ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 8

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 8

இப்படியே இரு நாட்கள் நகர்ந்து இருக்கும், வம்சி கிருஷ்ணாவுக்கு எதிலும் ஈடுபாடு இல்லை...

ரெக்கார்டிங்கை கூட அவகாசம் கேட்டு தள்ளி போட்டு இருந்தான்... அவன் மனம் நிலை இல்லை என்றால் அவனால் திருப்தியாக பாட முடியாது... வீட்டில் பாடும் போதே பல எண்ணங்கள் அவனை தடுமாற செய்யும்... இதில் எப்படி ரெக்கார்டிங்கில் பாடுவது?

அவன் நிலைமை இப்படி இருக்க, வசந்திக்கே அவனில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது...

ஷேவ் செய்வது இல்லை...

தாடி மீசை கண்ட மேனிக்கு வளர்ந்தும் இருந்தது...

அவன் தன்னை கண்ணாடியில் கூட பார்ப்பது இல்லை... மனதில் இருக்கும் அழுத்தத்தில் இருந்து அவனுக்கு வெளிவருவது பெரும் பாடாகி போனது...

கிட்டத்தட்ட தேவதாஸ் போல தான் இருந்தான்...

ஒரு தடவை வசந்தியே கெளதம் கிருஷ்ணாவிடம், "என்னடா யாதவ் தான் சோகமா இருக்கான்னு பார்த்தா, இவனும் ஏன் டா இப்படி இருக்கான்?" என்று கேட்டார்...

உண்மையை வசந்தியிடம் சொன்னால் வம்சி கிருஷ்ணா உண்டு இல்லை என்று அவனை ஒரு வழி பண்ணி விடுவான்...

அதனாலேயே, "தெரியலம்மா" என்று சொல்லிக் கொண்டான்...

யாதவ் கிருஷ்ணாவுக்கும் சரி, வம்சி கிருஷ்ணாவுக்கும் சரி மனதில் வலி தோன்ற காரணம் ஒரே ஜீவன் தேன்மொழி தான்...

அது அப்போது யாருக்கும் தெரியவே இல்லை...

இதே சமயம் யாதவ் கிருஷ்ணாவுக்கு கற்பிக்க கல்யாண ராமனும் அன்று வீட்டுக்கு வந்து இருந்தார்...

அவருக்கோ அவன் வசந்தியிடம் தன்னை பற்றி சொன்ன கோபம் மனதில் அப்படியே இருந்தது...

அவனுக்கு கணக்கை கொடுத்து விட்டு, வாய்க்குள் திட்டிக் கொண்டே இருந்தார்...

யாதவ் கிருஷ்ணாவின் கெட்ட காலத்துக்கு, அவன் ஒரு கணக்கை தப்பாக செய்து விட்டான்...

எட்டி அவன் நோட் புக்கை பார்த்தவருக்கு கடுப்பாகி விட்டது...

இது தான் வாய்ப்பென்று, "முட்டாள் முட்டாள்" என்று அவன் தலையில் குட்டிக் கொண்டே, கண்ட மேனிக்கு திட்டியவரோ, "இந்த செவிடனுக்கு நான் திட்டுனாலும் விளங்காது" என்று சொல்லிக் கொண்டே அவன் தலையில் இன்னும் ரெண்டு அடி போட்டார்...

அவனுக்கோ வலித்தது...

கண்களும் கலங்கி விட்டன...

அவரை ஏறிட்டுப் பார்த்தான்...

அவரோ, "என்னடா பார்க்கிற, செவிட்டு பய உனக்கு அவ்ளோ திமிரா?" என்று இதழ் அசைத்து கேட்க, அவனுக்கு இதழ் அசைவில் அவர் திட்டியது புரிந்தது...

அவனுக்கு கேட்காது என்கின்ற நினைப்பில் இன்னும் வார்த்தைகளை விட்டார்...

"உனக்கு பொம்பிளை டீச்சர் தானா சொல்லி கொடுக்கணும்? ஏன் அவ அப்படி என்னத்த சொல்லி கொடுத்தா?" என அவர் வார்த்தைகள் தப்பாயின...

இதழ் அசைவில் அவர் பேசுவதை கண்டு கொண்டவனுக்கு அதுவரை இருந்த பொறுமை பறந்தது...

"என்னடா முறைப்பு, மேசைல இருக்கிற தண்ணிய எடுத்து வா" என்று சொன்னவரோ சற்று நிறுத்தி, "சைகையால சொல்லணும்ல" என்று சொல்லிக் கொண்டே சைகையால் சொன்னார்...

அவரை பார்த்துக் கொண்டே எழுந்தான்...

சற்று முன்னர் கலங்கிய கண்களில் இப்போது அனல் மட்டுமே நிரம்பி இருந்தது...

விறு விறுவென சென்று மேசையில் கண்ணாடி குவளையில் இருந்த நீரை எடுத்து வந்தான்...

அவர் அப்போதும் திட்டுவதை நிறுத்தவில்லை...

தனக்கு அருகே நீர் குவளையுடன் நின்றவனிடம், "என்னடா பார்க்கிற? பொம்பிளை டீச்சர் கேக்குதோ உனக்கு... அத கொடு" என்று நீர்க் குவளையை வாங்குவதற்காக அவர் கையை நீட்ட, அவனோ கையில் இருந்த கண்ணாடி குவளையை அவர் தலையில் ஓங்கி அடித்து இருந்தான்...

நெற்றி வெடித்து ரத்தம் பீறிட்டது...

"ஐயோ" என்று அவர் கத்தியது ஸ்டூடியோவில் இருந்த வம்சி கிருஷ்ணாவுக்கும் கேட்டது, தனது அறைக்குள் இருந்த கெளதம் கிருஷ்ணாவுக்கும் கேட்டது, சமயலறைக்குள் இருந்த வசந்திக்கும் கேட்டது... ஏன் வேதவல்லி உட்பட எல்லாருக்கும் கேட்டது...

எல்லாருமே அதிர்ந்து போனார்கள்...

அவசரமாக சத்தம் கேட்ட திசையை பார்த்தால், அது யாதவ் கிருஷ்ணாவின் அறை...

ஓடி வந்து வம்சி கிருஷ்ணா தான் முதலில் அறையை திறந்தான்...

தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வழிய, தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டே, அலறிக் கொண்டு இருந்தார் கல்யாண ராமன்...

யாதவ் கிருஷ்ணாவோ அவரை இப்போது மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்...

ஒரு கோபத்தில் அடித்து விட்டான்...

எல்லாம் செய்து முடிய அவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது...

வம்சி கிருஷ்ணாவோ கல்யாண ராமனை பார்த்து விட்டு யாதவ் கிருஷ்ணாவை பார்க்க, அவனுக்கோ அழுகை வந்து விட்டது...

அங்கே வந்தவர்கள் அனைவரையும் சுற்றி பார்த்தவனோ வேகமாக அங்கிருந்து ஓடி தனது படுக்கை அறைக்குள் நுழைந்து கொள்ள, அவன் ஓடி செல்வதை பார்த்து விட்டு மீண்டும் கல்யாண ராமனை பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகணும்டா, ட்ரைவரை வர சொல்லு" என்று கெளதம் கிருஷ்ணாவிடம் சொல்ல, சற்று நேரத்தில் ட்ரைவரும் வந்து விட, கல்யாணராமனை பார்த்த வம்சி கிருஷ்ணாவோ, "கீழ விழுந்து, க்ளாஸ் குத்திடுச்சுன்னு சொல்லுங்க, அதுக்குரிய பேமெண்ட் நான் கொடுக்கிறேன்" என்றான்...

அவரும் பெரிய அமௌன்ட் கறந்து விடலாம் என்ற நினைப்பில் சம்மதமாக தலையாட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றார்...

அவனை அனுப்பி வைத்து விட்டு வசந்தியை பார்க்க, அவரோ, "என்னடா இவன்" என்று தழுதழுத்த குரலில் கேட்டார்...

"அப்பா பிசியா இருப்பார்... இப்போ சொல்லாதீங்க, அவர் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாம்" என்ற வம்சி கிருஷ்ணாவோ, "கௌதம், அவனை என்னன்னு பாரு" என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்...

வசந்தியும் கெளதம் கிருஷ்ணாவும் யாதவ் கிருஷ்ணாவின் அறையை திறக்க முற்பட அது உட்பக்கத்தால் மூடப்பட்டு இருந்தது...

அவனுக்கு தட்டினாலும் கேட்காது, ஆனாலும் பதட்டத்துடன் வசந்தி தட்ட, கெளதம் கிருஷ்ணாவோ அங்கே நின்ற தோட்டக்காரனிடம், "இத உடைங்க" என்று சொல்ல, அவரும் கடப்பாறையை எடுத்து வந்து கதவை உடைக்க ஆரம்பித்தார்...

வசந்தியோ, "எனக்கு பயமா இருக்கு கெளதம்" என்று கண்ணீருடன் பதற ஆரம்பிக்க, அனைத்தையும் முன்னறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த வேதவல்லியோ, "இது சீரியலை விட நல்லா இருக்கும் போலவே" என்று நினைத்துக் கொண்டார்.

இதே சமயம் தனது அறைக்குள் இருந்த வம்சி கிருஷ்ணாவுக்கு கதவை உடைக்கும் சத்தம் கேட்டது...

வேகமாக அறைக்குள் இருந்து வெளியே வந்து பார்த்தான்...

கதவும் அந்த கணத்தில் உடைக்கப்பட, கெளதம் கிருஷ்ணாவும் வசந்தியும் உள்ளே அவசரமாக நுழைந்தார்கள்.

அங்கே யாதவ் கிருஷ்ணா அவர்களின் கண்களில் படவில்லை...

"யாதவ்" என்று கத்திக் கொண்டே தேட, அவனோ திரைசீலையின் பின்னே கால்களை குறுக்கி கீழே அமர்ந்து கொண்டே, அழுது கொண்டு இருந்தான்...

சட்டென கெளதம் கிருஷ்ணா திரைசீலையை விலக்க, அவன் இன்னும் பயந்து சுவருடன் ஒன்றியவன், யாரையும் பார்க்கவில்லை...

முகத்தை கால் முட்டியில் புதைத்துக் கொண்டே அழுது கொண்டு இருந்தான்...

அவன் அருகே அமர்ந்த வசந்தியோ, அவன் தோளில் கையை வைக்க, அவனுக்கோ ஆத்திரம்...

தான் சொல்லியும் கேட்காமல் கல்யாணராமனை டியூஷன் எடுக்க அனுப்பிய ஆத்திரம்...

வேகமாக அவர் கையை தட்டி விட்டவன் அவரை பார்க்கவே இல்லை...

அவரோ, கண்கள் கலங்க கெளதம் கிருஷ்ணாவை பார்க்க, அவனோ, "நான் பேசிக்கிறேன்மா, நீங்க கொஞ்சம் வெளிய நில்லுங்க" என்று சொல்ல, அவரும் புடவை முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியேறி இருந்தார்...

அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்த கெளதம் கிருஷ்ணாவோ, அவன் தோளில் கையை வைக்க, அவனோ சட்டென நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, அவன் கையை தட்டி விட்டான்...

அவன் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது...

அவன் தன்னுடைய முகத்தை பார்த்தால் தான் கெளதம் கிருஷ்ணாவினால் சைகையால் பேச முடியும்...

அவன் முகத்தையே பார்க்க முடியாது என்று இருக்கும் போது எப்படி அவனால் சைகையால் பேச முடியும்?

மறுபடியும் தட்டி பார்த்தான் அவன் கெளதம் கிருஷ்ணாவை திரும்பி கூட பார்க்கவே இல்லை...

ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தவனிடம், "என்னடா ஆச்சு? என்ன சொல்றான்?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா...

வசந்தியும், "அவனுக்கு திடீர்னு என்னாச்சு? அவன் இப்படி முரட்டு தனமா நடந்துகிறவன் இல்லையே" என்று கண்ணீருடன் சொல்ல, கெளதம் கிருஷ்ணாவோ, "அவன் என் முகத்தை கூட பார்க்க மட்டேங்குறான்மா, எப்படி நான் அவன் கூட பேசுறது?" என்று இயலாமையுடன் கேட்டான்...

வம்சி கிருஷ்ணாவிடம் ஆழ்ந்த மூச்சு மட்டும் தான்... சட்டென கெளதம் கிருஷ்ணாவோ, "நீ பேசி பாரு வம்சி" என்றான்...

"நானா?" என்று அதிர்ச்சி அவனிடம்...

"உன் கிட்ட அவனுக்கு பேச ரொம்ப பிடிக்கும்" என்று கெளதம் கிருஷ்ணா சொல்ல, அவனோ, "எனக்கு சைன் லாங்க்வேஜ் ஃப்ளுவேண்ட் ஆஹ் தெரியாதுடா" என்றான்...

"உன் லிப்ஸ் வச்சே அவன் கண்டு பிடிப்பான்... அவனை எழுதி காட்ட சொல்லிடு" என்றான் கெளதம் கிருஷ்ணா...

"டேய் உன் கூடவே பேசல, என் கூட பேசுவானா?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா...

"கண்டிப்பா பேசுவான் டா" என்று கெளதம் கிருஷ்ணா சொன்னதும் ஒரு தயக்கத்துடன் தான் உள்ளே நுழைந்தான்...

கண்களை சுற்றி சுழல விட்டவனுக்கு திரைசீலைக்கு பின்னால் அமர்ந்து இருந்த யாதவ் கிருஷ்ணா தென்பட, அவனை நோக்கி நடந்தான்...

யாதவ் கிருஷ்ணா அப்படியே அழுதபடி அமர்ந்து இருக்க, திரைசீலையை விலக்கி அவனை பார்த்தான்...

அவன் அப்போதும் நிமிரவே இல்லை...

அவன் அருகே மண்டியிட்டு அமர்ந்து கொண்டே, அவன் தோளில் கையை வைக்க, யாதவ் கிருஷ்ணா வித்தியாசமான ஸ்பரிசத்தை உணர்ந்து சட்டென்று ஏறிட்டுப் பார்த்தான்...

அவன் அருகே அமர்ந்து இருந்தது என்னவோ வம்சி கிருஷ்ணா தான்...

யாதவ் கிருஷ்ணாவினால் நம்பவே முடியவில்லை...

இமைக்காமல் அவனையே பார்த்தான்...

வம்சி கிருஷ்ணாவோ, "என்னடா ஆச்சு?" என்று இதழ்களை அசைத்து கேட்டதன் அடுத்த கணமே, அவனை இறுக அணைத்தவன் விம்மி அழ ஆரம்பித்து விட்டான்...

வம்சி கிருஷ்ணாவுக்கு எதுவுமே புரியவில்லை... அப்படியே அமர்ந்து இருந்தான்...

மனம் விட்டு அழுதான்...

இத்தனை நாள் பேசாத ஒரு உறவு... பேச மாட்டார்களா என்று ஏங்கிய உணர்வு பேசினால் எப்படி இருக்கும்? அப்படி தான் யாதவ் கிருஷ்ணாவுக்கும் இருந்தது...

வம்சி கிருஷ்ணாவுக்கு யாதவ் கிருஷ்ணாவை ரொம்பவே பிடிக்கும்...

அவன் பிறந்த நேரம் இவனுக்கு பதின்மூன்று வயது இருக்கும்...

அப்போது இருந்தே அவனை கைகளில் தூக்கி திரிவான்...

முத்தமிட்டு அவனை ஒரு வழி பண்ணி விடுவான்...

வருடங்கள் நகர்ந்த போதும், யாதவ் கிருஷ்ணா வாய் திறந்து பேசவே இல்லை...

"அம்மா இத்தனை வயசாச்சு, ஆனா ஏன் தம்பி பேச மாட்டேங்குறான்... நான் பாடுனா கூட என்ன பார்க்க மாட்டேங்குறான்" என்று முதல் முதல் ஐயம் வெளியிட்டது கூட வம்சி கிருஷ்ணா தான்...

அதன் பிறகு தான் வைத்தியரிடம் கொண்டு ஓடினார்கள்...

அப்போது தான் தெரிந்தது அவனுக்கு பிறப்பிலேயே கேட்கும் திறன் இல்லை என்று... கேட்கும் திறன் இல்லை என்றால் பேசும் திறனும் இருக்காதே...

அந்த விடயத்தினால் வசந்தி மற்றும் குருமூர்த்தியை விட அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ வம்சி கிருஷ்ணா தான்...

கெளதம் கிருஷ்ணா சற்று எதார்த்தவாதி... எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு கடந்து விடுவான்...

ஆனால் வம்சி கிருஷ்ணா அப்படி அல்ல...

ஆழ்ந்த அன்பு வைத்தால் அதில் இருந்து அவனுக்கு மீள்வது கஷ்டம்...

யாதவ் கிருஷ்ணாவின் இந்த நிலையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...

யாதவ் கிருஷ்ணா கையசைத்து தேவைகளை கேட்கும் போது மனம் பிசையும்...

தனது பாடலை ஊரே கேட்கும் போது தான் உயிரை வைத்து இருக்கும் தனது தம்பியால் கேட்க முடியவில்லையே என்கின்ற ஆதங்கம்...

"ஏதாவது பேசுடா", "இந்த சத்தம் கேக்குதடா", "இந்த சத்தம் கேக்குதாடா" என்று ஒவ்வொரு சத்தத்தை உருவாக்கி தவித்து போன நாட்களும் உண்டு... "நான் பாடுறத உன்னால கேட்கவே முடியாதா?" என்று அவனிடம் பேசி ஏங்கிய நாட்களும் உண்டு...

யாதவ் கிருஷ்ணா சின்ன வயதில் ஒவ்வொரு தேவைக்கும் தடுமாறும் போது வம்சி கிருஷ்ணாவுக்கு என்னவோ செய்யும்...

தூக்கம் இல்லாமல் போகும், பாட முடியாமல் போகும்...

கெளதம் கிருஷ்ணா போல ஏற்றுக் கொண்டே கடந்து விட முயன்றான்...

முடியவே இல்லை...

நீண்ட நாள் முயன்றும் முடியாமல் போக, யாதவ் கிருஷ்ணாவை தவிர்க்க ஆரம்பித்து விட்டான்...

தன்னை கொண்டாடிய அண்ணன் தன்னை தவிர்ப்பது யாதவ் கிருஷ்ணாவுக்கும் புரிந்தது...

வம்சி கிருஷ்ணா காரணமே இல்லாமல் யாதவ் கிருஷ்ணாவை தவிர்த்தான்...

ஏன் தவிர்க்கின்றான் என்று அவனுக்கும் தெரியவில்லை...

தேவையற்ற தவிர்ப்பு...

யாதவ் கிருஷ்ணாவுக்காக வசந்தி எல்லாமே பார்த்து பார்த்து செய்தார்...

அம்மா பார்த்துக் கொள்வார் என்ற நினைப்பில் தனது முன்னேற்றத்தை பார்க்க ஆரம்பித்து விட்டான்...

யாதவ் கிருஷ்ணாவுக்கு தான் தேவைப்பட மாட்டோம் என்று நினைத்து விட்டான்...

அதன் பிறகு, காலேஜ், பாடல் என்று பிசியாகி விட்டான்...

தம்பியினால் உண்டான தாக்கத்தில் இருந்து மீள முடியாதவன், யாருடனும் மனதுக்கு நெருக்கமாக பழகுவது இல்லை... தான் ஆழ்ந்த அன்பு வைத்தவர்களுக்கு ஏதும் ஆகி விட்டது என்றால் வம்சி கிருஷ்ணாவினால் தாங்கிக் கொள்ள முடியாது...

அதனாலேயே கெளதம் கிருஷ்ணா உட்பட அனைவருடனும் ஒரு எல்லையில் நின்று கொள்வான்... பாசம் இருந்தாலும் யாதவ் கிருஷ்ணா மேல் இருக்கும் அன்பு போல அவன் யார் மீதும் வைத்தது இல்லை...

யாதவ் கிருஷ்ணாவுக்கு பிறகு அவன் இதயத்தை அசைத்து பார்த்தது தென்றல் தான்...

இத்தனை வருடங்கள் கழித்து, யாதவ் கிருஷ்ணாவை முகத்துக்கு நேராக பார்க்கின்றான்...

விழிகளுடன் விழிகளை கலக்க விடுகின்றான்...

யாதவ் கிருஷ்ணா அவனை அணைத்து நீண்ட நேரம் அழுதான்...

வம்சி கிருஷ்ணா அப்படியே இருந்தான்...

அவன் அணைப்பும் அழுகையுமே தன்னை அவன் எந்தளவு எதிர்பார்த்து இருக்கின்றான் என்று வம்சி கிருஷ்ணாவுக்கு எடுத்து கூறியது...

இதன் பிறகும் தவிர்க்க வேண்டுமா? என்ற கேள்வி அவனிடம்...

இத்தனை நாட்கள் அவனுடன் இருந்த வசந்தி மற்றும் கெளதம் கிருஷ்ணாவிடம் சொல்லாதவற்றை தன்னிடம் சொல்ல முயல்கிறான் என்று தோன்றியது...

தன் மீது அப்படி ஒரு நம்பிக்கை... அவன் நம்பிக்கைக்கு தான் இத்தனை நாள் உயிர் கொடுக்கவில்லையோ என்று இப்போது தோன்றியது...

நினைத்த போல வாழ்க்கையில் எல்லா விடயங்களும் நடந்து விடுவது இல்லை...

எப்போதுமே பிரச்சனைகளை கண்டு ஓடி பயன் இல்லை...

ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண்பதே புத்திசாலி தனம்...

இத்தனை நாள் பிரச்சனையை கண்டு ஓடும் முட்டாளாக இருந்து விட்டான்...

அந்த உண்மை இப்போது உறைத்தது...

யாதவ் கிருஷ்ணாவின் விழிகளை பார்த்து இருந்தாலாவது அந்த ஏக்கமும் எதிர்பார்ப்பும் புரிந்து இருக்கும்... அவனை தவிர்த்து தவிர்த்து அவனை தானே காயப்படுத்தி இருக்கின்றான்...

சிறிது நேரத்தின் பின் யாதவ் கிருஷ்ணாவே அவனை விட்டு விலகி, சைகையால் ஏதோ சொல்ல முயன்றான்...

அவனுக்கு புரியவே இல்லை...

அவன் தோள்களை பற்றி அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, "எனக்கு புரியல" என்று இதழ் அசைத்து சொன்னான்...

அவன் இதழ்களை பார்த்து விட்டு, ஒற்றைக் கையால் கொஞ்சம் பொறுத்து இருக்கும்படி சொன்ன யாதவ் கிருஷ்ணாவோ அவன் அறைக்குள் இருந்த வைட் போர்ட் அருகே வந்து மார்க்கரை கையில் எடுத்தான்...

வம்சி கிருஷ்ணாவின் இதழ்கள் சற்று நிம்மதியாக புன்னகைத்தன...

வெண்ணிற பலகையில் எழுத ஆரம்பித்தான்...

கல்யாண ராமனின் பிரச்சனைக்கு முதல் தன்னிடம் இருக்கும் கேள்விகளை வம்சி கிருஷ்ணாவிடம் கேட்டு விட வேண்டும் என்று நினைத்து விட்டான்...

"என்னை உங்களுக்கு பிடிக்காதா?" என்று முதல் கேள்வி...

"ரொம்ப பிடிக்கும்" என்றான் வம்சி கிருஷ்ணா...

"அப்போ ஏன் என் கிட்ட பேசுறது இல்ல?" என்று அடுத்த கேள்வி...

"ஐ ஆம் சாரி" என்றான்...

அதற்கு எப்படி விளக்கம் சொல்வது என்று வம்சி கிருஷ்ணாவுக்கு தெரியவில்லை...

அவன் இதழ் அசைவை உன்னிப்பாக பார்த்த யாதவ் கிருஷ்ணாவோ, "தட்ஸ் ஓகே" என்று மென் புன்னகையுடன் எழுதினான்...

அவன் மன்னிப்பில் மொத்தமாக உடைந்து விட்டான் வம்சி கிருஷ்ணா...

உணர்வுகளை அடக்கிக் கொண்டான்...

"என் கூட இனி பேசுவீங்களா?" என்று அடுத்த கேள்வி...

அவனோ, "கண்டிப்பா" என்று சொல்ல, யாதவ் கிருஷ்ணாவின் இதழ்கள் தாராளமாக புன்னகைக்க தொடங்கின...

"நான் ஏன் சாரை அடிச்சேன் தெரியுமா?" என்று அடுத்த கேள்வி கேட்டான்...

"நீயே சொல்லு" என்றான் வம்சி கிருஷ்ணா...

பந்தி பந்தியாக எழுதி மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி தீர்த்தான்...

அழுது கொண்டே எழுதினான்...

அவனை பார்க்கவே வம்சி கிருஷ்ணாவுக்கு கஷ்டமாக இருந்தது...

கல்யாண ராமன் மேல் கோபமாக வந்தது...

"உனக்கு என்ன வேணும்?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா...

"தேன்மொழி டீச்சர்" என்று எழுதினான்...

அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, அவனை நோக்கி வந்தவன், "என் கிட்ட நீ முதல் முதல் கேட்ட விஷயம்... கண்டிப்பா நிறைவேத்துவேன்" என்றான்...

அவன் கையை பிடித்த யாதவ் கிருஷ்ணாவோ, சட்டென மீண்டும் எழுத ஆரம்பித்தான்...

"அவங்களுக்கு கல்யாணம் நடக்க போகுது... அதனால தான் இங்க வரமாட்டேன்னு சொன்னாங்க... அவங்கள நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது? நம்ம கூடவே இருப்பாங்களே... அவங்க ரொம்ப நல்லவங்க, அவங்க எனக்கு அண்ணியா வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்று எழுதி முடித்து விட்டு வம்சி கிருஷ்ணாவின் முகத்தை பார்க்க, அவன் முகமோ இறுகி போனது...





 

pommu

Administrator
Staff member
அவன் முக இறுக்கத்தை கண்டவனோ, "பேச முடியாது என்கிறதால கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறீங்களா?" என்று கேட்டான்...

எவ்வளவு ஆழமான கேள்வி... வம்சி கிருஷ்ணாவை அந்த கேள்வி அசைத்து பார்த்தது என்னவோ உண்மை தான்...

சட்டென இறுக்கத்தை மறைத்து புன்னகைத்தவனோ, "ச்ச ச்ச, அப்படி இல்ல... அவங்க ஓகே சொன்னா கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றான்...

யாதவ் கிருஷ்ணாவிடம் இல்லை என்று சொல்லி அவனை ஏமாற்ற வம்சி கிருஷ்ணாவுக்கு இஷ்டம் இல்லை...

அதே சமயம் திருமணம் எல்லாம் செய்யும் எண்ணமும் அவனுக்கு இல்லை... தேன்மொழிக்கு வாய் பேச முடியாது என்பது எல்லாம் வம்சி கிருஷ்ணாவுக்கு இரண்டாம் பட்சம் தான்...

அவன் மனதில் தென்றல் இன்னுமே வீசிக் கொண்டு இருக்கின்றாள்... தேன்மொழி என்று இல்லை, யாரை திருமணம் செய்ய கேட்டாலும் இப்போது இருக்கும் அவன் மனநிலைக்கு அவன் சொல்ல கூடிய ஒரே பதில், "முடியாது" என்று தான்...

அதனை இப்போது யாதவ் கிருஷ்ணாவிடம் சொல்ல முடியாது... அதனால், அவள் மீது பழியை போட்டு அந்த சந்தர்ப்பத்தில் தப்பியவனோ, எவ்வளவு கஷ்டப்பட்டாவது அவளை டியூஷனுக்கு மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்...

அதனை தொடர்ந்து யாதவ் கிருஷ்ணாவின் தலையை வருடி விட்டு வெளியே வந்தான்...

"என்னடா இவ்ளோ நேரம் பேசுன?" என்று வசந்தி கேட்க, அவரை முறைத்தவன், "அது தான் அந்த கல்யாணராமன் வேணாம்னு சொன்னான்ல, அப்போவே விட வேண்டியது தானே... அந்த ஆள் என்ன எல்லாம் பேசி இருக்கான் தெரியுமா? அவனை" என்று கடுப்பாக வாய்க்குள் திட்டிக் கொண்டே, தனது கைபேசியை எடுத்து ட்ரைவருக்கு அழைத்தவன், "கல்யாண ராமனுக்கு என்னாச்சு?" என்று கேட்டான்...

"தையல் போட்டாச்சு சார், உங்கள பார்க்கணும்னு சொல்றார்" என்று சொல்ல, "ஓகே, நான் வரேன்" என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தவன், "அம்மா நீங்க யாதவ்வை பார்த்துக்கோங்க, கெளதம் வாடா" என்றான்...

"எங்கடா?" என்று கேட்க, "அந்த கல்யாண ராமனை பார்த்துட்டு வரலாம், கொடுக்க வேண்டியது எல்லாமே கொடுக்கணும்ல்" என்று சொல்லிக் கொண்டே முன்னே செல்ல, அவனை பின் தொடர்ந்து சென்றான் கெளதம் கிருஷ்ணா...

வம்சி கிருஷ்ணா தான் வண்டியை ஓட்டி சென்றான்...

கெளதம் கிருஷ்ணா அருகே அமர்ந்து இருந்தான்... வண்டியும் வைத்தியசாலையின் வாசலில் நின்றது...

வாசலில் தான் தலையில் கட்டுடன் நின்று இருந்தான் கல்யாண ராமன்... கல்யாண ராமன் அருகே நின்ற வம்சி கிருஷ்ணாவின் வீட்டு சாரதியோ, "சார் வந்துட்டார்" என்று காரை கை காட்டி சொல்ல, அவரும் வேகமாக கார் அருகே வந்தார்...

"நீ பின்னால இரு கெளதம்" என்று சொல்ல, கௌதமோ காரின் உள்ளே இருந்தவாறு பாய்ந்து பின்னால் சென்றான்...

கல்யாண ராமனும் கார் கதவை திறந்து கொண்டே உள்ளே அமர்ந்தார்...

அவர் கண்கள் பளபளத்தன...

"சொல்லுங்க" என்றான் வம்சி கிருஷ்ணா...

"ஒரு ஐம்பது லட்சம் கொடுங்க, இந்த விஷயம் வெளியே வராம பார்த்துகிறேன்" என்றார்...

பணம் என்று சொன்னதும் வாயை திறந்து விட்டார்...

வம்சி கிருஷ்ணாவும் பணத்துக்கான செக்கை எழுதி அவர் கையில் வைக்க, அவரோ, "இது செல்லும் தானே" என்றார்...

"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், "மிஸ்டர் கல்யாண ராமன்" என்றான்... அவரும், "சொல்லுங்க சார்" என்று சொல்ல, இரு கைகளையும் உரசிக் கொண்டே, "இன்னொன்னு உங்களுக்கு கொடுக்கலாம்னு இருக்கேன்" என்றான்...

"தாராளமா கொடுங்க சார்" என்று அவர் முடிக்கவில்லை, அவர் காதில் "கொய்ங்" என்று சத்தம் கேட்டது...

ஆம் அறைந்து விட்டான்...

அவரோ கன்னத்தை பொத்தியபடி அவனை அதிர்ந்து பார்க்க, "பேசுன பேச்சுக்கு பணம் தான் ஒரு குறை" என்று திட்டிக் கொண்டே, அவர் கையில் இருந்த செக்கை பறித்து எடுத்தவன், கண நேரத்தில் ரெண்டாக கிழித்து விட்டான்...

கெளதம் கிருஷ்ணாவோ, "என்னடா நடக்குது இங்க" என்ற ரீதியில் பார்த்துக் கொண்டு இருக்க, விறைத்து நின்ற கல்யாண ராமனை நோக்கி ஒற்றை விரலை நீட்டியவன், "நீ யார் கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ, ஐ டோன்ட் கெயார்... என் தம்பியை எப்படி காப்பாத்துறதுன்னு எனக்கு தெரியும்... ஓவரா பண்ணுனா, வார்த்தையால என் தம்பிய அபியூஸ் பண்ணுனன்னு கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்... நினச்சா ஜட்ஜை கூட என்னால விலைக்கு வாங்க முடியும், புரியுதா?" என்றான் விழிகளில் அனலை கக்கியப்படி...

சற்று பதறி விட்டார் கல்யாண ராமன்...

"சார்" என்று இழுக்க, "கெட் அவுட்" என்று வம்சி கிருஷ்ணா சீறிய சீறலில் காரில் இருந்து பதறி இறங்கிக் கொண்டார்... அவர் இறங்கியதும் சட்டென முன்னால் பாய்ந்து அமர்ந்த கெளதம் கிருஷ்ணாவோ, "என்னடா இது?" என்று கேட்க, "அவன் பேசுன பேச்சுக்கு ஒரு அறையோட விட்டதே பெரிய விஷயம்" என்று சொல்ல, கெளதம் கிருஷ்ணாவும், "சரி தான், இனி வீட்டுக்கு தானே" என்றான்...

அழுத்தமாக இல்லை என்று தலையை ஆட்டிக் கொண்டே, காரை அவன் ஸ்டார்ட் செய்ய, "அப்போ எங்கடா?" என்று கேட்டான் கெளதம் கிருஷ்ணா...

"உனக்கு தேன்மொழி வீடு எங்க இருக்குன்னு தெரியுமா?" என்று கேட்டான்...

"ஆஹ் ஒரு தடவை அம்மாவை அவ வீட்ல ட்ராப் பண்ணி இருக்கேன்... குத்து மதிப்பா தெரியும்" என்றான்...

"அப்போ அட்ரெஸை சொல்லு" என்று சொல்லிக் கொண்டே, காரை தேன்மொழியின் வீட்டுக்கு உயர் வேகத்தில் கிளப்பினான்...
 

CRVS2797

Member
உன் மௌனமே என் இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 8)


அப்பாடா..! இப்பவாவது யாதவ் மனசை புரிஞ்சுக்க ட்ரை பண்ணினானே இந்த வம்சி.
நாம நேசிக்கிறவங்க கிட்டத்தானே எல்லாத்தையும்
கொட்டவும், நம்மை நேசிக்கிறவங்க கிட்டத்தானே
எதையும் உரிமையா கேட்கவும்
துடிக்கும். ஸோ... அந்த வகையில யாதவ் தன் மனசுல என்ன நினைச்சிட்டிருந்தானோ
அதை கேட்டுட்டான்.


இனி அதை வம்சி நிறைவேத்துவானா...
இல்லையாங்கறதை பொறுத்திருந்து தான்
பார்க்கணும்.


ஆனா வம்சி மட்டும் தேன்மொழியை கல்யாணம் பண்ண சம்மதிச்சிட்டா...
பாட்டி என்ன பண்ணுவாங்க ?
வீட்டை விட்டு போயிடுவாங்களோ அதிர்ச்சி தாங்காம..?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top