ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 19

அத்தியாயம் 19

இதே சமயம் வீட்டுக்கு வந்த ஜெயானந்தன், மகாலக்ஷ்மி மற்றும் நேத்ரா என மூவரும் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை...

எப்படி அவள் வீரராகவனுக்கு மனைவியாக இருக்கின்றாள் என்று அவர்களுக்கு புரியவும் இல்லை...

அவளை தலை முழுகி விட்ட பிறகு அவளை பற்றி அவர்கள் விசாரித்தது இல்லை... அப்படி ஒரு வெறுப்பில் இருந்தார்கள்...

என்ன தான் இருந்தாலும் தாய் மனம் இளகியது அல்லவா? மகாலக்ஷ்மி உள்ளுக்குள் மகளை நினைத்து வெதும்பியவர், நேத்ராவின் அறைக்குள் சென்று, கதவை தாழிட்டு விட்டு, "அக்ஷயா வாழ்க்கைல என்ன ஆகி இருக்கும்டி?" என்று சோர்வாக கேட்டுக் கொண்டே அவள் அருகே அமர, அவளோ, "எனக்கும் தெரியலம்மா, ரொம்ப ஷாக் ஆஹ் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அருகே இருந்த தொலைபேசியை எடுத்தவள், "என்னோட ஆஃபீஸ் ப்ரென்ட் கிட்ட கேட்டு பார்க்கட்டுமா?" என்று கேட்டாள்.

"என்ன கேட்க போற?" என்று மகாலக்ஷ்மி கேட்க, அவளோ, "நான் எப்போவுமே ஊர் விஷயம் பேசுனது இல்லை... ஆனா ஆபீஸ்ல என் பிரென்ட் எல்லாம் ஊர் விஷயம் அப்படி பேசுவா... கண்டிப்பா வீரராகவன் சார் வாழ்க்கை பத்தி தெரிஞ்சு இருக்கும்... அவர் வாழ்க்கைல என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டோம்னா அக்ஷயா வாழ்க்கைல என்ன ஆச்சுன்னு ஆட்டோமேட்டிக் ஆஹ் தெரிஞ்சிடும்" என்றாள்.

"அப்போ கேட்டு பாருடி... அவளை பார்த்ததுல இருந்து மனசே சரி இல்லை... அவ என்ன பார்த்த பார்வை என்னவோ செய்யுது" என்று சொல்ல, நேத்ராவும் பெருமூச்சுடன் அவள் நண்பிக்கு அழைத்தாள்...

நேரடியாக கேட்பது சற்று சங்கடமாக தான் இருந்தது... வேறு வழி இல்லை, கேட்டு தான் ஆக வேண்டும்...

அவள் நண்பி ஜனனியும், "ஹெலோ, சொல்லு நேத்ரா" என்று சொல்ல, "நான் ஒரு விஷயம் கேட்கணும்" என்று தயக்கமாக சொன்னாள் நேத்ரா...

"கேளுடி" என்றாள் அவள்...

குரலை செருமிய நேத்ராவோ, "நம்ம பாஸ் வீரராகவன் சார் இருக்கார் தானே" என்று ஆரம்பிக்க, "ஆமா அவருக்கு என்ன?" என்றாள் அவள்...

"அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு என" என்று போட்டு வாங்க இவள் முயல, ஜனனியோ, "அந்த விஷயம் உனக்கு தெரியாதா? அது செம இன்டெரெஸ்ட்டிங் மேட்டர் ஆச்சே... அவர் முதல் மனைவி டைவர்ஸ்... அதுக்கப்புறம் சிங்கிள் ஆஹ் தான் இருந்தார்... இப்போ கல்யாணம் பண்ணி இருக்கிற பொண்ணு அவர் ஆஃபீஸ்ல தான் டைப்பிஸ்ட் ஆஹ் இருக்கா... அந்த பொண்ணும் டைவர்ஸ் எடுத்துட்டா, கோர்ட்ல இது பெரிய சீன் ஆச்சு தெரியுமா" என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சொல்ல, "க்ளியர் ஆஹ் சொல்லுடி, ஒண்ணுமே புரியல" என்றாள் நேத்ரா...

ஜனனியோ, "அவர் இப்போ கல்யாணம் பண்ணுன பொண்ணு இருக்காங்களே" என்று ஆரம்பித்து விஷயத்தை சொல்லி முடிக்க, அதனை கேட்டுக் கொண்டு இருந்த நேத்ராவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...

எத்தனை கஷ்டங்களை அவள் தாண்டி இருக்கின்றாள் என்று நினைக்கும் போது மனம் என்னவோ செய்தது...

என்ன இருந்தாலும் கூட பிறந்த ரத்தம் அல்லவா?

சொல்லி முடித்த ஜனனியோ, "அது சரி, இத எதுக்கு இன்னைக்கு கேட்ட?" என்று கேட்க, "அது சும்மா தான்... அவரை ஃபேமிலியா கடை ல பார்த்தேன்" என்றாள் நேத்ரா...

ஜனனியோ, "ஓகே" என்று சொல்ல, நேத்ராவும், "சரி டி, நாளைக்கு பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தவள் அருகே அமர்ந்து இருந்த மகாலக்ஷ்மியை பார்த்து, "அக்கா தடம் மாறலம்மா" என்றாள்.

"என்னடி ஆச்சு?" என்றார் அவர் பதட்டமாக...

நடந்து முடிந்ததை சொல்லி முடித்தாள் நேத்ரா...

மகாலக்ஷ்மிக்கோ மகளின் வாழ்க்கையை நினைத்து கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, புடவை முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டவரோ, "அவன் நல்லா இருப்பானா? நாசமா போவான்... என் பொண்ண எவ்ளோ பாடு படுத்தி இருக்கான்... சொல்ல சொல்ல அவ கேட்டா தானே... இந்த வாழ்க்கையாவது அவளுக்கு நல்ல விதமா அமையணும்" என்று சொன்னவருக்கு ஆற்றாமை தாங்கவே முடியவில்லை...

அவளுக்கு கஷ்டம் வந்த நேரத்தில் கூட அருகே இருக்க முடியவில்லை என்று ஒரு வலி, நெஞ்சின் ஓரத்தில் இருக்க தான் செய்தது...

ஒரு வித மனஉளைச்சலுடன் தான் எழுந்து அவர் வெளியேற அவரை பெருமூச்சுடன் பார்த்த நேத்ராவுக்கு, இன்று நேரில் பார்த்ததில் இருந்தே அக்ஷயாவுடன் பேச ஆசையாக இருந்தது...

ஆனால் எப்படி பேசுவது என்று தெரியவே இல்லை...

இதே சமயம் அன்று இரவு கட்டிலில் யோசித்தபடி மகாலக்ஷ்மி இருக்க, ஜெயானந்தனும் தூங்குவதற்காக வந்து கட்டிலில் அமர்ந்தவர், "இன்னைக்கு முழுக்க எத பத்தி யோசிச்சிட்டு இருக்கன்னு தெரியும்... அவளை தான் நாம தலை முழுகிட்டோமே, அவ எக்கேடு கேட்டா என்ன? சட்டையை மாத்திக்கிற போல புருஷன மாத்திக்கிறா" என்றார்...

"அவளை தப்பா பேசாதீங்க" என்றார் அவர் சட்டென...

"அப்போ அவ பண்ணுனதுக்கு ஆரத்தி எடுத்து பாராட்ட சொல்றியா?" என்று ஜெயானந்தன் ஆதங்கமாக கேட்க, "வெளியில இருந்து பார்க்கிறவங்க அடுத்தவங்க வாழ்க்கையை இலகுவா விமர்சனம் பண்ணுறோம்... ஆனா அவங்க எவ்ளோ கஷ்டப்பட்டு ஒவ்வொரு முடிவும் எடுக்கிறாங்கன்னு நமக்கு தெரியுறது இல்ல" என்றார்.

"அப்படி என்ன கஷ்டபட்டுட்டா?" என்று அவர் இளக்காரமாக கேட்டுக் கொண்டே படுக்க, மகாலக்ஷ்மியோ, அக்ஷயாவின் கதையை சொல்லி முடித்தவர், "என் பொண்ணு எவ்ளோ அவமானப்பட்டு இருக்கா" என்று சொல்லும் போது கண்ணீர் அவரிடம் இருந்து தாரை தாரையாக வடிந்தது...

ஜெயானந்தானோ, "அவளை யாரு கண்டவன் கூட ஓட சொன்னது" என்று கேட்டுக் கொண்டே கண்களை மூடினாலும் அவருக்கு தூக்கம் வரவில்லை...

அவரால் வலிக்காத போல நடிக்க மட்டுமே முடிந்தது...

அவளை தலை முழுகினாலும் சந்தோஷமாக இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டு தான் இருந்தார்...

இப்போது தான் அவள் கஷ்டம் அவருக்கு தெரிய வந்தது...

அவரது ஈகோ அவளுடன் திரும்ப பேச அனுமதிக்கவில்லை என்றாலும் அவர் மனமும் அவளுக்காக கவலைப்பட்டுக் கொண்டு தான் இருந்தது...

மகாலக்ஷ்மியோ கணவரிடம் எல்லாமே கொட்டி விட்ட நிம்மதியுடன் தூங்கி போக, ஜெயானந்தனுக்கு அது தூங்கா இரவு தான்...

இப்படியே இவர்கள் நாட்கள் மெதுவாக நகர, கீர்த்தனாவின் வாசல் கதவு தட்டப்பட்டது...

அவளும் அன்று விடுமுறையாக இருக்க, வீட்டில் நின்று இருந்தாள்.

அப்போது தான் சாப்பிட்டு முடித்தவள் கதவை திறக்க வாசலில் நின்று இருந்தது என்னவோ மனோகரி தான்...

அவரை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, "உள்ள வாங்க ஆன்டி" என்று சொல்ல, அவரும் உள்ளே வந்தவர், "தனிஷா போனதுமே வீடு வெறிச்சோடி போயிடுச்சுல்ல" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர, பெருமூச்சுடன், அவளும் அருகே அமர்ந்தவள், "ம்ம் ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றாள் தழுதழுத்த குரலில்...

"நீயும் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கலாமே" என்றார் மனோகரி...

அவளோ, "கொஞ்சம் இருங்க ஆன்டி, டீ போட்டு கொண்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே எழ, அவள் கையை பிடித்து அமர வைத்தவரோ, "அத அப்புறம் பார்த்துக்கலாம், நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றார்...

கீர்த்தனாவோ அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவர் அருகே அமர்ந்தவள், "இப்போதைக்கு ஐடியா இல்ல, அக்ஷயாவோட லைஃப்பை பார்த்த பிறகு கல்யாணத்துல நம்பிக்கையும் இல்ல" என்றாள்.

உடனே மனோகரி, "அப்படி எல்லாம் சொல்லாதம்மா, உனக்கேத்த ஒருத்தன் கண்டிப்பா வருவான்" என்றார். அவளோ, "வரும் போது பார்த்துக்கலாம்" என்று சொல்ல, "சரி அத விடு, நான் ஊருக்கு போறேன்... ஒரு வாரம் இங்க இருக்க மாட்டேன்" என்று சொல்ல, அவளோ, "ஐயோ ஆன்டி, நானும் செவ்வாய் கிழமை ஊருக்கு போறேன்... அம்மா வர சொல்லிட்டே இருக்காங்க… பாட்டிக்கு உடம்பு முடியலையாம்..." என்றாள்.

மனோகரியோ, "அதுக்கென்ன நீயும் கிளம்பு... கீயை பக்கத்து வீட்டு அக்கா கிட்ட கொடுத்துட்டா ஓகே" என்றார்... அவளும், "ஓகே ஆன்டி, அப்படியே பண்ணிடுறேன்" என்று சொன்னவளோ, "என்ன திடீர்னு?" என்று கேட்டாள்.

"நம்ம செழியனுக்கு பொண்ணு பார்க்க தான்" என்றார் அவர்...

அவளுக்கோ சட்டென அதனை கேட்டதுமே தன்னையும் மீறி ஒரு ஏமாற்றம் மனதின் ஓரத்தில்...

சட்டென தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே நிதானத்துக்கு வந்தவள், "அவருக்கு ஓகே யா?" என்று கேட்டாள்.

மனோகரியோ, "ம்ம் அவனுக்கும் பிடிச்சு இருக்காம்" என்று சொல்ல, அவள் முகமோ சட்டென சோர்ந்து போக, அதனை காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டவளோ, குரலை செருமிக் கொண்டே, "ம்ம்" என்றாள் உயிர்ப்பற்ற குரலில்...

மனோகரியும், "சரி நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து கொள்ள, அவளும் அவரை வழி அனுப்பி விட்டு கதவை மூடியவள், கதவில் சாய்ந்து நின்று கொண்டே, "இப்போ எதுக்கு நான் ஃபீல் பண்ணனும்? இந்த பசங்கள நம்பவே கூடாது... நல்ல வேளை நான் ஓகே சொல்லல" என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டே தனது வேலையை பார்க்க சென்று இருந்தாள்.

அவளுக்கு நெடுஞ்செழியனின் நினைவில் இருந்து வெளியே வரவே முடியவில்லை...

தன்னையும் அறியாமல் அவன் மீது கோபம், அத்துடன் ஏமாற்றம்...

"இப்போ நான் ஓகே சொல்லி இருந்தா என்ன ஆகி இருக்கும்? வெய்ட் பண்ணுவேன்னு பெரிய வசனம் வேற" என்று வாய்க்கு வந்ததை எல்லாம் ஆதங்கம் தீர திட்டி இருந்தாள்.

அடுத்த நாள் வேலைக்கு அவள் செல்ல, வழக்கம் போல வீரராகவன் வேலையை குவித்து இருந்தான்...

அவளுக்கு மட்டும் அல்ல அக்ஷயாவுக்கும் அதே நிலைமை தான்...

வீரராகவனும் மீட்டிங் ஒன்றை முடித்து விட்டு இருக்கையில் அமர, கீர்த்தனாவோ, "இன்னும் லீவ் கேட்கல... கேட்டா கொடுப்பாரான்னு தெரியலையே" என்று நினைத்துக் கொண்டே, அவனிடம் ஃபைல் ஒன்றை நீட்டியவள், "சார்" என்றாள். அவனும் அதில் இருந்த கடிதத்தில் கையெழுத்தை இட்டுக் கொண்டே, "ம்ம்" என்று சொல்ல, "நாளைக்கு ஊருக்கு போறேன் சார், பாட்டிக்கு உடம்பு முடியல" என்றாள் தட்டு தடுமாறி...

"எத்தனை நாள் லீவ்?" என்றான் அவன் அவளை பார்க்காமலே...

"ஒரு நாள் சார்" என்றாள்.

"ஒரு வாரமாவே எடுத்துக்கோ" என்று சொல்லிக் கொண்டே, கையில் இருந்த ஃபைலை அவளை நோக்கி நீட்டிக் கொண்டே அவளை ஏறிட்டு பார்த்தான்...

அவளுக்கோ அதிர்ச்சி...

இதெல்லாம் வீரராகவனிடம் எதிர்பார்க்கவே முடியாத விடயங்கள் அல்லவா?

ஒரு நாளுக்கே வானுக்கும் பூமிக்கும் குதிப்பவன் அவன்...

ஒரு வார லீவு... நம்ப முடியவில்லை... கனவோ என்று தோன்றியது... அவளுக்கு மட்டும் அல்ல, அக்ஷயாவுக்கும் அதே அதிர்ச்சி தான்...

"ஒரு நாளுக்கே அவ்ளோ திட்டுவார்... ஒரு வாரம் கொடுத்து இருக்காரே" என்று யோசித்தாள்...

கீர்த்தனாவோ தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்தியவள், "இல்ல சார், ஒரு நாள் போதும்" என்றாள்.


"ஒரு வாரம் கொடுத்து இருக்கேன்... தேவைப்பட்டா எடுத்துக்கோ" என்று சொல்ல, "எனக்கெதுக்கு தேவைப்பட போகுது?" என்று கீர்த்தனா நினைத்துக் கொண்டே, சம்மதமாக தலையாட்டியவள் தனது இருக்கையில் சென்று அமர்ந்து வேலையை பார்க்க தொடங்கி விட்டாள்
Super sis
 
Top