"யோசிச்சுதான் எல்லாம் பண்ணுறியா?" என்று கேட்டான்.
துஷாரா சென்ற பிறகு மாதவனும் அந்த அறையிலிருந்து வெளியேறியிருக்க இப்பொழுது அமரனும் விஜயும் மட்டும் தான் அங்கே இருந்தனர்.
"யோசிக்காமல் எதையும் நான் செய்யுறதில்லை" என்றான் அமரன்.
"தப்பு பண்ணுற அமர்" என்று அவன் சொல்ல "தேங்க்ஸ் ஃபோர் தெ அட்வைஸ்" என்றான் அமரன்.
விஜயிற்கு அதற்கு மேல் அவனிடம் பேசி பயனில்லை என்று புரிந்து விட கையில் இருந்த விரலியை அமரனின் முன்னே இருந்த மேசையின் மீது டங்கென்று வைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறியிருந்தான்.
செல்லும் அவன் முதுகையே ஆழ்ந்து பார்த்த அமரனோ ஒரு பெருமூச்சுடன் விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்தமர்ந்துகொண்டான்.
இங்கே அமரனின் அலுவலகத்திலிருந்து புறப்பட்ட துஷாரா நேரே தீனதயாளனின் இல்லத்திற்கு தான் வந்திருந்தாள்.
என்னவோ இன்று அவளது குடியிருப்புக்கு செல்லவே மனமில்லை.
வீட்டிற்குள் அவள் நுழைந்த நேரம் அன்புசெல்வியும் அனிஷாவும் தான் முன்னறையில் இருந்தனர்.
தீனதயாளனை காணவில்லை. ஆனால், வீட்டில் தான் இருக்கின்றார் என்று தெரியும். வாசலில் அவரின் காரை பார்த்துவிட்டு தான் உள்ளே நுழைந்திருந்தாள்.
உள்ளே நுழைந்தவளின் பார்வை அங்கே சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அனிஷாவில் தான் பதிந்தது.
அமரன் அவளின் இதழ்களை வருடியது நினைவு வந்து போக தலையை உலுக்கி அந்த நினைவுகளை விரட்டியடித்தபடி அனிஷாவின் அருகே இருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள்.
அப்பொழுதுதான் அவள் வந்ததை கவனித்த அனிஷா "ஹாய் க்கா" என்க ''என்ன அதிசயமா காலையிலேயே வந்திருக்க. இன்னிக்கு எங்கேயும் ஊர் சுத்துற வேலை இல்லையா என்ன?" என்று கேட்டார் அன்புச்செல்வி.
துஷாரா அவரை சலிப்பாக பார்க்க "அக்கா வந்ததும் ஆரம்பிக்காதீங்கம்மா" என்று தாயை கடிந்துக்கொண்டாள் அனிஷா.
"ம்கூம்..." என்று நொடித்துக்கொண்ட அன்புச்செல்வி "சாப்பிட்டியாடி... இல்லை எதுவும் எடுத்துட்டு வரட்டுமா?" என்று துஷாராவிடம் கேட்டார்.
"இல்லை ஒன்னும் வேண்டாம்" என்ற துஷாராவின் பார்வை அன்னையின் கையில் இருந்த புகைப்படங்களில் பதிய "என்ன பார்க்குறீங்க?" என்று கேட்டாள்.
"மாப்பிள்ளை போட்டோ" என்று அவர் சொன்னதும் அவளின் புருவங்கள் இடுங்கின.
அதை கவனித்தனர் "உனக்கில்லம்மா...நீ தான் பெரிய ஜான்சி ராணியாச்சே. உனக்கெல்லாம் மாப்பிள்ளை பார்க்க எனக்கு தெம்பில்லை. இது அனிஷாவுக்கு" என்றார்.
"அவ இன்னும் காலேஜே முடிக்கல அதுக்குள்ள என்ன மாப்பிள்ளை? " என்றாள் துஷாரா சற்றே ஆதங்கமாக.
"இந்த வருஷம் முடிச்சிடுவா தானே. மாப்பிள்ளை என்ன இன்ஸ்டன்ட் நூடல்சா ரெண்டு நிமிஷத்துல ரெடி பண்ண? இப்போவே பார்க்க ஆரம்பிச்சா தான் அவள் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி கொடுக்க சரியா இருக்கும்" என்றார்.
"எதுக்கு இவ்வளவு அவசரம் உங்களுக்கு? என்னடி நீயும் ஓகே சொல்லிட்டியா என்ன?" என்று அன்புச்செல்வியிடம் ஆரம்பித்து அனிஷாவிடம் வந்து நிற்க "இதுல எல்லாம் நீ தலையிடாத. எதையாவது பேசி அவள் மனசையும் கெடுத்து வைக்காத?" என்று முந்திக்கொண்டு பதில் சொன்னார் அன்புச்செல்வி.
துஷாரா அவரை முறைத்து பார்க்க "விடுக்கா, அவங்க இப்போ தான் மாப்பிள்ளை போட்டோவே பார்க்குறாங்க. அதுல அவங்களுக்கு ஒரு ஆளை பிடிச்சு, செலக்ட் பண்ணி, எனக்கு பேசி முடிக்க குறைஞ்சது ரெண்டு வருஷமாவது ஆகிடும்" கிண்டல் அடித்தாள் சின்னவள் .
"கொழுப்புடி உங்களுக்கெல்லாம்…உங்களுக்கெல்லாம் நல்ல வாழ்க்கை அமைச்சு தரணுமுன்னு பார்த்து பார்த்து பண்ணுறேன்ல இப்படி தான் பேசுவீங்க” என்று திட்ட "நல்ல வாழ்க்கைனா எது? கல்யாணம் பண்ணிக்கிட்டு நாலு புள்ளை குட்டி பெத்துக்குறது மட்டும் தானா?” என்றாள் துஷாரா வெடுக்கென்று.
"இதோபாருடி ஜான்சி ராணி, நான் ஒன்னும் உன் கிட்ட பேசல. நீ தான் நான் சொல்லறதை கேட்காம ராங்கி பிடிச்சு திரியுற. கண்டதையும் பேசி அவளையும் குழப்பாத" என்று துஷாராவின் மீது கண்டன பார்வை ஒன்றை வீசி விட்டு "இந்த பையனை பாரு" என்று அனிஷாவிடம் ஒருபுகைப்படத்தை நீட்டினார்.
அனிஷா துஷாராவின் முகத்தை பார்க்க இந்தக் கல்யாண பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் இதற்குமேல் அதில் தலையிடவும் அவளுக்கு விருப்பமில்லை.
"என்னை எதுக்கு பார்க்குற? பிறகு உங்கம்மா என்னமோ நான் தான் உன் கல்யாணத்தை கெடுக்குற வில்லி மாதிரி பேசுவாங்க. உனக்கு இஷ்டம்னா பண்ணிக்கோ" என்றுவிட்டாள்.
"இப்போவே கல்யாணம் பண்ணிக்க அவசரமில்லக்கா. பட், வேண்டாம்னும் நினைக்கல. சோ, அம்மா மாப்பிள்ளை பார்குறதுல எனக்கு பெருசா அப்ஜெக்ஷ்ன் இல்லை" என்று கண்களை சிமிட்டி சொன்னவள் அன்புச்செல்வி கொடுத்த புகைப்படத்தை கையில் வாங்கிகொண்டாள்.
"அதென்னடி உங்கம்மான்னு சொல்லுற, உனக்கும் தானே அம்மா?" என்று தாயானவர் ஆரம்பிக்க "நீங்க என்ன இவ்வளோ லேட்டா ரியாக்ட் பண்ணுறீங்க?" என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே அலைபேசியில் ஐக்கியம் ஆகிவிட்டாள் துஷாரா.
எப்பொழுதும் எலியும் பூனையும் போல அடித்துக்கொள்ளும் தாயையும் தமக்கையையும் பார்த்து சின்ன புன்னகையுடன் தலையை இடவலமாக ஆட்டிக்கொண்ட அனிஷா கையில் இருந்த புகைப்படத்தை பார்த்தாள்.
பையன் நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவளுக்கு பெரியதாக பிடித்தமில்லை.
"ம்ஹும்... வேற பாருங்கம்மா" என்று மீண்டும் அந்த போட்டோவை அவரிடமே நீட்டினாள்.
"என்னடி நீ, காட்டுறதெல்லாம் ரிஜெக்ட் பண்ணுற. உனக்கு எந்த மாதிரி வேணும்னாவது சொல்லு. மேட்ரிமோனி சைட்ல கூட அக்கௌன்ட் ஓபன் பண்ணி வச்சிருக்கேன். அதுல ஏதும் தேறுதான்னு பாப்போம்" என்றார்.
"எனக்கு..." என்று யோசனையாக இழுத்தவள் "இருங்க வரேன்..." என்றபடி யூடியூபில் ஒரு வீடியோவை தேர்ந்தெடுத்து ஓடவிட்டாள்.
அதில் சினிமா சண்டை காட்சி ஒன்று ஒளிபரப்பாகியது.
அதை சற்று நேரம் பார்த்த அன்புச்செல்வி "அந்த ஹீரோ போல பார்க்கணுமா?" என்று கேட்க "ச்சே...சேச்சே... அந்த வில்லன் மாதிரி வேணும்" என்றாள் அனிஷா.
வில்லன் என்ற ஒரே வார்த்தையில் அலைபேசியில் படிந்திருந்த துஷாராவின் விழிகள் சட்டென தொலைக்காட்சியை நோக்கின.
ஆம், வில்லன் தான் அவளை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் அதே வில்லன் தான் இப்பொழுது திரையிலும் தெரிந்தான்.
"அமரன் மாதிரி பாருங்கம்மா. அதே மாதிரி உயரம், அழகு, சிரிப்பு எல்லாம் இருக்கனும்" என்றாள்.
"என்னடி எல்லாருமே ஹீரோ மாதிரி வேணும்னு கேட்பாங்க. நீ என்ன வில்லன் மாதிரி வேணும்னு சொல்லுற?" என்று கேட்டார் அன்புச்செல்வி.
"ஹீரோவை பார்குறதெல்லம் அந்தக்கலாம். வில்லனை பார்குறதுதான் இப்போ லேட்டஸ்ட் ட்ரெண்ட்" என்று சொல்லி சிரித்தாள் இளையவள்.
"அது என்ன ட்ரெண்டோ" என்று அன்புச்செல்வி முகத்தை சுளிக்க "படத்துக்கு தானேம்மா வில்லன். நிஜத்துல அப்படி இல்லைல. நீங்களே பாருங்க எவ்வளோ அழகா இருக்கார். இவரை எதுக்கு வில்லனா போடுறாங்கன்னு நானே நிறைய முறை யோசிச்சிருக்கேன்”’ என்ற அனிஷாவின் பேச்சில் துஷாரா அவளையே இமைக்காது பார்த்திருக்க 'இவள் வேற புரியாமல் பேசுறாளே. நிஜமாவே அவன் வில்லன் தான் டி' என்று புலம்பிக்கொண்டது அவளது மனது.
“அவரோட வாய்ஸ் கூட ரொம்ப மேன்லியா, செம்மையா இருக்கும். எங்க காலேஜில் இவருக்கு எத்தனை பொண்ணுங்க ஜொள்ளுவிடுவாளுங்கன்னு நீங்க பார்த்ததில்லையே. நான் கூட இவர் நடிச்சா, படத்துல ஹீரோவை விட்டுட்டு இவரை தான் பார்த்துட்டிருப்பேன்" என்று சொல்லியபடி கன்னத்தில் கையை வைத்து அவனை ரசிக்கதொடங்கிவிட்டாள்.
அன்புசெல்வியோ திரையில் தெரிந்த அவனை உற்று பார்த்துவிட்டு "ஆமாடி, பையன் நல்லா தான் டி இருக்கான் . கல்யாணம் ஆகிடுச்சா?"என்று கேட்டார்.
"எதுக்கு?'' என்று சட்டென்று முந்திக்கொண்டு கேட்டாள் துஷாரா.
"ஆகலன்னா, அப்பா கிட்ட சொல்லி விசாரிக்க சொல்லத்தான். நல்லவனா இருந்தா பேசி முடிச்சிடலாம்ல" என்றார் அவர்.
"வெளங்கிடும்" என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்ட துஷாரா "உங்களுக்கு தான் சினிமாக்காரங்கனாலே பிடிக்காதே?" என்று சொல்ல "நான் எப்போ அப்படி சொன்னேன். நீ சினிமால இருக்குறது தான் பிடிக்கலன்னு சொன்னேன். மத்தபடி நான் கல்யாணம் பண்ணியிருக்குறதே சினிமால இருக்குற ஆளை தான். சினிமாவுல எல்லாருமே கெட்டவங்க இல்லைல. உங்கப்பா மாதிரி ஒன்னு ரெண்டு நல்லவங்களும் இருப்பாங்க தானே" என்றார்.
''எல்லாம் உங்க வசதிக்கு வேணும் அதானே?" என்று ஆதங்கமாக சொன்ன துஷாரா "அவன் ஒன்னும் நல்லவன் எல்லாம் கிடையாது. கடைஞ்செடுத்த அயோக்கியன் போதுமா? அவனை பார்குறதை விட்டுட்டு உங்க பொண்ணுக்கு வேற யாரையும் நல்ல பையனா பாருங்க" என்று சீறியவள் விறுவிறுவென அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.
"நல்லவன் இல்லையாம்டி. இப்போ என்ன பண்ண?" என்று அன்புச்செல்வி அனிஷாவை பார்க்க "ஐயோ அம்மா, நான் என்ன அவரையேவா கேட்டேன். அவரை மாதிரி ஒரு ஆளை கேட்டேன் அவ்வளவு தானே. அந்த மாதிரி யாரையாவது தேடி கொடுங்க ஓகே பண்ணுறேன்" என்று விட்டு அவளும் தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டாள்.
அந்த அரக்கனிடமிருந்து தப்பி இங்கே வந்தால் இங்கேயும் அவனின் புராணமே ஓடிக்கொண்டிருக்க கடுப்பில் அழுத்தமான காலடிகளுடன் மாடியேறி வந்தாள்.
அவளது அறையை நோக்கி நடந்தவளுக்கு அலுவலக அறையிலிருந்து தீனதயாளனின் பேச்சுக்குரல் கேட்க அவளின் பாதங்கள் அப்படியே அந்த அறையை நோக்கி நகர்ந்தன.
அவள் உள்ளே எட்டி பார்க்க அவர் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
உள்ளே செல்லாமல் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்றவளின் பார்வை தந்தையானவரின் மீது நிலைத்தது.
இன்னமும் அவரை பற்றி அமரன் சொல்லியது எதையும் அவளால் நம்ப முடியவில்லை. கண் முன்னே ஆதாரங்கள் காட்ட பட்ட பின்பும் கூட மனதிற்குள் ஏதோ ஒரு மூலையில் அது எல்லாம் பொய்த்துப்போக கூடாதா என்கின்ற நப்பாசை.
அவரை ஆழ்ந்து பார்த்தாள். அவளின் தந்தை. அவளின் முதல் ஹீரோ. தலையில் ஆங்காங்கே நரை, கண்ணின் ஓரத்தில் கோடுகள் என்று தோற்றத்தில் கொஞ்சமாக முதுமை எட்டி பார்த்தாலும் அவள் சிறு வயதில் பார்த்து பிரமித்த நிமிர்வும் கம்பீரமும் இன்னமும் அப்படியே இருந்தது.
சற்று நேரத்திற்கு முன் தான் தோல்வியும் கடனும் அவரை நிலைகுலைத்திருந்த காணொளியை பார்த்துவிட்டு வந்திருந்தாள். அந்நிலை நீடிக்குமேயானால் அவரின் நிமிர்வும் கம்பீரமும் தொலைந்து போக கூடுமே.
அவரை அப்படி அவளால் பார்க்க இயலுமா?
யோசனையுடனே அவள் நின்றிருக்க அப்பொழுதுதான் அலைபேசியில் பேசி முடித்திருந்த தீனதயாளன் அவளை கவனித்திருந்தார்.
"என்னம்மா அங்கேயே நின்னுட்ட, உள்ளே வரவேண்டியது தானே" என்றார்.
மென்மையாக சிரித்தவள் "பேசிட்டிருந்திங்க" என்று சொல்லியபடி அவரின் முன்னே இருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள்.
"ஏன், இது நம்ம வீடு தானே நான் வரக்கூடாதா? என்ன எல்லோரும் இதே கேள்வியையே கேட்குறீங்க?" என்று அவள் சலித்துக்கொள்ள சத்தமாக சிரித்தவர் "அம்மா கேட்டாங்களா?" என்று சரியாக கணித்திருந்தார்.
"ம்ம்ம்" என்று அவள் சொல்ல "அவங்க கேட்கலைன்னா தான் அதிசயம்" என்று அதற்கும் சிரித்தார்.
அவரின் புன்னகையில் கனத்திருந்த அவளின் இதயம் மெல்ல இலகுவாகிற்று.
"எப்படி இருக்கீங்க அப்பா?" என்று கேட்டாள்.
சிரிப்பினூடே அவரின் புருவங்கள் இடுங்க " என்னம்மா திடிர்னு கேட்குற?" என்றார்.
"அது…சும்மா தான். நம்ம பேசி நிறைய நாள் ஆகுதுல்ல” என்றாள்.
"அதுவும் சரி தான். சேர்ந்தாப்ல ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து பேசக்கூட நேரமிருக்குறதில்லை" என்றார் அவரும் ஆமோதிப்பாக.
“இப்போ ரிலீஸ் ஆன படம் எப்படி போகுதுப்பா?" என்று துஷாரா கேட்க "பெருசா படம் ஓடலம்மா. நஷ்டம் தான்”என்றார்.
சொல்லும் போதே அவரின் முகம் யோசனையில் சுருங்க அதை அவதானித்தவள் "அதுனால ஏதும் பிரச்சனையாப்பா?" என்று கேட்டாள்.
"சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. சினிமால இதெல்லாம் சகஜம் தானே. நான் பார்க்காத வெற்றியா? தோல்வியா? எல்லாம் சமாளிச்சிடலாம்" என்றார்.
உலக தந்தைகளின் பிரதான வசனம். தீனதயாளனும் அதை தான் சொன்னார். தன் கஷ்டம் குழந்தைகளை பாதிக்க கூடாது என்று நினைக்கும் சராசரி தந்தைகளின் எண்ணம்.
அது அவளுக்கும் புரிய மெல்ல சிரித்துக்கொண்டாள் துஷாரா.
அதில் ஆரம்பித்து எது என்றில்லாமல் இருவரும் பொது செய்திகள் சினிமா என்று பேசிக்கொண்டிருக்க "இப்போ இன்கம் டெக்ஸ் மோசடி எல்லாம் நம்ம இண்டஸ்ட்ரியில் நிறைய நடக்குதுல்ல" என்றாள்.
"ம்ம் அதுவும் இங்க சகஜம் தானேம்மா...எல்லாரும் பண்ணுறது தான்" என்றார்.
"அது தப்பில்லையாப்பா?" என்று கேட்டாள்.
"தப்பு தான். ஆனால், என்ன பண்ணுறது சில நேரம் தெரிஞ்சே தப்பு பண்ணவேண்டியதாகிடுது" என்றார் தீனதயாளன் சர்வ சாதாரணமாக.
"அப்போ நீங்களும் பண்ணியிருக்கிங்க போல?" என்று அவள் கேலி போலவே தூண்டில் போட்டு பார்க்க பதில் சொல்லாமல் வெறுமனே சிரித்துக்கொண்டார்.
முதலில் அவரின் சிரிப்பு அவளின் மனதை இலகுவாக்கியிருந்தது. ஆனால், இப்பொழுது அவர் சிரித்தது இறங்கிய பாரத்தை மீண்டும் ஏற்றி விட்டிருந்தது.
ஆக,அமரன் பொய் சொல்லவில்லை அவனிடம் இருக்கும் ஆதாரங்கள் உண்மையானது தான். அதை தந்தையிடமே உறுதி படுத்திக்கொண்டாள்.
இப்பொழுது அவளின் சிந்தனை தீனதயாளனிலிருந்து விலகி மீண்டும் அமரனிடம் சென்றுவிட அவளிடம் மௌனம்.
அவளின் திடீர் மௌனத்தை கண்டுகொண்டவர் " என்னாச்சும்மா?" என்று கேட்க "ஆஹ்... ஒண்ணுமில்லைப்பா இதை பத்தி ஒரு படமெடுக்கலாமான்னு யோசிச்சேன்" என்று சமாளித்தவள் " சரிப்பா, வேலையா இருக்கீங்க. டிஸ்டர்ப் பண்ணிட்டேன் போல. பிறகு பேசலாம்" என்றபடி எழுந்துக்கொண்டாள்.
"இன்னிக்கு ப்ரீயா இருந்தா, வீட்டிலேயே இரும்மா. சேர்ந்தே லஞ்ச் சாப்பிடலாம்" என்ற தந்தையை பார்த்து சம்மதமாக தலையசைத்தவள் தனது அறைக்குள் சென்று அடைந்துக்கொண்டாள்.
அன்று துஷாராவிற்கு மதிய உணவு, இரவு உணவு என்று எல்லாமே அங்கே தான். நீண்ட நாட்களுக்கு பிறகான ஒன்றுகூடல். என்ன தான் துஷாராவை வைதுக்கொண்டே இருந்தாலும் அன்று முழுவதும் அவளுக்கு பிடித்த பதார்த்தங்களை தான் சமைத்து கொடுத்தார் அன்புச்செல்வி.
இரவு உணவு முடிந்ததும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அனைவரும் தத்தமது அறைக்குள் அடைந்துவிட துஷாராவின் அறைக்கதவு மெல்ல திறக்கப்பட்டது.
''உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி எவ்வளவு நாள் ஆச்சு. இன்னிக்கு உன் கூடவே படுத்துக்குறேன் அக்கா" என்றபடி கையில் தலையணை மற்றும் போர்வையை தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அனிஷா.
"வா" என்றபடி துஷாரா அவளுக்கு இடம் விட்டு நகர்ந்து படுத்துக்கொள்ள அனிஷாவும் அவளின் அருகே படுத்துக்கொண்டாள்.
துஷாராவிடம் வெறும் மௌனம் மட்டுமே. விட்டத்தை பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்.
விக்கிரமாதித்தனின் தோளில் வேதாளம் போல அவள் தலைக்குள் தான் அமரன் ஏறி அமர்ந்திருக்கின்றானே. அவன் எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இவ்வளவு நேரம் அனைவரிடமும் அவள் இயல்பாக பேசியதே பெரிய விடயம் தான்.
ஆனால், நாளை அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே. என்ன சொல்வது என்கின்ற யோசனை அவளிடம்.
அவளையும் விட்டத்தையும் சற்று நேரம் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த அனிஷாவிற்கு பொறுமை போய்விட்டது.
"என்னக்கா உன் கூட பேசிட்டிருக்கலாம்னு வந்தா நீ விட்டத்தையே பார்த்துட்டு படுத்திருக்க" என்றாள் ஆதங்கமாக.
துஷாரா அமைதியாகவே படுத்திருக்க "அப்படி என்ன தெரியுது நானும் பார்க்குறேன்" என்றபடி தலையை துஷாராவின் அருகே கொண்டு சென்று அவளின் தலையோடு ஒட்டி வைத்துக்கொண்டவளும் விட்டத்தை பார்க்க தொடங்கிவிட்டாள்.
"ஒண்ணுமே தெரியலையே" என்று அனிஷா புலம்ப ஒரு ஆழ்ந்த மூச்சுடன் கண்களை அழுந்த மூடி திறந்துகொண்டாள் துஷாரா.
"அனிஷா" என்றாள்.
"ம்ம்ம்" என்றாள் தங்கை.
அவள் துஷாராவை பக்கவாட்டாக திரும்பி பார்க்க அவளின் பார்வை இன்னமும் விட்டத்தில் தான் நிலைத்திருந்தது.
அதில் அனிஷாவும் அதிலேயே பார்வையை நிலைக்க விட "நான் உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன் பதில் சொல்லுறியா?" என்றாள்.
"சொல்லுக்கா" என்றாள் அனிஷா.
"நல்லா யோசிச்சு பதில் சொல்லணும் என்ன?" துஷாரா கேட்க இப்பொழுது அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள் "என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு" என்றாள்.
"கேட்குறதுக்கு பதில் சொல்லு. இப்போ நம்ம பேமிலில ஒருத்தர். அப்பான்னு வச்சிக்கோ. அவர் ஏதோ பெரிய தப்பு பண்ணியிருக்கார். இந்த நேரத்துல ஒருத்தன் வந்து உன்கிட்ட அவர் பண்ணுன தப்புக்கான ஆதாரத்தை எல்லாம் காட்டி உன் அப்பாவை காப்பாத்தணும்னா நீ என் கூட ஒரு நைட் இருக்கணும்னு கேட்டா நீ என்ன பண்ணுவ?" என்று கேட்டாள்.
"ஏன் இப்படி கேட்குற?" என்று அனிஷா கேட்க "அது படத்துல ஒரு சீன். அந்த பொண்ணோட கேரக்டர் அப்படியே உன்னை மாதிரி தான். உன்னை மாதிரி ஒரு பொண்ணு அந்த சிச்சுவேஷன்ல் என்ன முடிவெடுப்பான்னு தெரியணும். அதான் கேட்டேன்" என்றாள்.
"ஓஹ் படத்துக்கா?" என்ற அனிஷாவிடம் "படத்துக்கு தான். பட், நிஜமா உனக்கு நடந்தா நீ என்ன பண்ணுவேன்னு சொல்லு. அப்போ தான் படத்துல லோஜிக்கலா சீன் வைக்க முடியும்" என்றாள்.
"காப்பாத்த வேற வழியே இல்லையா?" என்று கேட்டாள்.
"ம்ஹும்... உன் கிட்ட கேட்குறவன் ஒரு மிருகம். அவனுக்கு என்ன வேணுமோ அதை நடத்திக்க எந்த எல்லைக்கும் போவான்" என்றாள்.
"அப்போ என்னை விட்டு கொடுக்குறதை தவிர வேற வழியில்லையே" என்றாள் அனிஷா.
அவள் எதிர்பார்த்த பதில் தான். அனிஷா இப்படி தான் சொல்வாளென்று அவள் தான் முன்னவே கணித்திருந்தாளே.
"ஆனால், அந்த ஒரு நைட்டுக்கு மட்டும் தான் உயிரோடிருப்பேன்" என்று அவள் அடுத்து சொன்ன வார்த்தையில் மூடியிருந்த அவளின் விழிகள் சட்டென விரிந்துக்கொண்டன.
தங்கையை திரும்பி பார்த்தவள் "என்னடி பயித்தியக்காரத்தனமா பேசுற?" என்று சீற " நீதானேக்கா என்னை மாதிரி பொண்ணுன்னு சொன்ன. அந்த மாதிரி ஒரு வெறிநாய்கிட்ட கடிபட்டுட்டு அதை மறந்து கடந்து போக நான் துஷாரா இல்லை அனிஷா. அந்த தைரியம் எல்லாம் எனக்கு வராது" என்றாள்.
"முட்டாள் மாதிரி பேசாத அனிஷா" என்று துஷாரா சீற "ச்சில் க்கா…எதுக்கு இவ்வளவு கோபப்படுற. படத்துக்காக தானே கேட்ட" என்று தங்கை கேட்க அப்பொழுதுதான் தனது நிலைத்தன்மையை இழக்கின்றாள் என்று சுதாரித்துக்கொண்ட துஷாரா "அங்...ஆஹ்...ஆமா படத்துக்கு தான். ஆனாலும், நீ இவ்வளோ வீக்கா இருக்க கூடாது அனிஷா. பி போல்ட்" என்றாள் முகத்தில் கடுமை காட்டி.
"சரி சரி... ஓகே" என்ற அனிஷா அவளில் இருந்து நகர்ந்து படுத்துக்கொள்ள "சரி நீ தூங்கு. வாஷ்ரூம் போயிட்டு வந்திடுறேன்" என்றவள் குளியலறைக்குள் நுழைந்துகொண்டாள்.
கை நிறைய நீரை அள்ளி முகத்தை அடித்து கழுவிய துஷாரா முன்னிருந்த கண்ணாடியில் தன்னை ஆழ்ந்து பார்த்தாள்.
இனி யோசிக்க எதுவுமில்லை. ஒரு முடிவிற்கு வந்திருந்தாள்.
முன்னிருந்த கண்ணாடியில் தனது பிம்பம் தொலைந்து அமரனின் உருவம் தெரிவது போன்ற பிரம்மை அவளுக்கு. அவளை பார்த்து ஒரு கேலி புன்னகையுடன் லேசாக தலையை சாய்த்து கண்ணடித்தான்.
"ஜெயிச்சிட்டல்ல... சிரி… எவ்வளவு வேணுமோ சிரிச்சிக்கோ. ஆனால், இனி நீ நிம்மதியா இருக்க முடியாது. இருக்க விடமாட்டேன். என்னை பக்கத்திலயே வச்சுக்க ஆசை பட்டல்ல அதுக்காக நல்லா அனுபவிப்ப" என்றாள்.
அவள் பேச பேச முன்னிருந்தவனின் இதழ்கள் புன்னகையில் மேலும் விரிவது போன்று இருக்க அங்கிருந்த குவளையில் வெந்நீரை பிடித்து காண்ணாடியில் விசிறியடித்தாள்.
கண்ணாடியில் தெறித்த நீர் வழிந்து கீழிறங்க அதில் அவன் உருவமும் மெல்ல கலைந்து போயிற்று.
"பெர்ஃபெக்ட்" என்று தன்னை தானே பார்த்து சொல்லிக்கொண்டவள் தோள்பையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவளின் கார் முருகவேலின் அலுவலகத்திற்கு முன்னே நின்ற நேரமே அமரனின் காரும் அங்கே தான் நின்றிருந்தது.
அவனின் காரின் அருகே சென்று ஆழ்ந்து பார்த்தவள் அதன் சக்கரத்தில் ஓங்கி ஒரு உதை விட்டுவிட்டே அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
அவளை நோக்கி வந்த முருகவேலின் காரியதரிசி "உள்ளே போங்க மேடம். சார் உங்களுக்காக தான் காத்துட்டிருக்கார்" என்றாள்.
அவளுக்கு ஒரு தலையசைப்பில் பதில் சொல்லியவள் அந்த அறையின் கதவை மிடுக்காக திறந்தாள்.
கதவை திறந்ததும் அவளுக்கு நேராக அமர்ந்திருந்தது வேறு யாருமில்லை அமரன் தான்.
வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஜீன்ஸில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தோரணையாக அமர்ந்திருந்தான்.
அப்பொழுதுதான் அங்கிருந்த பணிப்பெண் நீட்டிய தட்டிலிருந்து காபி கப்பை அவன் எடுத்திருக்க நேராக அவன் அருகே சென்றவள் அவன் கையில் இருந்த காபி கப்பை வாங்கி எடுத்தபடி அவன் முன்னிருந்த இருக்கையில் தோரணையாக அமர்ந்தாள்.
அவனை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே காபியை ஒரு மிடறு அருந்தியவளை பார்த்தவனின் புருவங்கள் மெல்ல உயர்ந்தன. அவன் இதழ்களில் அவனையும் மீறிய ஒரு புன்னகை. யாருக்கும் தெரியாமல் ஒளித்திருந்தது.
அங்கே தான் நின்றிருந்த விஜயும் அவளை மெச்சுதலாக தான் பார்த்தான். நேற்று அமரன் அவளை மிரட்டிய விதத்திற்கு வேறொரு பெண்ணாக இருந்திருந்தால் இப்படி நிமிர்ந்து நின்றிருப்பாளா என்பது சந்தேகம் தான்.
அங்கிருந்த முருகவேல் "அப்புறம் துஷாரா? என்ன முடிவு பண்ணியிருக்க?" என்று நேரே விஷயத்திற்கு வந்தார்.
அவர் குரல் கேட்டதும் தான் அவரின் புறம் திரும்பிய துஷாரா "சார் நீங்களும் இங்க தான் இருக்கிங்களா? சாரி கவனிக்கல" என்றாள் வேண்டுமென்றே.
அமரனுக்காக அவர் தன்னை மிரட்டிய கோபத்தை இப்படி காட்டினாள். அது அவருக்கும் புரிந்தது தான்.ஆனால், பெரிது படுத்தவில்லை.
"குட் கேர்ள்" என்ற அமரனின் இதழ்களின் ஒருமுனை மெல்ல கீழ் நோக்கி வளைந்தன.
இளக்கார புன்னகை அது.
துஷாராவும் அதை கவனித்தாள். ஆத்திரமாக வந்தது. ஆனால், காட்டவில்லை. பற்களை கடித்து அடக்கிக்கொண்டாள்.
அவன் முள். பொறுமையாகத்தான் கையாள வேண்டும். இல்லையேல் சேதாரம் தனக்கு தான் என்று நன்கறிவாள்.
ஆனால், அவளின் பொறுமையில் அமரனுக்கு நெருடல். அவள் மூளைக்குள் என்ன ஓடுகின்றது என்று அலசியது அவனது பார்வை.
ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தான்.
"ஆல்ரைட் தென்,நான் கிளம்புறேன். ஷூட்டிங் ஷெடியூல், டேட்ஸ் எல்லாம் விஜய் கிட்ட டிஸ்கஸ் பண்ணிக்கோங்க" என்று துஷாராவிற்கும் முருகவேலிற்கும் பொதுவாக சொன்னவன் இருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டான்.
அவன் அவளை தாண்டி சென்ற நேரம் "ஒரு நிமிஷம்" என்றாள்.
அவனது நடை நின்றிருக்க அவளை திரும்பி பார்த்தான்.
இருக்கையிலிருந்து எழுந்து வந்து அவன் முன்னே நின்ற பெண்ணவள் "இந்த படத்தை நான் டைரக்ட் பண்ணுறேன் பட் வித் ஒன் கண்டிஷன்" என்றாள்.
அவன் நினைத்தது சரி தான். அவள் மூளைக்குள் அவனுக்கெதிரான திட்டம் ஒன்று ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.
அதில் அவனது இதழ்கள் மெல்ல விரிய கைகளை பாண்ட் பாக்கெட்டுக்குள் விட்டபடி நிமிர்ந்து நின்றவன் "கண்டிஷன் போடுற இடத்தில் நீ இல்லையே" என்றான்.
"பாம்பு பல்லை பிடிங்கிட்டு அதுகூட விளையாடுறதுல என்ன கிக் இருக்க போகுது" என்றாள் அவள்.
“ஆஹான்” என்று புருவங்களை நெற்றி மேட்டிற்கு ஏற்றியவன் "கோ எஹெட்" என்றான்.
"இந்த படத்தில் உன்னை தவிர மத்த ஆர்ட்டிஸ்ட்,டெக்னிக்கல் டீம் எல்லாம் என் இஷ்டப்படி தான் இருக்கணும்" என்றாள்.
"பழிவாங்க திட்டம் போடுறியா?" என்று அவன் சரியாக கேட்க "ஏன் பயமா இருக்கா?" என்று அவள் கேட்டாள்.
"ஹாஹாஹா" என்று தலையை சற்றே பின்னுக்கு சாய்த்து வாய்விட்டு சத்தமாக சிரித்தான் அமரன்.
அவனது சிரிப்பு மட்டுப்பட்டிருக்க "அஸ் யூ விஷ் டார்லிங்" என்றான்.
"தேங்க்ஸ் டீமன்" என்றாள் அவள்.
இன்னமும் அவனின் இதழ்களில் அந்த புன்னகை மீதமிருக்க "நான் ரெண்டு விஷயம் கேட்டேன். ஒன்னுக்கு தான் சம்மதம் சொல்லியிருக்க" என்றான்.
அவளின் புருவங்கள் இடுங்க அவள் காதருகே குனிந்தவன் "பி மைன்" என்றான்.
சொல்லும்போதே அவனது சூடான சுவாசக்காற்றுடன் சேர்ந்து அவனின் இதழ்களும் அவள் செவிமடலை தீண்டின. அவன் மீது வீசிய வாசனைத்திரவியத்தின் மணம் அவள் நாசியை தீண்டியது.
ஆளுமையான, ஆண்மையை குறிக்கும் மணம் அது அவன் வியர்வையுடன் கலந்து வீச அவனது தனி ஒரு வாசம் அவள் கழுத்தருகே கமழ்வது போன்ற உணர்வு.
சட்டென அவளின் உடலில் ஒரு இறுக்கம். கை முஷ்டிகளை அழுந்தமூடி தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள்.
அவளில் இருந்து விலகும் போதே அவனது இதழ்கள் அவள் கன்னத்தையும் தீண்டின. அவள் கண்களை அழுந்த மூடி திறந்திருந்தாள்.
அவன் முன்னே தைரியமாக நின்றாலும் அவனின் இத்தகைய செயல்கள் அவளை சற்றே தடுமாற செய்கின்றன.
முதுகுத்தண்டு சில்லிடுவது போன்ற உணர்வு. ஆனால், காட்டிக்கொள்ளவில்லை அவள்.
அவனை உறுத்து பார்த்தவள் "சம்மதம் சொல்லாட்டினா மட்டும் விட்டுடவா போறீங்க?" என்று கேட்க "விடமாட்டேன் தான்...பட், நீ சொல்லி கேட்குறதுல ஒரு சாட்டிஸ்பெக்ஷ்ன்" என்றான்.
"சாடிஸ்ட்" என்று திட்டினாள்.
"செ இட்" என்றான் அவன்.
அவளிடம் ஒருநொடி மௌனம்.
அவன் அடைய நினைக்கும் திருப்தியை அவனுக்கு கொடுக்க மனமில்லை. ஆனால், சொல்லாமல் அவன் விடப்போவதுமில்லை.
அதில் "ஐ அம் ஆல் யோர்ஸ்... போதுமா" என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
அங்கே முருகவேல் இருந்தபடியால் இருவரின் பேச்சும் அவர்களுக்கு மட்டுமே கேட்கும் விதமாக தான் இருந்தது.
அவரோ அவர்களை புருவம் இடுங்க பார்த்துக்கொண்டே "என்ன பேசிக்குறாங்க...ஒண்ணுமே புரியலையே" என்றார் விஜயிடம்.
அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தவனோ "எனக்கென்ன தெரியும். நானும் இங்க தானே நிக்குறேன்" என்க "அது சரி" என்று சலித்துக்கொண்டார் அவர்.
இப்பொழுது அவளில் இருந்து பார்வையை விலக்கி முருகவேலை பார்த்த அமரன் "காஸ்டிங், மூவி டீம் எல்லாம் டைரக்டர் மேடமே செலெக்ட் பண்ணிடுவாங்க சார். இனி அதில் தலையிட வேண்டாம்" என்றான்.
"ஓகே சார்" என்று முருகவேலும் உடனே சம்மதித்திருக்க துஷாராவிற்கு அதிர்ச்சி தான். எப்படி அவனால் அனைவரையும் இப்படி விரல் நுனியில் ஆட்டிவைக்க முடிகின்றது என்கின்ற கேள்வி அவளிடம்.
அவள் முகத்தை பார்த்தே அவள் மூளையில் ஓடுவதை கண்டுக்கொண்டவன் "குழப்பமா இருக்கா, ரொம்ப குழம்பி ஸ்ட்ரெஸ் ஆகாத டார்லிங். இந்த படத்துக்கு நான் கோ ப்ரொடியூசர்" என்றான்.
அவள் அவனை அதிர்ந்து பார்க்க "உனக்கு இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? உண்மையில் நீ என்னை தேர்ந்தெடுக்கல. நான் தான் உன்னை தேர்ந்தெடுத்தேன். முருகவேல் சார் கிட்ட உன்னை சஜஸ்ட் பண்ணதே நான் தான். உன் கதையை படிச்சு ஓகே பண்ணதும் நான்தான்" என்றான்.
அப்படியானால் அவளின் திறமைக்காக இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அமரனின் சிபாரிசில் நடந்திருக்கின்றது.
ஆத்திரம், அவமானம் என்று என்ன உணர்வென்றே அவளுக்கு தெரியவில்லை.
"ஏன்?" என்றாள்.
அலட்சியமாக தோள்களை உளுக்கியவன் அவள் கேள்விக்கு பதில் சொல்லவில்லை மாறாக ஒரு மர்ம புன்னகையுடன் "சீ யூ டுநைட் டார்லிங்" என்று விட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
செல்லும் அவன் முதுகையே அதிர்ந்து பார்த்துக்கொண்டு நின்றாள்.
அமரன்.
யார் இவன்?
அவள் நிறுவிய தனக்கான உலகத்தை தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கின்றான். ஏன் எதற்கு என்று எதுவுமே அவளுக்கு விளங்கவில்லை.
சுழலுக்குள் சிக்கிக்கொண்ட உணர்வு.
அவள் சுதாகரித்துக்கொள்ளும் முதலே அவள் அருகே வந்த விஜய் "நைட் உங்களை பிக் அப் பண்ண கார் வரும். ரெடியா இருங்க மேடம்" என்று விட்டு சென்றான்.
அமரனை புரிந்துக்கொள்ளும் முதலே அவனின் குகைக்குள் சென்றாக வேண்டும். பதுங்கும் புலி அவன் எப்பொழுது பாய்ந்து கழுத்தை பிடிப்பான் என்று பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
முதல் முறை உள்ளுக்குள் ஒரு நடுக்கம்.
ஆனால், முடிவெடுத்தாகிவிட்டது இனி மாற்ற முடியாது. தேர்ந்தெடுத்த பாதையில் நடந்தாக வேண்டும். அது எங்கு சென்று முடிந்தாலும் சமாளித்து தான் ஆகவேண்டும்.
"அப்போ நம்ம மத்த விஷயங்களை டிஸ்கஸ் பண்ணிடுவோம்?" என்ற முருகவேலின் குரல் அவளின் சிந்தனையை கலைத்திருக்க ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து நிதானித்து கொண்டவள் "ஓகே" என்றபடி அந்த வேலையில் இறங்கிவிட்டாள்.
முருகவேலிடம் பேசிவிட்டு அடுத்து அவள் சென்றது முந்தைய படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடந்துக்கொண்டிருந்த இடத்திற்கு தான்.
அகிலனும் அங்கே தான் இருக்க அவளை பார்த்ததும் "என்னாச்சு மேம், வேண்டாமுன்னு சொல்லிட்டீங்களா?" என்று கேட்டான்.
'இல்லை' என்று அழுத்தமாக தலையாட்டினாள்.
"இந்த படத்தை நாம தான் பண்ணுறோம். அமரன் தான் லீட். பட், மத்த ஆர்டிஸ்ட் எல்லாம் நான் தான் முடிவு பண்ணுவேன்னு சொல்லியிருக்கேன். அதை பத்தி பிறகு டிஸ்கஸ் பண்ணலாம் அகில்" என்றாள்.
அவள் முகமே வாடியிருக்க "ஆர் யூ ஓகே மேம்?" என்று அக்கறையாக கேட்டான் அவன்.
"நோப்... பட், பார்த்துக்கலாம் விடு" என்றபடி அடுத்த வேலையில் இறங்கிவிட்டாள்.
எதிலும் தேங்கி நின்று அவளுக்கு பழக்கமில்லை. மனதை குழப்பங்கள் குடைந்தாலும் அதிலேயே நின்று காலத்தை கடத்தவில்லை அவள். செய்யவேண்டிய அடுத்த வேலைகளில் கவனமாகிவிட்டாள்.
வேலைகள் அதிகமாகவே இருக்க இரவு மணி பத்தை நெருங்கியிருந்தது. அவள் இன்னும் வீட்டிற்கு செல்லவில்லை.
"இந்த சீன் தேவையில்லைன்னு நினைக்குறேன். இதை கட் பண்ணிடலாம்" என்று அவள் அகிலனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளின் அலைபேசி அலறியது.
முன்னிருந்த கணினி திரையில் கவனத்தை பதித்திருந்தவள் அலைபேசியை பார்க்காமலே எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்றாள்.
"டார்லிங்" என்றான் அவன்.
அந்த அழைப்பிலேயே யார் என்று உணர்ந்துக்கொண்டாள்.
அவளின் முகம் இருகிவிட்டது.
அவளை சுற்றி ஆட்கள் இருக்க சற்றே தள்ளி சென்று பேசினாள்.
அவன் நேரில் பார்ததுப்போல் கேட்டதில் அவளுக்கு சற்று அதிர்ச்சிதான். சட்டென தன்னை சுற்றி பார்த்தாள்.
"தேடாதடி நான் அங்க இல்லை. நீ கோபப்பட்டா அந்த பல்லை அடிக்கடி கடிப்ப. நான் பார்த்திருக்கேன்...ஒரு மாதிரி கியூட்டா இருக்கும்" என்றான்.
'டி' என்று உரிமையாக பேசினான்.
அவன் குரலில் எப்பொழுதும் இருக்கும் ஆளுமையும் அதிகாரமும் இப்போது இல்லை. உரிமை உணர்வு ததும்பி நின்றது. அவள் அவனுக்கு சொந்தம் என்று அவளிடமே நினைவுபடுத்துவது போன்று தொனித்தது அவனது குரல்.
அது அவளுக்கு எரிச்சல் மூட்டியதில் "ம்ப்ச், இப்போ என்ன வேணும். அதை மட்டும் சொல்லு" என்றாள்.
"அதான் சொன்னேனே, நீ தான் வேணும். நம்ம டீலிங்கை மறந்துட்டியா? மணி பத்தாகுது" என்றான்.
அவன் சொல்லிய பிறகே நேரத்தை பார்த்தாள்.
கண்களை அழுந்த மூடி திறந்தவள் "வரேன்" என்று ஒரே வார்த்தையில் பதிலிறுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அவள் குடியிருப்பை அடைந்த நேரம் அமரன் அனுப்பியிருந்த சாரதி அவள் வீட்டு வாசலில் தான் நின்றிருந்தான்.
அவளை பார்த்ததும் "உங்க திங்ஸ் எல்லாம் எடுத்தாச்சு மேடம். எல்லாம் காரில் இருக்கு. வேற எதுவும் வேணும்னா எடுத்துட்டு வாங்க" என்றான்.
"வாட், வீட்டு சாவி எப்படி கிடைச்சுது..." என்று சீறியவளுக்கு தீனதயாளனின் தனிப்பட்டக் காணொளியையே எடுக்க முடிந்த அமரனுக்கு அவளின் வீட்டு சாவியை எடுப்பது எல்லாம் எம்மாத்திரம் என்று தோன்ற ஒரு விரக்தி பெருமூச்சுடனே "லீவ் இட். காரில் வெயிட் பண்ணு வரேன்" என்று விட்டு உள்ளே நுழைந்திருந்தாள்.
அறைக்குள் நுழைந்தவள் அலமாரியை திறக்க அது முக்கால்வாசி காலியாக இருந்தது. ஓரிரு உடைகள் மட்டுமே அங்கே இருக்க அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.
குளித்து விட்டு தயாராகி வந்தவள் தோள்பையை எடுத்துக்கொண்டே வெளியேற போக அவளின் கண்களில் மெத்தையில் கிடந்த தெடி பேர் தென்பட்டது.
அருகே சென்று அதை எடுத்து பார்த்தாள்.
தந்தை அருகே இருக்கும் உணர்வு. வடிந்திருந்த சக்தியை மீள பெறுவது போன்று இருந்தது.
அதை மார்போடு அணைத்துக்கொண்டே"திமிர் பிடிச்ச சாத்தான் ஒருத்தனோட குகைக்குள் போறேன். அவன் என்னை என்ன பண்ணுவானோ தெரியல. ஆனால், என்ன பண்ணாலும் நான் உடைஞ்சு போயிட கூடாது. என் கூடவே இரு என்ன?" என்று அதனிடம் சொல்லிக்கொண்டே நடந்தவள் மேசை இழுப்பறையை திறந்தாள்.
உள்ளே இருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து தோள்பையினுள் போட்டவள் அவளின் தெடி பேருடன்(teddy bear) புறப்பட்டுவிட்டாள்.
அமரனின் வீட்டையும் அடைந்துவிட்டாள்.
அழகிய சொகுசு மாளிகை அது. ஆனால், ரசிக்க தான் முடியவில்லை.
"வந்தாச்சு மேடம்" என்று சாரதி சொல்ல இயந்திர கதியில் கதவை திறந்து கொண்டு இறங்கினாள்.
விஜய் தான் அவளை வாசலில் வரவேற்றான்.
"சாப்பிட்டீங்களா?" என்று கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள் "எங்க போகணும்னு மட்டும் சொல்லுங்க" என்றாள்.
அவளை சாப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றான்.
"சாப்பிட்டிருக்க மாட்டிங்கன்னு நினைக்குறேன்" என்றபடி அங்கிருந்த பெண்ணிடம் கண் காட்ட அவளும் துஷாராவிற்கு உணவு எடுத்து வைத்தாள்.
துஷாரா எதுவும் பேசவில்லை நாற்காலியை இழுத்து போட்டுகொண்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.
உள்ளே அந்த அரக்கன் என்ன செய்வானோ தெரியாது. அவனை சமாளிக்க அவளுக்கு சக்தி வேண்டுமே. மனதளவில் தெம்பிருந்தால் போதுமா? உடலளவிலும் தேவைதானே.
எல்லாவிதத்திலும் அவனை எதிர்கொள்ள தன்னை ஆயுத்தபடுத்திக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
உணவு இறங்க மறுத்தது. ஆனாலும், கஷ்டப்பட்டு உண்டு முடித்திருந்தாள்.
அவளை அழைத்துக்கொண்டு அமரனின் அறை நோக்கி நடந்தான் விஜய். உள்ளுக்குள் நெருடல். தவறு என்று தெரிகின்றது. அவளின் மனநிலை புரிகின்றது. ஆனால், அமரனை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை.
அவர்கள் அமரனின் அறையை அடைந்த நேரம் அங்கே கைகளை மார்பின் குறுக்கில் கட்டிக்கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்றிருந்தான் அமரன்.
அவளை பார்த்ததும் "வெல்கம்…டார்லிங்" என்று அவளுக்கு வழிவிட்டு நின்றான்.
சாவி கொடுத்த பொம்மை போல அறைக்குள் நுழைந்தாள்.
அவனை தாண்டி செல்லும் போது ஒரு நொடி நின்று அவன் முகத்தை பார்த்தாள்.
உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்தன. என்ன யோசிக்கிறான் என்று கணிக்கவே முடியவில்லை.
மௌனமாகவே அறைக்குள் நுழைந்திருந்தாள்.
அவளை தொடர்ந்து அறைக்குள் நுழைந்தவனோ கதவை சாற்ற போக அவனின் பார்வை அங்கேயே நின்றிருந்த விஜயில் படிந்தது.
அமரனையே பார்த்துக்கொண்டிருந்தவனின் தலை 'வேண்டாம்' என்னும் ரீதியில் ஆடியது.
அவனின் அமரன் இப்படி நடந்துக்கொள்வது அவனுக்கு வலித்தது. ஆனால், அவனை தடுக்க முடியாத இயலாமை. அதில் அவனின் கண்கள் லேசாக கலங்கியுமிருந்தன.
நிசப்தமான குளிரூட்ட பட்ட அவனது அறை. அவனும் அவளும் மட்டுமே அந்த அறைக்குள். நேற்றுவரை அவளுக்கு அந்நியனாக இருந்தவனுடன் இன்று அறையை பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒரே கட்டிலில் உறங்க வேண்டும். அதற்கு மேலும் நிகழக் கூடும்
காதலுக்காக அல்ல கட்டாயத்திற்காக.
இதுவரை நிகழ்ந்த அனைத்தையும் கடந்துவிட்டாள் இனி நிகழப்போவதை கடந்துவிட முடியுமா என்று இந்நொடி அவளுக்கே சந்தேகம். யோசனையில் அவள் சிலையாய் சமைந்து நிற்க அவளை பார்த்துக்கொண்டே கட்டிலில் சென்று அமர்ந்தான் அமரன்.
"எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டிருப்ப?" என்று கேட்டான்.
அவன் குரலில் நடப்பிற்கு வந்தவள் அவனை முறைத்து பார்க்க
அவளை எற இறங்க பார்த்தான் அவன்.
இளஞ்சிவப்பு நிறத்தில் டிஷர்ட்டும் நீல நிற ஜீன்சும் அணிந்திருந்தாள்.
"ஒரு புடவை கட்டி வந்திருந்தா வசதியா இருந்திருக்கும்" என்றான்.
அவள் பதிலேதும் பேசாமல் அதே முறைப்புடனே அருகே இருந்த மேசையை நோக்கி நடந்தாள். கையில் இருந்த பையையும் பொம்மையையும் மேசையின் மீது வைத்தாள்.
அவனுக்கு முதுகு காட்டியபடி நின்றிருந்தவள் பையை திறந்து உள்ளிருந்த கத்தியை கையில் எடுத்துக்கொண்டாள்.
கண்களை அழுந்த மூடி ஆழ்ந்த மூச்செடுத்தபடி அவனை நோக்கி திரும்பியவள் கத்தியை அவன் முகத்துக்கு நேராக நீட்டியிருந்தாள்.
மெத்தையில் அமர்ந்திருந்த அமரன் தனக்கு முன் கத்தியுடன் நின்றிருந்த துஷாராவை புருவமுயர்த்தி நையாண்டி பார்வை பார்த்தான்.
"வாவ்...என்ன டார்லிங் காதல் சண்டைக்கு கூப்பிட்டா, கத்தி சண்டைக்கு வந்திருக்க?" நக்கலாக சொன்னவன் அவளை நோக்கி மெல்ல கையை உயர்த்த "டோன்ட் மூவ், உன் கை என் மேல பட்டுச்சுன்னா குத்திடுவேன்" என்றாள்.
"குத்திட்டு ஜெயிலுக்கு போக போறியா?" என்று அவன் கிண்டலிடிக்க "உன் கூட படுக்குறதுக்கு அது பெட்டர்" என்றாள் அவள்.
"ஹாஹாஹா…”’ என்று வாய் விட்டு சிரித்தவன் அப்போ எல்லாத்துக்கும் ரெடியா தான் வந்திருக்க போல".
பேச்சுக்கொடுத்தபடியே அமரன் மெத்தையிலிருந்து எழுந்தரிக்க அவனின் அசைவில் அதிர்ந்தவள் கத்தியை அவனை நோக்கி ஓங்கியிருந்தாள்.
சட்டென கத்தியை பிடித்திருந்த அவளின் கரத்தை தடுத்து பிடித்தவன். அவளை இழுத்து மெத்தையில் போட்டு அவள் மீது தனது மொத்த பாரத்தையும் கொடுத்து அழுத்தியிருந்தான்.
ஆணவனின் பாரம் பெண்ணவளின் உடலை அழுத்தியதில் அவளுக்கு வலித்தாலும் அவனை அடுத்த கரத்தால் தள்ள முயன்றாள்.
அவனை துளியும் அசைக்க முடியவில்லை.
அவளது இருக்கரங்களையும் பிடித்து அவளது தலைக்கு மேல் வைத்து அழுத்தியபடி அவளின் திமிறலை அடக்கினான்.
அவளின் விழிகளை பார்த்துக்கொண்டே கத்தி வைத்திருந்த கரத்தில் அதிக அழுத்தத்தை கொடுத்தான்.
துவண்டுவிடவில்லை அவள்.
கத்தியை இறுகப் பற்றினாள்.
அவனின் பிடியும் மேலும் இறுகியது.
எவ்வளவு முயன்றும் வலித் தாளாமல் ஒருகட்டத்தில் அவளின் பிடி தளர்ந்திருக்க கையில் இருந்த கத்தி நழுவி தரையில் விழுந்திருந்தது.
அவள் விழிகள் கலங்கிவிட்டன.
கலங்கிய விழிகளுடன் அவனை பார்த்தாள். கட்டுப்படுத்த முயல்கின்றாள் முடியவில்லை. கண்ணீர் மெதுவாக இறங்கி அவள் காதுகளை நனைத்தன.
ஆனால், அவள் கண்களில் கெஞ்சல்கள் இல்லை. ‘என்னை விட்டுவிடு’ என்கின்ற இறைஞ்சல்கள் இல்லை. நிஜக்கத்தியால் செய்ய முடியாததை அவளின் குறுவாள் விழிகள் செய்தன.
பார்வையாலேயே அவனை கூறு போட்டாள்.
அவனின் பலத்திற்கு இனி அவளால் அவனுடன் போராட முடியாது என்ற நிதர்சனம் புரிந்தது. அதில் அவளுக்கு தான் சேதாரம் அதிகம் என்று தோன்றியது.
அமரன் அவளையே பார்த்திருக்க "உன்னால அதிக பட்சம் என்னை என்ன பண்ணிட முடியும்? என் சம்மதமில்லாமல் என் உடம்பை எடுத்துக்க முடியும். என் உடம்பை தொட்டுட்டா என்னை ஜெயிச்சிட்டதா நினைக்காத. அது வெறும் ரத்தமும் சதையும் மட்டும் தான். அதால எனக்கு எதுவும் ஆகிடாது. நான் பலவீனமாகிடமாட்டேன். என்னை பலவீனமாக்கிய திருப்தியை உனக்கு கொடுக்க மாட்டேன். இப்போ இருக்குற இதே துஷாரா தான் இந்த பத்து நிமிஷத்துக்கப்புறமும் இருப்பா" என்றவள் கண்களை மெல்ல மூடிக்கொண்டாள்.
தன் முன்னே எந்த எதிர்ப்பும் காட்டாமல் கண் மூடிக் கிடந்தவளை ஆழ்ந்து பார்த்தான் அமரன். அவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை. அவளை அடக்க நினைக்கின்றான், வதைக்க நினைக்கின்றான். அதே நேரம் அவளின் ஆளுமையை ரசிக்கின்றான்.
அவளை வெல்ல வேண்டும். ஆனால், பெண்ணவளின் துணிச்சலில் அவளிடம் தோற்க தான் தோன்றுகிறது அவனுக்கு. அவளின் திடம் அவனின் கடும்பாறை மனதை அசைத்துப் பார்கின்றது.
தூர நின்று பார்க்கும் வரை அவள் மீதுக்கொண்டிருந்த வஞ்சம் அவளை நெருங்கி செல்ல செல்ல எங்கு தொலைந்து போகின்றது என்று அவனுக்கே தெரியவில்லை.
மெல்ல குனிந்து அவள் காதுகளை நனைத்த கண்ணீரை இதழ்களால் துடைத்தவன் "நான் உன்னை தொடாம இருக்குறது உன் கையில் இருக்குற கத்தியில் இல்லை. அது என் கட்டுப்பாட்டில் இருக்கு" என்று சொல்லியபடி அவளில் இருந்து விலகிக்கொண்டான்.
அவள் மெல்ல கண்களை திறந்து அவனை பார்க்க "தூங்கு... இன்னிக்கு உன்னை எதுவும் பண்ண எனக்கும் மூட் இல்லை" என்றபடி கட்டிலுக்கு அடுத்த பக்கம் சென்று படுத்துக்கொண்டான்.
இவ்வளவு நேரம் அவளின் உடலில் இருந்த இறுக்கம் தளர்ந்ததை போன்ற உணர்வு. சட்டென எழுந்துக்கொண்டவள் அறையை சுற்றி பார்வையை சுழலவிட அவள் தேவையை உணர்ந்தவனாய் "பாத்ரூம் அந்த பக்கம்" என்று கைகாட்டினான்.
அவனை முறைத்துவிட்டு விறுவிறுவென குளியலறைக்குள் நுழைந்து கதைவடைத்துக்கொண்டாள் பெண்ணவள்.
செல்லும் அவள் முதுகை பார்த்திருந்தவனின் மனமோ "இன்னிக்கு விட்டு கொடுத்திருக்கேன். ஆனால், விட்டுடமாட்டேன். பாவத்தின் பலனை அனுபவிச்சே ஆகணும்” என்று பொருமிக்கொண்டது.
குளியலறைக்குள் நின்றிருந்த துஷாரா கண்ணாடி முன்னே நின்று முகத்தை அடித்து கழுவினாள். ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பசிக்கொண்ட வேங்கையிடமிருந்து தப்பித்த உணர்வு.
முன்னிருந்த வாஷ் பேசினில் கையை ஊன்றியபடி கண்களை மூடி நின்றாள். சற்றே நிதானமாகிக்கொண்டு வெளியில் வந்தாள்.
கால் மேல் கால் போட்டுக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை கொடுத்து படுத்திருந்த அமரன் அவளை பார்த்ததும் "ரொம்ப பயந்துட்டியா டார்லிங்?" என்று கேட்டான்.
ஆத்திரமாக வந்தது அவளுக்கு. அவளை பயப்படுத்தி பார்ப்பதில் இன்பம் கொள்ளும் பயித்தியக்காரன் போலும் என்று தான் உள்ளுக்குள் ஓடியது.
"சைக்கோ" என்று திட்டியபடி கையில் கிடைத்த ஏதோ ஒன்றை எடுத்து அவன் மீது விட்டெறிந்தாள்.
அது சரியாக அவன் மார்பில் பட்டிருக்க "அவ்ச்…. வலிக்குதுடி" என்று சத்தமாக சிரித்தான்.
அவனை முறைத்துப்பார்த்தபடி இன்னும் ஏதேதோ கெட்டவார்த்தைகளில் வாய்க்குள் அர்ச்சித்துக்கொள்ள "படுத்துட்டே கூட திட்டலாம், நாளைக்கு எனக்கு ஷூட் இருக்கு. இவ்வளவு நேரம் முழிச்சிருந்தா முகம் ஃபிரெஷா இருக்காது. வந்து படு" என்று விளக்கை அணைத்தவன் அவளுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொண்டான்.
அவளுக்குமே உடலும் மனமும் சோர்வாக தான் இருந்தது. மெல்ல நடந்து அவன் அருகே சென்று படுத்துக்கொண்டாள்.
அவளுக்கு முதுகுக்காட்டி படுத்திருந்தான். ஒரே கட்டில் தான் என்றாலும் அவனுக்கும் அவளுக்கும் இடைவெளி இருந்தது.
இன்று அவன் அவளை எதுவும் செய்யப்போவதில்லை. அவனே சொல்லிவிட்டான். ஆனாலும், தூங்கமுடியவில்லை. ஏதோ மூச்சுமுட்டும் உணர்வு.
மெல்ல எழுந்தமர்ந்தாள். கால்களை கட்டிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தமர்ந்துக்கொண்டாள். கன்னத்தை கால் முஷ்டியில் சாய்த்தபடி அவனையே பார்த்திருந்தாள்.
யார் அவன்? எதற்கு இப்படி செய்கின்றான்? என்ற கேள்விகளே மீண்டும் மீண்டும் பூதாகரமாக அவள் மனதில் எழுந்து நின்றன.
திடீரென அவனிடம் ஒரு அசைவு. இலகுவாக அமர்ந்திருந்த அவளின் உடல் தன்னிச்சையாக இறுகி போயிற்று
பாதி தூக்கத்தில் இருந்தவனின் கரம் மெல்ல நீண்டு அவளது இடையை சுற்றியிருந்தது. மெதுவாக அவளை இழுத்து மீண்டும் படுக்க வைத்தான்.
மென்மையான கையாளுகை அவனிடம்.
அவளும் சரிந்துப்படுத்திருக்க அவளை அணைத்தபடியே படுத்துகொண்டான்.
அவனின் மூச்சுக்காற்று அவளின் கழுத்தை தீண்டி செல்ல "தூங்கு டார்லிங், நீ என் கூட போராடனும் தான். பட், அது இன்னிக்கில்லை. தைரியமா தூங்கு" என்று பாதி உறக்கத்தில் உளறல் போல சொன்னான்.
அவனது அணைப்பில் அவள் உறைந்திருந்தாள். அசையாது அப்படியே படுத்திருந்தாள்.
அவள் இடையில் அவனின் கரத்தின் வெப்பம். குனிந்து அவனது கரத்தை பார்த்தாள்.
அவள் அணிந்திருந்த சட்டைக்கும் ஜீன்ஸிற்கும் மத்தியில் பயணித்து அவள் வெற்றிடையில் பதிந்திருந்தது.
எரிச்சலாக பற்களை கடித்தவள் அவனது கரத்தை பிடித்து தள்ள முயன்றாள். முடியவில்லை. அவன் மேலும் அழுத்தத்தை கூட்டினான்.
"டீமன்" என்று முணுமுணுத்தாள்.
"எஸ் ஐ அம்" என்று அவனின் குரலும் அவளின் காதில் கேட்டது.
சட்டென திரும்பி பார்த்தாள். அவனது விழிகள் மூடித்தான் இருந்தன. ஆனாலும், அவளை கவனிக்கின்றான்.
"இப்படி முறைச்சிட்டே இருந்தா இந்த நைட்டே எல்லாம் பண்ணிடலாமா?" என்று அவன் மெல்ல கண்களை திறந்து பார்க்க சட்டென கண்களை மூடிக்கொண்டாள் அவள்.
அவனின் மெல்லிய சிரிப்பொலி காதில் கேட்டது.
சட்டென அவனுக்கு முதுகுகாட்டி அடுத்தப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
அவளின் இடையில் இருந்த கரத்தில் அழுத்தம் கொடுத்து அவளை தன்னை நோக்கி இழுத்திருந்தான்.
அவளின் முதுகு அவனது மார்போடு இணைந்திருக்க "ஸ்வீட் ட்ரீம்ஸ்" என்றவன் அவளை பின்னிருந்து அணைத்தபடியே உறங்கியிருந்தான்.
இரவு மணி நள்ளிரவை தாண்டியிருந்தது.
அமரனின் அணைப்பில் துஷாராவும் உறங்கியிருந்தாள் குளிரூட்டியின் மெல்லிய சத்தமும் அவர்களின் சீரான மூச்சு காற்றும் தான் அந்த அறையை நிரப்பியிருந்தன.
தீடீரென்று ஒரு சத்தம்.
கண்ணாடி பொருள் எதுவோ விழுந்து உடைந்தது போன்று கேட்டது.
பதறியடித்துக்கொண்டு எழுந்திருந்தாள் துஷாரா. ஏற்கனவே பாதுகாப்பற்ற உணர்வில் இருந்தவள் களைப்பின் மிகுதியில் உறங்கியிருக்க திடிரென்று கேட்ட சத்தம் அவளை வெகுவாகவே பதறவைத்திருந்தது.
அமரன் தான் அவளை ஏதும் செய்ய முயல்கின்றானோ என்ற எண்ணம் தான் முதலில் தோன்ற சட்டென திரும்பி அவனை பார்த்தாள்.
அவனும் அவளை போல பதறி தான் எழுந்திருந்தான். ஆனால், அவளை பார்க்கவில்லை. போர்த்தியிருந்த போர்வையை விளக்கி போட்டுவிட்டு அவசரமாக அறையிலிருந்து வெளியேறியிருந்தான்.
அவனை புருவமிடுங்க பார்த்த துஷாராவும் அவனை அரவமில்லாமல் பின்தொடர்ந்தாள்.
வேக எட்டுக்களுடன் அவர்களின் அறைக்கு சற்று தள்ளியிருந்த அறையின் கதவை திறந்தான்.
விஜயின் அறை அது.
மூச்சுவாங்கிய படி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்திருந்தான் விஜய். இடுப்பு வரை போர்வையில் மூடியிருக்க அந்தக் குளிரூட்டப்பட்டிருந்த அறையிலும் முகமெல்லாம் வியர்வையில் நனைந்திருந்தது. இரவு விளக்கு தரையில் விழுந்து உடைந்துகிடந்தது.
வேகமாக அவனது அருகே சென்றான் அமரன்.
விஜயின் விழிகள் பயத்தில் விரிந்திருக்க அவன் தோள் மீது கை வைத்து அழுத்தியவன் "விஜய்" என்றான்.
விஜயிடம் வெறும் மௌனம். அவன் கண்ட கெட்ட கனவின் மிச்சம் தான் இன்னமும் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
சுற்றி ஆண்களின் கூட்டம் அவர்களுக்கு மத்தியில் கைகூப்பி இறைஞ்சும் பெண். அவள் கண்களில் கண்ணீரும் மரண பயமும்.
உடைகள் உருவப்பட்டு அவளை உருக்குலைக்கும் காட்சி.
விஜயின் கண்களிலிருந்து கண்ணீர் மெல்ல இறங்கி அவன் கன்னத்தை நனைத்தது.
அமரனுக்கு தெரியும் அவன் துஷாராவிற்கு செய்ய நினைத்த காரியம் தான் இப்பொழுது விஜயின் இந்நிலைக்கு காரணம்.
உள்ளுக்குள் குற்றவுணர்ச்சி பரவ ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை சமன் செய்துகொண்டான்.
விஜயின் முதுகை மெல்ல வருடிவிட்டான்.
"சாரி, எல்லாத்தையும் நினைவு படுத்திட்டேன்ல" என்றான்.
இப்பொழுது மெதுவாக அவனை திரும்பி பார்த்த விஜய் 'இல்லை' என்று அழுத்தமாக தலையாட்டினான்.
"மறந்திருந்தாத்தானே நினைவு படுத்துறதுக்கு. நான் எப்பவும் எதையும் மறக்கல. மறக்கவும் முடியாது. அந்த வலி எனக்குள்ள எப்பவும் இருந்திட்டே தான் இருக்கும்" என்றான்.
அருகே இருந்த திசுவை எடுத்து விஜயின் முகத்தை துடைத்துவிட்டான் அமரன். நீர் பாட்டிலை திறந்து அவனை பருகச் செய்தான்.
விஜய் சற்றே ஆசுவாசமானதும் அவனை படுக்க வைத்து போர்வையை போர்த்திவிட்டான். அவன் மார்பில் கைவைத்து தட்டிக்கொடுத்தவன் "எதுவும் நினைக்காம தூங்கு விஜய்" என்றான்.
விஜயும் கண்களை மூடி படுத்துக்கொள்ள அவன் உறங்கும் வரை அவன் அருகே தான் அமர்ந்திருந்தான் அமரன்.
விஜயின் சீரான மூச்சுக்காற்று அவன் மீண்டும் உறங்கி விட்டதை உறுதி படுத்தியிருக்க கட்டிலில் இருந்து எழுந்துகொண்டவன் கீழே கிடந்த இரவு விளக்கை எடுத்து வைத்தான். உடைந்த கண்ணாடி துண்டுகளை சுத்தம் செய்தான்.
கதவின் மறைவில் நின்று பார்த்துக்கொண்டிருந்த துஷாராவிற்கு இந்த அமரன் வியப்பாக இருந்தான்.
எப்பொழுதுமே அவன் முகத்தில் இருக்கும் இறுக்கமும் ஆணவமும் இப்பொழுது இல்லை. மிகவும் மென்மையாக தெரிந்தான்.
விஜயிற்கும் அவனுக்கும் தொழில் முறையை தாண்டிய நட்பு ஒன்று இருப்பதை உணர்ந்துக்கொண்டாள்.
அறையிலிருந்து வெளியேறிய அமரனின் பார்வை அங்கு நின்றிருந்த துஷாராவில் நிலைக்க அவளை பார்வையாலேயே எரித்து விட்டு சென்றான்.
நொடிகளில் மாறும் அவனது இயல்பை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இங்கே வந்து முழுதாக ஒரு நாள் கூட முடியவில்லை அதற்குள் ஏதோ மர்ம தேசத்திற்குள் நுழைந்த உணர்வு தான் அவளுக்கு.
அடுத்த நாள் காலையும் இனிதே விடிந்திருந்தது. சூரியனின் தங்க கதிர்கள் ஜன்னலை ஊடுருவி அவளின் கன்னங்கள் தீண்ட மெல்ல துயில் கலைந்தாள் துஷாரா.
அப்பொழுதுதான் குளித்து முடித்து அமரன் தயாராகியிருக்க அறை முழுவதும் அவனின் வாசனைத்திரவியத்தின் மணம் நிறைந்திருந்தது. அது அவனை நினைவூட்ட, அவனின் நெருக்கத்தை நினைவூட்ட சட்டென பதறிக்கொண்டு எழுந்தமர்ந்தாள்.
இன்னமும் உறக்கம் கவ்வியிருந்த விழிகளை தேய்த்து தெளிவாக்கிக் கொண்டவள் நன்கு விழிகளை திறந்து பார்க்க கண்ணாடி முன்னே நின்று தலை வாரிக்கொண்டிருந்தான் அமரன்.
கருநீல நிற ஷர்டுடன் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து தயாராகியிருந்தான்.
அவள் பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தது அவனுக்கு கண்ணாடியூடு தெரிந்திருக்க இதழ்களில் ஒரு நக்கல் புன்னகையுடன் சீப்பை கீழே வைத்தவன் அவளை பார்த்துக்கொண்டே கைக்கடிகாரத்தை எடுத்து அணிந்துக்கொண்டான்.
அவளோ அவன் தன்னை நெருங்கவில்லை என்றதில் நிம்மதி பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டே முகத்தை இருகைகளாலும் அழுந்த தேய்த்துக்கொண்டு நிமிர அவளுக்கு மிக அருகே, அவள் முகத்துக்கு நேரே இருந்தது அவனின் முகம்.
அதில் மீண்டும் பதறியவளின் உடல் தூக்கிவாரி போட சற்றே தலையை பின்னுக்கிழுத்தபடி நெஞ்சில் கைவைத்து தன்னை சமன் செய்துகொள்ள முயன்றாள்.
அதிர்ச்சியில் மூச்சுவாங்க அவனை முறைத்து பார்த்தவளிடம்
"இனி இப்படி தான் அடிக்கடி பதற வேண்டியிருக்கும்...பழகிக்கோ" என்றான்.
அவளின் பார்வையில் அனல் தகிக்க மெல்லிய புன்னகையுடன் சற்றே தலைசாய்த்து கண்ணடித்தவன் அவளின் கன்னம் நோக்கி குனிய அவளிடம் அசைவேயில்லை.
கண்களை மூடி உடலை இறுக்கிக்கொண்டாள்.
அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை.
இதழ்களால் அன்றி சுவாசத்தினால் மட்டுமே அவளை முத்தமிட்டவன் மெல்ல அவளில் இருந்து விலகிக்கொண்டான்.
அவன் தன்னை தீண்டாததை உணர்ந்த பெண்ணவள் விழிகளை திறந்து பார்த்தாள்.
விஜய் அவனுக்காக முன்னறையில் காத்திருக்க "இன்னிக்கு நீ வர வேண்டாம் விஜய். ரெஸ்ட் எடு" என்று அவனிடமிருந்து கார் சாவியை வாங்கி கொண்டு புறப்பட்டு விட்டான்.
துஷாராவிற்கும் ஓய்வு வேண்டும் போல தான் இருந்தது. மர்மத்தின் மறு உருவாக இருக்கும் அமரனை பற்றி சிந்தித்து சிந்தித்தே அவளின் மூளை களைப்படைந்திருந்தது.
இரவு சரியான உறக்கம் இல்லாதது வேறு தலை வலிப்பது போன்று இருக்க இன்றைய நாள் ஓய்வெடுப்பது என்று முடிவெடுத்துக்கொண்டாள்.
அகிலனுக்கு அழைப்பெடுத்து இன்றைய வேலைகளை அவனையே பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள்.
அவள் குளித்துவிட்டு கீழே வந்த தருணம் வீடே நிசப்தமாக இருந்தது. நேற்று சாப்பாட்டு அறைக்கு சென்றிருந்தவள் சமையலறையும் அதை ஒட்டித்தான் இருக்கும் என்ற யூகத்தில் அங்கே செல்ல அவளின் கணிப்பு பொய்க்கவில்லை.
நேரே சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
சமையல்காரி கூட அங்கே இல்லை. அங்கிருந்த பொருட்களை எல்லாம் அலசி பார்த்து தனக்கான காபியை தயார் செய்தவள் அதை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள்.
நின்ற இடத்திலிருந்தே பார்வையை அந்த வீட்டை சுற்றி சுழல விட்டாள்.
"ரெண்டு பேர் இருக்குறதுக்கு எதுக்கு இவ்வளோ பெரிய வீடு" என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டபடியே காப்பி கப்புடன் நடந்தாள்.
கால் போன போக்கில் நடந்ததில் தோட்டத்தை அடைந்திருந்தாள்.
பார்க்கவே ரம்யமாக இருந்தது.
அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் தான் விஜய் அமர்ந்திருந்தான். கையில் புத்தகமொன்று இருக்க அதை வாசித்துக்கொண்டிருந்தான்.
அவனை பார்த்துக்கொண்டே நடந்தாள்.
'டைரெக்ட்டிங் அக்டர்ஸ்' ஜூடித் வெஸ்டன் என்பவரால் எழுதப்பட்ட புத்தகமது.
அவளும் படித்திருக்கின்றாள்.
"டைரக்ஷன்ல இன்டெரஸ்ட் இருக்கா?" என்று கேட்டுக்கொண்டே அவனுக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
புத்தகத்திலிருந்து பார்வையை அகற்றி அவளை பார்த்தான்.
அவளின் தெளிந்த முகமே அமரன் அவளிடம் அத்துமீறவில்லை என்பதை காட்டிக்கொடுத்திருக்க அவனுக்குள் சிறு நிம்மதி.
மெல்ல புன்னகைத்தபடி புத்தகத்தை மூடி மேசை மீது வைத்தவன் "கொஞ்சம்" என்றான்.
அவளும் புன்னகைத்துக்கொண்டாள்.
அதற்குமேல் அவளிடம் என்ன பேசுவது என்று விஜயிற்கு தெரியவில்லை மௌனமாகவே இருந்தான்.
"எனக்கு வீட்டை சுத்திக்காட்டுறிங்களா?" என்று அவளே கேட்டாள்.
அதற்குள் தனி உலகத்தில் சஞ்சரிக்க தொடங்கியிருந்தவன் "அங்...என்ன?"என்க "இல்லை...இனி இங்க தானே இருக்கனும். சுத்தி பார்த்து வச்சுக்கிட்டா வசதியா இருக்கும்ல" என்றாள்.
"அதுக்கென்ன, வாங்க" என்றழைத்துச்சென்றான்.
வீட்டின் எல்லா பகுதிகளுக்கும் அழைத்துச்சென்றான். அதில் முன்னறை, படுக்கையறைகளை தவிர்த்து தமிழ், ஆங்கிலம் என்று புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த வாசிப்பு அறை, அமரனின் அலுவலக அறை, ஜிம், நீச்சல் தடாகம், தற்காப்பு கலைகளுக்கான பயிற்சி அறை என்று எல்லாமே உள்ளடக்கம்.
தனித் தனியாக அமைக்கப்பட்டிருந்த அந்த அறைகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக இருந்தன.
எல்லாவற்றையும் சுற்றி காட்டிக்கொண்டே வந்தவன் தற்காப்பு பயிற்சிக்கான அறையில் நின்றிருக்க "இங்க தான் அமர் மார்ஷல் ஆர்ட்ஸ் எல்லாம் ப்ராக்டிஸ் பண்ணுவான், வீட்டுக்கு வந்தா முக்கால்வாசி நேரம் இங்க தான்" என்றான்.
துஷாராவின் விழிகள் அந்த அறையை சுற்றி சுழன்றன.
நேர்த்தியாக இருந்தது.
அமரனின் ஆளுமைக்கேற்றாற் போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவனின் வாசனை கூட இன்னமும் அந்த அறையில் இருப்பதை போன்ற உணர்வு அவளுக்கு.
தலையை மெல்ல உலுக்கி அந்த உணர்வுகளை துரத்தியடித்தாள்.
சுவற்றில் பாக்சிங் க்ளோவ்ஸ், வாள், சிலம்ப குச்சிகள் என்று இன்னும் அவளுக்கே பெயர் தெரியாத என்னென்னவோ தற்காப்பு உபகரணங்கள் வருசலாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
நேற்று அவளின் கத்தி தாக்குதலை அவன் அவ்வளவு எளிதாக கையாண்டதின் காரணம் இப்பொழுது விளங்கியது. இத்தனையையும் கற்று தேர்ந்தவனிடம் சின்ன கத்தியை காட்டி அவள் மிரட்டியதை நினைத்து அவளுக்கே சிரிப்பும் கூட வந்தது.
"படத்துல அவனுக்கான ஸ்டாண்ட் எல்லாம் அவனே தான் பண்ணுவான். அவனுக்கு பாடி டூப் எல்லாம் கிடையாது தெரியுமா?”’என்ற விஜயிடம் "ஏன், தான் பெரிய இவன்னு எல்லோர் கிட்டயும் காட்டிக்கவா?" கிண்டலடித்தாள் துஷாரா.
"ம்ஹும்..இல்லை. அவனுக்காக அடுத்தவங்க அந்த சாகசங்களை செய்யும் போது ஏதும் ஆகிட கூடாதுன்னு சொல்லுவான்" என்ற விஜயை புருவமுயர்த்தி பார்த்தவள் "அவ்வளோ நல்லவனா அவன்..." என்று அதற்கும் கிண்டல் செய்தாள்.
விஜயிடம் வெறும் சிரிப்பு மட்டும் தான்.
எல்லாவற்றையும் பார்த்து முடித்து இறுதியாக சமயலறைக்குள் அழைத்து வந்தான். குளிர்பதன பெட்டியிலிருந்து பழச்சாறை எடுத்தவன் அதை ஒரு க்ளாசில் ஊற்றி துஷாராவிடம் நீட்டியபடி "இது சமையலறை. காபி போடும் போதே பார்த்திருப்பீங்க தானே. அதான் கடைசியா கூட்டி வந்தேன். அமர் என்னை இந்த பக்கம் விடவே மாட்டான். கேட்டா நான் சமைச்சா சமையலறையை பொசுக்கிடுவேன்னு சொல்லுவான். ஒரே ஒரு முறை ஆம்லெட் போடும் போது முட்டையை கருக்கிட்டேன். அதுக்கு இப்படி" என்றான்.
அவன் சொல்லிய விதத்தில் வாய் விட்டு சிரித்திருந்தாள் துஷாரா.
"அப்போ உங்க பாஸ் நல்லா சமைப்பாருன்னு சொல்லுங்க?" என்க "அது தான் இல்லை. அவன் என்னை விட மோசம். அதுக்கு தான் சமையல்காரி வச்சிருக்கோம்" என்றான்.
"நைட் இருந்தாங்களே அவங்களா? இப்போ எங்க?" என்று கேட்டாள்.
"இன்னிக்கு வரல,லீவு. உங்களுக்கு எதுவும் வேணும்னா கூட அவங்க கிட்ட கேளுங்க. நல்லா சமைப்பாங்க" என்றான்.
பேசிக்கொண்டே இருவரும் மீண்டும் தோட்டத்தில் வந்தமர்ந்துவிட்டார்கள்.
முதலில் அவர்களுக்குள் இருந்த அந்நியத்தன்மை இப்பொழுது இல்லை.
அதில் "இப்போ நீங்க ஓகேயா?" என்று கேட்டாள்.
அவனின் புருவங்கள் குழப்பமாக இடுங்க "அது, நேத்து நைட்டு..." என்று அவள் ஆரம்பிக்கும் போதே அவனுக்கு அவள் கேட்க வருவது புரிந்து விட "அது ஒண்ணுமில்லை. ஜஸ்ட் கெட்ட கனவு" என்று முடித்துக்கொண்டான்.
"ம்ம்ம்... உங்க பாஸ் தான் ரொம்ப பதறிட்டார்" என்றாள் அவள்.
"அவன் அப்படி தான்... கொஞ்சம்னா கூட பதறிடுவான்" என்றான் விஜய்.
"உங்களுக்குன்னா மட்டும்... மத்தபடி அடுத்தவங்கன்னா பதறவிட்டு தான் அவருக்கு பழக்கம். அப்படி தானே? " என்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்த விஜய் "நீங்க நினைக்குற அளவுக்கு அவன் அவ்வளவு மோசமானவன் இல்லை" என்க "ம்ம்ம் ஆமா, பொண்ணுங்களை மிரட்டி கூடவே வச்சுக்குற உத்தமன் தான்" என்றாள் வெடுக்கென்று.
"அதெல்லாம் ஒன்னுமாகாது. அவன் வெளில தான் என்னோட பாஸ். மத்தபடி என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட்" என்றவன் சற்று நிறுத்தி "நீங்க என் கிட்ட எதையோ போட்டு வாங்க நினைக்குறிங்க ரைட்?" என்றான்.
துஷாராவின் கண்கள் அதிர்ந்து விரிந்தன. அவனிடம் அவள் பேச்சுக் கொடுத்ததிற்கான காரணத்தை சரியாக யூகித்துவிட்டான் அல்லவா.
"அது..." என்றவள் இழுக்க "எப்படி கேட்டாலும் நான் அமரனை மீறி எதுவும் சொல்லமாட்டேன்" என்றான்.
"உங்க பாஸ் மாதிரி நீங்களும் ஷார்ப் தான்" மென்மையாக புன்னகைத்துக்கொண்டாள்.
ஓய்வெடுக்கவென்று அன்று இருவரும் வீட்டிலேயே தங்கி இருந்தாலும் இருவரும் ஓய்வெடுப்பதை தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்தனர்.
எதென்றில்லாமல் சினிமா தொடக்கம் சமையல் வரை என்னென்னவோ பேசினார்கள். அதில் அடுத்த படத்திற்கான கதை, அமரனுக்கான கதாபாத்திரம், அவனின் காட்சிகளுக்கான திட்டமிடல்கள் என்று எல்லாமே உள்ளடக்கம்.
இப்படியே மாலை வேலையும் நெருங்கியிருக்க வீட்டிற்குள் நுழைந்திருந்தான் அமரன்.
முன்னறை நிசப்தமாக இருக்க சமையலறையிலிருந்து சிரிப்பொலி கேட்டது.
துஷாரா மற்றும் விஜயின் சிரிப்பு சத்தம் கலந்து ஒலிக்க சமையலறையை நோக்கி நடந்தான்.
அங்கே துஷாராவும் விஜயும் இணைந்து சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
துஷாராவிற்கும் பெரியதாக சமைக்க தெரியாது. யூடியூபில் தான் பார்த்து பீட்சா செய்துக்கொண்டிருந்தனர் இருவரும்.
துஷாரா சமையல் கட்டில் ஏறி அமர்ந்தபடி காணொளியை பார்த்து செய்முறைகளை சொல்லிக்கொண்டிருக்க விஜயும் அப்ரனை அணிந்துக்கொண்டு அவள் சொல்வதை எல்லாம் கவனமாக செய்துக்கொண்டிருந்தான்.
அதில் ஒரு மேசைக்கரண்டி சர்க்கரைக்கு பதில் அவள் ஒரு கப் என்று அளவை மாற்றி சொல்லியிருக்க விஜயும் அப்படியே போட்டு மாவுடன் கலந்திருந்தான்.
"ஐயோ விஜய்...தப்பு தப்பு. ஒரு கப் இல்லை ஒரு டேபிள்ஸ்பூன் தான்" என்று அவள் சொல்ல "அடிப்பாவி,மிக்ஸ் பண்ணிட்டேனே. இப்போ என்ன பண்ணுறது?” என்று பதறினான்.
"நான் தான் சொன்னேன்னா நீயும் ஒரு கப் சக்கரையை அள்ளி கொட்டிடுவியா? யோசிக்க வேணாம்" என்று அவள் திட்ட "சொன்னது நீ திட்டுறது எனக்கா? அமர் வந்து டின்னர் கேட்டா என்ன பண்ணுவேன். பேசாமல் ஆர்டர் போட்டிருப்பேன்ல. உன் பேச்சை கேட்டு பீட்சா செய்ய வந்தேன் பாரு... " என்று புலம்ப ஆரம்பித்துவிட்டான் விஜய்
"சரி விடு, இதுதான் லேட்டஸ்ட் ரெஸிப்பின்னு சொல்லி கவர் பண்ணிடுவோம்" என்று அவள் சொல்ல,"ஒரு பீட்சா ரெஸிப்பி கூட ஒழுங்கா சொல்லத் தெரியல நீ படமெடுத்து அதில் என் நண்பன் நடிச்சு" என்று அவன் இழுக்க "அதை பத்தி பேசி கடுப்பேத்ததா சொல்லிட்டேன்" என்றாள் அவள்.
அவள் சொல்லியதில் விஜய் சத்தமாக சிரிக்க அருகே இருந்த குடைமிளகாய் அவனை நோக்கி பறந்திருந்தது.
இருவரிடமும் மரியாதை விளிப்புகள் மறைந்திருந்தன. நட்பாக பேசிக்கொண்டனர்.
இதை விழிகள் இடுங்க பார்த்துக்கொண்டிருந்த அமரன் குரலை செருமிக்கொண்டே கதவு நிலையில் சாய்ந்து நின்றான்.
அவனை பார்த்ததும் விஜய் "ஆத்தி, இவன் எப்போ வந்தான்?" என்றபடி குனிந்த தலை நிமிராமல் மாவை பிசைய தொடங்கிவிட சமயல் கட்டின் மேல் அமர்ந்திருந்த துஷாரா கால்களை ஆட்டிக்கொண்டே விஜய் வெட்டி வைத்திருந்த கேரட் துண்டுகளில் ஒன்றை எடுத்து வாயில் வைத்து கடித்தாள்.
அவளை பார்த்துக்கொண்டே "விஜய்" என்றழைத்தான் அமரன்.
அவனை நிமிர்ந்து பார்த்தவனிடம் வெளியில் செல்லும் படி அவன் கண் காட்ட அவனும் துஷாராவை ஒரு பார்வை பார்த்துவிட்டு போட்டிருந்த அப்ரனை கழட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
அழுத்தமான காலடிகளுடன் அணிந்திருந்த ஷர்ட்டின் கைகளை முழங்கை வரை ஏற்றி விட்டபடியே அவளை பார்த்துக்கொண்டே நடந்தான் அமரன்.
அவளை நெருங்கி வந்தவன் அவனது கரங்களை அவளுக்கு இருபுறமும் ஊன்றி அவளை சிறை செய்திருந்தான்.
நெருங்கி நின்றானே தவிர தொடவில்லை.
அவனது பிரத்தியேக மணம் அவளின் நாசியை துளைத்தது. அவனை தவிர அவனது மூச்சுக் காற்றும் வாசனையும் அவளை வஞ்சனையே இல்லாமல் தீண்டி சென்றன.
அவளுக்குள் சின்ன பதற்றம். தடுமாற்றம். அவனது அருகண்மை பயமுறுத்துகின்றது. ஆனால், அவனிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
முகத்தை சகஜமாக வைத்துக்கொண்டே அடுத்த கேரட் துண்டை வாயில் போட்டுக்கொண்டாள்.
"ஒரே நாளில் ரொம்ப கம்ஃபெர்ட்டபிள் ஆகிட்ட போல" என்றான் கரகரத்த குரலில்.
"பழகிக்கோன்னு நீ தானே சொன்ன" என்றாள் அவள்.
"என்னடி, நேத்து எதுவும் பண்ணலன்னு பயம் விட்டு போச்சா?" என்று கேட்டவனின் விழிகள் கேரட்டை மென்றுகொண்டிருந்த அவளின் இதழ்களில் படிந்தன.
"பயமா? உன்னை பார்த்தா? நெவர்" என்று சொல்லியவள் அடுத்த துண்டு கேரட்டை எடுத்து வாயில் வைக்க சட்டென அவளை நோக்கி குனிந்தவனின் இதழ்களுக்குள் அதன் மறுமுனை சிக்கியிருந்தது.
அவனின் இதழ்கள் அவளின் இதழ்களை தீண்டவில்லை.
நூலிழை இடைவெளி மட்டுமே இருவருக்கும்.
அவளை தீண்டாமலே முத்தமிட்டிருந்தான் வில்லனவன்.
அவனின் அதிரடியில் அதிர்ந்த பெண்ணவளின் இதழ்கள் மெல்ல விரிந்துக்கொள்ள கேரட்டை மென்றபடியே அவளில் இருந்து விலகியிருந்தான்.
அவனின் விழிகள் அவளை மொத்தமாக அளக்க வெளிறியிருந்த முகமே அவளின் அகத்தை காட்டிக்கொடுத்திருந்தது.
"பயமில்லாத போல தெரியலையே" என்றபடி ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்க அதில் கடுப்பானவள் அருகே இருந்த ஆப்பிள் பழத்தை அவன் மீது விட்டெறிந்தாள்.
அதை இலாவகமாக பிடித்துக்கொண்டவன் "இந்த முறை இது போதும். அடுத்த முறை..." என்று அந்த ஆப்பிளை கடித்தபடி அவளின் செந்நிற இதழ்களை பார்த்தான்.
அவளுக்கு ஆத்திரம். அவளை சீண்டி பார்த்து விளையாடுவதில் இன்பம் கொள்கின்றான் என்று புரிகின்றது. ஆனால், அவனை ஒன்றும் செய்யமுடியாத தன் நிலையை நினைத்தே ஆத்திரமாக வந்தது.
சினத்தை யார் மீது காட்டுவது என்று தெரியாமல் திணறியவளின் கோபம் மொத்தமும் அங்கே இருந்த கண்ணாடி பொருட்களில் வெளிப்பட்டது.
சமையல் மேடையிலிருந்து பாய்ந்திறங்கியவள் அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அங்கிருந்த கண்ணாடி பொருட்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து அவன் முன்னே போட்டுடைத்தாள்.
சத்தம் கேட்டு ஓடிவந்த விஜய் தான் "துஷாரா...துஷாரா ப்ளீஸ். என்ன பண்ணுற?" என்று அவளை தடுத்துப்பிடித்தான்.
விஜயின் பிடியில் இருந்தவாறே அமரனை நிமிர்ந்து பார்க்க அவன் புன்னகை மாறாத முகத்துடன் "ஐ வாண்ட் மோர் எமோஷன்" என்றான் கிண்டல் தொனியில்.
"அமர்" என்று விஜய சீற "விடு விஜய்…" என்று அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள் "நீ சுலபமா உடைச்சிடலாம்னு நினைக்க நான் ஒன்னும் இந்தக் கண்ணாடி பொருள் இல்லை. எவ்வளவு முடியுமோ முயற்சி பண்ணிக்கோ உடைஞ்சிட மாட்டேன்" என்று சீறிவிட்டு சென்றாள்.
இடையில் இருக்கைகளையும் ஊன்றிய விஜய் கீழே சிதறிக்கிடந்த கண்ணாடி துண்டுகளை பார்த்துவிட்டு அடுத்து அமரனை பார்க்க அவன் முகத்திலோ ஒரு வன்ம புன்னகை படர்ந்திருந்தது.
அவனின் அந்த புன்னகை விஜயிற்கு பயமூட்ட"நீயும் அவனுங்களை போல மிருகமாகிடாத. அவ்வளவு தான் சொல்லுவேன்" என்றுவிட்டு அவனும் அங்கிருந்து அகன்றிருந்தான்.
ஆனால், இவர்களின் குமுறல்கள் எதுவுமே அமரனை பாதிக்கவில்லை போலும். முகத்தில் எந்த உணர்வுகளுமே இல்லாமல் மீதமிருந்த ஆப்பிளை உண்டவாரு சமையல் கட்டின் மீது இலகுவாக சாய்ந்து நின்றுகொண்டான்.
ஆப்பிளை கடித்துக்கொண்டே தரையை பார்த்தான். தரை முழுவதும் கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்தன. தலையை சலிப்பாக ஆட்டிக்கொண்டே கவனமாக அனைத்தையும் தாண்டி சென்று அறைக்குள் நுழைந்தான்.
மெத்தையில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ செய்துக்கொண்டிருந்தாள் துஷாரா. அவள் அருகேயே தெடி பேரும் (teddy bear) துணைக்கு இருக்க அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமலே குளியலறைக்குள் நுழைந்துகொண்டான்.
குளித்துவிட்டு இடையில் வெறும் பூந்துவாலையுடன் தான் வெளியில் வந்தான்.
கதவு திறக்கும் அரவத்தில் அவன் வருவது அவளுக்கு நன்கு தெரிந்தது. ஓரக்கண்ணால் பார்த்ததில் அவன் வந்து நின்ற கோலமும் தெரிந்தது.
அவளைப் பார்த்துக்கொண்டே அலமாரியை திறந்து உடைகளை எடுத்தான். அவள் ஒருத்தி அங்கே இருப்பதை சட்டை செய்யாமலே உடை மாற்ற தொடங்கிவிட்டான்.
அவனை அவள் பார்க்காவிட்டாலும் அவனின் அசைவுகள் அவன் செயலை உணர்த்த "கருமம் பிடிச்சவன். அடுத்த ரூம்ல மாத்திகிட்டா என்னவாம்? வேணுமுன்னே பண்ணுறான்" என்று முணுமுணுத்துக்கொண்டாள்.
"என்ன டார்லிங் திட்டுறியா?" என்றான்.
"ஆமா, அதுக்கு என்ன இப்போ?" என்று அவள் நிமிர அவனோ அப்பொழுதுதான் கால்சராயை இடைக்கு ஏற்றியிருந்தான்.
சட்டென மீண்டும் குனிந்துக்கொண்டவள் "வெட்கம் கெட்டவன்" என்று அதற்கும் திட்டியிருக்க "நீ திட்டுறது நல்லாவே கேட்குது" என்றபடி வெள்ளை நிற டிஷர்டையும் அணிந்துகொண்டான்.
"கேட்டுட்டா மட்டும் திருந்திடுவியா?" என்றாள் அவள் வெடுக்கென்று.
"சேச்சே, அப்போதான் இன்னும் அதிகமா பண்ணுவேன்" என்றான் அவன்.
அவள் அவனை முறைத்து பார்த்துவிட்டு மீண்டும் மடிக்கணினியை பார்க்க "சும்மா முறைச்சிட்டே இருகாதடி…சாப்பிட வா" என்றான்.
"உன் கூட உட்கார்ந்து சாப்பிட இஷ்டமில்லை" என்றாள் அவள்.
"அப்போ பட்டினியாவே இரு" என்று தோள்களை உலுக்கியவன் கீழே இறங்கி சென்றுவிட்டான்.
அவன் சாப்பாட்டு அறைக்குள் நுழைய அங்கே விஜயை காணவில்லை, சமயலறைக்குள் எட்டி பார்த்தான்.
உடைந்திருந்த கண்ணாடி பொருட்களை எல்லாம் சுத்தம் செய்துகொண்டிருந்தான் அவன் .
ஒரு பெருமூச்சுடன் அவன் அருகே சென்றவன் "கோமதி அக்கா இல்லையா?" என்று கேட்டான்.
"லீவு" என்று ஒரு வார்த்தையில் பதிலிறுத்த விஜயின் கரங்கள் கண்ணாடி துண்டுகளை பொருக்கி எடுத்துக்கொண்டிருக்க "நீ விடு நான் பண்ணுறேன்" என்று அமரனும் அவன் அருகே மண்டியிட்டமர்ந்தான்.
"பரவாயில்லை விடு" என்று விஜய் அவன் வேலையை தொடர்ந்துக்கொண்டே இருக்க " விடுன்னு சொல்லுறேன்ல" என்று அவன் கையை தட்டிவிட்டபடி தானே சுத்தம் செய்ய தொடங்கிவிட்டான் அமரன்.
அவனுடன் மல்லுக்கட்ட விஜயிற்கும் விருப்பமில்லை.
"சரி நீயே, கிளீன் பண்ணிடு. ஒரு கண்ணாடி பீஸ் கூட கீழ இருக்கக்கூடாது" என்று கட்டளை இட்டுக்கொண்டே சமையல் கட்டின் மீது ஏறி அமர்ந்துகொண்டான்.
ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்த அமரன் "எல்லாம் என் நேரம். நியாயமா பார்த்தா அந்த ராட்சசியை தான் கிளீன் பண்ண விட்டிருக்கணும். என்னமோ அவள் அப்பன் வீட்டு சொத்து மாதிரி எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைச்சு வச்சிருக்கா?" என்று பொருமினான்.
"உன் தலையில் போட்டு உடைச்சிருக்க வேண்டியதை தரையில் போட்டு உடைச்சிட்டு போயிருக்காளேன்னு சந்தோஷ படு மச்சான்" என்றான் விஜய் இதழ்களில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டே.
"விட்டா நீயே சொல்லிக்கொடுப்ப போல" என்று திட்டிக்கொண்டே தரையை சுத்தம் செய்து முடித்தவன் அந்த கண்ணாடி துண்டுகளை குப்பை கூடைக்குள் கொட்டிவிட்டு வந்தான்.
"இப்போ எதுக்கு அவளை பத்தின பேச்சு. பசிக்குது வா சாப்பிடலாம்" என்று சாப்பாட்டு மேசையில் சென்றமர்ந்தான்.
விஜயும் மேசையில் இருந்த உணவு பொட்டலங்களை பிரித்து அவனுக்கு பரிமாற "நல்லவேளை… எங்கடா அந்த ரிஜெக்டெட் பிட்சாவையே சாப்பிட வச்சிடுவியோன்னு நினைச்சேன்" என்று சொல்லியபடி சாப்பிட தொடங்கியிருந்தான் அமரன்.
அவன் அருகேயே அமர்ந்து தனக்கும் உணவை வைத்துக்கொண்ட விஜய் "துஷாரா எங்க?" என்றான்.
"என் கூட எல்லாம் உட்கார்ந்து சாப்பிட மாட்டங்களாம் அந்த டைரக்டர் மேடம்" என்றான்.
"நான் வேணும்னா கூப்பிடட்டுமா?" என்றவன் எழ பார்க்க "நீ எனக்கு மேனேஜரா இல்லை அவளுக்கா?" என்ற முறைப்பு அமரனிடம்.
அதில் விஜயும் அமைதியாக அமர்ந்துவிட அன்றைய இரவு உணவை வழக்கம் போல் அவர்கள் இருவரும் மட்டுமே சேர்ந்து உண்டனர்.
"நீ என்னதான் யோசிக்குற அமரா? எதுக்கு அந்த பொண்ணை இங்க பிணைக்கைதி மாதிரி பிடிச்சு வச்சிருக்க? என்றான் விஜய்.
"பிணைக்கைதி மாதிரியா? ஓவரா எக்ஸாஜெரெட் பண்ணாத விஜய். நல்லா ஜாலியா தானே இருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து பிட்சா எல்லாம் செஞ்சீங்கல்ல?" என்று கேட்டுக்கொண்டே அவன் சாப்பிட "நீ பண்ணதெல்லாம் பார்த்து எங்க நீ அவள் கிட்ட தப்பா நடந்துப்பியோன்னு நானே கொஞ்சம் பயந்துப்போயிட்டேன். ஆனால், அவள் சாதாரணமா சிரிச்சு பேசுறதை பார்த்தா அப்படி எதுவும் நடந்த மாதிரியும் தெரியல. பிறகு எதுக்கு இதெல்லாம் ? என்ன தான் பிளான் பண்ணுற? என்று கேட்டான்.
"அமர்" என்று விஜய் ஆரம்பிக்க அமரன் பார்த்த அழுத்தமான பார்வையில் அவனது பேச்சு அதோடு நின்றுபோயிருந்தது.
மௌனமாகவே உணவை உண்டு முடித்தவர்கள் அதன் பிறகு வேலை சம்மந்தமாக சிறிது நேரம் கலந்துரையாடிவிட்டு அவரவர் அறைக்குள் நுழைந்துக்கொண்டனர்.
துஷாரா இன்னமும் மெத்தையில் அமர்ந்து மடிக்கணினியை தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"எனக்கு நாளைக்கு ஷூட் இருக்கு. விளக்கை அணைச்சிட்டு தூங்கு" என்றபடி அவளுக்கு அடுத்தபுறம் சென்று படுத்தான்.
"உனக்கு ஷூட் இருந்தா நீ தூங்கு. நான் எதுக்கு தூங்கணும்? எனக்கு வேலை இருக்கு" என்றாள்.
"இது பெட்ரூம். என்னை டிஸ்டர்ப் பண்ணாமல் வெளிய போய் வேலையை பாரு" என்று அவன் சொல்ல "முடியாது. எனக்கு இங்க செய்யத்தான் வசதியா இருக்கு. நான் என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நீ சொல்லாத" என்றவள் எதையோ தட்டச்சு செய்துகொண்டிருக்க "அடிங்,வசதியா இருக்கா? இது என்ன உன் மாமியார் வீடுன்னு நினைச்சியா? நானும் போனா போகுதுன்னு விட்டா ரொம்ப தான் டி பண்ணுற" என்று சட்டென எழுந்து அவள் மடிக்கணினியை பறித்திருந்தான்.
"ஏய்… கொடு" அவள் சீறிக்கொண்டு அவனை நோக்கி கையை நீட்ட "முடியாது. என்றபடி மடிக்கணினியுடன் மெத்தையிலிருந்து எழுந்துக்கொண்டவனின் கண்கள் அதன் திரையில் படிந்தது.
படத்திற்காக ஏதோ காட்சி ஒன்றை எழுதிவைத்திருந்தாள்.
அதை படித்து பார்த்தவன் "என்னடி பிட்டு படம் எடுக்க போறியா என்ன?" என்று நக்கலாக கேட்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. காதலுக்கும் காமத்துக்கும் வித்யாசம் தெரியாத ஜந்து தானே நீயெல்லாம்” என்று அதற்கும் சீறினாள் அவள் .
அவன் பேசினாலே அவளுக்கு இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. எரிச்சலாக வந்தது.
அவனுக்கோ ஆத்திரம்.
சட்டென மடிக்கணினியை மெத்தை மீது தூக்கி போட்டவன் அவளை நெருங்கி வந்தான்.
அவளை உரசிவிடும் தூரத்தில் அவன் வந்து நின்றதில் தன்னிச்சை செயலாக அவன் மார்பில் கை வைத்து தள்ள முயல அவளது இருக்கரங்களையும் அவனின் ஒரே கரத்தில் அடக்கி பிடித்திருந்தான் அமரன்.
விடுவிக்க முயன்றாள் முடியவில்லை.
அவனோ அவளின் திமிறலையும் மீறி அவள் கரங்களை தலைக்குமேல் உயர்த்தி அப்படியே சுவற்றில் சாய்த்திருந்தான்.
"அமைதியா நில்லு நானே விட்டுடுவேன்" என்றான்.
அவள் காதோரம் மிக அருகே கேட்டது அவனின் கரகரத்த குரல்.
திமிறலை கைவிட்டபடி நிமிர்ந்து அவன் விழிகளை பார்த்தாள்.
அழகிய விழிகள் அவனுக்கு. கருமைக்கொண்ட விழிகள் அறையின் வெளிச்சத்தில் மெல்லிய பழுப்பு நிறம் கொண்டு பளபளத்தது.
அவன் பார்வையில் அழுத்தமில்லை. பயமுறுத்தல் இல்லை. காமம் இருக்கின்றது என்றும் இல்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. காதல்....சேச்சே அதற்கெல்லாம் வாய்ப்பேயில்லை. வாய்ப்பே இல்லை.
ஒரு மாதிரி அவள் விழிகளை ஊடுருவி உயிர் துளைக்கும் பார்வை பார்த்தான்.
எத்தனையோ ஆண்களின் துளைக்கும் பார்வைகளை சர்வ சாதாரணமாக கடந்தவள் அவள். அவளே ஒரு நொடி அவன் விழிகளில் தொலைந்துதான் போனாள்.
அவனின் ஒரு கரம் அவளின் கரங்களை கைது செய்திருக்க மற்றைய கரம் உயர்ந்திருந்த அவளின் டிஷர்ட்டின் இடைவெளியில் பயணம் செய்ய தொடங்கியிருந்தது.
இன்னும் தீண்டவில்லை.
ஆனால், அவனின் உள்ளங்கையின் வெப்பத்தை உணர்ந்தாள் பெண்ணவள்.
அதில் சுய உணர்வுக்கு வந்தவள் "தொட்டா கையை உடைச்சிடுவேன்” என்றாள்.
அவளின் இடைக்கும் அவனின் கரத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை பார்த்துக்கொண்டே.
அவனின் அந்த நெருக்கத்தில் அவளின் குரல் கூட காற்றை போல தான் வெளிவந்தது.
"ஆஹான்" என்றவனின் இதழ்களில் மெல்லிய மந்தகாச புன்னகை.
அவன் புன்னகையே ஆளை மயக்கிவிடும் போலும்.
தொடாமலே தொடுகின்றான்.
பார்வையாலேயே களவாடுகின்றான்.
புன்னகைத்தே மயக்குகின்றான்.
மூச்சடைத்தது அவளுக்கு. அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.
அவளை பார்த்துக்கொண்டே மெல்ல அவளில் இருந்து விலகி நின்றான் அமரன்.
"இப்போ சொல்லு, இந்த ரொமன்ஸ் போதுமா? உன் படத்துல வர ஹீரோக்களை விட நல்லாவே ரொமன்ஸ் வருதுல்ல எனக்கு " என்றான்.
அவன் பேச்சிலேயே நடப்புக்கு வந்திருந்தாள் துஷாரா.
மெல்ல தலையை சிலுப்பி தன்னை சமன் செய்துக்கொண்டாள்.
என்ன செய்துகொண்டிருக்கின்றாள் அவள். ஒருநொடி தன்னையே மறக்க செய்துவிட்டானே அவன். அவ்வளவு பலவீனமானவளா அவள்.
அவனை நியாயப்படி அவள் வெறுக்க வேண்டும். அதையம் மீறி ரசித்திருக்கின்றாளே.
'இவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும். இல்லை உன்னையே மயக்கிடுவான். ஸ்டே போகஸ் துஷாரா' என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் அவனை உறுத்து விழித்தாள்.
"நீ பண்ணுறதை உனக்கு முன்னிருக்குறவங்க ரசிக்கணும் அருவருக்க கூடாது. அதுக்கு பேரு தான் ரொமன்ஸ். நீ பண்ணுறதுக்கு பேரு வேற" என்று திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவள் மெத்தையில் சென்று படுத்துக்கொண்டாள்.
நாவை உள்கண்ணத்தில் முட்டியபடி அவளை நக்கல் பார்வை பார்த்தவன் விளக்கை அணைத்துவிட்டு அவளின் அருகே சென்று படுத்துகொண்டான்.
விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தவளிடம் "அப்போ நீ ரசிக்கவேயில்லை?" என்று அவன் இழுவையாக கேட்க "இல்லை. பல்லி, கரப்பான் பூச்சு, கம்பளி பூச்சு இப்படி இன்னும் என்னென்ன ஜந்துக்கள் இருக்கோ அது எல்லாம் மொத்தமா மேல ஊறுற மாதிரி அருவருப்பா இருக்கு" என்று வெடுக்கென பதில் சொல்லியவள் அவனுக்கு முதுகுகாட்டி திரும்பி படுத்துக்கொண்டாள்.
"ஓஹோ...அப்போ இன்னும் நிறைய ஊறட்டும்” என்று ஒற்றை கரத்தால் அவளின் இடையை சுற்றி தன்னை நோக்கி இழுத்திருந்தவன் அவளை இறுக அணைத்தபடி படுத்துவிட்டான்.
அவள் திமிற தொடங்க "விடமாட்டேன்னு தெரியும்ல எதுக்கு எனெர்ஜியை வேஸ்ட் பண்ணுற. பேசாம படு" என்றபடி அவன் உறங்க தொடங்கிவிட அவளுக்கு வேறு வழியும் இல்லை. அவன் அணைப்பிலேயே தான் உறங்கியிருந்தாள்.
உறக்கத்தின் நடுவே அவளிடம் அசைவு. புரண்டு புரண்டு படுத்தாள்.
அதில் உறக்கம் கலைந்து எழுந்து பார்த்தான் அமரன். அவளின் முகம் சுருங்கியிருக்க வயிற்றை பிடித்துக்கொண்டே படுத்திருந்தாள். அவள் வயிறு வேறு கடாமுடா என்று சத்தம் போட்டு அவளின் பசியை காட்டி கொடுத்தது.
அப்பொழுதுதான் அவள் இரவு உணவே எடுக்கவில்லை என்பது அவன் நினைவுக்கு வர " தேவைதான். பட்டினியாவே கிடக்கட்டும்" என்றபடி மீண்டும் படுத்துவிட்டான்.
ஆனால், அவளோ இங்கே அங்கே என்று புரண்டு புரண்டு படுத்தே அவனின் தூக்கத்தை கெடுத்தாள். அவனுக்கு மறுநாள் படப்பிடிப்பு வேறு இருக்க சரியாக உறங்க முடியாமல் கடுப்பானவன் எழுந்தமர்ந்தான்.
"துஷாரா, ஏய் எழுந்திருடி. பசிச்சா போய் எதாவது சாப்பிட்டு வந்து படு. என் உயிரை வாங்காத" என்றான்.
அரை தூக்கத்தில் அவனை பார்த்தவள் " நீ தானே என் கூடவே இருக்கணும்னு ஆசை பட்ட. அனுபவி" என்றபடி மீண்டும் படுத்துவிட "ஏய், இப்போ போக போறியா இல்லையா?" என்று அதட்டினான் அவன்.
"போகலன்னா உன் அப்பனை போலீசில் பிடிச்சுக்கொடுத்திடுவேன், தங்கச்சியை தூக்கிடுவேன்னு இதுக்கும் சின்ன புள்ளை தனமா மிரட்ட போறியா என்ன?" என்று எகத்தாளமாக கேட்டபடி போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டாள்.
"சரியான இம்சை" என்று எழுந்துக்கொண்டவன் அறையிலிருந்து வெளியேறியிருக்க "ஒளிஞ்சான்" என்று முணுமுணுத்துக்கொண்டே மீண்டும் உறங்க முயன்றாள் பெண்ணவள்.
சமயலறைக்குள் புகுந்தவன் பாலை காய்ச்சி அதை ஒரு குவளையில் ஊற்றிய பின் அதனுடன் சில பிஸ்கட்டுகளையும் வைத்து எடுத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தான்.
படியேறிவந்தவன் விஜயின் அறையை கடப்பதற்கும் விஜய் அறை கதவை திறப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது.
பாட்டிலில் நீர் முடிந்துவிட அதை எடுப்பதற்காக விஜய் வெளியில் வந்த நேரம் அமரன் கையில் பாலும் பிஸ்கட்டுமாக வந்துகொண்டிருப்பதை பார்த்தவன் அப்படியே கதவு நிலையில் சாய்ந்து நின்றபடி அவனை கவனிக்க தொடங்கிவிட்டான்.
அவன் இதழ்களில் நமட்டு புன்னகை வேறு தேங்கி நின்றது.
அவனின் இருப்பை உணர்ந்திருந்த அமரன் அந்த புன்னகையையும் கவனித்திருக்க "என்னடா?" என்றான் கடுப்பாக.
"ஒன்னுமில்லையே" என்று விஜய் கிண்டல் போல சொல்ல அவனை முறைத்து பார்த்தவன் "எனக்கு தான் பசிக்குது" என்றான்.
"நான் ஒன்னும் சொல்லவே இல்லையே" என்று அதற்கும் விஜய் சிரிப்பை அடக்கிய படி பதில் சொல்ல அவனை முறைத்துக்கொண்டே தனது அறைக்குள் புகுந்திருந்தான் அமரன்
கதவை அடைத்தவன் திரும்பி துஷாராவை பார்க்க அவளோ இன்னமும் புரண்டுக்கொண்டு தான் இருந்தாள்.
"இங்க யாரு யாரை பழிவாங்குறானே தெரியல…இம்சை" என்று திட்டிக்கொண்டே அவள் அருகே சென்று போர்வைக்கு வெளியில் தெரிந்த அவள் பாதத்தில் தட்டினான்.
"ஏய், எழுந்திரு" என்றான்.
அவள் எழுந்திருக்கவில்லை.
மாறாக காலை உதறி அவன் கரத்தை தள்ளி விட்டு மீண்டும் உறங்க பார்க்க "எழுந்திருன்னு சொல்லுறேன்ல" என்று அதட்டினான் அவன்
பாதி தூக்கத்தில் தலையை மட்டும் தூக்கி பார்த்தவள் "நிம்மதியா தூங்கக் கூட விட மாட்டியா?" என்றாள்.
"யாரு...நானு? சரி தான்" என்று சலிப்பாக சொன்னவன் "இதை குடிச்சிட்டு தூங்குடி ராட்சசி. உன் வயிறு போடுற சத்தத்தில் எனக்கு தூக்கமே வரமாட்டுது. நாளைக்கு ஷூட்டிங் இருக்கு. இப்படி விடிய விடிய முழிச்சிருந்தா காலையில் என் முகமே கன்றாவியா இருக்கும்" என்றான்.
"இப்போவே அப்படி தான் இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அவள் மீண்டும் படுக்க போக "ம்பச்...இதை குடிச்சுட்டு தூங்குடி" என்றான்.
அவன் கையில் வைத்திருந்த தட்டை பார்த்தாள். பாலும் பிஸ்கட்டும் இருந்தது. அவளுக்கும் கொலை பசிதான். ஆனால், அவன் சொல்லி அவள் என்ன சாப்பிடுவது என்ற வீராப்பு வேறு குறுக்கே வந்து நிற்க "எனக்கு ஒன்னும் வேண்டாம்" என்றபடி மீண்டும் படுத்துக்கொண்டாள்.
அதில் கடுப்பான அமரன் "நீ மயிலே மயிலேன்னா சரி பட்டு வரமாட்ட" என்றபடி அவளின் கணுக்காலை அழுந்த பற்றி ஒரே இழுதான் இழுத்திருந்தான்.
படுத்திருந்தவள் தலையணையை விட்டு கீழ் சறுக்கிக்கொண்டே வர சட்டென எழுந்தமர்ந்தாள்.
"என்னடா பண்ணுற?" என்று அவள் அதிர்ந்து கேட்க "அவள் முகத்திற்கு முன்னே குனிந்தவன் "நல்ல பிள்ளையா ஒழுக்கமா இதை சாப்பிட்டு தூங்குற. அதை விட்டுட்டு சாப்பிட மாட்டேன் தூங்கமாட்டேன்னு முரண்டு பிடிச்சு என் தூக்கத்தை கெடுத்தன்னு வை... எப்பவோ நடக்க வேண்டியதெல்லாம் இன்னிக்கே நடத்தி முடிச்சிடுவேன்"என்றான்.
அவள் அவனை முறைத்து பார்க்க "என்னடி பார்க்குற? இவன் சொல்லுவான் ஆனால், செய்ய மாட்டான்னு நினைக்கிறியா?" என்றபடி அவளை நோக்கி குனிய சட்டென்று தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டவள் "கொடு" என்று கையை நீட்டினாள்.
"அது..." என்ற நமட்டு புன்னகையுடன் அவனும் தட்டை நீட்டியிருக்க அதை வாங்கிகொண்டவள் பாலையும் பிஸ்கட்டையும் உண்டு முடிக்கும் வரை மார்புக்கு குறுக்கே கையை கட்டியபடி அவளை பார்த்துக்கொண்டே நின்றான்.
அவள் சாப்பிட்டு முடித்ததும் தட்டை வாங்கி மேசை மீது வைத்தவன் "பெட்ரூம்ல சாப்பிடுறது இதுவே கடைசியா இருக்கட்டும். எனக்கு இதெல்லாம் பிடிக்காது" என்று எச்சரித்துக்கொண்டே அவனின் இடத்தில சென்று படுத்துக்கொண்டான்.
அவன் அவளுக்கு முதுகுக் காட்டி படுத்துக்கொள்ள அவனை பார்த்துக்கொண்டே படுத்தாள் பெண்ணவள்.
அவள் மனதில் ஆயிரம் கேள்விகள். எல்லாமே அவனை பற்றி தான்.
விசித்திரமாக இருக்கின்றான் அவன்.
அன்று அவளை மிரட்டிய அமரனுக்கும் இன்று அவளின் பசியாற்றிய அமரனுக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லை.
அவளை மிரட்டி அவனுடன் வைத்திருக்கின்றான் தான். ஆனால், அவளை அடைத்து வைக்கவில்லை. இதுவரையில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கவில்லை. அவளை பட்டினி போட்டுக்கொல்லவில்லை. அவளிடம் அத்துமீறவுமில்லை.
பிறகு எதற்காக அவளை சிறை எடுத்திருக்கின்றான்?
இதே கேள்வி அவள் மூளையை குடைந்துகொண்டிருக்க அவன் முதுகையே பார்த்தபடி படுத்திருந்தாள் பெண்ணவள்.
சட்டென்று அவளை நோக்கி திரும்பியவனின் பார்வையும் அவளின் விழிகளில் நிலைத்தது.
அவள் பார்வையை திருப்பிக்கொள்ளாமல் அவனையே பார்த்திருக்க "என்னடி?" என்றான்.
"யார் நீ?" என்று நேரடியாக அவனிடமே கேட்டாள்.
புதிராய் நிற்கும் அவனிடமே பதிலை நாடினாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன் "சீக்கிரமே தெரிஞ்சிப்ப" ஏற்றபடி அவளை இழுத்து தனது அணைப்புக்குள் வைத்துக்கொண்டான்.
இன்றும் அவனது மார்பில் தான் அவளுக்கு உறக்கம். அவன் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டே படுத்திருந்தவளுக்கு அவனை எண்ணி நேற்றிருந்த அச்சம் இன்றில்லை.