ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இதயம் ஒரு கோவில் கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 04

கர்ணன் தனது உள்ளங்கை சிவக்கும் அளவிற்கு கதவை தட்டி விட்டான் ரஜீவன் திறந்த பாடு தான் இல்லை.. சரிந்து விழுந்த ஐங்கரனிடம் பூரணியோட ரஜீவனை கர்ணன் பின் தொடர்ந்து வந்திருந்தான்.

"டேய் கதவை திறடா என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கணும்.. இப்படி கதவை அடைச்சுக்கிட்டு உள்ள இருந்தா பிரச்சனை தீர்ந்திடுமா??.."
என்ன சொன்னாலும் கதவை திறக்காமல் அழிச்சாட்டியம் செய்பவனை வெளிப்படையாக திட்டக் கூட முடியவில்லை.. அப்படிப்பட்ட உயிர் நண்பன் ரஜீவன் கர்ணனுக்கு.. ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே சட்டையை போட்டுக் கொள்ளும் விளையாட்டு நண்பனாக ஆரம்பித்தது கல்வியிலும் சரி தொழிலிலும் சரி அவன் மட்டும் முன்னேறாமல் கர்ணனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்.. ஜஸ்ட் பாஸில் வருடங்களை கடந்து கொண்டிருந்தவனை பேசியே சரி கட்டி தன் தொழிலிலும் பார்ட்னர் ஆக்கி கர்ணனை நம்பியும் காண்ட்ராக்ட்களை கண்ணை மூடிக் கொண்டு கொடுக்கலாம் என்ற பெயரை வாங்கி கொடுத்து இருக்கிறான்..

அவனுக்கு இத்தகைய அவமானம் ஏற்பட்டது கர்ணனுக்கு மிகுந்த மனவருத்தமே.. ஐங்கரன் மீது கோபம் வந்தது எல்லாம் அவரால் தான். அதற்காக அவரைத் திட்ட கூட முடியவில்லை அவருக்கு கர்ணனும் இன்னொரு மகன்தான் தந்தை இல்லாதவனை ரஜீவனுக்கு ஒப்பாகத்தான் பார்த்தார் ஆனாலும் மகன் விஷயத்தில் அவசரப்படாமல் யோசித்து செயல்பட்டு இருக்கலாம் மனதுக்குள் வருந்தி கொண்டு எப்படியாவது கதவை திறக்க வைத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் வேகமாக தட்டினான்.

"ரஜீவ் ஏய் கதவை திறடா.. மனுசன போட்டு இந்த பாடு படுத்துற!!.."
சடார் என்று திறந்த கதவுக்கு பின்னால் பனியனோடு நின்றவனை பார்த்து
"என்னடா பட்டு சட்டை எல்லாம் கழட்டி வீசிட்ட??" என கலங்கினான்.

"ஆமா எனக்கு இப்ப பட்டு சட்டை ஒன்னு தான் கேடு!.."
அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவன்
"ஒன்னும் சொல்லாம உள்ள வந்துட்ட.. நித்தியாவை உங்க அத்தை இழுத்துக் கிட்டு போயிடுச்சு ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசிக் கிட்டு இருக்காங்க டா அப்பா வேற வருத்தமா கீழே உக்காந்துட்டாரு.. அம்மா அழுகுறாங்க உன் பாட்டுக்கு வந்து கதவை பூட்டிகிட்ட! பயந்து போயிட்டேன் அடுத்தது என்ன??"

"தெரியல டா!.." கர்ணன் அளவெல்லாம் துடிக்கவில்லை இயல்பாக இருந்தான்.
"என்னடா இப்படி சொல்ற??" வழமை போல மன வருத்தங்களை காட்டிக் கொள்ளாமல் நண்பன் தனக்குள் வேதனைப்படுகிறானோ என தோன்றியது கர்ணனுக்கு.

"வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற.."

"கல்யாணம் நின்னதை நெனச்சு வருத்தப்படுறியா!?"

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை யோசிச்சு பாரு தாலி கட்ட முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சதுனால சரியா போச்சு இல்லன்னா.. நித்தியா எங்க குடும்பத்தையே நல்லா ஏமாத்திட்டால்ல.. வீட்டுக்குள்ள சின்ன பிள்ளை மாதிரி அதிகாரம் பண்ணிக்கிட்டு இருப்பாடா.. ஒரு வேலை செய்ய தெரியாத சோம்பேறி மூணு வருஷமா காதலிச்சு இருக்கானா எங்கள் முன்னாடி எல்லாம் நடிச்சுக்கிட்டு தானே இருந்து இருக்கணும்.. காதலிக்க மட்டுமா செய்திருக்கிறாள் கடவுளே..அத்தை பொண்ணுனு தான் அப்பா பிடிவாதமா அவளை கை காட்டவும் நான் மறுத்து பேசல.. இவங்க தொல்லையில் இருந்து தப்பிக்க அவளை பயன்படுத்த நினைத்தேன் ஆனால் பார்த்தியா அவள் என்னை எப்படி உபயோகப்படுத்த திட்டம் போட்டு இருக்கிறாள் என்று ஏன்டா இந்த பொண்ணுங்க இப்படி இருக்காங்க?"

"இப்ப எதுக்குடா பொண்ணுங்கன்னு பன்மையில பேசுற??"

"ம்ம்..அவள் மூஞ்ச பாத்ததுமே தெரியும் எந்த காரியமும் விளங்காதுனு சரியா வந்து கல்யாணத்தை நிறுத்திட்டா பாத்தியா??" எங்கிருந்து எங்கேயோ தாவினான்..

"யாரு மச்சி யாரை பத்தி பேசுற??"

"கர்ணா!!.."

"அந்த பொண்ணு பாட்டுக்கு கல்யாணத்துக்கு வந்தது அதுக்கும் உன் அத்தை மகள் செய்த தப்புக்கும் என்னடா சம்பந்தம் அனாவசியமாக நீ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற!.."

"அதெல்லாம் ஒன்னும் இல்லை அது தான் ஆழாக்கு சைஸ்ல இருக்கும் போதே சொன்னாலே என்னை தவிர நீங்கள் இன்னொரு பொண்ணை நெனச்சு கூட பாக்க கூடாது மீறிப் பார்த்தீங்கன்னா காளி கோவிலில் எலுமிச்சை வெட்டி போட்டுடுவேனு .. எனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச உடனே முதல்ல காளி கோவிலுக்கு தான் போயிருப்பாள்.. அது தான் சுபமா முடிஞ்சிருச்சு, சூனியக்காரி!.."

"உனக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க தொடங்கியே இரண்டு வாரம் தான் ஆச்சு.. உன் அத்தை மகள் மூன்று வருடமாக காதலிக்கிறாளாம் மூணு வருஷத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு காளி கோவில் போச்சா என்ன?.. ஏண்டா நீ வேற அது சரி அவளை ஒரு ஆளே இல்லைன்னு கத்துவ ஆனால் எப்பயோ பேசினதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சு சொல்றியே எப்படி?"

"இப்ப அது முக்கியமா??"

"ஆமான்னு சொன்னாலும் நீ உஷார் ஆகிட்ட இனி உன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் பிடுங்க முடியாது முதல்ல வெளியில வா அப்பா அம்மா கிட்ட பேசி அடுத்தது என்னன்னு முடிவு பண்ணலாம்"..

"இன்னும் என்ன அவங்க கிட்ட பேசி முடிவு எடுக்கணும்.. அவங்க முடிவு எடுத்து என்னை முடித்து விட்டது போதும், நானே ஒரு முடிவு எடுத்துட்டேன்!..."

"என்ன முடிவு டா??" அவன் பேச்சு தினுசில் கர்ணன் யோசனையானான்.
"அது வந்து".. என ரஜீவன் ஆரம்பிக்கும் போது மீண்டும் கதவு தட்டப்பட்டது.. கட்டிலில் அமர்ந்திருந்த கர்ணன் எழுந்து சென்று கதவை திறக்க ஐங்கரனும் பூரணியும் உள்ளே வந்தனர்.. ஒரே அவமானத்தில் தந்தை உடைந்து போய்விட்டார் என்று தெரிந்தது. சும்மாவே பூரணி பலவீனமானவர் தான் இப்போது இருவரும் நலிவாக தெரிந்தனர். பெற்றோரின் தோற்றம் மனதை உருக்கினாலும் அதே கல்போன்ற முக அமைப்போடு அவர்களை விட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.

மகனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் சோர்வாக ஐங்கரன் கட்டிலில் அமர்ந்து கொள்ள மகனுக்கு அருகில் சென்ற பூரணி அவனிடம் பேச துவங்கினார்.

"ரஜீவ்"..

"வீட்டுக்கு கிளம்பலாமா!?"

"வீட்டுக்கா.. உன் கிட்ட கொஞ்சம் பேசலாமேனு"

"திரும்பவும் முதல்ல இருந்து நாடகமா திருந்தவே மாட்டீங்களா இரண்டு பேரும்??" அவன் குதிக்கவும் கர்ணன் வந்து சமாதானப்படுத்தினான்.

"ரஜீவ் அம்மா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுப்பா!.."

"என்னம்மா.. தயவு செஞ்சு பாதிக்கப்பட்ட யாருக்கும் வாழ்க்கை கொடுத்து என்னை தியாகி ஆக சொல்லதிங்க"..
என மிகக் கடுமையான குரலில் தாயை எச்சரிக்க கண் கலங்க அவனை ஏறிட்ட பூரணி
"இல்லப்பா உங்க அத்தை குடும்பம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க அந்தப் பையனும் கூடவே கிளம்பிட்டான்!.."

"நல்லது அடுத்தது நாமும் கிளம்பலாம் சொந்தக்காரங்களை கிளம்ப சொல்லுங்க மத்த வேலை எல்லாம் கர்ணன் கிட்ட ஒப்படைங்க அவன் எல்லாவற்றையும் செட்டில் பண்ணி கிளியர் பண்ணி விடுவான்"..

"இல்லப்பா.. நம்ம கிளம்ப வேண்டாம்"..

"ஏன் இங்கேயே உட்கார்ந்து துக்கம் விசாரிப்பவர்களோடு கூட சேர்ந்து ஒப்பாரி வைக்கணுமா??.."

"என்னை கொஞ்சம் பேச விடுப்பா"..

"இன்னைக்கு உங்க பர்ஃபார்மன்ஸ் போதலம்மா.. இன்னும் ஹெவியா பர்ஃபார்மன்ஸ் பண்ணி என் தலையை கழுவுங்கள்.. நானும் அவமானப்பட்டு நிற்கிறேன்"..

"இப்படி எல்லாம் பேசாத ராஜா!.." என மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு கதறிய மனைவியை பார்த்ததும் தன்னால் தான் இவ்வளவும் என்று உணர்ந்த ஐங்கரன் அவரே எழுந்து மகனிடம் பேச தயாரானார்..

"ரஜீவ் தப்பு தான் நாங்க யார் சொன்னாலும் நீ காது கொடுத்து கேட்கல அது தான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னால் ஒரு வேலை கொஞ்சம் அக்கறையா எங்க பேச்சை கேப்பனு நினைச்சேன் அதே மாதிரி நீ கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லாம ஒத்துக்கிட்ட தானே.. எனக்கு சத்தியமா நித்தியா பத்தி தெரியலப்பா.. உன்னை அருமை பெருமையா வளர்த்த நாங்க இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்துவோமா.. நீ நடந்த பிழைக்கு எங்க மேல கோபப்பட்டு உன் சினத்தை ஆத்திக்கிற.. எங்களுக்கு அதுக்கு கூட வழி இல்லை.. சொந்த தங்கச்சி மகள் என்பதற்காக ஒழுங்கா விசாரிக்காம நம்பி தானே கல்யாண ஏற்பாடு பண்ணோம்.. அவள் எங்கள் முகத்தில் இப்படி கரியை பூசுவாள்னு நினைத்து கூட பார்க்கலையே.. எல்லா பிழைகளும் எங்க மேல தான்.. இல்லை என் மேல தான்.. அவள் கிட்ட கோபப்படாத உங்க அம்மா ஒரு அப்பாவி!.."

"இந்த பேச்சே வேணாம்.. எல்லாத்தையும் விட்டுட்டு போகலாம் எனக்கு வீட்டுக்கு போகணும்"..

"ஒரு நிமிஷம் இருப்பா!."

"இப்போ என்னப்பா?"

"இவ்வளவு காலம் தனியாக இருந்து விட்டாய் உன் அம்மாவுக்காக இந்த கல்யாணம் என வெளியில சொன்னாலும் உனக்குமே இனிமேல் ஒரு துணை இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என தோன்றிய படியால் தானே உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன?.."

"அப்பா‌ இப்ப இந்த விபரம் எல்லாம் எதுக்கு?"

"சொல்லு ரஜீவ் நித்தியா மணப்பெண் என்றதாலயா கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட!.."

"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஓயாமல் நீங்க எனக்கு கொடுத்த தொல்லையிலிருந்து தப்பிக்கிறதுக்கு நீங்க எந்த கழுதைக்கு தாலி கட்ட சொன்னாலும் நான் கட்டி இருப்பேன்!.."

"இந்த விஷயத்துல நீ உறுதியா இருக்கறதா இருந்தால் அடுத்த முகூர்த்தத்திலேயே ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா பண்ணுவியா??" முகத்தில் அனல் அடித்தது ரஜீவனுக்கு.

"அம்மாவோட தொணதொணப்பு போய் இப்போது நீங்களா.. மறுபடியும் எதுக்கு கல்யாணம்னு ஆரம்பிக்கிறீங்க??"

"கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு ரஜீவ் இந்த சொந்தம் பந்தம் உற்றார் உறவு இவங்கள பத்தி நீ கவலைப்படுவதில்லை இனி நாங்களும் கவலைப்பட போவதில்லை எங்களுக்கு எங்கள் பையனின் சந்தோஷமும் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் முக்கியம்.. இப்ப நடந்த பிரச்சினையால இனிமேல் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று முடிவு பண்ணிட்டியா.. நீ அவசரப்பட்டு அப்படி முடிவு எடுத்திட கூடாது என்று தான் அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு"..

"என்னப்பா பேசிகிட்டே போறீங்க.. இப்பதானே ஒரு பிரச்சனை ஓய்ந்தது.. மறுபடியும் கல்யாண பேச்சு இங்கு நடந்த கூத்து எல்லாம் பாத்த பிறகும் எந்த பைத்தியக்காரன் உங்ககிட்ட பொண்ணு தாரேனு சொன்னது?.. எனக்கு கல்யாணமும் வேணா ஒரு ம.. அப்பா தயவு செஞ்சு என் வாயை கிளறாம வாங்க வீட்டுக்கு போவோம்" உச்சகட்ட கோபத்தில் இருந்தவன் வாயை அடக்க முடியாமல் எரிந்து விழுந்தான்.

"ரஜீவ்!!"

"பொண்ணு தாரேன்னு சொன்ன லூசு குடும்பத்தை விடுங்க.. அந்தப் பொண்ணு எப்படி ஒத்துக்கிட்டது ஆமாம் இவ்வளவு கலவரத்திலும் அது எப்படி இன்ஸ்டன்ட்டா ஒரு பெண்ணை கண்டுபிடிச்சீங்க???"

"வழக்கத்தை மீறி மூச்சு விடாம இவ்வளவு பேசுறியே எந்த அளவுக்கு நீ மனசு உடைந்து போய் இருப்ப??" என கண்ணீர் சிந்திய தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டவன்
"பேச வேண்டிய நேரத்தில் கொஞ்சம் அதிகமாக பேசலாம் அம்மா தப்பில்லை!.. என்னால உங்கள மாதிரி வாழ முடியாது"
என வாயால் கூறிக் கொண்டே மனதுக்குள்
"குட்டி பிசாசு உன்னை பார்த்ததால் தான்டி என் இயல்பை மீறி‌ என்ன என்னவோ பண்ணுறேன்.. அவளோட தோஷம் என்னையும் தாக்குது!.." என புகைந்தான்..

"சரிப்பா.. இப்ப நம்ம வீட்டுக்கு போகலாம் வீட்டுக்கு போய் மீதி விஷயங்களை பேசி முடிவெடுக்கலாம்!.." தடாலடியாக பேசியும் பெற்றோர் மசியாததால் குரலை இறக்கினான்.

"எனக்குத் தலை வலிக்குது வீட்டுக்கு போலாமே"

"ரஜீவ் நம்ம அவமானப்பட்ட சொந்த பந்தம் முன்னாடியே உனக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணலாம்னு‌ நான் முடிவு பண்ணி இருக்கேன்".

"மறுபடியும் சொந்த பந்தத்தையும் கௌரவத்தை இழுத்துகிட்டு வாறீங்க, என்னமோ பண்ணுங்க அதுதான் சரின்னு சொல்லிட்டேனே இன்னும் என்ன எப்ப வருது அந்த அடுத்த முகூர்த்தம் இந்த மாசம் என்ன தேதி இல்ல அடுத்த மாசமா இன்னும் மூணு மாசத்துக்கு வேற முகூர்த்தமே இல்லனு பேசிக்கிட்டீங்களே அதுவும் நல்லது தான் இன்னும் மூணு நாலு மாசத்துக்கு கல்யாணத்தை தள்ளி போடலாம்.. ஆற‌ அமர உட்கார்ந்து பேசி நிதானமாக யோசித்து முடிவு எடுக்கலாம் இல்லப்பா??"

"இல்லைப்பா!!"

"என்னப்பா?"

"மறுபடியும் கல்யாணத்தை தள்ளிப் போட முடியாதுன்னு சொல்றேன் ப்பா"

"புரியலைப்பா??"

"இதுக்கு அப்புறம் எதையும் தள்ளி போட வேண்டாம்.. அதே மாதிரி நீ விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு பெண்ணின் குடும்பம் வேற்றாளுங்க இல்லை.. நாங்களே பேசி முடிவு பண்ணிட்டோம்"..

"என்ன முடிவு பண்ணிங்க??"

"இன்னும் 20 நிமிடத்தில் வரும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு!"

"என்ன?"

"அது தான் ப்பா இன்னும் 20 நிமிடத்தில்"...

"அவசர கோலமா ஆரம்பிச்ச ஒரு விஷயம் தானே இப்படி வந்து முடிஞ்சது மறுபடியும் என்னப்பா பண்ணிட்டு வந்து இருக்கீங்க??.."

"இல்லை கண்ணா!"

"அம்மா தயவு செய்து கொஞ்ச நேரம் பேசாமல் இருங்க.. என் பலவீனமே நீங்க தான்.. நீங்க அழுதாலே என்னால யோசிக்க முடியல மண்டை சூடாகுது"..

"இல்லை ரஜீவ் அந்த குடும்பமும் அந்த பொண்ணும் ரொம்ப நல்லவங்க இந்த தடவை நாங்க சரியான முடிவு தான் எடுத்திருக்கோம்"

"என்னப்பா புரியாம?.." என கத்த தொடங்கியவனை இடைமறித்த கர்ணன்
"முதலில் பெண் குடும்பம் யார்னு கேட்டுக் கொள்ளுடா.. சொல்ல முன்னாடியே கத்துற!.." என்க

"யாரா இருந்தாலும் அடுத்த 20 நிமிஷத்துல கல்யாணம் பண்ண முடியுமா??.."

"ஏன்ப்பா நடந்ததெல்லாம் மறந்திடு இப்பதான் உனக்கு கல்யாணம் நீ முதல் முறை மேடை ஏறுவதாக நினைச்சுக்கோயேன்!.."

"உடனே மறக்குற மாதிரியா காலையில் நடந்த சம்பவம் இருந்தது??.."

"அதை நினைத்து நினைத்து உன்னை நீயே காயப்படுத்திக்குவன்னு தான் நானும் அம்மாவும் இந்த முடிவையே எடுத்தோம்"..

"நான் ஒன்னும் என்னை காயப்படுத்தி கொள்ள மாட்டேன்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் கொஞ்சம் நார்மலானதும் கல்யாணத்தை பத்தி பேசலாம்!.."

"வேணாம் வேணாம் பா.. சூட்டோடு சூடாக உங்களுக்கு இந்த நல்ல காரியம் முடிந்து விடட்டும்!.."

"உங்க குடும்பத்துல பிரச்சனை அவசர கல்யாணம் பண்றீங்க அந்த பொண்ணு குடும்பத்தில் என்ன பிரச்சனை??.."

"அது.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா.. அவங்க எங்களுக்காக தான் பொண்ணு தரவே சம்மதம் சொன்னாங்க!.."

"யாருப்பா அது அவ்வளவு நல்லவங்க??"

"அவங்கள உனக்கு தெரியும் ஆனால் இப்போ ஞாபகம் இருக்காது!.."

"நான் அந்த பெண் கிட்ட பேசணும்!"

"அதுக்கு எல்லாம் டைம் இல்ல ராஜா நீ மனைக்கு போக தயாராகு"..

"கொஞ்சம் இருங்கம்மா ம்ம்.. என் சம்மதத்தை தான் மதிக்க மாட்டேங்கிறீங்க அந்தப் பெண் முழு மனதுடன் சம்மதம் சொல்லித் தான் கல்யாணத்துக்கு தயாராகிறீர்களா??"

"ஆமாம்".. என்ற தாயின் குரல் கொஞ்சம் மழுப்பலாகத் தான் ஒலித்தது..

"இது சரி வருமா??.."
இதற்கு மேல் இவனை யோசிக்க விட்டால் ஆபத்து என்பது போல தாய் தந்தை இருவரும் ஒரே நேரத்தில் அவன் கையை பற்றி
"ஒரு தடவை தான் பிழை நடக்கும் பொய்யில் ஆரம்பிச்ச ஒரு கல்யாணம் நிலைக்காம போயிருச்சு.. இது சத்தியத்தில் ஆரம்பிக்கிற கல்யாணம் நீ உன் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா தான் இருப்ப ஒரு படிப்பினையால் நல்ல முடிவு எடுத்திருக்கோம்.. இது நன்மையை தான் தரும்!! இதுக்கு பிறகும் உனக்கு எங்க வார்த்தைல நம்பிக்கை இல்லனா ஒரே மகன் நல்லா இருக்கணும்னு செஞ்ச காரியத்திற்காக நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்" என தந்தை அழ

"அப்பா என்ன பேசுறீங்க?" என அலறியவன் சம்மதமாக தலையாட்டினான் மனதுக்குள் இருந்த திட்டங்கள் நொறுங்கி போக

எந்த அளவிற்கு தனக்குள் வருந்தி கொண்டிருந்தால் தந்தை இப்படி பேசுவார் என்று புரிந்தவன் போல அமைதி காத்தவன் குழப்பமான ஒரு மனதுடனே கர்ணன் எடுத்துக் கொடுத்த பட்டு சட்டையை போட்டுக் கொண்டான்..

தந்தை கதவை திறக்க மறுபடியும் மனைக்கு செல்ல வெளியில் வந்து தளர்வாக மேடையை நோக்கி நடந்தான்.

"ஏம்மா பொண்ணு பெயர் என்ன??"

"ஜனனி!.."

"எந்த ஜனனி?" கர்ணன் குரல் தந்தி அடித்தது.

"காண்ட்ராக்டர் கண்ணபிரான் ஐயா பேத்தி!"

பின்னால் கர்ணன் கேட்ட கேள்வியையும் அதற்கு தாய் தந்த பதிலையும் கேட்டு உறைந்து போய் அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க அங்கே கர்ணனும் பேய் அறைந்தது போல் நின்றிருந்தான்..

Leave your valuable comments and likes 🙏
 
அத்தியாயம் 05


மனையில் அமர்ந்திருந்த ரஜீவனின் மனதுக்குள் எண்ணங்கள் தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருந்தது.. தவிப்பாக திரும்பி பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் கண்ணபிரானை ஒரு பார்வையும் மறுபக்கம் கண்ணீருடன் நிற்கும் பெற்றோரை ஒரு பார்வையும் பார்த்தான். எங்கெங்கோ பயணித்த எண்ணங்கள் ஒரு புள்ளியில் சங்கமித்தது அவன் கோரிய விண்ணப்பத்தை பிரபஞ்சம் இவ்வளவு விந்தையாக நிறைவேற்ற வேண்டுமா?
விருப்பமில்லாமல் ஆரம்பித்து ஒரு சூழ்ச்சி சுழலில் சிக்க போய் மயிரிழையில் தப்பியதாக நிம்மதியுற்று சில மணித்துளிகளிலேயே அதை விட பேராபத்தில் வசமாக மாட்டிக் கொண்டது போல் இருக்கிறது..

மணமகளின் பெயரைக் கேட்டவுடன் மறுபடியும் கோபம் உச்சிக்கேற ஏதோ சொல்ல போனவன் அவன் கரங்களைப் பற்றிய ஒரு நடுங்கிய கரத்தில் யாரிது என கீழே பார்த்தான்..
வீல்ச்சேரில் அமர்ந்த வண்ணமே அவன் கரங்களைப் பற்றி இருந்த கண்ணபிரான் கண்ணில் நீருடன் மாறாக உதட்டில் சிரிப்புடன் அவனைப் பார்த்து தலையசைத்தார்..


கண்ணபிரானை ஏற்கனவே அவனுக்கு தெரியும்.. அவன் தந்தைக்கு தொழில் சொல்லிக் கொடுத்து முன்னேற்றியவர்.. முறைப்படி இன்ஜினியரிங் படிக்காமலே 40 வருடமாக கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்.. அவரது இன்ஜினியரிங் அறிவுக்கு சிறந்த உதாரணமே அவரது வீடுதான்.. அதை பின்னொரு நாளில் நாம் காணலாம்.. ஐங்கரனுக்கு அவர் ஒரு குருவாக மட்டும் இருக்கவில்லை ஒரு தந்தை போல் இருந்து நல்வழிப்படுத்தினார் அதனாலேயே அனைவருக்கும் மரியாதை மதிப்புடன் சேர்ந்து பாசமும் அவர் மீது அதிகம், என்ன மற்றவர் மாதிரி ரஜீவன் அதை வெளிப்படையாக காட்டிக் கொண்டதில்லை.


மகனின் அருகிலேயே நின்றிருந்த ஐங்கரன்
"தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குப்பா!" என்க
தந்தை சொன்ன கணத்திலேயே அவர் காலில் விழுந்து எழுந்தவன்


"நல்லா இருப்பா நல்லா இரு மேடைக்கு போ முகூர்த்தத்துக்கு நேரமாகுது".. எனவும் ஒரு தலையசைப்புடன் மேடை ஏறி விட்டு மறுபடியும் கீழே இறங்கி வந்தான்..


"என்னப்பா?" என்று பதட்டமாக வந்த பெற்றோரிடம்
"இப்ப எல்லாரும் மனைக்கு வந்துருவீங்க தாத்தா மட்டும் எப்படி கீழே இருப்பாரு கர்ணா நான் அவரை தூக்குறேன் நீ வீல்ச்சேரை கொண்டு வா!" என்ற படி அவரைத் தூக்க


"இல்லப்பா உன் பட்டு வேட்டிச் சட்டை கசங்கிடும் நான் இப்படி கீழே இருந்து பாத்துக்குறேன்" என தயங்கினார் முதியவர்


"இல்ல இல்ல மேடைக்கு வாங்க இங்கிருந்து பார்த்தா எப்படி தெரியும்?"
என்று சொல்லி அவரை தூக்கிக் கொண்டு மேடை ஏறி மனைக்கு அருகிலேயே வீல்ச்சேரை போட்டு அமர வைத்தான்.


நிஜமாகவே ஏற்கனவே திருமணம் நின்றது மறுபடியும் இன்ஸ்டண்டாக ஒரு கல்யாணம் போன்றவற்றால் கொஞ்சம் கடுப்பாக இருக்கும் மகன் அந்த முதியவரிடம் மூஞ்சை திருப்பிக் கொள்வானோ என்று பயமாய் பார்த்திருந்த அவன் பெற்றோருக்கு அவன் தன்மையாக பேசவும் இப்போது தான் நிம்மதியாக இருந்தது.. ஆனால் அவன் மனதில் ஓடியது அவனுக்கு தானே தெரியும்.. திருமணம் நின்று விட்டதால் அவனுக்கு பெண் தேடும் போது ஏதாவது ஒரு குறையோடு தான் அமையும் என்று நினைக்க பெரும் குறையோடு ஜனனி அவன் வாழ்க்கையில் வருகிறாள்.. தெரியும் அவனுக்கு கண்ணபிரானை தெரியும் ராதை பாட்டியை தெரியும் காலந்தாழ்த்தி என்றாலும் அவர்கள் முத்தான பேத்தி ஜனனியின் மொத்த கதையும் தெரியும். சொல்லத்தான் முடியவில்லை.


அவன் மனைக்கு அருகில் செல்லும் போதே "உட்காருங்க தம்பி!" என்ற பாச அழைப்பில் யாரென்று திரும்பிப் பார்த்தால் அதே ஐயர் தான் சாப்பிட்டு வந்திருப்பார் போல தெம்பாக புன்னகைத்தார்.


"நீயா!?" என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு 'இவனாவது கிளம்பி இருந்தால் கல்யாணம் நடக்காதே மறுபடியும் வந்து உட்கார்ந்திருக்கான் கண்டிப்பா கல்யாணத்தை நடத்தி வச்சி பணத்தை வாங்கிட்டு தான் கிளம்புவான் போல' கடுப்பாக அமர்ந்து சாங்கியங்களை செய்ய தொடங்கியவனுக்கு மறுபடியும் மறுபடியும் ஜனனிக்கும் அவனுக்குமான உரசல்களே மூளையை ஆக்கிரமித்தது.

எப்போதும் அமைதியாக இருக்கும் அவனுக்கும் அமைதி என்றால் என்ன என்று அர்த்தமே தெரியாத அவளுக்கும் திருமணம் என்பது தான் இந்த ஆண்டில் நடக்கும் மிகப்பெரிய வேடிக்கை... இல்லை மிகப்பெரிய அனர்த்தம் என்று கூட சொல்லலாம்.


ஒரே மழை அள்ளி நம்ம போத்திக்கணும் ஹோ
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்
நிலா மழை மொழி அலை
பனி இருள் கிளி கிளை நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்
உனக்காக வாழ நினைக்கிறேன்..



இந்தக் கர்ணன் டீஜேவை இன்னும் துரத்தி விடலையா??
ஏதோ மெல்லிய மெலோடி பாடல்கள் ஓடிக்கொண்டிருந்த மண்டபத்தில் திடீரென்று ஒலித்த பாடலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்கு கண்ணில் தெரிந்தாள் ஜனனி..


காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே


தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே


ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது


வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்


கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை எனது கண்ணில்
பார்த்திட செய்வேன்


மழை நாளில் உன் மார்பில்
கம்பிளி ஆவேன்
மாலை காற்றை தலை கோதி
நித்திரை தருவேன்


காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே



ரஜீவனுக்கு ஆகாய நீலமும் கடல் நீலமும் மிகவும் பிடிக்கும் கிட்டத்தட்ட இரண்டும் ஒரே நிறம் தான் என்றாலும் கடல் அலைகளில் பிரதிபலிக்கும் அந்தப் பச்சையும் நீலமும் எப்பேர்ப்பட்ட மனதையும் சாந்தப் படுத்திவிடும்..


கையில் வெள்ளை ரோஜா பூக்களால் ஆன மலர் மாலையை ஏந்திய படி நடந்து வரும் ஜனனியும் அந்த கடல் நீலத்தில் தான் புடவை அணிந்திருந்தாள்.. அது அவனுக்குப் பிடித்த நிறம் என்று அவளுக்கு தெரியும்.. ஆனால் இந்த திடீர் கல்யாணத்துக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் புடவை வாங்க முடிந்தது என்று தான் தெரியவில்லை..


அசந்தர்ப்பமாக பள்ளி விழா ஒன்றுக்கு அவன் அணிந்து வந்த இதே நீல சட்டையும் அதன் மேல் இங்கை கொட்டி விட்டு அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அவளையும் மனம் நினைவு படுத்தியது..


"பொண்ணா நீ பிசாசு பிசாசு.. நடக்கிறது என்றால் என்ன என்று தெரியுமா எப்ப பாரு ஓடிக்கிட்டு என் ஃபேவரிட் ஷர்டையே நாசமாக்கிட்ட.. தேடித் தேடி வாங்கினேன்.. இப்ப நீ வாங்கி குடுப்பியா இல்லை வாஷ் பண்ணி குடுப்பியா சொல்லுடி குள்ள கத்திரிக்காய்?"


யாரிடமும் இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாமல் கோபத்தை கூட கண்ணியமாக காட்டுபவனுக்கு ஜனனி என்றாலே பெரும் சிக்கல் தான்.. அவளிடம் தான் சில நேரம் மூச்சு கூட விடாமல் பேசுவான் பேசுவான் என்பதை விட மரியாதையின்றி கத்தி தீர்ப்பான் என்று சொன்னால் பொருந்தும்.. இப்போதும் கூட அவள் காதை திருகிக் கொண்டு முகத்துக்கு அருகிலேயே அஷ்ட கோணலாக அவன் முகத்தை வைத்துக் கொண்டு திட்டுகிறான். அத்தனை திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல அசராமல் நிற்பவள் காது மடல் வரை சிவந்து கோபத்தில் அலறிக் கொண்டிருந்தவனை
"அய்யய்யோ பிரின்சிபல்!!" என்ற ஒரே வார்த்தையில் ஆஃப் ஆக்கி விட்டு எஸ்கேப் ஆகி விட்டாள்.. சேர்ட்டுக்கு சேர்ட்டும் போய் ஆளில்லாத வராண்டாவில் கைகட்டி தலைகுனிந்து அனாதையாய் நின்றது தான் மிச்சம்.. அன்று அவனை சந்தித்த அத்தனை பேரும் அரண்டு போகும் அளவுக்கு அவன் கோபம் இருந்தது வேற கதை..


பின்னொரு நாளில் அதே நிறத்தில் ஒரு டி-ஷர்ட்டை பிறந்தநாள் பரிசாக டேபிள் மேல் வைத்துவிட்டு அவள் ஒளிந்திருந்து பார்க்க வகுப்பறைக்குள் நுழைந்த நொடியில் இருந்து பார்சலை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவன் கர்ணனிடம் ஏதோ ரகசியமாக விசாரித்து விட்டு பார்சலை திறந்து டீஷர்ட்டை கையில் எடுக்க பின்னாடி ஐஃபை அடித்துக் கொள்ளும் சத்தம் எல்லாம் கேட்டது..
பக்கவாட்டாக முகமெல்லாம் சிரிப்போடு நிற்கும் ஜனனியும் அவள் தோழியும் தென்பட அவளை கவனிக்காதது போலவே நடந்து சென்று ஆசிரியரின் டேபிள் டிராயரிலிருந்த இங்க் பாட்டிலை எடுத்தவன் அதை அவளைப் பார்த்துக் கொண்டே கீழே போட்டு உடைத்து கையில் வைத்திருந்த டி ஷர்ட்டால் பரபரவென்று தரையை துடைத்தான். பேய் அறைந்தது போல் நிற்கும் ஜனனியை பார்த்த கர்ணனுக்கு கூட பாவமாக இருக்க ரஜீவனுக்கு அதுவும் போதாது என்பது போல் அவளுக்கு முன்பே டி-ஷர்டை கசக்கி குப்பை தொட்டியில் விட்டெறிந்தான். அன்று அவள் செய்ததற்கு பழிக்கு பழி வாங்கி விட்ட திருப்தியோடு அவளை கொடூரமாக பார்க்க


நிமிஷத்தில் முகம் மாறிவிட்டாலும் அவளின் குறும்பு தலைதூக்க 'இது எல்லாம் என்ன இதை விட ஸ்பெஷல் ஐட்டம் உனக்கு இருக்கு' என்பது போல கசங்கிய டி-ஷர்ட்டை எடுத்து உதறி தோளில் போட்டுக் கொண்டவள் அவனைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த கர்ணனை வம்பு இழுத்தாள்..


"என்ன கர்ணா பிளேன் டீசர்ட் புடிக்கலைன்னா சொல்லலாம் இல்லை இப்படி அவரே டிசைன் போட்டுக்கிட்டா சரியா.. இந்த டிசைனும் ஒன்னும் மொக்கையா இல்லை ஃபேன்சியா தான் இருக்கு.. அவருக்கு வேணாம்னா பரவாயில்லை ‌நானே போட்டு பிறந்தநாள் கொண்டாடுறேன் வர்ட்டா மாமே"..என துள்ளிக் கொண்டு செல்லும் அவளை உதைக்க முடியாமல் மேசையை எட்டி உதைக்க அது 'சிவனே!' என்று உட்கார்ந்து இருந்த கர்ணனின் முழங்காலை பதம் பார்த்து விட்டது..


"ஆஆ... ஐயோ சாமி மூட்டை உடைச்சுட்டானே!"


"சாரிடா பார்க்கல!"


"அது எப்படிடா பார்க்காமலே என்னை மட்டும் அடிக்கிற?.."


"சாரி சொல்லிட்டேன் இல்ல" என ரஜீவன் பல்லை கடிக்க


"சாரியா இது எத்தனாவது சாரி?.." என கண்ணீர் விட்டான் கர்ணன்


உண்மைதான் அவள் செய்யும் அட்ராசிட்டி அனைத்துக்கும் கர்ணன் தான் பலியாவான்.. இப்போது கூட மணமகளாக நடந்து வருபவளை கண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு நிற்கின்றான்.. வாரத்தில் ரெண்டு நாள் மூன்று நாள் நடக்கும் கலவரங்களிலேயே நொந்து நூலாகுவான்.. இனிமேல் வாழ்க்கை முழுவதுமா?? மெதுவாக நண்பனுக்கு அருகில் போய்


"மாப்பிள்ளை அப்பாவும் அம்மாவும் எந்த கழுதையை காட்டினாலும் தாலி கட்டுவேன்னு சொன்னியே நீ அதை சொல்லாமலே இருந்திருக்கலாம்" என்க


"ஏன்??" என‌ கேட்ட ரஜீவனின் பார்வை ஜனனியிடம் தான் இருந்தது


"நீ கழுதை என்று சொன்னதால் தான் இந்த பஞ்ச கல்யாணியை கூட்டிட்டு வந்து உனக்கு கட்டி வைக்கிறாங்க
என்னடா முறைக்கிற பஞ்ச கல்யாணியை கட்டி வச்சாலும் பரவால்ல இது பன்ச் கல்யாணி அடிதடி சண்டையில் கூட நீ ஜெயிக்க சான்ஸ் இருக்கு ஆனால் ஜனனி வாயாலேயே வண்டி ஓட்டுவாள் அது மட்டும் இல்லாமல் அந்த வண்டியை நம்ம மேல ஏத்தி கொன்னுட்டு தான் விடுவாள்!.."


"டேய்!..." என அவனிடம் ரஜீவன் கோபப்பட்ட நேரத்திலேயே


"இப்ப என்னடா பேச்சுவார்த்தை??" என்ற ஐங்கரன் கர்ணனை ஓரமாக இழுத்துக் கொண்டு சென்று விட்டார்..
மறுபடியும் திருமணம் தடை பட கூடாது என்பதிலும் மகன் முறுக்கிக் கொள்ள சந்தர்ப்பம் நிகழ்ந்திட கூடாது என்பதிலும் ஐங்கரன் மிக கவனமாய் இருந்தார். இத்தனைக்கும் முனுமுனுப்புடன் நின்ற சொந்தங்ளை கூட பேசியே சரிக்கட்டி இருந்தார்.
பிண்ணனியில் மெல்லிய காதல் பாடல் ஒலிக்க மேடை ஏறி வந்த ஜனனி திருமண மாலையை போட ரஜீவனை எழுந்து நிற்க சொன்னார் ஐயர்..


அவனுக்கும் அது தெரிந்து தான் இருந்தது.. இருந்தாலும் அவள் வந்தது தெரிந்தும் அசையாமல் அமர்ந்திருக்கும் மகனை ஐங்கரன்
எழும்பச் சொல்லி சைகை செய்ய மெதுவாக எழுந்தது மட்டுமல்லாமல் வேண்டுமென்றே அலவாங்கை விழுங்கியவன் போல அவன் உயரம் அத்தனைக்கும் நிமிர்ந்து நின்றவன் மாலை போட முடியாமல் பார்த்திருப்பவளை நக்கலாக வேறு பார்த்தான்..
அவன் திட்டம் புரிந்தது போல நேரடியாக ஐயரை பார்த்து "உட்கார்ந்து மாலை மாத்தலாம் தானே?" என கேள்வி கேட்டவள் அவர் தலையாட்டியதும் அவனுக்கு முதலில் மனையில் அமர்ந்து விட வேறு வழி இல்லாமல் ரஜீவனும் உடன் அமர்ந்து அவள் கையால் மாலை வாங்கிக் கொண்டான்..
மாலை மாற்றும் அந்த கண நேரத்தில் அவன் திட்டம் தோற்ற கோபத்தில் அவளை முறைக்க யார் கிட்ட என்று சவாலாக அவனை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் ஜனனி..
சில நொடிகளிலே இது நடந்து விட மனையை சுற்றி இருந்தோருக்கு கூட இது விகல்ப்பமாக தெரிய வாய்ப்பு இல்லாமல் போயிற்று.. அடுத்தடுத்து சுருக்கமாக சாங்கியங்கள் முடிக்கப்பட கன்னிகாதானம் செய்து வைக்க பெண்ணுக்கு பெற்றோர் இல்லாததால் தாத்தா பாட்டியே கன்னிகாதானம் செய்து வைத்தனர்.. தாத்தாவும் பாட்டியும் தாரை வார்க்கும் போது "எல்லாவித செல்வமும் பெற்று எங்கள் பேத்தியை காப்பாற்ற வேண்டும், சௌபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புமாக தீர்க்காயுசோடு வாழ வேண்டும்" என்று வாய் விட்டு வேண்டி மனதார ஜனனியை ரஜீவன் கையில் ஒப்படைத்தனர். சீக்கிரமாகவே அட்சதை வழங்கப்பட்டு மறுபடியும் தாலி அவன் கைகளுக்கு வந்தது..


இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று.
.


எப்போதோ தொலைக்காட்சியில் கேட்ட பாடல் வரிகள் தான் ஜனனிக்கு நினைவு வந்தது.. காலையில் இதே கண்ணில் நீர் வழிய துடித்திருந்ததையும் காலடியில் வந்து விழுந்த தாலிச் சரடை கைக்குள் ஏந்தி அதே கண்ணீரால் நனைத்ததும் இப்போது அதே தாலி‌ச் சரடு அவள் கழுத்துக்கே வருவதும் அவளுக்கே அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரியவே இல்லை..


கையில் தாலியுடன் அவளை நன்றாக திரும்பிப் பார்த்து "நினைச்சதை சாதிச்சிட்டல்ல இனிமேல் தான் எல்லாத்துக்கும் வருத்தப்பட போற!!" என மெல்லிய குரலில் கருவிக் கொண்டே அவள் கழுத்தில் தாலி கட்ட வழக்கம் போல அவன் சொன்னது சுருக்கென்று இதயத்தை தைத்தாலும் காது வரை வாயை இளித்து வைத்தவள் "கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் ஜனனி!" என்று கண்ணடித்தாள்..


கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
 
அத்தியாயம் 06

கார் வந்து நின்றதும் திபுதிபுவென ஒரு கூட்டமே அந்த காரை சூழ்ந்து கொண்டது.. மணமக்கள் கண்ணபிரானின் வீட்டுக்கு தான் முதலில் வந்திருந்தனர்.. பெரியவர்களின் விருப்பத்தை தட்ட முடியாமல் இங்கு வந்திருந்தான் ரஜீவ். அந்தப் பெரிய வீட்டின் முன் கார் நிற்கவும் அந்த வீட்டின் மத்த போர்ஷன்களில் குடியிருக்கும் குடும்பங்கள் அத்தனையும் வெளியே வந்து விட்டனர்.

தாலி கட்டிய நொடியில் ஜனனி தன் சுய ரூபத்தை காட்டி இருக்க உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தான்‌, அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு தொடங்க அவள் கால்விரல் பிடித்து மெட்டி போடும் போது அச்சதையை தட்டி விடுவது போல ஜனனி ரஜீவனுக்கு ஆசீர்வாதம் செய்ய மண்டபமே கலகலத்தது. கொலை வெறியோடு எழுந்து நின்றவன் அவள் கைபிடித்து அக்கினியை சுற்றும் போது அவள் மென்கரத்தை நசுக்கி அவளை கலங்க விட்டு வேடிக்கை பார்த்தான். இடையில் மாலை மாற்றும் சடங்கில் வேறு இரண்டு பெரும் ரகளை செய்ய குடும்பத்தினர் தான் என்னடா பண்றானுங்க சந்தோஷமா செய்றங்களா கோபமா செய்யறாங்களா எனக் குழம்பிப்போயினர். என்ன நடந்தாலும் அவளுக்கு ரொம்ப சந்தோஷம் என அவள் விரிந்த புன்னகையில் தெரிந்தது. இத்தனைக்கும் சில உறவினர்கள் குத்தலாக ஏதாவது சொல்லி விட்டு தான் வாழ்த்தவே செய்தனர் அப்போதெல்லாம் உக்கிரமாக மாறியவனை கர்ணன் தான் தட்டிக் கொடுத்து இயல்பாக்கினான். ஜனனி அவற்றையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை எல்லோருக்கும் சிரித்த முகமாக நன்றி கூறி பரிசு பொருட்களையும் பெற்றுக் கொண்டாள்.திருமண சடங்குகள் அனைத்தையும் அமைதியாகவே செய்து முடித்து விட்டு எல்லோரும் சாப்பிட்டு கிளம்பும் வரை பொறுமையாக அமர்ந்திருந்தவன் கூட்டம் அரைவாசி குறைந்ததும் தந்தையை பிடித்து உலுக்கத் தொடங்கி விட்டான். உணவு அருந்தும் வரை தான் ஜனனி அவனோடு இருந்தது அதன்பின் அவள் பாட்டியும் பூரணியும் அவளை அழைத்துச் சென்றிருந்தனர். போட்டோகிராபர் வந்து கண்டதையும் செய்யச் சொல்லும் முன் இலையில் அவள் பக்கம் இருந்ததை மொத்தமாக காலி செய்துவிட்டு அவள் பாட்டுக்கு கிளம்பி விட்டாள். கர்ணன் கூட பந்திக்கும் வாசலுக்கும் அல்லாடி கொண்டிருந்தான்.. கண்ணபிரானும் ஐங்கரனும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் பிடித்து வைத்த பிள்ளையாரை போல மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தவனை அவ்வப்போது பார்த்த படியே விருந்தினர்களை நல்லபடியாக வழி அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர்.. அப்படி அவன் அலுவலக ஊழியர் ஒருவர் அவனிடம் சொல்லிக் கொள்ள குடும்பத்தோடு வந்த போது தான் ஊழியரை அனுப்பி வைத்து விட்டு தந்தையை பிடித்துக் கொண்டான்..

"வீட்டுக்கு கிளம்பலாமா?"

"இப்பவே ஏன் பா?"

"இன்னும் என்ன பண்ணனும் இங்க?"

"அதுக்கில்லை!!"

"மறுபடியும் ஏதாவது காரணம் சொல்லி என் பொறுமையை சோதிக்காதிங்க வீட்டுக்கு போகலாம்!"

"ஒரு நிமிஷம் இருப்பா".. என்றதோடு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் நெருங்கிய உறவுகளில் மூத்தவர்கள் ஆக இருந்த சிலருடனும் கண்ணபிரானுடனும் சிறிது நேரம் பேசி விட்டு மறுபடியும் மகனிடம் வந்தவர்

"வீட்டுக்கு போகலாம் பா" என்றார் சாந்தமாக..

"உஃப்!.." என்ற பெருமூச்சோடு வேகமாக எழுந்து நெஞ்சை இறுக்கிய சட்டை பட்டன்கள் இரண்டை விடுவித்துக் கொண்டு கையையும் முழங்கை வரை சுருட்டிக் கொண்டான்..

"இப்பயே இதெல்லாம் பண்ணனுமா!" என்று கேட்க போன தகப்பன் அவரையும் தாண்டிக் கொண்டு தனியாக வாசலுக்கு செல்பவனை திகைத்துப் போய் பார்த்து துரத்தி பிடித்தார்..

"என்னடா விறுவிறுன்னு தனியா போற அந்த பொண்ணையும் கூட்டிட்டு போ!.."

"ஏன் அவளுக்கு தனியா வர தெரியாதா?.."

"ரஜீவ்!!" எனக் கடினமான குரலில் ஆரம்பித்தவர் அவன் நன்றாக அவரை திரும்பிப் பார்க்கவும் மறுபடியும் சாந்தமான குரலிலேயே அவனை கன்வின்ஸ் செய்தார்.. ஐங்கரனும் ஒரு மூளை சூடு பிடித்த மனிதன் தான் எந்த நேரம் வள் என்று மேலே விழுவார் என்று கணிக்கவே முடியாது.. ரஜீவன் அமைதியை யாரிடம் கற்றுக் கொண்டானோ அவனிடம் இருக்கும் முசுட்டு குணமும் தான் சொன்னது தான் நிறைவேற வேண்டும் என்ற ஆதிக்க குணமும் அவரிடம் இருந்து தான் அவனுக்கு ஒட்டி இருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட மனிதரே தன்னுடைய கணிப்பும் தீர்மானமும் தவறாக போனதால் அமைதியாக நடந்து கொள்ளுகிறார்.. தன்னுடைய அவசரக்குடுக்கை தனத்தால் பட்ட அவமானம் அவரை மிகவும் தளர செய்து விட்டது..

"அது இல்ல ராஜா நம்ம நேரா ஜனனி வீட்டுக்கு தான் போறோம்!..'

"அப்பா!!.."
நல்ல நேரம் பக்கத்தில் யாரும் இல்லை யாருக்கு யார் அப்பா என்றே தெரியாதவாறு சூழ்நிலை இருந்தது..

"கத்தாத தம்பி.. நான் சொல்றத கொஞ்சம் முழுசா கேளு ஏற்கனவே வள்ளி நித்யாவை இழுத்து கிட்டு வீட்டுக்கு போய் இருக்கா.. அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் இப்பவே அங்க ஒன்னு கூடி இருப்பாங்க.. சின்ன சின்ன விஷயங்களுக்கு வள்ளி வாய் திறந்தாலே எட்டு ஊருக்கு கேட்கும்.. இந்நேரம் எப்படி எல்லாம் ஒப்பாரி வைக்கிறார்களோ இந்த திருமணம் முடிஞ்சு முதல் முதல்ல அவங்கள பார்த்துக்கிட்டே நீங்க வீட்டுக்கு போகணுமா.. உனக்கு எதுவும் இல்லாட்டியும் அந்த பொண்ணுக்கு எவ்வளவு சங்கடமா இருக்கும்??.."

"அது என்ன எனக்கு எதுவும் இல்லாட்டி.. பெத்த பையனை விட மருமகள் பெருசா போயிட்டாள் இல்லை??" நிஜமான பொறாமை அந்த குரலில் இருந்தது..

"இல்லை கண்ணா என்னடா நீ முதல் முதலில் வீட்டுக்கு வரும்போது ராசாபாசம் ஆக வேணான்னு யோசிக்கிறேன் முதலில் நானும் லிங்கம் தாத்தாவும் போய் அங்க நிலைமையை சரிப்படுத்திட்டு உங்களை கூட்டிட்டு போகலாம்னு இருந்தோம்.. அதுக்குள்ள நீ வேற வீட்டுக்கு போகணும்னு அடம் பண்ற அதுதான்"

"சரி நான் அப்ப மண்டபத்திலேயே இருக்கேன் போதுமா??"

"அதுக்காக மட்டும் இல்ல"..

"அது தானே பார்த்தேன் சொல்லுங்க இன்னும் என்ன என்ன காரணம் கொண்டு வாரீங்கனு பார்ப்போம்"..

"அது இல்ல ரஜீவ் கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு போனதுக்கு பிறகு மறுபடியும் மறு வீட்டு சடங்குக்கு நீ ஜனனி வீட்டுக்கு போகணும்".. எனத் தொடர்ந்த வரை இடைமறித்து

"அப்பா!!" என மறுபடியும் அலற

"இல்லை இல்லை நீ போக மாட்ட எனக்கு தெரியும் இன்னைக்கே போயிட்டு நம்ம வீட்டுக்கு போயிட்டா நீ திரும்ப அங்க எல்லாம் அலைய வேண்டியதில்லை!" என்று தயங்கியவர்
"கொஞ்ச நேரம் மட்டும் தானே எங்களுக்காகப்பா.. எங்களுக்காக இல்லனாலும் அந்த வயசானவங்கள பத்தி கொஞ்சம் யோசி அவங்களுக்கு இருந்த ஒரே துணையையும் நம்ம கூட அனுப்ப போறாங்க எதிர்பார்த்து நடந்திருந்தால் கூட மனசை தேத்திக்கலாம் திடுதிப்புன்னு என்னென்னவோ நடந்து போச்சு.. அந்தப் பொண்ணை பிரியறதுக்கு அவங்களும் தயாராகனும் இல்லை இந்த மண்டபத்தில் உட்கார்ந்து இருப்பதற்கு பதில் கொஞ்ச நேரம் அங்க போய் உட்கார்ந்துறேன் கொஞ்ச நேரம் மட்டும்!.."

தந்தை சொல்ல சொல்ல அந்த அந்த பாயிண்டுக்கு 'நான் எதற்கு வள்ளி அத்தைக்கு பயப்பட வேண்டும் என் முகத்தில் முழிப்பதற்கு அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும் என்னுடைய வீட்டுக்கு போக விடாமல் என்னை யார் தடுப்பார்' என பதில் கொடுத்துக் கொண்டு இருந்தவன் தந்தை சொன்ன கடைசி பாயின்டில் அமைதியாகி தனக்குள்ளேயே யோசிக்க தொடங்கினான்.. உண்மைதான் கண்ணபிரான் மீது அவனுக்கு அளவிட முடியாத மரியாதை இருந்தது. படிப்பறிவு இல்லாமல் அவரது திறமையும் அதற்காக அவர் போடும் உழைப்பும் கால்கள் செயல் இழந்த போதும் இத்தனை வயதிலும் துடிப்பாக செயல்படும் அவரது ஊக்கமும் ஒரு பெரிய உத்வேகம் தான்.

'இந்த அராத்து வீட்டுக்கு மறுபடியும் மறு வீட்டு சடங்கு மண்ணாங்கட்டி சடங்குனு எல்லாம் போக முடியாது.. அப்பா சொல்லுறது மாதிரி அங்க போய் கொஞ்ச நேரம் மட்டும் உட்கார்ந்து இருந்து அவங்க மனசும் சங்கடப்படாம நம்ம மனசும் சங்கடப்படாம வீட்டுக்கு கிளம்பி விடனும்'!..

வீட்டுக்கு போவது என்னும் போது காலையில் வந்தது போல் தனியாக இல்லாமல் இப்போது ஜனனியுடன் போவதை நினைத்தால் அவன் என்ன மாதிரியான உணர்வில் இருக்கிறான் என்று சொல்லத் தெரியவில்லை.. அவன் மகிழ்ச்சியாக இருக்கிறானோ இல்லையோ ஆனால் இனி ஜனனி வாழ்க்கையில் சிரிப்பு என்பது இருக்கக் கூடாது என்று ஒரு உறுதியுடன் தான் இருந்தான்.. இவ்வளவு பேசியும் ஒன்னும் சொல்லாமல் அமைதியாக இருப்பவனை அழைக்க போக அவனே
"சரி அந்த தாத்தா வீட்டுக்கே போகலாம் ஆனால் கொஞ்ச நேரம் தான் அதுக்குள்ள வீட்டு பிரச்சனையை முடிச்சிட்டு எனக்கு கால் பண்ணுங்க நாங்க கிளம்பி வாரோம்.. இப்பவே சொல்லிட்டேன் நீங்க சமாதானமா பேசியும் வள்ளி அத்தை ஓவரா துள்ளினால் ஊர் முன்னாடி அசிங்கப்பட்டு தான் நிப்பாங்க.. முக்கியமா என் கண்ணுல ஏதும் பட வேணாம்னு சொல்லி வைங்க".. என்று தந்தையை எச்சரித்தான்.. மகன் சம்மதம் சொன்னதே போதும் என்று மேற்கொண்டு காரியங்களை கவனிக்க நகர்ந்து விட்டார் ஐங்கரன்.

"அண்ணா!!"

தாம்பூலப் பைகள் தீர்ந்து விட்டது என்று சொல்ல மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்த கர்ணன் பக்கவாட்டில் கேட்ட குரலை கேட்டு அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தான்..

"என்ன அண்ணா பேய் முழி முழிக்கிறீங்க.. உங்களைத்தான் கூப்பிட்டேன்!"

"என்னையா அண்ணனா??"

"ஆமா ஆமா பெரியவங்க எல்லார்கிட்டயும் ஆசீர்வாதம் வாங்கினேன் உங்க கிட்ட மட்டும் தான் வாங்க முடியல என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க!" என்று அவன் காலில் விழுந்த ஜனனியை திக்பிரமை பிடித்து கர்ணன் பார்த்திருக்க ஜனனி உடன் நின்றிருந்த பூரணி அவருடன் வந்திருந்த அவளது பாட்டியை வெகுவாக பாராட்டினார்..

"எத்தனை அருமையா பிள்ளை வளர்த்து இருக்கீங்க அத்தை.. இப்படி ஒரு தங்கம் எங்க கண்ணுல முன்னாலேயே படலையே!.."
அவர் நெகிழ்ச்சி குரலில் பாட்டியின் முகத்தில் பெருமிதம் தாண்டவம் ஆடியது..

"டேய் அந்த பொண்ணு விழுந்து எவ்வளவு நேரம் ஆச்சு ஆசிர்வாதம் பண்ணுடா!" என்ற பூரணியின் அதட்டலில்

"நல்லா இரும்மா நல்லா இரு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க உன் புருஷன் மாதிரி இல்லாம உன் மாதிரி சிரிச்ச முகமாக டசன் பிள்ளை குட்டிகள் பெத்துக்கோ தீர்க்க சுமங்கலி பவ" என்று அவள் தலையில் கை வைத்து வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லி ஆசீர்வதித்த கர்ணன் அவள் எழுந்து நின்றதும் அவளை ஆனந்தமாக பார்த்தான்.

"இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.. நீ பழைய ஜனனியோனு நினைச்சிட்டேன்.. அது ஏதோ ஸ்கூல் காலத்துல சின்ன புள்ளத்தனமா பண்ணியிருக்க போல.. உன் கிட்ட இந்த மெச்சூரிட்டியை நான் சுத்தமா எதிர்பார்க்கவில்லை.. என் காலில் விழுந்தெல்லாம் ஆசீர்வாதம் வாங்குறியே!.." என்று மெல்லிய குரலில் அவளைப் பாராட்டவும் செய்தான்.

அவனைப் பார்த்து தலைசரித்து மென்மையாக சிரித்தவள்
"உங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்காமல் யார் காலில் விழுவேன்.. அன்னைக்கு உங்க நண்பர் வீட்டு பெரியவங்க பத்திரிக்கை வைக்க எங்க வீட்டுக்கு வந்தப்போ அவங்க கூட துணைக்கு வந்த நீங்க தானே கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு நீ வர வேண்டும் என்று என்னை இன்வைட் பண்ணீங்க நீங்க மட்டும் அன்னைக்கு என்னை கூப்பிடலனா இன்னைக்கு இதெல்லாம் நடந்திருக்குமா.. கோவில் கோவிலா ஏறி இறங்குனதுக்கு பதிலா உங்களை சுத்தி சுத்தி கும்பிட்டு இருக்கலாம்.. இனிமேல் எங்க வீட்டு சாமி படத்துக்கு பக்கத்துல கண்டிப்பா உங்க ஃபோட்டோவும் இருக்கும்.. நீங்க தான் என் தெய்வம்.. மாலை போட்டு பூஜை பண்ணி சாம்பிராணி பிடித்து".. என்று சொல்லிக் கொண்டே போனவளை அவசரமாக இடை மறித்தவன் அக்கம் பக்கம் தலையை திருப்பி யாரையோ தேடி விட்டு

"அய்யய்யோ என்னமா சொல்ற.. நானா உன்னை கூப்பிட்டேன் எனக்கு ஞாபகமே இல்லையே?.." என்று பதறினான்

"நீங்க ரொம்ப நல்லவங்க அண்ணா நீங்க பண்ற எத்தனையோ நல்லதுகளில் இந்த நல்லதை மட்டும் எப்படி ஞாபகம் வச்சிருக்க முடியும்.. யார் என்ன சொல்லட்டும் தினமும் உங்க போட்டோவுக்கு மாலை போட்டு பூஜை பண்ணி சாம்பிராணி பிடித்து"...
1970 களில் வந்த சினிமா பட கதாநாயகியை மிஞ்சி விடும் அளவுக்கு முகத்தில் நவரசங்களையும் பொழிந்து ஜனனி பேச பேச

"இருக்குமோ?? ஆனால் இவள் வீட்டுக்கு பத்திரிகை வைக்க நானும் போனேனா இவளை கண்டே பல வருஷம் ஆன மாதிரி இருக்கு. எனக்கு என்ன மெமரி லாஸா. அப்போ நான் தான் அவளை கூப்பிட்டு இருக்கேன் போல ஆனால் இதெல்லாம் ரஜீவனுக்கு தெரிந்தால்?!" என்று யோசித்துக் கொண்டிருந்தவன் பின்னால் கேட்ட கணைப்பில் திடுக்கிட்டு திரும்ப கைகளை கட்டிக் கொண்டு புகை கக்கும் டிராகன் போல வெப்ப மூச்சுகளோடு ரஜீவன் நின்றிருந்தான்..

" காருக்கு வா!!" என்ற பாச அழைப்போடு அவன் வெளியே போக எச்சில் விழுங்கி அவனை பின்தொடர்ந்து போனான் கர்ணன்..

மண்டபத்தின் மற்றைய அலுவல்களை நம்பிக்கைக்குரிய உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு மண்டபத்துக்கு வந்த இரண்டு கார்களில் முதலாவது காரில் ஐங்கரன் அவரது இரண்டு நெருங்கிய உறவுகளோடு வீடு நோக்கி புறப்பட்டார்.. இரண்டாவதும் சற்று பெரியதுமான வாகனத்தில் மணமக்களை முதலில் அமரச் சொல்லி விட்டு கண்ணபிரானை முன்னால் அமர வைக்க முயல மறுபடியும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து ரஜீவனே அதற்கும் உதவினான்..
மண்டபத்திலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி ஜனனி வீடும் அதே மண்டபத்திலிருந்து இடது பக்கமாக வெகு தூரத்தில் அந்த பிரதேசத்தின் மையப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதியில் ரஜீவனின் வீடும் அமைந்திருந்தது.. ஜனனி வீடு இருக்கும் பகுதிக்கு இரண்டு தெரு தள்ளி தான் அவர்கள் படித்த பள்ளிக்கூடம் இருந்தது..
காரை கர்ணன் டிரைவ் செய்ய அவன் அருகில் கண்ணபிரானும் பின்னால் இருந்த முதல் சீட்டில் மணமக்களும் அடுத்த சீட்டில் பூரணியும் ஜனனியின் பாட்டி ராதையும் அமர்ந்திருந்தார்கள்..
அவள் பக்கத்தில் அமர்ந்த பிறகு கழுத்து சுளுக்கியவன் போல் ஜன்னல் பக்கமே தலையை வைத்திருந்தவன் இறங்கும் வரை அந்த நிலையிலிருந்து மாறவே இல்லை.. இரண்டு முறை அவனைப் பார்க்க முயன்று பின் ஜனனியும் அமைதியாக திரும்பிக் கொண்டாள்.. காரில் ஏறியதில் இருந்து பூரணி கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் வந்து கொண்டிருந்த கர்ணனை இறங்கும் போது தான் நன்றாக கவனித்த ஏனையோர் "என்னப்பா வாய் வீங்கி இருக்கு எப்படி அடிபட்டுச்சு??" என்று பதற ஜனனி கண்கள் விரிய அவள் கணவனை தான் பார்த்தாள்.. அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தும் வேண்டுமென்றே பார்வையை அந்தப் பக்கம் வைத்திருந்தவன் திடீரென கூடிய கூட்டத்தில் கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தான்..

பரபரப்பாக முற்றத்தில் குழுமியிருந்த குடியிருப்பாளர்கள் ஜனனியை நெட்டி முறித்து ஆசீர்வதிப்பதும் மணமகனை வரவேற்பதுமாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.. ஜனனி வீட்டுக்கு போகவே விருப்பம் இல்லாமல் இருந்தவன் இப்போது வெளியில் இருப்பதை விட சீக்கிரமாக உள்ளே சென்று விடலாம் என்று தோன்றி விட அதை செயல்படுத்தியும் விட்டான்..

கண்ணபிரானின் வீல்ச்சேரை கர்ணன் தள்ளிக் கொண்டு முன்னால் சென்று விட பூரணியும் ராதையும் சேர்ந்து மணமக்களுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே வரவேற்றனர்.. அந்த காலத்திலேயே மிகுந்த வேலைப்பாடோடு கட்டப்பட்டிருந்த அந்த பெரிய வீட்டுக்குள் நுழைந்து கூடத்தை அடைந்தவனின் கண்களை நிரப்பியது ஒரு ஆள் உயர ஃபோட்டோ.. அந்தப் படத்தில் நீளக் கூந்தல் தரையைத் தொட பால் நிலா போன்ற மாசு மருவற்ற அழகோடு வீணையை கைகளில் ஏந்தி இதழ் பிரியா இளம் முறுவலோடு ஊஞ்சலில் அமர்ந்து இருந்தார் ஒரு யுவதி.. மிஞ்சினால் 17,18 வயது என்று கணிக்கலாம்..

படத்தில் இருந்த கீர்த்தனா தோற்றம் மறைவு என்ற வார்த்தைகளிலும் வருடத்திலும் இவர் தான் ஜனனியின் தாயென்று யாரும் அறிமுகப்படுத்தாமலே தெரிந்திடும் அதையும் விட தன்னைத் தாண்டி அந்தப் படத்துக்கு அருகில் சென்று திருமண கோலத்தில் நிற்பவளுக்கும் அவருக்கும் தான் எத்தனை ஒற்றுமைகள் இருந்தன..

கருத்துக்களை பகிரவும்.
 
Status
Not open for further replies.
Top