ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 31

வேல்விழி 31

ஸ்ரீக்கு யுவராஜ் கேரளாவுக்கு வரும் நிஜமான காரணம் தெரியவில்லை என்றாலும், ஷூட்டிங்குக்காக தான் வருகின்றார்கள் என்று வீடு வாகனம் என்று அனைத்து ஏற்பாடுகளையும் அந்த ஊர் தலைவரின் உதவியுடன் செய்து இருந்தான். ஓரளவு பின் தங்கிய அந்த ஊரில் மலையாள சினிமாவை தவிர வேறு மொழிப் படங்கள் ஆதிக்கம் செலுத்தாத காரணத்தினால் யுவராஜ்ஜை பெரிதாக யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை.

ஆனால் சினிமாக்காரர்கள் ஊருக்கு வருவதாக கேள்விப்பட்டதும் ஒரு வித ஆர்வம் அங்கு இருப்பவர்களுக்கு உண்டாகி இருந்தது ஷங்கரையும் சேர்த்து. ஷங்கர் அந்த ஊர்ப் பெரியவரிடம் தான் கணக்காளராக இருந்தான். அதனால் அவனுக்கு செல்வாக்கும் சேர்ந்து இருந்தது.

இவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது கூட அவன் தான்… கொஞ்சம் படித்தவன் மற்றும் பண்பானவனும் கூட. அதனாலேயே ஊர்ப்பெரியவரான வாசுதேவ நாயரின் நம்பிக்கைக்கு உரியவன். இதே சமயம், கேரளாவுக்கு யுவராஜ், பிரகாஷ், மதனா, அக்ஷரா, ராம் மற்றும் படக்குழுவினர் என அனைவரும் வந்து இறங்கி இருக்க, விமான நிலையத்தில் போனை ஆன் பண்ணியதுமே யுவராஜ்ஜூக்கு வந்த முதல் அழைப்பு நந்திதாவை பற்றி விசாரிக்க கொடுத்தவனிடம் இருந்து தான்.

யுவராஜ்ஜை தவிர யாருக்குமே அவர்கள் வந்த உண்மையான நோக்கம் தெரியவே இல்லை. யுவராஜ்ஜூம் அவசரமாக போனை காதில் வைத்து, "என்ன இன்போர்மேஷன் கிடைச்சுது?" என்று இறுகிய குரலில் கேட்க, மறுமுனையில் இருந்தவனோ, "சார் அவங்க பெயர் பார்வதி. புருஷன் பெயர் ஷங்கர். ஒரு கைக்குழந்தை கூட இருக்கு… இந்த ஊருக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் தான் இருக்கும். வாசுதேவ நாயர் கிட்ட ஷங்கர் வேலை பார்க்கிறான்.

ஷங்கரோட சொந்த ஊர் இது இல்ல" என்று சொல்ல, கண்களை மூடி திறந்தவனுக்கு பொறி தட்ட, "சோ இங்க வந்து ஒரு வருஷம் தான் ரைட்?" என்று கேட்டான் யோசனையுடன். மறுமுனையில் இருந்தவனுமே, "ம்ம் ஆமா சார்" என்க. அடுத்த கணமே, "அவங்க கல்யாணம் பண்ணினத்துக்கான ஆதாரம் இருக்கா?" என்று தனது முக்கியமான சந்தேகத்தைக் கேட்க,

"அவங்க கல்யாண போட்டோ பார்த்தேன் சார்" என்று சொன்னதுமே யுவராஜ்ஜூக்கு இதயம் வேகமாக துடிக்க தொடங்க, உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டே, "நான் இங்க வந்துட்டேன், ஈவினிங் என்னை வந்து பாரு" என்று சொல்லி விட்டு வைத்தவன், அங்கே அவர்களுக்காக காத்துக் கொண்டு நின்ற ஸ்ரீயை பார்த்து கையை ஆட்டினான் வலுக்கட்டாயமாக புன்னகைத்தபடி.

அவர்களை நோக்கி ஸ்ரீயும் ஸ்ருதியும் வர, ஸ்ரீயோ யுவராஜ்ஜைக் கட்டி அணைத்து விடுவித்தபடி, "என்னடா திடீர்னு ஒரு நாளுல கிளம்பி வந்துட்ட?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "ஹனிமூன் ஐ டிஸ்டர்ப் பண்ணிட்டோம்னு கடுப்பா இருக்கா?" என்று கேட்க, ஸ்ரீயோ, "சும்மா போடா" என்று வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே அவனுடன் கூட நடக்க, பின்னால் நடந்து வந்த ஸ்ருதியின் கன்னங்களும் கூட வெட்கத்தால் சிவந்து போனது.

பார்வதி வீட்டுக்குள்ளேயே அதிகம் இருப்பதால் என்னவோ ஸ்ரீ மற்றும் ஸ்ருதி கூட அவளை இதுவரை பார்த்ததே இல்லை… அனைவரும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீட்டினை நோக்கி சென்று கொண்டு இருக்க, யுவராஜ் மட்டுமே இறுகிய தோரணையில் அமர்ந்து இருந்தான்… அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் மட்டுமே பரவி இருந்தன.

ஊருக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் தான் என்பது அவனுக்கு சாதகமாக இருந்தாலும், "திருமண புகைப்படம் எப்படி?" என்கின்ற யோசனையில் ஆழ்ந்து கொண்டு தான் இருந்தான். இதே சமயம், வீட்டின் முன்னறையில் மாட்டி வைக்கப்பட்டு இருந்த திருமண புகைப்படத்தையே பார்த்துக் கொண்டு நின்று இருந்த பார்வதியோ, "பாவா, இதுல ரொம்ப மெலிவா இருக்கேன்ல" என்று சொல்லிக் கொண்டு இருக்க,

பத்திரிகை படித்துக் கொண்டு இருந்த ஷங்கரோ ஒரு கணம் அதனை ஏறிட்டுப் பார்த்து விட்டு, "குழந்தை பிறந்தா உடம்பு வைக்கிறது சகஜம் தானே" என்று சொன்னான். அவளோ அவனை நோக்கி திரும்பியவள், "பாவா!!! நான் இப்போ அழகா இருக்கேனா முதல் அழகா இருக்கேனா?" என்று கண்களை உருட்டி உருட்டி கேட்க,

அவனோ அவள் விழியசைவை ரசனையாக பார்த்து புன்னகைத்தவன், "எப்போவுமே அழகா தான் இருக்க பார்வதி" என்று சொன்னான். அவளோ இதழ் பிரித்து சிரித்த கணம் குழந்தையும் அழ, "எந்திரிச்சிட்டான் போல" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்ற கணம் அவள் முதுகை வெறித்துப் பார்த்தவன் விழிகளோ மீண்டும் அந்த புகைப்படத்தில் படிந்தது.

அதில் நின்றது தான் அவனது உண்மையான பார்வதி. நந்திதாவின் சாயலிலேயே இருப்பவள் அவள். அதனைப் பார்த்துக் கொண்டே பத்திரிகையை வைத்தவனோ தனது இருக்கையில் கண்களை மூடி அமர்ந்து கொண்ட சமயம் அவனுக்கு பழைய நினைவுகள் சுழல ஆரம்பித்து இருந்தன.

*************************************

இப்போது சாதாரணமாக கணக்கு வேலை பார்க்கும் ஷங்கர் ஒன்றும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல, பல ஏக்கர் வயல் நிலங்களுக்கு சொந்தக்காரன். பெரிய குடும்பம் அவர்களுடையது. அவனுக்கு பார்த்து பார்த்து கட்டி வைத்த அழகு பதுமை தான் இந்த பார்வதி.

சின்ன வயதில் இருந்தே எந்த குறைவும் இல்லாமல் வாழ்ந்தவனுக்கோ, யார் கண் பட்டதோ தெரியவில்லை அவன் ஆசை மனைவியும் கர்ப்பமா இருக்கும் போது மாடிப் படியில் இருந்து உருண்டு விழுந்ததில் இறப்பை தழுவி இருந்தாள். அன்றில் இருந்து பணம் இருந்தும் நடைப் பிணமாகி போனது அவன் வாழ்க்கை. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தன்னவள் நினைவிலேயே வாழ்ந்தவனை வற்புறுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்து இருந்தார்கள் அவனது குடும்பத்தினர்.

மணப்பெண் வேறு யாருமல்ல பார்வதியின் தங்கை மீனாட்சி தான். ஆனால் அவனுக்கோ கொஞ்சம் கூட இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் மீனாட்சிக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம். பார்வதியின் இறப்பின் பின்னர் அவன் படும் கஷ்டத்தைப் பார்த்து பரிதாப பட ஆரம்பித்தவளுக்கு அது எப்படி காதலாக மலர்ந்தது என்று இன்று வரை தெரியவே இல்லை.

இப்படியான ஒரு நாளில் வேலை விஷயமாக நண்பர்களுடன் வெளியூர் சென்றவனோ, தங்கியிருந்த காட்டேஜ் அருகே இருந்த அருவியில் இரவு வேலையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்த நேரம் தான் அவன் கையிலேயே நீரோட்டத்தில் அடிபட்டு வந்து சேர்ந்து இருந்தாள் நந்திதா.

இரவில் யார் என்று தெளிவாக தெரியவே இல்லை என்றாலும் மனிதாபிமானத்தின் பொருட்டு, "ஹாஸ்பிடல் போகலாம் டா, ரொம்ப அடிபட்டு இருக்கு போல" என்று சொல்லிக் கொண்டே அவளை தூக்கிச் சென்றது என்னவோ ஷங்கர் தான். அவளை நண்பர்களின் உதவியுடன் வண்டியில் ஏற்றிய சமயம் தான் அதில் இருந்த லைட்டை போட்டவனுக்கு ரத்தம் வடிந்த அவள் முகத்தைக் கண்டதுமே தூக்கி வாரிப் போட்டது.

அவன் இதழ்கள் மட்டும் அல்ல நண்பர்களின் இதழ்களுமே, "பார்வதி" என்று தான் அக்கணம் முணுமுணுத்தது. ஷங்கரோ, அவள் கன்னத்தை, "பார்வதி, பார்வதி" என்று தட்டினாலும் அவள் விழிக்கவே இல்லை. "சீக்கிரம் போங்கடா" என்று சொன்னதுமே அவர்கள் வண்டி வேகமாக அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு செல்ல, அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஷங்கருக்கோ, தன்னவளின் ஜாடையில் இருப்பவளது உயிரை காத்து விட வேண்டும் என்கின்ற தவிப்பு. டாக்டரோ, "சரியான நேரத்துக்கு கொண்டு வந்து இருக்கீங்க, இல்லன்னா ஹெவி ப்ளீடிங்ல இறந்து போய் இருப்பாங்க" என்று சொல்ல, ஷங்கருக்கு மீண்டும் பார்வதியின் எண்ணம் தான் வந்து போனது. இப்படி தான் அவளையும் அனுமதித்து விட்டு வைத்தியசாலை வாசலில் கதறிக் கொண்டு இருந்தவன் அவன்.

ஷங்கரின் நண்பனோ, "போலீஸ்ல கம்ப்ளைன் பண்ணலாம் டா" என்க, "எதுக்கு?" என்று தான் கேட்டான் ஷங்கர். அவனோ அதிர்ச்சியுடன், "யாருன்னு தெரியல, இப்படியே விட்டு போறது நல்லது இல்ல" என்று சொல்ல, "ஏன் தெரியல? அது என் பார்வதி தானே? போலீஸ் கம்ப்லைன் எல்லாம் தேவையே இல்ல, சும்மா இரு… வீட்டுக்கு அழைச்சு போகலாம்" என்று பதிலளிக்க அங்கே நின்ற அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

"டேய் பிரச்சனை ஆயிட போகுது டா" என்று சொல்ல, அவனோ, "பிரச்சனைக்கு வர்றவன் தலையை சீவிடுவேன், அவ என்னோட பார்வதி தான்" என்றான் அவள் உருவத்தில் உண்டான ஈர்ப்பின் விளைவால். அவனுக்கு நிஜம் புரிந்தாலும் அவனால் அதனை ஏற்றுக் கொண்டு அவளை விட்டுக் கொடுக்க மனமே இல்லை.

தன்னவளைப் போல இருப்பவள் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்கின்ற அற்ப ஆசையில் ஒவ்வொரு காயாக நகர்த்த ஆரம்பித்தான். உடனே அவன் நண்பனோ, "நீ சொன்னா போதுமா? அந்த பொண்ணு கண் விழிச்சா என்ன பண்ணுவ?" என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே வெளியில் வந்த டாக்டரோ, "இந்த பேஷண்டோட ரிலேட்டிவ் யாரு?" என்று கேட்க,

முந்திக் கொண்டே, "நான் தான் டாக்டர் அவ புருஷன்" என்று முன்னே சென்றான் ஷங்கர். அவன் நண்பர்கள் அனைவர்க்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் அவனை மீறி பேச முடியாத காரணத்தினால் மௌனம் சாதிக்க, டாக்டரோ, "அவங்களுக்கு தலைல அடிபட்டதால எதுவும் நினைவில இல்லன்னு தோணுது, அரை மயக்கத்திலே தமிழில பேசிட்டு இருக்காங்க, நீங்க தமிழா?" என்று மலையாளத்தில் கேட்க,

அவனோ, "ரெண்டும் பேசுவோம் டாக்டர், இப்போ நான் போய் பார்க்கலாமா?" என்று கேட்க, அவரோ, "ம்ம் பார்க்கலாம், இப்போ கண் முழிச்சிடுவாங்க" என்று சொன்னதுமே வேகமாக உள்ளே செல்ல, அவன் நண்பர்களும் பின்னால் சென்றார்கள்.

அப்போது தான் மெதுவாக கண் விழித்த நந்திதாவோ, முன்னே நின்ற ஷங்கரை கண்களை கசக்கிக் கொண்டே பார்த்தவள், "நான்" என்று ஆரம்பிக்க, "பார்வதி எப்படி இருக்க?" என்று மலையாளத்தில் கேட்டான். அவளுக்கு இயல்பாகவே மொழிப்புலமை இருந்ததால் மலையாளம் தெளிவாக விளங்க, அவள் இதழ்களோ தாமாக விரிந்து மலையாளத்தில், "நல்லா இருக்கேன், நீங்க யாரு?" என்று கேட்க,

அப்படியே திரும்பி பின்னால் அதிர்ந்து நின்ற நண்பர்களை பார்த்து கண்களை சிமிட்டியவன், "உன் புருஷன்" என்று சொல்ல, அவளோ, "புருஷனா?" என்று யோசனையாக கேட்டாள். அவன் நல்ல நேரத்துக்கு கீழே விழுந்ததில் அவள் தாலி கூட எங்கோ கழன்று விழுந்து இருந்தது. உடனே அவன் தனது போனில் இருந்த அவனும் பார்வதியும் சேர்ந்து நின்ற புகைப்படங்களை காட்ட, அவளோ பக்கவாட்டாக திரும்பி தனது முகத்தைப் பார்த்து விட்டு புகைப்படத்தை பார்த்தவளோ, "ஓஹ், எனக்கு என்னாச்சு?" என்று கேட்டாள்.

அவனோ, "குளிக்க வந்தோம், அருவில வழுக்கி பாறைல தலை அடிபட்டிச்சு, அதுல எல்லாமே மறந்துட்ட" என்று சொல்ல, அவளும் அதனை நம்பினாள். அவளுக்கு தான் வேறு வழியே இல்லையே… கையில் புகைப்பட ஆதாரம் இருக்கும் போது அவளால் என்ன தான் செய்ய முடியும், தாய்மொழியை கூட அவள் பேச மறக்கும் அளவுக்கு அவளை சுற்றி வேற்று மொழிகள் பேசப்பட, அவளுக்கும் மலையாளம் தெரிந்ததால் என்னவோ அவனுடன் சரளமாக பேச ஆரம்பித்தாள்.

அவளுக்கு அனைத்துமே புதிதாக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக புது புது கதைகளை இயற்றி அனைத்தும் கற்றுக் கொடுத்தது என்னவோ ஷங்கர் தான். அவன் என்ன சொன்னாலும் அவள் நம்பினாள். அவன் என்ன தான் அவளை மனைவி என்று சொன்னாலும், அவனால் அவளை நெருங்க முடியவே இல்லை. ஏதோ ஒரு தடுமாற்றம் இருக்க, ஊருக்கு வரும் பொது சற்று தள்ளியே இருந்து வந்தான்.

அவன் நண்பர்களின் முகமோ இஞ்சி தின்ற குரங்கு போல இருக்க, அனைத்தையும் கச்சிதமாக செய்த ஷங்கரோ இயல்பாக தான் இருந்தான். ஊரை நெருங்கியதும் தான் அவனுக்கு பல்வேறு யோசனைகள் சுழல ஆரம்பித்து இருந்தது. வீட்டில் பார்வதியின் மாலையிடப்பட்ட படம் இருக்கும் அல்லவா? அதனை பார்த்தால் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்தவன், வீட்டின் முன்னே வண்டி நின்றதுமே நந்திதாவை உள்ளே இருக்க சொல்லி விட்டு தான் மட்டும் வீட்டினுள் நுழைந்தான்.

உள்ளே வந்ததுமே, "இந்த பொண்ணு கூட தான் நான் வாழ போறேன்" என்று அவன் சொன்ன கதையில் வீடே பற்றி எரிந்து விட, அவன் தந்தையோ, "வீட்டை விட்டு வெளியே போ" என்று முற்றிய வாக்குவாதத்தில் சொல்ல, அவனுமே கோபத்தில் புறப்பட்டு இருந்தான். சிவந்த முகத்துடன் காரில் ஏறியவனிடம், "என்னாச்சு?" என்று கேட்க,

அவனோ, "நம்ம ஊருக்கு போகலாம்" என்று சொல்ல, அவளோ, "அப்போ இது யாரு?" என்று கேட்க, அவனோ, "தெரிஞ்சவங்க வீடு" என்று சொன்னான். அவளுக்கு உடல் வலியிலும் சோர்விலும் இதனை எல்லாம் தூண்டி துருவி கேட்கும் மனநிலை இல்லாமல் இருக்க, "எனக்கு தூக்கம் வருது" என்று சொல்லிக் கொண்டே தூங்கி விட்டாள்.

அவனுக்கு அது வசதியாகி விட, தெரிந்த நண்பன் மூலம் வேறு ஊரில் வீடு வேலை என்று அனைத்தையும் போகும் வழியிலேயே ஏற்பாடு பண்ணியவன், அவளுடன் அங்கே வந்து சேர்ந்து விட்டான். அவளும், "நமக்குன்னு யாரும் இல்லையா?" என்று கேட்க, "உனக்கு நான் எனக்கு நீ அவ்ளோ தான்" என்று சொன்னவனோ இருவரும் நிற்கும் கல்யாண புகைப்படத்தை மட்டுமே ஹாலில் மாட்டி இருந்தான்.

தாலி அருவியில் குளிக்கும் போது தொலைந்து விட்டதாக கூறியவன், மனைவியின் தாலியை வீட்டிலேயே விட்டு வந்ததன் காரணமாக புது தாலி வாங்கி வந்தாலும் ஏதோ ஒன்று அவள் கழுத்தில் கட்ட தடுத்துக் கொண்டு இருந்தது. இந்த தயக்கத்துக்கு காரணம் என்னவென்று அவனுக்கும் தெரியவே இல்லை… அதனாலேயே, "ரெண்டாம் தரம் தாலி கட்ட கூடாது பார்வதி, நீயே கட்டிக்கோ" என்று அவளிடம் தாலியை கொடுக்க,

அவளும் அவன் சொல்லே வேத வாக்கு என்று இருந்தவள் கழுத்தில் தானே தாலியையும் கட்டிக் கொண்டாள். பக்கத்து வீடு தொடக்கம் அனைவரும் அவர்களை கணவன் மனைவி என்று நினைத்து இருந்த நேரம் அது… அவள் உடல் நிலையை காட்டி விலகியே இருந்தவனுக்கு அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது தான் அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம்.

ஆம் அவள் கருவில் யுவராஜனின் உயிர்நீரில் உருவான குழந்தை வளர ஆரம்பித்து இருந்தது. அவளோ சந்தோஷமாக விஷயத்தை சொல்ல, அவனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும், அவனால் அவளை விட்டுக் கொடுக்க முடியவே இல்லை. அப்போது கூட போலீசில் சொல்லி அவளை கணவனுடன் சேர்த்து வைக்க அவன் விரும்பவே இல்லை.

அப்படி ஒரு கண்மூடி தனமான காதல் அவள் தோற்றம் மீது… அவள் மனதில் அவள் தான் பார்வதி என்று அழுத்தமாக பதிய வைத்தவனோ, குழந்தையையும் அவளுக்காக ஏற்றுக் கொண்டவன், பார்வதியை தாங்கியது போல அவளையும் கையில் வைத்து தங்கினாள்.

இறந்து போன குழந்தையும் பார்வதியும் தனக்கு கிடைத்து விட்டதாக தான் அவன் எண்ணம் இருக்க, பார்வதியாகவே வாழும் நந்திதாவும் அவன் அன்பில் உருகி தான் போனாள். அவளுக்கு தான் எதுவுமே தெரியவே இல்லை அல்லவா? அவன் அன்பிலும் அக்கறையிலும் கட்டுண்டு போனவள் ஆண் குழந்தையையும் பிரசவித்து இருந்தாள்.

இப்படியே வாழ்ந்து விடலாம் என்று ஷங்கர் கணக்கு போட்டு இருக்க, அந்த வேல்விழியாளை தேடி வந்து இருந்தான் வேங்கையவன் யுவராஜ். தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் ஷங்கரை மட்டுமே நம்பும் பார்வதியாக இருக்கும் நந்திதா… குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த மன நிலையில் யுவராஜ்,


அனைவரையும் சாதாரணமாக இருந்து கொண்டே ஆட்டி வைக்கும் ஷங்கர் என மூவரும் வெவ்வேறு நிலையில் இருந்தனர். இந்த கண்ணா மூச்சி ஆட்டத்தில் ராணியை கைப்பற்றும் ராஜா யுவராஜாவா இல்லை ஷங்கரா என்று அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்…
Super sis
 
Top