ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இதழோடு இசையாக வா

Status
Not open for further replies.

Dhivya98

Well-known member
Wonderland writer
5.இசை

கத்தி கொண்டு குத்தி கிழித்தால் கூட இத்தனை வலி வராது. அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெண்ணவளை ரணப்படுத்தி காயப்படுத்தியது. வார்த்தைகளில் வடிக்க இயலாத வலி அவள் நெஞ்சை அடைத்தது. தாயைப் போல் இருப்பவள், தாயின் குணமும் சேர்ந்து வந்துவிடுமோ? என்று தந்தை அவளுக்கு கடிவாளமிட்டல்லவா வளர்த்தார். அவளை விட ஐந்து வயது பெரியவள் தர்ஷினியை தங்கம் போன்றும், இளையவள் இவளை தகரம் போன்றும் தானே அவர் வளர்த்தார்.

சிறு வயது தொடக்கம் முதலே கேட்டு அழுது நொந்த வார்த்தைகளை தன்னவனே சொல்வதை கேட்கும் போது அது கொடுமையின் உச்சம் அல்லவா?

"எல்லோரும் அழும்போது அம்மானு சொல்லி அழுவாங்க. ஆனா எனக்கு சொல்லி அழக்கூட அம்மாங்குற உறவு இல்லாமலே போயிடுச்சு. என் அம்மா பண்ணுன தப்புக்கு நான் வலி வேதனையை அனுபவிச்சேன். இப்போ என் அக்கா பண்ணுன தப்புக்கும் சேர்த்து நான் தான் அனுபவிக்குறேன். நான் பொறந்ததே தப்பு தானோ ? எனக்கு மனசுனு ஒன்னு இருக்குமே? ஏன் மத்தவங்க பண்ண தப்புக்கு எல்லாரும் என்னை ஏன் காயப்படுத்துறாங்க? அய்யோ மாமா, நீயும் என்னை இப்படி சொல்லிட்டீங்களே... வலிக்குது மாமா வலிக்குது." கேவலுடன் வெடித்து அழுதவள், ஒரு கட்டத்தில் தேம்பி தேம்பி அழுதாள்.

"சுயநல இரத்தமா? இரத்தத்துல என்ன சுயநலம் இருக்கப் போகுது? எனக்கு தெரியலை. என்னை பத்தி தெரிஞ்சும் ஏன் இப்படி பேசுனீங்க? என்னால முடியலை. உங்க மேல உண்மையான அன்பு வெச்சதுக்கான தண்டனை தான் உங்க வார்த்தையா? ஏன் நீங்க என் வாழ்க்கையில வந்தீங்க?" என்று கண்ணீர் வடித்தவள், குளியலறையிலிருந்த ஷவரைத் திருப்பி தண்ணீருக்குள் அப்படியே நின்றுக் கொண்டாள்.

அவளுக்கு சொல்லத் தெரியவில்லை. மிகவும் வலித்தது. மனம் முழுவதும் பாரமாக இருந்தது. உடல் உஷ்ணத்தில் கொதித்தது. தன் பாரத்தை குறைக்க வலி அறியாது தண்ணீருக்குள் நின்றுக் கொண்டாள்.

"என் வாழ்க்கையில நான் உங்களை சந்திச்சிருக்கக் கூடாது மாமா." என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

இங்கு ஆணவனோ சிலை போல் நின்றான். இறுதியாக அவள் அவனைப் பார்த்த அந்த பார்வையும், அப்பார்வையில் தெரிந்த வலியையும் அவனால் உணர முடியாமல் இல்லை. ஆனால் அவனுக்குள் இருக்கும் கோபம் மட்டும் குறைந்தப்பாடில்லை.

அத்தனை ஆவேசத்துடன் தனது கையை மடித்து ஓங்கி கட்டிலின் மீது குத்தினான். அடித்த வேகத்தில் அவனது விரலில் இருக்கும் மோதிரம் பட்டு கரத்தில் குருதி வழியத் தொடங்கியது.

"இதுக்கு தான் நீ என்ன கல்யாணம் பண்ணியா சொல்லுடி? ஒவ்வொரு நிமிசமும் எங்கிட்ட நீ நரகவேதனையை அனுபவிக்கத் தான் என்னை நீ கல்யாணம் பண்ணி வந்தியா?" அவளுக்கு கேட்கும் அளவிற்கு கத்திக் கூறினான்.

எத்தனை முறை எடுத்து சொல்லியிருப்பான். அவள் தான் கேட்கவில்லையே?

அவன் அடித்த அடியின் சத்தமும், அவனது கத்தலும் உள்ளிருந்தவளது செவியை அடைந்தாலும், விரக்தியுடன் உறைந்து போய் நின்றாள் மௌனமாக.
தண்ணீரின் சத்தம் தாண்டி அவளது சத்தம் வெளியே கேட்கவே இல்லை.

"போடி... போ என் கண்ணு முன்னாடி மட்டும் வந்திடாத? வர்ற ஆத்திரத்துல உன்னை வெச்சுப் பார்க்க மாட்ட." என்றவன், வேறெதையும் பேசாது கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்தான்.

அவன் மனதில் பலவித யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அவன் இவ்வாறு குடிப்பவன் அல்ல. தான்யதர்ஷினி அவன் வாழ்வில் இல்லாமல் போன போதும் அவன் குடித்ததில்லை. ஆனால் இன்று குடித்திருக்கிறான்.

அமிர்தாவை திருமணம் புரிந்ததும் குடித்திருக்கிறான். அவன் மனதில் அமிர்தாக்கென்று தனியொரு இடமிருந்தது‌. அவள் வாழ்வை நல்முறையில் அமைத்துத் தர வேண்டும் என்கின்ற கடமையும் அவனுக்குள் இருந்தது. அனைத்தையும் கெடுத்து விட்டாள் என்கின்ற கோபம் அவனை முற்றிலும் மாற்றியிருந்தது.

'ஏன் அம்மு இப்படி பண்ணுன?' ஒருபுறம் மனம் கேட்காமல் உள்ளுக்குள் புலம்பியது என்றால், புத்தியோ அவள் மீது அளவுக்கடந்த கோபத்தைக் கொண்டு பெண்ணவளை காயப்படுத்தும் சந்தர்ப்பத்தை நோக்கி காத்துக் கொண்டிருந்தது.

அளவுக்கடந்த அன்பிற்கு உரியவள் செய்த செயல் இன்று அளவுக்கடந்த கோபத்தை அல்லவா உருவாக்கியிருந்தது அவன் மனதில். அவள் செய்த செயலும், அவளது மௌனமும் இன்னுமும் அவன் நெஞ்சை விட்டு அகலவில்லை.

"போடி... போ... எக்கேடோ கெட்டுப் போ. உன்ன சமாதானப் படுத்த நான் வரப்aபோறது இல்ல." என்று சிடுசிடுத்தவன், அடிப்பட்ட கரத்தை தலையின் மீது வைத்துக்கொண்டபடி கண்ணயர்ந்தான்.

முதலில் தூக்கம் வர சிரமம் கொண்டாலும், அவனருந்திய மதுபானத்தின் தாக்கத்தில் விரைவிலேயே கண்ணயர்ந்து உறங்கியிருந்தான்.

இங்கு பெண்ணவளோ குளியலறைக்குள் அப்படியே அமர்ந்துக் கொண்டாள். தண்ணீர் அவளது தலைத் தொடங்கி உடல் முழுவதையும் நனைத்துக் கொண்டிருந்தது. நேரம் செல்ல செல்ல குளிரில் அவள் தேகம் நடுங்கியது. இருந்தும் பிடிவாதத்தில் அப்படியே சரிந்துப் போய் பொத்தென்று அமர்ந்துக் கொண்டாள்.

அவன் பேசிய வார்த்தைகள் அவளை அவ்வாறு செய்ய வைத்திருந்தது. அவன் வாய்மொழியில் இதுப் போன்ற வார்த்தைகள் வரும் என்று கனவிலும் அவள் எண்ணவில்லை‌.

அவன் அடித்திருந்தால் கூட தாங்கியிருப்பாள். ஆனால் அவன் நாக்கில் நரம்பின்றி பேசிய அந்த வார்த்தைகளை அவளால் ஜீரணிக்க இயலவில்லை.

விசும்பல் குறைந்தது! கண்களில் வழிந்த கண்ணீர் நின்றது! செவ்விதழ்கள் நடுங்கியது! தேகம் விறைத்தது!

இருந்தும் எழவில்லை. வைராக்கியம்! பிடிவாதம்! கோபம்! தவிப்பு! இயலாமை! என அனைத்தும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்க அப்படியே அசையாது அமர்ந்துக் கொண்டாள்.

மெல்ல மெல்ல நேரம் கடந்தது. அவளைப் பற்றிய ஆழ்மனத் தாக்குதலின் விளைவாக கண்ணயர்ந்த இரண்டு மணி நேரத்தில் மீண்டும் ஆணவனுக்கு முழிப்புத் தட்டியிருந்தது.

அடித்துப் பிடித்து எழுந்தவனதுக் கண்கள் அவளைத் தான் முதலில் தேடியது.

அறையை விட்டு சென்றிருப்பாள் என்று முதலில் எண்ணியவனுக்கோ, தண்ணீரின் சத்தம் காதுக்குள் ஒலித்து இல்லை என்ற பதிலை சொல்லிவிட்டு சென்றிருக்க, சிறு சந்தேகத்துடன் எழுந்தவன் குளியலறையை நோக்கி நகர்ந்தான்.

சற்று பலமாகவே கதவை ஆட்டிப் பார்த்தவனுக்கு கதவு தாழிடப்பட்டிருப்பது புரிந்திட, ஒரே ஒரு நொடி அதிர்ந்து தான் போனான்.

அவனையும் மீறி பதட்டம் கொண்டான். எங்கு அவள் தவறான முடிவினை எடுத்திருப்பாளோ? என்று அச்சம் கொண்டவன் , "நோ.. இருக்காது." என்று ஒரு வினாடி தலையை பற்றிக் கொண்டான்.

அடுத்த கணம் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. கதவை பரபரப்பாக தட்டினான்.

"அமிர்தா... அமிர்தா.. கதவைத் திற.." என்றவனுக்கு அறையின் அமைதி அச்சுறுத்தியது.

அடுத்த வினாடி கதவை இழுத்துத் தள்ளி தாழ்ப்பாளை உடைத்திருந்தான் முரளி.

தண்ணீரில் நனைந்தபடியே மயங்கி சரிந்திருந்த பெண்ணவளைக் கண்டு ஒரு நொடி ஆட்டம் கண்டுப் போனது முரளியின் மனம். தண்ணீரில் நனைந்து கேட்பாரற்று கிடந்தவளைக் காணும் பொழுது இரும்பு மனமும் கூட நொடியில் உருகும் அல்லவா?

"அம்மு.." என்று பெருங்குரலெடுத்துக் கத்தியவன் ஷவரை நிறுத்தி பெண்ணவளை தன்னிருக் கரங்கள் கொண்டு தூக்கியிருந்தான்.

ஈரம் சொட்ட சொட்ட அறையிலிருந்த சாய்விருக்கையில் பெண்ணவளை படுக்க வைத்தவன் அவளை முற்றிலும் ஆராய்ந்தான்.

உடலெல்லாம் விறைத்துப் போயிருக்க, பரபரப்புடன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளது உடைகளை களைந்தான். மாற்று உடையை தேடுவதற்குக் கூட நேரமில்லை. போர்வையை எடுத்து அவளை சுற்றிலும் போர்த்திவிட்டவன், பெண்ணவளின் கைகால்களை பரபரவென்று தேய்த்து விடத் தொடங்கினான்.

"பைத்தியக்காரி... ஏன்டி இப்படி பண்ணுன?" என்று அவளை கோபத்தில் திட்டித் தீர்த்தபடி தன் மீது சாய்த்தவன் பெண்ணவளின் தலையை நன்கு துவட்டிவிட்டான். அவனது செயலில் சற்று தெளிந்தவள் கண்களை முழுவதும் திறக்க இயலாது சிரமம் கொண்டபடி முணங்கினாள்.

"வலிக்கு... வலிக்குது மா..மா." என்று வலியில் பிதற்றினாள். அவள் பிதற்றல் ஆணவனை வதைத்தது.

"ஏன்டி என் உயிரை வாங்குற? பைத்தியக்காரி வர ஆத்திரத்துக்கு உன்னை கொன்னுப் போட்டாலும் தப்பில்லை." என்று மிரட்டினாலும் அவளை
கவனிப்பதில் தான் அவனின் முழுகவனம் இருந்தது.

குளிரில் நடுங்கிய தேகம் சற்று நடுக்கத்தை குறைத்தது அவனது செய்கையில். மெல்ல அவளைத் தூக்கிக் கொண்டு மெத்தையில் படுக்க வைத்தான்.

அவளால் எழுந்துக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவனது செயலை உணர முடிந்தது. தற்போது தான் தன் உடலில் இரத்தம் பாய்வதையே உணர்ந்தவளுக்கு அவளையும் மீறி அடித்துப் போட்டதுப் போல் உறக்கம் கொள்ளத்தொடங்கியிருந்தாள்.

அவள் மீண்டு வந்துவிட்டாள் என்பதை உணர்ந்ததும் தான் முரளிக்கு நீண்ட ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

ஆடைகளைந்த போதும் அவள் மீது அவன் பார்வை தவறாகப் படவில்லை. அவன் கவனம் முழுவதும் அவள் உயிரை காப்பதில் குறியாக இருந்தது. இத்தனை அன்பும், அரவணைப்பையும் அவள் மீது வைத்தவன், தற்போது இப்படி நடந்துக் கொள்கிறான் என்றால் காரணம் என்னவாக இருக்கும்?

"மன்னிக்கமாட்டேன் அம்மு. உன்ன நான் என்னைக்குமே மன்னிக்கவே மாட்டேன். பிடிவாதத்தால நீ நினைக்குறத நடத்திக் காட்டாலும்னு நினைக்குற? ஆனா அது என்னைக்குமே நடக்காது." என்றவன் உறங்கும் அவளை அழுத்தம் நிறைந்த பார்வை பார்த்தப்படி கூறினான்.

உறக்கத்தில் பெண்ணவள் மீண்டும் நடுங்கிக் கொண்டிருக்க, அறையிலிருந்த மற்ற போர்வைகளையும் எடுத்துக் கொண்டு வந்து அவள் மீது போர்த்தியவன், தானும் அவ்விடமே படுத்துக் கொண்டான்.

ஆயிரம் யோசனை மீண்டும் அவன் மனதில் ஓடத் தொடங்கியது. திருமணம் முடிந்து ஒரு நாள் கடப்பதற்குள் தன்னை இப்படி ஆட்டிப் படைக்கிறாளே? என்று யோசித்தவனுக்கு இனி வரும் காலங்களை எண்ணி ஒருவித கலக்கம் தோன்றியது.

கண்ணை மறைக்கும் அளவுக்கு கோபம் இருந்தும், உள்ளுக்குள் பூட்டிவைக்கப்பட்ட அன்பு எங்கு வெளியே வந்துவிடுமோ? என்கின்ற கலக்கம் அவனுள் எழுந்தது.

"வரவிடமாட்டேன். எனக்கு நீ பண்ண துரோகத்தை மனசுல இருந்து அழிக்கவும் மாட்டேன். உன்ன மன்னிக்கவும் மாட்டேன். அதே சமயம் நீயே என்ன வெறுப்ப? வெறுக்க வைப்பேன்." என்றவன் தன் கண்களை மூடிக்கொண்டான்.

அடுத்தநாள் காலை, முதலில் கண் விழித்தது என்னவோ ஆணவன் தான். தன் மார்பின் மீது பஞ்சுப் பொதிப் போல் ஏதோ ஒன்று அழுத்துவதைப் போல் உணர்ந்தவன் கண்களை மெல்லத் திறந்துப் பார்த்தான்.

அமிர்தா தான். அவன் மார்பில் தலையை புதைத்து, அவனை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள். பெண்ணவளின் செயலில் சட்டென்று கோபம் துளிர்த்தாலும், அவளது தேகம் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சிக் கொண்டான்.

இரவு நடந்தவைகள் அனைத்தும் கண்முன் விரிந்தது. "பைத்தியக்காரி." பற்களைக் கடித்தபடி எழ முயன்றவனுக்கு பெண்ணவள் பாரமாகி போய்விட,

"அடியே எழுந்திருடி..." என்றான் பெருங்குரலெடுத்து.

அவள் எழவில்லை என்று தெரிந்ததும், வெடுக்கென்று அவளைத் தன்னிடமிருந்து பிரித்து தள்ளியிருந்தான்.

அந்நொடி கண்விழித்தவள், கண்களை சுருக்கிக் கொண்டு தன்னவனைப் பார்த்தாள். மெல்ல தன்னைப் உணர்ந்தவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. உடைகள் எதுவுமின்றி போர்வையில் அரைகுறையாக அல்லவா படுத்துக் கொண்டிருந்தாள். இரவு நடந்தவை ஒவ்வொன்றும் அந்நொடி பெண்ணவளது நினைவில் வரவில்லை.

"என்னை நீங்க என்ன பண்ணீங்க?" என்றவள் பயத்துடன் கேட்டுவிட,

"வாட்? என்ன பண்ணனுமோ அதை தான் பண்ணேன். சொல்லு திரும்ப பண்ணனுமா என்ன?" அவன் மிகச் சாதாரணமாக வார்த்தைகளை உதிர்த்தான். அவள் எதைக் கேட்கிறாள் என்று அவனும் முதலில் உணரவில்லை. நேற்று நடந்தவை என்று அவன் இவ்வாறு கூறியிருந்தான்.

அவன் கூறிய பதிலைக் கேட்டு ஒரு நொடி உலகமே சுற்றியதுப் போன்ற உணர்வு பெண்ணவளுக்கு. மேலும் தண்ணீரில் இருந்ததன் தாக்கம் உடம்பெல்லாம் வலியெடுக்க, அதையும் தவறாக நினைத்துக் கொண்டாள் மாது‌.

தாம்பத்யம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கூட முழுதாக உணராதவள், பாதி சுயநினைவை நேற்று தொலைத்ததன் விளைவு நடந்தது எதுவுமே அவள் புத்திக்கு எட்டவில்லை. தன் மனதை காயப்படுத்திவிட்டு, தன் உடலை மட்டும் எடுத்துக் கொண்டவனின் செயலை நினைக்கும் நொடியே அவளுக்கு உவப்பாக இருந்தது.

கண்கள் சிவக்க, அமர்ந்திருந்தவளது வெண் கரங்கள், ஆணவனின் கன்னத்தை பதம் பார்த்திருக்க, அவளது செயலை துளியும் எதிர்பார்க்காதவனோ ஒரு கணம் உறைந்துப் போய் பெண்ணவளை கண்கள் சிவக்க உக்கிரமாய் பார்க்க, அடுத்து அவன் புரிந்த செயலில் உறைந்தது என்னவோ பெண்ணவள் தான்.
 
Status
Not open for further replies.
Top