ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 7

jaisreepsk

New member
அத்தியாயம் 7

நாட்கள் நகர , மாதவியும் உடலளவில் தேறி வர ஆரம்பித்து இருந்தாள். .அவளை தினமும் கரிகாலன் வேலை முடியும் நேரம் வந்து பார்த்தும் சிறிது நேரம் பேசியும் விட்டுச் செல்வான்.

போலீசாரிடம் இப்போதைக்கு விசாரணை வேண்டாம் என்று கூறியவன் அவளை பழையபடி மாற்றி எடுக்க அரும்பாடு பட்டுப் போனான். அவளும் மனம் வலிக்கும் நேரத்தில் எல்லாம் கரிகாலன் பேசியதையே நினைத்து ஓரளவு மனதால் தெம்பாகி இருந்தாள்..

அவள் வீட்டுக்கு வந்த பிறகு கரிகாலன் அவளை பார்க்க செல்லவில்லை என்றாலும் அவளை பற்றி தினமும் விசாரித்துக் கொண்டு தான் இருந்தான். இதற்கிடையில் மீடியாவும் இவர்கள் திருமணம் என்ன ஆச்சு?? கரிகாலன் பொய் வாக்குறுதி கொடுத்து இருக்கிறான் என்றெல்லாம் பேச ஆரம்பித்து இருக்க அவனோ அதை சட்டை செய்யவில்லை.. ஆனால் மாதவிக்கு தான் அது மனக் கஷ்டமாகி போனது.. அக்கம் பக்கத்தினரும் கொஞ்சம் நல்லவர்கள் என்பதால் அவளுக்கு அந்த விடயத்தில் பெரிதாக மனக் கஷ்டம் இருக்கவில்லை. அவளை அனுசரித்தே இருந்து கொண்டார்கள். ஆனாலும் அரக்கர்கள் இல்லாத உலகமா இது?

இப்படியான ஒரு நாளில் தான் அவள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த நேரம் மருத்துவ கல்லூரியில் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணும் நாளும் வந்து சேர்ந்தது.. ..மாதவி கல்லூரி ரெஜிஸ்ட்ரேஷனுக்கு செல்ல தந்தையுடன் நடந்து சென்று பஸ்சுக்காக காத்துக் கொண்டு இருந்த போது அந்த ஸ்டாப்பின் அருகே ஒருவன் மீது அவள் பார்வை படிந்து மீண்டது. அவனைக் கண்டதுமே அவள் உடல் விறைத்து, பல எண்ணங்கள் வந்து போனாலும் மனதை திடப்படுத்தியவள் அழைத்தது கரிகாலனுக்கே.

ஒரு மீட்டிங்கில் இருந்தவன் மாதவியின் அழைப்பை பார்த்ததும் "எக்ஸ்கியூஸ் மீ" என்றபடி வெளியே வந்து "சொல்லும்மா" என்று சொன்னான். அவளோ பதட்டத்தை கஷ்டப்பட்டு மறைத்தபடி "சார், என்னை கடத்துன காரோட ட்ரைவர் பக்கத்தில இருக்கிற ரோட்டு கடையில சாப்பிட்டுட்டு இருக்கான் " என்றவள் குரலில் தெரிந்த ஆக்ரோஷமும் வலியும் அப்பட்டமாக தெரிய, அதிகமான முக்கியத்துவம் அல்லாத மீட்டிங்கை நிறுத்திவிட்டு இடத்தை கேட்டறிந்தவன் நேரடியாக புறப்பட்டு விட்டான்.

போகும் வழியில் போலீசாரிடம் விடயத்தை சொன்னவன் அந்த இடத்துக்கு வர சொல்லி இருக்க, மாதவி அந்த ட்ரைவரின் கண்ணில் படாதவாறு மரம் ஒன்றின் பின்னே மறைந்து இருந்தாள். அவள் தந்தைக்கோ அந்த ட்ரைவர் மேல் கொலை வெறி ஆத்திரம் "இரும்மா, அவனை கொன்னு போட்டு ஜெயிலுக்கு போறேன்" என்று அவன் சீற, அவளோ அவர் கையை பிடித்தவள் " அவசரப்படாதீங்கப்பா, அவன் உங்கள கண்டதும் ஓடிடுவான். அவனுங்கள மொத்தமா பிடிக்கணும்" என்று வன்மமாக உரைத்தாள். எங்கே தனது மகள் இந்த சந்தர்ப்பத்தின் பின்னர் மொத்தமாக மனதால் மரித்து விடுவாள் என்று யோசித்து இருக்க, அவளோ வீறு கொண்ட சிங்கமாக அவர்களை வேட்டையாட அல்லவா எழுந்து நிற்கின்றாள். தனது மகளை பெருமையாக பார்த்தவர் கண்ணில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிய, கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை கொலை வெறியுடன் உற்று நோக்கினார்.

அதே சமயம் அவளை நெருங்கி வந்து தனது ஜீப்பை நிறுத்த சொன்ன கரிகாலன் அதிலிருந்து இறங்கி அவள் அருகே வர, அவனை வலியுடன் ஏறிட்டு பார்த்தவள் தனது கையை நீட்டி அந்த சாரதியை காட்டினாள் . அடுத்த கணமே ஷேர்ட்டை முட்டி வரை மடித்தபடியே அவனை நோக்கி செல்ல, தோசை சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனுக்கு அதெல்லாம் தெரியவே இல்லை. மாதவி உயிர் பிழைத்த செய்தி தெரிந்தாலும் அவள் எந்த வாக்கு மூலமும் கொடுக்கவில்லை என்று அறிந்து நிம்மதியாக திரிந்தவர்களை பிடிப்பதும் இலகுவாகி விட, சாப்பிட்டுக் கொண்டு இருந்தவன் பின் ஷேர்ட் காலரில் கை வைத்து அவனைத் தூக்க அவனோ விதிர் விதித்துப் போனான்.

அதிர்ந்தவனால் அவனது உடும்புப் பிடியை விட்டு நகர முடியாமல் இருக்க, கரிகாலனை தாண்டி பின்னால் பார்த்தவனுக்கு அங்கு நின்ற மாதவியைக் கண்டதுமே தூக்கி வாரிப் போட்டது. இதற்கு மேல் தப்பிக்க முடியாது என்று நினைத்தவன் ஓட யோசித்த போதும் , அங்கு வந்து நின்ற போலீஸ் ஜீப்பை பார்த்ததும் தனது யோசனையை மொத்தமாக கை விட்டான். ஓட போய் சுட்டு விட்டால் என்ன செய்வது என்று நினைத்தவனுக்கு உயிர் மேல் பற்று அளவுக்கதிகமாகவே இருக்க, "சார் நான் உண்மையை சொல்லிடுறேன் சார், " என்று ஆரம்பித்து அவன் சொன்ன பெயரில் உடல் விறைத்தது என்னவோ கரிகாலனுக்கு தான். அதே அதிர்ச்சி தான் அவனை கைது செய்ய வந்த போலீசாருக்கும்..

அவர்களோ "சார்" என்று இழுக்க, "யாரா இருந்தாலும் தப்பிக்கவே கூடாது..இவனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க " என்று அவன் சொன்ன அழுத்தத்தில் அடுத்த கணமே சாரதியை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர். மாதவியோ அவனை வன்மமாக பார்த்தவள் "யாரையுமே சும்மா விடக் கூடாது சார்" என்று சொல்ல அவனோ "என் மேல நம்பிக்கை இருக்கு தானே மாதவி. நீ படிக்கிற வேலையை மட்டும் பாரு,, யாரை என்ன பண்ணணுமோ நான் பண்ணுறேன்" என்றவன் கழுத்து நரம்புகள் கோபத்தில் புடைத்துக் கிளம்பின.

அவளை போக சொல்லி விட்டு கரிகாலன் நேரே சென்றது போலீஸ் ஸ்டேஷனுக்கு தான். அதே சமயம் கல்லூரிக்கு சென்று ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து விட்டு வந்த மாதவி பஸ்ஸில் ஏறிய கணத்தில் அவன் பின்னே ரவுடி தோற்றம் உடைய நான்கு தடியர்கள் வந்து இருந்தார்கள்..

மாதவி மனமோ தவறு செய்தவர்களுக்கு நீதி கிடைக்கும் நிம்மதியில் இருக்க, பின்னால் இருந்த ஒருவனோ "டேய் இது தானே அந்த ரேப் பண்ணுப்பட்ட மாதவி" என்று கேட்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. அவள் தந்தையோ திரும்பி அவர்களை பார்க்க முயற்சிக்க, அவள் தந்தையின் கையை பிடித்தவள் "வேணாம் அப்பா" என்றாள்.

இன்னொருவனோ " அது ரேப் இல்லையாம்டா, இந்த பொண்ணு நாலு பேரோட குஜாலா இருந்துட்டு அவனுங்க பணம் கொடுக்கலன்னு சொன்னதும் சண்டை போட்டாளாம். அதுல அடிபட்டது தான் அந்த காயம் எல்லாம்.. இப்போ கலெக்டர் கூட தொடர்பாமே," என்று சொல்ல, பொறுக்க முடியாமல் மாதவி கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, அவர்களை திரும்பி பார்த்த மாதவியின் தந்தை "அநியாயம் பண்ணாதீங்கடா, அந்த கடவுள் கூட பொறுத்துக்க மாட்டார், " என்று சீற அதில் ஒருவன் "என்ன பெருசு ஓவரா சவுண்ட் விடுற, உன் பொண்ணு உத்தமின்னா இதுக்கப்புறம் நாண்டுக்கிட்டு செத்து இருக்கனும். ஆனா நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறத பார்த்தா நீண்ட நாள் தொழில் பண்ணி அனுபவம் போல இருக்கே" என்று சொல்ல அவரோ அவனுங்களை அடிக்க முடியாமல் தனது தலையிலேயே கை வைத்து அடித்தவர் "அபத்தமா பேசாதேங்கடா" என்று கண்ணீர் விட, மாதவியும் "அப்பா, வாங்க இறங்கிடலாம்" என்று கண்ணீருடன் சொன்னவள் அவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்த பஸ் கான்டாக்டரை பார்க்க அவனே விசில் அடித்து பஸ்ஸை நிறுத்தினான். அங்கே இருந்தவர்களுக்கு அவர்கள் பேச்சு கோபத்தினை கொடுத்தாலும் அவர்கள் தோற்றம் யாரையும் தட்டிக் கேட்க அனுமதிக்கவில்லை. அவர்களும் அவளை தொடர்ந்து இறங்க, அவளுக்கோ கண்ணீர் ஆறாக பெருகியது. பின்னால் வந்தவர்கள் "அப்படியே ரேட்டை சொன்னார் நாங்களும் வருவோமே,, ஒரே நேரத்தில நாலு பேர் ஓகேயா?" என்று கேட்க அவளுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை. அவள் தந்தையோ "என்னடா சொன்ன?" என்று பொறுமை இழந்து அவனுங்களை அடிக்க கையை ஓங்க "வயசான காலத்தில உனக்கேன் இந்த வேலை?" என்று கேட்டு அவரை தள்ளி விட்டதில் நிலத்தில் விழுந்தவர் தலையில் ரத்தம் வழிந்தது.

மாதவியோ "ஐயோ அப்பா" என்று ஓடிப் போய் அவரைத் தூக்கியவள் "மனுஷனாடா நீங்க?" என்று சீற, அவனுங்களோ கொஞ்சமும் இரக்கம் இன்றி "அத விடு குட்டி, உனக்கு இதெல்லாம் புதுசு இல்லையே. ஏற்கனவே நாலு பேர் அனுபவிச்ச ஆள் தானே நீ, நாங்களும் அதில சேர்த்துகிறோமே" என்று சொல்ல, அவளோ வாயை மூடி அழுதவள் ரோட்டில் வந்த ஆட்டோக்கு கையை காட்டி தந்தையுடன் ஏறிக் கொண்டு அவர் மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். மகளை வாகாக அணைத்துக் கொண்ட அவருக்கும் அழுகை நின்ற பாடு இல்லை. ஆட்டோ காரனும் அவர்களை பரிதாபமாக பார்த்து விட்டு அவர்கள் சொன்ன இடத்துக்கு விரைய, அங்கிருந்தவனுகளோ கையடித்து சிரித்துக் கொள்ள அவர்கள் போன் அலறியது.

மறு முனையில் இருந்து "என்னடா ஆச்சு?" என்று கேட்க அவனுங்களோ "பேசுன பேச்சுக்கு போற போக்குல தூக்குல தொங்குவா" என்று சொல்ல, மறு முனையில் "அது தானே வேணும்" என்று பதில் வந்து சேர்ந்தது.

வீட்டுக்கு வந்ததுமே அவள் தந்தையின் தலையை பார்த்த அவள் தாய் "என்ன ஆச்சு?" என்று பதற அவரோ "நம்மள இந்த சமூகம் நிம்மதியா வாழ விடாது" என்று தலையில் அடித்துக் கொண்டு கதற மாதவியும் தாயின் மார்பில் தஞ்சம் புகுந்தவள் "எனக்கு மட்டும் ஏன்மா இப்படி நடக்குது?" என்று கேட்டாள். அவருக்கும் அழுவதை தவிர எந்த முடிவும் எடுக்க தெரியாமல் இருக்க, அவளோ தாயை விட்டு விலகி சென்று மருந்தை எடுத்து கொடுத்தவள் "இத அப்பாக்கு போட்டு விடுங்க வந்திடுறேன்" என்றபடி தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் தைரியமான பேச்சு யாருக்குமே சந்தேகம் வர வைக்காமல் இருக்க, அவரும் கணவரின் காயத்துக்கு மருந்து இட ஆரம்பித்து இருந்தார். அறைக்குள் வந்தவள் முகத்தை மூடி அழுது கொண்டே , அந்த தடியனுங்க பேசிய பேச்சை அசை போட்டவளுக்கு "உயிரோட இருந்து என்ன பயன்? இந்த சமூகம் என்ன நிம்மதியா வாழ விடாது..என்னால அம்மா அப்பாவோட நிம்மதியும் போய்டும்.. " என்று நினைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை அவள் இறந்தால் அவர்களும் மொத்தமாக மரித்து விடுவார்கள் என்று.

கண்ணீரை துடைத்துக் கொண்டே அவளிடம் இருந்த தூக்க மாத்திரைகளை எடுத்தவளுக்கு நினைவு வந்தது என்னவோ கரிகாலன் முகம் தான். தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக போட்டவள், நீரையும் அருந்தி விட்டு, போனை எடுத்து, "என்னை மன்னிச்சிடுங்க சார், நீங்க என்ன வாழ வைக்க நிறைய கஷ்டப்படுறீங்க, ஆனா இந்த சமூகம் என்ன வாழ விடாது.. இன்னைக்கு சில பேச்சுக்களை கேட்டு உயிரோட இறந்துட்டேன்.. என்னால யார் நிம்மதியும் கெட வேணாம்னு பார்க்கிறேன்... உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க சார்... குட் பாய்" என்று மெசேஜ் போட்டு விட்டு கட்டிலில் கண் மூடி படுத்துக் கொண்டாள். கரிகாலனும் பொலிஸ் ஸ்டேஷனில் இருந்து அலுவலகத்துக்கு சென்று கொண்டு இருந்தவனுக்கு இந்த மெசேஜை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது. அடுத்த கணமே "ஜீப்பை மாதவி வீட்டுக்கு விடு" என்று சொன்னவன் மனமோ "அந்த சின்ன பொண்ணுக்கு ஒண்ணுமே ஆக கூடாது" என்று வேண்டிக் கொண்டது.

வெறி பிடித்த மிருகங்களிடம் இருந்து தப்பியவள் உயிரை அவளே மாய்த்துக் கொள்வது என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா? அவனையும் மீறி அவன் கண்கள் கலங்க, மன உறுதியை இறுக்கி பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.

அவர்கள் வீட்டில் மாதவியின் அறையில் எட்டி பார்த்த அவள் தாய்க்கு அவள் தூங்கும் தோற்றமே கண்ணில் பட, அவள் தூக்கத்தை கெடுக்க விரும்பாது வெளியேறி இருந்தார். அவர் அறியவில்லை அல்லவா அவள் மொத்தமாக உலகை விட்டு நீங்க யோசித்து இருக்கிறாள் என்று.

மாதவியின் வீட்டை அடைந்ததும் புயல் போல உள்ளே நுழைந்தவன் "மாதவி எங்க?" என்று பதட்டமாக விசாரிக்க, "அவ தூங்குறா சார்" என்றார் அவள் தாய். அவனோ "இல்லை" என்று தலையை ஆட்டியவன் அவரிடம் "நீங்களும் வாங்க" என்று அவள் ரூமை கேட்டு உள்ளே சென்றவன் தூங்கியபடி இருந்தவளிடம் "மாதவி மாதவி" என்று தட்ட அவள் எழுந்தாள் தானே. அப்போது தான் அவள் தாயும் அவள் தலைமாட்டில் இருந்த மாத்திரைகளின் கவரை கவனிக்க "ஐயோ என்ன பண்ணி வச்சு இருக்கா?" என்று கேட்டபடி கவரை எடுத்துப் பார்த்தபடி கதற ஆரம்பிக்க "ஷீட் " என்றவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். அடுத்த கணமே அவளை தனது ஜீப்பில் அவளது அழுது கொண்டு இருந்த பெற்றோருடன் ஏற்றியவன் விரைந்தது என்னவோ மருத்துவமனைக்கு தான்.

மருத்துவமனையை அடைத்ததுமே அவளை ஸ்ட்ரெச்சரில் வைத்து எமெர்ஜென்சி ட்ரீட்மென்டுக்கு கொண்டு செல்ல, வெளியே அவள் பெற்றோர் அருகே இறுக்கமாக முகத்துடன் அமர்ந்து இருந்தான் கரிகாலன். அவன் மனமோ உலையாக கொதிக்க, "யாரு என்ன பேசினாங்க?" என்று அவள் தந்தையிடம் வினவினான். அவரும் வாயை மூடி அழுதபடியே நடந்ததை சொல்ல, அவன் கண்கள் கோபத்தில் சிவக்க, முஷ்டியை இறுக்கி கோபத்தைக் கட்டுப்படுத்தியவன் மனமோ "தப்பெல்லாம் பண்ணிய மதுபாலா இந்த சமூகத்துக்கு உத்தமி., எந்த பாவமும் செய்யாத இந்த பொண்ணு விபச்சாரியா?" என்று வெறுப்பை சமூகத்தின் மேல் காரி உமிழ்ந்தது.

அவனால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாமல் இருக்க, தன்னை நிலைப்படுத்தும் பொருட்டு பாட்டிலில் இருந்த நீரை அருந்தி அந்த ஆக்ரோஷத்தை அடக்கியவன் "எவனோ என்னவோ சொன்னா சாக போறியே பைத்தியக்காரி" என்று மாதவிக்கும் மனதுக்குள் திட்டிக் கொண்டு இருந்தான்.. சிறிது நேரத்தில் வெளியே வந்த வைத்தியர் "டோஸ் கொஞ்சம் குறைவா இருந்ததால ஓகே. லேட் பண்ணி இருந்தா என்ன வேணும்னாலும் நடந்து இருக்கலாம்.. இப்போ போய் பாருங்க, யாரும் ஸ்ட்ரெஸ் பண்ண வேணாம்" என்று சொல்ல அவள் தாய் தந்தையுடன் கரிகாலனும் உள்ளே நுழைந்தான்.

அவன் கண்களோ அவளை எரித்து விடுவது போல நோக்க, குற்ற உணர்வில் அவனை ஏறிட்டு பார்த்தவளால் அவன் பார்வை வீச்சை தாங்கவே முடியவில்லை. அவள் தந்தையோ "ஏன்மா இப்படி பண்ணுன? எங்களை பத்தி கொஞ்சம் யோசிச்சியா?" என்று அழ ஆரம்பிக்க அவள் தாயும் அவளை அணைத்துக் கொள்ள, அவளும் "என்னால முடியலம்மா, ரொம்ப வலிக்குது என்ன பேச்சு பேசுனாங்க தெரியுமா?" என்று கேட்க கரிகாலனின் பொறுமை காற்றில் பறந்து போனது. "எந்த பொறுக்கி என்ன பேசினாலும் நீ சாக போவியா? உனக்கு பேசுனத்துக்கு அவனுங்க தான்டி சாகனும்? லூசா நீ?" என்று ஆக்ரோஷமாக திட்ட அந்த உரிமையான அதட்டல் அவளுக்கும் புதிது. பெருமூச்செடுத்து அவள் அருகே வந்தவன் தன்னையே அதிர்ந்து பார்த்தவளிடம் "சாரி. கோபத்தில் திட்டிட்டேன். உன் கிட்ட நான் தனியா பேசணும்" என்று சொன்னவன் ஒரு கணம் நிறுத்தி "இல்ல உன் அம்மா அப்பா முன்னாடியே கேட்கிறேன் .. என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?" என்று அவள் கண்களை பார்த்து வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக கேட்டான். அவள் தாய் தந்தையோ அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க அவளுக்கு அதற்கு மேல் அதிர்ச்சி. உடனே அவள் "அதெப்படி?" என்று ஆரம்பிக்க அவனோ "ஏன் ரெண்டாம் தாரம்னு நினைக்கிறியா? " என்று கேட்க அவளோ ". இல்ல இல்ல..அதெல்லாம் பிரச்சனை இல்ல. நான் தான் உங்களுக்கு பொருத்தம் இல்ல" என்று சொன்னாள் . அவனோ "அன்னைக்கு நீ தானே கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்ட?" என்று கேட்க அவளோ "அது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு கேட்டுட்டேன்" என்றாள் . அவனோ "நான் இப்போ நிதானமா தான் கேட்கிறேன்.. என்னை பிடிக்கல என்ற காரணத்தை தவிர எந்த காரணமும் நான் ஏத்துகிறதா இல்ல,, நான் ஒன்னும் உன் கூட குடும்பம் நடத்த கேட்கலம்மா, எனக்கும் உன் உணர்வுகள் புரியும்.. இப்போ இருக்கிற நிலைக்கு மாதவியை எவன் வேணும்னாலும் தப்பா பேசலாம். ஆனா கரிகாலன் பொண்டாட்டிய பேச யாருக்குமே தைரியம் வராது " என்று சொன்னவன் மேலும் "நீ இல்லன்னு சொன்னா, என்னை பிடிக்கலன்னு நான் எடுத்துக்கிட்டு அந்த எண்ணத்தை விட்டிடுவேன்.. " என்று சொல்ல தவித்து போனது அவள் தான். அவளோ ஏறிட்டு அவள் தாய் தந்தையை பார்க்க அவர்களோ "தம்பி இது சரி வருமா?" என்று தயங்கினார்கள் . கரிகாலன் போல ஒருவனை மகள் திருமணம் செய்வது அவர்களுக்கு கசக்குமா என்ன? ரெண்டாம் தாரம் எல்லாம் அவள் இருக்கும் நிலைக்கு அவர்களுக்கு பொருட்டாக இருக்கவில்லை என்றாலும் இந்த கல்யாணத்தினால் மதுபாலா மூலம் பல சிக்கல்கள் உண்டாகும் என்று அவர்களுக்கும் தெரியும்.. அவனோ "உங்க பொண்ணு சம்மதிச்சா உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்க அவர்களும் சம்மதம் என்று தான் தலையாட்டினார்கள்..

அடுத்து மாதவியை பார்த்தவன் "இப்போ சொல்லு கல்யாணம் பண்ணிக்க சம்மதமா இல்லையா? யெஸ் ஓர் நோ இத தவிர எந்த விளக்கமும் வேணாம்.. " என்று ஆணித்தரமாக சொல்ல, அவனை ஏறிட்டு அவன் கண்களை பார்த்தவள் "சம்மதம்" என்று சொல்ல, அவன் இதழ்களோ மெலிதாக புன்னகைத்துக் கொண்டது.

அடுத்த கணமே " சீக்கிரமே கல்யாணம்.. என் குடும்பம் உன் குடும்பம் மட்டும் இருந்தா போதும். " என்று சொன்னவன் அவள் தாய் தந்தையிடம் "கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன்" என்று சொன்னபடி வெளியேறினான்.

அதே சமயம் " அவ தப்பிச்சிட்டா" என்ற செய்தி மதுபாலாவை அடைய "ஷீட்" என்று சொன்னவளிடம் "என்ன பண்ணலாம் இப்போ? , தனாவை எத்தனை நாளுக்கு தான் பதுங்கி இருக்க சொல்றது? உன் பிளான் இப்படி சொதப்பிடுச்சே" என்று மினிஸ்டர் விருத்தாச்சலம் ஆதங்கத்தை கொட்டிக் கொண்டு இருந்தார்.. ஆம் மாதவியை கற்பழித்தது வேறு யாரும் அல்ல மினிஸ்டரின் ஒரே தவ புதல்வன் தனஞ்சயனும் அவன் நண்பர்களும் தான். ட்ரைவர் உண்மையை சொன்னதுமே விடயம் கேள்விப்பட்டு அவர்கள் பதுங்கி கொள்ள, செய்தியும் மீடியா மூலம் பரவ ஆரம்பிக்க இந்நேரத்தில் நேரடியாக மாதவி மேல் கை வைத்தால் பிரச்சனை என்று தான் மதுபாலா அவளை பேசியே தற்கொலைக்கு தூண்ட தன் அடியாட்கள் மூலம் முயற்சித்தாள். ஆனால் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிய, அனைத்தும் அறிந்த கரிகாலனோ " என்னை தாண்டி அவ மேல இனி முடிஞ்சா கை வச்சு பாருங்கடா" என்று முணு முணுத்தவன் கோபம் விருத்தாச்சலம் கும்பல் மேல் எல்லை கடந்து பரவி இருந்தது.


அவன் இப்போது அடிக்க போவது பெரிய புள்ளியை அல்லவா? அதில் எப்போது வேண்டுமானாலும் மாதவி உயிருக்கு ஆபத்து உருவாகலாம் என்று நினைத்தவன் தான் இந்த முடிவை எடுத்து இருந்தான். யாராக இருந்தாலும் இந்த முடிவு தானா என்று கேட்டால் அவன் பதில் நிச்சயமாக இல்லை என்று தான்... மாதவி உயிருக்கு ஆபத்து என்றதுமே அவனுக்கு உண்டான உணர்வலைகளே அவனை இந்த முடிவு எடுக்க வைத்தது. அது கண்டிப்பாக காதல் எல்லாம் இல்லை, அதற்கு பேர் என்னவென்று அவனுக்கும் தெரியவில்லை . ஆனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வும், பல பிரச்சனைகளை எதிர் கொள்ளவும் இந்த திருமணம் முக்கியமாக பட, அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தது மட்டும் இன்றி அடுத்த நாள் மாலையே யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து அவள் கழுத்தில் மங்கள நாணை அணிவித்து அவளை தன்னுடன் அழைத்து வந்து இருந்தான். அவன் தாலி கட்டும் போது வாய் விட்டே அவள் ஆழ, அதை பரிதாபமாக பார்த்தவன் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
Fantastic great i am speechless
No words.just hats off 👏
 
Top