3.இசை
நீல நிற வர்ணம் பூசிய வீட்டிற்குள் விறுவிறுவென்று நுழைந்திருந்தான் இனியன்.
"டேய் நில்லு.. எங்கடா போற?" நண்பனின் குரல் அவனது செவியை எட்டினாலும், அவன் பாட்டுக்கு முன்னோக்கி வேக எட்டுக்களை வைத்தான்.
"இனியா நில்லுடா.. என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?"
என்றவனது தோழன் அஸ்வின் சற்று கத்தியதில் நிதானமாக திரும்பி பார்த்தவனது முகத்தில் எவ்வித உணர்வும் வெளிப்படவில்லை.
"நல்ல காரியம் தான் பண்ணிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் வழியை விடு." என்றான் வெகு இலகுவாக.
"என்னடா நல்ல காரியம்? இனி அமிர்தா வாழ்க்கை என்னாகும்? கல்யாணமாகி சந்தோசமா வாழ வேண்டிய பொண்ணோட வாழ்க்கையை இப்படி கெடுத்துட்ட? இரண்டாம் கல்யாணம் பண்ணிட்டு ஒரு குழந்தைக்கு அம்மாவா போகிற வயசாடா அவளுக்கு. சின்ன பொண்ணுடா அவ?" என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தான் அஸ்வின்.
"பேசிட்டியா? நான் கிளம்பட்டுமா?" என்று சொல்லும் நண்பனை வெட்டவா? இல்லை குத்தவா? என்பது போல் பார்வை பதித்தவனோ,
"டேய் இனியா ஓவரா போறடா." என்றான் காட்டமாக.
"நான் இவ்வளவு தூரம் இறங்கி பண்ணதுக்கு காரணம் இல்லாமல் இருக்கும்னு நினைக்குறியா?"
"அப்படி என்னடா காரணம்? அவளை அவமானப்படுத்தி இப்படி ஒரு நிலைமையில் நிற்க வெச்சுருக்க? சொந்த அப்பா கூட அவ கல்யாணத்துக்கு வர விடாமல் பண்ணிட்டு, சர்வசாதாரணமா வந்து பேசிட்டு இருக்குற."
"சொந்த பொண்ணு மேல நம்பிக்கை இல்லாத அப்பன் தேவையே இல்லை. அமிர்தா, முரளி அண்ணன் கூட சந்தோசமாக தான் இருப்பா."
"உனக்கு வாழ்க்கையோட சீரியஸ்னஸ் தெரியலை மச்சான். தெரிஞ்சுருந்தா நீ காதலிச்ச பொண்ணை இப்படி விட்டுக் கொடுத்திருக்க மாட்ட?" என்றவன் கூற,
"தெரிஞ்சதுனால தான் இப்படி ஒரு விசயத்தை துணிஞ்சு செஞ்சேன்." என்றவனின் இதழோரம் வலி நிறைந்த புன்னகை வெளிப்பட்டது. இருந்தும் ஒற்றைப் புன்னகையில் அவனை கடந்து அங்கிருந்து சென்றிருந்தான் இனியன்.
ஆம், அமிர்தாவை ஒரு காலத்தில் நேசித்தவன். அந்த நேசத்திற்காக அவன் புரிந்த செயல்களின் விளைவு, இன்று முரளியின் மனைவியாகி போனாள் அமிர்தா. அவனொன்று நினைத்து செய்த செயல் விதி எவ்வாறு மாற்றப் போகிறதோ என்பது காலம் அறிந்த ஒன்று.
***
அமிர்தாவை அழைத்துக் கொண்டு யாத்ரனும் முரளியும் வீடு வந்து சேர்ந்தனர். அவன் ஒதுங்கி சென்றாலும், மகன் யாத்ரனோ அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு பாலமாய் வந்து நின்றுவிட, முரளியும் என்ன தான் செய்வான்? பல்லைக் கடித்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டான் ஆண்மகன்.
வீட்டில் இருக்கும் சம்பிரதாயங்களை அமிர்தா ஒற்றையாளாக செய்தாள். பாலும் பழமும் சாப்பிடக் கூட அவன் வரவில்லை. அவன் திருமணம் புரிந்ததே பெரிய விசயம் என்பதால் அபயாம்பிகாவும் அதனை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
"அமிர்தா, ஆரம்பத்தில அவன் அப்படி தான் இருப்பான். போக போக எல்லாம் சரியாகிடும். நீ ஒன்னும் கவலைப்படாத" எனும் அத்தையைக் கண்டு வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி தலையாட்டினாள் அமிர்தா.
"என்னமா, வரவர நீயும் ரொம்ப பொய் பேச தொடங்கிட்ட? உன் மகனைப் பத்தி உனக்கு தெரியாதா?" என்று அர்ச்சனா கேலி சிரிப்புடன் கூற,
அமிர்தாவின் முகம் நொடியில் மாறியது என்றால் அபயாம்பிகாவோ, கடுங்கோபம் கொண்டார்.
"என் புள்ளையை பத்தி எனக்கு தெரியும். அவன் மூணு வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தானு உனக்கும் நல்லாவே தெரியும்." என்றவர் காட்டமாக கூற,
"தெரியும்.. தெரியும். உன் பையனைப் பத்தி ஒரு வார்த்தை பேசவிடமாட்டியே? ஊருல பொண்ணே இல்லாத மாதிரி இவளை கட்டிக்கிட்டு கூப்பிட்டு வந்துட்டீங்க. இனி எனக்கென்ன வந்தது." என்று தலையில் அடிக்காத குறையாக அவள் சென்றிருக்க, அவள் கூறிய வார்த்தைகள் அமிர்தாவின் மனதை நோகடித்திருந்தது.
மருமகளின் முகவாட்டத்தை கண்டதும், அவளது கரம் பற்றிக் கொண்டவர், "அவ ஒரு பைத்தியம்மா. அவ பேசுறத எல்லாம் பெருசா எடுத்துக்காத. நீதான் எங்க வீட்டு மகாலட்சுமி. நீதான் என் பையனை பழையபடி மீட்டு தரணும். யாத்ரனுக்கு அம்மாவா மட்டுமில்ல, என் மகனுக்கு நல்ல மனைவியாவும் நீ வாழணும் அம்மு." என்றவர் கடைசி வார்த்தைகளை நாதழுதழுக்க கூறினார்.
"அத்தை, கண்டிப்பா இருப்பேன்." என்று அவரது கரத்தை மேலும் இறுகப் பற்றிக் கொண்டாள் அமிர்தா.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, உடை மாற்றிவிட்டு, கருப்பு நிற சட்டையும், சாம்பல் வண்ண கால்சட்டையும் அணிந்தபடி, சட்டையின் ஸ்லீவ்வை முழங்கை வரை மடித்துவிட்டு விறுவிறுவென மாடியிலிருந்து இறங்கி வந்தான் முரளி மனோகரன்.
அவனது சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளதுப் பார்வை அவன் மீதே முற்றும் முழுவதுமாய் பதிந்தது. ஆணவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவளையொரு பொருட்டாக கூட மதியாமல் அவன் விறுவிறுவென கடந்து செல்ல,
"மனோ.. மனோ நில்லுடா. கல்யாண சாப்பாடு சாப்பிட்டு போடா." என்று அபயாம்பிகா தான் ஆணவனை அழைத்தார்.
"கருமாதி சாப்பாடு வேணா போடுமா. சாப்டு போறேன்." என்று பற்களைக் கடித்துக் கொண்டு அவன் செல்ல, அவன் கூறிய வார்த்தைக் கேட்டு அபயாம்பிகா, மற்றும் அமிர்தா இருவரின் முகம் நொடியில் மாறியது.
"என்ன பேச்சு பேசுற? டேய் நில்லுடா." என்று மகனிடம் அதட்டிக்கொண்டு அவர் பேசியது என்னவோ காற்றில் கரைந்து தான் சென்றது.
அவன் பேசியதுக் கேட்டு அமிர்தாவின் கண்கள் சடுதியில் கலங்கியது.
'இந்தளவு ஏன் மாமா என்ன வெறுக்குறீங்க?' மனதில் கேட்டவள் தன் அத்தை பார்க்கும் முன்னர் கண்களை துடைத்துக் கொண்டாள்.
"நான் பெத்த இரண்டும் பைத்தியமா இருக்குமா. நீ கவலைப்படாத, எல்லாம் சரியாகும். போ போய் உங்க ரூம்ல ரெஸ்ட் எடு." என்றவர் மருமகளை அனுப்பிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.
என்ன தான் மற்ற வேலைகளை அவர் கவனிக்க சென்றாலும் மகன் மற்றும் மகளை எண்ணி கலங்காமல் அவர் இல்லை.
ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என ஒரு காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த குடும்பம் இவர்களுடையது. தில்லைராஜன் அயராது உழைத்து சம்பாதித்தே மகன் மற்றும் மகள் இருவரையும் படிக்க வைத்து வளர்த்தார். அவருக்கென்று இருந்தது ஒரே ஒரு சிறிய துணிக்கடை. முரளி பி.ஏ பொருளாதாரம் படித்தவன், தந்தைக்கு உதவியாக துணிக்கடையைப் பார்க்கத் தொடங்கியிருந்தான்.
கல்லூரி வாழ்வில் துறுதுறுவென துள்ளித் திரிந்த இளைஞன், புதிதாய் பொறுப்பை ஏற்ற கணம் அவனால் அதை சரியாக வழிநடத்த இயலாதுப் போனாது. மெல்ல மெல்ல தோல்விகளிலிருந்து கற்றுத் தேர்ந்தவன் தந்தையின் உதவியுடனே சிறிது கடையை பெரிதுப்படுத்தியிருந்தான்.
தங்கை அர்ச்சனாவின் படிப்பு முடிந்ததும், அவளுக்கு திருமணம் என்று செலவு செய்ததில் ஒரு சில கடன்களை வாங்க நேர்ந்தது. மெல்ல மெல்ல அவன் கடன்களை அடைத்துக் கொண்டு கடையையும் சேர்த்து பார்த்துக் கொண்ட சமயம் அவனுக்கும் திருமணம்.
எண்ணற்ற கனவுகளை சுமந்தவன், பெரும் காதலோடு திருமணம் புரிய, ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை. ஆணவனின் அனைத்துக் கனவுகளும் கானல் நீராகிப் போயிருக்க, திருமணம் என்பதையே அறவே வெறுத்தவன், இன்று இரண்டாம் திருமணம் புரிந்திருக்கிறான் என்றால் காரணம் யாத்ரன் மட்டுமே.
விளையாடி களைத்தவாறு உறங்கிக் கொண்டிருந்த யாத்ரனின் அருகே வந்தமர்ந்தாள் அமிர்தா. யாத்ரனின் தலைமுடியை இதமாக கோதிவிட்டாள். தாயின் செயலில் அவன் நெளிந்துக் கொடுக்க, மெல்ல தன் கைகளை எடுத்துக் கொண்டவள், அவனது சிறுசிறு அசைவுகளை ரசிக்கத் தொடங்கினாள்.
"என் தங்கம். என் சமத்து.... என் பட்டுக்குட்டி.." என்று தன் மெல்லிய குரலில் அழகாய் கொஞ்சியவள் அவனருகே சென்று ஒற்றைக்கரத்தால் குழந்தையை அணைத்துக்கொண்டே மெத்தையில் படுத்துக் கொண்டாள்.
பிஞ்சு முகம் காணும் நொடி அவள் வலிகள் மறைந்தது. கண்களில் இதம் சேர்ந்தது. மனம் முழுவதும் ஒருவித அமைதி நிலவியது.
"யாதுகுட்டி கடவுள் எனக்காக கொடுத்த பெரிய பொக்கிஷம் நீ. உன்ன யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன்." என்று மனதார உரைத்தவள் அவளையும் மீறி கண்ணயர்ந்து நிம்மதியான உறக்கத்தை தழுவியிருந்தாள்.
எத்தனை நேரம் உறங்கினாளோ யாத்ரனின் சத்தம் கேட்டு மீண்டும் எழுந்துக் கொண்டாள் அமிர்தா. பின் மதிய உணவு உண்டு முடித்தவள், யாத்ரனுக்கும் உணவு கொடுத்து விட்டு அவனோடு சிறிது விளையாடத் தொடங்கியிருந்தாள்.
அபயாம்பிகாவின் மனம் பெரும் நிம்மதியடைந்தது. தன் பேரனை அமிர்தா பார்த்துக் கொள்வாள் என்ற நிம்மதியில் கணவனிடம் அகம் மகிழ்ந்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
"ஏங்க, கண்டிப்பா நம்ம பையன் அமிர்தாவை ஏத்துப்பான். நீங்க வேணா பாருங்க"
"அவன் சந்தோசமா வாழ்ந்தா போதும் அம்பிகா. கண்டிப்பா உன் வாக்கு பலிக்கட்டும்" என்றவரும் பெருமூச்சு விட்டார்.
இரவு எட்டு மணி யாத்ரனும், அமிர்தாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். தன்னுடன் இத்தனை நாள் யாரும் விளையாடவில்லை என்ற குறையைத் தீர்ப்பதற்காகவே அமிர்தா வந்துவிட, 'அம்மு' என்று துறுதுறுவென ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தான் யாத்ரன்.
இத்தனை நாள் அழுகையில் கரைந்தவளுக்கு உலகமே புதிதாய் மலர்ந்தது போல, யாத்ரன் கிடைக்க "யாது" என்று அவளும் மழலையோடு மழலையாகிப் போனாள்.
"யாது ஓடாதடா அம்முகிட்ட வா..." என்றவள் சுற்றி சுற்றி ஓடும் யாத்ரனின் பின்னே ஓடினாள்.
"அம்மு என்ன பிடி.." என்று தன் அரிசிப்பற்கள் தெரிய புன்னகைத்தபடி ஓடும் மகனை எளிதில் பிடிக்க முயன்றாலும், கடினப்படுவதுப் போல் காட்டிக்கொண்டாள் அமிர்தா.
"மூச்சு வாங்குது யாது." என்று மண்டியிட்டு அவள் தரையில் அமர்ந்துக் கொள்ள,
"அம்மு.... என்னாச்சு?" என்று உதட்டை பிதுக்கி கேட்டபடி அமிர்தாவின் அருகே ஓடி வந்தான் யாத்ரன்.
இதுதான் சரியான சமயமென்று அவனை வாரி அணைத்துக் கொண்டவள், "யாது குட்டி மாட்டுனியா?" என்று அவன் கன்னத்தைப் பற்றி பெண்ணவள் முத்தமிட,
"எச்சி பண்ற அம்மு... போ உன்கூட டூ." என்றவன் நகர முற்பட,
"படவா... என்ன பேச்சு பேசுற நீ. அப்படி எல்லாம் உன்ன விடமுடியாது. மாட்டுனா உம்மு தான். எங்க உன் அம்முக்கு உம்மு கொடு." என்றவள் கன்னத்தை காட்டவும், அறைக்குள் முரளி நுழையவும் சரியாக இருந்தது.
"ஐ டாடி..." என்று தந்தையைக் கண்டு யாத்ரன் உற்சாகமாக கத்தினான்.
"யாது.." என்று அவனும் கண் சிமிட்டியவன், அடுத்த கணம் ஓரக்கண்ணால் பெண்ணவளை முறைத்தான்.
தன்னறையில் அவள் இருப்பதில் அவனுக்கும் துளியும் விருப்பமில்லை.
"டாடி....டாடி எனக்கு பதிலா அம்முக்கு நீ உம்மு கொடு. யாது பாவம்ல, யாதுக்கு வாய்ல புண்ணு." என்று பட்டென்று மழலை தனக்காக பரிந்துரைத்துக் கொண்டு கேட்க,
அமிர்தாவோ ஒரு நொடி அதிர்ந்து விழித்தாள் என்றால் ஆணவனோ அவளை ஏகத்துக்கும் முறைத்தான்.
'இது எல்லாம் உன் வேலைதானா ?' என்பது போல் இருந்தது அவன் பார்வை.
அவன் கேட்கும் முன்னரே அவள் வாய் திறந்தாள்.
"அய்யய்யோ, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. நானும் யாதுவும் விளையாடிகிட்டு இருந்தோம்." என்றவள் பதட்டத்துடன் மொழிந்தாள்.
அவன் பதில் எதுவும் பேசவில்லை.
"யாதுகுட்டி நீ சாப்டியா?" என்றவன் மகனை அவளிடமிருந்து பிரித்து தூக்கிக் கொள்ள, அவனது வெடுக்கென்ற செயலில் பதறிப் போய் பார்வை பதித்தாள் பெண்.
அந்த சிறு பிரிவைக் கூட அவளால் தாங்க இயலவில்லை. அந்தளவு யாத்ரனுடன் ஒன்றிக்கொண்டாள் அமிர்தா.
"சாப்டேன் டாடி. நீ உம்மு தரலையா அம்முக்கு?"
"அதுலயே இருக்காதடா... உம்மு தானே உனக்கு தரேன்." என்று மகனின் கன்னத்தில் ஆணவன் முத்தமிட செல்ல,
"இல்ல... அம்முக்கு டாடி." என்றான் கன்னத்தை மறுப்பாய் அசைத்து.
"யாது... என்ன இது பிடிவாதம். வரவர அவ கூட சேர்ந்து நீயும் ரொம்ப குறும்பு பண்ற? போ போய் தூங்கு." என்றான் அதட்டலாக.
தந்தையின் அதட்டல் மொழியில் உதட்டை பிதுக்கியவனோ, "டாடி உன்கூட டூ, நான் ஆச்சிகிட்ட போறேன்." என்றவனோ அவன் கைகளிலிருந்து இறங்கி ஒரே ஓட்டமாக தேம்பிக் கொண்டே அறையை விட்டு வெளியே ஓடினான்.
"எல்லாம் உன்னால தான்டி. என்ன பண்ணி வெச்சிருக்க?" அவன் அவளை முறைக்க,
"நான் ஒன்னும் பண்ணல. சும்மா விளையாடினோம். சின்ன பையன் விளையாட்டுக்கு சொல்றதுக்கு ஏங்க நீங்க அவனை அதட்டுறீங்க. பாவம் யாது."
"என்னடி வாய் நீளுது? அவனை சொல்ல வைக்குறது நீதானா?"
"அப்படி எல்லாம் நான் ஒன்னும் சொல்ல வைக்கல. எனக்கு வேணும்னா நானே கேட்பேன். பையன் கிட்ட சொல்லியா கேட்பேன்." என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் கூறிவிட,
"எது ?" என்றவன் புருவம் உயர்த்த, தான் கூறியதன் அர்த்தம் அதன் பின்னரே உணர்ந்தவள்,
'செத்தேன் இன்னைக்கு' என்று நாக்கை கடித்து, திருதிருவென முழித்துக் கொண்டு பார்த்தாள் அமிர்தவர்ஷினி...