Mahalakshmisharvesh
New member
Why டா 



So sad for karunaஅத்தியாயம் 7
நாட்கள் நகர்ந்தன.
ஜீவனியினுடனான திருமணத்தை ஜனார்த்தனன் நிறுத்தியதால், அடுத்த பெண்ணுடன் வந்து நின்றார் தரகர்...
"டீச்சர் ஆஹ் இருக்கு இந்த பொண்ணு, நல்ல குடும்பம்" என்று சொன்ன தரகரை பார்த்த கோதாவரியோ, "அவன்ட்ட முதல் நான் கதைக்கிறேன்" என்றார்.
அது போலவே அன்று இரவு சாப்பிட வந்து அமர்ந்த ஜனார்த்தனனிடம், "இண்டைக்கு தரகர் வந்துட்டு போனார்" என்றார் கோதாவரி.
"என்னவாம்" என்றான் சாப்பிட்டுக் கொண்டே...
"டீச்சர்" என்று ஆரம்பிக்க, "டீச்சர் வேணாம்" என்றான்.
"என்ன சொல்லவாச்சும் விடேன்" என்றார்.
"அதான் வேணாம் எண்டு சொல்றன் எல்லா" என்றான்.
"இப்படியே எல்லாத்துக்கும் குறை சொன்னா என்ன அர்த்தம்?" என்று இளஞ்செழியன் கேட்க, "உனக்கு கல்யாணம் காட்டோணும் எண்டா கட்டு" என்றான் அவன்.
அவனுடன் பேசி பயன் இல்லை என்று தெரிய, "நீங்களாச்சு உங்கட மகனாச்சு" என்று சொல்லி விட்டு அவன் எழுந்து சென்று விட்டான்.
கோதாவரி அங்கே அமர்ந்து இருந்த கனகசிங்கத்தை பார்க்க, அவரோ நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை என்கின்ற ரீதியில் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்து விட்டார்...
உடனே கோதாவரி, "உன்ட மனசுல யாரும் பொம்பிளை இருக்கா?" என்று கேட்க, "சொன்னா போல கட்ட சம்மதம் சொல்லிருவீங்களா?" என்று கேட்டான்.
உடனே கனகசிங்கம், "நானும் உன்ட அம்மாவும் லவ் மேரேஜ் தான். வேணாம் எண்டு எல்லாம் சொல்ல மாட்டோம், யாரும் இருந்தா சொல்லு" என்று சொல்ல, அவனோ இருவரையும் பார்த்துக் கொண்டே, "நேரம் வாற நேரம் நானே சொல்றேன், இல்ல எண்டு சொல்லாம கட்டி தரோணும், அந்த பிள்ளையை தவிர நான் எந்த பிள்ளையையும் கட்ட மாட்டேன்." என்று அழுத்தமா சொல்லி விட்டு சாப்பிட்டான்...
அவன் சொன்ன தோரணை விளையாடுவது போல தெரியவில்லை...
ஆனால் அவனுக்கும் காதலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதே.
அவன் சாப்பிட்டு விட்டு சென்றதுமே, "இவன் லவ் பண்ணுறானா என்ன? இவனை எந்த பிள்ளை டி லவ் பண்ணுது?" என்று கனகசிங்கம் கேட்க, "அந்த பிள்ளை பூமாதேவியா தான் இருக்கோணும்" என்று சொன்னார் கோதாவரி.
இந்த விஷயம் இளஞ்செழியனுக்கு வந்து சேர, அவன் அன்று இரவு திவ்யா பேசும் போது, "ஒரு உலக அதிசயம் நடந்து இருக்கு தெரியுமா?" என்று கேட்டான்.
"என்ன விஷயம்?" என்று அவள் கேட்க, "ஜனா லவ் பண்ணுறானாம்" என்றான்.
"என்னது? உண்மையாவா? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே" என்று சொல்ல, "அவன் தான் டி சொன்னான்" என்றான்.
"ஜனா அத்தானுக்கு லவ்வா? கேட்கும் போதே மயக்கம் வருது" என்றாள் அவள்...
"ம்ம், எனக்கும் அப்படி தான் இருக்கு, அவன்ட கல்யாணம் நடந்தா தான் நம்மட கல்யாணம் நடக்கும், யார் பொம்பிளை எண்டு கூட தெரியல, உன்ட அண்ணாட்ட கேட்டு பாரு, யார் எண்டு அவனுக்கு தெரிஞ்சு இருக்கும்" என்றான் இளஞ்செழியன்...
"சரி இந்த விஷயத்தை அவர்ட காதுல போட்டு விடுறேன்" என்று சொன்னவளும், விஷயத்தை பவித்ரனின் காதில் போட்டாள்.
"லவ்வா அவனுக்கா?" என்று கேட்ட பவித்ரனோ, "வாய்ப்பே இல்லடி" என்றான்...
"ஐயோ அவர் தான் சொல்லி இருக்கார், அந்த பிள்ளையை தவிர எந்த பிள்ளையையும் கட்ட மாட்டேன் எண்டு வேற சொல்லி இருக்கார்" என்றாள்.
"இது உலக அதிசயமா இருக்கே, இப்படி எல்லாம் அவன் கதைக்க மாட்டானே, சரி இண்டைக்கு கேட்டு பார்க்கிறேன்" என்று சொல்ல, "நான் சொன்னன் எண்டு சொல்லதீங்க, பிறகு செழியனை திண்டு கை கழுவிடுவார்" என்றாள் அவள்...
"உன்ட ஆளை காப்பாத்துற வேலையை மட்டும் நல்லா பாரு" என்று அவனும் கிண்டலாக சொல்லி இருந்தான்.
அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருக்க, பவித்ரனும் ஜனார்த்தனனும் ஒன்றாக கல்லடி கடற்கரைக்கு தான் வழக்கம் போல சென்றார்கள்...
அங்கே மரத்தை சுற்றி கட்டப்பட்டு இருந்த சீமெந்துக் கட்டில் தான் இருவரும் அமர்ந்து இருக்க, பவித்ரனோ, "என்னடா லவ் எண்டு எல்லாம் கேள்விப்பட்டேன் சொல்லவே இல்ல" என்று ஆரம்பித்தான்.
"உன்ட தங்கச்சி சொல்லிட்டாளா என்ன?" என்று ஜனார்த்தனன் கேட்க, "அத விடு, நான் கேக்கிறதுக்கு விடை சொல்லு" என்றான்.
"லவ்வா இல்லையா எண்டு தெரியாம சுத்திட்டு இருந்தேன், இப்போ கொஞ்ச நாளா லவ் எண்டு மனசு சொல்லிட்டே இருக்கு, கல்யாணம் கட்டலாம் எண்டு யோசிக்கிறேன்" என்றான்.
"டேய் யார் டா அது? ஒரு எக்ஸைட்மென்ட் ஆஹ் இருக்கு" என்று சொல்ல, "உனக்கு தெரியாம என்ட கல்யாணம் நடக்காது மச்சி, நேரம் வாற நேரம் சொல்றேன்" என்றான்...
"இப்படியே சஸ்பென்ஸ் வச்சு, எனக்கு மயக்கம் தான் வர போகுது" என்று சொல்ல, சிரித்துக் கொண்டே, அவன் தோளில் கையை போட்டான் ஜனார்த்தனன்.
இதே சமயம், அன்று அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு வந்த புருஷோத்தமனிடம் பேசிக் கொண்டு இருந்தார் கருணா...
அன்று போயா (பௌர்ணமி ) விடுமுறை என்பதால் நாராயணியும் வீட்டில் தான் இருந்தாள்.
"நாராயணிக்கு நல்ல மாப்பிள்ளை ஒண்டு பார்க்கணும்" என்றார்.
"என்ன விளையாடுறியா? அவள் படிச்சு முடிக்க ஒரு வருஷம் இருக்கு எல்லா" என்றார் புருஷோத்தமன்.
"எனக்கு ஏதும் நடக்கும் எண்டு பயமா இருக்கு" என்றார்.
"உனக்கு ஒண்டும் நடக்காது, அவளுக்கு நல்ல விதமா நான் கல்யாணம் கட்டி வைப்பேன்" என்றார்.
"அதுக்கு உங்கட பொஞ்சாதி விடுவாளா? நான் இல்ல எண்டா அவளை யார் பார்த்துக் கொள்ளுவா? அந்த நாசமா போனவன் வேற வைப்பாட்டியா வர சொல்லி கேட்டுட்டு இருந்தான், அத நினைக்க நினைக்க அவ்வளவு ஆத்திரம் வருது" என்று ஆரம்பிக்க, "அம்மா அத இன்னும் நீங்க மறக்கலையா?" என்று கடுப்பாகி கேட்டாள் நாராயணி.
"எப்படி டி மறக்கிறது? அப்பனும் மகனும் ஒரே மாதிரி... அப்பன் உன்னை கொல்லுவேன் எண்டு மிரட்டிட்டு போனான், மகன் என்ன கதை கதைச்சு இருக்கான், அதுக்கு ஒருத்தரும் ஒண்டும் செய்யல தானே... அப்படியே விட்டுட்டீங்க என?" என்று புருஷோத்தமனிடம் எகிற, "அவன்ட நான் கதைச்சேன், அவன் திமிர் பிடிச்சவன், நான் சொல்றத எல்லாம் கேட்க மாட்டான்" என்று சொன்னார்.
"இப்படியே விட்டு விட்டு தான் அவன் கண்ட மாதிரி கதைச்சிட்டு திரியிறான்" என்று ஆரம்பிக்க, "அம்மா, அத மறந்துட்டு சும்மா இருங்க, யார் என்ன கதைச்சா என்ன? நான் படிச்சு வேலைக்கு போய் நல்லா இருப்பேன், அவன் சொன்னது எல்லாம் நடந்திடுமா என்ன?" என்று சீறினாள்.
"என்ன சொன்னாலும் என்ட மனசு ஆறல" என்றார் அவர்...
புருஷோத்தமனும், "அவன் இப்போ ஏதும் தொல்லை பண்ணுறானா?" என்று நாராயணியிடம் கேட்க, "இல்ல" என்றாள்.
அதனை தொடர்ந்து அவர் கிளம்பி விட்டார்...
கருணாவும் அதனை பேசி விட்டு, மறந்து விட்டார்...
அதனை நினைத்து கொண்டு எல்லாம் இருக்கவில்லை...
அன்று இரவு, அவர் மடியில் தான் தலையை வைத்து படுத்து இருந்தாள் நாராயணி...
நிறைய நாள் கேட்க வேண்டும் என்று நினைத்ததை இன்று கேட்டாள்.
"அம்மா ஏன் நீங்க அப்பாவை நம்புனீங்க?" என்று முதல் கேள்வி...
அவள் தலையை வருடிக் கொண்டே...
"எனக்கு அப்ப பத்தொன்பது வயசு தான் பிள்ளை, வயல் வேலை செஞ்சுட்டு இருந்தேன்... உங்கட அப்பா தான் அசிஸ்டன்ட் எஞ்சினியர் என்று வருவார், என்ட அம்மாவும் அப்ப தான் செத்து போனாங்க, நிறைய கடன், கடன் கொடுத்தவன் எல்லாம் வாசல்ல வந்து சண்டை போட்டான். உன்ட அப்பா தான் எல்லாருக்கும் காசு கொடுத்தார், எனக்கு எண்டு யாரும் இருக்கல, அதனால இவரை நம்பிட்டேன்... நீயும் உருவாக்கிட்ட, பிறகு தான் அவருக்கு இன்னொரு குடும்பம் இருக்கு என்டே தெரிஞ்சது... எனக்கு எண்டு நியாயம் கேட்க யாரும் இல்லை... கைல காசும் இல்லை, படிச்சு இருந்தாலாச்சும் வேலைக்கு போயிருக்கலாம், படிப்பும் இல்லை, உன்ட அப்பாவே நாதி எண்டு இப்போ வரைக்கும் இருக்கிறன்" என்றார்.
அவளுக்கு மனம் கஷ்டமாகி போனது...
அவரும் என்ன செய்வார்? பெரிதாக அவருக்கும் படிப்பு அறிவு இருக்கவில்லை...
நன்றாக ஏமாந்து இருக்கின்றார் என்று தெரிய, வலுக்கட்டயமாக சிரித்தவளோ, "உங்களுக்கு என்ன எல்லாம் ஆசை?" என்று கேட்டாள்.
"பெரிய ஆசை எல்லாம் இல்லை, உன்னை ஒரு நல்லவன்ட கைல பிடிச்சு கொடுக்கணும்" என்று சொல்ல, "என்ட விஷயத்தை தவிர என்ன ஆசை?" என்று கேட்டாள்.
"பெரிசா ஒண்டும் இல்ல புள்ள" என்றார்.
"ஏதாவது ஒண்டு சொல்லுங்க அம்மா" என்று கேட்டாள்.
"ஆஹ், ஏரோபிளேன் ல போகணும் எண்டு ஆசை... உங்கட அப்பா அவர்ட பொஞ்சாதி பிள்ளை எல்லாம் கூட்டிட்டு சிங்கப்பூர் போனார், எனக்கு உன்னை கூட்டி போகல எண்டு கவலை..." என்று சொல்ல, அவளோ, "அவர் கூட்டி போகல எண்டா என்ன? நான் உங்கள கூட்டி போறேன்... நான் படிச்சு முடிச்சு வேலை எடுத்து நாடு நாடா ரெண்டு பேரும் சுத்துறோம்" என்று சொல்ல, அவரும் சிரித்துக் கொண்டே அவள் தலையை வருடியவர், "நீ மட்டும் வேற யாருடைய வாயிலத்துல பிறந்து இருந்தா ராணி மாதிரி இருந்து இருப்பா எல்லா" என்றார்.
"அம்மா, எதுக்கு இப்படி எல்லாம் கதைக்கிறீங்க? விட்டா தேவை இல்லாம கதைச்சிட்டே இருப்பீங்க, வாங்க நித்திரை கொள்ளலாம்" என்று சொன்னபடி அவரை அணைத்துக் கொண்டே தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலையில் இருந்தே, கருணாவுக்கு கழுத்து முதுகு என்று வலிக்க ஆரம்பித்து விட்டது...
சரியாகி விடும் என்கின்ற நம்பிக்கையில் அவர் அதனை நாராயணியிடம் சொல்லவில்லை...
அவளும் கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.
அன்று கல்லூரி முடிய, அவள் வீட்டுக்கு வந்த நேரம் அது...
ஆறு மணியை கடந்த போதிலும் மின் விளக்கு போடவில்லை...
இருளாக இருந்தது...
"என்னம்மா லைட் போடாம இருக்கீங்க? கரண்ட் இருக்கு தானே" என்று சொல்லிக் கொண்டே, மின் விளக்கை போட்டாள்.
முன்னறைக்குள் யாரும் இல்லை...
"அம்மா" என்று அழைத்தாள்.
சத்தமே இல்லை...
சுற்றும் முற்றும் தேடினாள்.
அறைக்குள் நிலத்தில் படுத்து இருந்தார் கருணா...
"ஆறு மணிக்கு நித்திரை கொள்ளுறீங்க? உடம்பு சரி இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே, அவர் அருகே வந்தாள்.
உசுப்பினாள்.
அசைவே இல்லை...
நெஞ்சு படபடத்தது...
அவளுக்கென்று உரிமையாக இருக்கும் ஒரே ஜீவன்...
மீண்டும் அசைத்துப் பார்த்தாள்.
அசையவில்லை...
"அம்மா" என்று அவள் குரல் கம்மியது...
இப்போது அவர் மூச்சு காற்றை அவதானித்தாள்.
உடல் அசையவில்லை...
காதை நெஞ்சில் வைத்து கேட்டாள்.
இதயம் துடிப்பை நிறுத்தி இருந்தது...
"அம்மா" என்று அவள் வாய் விட்டு அலறிய சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் ஓடி வந்தார்கள்...
அவள் யாரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாளோ, அந்த ஜீவன் அவளை விட்டு சென்று இருந்தது.
சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்தவளோ இடிந்து போய் கருணாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இனி அவளுக்கென்று யார் இருக்கின்றார்கள்? தந்தை மேல் வெறுப்பு கொட்டி கிடக்கின்றது...
அவருடன் செல்வதை எல்லாம் அவள் கனவில் கூட நினைத்தது இல்லை...
அவள் படித்தும் முடிக்கவில்லை...
அவளுக்கென்று பொட்டு தங்கம் கூட இல்லை...
காதில் கூட இமிடேஷன் தோடு தான் போட்டு இருக்கின்றாள்.
இந்த வீடும் வாடகைக்கு தான் இருக்கின்றார்கள்...
இனி தனியாக இந்த வீட்டில் இருப்பதா? நெஞ்சே வலிக்கும் உணர்வு...
அழுது அழுது குரலும் போய் விட்டது...
கண்களில் கண்ணீரும் வற்றி விட்டது...
பேயறைந்த போலவே அப்படியே இருந்தாள்.
விஷயம் கேள்விப்பட்டு அடித்து பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்து இருந்தார் புருஷோத்தமன்...
இரவு நேரம் அது...
முன்னறையில் வைக்கப்பட்டு இருந்த கருணாவின் தலைமாட்டில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டே கதற ஆரம்பித்து விட்டார்...
நிர்மலாவுக்கு விஷயம் தெரியும்...
கணவன் தனியாக வண்டி ஓட்டி சென்றது அவருக்கு கொஞ்சம் நெருடலாக இருக்க, அவர் அழைத்தது என்னவோ பவித்ரனுக்கு தான்...
அவனும் அலைபேசியை எடுத்து காதில் வைக்க, "கருணா செத்து போய்ட்டான்னு நியூஸ் வந்திச்சு... உங்கட அப்பா போயிருக்கார், இந்த இரவுல தனியா வேற போயிருக்கார், கொஞ்சம் போய் பார்த்துட்டு வா" என்று சொன்னார்.
என்ன தான் கணவன் மேல் கோபம் இருந்தாலும் அவர் மீது அக்கறையும் சேர்ந்து இருந்தது...
அவன் ஜனார்த்தனனுடன் தான் நின்று இருக்க, "ஜனா, நாராயணிட அம்மா செத்துடாவாம்" என்றான்.
"என்னடா சொல்ற?" என்று அவன் அதிர, "அப்பா தனியா அங்க போயிருக்கார், பார்த்துட்டு வரலாம் வா" என்று சொல்லி அவனுடன் தான் கிளம்பி இருந்தான்.
ஜனார்த்தனனுக்கு ஒரு மாதிரி இருந்தது...
அவளுடனான காதலையே அவன் சமீபத்தில் தான் உணர்ந்தான்... அதனை அவளிடம் கூட சொல்லவில்லை. அவள் படித்து முடிய பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருந்தான்.
யாரின் மகளாக இருந்தாலும் தனக்கு பிடித்த பெண் என்று உறுதியாக மனதை மாற்றி இருந்தான்...
அவனே அவனுக்குள் ஆயிரம் மாற்றங்களை செய்து இருந்த தருணம் இது.
அவளுக்கு இப்படி ஒரு நிலை என்பதை ஜீரணிக்கே முடியவில்லை...
தவிப்பாளே, அழுவாளே என்று நினைக்கும் போது மனமெல்லாம் என்னவோ செய்தது...
ஒரு வழியாக நாராயணியின் வீட்டையும் அடைந்து விட்டார்கள்...
அங்கே வாசலில் ஆட்கள் நின்று இருக்க, பவித்ரனும், ஜனார்த்தனனும் உள்ளே சென்றார்கள்...
புருஷோத்தமனுக்கு ஜனார்த்தனனை பார்த்ததுமே ஆத்திரம்...
அவனை பற்றி தானே கருணா முதல் நாள் பேசிக் கொண்டு இருந்தார்...
அவனால் தான் கருணாவுக்கு இப்படி ஆகி விட்டதோ என்கின்ற ஆதங்கம்...
நிஜம் அது இல்லை என்றாலும் அவர் கற்பனை அப்படி தான் சென்றது...
உள்ளே வந்த ஜனார்த்தனன் முன்னே வந்து நின்றவர், "இப்போ சந்தோஷமா?" என்று ஆக்ரோஷமாக கேட்டார்...
அவன் திணறி விட்டான்...
பவித்ரனோ, "அப்பா" என்று அழைக்க, "நேத்து இவனை பத்தி தான் பேசிட்டு இருந்தா, அவ சாவுக்கு இவன் தான் காரணம்..." என்று பவித்ரனிடம் சொல்லி விட்டு ஜனார்த்தனனைப் பார்த்தவர், "உன்னால தான் டா அவ யோசிச்சு யோசிச்சே செத்து போனா.. இப்போ அந்த பிள்ளைக்கு யார் வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறது... வயசு பிள்ளை தனியா நிக்கிறா... நான் அவளை வீட்டிற்கு கொண்டு போக உன்ட அத்தை விடுவாளா என்ன?? என்னட்ட கூட அவள் சரியா கதைக்கிறது இல்லை... அவளுக்கு எண்டு இருந்தது அவள்ட அம்மா மட்டும் தான்... . இப்படி கொண்டு போட்டியே" என்று ஆத்திரம் தீர திட்டினார்.
அவன் எதுவும் பேசவில்லை...
அவன் விழிகள் அங்கே அழுது கொண்டிருந்த நாராயணியில் படிந்தது...
அவளுக்கு இதெல்லாம் கிரகிக்கும் நிலை இல்லை...
தாயின் தலைமாட்டில் அமர்ந்து கதறிக் கொண்டு இருந்தாள்.
அவனுக்கு அவர் போட்ட பழி மனதை அழுத்த ஆரம்பித்து விட்டது...
இந்த சாவுக்கு அவனா காரணம்?
ஒரு மாதிரி மூச்செடுக்க முடியவில்லை...
பவித்ரனோ, "அப்பா, எல்லாரும் பாக்கிறாங்க," என்று சொல்ல, "பார்க்கட்டுமே, இவன்ட சீத்துவம் தெரியட்டுமே, இப்போ அந்த பிள்ளையை நான் என்ன செய்யுறது? அவள் இந்த வீட்ல எப்படி தனியா இருக்கிறது? எனக்கு அவளை நினச்சு தான் நெஞ்சு அடைச்சு போகுது... அவளை அனாதை ஆக்கிட்டியே" என்று ஜனார்த்தனனிடம் சொல்ல, அவரை வெறித்து பார்த்தவன், "அவ ஒண்டும் அனாதை இல்லை, நான் பார்த்துக் கொள்ளுறேன்" என்று சொன்னான்.
அழுத்தி சொன்னான்...
"எத்தனை காலத்துக்கு பார்த்துக் கொள்ளுவ? சொல்லுடா எத்தனை காலத்துக்கு பார்த்துக் கொள்ளுவ?" என்று அவர் சீற, "வாழ்க்கை முழுக்க பார்த்துக் கொள்ளுறேன் போதுமா? என்ட பொண்டாட்டியா வச்சு சாகும் வரைக்கும் பார்த்துக் கொள்ளுறேன் போதுமா?" என்று அந்த இடமே அதிரும் வண்ணம் சீறினான்...
அவன் குரல் எந்தளவு கர்ஜனையாக இருந்தது என்றால், அழுது கொண்டு இருந்த நாராயணி, அவனை ஏறிட்டு அதிர்ந்து வெறித்துப் பார்க்கும் அளவுக்கு அவன் வார்த்தைகள் அழுத்தமாக மட்டும் அல்ல, உறுதியாகவும் இருந்தன.
இப்போது அவன் விழிகளும் அவளில் தான் படிந்தன.
அவனது பரிதாபம் கலந்த விழிகளும், அவளது அதிர்ச்சி கலந்த விழிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து கொண்டன...