ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அவுனனின் ஆம்பல் மலரிவளோ!!- கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் மூன்று:



கல்லூரி விட்டு தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த செம்பருத்திக்கு பிரியாணி வாசம் மூக்கைத் துளைக்க, அதை நுகர்ந்து பார்த்தபடியே தன் வீட்டிற்கு முன்பாக இருந்த அடுத்த வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த அழகி வீட்டில் இருந்து தான் வாசனை வருகிறது என்பதை தெரிந்து கொண்டவள் ஓட்டமும் நடையுமாக வீட்டிற்குள் ஓடினாள்.



" அத்தை எனக்கு பிரியாணி வேணும் எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க எனக்கு வேணும்.." என்று ஓடி வர, அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த தேவேந்திரன் இவளை அழுத்தமாக பார்த்தான்.



அவளது உயிரே பிரியாணியாக இருக்க தேவேந்திரன் எல்லாம் அவள் கண்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.



" என்ன செம்பருத்தி இன்னைக்கு பொழுதோட அதான் மத்தியான பொழுதோட வீட்டுக்கு வந்திருக்க? "



" அது எல்லாம் அப்புறமா பேசிக்கலாம் முதல்ல பிரியாணி எடுத்து வைங்க எனக்கு வேற பசிக்குது.. "



" என்னடி உனக்கு மத்தியான சாப்பாடு கொடுத்து விட்டதா உங்க அம்மா சொன்னா.. நீ என்னன்னா பரக்கா வெட்டி மாதிரி இப்படி பறந்துக்கிட்டு இருக்க? " என்றவர் வாய் கேள்வி கேட்டாலும் அவள் கேட்டது போலவே பிரியாணியை தட்டில் எடுத்து வைக்க தவறவில்லை.



அவளோ உலகம் அனைத்தையும் மறந்தவளாக பிரியாணியை ஒரு கை பார்க்க ஆரம்பித்தாள்.



நன்றாக சாப்பிட்டு முடித்தவள் தட்டிலேயே கையை கழுவி விட்டு ஏப்பம் விட்டபடி, நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவள் நிமிர்ந்து பார்க்க, அங்கு இவளையே முறைத்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் இந்திரன்.



அவனது பார்வையை தாங்கி சலிக்காமல் அவனை முறைத்து பார்த்த செம்பருத்தி " போடா போண்டா வாயா.. " என்று சத்தம் கேட்காமல் அவனுக்கு மட்டும் புரியும் விதமாக இதழ்களை அசைத்து விட்டு அறிவை கவனித்தாள்.



" காலேஜ்ல இன்னைக்கு எல்லாரும் ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சதால காலேஜ மத்தியானத்தோட க்ளோஸ் பண்ணி எங்களை விட்டுட்டாங்க.. எப்படியும் அம்மா வேலைக்கு போயிட்டு சாயங்காலம் நான் வர்ற நேரத்துக்கு தான் வரும்.. அதுவரைக்கும் வீட்ல ஒரு ஆளா உக்காந்து என்ன பண்றதுன்னு தெரியாம எரிச்சலோட வந்தேன் உங்க புண்ணியத்துல இன்னைக்கு உங்க கை பக்குவத்துல பிரியாணி டேஸ்டா சாப்பிட்டேன்.. " என்றவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தார் அறிவு.



அவரது சிரிப்பு சரியில்லையே என்பது போல் அவரை ஒரு வில்லங்கப் பார்வை பார்த்து வைத்தாள் செம்பருத்தி.



அவளது பார்வையை புரிந்து கொண்ட அறிவு " இன்னைக்கு உன் மாமா தான்டி பிரியாணி செஞ்சான்.. உன்னோட நல்ல நேரம் நீயும் கரெக்டா வந்துட்ட.. " என்றதும் அவரை முறைத்து பார்த்தவள்
எதிரில் அமர்ந்திருந்த தேவேந்திரனையும் அப்படியே முறைத்துப் பார்த்தாள்.



"உவ்வே..பிரியாணி நல்லாவே இல்ல என் வாழ்க்கையில இப்படி ஒரு கேவலமான பிரியாணி உனக்கு தின்னதே இல்லை.." என்று மனசாட்சியே இல்லாமல் பொய் சொன்னவள் இதற்கு மேலும் அங்கே இருந்தால் அவனிடம் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டும் என்று ஒரே ஓட்டமாக தன்னுடைய வீட்டிற்கு ஓடி விட்டாள்.



அவள் சொன்னதைக் கேட்டு பதைபதைப்பாக மகனை அறிவு பார்க்க, அவனோ தனது அலைபேசியில் கவனமாக இருந்தவன் தாயை நிமிர்ந்து பார்க்கவில்லை.



அவன் கோபமாக இல்லை சாதாரணமாகத்தான் இருக்கிறான் என்பதை கண்ட பிறகே அழகிக்கு நிம்மதியாக இருந்தது.



" நாளைக்கு எங்கேயாவது வெளியில் போகலாமா செம்பருத்தி? நானும் உன்கிட்ட ரொம்ப நாளா கேட்டுகிட்டே இருக்கேன் நீ எனக்கு பதில் சொல்லவே மாட்டேங்குற.. " என்று ஒரு காதலனாக அர்ஜுன் சலித்துக் கொள்ள, அவனை புன்னகையுடன் பார்த்தாள் செம்பருத்தி.



" உங்களுக்கே தெரியும் அர்ஜுன் எனக்கு அப்பா இல்லை.. எங்க அம்மா தான் என்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளக்குறாங்க.. அவங்களை ஏமாத்திட்டு இப்படி காதலிக்கிறதே எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு இதுல உங்க கூட சேர்ந்து எங்கேயாவது வெளியில போகும்போது யாராவது பார்க்கக்கூடாதவங்க பார்த்து எங்க அம்மா கிட்ட போட்டு கொடுத்துட்டா அவ்வளவுதான் அதுக்கப்புறம் எங்க அம்மா எனக்கு சமாதி கட்டிடும்.. "



" ரொம்ப பண்ணாத செம்பருத்தி. அப்ப எங்க வீட்ல எல்லாம் என்னை ஒழுக்கமா வளக்கலன்னு சொல்றியா? என்னமோ உன்னை மட்டும் தான் பொத்தி பொத்தி வளர்க்கிறது மாதிரி பேசுற!!"



" இப்ப எதுக்காக நீங்க கோபப்படுறீங்க அர்ஜுன்? நீங்க கோபப்படுற அளவுக்கு இப்ப நான் என்ன சொல்லிட்டேன்.. நீங்க வெளியில போகலாமான்னு கேட்டீங்க நான் வேண்டாம்னு சொன்னேன் அவ்வளவுதானே இதுக்கு எதுக்கு இப்போ உங்களுக்கு இவ்வளவு கோபம்.. "



" பின்ன கோபம் வராமல் என்ன பண்ணனும்? எப்ப பார்த்தாலும் உன்கிட்ட ஒவ்வொரு விஷயத்துக்கும் நான் கெஞ்சிக்கிட்டே இருக்கணும்.. எல்லா காதலர்கள் மாதிரி எனக்கும் என் காதலி கூட வெளியில போகணும்னு ஆசை இருக்காதா? நான் என்ன உன் கிட்ட முத்தமாக கேட்டேன்.. " என்றவன் கோபமாக முகத்தை திருப்பிக் கொள்ள, அவன் சொல்வதிலும் இருந்த நியாயம் செம்பருத்தி மனதை சுட்டது.



கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த போதிலும் இதுவரை அர்ஜுன் அவளை எங்கேயும் வெளியில் செல்ல வேண்டும் என்று கேட்டதில்லை.



அவளுக்கும் மற்றவர்களைப் போல் அர்ஜுனோடு சேர்ந்து சந்தோஷமாக சுற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தன் அன்னையை நினைத்து தன் ஆசையை அடி மனதில் புதைத்துக் கொண்டாள்.



வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் அர்ஜுன் முகத்தை பார்ப்பதற்கு அவளுக்கு கஷ்டமாகி போக, " சரி அர்ஜுன் நீங்க சொன்னது மாதிரி நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் வெளியில போகலாம் ஆனால் வெளியில ரொம்ப தூரம் வேண்டாம் எங்கேயாவது பக்கத்துல ப்ளீஸ்.. " என்றதும் அதுவரை ஜீரோ வாட்ஸ் பல்பு போல் இருந்த அர்ஜுன் முகம் 100 வாட்ஸ் பல்பு போல பளிச்சென எரிந்தது.



அவனுக்கு சம்மதம் சொன்ன செம்பருத்திக்கு அடிமனதில் ஏதோ ஒன்று தவறாக பட, அதை அவனிடம் சொல்லாமல் மறைத்து விட்டாள்.



" என்ன தேவி உனக்கு இந்த விஷயத்தை கேட்டு சந்தோஷம் இல்லையா? " என்று சோகமாக அறிவு கேட்க, சில நேரம் வரை பிரம்மை பிடித்தார் போன்று நின்று கொண்டிருந்தார் தேவி.



" நிஜமாலுமே நீங்க சொல்றது உண்மைதானா அண்ணி.. என் பொண்ணை தேவேந்திரன் இல்ல இல்ல என்னோட மருமகன் கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லிட்டானா? கடவுளே இந்த ஒரு வார்த்தைக்காக நான் எத்தனை நாள் காத்துகிட்டு இருந்தேன் என்று உங்களுக்கு தெரியாது அண்ணி.. இதுல என்கிட்ட வந்து எனக்கு பிடிக்கலையான்னு கேக்குறீங்க பாத்தீங்களா.. " என்று வெசனப்பட்டுக் கொண்டார் தேவி.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அவர் சொன்ன பதிலை கேட்டதும் அறிவுக்கும் சந்தோசம் தாங்க இயலவில்லை.



" உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வந்ததுக்கப்புறம் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது தேவி.. வர்ற சனிக்கிழமை நாள் நல்லா இருக்கு அன்னைக்கு நாங்க முறைப்படி வீட்டுக்கு பொண்ணு கேட்டு வருகிறோம்.. " என்றவரை கண்டு சம்மதமாக தலையை அசைத்தார் தேவி.




" கல்யாணத்தையும் ரொம்ப நாளைக்கு தள்ளி போட வேண்டாம்.. உனக்கே தெரியுது எலக்சன் வருது பையன் அதுல ரொம்ப பிசியாயிடுவான் அதுக்குள்ள கல்யாணத்தையும் முடித்து விட்டு விடுவோம்.. எனக்கு என் மருமகளை பக்கத்திலேயே வச்சுக்கணும்னு ஆசையா இருக்கு.. "



" ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணி நீங்க சொல்றத கேட்கும் போது.. இந்த பொண்ணு இப்படி இருக்காளே இவளை வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறேன்னு பெத்த வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு தான் அலைஞ்சுகிட்டு இருந்தேன்.. எனக்கும் இந்திரனுக்கு கொடுக்கத்தான் ஆசை இருந்தாலும் அவனோட விருப்பம் முக்கியம் இல்லையா? அதனாலதான் இத்தனை நாளா மனசுக்குள்ள இருந்த விருப்பத்தை எனக்குள்ளேயே வச்சு புதைச்சுக்கிட்டேன்.. "



" கவலைப்படாத தேவி எல்லாமே நல்லபடியா நடக்கும்.. நீ அவசரப்பட்டு என் மருமகள் கிட்ட உண்மையை சொல்லிடாத நாங்க அவ பொறந்த நாளான சனிக்கிழமை சர்ப்ரைஸ் கொடுக்கிறோம்.. " என்றதும் புன்னகையுடன் சம்மதம் சொன்னார் தேவி.



மறுநாள் செம்பருத்தி சொன்னது போலவே அர்ஜுனுடன் வெளியில் செல்ல கிளம்ப, தேவி மகளை ஆராய்ச்சியாக பார்த்தார்.



" என்னடி இன்னைக்கு உனக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா? " என்றதும் பதறி அடித்துக் கொண்டு செம்பருத்தி திரும்பி பார்க்க," இப்ப நான் என்ன கேட்டேன் என்ன நீ இவ்வளவு பதட்டமா பாக்குற? " என்று சாதாரணமாக வினவினார்.



' அட வீணா போன எருமை மாடு உன்னை நீயே இந்நேரத்துக்கு காட்டி கொடுத்து இருப்ப செம்பருத்தி..' என்று அதுக்கு தன்னைத் தானே திட்டிக்கொண்டவள் தாயைப் பார்த்து சிரித்தாள்.



" இப்ப நான் என்ன கேட்டுட்டேன் லூசு மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்க.. "



" ஒன்னும் இல்லம்மா சும்மா தான் என்னிக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு இந்த கேள்வி கேட்கிற? "



" இல்லை வழக்கமாக கிளம்பும்போது எப்பவுமே என்னை பாடா படுத்தி வைத்து அப்புறம்தான் கிளம்புவ.. இன்னைக்கு அமைதியா கிளம்புறியே அதான் உடம்பு எதுவும் சரி இல்லையான்னு கேட்டேன்.. "



" ஒன்னும் இல்லம்மா காலேஜ்ல ஒரு டெஸ்ட் அதுக்கு படிச்சுக்கிட்டு இருந்தேன் அது எல்லாம் ஒரு தடவை இப்ப நினைச்சு பார்த்துகிட்டு இருந்தேன் அதனாலதான் உன்னை தொந்தரவு பண்ணல இப்ப என்ன உன்னை தொந்தரவு பண்ணனும் அவ்ளோ தானே சரி அந்த செருப்பை.." என்று அவள் ஆரம்பிக்கும் போதே, தொடப்பக்கட்டையை கையில் எடுத்து விட்டார் தேவி.



அவரது செயலைக் கண்டு கலகலவென்று சிரித்தபடி பையை எடுத்துக்கொண்டு அவரிடம் சொல்லிவிட்டு கல்லூரியை நோக்கி புறப்பட்டாள்.



" அர்ஜுன் நம்ம ரெண்டு பேரும் போறது யாருக்கும் தெரியாது தானே?? " என்று நூறாவது முறையாக கேள்வி கேட்ட செம்பருத்தியை கண்டு நொந்து போனான் அர்ஜுன்.



" அம்மா தாயே உன்னை தெரியாத்தனமா வெளியில கூட்டிட்டு வந்துட்டேன்.. இத்தனை நாள் அமைதியா இருந்த நான் இப்பவும் அப்படியே இருந்திருக்கக் கூடாது.. உன்னை வெளியில கூட்டிட்டு வந்ததுக்கு எத்தனை தடவை இதே கேள்வியை கேட்டு என்னை பாடப் படுத்தி எடுத்துக்கிட்டு இருப்ப.. " என்றவன் எரிச்சல் பட்டப்படி வாகனங்கள் முன்னே செல்லாமல் சிக்னலில் அப்படியே நிற்பதைக் கண்டு எரிச்சலில் இருந்தவன் அந்த எரிச்சலை அப்படியே அவள் மீது சேர்த்துக் கொட்டினான்.



எப்பொழுதும் தன்னை ஒரு வார்த்தை திட்டி பேசாத அர்ஜுன் இப்பொழுது திட்டி பேசவும் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.



கண்ணாடி வழியாக அவள் முகத்தை பார்த்தவன் தன்னை தானே நொந்துக் கொண்டு சிக்னலை பார்க்க அப்போது தான் வண்டி எல்லாம் சற்று நகர ஆரம்பித்தது.



அவளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று வண்டியை வேகமாக எடுத்தவன் அடுத்து நிறுத்தியது என்னவோ ஒரு இளநீர் கடையில் தான்.



அன்று வெயில் அதிகமாக இருக்க அர்ஜூனுக்கு தாகமாக இருந்தது.




வெயிலுக்கு இதமாக இளநீர் இருக்கவும் வாகனத்தை நிறுத்தியவன் வண்டியிலிருந்து இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தவளை திரும்பி பார்க்க, அதற்கும் ஏதாவது சொல்லி திட்டுவானோ என்று பயந்து வண்டியை விட்டு இறங்கினாள்.



அவளது செயலில் அவனுக்கு உருகித்தான் போனது காதல் கொண்ட மனது.



"என்ன செம்பருத்தி இப்படி எல்லாத்துக்கும் பயந்துகிட்டு இருக்கலாமா? நாளைக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் நான் சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபப்படுவேன் அப்ப எல்லாம் மூஞ்சிய தூக்கி வச்சிக்கிட்டு இப்படி பயந்தெல்லாம் போகக்கூடாது.. நான் அமைதியா ஆனதுக்கு அப்புறம் வந்து என்கிட்ட சண்டை போடணும்.. " என்றவன் அவள் மூக்கை பிடித்து செல்லமாக திருகி விட்டு இளநீரை வாங்கிக் கொண்டு வந்தான்.



அவன் இளக்கமாக பேசியதும் செம்பருத்தி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி விட்டாள்.



அவன் அவள் பயந்ததால் என்னவோ ஊரை விட்டு சற்று தள்ளி அழைத்து வந்திருந்தான்.



இங்கு யார் வரப்போகிறார்கள் என்ற தைரியத்தில் செம்பருத்தி மனதில் இருந்த பயம் எதுவும் இல்லாமல் அர்ஜுன் கூட இருக்கும் சந்தோஷத்திலும் முகத்தை சுற்றி இருந்த துப்பட்டாவை கழட்டி தோளில் போட்டுக் கொண்டாள்.



அவன் ஒரே ஒரு இளநீரை வாங்கிக் கொண்டு வருவதை கண்டதும் அவள் முகம் அஷ்ட கோணலாகிப்போனது.



" என்ன அர்ஜூன் இது? உங்க கூட நானும் வண்டியில இந்த வெயில்ல தானே வந்தேன் எனக்கு மட்டும் தாகம் எடுக்காதா! உங்களுக்கு மட்டும் இளநீர் வாங்கிட்டு வந்து இருக்கீங்க உங்க கிட்ட காசு இல்லன்னு சொல்லியிருந்தால் நான் தந்து இருப்பேன்ல.. " என்ற அவளை முறைத்து பார்த்தவன் ஒரு இளநீரில் இரண்டு ஸ்ட்ராவை போட, அதன் பிறகு தான் அவன் செயல் அவளுக்கு புரிந்தது.



எப்போதும் போல் அவனை பாவமாக ஒரு பார்வை பார்த்து வைக்க அவன் ஒன்றும் சொல்லாமல் அவளுக்கு முன்பாக இளநீரை நீட்ட, அவன் கண்களை பார்த்தபடியே இளநீரை அவள் குடிக்க அவள் கண்களை பார்த்தபடியே அவள் இளநீரை குடிக்க இருவருக்கும் சுற்றுப்புறம் மறந்து போனது.



இவர்கள் இருவரும் சுற்று புறம் மறந்து நிற்க அதை அப்படியே வீடியோவாக தன் மொபைலில் வீடியோ எடுத்துக் கொண்டான் தேவேந்திரன்.



மொபைல் போனை தன் பாக்கெட்டில் போட்டவன் அவளை கொன்று போடும் அளவிற்கு ஆத்திரம் வர, எப்போதும் போல் தன் உணர்வுகளை தனக்குள்ளேயே கட்டுப்படுத்திக் கொண்டவன் " என்ன மேடம் வெயிலுக்கு இதமா இளநீர் குடிச்சிட்டீங்களா வீட்டுக்கு போகலாமா? " என்ற குரலில் தூக்கி வாரி போட, குடித்துக் கொண்டிருந்த இளநீர் புரை ஏற குரல் வந்த திசையை நோக்கியவள் அங்கு மார்புக்கு குறுக்காக இரு கைகளை கட்டிக்கொண்டு விட்டால் கொன்றுவிடுவேன் என்பது போல் அய்யனார் உருவத்தில் நின்று கொண்டிருந்த, தேவேந்திரனை கண்டதும் பயத்தில் நடுங்கி போனாள் பெண்ணவள்.



அர்ஜுன் செம்பருத்தி பயத்தில் நடுங்குவதை கண்டு தேவேந்திரனை கோபமாக முறைத்து பார்த்தவன் நடுங்கி கொண்டிருந்த செம்பருத்தி கையை பிடிக்க, ஏற்கனவே பயத்தில் இருந்தவள் அவனது இந்த செயலில் வெல வெலத்துப் போனாள்.



உரிமையுடன் தான் பிடிக்க வேண்டிய கைகளை இன்னொருவன் பிடிக்க தேவேந்திரன் கோபம் எல்லையை கடந்து சென்றது.



" இப்ப மட்டும் நீ வரலன்னா உன் பக்கத்தில் இருக்கவன் மணிக்கட்டு உன் கையோடு சேர்ந்து வந்துடும்.. " என்றவன் குரலில் இருந்து அழுத்தம் செம்பருத்திக்கு கிலியை கொடுக்க, அவசரமாக அர்ஜுன் கைகளில் இருந்த தன் கைகளை உருவி எடுத்துக் கொண்டாள்.



" என்ன செம்பருத்தி இது? எவனோ ஒருவன் மிரட்டுறான் இதுக்காக பயப்படற நானும் ஆம்பள தாண்டி.. இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்கு பயந்துகிட்டு என்னை விட்டுட்டு போக போறியா? " என்றது தான் தாமதம் சில அடிகளுக்கு அப்பால் சென்று விழுந்தான்.



எலக்சன் வரும் காரணத்தினால் தேவையில்லாத பிரச்சினை எதிலும் மாட்டிக் கொள்ளக்கூடாது என்று மேல் இடத்தில் உத்தரவு போடப்பட்டிருக்க, அதுக்காக தன் பொறுமையை சில நேரமாக கட்டிக் காத்துக் கொண்டிருந்தவன் அர்ஜுன் மரியாதை இல்லாமல் தன்னை ஒருமையில் பேசுவதை கண்டு அதிலும் தன் முன் நிற்க தகுதி இல்லாத ஒருவன் தன் மனைவியாக போகும் ஒருத்தியின் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பதை கண்டு அவனது கோபம் எல்லை கடந்து செல்ல அதன் விளைவே அவன் மார்பில் வேகமாக ஒரு உதை விட்டான் தேவேந்திரன்.



அவன் விட்ட உதையில் அர்ஜுனுக்கு நெஞ்சுவலியே வந்து விடும் என்பது போல் இருந்தது.



கீழே விழுந்து கிடந்த அர்ஜூனை கண்டதும் செம்பருத்தி பதைபதைத்து போனவளாக, " ஐயோ அர்ஜுன்.. " என்று ஓட பார்க்க அவள் கைகளை பற்றிய தேவேந்திரன் அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்தவன் தன் காரின் பின்பக்கமாக அவளை தள்ளிவிட்டு முன்பக்கத்தில் ஏறி அமர்ந்தவன் காரை உயர்வேகத்தில் செலுத்தினான்.



" ஐயோ என்னை விடுங்க அர்ஜுனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல.. நீங்க எல்லாம் ஒரு மனுஷனா இப்படி காட்டுமிராண்டி மாதிரி நடந்துக்கிறீங்க.. நான் எப்படி யார் கூட போனால் உங்களுக்கு என்ன என்னை எதுக்கு இப்படி வலுக்கட்டாயமா கூட்டிட்டு போறீங்க அவர் என்னோட காதலன் என்னோட வருங்கால புருஷன் அவருக்கு ஏதாவது ஆகப்போகுது தயவு செஞ்சு வண்டியை நிறுத்துங்க.. " என்றவள் முன்னால் இருந்தவன் சட்டையை பிடித்து இழுத்தபடி பேச, அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் சரியாக அவன் நெஞ்சை பதம் பார்த்து சென்று சில்லு சில்லாக உடைத்துப் போட்டது.



" என்னோட வருங்கால புருஷன் அவர்.. " என்ற வார்த்தையில் காரை பிரேக் போட்டு அவன் நிறுத்த, அதுவோ அவன் ஓட்டிக் கொண்டிருந்த வேகத்தில் வேகமாக மிதிக்க சில தூரங்களுக்கு அப்பால் சென்று நின்றது.



காரை நிறுத்திய வேகத்தில் பின்னால் இருந்த செம்பருத்தி அப்படியே முன்னால் வந்து விழுக, அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான் தேவேந்திரன்.



அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன் அப்படியே அவளை இழுத்து தன் மடிமீது போட்டுக் கொண்டவன் அவள் இதழ்களில் தன் இதழ்களை ஆழமாக பதித்தான்.




அவள் மீது கொண்ட கோபத்திற்கு அந்த இதழ்ணைப்பு சற்று ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது அவனுக்கு.



அவன் செயலில் அவனிடமிருந்து திமிறி கொண்டிருந்த செம்பருத்தி அவனாகவே விடவும் சற்றும் தாமதிக்காமல் அவன் கன்னத்தில் பளார் என ஒரு அரை விட்டாள்.



" என்ன பாத்தா உனக்கு எப்படி டா தெரியுது பொம்பள பொறுக்கி? எப்ப பாத்தாலும் இதே வேலையை பண்ணிக்கிட்டு இருக்க அன்னைக்கே உன்னை செருப்பால அடிச்சிருந்தா உனக்கு புத்தி வந்திருக்கும்.. ஏதோ போனா போகுதுன்னு அத்தை முகம் பார்த்து உன்னை மன்னிச்சு விட்டுட்டு ஓடி வந்தது என்னோட தப்பு தான்.. அதுக்காக எப்ப பாத்தாலும் இதே வேலையை செஞ்சுக்கிட்டு இருப்பியா என்னை பார்த்தா என்ன வேசி மாதிரி தெரியுதா? நான் ஏற்கனவே ஒருத்தரை காதலிக்கிறேன் அவரை மட்டும் தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்மேல முழு உரிமை என்னோட அர்ஜுனுக்கு மட்டும்தான் இருக்கு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது உனக்கு தான் என்னை கண்டாலே பிடிக்காதே அப்புறம் எதுக்கு என்கிட்ட இந்த மாதிரி நடத்துகிற உன்னோட சுகத்துக்கு எத்தனையோ பொம்பளைங்க இருக்காங்க அதை விட்டுட்டு இன்னொரு தடவை இப்படி என்கிட்ட நடந்து கிட்ட உனக்கு அவ்வளவு தான் மரியாதை.." என்றவள் காரின் பின் பக்கமாக கிடந்த தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்க பார்க்க அதுவோ ஆட்டோ லாக் செய்யப்பட்டிருந்தது.



காரில் ஏறி பழக்கம் இல்லாதவளுக்கு அதை எப்படி திறப்பது என்று தெரியாமல் காரின் கைப்பிடியை உடைக்க பார்க்க, ஏற்கனவே அவள் மீது வெஞ்சனத்தில் இருந்த தேவேந்திரனுக்கு அவளது பேச்சும் அவள் கொடுத்த அடியும் அவள் மீது பல மடங்கு வன்மத்தை தூண்டி விட்டது.




எப்போதும் யாரும் தன்னுடைய பேச்சை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று ஆளுமை குணம் கொண்டவனுக்கு முதன் முதலாக தான் ஒருத்தியை காதலிப்பது அவளுக்கு பெருமையாக தெரிய வேண்டும் என்று நினைக்க, அதற்கு மாறாக செம்பருத்தியோ அதை அசிங்கமாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தாள்.



எல்லாவற்றிற்கும் மேல் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல் இருந்தது அவள் அர்ஜுனனை காதலிக்கிறேன் என்று சொன்னது.



அனைத்து கோபங்களும் ஒன்று சேர அனைத்தையும் காரின் மீது காட்டியவன் அடுத்து வாகனத்தை நிறுத்தியது என்னவோ செம்பருத்தியின் வீட்டில் தான்.



கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்த செம்பருத்திக்கு தன் வீட்டிற்க்கான வழியை கண்டதும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கோபம் அடங்கி பயம் ஆக்கிரமித்துக் கொண்டது.



அந்த பயமே அவளுக்கு எமனாகிப் போக, அவளை பழி தீர்க்க காத்துக் கொண்டிருந்த தேவேந்திரனும் அதை பயன்படுத்திக் கொண்டான்.




 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 4:



தேவி அன்று வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்திருந்தார் .



நாளை ஒரு நாள் மட்டும் இருக்க அடுத்த நாள் தேவேந்திரன் வீட்டில் இருந்தது பெண் கேட்க வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என்பதால் மொத்தமாக மூன்று நாட்கள் விடுமுறை எடுத்திருந்தார்.



வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பியவர் தன் வாசலில் தேவேந்திரன் கார் நிற்பதை கண்டதும் சந்தோஷமாக கார் பக்கத்தில் செல்ல, அங்கு கதவை திறந்து கொண்டு இறங்கினாள் செம்பருத்தி.



அவள் எதற்காக இப்போது காரில் வந்து இறங்குகிறாள் என்பதை குழப்பமாக பார்த்தபடி வந்தவர் " என்னடி இந்நேரத்துக்கு நீ காலேஜ்ல தானே இருக்கணும்? அதை விட்டுட்டு இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க தேவேந்திரன் தம்பி கார்ல இருந்து இறங்குற!" என்றவரை பயத்துடன் பார்த்தாள் செம்பருத்தி.



"என்னடி கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன் பதில் சொல்லாமல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அப்படியே நின்னுகிட்டு இருக்க.. " என்றவர் திட்ட, கார்கதையை திறந்து கொண்டு இறங்கினான் தேவேந்திரன்.



" எதுவாயிருந்தாலும் நீங்க தெருவுல வச்சு தான் பேசணுமா? வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் பேசுங்க.." எனவும், அவன் சொன்ன பிறகு மறுபேச்சு பேசுவாரா தேவி?



அவர் கதவை திறப்பதற்காக முன்னே சென்று விட, இதழ்களை சுழித்த செம்பருத்தி " எங்கம்மா என்கிட்ட கேள்வி கேட்டுகிட்டு இருக்காங்க உனக்கு என்ன வந்துச்சு எங்க அம்மாவுக்கு ஆர்டர் போடுற வேலை எல்லாம் வச்சுக்காத.. " என்று துடுக்காக செம்பருத்தி பேச, அவளை தேவேந்திரன் பார்த்த பார்வையில் ஒரு அடி பின்னால் தள்ளி சென்று நின்று கொண்டாள்.



அந்தளவிற்கு அவன் கண்கள் கோபத்தில் சிவந்து போயிருந்தது.



அவளது வலது கையை பற்றியப் படி வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.



தன் மகள் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அழைத்து வரும் தேவேந்திரனை ஒன்றும் புரியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் தேவி.



வீட்டிற்குள் வந்ததும் அவள் கையை உதறி தள்ளிய தேவேந்திரன் " அப்பாவும் அம்மாவும் காலையில தான் விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க.. சனிக்கிழமை பொண்ணு பாக்குற நிகழ்ச்சி வச்சிருக்கோம்னு சொன்னாங்க.. வர்ற சனிக்கிழமை கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க பொண்ணு பார்த்து நீங்க நிச்சயம் பண்ணி அதுக்கப்புறம் கல்யாணம் பண்ற அளவுக்கு எல்லாம் என்கிட்ட நேரமில்லை வர்ற சனிக்கிழமை கல்யாணம்.. " என அவனை அதிர்ந்து போய் பார்த்தாள் செம்பருத்தி.



" என்ன தம்பி இது? இப்படி எடுத்தோம் கவுத்தோன்னு பேசுறதுக்கு.. நாளைக்கு ஒரு நாள் தான் இருக்கு அடுத்த நாள் சனிக்கிழமை இதுக்கு இடையில நான் என்ன வேலை பார்க்க முடியும் முதல்ல எதுக்காக இவ்வளவு அவசரப்படுற? "



" எனக்கு எலக்ஷன் வேலை தலைக்கு மேல இருக்கிறது உங்களுக்கு தெரியும்.. எலக்சன் வந்ததுக்கப்புறம் என்னால ஒரு இடத்துல இருக்க முடியாது அம்மா இன்னும் ஒரு மாசத்துல எனக்கு கல்யாணம் பண்ணனும்னு ஜோசியர் சொன்னதா வேற சொன்னாங்க.. எனக்கு இந்த ஜோசியத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை இருந்தாலும் இப்ப இந்த கல்யாணம் நடத்த முடியுமா? ரொம்ப ரொம்ப அவசியம் என்பதையும் தாண்டி கட்டாயம்.. " என்றவன் பார்வை செம்பருத்தி மீது கோபமாக பதிந்தது.



" நீ பொறுமையா இரு தம்பி இது பத்தி நான் அம்மாகிட்ட பேசுறேன்.. "



" நான் சொன்னதுக்கு அப்புறம் கூட உங்களுக்கு மறுத்து பேச தெரியுமா? " என்ற ஒரே கேள்வியில் தேவியின் வாயை அடைத்து விட்டான்.



" அம்மா இங்கே என்ன நடக்குது இவன் இஷ்டத்துக்கு என்ன என்னமோ பேசிகிட்டு இருக்கான் நீங்க அமைதியை கேட்டுகிட்டு இருக்கீங்க? யாருக்கு கல்யாணம்.. " என்ற மகளது தோளில் ஒன்று வைத்தார் தேவி.



" உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது? அவனை மாமான்னு மரியாதையா கூப்பிடு.. "



" ஆமாம் இப்ப மரியாதை ஒன்னு தான் இவனுக்கு கேடு.. இப்ப இது ரொம்ப முக்கியம் நான் என்ன கேட்டுக்கிட்டு இருக்கேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்க? "



" வர சனிக்கிழமை உன்னை நம்ம தேவேந்திரன் வீட்டில் இருந்து பொண்ணு பாக்க வர்றதா காலையில தான் வந்து உன்னோட ரொம்ப ஆசையான அத்தை அழகி அண்ணி சொல்லிட்டு போனாங்க.. உனக்கு எதுவும் தெரியாம சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொன்னாங்க.. ஆனா திடீர்னு தேவேந்திரன் தம்பி இல்லை என்னோட மருமகன் உன்ன விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சனிக்கிழமை கல்யாணம் பண்றது பத்தி பேசிகிட்டு இருக்காரு.. பெரியவங்க நாங்க பேசிகிட்டு இருக்கோம் உனக்கு என்ன வேலை கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சதுல்ல உள்ள போ.. " என்ற அன்னையை கோபத்தில் உறுத்து விழித்தாள் செம்பருத்தி.



" உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா மா.. போயும் போயும் இவனை மாதிரி ஒருத்தனை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்குவேன்னு நீங்க நினைச்சீங்க? எனக்கு ஒன்னும் அவ்வளவு கேவலமான எண்ணம் கிடையாது தவிர எனக்கு கை கால் ஊனமும் கிடையாது.. " என்று அவள் சொன்னதுதான் தாமதம் அவள் கன்னத்தில் பளார் என ஒரு அரை விட்டார் தேவி.



அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் தேவேந்திரன்.



" என்னடி வாய் ரொம்ப நீளுது.. மகாராணி அப்படியே பெரிய உலக அழகி பாரு..என்ன புண்ணியம் பண்ணுனியோ தேவேந்திரன் மாதிரி உனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்திருக்கிறான்.. உனக்கு விருப்பம் இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி அவனைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. "



" யாரோ ஒருத்தருக்காக என்னை கைநீட்டி அடிச்சிட்டல்லம்மா.. அது கூட பரவால்ல நீ என்னோட அம்மா ஆனா இவனை கல்யாணம் பண்ணிக்க சொல்ல உனக்கு உரிமை கிடையாது எனக்கு ஒரு குறிப்பிட்ட வயசு வந்துருச்சு மா.. "



"ஓ உனக்கு அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சுல்ல.. இதுக்கு மேலயும் உன்னை இப்படியே விட்டு வைக்கிறது நல்ல கிடையாது. தேவேந்திரன் சொல்லும் போது நான் கூட படிக்கிற பிள்ளை அவசரப்பட்டு கல்யாணம் பண்ணனும்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் இனிமே யோசிக்க வேண்டிய அவசியமே கிடையாது நீ இவ்வளவு பேசினதுக்கு அப்புறம்.."என்ற அன்னையை பரிதாபமாக பார்த்தாள் மங்கையவள்.



" இந்திரா நீ சொன்னது ரொம்ப ரொம்ப சரி இந்த கழுதைக்கு வர வர திமிர் ரொம்ப கூடிப்போச்சு.. இப்படியே விட்டா இவள் ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பா நீ சொன்னது போல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு.. " என்றதும் ஆத்திரத்தில் பொங்கி விட்டாள் செம்பருத்தி.



" இங்க பாருங்க நான் இப்ப படிச்சுக்கிட்டு இருக்கேன்.. நான் படிச்சு முடிச்சு என்னுடைய விருப்பத்துக்கு வேலைக்கு போனதுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு நீங்க சொன்னது ஞாபகம் இருக்கா இல்லையா? உங்க இஷ்டத்துக்கு எதையும் செய்யாதீங்க.." எனவும் தேவி பதிலுக்கு ஒன்று சொல்ல இவள் பதிலுக்கு ஒன்று சொல்ல என்று வாக்குவாதம் என்று நீண்டு கொண்டு சென்றதே தவிர அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தப் பாடில்லை.



அதுவரை பொறுமையாக வேடிக்க பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரகனுக்கு பொறுமை பறந்து போக, அவன் தக்க சமயத்தில் உபயோகிப்பதற்காக வைத்திருந்த அஸ்திரத்தை உபயோகப்படுத்தினான்.



இவர்கள் இருவரின் வாக்குவாதம் சென்று கொண்டிருக்கும் பொழுது போன் செய்து அவன் அன்னையும் தந்தையும் அந்த இடத்திற்கு வர சொல்லிவிட்டான். அனைவருக்கும் தனித்தனியாக சொல்ல முடியாது என்று மொத்தமாக சேர்த்து சொல்வதற்காக அவர்களையும் வரும்படி பணித்துவிட, அந்த பக்கம் பேசிக் கொண்டிருந்த அழகி வீட்டில் சத்தம் கேட்பதற்கான காரணம் என்னவென்று கேட்க மூச்சு கூட விடவில்லை அவன்.



சரியாக இவன் எழுந்துக் கொள்ளும் பொழுது அழகி,கணேசன் இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.



" என்ன தேவி இது? எப்பவுமே உன் வீட்ல ஆள் இருக்காங்களா இல்லையா என்று கூட தெரியாத அளவுக்கு அமைதியா இருப்ப இப்ப உன்னோட சத்தம் வாசலை தாண்டி வெளியில் கேக்குது என்ன பிரச்சனை?" என்று பதட்டமாக கேட்டபடி அழகி வர, அவரைக் கண்டதும் அழுதுவிட்டார் தேவி.



" இங்க பாருங்க அண்ணி இந்த பிள்ளை என்ன சொல்றா பாருங்க.. அவளுக்கு தேவேந்திரனை கல்யாணம் பண்ணிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம்.. அவளோட வாழ்க்கையில முடிவெடுக்க அவளோட அம்மாவுக்கு உரிமை இல்லைன்னு என் கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கா.. " என்றவருக்கு துயரம் தாள இயலவில்லை.

 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அவர் சொன்னதை கேட்டதும் அழகிக்கும் கணேசனுக்கும் மனதிற்கு பெரிதாக வருத்தமாகி போனது.



இருந்தாலும் வாழப்போகும் பெண்ணிற்கு தன் மகனோடு வாழ விருப்பமில்லை என்று தெரிந்த பிறகு அவளை எக்காரணம் கொண்டும் வலுக்கட்டாயப் படுத்த கூடாது என்று அழகியும் கணேசனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு செம்பருத்தியை பார்த்தார்கள்.



அவளால் அவர்கள் இருவரையும் நிமிர்ந்துக் கூட இயலவில்லை.



அவர்கள் இருவர் முகத்தை பார்க்கும் பொழுது அவளுக்கு வேதனையாக தான் இருந்தது.



அடுத்தவர்களுக்கு இரக்கம் காட்டினால் தன் வாழ்க்கை என்னவாகும் என்ற பயத்தினால் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.



" சரி விடு தேவி.. நம்ம ஆசைப்பட்டா எல்லாம் நடக்கும் என்று அவசியம் கிடையாது அவளோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம முடிவெடுத்தது நம்மளோட தப்புதான்.. " என்றவர் குரலும் கலங்கி தான் ஒலித்தது.



" எப்படி அண்ணி உங்களால இப்படி பேச முடியுது! இந்த பாவி மக இப்படி எல்லாம் பேசுவானு தெரிஞ்சி இருந்தா இவங்க அப்பா எங்களை விட்டுட்டு ஓடிப்போன அப்பவே இவளுக்கும் விஷம் கொடுத்துட்டு நானும் விஷத்தை கொஞ்சம் குடிச்சிட்டு செத்து போயிருப்பேன்.. இவளை கஷ்டப்பட்டு வளர்த்ததுக்கு இவளோட வாழ்க்கையில முடிவெடுக்கிறது கூட எனக்கு உரிமை இல்லாமா தகுதி இல்லாம போயிருச்சு.." என்றவர் தலையில் அடித்துக் கொண்டார்.



அவர் பேச பேச செம்பருத்தி கண்களில் கண்ணீர் பொல பொலவென்று வழிந்தது.



அவரிடம் இதற்கு மேலும் தன் மனதில் உள்ள விஷயத்தை மறைக்காமல் சொல்லிவிட்டால் முதலில் கோபப்படுவார் பின்பு சமாதானமாகி தன் மனதில் வேறொருவன் இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டு தேவேந்திரனை திருமணம் செய்து வைத்த மாட்டார் என்று தன் காதலை வாய் திறந்து சொல்லலாம் என்று எண்ணிய வேளையில் தேவேந்திரன் வாயை திறந்தான்.



" ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா இங்கே எனக்கு என்ன மரியாதை? இப்ப கொஞ்ச நேரம் நான் காட்டுவதை எல்லாரும் அமைதியா வேடிக்கை பார்த்தா இந்த அம்மணிக்கு என்னை ஏன் பிடிக்காமல் போச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெளிவா தெரியும்.. " என்றவன் தொலைக்காட்சியோடு அலைபேசியை இணைத்தவன் வீடியோவை போட்டு காட்ட, அதை பார்த்த அனைவரின் முகமும் அதிர்ச்சியில் அப்பட்டமாக உறைந்து போனது.



செம்பருத்தியோ அவனிடம் இப்படி ஒரு விஷயம் இருக்கும் என்று நினைத்து கூட பார்க்காதவளுக்கு அவன் இப்படி திடீரென செய்யவும் பேரதிர்ச்சியாக இருக்க, கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.



அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



என்ன செய்தாவது அவளை தன்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் மனதில் இருந்த வெறி அவனை இந்த நிலைமைக்குத் தூண்டி விட, அவனிடம் எதிர்பார்க்காத இந்த தாக்குதலில் நிலைகுலைந்து போன செம்பருத்தி பார்வையில் ஆயிரம் ஊசியை கொண்டு உடலில் குத்தியது போன்ற வேதனையை பிரதிபலிக்க, அவளது வேதனை அவனை தாக்கிய போதும் எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவனாக அசைவற்று நின்று கொண்டிருந்தான்.



" இல்லை இது என் பொண்ணு இல்லை.. நான் என் பொண்ண இப்படி வளர்க்கல என் பொண்ணு வாய் பேசுவாளே தவிர பெத்த அம்மா என்னை ஏமாத்த மாட்டாள் இல்லை இது என் பொண்ணு கிடையாது என் பொண்ணு இல்லை என் பொண்ணு இல்லை.. " என்று திரும்பத் திரும்ப சொன்ன தேவி அந்த வீடியோவை பார்த்த அதிர்ச்சியில் தன் மகளாய் இது என்ற நம்ப முடியாமல், அதிர்ச்சியில் அப்படியே மயங்கி சரிய " தேவி.. " என்ற அழைப்போடு அவரை விடாமல் தாங்கி பிடித்துக் கொண்டார் அழகி.



" ஐயோ தேவி என்ன ஆச்சு..? " என்று பதட்டப்பட்ட அழகி தேவியின் கன்னத்தை தட்ட, அதற்கு எந்த எதிர்வினையும் மாற்றாமல் மயக்கத்தில் ஆழ்ந்து போயிருந்தார் அவர்.



நிலைமையை புரிந்து கொண்டு கணேஷன் தண்ணீர் எடுத்து வந்தவர் தேவியின் முகத்தில் தெளிக்க அப்பொழுதும் அவருக்கு சுய நினைவு திரும்பாமல் போக அங்கிருந்த எல்லோருக்கும் பயம்பிடித்துக்கொண்டது.



" அம்மா இதுக்கு மேலயும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் அத்தையே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்.. " என்ற தேவேந்திரன் தேவியை தன் கைகளில் தூக்கிக்கொண்டு வெளியில் செல்ல பார்க்க, அவனைத் தடுத்து நிறுத்தியது செம்பருத்தியின் குரல்.



" அடப்பாவி பண்ற எல்லாத்தையும் பண்ணிட்டு இப்ப நல்லவன் மாதிரி எங்க அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறியா? எங்க அம்மாவோட இந்த நிலைமைக்கு காரணம் நீ மட்டும் தான் டா எங்க அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு உன்னை கொல்லாமல் விடமாட்டேன்.. " எனவும் அதுவரை அமைதியாக இருந்த அழகிக்கு கோபம் வர திட்டி விட்டார்.



" வாய மூடு செம்பருத்தி.. உனக்கு என் பையனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைன்னு நீ சொன்னது உன்னோட முடிவு அதனால் நான் அமைதியாக ஏற்றுக்கொண்டேன்.. இப்ப நீ பண்ண தப்பை இவன் போட்டு காமிச்சதால இவன் கெட்டவன் பண்ற எல்லாத்தையும் பண்ணிட்டு அமுக்குனி மாதிரி இருக்கிற நீ நல்ல பொண்ணா? " என்றவருக்கு தன் பிள்ளைக்கு முன்னால் அடுத்தவர் எல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை. அவளை வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டு தேவேந்திரனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.



அவர் பேசிய வார்த்தையில் நிலைகுலைந்து போன செம்பருத்தி அதே இடத்தில் கால் மடக்கி அமர்ந்துவிட்டாள்.



" நான் என்னம்மா அப்படி பெருசா தப்பு பண்ணிட்டேன்.. உங்ககிட்ட நான் காதலிக்கிற விஷயத்தை சொல்லாம போனது ஒன்று மட்டும் தானே நான் பண்ண தப்பு.. " என்று வாய்விட்டு பேசியவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழந்தை போல் அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.



மருத்துவமனையில் தேவியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை அதிர்ச்சியால் வந்த மயக்கம் என்ற சொன்ன பிறகே அறிவழகிக்கும் கணேசனுக்கும் நிம்மதியாக இருந்தது.




தேவேந்திரன் வெளிப்படையாக எதையும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் தன் மாமியார் மயங்கி விழுந்ததில் உள்ளுக்குள் சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.



செம்பருத்தியை உயிருக்கும் மேலாக நேசிக்கிறான் தான்.



அதற்காக அவளை அடைய நினைத்த விதம் வேண்டுமானாலும் தவறாக இருக்கலாம் தவிர அவன் அன்பு சிறிதும் பாலில் தண்ணீர் கலக்காதது என்று அவனாக நினைத்துக் கொண்டான்.




" அம்மா செம்பருத்தியை இங்க கூட்டிட்டு வர்றேன் அவ இங்க வந்ததுக்கப்புறம் நீங்க அவளை எதுவும் சொல்லக்கூடாது.. அவங்க அம்மாவுக்கு அவளை திட்டுவதற்கு எல்லா விதமான உரிமையும் இருக்கு.. அதனாலதான அவங்க பேசும்போது நான் பொறுமையா இருந்தேன் நீங்க வரும்போது பேசின வார்த்தை எதுவும் எனக்கு புடிக்கல பாவம் அவ ரொம்ப வதங்கி போயிட்டாள்.. " என்றவன் அழகியின் பதிலுக்காக காத்திருக்காமல் செம்பருத்தி அழைத்து வர அவள் இல்லம் நோக்கிப் புறப்பட்டான்.



" என்னங்க நான் இப்ப என்ன சொல்லிப்புட்டேன் இந்த பையன் என்கிட்ட இப்படி கோச்சிகிட்டு போறான்.. "



" விடு அழகி அவனுக்கு நம்ம மருமகளை இல்ல அந்த பொண்ணை அந்த அளவுக்கு நேசிக்கிறான்.. இதுக்கு மேல கடவுள் விட்ட வழிதான் நம்ம ஒன்னும் பண்றதுக்கு இல்ல தேவையில்லாம நம்ம எதுலயும் தலையிட வேண்டாம் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்ப்பது நல்லது.. "



" அதுக்காக அப்படியே விட முடியுமா? இதுவரைக்கும் என் பிள்ளை என்கிட்ட எந்த விஷயத்தையும் வாய் திறந்து கேட்டது இல்லங்க முதன்முதலா அவன் கல்யாண விஷயத்தில் அவன் ஆசைப்பட்டது மாதிரி நடக்காமல் போயிடுமானு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. "




" உன்கிட்ட இப்பதான் சொன்னேன் அமைதியா இரு நடக்கிற எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பாரு இது அவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட வாழ்க்கை நம்ம ஒன்னும் பண்ண முடியாது.. " எனவும் அழகிக்கு அவர் சொல்வதில் இருந்த நியாயம் புரிந்தாலும் மனம் தான் ஏற்றுக் கொள்ள முழுமையாக மறுத்தது.



செம்பருத்தியை அழைத்து வருவதற்காக அவள் வீட்டிற்கு வந்த தேவேந்திரன் கதவு கூட சாத்தப்படாமல் அப்படியே திறந்திருக்க, உள்ளே நுழைந்தவன் அங்கு அவன் மனம் கவர்ந்தவள் இருந்த கோலத்தை பார்க்க முடியாமல் கண்களை இறுக்கமாக மூடி திறந்தான்.



புத்தி பேதலித்தது போன்று கண்கள் இரண்டையும் சற்றும் அசைக்காமல் மேல் நோக்கி பார்த்தபடி முழங்காலை இரு கைகளால் கட்டியபடி, தனக்கு யாரும் இல்லை என்பது போல் ஆதரவற்று அமர்ந்திருந்தாள் பாவை.



அவள் இருந்த நிலையை பார்க்க முடியாமல் அவள் பக்கத்தில் சென்று தரையில் அமர்ந்த தேவேந்திரன் அவள் கைகளின் மீது தன் கைகளை வைத்தான்.



அதில் சுய உணர்விற்கு வந்த செம்பருத்தி அவனைப் பார்க்க அதில் சற்றும் ஜீவன் இல்லை.



" வா ஹாஸ்பிடல் போகலாம் உங்க அம்மாவுக்கு ஒன்னும் இல்லை நல்லா தான் இருக்காங்க.. " என்றழைக்க, அமர்ந்த இடத்திலேயே நகராமல் அமர்ந்திருந்த செம்பருத்தி அவனை வெறித்துப் பார்த்தாள்.



" இப்படியே இருந்தா என்ன அர்த்தம் செம்பருத்தி?? உங்க அம்மாவை நீ பார்க்க வேண்டாமா? வா ஹாஸ்பிடல் போலாம்.. "



" எதுக்காக என்னை ஹாஸ்பிடல் கூப்பிடுறீங்க என்னை பார்த்ததுக்கு அப்புறம் எங்க அம்மாவுக்கு ஏதாவது ஆகவா? உங்களை அடிச்ச ஒரே காரணத்துக்காக என்னை பழி வாங்கிட்டீங்க இப்போ உங்க மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே நல்லா பாருங்க நானும் என் வீடும் இருக்கும் நிலைமையை நல்லா பார்த்து சந்தோஷப்படுங்க.."



" வாயை மூடு தேவை இல்லாமல் பேசாதே.. நான் ஒன்னும் இல்லாத விஷயத்தை உங்க அம்மா கிட்ட காட்டலையே நீ பண்ணின விஷயத்தை காட்டுனது தப்பா? உன்னை நம்பி படிக்கிறதுக்கு உங்க அம்மா காலேஜுக்கு அனுப்பி வச்சா நீ போய் அங்க என்ன வேலை பார்த்துகிட்டு இருந்த.. இதுக்கு மேல கூப்பிட எல்லாம் மாட்டேன் மறுபடியும் ஹாஸ்பிடல் போக போறேன் வந்தா வா வராட்டி போ.. ஆனா ஒன்னு இதுக்கு அப்புறம் அவங்க என் கூட என் வீட்டில் தான் இருப்பாங்க உன்னோட வாழ்க்கையை உன் இஷ்டப்படி நீ பார்த்துக்கோ.. " என்றவன் சிறிதும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவள் மனதை காயப்படுத்தி விட்டு முன்னே செல்ல, அவன் சொன்னதை செய்வான் என்பதால் அதற்கு மேல் எந்தவிதமான தர்க்கமும் செய்யாமல் அவனை பின்தொடர்ந்தாள்.



தனக்கு பின்னால் அவள் வருகிறாள் என்பது தெரிந்தும் எதுவும் சொல்லாமல் முன்னே சென்ற தேவேந்திரன் காரில் ஏறி அமர்ந்தவன் அவளுக்கு முன் பக்கமாக காரை திறந்து விட, காரில் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டாள்.



அவர்கள் செல்லும் வழி முழுவதும் மௌனம் மட்டுமே ஆட்சி செய்ய அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி வாகனத்தை ஓட்டிச் சென்ற தேவேந்திரனுக்கு நொடியில் மனதுக்குள் ஒரு திட்டம் உருவாக அதை செயல்படுத்தும் விதத்தை மருத்துவமனைக்குச் சென்றதுமே ஆரம்பித்து விட்டான்.



அழகியும் தேவியும் பேசிக் கொண்டிருக்க, தயக்கத்துடன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் செம்பருத்தி.



மகளை கண்டதும் அவளை பார்க்காமல் தலையை திருப்பிக் கொண்ட தேவி " அண்ணி எதுக்காக என்னை பார்ப்பதற்கு தேவையில்லாத ஆளுங்களை எல்லாம் இங்கு கூட்டிட்டு வர்றீங்க.. எனக்கு இப்ப யாரையும் பார்க்க பிடிக்கல தயவு செஞ்சு அவங்களை வெளியில போக சொல்லுங்க.." என்றதும் அதற்கு மேலும் அழுகையை அடக்கி வைக்க முடியாதவள் தேவியின் கால்களை பிடித்தபடி வெடித்து அழுதாள்.



அவள் அழுகைக்கு சற்றும் இளகாமல் இருந்த தேவி அவளுக்கு பின்னால் நின்ற தேவேந்திரனை பார்க்க, அவன் கண்களாலையே அவரிடம் ஏதோ சேதி சொல்ல அதை சரியாக புரிந்து கொண்டவர் கண்களை மூடி திறந்தார்.



" இங்க பாரு உன்னை நான் மன்னிக்கணும்ன்னா நான் சொன்னது போலவே உனக்கும் என் மருமகனுக்கும் வர்ற சனிக்கிழமை கல்யாணம் நடக்கணும்.. இல்லன்னா இதுக்கு அப்புறம் நீங்க யாரும் என்னை கண்டுபிடிக்க முடியாதபடி கண்காணாத தூரத்துக்கு போயிடுவேன்.. "என அவரை அடிபட்ட பார்வை பார்த்த செம்பருத்தி இதற்கு மேலும் எதுவும் சொல்ல முடியாமல் அவர் சொன்ன அனைத்திற்கும் ஜீவனே இல்லாமல் சம்மதம் சொன்னாள்.
 
Status
Not open for further replies.
Top