ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 11

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 11

அவர்கள் தரப்பு அனைவரும் நம்பிக்கை இழந்து போக, பதட்டமாக இருந்தாலும் அவர்கள் கடைசி நம்பிக்கையாக இருந்தது அவர்கள் வக்கீல் தான். அவர்களை தேடி வந்த வக்கீல் விருத்தாச்சலம் காது அருகே குனிந்து "என்ன சார் ஆள் மிஸ்ஸிங்னு சொன்னீங்க இதோ வந்திருக்கா" என்று கேட்க அவரோ "எனக்கும் தெரில, உன்னை தான் நம்பி இருக்கேன்" என்று பதட்டமாக சொன்னார். உடனே வக்கீல் "சரி நான் கேஸை மனிபுலேட் பண்ண பார்க்கிறேன்" என்று சொன்னவன் அவளை ஒரு கணம் பார்த்து விட்டு வக்கீல் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தார்.

அடுத்த கணமே நீதிபதி அங்கு வந்து சேர, அனைவரும் எழுந்து வணக்கம் செலுத்தினார்கள் , முதன் முதலில் சாட்சி கூற கூண்டுக்கு மாதவி அழைக்கப்பட கரிகாலனோ "நான் சொன்னதெல்லாம் நினைவு இருக்கு தானே "என்று மென் சிரிப்புடன் கேட்க அவளும் "ம்ம்" என்றபடி சாட்சி கூண்டில் ஏறினாள். முதலில் எழுந்த அரசு தரப்பு வக்கீல் அவளிடம் சத்திய பிரமாணம் வாங்கி முடிய "மாதவி, நான் துருவி துருவி கேட்க விரும்பல, நடந்ததை நீங்களே சொல்ல முடியுமா?" என்று கேட்க, அவளோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து நீதிபதியை பார்த்தவள் "அன்னைக்கு நான் என் பிரெண்ட் வீட்ட போய்ட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்.,. அப்போ ஒரு கார் என் பின்னாடி வந்து நின்னுச்சு, உள்ளே இருந்து இறங்குன ரெண்டு பேர் நான் திரும்பி பார்த்த கணமே வாயில கை வச்சு பொத்தி தூக்கிட்டு போய் உள்ளே ஏத்துனவங்க கதற கதற என் கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்க. அப்புறம் நான் வலி பொறுக்க முடியாம அலறினேன்.. நாலு பேர் என்கிறதால என்னால அசைய கூட முடியல, உடம்பெல்லாம் ரத்தம், நானும் செத்துட மாட்டேன்னான்னு கடவுள் கிட்ட வேண்டினேன். ஆனா கடைசில என்னை அப்படியே எங்கேயோ என்னை தூக்கி எறிஞ்சாங்க , நானும் தலையில அடிபட்டு மயங்கிட்டேன்" என்று சொன்னவள் கண்ணில் வர இருந்த கண்ணீரை விழ விடாமல் வைத்து இருந்தாள். அவள் காதிலோ "தப்பு செய்யாத நீ ஏன் மா அழணும் ?" என்று கரிகாலன் கேட்டதே விழுந்து கொண்டு இருக்க அவன் வார்த்தைகளுக்காக தனது கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

அரசு தரப்பு வக்கீலும் "அவங்களை அடையாளம் காட்ட முடியுமா?" என்று கேட்க அவளோ நிமிர்ந்து முன்னே நின்றவர்களை பார்த்தவள் "இவங்க நாலு பெரும் தான் " என்று கை காட்ட "சோலி முடிஞ்சு போச்சு" என்று விருத்தாச்சலம் தலையில் கை வைக்க, அவளை வன்மத்துடன் நால்வரும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

உடனே அரசு தரப்பு வக்கீல் "இத விட என்ன சாட்சி வேணும் யோர் ஆனர் " என்று சொன்னவர் "இப்படி பட்ட மன்னிக்க முடியாத குற்றச்சாட்டி செய்த நால்வருக்கும் தகுந்த தண்டனை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு இருக்க, நீதிபதியோ எதிர் தரப்பு வக்கீலை பார்த்து "சாட்சியை குறுக்கு விசாரணை செய்யணுமா?" என்று கேட்க அவனும் "எஸ் யோர் ஆனர் " என்றபடி எழுந்து மாதவி அருகே சென்றான். அவளும் தைரியமாக அவரை எதிர் கொள்ள "மிஸ் மாதவி" என்று அழைத்தான். ஆம் கோர்ட்டில் திருமணம் பற்றி கேள்விகளை தவிர்க்கவே அன்று மாதவியை குங்குமம் வைக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தவன் தாலியையும் ஷால் கொண்டு மறைக்க சொல்லி இருந்தான். கேஸ் வேறு திசையில் செல்ல வைக்க வக்கீல் எந்த எல்லைக்கும் செல்வான் என்று அறிந்த கரிகாலனின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அது.

அவளோ "சொல்லுங்க" என்று கேட்க வக்கீலோ "நீங்க பிரென்ட் வீட்ட போனேன்னு சொல்லி இருக்கீங்க, அந்த சமயத்தில பிரென்ட் வீட்ட என்னம்மா வேல? போனது கேர்ள் பிரென்ட் ஆஹ் இல்ல பாய் பிரெண்டா" என்று கேட்க அவளோ சற்றும் தளராது அவரை அழுத்தமாக பார்த்தாள். வேறு சந்தர்ப்பம் என்றால் அவள் இந்த கேள்விக்கே ஒடிந்து போய் இருப்பாள்..ஆனால் இதே போல கேள்வியை எதிர்பார்த்து வந்தவளுக்கு கரிகாலன் தந்த நம்பிக்கையே மனதில் இருக்க அவனை தைரியமாக எதிர் கொண்டவள் "என் கூட படிச்ச பிரென்ட் தான் சார், பேர் வானதி.. நான் ஒன்னும் பன்னிரண்டு மணிக்கு அவ வீட்ட போகல, கம்பியூட்டர் கிளாஸ்ல அடுத்த நாள் எக்ஸாம், அதனால அவ நோட்ஸ் ஐ கொடுக்க ஒன்பது மணிக்கு தான் அவ வீட்ட போனேன். அப்படி பன்னிரண்டு மணிக்கு போய் இருந்தா கூட அதில என்ன தப்பு இருக்கு சார்?" என்று மாறி கேட்ட கேள்வியில் அதிர்ந்தது என்னவோ அந்த வக்கீல் தான்.

"ம்ம் ரொம்ப விவரமா பேசுறா, கொஞ்சம் கவனமா தான் இவ கிட்ட டீல் பண்ணனும்" என்று நினைத்தவர் "சரி, அப்பாவை துணைக்கு ஏன்மா கூட்டி போகல?" என்று கேட்க அவளோ "என் அப்பா ரெயில்வேல வேலை செய்யுறார் சார், அவருக்கு அன்னைக்கு நைட் டியூட்டி, எல்லாத்துக்கும் மேல நம்ம ஊருல பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இருக்கும்னு நினச்சு தான் சார் போனேன்.. இப்படி பட்ட மிருகங்க இருக்கும்னு தெரிஞ்சா அந்த நேரம் போய் இருக்க மாட்டேன் சார், நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சுன்னு தப்பா சொல்லி தந்துட்டாங்க.. ஆனா ஒரு பொண்ணுக்கு இரவில பாதுகாப்பா நடமாட முடிலன்னா சுதந்திரத்துக்கே அர்த்தம் இல்ல சார்" என்று சொல்ல, அங்கிருந்த அனைத்து அரச அதிகாரிகளும் அவள் பதிலில் கூனி குறுகிப் போனார்கள் கரிகாலன் உட்பட..

உடனே அந்த வக்கீல் அவளை அவமானப்படுத்தும் பொருட்டு "இது என்ன ஸ்பீச் பண்ற இடமா? எதுக்கு இவ்ளோ நீளாமா பேசுறீங்க? கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லுங்க?" என்று சொல்ல அவளோ "எப்படியும் அடுத்தடுத்து கேள்வி கேட்க போறீங்க, முடிஞ்ச அளவுக்கு ஒரே பதிலா சொல்லலாம்னு தான்" என்று சொல்ல அவன் முகம் கருத்து போக, கரிகாலனோ "அப்படி போடு" என்று நினைத்தபடி சிரித்துக் கொண்டான்.

மதுபாலாவோ "புள்ள பூச்சி போல இருந்துட்டு என்ன பேச்சு பேசுறா? எல்லாம் இவன் ட்ரெயினிங் ஆஹ் தான் இருக்கனும்" என்று நினைத்துக் கொள்ள, அரசு தரப்பு வக்கீலோ "ரொம்ப அழகா பொய் சொல்றீங்கம்மா, நான் கூட அந்த ட்ரைவர் தான் பொய் சொல்றான்னு பர்த்தா நீங்க அதுக்கும் மேல இருக்கீங்களே " என்று சொல்ல அவளோ "நான் எதுக்கு சார் பொய் சொல்லணும்?" என்று கேட்டாள். விருதாச்சலத்தின் வக்கீலுக்கு முற்றாக நம்பிக்கை உடைந்த போதிலும் ஏதாவது பேசி கேஸை முடிந்தளவு திசை திருப்ப நினைத்தவன் " உங்க வாக்கு மூலத்தை நம்புற போலவே இல்லையே, அன்னைக்கு இவங்க சிங்கப்பூர்ல இருந்தாங்க , அப்புறம் எப்படி உங்கள ரேப் பண்ண முடியும்? இவங்க மேல ஏதோ வன்மம், அது தான் யாரோ பண்ணுன தப்பை இவங்க மேல போட்டு அவங்கள மாட்டி விட பார்க்கிறீங்க, அவங்க சிங்கப்பூர் போய் வந்ததுக்கான அவங்க பாஸ் போர்ட் எவிடென்ஸ்" என்று போலியாக தயாரிக்கப்பட்ட எவிடென்ஸை அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருந்த மாதவியை பார்த்தபடி நீட்டினான். அதை வாங்கிய நீதிபதி அதனை உற்றுப் பார்க்க, அவளோ " சார், எனக்கு இவங்கள முன்ன பின்ன கூட தெரியாது.. அன்னைக்கு தான் பார்த்தேன்.. எல்லாத்துக்கும் மேல, என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ல இருக்கிற ஸீமன் அனாலிசிஸ் ரிப்போர்ட் அவங்களுடையதோட கண்டிப்பா மேட்ச் ஆகும்" என்று அவள் தேடி படித்த மெடிக்கல் அறிவை வைத்துக் கூற கரிகாலனோ "இவளுக்கு வக்கீல் வச்சு இருக்கவே தேவல" என்று பெருமையாக நினைக்க " தட்ஸ் ட்ரூ யோர் ஆனர் " என்றபடி மெடிக்கல் ரிப்போர்ட்டை நீதிபதியிடம் நீட்டினார் மாதவியின் வக்கீல் . அதைக் கேட்டு எதிர் தரப்பு வக்கீலோ அதிர்ந்து பார்க்க , அந்த நால்வருக்கும் அப்போது தான் தங்களை முழுதாக மெடிக்கல் ரிப்போர்ட் ஜெயிலுக்குள் வைத்து எடுக்க வைத்தது நினைவுக்கு வந்தது. ப்ரொசிஜர் என்று சொன்னதை நம்பி அதற்கு ஒத்துழைத்தவர்கள் ,"என்னத்துக்கு பண்ணுறாங்கன்னு கூட யோசிக்காம மொக்கு தனமா இருந்து இருக்கோமே " என்று தங்களுக்கே திட்டிக் கொள்ள அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட உணர்வு அங்கிருந்த அனைவர்க்கும் உருவானது... விருத்தாசலமோ மகனுக்கு தண்டனை நிச்சயமானதால் வெளியே என்ன பேசுவது என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தாலும் அனல் தெறிக்கும் கோபம் மாதவி மேல் உருவானது என்னவோ உண்மை தான்.

அவர்களின் வக்கீலோ ஸ்தம்பித்து நிற்க, கரிகாலனோ முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் அவளது தைரியத்தில் மிரண்டு தான் போனான். அப்போதும் பொறுக்காமல் "அது ஏன் ரேப் ஆஹ் இருக்கணும் , நீங்க விரும்பி கூட அவங்க கூட இருந்து இருக்கலாமே.. இப்போ கூட அழாம பேசுறீங்களே ..பாதிக்கப்பட்ட பொண்ணு ஆழாம இருக்கிறது விசித்திரமா இருக்கு " என்று சொல்ல, அதைக் கேட்டு கேலியாக சிரித்தவள் "விரும்பி இருந்த பொண்ணோட கன்னம் ஏன் சார் வீங்கி இருக்க போகுது? உடம்பெல்லாம் ஏன் சார் அவ்வளவு காயம் வந்து இருக்க போகுது, இதுக்கு மேல என்ன ஆச்சுன்னு சொல்ல முடியும் சார், ஆனா சில காரணங்களால் வேணாம்னு பார்க்கிறேன், என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ல மொத்தமா நீங்க வாசிச்சு பார்க்க முடியும்.. அடுத்து அழாம பேசுறேனா? தப்பு பண்ணாத நான் ஏன் சார் அழணும் ? என்னை சீரழிச்ச அவனுங்க தான் அழணும். கண்ணீர் விட்டு தான் உண்மைய சொல்லணும்னு சட்டம் இருக்கா என்ன? ஒரு பொண்ணு அழாம தைரியமா பேசுனா பொய் சொல்றான்னு அர்த்தமா? நல்லா இருக்கு உங்க நியாயம் " என்று சொன்னவள் கண்கள் ஒரு கணம் கரிகாலனை தீண்டி செல்ல அவனோ அவளை பார்த்து புன்னகையுடன் இரு கண்களையும் சிமிட்டிக் கொண்டான்.

இதற்கு மேல் வாதாடினால் மொக்கு பட்டம் கட்டி விடுவார்கள் என்று உணர்ந்த அவர்கள் வக்கீல் அமைதியாக அமர்ந்து கொள்ள எழுந்த அரசு தரப்பு வக்கீல் "இதுக்கு மேல ப்ரூப் பண்ண அவசியம் இல்லன்னு நினைக்கேன் யோர் ஹானர் , இந்த குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன் " என்று சொல்ல அனைத்து வாதங்களையும் பார்த்து சாட்சிகளையும் பார்த்த நீதிபதிக்கு இந்த கற்பழிப்பை பண்ணியது நால்வரும் என்று தெளிவாக தெரிந்தது. அவர் உள்ளே நுழையும் போதே சில சமூக ஆர்வலர்கள் "ஜஸ்டிஸ் போர் மாதவி" என்று போர்ட் தாங்கி இருந்ததை பார்த்தவர் , பேனாவை எடுத்து "மாதவியை கற்பழித்தது தெளிவாக தெரிந்த காரணத்தினால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறேன், மேலும் அவர்களுக்கு துணையாக இருந்த சாரதிக்கு பத்து வருட கடூழிய தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கிறேன்" என்று சொன்னவர் எழுந்து கொள்ள விருதாச்சலம் கொஞ்சம் ஆடித் தான் போனார்.

ஆனாலும் எப்படியாவது மகனை வெளியே கொண்டு வர முடியும் என்று நம்பியவர் தனது அரசியல் பேச்சை பேசுவதை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார். அதே சமயம் , அந்த தீர்ப்பில் ஆடிப் போனாலும் "சீக்கிரமே சட்டத்தில் இருக்கிற ஓட்டைய யூஸ் பண்ணி வெளியே வந்து உன்னை வச்சுக்கிறேண்டி" என்று மனதுக்குள் சொன்ன தனஞ்சயன் போலீசாருடன் வெளியேறினான்.

அவள் இறந்து இருந்தால் அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க முடியும்.. ஆனால் கற்பழிப்புக்கு ஏழு வருடங்கள் மட்டுமே குறைந்த பட்ச தண்டனை என்று இருக்கும் போது நீதிபதியோ மாதவிக்காக அதிக பட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை அவர்களுக்கு வழங்கி இருந்தார்.

மாதவிக்கு அந்த மனித மிருகங்களுக்கு கொடுத்த தண்டனை போதாது என்று தோன்றினாலும் தண்டனை வாங்கி கொடுத்த நிம்மதியில் கரிகாலனை நோக்கி வர அவனோ அவளிடம் கையை நீட்டியவன் "கலக்கிட்ட மாதவி" என்று சொல்ல அவளோ மெலிதாக புன்னகைத்தவள் "போகலாமா சார்" என்று கேட்டாள்.

அவனும் அவளுடன் வெளியே வர விருதாச்சலமோ "மகனா இருந்தாலும் அவன் பண்ணுனது தப்பு தான். அவனுக்கு கிடைச்ச தண்டனை சரி" என்று பிளேட்டை மாற்றி போட்டு மக்கள் வாக்குகளுக்காக பேச, அவர் அருகே நின்ற மதுபாலாவும் அவருக்கு ஆதரவாக பேசிக் கொண்டு இருந்தாள். இருவரையும் பார்த்து சலிப்பாக தலை ஆட்டியபடி மாதவியுடன் படியில் இருந்து கரிகாலன் கீழே இறங்கிய சமயம் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள் மீடியா காரர்கள். உடனே அங்கிருந்த பெண் "நீங்களா சார் இவங்கள இவ்ளோ நாளும் வச்சு இருந்தீங்க?" என்று கேட்க அவனோ "எக்ஸ்கியூஸ் மீ?" என்று கேட்டான். அந்த பெண்ணோ "ஐ மீன், உங்க வீட்ட வச்சு இருந்தீங்களா? இவங்கள காணோம்னு தேடிட்டே இருந்தாங்களே" என்று சொன்னாள் . அதைக் கேட்டு அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்து எப்போதும் அவனை சிக்கலில் மாட்டி விட்டுக் கொண்டு இருந்த மதுபாலா வன்மமாக கரிகாலனை பார்த்து சிரிக்க கரிகாலனோ "யார் தேடிட்டு இருந்தாங்க? போலீசுக்கு தெரியும். எனக்கு தெரியும்? வேற யார் தேடினாங்கன்னு சொல்ல முடியுமா மிஸ் "என்றவன் அவள் பெயரட்டையை பார்த்து "மிஸ் கீர்த்தனா" என்று சொல்ல அந்த பெண்ணோ சங்கடத்துடன் "அது" என்று இழுக்க, பக்கத்தில் இருந்த இன்னொருவன் "மிஸ் மாதவி உங்களுக்கு நீதி கிடைச்சுடுச்சுன்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்க உடனே கரிகாலன் பக்கத்தில் இருந்து "மிஸ் மாதவி இல்ல, மிஸிஸ் மாதவி கரிகாலன்" என்று சற்று தள்ளி நின்று பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்த விருத்தாச்சலம் அருகே நின்ற மதுபாலாவை பார்த்தபடி சொல்ல மாதவியோ ஷாலை விலக்கி தாலியை வெளியே எடுத்துப் போட அனைவருக்கும் அந்த புது விஷயம் அதிர்ச்சி தான்.

மதுபாலாவுக்கோ கண்கள் மேலும் விரிய, மனதுக்குள் திட்டிக் கொண்டு இருந்தவளுக்கு நிலை கொள்ளவே முடியவில்லை , அவர்கள் மீது கொலை வெறி ஆத்திரம் கிளம்ப "கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன்" என்று பேசிக் கொண்டு இருந்த விருதாச்சலத்திடம் சொல்லி விட்டு விறு விறுவென இறங்கிச் சென்றாள். மாதவியோ "இப்படி பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கணும்.. ஆனா சட்டம் அப்படி இல்லையே" என்று சொல்ல அடுத்த கேள்வி அவர்கள் திருமணத்தை பற்றி வந்தது.

"சார் வாக்கு கொடுத்தத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா இல்ல பரிதாபபட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?" என்று கேட்க அவனோ "காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..நோ மோர் குவெஷன் ப்ளீஸ் " என்று பொய் சொல்லி அவர்கள் மூக்கை உடைத்தவன் அவள் தோளில் கை போட்டு அழைத்துச் செல்ல அவளோ அவனை திரும்பி பார்த்தாள்.

அதுவரை அவன் மீது மரியாதை கலந்த அன்பை வைத்து இருந்தவளுக்கு இன்று அவளையும் மீறி ஒரு உணர்வு வித்தியாசமாக தோன்ற ஆரம்பித்தது..அவள் பார்வையே அவள் உணர்வை பிரதிபலிக்க அவனோ அவள் பார்வையை அறியாமல் இறுகிய முகத்துடன் முன்னால் பார்த்து செல்ல அதை ஒருவன் பக்கவாட்டாக இருந்து படம் பிடித்ததில் அவள் அவனைப் பார்க்கும் பார்வை கமெராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.

அவனோ அவளை தனது ஜீப்பில் ஏற்றியவன் அவள் அருகே அமர்ந்தபடி ஜீப்பை எடுக்க சொன்னான். அவன் அருகே அமர்ந்து இருந்தவளிடம் " உன் முகத்தில தண்டனை கிடைச்ச சந்தோஷத்தையே காணோமே" என்று சொல்ல அவளோ " கிடைச்ச தண்டனை போதாது சார், ஆனா ஒண்ணுமே பண்ண முடியாது" என்று பெருமூச்சோடு சொல்ல ., அப்போது போட்டிருந்த ரேடியோவில் பிரேக்கிங் நியூஸ் ஆக , " மாதவி வழக்கில் தண்டனை கிடைத்த நான்கு குற்றவாளிகளும் தப்பிக்க முயன்றதால் அவர்களை நோக்கி சுட்டதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலி " என்று செய்தி விழுந்தது.

அதைக் கேட்டு அவள் முகம் புன்னகைக்க கரிகாலனை திரும்பி பார்க்க அவனோ "கொஞ்சம் நல்லாவே சிரிக்கலாமே "என்றான். அவளோ கண்ணீருடன் வாயை மூடி அழ , அவள் அருகே நெருங்கி இருந்தவன் அவள் தலையை வருட, அவன் மார்பில் அவனை தோழனாக நினைத்து சாய்ந்தவள் கண்ணீரில் கரைந்து மனதில் வலி அனைத்தையும் இறக்கி வைத்தாள். அவள் கண்ணீர் அவன் மார்பை நனைத்த போதும் அவனோ அவளுக்காக அவள் தலையை வருடியபடி அப்படியே இருந்தான்.

வீட்டுக்கு வந்ததுமே அவளை கரிகாலனின் தாய் அணைத்துக் கொள்ள, அனைவர் முகத்திலும் புன்னகையே மலர்ந்து இருந்தது.. அன்று அனைவரும் நிம்மதியாக இருக்க, நிம்மதியான உறக்கம் அனைவரையும் தழுவியது.. அதே சமயம் கரிகாலன் திருமணம் மதுபாலாவுக்கு கோபத்தை உச்சத்தில் ஏற்றி விட,அவர்களை அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டவளுக்கு இடியாக விழுந்தது தனஞ்சயனின் இறப்பு. இதனாலேயே அவளது அன்றைய தூக்கம் எங்கோ தொலைந்து போனது.

இரு நாட்கள் கழித்து கமிஷனர் முன்னே நின்று இருந்தான் அவர்களை சுட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் " என்னய்யா பண்ணி வச்சு இருக்க? ஓடுனா காலுல தானே சுடனும்., நீ ஏன் அங்க சுட்ட? " என்று சொல்ல அவனோ "மிஸ் பயர் ஆயிடுச்சு சார்" என்றான். உடனே அவர் "அப்போ நீ பின்னாடி தானே சுட்டு இருக்கணும் , இங்க பாரு மெடிக்கல் ரிப்போர்ட்டை,," என்று சொல்ல, அவனோ "அவனுங்க திரும்புனாங்க சார்" என்று சொன்னான்.

அவரோ "ரொம்ப நல்லா நடிக்கிற மேன் , சரி அத விடு, சுட்டு மீடியாவுக்கு உடனே செத்துட்டாங்கன்னு நியூஸ் போய்டுச்சு, அப்புறம் ஏன்யா மூணு மணி நேரம் கழிச்சு தான் வண்டி ஹாஸ்பிடல் போனது?" என்று கேட்க அவனோ "போற வழியில பெட்ரோல் தீர்ந்திடுச்சு சார், கான்ஸ்டபிள் எல்லாரையும் வச்சு தள்ளிட்டே ஹாஸ்பிடல் கொண்டு போனோம்" என்று சொல்ல அவனை மேலிருந்து கீழ் பார்த்தவர் "சூப்பர்,, அப்போ போன் பண்ணி இருக்கலாம்ல அம்பியூலன்சுக்கு, நாலு பெரும் இறந்து போனதை மீடியாவுக்கு சொன்ன உங்களுக்கு அம்பியூலன்சுக்கு சொல்ல முடியாதா ?எல்லாத்துக்கும் மேல மீடியா உங்க வண்டியை தேடி திரிஞ்சாங்க, அவங்க கூடவா நீங்க வண்டியை தள்ளிட்டே போறதை பார்க்கல?" என்று கேட்க அவனோ " அத அவங்க கிட்ட தான் கேட்கணும் சார்..மீடியாவுக்கு கால் பண்ணினதுமே என்னோட போன் பாலன்ஸ் முடிஞ்சு போச்சு சார் " என்று சொன்னான். அவரோ "சோ நீங்க மிஸ் பயர் ஆனதுல கண்ட இடத்தை பட்டு, பெட்ரோல் இல்லாம வண்டி நின்னு, உங்க போன்ல பாலன்ஸ் முடிஞ்சு. நீங்க அவங்கள காப்பாத்த போராடியும் முடியாம அவங்க ஓவர் ப்ளீட் ஆகி சம்பவ இடத்துலேயே இறந்து இருக்காங்க அப்படி தானே" என்று கேட்க அவனோ "வாவ் பார்த்த மாதிரியே சொல்றீங்களே சார் " என்று சொன்னான்.

அதைக் கேட்ட கமிஷனர் " வேற வழி , " என்றவர் "மூணு மாத சஸ்பென்ஸன் போர் கேயார்லஸ்நெஸ்" என்று சஸ்பென்ஷன் ஆர்டரை நீட்ட அவனோ அவருக்கு சாலியூட் அடித்தபடி வெளியே வந்தவன் அடுத்து போன் எடுத்தது கரிகாலனுக்கு தான்.

அன்று லீவு போட்டிருந்த , காலையில் குளித்து விட்டு வந்த கரிகாலனோ அடித்த போனை எடுத்தவன் "சொல்லுங்க சார்" என்று சொல்ல "எப்படி சார் இப்படி?நீங்க சொன்ன போலவே எல்லாம் சொன்னேன். மூணு மாச சஸ்பென்ஸன் மட்டுமே கிடைச்சுது... நீங்க சொன்ன அவ்ளோ கேள்வி எல்லாம் கேட்டார் சார்.. யூ ஆர் பிரில்லியண்ட்" என்று சொல்ல அவனோ "முதலில் நான் தான் நன்றி சொல்லணும்.. இவ்ளோ பிரச்சனையை தாண்டி ரிஸ்க் எடுத்து நான் சொன்னதுக்காக அவனுங்கள போட்டு இருக்கீங்க.. அதுவும் ரிஸ்க் எடுத்து எங்க சுட சொன்னேனோ அங்க சுட்டு அவனுங்கள நரக வலி அனுபவிக்க வச்சு இருக்கீங்க.. ஐ அம் ஸ்பீச்லெஸ் " என்று சொல்ல அவனோ மறுமுனையில் "ஒண்ணுமே செய்யாத அப்பாவிகளை கொன்னு போலீஸ் டிபார்ட்மென்ட் தேடுற பாவத்தை, கொல்ல வேண்டியவனை கொன்னு புண்ணியமா மாத்துறேன் சார்.. உடனே செத்தா அந்த வலி புரியாது சார், அதான் நீங்க சொன்ன போல வலியை அனுபவிக்க வச்சேன் " என்று சொல்ல மெலிதாக சிரித்த கரிகாலன் "உங்கள போல ஆட்கள் தான் நம்ம நாட்டுக்கு தேவை.. காசுக்கு வேலை செய்யாம மக்களுக்காக வேலை செய்யிறீங்க பாருங்க.. ரியலி ப்ரவுட் ஆப் யூ " என்று சொல்ல "ரொம்ப நன்றி சார்" என்று சொல்ல "என்ஜாய் யோர் ஹாலிடேஸ் " என்று சொன்னபடி போனை வைத்தவன் திரும்பி பார்க்க அங்கு அவன் முன்னே நின்று இருந்தாள் மாதவி. அவன் பேசிய அனைத்தையும் கேட்டவளுக்கு இந்த வேலை பார்த்தது கரிகாலன் என்று தெரிய வர, தன்னையும் மீறி அவனை நோக்கி வேகமாக சென்றவள் அவனை இறுக அணைத்து அவன் மார்பில் கன்னத்தை வைத்தபடி "எப்படி நன்றி சொல்றதுன்னு தெரில சார்" என்று சொல்ல , அவள் கண்ணீரோ அவன் வெற்று மார்பை நனைக்க, அவனோ அவளை அணைக்காமல் அதிர்ச்சியுடன் கைகளை விரித்தபடி விழி விரித்து நின்று இருந்தான்.
 

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 11)


இதை,இதை,இதை தான் எதிர் பார்த்தேன். நூறு குற்றவாளி தப்பிக்கலாம், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாதுங்கிறது உண்மை தான்.
அதே மாதிரி பெண்ணை வன் கொடுமை செஞ்சவங்க இந்த உலகத்துல இருக்கிறதுக்கே, வாழறதுக்கே தகுதியில்லை.
அவங்களுக்கு இந்த தண்டனை தான் சரி. ஸ்பாட் பனிஷ்மெண்ட்
கிடைக்கலைன்னாலும், பீலேட்டட் ஜஸ்டீஸ் கிடைச்சு சம்பந்தப்பட்டவங்களுக்கு கிடைக்கிற மரண தண்டனை ஒரு துளி கண்ணீரை கூட வர வைக்காது.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top