ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உள்ளம் அலைபாயுதே- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 05

வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு செல்ல பயணித்துக் கொண்டிருந்தான் கௌதம்.

பாதி வழியில் வந்து கொண்டிருக்கும் வேளையில் அன்னையிடமிருந்து அலைபேசி அழைப்பு வர எடுத்துப் பேசினான்.

குரலில் கனிவோடு, “கண்ணா அம்மாவோட சுகர் டேப்லெட் மறக்காமல் வாங்கிட்டு வரியா?” என்று மகனிடம் கேட்டார் ஈஸ்வரி.

அன்று காலையில் தான் வைத்தியரை கண்டு விட்டு வந்திருந்தார் ஈஸ்வரி. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அதற்காக வைத்தியரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்று பார்ப்பது வழக்கம். அப்படி சென்றிருந்த வேளையில் மருத்துவமனையில் மருந்தை வாங்காமல் மறந்து வீடு திரும்பி இருந்தார்.

காலையில் இருந்து மருத்துவமனையில் வேலை புரிந்த களைப்பிலிருந்தவனுக்கு அன்னையின் கவனக்குறைவான செயல் கோவத்தை கிளப்பியது. இருந்தும் கோவத்தை அடக்கிக் கொண்டு, “சரி பிரிஸ்கிரிப்ஷன் அனுப்புங்க வாங்கிட்டு வரேன்”என்றான்.

கடந்த ஒரு வாரமாகவே வீட்டில் வேலை அதிகம் ஈஸ்வரிக்கு. நான்கு நாட்களுக்கு முன் தான் வீட்டில் ஸ்ரேயாவுக்கு வளைகாப்பு நடத்தி அவள் பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். அது முடியவும் வீட்டின் தினசரி வேலைகளும் உடல் உபாதைகளும் சேர்ந்துக்கொள்ள எதிலும் கவனம் செலுத்த முடியாமல் சுற்றிக் கொண்டிருந்தார் அவர். இப்பொழுது மகன் வைத்தியர் தந்த மருந்து சீட்டை கேட்கவும் எங்கே வைத்தோம் என்று கூட அவருக்கு நினைவில்லை.

இதை சொன்னால் மகன் திட்டுவான் என தெரிந்தும்வேறு வழி இல்லாமல், “அது எங்க வச்சேன்னு ஞாபகம் இல்லையே” என்றார் அப்பாவியாக.

அடக்கி வைத்திருந்த கோவம் வெளியே வரவேண்டும் என்று அடம் பிடிக்க தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன், “சரி வாங்கிட்டு வந்துடறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

காரின் டேஷ்போர்டில் இருந்த அவனுடைய பிரிஸ்கிரிப்ஷன் பேடை (prescription pad) எடுத்தவன் அன்னையின் மாத்திரையை எழுதிவிட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் இருந்த மருந்து கடையில் நிறுத்தினான்.

கடையனுள்ளே நுழையும் போதே ப்ரியா அவள் அன்னையோடு நிற்பதை கண்டவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க அவர்கள் அருகே சென்றான்.

அரவிந்த் பெரியப்பாவை ஞாயிறு வரவழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் அண்ணனிடம் அடுத்த வாரம் வர சொல்லி கூறியிருந்தார் சிவகுமார்.

ப்ரியாவுக்கு வரன் பார்ப்பதில் தாரணி ஆர்வமாக இருப்பதால் அப்பாவும் மகனும் ஒரு அளவுக்கு மேல் அதை எதிர்ப்பது இல்லை.

மகளுக்கு வரன் பேசி நிச்சயதார்த்தம் செய்த பின் ஒரு இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறி தாரணி இருவரையும் சம்மதிக்க வைத்திருந்தார்.

ஒரு வாரம் கழித்து ஊரிலிருந்து வந்த சிவகுமாரின் அண்ணன் கஜேந்திரன் அவர்கள் வீட்டிலே தங்கிவிட்டார். மாலையில் கஜேந்திரனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கவும் அவருக்கு தேவையான மருந்தை வாங்குவதற்காக வந்திருந்தார்கள் தாரணியும் ப்ரியாவும்.

ப்ரியா தன் கையில் வைத்திருந்த மருந்து சீட்டை வழியில் எங்கோ தவற விட்டிருக்க அதற்கும் அன்னையிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருந்தாள்.

இருவரையும் நெருங்கியவனுக்கு நிலைமை புரிந்தது.

அவள் மருந்து சீட்டை தொலைத்து விட்டாள் என்று தெரிந்ததும், ‘என் அம்மாவுக்கு ஏத்த மருமக நீ தான்’ என்று மனதுக்குள் கூறிக்கொண்டபடி,

“ஹாய்”என்று ப்ரியாவை பார்த்து கூறியவன்தாரணியிடம் திரும்பி உங்களுக்கு ஏதாவது “உதவி வேண்டுமா?” என்றான்.

அவர்களும் மருந்து சீட்டு தொலைந்த கதையை கூற, “உங்களுக்கு மருந்து பேர் ஞாபகம் இருக்கா” என்று கேட்டான்.

மருந்து பேர் ஞாபகம் இல்ல ஆனா “பெரியப்பாக்கு கால் பண்ணி கேட்கலாம்” என்று கூறிய ப்ரியா பெரியப்பாவுக்கு அழைத்து வழக்கமாக அவர் பயன்படுத்தும் ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்தின் பெயரை கேட்டு தெரிந்துக்கொண்டாள்.

மருந்தின் பெயரை கூறியதும் தன்னிடமிருந்த சீட்டில் அதை எழுதியவன் கடைக்காரரிடம் சீட்டையும் பணத்தையும் கொடுத்து மருந்தை பெற்றுக் கொண்டான்.

தாரணியின் கையில் கஜேந்திரனின் மருந்தை கொடுத்தவன் அவர்கள் வற்புறுத்தியும் பணத்தை வாங்காமல் ஒரு புன்னகையோடு இருவரிடமிருந்து விடை பெற்று காரின் அருகே சென்றான்.

காரின் இருக்கையில் அமர்ந்து கௌதம் வண்டியை ஸ்டார்ட் செய்ய காரின் கதவைத் தட்டினாள் ப்ரியா.

அவளுக்குப் பின் தூரத்தில் தாரணி நின்று கொண்டிருக்க கார் கண்ணாடியை கீழ் இறக்கியவன் புருவத்தை ஏற்றி இறக்கி “என்ன” என்று கேட்டான்.

மெல்லிய குரலில் அன்னைக்கு கேட்காத வன்னம், “கல்யாணத்தை பத்தி கேட்டீங்க இல்ல. வீட்ல மாப்பிள பாக்குறாங்க” என்று நாணத்தோடு கூறியவள் கையில் இருந்த காசை அவன் கையில் வைத்து விட்டு கிளம்பினாள்.

அவள் பேச்சில் ஸ்தம்பித்து போய் நின்றவன் அவள் காசை கையில் திணித்துவிட்டு செல்லவும் குழம்பிப்போனான்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து உடனே மாப்பிள்ளை வீட்டில் பேசி பெண் பார்க்க அழைக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருந்தார் கஜேந்திரன்.

வீட்டில் பெரியப்பா பார்க்கும் மாப்பிள்ளையை விட கௌதமை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற முடிவில் இருந்தாள் ப்ரியா.

சொல்லி வைத்தாற் போல் கௌதமை மருந்து கடையில் கண்டதும் அவனிடம் பேச வேண்டும் என முடிவு செய்துக்கொண்டாள்.

பணத்தை வாங்காமல் அவன் மருந்தை கொடுத்து விட்டு சென்றதும் அன்னையின் கையில் இருந்த பணத்தை வாங்கியவள் அதை அவனிடம் கொடுத்துவிட்டு வருவதாக கூறி அவன் கார் அருகே சென்றாள். தாய்க்கு கேட்கக்கூடாது என்று குரலை தாழ்த்தி விஷயத்தை கூறிவிட்டு வந்துவிட்டாள்.

வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரியிடம் மருந்தை கொடுத்தவன் குளிக்க சென்று விட்டான்.

ப்ரியா பேசிவிட்டு சென்ற அர்த்தம் புரிந்ததும் மனசுக்குள் குத்தாட்டம் போட்டவன் குளிக்கும்போது கூட அன்னையை எப்படி தானாகவே மறுபடியும் அவர்கள் வீட்டுக்கு செல்ல வைப்பது என யோசித்தான்.

சாப்பாடு மேசையில் சக்கரவர்த்தியும் அஸ்வினும் அமர்ந்திருக்க அவர்களுடன் கௌதமும் இணைந்ததும் அனைவருக்கும் பரிமாற தொடங்கினார் ஈஸ்வரி.

தாயின் மூலமாகவே மறுபடியும் தன் திருமண பேச்சைஎப்படி ஆரம்பிப்பது என்று சிந்தித்து கொண்டு இருந்தான் கௌதம்.

மூளைக்குள் பல்ப் எரியவும், “அம்மா இன்னைக்கு அந்த பொண்ணை பார்த்தேன்”என்றான் மொட்டையாக,

“எந்த பொண்ணு?” என்றார் அவர்.

“அதுதான் எனக்கு பொண்ணு கேட்டு போனீங்களே அந்த பொண்ணு” என்றவன் தன் வேலை முடிந்தது என்பது போல உணவில் கவனமாக தொடங்கினான்.

மகன் தானே வந்து வம்படியாக அந்த பெண்ணை பற்றி பேசியும் சந்தேகம் கொள்ளாத அப்பாவி தாய், “ஆமாங்க நானும் மறந்தே போயிட்டேன். இவன் சொல்ல தான் எனக்கு ஞாபகம் வருது. அந்த பொண்ணோட அப்பா நம்பர் என்கிட்ட இருக்கு. நீங்க ஒருவாட்டி பேசி பார்க்கிறீங்களா?“ என்று கணவரிடம் கேட்டார் ஈஸ்வரி.

”சரி நீ நம்பர் கொடு நான் பேசி பார்க்கிறேன்“ என்றவர் உடனே சிவகுமாருக்கு அழைத்தார்.

”வணக்கம், நான் சக்கரவர்த்தி எஜி கன்ஸ்ட்ரக்ஷன் (AG constructions) கம்பெனி ஓனர் பேசுறேன். பேங்க் மேனேஜர் சிவகுமாருங்களா“ என்று கேட்டவரின் குரலில் தற்பெருமை ஜாஸ்தியாக இருந்தாலும் அதே நேரம் மரியாதையும் இருந்தது.

அந்தப் பக்கம் இருந்த சிவகுமார், ”நானே உங்களுக்கு கூப்பிடலாம்னு இருந்தேன். ஆனா நம்பர் எங்கேயோ மிஸ் பண்ணிட்டேன்“ என்றார் தன்மையாக.

சிவகுமார் தன்மையாக பேசியதும்

”அதனால என்ன. என்ன முடிவு பண்ணி இருக்கீங்க?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சக்கரவர்த்தி.

முதல்வாட்டி அண்ணன் மகளுக்கு வரன் பார்க்கும் நேரமே மகளுக்கு காலில் அடிபட்டது. இப்பொழுது மறுபடியும் அதே போல் அண்ணனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் சிவகுமாருக்கு அபசகுணமாக தோன்றியது. அதனாலேயே அந்த வரனை கைவிட சொல்லி கஜேந்திரனிடம் அவர் பேசிக் கொண்டிருக்க சரியாக அந்நேரத்தில் அழைத்திருந்தார் சக்கரவர்த்தி.

தானாக தேடி வரும் வரனை கைவிட விரும்பாமல், “அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு பொண்ணு பாக்க வர தோதுப்பாடுங்களா?”என்று சிவகுமார் கூற,

மனைவியிடம் கேட்டுவிட்டு சக்கரவர்த்தியும் சரி என்று கூறினார்.

நடப்பது அனைத்தையும் ஒரு நமட்டு சிரிப்போடு பார்த்த கௌதம் மனதுக்குள், ‘பிளான் சக்சஸ்’ என கூறிக்கொண்டான்.

தம்பியின் சிரிப்பை கண்டு சந்தேகப் பார்வையை அஸ்வின் வீச, கௌதம் முகத்தை சகஜமாக வைத்துக்கொண்டான் .

இரவு 9:00 மணிக்கு அவரவர் அறைகளில் அடுத்த நாள் வேலைக்கு செல்வதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்ததால் சக்கரவர்த்தி அழைத்ததை அறையில் இருந்த மனைவியிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டார் சிவக்குமார்.

ஒரு வாரம் நேரம் இருப்பதால் பொறுமையாகவே பெண் பார்க்கும் நிகழ்வுக்கான வேலைகளை செய்து கொள்ளலாம் என்றும் மனைவியிடம் சேர்த்து சொன்னார்.

மருந்து கடையில் கௌதமை சந்தித்ததும் இப்பொழுது அவனின் பெற்றோர் அழைத்து பெண் கேட்பதும் வைத்து கௌதமிற்கு மகளைப் பிடித்திருக்கின்றது என்று புரிந்து கொண்டார் தாரணி.

காலையில் விஷயத்தை பிள்ளைகளுக்கு கூறலாம் என முடிவு செய்து இருவரும் நித்திரையில் ஆழ்ந்தனர்.

விடிந்ததும் வேலைக்கு கிளம்பி கொண்டு இருந்த மகளை பிடித்து அவர் விஷயத்தை கூற தாயிடம் முகத்தில் எந்த பாவனையும் காட்டாது அமைதியாக இருந்தாள்.

அவர் அந்த பக்கம் சென்றதும் கௌதமின் எண்ணை முதல்முறையாக பூரிப்போடு சேமித்து வைத்தவள் வேலைக்கு செல்ல ஆயத்தமானாள்.

விஷயம் கேள்விப்பட்ட கஜேந்திரனுக்கு தம்பியின் செயல் வருத்தத்தை அளித்தாலும் ப்ரியாவுக்கு தான் பார்த்த வரனை விட வசதியான குடும்பம் அமைந்து இருக்கிறது என்று தெரிந்ததும் சந்தோஷத்தோடு ஊருக்கு கிளம்பினார்.

நாட்கள் வேகமாக நகர்ந்து பெண் பார்க்கும் நாளும் வந்து சேர்ந்தது.


தொடரும்...
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 06

சக்கரவர்த்தியின் குடும்பத்தார் சிவகுமாரின் வீட்டின் எட்டு பேர் அமரக்கூடிய சோபாவை நிறைத்தும் இடம் பற்றாமல் டைனிங் டேபிள் கதிரைகளிலும் அமர்ந்திருந்தனர்.

சக்கரவர்த்தி குடும்பம் மற்றும் அவரின் தம்பியின் குடும்பம், மகேஷ் உட்பட மேலும் சில சொந்தக்காரர்கள் அவர்களுடன் வந்திருந்தனர்.

பச்சை வண்ண சேலை உடுத்தி கை நிறைய தங்க வளையல்களுடன் கழுத்தில் அவள் எப்போதும் அணியும் மெல்லிய சங்கிலியும் அதனோடு பெரிய அட்டிகையும் அணிந்து இருந்தாள். அவள் அசையும் போதெல்லாம் அவள் காதில் இருந்த லோலாக்கும் சேர்ந்து அசைந்தாடியது. கண்களுக்கு மை தீட்டி. நெற்றியில் சின்ன சிவப்பு பொட்டிட்டு கூந்தலை பின்னி இருந்தாள் பெண்.

பார்ப்பவர்களுக்கு தான் ஒரு ஷோகேஸ் பொம்மை போல் காட்சியளிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு எப்போதடா நாம் இந்த அலங்காரத்தை கலைப்போம் என்று இருந்தது.

வந்தது முதல் தன்னை பார்வையால் கூட தீண்டாமல் இருந்த ப்ரியாவை கண்டு கௌதமின் புருவங்கள் சுருங்கின. அவள் எவ்வளவு மறைத்தும் அவன் கண்களுக்கு மட்டும் அவளின் எரிச்சலான முகபாவனை தென்பட்டது.

அவளின் முக அலங்காரத்தை கண்டதுமே தெரிந்துவிட்டது யாரோ ஒரு ஒப்பனை கலைஞர் மூலமாகத்தான் அலங்காரம் செய்து இருக்கிறாள் என்பது.

இயற்கையிலேயே அழகான பெண்ணை மெருகேற்றுகின்றேன் என்ற பெயரில் மேக்கப்பை அள்ளி அப்பிருக்கிறார் என்பது அப்பட்டமாக தெரிந்தது.

சமையலறையில் இருந்து தட்டில் அனைவருக்கும் காப்பி கலந்து கொண்டு வந்த சைலஜா அதை ப்ரியாவிடம் கொடுத்தார்.

ஊருக்குச் சென்ற கஜேந்திரன் தம்பியின் மகளுக்கு வரன் அமைந்துவிட்டது என்று அவர் மனைவி சைலஜாவிடம் கூற அடுத்த பஸ்ஸிலேயே கணவரை அழைத்துக் கொண்டு அவர்களுக்கு கூட மாட ஒத்தாசையாக இருப்பதற்கு வந்துவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்கும் வைபவத்திற்கு வெள்ளிக்கிழமையே பலகாரம் செய்ய தொடங்கிவிட்டார்.

தாரணி கூட, “அவள பொண்ணு பாக்க தான் வராங்கஅக்கா… கல்யாணம் இல்லை” என்று கூறி கிண்டல் அடித்து விட்டார்.

அவர்களின் பிள்ளைகள் இருவரும் படித்து திருமணம் முடித்து வெவ்வேறு நகரங்களில் வசிப்பதால் தனிமையில் இருக்கும் கஜேந்திரனுக்கும் சைலஜாவுக்கும் சிவகுமாரின் பிள்ளைகள் மேல் எப்பொழுதுமே ஒரு தனி அன்பும் அக்கறையும் இருந்தது.

ப்ரியாவும் அரவிந்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை அடிக்கடி ஊருக்கு சென்று பார்த்து வருவதும் உண்டு.

பெரியம்மா கையில் இருந்து தட்டை வாங்கிய ப்ரியா வெளியே சிரித்தபடி இருந்தாலும் உள்ளே சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

முதலில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தியிடம் காப்பியை நீட்ட அவரும் பிரியாவை பார்த்து சிரித்த முகத்துடனே பெற்றுக்கொண்டார்.

அடுத்து அவரின் அருகில் கௌதம் அமர்ந்து இருந்தான். வெள்ளை நிற ஷர்ட் மற்றம் அதற்கு பொருத்தமாக பேஜ் கலர் பேண்ட் அணிந்து தாடி ட்ரிம் செய்திருந்தான்.

அவனின் அருகே வந்த ப்ரியா அவன் முன்னே தட்டை நீட்ட தட்டை கையோடு எடுத்தவன், அனைவருக்கும் அவனே காப்பியை கொடுக்க தொடங்கினான்.

அவன் செயலில் பதட்டமான தாரணி, “தம்பி நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க?” என்றார்.

“இதுல என்ன இருக்கு ஆன்டி. என் வீட்டு ஆட்களுக்கு தானே கொடுக்கிறேன்” என்றவன் வெறும் தட்டை அவனுக்கு முன் இருந்த மேசையில் வைத்து விட்டு அமர்ந்து விட்டார்.

அவன் தட்டை வாங்கியதுமே குழப்பத்தில் சிலை போல் நின்றவள் அவன் அனைவருக்கும் காப்பி கொடுப்பதை பார்த்து அவளின் பெரியம்மாவின் அருகே வந்து நின்று கொண்டாள்.

கௌதமின் நடவடிக்கையில் அசந்து போன சைலஜா, “மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவரா இருக்காரு. நம்ம ப்ரியா கொடுத்து வைச்சவள்”என்று தாரணியிடம் அவர் கூறுவது ப்ரியாவுக்கு நன்றாகவே கேட்டுவிட சந்தோஷமும் வெட்கமும் சேர்ந்து தலையை குனிந்து கொண்டாள்.

காபி பருகி முடித்ததும் ஈஸ்வரி, “நானே என் பையன பத்தி பெருமையா சொல்ல கூடாது. இந்த காலத்து பசங்க எல்லாம் காதலுன்னு சுத்தும்போது அதெல்லாம் பண்ணாம நல்லா படிச்சு சிட்டில பெஸ்ட் ஹாஸ்பிடல்ல கார்டியாலஜிஸ்டா இருக்கான்” என்று அவன் பெருமை கூற,

அவர் சொன்னதை கேட்டதும் தன்னிடம் அவன் தன் காதல் கதைகளை கூறியது நினைவு வர பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கினாள் ப்ரியா.

குனிந்து நின்று கொண்டிருந்தவள் இப்பொழுது நிமிர்ந்து கௌதமை கடைக் கண்ணால் பார்க்க அவனுக்கோ சங்கடமாக இருந்தது.

தாயைப் பார்த்து, “அம்மா ப்ளீஸ்” என்றான் அவன்.

“ஏன்டா வெட்கப்படுற உண்மைய தானே சொன்னேன்” என்றார் அவர்.

“எங்க பொண்ணும் தங்கமான பொண்ணு தான். அவளுக்கு இந்த லவ் எல்லாம் சுத்தமா பிடிக்காது. அம்மா அப்பா காட்டுற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லுவா“ என்றார் சைலஜா.

இதைக் கேட்டதும் இவ்வளவு நேரம் மனதுக்குள் சிரித்துக் கொண்டு இருந்தவள் அதிர்ச்சியாக பெரியம்மாவை திரும்பி பார்த்துவிட்டு கௌதமை காண அவனோ கைக்குட்டை பயன்படுத்தி இருமி சிரிப்பை மறைத்து கொண்டிருந்தான்.

சக்கரவர்த்திக்கு நேரத்தை விரையம் செய்வது பிடிக்காது.

அதனால் நேராக விஷயத்துக்கு வந்தவர், “எனக்கு ரெண்டு பசங்க. அஸ்வின் என்கூடவே என்னோட பிசினஸ பார்த்துக்கிறான். கௌதம் கார்டியாலஜிஸ்டா ஹெல்த் கேர் ஹாஸ்பிடல்ல வொர்க் பண்ணி கை நிறைய சம்பாதிக்கிறான். அது மட்டும் இல்லாம என்னோட கம்பெனியில் அவனுக்கான ஷேர்ஸ் இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் அவனோட ஷேர் பாதி உங்க பொண்ணு பேருக்கு வந்துரும். என்னோட மூத்த மருமக ஸ்ரேயா, விஷ்வாவின் மருமகன் மகேஷுக்கும் அப்படிதான் பண்ணியிருக்கேன். மூத்தவனுக்கு இன்னும் ரெண்டு வாரத்துல குழந்தை பிறக்கப் போகுது. அது முடிய ரெண்டு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம் என்ன சொல்றீங்க“ என்று கேட்டார்.

ரெண்டு மாதம் என்று அவர் சொன்னதும் அரவிந்த் மற்றும் சிவகுமார் இருவரும் யோசனையில் முகம் சுருங்க,

“என்ன ஆச்சு சிவகுமார் ஏதாச்சும் பிரச்சனையா அமைதியா இருக்கீங்க?” என்றார் கௌதமின் சித்தப்பா விஷ்வா.

“அது ரெண்டு மாசம்னு சொன்னிங்களா…அதுக்குள்ள எப்படி என்று தான் யோசிக்கிறோம்” என்று தயக்கத்தோடு கூறினார் தாரணி.

விஷ்வாவின் அருகில் அமர்ந்திருந்த அவரின் மனைவி அருணா, “அதுக்கு என்னங்க வேலை அண்ட் செலவு இரண்டையும் பாதியா பிரிச்சுப்போம். உங்க பொண்ணுக்கு உங்களுக்கு என்ன போடணும்னு தோணுதோ அதை மட்டும் போட்டு அனுப்புங்க. வரதட்சணை என்று சொல்லி எதுவும் வாங்குற நிலைமையில நாங்க இல்ல. அப்படித்தானே அக்கா”என்று அவர் ஈஸ்வரிடம் கேட்க,

“ஆமா நீங்க செலவு பற்றி யோசிக்காதீங்க” என்று கூறி எல்லோரும் அவர்கள் பணத்தைப் பற்றி யோசித்து கூறுவதாக நினைத்தனர்.

மௌனத்தை கலைத்த சிவகுமார், “பணத்தை பத்தி எல்லாம் பிரச்சனை இல்லைங்க. என் பொண்ணுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையுமே சிறப்பாக தான் செஞ்சிருக்கேன் இனிமேலும் செய்வேன். எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு அவளை இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணி கொடுக்கணுமா என்றுதான் யோசனையா இருக்கு” என்று தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

“ஒரு பொண்ண பெத்தவறா நீங்க சொல்றது எனக்கு நல்லாவே புரியுதுங்க. என் பொண்ணுக்கும் உங்க பொண்ணு வயசு தான் இருக்கும். நம்பி எங்க வீட்டுக்கு அனுப்பி வையுங்க. நாங்க நல்லா பாத்துக்குவோம்”என்று பக்குவமாக எடுத்து கூறினார் அருணா.

தங்கையை தொடர்ந்து ஈஸ்வரியும், ”அது மட்டும் இல்ல கௌதமுக்கு இந்த ஆடி வந்தா 30 வயசு. உங்க பொண்ணு ஜாதகத்தை நீங்க அனுப்புனப்போ ஜோசியர் கிட்ட காட்டினோம் பத்துல ஏழு பொருத்தம் இருக்கு. உடனே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டாரு” என்று எந்தவித ஒளிவு மறைவும் இன்றி பேசினார் அவர்.

வீட்டின் பெரிய மனுசனான கஜேந்திரன், “அவங்க தான் இவ்வளவு தூரம் சொல்றாங்களே ப்பா. நாம என்ன தூரத்திலா கட்டி கொடுக்க போறோம். ஒரே ஊர்ல தானே இருக்க போறீங்க. தோணுற நேரம் ஒரு எட்டு போய் பாத்துட்டு வர்றதுல என்ன இருக்க போகுது. அப்பாவும் பையனும் நல்ல முடிவா சொல்லுங்க” என்று கூறி அவர் தன் சம்மதத்தையும் தெரிவிக்க,

சிவகுமார் அவரின் மனைவி மற்றும் மகனின் முகத்தை கேள்வியாக பார்க்க அவர்களும் சம்மதமாக தலையசைக்க மகளை பார்த்து, “நீ சொல்லுமா என்ன முடிவு பண்ணி இருக்க?உனக்கு மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா?” என்று கேட்டார்.

என்னதான் கௌதமை பிடித்து இருந்தாலும் 'வாழ்நாள் பூராக இவரோடு நான் சந்தோஷமாக வாழ்வேனா?' என்று தன்னிடமே கேள்வி கேட்டு பதில் தேடிக் கொண்டிருந்தாள் ப்ரியா.

கௌதம் இருந்த திசையில் அவள் பார்வையை செலுத்த, அவனோ இவளின் முகத்தை சந்தோஷமாக பார்க்க அந்தப் பார்வை தந்த நம்பிக்கையில் சம்மதம் என்று அவள் கூறிட அனைவருமே சந்தோஷத்தில் கொண்டாடி தீர்த்தனர்.

ஈஸ்வரி ஆராதனாவின் கையில் பூவை கொடுத்து அவளின் வருங்கால அண்ணிக்கு வைக்க சொல்ல, அவளும் சந்தோஷமாக பூவை ப்ரியாவிற்கு வைத்துவிட்டு அவளை தன் அருகில் அமர்த்திகொண்டாள்.

அவளுக்கு பூ வைப்பதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர் அஸ்வினும் அரவிந்தும்.

பெரியவர்கள் அனைவரும் ஜோசியருக்கு அழைத்து திருமண நாளை குறித்துக் கொண்டு ஒரு பக்கம் இருக்க,

இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து கதையடித்துக் கொண்டு இருந்தனர்.

“அதுதான் கல்யாணம் முடிவாகிருச்சே ரெண்டு பேரும் ஒண்ணா நில்லுங்க போட்டோ எடுப்போம்” என்று கூறி இருவரையும் அருகில் நிக்க வைத்து படத்தை எடுத்து தள்ளினான் மகேஷ்.

புகைப்படம் எடுக்கும் போது அவளின் தோள் அவன் நெஞ்சில் உரசிட இருவருக்குமே ஒருவித சிலிர்ப்பாக இருந்தது.

வெட்கத்தோடு ப்ரியா கௌதமை நிமிர்ந்து பார்க்க அவனும் வசீகரமாக சிரித்தது அவளுக்கு மேலும் கூச்சத்தை கூட்டியது.

அஸ்வின் கைபேசியில் காணொளி அழைப்பில் வந்த ஸ்ரேயா, ப்ரியாவோடு பேசி ஐக்கியமாகி கைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டனர்.

கௌதம் உரிமையோடு ப்ரியாவின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பெரியோர்கள் இவர்களை மனநிறையோடு பார்த்தனர்.

தொடரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 07

பெண் பார்த்து உறுதி செய்த பின் ப்ரியா கௌதம் இருவரும் அலைபேசியில் அவர்களின் உறவை வளர்த்துக் கொண்டனர்.

சங்கீத ஸ்வரங்கள் பாட்டில் வருவது போல் விடிய விடிய பேசவில்லை என்றாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டனர்.

அவள் என்னவள், அவன் என்னவன் எனும் எண்ணம் இருவர் மனதிலும் துளிர்க்கத் தொடங்கியது.

இருவருமே திருமணத்துக்கு விடுப்பு எடுக்க வேண்டிய காரணத்தால் அன்றாட அலுவலக வேலைகளை சொன்ன நேரத்தில் முடித்து திருமணத்துக்கு தேவையான விடுப்பை இப்பொழுதே விண்ணப்பித்திருந்தனர்.

அருணாவும் ஈஸ்வரியும் காலில் சக்கரத்தை கட்டாத குறையாக கல்யாண ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தனர்.

ஒரு வாரம் கழித்து ஸ்ரேயா ஆண் குழந்தையை ஈன்றெடுக்க மருத்துவமனையில் வாசம் செய்தனர் சக்கரவர்த்தியின் குடும்பம்.

நடு இரவில் குழந்தை பிறந்திட, இந்த சந்தோஷமான செய்தியை ப்ரியாவிடம் சொல்ல நடு சாமம் என்றும் பாராமல் அவளுக்கு அழைத்திருந்தான் கௌதம்.

ஹலோ என்ற அவள் குரலிலேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

இருந்தும் தங்கள் வீட்டில் ஒருத்தியாகப் போகும் தன் வருங்கால மனைவியிடம் தான் சித்தப்பா ஆகிவிட்ட சந்தோஷ செய்தியை கூறி விட வேண்டும் என்ற ஆவலில் அவளுக்கு அழைத்திருந்தான்.

“நல்ல தூக்கத்திலிருந்தியா ப்ரியா? ரியலி சாரி. ஆனா இந்த விஷயத்தை உன்கிட்ட சொல்லாம என்னாலஇருக்க முடியல” என்று அவன் உற்சாகமாக பேச,

கனவில் அவனோடு ரொமான்ஸ் டூயட் ஆடி கொண்டிருந்தவளுக்கு அவன் அர்த்த ராத்திரியில் அழைத்து பேச, ‘ஏன் இப்படி பேசுகிறான். ஒருவேளை தன்னை காதலிப்பதாக கூற போகிறானோ’ என்ற எதிர்பார்ப்பில் கண்ணை கசக்கி தேய்த்து கொண்டு தூக்கத்தை தூரத் தள்ளி வைத்தவள், “சொல்லுங்க” என்றாள் எதிர்பார்ப்போடு.

“நான்... நான் சித்தப்பா ஆகிட்டேன். நீ சித்தி ஆகிட்ட ” என்றான் குதூகலமாக.

ஏமாற்றத்தை மறைத்து கொண்டு “இத சொல்லவா இவ்ளோ எக்சைட் ஆனிங்க” என்றாள் சாதாரணமாக,

அவள் குரலில் இருந்த வேறுபாட்டை உணர்ந்தவனின்சந்தோஷ மனநிலை கொஞ்சம் மட்டு பட, “ஏன் உனக்கு எக்சைட்டிங்கா இல்லையா?” என்று கேட்டான்.

ஆராதனா பிறந்த பின்பு பல வருடம் கழித்து அவர்கள் வீட்டில் பிறந்திருக்கும் குழந்தைக்காக இரவிரவாய் விழித்து இருந்த தன் வீட்டு பெரியவர்களை பார்த்து அதே உற்சாகத்தோடு சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு ப்ரியாவின் கூற்று ஏமாற்றமே.

அதை மறைக்காமல் நேரடியாக அவளிடமே கேட்டு விட்டான்.

“அப்படி சொல்லல கௌதம். நம்மள பத்தி ஏதோ சொல்ல வரீங்கன்னு நினைச்சேன். சரி அதை விடுங்க. குழந்தையோட போட்டோ அனுப்புங்க” என்றாள் ப்ரியா.


“குழந்தை போட்டோ அனுப்புறது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சித்தி நீங்க வந்து குழந்தையை பார்க்க மாட்டீங்களா என்ன? நாளைக்கு வேற எனக்கு ஆஃப். நானும் அஸ்வின் கூட ஹாஸ்பிட்டல்ல தான் இருப்பேன். நீயும் வா” என்று ஆசையாய் அழைத்தான்.

“நானா… நான் எப்படி வர முடியும். நாளைக்கு காலேஜ்ல நாலு கிளாஸ் இருக்கு. அதுவும் இல்லாம அம்மா தனியா விட மாட்டாங்க கௌதம். புரிஞ்சுக்கோங்க” என அவள் கூறியதும் சினத்தோடு, “ஏன் உங்க அம்மா விட மாட்டாங்க. நான்தானே கூப்பிடுறேன். அதெல்லாம் விடுவாங்க. ஒழுங்கா நாளைக்கு வந்துரு” என்று காறாராக கூறி விட்டு வைத்தான்.

தன் நிலைமையை எடுத்து சொல்லுயும் புரிந்துக்கொள்ளாமல் நடக்கின்றானே இவன் என்ற சலிப்பில் பெருமூச்சு விட்டவள் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு உறங்கச் சென்றாள்.

கல்லூரிக்கு எடுத்துச் செல்லும் டிபன் பாக்ஸை கையில் வைத்து திறப்பதும் மூடுவதுமாக இருக்கும் மகளை கண்ட தாரணி அவள் அருகில் வந்தார்.

“என்ன டிபன் பாக்ஸ் பேக்ல வைக்காம கையில வச்சுக்கிட்டு இருக்க. ஏதாச்சு வேணுமா? இல்ல சாப்பாடு பிடிக்கலையா?” என்று கேட்டார்.

“அதில்லம்மா…நைட்டு கௌதம் கால் பண்ணாரு. அவங்க அண்ணாவுக்கு பையன் பிறந்திருக்காம்.இன்னைக்கு பார்க்க ஹாஸ்பிடல் வர சொன்னாரு” என்று ஆரம்பித்தவள் அவள் கைபேசியில் அவன் அனுப்பியிருந்த குழந்தையின் புகைப்படத்தை எடுத்துக்காட்டினாள்.

“உனக்கு தான் இன்னைக்கு ஃபுல்லா கிளாஸ் இருக்குல்ல. அப்புறம் எப்படி போக முடியும்” என்று மகளிடம் வினவினார்.

“அது ஆர்த்தி கிட்ட கிளாசு…” என்று அவள் முழுதாய் கூறி முடிக்கும் முன்னமே முறைத்துக் கொண்டிருந்தார் தாரணி.

“அதெல்லாம் நீ ஒன்னும் உன் கிளாஸ் மாத்தி கொடுத்துட்டு போகணும்னு இல்ல. அவங்க வீட்டுக்கு குழந்தை அழைச்சிட்டு வந்ததும் எல்லாரும் சேர்ந்து போய் பாத்துக்கலாம்” என்றார்.

எப்படியும் அன்னை மருத்துவமனைக்கு செல்ல விடமாட்டார் என்று தெளிவாக தெரிந்ததும் நேரத்தை கடத்தாமல் கல்லூரிக்கு கிளம்பினாள் அவள்.

பாட வகுப்புகளின் போது அலைபேசியை அணைத்து வைத்திருப்பது ப்ரியாவின் வழக்கம். அன்றைய நாள் முழுவதும் வகுப்புகள் தொடர்ந்து இருந்ததால் அவள் வீடு வந்து சேரும் வரை அலைபேசியை உயிர்ப்பிக்கவில்லை.


வீட்டுக்கு வந்ததும் கௌதமின் நினைவு அழையா விருந்தாளியாக வர அவனுக்கு அழைப்பதற்கு என்றே அலைபேசியை உயிர்ப்பித்தாள்.

கௌதமிடம் இருந்து மட்டும் 20 மிஸ் கால்கள் வந்திருந்தன. கூடவே மகேஷ், ஆராதனா ஈஸ்வரி மற்றும் ஸ்ரேயா என்று அனைவரிடம் இருந்தும் மிஸ் கால்களை கண்டதும் யோசனையாக கௌதமின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

ப்ரியாவின் மேல் கடும் கோபத்தில் இருந்தவன் அழைப்பை ஏற்காமல், “என்ன?” என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

“ஐ அம் சாரி” என்று அவள் கூறி குறுஞ்செய்தி அனுப்பியும் பார்த்தானே தவிர பதில் ஏதும் அனுப்பவில்லை.

விடாமல் அவள் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க, 20 கால்களுக்கு பிறகு அழைப்பை ஏற்றான் கௌதம்.

அழைப்பை ஏற்றும் அவன் அமைதியாக இருக்க, “சாரி நான் வந்து இருக்கணும். நான் நாளைக்கு கண்டிப்பா வரேன்” என்றாள் ப்ரியா.

“நாளைக்கு தானே தாராளமா வந்து பாத்துட்டு போ குழந்தையை. எனக்கு வேலை இருக்கு”என்றவனை சமாளிக்க முடியாமல் தவித்தாள் பேதை பெண்.

“இப்ப நான் என்ன பண்ணா கோபம் குறையும்?”என்று அவனிடமே கேட்டாள்.

அவர்களுக்கு இடையே வரும் முதல் ஊடல். அதுவும் தவறு தன் பக்கம் உள்ளதால் எப்படி கௌதமை கையாள்வது என்று தெரியாமல் சோர்ந்து போனாள்.

பதிலே சொல்லாமல் அவன் அழைப்பை துண்டிக்க, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது அவளுக்கு.

தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

அவள் அறையில் இருந்து பேசியதால் வீட்டினர் யாருக்கும் இவர்களின் ஊடல் தெரியவில்லை.

ஐந்து நிமிடம் கழித்து கௌதமிடமிருந்து அழைப்பு வரவும் அலைபேசியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அழைப்பு துண்டிக்கபடுவதற்கு முன் கடைசி ரிங்கில் எடுத்திருந்தாள்.

கண்ணீரை துடைத்துக் கொண்டு அழுகையும் கோபமுமாக, “என்ன?” என்று கௌதமிடம் கேட்டாள்.

அவள் அழுது இருக்கின்றாள் என்று தெரிந்ததும் அவளை அழ வைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில், “அழுதியா….ஏன்?” என்று அக்கறையாக அவன் வினவ,

“என்னத்துக்கோ அழுறேன். உனக்கு என்ன வந்துச்சு. நீ போய் உன் மருமகன பாரு”என்றாள்.

அவள் கூறிய விதத்தில் கௌதமுக்கு சிரிப்பு வர அவனின் சிரிப்பு சத்தம் கேட்டது, “நான் அழுதது உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றாள் கோபத்தோடு.

“என்ன சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க, நீ பண்றத யாரவது பார்த்தா சிரிக்க போறாங்க” என்று கூறி அவள் கோவத்துக்கு தூபம் போட்டான் அவன்.

“உன்ன மாதிரி யாரும் சிரிக்க மாட்டாங்க. உனக்கு நான் முக்கியமே இல்ல. ஹாஸ்பிடல்லையும் வீட்டையும் கட்டிக்கிட்டு அழு. எனக்கு நீ வேணாம்” என்று கூறியவள் போனை அணைக்க செல்ல,

“அப்ப நான் உனக்கு வேணாமா?”என்று அவன் ஆழ்ந்த குரலில் கூறுவதை கேட்டவளுக்கு கோபத்தை மீறி வெட்கம் வர, கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் கைவிட்டாள்.



“என்ன சத்தத்தையே காணோம். நான் வேணுமா? வேணாமா?” என்று மறுபடியும் கேட்டு அவளை வம்புக்கிழுக்க,

“வேணும் வாழ்க்கை ஃபுல்லா எனக்கே எனக்கென மட்டும் எப்பவும் வேணும். தருவியா?” என்று கேட்டாள்.

“நீ கேட்டா நான் உயிரையே தருவேன்” என்று அவன் சினிமா டயலாக் போல் கூற,

“பார்க்கலாம்” என்று கூறினாள்.

“அண்ணிய நாளைக்கு டிஸ்ச்சார்ச் பண்ணிடுவாங்க. இன்னும் மூணு வாரத்துல தொட்டில போட்டு பெயர் வைக்கிறதா பேசிகிட்டு இருந்தாங்க. அவனுக்கு என்ன கிப்ட் வாங்கலாம்?”என்று கௌதம் கேட்க,

“நீங்க தானே குடுக்க போறீங்க. உங்களுக்கு என்ன புடிச்சிருக்கோ அதே கொடுங்க” என்றாள்.

“நான் குடுக்கறதுக்கு எதுக்கு உன்கிட்ட கேட்கணும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கொடுக்க தான் கேட்கிறேன்”

“செயின் போடலாமா?” என்றாள் யோசனையாக,

”ஓகே… ஆனா செயின் வாங்க போகும்போது நீயும் வரணும்“ என்று கூறினான்.

“இந்த வீக் எண்டு போய் வாங்கிட்டு வரலாமா?” என்று கேட்டாள் அவள்.

“ஓகே” என்று அவன் சம்மதித்திருக்க இன்பமான மனநிலையோடு அலைபேசியை துண்டித்தனர் இருவரும்.

கொஞ்ச நேரம் அவளை தவிர்த்து பாராமுகம் காட்டினால் கலங்குகிறாளே, இனி விளையாட்டுக்கு கூட அவளோடு சண்டை போட கூடாது என்று நினைத்தவனுக்கு தெரியவில்லை

முக்கியமான தருணத்தில் ‘நான் உனக்கு வேண்டாமா?’என்று அவன் கேட்கும் போது ‘வாழ்க்கை முழுதும் நீ வேண்டும்’ என்று கூறிய அதே வாயால் ‘எனக்கு நீ வேண்டாம்’ என கூற போகிறாள் என்று.


தொடரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 08

“இந்த செயின் நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் டிசைன் காட்டுறீங்களா?” என்று நகை கடை ஊழியரிடம் கேட்டாள் ப்ரியா.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றான் நகைக்கடை ஊழியன்.

”இது நல்லா தான் இருக்கு ஆனாலும் இன்னும் ரெண்டு மூனு ஆப்ஷன்ஸ் பாத்துக்கலாம்“ என்று பக்கத்தில் அமர்ந்து இருந்த கௌதமிடம் கூறிவிட்டு நகைகளை பார்வையிட்டாள்.

அவள் கையில் இருந்த செயினை பார்த்த வண்ணம் கௌதம், “உனக்கு இந்த செய்கூலி சேதாரம் எல்லாம் பார்த்து நகை வாங்க தெரியுமா?” என்று கேட்டான்.

உதட்டைப் பிதுக்கி, “தெரியாதே. உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டாள்.

“எனக்கும் தெரியாது” என்றான் நகைத்துக் கொண்டு.

“சரியான ரெண்டு பேர் தான் நகை வாங்க வந்திருக்கோம்” என்று அவள் கூறிக் கொண்டிருக்க, கையில் நகை ட்ரேயோடு வந்து நின்றான் கடை ஊழியன்.

எல்லா நகைகளையும் ஒப்பிட்டு பார்த்து பின் முதல் தேர்வு செய்து வைத்த நகையையே வாங்க திட்டமிட்டனர் இருவரும்.

“மேடம் வேற ஏதாவது நகை பாக்கறீங்களா?லேடீஸ் டைமண்ட் ரிங்க்ஸ் வந்திருக்கு நான் அது காட்டட்டுமா?” என்று தன் விற்பனையை கூட்ட பேசிக் கொண்டிருந்தான் கடை ஊழியன்.

“அதெல்லாம் வேண்டாம்” என்று அவள் மறுக்க,

கௌதமோ, “எடுத்துட்டு வாங்க” என்று கூறினான்.

“இப்போ எதுக்கு டைமண்ட் ரிங் எனக்கு. அதுதான் நிச்சயத்துக்கு ரிங் வாங்க போறோம்ல” என்றாள் ப்ரியா.

“சும்மா தான்” என்று கண்களை சிமிட்டி கூறியவன் அவள் கைகளை பற்றி கொண்டான்.

சுற்றி ஆள் நடமாட்டம் இருப்பதால் அவள் வெட்கத்தோடு கையை அவன் பிடியிலிருந்து எடுக்க முயற்சி செய்ய கையை இறுக்கி பிடித்துக்கொண்டான்.

நெளிந்து கொண்டே, “சும்மா யாராவது நகை வாங்குவாங்களா?” என்று அவள் கேட்டதும், “நான் வாங்குவேன்” என்று கூறியவன் கடையின் விற்பனையாளர் வரவும் பாவம் பார்த்து ப்ரியாவின் கையை விடுவித்தான்.

அவன் சில்மிஷங்களை ரசித்தாலும் போலியாக அவனை முறைத்து விட்டு நகை ட்ரேயில் இருக்கும் மோதிரங்களை எடுத்து பார்க்க தொடங்கினாள்.

அவளை வற்புறுத்தி இருவருக்கும் பிடித்த மோதிரத்தை தேர்ந்தெடுத்ததும் கடை ஊழியன் “உங்க மோதிரத்தில் சார் பெயரை பிரிண்ட் பண்ணிடலாமா மேடம்” என்றான்.

ப்ரியா சம்மதமாக தலையசைக்க, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கௌதம், “இவன் கண்ணுக்கு நான் தெரியவே மாட்டேங்குறேன் போல. எப்ப பாத்தாலும் மேடம், மேடமுன்னு உன்னையே கூப்பிட்டு இருக்கான்” என்று கூற சிரிப்போடு அவன் புஜத்தில் தட்டியவள், “ஜென்ட்ஸ்க்கு போடுற மாதிரி பிரேஸ்லெட் எடுத்துட்டு வரீங்களா” என்று விற்பனையாளரிடம் கேட்டாள்.

“ஏய் இப்ப யாருக்கு பிரேஸ்லெட்?”என்று குழப்பமாக கேட்டான் கெளதம்.

“உங்களுக்கு தான். எனக்கு மட்டும் வாங்கி கொடுக்குறீங்க. நான் உங்களுக்கு வாங்கி கொடுக்க கூடாதா?” என்றாள்.

“அப்படி இல்ல. ஏன் சும்மா பணத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு” என்று அவன் கூறிட,

“அப்போ எனக்கு வாங்கி கொடுத்தது மட்டும் என்னவாம். அண்ட் நாங்களும் வேலைக்கு போறோம். எங்களுக்கும் பணத்தோட அருமை தெரியும்” என்று கூறிவிட்டு பிரேஸ்லெட்டுகளை பார்க்க தொடங்கினாள்.

கௌதமுக்கு பிரேஸ்லெட்டை தானே தேர்ந்தெடுத்தவள் அதை தனியாக பில் போடும்படி கேட்டுக்கொண்டாள்.

பிரேஸ்லெட்டுக்கும் பணத்தை அவளே கொடுத்துவிட கௌதமோ மோதிரம் மற்றும் செயினுக்கு பணத்தை செலுத்தினான்.

நகைகள் அனைத்தும் வழமையாக நகைக் கடையில் தரும் பெட்டிகளில் வர, இருவரும் மற்றவருக்கு தாம் வாங்கிய நகையை பெட்டியில் இருந்து எடுத்து மற்றவருக்கு போட்டு ரசித்தனர்.

பேபி செயினையும் பிரியா நகை பெட்டியில் இருந்து எடுக்க, “ஏய் அதை ஏன் எடுக்கிற அப்படியே கொண்டு போயிடலாம்” என்றான் கௌதம்.

“உங்களுக்கு விவரமே பத்தல. இப்போலாம் அடிக்கடி நகைக்கடை வெளியில திருட்டு நடக்குது தெரியுமா? இப்படி பேகோட கொண்டு போனா அப்படியே நம்ம கையில் இருந்து புடுங்கி எடுத்துட்டு ஓடிருவாங்க” என்றாள் கண்களை அகல விரித்துக்கொண்டு.

அவளது முக பாவனையை ரசித்துக்கொண்டே, ”சரி அதுக்கு என்ன பண்ணலாமுன்னு சொல்ற” என்று அவன் கேட்டதும், ”நம்ம ஹேண்ட் பேக்லையோ இல்ல வோலட்லையோ பத்திரமா வச்சுக்கணும்“ என்றாள் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு.

”அப்போ திருடன் ஹேண்ட் பேக் வாலட் எல்லாம் திருட மாட்டான்ற“ நக்கலாக கூறியவன், “இவ்ளோ ஒரு அறிவாளியான ஐடியா உனக்கு யார் கொடுத்தா?” என்று கேட்டான்.

அவன் தன்னை கிண்டல் அடிக்கிறான் என்று தெரிந்ததும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, “என்னோட அம்மா” என்றாள்.

“சரி மூஞ்சிய தூக்கி வைக்காதே. உங்க அம்மா சொன்ன மாதிரி பத்திரமா ஹேண்ட் பேக்லயே வை. பெயர் வைக்குற பங்ஷன்ல ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா போடுவோம்” என்று கூறிவிட்டு எழுந்துக் கொண்டான்.

காலியான நகை பெட்டிகளை நகைக்கடை பையில் போட்டு விட்டு கௌதம் அதை எடுத்துக்கொண்டு செல்ல அவளும் அவனோடு சேர்ந்து கடையை விட்டு வெளியேறினாள்.

ப்ரியாவை கடையின் வாசலில் நிற்க சொன்னவன் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து வர செல்லும் வேளையில் அவன் கையில் இருந்த பையை பறித்துக்கொண்டு ஒருவன் ஓட முதலில் திகைத்தாலும் பிறகு ப்ரியாவைப் பார்த்து சூப்பர் என்று காட்டி சிரிக்க அவளும் அடக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

நகை கடை வாசலில் இருந்து செக்யூரிட்டி இவர்களை விசித்திரமாக பார்த்து, சார் பைய எடுத்துட்டு ஓடுறான் நீங்க என்ன சிரிக்கிறீங்க” என்றார்.

“அந்தப் பையில ஒன்னும் இல்ல. வெறும் பாக்ஸ் தான்”என்று அவரிடம் கூறிவிட்டு இருவரும் காரில் ஏறிக்கொண்டனர்.

”ப்ரியா உனக்கு தீர்க்கதரிசி என்று பெயர் வைக்கலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிற?”என்று கூறி அவளை அவன் வம்பு செய்ய,

“ஹலோ என்னால தான் நகை இன்னைக்கு பத்திரமா இருக்கு” என்று கூறி இல்லாத காலரை தூக்கிவிட்டாள்.

அவளை மெச்சும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “சரி இப்ப எங்க சாப்பிட போகலாம்?”எனக் கேட்டவன் காரை செலுத்துவதில் கவனமாக இருந்தான்.

“அதெல்லாம் எங்கேயும் போக வேணாம். நான் டயட்ல இருக்கேன். கல்யாணத்துக்கு இன்னும் முழுசா டூ மன்த்ஸ் கூட இல்லை” என்றாள் வருத்தமாக,

”டயட் என்ற பெயரில் பட்டினியா இருக்காத. நியூட்ரிஷயன் ஆன ஃபுட் சாப்பிடு ஒர்க் அவுட் பண்ணு. அத விட்டுட்டு. கண்ட கண்ட வீடியோ பார்த்து டயட் இருக்காத” என்றான் கண்டிப்பாக.

“நானும் வொர்க் அவுட் பண்றதுக்கு நல்ல ஒரு ஜிம் தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா எதுவுமே செட் ஆகல”

“நான் போய்கிட்டு இருக்க ஜிம்முக்கு வரியா. அங்க லேடீஸ் இருப்பாங்க. நல்ல ஜிம் தான்” என்ன சொல்ற என்று புருவத்தை தூக்கி வினவினான்.

“என்ன சார் டெய்லி பாக்குறதுக்கு சாக்கு வேணுமேனு சொல்லிட்டு உங்க ஜிம்மிலேயே என்ன சேர்த்து விட பார்க்கிறீர்களா”

“அதுவும் ஒரு காரணம் தான். பட் கல்யாணத்துக்கு அப்புறமும் நீ கண்டினியூ பண்ணலாம் உனக்கு ஈஸியா இருக்குமேன்னு சொன்னேன். இட்ஸ் யூர் விஷ்” என்று கூறியவன் அவள் ஸ்கூட்டி நிறுத்தி வைத்திருந்த இடத்தின் அருகில் காரை நிறுத்தினான்.

கடிகாரத்தில் நேரத்தை பார்த்தவள், “எனக்கு இன்னும் டூ ஹவர்ஸ் டைம் இருக்கு. அந்த ஜிம் ல போய் பேசிட்டு வரலாமா?” என்று அவள் கேட்டதும் காரை ஜிம்மை நோக்கி செலுத்தினான்.

ஜிம்மின் உள்ளே நுழைந்ததுமே கௌதமின் கோச் ஸ்ரீனி இருவரையும் கண்டு அவர்களின் அருகே வந்தார்.

“என்ன கௌதம் இன்னிக்கு ஜிம் வருவீங்கன்னு சொல்லவே இல்ல. நான் வேற வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்” என்று கூறினார்.

சில நேரங்களில் கௌதம் ஹாஸ்பிடலில் இருந்து நேராக ஜிம்முக்கு வந்துவிடுவான். அப்படியான தருணங்களில் ஒன்று மருத்துவமனையில் குளித்து சாதாரண உடையை மாற்றி விட்டு ஜிம்முக்கு வந்த பிறகு ஜிம்முக்கு ஏற்ற உடைகளை மாற்றிக் கொள்வான். அல்லது ஜிம்மில் இருக்கும் குளியலறையை பயன்படுத்திக் கொள்வான்.

மேல் தட்டு வகுப்பினர் அதிகமாக வரும் ஜிம் என்பதால் விசாலமாகவே இருந்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி லாக்கர் மற்றும் குளியலறைகள். அனைத்தையும் தவறாமல் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்வதனால் பெரும்பாலானோர் அங்கேயே குளிப்பது வழக்கம்.

நகை கடைக்கு செல்வதால் சாதாரண ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்திருந்த கௌதமை கண்டதும் ஸ்ரீனி அவ்வாறு கேட்டார்.

“இல்ல ஸ்ரீனி. இன்னைக்கு நான் ட்ரைனிங்க்கு வரல” என்றவன் அருகில் நின்று கொண்டிருக்கும் ப்ரியாவை காட்டி, “திஸ் ஐஸ் மை பியான்சே ப்ரியா. இவங்களும் இந்த ஜிம்ல ஜாயின் பண்ணனும்” என்று கூறினான்.

“அதுக்கென்ன தாராளமா ஜாயின் பண்ணட்டும். நானே அவங்களுக்கும் சேர்த்து கோச்சா இருக்கேன்” என்று கூறி ஜிம்மில் சேர்வதற்கான ஃபோர்ம் கொடுத்தவர் கட்டணம் சார்ந்த விபரங்களையும் கூறினார்.

கட்டண தொகையை கேட்டதும் ப்ரியாவுக்கு மயக்கம் வராத குறை, “ஒரு மாசத்துக்கு இருபதாயிரமா?” என்று ஆச்சரியமாக வாயில் கையை வைத்துக் கொண்டாள்.

“நான் இங்க ரொம்ப வருஷமா ப்ரீமியம் மெம்பர். என் வீட்டிலிருந்து யாரு ஜாயின் பண்ணாலும் பிஃப்டி பெர்ஸன்ட் ஆஃப் இருக்கு. அண்ட் இதுக்கு நான் தான் பே பண்ண போறேன். சோ சைலன்டா இரு” என்று கூறி அவளின் வாயை அடைத்தவன் தானே ஃபோர்மையும் நிரப்பினான்.

கட்டணத்தை செலுத்தியதும் ஸ்ரீனி இருவரையும் அழைத்து சென்று ஜிம்மை சுற்றி காட்ட அதன் வசதிகளை பார்த்து மலைத்து போனாள் பெண்.

அனைத்தும் திருப்தியாக இருக்கிறதா என்று அவளிடம் கேட்டு உறுதி செய்த பின்னரே கௌதம் அவளை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

இருவரும் ஜிம் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒருவனின் விழிகள் இவர்களையே வட்டமிட்டு கொண்டிருந்தன.

அவனின் கையில் பெரிய டம்பள்ஸ் வைத்து மேலும் கீழும் மெதுவாய் ஏற்றி இறக்கியவனின் புஜங்கள் இரண்டிலும் நரம்பு வெளியே தெரிந்தது.

முகத்தில் தாடி புதர் போல் இருந்தது. கௌதமை யார் என்று அவனுக்கு தெரியாவிடினும் ப்ரியாவை அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. ஜிம்மை விட்டு அவர்கள் வெளியே செல்லும் வரை பார்வையை அகற்றாமல் அவளேயே இமைக்க மறந்து பார்த்தவனின் கண்களில் ரசனை நிரம்பி வழிந்தது.

அருகில் இருந்த குட்டி துவாலை ஒன்றை எடுத்து முகத்தை துடைத்தவன், இதழில் சிரிப்போடு, “ கிலட் டுமீட் யூ அகைன் ப்ரியா” என்று மனதுக்குள் கூறிக்கொண்டான்.

ரசனையானா பார்வையின் சொந்தக்காரன் யார்?

காமுகனா அல்லது காதலனா?

தொடரும்...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 09

“வாவ் ரொம்ப அழகா இருக்குடி. நீ ரொம்ப லக்கி” என்று பிரியாவின் விரல்களில் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்து கூறினாள் ஆர்த்தி.

ஆர்த்தியின் கணவர் ரகுவிற்கு இன்று இரவு நேர வேலை என்பதால் தனியாக அவள் வீட்டில் அங்கே இருக்க வேண்டாம் என கையோடு தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தாள் ப்ரியா.

“ஆன்ட்டிக்கு தெரியாம இது எப்படி மறைச்சுவைக்கிற” என்று மோதிரத்தை காட்டி கேட்டாள் ஆர்த்தி.

“வாங்கி ரெண்டு நாள் தானே ஆச்சு. அவங்க இருக்கும்போது கையில போட்டுக்க மாட்டேன். அம்மா இப்போதைக்கு வீட்டுக்கு வர மாட்டாங்க அதனால் தான் இப்போ உன்கிட்ட காட்டலாம்னு எடுத்துட்டு வந்தேன்“ என்றாள் ப்ரியா.

”பரவாயில்லையே கல்யாணத்துக்கு முன்னாடியே டைமண்ட் ரிங்? பேசாம ரகுவ கௌதம் கிட்ட கிளாஸ் போக சொல்லலாம்னு இருக்கேன். பொண்டாட்டிக்கு புடிச்சது எப்படி வாங்கி தரணும்னு கௌதமை பார்த்து தான் கத்துக்கணும்” என்று தனது கணவரை குறை கூறி பேச, ”அண்ணன் ஒன்னும் அவ்ளோ மோசம் இல்லடி. நீ என்ன கேட்டாலும் மறக்காம வாங்கி தந்து இருக்காருல” என்று தோழியின் கணவருக்கு பரிந்து பேசினாள் ப்ரியா.

“அதுதான் பிரச்சினையே. நானா என்ன கேட்டாலும் வாங்கி தராரு. ஆனா அவருக்கா எதுவுமே எனக்கு வாங்கி தரணும்னு ஒரு வாட்டி கூட தோனுனதில்லை தெரியுமா? அவர் பணத்தை மட்டும் தான்டி தராரு. எனக்கு என்ன வேணும்னு அவருக்கு புரிய மாட்டேங்குது. ஒரு வாட்டியாவது அவரா என்னை எங்கேயுமே கூட்டிட்டு போனதில்லை. நானா எல்லாமே கேட்கணும். எனக்கு இப்ப அதெல்லாம் கேட்க கூட தோன மாட்டேங்குது. கேட்டா சண்டை வந்துருமோன்னு பயமா இருக்கு” என தன் மன கஷ்டத்தை தோழியிடம் பகிர்ந்து கொண்டாள்.

“இதுக்கெல்லாம் ஏன் பீல் பண்ற. அண்ணா கிட்ட இத பத்தி பேசு கண்டிப்பா புரிஞ்சு பாரு”

“தெரியல ப்ரியா. இத பத்தி நான் ஆரம்பத்திலேயே பேசி இருக்கணும். அவரா புரிஞ்சுப்பாருன்னு நெனச்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். நீயாவது என்ன மாதிரி இல்லாம தெளிவா இருந்துக்கோ” என்று கூறி விட்டு ப்ரியாவின் அறைக்குள் இருக்கும் ஓய்வறையில் முகத்தை கழுவச் சென்றாள் ஆர்த்தி.

வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது எழுந்து வாசலுக்கு சென்றாள் ப்ரியா.

தோளில் லேப்டாப் பை மற்றும் கையில் சிலகோப்புகளோடு வீட்டிற்குள் நுழைந்தார் சிவகுமார்.

எப்பொழுதும் உற்சாகமாக காட்சியளிப்பவர் இன்று கொஞ்சம் களைப்பாக தெரிய தந்தையின் கையில் இருந்த கோப்புகளையும் பையையும் வாங்கி பெற்றோரின் அறையில் வைத்தாள்.

சோர்வாக அவர் சோபாவில் அமர்ந்திட அவருக்கு சுட சுட இஞ்சி டீ தயார் செய்து வந்து கொடுத்தாள்.

மகள் தந்த இஞ்சி டீ குடித்ததில் களைப்பாய் இருந்த அவரின் முகம் மெல்ல மலரத் தொடங்கியது.

“டீ எப்படிப்பா இருக்கு” என்று கேட்டுக்கொண்டே தந்தையின் அருகில் அமர்ந்தாள்.

“ஃபர்ஸ்ட் கிளாஸ் மா. உன் டீ மாதிரி யாராலுமே போட முடியாது” அவர் பாராட்டும் வேளையில், “இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் அங்கிள். அதுக்கப்புறம் மேடம் புருஷன் வீட்டுக்கு போயிடுவாங்க” என்று ஆர்த்தி கூறிட ப்ரியாவின் முகம் சோகத்தில் சுருங்கியது.

மகளின் வாடிய முகத்தை கண்டு மனம் கேட்காமல்“அதுக்கு என்னம்மா எப்போ எல்லாம் எனக்கு தோணுதோ அப்போ எல்லாம் பொண்ணு வீட்டுக்கு போய் டீ குடிக்க போறேன் அவ்ளோதானே”இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல பேசினார் அவர்.

தந்தையின் கூற்றில் ஆனந்தமாய் அவரின் தோளில் சாய்ந்தாள் ப்ரியா.

“நீங்க சூப்பர் அங்கிள். சும்மா பேச்சுக்கு பேசுற மனுஷன் நீங்க இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். உண்மையாவே நாளைக்கு உங்க பொண்ணு உங்கள மிஸ் பண்றேன்னு ஒரு கால் அடிச்சுட்டா அடுத்த நிமிஷம் அவ முன்னாடி நிக்க கூடிய ஆள் தான் நீங்க”என்றாள் ஆர்த்தி.

அவரின் கம்பீரமான மீசையின் கீழ் உள்ள உதடுகள் தாராளமாக விரிந்து சிரித்தது.

தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தவள் மெல்ல எழுந்து, “அப்பா வீட்டுக்கு வரும்போது ஏன் அப்செட்டா வந்தீங்க? பேங்க்ல ஏதாவது பிரச்சனையா?“ என்று அவரிடம் கேட்டாள்.

மகளின் கன்னத்தை தட்டி, “அது ஒன்னும் இல்ல. பேங்க்ல ஒரு சின்ன பிரச்சனை. கேஷியர் கோபால் இருக்காருல்ல அவர் கவன குறைவா காசு எங்கயோமாத்தி வைச்சுட்டார். பெரிய அமௌன்ட் என்றதால கொஞ்சம் பிரச்சனையாச்சு. டென்ஷன்ல அவர கொஞ்சம் அதிகமாவே திட்டிட்டேன் அதுதான் ஒரு மாதிரி இருந்துச்சு. நவ் ஐ அம் பைன்” என்று கூறினார்.

“அம்மா எங்க ப்ரியா. வீட்ல ஆள் இருக்கிற மாதிரியே தெரியலையே” என்று மனைவியைப் பற்றி விசாரித்தார்.

ஆயிரம் பேர் இருந்தாலும் அப்பாவின் கண்கள் முதலில் அம்மாவை தான் தேடும் என்று ப்ரியாவுக்கு நன்றாகவே தெரியும்.

“நைட்டுக்கு சமைக்க திங்ஸ் வாங்க போனாங்கப்பா. ரொம்ப நாள் கழிச்சு ஆர்த்தி நம்ம வீட்டுக்கு வந்து இருக்கால. அதுதான் அவளுக்கு ஸ்பெஷல் டின்னர்” என்றாள் ப்ரியா.

“ஆர்த்தி ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கா” ஆர்த்தியை பார்த்து, “ சொல்லுமா ஆர்த்தி நைட்டு உனக்கு என்ன சாப்பிட வேண்டும்” என்றார்.

ஆர்த்தி ப்ரியாவின் தோழி என்பதையும் தாண்டி அவர்கள் வீட்டில் அவளும் ஒரு உறுப்பினர் என்பது போல் நடத்துவார்கள். சில நேரங்களில் ஆர்த்திக்குமே அது ஆச்சரியத்தை கொடுக்கும். ஆரம்பத்தில் தயங்கியவள் பின் எந்த தயக்கமும் இன்றி அவர்களோடு பழகத் தொடங்கி விட்டாள்.

“அங்கிள் உங்களோட மட்டன் பிரியாணி தானே அங்கிள் ஸ்பெஷல்” என்று கூறினாள்.

“பண்ணிட்டா போச்சு” என்றவர் அலுவலக உடையிலிருந்து சாதாரண உடையை மாற்றி சமையலறையில் நுழைந்து மட்டன் பிரியாணிக்கு தேவையான பொருட்களை வெட்ட தொடங்கினார்.

கையில் பைகளோடு தாரணி வீட்டுக்குள் நுழைய மனைவியின் கையில் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு நேராக சமையல் அறைக்கு தூக்கி சென்றார் சிவகுமார்.

கேள்வியாக தாரணி மகளைப் பார்க்க, “ஆர்த்திக்கு அப்பாவே சமைக்கிறேன்னு சொல்லிட்டாரு அம்மா” என்று கூறவும்,

“அப்போ இன்னைக்கு எனக்கு லீவு” என்று கூறி சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்க்க தொடங்கினார் தாரணி.

சிறிது நேரத்திலேயே அரவிந்தும் வந்துவிட அவனும் தந்தையோடு சேர்ந்து சமைக்க தொடங்கி விட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து அனைவரும் சாப்பாடு மேசையில் அமர்ந்திருக்க சிவகுமார் தானே எல்லோருக்கும் பரிமாறினார்.

அவரின் சமையலுக்கு மயங்காத நபர்கள் இல்லை. தாரணிக்குமே கணவர் சமைத்தால் வழமையாக உண்பதை விட கொஞ்சம் அதிகமாகவே உண்பார்.

அனைவரும் உணவினை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து உண்டு முடித்ததும். பட்டர் ஸ்காட்ச் சௌபல் இனிப்பை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வந்தான் அரவிந்த்.

சிவக்குமார் பிரியாணி செய்த சமயம் அரவிந்த் இந்த இனிப்பை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தான்.

தங்கைக்கு பிடித்த இனிப்பு என்பதால் முதலில் அவளுக்கே கொடுத்து, ஊட்டியும் விட்டான்.

இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த ஆர்த்தி மனதுக்குள் ப்ரியா இப்படி அன்பான அண்ணன் அப்பா மற்றும் வருங்கால கணவன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவள் கடவுளிடம் இப்படியே சந்தோஷமாக அவள் கடைசி வரை இருக்க வேண்டும் என வேண்டுதலையும் வைத்தாள்.

ஆர்த்தியின் வேண்டுதலை கடவுள் செவிமடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

************************************
அறுவை சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தான் கௌதம்.

வாசலில் அவன் அறுவை சிகிச்சை செய்த நபரின் மகளும் அவரின் குடும்பத்தாரும் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை நெருங்கியவன், “கவலைப்படறதுக்கு ஒன்னுமில்ல. உங்க அப்பாவுக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சுது. இன்னும் ஒரு மாசத்துல அவர் நார்மல் லைஃப் லீட் பண்ண ஆரம்பிச்சிருவாரு. இருந்தாலும் நீங்க அவரை கொஞ்சம் கவனமா பாத்துக்கணும்”என்று கூற,

“ரொம்ப நன்றி டாக்டர். கடவுள் மாறி எங்க அப்பாவ காப்பாத்திட்டீங்க” என்று கௌதமின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் சிந்தினார் அந்த ஐம்பது வயது பெண்.

அந்த நேரம் இவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார் விஸ்வநாத். கௌதம் வேலை செய்யும் மருத்துவமனையின் உரிமையாளர்.

அவர்களை கடந்து செல்லும்போது கௌதமை ஒரு மெச்சுதலான பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

கௌதம் அவனின் அறைக்குள் வந்து அமர்ந்ததும் தாதி ஒருவர், “டாக்டர், விஸ்வநாதன் சார் உங்களை கூப்பிட்டாரு”என்று கூறிவிட்டு செல்ல அவரின் அறையை தேடி சென்றான்.

கதவை தட்டி விட்டு கௌதம் உள்ளே நுழைய, “வா கௌதம் உட்காரு. உன்ன பார்க்கும்போது எனக்கு ரொம்ப ப்ரௌடா ஃபீல் ஆகுது. இதே ஹாஸ்பிடல்ல நீ ஒரு இன்டர்னா சேர்ந்து இப்போ ஒரு கார்டியாலஜி சர்ஜனா இருக்கன்னு நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு” என்றார்.

விஸ்வநாதன் யாரையும் எளிதில் பாராட்டக் கூடிய மனிதர் கிடையாது. அவர் பாராட்டுக்கள் எல்லாம் வேர்ல்ட் கப் போல் அதிர்ஷ்டமும் திறமையும் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

தொடர்ந்து அவரே பேசத் தொடங்கினார், “டாக்டர் ராஜன் ஒரு பர்சனல் வேலையா த்ரி மந்த்ஸ் அப்ராட் போறாரு. சோ, இனிமேல் கொஞ்ச நாளைக்கு நீ தான் அவர் பேஷண்ட்ஸ் பாத்துக்குறது போல இருக்கும். உனக்கு அதுல எந்த ஆட்சேபனையும் இல்லையே” என்று கேட்டார்.

வேலை என்று வந்தால் அதில் எந்தக் குறையும் இல்லாமல் திறம்பட முடிப்பவன் தான் கௌதம். இது அவருக்கும் தெரியும் என்பதால் மற்ற மருத்துவர்களை விட வயது அனுபவம் கம்மியாக இருந்தாலும் திறமைக்கு மதிப்பளித்து அவனுக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.

“தேங்க்யூ சார். என்னை நம்பி இவ்வளோ பெரிய பொறுப்பு கொடுத்து இருக்கீங்க உங்க நம்பிக்கை நான் கண்டிப்பாக காப்பாத்துவேன்” என்று கூறி அவரிடமிருந்து விடைபெற்றான்.

************************************

கையில் பியர் பாட்டிலோடு பால்கனியில் நின்று கொண்டிருந்தான் அருண்.

அவன் அருகில் நின்று கொண்டிருந்த அவனதுசித்தப்பா, “என்னடா சித்தி இல்லை என்ற சந்தோஷத்துல பியர் குடிக்கிறியா?” என்றார்.

“இல்ல சித்தப்பா. ரொம்ப வருஷம் கழிச்சு என் தேவதையை பார்த்தேன்” என்றான் வானத்தில் இருக்கும் நிலவை பார்த்துக் கொண்டு.

“தேவதையா? ஓ அந்த பொண்ணா…பேசுனியா?” என்றார் ஆர்வமாக,

“பேசுறதுக்கு எங்க டைம் இருந்துச்சு. அவள ஜிம்ல பாப்பேன்னு சத்தியமா எக்ஸ்பெக்ட் பண்ணல. பேசறதுக்குள்ள பறந்து போய்ட்டா”

“பறந்து போய்ட்டாளா. ரொம்ப ஓவரா போற டா”

“ஓல்ட் மேன், உனக்கு எங்க என் ஃபீலிங் புரிய போது. ஆனா, சித்தப்பா ப்ரியா கூட ஒரு பையன பார்த்தேன்”என்றான் யோசனையாக,

”பார்த்துடா அவ புருஷனா இருக்க போறான்“ என்றார் நக்கலாக,

“யோவ் என்ன லந்தா. அவளுக்கு ஒரு அண்ணன் இருக்குன்னு எப்பயோ என் கிட்ட சொல்லி இருக்கா அவனா தான் இருக்கும்”

”டேய், அவ உன்கிட்ட அவளுக்கு உன்னை புடிச்சிருக்குன்னு சொல்லும்போதே ஓகே சொல்லி இருந்தா இப்படி அவன் யாருன்னு நெனச்சு புலம்ப வேண்டிய அவசியம் இருக்காது இல்ல”

“எப்படி சித்தப்பா. அப்போ என்கிட்ட ஒண்ணுமே இல்ல. அவ வசதியான வீட்டு பொண்ணு சித்தப்பா. நான் அப்போ அவளுக்கு ஓகே சொல்லி இருந்தா ரொம்ப தப்பா இருந்திருக்கும். பணத்துக்காக அவள நான் ஒத்துக்கிட்டது போல இருந்திருக்கும். அவகிட்ட உண்மைய சொல்லி எனக்கு உன்ன பிடிச்சிருக்கு எனக்காக வெயிட் பண்ணுன்னு கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப கூச்சமா இருந்துச்சு. எனக்கு லக் இருந்தா கண்டிப்பா நான் நல்ல நிலமைக்கு வர்ற வரைக்கும் அவ கல்யாணம் பண்ண கூடாதுன்னு வேண்டிகிட்டேன். கடவுள் என் பிரார்த்தனைக்கு பலன் தந்த மாதிரி தான் எனக்கு தோணுது.

கஷ்டப்பட்டு எனக்குன்னு ஒரு வேலையை தேடி இந்த பிளாட் ஒரு கார் வாங்கி கரெக்டா நான் செட்டில் ஆகியிருக்கிற டைம்ல என் கண்ணுல அவள மறுபடியும் காட்டுறான்னா என்ன அர்த்தம்?”

”என்ன அர்த்தம்?“ என்று அவனின் அப்பாவி சித்தப்பா கேட்க,

”மங்குனி சித்தப்பா… அவ எனக்காக பொறந்திருக்கான்னு அர்த்தம்”

“சரி அடுத்து என்ன பண்ண போற” என்று அவர் ஆர்வமாக கேட்டதும்,

“அது சஸ்பென்ஸ் வெயிட் பண்ணி பாருங்க” என்று கூறி தூங்க சென்று விட்டான்.

ப்ரியாவின் வாழ்க்கையில் மறுபடியும் அருண் வந்தால் தென்றலாக வீசுவானா? இல்லை புயலாக அடிப்பானா?


தொடரும்...
 
Last edited:
Status
Not open for further replies.
Top