வந்ததிலிருந்து முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவளிடம் தான் அப்படி கேட்டான்.

“பின்ன கோவம் வராதா? நம்ம ரெண்டு பேருக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்க போகுது அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? மத்த பொண்ணுங்க மாதிரி நான் உங்ககிட்ட தினமும் மீட் பண்ணனும்முன்னா சொல்றேன். மீட் கூட இல்ல ஜஸ்ட் போன்ல பேசறதுக்கு டைம் தரீங்களா? ஒரு அஞ்சு நிமிஷம் என் கூட பேசறது கூட உன் கிட்ட டைம் இல்லையா என்ன?“ என்று வருத்தத்தோடு கேட்டாள்.

அவள் பேச்சில் இருக்கும் நியாயம் புரிந்ததும், ”நான் வேணும்னு பண்ணல ப்ரியா. ஹாஸ்பிடல்ல எனக்கு நிறைய ஒர்க். அண்ணி நேத்து போன் பண்ணி நீ இன்னைக்கு வர போறேன்னு சொன்னதும் ஹாஸ்பிடல்ல நைட்ஷிப் முடிச்சுட்டு குளிச்சிட்டு ரெஸ்ட் எடுக்காம உன்னை பார்ப்பதற்காக ஓடி வந்திருக்கேன். தூங்கக்கூட இல்ல” என்றான்.

அவன் கூறியது உண்மையென அவன் கண்களுக்கு கீழ்இருந்த கருவளையம் எடுத்துக் கூறியது.

எப்பொழுதுமே பளிச்சென்று இருப்பவன் தூக்கமின்மை, வேலைப்பளு காரணமாக கலையிழந்து காட்சியளித்தான்.

இழுத்துப் பிடித்துக் கொண்டு இருந்த கோபத்தை கைவிட்டவள், “ஏன் இப்படி இருக்கீங்க? வேலை முக்கியம் தான் அதுக்காக உடம்பு கெடுத்துக்காதீங்க” என்றாள் அக்கறையோடு.

“சீனியர் டாக்டர் வெக்கேஷன் போயிருக்காரு. அவரோடு பேஷன்ஸ் எல்லாம் நான் தான் ஹேண்டில் பண்ணிட்டு இருக்கேன். அதனாலதான் இப்படி”எனக் கூறியவன் அவள் சமாதானம் ஆகி விட்டாள் என்று விளங்கியதும் தன் கை வளைவுக்குள் அவளை இழுத்துக் கொண்டான்.

அவன் நெஞ்சில் சாய்ந்து நின்றவள், “கௌதம் யாராவது பார்த்திட போறாங்க” என்றாள் வெட்கத்தோடு.

“மாடிக்கு அடிக்கடி யாரும் வர மாட்டாங்க. நீ சொல்லு ஹனிமூன் எங்க போலாம்?” என்று அவளிடம் கேட்டான்.

முகத்தை நிமிர்த்தி அவனை பார்த்தவள், “அப்போ ஹனிமூன் போறதுக்கு மட்டும் டைம் இருக்கு” என்று அவள் கூறிட.

“அதுக்கெல்லாம் லீவு எப்பயோ அப்ளை பண்ணிட்டேன்” என கண் சிமிட்டி கூறி அவளை வெட்கப்பட வைத்தான்.

ஸ்ரேயாவின் தாயார், “ கௌதம் ” என்று படியில் நின்று அழைப்பது கேட்டதும் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

ஸ்ரேயாவின் அறையில் படுக்கையில் கிடந்த குழந்தையிடம் கொஞ்சி கொண்டிருந்தாள் ப்ரியா.

அறையின் உள்ளே நுழைந்த ஸ்ரேயாவின் தாயார் ஜெயா. ஏன் இப்படி கஷ்டப்பட்டு கொஞ்சுற மா. குழந்தையை தூக்கி வச்சு கொஞ்சு“ என்றார்.

பிறந்து ஒரு மாதம் கூட முடியாத குழந்தையை தூக்க பயந்தவள, ”இல்ல ஆண்ட்டி எனக்கு சின்ன குழந்தையை தூக்கிப் பழக்கம் இல்ல“ என்றாள்.

அதுக்கு அவர், ”என்னம்மா சின்னப்புள்ள மாதிரி பேசுற. உனக்கும் கௌதமுக்கும் அடுத்த வருஷம் கூட ஒரு புள்ள பிறக்கலாம் அப்போ நீ இப்படியே சொல்லிக்கிட்டு இருக்க முடியாது இல்ல“ என்றார் நியாயமாக.

அவரின் கூற்றில் அவள் கௌதமை வெட்கத்தோடு பார்த்தாள்.

அவள் குழந்தையை கொஞ்சும் அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் ஸ்ரேயாவின் தாயார் பேசுவதை கேட்டு, “அதுக்கு என்ன ஆண்டி. நான் குழந்தையை தூக்கிக்கிறேன் அவ குழந்தையை கொஞ்சட்டும்”என்று கூறியவன் குழந்தையை படுக்கையில் இருந்து தூக்கிக்கொண்டு அவள் அருகே அமர்ந்து கொண்டான்.

கௌதம் பேசுவதை கேட்டு “என்னமோ செய்யுங்க”என்று அறையை விட்டு வெளியேறினார் ஜெயா.

“நான் பேபிஸ் அஹ் நல்லா பத்துப்பேன். உனக்கு கஷ்டம் தர விட மாட்டேன்” என்று அவள் காதில் ரகசியம் போல் கூறி அவளை மேலும் வெட்கப்பட வைத்தான்.

“என்ன கௌதம் கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்டாட்டிக்கு சப்போட்டா” என்றாள் ஸ்ரேயா.

அவளை மடக்கும் விதமாக,“ஆமா அண்ணி நானும் அஸ்வின் அண்ணா மாதிரி மாறிட்டேன்” என்றான் கௌதம்.

ஒரு மணி நேரம் எப்படி கழிந்தது என்று கூட தெரியாமல் இருவரும் இருக்க ப்ரியாவின் தாயார் அவள் அலைபேசிக்கு அழைத்து வீட்டிற்கு நேரத்துக்கு வரும்படி கூறி விட்டு வைத்தார். இருவரும் விருப்பமே இல்லாமல் அவரவர் வீட்டுக்கு கிளம்பினார்.

சித்தப்பாவின் சூப்பர் மார்க்கெட்டில் சோகமாக அமர்ந்திருந்தான் அருண்.

“டேய் அங்க அவ்வளவு வேலை இருக்கு. நீ என்ன டா இங்க வந்து உட்கார்ந்திருக்க” என்று அருண் ஓரமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவனிடம் கேட்டார்.

நாடியில் கை வைத்து அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டான்.

“அருண் என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்டுக்கொண்டு அவன் அருகில் வந்து அமர்ந்தார்.

“போ சித்தப்பா. நானே செம காண்டுல இருக்கேன்” என்றான் கடுப்பாக,

“காண்டுல இருக்கியா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான்டா ஜாலியா இருந்த? அந்த பொண்ணு ப்ரியா எதுவும் உன்னை வேணாம்னு சொல்லிடுச்சா?”

”அதுக்கு முதல்ல மறுபடியும் நான் அவளை பாக்கணும். அன்னைக்கு அவள ஜிம்ல பார்த்ததோடு சரி. அதுக்கப்புறம் நானும் எத்தனையோ வாட்டி போய் ஒரு நாள் ஃபுல்லா வேலை கூட விட்டுட்டு ஜிம்ல இருந்தேன் ஆனா, அவ வரவே இல்ல” என்றான்.

”ஒருவேளை நீ வேற யாரையாவது பார்த்துட்டு ப்ரியான்னு நினைச்சிட்டயோ“ என்று அவர் கூறிட எரிச்சலோடு, ”சித்தப்பா என் ப்ரியாவை எனக்கு தெரியாதா?” என்றான்

“என்னது என் (N) ப்ரியா வா? அவ எஸ்(S) ப்ரியா இல்லை?” என்று கூறி அவர் நக்கல் அடிக்க,

“பெரிய ஜோக்” என்று கூறியவன் எழுந்து செல்ல முற்பட்டான்.

“டேய் மகனே கோவப்படாத. உனக்கு இப்ப அவள பாக்கணும் அவ்வளவு தானே. அவ டீடைல் சொல்லு நானே உங்க சித்திய கூட்டிக்கிட்டு உனக்கு பொண்ணு கேட்டு போறேன்” என்றார்.

”அதெல்லாம் வேணாம் சித்தப்பா. நான் முதல்ல அவ மனசுல இப்பவும் இருக்கிறேனான்னு தெரிஞ்சிக்கனும்”

அருண் இப்படி கூறவும், “அப்புறம்” என்றார் அவனின் சித்தப்பா.

“அப்புறம் என்ன. அவளும் நானும் நிறைய லவ் பண்ணனும். அதுக்கப்புறம் தான் கல்யாணம்” என்றான் கண்களில் காதல் மின்ன.

ப்ரியாவை பற்றி பேசும்போதெல்லாம் அவன் கண்களில் வெளிப்படும் காதலை பார்த்து அவரே பல நேரங்களில் வியந்து இருக்கிறார்.

அவனை பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரிடா ராஜா. நீ சொன்ன மாதிரியே பண்ணு. பில்லிங் கவுண்டர்ல ஆள் கம்மியா இருக்காங்க போயி அங்க பில்ல போடுற வேலைய பாரு” என்று அவனுக்கு வேலை சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்த்தினார்.

சலிப்பாக பில்லிங் கவுண்டரில் வந்து நின்றவன் இயந்திரம் போல கடகடவென வரிசையில் காத்து கொண்டு நின்றவர்களுக்கு பில் போடத் தொடங்கினான்.

திடீரென ஓர் அருமையான நறுமணம் அவன் நாசியை துளைக்க சுற்றி பார்வையை செலுத்தியவனின் கண் பார்வைக்குள் வந்து நின்றாள் அவனின் பிரியசகி.

அன்னையோடு சூப்பர் மார்க்கெட்டுக்கு வருகை தந்த ப்ரியா பொருட்களை எல்லாம் வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரிசையில் வந்து நின்றாள்.

ரொம்ப நேரமாக தன்னை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு பிரம்மைத் தோன்ற பார்வையை சுழல விட்டாள்.

பில் போட்டுக் கொண்டிருக்கும் நபர் அவளை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு நெற்றி சுருக்கி யாராக இருக்கும் என யோசித்தாள்.

ப்ரியாவின் பில் போடும் முறை வரவும் அருகில் அவன் வதனத்தை கண்டும் சரியாக யார் என அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை.

இருந்தாலும் அவள் ஆழ்மனம் அவன் பார்க்கும் பார்வையிலேயே அவளுக்கு நிச்சயமாக தெரிந்த ஒருவராக தான் இருக்க முடியும் என்று எடுத்து கூற, “உங்களுக்கு என்னை தெரியுமா?” அவளே நேராக கேட்டாள்.

“தெரியும்” என்று கூறியவன் அவளின் தாய் அருகில் இருப்பதை கண்டதும் பில் போடத் தொடங்கினான்.

“எப்படி?” என்று அவள் கேட்டதும் இடையில் தாரணி, “யாரு ப்ரியா உனக்கு தெரிஞ்சவரா?” என்று பேச்சில் நுழைந்தார்.

அன்னையின் கேள்விக்கு தனக்கே பதில் தெரியாததால் என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவள் விழித்துக் கொண்டிருக்க, “நான் ப்ரியாவோட காலேஜ் ஃபிரண்ட் அருண்” என்று கூறியதும் நம்ப முடியாமல் அவனைக் கண்டாள்.

அவளுக்கு தெரிந்த அருண் ஒருவனே. அப்படி என்றால் இவன் அவனா என யோசித்தவள் அவன் கண்களை கூர்ந்து பார்க்க அவனேதான் என புரிந்து கொண்டாள்.

அவள் கல்லூரியில் பார்த்த அருணுக்கும் இப்பொழுது அவள் கண்ணெதிரே இருப்பவனுக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது.

கல்லூரியில் மெலிவாய் இருந்தவன் இப்பொழுது கட்டுக்கோப்பான உடலமைப்போடும் சுருள் கேசத்தோடும் இருந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“அப்படியாப்பா, இங்க என்ன பண்றீங்க?”என்று தாரணி கேட்கவும்.

“இது என் சித்தப்பா கடை தான். இன்னிக்கி ஆபீஸ் சீக்கிரமா முடிஞ்சுதால அவருக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்” என்று கூறினான்.

நல்லது என்பது போல் கூறிவிட்டு தராணி தன் பேச்சை முடித்துக் கொள்ள அவனும் பில் போட்டு முடித்து இருந்தான்.

“ஆன்ட்டி, நாங்க ஹோம் டெலிவரி பண்றோம். உங்களுக்கு வேணும்னா எங்களை இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க” என்று கடையின் விசிட்டிங் கார்ட்டை கொடுத்தான்.

ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரியாவை ரசனையாக பார்த்தவன் அவளிடம் சாமான்கள் அடங்கிய பையை கொடுத்தான்.

அவனை திரும்பிப் பார்த்துக் கொண்டே தன் அன்னையோடு சேர்ந்தே கடையை விட்டு வெளியேறினாள்.

தொடரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 11

“என்னடி சொல்ற?” என்று ஆச்சரியமாக கேட்டாள் ஆர்த்தி.

வீட்டுக்கு வந்ததுமே முதல் வேலையாக ப்ரியா ஆர்த்திக்கு அழைத்து அருணை கண்டதாக கூறிவிட்டாள்.

“ஆமாண்டி. அது அருண் தான். காலேஜ்ல பார்த்த மாதிரி இல்ல. இப்ப பிட்னஸ் எல்லாம் பண்ணி ரொம்ப ஹாண்ட்ஸாமா இருக்கான்” என்றாள் ப்ரியா.

”ஹண்ட்ஸாமா.. பார்க்க எப்படி இருந்தான் போட்டோ ஏதாவது எடுத்தியா?” என்று ஆர்த்தி கேட்டதும், ”எங்க, நானே ஷாக்ல இருந்தேன். அவங்கிட்ட என்ன பேசறதுன்னு கூட தெரியல ரொம்ப அக்குவடா(awkward) போயிடுச்சு. இதுல அம்மா வேற பக்கத்துல இருந்தாங்க. சோ, ஒன்னுமே பேசாம வந்துட்டேன்” என்றாள்.

“அவன் உன்கிட்ட எதுவும் பேச ட்ரை பண்ணலையா?”

”இல்ல. ஆனா ஒரு மாதிரி என்னையே பார்த்துட்டு இருந்தான். கொஞ்சம் அன்கம்ஃபர்டபுளா இருந்துச்சு. ஏன் அப்படி பார்த்தான் என்று தெரியல”

ப்ரியா குழப்பமாக பேசவும், “அவன் உன்னோட பாஸ்ட். திடிருன்னு பாத்ததுல கொஞ்சம் ஷாக் ஆகிட்ட அவ்ளோ தான். சரி அதெல்லாம் விடு டாக்டர் என்ன சொல்றாரு” என்று பேச்சை மாற்றினாள் ஆர்த்தி.

கௌதமை பற்றி பேசியதும் தன் சோக கதையை தானாக சொல்ல தொடங்கினாள்.

”நீ அன்னைக்கு நான் ரொம்ப லக்கினு என்ன நேரத்துல சொன்னியோ தெரியல அது அன்லக்கி ஆயிடுச்சு”

“என்னடி சொல்ற?” என்று விவேக்கின் பானியில் ஆர்த்தி கேட்டாள்.

”அவருக்கு டே அண்ட் நைட்னு வொர்க் போயிட்டு இருக்கு டி. தூங்குறதுக்கு கூட டைம் இல்லாம சுத்திக்கிட்டு இருக்காரு. இதில் எங்க நாங்க ரெண்டு பேரும் பேசுறது” என்று சலிப்பாக பதில் கூறினாள்.

“என்னடி இப்படி சலிச்சுக்கிற. கல்யாணத்துக்காவது மாப்பிள்ளை வருவாரா?“ என்று ஆர்த்தி கேட்டதும் கௌதம் ஹனிமூன் பற்றி பேசியது ஞாபகம் வந்ததும் வெட்கத்தோடு “அதெல்லாம் வருவாரு” என்றாள்.

“அப்போ கவலையை விடு பாத்துக்கலாம்”என்று கூறி அழைப்பை துண்டித்தாள் ஆர்த்தி.

தோழியிடம் அருணை பற்றி பகிர்ந்து கொண்ட பின்பும் அவனிடம் பேச எது தன்னை தடுத்தது என்ற சுய ஆலோசனையில் இறங்கியவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.

சூப்பர் மார்க்கெட்டை அடைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அருண் தன் சித்தப்பாவிடம் ப்ரியாவை சந்தித்தது பற்றி பேச தொடங்கினான்.

“சித்தப்பா, ப்ரியா நம்ம சூப்பர் மார்க்கெட்டுக்கு அவ அம்மாவோட வந்து இருந்தா” என்று சந்தோஷமாக கூறியவனுக்கு அவளின் முகம் பயத்தில் இருந்தது போல தோன்றவும் அவனின் நேற்றியில் சிந்தனை கோடுகள் விழ தொடர்ந்து பேச தொடங்கினான், “ஆனா, அவ என்ன பாக்குற பார்வையே கொஞ்சம் அந்நியமா இருந்துச்சு. ஒரு மாதிரி பயந்த மாதிரியே பேசினா.

அப்போ எல்லாம் எப்பவுமே அவ என்ன பார்க்கும்போது அதுல ஒரு நேசம், காதல் எல்லாம் கலந்து அழகா ஒரு பார்வை பார்ப்பா. ஆனா, இன்னைக்கு என்னை பார்த்ததும் சந்தோஷப்படலைன்னா கூட பரவால சாதாரணமா கூட பேசல சித்தப்பா” என்றான் வருத்தமாக.

”டேய், கடைசியா உன்ன காலேஜ்ல பார்த்திருப்பா.அதுக்கப்புறம் இப்பதான் பாத்திருப்பா இல்லையா?” என்று அவன் சித்தப்பா கேட்டதும் ‘ஆம்’ எனும் விதமாக தலையசைத்தான்.

”அப்போ எடுத்தவுடனே அந்த பொண்ணு எப்படிடா உன் கிட்ட சிரிச்சு பேசும். உன்ன பார்த்த உடனே அந்த பொண்ணுக்கு என்ன பேசுறதுன்னு தெரிஞ்சு இருக்காது. ஷாக் ல இருந்து இருப்பா. அடுத்த வாட்டி பார்க்கும்போது சரியாயிருவா.

அது மட்டும் இல்லாம சார் அந்த பொண்ண பட்டிக்காட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி பார்த்து வச்சிருக்க. அப்ப பயப்பட தானே செய்யும்”என்று கூறினார்.

”அப்போ அவ கடைக்கு வந்தது என்ன நடந்துச்சுன்னு உனக்கு தெரியும். இருந்தாலும் நானே சொல்லணுமுன்றதுக்காக எதுவுமே கேட்காம இருந்த அப்படித்தானே?” என்று கேட்டான் அருண்.

அவர் “ஆமாம்” என்று கூற அவரை முறைத்து பார்த்தவன், ”உன்கிட்ட நானே சொல்லணும் னு ஆசையா இருந்தேன் சித்தப்பா. ஆனா எல்லாம் தெரிஞ்சும் எதுக்கு அமைதியா கேட்ட?” என்றான்.

அருணின் அருகில் வந்து ஆதரவாக அவன் தலையை தடவியவர், ”என்னதான் நான் உனக்கு அப்பா மாதிரி இருந்தாலும். நீ எனக்கு ஒரு ஃபிரண்ட் மாதிரி டா. உனக்கு என்கிட்ட என்ன வேணும்னாலும் பேசலாம் என்று தைரியத்தை நான்தான் முதல்ல கொடுக்கணும். அதனால தான் நான் உன்கிட்ட எதுவுமே தெரிஞ்ச மாறி காட்டிக்கல” என்று அவர் சொன்னதுமே தாமாக அருணின் விழிகள் லேசாக கலங்கத் தொடங்கின.

சித்தப்பா கவனிப்பதற்கு முன் கண்களை துடைத்துக் கொண்டவன், ”யோ சித்தப்பா இப்படி சென்டிமென்ட்டா பேசாத. உனக்கு சுத்தமா செட்டே ஆகல” என்று அவரை நக்கல் அடித்தான்.

இருவருமாக சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டை அடைத்து விட்டு வீட்டை நோக்கி பயணித்தனர்.

கௌதமின் தாயார் ஈஸ்வரி தாரணிக்கு அழைத்து அவர்கள் வீட்டு வாரிசுக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு அழைத்தார்.

சிவகுமாருக்கு வேலை இருந்த காரணத்தால் அவரை தவிர ப்ரியாவின் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் காலையிலேயே தயாராகி கௌதமின் இல்லத்துக்கு சென்றனர்.

மூன்று மாடி கொண்ட ஓர் அழகிய பெரிய வீடு அது. சக்ரவர்த்தியும் விஷ்வாவும் ஒரே போல் வீட்டை எதிரெதிரே கட்டிக் கொண்டனர். உறங்குவதை தவிர பெரும்பாலான நேரங்களில் அனைவரும் சக்கரவர்த்தி அவர்கள் வீட்டிலேயே நேரத்தை செலவு செய்வார்கள்.

வீட்டையே கல்யாண வீடு போல் அலங்கரித்து இருந்தார்கள் சக்கரவர்த்தியின் குடும்பத்தினர். பின்ன இருக்காதா அவர்களின் முதல் பேரனின் பெயர் சூட்டும் விழா அல்லவா.

வாசலிலே பத்து கார் விலாசமாக நிற்கக்கூடிய அளவுக்கு இடம் இருந்தது.

அவர்களின் நெருங்கிய சொந்தத்துக்கும் தொழில் நண்பர்களுக்கும் தங்கள் வருங்கால மருமகளை அறிமுகப்படுத்துவதற்காக விழ ஆரம்பிப்பதற்கு முன்னரே ப்ரியவை கூட்டி வர சொல்லி கூறி இருந்தார் ஈஸ்வரி.

வெளியே கேட்டில் நின்று வீட்டின் பிரம்மாண்டத்தை காண ப்ரியா தன் அன்னையின் கரங்களை பயத்தில் இருக்கி பிடித்துக் கொண்டாள்.

அவர்கள் செல்வ நிலையை பார்த்து தாரணியும் கூட சற்று மிரண்டு தான் போனார்.

அஸ்வின் வாசலிலேயே வருபவர்களை இன்முகத்தோடு வரவேற்று கொண்டு இருந்தவன் இவர்களைக் கண்டதும் கையோடு உள்ளே அழைத்து வந்தான்.

வீட்டின் பெண்கள் அனைவரும் ஒப்பனையாளர்களின் உதவியோடு பளிச்சென்று சுற்றிக் கொண்டிருந்தனர்.

ஈஸ்வரியும் அருணாவும் தாரணியுடன் தங்கள் நல விசாரிப்புகள் நடத்தியவர்கள் சாதாரணமாக பேச தொடங்கவும் தனித்து விடுபட்ட ப்ரியா அண்ணனை கண்களால் தேட அவனோ அஸ்வினோடு கார்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான்.

இருவரும் இன்றி தனியாக நின்று கொண்டிருந்தவளை நெருங்கிய ஆராதனா “எப்படி இருக்கீங்க?” என்று பேசத் தொடங்கினாள்.

ஈஸ்வரி ஆராதனாவை பார்த்து, “அரு அண்ணிக்கு வீட்ட சுத்தி காட்டுமா” என்று கூறிட அவளும் வீட்டை சுற்றிக் காட்ட தொடங்கினாள்.

இரண்டாம் மாடியில் இருக்கும் கௌதமின் அறை வந்ததும் ப்ரியாவை உள்ளே அழைத்துச் சென்றாள். கௌதம் குளியலறையில் இருப்பது தெரிந்ததும் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவனுக்காக காத்திருக்க தொடங்கினர்.

மனோஜ் ஆராதனாவின் அலைபேசிக்கு அழைத்து அவளை ஏதோ வேலையாக கீழே வர சொல்லவும், “அண்ணி நீங்க எங்கயும் போகம இங்கயே இருங்க. நான் இப்போ வந்துருவேன்”என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.

தனியாக அறையில் இருந்தவள் அறையை சுற்றி பார்த்தாள்.

கௌதமின் அறை டிவி, பிரிட்ஜ் என அனைத்து வசதிகளோடும் காணப்பட்டது.

விழாவுக்கு அவன் அணிய வேண்டிய குர்தா ஹங்கரில் மாட்டி கட்டிலில் மற்ற பக்கம் கிடப்பதை கண்டவள், ஓ… இவர் இன்னும் ரெடி ஆகலையா. இப்பதான் குளிக்கிறார் போல இருக்கு. அப்போ என்ன டிரஸ் போட்டு வருவாரு’ குர்தாவைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தவளின் பின்னால் வந்து நின்றான் அவள் எண்ணத்தின் நாயகன்.

இடையில் டவலை கட்டிக் கொண்டு வெறும் மேலோடு இருந்தவனை பார்த்ததும் சங்கடமாக தலை குனிந்து கொண்டவள், “சாரி உங்க பெர்மிஷன் இல்லாம ரூமுக்குள்ள வந்துட்டேன். அது ஆராதனா தான்” என்று பேசிக் கொண்டிருந்தவளின் முன் நெருங்கி வர தொடங்கினான்.

அதில் அவள் பேச்சு நின்று போகவும், “சொல்லுஆராதனாதான்..” என்று அவன் எடுத்துக் கொடுக்கவும் வெட்கத்தில் நெளிந்தாள்.

நிமிர்ந்து அறையின் கதவு திறந்திருப்பதை பார்த்தவள் பெருமூச்சு விட, அவளின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் அவளை நெருங்கி வருவதை விட்டுவிட்டு கதவை நோக்கி சென்றான்.

‘இவன் எங்கே போகிறான்’ என்று பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கதவைத் தாழ்ப்பாள் போடவும் அச்சத்தோடு “ஏன் கதவை மூடுனீங்க யாராவது பார்த்தா தப்பா எடுத்துக்க போறாங்க”என்றாள்.

“அது கொஞ்சம் டிஸ்டர்பன்ஸா இருந்துச்சு”அதுக்குத்தான் என்று கூறியவன் அவள் அருகே வந்து நின்றான்.

அறையின் வெளியே நின்று ஆராதனா ப்ரியாவை கூப்பிடவும் நிம்மதி அடைந்தவள், “நான் கிளம்புறேன்” என்று கூறி கதவை நோக்கி செல்ல,

அவள் கையைப் பிடித்தவன் சத்தமாக, “அவ கொஞ்சம் பிஸியா இருக்கா. நான் கூட்டிட்டு வரேன் நீ கிளம்பு” என்று தங்கைக்கு குரல் கொடுத்தவன், “வெயிட் பண்ணு ஒன்னா போலாம்” என்று அவளிடம் கண்ணடித்து கூறினான்.

அண்ணன் கூறுவதை கேட்டதும் சிரிப்பு சத்தத்தோடு “சரி” என்று கூறிவிட்டு சென்றாள் ஆராதனா.

“ஒன்னாவா!” என்று வாயை பிளந்து ஆச்சரியமாக கேட்டவளை கண்டுகொள்ளாமல் உடையமாற்றத் தொடங்கினான்.

அவன் உடை மாற்றுவதை கண்டதும் கையை பிசைந்து கொண்டு மற்ற பக்கம் திரும்பி நின்று கொண்டாள்.

தயாராகி முடித்தவன் ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் தலைவாரிய வண்ணம், “டிரஸ் எல்லாம் மாத்திட்டேன், திரும்பி பாரு” என்று அவளிடம் கூறினான்.

ஓரக்கண்ணால் பார்த்தே அவன் உடை மாற்றி விட்டான் என்று தெரிந்ததும், “சரி, நான் அப்போ கீழே போறேன்” என்று கிளம்புவதிலேயே இருந்தவள் அவசரமாக கூறினாள்.

“என்ன அவசரம் மெதுவா போலாம்” என்று கூறியவன் அவள் அருகில் வந்து கைபேசி எடுத்து இருவரையும் விதவிதமாக சுயப்படம் எடுக்க தொடங்கினான்.

அவள் சிரிக்காமல் இருப்பதைக் கண்டவன் சிரி என்பது போல் செய்கை செய்ய அவளும் அவனுக்கு ஒத்துழைத்து இதழ் பிரித்து சிரிக்க மேலும் இரண்டு, மூன்று சுயப்படம் எடுத்தவன் விழா ஆரம்பிக்கும் நேரம் நெருங்கவும் அவளைக் கீழே அழைத்து சென்றான்.

தொடரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 12

கௌதமும் ப்ரியாவும் ஒன்றாக வருவதை கண்டு அவர்களின் ஜோடி பொருத்தத்தை மெச்சி கௌதமின் சொந்தங்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

கௌதம் ப்ரியாவை தன்னுடனே நிறுத்திக் கொள்ள அவளும் அவர்களின் குடும்பத்தில் திருமணத்துக்கு முன்பே ஒரு அங்கமாக மாறிவிட்டதை உணர்ந்தாள்.

கொழு கொழு என்று தொட்டிலில் கை கால்களைஅசைத்துக் கொண்டு படுத்திருந்த குழந்தை தன்னைச் சுற்றி நிற்கும் அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா அனைவரையும் தன் பெரிய கண்களை விரித்து முறைத்தும் சிரித்தும் கை கால்களை அடித்துக்கொண்டு இருந்தான்.

“பார்க்க செம்ம கியூட்டா இருக்கான்” என்று கூறி குழந்தையின் பிஞ்சு விரல்களுக்கு முத்தமிட்டாள் ப்ரியா.

அவள் குழந்தையின் பிஞ்சு கைகளை தொட விரலை கெட்டியாக பிடித்துக் கொண்டது குழந்தை.

அதில் மகிழ்ந்து அவள் கௌதமைக் காண அதை அழகாக புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த நகையை இருவருமாக சேர்ந்து அணிவித்து விட அனைவரும் கைதட்டி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

அரவிந்தையும் அஸ்வின் தன்னருகில் நிறுத்தி வைத்திருக்க அவனுமே குழந்தையோடு ஐக்கியம் ஆகிவிட்டான்.

அருணாவும் ஈஸ்வரியும் பேரனுக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை போட்டுவிட கூட்டத்தில் ஒருவராய் தாரணி நின்று கொண்டிருந்தார்.

இத்தனை நாள் அவர் கண்களுக்கு புலப்படாத மாப்பிள்ளை வீட்டாரின் செல்வ நிலை இன்று அவரை அசைத்துப் பார்த்திருந்தது.

அவசரப்பட்டு விட்டோமோ. இவர்கள் செல்வநிலை தங்களோடு எப்படி ஒத்து போகும். பிற்காலத்தில் குடும்பத்தில் இதனால் ஏதும் பிரச்சினை வருமோ என்று நினைத்து கலங்கிக் கொண்டிருந்தவரின் தோளில் யாரோ தட்ட திரும்பிப் பார்த்தார்.

ஸ்ரேயாவின் தாயார் ஜெயா தாரணியை புகைப்படங்களில் ஸ்ரேயா காட்டியபோது பார்த்திருந்ததால் அவரை தூரத்தில் கண்டதுமே பேசுவதற்காக வந்துவிட்டார்.

“வணக்கம், நான் ஸ்ரேயாவோட அம்மா” என்று தன்னை முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தாரணியும் அவருடைய இயல்பாகப் பேச ஆரம்பித்து விட, “ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு. உடம்பு சரி இல்லையா?” என்று ஜெயா கேட்டு விட

அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சமாளிக்க முயற்சித்தவரை நம்பவில்லை ஜெயா.

“உங்க நிலைமையில தான் நானும் என் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது இருந்தேன். என்னடா இவ்ளோ பெரிய பணக்காரங்களா இருக்காங்களே ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்துட்டா நம்ம பொண்ண குறை சொல்லிடுவாங்களோ இல்ல நம்மை எதுவுமே பண்ணலன்னு சொல்லி குறைச்சு பேசிருவாங்களோ அப்படின்னு நிறைய தடவை கல்யாணத்துக்கு முன்னாடி வருத்தப்பட்டு இருக்கேன். ஆனா கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் இதனால் வர என் பொண்ணு கண்ண கசக்கி கிட்டு வீட்டுக்கு வந்ததே இல்லை. நாங்க என்ன கொடுத்து அனுப்பினாலும் அதை சந்தோஷமா வாங்கிட்டு போவா. அவங்க வீட்டு ஆட்களும் எங்களை எதுவுமே இதுவரைக்கும் குறைச்சு பேசினதே இல்லை. இதெல்லாம் நினைச்சு தான் நீங்க இவ்ளோ நேரமா பயந்துகிட்டு இருக்கீங்கன்னா நான் சொல்றேன் ப்ரியாவை உங்கள விட அவங்க சந்தோஷமா பார்த்துப்பாங்க” என்று கூறினார் ஜெயா.

ஜெயா கூறியதை கேட்டதுமே தன் கவலைகளை போக்குவதற்கென்றே கடவுள் அவரை தன்னோடு பேச வைத்தார் என்று நினைத்துக் கொண்டார் தாரணி.

அரவிந்த் குழந்தையின் கையில் பணத்தை வைத்துவிட்டு தாரணி அருகில் வந்து நின்று கொண்டான்.

ஸ்ரேயா அஸ்வின் தம்பதியினர் தங்கள் புதல்வனுக்கு வருண் சக்கரவர்த்தி என்று பெயர் சூட்டி அதை இருவருமாக குழந்தையின் காதில் மூன்று முறை கூறினர்.

வந்தவர்களுக்கெல்லாம் வயிறு மற்றும் மனம் நிறைய உணவருந்த வைத்தே வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர் சக்கரவர்த்தியின் குடும்பத்தார்.

நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே எஞ்சி இருக்க, “அடுத்து நம்ம கௌதம் கல்யாணத்துல தான் மறுபடியும் பார்க்க முடியும்” என்றனர்.

அதுக்கு ஈஸ்வரியும், “ஆமா தலைக்கு மேல வேலை இருக்கு. இன்னும் கார்ட் கொடுக்க ஆரம்பிக்கல. நாளைக்கு குலதெய்வ கோயிலுக்கு போய் முதல் கார்டை வச்சுட்டு வந்துடனும். சம்மந்தி நீங்களும் இங்க வந்துருங்க நாம எல்லாம் ஒண்ணா சேர்ந்து போய்க்கலாம்“ என்று தாரணியிடம் கூறிட அவரும் மறுக்க தோன்றாமல் சரி என்று கூறியவர் கணவரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டார்.

அடுத்த நாள் காலையிலேயே அனைவரும் ஒன்றாக சேர்ந்து குலதெய்வ கோயிலுக்கு வருகை தந்திருக்க அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே கோயிலை நிரப்பி இருந்தனர்.

மிதமான அலங்காரத்திலேயே தேவதை போல் காட்சியளித்த ப்ரியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கௌதம் அவளை இம்சை படுத்திக் கொண்டிருந்தான்.

சுற்றி ஆட்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அவன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு சங்கடமானவள் அவனிடம் பார்வையை திருப்பும் படி செய்கை செய்து விட்டு சாமி கும்பிடுவது போல் கண்களை மூடிக்கொண்டாள்.

மறுபடியும் கண்களை லேசாக அவள் திறந்து பார்க்க இப்பொழுதும் அப்படியே கௌதம் நிற்பதை கண்டதும் கோபமாய் அவனை முறைத்துப் பார்க்க முயற்சி செய்தவள் கடைசியாக பார்வையாலே கெஞ்ச தொடங்கி விட்டாள் ஆனால், அவன் கேட்பதாக இல்லை.

அனைவரும் நல்லபடியாக சாமியை கும்பிட்டு கோவிலின் வாசலுக்கு வர சக்கரவர்த்தி தன் குரலை சேருமிக் கொண்டு, “இன்னும் மூணு நாள்ல எல்லாருக்கும் டிரஸ் எடுக்க போகணும். உங்களுக்கு பொண்ணு மாப்பிள்ளைக்கு டிரஸ் எடுக்க அன்னைக்கு வர முடியுமா சம்பந்தி?” என்று சிவகுமாரிடம் கேட்டார்.

“அன்னைக்கு எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துடலாம் சம்பந்தி” என்று பதில் அளித்த சிவகுமார் அஸ்வின் கையில் இருந்த குழந்தையை கொஞ்சியவர், “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. நேத்து ஒரு முக்கியமான வேலை பேங்க்ல. அதான் பெயர் வைக்கிற ஃபங்ஷன் அன்னைக்கு வர முடியல” என்று அஸ்வினிடம் கூறிட.

“அதனால என்ன அங்கிள் ஒன்னும் பிரச்சனை இல்ல“ என்று கூறியவன் கௌதமை திரும்பி பார்க்க அவனோ ப்ரியாவை தவிர யாரையும் பார்ப்பது போல் தெரியவில்லை.

”ஆனா, கௌதம் எவ்வளவு பயபக்தியா மாமி.. ச்சி சாரி சாமி கும்பிட்டத இன்னைக்கு தான் பாக்குறேன்“ என்று அஸ்வின் கூறிட அனைவரும் கௌதமை பார்த்து சிரிக்க தொடங்கினர்.

ப்ரியா வெட்கத்தை மறைக்க முடியாமல் தந்தையின் பின் ஒளிந்து கொண்டாள்.

அண்ணன் இப்படி அனைவரின் முன்னாலும் தன்னை வாரி விடுவான் என எதிர்பார்க்காத கௌதம், “சரி சரி விடு அண்ணிய கல்யாணம் பண்ணும் போது நீ பண்ணாதது என்ன நான் பண்ணிட்டேன்” என்று அண்ணனின் காதில் ரகசியம் பேசினான்.

திரும்பி சிவகுமாரை பார்த்திவிட்டு அஸ்வின்

“டேய் கௌதம் உங்க மாமனார் என்ன சாப்பிடுறாருன்னு கேட்டு சொல்லு டா. உனக்கே டஃப் கொடுக்கிற அளவுக்கு பிசிக் மெயின்டெய்ன் பண்ணிட்டு இருக்காரு” என்று கூறினான்.

“ஆமாண்ணா அரவிந்துக்கு அப்பா மாதிரி இல்ல அண்ணன் மாதிரி இருக்காரு.” என்று கூறியவன் அதன்பின் அப்பட்டமாக ப்ரியா வை சைட் அடிக்கா விட்டாலும் ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொண்டான்.

அதுக்கு அடுத்த நாட்கள் தொடர் வேலைகளால் கௌதம் மருத்துவமனையை விட்டு நகர முடியாமல் இருக்க, அவனைத் தவிர அனைவரும் ஜவுளி கடைக்கு சென்று திருமணத்திற்கான ஆடைகளை வாங்கிக்கொண்டு வந்தனர்.

கௌதம் வரவில்லை என்ற கவலை ப்ரியாவிற்கு இருந்தாலும் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாள்.

மாப்பிள்ளை வீடும் பெண் வீடும் திருமண வேலைகளில் மும்முறமாய் சுற்றிக் கொண்டிருந்தனர்.

அழைப்பிதழ் வைப்பது தொடக்கம் பந்தக்கால் நடுவது வரை நடந்து முடிந்து விட்டிருக்க நாளை மறுநாள் திருமணம் என்ற நிலையில் நாட்கள் வேகமாக நகர்ந்தது.

அருண் அலுவலகத்துக்கு வந்ததிலிருந்து அவனின் வலது கண் துடித்துக் கொண்டே இருந்தது.

என்ன செய்தும் கண் துடிப்பது நிறுத்த முடியவில்லை.

உடனே அவன் சித்தப்பா விடம் இருந்து அழைப்பு வரவும் அடுத்த நொடி எடுத்து இருந்தான்.

“அருண் சித்தி காலையிலே பிரஷர் கூடி கிச்சன்ல மயங்கி விழுந்துட்டா. இப்போ ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன். நீ கொஞ்சம் கடையை போய் பார்த்துக்குறியா?” என்று கேட்டார்.

உடனே லீவை போட்டுவிட்டு கடைக்கு வந்தவன் கடையில் எல்லா வேலையும் சரியாக நடக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினான்.

கடைக்கு என்று பிரத்தியேகமாக இருக்கும் வாட்ஸாப் எண்ணுக்கு வரும் அன்றைய நாளுக்கான ஆர்டர்களை குறித்து வைத்துக் டெலிவரி செய்யும் ஆளிடம் கொடுத்துக்கொண்டிருந்தான்.

இடையிடையே சித்தப்பாவை அழைத்து சித்தியின் உடல் நிலையை பற்றி கேட்டு தெரிந்தும் கொண்டான்.

இரவு வீட்டுக்கு அனுப்பிடுவார்கள் என்று சித்தப்பா கூறியதும் நிம்மதி அடைந்தவன் தொடர்ந்து வேலைகளை பார்க்க தொடங்கினான்.

இரவு சரியாக கடையை சாத்தும் வேளையில் கடையின் வாட்ஸாப்ப் எண்ணில் இருந்து ஒரு ஆர்டர் வந்திருக்கவும் போனை ஆஃப் செய்ய போனவன் மெசேஜை தவறுதலாக திறந்திருந்தான்.

சிவா என்ற பெயரில் அந்த வாட்ஸாப் எண் இருக்கவும் ஆர்டரை பார்த்தவன் வீட்டுக்கு செல்லும் வழியில் இருப்பதால் டெலிவரி செய்ய எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைத்து ஆர்டரை பார்க்கத் தொடங்கினான்.

பெடிகிரி, பால், யோகர்ட் என்று ஆடர் வந்திருக்க அந்த மூன்று பொருட்களை மட்டும் தனியாக ஒரு கவரில் எடுத்துப் போட்டுக் கொண்டவன் கவரை எடுத்துக் கொண்டு அந்த முகவரிக்கு வண்டியை செலுத்தினான்.

பைக்கில் டெலிவரி செய்ய வேண்டிய தெருவுக்குள் அருண் நுழைந்திட அந்த தெருவே பிரகாசமாக காட்சியளித்தது. அவன் பைக் நின்ற இடத்தை விட்டு இரண்டு வீடு தள்ளி கல்யாண வீடு என்று தெரிந்ததும் பைக்கில் இருந்து இறங்கினான்.

விலாசத்தில் நம்பர் பத்து என்று இருக்கவும் அது அந்த திருமண வீடு என்று புரிந்ததும் அழைப்பு மணியை அழுத்தினான்.

வாசலில் கதவை திறந்து கொண்டு கையில் நாய் குட்டியோடு நின்ற ப்ரியவை கண்டு இன்பமாக அதிர்ந்தான்.

தொடரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 13

காலையில் உறக்கம் கலைந்ததும் உற்சாகமாக எழுந்து வந்து பால்கனியில் நின்றாள் ப்ரியா.

கையில் மருதாணியோடு இரவு தூங்கியதால் கையில் மருதாணி உதிர்ந்து சிவப்பாக காட்சியளித்தது.

அதை ரசித்துப் பார்த்தவள் கையை கழுவிக்கொண்டு வந்து வெளிச்சத்தில் நின்று சிவந்திருந்த கைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்து கௌதமுக்கு அனுப்பி வைத்தாள்.

திருமண கலை ப்ரியாவின் முகத்தில் கூடிக்கொண்டு இருந்தது.

குளித்து உடை மாற்றி கூடத்துக்கு வந்தவள் வீட்டில் மற்றவர்கள் பரபரப்பாக இருப்பதைக் கண்டு சமையலறை நோக்கி சென்றாள்.

திருமணத்துக்கு என்று தூரத்து உறவினர்கள் நெருங்கிய சொந்தம் என்று அனைவரும் வந்திருக்க வீடு முழுவதும் ஆட்களுக்கு பஞ்சம் இல்லாமல் நிறைந்திருந்தது.

சமையலறை வாசலில் அவளை கண்ட பெரியம்மா சைலஜா, “வாம்மா இந்த டீயை குடி” என்று அவள் கையில் ஒரு டம்ளரை திணித்தவர் சமையலில் கவனம் ஆகினார்.

நுரை பொங்கி இருந்த டீயை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தவள் அலைபேசி சத்தம் கேட்கவும் அறைக்குள் சென்று அழைப்பை ஏற்றாள்.

வைத்தியசாலையில் இருந்து கௌதம் தான் அவளுக்கு அழைத்திருந்தான்.

நாளையிலிருந்து அவனுக்கு மூன்று வாரத்துக்கு விடுமுறை என்பதால் இன்று மட்டும் சிரமம் பாக்காமல் வீட்டுக்கு செல்ல தாமதமானாலும் எல்லா நோயாளிகளையும் பரிசோதித்து விட்டு செல்லுமாறு மேலிடத்திலிருந்து கூறியதால் சரி என்று ஒப்புக்கொண்டிருந்தான்.

வாட்ஸாப்பில் ப்ரியா அனுப்பி இருந்த மருதாணி புகைப்படத்தை கண்டதும் உடனே அவளுக்கு அழைத்திருந்தான்.

“மிசஸ் கௌதம் என்ன செய்றீங்க?” என்று குரலில் உற்சாகம் பொங்கிட கேட்டான்.

“ஹலோ… மிஸ் ப்ரியா சிவகுமார் தான் இன்னும் நான். கல்யாணம் நடந்து முடியல” என்றாள் அவனை சீண்டி பார்க்கும் விதமாக.

”அப்போ எதுக்கு மேடம். மருதாணியில் என் பேரை போட்டு இருக்கீங்க” என்று அவன் அவளை மடக்கி கேட்டிட பதில் சொல்லத் தெரியாமல் விழித்தவள், ”அது…அது நான் போடல மெஹந்தி ஆர்டிஸ்ட் கிட்ட தான் நீங்க கேக்கணும்“ என்று கேவலமாக சமாளிக்க முயன்றாள்.

”சரி சரி இந்த பஞ்சாயத்தை நாம கல்யாணம் முடிஞ்சதும் பாத்துக்கலாம். இப்போ உனக்கு ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் கால் பண்ணேன்”என்று பீடிகை போட்டு பேச தொடங்கினான்.

“என்னது?“ என்று அவளும் ஆர்வமாக கேட்டாள்.

“உன் வீட்டு வாசலுக்கு வா” என்று அவன் கூறியதும் அலைபேசி பேசிக்கொண்டே வாசலுக்கு ஓடினாள்.

எதிர்பார்ப்போடு வாசல் கதவை திறந்து பார்க்க அங்கே யாரையும் காணவில்லை.

“இங்க யாருமே இல்லையே” என்று கூறியவள் வீட்டின் கேட்டை தாண்டி ரோட்டுக்கும் சென்று பார்த்தாள்.

”அப்படியா? யாருமே இல்லையா? சரி என்ன பண்ணலாம். சரி அப்படியே நீ வீட்டுக்குள்ள போயிரு”என்று அவளை வெறுப்பேற்றும் விதமாக கூறினான் கௌதம்.

“என்ன விளையாடுறீங்களா? இப்ப நீங்க எங்க இருக்கீங்க”

“நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன்”

“ஹாஸ்பிடல்ல இருந்துட்டு என்கிட்ட விளையாடிட்டு இருக்கீங்களா?”

”ஹலோ எனக்கு தலைக்கு மேல இங்க வேலை இருக்கும்மா. உன் கூட விளையாடுறதுக்கு எல்லாம் எனக்கு இப்போ டைம் இல்ல. மூணு வாரம் லீவு போட்டு இருக்கேன் அப்போ வேணும்னா விளையாடுவோம்” என்றான்.

அவன் கூறியதன் அர்த்தம் புரிந்ததும், “ச்சீ என்ன இப்படி பேசுறீங்க” என்று வெளியே கூறினாலும் மனதுக்குள் அவன் பேச்சை ரசிக்க தான் செய்தாள்.

“சரி பேச்ச மாத்தாதீங்க இப்போ எதுக்கு என்ன வெளில வர சொன்னிங்க?”என்று கேட்டாள்.

“இப்போ என் ஃபிரண்டு வருவான் அவன் கொடுக்கிற பார்சல் வாங்கிட்டு எனக்கு கால் பண்ணு” என்று கூறி அலைபேசியை வைத்து விட்டான்.

சொல்லி வைத்தது போல் அவன் அலைபேசியை துண்டித்த மறு நொடி வீட்டின் வாசலில் ஒருவர் பார்சலோடு நின்றார்.

அவள் வாசலுக்கு வந்ததும், “ஹாய் ப்ரியா கௌதமோட ஃபிரண்டு நான். இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னான்” என்று அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

யோசனையோடு பார்சலை அவளின் அறைக்கு தூக்கிச் சென்றவள் கட்டிலில் வைத்து அதைத் திறக்கப் போகும்போது வித்தியாசமான சத்தம் கேட்டது.

பார்சலை திறந்தவளின் கண்கள் ரெண்டும் ஆச்சரியத்தில் விரிந்தன.

பார்சல் பெட்டிக்குள் மூன்று வாரமே ஆன கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் குட்டி அப்பாவியாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது.

நாய் குட்டியை பார்த்த சந்தோஷத்தில் அதைத் தூக்கி முத்தமிட்டாள்.

“பாக்க எவ்வளவு க்யூட்டா இருக்கு” என்று வாய்விட்டு கூறியவள் அதை தடவி கொடுக்க தொடங்கினாள்.

அந்தப் பக்கம் இவள் அழைப்புக்காக காத்துக் கொண்டிருந்த கௌதம் அவள் அழைக்கவில்லை என்றதும் அவனே அவளுக்கு அழைத்தான்.

கௌதமின் நம்பரை கண்டதும் அழைப்பை ஏற்றவள், “சாரி சாரி பப்பிய பார்த்ததும் கால் பண்ண மறந்துட்டேன்” என்று மன்னிப்பு கேட்டாள்.

“நாய்க்குட்டிய பாத்ததும் என்னை மறந்துட்ட அப்படித்தானே” என்று கோபம் போல் கௌதம் கூறிட.

“கோவப்படாதீங்க. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என்று அவள் கூற

“கேவலமா சமாளிக்காத. நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண கால் பண்ணல. எனக்கு கொஞ்சம் எமர்ஜென்சி அதனால் உடனே போகணும் அதான் கிப்ட் புடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டுட்டு வைப்போமுன்னு எடுத்தேன்” என்றான்.

”ரொம்ப புடிச்சிருக்கு“ என்றாள் நாய்க்குட்டியைமடியில் வைத்து தடவிக் கொண்டு.

“உனக்கு நான் குடுக்குற வெட்டிங் கிஃப்ட் இதுதான். என்ன பெயர் வைப்போம்?” என்றான்

“பாக்க குக்கி மாதிரி இருக்கான். பேசாம குக்கின்னுவச்சுருவோமா?”

“உன் இஷ்டம்” என்று கூறியவன் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு கூடத்துக்கு வந்தவள் தாய், தந்தை, அண்ணன், உறவினர்கள் என்று எல்லோருக்கும் குக்கியை காட்டினாள்.

தலைக்கு மேல் திருமண வேலைகள் இருப்பதால் சிறிது நேரம் குக்கியோடு விளையாடிவிட்டு அவரவர் வேலைகளை பார்க்க ஒருவர் பின் ஒருவராக கலைந்து சென்றனர்.

நாய் குட்டியோடு தனித்த விடப்பட்ட ப்ரியா நாயின் பசியை போக்க வீட்டில் இருந்த பழைய பாத்திரத்தில் நாய் குட்டிக்கு பாலை ஊற்றி குடிக்க கொடுத்தாள்.

நாளை மண்டபத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பெட்டியிலும் புகுந்த வீட்டுக்கு என்று எடுத்துச் செல்ல வேண்டிய பெட்டியிலும் உடைகளையும் அடுக்குவதற்காக அவளின் பெரியம்மாவின் உதவியை நாடினாள்.

தாரணி ப்ரியாவுக்கு என்று புதிதாக வாங்கிய சுடிதார்களையும் புடவைகளையும் சைலஜா அழகாக மடித்து ப்ரியாவிடம் கொடுக்க அவள் அதைப் பெட்டியில் நேர்த்தியாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

இதில் இடைப்பட்ட நேரத்தில் குக்கி நன்றாக ஒரு உறக்கத்தை போட்டு எழுந்திருந்தது.

அந்தி சாய்ந்து மாலை ஆகிடவும் குக்கிக்கு தேவையான பொருட்களை எல்லாம் சீட்டு ஒன்றில் எழுதி வேலை செய்பவர்களிடம் வாங்கி வர சொல்லலாம் என்று நினைத்தவள் அவர்களைத் தேட எல்லோருமே ஏதோ ஒரு வேலையில் மூழ்கி இருக்க யாரையும் தொந்தரவு செய்யாமல் வந்துவிட்டாள்.

வெளி வேலைகளை முடித்துக் கொண்டு வந்த சிவகுமார் குக்கியை பற்றி ப்ரியாவிடம் விசாரிக்க, “அவனுக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்பா. உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது சூப்பர் மார்க்கெட்ல டெலிவரி பண்ணுவாங்களா?” என்றாள்.

எப்போதோ தாரணி தன்னிடம் கொடுத்திருந்த சூப்பர் மார்க்கெட் விசிட்டிங் கார்டின் ஞாபகம் வர அதை அறையில் தேடி எடுத்துக் கொண்டு வந்தார்.

தானே அந்த சூப்பர் மார்க்கெட் எண்ணிற்கு வாட்சப்பில் ப்ரியா சீட்டில் எழுதி வைத்திருந்த பொருட்களை ஆடர் செய்தார்.

அரவிந்த் டெகரேஷன் சம்பந்தமாக சில சந்தேகங்களை கேட்பதற்காக தந்தையை தேடி வந்தவன் அவரை கையோடு அழைத்துச் செல்ல முற்பட மகளின் கையில் தன் அலைபேசியை கொடுத்துவிட்டு சென்றார் சிவக்குமார்.

நேரமாக குக்கி பசியில் சத்தம் போட தொடங்க வீட்டிலிருந்த பால் முடிந்து விட்டதால் என்ன செய்வது என்று யோசனையில் இருந்தவள் வீட்டின் அழைப்பு மணியின் சத்தத்தில் நாய்க்குட்டியை தூக்கிக் கொண்டு வாசல் கதவை திறந்தாள்.

வாசலில் அருண் நிற்கவும் அவனைக் கண்டு ஆச்சரியப்பட்டவள் அன்று அவனை சூப்பர் மார்க்கெட்டில் கண்டது நினைவு வரவும் உற்சாகத்தோடு, “ஹாய் அருண், உங்களை நான் இங்க மீட் பண்ணுவேன்னு நினைச்சு கூட பாக்கல. காலேஜ் டைம்ல இருந்ததை விட இப்போ ஆளே மாறிட்டீங்க. லைஃப் எல்லாம் எப்படி இருக்கு?” என்று சாதாரணமாக பேச தொடங்கினாள்.

பல நாள் ப்ரியாவை சந்திப்பதற்காகவே ஜிம்மில் நாள் முழுதும் காத்துக் கிடந்தவன் இன்று எதிர்பாராமல் சந்திக்கவும் இன்ப அதிர்ச்சியில் அவனுக்கு பேச்சு வர மறுத்தது.

அவன் அமைதியாக இருப்பதை கேள்வியாக பார்த்தவள், “ஏன் ஒன்னுமே பேச மாட்டேங்கிறீங்க?அன்னைக்கு பார்த்தப்போ உங்ககிட்ட நான் எதுவும் பேசல அதனால் என் மேல ஏதாச்சு கோவமா?“ என்று கேட்டாள்.

உடனே மறுப்பாக தலை அசைத்தவன் மனதுக்குள் ‘நான் எப்படி உன் மேல் கோபப்படுவேன் ப்ரியா’ என்று கூறிக் கொண்டான்.

“அப்புறம் ஏன் பேச மாட்டேன்றீங்க?” என்று கேட்டவள், “வீட்டுக்குள்ள வாங்க” என்று அவனை உள்ளேஅழைத்தாள்.

தயக்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்தவன் வீடு மொத்தமும் ஆட்கள் இருப்பதை கண்டதும் யோசனையோடு அவள் பின்னே சென்றான்.

கூடத்தில் அவனை அமர வைத்தவள் சமையல் அறைக்குள் சென்று அவனுக்காக காபி தயாரித்து எடுத்து வந்தாள்.

நன்றி கூறி அதைப் பெற்றுக் கொண்டவன் மிதமான சூட்டில் இருந்த காபியை மெதுவாக குடித்தான்.

அவன் அருகில் இருந்த ஒற்றை சோபாவில் அமர்ந்தவள், “எப்படி இருக்கீங்க?” என்று அவனிடம் கேட்டாள்.

“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” என்று கேட்டான்.

“நான் நல்லா இருக்கேன்” என்று சிரித்த முகமாக கூறியவள் அவன் மிரட்சியாக வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவள் “ஃபீல் கம்ஃபர்டபில்” என்று கூறினாள்.

சரி என்று தலையாட்டியவன், “வீட்ல ஏதாச்சும் ஃபங்ஷனா” என்று கேட்டான்.

அதற்கு ஆமாம் என்று தலையசைத்தவள், “பில் எவ்வளவு?” என்று அவனிடம் கேட்டாள்.

அவன் அதெல்லாம் வேண்டாம் என்று கூற, “பிசினஸ் வேற பர்சனல் வேற. இப்படி ப்ரியாக்கு ஃபிரியா கொடுக்க பாக்காதீங்க” என்று கூறியவள் ஆர்டர் செய்த பொருட்களுக்கான விலையை அவனை வற்புறுத்தி தெரிந்து கொண்டு பணத்தை எடுக்க உள்ளே சென்றாள்.

திரும்பி வரும்போது ஒரு கையில் பணமும் மறுக்கையில் ஒரு அழைப்பிதழோடு வந்தவள், “தப்பா எடுத்துக்காதீங்க அருண். உங்களோட கான்டெக்ட் என்கிட்ட இல்ல இருந்து இருந்தா கண்டிப்பா உங்களை இன்வைட் பண்ணி இருப்பேன். பார்த்த இடத்துல வச்சு இன்வைட் பண்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நாளைக்கு நீங்க கண்டிப்பா வரணும்”என்று பணத்தையும் அழைப்பிதழையும் சேர்த்து கொடுத்தாள்.

மனதில் ஒரு நெருடலுடனே அழைப்பிதழை பிரித்துப் பார்த்தவனுக்கு இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

தொடரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 14

மணமகள் என்ற இடத்தில் சுதா ப்ரியா என்று இருப்பதை கண்டதுமே நெஞ்சில் ஒரு வலியை உணர்ந்தான்.

அவள் கண்களை நேராக சந்திக்க முடியாமல் தரையை பார்த்து சிறிது நேரம் யோசித்தவன் திடீரென “அப்போ நீ என்னை லவ் பண்ணுது?”என்று கேட்டான்.

முதலில் தன் செவியில் கேட்டது உண்மைதானா என ஸ்தம்பித்து நின்றாள் ப்ரியா.

அவன் கேட்ட கேள்வியில் அதிர்ச்சியில் நின்றவள், “அது நடந்து நாலு வருஷம் ஆயிடுச்சு. எனக்கு உங்க மேல கிரஷ் இருந்தது உண்மைதான். உங்களுக்கு வேறொரு பொண்ணு மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் விலகி போய்ட்டனே. இப்போ எதுக்கு சம்பந்தமே இல்லாம இப்படி கேக்குறீங்க?”என்று பயத்தோடு கூறினாள்.

“அப்போ நீ என்னை மறந்துட்டு மூவ் ஓன் பண்ணிடியா ப்ரியா” என்றான்.

“நீங்க கேக்குறது உங்களுக்கே தப்பா தெரியலையா. எனக்கு உங்க மேல விருப்பம் இருக்குன்னு சொன்னேன். உங்களுக்கு வேற யாரையோ புடிச்சிருக்குன்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் நாம ரெண்டு பேருமே பேசிக்கல. இப்போ வந்து என் கல்யாணத்துக்கு கூப்பிடறப்போ, இப்படி சொன்னா என்ன அர்த்தம்?” என்றாள் எரிச்சலாக.

வியர்த்து வடிந்திருந்த முகத்தை இரண்டு கைகளாலும் துடைத்தவன் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துக் கொண்டான்.

“உன்கிட்ட ஒன்னு சொல்லணும். எனக்கு காலேஜ் டைம்ல உன்ன தான் புடிக்கும். நீ வசதியான வீட்டு பொண்ணு நீயே வந்து என்ன புடிச்சி இருக்குன்னு சொல்லும்போது சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, உனக்கே தெரியும் நான் காலேஜ்ல அவரேஜ் ஸ்டுடென்ட். என்னால நீ எக்ஸ்பெக்ட் பண்ற லைப் ஸ்டைல் சப்போர்ட் பண்ண முடியாது. அதனால நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு என்னோட காதல உன் கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன். அதுக்கு எனக்கு இந்த நாலு வருஷம் தேவைப்பட்டது. இப்ப சொல்லு உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க ஓகேவா?” என்று கேட்டான்.

கூடத்தில் இருவரும் ஓரமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் யாரும் இவர்களைப் பெரிதாக கவனிக்கவில்லை.

நெடுநாள் கழித்து சந்தித்த சொந்தங்கள் பேச்சு சுவாரசியத்தில் சத்தமாக பேசிக் கொண்டிருந்ததால் இவர்களின் உரையாடல் யாரின் செவியிலும் விழவில்லை.

அருண் கேட்ட கேள்வியில் கோபத்தின் உச்சிக்கு சென்றவள், “இல்லை எனக்கு புரியல. என்ன பாத்தா பொம்மை மாதிரி இருக்கா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. நான் உங்களை விரும்புறேன் என்று சொல்லும்போது எனக்கு உன்ன புடிச்சிருக்கு ஆனா எனக்கு கொஞ்சம் டைம் தா அப்படி சொல்லி இருந்தா இப்படி ஒரு நிலைமைக்கு நாம இரண்டு பேருமே வந்து இருக்க மாட்டோம். உங்களுக்கும் புடிச்சிருக்குங்குற விஷயத்தை நீங்க என்கிட்ட சொல்ல மாட்டீங்க. ஆனா நான் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கணும். இது உங்களுக்கே பைத்தியக்காரத்தனமா தெரியல. நான் இப்ப சொல்றதை நல்லா மைண்ட்ல ஏத்திக்கோங்க. எனக்கு கௌதமை ரொம்ப புடிச்சிருக்கு. நான் கௌத்தமை தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க இப்ப கிளம்பலாம்” என்றாள் முடிவாக.

ப்ரியாவின் பேச்சில் அதிர்ந்தவன் அவளின் கையை பிடித்து கெஞ்ச தொடங்கினான்.

“ப்ரியா ப்ளீஸ், என்னை விட்டு போகாத. நான் உன்னை நல்லா பாத்துப்பேன். உன்ன ரொம்ப லவ் பண்றேன்” என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இடியாக ஒரு கரம் அவன் கன்னத்தில் இறங்கியது.

இருவரும் அதிர்ச்சியோடு திரும்பி பார்க்க அங்கே சிவக்குமார் ருத்ரமூர்த்தியாக நின்று கொண்டிருந்தார்.

அவனை தந்தை அடித்த பயத்தில் அழ தயாராக இருந்த ப்ரியாவை ஆதரவாக பிடித்துக் கொண்டார் தாரணி.

“யார் வீட்டில் வந்து என்ன வேலை பார்த்துகிட்டு இருக்க” என்று மறுபடியும் அவர் கன்னத்தில் அறையசெல்ல கனவுலகில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்தான் அருண்.

அவள் அழைப்பிதழை கொடுத்ததற்கு பின் நடந்த அனைத்தும் அவன் கற்பனையே.

“என்ன ஆச்சு உங்களுக்கு ரொம்ப நேரமாவே அமைதியா யோசிச்சிட்டு இருக்கீங்க?

நாளைக்கு மறக்காம கல்யாணத்துக்கு வந்துருங்க” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே தாரணியும் சிவகுமார் வந்துவிட்டார்கள்.

தான் கற்பனை செய்தது போல் நடந்தாலும் பரவாயில்லை உண்மையை கூறிவிடலாம் என்று நினைத்த அருண் “ப்ரியா…” என்று அழைக்கும் போதே அந்த இடத்திற்கு வந்தாள் ஆர்த்தி.

அருணை பார்த்து அதிர்ச்சியில், “அருண் வாட் அ சப்ரைஸ் உன்னை இங்க பார்ப்பேன்னு எக்ஸ்பெக்ட்பண்ணல. எப்படி இருக்க?” என்று கேட்டாள்.

“குட்” என்று அவன் ஒரு வார்த்தையில் முடித்து கொள்ள ப்ரியாவிடம் திரும்பி, “எங்கடி கௌதம் கொடுத்த கிஃப்ட்” என்றாள்.

சைலஜா பெரியம்மாவிடம் இருந்த குக்கியை தூக்கிக் கொண்டு வந்த ப்ரியா ஆர்த்தியிடம் காண்பித்தாள்.

“சோ க்யூட்” என்று கூறிய ஆர்த்தி குக்கியை கையில் வாங்கி கொண்டாள்.

அருண் மறுபடியும் பேச முயற்சிக்கும் போது அவன் அலைபேசி இசைக்க அழைப்பை ஏற்று காதில் வைத்தவனுக்கு சுற்றி இருந்தவர்களின் பேச்சு சத்தத்தில் ஒன்றுமே கேட்கவில்லை.

அலைபேசியை எடுத்துக்கொண்டு அருண் வெளியேறவும் தோழிகள் இருவரும் குக்கியோடு அறைக்குள் நுழைந்தனர்.

வெளியே வந்தவன், “இப்ப சொல்லுங்க சித்தப்பா” என்று கூறவும் அழைப்பின் அடுத்த முனையில் கூறிய விஷயத்தை கேட்டதும் உடனே பைக்கில் மருத்துவமனை நோக்கி கிளம்பி விட்டான்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அருணின் சித்தி சுகுணா.

அருணின் பெற்றோர்கள் இருவரும் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போதே விவாகரத்து செய்து பிரிந்து கொண்டார்கள்.

நீதிமன்றத்தில் அருண் யாரோடு இருக்க விருப்பப்படுகிறான் என்று கேட்ட பொழுது தனக்கு யாரும் வேண்டாம் என்று கூறிவிட்டான்.

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகளை பார்த்து வளர்ந்ததால் இருவரிடமுமே அருண் விலகியே இருந்தான்.

அவர்களுமே அருணை ஒரு கடமையாக பார்த்தார்களே தவிர அவனை பாசமாக நடத்தியது இல்லை.

சிறுவயதிலிருந்தே தன்னுடைய தந்தையுடைய தம்பி திவாகரிடம் மட்டுமே இணக்கமாக நடந்து கொள்வான் அருண்.

பெற்றோரின் விவாகரத்துக்கு பின் சிறிது நாள் தந்தையோடும் சிறிது நாள் தாயோடும் வாழ்ந்து வந்தவன் காலேஜ் ஆரம்பிக்கவும் தனியாக ஹாஸ்டலில் தங்கி படிக்க தொடங்கினான்.

படிப்புக்கு தேவையான கட்டணத்தை மட்டுமே தன் பெற்றோரிடமிருந்து வாங்கினானே தவிர தன் தனிப்பட்ட செலவுகளை தானே சின்ன சின்ன வேலைகளுக்கு சென்று பார்த்துக்கொண்டான்.

திவாகருக்கும் சுகுணாவுக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் இவனை பாசமாகவே பார்த்துக் கொண்டனர்.

அருண் சின்ன வயதில் தன் பெற்றோரின் சண்டையை பார்த்து அழும் சமயங்களில் அவனை ஒரு தாயாக வந்து அரவணைத்தது சுகுணா என்பதால் அவரின் மேல் அவனுக்கு ஒட்டுதல் அதிகம்.

இப்படி தன் மேல் பாசம் வைத்த ஜீவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது அவனால் மட்டும் எப்படி தன் வாழ்க்கையைப் பற்றி மட்டும் சுயநலமாக யோசிக்க முடியும் அதனால் தான் உடனே கிளம்பி வந்து விட்டான்.

தோய்ந்து போய் அமர்ந்திருந்த திவாகரின் அருகில் சென்று அமர்ந்தவன், “என்னாச்சு சித்தப்பா” என்றுகேட்டான்.

“தெரியல டா. நல்லா தான் இருந்தா. திடீரென மயக்கம் போட்டுட்டா. ரொம்ப நேரமா எல்லாரும் உள்ள போறாங்க வராங்களே தவிர எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. அதுதான் உன்ன கூப்பிட்டேன்” என்று கூறியவர் அருணின் தோளில் சாய்ந்துக் கொண்டார்.

தன்னுடைய பிரச்சனை எல்லாம் ஒருபுறமாக தள்ளி வைத்த அருண் தன்னை சார்ந்தவர்களுக்குதுணையாக நிற்பது முக்கியம் என முடிவு செய்தான்.

இரவே நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பதிவு செய்திருந்த அறைகளுக்கு வந்துவிட்டார்கள் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார்.

ரகு ஹோட்டலுக்கு தங்க வராத காரணத்தால்
ஆர்த்தியும் ப்ரியாவும் ஒரே அறையில் தாங்கிக் கொள்ள முடிவு செய்திருந்தனர்.

ஆர்த்தி மெத்தையில் படுத்ததுமே உறங்கி விட்டாள். பாவம் ப்ரியா தான் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து உறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

தலையணை அருகில் இருந்த அவளின் கைபேசி வைப்ரேட் செய்ய இந்த நேரத்தில் யார் என்று எடுத்துப் பார்த்தாள்.

“தூங்கிட்டியா?“ என்று கேட்டு கௌதமிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.

“இல்லை” என்று பதிலளித்துவிட்டு அவனின் அடுத்த குறுஞ்செய்திக்காக காத்திருக்க தொடங்கினாள்.

“அப்போ கதவை திற” என்று ஐந்து நிமிடம் கழித்து குறுஞ்செய்தி வரவும் பதட்டமானவள் “யாராவது பாத்துட்டா பிரச்சனை ஆயிடும் நான் திறக்க மாட்டேன்” என்றாள்.

“ரூம்ல ஆர்த்தி இருக்கான்னு எனக்கு தெரியும். ஆர்த்தி இருக்கும்போது உன்னை நான் என்ன பண்ணிட போறேன்” என்றான்

சரி என்று கண்ணாடியில் முகத்தையும் உடையையும் எப்படி இருக்கின்றது என்று பார்த்துவிட்டு திருப்தியாக இருக்கவும் உடனே சென்று கதவைத் திறந்தாள்.

வாசலில் ஹூடி போட்டு தலையை மறைத்துக் கொண்டு நின்றிருந்தான் கௌதம்.

அறையின் வெளிச்சத்தில் அவன் முகத்தை கண்டவள், “ஏன் இப்படி கொள்ளைக்காரன் மாதிரி மூஞ்சிய மறச்சிட்டு வந்து இருக்கீங்க”என்றாள்.

“அப்ப எல்லா ரூமையும் தட்டி நான் ப்ரியா ரூமுக்கு போறேன்னு சொல்லிட்டு வரட்டுமா?” என்றான் நக்கலாக.

“எனக்கு என்ன தாராளமா சொல்லுங்க” என்று கையைக் கட்டிக் கொண்டு கூறினாள்.

“அப்படியா இரு எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வரேன்” என்று அவன் போக முற்பட அவன் கையைப் பிடித்து அறைக்குள் இழுத்தாள்.

இழுத்த வேகத்தில் அவன் மீதே மோதி நின்றாள்.

இதுதான் சமயம் என்று அவனும் அவளை அணைத்துக் கொள்ள அவன் நெஞ்சில் இருந்து முகத்தை நிமிர்த்தியவள், “ஃபிராடு” என்று கூறினாள்.

படுக்கையில் உறக்கத்தில் இருந்த ஆர்த்தி மற்ற பக்கம் புரண்டு படுக்க ப்ரியாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பல்கனிக்கு கூட்டி வந்தான்.

பதினைந்தாவது தளத்தில் இவர்களின் அறை ஒதுக்கப்பட்டு இருந்ததால் மொத்த ஊரும் அந்த இனிமையான இரவு வேளையில் அழகாய் தெரிந்தது.

கௌதமின் கைவளையத்துக்குள் இருந்துக் கொண்டு “பியூட்டிஃபுல் சிட்டி இல்ல” என்றாள்.

“ஆமா. 30 வருஷமா இதே ஊர்ல தான் இருக்கேன். அப்ப எல்லாம் விட. இப்போ இந்த நிமிஷம் உன் கூட சேர்ந்து இங்க இருந்து பாக்குறது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்று கூறி அவளின் செவியில் முத்தமிட்டான்.

அவன் முத்தம் தந்த குறுகுறுப்பில் திரும்பிப் பார்த்தவளின் முகம் வெட்கத்தில் சிவந்து போயிருந்தது.

கடிகாரத்தில் நேரம் பார்த்தவன் இரவு மணி பண்ணிரண்டாகவும், “ஹேப்பி வெட்டிங் டே டு அஸ்” என்று கூறி ஆத்மார்த்தமாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“குட் நைட். நல்லா தூங்கு” என்று கூறி விட்டு அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.

கெளதம் அறையை விட்டு சென்ற பின்பும் அவன் தந்த முத்தத்தின் குறுகுறுப்போடு மெத்தையில் வந்து படுத்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top