ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 15

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 15

கல்லூரிக்கு செல்லாமல் நேரே வீட்டுக்கு வந்தவள் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையை ஆசையாக அள்ளி அணைத்துக் கொள்ள அவள் மனமோ பிரிவை நினைத்து ரணமாக வலிக்க ஆரம்பித்தது.

அவளுக்கோ "பிரிந்து விடலாம்" என்று நேரில் சொல்ல கொஞ்சமும் தைரியம் இருக்கவில்லை. அதே சமயம் தான் அவன் வாழ்க்கைக்கு தடையாக இருக்கிறோமோ என்ற குற்ற உணர்வு வேறு வதைக்க, கரிகாலனை விட்டுச் செல்ல யோசித்தாள். நிச்சயமாக இந்த பிரிவு மதுபாலாவுக்காக அல்ல, அவள் கையில் தவழ்ந்து கொண்டு இருந்த அவன் குழந்தை ஆதித்துக்காக மட்டுமே..

அவனை கருவறையில் அவள் தாங்கவில்லை, ஆனால் அவன் தன் கருவறை பொக்கிஷமாக இருந்து இருக்க கூடாதா என்று இறைவனை சபித்தாள்.. பாசம் இருந்தும் வரும் பிரிவு, காதல் இருந்தும் நாடும் தனிமையின் வலி மிக கொடியது.. சண்டை போட்டு பிரிந்து செல்லும் போது கோபம் வலியை மறைத்து விடும்.. ஆனால் ஆன்மாக்கள் பின்னி பிணைந்து இருக்கும் போது வரும் பிரிவு உயிரையே உருக்கி விடும்.. அதே வலியை தான் அவள் இப்போது அனுபவித்துக் கொண்டு இருந்தாள்.

கையில் குழந்தையை ஏந்தி இருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர் சொரிய மனதிலோ ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தன. அவன் முகம் பார்த்து பிரிவை யாசிக்க அவள் விரும்பவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன .. முதலாவது அவன் தன்னை பிரிந்து மதுபாலாவுடன் வாழ விரும்பும் சந்தர்ப்பத்தில் இந்த செய்தி அவன் முகத்தில் ஒரு கீற்று புன்னகையை தோற்று வித்தால் அவள் உயிருடன் மரித்து விடுவாள். இரண்டாவது அவன் மேல் எல்லை இல்லாத காதல் கரை புரண்டு ஓடும் கணம் அவளால் நிலையாக நின்று அவனிடம் பேச தான் முடியுமா என்ன?

கண்ணில் வழிந்த கண்ணீர் அவள் கையில் இருந்த ஆதித்தில் விழ, தாயின் கண்ணீர் பட்டு பாலகன் அவனே சிணுங்கி போனான். அடுத்த கணமே அவனை தொட்டிலில் படுக்க வைத்தவளுக்கு இப்போது அவள் வீட்டை விட்டு போவதென்றால் கூட பல தடங்கல்கள் கரிகாலனின் தாய் தந்தையால் உருவாக கூடும் என்று தோன்றியது.

நேரே கரிகாலனின் தாயை நோக்கி சென்றவள் அவர் அருகே அமர்ந்து "அத்தை" என்று அழைக்க, அவரோ "என்னமா இன்னைக்கு நீ காலேஜ் போகலையா?" என்று கேட்டார். அவளோ இல்லை என்று தலை ஆட்டியவள் " எனக்கு கொஞ்சம் அம்மா வீட்ட போகணும் போல இருக்கு" என்று சொல்ல அவரோ அவளை புருவம் சுருக்கி பார்த்தவள் "ஏன்மா?" என்று கேட்டார். அவளும் "அம்மாவையும் அப்பாவையும் பார்த்து நிறைய நாட்கள் ஆகிடுச்சு.. அவங்க நினைப்பாவே இருக்கு" என்று சொல்ல அவரோ "போய் நின்னுட்டு நாளைக்கே வந்திடுவ தானே" என்று கேட்க அவளோ "கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன் அத்தை" என்று சொன்னாள். அதைக் கேட்டவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அவளை தடுக்க விரும்பாதவர் "சரிம்மா பொய்ட்டு சீக்கிரமே வந்திடு.. கரிகாலன் கிட்ட சொல்லிட்டியா? " என்று கேட்க அவளும் ஆம் என்ற ரீதியில் தலையாட்டி விட்டு தனது அறைக்குள் சென்றவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. வாயை மூடி அழுதவளுக்கு மனமோ ரணமாக வலிக்க, வலியை கண்ணீராக சொரிந்து கொண்டாள்.

சிறிது நேரம் மனம் விட்டு அழுதவள் கண்களை துடைத்து விட்டு கரிகாலனுக்கு ஒரு சிறு மடல் எழுதி அவன் மேசையில் வைத்தவள் உடைகளையும் புத்தகங்களையும் அடுக்கி முடித்தாள். அவள் கைகள் வேலையை செய்தாலும் மனமோ கரிகாலனிலும் ஆதித்திலும் தேங்கி நின்றது என்னவோ உண்மை தான். அனைத்தும் முடிய ஆதித்தை மீண்டும் அள்ளிக் கொண்டவளுக்கு கட்டுப்படுத்த முடியாமல் வலி உருவாக அவனை இறுக அணைத்து முத்தமிட்டாள்.. தூங்கும் போது குழந்தைகளை முத்தமிட கூடாது என்று அவளுக்கு தெரிந்தாலும் அவளால் உணர்வுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

கருவறையில் சுமக்காவிட்டாலும் பெற்ற குழந்தையை விட்டுச் செல்லும் உணர்வுக்கு சென்றவள் இதழ்களோ "ஏண்டா கண்ணா நீ என் வயித்துல பிறக்கல ?" என்று கேட்டுக் கொண்டது. குழந்தையோ தூக்கத்தில் சிணுங்க ஆரம்பிக்க அவனை தொட்டிலில் வளர்த்தி விட்டு வெளியே வந்தவள் கரிகாலனின் தாய் தந்தையிடம் சொல்லி விட்டு புறப்பட்டு விட்டாள். அவர்களும் அவள் கரிகாலனிடம் சொல்லி விட்டுத் தான் செல்கிறாள் என்ற எண்ணத்தில் அவளை தடுக்காமல் வழி அனுப்பி வைத்தனர். கண்ணீரை கட்டுப்படுத்தியபடி ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு வந்தவள் " உங்க கூட கொஞ்ச நாள் இருந்துட்டு போக வந்தேன்" என்று தாய் தந்தையிடம் பொய் உரைத்து விட்டு தனது அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டாள்.

அவர்களும் அவளது இயல்பான முகத்தை வைத்து ஒன்றும் கணிக்க முடியாமல் இருக்க, அன்று மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்த கரிகாலன் வாசலில் குழந்தையுடன் இருந்த அவன் தாயை பார்த்து "மாதவி வந்துட்டாளா?" என்று கேட்டபடி உள்ளே நுழைந்தான். அவனை அதிர்ந்து பார்த்த அவன் தாயோ "என்னடா கேட்கிற? உன் கிட்ட சொல்லிட்டு தானே அவங்க அம்மா வீட்ட போறேன்னு சொன்னா" என்று சொல்ல அவன் புருவமோ இடுங்க , "என் கிட்ட சொன்னாளா?" என்று கேட்டவன் தாயின் கலவரமான முகத்தை கண்டு உடனே சுதாகரித்துக் கொண்டு "ஓஹ் சொன்னாம்மா மறந்துட்டேன்" என்று சொன்னவன் யோசனையுடன் அறைக்குள் நுழைந்தான்.

அவனிடம் சொல்லாமல் அவள் எந்த முடிவும் எடுப்பது இல்லை. ஆனால் தன்னிடம் சொல்லி விட்டதாக தாயிடம் அவள் சொன்னது யோசனையாக இருக்க, அவளது மடல் அவன் மேசையில் இருந்து அவனைப் பார்த்து சிரித்தது.

அதை யோசனையுடன் எடுத்துப் பார்க்க அதில்

கரிகாலன் சாருக்கு,

ரணமாய் வலித்தாலும் மனமாக விட்டுச் செல்கிறேன் ஆதித் கண்ணாவின் நிழலாய் நீங்கள் இருப்பதற்காக...

வெறி நாய்கள் கடித்து குதறிய ஜீவன் எனக்கு அங்கீகாரம் நீங்க கட்டுன தாலி மட்டுமே...

எனக்கு நீங்க செய்த நன்மைக்கு நன்றி சொன்னால் நான் நன்றி இல்லாதவள் ஆகி விடுவேன்..

ஆதித்தை பிரிந்து உங்களால் இருக்க முடியாது, அவனும் அவன் அன்னையின் அன்பை உணர வேண்டும்..

நீங்க சொல்லாவிட்டாலும் உங்க மனசு எனக்கு புரியும்..

உங்க வாழ்க்கைக்கு நான் எப்போவும் தடையாக இருக்க மாட்டேன்..

எனக்கு நீங்க இதுவரை செய்த உதவியே போதும்..

இனியும் உங்களுக்கு தொந்தரவாக நான் இருக்க விரும்பவில்லை...

நேற்று உங்கள் கண்ணீர் உணர்த்தியது உங்கள் தந்தை அன்பை..

என் கண்ணீரை துடைத்த உங்கள் கண்கள் கலங்குவதை நானும் விரும்பவில்லை

ஆதித் வாழ்க்கைக்காக என்னாலான சிறு உதவி இது..

உங்க கூட இருக்க முடிலனாலும் உங்க முகத்தில இருக்கிற புன்னகை போதும் என் வாழ்நாள் முழுதும்..

என்னை பற்றி யோசிக்காமல் மதுபாலா மேடம் கூட உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க..

இப்படிக்கு

மாதவி கரிகாலன்

என்று பழக்க தோஷத்தில் எழுதி இருந்தவள் அந்த கரிகாலனை வெட்டி விட்டு வெறும் மாதவியை விட்டு இருந்தாள். அனைத்தையும் நிதானமாக வாசித்தவன் கண்கள் சிவக்க, அவன் கைகள் நடுங்க, வெட்டப்பட்டு இருந்த கரிகாலனை வருடியவன் இதழ்களோ "உயிரோட கொன்னுட்டியேடி" என்று முணு முணுத்தது.

அதில் காய்ந்த தடத்துடன் இருந்த அவள் கண்ணீரை அவள் மன நிலையை எடுத்துரைக்க "நான் பையன் கூட இருக்க , நீ என்னை விட்டு போய்டுவியா? முட்டாள் " என்று திட்டியவன் ஆழ்ந்து மூச்செடுத்தபடி அவள் மேல் கொலை வெறியுடன் அமர்ந்து இருந்தான்.

அவனுக்கோ கோபம் உச்சத்தில் வந்தது, அவள் விழிகள் காதலை உணர்த்த அவள் ஸ்பரிசம் காதலை உணர்த்த அவள் பார்வை தொடக்கம் அவள் உடலின் ஒட்டு மொத்த அணுக்களும் கரிகாலன் மேல் உள்ள காதலை அவனுக்கு உணர்த்த அவளோ அனைத்தையும் புதைத்து விட்டு இன்று அவனை நீங்கிச் சென்று இருந்தாள். அவன் கண்களோ சிவந்து இருக்க, கழுத்து நரம்புகள் புடைத்து இருக்க, உயிருடன் இறந்து விட்ட உணர்வு அவனுக்கு. மதுபாலா விட்டுச் சென்ற போது அவன் காதல் தோற்று விட்டதை விட, அவள் ஏமாற்றி விட்ட கோபமே இருக்க அந்த வலி அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. கோபமே அந்த இடத்தில் முன்னிலை பெற்று இருந்தது. ஆனால் இன்று இவளோ மனம் முழுக்க அவன் நினைவிலேயே அவனுக்காக மட்டுமே அவனை விட்டு பிரிந்து சென்று இருக்க அவனால் அந்த வலியை தாங்கவே முடிவில்லை..காதலின் வலி இவ்வளவு கொடுமையாக இருக்குமா என்று தனக்கு தானே கேட்டுக் கொண்ட அவனால் உணர்வுகளை கட்டுப்படுத்தவே முடியவில்லை..அடுத்த கணமே தனது அலுமாரியை திறந்தவன் கண்ணுக்கு தட்டுப்பட்டது சிகரெட்.. கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் புகைத்தவன் தான் அவன்.. அதன் பிறகு அந்த பழக்கம் உடலுக்கு தீங்கு என்று அவனாகவே விட்டு இருந்தான். இடையிடையே எப்போவாவது புகைப்பவன் கைகளில் தட்டுப்பட்ட சிகரெட்டை எடுத்துக் கொண்டு பின் கதவை திறந்து கொண்டவன் அதை வாயில் வைத்து ஒரே ஒரு தடவை புகைக்க அவனுக்கோ நீண்ட நாள் பழக்கம் விட்டு போனதால் இரும தொடங்கியது.

"ச்ச " என்றபடி அதனை தூக்கி போட்டவன் தலையை சிறிது நேரம் பிடித்துக் கொண்டான். அவனுக்கும் அடுத்து என்ன பண்ணுவது அவன் உணர்வை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்றும் தெரியவில்லை. அவன் உணர்வை அடக்கும் ஒரே ஆயுதம் அவனவள் மட்டுமே. கண்களை மூடி திறந்தவன் அடுத்த கணமே வெளியே செல்வதாக கூறி விட்டு மாதவி வீட்டுக்கு புயலாக சென்றான்.

அவன் வீட்டு வாசலில் காரை நிறுத்தியவன் பெருமூச்சுடன் காரை விட்டு இறங்க போன சமயமே அவனுக்கே அந்த சிகரெட் மணம் மூக்கை துளைத்தது. வாய்க்குள் சுவிங்கத்தை எடுத்து போட்டபடி இறங்கியவன் நேரே அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் அவனை அதிர்ச்சியாக பார்த்தார்கள் . மகள் இயல்பாக வந்து இருந்தால் ஏன் மாப்பிள்ளை அன்று மாலையே தேடி வர வேண்டும் என்ற யோசனை அவர்களுக்கு.. அவன் முகத்தை பார்த்தே அவர்கள் மனதை அறிந்து கொண்டவன் மெதுவாக புன்னகைத்து "மாதவி எங்கே" என்று கேட்க அவர்களும் கொஞ்சம் பெருமூச்சு விட்டபடி அவள் அறையை காட்டினார்கள்.

அப்போது தான் தூங்கி எழுந்த மாதவியும் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி கட்டிலில் இருந்து சோகமே உருவாக எழுந்து கொள்ள அவள் அறை கதவு ஆக்ரோஷமாக தட்டப்பட்டது... யோசனையுடன் கதவை திறந்தவள் அங்கு அவளையே பார்த்தப்படி சிவந்த கண்களுடன் நின்று இருந்த கரிகாலனை அதிர்ந்து பார்த்தாள்.. அதே அதிர்ச்சியுடன் "நீங்க" என்று ஆரம்பிக்க அவனோ சற்றும் தாமதிக்காது உள்ளே நுழைந்து கதவை காலினால் அடித்து சாத்தியவன் அவளை காற்றுப் புக முடியாதபடி இறுக அணைத்து இருந்தான்.

அவளோ அவன் அணைப்பை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை விரிக்க, அவள் காதில் தனது இதழ்கள் உரச " ஏண்டி என்ன விட்டு வந்த? எனக்கு நீ வேணும் மாதவி " என்று சொல்லி அடுத்த கணமே அவள் முகத்தை தாங்கியவன் அவள் இதழில் அழுந்த முத்தம் பதித்தான்.

ஆழமான அழுத்தமான முத்தம் அது.. அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிய அவன் இதழ்களோ அவள் இதழ்களில் கவிதை எழுத ஆரம்பித்ததில் அவன் வாயில் இருந்த சுவிங்கம் கூட அவள் வாய்க்குள் இடம் பெயர்ந்தது.. அவள் இதழ்களோ அவன் இதழ் ஈரத்தை உணர்ந்தபடி இருக்க, அவளோ ஆரம்பத்தில் அதிர்ந்து நின்றாலும் தனது மனதில் இருந்த காதலினால் கண்களை மூடிக் கொள்ள அவனும் ஒரே முத்தத்திலேயே அவள் மீது இருந்த காதலை கொட்டித் தீர்த்தான்.

ஒரு கட்டத்தில் தான் செய்து கொண்டு இருந்த செயலை உணர்ந்து பதறி விலகியவன் அவள் விழிகளை ஏறிட்டு பார்க்க அவளோ அவனை பார்க்க முடியாமல் குனிந்து கொண்டாள். அவனும் "உன்னை விட்டுட்டு என்னாலயும் ஆதித்தாலயும் சந்தோஷமா இருக்க முடியும்னு நினைக்கியா? எங்க சந்தோஷமே நீ மட்டும் தாண்டி" என்று சொல்ல அவளோ அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அவனை இறுக அணைத்து இருந்தவள் கண்ணீரை மட்டுமே பதிலாக கொடுத்தாள். அவனும் அவளை இறுக அணைத்தவன் "சொல்லுடி என்னாச்சு?" என்று கேட்க அவளோ "ஒன்னும் இல்ல, நீங்க சந்தோஷமா வாழ" என்று ஆரம்பிக்க "அதுக்கு அந்த ராட்சசி கூட வாழணுமா?அதுக்கு நீ என்னை பாழும் கிணத்துல தள்ளி விட்டு இருக்கலாம் " என்று சொன்னான்.

அதைக் கேட்டு அவன் அணைப்பில் இருந்தவாறே அவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு அதற்கு மேலும் மறைக்க மனம் இடம் கொடுக்காமல் இருக்க "அவங்க தான் சொன்னாங்க" என்றபடி நடந்ததை சொல்ல அவன் முகமோ ஆத்திரத்தில் இறுகி போனது. அவன் இதழ்களோ "அவ இதெல்லாம் பண்ணுறாளா? " என்று முணுமுணுக்க அவளோ "அவங்க அவ்ளோ மோசமா?" என்று கேட்டாள் . அவனோ விரக்தியாக சிரித்தவன் "நான் யாரை பற்றியும் தப்பா பேசி பழக்கம் இல்லாதவன் மாதவி., யார் குடியையும் கெடுக்க நினைச்சதும் இல்ல. அதனால தான் அவ அரசியல் வாழ்க்கையை மொத்தமா அழிக்க என் கிட்ட அவ்ளோ ஆதாரம் இருந்த போதும் அமைதியா இருக்கேன்... ஆனா அவ என்னை மறுபடி மறுபடி சீண்டிட்டே இருக்கா, முதல் இருந்த கரிகாலன் போல அமைதியா இருப்பேன்னு நினைக்கிறா,, மாறி அடிக்க ஆரம்பிச்சா அவ தாங்க மாட்டா.. இது வரை நான் அவளை பத்தி உன் கிட்ட சொல்லாததுக்கு ஒரே காரணம் அவ கத எல்லாம் அசிங்கமா இருக்கும். அத பேசவே விருப்பம் இல்லன்னு தான். ஆனா இப்படி உன் கிட்ட அவ நடந்துக்கிட்ட பிறகு சொல்லாம இருக்க முடில, " என்று ஆரம்பித்தவன் அவள் கதைகளை சொல்ல ஆரம்பிக்க இந்த கதை ஒன்றுமே தெரியாத மாதவி அதிர்ச்சியுடன் வாயில் கை வைத்துக் கொண்டாள்.

அவனோ பெருமூச்சுடன் அங்கு இருந்த இருக்கையில் அமர, அவன் அருகே அமர்ந்தவள் "அவங்களுக்கு உங்கள இப்படி கஷ்டப்படுத்த எப்படி மனசு வந்திச்சு?" என்று கேட்க இதழ்களை பிதுக்கியவன் "நேற்று என்ன ஆச்சு தெரியுமா? " என்று கேட்டு அவள் வீட்டுக்கு அழைத்த விடயத்தை கூற மாதவியோ "எவ்ளோ தைரியம் இருந்தா என் புருஷன் கிட்ட அவ தப்பா நடந்துக்க பார்ப்பா? சேர்த்து ரெண்டு அறை அறைஞ்சிருக்க வேண்டியது தானே.. " என்று சொன்னவள் மேலும் "இந்த சுவிங்கம் வேற வாய்க்குள்ள, ஒழுங்கா திட்டவும் முடியல" என்று சொன்னாள்.. அவனோ அவள் கோபம் கண்டு மனம் நிறைந்தவன் இதழ் பிரித்து அழகாக சிரித்துக் கொண்டவன் " கஷ்டமா இருந்தா சுவிங்கத்தை திரும்ப தா" என்று கேட்க அவளும் தனது வாய்க்குள் கை விட்டு அதை எடுத்து அவன் கையில் வைக்க அவளையும் சுவிங்கத்தையும் பார்த்தவன் "க்கும்" என்று ஆழ்ந்த மூச்சுடன் சொல்லிக் கொண்டாலும் அதை மெல்ல தொடங்கினான்.

அவள் தயக்கம் அவன் மனதில் சிறு தவிப்பாக உருவெடுக்க. "நான் கிஸ் பண்ணுனது கஷ்டமா இருக்கா?" என்று கேட்டான். அவளோ "ஏன்?" என்று புரியாமல் கேட்டாள். அவனும் சங்கடமாக "இல்ல அது உனக்கு கஷ்டமா இருக்குமோன்னு" என்று சொல்ல முடியாமல் தட்டி தடுமாற, அவளுக்கும் அவன் சொல்ல வந்தது முழுதாக புரிந்து கொண்டது. அதைக் கேட்டு அவனை ஏறிட்டு பார்த்தவள் "உங்க கூட இருக்கும் போது எனக்கு எந்த நாயோட நினைவு வந்தாலும் அது உங்களுக்கு செய்யிற துரோகம் தான்... உங்க மேல என் மனசு முழுதும் காதல் இருக்கும் போது எனக்கு எதுக்கு கண்ட நினைவெல்லாம் வர போகுது? ஒரு பொண்ணோட கற்பு அவ மனசுல தான் இருக்கு.. அப்படி பார்த்தா என் கற்பை நான் இழந்தது உங்க கிட்ட தான்.. அதாவது என் மனசை உங்க கிட்ட தான் இழந்து இருக்கேன்... வெறி நாய் கடிச்சா ஊசி போட்டுட்டு போய் கிட்டே இருக்கணும் அத பத்தியே யோசிச்சிட்டு இருக்க முடியுமா?" என்று அவ்வளவு முதிர்ச்சியாக பேசி அவன் மனதை மேலும் கொள்ளை இட , அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவன் "எனக்கு எப்படி என்னோட காதலை சொல்றதுன்னு தெரியலடி,, ஆனா கத்தி சொல்லணும் போல இருக்கு.. டீனேஜ் பையன் போல லவ் பண்ண தோணுது" என்று சொல்ல அவளோ அவன் பார்வை வீச்சையும் காதல் பேச்சையும் தாங்க முடியாமல் வெட்கப்பட்டு தலை கவிழ்ந்து சிரித்துக் கொண்டாள்.

"நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை

நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை"
 

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 15)


அடி போடி கூறுகெட்டவளே...!
அவ தான் ஓடுகாலி, எதுலயும் திருப்தி என்கிறதே இல்லாதவ..
ஓடிப் போயிட்டா. ஆனா, உனக்கென்ன கேடு..? உன் கிட்ட சொல்லிட்டுத்தானே, உன் கிட்ட சம்மதம் கேட்டுட்டுத்தானே, உன் கிட்ட வாக்குறுதி கொடுத்துட்டுத் தானே உன் கழுத்துல தாலியே கட்டினான். அப்புறம் எதுக்கு உனக்கு சந்தேகம், தியாக எண்ணம் வருதோ தெரியலை..?
மதுபாலா வேணும்ன்னு அவன் உன் கிட்ட சொன்னானா...?
நீயா முந்திரி கொட்டைத்தனமா முடிவெடுத்துட்டு ஏதாவது ஒண்ணு செய்திட்டே இருப்பியா...? அறிவு வளருதோ இல்லையோ, ஆனா ஆளு மட்டும் நல்லா வளருங்கடி.
இனிமேலாச்சும் புத்தியை வளர்த்துக்கங்கடி...!


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top