ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 12

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 12

அவள் அணைப்பில் அவன் கொஞ்சம் நிலை குலைந்து போனாலும், எப்படி அவளை விலக்குவது என்று தெரியாமல் "மாதவி" என்று அழைக்க, அவளும் தான் இருக்கும் நிலை உணர்ந்து பட்டென விலகி கொண்டவள் "சாரி சார், ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நடந்துக்கிட்டேன்" என்று தலையை குனிந்தபடி சொல்ல, அவனும் "ம்ம்' என்றவன் அவள் சங்கடத்தை குறைக்கும் பொருட்டு "சாப்பிட்டியா?" என்று கேட்டான். அவளும் "ம்ம் சாப்பிட்டேன், " என்றவள் அங்கிருந்து வெளியேற அவள் முதுகை வெறித்தவன் பெருமூச்சுடன் தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டான்.

வெளியே வந்த மாதவியோ நெற்றியில் வெளிப்படையாக அடித்தவள் " என்ன பண்ணி வச்சிருக்கேன் ?? சார் என்ன நினச்சு இருப்பார் ? " என்று கேட்டபடி கன்னத்தை தடவ , அவன் மார்பின் ரோமம் பட்ட இடம் இன்னும் குறுகுறுத்தது. அவளுக்கு அந்த உணர்வு புதிதாக இருந்தாலும் உணர்வுகளை கட்டுப்படுத்தியபடி, அங்கிருந்த பேப்பரை எடுத்தவள் கண்கள் பெரிதாக விரிந்து கொண்டன.. ஆம் அதில் நேரே நிமிர்ந்து செல்லும் கரிகாலனை பக்கவாட்டாக திரும்பி பார்க்கும் காட்சியே அது.. " ஐயோ இந்த போட்டோ ஏன் போட்டாங்க?? நான் ஏன் இப்படி பார்க்கிறேன்? " என்று அதை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவளை நோக்கி வந்த கரிகாலன் " ஏன் அப்படியே நிற்கிற? பேப்பர்ல என்ன இருக்கு?? " என்று கேட்க அவளோ " நம்ம போட்டோ தான் " என்று தட்டு தடுமாறி உரைத்தாள் .. அவனோ பேப்பரை வாங்கி பார்க்க அவள் மனமோ " தன்னுடைய பார்வையை அவன் கண்டு கொள்ள கூடாது.. " என்று வேண்ட அவனும் " கேட்ட கேள்வியை தானே போட்டிருக்காங்க " என்றபடி அதில் பிரசுரமாகி இருந்த செய்தியை அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி படித்தான் ..அவளோ அவனையே யோசனையாக பார்த்தபடி நிற்க ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தவன் " பேப்பர் வாசிக்க போறியா ?? " என்று கேட்டபடி பேப்பரை நீட்ட இல்லை என்று தலை ஆட்டியவள் அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றாள் .. அவனோ அவளை பார்த்துவிட்டு பத்திரிகையை பார்த்தவன் கரங்கள் யோசனையாக தன்னையே பார்த்தபடி அந்த புகைப்படத்தில் இருந்த மாதவியை வருடியது..

அதே சமயம் மினிஸ்டரின் மகனின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு வந்த மதுபாலாவுக்கு மனம் உலையாக கொதித்தது.. மாதவியை கரிகாலன் திருமணம் செய்த விடயத்தை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை . அதே சமயம் மகனை தொலைத்த துக்கத்தில் இருந்த மினிஸ்டருக்கோ எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போக அவரும் நோய் வாய் பட்ட போல உணரலானார். எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தவர் சோகத்தை அவர் மனைவியின் அழுகை வேறு அதிகரித்து விட, அவருக்கு ஆதரவாக வீட்டில் முடங்கிப் போனார்.

மதுபாலாவுக்கு அவர் எதிலும் கலந்து கொள்ளாதது ஒரு கை உடைந்த உணர்வில் இருக்க, கஷ்டபட்டு அனைத்து யோசனைகளையும் மூட்டை கட்டி வைத்தவளுக்கு அடுத்த குறியாகி போனது எம். பி சீட்.. ஆனாலும் ஒரு ஏமாற்றம் மனதில் பரவ அவள் கொஞ்சம் கொஞ்சமாக தனிமையை உணர ஆரம்பித்து இருந்தாள்.

இப்படியே நாட்கள் நகர, மாதவி கல்லூரிக்கு செல்லும் நாளும் வந்து சேர்ந்தது. ஆனால் அவளுக்கோ அதில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல் இருக்க முக்கிய காரணம் ஆதித் ஆகும்.

அவனுடனேயே நாளை கழித்தவளுக்கு அடுத்த நாள் காலையில் அவனை விட்டுச் செல்வது என்னவோ போல் ஆக, கரிகாலனுடன் பேசி கல்லூரிக்கு போகாமல் நின்று விடலாமா என்று யோசிக்கலானாள். அவனைத் தேடி ஹாலுக்குள் குழந்தையுடன் சென்றவள் " நான் ஆதித் கூடவே இருந்திடவா.. ?? காலேஜ் போகவே பிடிக்கல. " என்றவளை நிமிர்ந்து பார்த்தவன் " ஓ அப்படியே சமைச்சிட்டு வீட்டு வேலையும் பார்த்துட்டு இப்படியே இருந்துடு " என்று சொன்னான். அவளோ வாய் நிறைய புன்னகையுடன் " ஓகே சார்... நான் நல்லா வீடு வேலை செய்வேன்...நல்லா சமைப்பேன்.. " என்று சொல்ல அவளை மேலிருந்து கீழ் நாடியை நீவியவாறு பார்த்தவன் " ம்ம்ம்....நான் அதுக்கு தானே உன்னை கல்யாணம் பண்ணி கூட்டி வந்தேன்.. " என்றும் ஒரு மாதிரி குரலில் சொன்னதுமே அவன் உள்ளே அடங்கி இருந்த கோபத்தை உணர்ந்தவள் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் ...

" இல்ல சார்.. அது... ஆதித் கூட இருந்திட்டு திடீர்னு விட்டு போறது கஷ்டமா இருக்கு... " என்று தயக்கமாக சொல்ல அவனோ " அதுக்கு கிடைச்ச சீட்டை வீணாக்கி வீட்டிலேயே இருக்க யோசிச்சிருக்க ரைட்?? ஓகேம்மா உன் லைஃப் உன் இஷ்டம் " என்றவன் எழ அவள் முகமோ தொங்கிப் போனது..

அடுத்த கணமே " இல்ல சார் நான் நாளைக்கே காலேஜ் போறேன் " என்று சொல்ல அவளை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தான் தவிர எதுவும் பேசவில்லை.. அவளை நோக்கி வந்து அவள் கையில் இருந்த தனது மகனை வாங்கி கொண்டவன் " நீ மட்டும் இதே போல இன்னொரு தடவை பேசுனா. உன் கிட்ட இவனை தரவே மாட்டேன் " என்று சொல்ல அவனை கோபமாக பார்த்தவள் " அது தான் போறேன்னு சொல்லிட்டேனே அப்புறம் என்ன?? " என்று சொன்னபடி குழந்தையை வாங்கி கொண்டே " வாடா நாம போய் விளையாடலாம்... காலையில அம்மா போனா பின்னேரம் வந்திடுவேன்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ " என்று குழந்தையுடன் பேசியபடியே உள்ளே செல்ல அவள் முதுகை பார்த்தவன் இதழ்கள் மெதுவாக விரிந்து கொண்டன.

பெருமூச்சுடன் " மாதவி" என்று அழைக்க, அவளும் உள்ளே செல்ல போனவள் சற்று நிதானித்து திரும்பி பார்க்க "இன்னைக்கு கோவில் போகலாமா ஈவினிங்?" என்று கேட்டான். அவளோ முத்துப் பற்கள் தெரிய சிரித்தவள் " நானே நினைச்சேன் கேட்கணும்னு.. நாலு மணிக்கே ரெடி ஆகிடுவேன் " என்று சொல்ல, அவனும் மெலிதாக சிரித்துக் கொண்டான்.

அன்று மாலையே கோவிலுக்கு போக ஆயத்தமானவன் குழந்தையுடன் ஹாலில் காத்திருக்க புடவையில் மகா லட்சுமி போல ஆயத்தமாகி வந்தவளை பார்த்தவன் பார்வையை அவளிடம் இருந்து அகற்றி விட்டு குழந்தையை நீட்டியபடி " அழகா இருக்க " என்று சொன்னபடி நகர்ந்தான். அவன் சொன்னதை கிரகிக்க முடியாமல் தடுமாறியவள் குழந்தையை வாங்கியபடி " இப்போ சார் என்ன சொன்னார் ?? எனக்கு தப்பா விளங்கிச்சோ " என்று நினைத்தபடி அவனை பின் தொடர்ந்தாள்.

அவனும் கார் கதவை திறந்து அவளை ஏற சொல்லி விட்டு கதவை மூடிக் கொண்டவன் மறு பக்கத்தில் ஏறிக் கொண்டான்.

அடுத்த கணமே காரை ஸ்டார்ட் பண்ண அதுவோ மாதவி பெல்ட் போடாததால் " கீ கீ " என்று கத்தியது.. அவனும் " பெல்ட்டை போடும்மா " என்க அவளோ " எப்படி போடுறது?? " என்று கேட்டால் கையில் வைத்து இருந்த குழந்தையை காட்டி.. அவனோ "வெயிட் " என்றவன் அவளை தாண்டி அவள் பின்னால் இருக்கும் பெல்ட்டை இழுக்க அவளோ அவனுக்கு வழி விட்டு சீட்டுடன் மொத்தமாக சாய்ந்து கொண்டாள். ஆனாலும் அவன் முகமோ அவள் முகம் அருகே மிக நெருக்கமாக இருக்க அவன் ஆழ்ந்த மூச்சு காற்று அவள் முகத்தில் நேராக பட அவளோ சங்கடமாக முகத்தை ஒரு பக்கம் திருப்பி கொள்ள அவன் மூச்சு காற்று அவள் கழுத்தில் பட்டு செல்ல அது அவளுக்கு இன்னும் அவஸ்தையாகி போனது.. அவனும் அவளை ஒரு கணம் பார்த்து விட்டு பெல்ட்டை போட்டு விட்டவன் காரை எடுத்துக் கொண்டு கோவிலை அடைந்தான்.. அங்கு குழந்தையை தூக்கியபடி அவள் இறங்க அவனும் இறங்கி காரை லாக் பண்ணி விட்டு கால் கழுவ சென்றான். அவளுக்கோ குழந்தையுடன் காலில் நீரை ஊற்ற முடியாமல் இருக்க அவள் புடவையை வேறு சற்று நீர் படாமல் சற்று தூக்க வேண்டி இருந்தது..தனது காலை கழுவியவன் நீரை எடுத்து அவள் காலுக்கு ஊற்ற போக அவளோ " ஐயோ புடவை " என்றாள். அவனும் " ஓஹ் " என்றவன் சற்றும் யோசிக்காமல் கொஞ்சமாக குனிந்து அவள் புடவையை தூக்கி காலில் நீர் ஊற்ற அவளுக்கு தான் அவஸ்த்தையாகி போனது. அதன் பிறகு என்ன நினைத்தானோ " நான் அவனை வச்சுகிறேன் " என்றபடி குழந்தையை கேட்க அவளோ " இல்ல நானே " என்று ஆரம்பித்தவள் அவன் முறைப்பில் வாயை கப்பென்று மூடிக் கொண்டு ஆதிதை நீட்ட அதை வாங்கிய கரிகாலனுக்கோ " ஏண்டா குழந்தையை வாங்கினோம்? " என்று இருந்தது.. ஆம் குழந்தையை கையாண்டதில் அவள் மாராப்பு ஒரு பக்கம் விலகியிருக்க அதை எப்படி சரி செய்ய சொல்வதென்று தெரியாமல் போனான். அவளும் அதை கவனிக்காமல் நடந்து வர " மாதவி " என்று அழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை வந்தால் தானே.. அவளோ அவனை ஏறிட்டு பார்த்து " என்ன " என்று கேட்க அவன் " மேல " என்று சொல்ல அவளோ மேலே அண்ணாந்து பார்த்தாள்.. வேறு வழி இல்லாமல் " குழந்தையை கொஞ்சம் பிடி " என்று கொடுத்தவன் அதன் மூலமாவது அவளை மறைக்க முற்பட அவளோ மாராப்பு விலகாத பக்கம் குழந்தையை தூக்கி இருக்க கரிகாலனுக்கு எங்கேயாவது சென்று முட்டி கொள்ளலாம் போல் இருந்தது..

பெருமூச்சோடு கொஞ்சம் நிதானித்தவன் " புடவையை கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு " என்று சொல்ல அவளோ நடப்பதை நிறுத்தி விட்டு அப்படி இப்படி பார்த்தவள் " சரியா தானே இருக்கு " என்று சொல்ல அதற்கு மேல் பொறுமை இல்லாமல் அவள் முன்னே வந்து " குழந்தையை கொடு " என்று கேட்க அவளும் "அவனை தர்றதும் கொடுக்கிறதுமா இருக்கீங்களே " என்றபடி குழந்தையை நீட்ட அவள் காதருகே குனிந்தவன் " புடவை மாராப்பு விலகி இருக்கு.. " என்று சொல்லி விட்டு அவளை பார்க்காமலே குழந்தையுடன் சென்று விட அவளோ கண்களை மூடி சங்கடப்பட்டவள் புடவையை சரி செய்து விட்டு அவனை பின் தொடர்ந்தாள்.

உள்ளே சென்றவன் தனது அருகே நின்றவளை ஒரு கணம் பார்த்து விட்டு சந்நிதியை பார்க்க அவளும் அவன் திரும்பியதும் சாமியை பார்த்து கைகளை கூப்பியவள் கண்ணீருடன் கடவுளை வணங்க ஆரம்பித்தாள். எந்த கடவுள் இல்லை என்று அவள் கடவுளை வெறுத்து இருந்தாலோ இன்று அதே கடவுளை கை கூப்பி வணங்குகிறாள் . அதற்கு ஒரே காரணம் அவள் வாழ்க்கையை பறித்த அதே கடவுள் தான் இன்று உன்னதமான வாழ்க்கையை அவளுக்கு அளித்து இருக்கிறார் அல்லவா? இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று அவள் கனவிலும் நினைத்து பார்க்கவே இல்லை. எதிர்காலமே சூனியமாகி விட்ட நிலையில் இருந்தவள் இன்று முகம் நிறைய புன்னகையுடன் வலம் வருகிறாள்.. கரிகாலனும் குழந்தையை அணைத்தபடி நின்று கண் மூடி கடவுளை வணங்கி விட்டு திரும்பி பார்க்க, மாதவியோ கண்ணீரை துடைத்து விட்டு அவனை பார்த்து சிரித்தவள் பிரகாரத்தை சுற்றி வரலாம் என்ற தோரணையில் கண்களை காட்ட அவனும் குழந்தையுடன் அவள் அருகே நடந்து சென்றான்.

இருவர் மனமும் பூரண அமைதியாகி இருக்க, கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்ததும் நிறைவாக வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்பட, அவன் வண்டி சென்றது மாதவியின் வீட்டை நோக்கி தான். அதைக் கண்டதுமே திரும்பி கரிகாலனை பார்த்தவள் "தன்க் யூ சார்" என்று கலங்கிய கண்களுடன் சொல்ல அவனோ "உன் கிட்ட எத்தனையோ தடவை சொல்லி இருக்கேன் , அம்மாவை பாக்கணும்னா சொல்லுன்னு, நீ இன்னைக்கு எங்க அம்மா கிட்ட சொல்லி இருக்க, என் கிட்ட சொல்ல தோணலையா மாதவி?" என்று ஆதங்கமாக கேட்க அந்த கேள்வியில் அவளும் குற்ற உணர்ச்சியுடன் தலையை குனிந்து கொண்டவள் "சாரி சார்" என்று இழுக்க "சரி விடு, இனி என்ன வேணுமானாலும் என் கிட்ட கேளு" என்று உத்தரவாக சொல்ல அவளும் "கண்டிப்பா சார்" என்றாள்.

அவர்கள் வண்டியும் மாதவியின் பெற்றோரின் வீட்டை அடைய அன்று மாதவி அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அன்று இரவு சாப்பாட்டை வீட்டுக்கு புறப்பட்டு வந்தவர்கள் அதே மனநிலையுடன் அறைக்குள் நுழைந்த சமயம், ஆதித் மாதவி வீட்டில் சாப்பிட்டதனால் , வரும் வழியில் மாதவியின் மடியில் தூங்கி இருந்தான். அவளும் குழந்தையை தொட்டிலில் வளர்த்தி விட்டு தனது அறைக்குள் வந்தவள் அடுத்த நாள் கல்லூரிக்கு செல்லும் பொருட்டு அலுமாரிக்கு மேலே இருந்த அவள் உடைப் பெட்டியை எடுக்க முயன்ற சமயம் அது அவள் உயரத்துக்கு எட்டினால் தானே.

அவள் வாசல் கதவு திறந்து இருக்க, தனது அறைக்குள் இருந்தவனுக்கு அவள் பாய்ந்து பாய்ந்து உடைப் பெட்டியை எடுக்க போனது தெளிவாக தெரிந்தது.

"ஹெல்ப் கேட்டா குறைஞ்சிடுவா பாரு" என்று முணு முணுத்தவன் அவள் அழைக்காமல் அவள் அறைக்குள் நுழைய, அவளோ பாய்ந்து பெட்டியை இழுத்தவளுக்கு அதன் கனம் தாங்க முடியாமல் போக பாதி இழுத்தவாறே பெட்டியை விட்டவள் கீழே தரையில் காலை குற்ற அந்த பெட்டியோ சமநிலை இன்றி அவள் மேல் விழ போக, அதை மிரட்சியுடன் பார்த்தவள் கண்களை மூடி கொண்டாள். அவள் தனக்கு மேல் பெட்டி விழுந்திருக்கும் என்று நினைத்து இருக்க, அதனை அவள் பின்னால் நின்றே ஒற்றை கையால் விழாமல் அழுத்தி பிடித்த கரிகாலன் அதை அவள் தலைக்கு மேலால் பிடித்து இருந்த இடத்திலேயே வைத்த சமயம், பெட்டியின் அருகே இருந்த பாதி உடைந்த கண்ணாடியினால் ஆன பூவாசை அவள் மேல் விழாமல் மறு கையால் பிடித்து இருந்தான்.

அவளின் பின் பக்க முதுகில் அவன் மார்பு பதிந்திருக்க, அவன் தன்னை காப்பற்றி விட்டான் என்ற எண்ணத்தில் கண்களை திறந்தவள் கண்ணில் பட்டது என்னவோ அந்த பூவாஸ் கிழித்து வழிந்த குருதி தான்.

உடைந்த பூவாஸ் அவன் பிடித்த வேகத்தில் அவன் வலது உள்ளங்கையை நன்றாக பதம் பார்த்து இருக்க அவனோ பூவாசை அங்கிருந்த மேசையில் வைத்து விட்ட "ஸ்ஸ்" என்றபடி காயத்தை ஆராய அவளோ அவன் பக்கம் திரும்பி அவன் கையை பற்றி பிடித்தவள் "ஐயோ ரத்தம் , வாங்க சார் ஹாஸ்பிடல் போகலாம்" என்று சொல்ல அவனோ அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "இதுக்கு ஹாஸ்பிடல் ஆஹ்? பெர்ஸ்ட் எய்ட் போட்டா ஓகே" என்று சொல்ல அடுத்த கணமே ஓடிச் சென்று அங்கிருந்த பெர்ஸ்ட் எய்ட் பாக்சில் இருந்து தேவையான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள். அவனோ பெருமூச்சுடன் அங்கிருந்த கட்டிலில் அமர, அவளும் மருந்தை எடுத்து அவன் காயத்தை சுத்தப்படுத்தியவள் அதற்கு மருந்தும் இட்டுக் கொண்டு இருக்க, அவள் கண்ணீரோ அவன் கரத்தில் விழுந்தது. அவனோ அப்போது தான் அவள் அழுவதை கவனித்தவன் "இப்போ எதுக்கு அழுகை?" என்று கேட்க அவளோ " என்னால தானே" என்று ஆரம்பிக்க "லூசு போல பேசாதே" என்றவன் அவள் மருந்திட்டு முடிய எழுந்து நின்று அவள் உடைப் பெட்டியை எடுக்க போனான். அவளோ "இப்போ ஏன் சார்? நானே பார்த்துகிறேன்" என்று சொல்ல அவளை சலிப்பாக பார்த்தவன் "மறுபடி கீழ விழுந்தா காப்பாத்த என் கையும் நல்ல நிலையில் இல்ல" என்று சொல்லி விட்டு அதை எடுத்து அவள் அருகே வைத்து விட்டு வெளியேற அவன் முதுகையே பார்த்துக் கொண்டு இருந்தவள் மனமோ அவன் காயத்தை நினைத்து கனத்து போனது.

அன்று இரவு படுத்தவளுக்கு தூக்கம் வந்தால் தானே, எழுந்து கரிகாலனை நோக்கி சென்றவள் , தூங்கிக் கொண்டு இருந்தவனது கையை பார்த்தவள் அவன் தூங்குகிறான் என்று நினைத்துக் கொண்டு கண்ணீருடன் வருட, அவன் கண்களோ பட்டென்று விரிந்து கொண்டது. அவளோ கண்ணீரை அவசரமாக துடைக்க "இங்க என்ன பண்ற?" என்று கேட்டான் அவன். அவளும் " இல்ல சார், கையில காயம். அதுவும் என்னால " என்று சொல்ல அவளை அனல் தெறிக்க பார்த்தவன் "கொஞ்சம் ஓவர் பில்ட் அப் பண்ணாதடி, இந்த சின்ன காயத்துக்கு இந்த கண்ணீர் எல்லாம் ரொம்ப டூ மச் " என்று சொல்ல அவளோ "எனக்கு ஏன்னு தெரில சார், உங்களுக்கு ஏதும்னா அழுகையா வருது" என்று கண்ணீருடன் சொல்ல, அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவன் மனமோ " கோர்ட்டில் ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் அவ்வளவு தைரியமாக பேசிய பெண் இவள் தானா" என்று யோசிக்க, "எனக்கு ஒன்னும் இல்ல, நீ போய் படு..இனி கையை பார்க்கிறேன் பாவம் பார்க்கிறேன்னு கிட்ட வந்தா கொன்னுடுவேன் " என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னான். அவளோ அவன் விளையாட்டு தனத்தை அறியாமல் பயத்துடன் சரி என்று தலையாட்டியபடி உள்ளே செல்ல அவள் முதுகை வெறித்து பார்த்தவன் தூக்கம் தொலைந்து போனது.

அடுத்த நாள் எழுந்த மாதவி ஆயத்தமாகி விட்டு,குழந்தையையும் காலையிலேயே ஆயத்தப்படுத்தி கரிகாலனின் தாயிடம் கொடுத்து விட்டு அறைக்குள் நுழைய அப்போது தான் குளித்து விட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமான கரிகாலன் கையில் இருந்த காயத்தைப் பார்த்தவன் " இப்போ என்ன பண்ணுறது? " என்று யோசித்தபடி ஷேர்ட் பட்டனை ஒற்றைக் கையால் கஷ்டப்பட்டு பூட்டினான்.

அப்போது தான் உள்ளே நுழைந்த மாதவியும் அவனது அடிபட்ட கையை பார்த்தவள் "பக்கத்துல போனா திட்டுவார்" என்று நினைத்தாலும் அவன் கஷ்டப்படுவதை சகிக்க முடியாமல் இருந்தது. .. அவனோ பெருமூச்சுடன் பட்டனை போட்டவனுக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் போல " ஊப் " என்று பெருமூச்சு விட்டவன் தன்னையே இமைக்காமல் பார்த்து இருந்தவளை பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான். அவளோ " நான் ஹெல்ப் பண்ணட்டுமா? " என்று கேட்க " எதுக்கு உனக்கு வேண்டாத வேலை " என்று முடிக்கவில்லை அவனை நெருங்கியவள் " கஷ்டப்படும் போது பார்த்திட்டே இருக்க நான் ஒன்னும் இரக்கம் இல்லாத பொண்ணு இல்ல " என்றவள் அவன் போடப்படாத ரெண்டாவது ஷேர்ட் பட்டனில் கை வைக்க அவனோ அவளது கையை பற்றிக் கொண்டவன் " ஒன்னும் தேவல நானே பார்த்துகிறேன் " என்றான். அவளோ அவனை அழுத்தமாக பார்த்தபடி " கையை எடுங்க " என்று சொல்ல அவள் கண்ணில் என்ன கண்டானோ அவள் கையினை பிடித்தபடி தடுத்து இருந்த கையை விலக்கிக் கொண்டான். அவளோ ஷேர்ட் பட்டனை பூட்டியபடி அவனை மூச்சுக்காற்று படும் அளவுக்கு நெருங்கி நின்றவள் டையை எடுத்து அவன் கழுத்தில் பெரு விரலில் எம்பி நின்று சுற்ற அவனோ அடக்கப்பட்ட புன்னகையுடன் அவள் எம்பியதை பார்த்து தனது உயரத்தை கொஞ்சம் உடலை வளைத்து குறைத்துக் கொள்ள அவளும் மெல்லிய புன்னகையுடன் அவனுக்கு டை கட்ட ஆயத்தமானாள்.

அதுவரை அவனுக்கு தோன்றாத உணர்வுகள் இன்று அவள் அருகாமையில் அவள் மூச்சு காற்று பட்டதுமே கிளர்ந்தெழ அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளோ டை கட்டுவதில் மும்முரமாக இருந்தவள் , டையை கட்டி முடிய அவன் முகத்தை பார்த்து என்ன என்று தலையை அசைத்து கேட்க அவனோ விரல்களை தூக்கி அவள் கன்னத்தில் தவறுத்தலாக அப்பி இருந்த குங்குமத்தை துடைக்க அவளோ அவன் கையை பார்த்தவள் " ஏதும் இருக்கா " என்று கேட்டபடி அவன் கண்களை பார்த்தவளுக்கு ஆயிரம் வால்ட் மின்சாரம் பாய்ந்த உணர்வு..கண்களிலேயே கரை புரண்டோடும் காதலை கண்டவள் கொஞ்சம் ஸ்தம்பித்து போக அவன் விரல்களோ தன்னிலை மறந்து அவள் இதழ்களை வருட அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிய அவன் இதழ்கள் தான் செய்ய போகும் செயலின் வீரியம் புரியாமல் அவள் இதழ்களை நெருங்கியது. அவன் உணரா காதலை அவள் மனம் எப்போவோ உணர்ந்து இருக்க , அவனை விலக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தத்தளிக்க அவள் விழிகளோ அவனது காதல் ததும்பிய விழிகளை ஆழ்ந்து பார்த்தபடி இருந்தது.

அவன் கரமோ அவள் கழுத்தை பிடித்திருக்க பெரு விரலோ அவள் கன்னத்தை வருடியபடி இருக்க முத்தமிட வாகாக அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தி இருந்தான்.

அவள் இதழ்களை நூலளவு இடைவெளியில் நெருங்கிய சமயம் , அவள் இதழில் அவன் இதழ்கள் பதிய போன கணத்தில் அறை கதவு தட்டுப்பட நிதானத்துக்கு வந்தவன் கண்களை மூடி தன்னை சமநிலைப்படுத்தியவாறு வாசலுக்கு திரும்ப அதே நெருக்கத்தில் அவளும் திரும்பிய வேகத்தில் இருவர் இதழ்களும் தாராளமாகவே உரசிக் கொண்டன.. , இதனை எதிர்ப்பாராத இருவரும் தீ சுட்ட போல விலகி கொள்ள அவனோ நெற்றியை நீவியபடி அவளை பார்க்க முடியாமல் கதவை திறந்து வாசலில் நின்ற தாயுடன் பேச ஆரம்பிக்க, அவன் முதுகை பார்த்த மாதவி கண்களை மூடி திறந்தாள்.
 
Top