வேல்விழி 23
அன்று மாலை வீட்டுக்கு வந்ததுமே அவன் குளித்து விட்டு நுழைந்தது என்னவோ நந்திதாவின் அறைக்குள் தான். அவளோ அப்போதும் கூட கண்ணாடியில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். அவளுக்கு பின்னே வந்து நின்றவனோ அவள் இடையில் இரு கைகளையும் வைக்க, சட்டென்று பயந்து திரும்பியவள், அது யுவராஜ் என்றதுமே ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டே, அவன் கையை விலக்கி விட்டு, "என்ன விஷயம்?" என்று கேட்டாள் சற்று கடின குரலில்.அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "அப்போ தொடவும் கூடாதா?" என்று கேட்க, அவளோ, "நானே பல குழப்பத்துல இருக்கேன்... ஐ நீட் ஸ்பேஸ்" என்று சொல்ல, அவனோ பெருமூச்சுடன், "ஓகே பைன், பொண்ணோட பர்த் டே வருது ல, ரொம்ப க்ராண்ட் ஆஹ் பண்ணிடலாம்னு இருக்கேன், சோ டெக்கரேஷன், ட்ரெஸ்ஸிங், இன்விடேஷன் எல்லாம் நீயே பார்த்துக்கோ, உனக்கு ஹெல்ப்புக்கு ரெண்டு பொண்ணுங்க வருவாங்க" என்று சொல்ல,
அவளுக்கும் அந்த திருப்பம் தேவையாக இருந்தது. சும்மா இருப்பதால் தானே பல்வேறு எண்ணங்கள் நிம்மதியை குலைகின்றது என்று நினைத்தவள், "ஓகே" என்று சம்மதமாக தலையாட்டினாள். அடுத்த நாள் இருந்து பிறந்த நாளுக்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தவள், சினிமா ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய இன்விடேஷன் எல்லாம் ஸ்ரீயிடம் கொடுத்து விட்டு உறவினர்கள் நண்பர்களுக்கு அவளே கொடுக்க ஆரம்பித்து இருந்தாள்.
முதலில் அவள் சென்றது என்னவோ அவளது பிறந்த வீட்டுக்கு தான். அவள் உள்ளே நுழைந்ததுமே ஹாலில் இருந்த ரேகாவோ, "அட இன்னைக்கு தான் மகாராணிக்கு வீட்டுக்கு வழி தெரிஞ்சு இருக்கோ" என்று குத்தலாக பேசி விட, அவளும் மௌனமாக எதுவுமே பேசாமல், "அப்படி இல்ல அண்ணி, கொஞ்ச நாள் வெளிய போய் இருந்தோம்" என்று சொன்னாள். ரேகாவோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "ஆமா ஆமா கேள்விப்பட்டேன்... குழந்தையை அத்தை கிட்ட கொடுத்துட்டு ஜாலியா ஊர் சுத்தி திரியிரியாம்னு கேள்விப்பட்டேன்" என்று சொன்னவள் குரலில் அப்பட்டமாக பொறாமை எட்டிப் பார்க்க.
நந்திதாவோ பதில் சொல்லாமல் அங்கே அமர்ந்தவளோ, "அப்பா எங்க அண்ணி?" என்று கேட்டாள். அவள் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அறைக்குள் இருந்து வெளியே வந்த பூபாலசிங்கமோ, "ம்ம் வா நந்திதா, நானே வரணும்னு நினச்சேன்.. ஏதோ வரலாற்று படத்துக்கு ப்ரொடக்ஷன் செய்ய முடியுமான்னு யுவராஜ் கேட்டான், அப்புறம் அத பத்தி பேச நேரம் கிடைக்கல" என்று அப்போதும் அவளை பற்றி கேட்காமல் படம், சினிமா பற்றி பேச அவளுக்கு வெறுத்துப் போனாலும் எதுவும் சொல்லாமல், "எனக்கு தெரியலப்பா அவர் கிட்ட தான் கேக்கணும்" என்று சொன்னாள்.
அதே சமயம் அங்கே அரை போதையில் வந்த விஷ்வாவோ, "உனக்கு தெரிஞ்சா தான் அதிசயம்" என்று சொல்லிக் கொண்டே ரேகா அருகே இருக்க, அவனை முறைத்துப் பார்க்க ரேகாவோ, "பட்ட பகலிலேயே குடிக்க வேண்டியது" என்று முணுமுணுத்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்
அவளோ மூவரையும் பெருமூச்சுடன் பார்த்து விட்டு, "ஆதித்ரியோட பர்ஸ்ட் பேர்த் டே கொண்டாட இருக்கோம், கண்டிப்பா வந்துடுங்க" என்று சொல்லி பூபாலசிங்கத்திடம் ஒரு இன்விடேஷனை நீட்டியவள் விஷ்வாவிடம் அடுத்ததை நீட்ட, ரேகாவோ, "வரோம் வரோம்" என்று வேண்டா வெறுப்பாக சொன்னது அவளுக்கு என்னவோ போல இருந்தது. ஆனாலும் அதனைக் காட்டிக் கொள்ளாமல், "அப்போ நான் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு கிளம்பி விட, அவளிடம், "தண்ணி குடிச்சு போ" என்று கூட யாருமே சொல்லவில்லை.
அவள் மனமோ, "அம்மா இருந்தா இப்படி எல்லாம் பண்ணி இருக்க மாட்டாங்க" என்று நினைத்தாலும் அவர்களிடம் எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்றும் அவளுக்கு புரிந்தது. பூபாலசிங்கமோ தூக்கத்திலும் சினிமா என்று புலம்புபவர், விஷ்வாவுக்கு பார்ட்டி, குடி, கும்மாளம் தான் உலகம். ரேகா கேட்கவே வேண்டாம், நந்திதா மீது பொறாமையின் உச்சத்தில் இருப்பவள். இப்படி இருக்கும் போது நந்திதா என்ன தான் பண்ண முடியும்?
இதே சமயம் யுவராஜ்ஜூம் பரத்வாஜ் வீட்டுக்கு பிரத்தியேகமாக அழைப்பை கொடுக்க சென்று இருந்தான். அவனைக் கண்டதுமே அங்கே இருந்த அக்ஷராவோ, "ஹாய் சார், வாட் எ பிளேசன்ட் சர்ப்ரைஸ்" என்று சொல்லி அழைக்க, அவனோ மென் புன்னகையுடன், "ஹவ் ஆர் யூ அக்ஷரா?" என்று கேட்டபடி அமர, பரத்வாஜ்ஜூம் ஹாலுக்குள் வந்தவரோ, "ஹாய் யுவா" என்று கைகளை நீட்டி குலுக்கி விட்டு அமர்ந்தார்.
யுவராஜ்ஜோ, "சார் என் பொண்ணோட பர்த் டே க்கு இன்விடேஷன் கொடுக்க வந்தேன்… கண்டிப்பா வந்துடுங்க” என்று அழைப்பிதழை நீட்ட, "ஷோர்" என்று சொல்லிக் கொண்டே இன்விடேஷனை பிரித்து புன்னகையுடன் பார்த்தார். அக்ஷராவோ, "அடிக்கடி குழந்தையோட அப்பான்னு சொல்லாதீங்க சார், நெஞ்செல்லாம் வலிக்குது" என்று கண்ணடித்து சொல்ல, இதழ் பிரித்து சிரித்தவனோ, "ஆக்ட் பண்ணனும்னு ஆசைப்பட்ட தானே? இப்போ ஒரு ஹிஸ்டரிக்கல் படம் எடுக்கிறேன். ஆர் யூ இன்டெரெஸ்ட்டேட்?" என்று கேட்க,
அவளோ, "யாகூ" என்று சந்தோஷமாக கத்தியவள், "இல்லன்னு சொல்லுவேனா சார்?" என்று கேட்க, அவனோ, "என்ன கரெக்டர்னு கூட கேட்க மாட்டியா?" என்று கேட்டான். அவளோ ஒற்றைக் கண்ணை அடித்து இல்லை என்று தலையாட்டியவள், "உங்க படம்னா எனக்கு எதுக்கும் ஓகே" என்று சொன்னாள். அவனோ சிரித்தபடி பரத்வாஜ்ஜைப் பார்த்தவன், "என்ன சார் இது?" என்று கேட்க, அவரோ, "உன் படத்தில நடிக்கணும்னு ஒத்த காலுல நிக்கிறா" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "அப்படியே டைரெக்ஷன் சைட்லயும் கொஞ்சம் இன்வால்வ் ஆகிக்கோ" என்று சொல்ல, அவளும், "ம்ம்" என்று சந்தோஷமாக தலையாட்ட, அவனும் புன்னகைத்து விட்டு புறப்பட்டு இருந்தான்.
இதே சமயம், அன்று மதியம் ஸ்ரீயின் ஆபீஸ் அறைக்குள் காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டு இருந்தது என்னவோ மித்ரா தான்… ஸ்ரீயோ, "சொன்னா கேளுங்க மேடம், நீங்க நல்ல நடிகை தானே? இந்த படம் இல்லன்னா இன்னொரு படம் கிடைக்கும்" என்று சொல்ல, அவளோ, "கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ஸ்ரீ, இது எனக்கு பிரெஸ்டிஜ் இஸ்ஸு வேற, இப்போ தான் ஒரு ரெண்டு படம் பண்ணி இருக்கேன்... யுவராஜ் சார் கிட்ட கொஞ்சம் பேசணும், எதுக்கு என்னை படத்தில இருந்து தூக்குனாருன்னு தெரிஞ்சிக்கணும்" என்று சொல்ல,
ஸ்ரீயோ பெருமூச்சுடன், "உங்க பெயர் மித்ரா தானே. அதனால் தான் தூக்கிட்டார்" என்று சொல்ல, அவளோ, "இதெல்லாம் ஒரு காரணமா ஸ்ரீ?" என்று கேட்டாள். ஸ்ரீயோ, "நிஜமா அதான் காரணம்" என்று சொல்ல, அவளோ, "என் உண்மையான பெயர் ஆனந்தவல்லி, படத்துக்காக தான் மித்ரான்னு மாத்திக்கிட்டேன்… அவர் விரும்புன போல பெயரையே மாத்த ரெடியா இருக்கேன்" என்று சொல்ல, ஸ்ரீக்கு சற்று பாவமாக தான் இருந்தது.
அடுத்த கணமே, "கொஞ்சம் இருங்க வரேன்" என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்துக் கொண்டே தள்ளிப் போனவன் யுவராஜ்ஜூக்கு அழைத்து இருந்தான். யுவராஜ்ஜோ, "ம்ம் சொல்லுடா" என்க, ஸ்ரீயோ, "மித்ரா வந்து இருக்காங்கடா, இன்னுமே அந்த பட விஷயத்தை விட மாட்டேங்குறாங்க" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "ஏதாவது சொல்லி அனுப்பி விடுடா" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
ஸ்ரீயும், "யுவராஜ் பொண்ணோட பர்த் டே ல பிசியா இருக்கார், அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்ல, அவளும் சோகமாக வெளியே சென்ற சமயம், வாசலில் நின்ற ஒருவனோ, "என்ன மேடம் சார் ஐ பார்க்க முடியலையா?" என்று கேட்டான். அவளும், "ம்ம்" என்று பெருமூச்சுடன் சொல்ல, அவனோ அக்கம் பக்கம் பார்த்து விட்டு, "எனக்கு ஒரு இருபதாயிரம் வெட்டுங்க, நான் ஐடியா தரேன்" என்று சொல்ல, அவளோ, "என்ன ஐடியா? உன்னை நம்பலாமா?" என்று கேட்டாள். அவனோ கையில் இருந்த இன்விடேஷனை நீட்டியவன், "இது தான் யுவராஜ் சாரோட பொண்ணோட பர்த் டே இன்விடேஷன், ஆபீஸ்ல இருந்து சுட்டுட்டேன்… இது இருந்தா உள்ளே போக முடியும், நீங்க யூஸ் பண்ணி போங்க" என்று சொல்ல,
அவளோ அதனை வாங்கி பார்த்தவள், "குட் ஐடியா" என்று சொல்லி விட்டு அவனுக்கு பணத்தையும் கொடுத்து விட்டு புறப்பட்டு இருந்தாள். இதே சமயம் அன்று காலையில் வயலுக்கு போக ஆயத்தமான ராம் வீட்டின் முன்னே வந்த தபால்காரனோ, "சார் போஸ்ட்" என்று சொல்ல, அவனும், "யார் எனக்கு போஸ்ட் அனுப்பி இருக்க போறாங்க?" என்று யோசித்தபடி அதனை வாங்கி கொண்டான்.
அதில் இருந்தது என்னவோ ஆதித்ரியின் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் தான். அனுப்பியது வேறு யாருமல்ல யுவராஜ் தான், "கண்டிப்பா வந்திடுடா" என்று அதில் எழுதி விலாசமும் போடப்பட்டு இருந்ததுடன் அவன் தங்க வேண்டிய ஹோட்டல் ரூம் தொடக்கம் அனைத்துக்குமான தகவல்கள் இருக்க, போவதா இல்லையா என்று யோசனையில் இருந்தவனோ, இவ்வளவு தூரம் அழைப்பிதழை அனுப்பி தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து இருக்கும் போது போகாமல் இருப்பது சரி அல்ல என்று எண்ணிக் கொண்டே போக முடிவெடுத்து இருந்தான்.
இப்படியே அங்கே போக அனைவரும் முடிவெடுத்த தருணம், குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்காக உடைகளை எடுக்க கடைக்கு சென்று திரும்பிய நந்திதாவோ கைப்பையை வைத்த கணம் அதில் ஒரு காகிதம் வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது. இந்த பிறந்தநாள் ஏற்பாட்டில் மித்ராவை மறந்து இருந்தவளோ, புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டே அந்த காகிதத்தை தூக்கி எடுத்தாள்.
நான்காக மடிக்கப்பட்டு இருந்த காகிதத்தை பிரிக்கும் போது அவள் கரம் அவளை அறியாமலே நடுங்க, இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.அவள் கரமோ அதனை மெதுவாக விரிக்க, அதில் இருந்தது என்னவோ, "உன் குழந்தை உயிருடன் வேண்டும் என்றால் என்னவனை விட்டு சென்று விடு" என்று தான். அதனைக் கண்டதுமே அதிர்ந்து போனவள் கரமோ கையில் இருந்த காகிதத்தை தவற விட, பயத்தில் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, நிலை கொள்ள முடியாமல் தடுமாறி போனவள் அருகே இருந்த அலுமாரியின் கைப்பிடியை பற்றி நிலை கொண்டபடி திரும்பி கட்டிலில் தூங்கி கொண்டு இருந்த குழந்தையை பார்த்தாள்.
அவள் கண்ணில் தாரை தாரையாக நீர் வழிய, இதயமோ வேகமாக துடிக்க தொடங்கியது… மனமும் வலிக்க ஆரம்பித்தது. போன ஜென்மம் என்றாலும் இன்றுமே அந்த சிசுவின் இறப்பை தாங்க முடியாமல் தவிப்பவள் அவள். அதே இழப்பு என்றால் தாங்க முடியுமா என்ன? அவசரமாக கீழே கிடந்த கடிதத்தை எடுத்துக் கொண்டே வெளியே வந்தவளோ, வேகமாக நுழைந்தது என்னவோ யுவராஜ்ஜின் அறைக்குள் தான்.
அவனாய் அப்போது தான் குளித்து விட்டு வந்தவன், தன்னை நோக்கி வேகமாக வருபவளை அதிர்ந்து பார்க்க, அவளோ கையில் இருந்த காகிதத்தை நீட்ட அவனோ அதனை யோசனையுடன் வாங்கி எடுத்தான். அவளோ, "எனக்கு என் குழந்தை தான் வேணும். என்னால உங்க கூட இருக்க முடியாது, டைவர்ஸ் பண்ணிடலாம்" என்று கண்ணீருடன் கும்பிட்டபடி சொல்ல, அவனோ அதிர்ந்து அவளை பார்த்தவன், "என்ன உளர்ற?" என்று தான் சீறினான்.
அவனுக்கு இதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவளோ, "எனக்கு பயமா இருக்கு யுவராஜ், நான் இங்க இருந்து கிளம்புறேன்… நீங்க அவ கூடவே வாழுங்க, எனக்கு நீங்க வேணாம்" என்று பதட்டமாக பேசியவள் நிதானத்தில் இருக்கவே இல்லை. அவனோ அவள் தோள்களை பிடித்து உலுக்கியவன், "யாரோ ஏதோ எழுதிட்டாங்கன்னு பைத்தியக்காரத்தனமா முடிவு எடுப்பியா? உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா" என்று கேட்க,
அவன் கையினை தட்டி விட்டவளோ, "இல்லை நம்பிக்கையே இல்லை… போன பிறவில என்ன பண்ணினீங்க? அவ கூட போய் என் குழந்தையை கொன்னீங்க, அப்படி பட்ட உங்கள எப்படி நம்புறது? எனக்கு நீங்க வேணாம்" என்று சத்தமாக கத்த, அவனுக்கும் பொறுமை பறந்து போனது. "அறைஞ்சேன்னா" என்று அவன் கையை ஓங்கி கர்ஜித்த குரலில் அவள் ஸ்தம்பித்து நின்று அவனைப் பார்க்க, அவனோ, "அவ எனக்கும் தான் குழந்தை, உனக்கு மட்டும் இல்ல... எப்போவோ பண்ணுன தப்புக்கு ஜென்ம ஜென்மாமா தண்டனை அனுபவிச்சவன் நான், அதே தப்பை எதுக்குடிபண்ண போறேன்? நானும் பொறுத்து பொறுத்து பார்க்கிறேன், ரொம்ப ஓவரா தான் போற" என்று சீற,
அவளோ அவனை அனல் தெறிக்க பார்த்தவள், "கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாம பேசுறீங்களே நீங்க எல்லாம் மனுஷன் தானா?" என்று சீறினாள். அவனோ ஆழ்ந்த மூச்செடுத்தபடி பார்த்தவன், "குற்ற உணர்வு இல்லன்னு நீ பார்த்தியா? எப்படி இருந்த நான் இப்படி ஆகி இருக்கேன், இன்னுமே என் மேல உனக்கு நம்பிக்கை இல்லைல்ல, நான் மோசமானவனா இருந்தா உன்னை விரட்டி விட்டு வேற பொண்ண கொண்டு வந்து வச்சு இருப்பேன்... சொடக்கு போட்டா லைன்ல பொண்ணுங்க வருவாங்க, உனக்காக நாய் போல காத்துட்டு இருக்க மாட்டேன் புரியுதா?" என்று கேட்டான் அவளுக்கு சற்றும் குறைவில்லாத கோபத்தில்.
அவளுக்கு இருந்த மனநிலையில் எதையும் கிரகிக்கவே முடியவில்லை. அவன் எது பேசினாலும் தப்பாகவே தோன்றியது. "சொடக்கிட்டா பொண்ணுங்க வருவாங்களா? இன்னும் நீங்க திருந்தலைல? பொண்ணுங்கன்னா அவ்ளோ கேவலமா போச்சா?" என்று கேட்க, அவனோ எரிச்சலாக பெருமூச்சுடன் நெற்றியை நீவியவன், "நான் என்ன பேசினாலும் தப்பாவே புரிஞ்சுகிற? கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு… என்னால முடியலடி உன் கூட" என்றான்.
அவளோ, "அதனால தான் டைவர்ஸ் கேக்கிறேன், எனக்கு என் குழந்தை தான் முக்கியம்" என்று சொன்னதும் லேசான வலி அவன் மனதில் எட்டி பார்த்தது. தன்னை எதற்கும் வேண்டாம் என்று உதறி பேசும் போது சராசரி மனிதனுக்கு உண்டாகும் வலி தான் அது. ஆனாலும் எதனையும் காட்டாமல் பெருமூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவன், "கண்டிப்பா டைவர்ஸ் தரேன்... ஆதி பர்த் டே முடியும் வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ணு" என்றான்.
அவளோ பதட்டமாக, "அதுக்குள்ள என் குழந்தைக்கு ஏதும் ஆயிடுச்சுன்னா?" என்று கேட்க, அவனோ, "எதுவும் ஆகாது… என்னை மீறி இந்த வீட்டுக்குள்ள யாரும் வர மாட்டாங்க, புரியுதா?" என்று கேட்டவனோ யோசனையாக அந்த கடித்தத்தை மீண்டும் வாசித்தான். நந்திதாவோ, "என் குழந்தைக்கு ஏதும் ஆச்சுன்னா உங்கள சும்மா விட மாட்டேன்" என்று சொன்னவளோ விறு விறுவென வெளியேற,
அவன் தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான். அடுத்த நாள் காலையில் ஷூட்டிங்கை கேன்செல் பண்ணி விட்டு அவன் நேரே சென்றது என்னவோ அவனது நண்பனும் போலீஸுமான ஜெய்தேவ் வீட்டுக்கு தான்.
அப்போது தான் அலுவலகத்துக்கு செல்ல ஆயத்தமான ஜெய்யோ அவனைக் கண்டதுமே சற்று அதிர்ந்து தான் போனான். பிரபலாமான ஒருவன் தன்னுடைய வீடு தேடி வந்து இருந்தால் அவனுக்கு அதிர்ச்சியாக தானே இருக்கும். காலேஜ் வரை ஒன்றாக படித்தவர்கள் தான் அவர்கள். அடிக்கடி போன் மூலம் பேசிக் கொண்டாலும் இருவரும் வெவ்வேறு திசையில் முன்னேறி இருந்ததால் நேரமின்மை தான் இருந்தது.
அவனைக் கண்டதுமே, "அட நம்ம யுவா சார்" என்று சொல்ல, அவனை முறைத்த யுவராஜ்ஜோ, "என்னடா சார், உன் பிரென்ட் தானே" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்து அவன் தோளில் கையை போட, அவனோ, "இப்போ நீ இருக்கிற உயரம் ரொம்ப அதிகம்ல" என்றான். யுவராஜ்ஜோ, "அதுக்குன்னு சாருன்னு சொல்வியா? எப்போவுமே நான் உன் பிரென்ட் தான்" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த சோபாவில் அமர,
ஜெய்யோ, "அது சரி என்ன இந்த பக்கம்?" என்று கேட்டான். யுவராஜ்ஜோ ஒரு பெருமூச்சுடன், கையில் இருந்த காகிதத்தை நீட்டியவன், "நேற்று என் வைப் ஷாப்பிங் போய் வந்த டைம் அவ பேக்ல இருந்திச்சு" என்று சொல்ல, அதனை வாங்கி பிரித்து வாசித்த ஜெய்யோ, "த்ரெட்னிங் கேஸ்" என்றான்.
யுவராஜ்ஜோ, "யாருன்னே தெரியல, என்னடா பண்ணுறது?" என்று கேட்க, அவனோ, "ரொம்ப புத்திசாலி தான், போன் பண்ணினா ட்ரேஸ் பண்ணிடுவாங்கன்னு இப்படி பண்ணி இருக்காங்க, இதுக்கு ஒரே வழி அந்த கடையோட சி.சி.டி.வி யை பார்க்கணும், கடைக்குள்ள வச்சு இது நடந்து இருந்துச்சுன்னா ஈஸியா புடிச்சிடலாம். வேற எங்கயும்னா கஷ்டம் தான்" என்றான். யுவராஜ்ஜோ, "இந்த கேஸை எப்படி டீல் பண்ணுறதுன்னு தெரியல" என்று சொல்ல,
ஜெய்யோ, "நீ பர்ஸ்ட் ஒரு கம்பிளைன் கொடு, இந்த விஷயம் வெளியே வராம நான் பார்த்துகிறேன்… கம்பிளைன் இல்லாம பண்ண போனா எனக்கும் ப்ரெஷர் வர வாய்ப்பிருக்கு” என்று சொல்ல, பெருமூச்சுடன் யுவராஜ்ஜூம் சற்று யோசனையாக, "நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாலே அது பெரிய நியூஸ் ஆயிடும்டா" என்று சொல்ல,
ஜெய்யோ, "நீ வர தேவல, உன்னோட மேனேஜர் கிட்ட எல்லாம் கொடுத்து அனுப்பு, நான் பாத்துக்கிறேன்" என்று சொல்லி யுவராஜ்ஜை வழியனுப்ப வந்தவன் அவனிடம், "இன்னுமே பொண்ணுங்க உன் மேல மயக்கமா தானா இருக்குங்க" என்று கேட்டான். அவனோ மென் புன்னகையை மட்டுமே பதிலாக கொடுக்க, அவனோ பெருமூச்சுடன், "கொடுத்து வச்சவன்டா நீ" என்று சொல்ல, யுவராஜ்ஜூம், "அப்புறம் என் பொண்ணோட பர்த் டே இன்விடேஷன்" என்று சொல்லி அவனுக்கும் ஒரு இன்விடேஷனை கொடுத்து விட்டு புறப்பட்டு இருந்தான்.