திரை 16
இப்படியே சில தினங்கள் கடந்திருக்கும் அமரன் அவனின் படப்பிடிப்புகளில் மும்முரமாகிவிட துஷாராவும் கூட வழக்கம் போல அவளின் வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள்.
இருவரும் இரவு நேரத்தை தவிர பெரிதாக சந்தித்துக்கொள்ளவுமில்லை.
அவளை அணைத்துக்கொண்டு உறங்குவதை தவிர அமரன் அவளை வேறு எதுவுமே செய்யவில்லை. அவளுக்கான உணவு, உடை என்று எதிலும் குறையும் தடையுமில்லை. வேலைக்கு செல்வதில் கூட கட்டுப்பாடு இல்லை. அவளின் குடியிருப்பின் தனிமை கொடுத்த சுதந்திரத்தை இங்கே அவனும் கொடுத்திருந்தான். அதிலும் இரவில் வீட்டிற்கு வர தாமதமானால் அழைத்து வரும் நேரத்தை விசாரித்துக்கொள்வான். அவன் அழைக்காவிட்டால் விஜயிடமிருந்து அழைப்பு வரும்.
சொல்லப் போனால் அமரனுடன் ஒன்றாக இருப்பதை ஊடகத்தினருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வதை தவிர அவளுக்கு இந்த சிறை வாசத்தினால் வேறு எந்த தொந்தரவுமே இல்லை.
அதிலும் முன்பெல்லாம் அசதியின் காரணமாக பல நாட்கள் பட்டினியாக உறங்கியிருக்கின்றாள். ஆனால், அவனுடன் இருக்கின்ற இத்தினங்களில் வயிறு நிரம்பாமல் அவள் உறங்கியதேயில்லை. எத்தனை மணிக்கு வீடு வந்து சேர்ந்தாலும் அவளுக்கான உணவு மேசையில் தயாராக இருக்கும். அவள் வரும் நேரம் பார்த்து உணவை எடுத்து வைக்கவும் கோமதி பணிக்கப்பட்டிருந்தார்.
அன்று அவனுடைய வீட்டிற்கு வரும் போது அவளின் சுதந்திரத்தை பறித்து சிறகொடித்துவிடுவான் என்ற அச்சம் உள்ளுக்குள் இருந்தது தான். ஆனால், இன்று அவன் செய்துகொண்டிருப்பது எல்லாம் அதற்கு மாறாக தான் இருக்கின்றது,
அவனின் இந்த கையாள்கை அவளை மேலும் குழப்பியது. புலி பதுங்குவது பாய்வதற்கு தானோ என்கின்ற எண்ணம் அவளுக்குள் ஆழமாகவும் பதிய தொடங்கியிருந்தது.
எந்த சூழலையும் சுலபமாக சமாளிக்க தெரிந்த துஷாராவிற்கு அந்த வீடு, விஜய், அவன் என்று எல்லாமே பழக்கத்திற்கு வந்திருந்தாலும் எப்பொழுதும் விழிப்புடன் தான் இருந்தாள். அவன் பின்னும் மாயவலை எதுவாக இருந்தாலும் அதில் விழுந்துவிட கூடாது என்கின்ற கவனம் அவளுக்குள் இருந்துகொண்டே தான் இருந்தது.
இப்படியாக நாட்கள் கடந்திருக்க அன்று தீனதயாளனுக்கு விருது வழங்கும் நிகழவுக்கான நாளும் வந்து சேர்ந்திருந்தது. அதே நிகழ்வில் துஷாராவும், அமரனும் கூட சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த வில்லன் என்னும் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
துஷாரா அவ்விருது நிகழ்விற்காக ஆர்வமாக தயாராகிக்கொண்டிருந்தாள்.
அவளின் அலங்காரங்கள் எல்லாம் பெரியதாக ஒன்றுமில்லை. எப்பொழுதும் அணியும் ஜீன்ஸ் ஷர்ட்டிற்கு பதிலாக மஞ்சள் நிறத்தில் அனார்கலி வகை சுடிதார் அணிந்துக்கொண்டாள். அது அழகிய வேலைப்பாடுகளுடன் அவளுக்கு மிக பொருத்தமாக இருந்தது. மிதமாக ஒப்பனையும் செய்துக்கொண்டாள்.
அந்நேரம் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தான் அமரன். படப்பிடிப்பு முடிந்து இப்பொழுதுதான் வீட்டிற்கு வருகின்றான்.
தயாராகிக்கொண்டிருந்தவளை எற இறங்க பார்த்தவன்.
"ரொம்ப சந்தோஷமா இருக்க போலயே? உன்னை அவார்டுக்கு நாமினேட் தான் பண்ணியிருக்காங்க? கிடைக்குமோ கிடைக்காதோ" என்றான் நக்கலாக.
அந்நேரத்திற்கெல்லாம் தயாராகிமுடித்திருந்தவள் உதட்டை சுளித்து அவனை முறைத்து பார்த்தபடியே மெத்தை மீதிருந்த கைப்பையை எடுக்க அவளின் பார்வை அதன் அருகே இருந்த தெடி பேரில் படிந்தது.
அதை எடுத்து முத்தமிட்டபடியே "இன்னிக்கு அப்பாவுக்கு அவார்ட் கிடைக்க போகுது டா குட்டி. அதை வச்சே என்னை மிரட்டிய சில பேரெல்லாம் வயிறெரிஞ்சு சாகட்டும்" என்று அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே சொன்னாள்.
அதில் ஏற்கனவே களைப்பில் சோர்ந்திருந்த அவனின் முகம் மேலும் இறுகிப்போக அவளை முறைத்தபடியே குளியலறைக்குள் புகுந்துக்கொண்டான்.
அவனை கடுப்பேற்றி பார்த்த திருப்தியுடன் ஒரு எகத்தாள புன்னகை சிந்தியவள் விருது விழாவிற்கு கிளம்பியும் விட்டாள்.
அவள் அரங்கத்திற்குள் நுழைந்ததும் அங்கே சிறப்பு பிரமுகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்வரிசையில் தான் தீனதயாளன் கம்பீரமாக அமர்ந்திருந்தார். அவர் அருகேயே போடப் பட்டிருந்த இருக்கையில் அன்புச்செல்வி மற்றும் அனிஷாவும் அமர்ந்திருந்தனர்.
எப்பொழுதும் போல் அவரை பார்த்த துஷாராவின் பார்வையில் ரசனையும் பெருமிதமும் பொங்க புன்னகை முகமாகவே அவரின் அருகே சென்று அவரை அனைத்துவிடுவித்து வாழ்த்துக்கள் சொல்லியவள் அன்புச்செல்வி மற்றும் அனிஷாவிடமும் பேசிவிட்டு தனக்கான இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.
விருது விழா ஆட்டம் பாட்டம் என்று கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திரைத்துறை பிரபலங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக விருதுகளும் வழங்கப்பட சிறந்த இயக்குனருக்கான விருது துஷாராவுக்கு தான் கிடைத்தது.
மேடையில் ஏறி விருதைப் பெற்றுக்கொண்டவள் அவளின் முதல் ஹீரோவான தனது தந்தையின் கையால் அவ்விருதை மீண்டும் பெற்றுக்கொள்ள விரும்புவதாக சொல்ல நிகழ்ச்சி தொகுப்பாளினி தீனதயாளனை மேடைக்கு அழைத்திருந்தார்.
அதில் தீனதயாளனும் மேடையேறி அவளுக்கு அவ்விருதை வழங்க அதை பெரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாள் துஷாரா.
அந்த தந்தை மகளின் பாசப்பிணைப்பை கண்டு அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.
அதனையடுத்து மேலும் சில விருதுகள் வழங்கப்பட சிறந்த வில்லன் பிரிவுக்கான நேரமும் வந்திருந்தது. அந்த விருதிற்கான நியமனங்களின் பெயர்கள் மேடையில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்க அதில் அமரனின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
அவனின் பெயரை கேட்டதும் சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த துஷாராவின் கவனம் தன்னிச்சையாக மேடையில் பதிந்தது.
"தெ பெஸ்ட் வில்லன் அவார்ட் கோஸ் டூ.... நன் அதர் தென் அமரன்" என்று அறிவித்த நேரம் மேடையில் இருந்த திரையில் அவன் அரங்கத்திற்குள் நுழையும் காட்சி ஒளிபரப்பப்பட்டது.
கருப்பு நிற கோர்ட் சூட் மற்றும் கருப்பு நிற கண்ணாடி சகிதம் சிகப்பு கம்பளத்தில் கம்பீரமாக நடந்து வந்துக்கொண்டிருந்தான் அமரன்.
அவன் தோரணைக்கு ஏற்றவாறு பின்னணி இசையும் ஒலிக்க
"ஷூட்டிங் காரணமாக கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேண்டா...அப்படிங்குற மாதிரி கம்பீரமா வந்துட்டிருக்காரு தெ வான் அண்ட் ஒன்லி அமரன் சார்" என்று தொகுப்பாளினி ஆரவாரமாக அறிவித்த நேரம் சரியாக அரங்கத்திற்குள் நுழைந்திருந்தான் அமரன்.
அவனை பார்த்ததும் அரங்கமே அதிரும் வண்ணம் கரகோஷங்களும் ஒலிக்க அதனூடே நேரே மேடைக்கு ஏறியவன் விருதினையும் பெற்றுக்கொண்டான்.
அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்கு அவன் தகுதியானவன் தான் என்றாலும் கூட அதில் துஷாராவிற்கு கடுப்பாக தான் இருந்தது.
மேடையில் நின்றிருந்தவனையே அவள் அழுந்த பார்த்துக்கொண்டிருந்த நேரம் "திமிர் பிடிச்சவன்...ஆனால், ரசிக்காமல் இருக்க முடியலைல" என்றாள் அருகிலிருந்த பெண்ணொருத்தி.
அது வேறு யாருமல்ல அமரனால் திரைத்துறையில் வாய்ப்புகள் இழந்து பாதிக்கப்பட்ட மீரா தான்.
துஷாரா அவளை புருவம் சுருக்கி பார்க்க "இவன் கிட்ட ஒரே ஒரு கிஸ் தான் கேட்டேன். அதுக்கு பெரிய இவனாட்டம் என்னை கிழே தள்ளிவிட்டுட்டான் தெரியுமா? பெரிய அழகன்னு நினைப்பு" என்றாள்.
"நீங்க கேட்டிங்களா?" என்று கேட்டாள் துஷாரா.
அவன் கேட்டான் என்றால் கூட நம்பியிருப்பாள். சினிமா வட்டார தகவல்கள் அவனை அப்படித்தானே சித்தரித்து வைத்திருக்கின்றன.
ஆனால், இவள் கேட்டு அவன் தள்ளிவிட்டானாமே? இந்த இராவணனுக்குள் ஒரு ராமனா என்னும் எண்ணம் தான் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
"நம்ம இண்டஸ்ட்ரியில் இதெல்லாம் சகஜம் தானே. பார்க்க அழகா ஹோட்டா இருக்கானேன்னு கேட்டேன். அதுக்கு ரொம்ப தான் ஓவரா பண்ணான். கோவத்துல கொஞ்சம் திட்டிட்டேன். அதுக்கு போய் என்னோட மொத்த கெரியரையும் காலி பண்ணிட்டான். திமிர் பிடிச்சவன். இப்போ வாய்ப்பே இல்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு மேடம்" என்று புலம்பினாள் அவள்.
அவள் பேசப் பேச துஷாராவின் மூளை வேறொரு திட்டத்திற்குள் சென்றுவிட அவளின் இதழ்களில் ஒரு வன்ம புன்னகை.
"நான் அடுத்து ஒரு படம் பண்ணப்போறேன் அதுல வாய்ப்பு கொடுத்தா பண்ணுவிங்களா?" என்று கேட்டாள்.
"என்ன இப்படி கேட்டுட்டீங்க? சின்ன ரோல்லா இருந்தா கூட சொல்லுங்க பண்ணுறேன். அந்த நிலைமையில தான் நான் இப்போ இருக்கேன்" என்றாள் பரிதாபமாக.
என்ன செய்வது மொத்தமாக காணாமல் போவதற்குள் ஏதாவது செய்து மீண்டும் திரைத்துறைக்குள் வந்துவிட வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
"சின்ன ரோல் எல்லாம் இல்லை. இந்த படத்தோட ஹீரோயினே நீங்க தான்" என்றாள்.
"வாவ்... நிஜமா தான் சொல்லுறிங்களா மேடம்?" என்று அவள் கண்கள் மின்ன துஷாராவின் கையையே பிடித்துவிட்டாள்.
"அதுவும் அந்த ஆன்டி ஹீரோகூட தான் நடிக்க போறீங்க" என்றவளின் பார்வை மேடையில் நின்றிருந்த அமரனில் பதிந்தது.
"வாட், அவன் கூடவா? அதுக்கு அவன் ஒத்துக்கணுமே" என்று அதிர்ச்சியில் ஆரம்பித்து ஆற்றாமையில் முடித்திருந்தாள் மீரா.
"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். உங்களுக்கு ஓகே தானே?"என்றாள் துஷாரா.
"கண்டிப்பா மேடம்" என்று அவளும் ஒப்புக்கொள்ள உள்ளுக்குள் வன்மமாக சிரித்துக்கொண்டாள் பெண்ணவள்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியும் அடுத்தடுத்த விருதுகள் என்று தொடர்ந்து இறுதியாக சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதில் வந்து நின்றது. தீனதயாளன் திரைத்துறையில் செய்துகாட்டிய சாதனைகள் எல்லாம் காணொளியாக்கப்பட்டு திரையில் ஒளிபரப்பப்பட்டது.
அக்காட்சிகள் முடிய தீனதயாளனும் மேடைக்கு அழைக்கப்பட்டு விருது வழங்கி சிறப்பிக்க பட்டார். துஷாராவும் மேடைக்கு அழைக்கப்பட்டிருக்க அவளும் மேடையேறியிருந்தாள்.
மகளுக்கும் தகப்பனுக்குமான தருணம் அது.
பெருமையில் இருவரின் முகமும் பூரித்திருந்தன.
அவர்களின் மகிழ்ச்சி அரங்கத்தில் இருந்த அனைவரின் முகத்திலும் புன்னகையை மலர செய்திருக்க ஒருவனின் பார்வையில் மட்டும் அனல் தகிக்க அவர்களை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.
விருது நிகழ்ச்சியும் நிறைவை அடைந்திருக்க அமரனும் கிளம்பிவிட்டான்.
அரங்கத்தை விட்டு வெளியேற சென்றவனின் விழிகள் ஒரு நொடி தன் தந்தையை விட்டு நீங்காமல் அருகேயே நின்றிருந்த துஷாராவின் மீது வன்மமாக படிய இறுகிய முகத்துடனே கிளம்பியிருந்தான்.
குடும்பம், நண்பர்கள் என்று அனைவரையும் சேர்த்து சந்திக்கும் இத்தகைய சூழல் எப்பொழுதாவது அமைவதில் அனைவரிடமும் பேசிவிட்டு தாமதமாக தான் வீடு சென்று சேர்ந்திருந்தாள் துஷாரா.
உள்ளே நுழைந்தவளிடம் "சாப்பிடுறீங்களாம்மா" என்று கோமதி கேட்க "நான் சாப்பிட்டேன். நீங்க போய் தூங்குங்கக்கா" என்றுவிட்டு அறைக்கு சென்றாள்.
அவள் உள்ளே நுழைந்த நேரம் அறை இருளில் மூழ்கியிருந்தது. அவளின் பார்வை மெத்தையில் பதிய மெத்தை காலியாக இருந்தது.
"அந்த டீமன் இன்னும் வரல போல" என்று முணுமுணுத்துக்கொண்டே விளக்கை போட்டபடி திரும்பியவளுக்கு தூக்கி வாரி போட்டது.
அங்கே இருந்த சோபாவில் தான் கால் மேல் கால் போட்டுகொண்டு தலையை பின்னுக்கு சாய்த்தபடி விழிமூடி அமர்ந்திருந்தான் அமரன். அவன் மடியில் துஷாராவின் தெடி பேர் வேறு இருந்தது.
நெஞ்சில் கை வைத்து நீவிக்கொண்டவளை தலை உயர்த்தி பார்த்தவன் "சுச்சுச்சு...ரொம்ப பயந்துட்டியா டார்லிங்?" என்றான்.
அவனின் கரமோ அந்தக் கரடி பொம்மையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தது.
அவள் அவனை முறைத்து பார்க்க "அங்க உன் அப்பன் கூட அப்படி சிரிச்சிட்டிருந்தியே என்னை மட்டும் ஏன் டார்லிங் முறைச்சு முறைச்சு பார்க்குற" என்றான்.
"என் அப்பாவும் நீயும் ஒண்ணா? நீயெல்லாம் அவர் கால் தூசுக்கு கூட வரமாட்ட" என்றாள்.
"ஆஹான்" என்றவனின் கரம் அந்த பொம்மையில் அழுத்தத்தை கூட்ட "ஏய் உன்னை யாரு அதை எடுக்க சொன்னது. மரியாதையா கொடு. அது என் அப்பா எனக்கு கொடுத்தது"என்று சீறினாள்.
"ஓஹ் இன்டெரெஸ்ட்டிங்" என்று ஒரு மாதிரி வன்மமாக சிரித்தவனின் கருவிழிகள் சட்டென கூர்மை பெற அந்த பொம்மையை எடுத்து திருப்பி திருப்பி பார்த்தான்.
"அதை எதுவும் பண்ணின உன் கையை உடைச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று அவள் சொல்லி முடிக்கவில்லை கையினாலேயே அதை கிழித்து அதனுள் இருந்த பஞ்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக உருவி அவள் முன்னே தூக்கி போட்டான் அவன்.
"சைக்கோவாடா நீ" என்றபடி அவள் அவனை நெருங்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன் அவளை பார்த்துக்கொண்டே அந்த பொம்மையையும் அவன் கையில் எஞ்சியிருந்த பஞ்சையும் மொத்தமாக கீழே போட்டிருந்தான்.
கீழே விழுந்து கிடந்த பொம்மையை பார்த்தாள். மொத்தமாக சிதைந்திருந்தது. மண்டியிட்டு அதன் அருகே அமர்ந்தாள். ஆத்திரமாக வந்தது.
வேக வேகமாக அதனை சுற்றி கிடந்த பஞ்சுகளை அள்ளி எடுத்து அதனுள் திணித்தாள். அவள் வேகத்திலேயே அவளின் சினத்தின் அளவு தெரிந்தது.
சினத்தை கட்டுப்படுத்த முயன்றதில் கண்களில் கண்ணீர் வேறு கோர்த்துக்கொள்ள அப்படியே நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
அவன் முகத்தில் கொஞ்சமும் குற்ற உணர்ச்சியே இல்லை.
"கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உனக்கெல்லாம்" என்றாள்.
அவள் அருகே மண்டியிட்டமர்ந்து அவள் தாடையை அழுந்தப் பற்றி தன்னைப் பார்க்க செய்தான்.
"உன் விஷயத்தை பொருத்தவரைக்கும்… சுத்தமா இல்லை" என்றான்.
கலங்கியிருந்த விழிகளால் அவள் அவனை பார்த்திருக்க "ச்சுச்சுச்சு பாவம்...உயிரே இல்லாத பொம்மைக்கே இப்படி பதறுறியே..." என்று பொய்யாக பரிதாபப்பட்டவன் ஒரு எகத்தாள புன்னகையுடன் எழுந்துச் சென்றான் .
சற்று முன் இருந்த அவளின் மகிழ்ச்சியான மனநிலையை கொஞ்ச நேரத்தில் சிதைத்து விட்டு சென்றான்.
செல்லும் அவன் முதுகையே எரித்து விடுவது போல பார்த்திருந்தவள் அவன் பார்வையிலிருந்து மறைந்ததும் மீண்டும் அந்த பொம்மையை பார்க்க அவள் விழிகளில் இருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு அதன் மேலேயே விழுந்திருந்தது.
அவள் பொக்கிஷமாக வைத்திருந்த பொம்மைக்கு அவன் செய்த கொடுமைக்கு பிறகு துஷாரா அவனிடம் பேசுவதையே மொத்தமாக நிறுத்தியிருந்தாள். அவனாக வம்பு வளர்த்தாலும் அமைதி காத்தாள். இரவில் அவன் அணைத்துக்கொண்டாலும் திமிறுவதில்லை.
அவளின் அந்த அமைதி அவனுக்குள் நெருடலாக தான் இருந்தது. அவளுக்குள் என்ன ஓடுகின்றது என்ற சிந்தனை அவனுக்குள்.
இப்படியே நாட்கள் நகர அவர்களின் புது படத்திற்கான பூஜை போடப்பட்டு அதற்கான வேலைகளும் தொடங்கியிருந்தன.
அப்படத்தில் மீரா தான் கதாநாயகி என்று விஜய் தகவல் தெரிவித்த போதும் கூட "வேணும்னே பண்ணுறா...விடு பார்த்துக்கலாம்" என்று திட்டினானே ஒழிய அன்று துஷாராவிற்கு கொடுத்த வாக்கின் படி மீராவை அப்படத்திலிருந்து மாற்ற சொல்லவுமில்லை.
எல்லாமே துஷாராவின் எண்ணப்படியே தான் நடந்தது. அனைத்து வேலைகளும் துரித கதியில் நடந்து முடிய இதோ அடுத்த வாரம் முதல் நாள் படப்பிடிப்பு என்னும் நிலையில் வந்து நின்றிருந்தார்கள் அனைவரும்.
தக் லைஃப்- Thug life கருத்து திரி
அருமை வாசகர்களே உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நான்🥰
aadvikapommunovels.com