கடிதத்தை தூக்கி அவனிடம் காட்டிய கெளதம் கிருஷ்ணாவோ, "இதுக்காகவா கல்யாணம் வேணாம்னு சொன்ன?" என்றான்...
வம்சி கிருஷ்ணாவோ பெருமூச்சுடன், "இத எழுதுனது யார்னு கண்டு பிடிக்கணும்" என்றான்...
உடனே கெளதம் கிருஷ்ணா, "என்ன வம்சி விளையாடுறியா? நீ இப்படி முட்டாள் தனமா யோசிக்கிற ஆள் இல்லையே... என்னாச்சு உனக்கு? உனக்கு வர்ற ஆயிரம் கடிதங்கள்ல இதுவும் ஒண்ணு, அதுக்காக யார்னு தேட போவியா?" என்றான்...
வம்சி கிருஷ்ணாவோ, அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன், "எனக்கு இப்போ வர்ற ஆயிரம் கடிதங்கள்ல இதுவும் ஒண்ணு, ஆனா நான் முதல் பாடல் சினிமால பாடுன நேரம் எனக்கு வந்த முதல் கடிதம் இவ கிட்ட இருந்து தான்" என்றான்...
கெளதம் கிருஷ்ணா புரியாமல் பார்க்க, "எஸ், முதல் கடிதம்னு சொன்னதுமே ஆசையா எடுத்து படிச்சேன்... அப்புறம் நிறைய கடிதங்கள் வந்த நேரம் அந்த ஆசை தீர்ந்து போச்சு... ஆனா இந்த கடிதம் மேல மட்டும் எனக்கு மோகம்... அவ எழுத்து மேல ஒரு காதல்... இப்போ அவ மேலயும் வந்திடுச்சு... மாதம் மாதம் முதலாம் திகதியானா இந்த கடிதத்துக்கு பார்த்துட்டு இருப்பேன்... யார் எழுதுறாங்கன்னு தெரியல... ஆனா படிக்கும் போது மனசுல அப்படி ஒரு சந்தோஷம்... அவளுக்கு இப்போ தான் என் மேல காதல் வந்து இருக்கு... எனக்கு எப்போவோ வந்திடுச்சு..." என்றான்...
கெளதம் கிருஷ்ணாவோ அவனை முறைத்தவன், "அவனவன் இந்த காலத்துல வாட்ஸ் அப் இன்ஸ்ட்டான்னு ஓடிட்டு இருக்கான்... நீ என்னடா கடிதம் ஓலைன்னு உளறிட்டு இருக்க? பார்க்காமலே காதலா?" என்று கேட்டான்...
"ஏன் பார்க்காம காதல் வர கூடாதா?" என்றான் வம்சி கிருஷ்ணா...
"ஹேய் வம்சி, உன்னை நான் இப்படி ஒரு அவதாரத்துல பார்த்ததே இல்லை... பைத்தியம் போல உளறிட்டு இருக்க, கடிதம் எழுதுனது ஒரு ஆன்டியா இருந்தா என்ன பண்ணுவ? அது கூட பரவாயில்லை... ஆம்பிளையா இருந்தா என்னடா பண்ணுவ?" என்று கேட்டான்...
வம்சி கிருஷ்ணாவிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டுமே...
கௌதம் கிருஷ்ணாவோ, "நீ முறைச்சாலும் பரவாயில்ல, இந்த கேள்விக்கு பதில் சொல்லு" என்றான்... வம்சி கிருஷ்ணாவோ, "எனக்கு இதுக்கு பதில் தெரியலடா, ஆனா இந்த கடிதம் படிக்கும் போது அவ எனக்கானவன்னு தோணிட்டே இருக்கும்" என்றான்...
சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டிய கெளதம் கிருஷ்ணாவோ, "இது எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல... ஆனா இப்படியே அவளை தேடிட்டே இருந்தா உனக்கு கல்யாணமே நடக்காது... உனக்கு நடக்கலைன்னா எனக்கும் நடக்காது... ஏன்னா நீ மூத்த பையனா போயிட்டே" என்றான்...
வம்சி கிருஷ்ணாவோ, "சோ உனக்கு கல்யாணம் நடக்காதுன்னு தான் உனக்கு கவலையா?" என்று கேட்க, கௌதம் கிருஷ்ணாவோ, "இல்லையா பின்ன?" என்று கேட்க, அவன் கையில் இருந்த கடிதத்தை வாங்கி பாக்கெட்டில் வைத்த வம்சி கிருஷ்ணாவோ இதழ் பிரித்து பற்கள் தெரிய சிரித்துக் கொண்டான்...
கெளதம் கிருஷ்ணாவோ, "சரி விடு, உன் வழிக்கே வரேன்... இவளை எப்படி கண்டு பிடிக்க போற?" என்று கேட்டான்...
"அவ என்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கிற போல இருக்கும்... என்னை சுத்தி இருக்கிறான்னு தோணும்" என்றான்...
"முத்தி போச்சு" என்று வாய்க்குள் முணு முணுத்த கெளதம் கிருஷ்ணாவோ, "ஒரு வேளை கல்யாணியா இருக்குமோ? அவ தான் உன்னை சுத்தி வர்றா" என்றான்...
வம்சி கிருஷ்ணாவோ, "அவ கையெழுத்து எனக்கு தெரியாதா? புக்ஸ் எல்லாம் காக்கா கிறுக்குன போல கிறுக்கி வச்சு இருப்பா... இப்படி அழகா அவளுக்கு எழுத வந்தா தானே" என்றான்...
"இந்த பாய்ண்டும் சரி தான்..." என்று சொன்ன கெளதம் கிருஷ்ணாவோ, கையில் இருந்த வாட்ச்சில் திகதியை பார்த்தவன், "ஆஹ் அடுத்த கடிதம் முதலாம் திகதி வரும்ல, இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு" என்றான்.
"எஸ்" என்று சொன்ன வம்சி கிருஷ்ணாவோ மேலும், "அவளை நேர்ல பார்த்தா, அவ கடிதத்துல எழுதுனது எல்லாமே நேர்ல பேச வைக்கணும், இந்த கடிதம் வாசிக்கும் போது என் காதுல ஒரு குரல் கேட்கும்... நான் கற்பனை பண்ணுன அதே குரல் அவ குரலா இருந்தா இன்னும் சந்தோஷமா இருக்கும்" என்று சொல்லிக் கொண்டே, கார் ஜன்னலினூடு வெளியே பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தான்...
இதே சமயம் அவனது தென்றலோ அவனுக்கு கடிதம் எழுதிக் கொண்டே பேனா மற்றும் காகிதத்துடன் வீட்டின் பின் புறம் இருக்கும் கட்டில் அமர்ந்து இருந்தாள்.
மெல்லிய லைட்டின் வெளிச்சத்தில், அவனுக்கான கடிதத்தை ரசனையுடன் எழுதி முடித்து இருக்க, அவள் கையில் இருந்த தொலைபேசியில் அவள் சேமித்து வைத்து இருந்த வம்சி கிருஷ்ணாவின் பாடலும் பாடி முடிய நேரம் சரியாக இருந்தது...
அவன் பாடல்களை கேட்டுக் கொண்டே தான் அவனுக்கு மடல் எழுதுவாள்...
இதழில் மெல்லிய புன்னகை...
கடிதத்தை மடித்து கடித்த உறையில் போட்டவள் அதில் அவனது பெயரையும் எழுதி முடித்து இருக்க, "ஏய் இவ்ளோ நேரம் தூங்காம என்ன பண்ணுற?" என்ற அதட்டல் உள்ளே இருந்து... அவளோ கடிதத்தை கையில் இருந்த புத்தகத்தின் நடுவே வைத்து விட்டு விறு விறுவென உள்ளே சென்று அதனை பத்திரமாக அலுமாரியில் வைத்தவள், சத்தமே இல்லாமல் படுத்துக் கொண்டாள்.
அந்த இரவின் மௌனத்தில், அவன் குரலிசை மட்டும் அவள் காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது... இதழ்கள் மெலிதாக விரிய அந்த சந்தோஷத்திலேயே தூங்கிப் போனாள்.
அவன் இசை, அந்த இரவின் நிசப்தத்தில் அவள் தாலாட்டாக...