அத்தியாயம் 9
இதே சமயம் தனது அறையில் இருக்கும் கட்டிலில் அமர்ந்து இருந்தாள் தேன்மொழி... அவள் முன்னே திருமணத்துக்கான ஆபரணங்கள் இருந்தன...ஒவ்வொன்றாக வருடிப் பார்த்தாள்.
எதிலும் மனம் ஒன்றவில்லை...
மனதில் இருக்கும் அழுத்தம் நாளாக நாளாக அதிகரித்த உணர்வு தான் அவளுக்கு...
கல்யாண பெண்ணுக்கு இருக்கும் எந்த உணர்வும் அவளிடம் இல்லை...
மனத்துக்குள் அழுதழுது சோர்ந்து போய் விட்டாள்.
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, கட்டிலில் மெதுவாக சரிந்து படுத்தவளின் கவனத்தை திசை திருப்பியது வாசலில் வந்து நின்ற கார் சத்தம்...
அங்கே திருமணத்துக்காக பலகாரங்களை செய்து கொண்டு இருந்த மகாலக்ஷ்மியோ கார் சத்தம் கேட்டு வீட்டின் வாசலுக்கு வந்தார்...
காரில் இருந்து இறங்கிய வம்சி கிருஷ்ணாவையும் கெளதம் கிருஷ்ணாவையும் பார்த்தவருக்கு தூக்கி வாரிப் போட்டது...
அதிர்ந்து போய் அப்படியே அவர் நின்று இருக்க, அவர்கள் வீட்டின் வாசலை நோக்கி வந்த வம்சி கிருஷ்ணாவோ, "உள்ளே வரலாமா?" என்று கேட்டான்...
"ஐயோ வாங்க வாங்க தம்பி" என்று சொல்லிக் கொண்டே விலகி நின்று வழியை விட்டார்...
அவன் உயரத்துக்கு சற்று குனிந்து தான் உள்ளே செல்ல வேண்டி இருந்தது...
அவனுக்கு மட்டும் அல்ல, கௌதம் கிருஷ்ணாவுக்கும் தான்...
இருவரும் உள்ளே நுழைந்தார்கள்...
இதே சமயம், வம்சி கிருஷ்ணாவின் குரலை அறைக்குள் இருந்து கேட்ட தேன்மொழியின் விழிகள் அதிர்ந்து விரிந்து கொண்டன...
அவளது வம்சி கிருஷ்ணா அவள் வீட்டுக்கே வந்து விட்டான்...
சட்டென எழுந்தவள் தன்னை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
முடி சற்று கலைந்து இருந்தது...
கையால் சரி செய்து கொண்டே, அறையை விட்டு வெளியே சென்றாள்.
அவனை பார்க்க செல்ல வேண்டும் என்றால் அவளை அறியாமலே தன்னை சரி படுத்த முனைகின்றாள்...
அங்கே இருந்த இருக்கையில் வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் அமர்ந்து இருந்தார்கள்...
மகாலக்ஷ்மியோ அவர்களை யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருக்க, குரலை செருமிய வம்சி கிருஷ்ணா, ஒரு கணம் அங்கே நின்ற தேன்மொழியை பார்த்து விட்டு மீண்டும் மகாலக்ஷ்மியை பார்த்தான்...
ஒரு கணம் தான் பார்த்து இருப்பான்... அந்த ஒரு கணத்தில் இருவரின் விழிகளும் உரசிக் கொண்டன...
ஆனால் தேன்மொழியின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது.
சுவரில் சாய்ந்து நின்றவள் பதட்டத்தை போக்க முயன்றாள்...
முடியவே இல்லை...
சுடிதாரின் ஷாலை இறுக பற்றிக் கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.
வம்சி கிருஷ்ணா, "நான் எதுக்கு வந்தேன்னா" என்று ஆரம்பித்தவன் ஒரு கணம் நிறுத்தி இப்போது தேன்மொழியை பார்த்தவன், "நான் பேசுறது கேக்கும்ல" என்றான்...
அவனுக்கு தேன்மொழி பற்றி ஆழமாக ஒன்றும் தெரியாது...
காது கேட்கும் வாய் பேச முடியாது என்று யாரோ சொல்லி கேட்டு இருக்கின்றான் அவ்வளவு தான்...
அவன் ஆராய முற்பட்டதும் இல்லை...
அந்த ஐயத்தில் இப்போது இந்த கேள்வியை அவளிடம் கேட்டான்...
அவளிடம் அவன் முகத்தை பார்த்து பேசும் முதல் வார்த்தை...
அவன் தன்னிடம் பேசுகின்றானா? என்று நினைத்தவளுக்கு இன்னுமே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை...
ஆம் என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...
மனதில் ஒரு வித நெகிழ்ச்சி... தூர இருந்து ரசித்த நிலவு நம்மை தேடி வீட்டிற்கே வந்து விட்டால் எப்படி இருக்கும்? அதே உணர்வு தான்...
அவனோ, "ஓகே" என்று பதில் சொல்லி விட்டு மகாலக்ஷ்மியை பார்த்தவன், "உங்க பொண்ணு க்ளாஸ்ல இருந்து நின்னதுல இருந்தே யாதவ் ரொம்ப டிஸ்டெர்ப்ட் ஆஹ் இருக்கான்... உங்க பொண்ண க்ளாஸுக்கு அனுப்புறது பற்றி திரும்ப யோசிக்கலாமே" என்றான்...
உரிமையாக கேட்க தயக்கம், கோரிக்கை விடுத்தான்...
மகாலக்ஷ்மியோ, "எனக்கு புரியுது தம்பி, ஆனா அவளை கட்டிக்க போறவரு வேணாம்னு சொல்றாரே" என்றார்...
"இப்படி கன்ட்ரோல் ல வச்சு இருக்கிறவர தான் கல்யாணம் பண்ணி கொடுக்கணுமா??" என்று வாயை அடக்க முடியாமல் கேட்டு விட்டான் கெளதம் கிருஷ்ணா...
அவனை ஒரு கணம் அழுத்தமாக பார்த்து, அப்படி பேச வேண்டாம் என்ற தோரணையில் தலையாட்டினான் வம்சி கிருஷ்ணா...
மகாலக்ஷ்மியோ, "உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி? அவ ரெண்டாம் தாரமா தான் போறா... இத்தனை வருஷம் அவளுக்கு மாப்பிள்ளை தேடி களைச்சு போய்ட்டேன்... வர்றவன் எல்லாம் பேச முடியாதுன்னு சொன்னதுமே வேணாம்னு சொல்லிட்டு போய்டுறான்... இல்லன்னா ஊரையே சீதனம் கேக்கிறான்... நான் எங்க போவேன்? இப்படியே இருந்தா கல்யாணம் நடக்காம போய்டுமோன்னு பயமா இருந்திச்சு... எல்லாம் அமைஞ்சு வந்தது இவர் தான்... இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம்..." என்றார் அவர்...
"அவர் கிட்ட பேசி பார்க்க முடியாதா?" என்றான் வம்சி கிருஷ்ணா...
மகாலக்ஷ்மியோ, "இந்த நேரத்துல எப்படி தம்பி பேசுறது? கல்யாணத்த கோபத்துல நிறுத்திட்டா என்ன பண்ணுறது?" என்று கேட்டார்...
கணவன் மனைவி என்றால் காதலும் ஆத்மார்த்த அன்பும் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் வம்சி கிருஷ்ணா... அவனுக்கோ இப்படி அவர்கள் பயந்து பயந்து கல்யாணம் பண்ணுவது விசித்திரமாக இருந்தது...
"நான் பேசி பார்க்கட்டுமா?" என்று கேட்டான்...
"இல்ல தம்பி வேணாம்... அப்புறம் தப்பா நினச்சு கல்யாணம் நின்னுடுச்சுன்னா என்ன பண்ணுறது?" என்றார் மகாலக்ஷ்மி...
வந்ததில் இருந்தே "கல்யாணம் நின்னுடுச்சுன்னா என்ன பண்ணுறது?" என்ற கேள்வியை தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்...
வம்சி கிருஷ்ணாவுக்கே சற்று எரிச்சலாகி விட்டது...
கெளதம் கிருஷ்ணாவை கேட்கவே வேண்டாம்...
அதற்கு மேல் அவனால் என்ன பேசி விட முடியும்...
"ஓகே அப்போ நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், ஒரு கணம் திரும்பி அங்கே சுவருடன் ஒட்டி நின்ற தேன்மொழியை பார்த்தான்...
அவளும் அவனையே இமைக்காமல் பார்க்க, "இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டமா?" என்று கேட்டான்...
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை...
தடுமாறி போனாள்...
விழிகள் அலைபாய்ந்தன...
அவன் விழிகளை பார்த்து பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.
அவள் தடுமாற்றமே அவளுக்கு இதில் சம்மதம் இல்லை என்று உணர்த்தியது...
அதற்கு மேல் அவளிடம் பதிலை எதிர்பார்க்காமல் விறு விறுவென வெளியேறி இருந்தான்...
மகாலக்ஷ்மியோ, "சம்மதம்னு சொல்ல வேண்டியது தானே" என்று அவளுக்கு திட்டி விட்டு சமயலறைக்குள் நுழைந்து கொள்ள, அவளோ பெருமூச்சுடன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இதே சமயம் வெளியே வந்த வம்சி கிருஷ்ணாவோ, "எனக்கு மாப்பிளையோட அட்ரெஸ் வேணும்டா" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அவர்கள் வீட்டுக்கு, "தேன்மொழி அக்கா, எனக்கு இந்த கணக்கை போட்டு கொடுக்கிறீங்களா?" என்று சத்தமாக கேட்டுக் கொண்டே, பக்கத்து வீட்டுப் பெண் அவளை தேடி கையில் புத்தகங்களுடன் வந்தாள்...
அவளோ வாசலில் நின்ற வம்சி கிருஷ்ணாவை பார்த்து அதிர்ந்து போனவள், "நீங்களா? நான் உங்கள டி வி ல பார்த்து இருக்கேன்... நல்லா பாடுறீங்க" என்று சொல்ல, அவனோ, "போச்சுடா" என்று நினைத்துக் கொண்டே, நகர முற்பட, "சார் எனக்கு ஒரு ஆட்டோகிராஃப் போட்டு தர்றீங்களா?" என்று கேட்டபடி அவனை மறித்துக் கொண்டே நின்றாள்.
வம்சி கிருஷ்ணா அருகே நின்ற கெளதம் கிருஷ்ணாவை திரும்பி பார்க்க, அவனோ, தனது பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்தவன் வம்சி கிருஷ்ணாவிடம் நீட்டினான்...
அந்த பெண்ணோ தன்னுடைய நோட் புக்கின் பின் பக்கத்தை அவனிடம் நீட்ட, அதனை வாங்கிக் கொண்டே, "உங்க தேன்மொழி அக்காவை கல்யாணம் பண்ண போறவரோட பேர் என்ன?" என்று கேட்டுக் கொண்டே, நோட்புக்கில் பேனாவை வைத்தான்...
அந்த பெண்ணோ, "அவரா? அவர் பேர் ரஞ்சன், எங்க ஸ்கூல் ல தான் சயன்ஸ் படிப்பிக்கிறார்... சரியான மோசமான ஒரு சார்... எல்லாத்துக்கும் போட்டு அடிப்பார்... எனக்கெல்லாம் அவரை பிடிக்காது... பொண்ணுன்னா சத்தமா சிரிக்க கூடாதாம்... சிரிச்சாலும் அடி விழும்... இந்த தேன்மொழி அக்கா எதுக்கு தான் அவரை கட்டிக்க சம்மதம் சொல்லிச்சோ தெரியல" என்று ரஞ்சனின் வரலாறையே சொன்னாள்.
வம்சி கிருஷ்ணா அவள் பேசி முடிக்கும் வரை மெதுவாக கையெழுத்தை இட்டவன், "நீ எந்த ஸ்கூல் ல படிக்கிற?" என்று கேட்க, அவளும் தனது பாடசாலையின் பெயரை சொன்னாள்...
"ஓகே, சைன் பண்ணிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே, கையில் இருந்த நோட் புக்கை அவளிடம் நீட்டியவன், பேனாவை கெளதம் கிருஷ்ணாவிடம் நீட்டிக் கொண்டே, "போகலாமா?" என்று கேட்டான்...
"இன்னைக்கு ஸ்கூல் லீவு" என்று சொல்லிக் கொண்டே கெளதம் கிருஷ்ணா வம்சி கிருஷ்ணாவுடன் நடக்க, "இப்போ வீட்டுக்கு போகலாமான்னு கேட்டேன் டா, ஸ்கூலுக்கு நாளைக்கு போகலாம்" என்று சொல்லிக் கொண்டே, வாசலில் நின்ற காரில் ஏறிக் கொள்ள, கெளதம் கிருஷ்ணாவும் ஏறிக் கொண்டான்...
வீட்டுக்கு காரை ஓட்டிச் சென்ற வம்சி கிருஷ்ணாவுக்கு இன்னுமே தேன்மொழியின் நினைப்பு தான்...
அவள் விழிகளில் தெரிந்த தடுமாற்றம் தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது...