வேல்விழி 22
அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்தவள் மனம் முழுதும் மித்ரகுமாரியின் எண்ணம் மட்டுமே நிறைந்து இருந்தது. எங்கே இந்த ஜென்மத்திலும் தனது வாழ்க்கையை கெடுத்து விடுவாளோ என்கின்ற படபடப்புடன் இருந்தவளுக்கு தூக்கம் எங்கோ தொலைந்து போனது என்று தான் கூற வேண்டும். அவள் தூங்கவே இரவு மணி பன்னிரெண்டைக் கடந்து இருக்க, ஷூட்டிங் முடிந்து யுவராஜ் வீட்டுக்கு வரவும் நேரம் பன்னிரண்டு மணியைக் கடந்து இருந்தது. நேரே வந்து நந்திதாவின் அறைக் கதவை திறந்து பார்த்தவனோ, அவள் தூங்குவதை உறுதி செய்து கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.அவன் மனமோ, "நந்திதாவுக்கு என்னாச்சுன்னு தெரியலயே? சைக்காட்ரிஸ்ட் கிட்ட கூட்டி போறது பெட்டெர்ன்னு தோணுது… ஒரு டூ டேய்ஸ் வெய்ட் பண்ணி பார்க்கலாம்" என்று நினைத்துக் கொண்டே குளித்து விட்டு வந்தவன் தூங்கிப் போனான். அடுத்து வந்த நாட்களில் என்னவோ அவள் அமைதியாக தான் இருந்தாள். ஆனாலும் முகத்தில் பதட்டம் படபடப்பு இருக்க தான் செய்தது. குழந்தையை இறுக இறுக அணைத்துக் கொள்வாள், அடிக்கடி எட்டி எட்டி வெளியே பார்த்துக் கொள்வாள் என்று அவள் நடவடிக்கையில் வித்தியாசங்களை அவதானித்து இருந்தான் யுவராஜ்.
அவன் சாதாரணமாக இருந்தாலும் அவன் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். இப்படியே நாட்கள் நகர, வாரக் கடைசி நாளும் வந்து சேர்ந்தது. அன்று தான் அல்லவா ஸ்ரீ, பிரகாஷ், மதனா மற்றும் ஸ்ருதி என நால்வரும் படத்தை பற்றி கலந்துரையாட வந்து விடுவார்கள்.
அன்று குழந்தையோ தூங்கிக் கொண்டு இருக்க, ஹாலில் அமர்ந்து இருந்த நந்திதாவோ அழுத்தமாக தான் அமர்ந்து இருந்தாள். அப்போது வாசல் கதவின் மணி பல தடவை ஒலித்த போதிலும் அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் இருக்க, அறைக்குள் இருந்து வெளியே வந்த யுவராஜ்ஜோ எங்கேயோ வெறித்தபடி இருந்தவளை, "நந்திதா" என்று அழைக்க, அவளிடம் எந்த அசைவும் இருக்கவே இல்லை. அருகே சென்று கையை நீட்டி அவள் தோளைப் பற்றி உலுக்கியவன், "நந்திதா" என்று சத்தமாக அழைக்கவே நிதானத்துக்கு வந்தவள், "என்னாச்சு?" என்று கேட்டாள்.
அவனோ அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, "இவ்ளோ நேரம் காலிங் பெல் அடிக்குது, எத பத்தி கற்பனைல இருக்க?" என்று கேட்க, அவளோ தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவள், "ஆமா நம்ம சேர்வன்ட் எங்க? அவ திறக்க வேண்டியது தானே" என்று சொன்னாள். அவனோ, "அவ லீவுல போய் இருக்கா. அது கூட மறந்து போச்சா?" என்று கேட்டுக் கொண்டே கதவை திறக்க, "என்னடா இவ்ளோ நேரம்" என்று கேட்டபடி உள்ளே அனைவரும் நுழைந்தார்கள்.
உள்ளே வந்ததுமே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபடி, "ஏன் முகமெல்லாம் டல்லா இருக்கு நந்திதா?" என்று ஸ்ருதி கேட்க, அவளோ, "ஒண்ணும் இல்ல" என்று சொன்னவளோ அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே அமர்ந்து இருந்தாள். அவளுக்கும் இந்த விபரீத கற்பனை மற்றும் பயங்களில் இருந்து வெளியே வர வேண்டிய தேவை இருந்தது. பிரகாஷோ, "நீங்க சொன்ன போல ஹீரோயின்ஸ்க்கு சூட் ஆனவங்க கொஞ்ச பேரை கொண்டு வந்து இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே இருக்க,
யுவராஜ்ஜோ ஒரு கணம் நந்திதாவை பார்த்து விட்டு, "ம்ம அப்புறம் பார்க்கலாம்" என்றான் அவள் ஏதும் குழப்பமாக பேசி விடுவாள் என்கின்ற எண்ணத்தில். யுவராஜ்ஜோ கீழே ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து இருக்க, அவன் படிக்கட்டு முறுக்கேறிய தேகத்தைப் பார்த்த ஸ்ரீயோ, "டேய் மறுபடியும் ட்ரெயின் பண்ண ஆரம்பிச்சுட்டியா? முதல் இருந்ததை விட செமயா பில்ட் ஆகி இருக்கு பாடி, வாவ்" என்று சொல்லிக் கொண்டே, தனது கையை எடுத்து அவன் மேனியை வருட, யுவராஜ்ஜோ, "டேய், என்னடா பண்ணுற?" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே அவன் கையை தட்டி விட்டான்.
இதனை எல்லாம் ஒரு பார்வையாளராகவே உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் நந்திதா. ஸ்ருதியோ, "இந்த ஹீரோயினை தேடுறத விட்டுட்டு, வில்லியை தேடலாம் யுவா, இன்டெரெஸ்ட்டிங் ஆஹ் இருக்கும்… உன்னை மயக்கி சாம்ராஜ்யத்தையே அடக்கி, ப்பா, செம்ம ப்ரெய்ன்ல, எனக்கு நடிக்க தெரிஞ்சா நானே அந்த நெகட்டிவ் காரெக்டர் பண்ணிடுவேன்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இவ வேற மித்ராவை பத்தி பேசுறா" என்று நினைத்தபடி நந்திதாவை பார்க்க, அவளோ பக்கவாட்டாக திரும்பி ஸ்ருதியை அனல் தெறிக்க பார்த்துக் கொண்டே இருந்தாள்.
அவனோ, "ஐயையோ பார்வையே சரி இல்லையே" என்று நினைக்க, நந்திதாவோ, "ஸ்ருதி உனக்கு மித்ராவை பிடிக்குமா?" என்று கேட்டாள் அடக்கப்பட்ட கோபத்துடன். ஸ்ருதியோ, "பிடிக்குமாவா? நெகட்டிவ் காரெக்டர் எல்லாம் ரொம்ப பிடிக்கும், மித்ரா சான்ஸே இல்ல" என்று முடிக்க முதல் அருகே இருந்த கத்தியை எடுத்து அவள் கழுத்தின் நூலளவு இடைவெளியில் வைக்க, அனைவருமே அதிர்ச்சியுடன் எழுந்து நிற்க, ஸ்ருதியோ கண்கள் வெளியே விழுந்து விடும் அளவுக்கு விழிகளை விரித்தவளோ, "என்ன பண்ணற போற நந்திதா" என்று கேட்டுக் கொண்டே எழ,
நந்திதாவும் எழுந்து கொண்டவள், "உனக்கு மித்ராவை பிடிக்கும்னா நீ தான் மித்ராவா இருக்கணும்" என்றாள். தனது கழுத்தில் இருந்த கத்தியை ஏக்க பெருமூச்சுடன் பார்த்த ஸ்ருதிக்கு பேச்சு வர மறுத்தது. அவள் கேட்ட கேள்விக்கு பதில் பேசக் கூட முடியவே இல்லை. யுவராஜ்ஜோ, "நந்திதா அவளை விடு" என்று சற்று அதட்டலாக கூறிக் கொண்டே அருகே செல்ல,
"பக்கத்துல வந்தா அவ கழுத்தை சீவிடுவேன்" என்றாள். யுவராஜ்ஜோ, "நந்திதா என்னடி உனக்கு பிரச்சனை?" என்று கேட்டபடி அவள் சொன்னதைக் கேட்காமல் காலை எடுத்து வைக்க, நந்திதாவோ கையில் இருந்த கத்தியை ஸ்ருதியின் கழுத்தில் மெதுவாக அழுத்த ஸ்ருதி தான், "டேய் யுவா அவ தான் வர வேணாம்னு சொல்றாளே, என்னை சாக வைக்க பிளான் பண்ணுறியா??" என்று பயத்தில் அலற ஆரம்பித்து விட்டாள்.
யுவராஜ்ஜோ, "உன்ன காப்பாத்த தான்டி" என்க, "ஒரு மண்ணாங்கட்டியும் தேவல... நானே பார்த்துக்கிறேன்" என்று சொன்னவளோ நந்திதாவிடம், "நீ சொல்லும்மா என்ன தான் பிரச்சனை?" என்று கேட்டாள். நந்திதாவோ, "நீ தானே மித்ரா" என்க, அவளோ திருதிருவென விழித்தவள், "இல்ல நந்திதா நான் ஸ்ருதி" என்றாள்.
அவளோ கோபமாக, "அது இந்த ஜென்மத்தில், போன ஜென்மத்தில் நீ தானே மித்ரா" என்று கேட்டாள். ஸ்ருதியோ முகத்தை பாவமாக வைத்துக் கொண்டே, "நல்லா உத்து பாரு, என்னை பார்த்தா வில்லி போலவா தெரியுது?? போன ஜென்மத்தில் நான் தான் சாமரம் வீசுன பொண்ணு, மித்ரா எல்லாம் இல்ல" என்று சொல்லி விட்டு கண்களை உருட்டி யுவராஜ்ஜை பார்த்தவள், "சாமரம் வீசுற பொண்ணு நான் தானே? என் பெயர் என்ன யுவா? மறந்துட்டேன்" என்று கேட்டாள்.
அவளுக்கோ எங்கே நந்திதா கழுத்தில் கத்தியை சொருகி விடுவாள் என்கின்ற பதட்டம். அவனோ நெற்றியை நீவியவன், "சாமரம் வீசுன பொண்ணா" என்று யோசித்து விட்டு, சட்டென்று, "ஆமா ஆமா சாமரம் வீசுன பொண்ணு தான்" என்றான். நந்திதாவோ, "எனக்கென்னவோ நம்பிக்கை இல்ல, நீ தான் மித்ரா" என்க அருகே நின்று இருந்த ஸ்ரீ அடக்க முடியாமல் சிரித்து விட்டான்.
சட்டென்று அவனை திரும்பி முறைத்த ஸ்ருதியோ, "சிரிக்கிறியா? உனக்கு வைக்கிறேன் ஆப்பு பாரு" என்று நினைத்தவள், "மித்ரா பொண்ணா தான் பிறக்கணும்னு இல்லயே… ஆம்பிளையா கூட பிறந்து இருக்கலாம்" என்றாள். புருவம் சுருக்கி அவளைப் பார்த்த நந்திதாவோ, "என்ன உளர்ற??" என்று கேட்க, ஸ்ருதியோ, "நம்ம ஸ்ரீ தான் எல்லாரையும் விட யுவா கூட க்ளோஸ்... இப்போ கூட உன் முன்னாடி வாவ்ன்னு சொல்லிட்டு யுவாவோட பாடிய தடவி பார்த்தான்ல. எனக்கென்னவோ மித்ரா தான் ஆம்பிளையா பிறந்து இருக்கான்னு தோணுது" என்க, நந்திதாவின் பார்வை ஸ்ரீயை நோக்கி திரும்பியது.
அவனோ, "அடிப்பாவி" என்று ஸ்ருதிக்கு வாய்க்குள் திட்டி விட்டு, "ஐயையோ யுவராஜ் எனக்கு அண்ணா மாதிரி" என்றான். நந்திதாவோ, "எனக்கு என்னவோ உங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேகமாவே இருக்கு, மரியாதையா சொல்லுங்க யாரு மித்ரா?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "ஹேய் நந்திதா, எதுக்கு இப்படி தேவை இல்லாம பண்ணிட்டு இருக்க? இங்க யாரும் மித்ரா இல்ல" என்று சொல்ல, அவனை திரும்பி அனல் தெறிக்க பார்த்தவள், "உங்க ஆசை நாயகிக்கு சப்போர்ட் ஆஹ்?" என்று கேட்டாள்.
அவனோ நெற்றியை சலிப்பாக நீவியபடி, "மித்ரா இல்லன்னு ப்ரூப் பண்ணுனா விட்ருவியா?" என்று கேட்டான். நந்திதாவோ, "ம்ம் ப்ரூப் பண்ணுங்க பார்ப்போம்" என்றவள் இன்னுமே ஸ்ருதியின் கழுத்தில் இருந்து கத்தியை எடுக்கவே இல்லை.
யுவராஜ்ஜோ, "மித்ரான்னா என்ன தானே காதலிக்கணும், ஆனா ஸ்ரீயும் ஸ்ருதியும் ஒருத்தருக்கு ஒருத்தர் லவ் பண்ணுறாங்க" என்று சொல்ல, ஸ்ரீயோ, "டேய்" என்று அதட்ட, யுவராஜ்ஜோ அவனை ஆழ்ந்து பார்த்தவன், "லவ் பண்ணுற தானே" என்று கேட்டான். அவனும் என்ன தான் செய்வான்? ஸ்ருதியும் அவனை திரும்பி யோசனையாக பார்க்க, அவளை ஒரு கணம் பார்த்து விட்டு நந்திதாவைப் பார்த்த ஸ்ரீ, "ஆமா நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்" என்றான்.
நந்திதாவோ இருவரையுமே பார்த்து விட்டு, ஸ்ருதியிடம், "அப்படியா?" என்று அழுத்தமாக கேட்க, அவளோ திரு திருவென விழித்தவள், "ஆமா அப்படி தான்" என்று தட்டு தடுமாறி சொல்ல, நந்திதாவோ, "நான் நம்பமாட்டேன்" என்று சொல்லி அவர்கள் தலையில் குண்டை தூக்கி போட்டாள்.
ஸ்ருதியோ, "ஏன் நம்பமாட்ட?" என்று கேட்க, அவளோ, "இவ்ளோ நாள் கூட இருந்து இருக்கேன், ஆனா அப்படி தெரியலையே" என்று சொல்ல, ஸ்ரீயோ, "ரகசியமா லவ் பண்ணிக்கிட்டோம்" என்றான். அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், "அப்போ ப்ரூப் பண்ணுங்க" என்று சொல்ல, தலையை கோதிய ஸ்ரீயோ, யுவராஜ்ஜிடம் கடைக்கண்ணால், "எப்படி?" என்கின்ற தோரணையில் கேட்க, அவனோ அக்கம் பக்கம் பார்த்து விட்டு, இதழை குவித்து காட்டியவன் முத்தமிடுவது போல சைகை செய்ய, ஸ்ரீயோ அதிர்ந்து விழி விரித்தவன் ஸ்ருதியைப் பார்த்தான்.
அவர்கள் கண்களால் பேசியதை அறியாத ஸ்ருதியோ, "எப்படியாவது ப்ரூப் பண்ணிடு ஸ்ரீ" என்று கெஞ்சுதலாக கேட்க, அவனோ, "ப்ரூப் பண்ணிடுவேன், அப்புறம் திட்ட கூடாது" என்றான். அவளோ, "இல்ல திட்ட மாட்டேன் என்னை காப்பாத்து ப்ளீஸ்" என்றதுமே அவளை நோக்கி சென்றவன் அருகே நின்ற நந்திதாவிடம், "கொஞ்சம் தள்ளுனா தானே ப்ரூப் பண்ண முடியும்" என்றான்.
ஸ்ருதியோ, "என்ன பண்ண போறான்?" என்று யோசிக்க, நந்திதாவோ சற்று விலகினாலும் அவள் கையில் இருந்த கத்தியின் முனை ஸ்ருதியின் கழுத்தை தான் குறி பார்த்துக் கொண்டு இருக்க, ஸ்ருதியின் முகத்தை இரு கைகளாலும் தாங்கிய ஸ்ரீ சற்றும் தயங்காமல் விரிந்த அவள் இதழ்களில் தன்னிதழ்களை வைத்து அடைத்து இருக்க, ஸ்ருதிக்கு தூக்கி வாரிப் போட்டாலும் பேச முடியாத நிலை.
யுவராஜ்ஜோ, "அப்படி போடு" என்று வாய்க்குள் சொல்லிக் கொள்ள, மதனாவோ அருகே இருந்த பிரகாஷை பார்த்தவள், "இவனும் நம்மள கிஸ் பண்ணிடுவானோ?" என்று யோசித்துக் கொண்டே யுவராஜ்ஜிடம், "அப்போ நான் கிளம்புறேன் யுவா" என்று சொல்லி அவசரமாக செல்ல, பிரகாஷ்ஷும் அதே தான் நினைத்து இருப்பான் போல, "அடுத்த வாரம் வரேன் சார்" என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டு விட்டான்.
யுவராஜ்ஜோ தலையசைப்புடன் இருவரையும் வழி அனுப்பி விடும், ஸ்ரீயை பார்க்க, அவனோ ஸ்ருதியின் விழிகளை பார்த்துக் கொண்டே விலகியவன், சற்று கோபம் தணிந்து குழப்பத்தில் நின்ற நந்திதாவிடம், "இப்போ நம்புறியா?" என்று கேட்க, அவளும், நான்கு பக்கமும் தலையாட்டினாள். "அப்போ நாங்க கிளம்புறோம் யுவா" என்று சொன்ன ஸ்ரீயோ ஸ்ருதியின் கையை பிடித்துக் கொண்டே வெளியேற, அவளோ இன்னுமே முத்தமிட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவன் பின்னால் இழுபட்டு சென்றாள்.
அவர்கள் வெளியேறியதுமே, "இப்போ எதுக்கு கிஸ் பண்ணுன?" என்று கோபமாக ஸ்ருதி கேட்க, அவனோ, "பிகாஸ் ஐ லவ் யூ" என்றான். அவளோ அவனை முறைத்தபடி, "நான் லவ் பண்ணல" என்று சொல்ல, இதழ் பிரித்து சிரித்தவன், "பண்ணலன்னா ஓங்கி ஒன்னு கொடுத்து இருப்ப, இப்படி பேசிட்டு இருக்க மாட்ட,. எல்லாத்துக்கும் மேல கிஸ் பண்ணும் போது பிடிக்காத போல தெரியலையே" என்று கேட்க, அவளோ, "எப்படியோ கண்டு பிடிச்சிட்டானே, ஆனாலும் நாம கெத்தை விட கூடாது" என்று நினைத்தவள், "அது பாவமேன்னு விட்டேன்" என்று கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னவள் முன்னால் செல்ல, "சரி நம்பிட்டேன்" என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னால் சென்றான்.
ஸ்ருதியோ பெருமூச்சுடன் அவனை நோக்கி திரும்பியவள், "அது இருக்கட்டும், அத அப்புறம் பார்த்துக்கலாம், நந்திதாவுக்கு என்னாச்சு?" என்று கேட்க, இதழ்களை பிதுக்கிய ஸ்ரீயோ, "சைக்காட்ரிக்ட் ட்ரீட்மெண்ட் தேவைப்படும்னு தோணுது… யுவா கிட்ட நாளைக்கு தான் பேசணும், இன்னைக்கு அவனும் டென்க்ஷனா தான் இருப்பான்" என்று சொன்னான்.
இதே சமயம், அவர்கள் அனைவரும் வெளியேறியதும் கதவை அடைத்து விட்டு அங்கே இருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்த நந்திதாவைப் பார்த்த யுவராஜ்ஜோ, "என்னடி ஆச்சு?" என்று சலிப்பான குரலில் கேட்டான். அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "எனக்கு பயமா இருக்கு, மித்ரா மறுபடி வருவான்னு தோணுது, அந்த லெட்டர் படிச்சதுல இருந்து என்னவோ போல இருக்கு" என்று சொல்ல, அவள் அருகே வந்து அமர்ந்தவனோ, "அந்த லெட்டர் நிஜமாவே எப்படி வந்திச்சுன்னு உனக்கு தெரியாதா?" என்று கேட்க,
அவளோ, இல்லை என்று அழுத்தமாக தலையாட்ட அவளை யோசனையாக பார்த்தவனோ, "மித்ரான்னு யாரும் இல்ல நந்திதா, நீ சும்மா மனசை போட்டு குழப்பிக்காதே, வேணும்னா டாக்டர் கிட்ட நாம கன்சல்ட் பண்ணலாம்" என்று சொன்னதும் தான் தாமதம் அவனை திரும்பி அனல் தெறிக்க பார்த்தவள், "அப்போ என்னை பைத்தியம்னு சொல்றீங்களா? அந்த லெட்டர் நான் எழுதினேன்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்க, அவனோ, "நான் எங்க உன்னை பைத்தியம்னு சொன்னேன்,
இதெல்லாம் பிரம்மைன்னு தோணுது" என்று முடிக்க முதலே, "ஆமா ஆமா தோணும், அந்த ஆட்டக்காரியோட வாழ நீங்களும் பிளான் போடுறீங்களான்னு சந்தேகமா இருக்கு" என்று பதிலளிக்க, அவனும் பொறுமை இழந்து விட்டான். ஆனாலும் அவளிடம் கோபப்பட்டு பயன் இல்லை என்று அறிந்தவனோ, "எதுக்கு இப்படி உளர்ற?" என்று கேட்டவன் இதழ் குவித்து ஊதி மூச்சை மீண்டும் உள்ளே இழுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே, அவள் கரம் மீது கரத்தை வைத்தவன், "அப்படி வந்தாலும் நான் உன்ன விட்டு போக மாட்டேன்டி" என்று சொல்ல, "இப்படி தான் நான் முதலும் நம்பி ஏமாந்தேன்" என்று சொல்லிக் கொண்டே கண்ணீரை துடைத்தவள் அவன் கையை உதறி விட்டு விறு விறுவென அறைக்குள் நுழைய அவள் முதுகை வெறித்துப் பார்த்தான் யுவராஜ்.
அடுத்த நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றவனோ, ஆயத்தமாகி நடித்துக் கொடுத்து விட்டு, கேரவேனில் ஏற அவனை தொடர்ந்து ஸ்ரீயும் ஏறிக் கொண்டான். யுவராஜ்ஜோ அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தவனுக்கு சற்று முன் நடிக்கும் போது இருந்த உற்சாகம் எங்கோ தொலைந்து இருக்க, ஸ்ரீயை ஏறிட்டுப் பார்த்தவனோ, "நந்திதா பற்றி என்னடா நினைக்கிற?" என்று கேட்க, அவனோ பெருமூச்சுடன், "அத பத்தி தான்டா நானும் பேச வந்தேன், அவளுக்கு கவுன்சிலிங் தேவைப்படுதுன்னு தோணுது" என்று சொன்னான்.
யுவராஜ்ஜோ, "ம்ம், ஆனா அத பத்தி பேசுனாலே எனக்கு பைத்தியமான்னு சண்டைக்கு வர்றா, அவளை எப்படி ஹாண்டில் பண்ணுறதுன்னு கூட எனக்கு தெரியல… இல்லாத ஒரு விஷயத்தை இருக்கிற போல கற்பனை பண்ணுறா, ஆஹ் உன் கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன், அன்னைக்கு என்னாச்சு தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே அவள் மித்ரா எழுதியதாக கொண்டு வந்த கடிதத்தை பற்றி சொல்ல, அதனைக் கேட்டு சற்று அதிர்ந்து போன ஸ்ரீயோ, "ரொம்ப பயங்கரமா இருக்கு யுவா, இத இப்படியே விட கூடாது, ஏதாவது பண்ணனும், இல்லன்னா" என்று இழுத்தான்.
யுவராஜ்ஜோ. "ம்ம் புரியுதுடா, ஆனா எப்படி அவளை கன்வின்ஸ் பண்ணி அழைச்சிட்டு போறதுன்னு தெரியல" என்று யோசனையுடன் இருக்க, ஸ்ரீயோ, "பார்த்துக்கலாம்டா, பொண்ணோட பர்ஸ்ட் பேர்த் டே க்ராண்ட் ஆஹ் செலிப்ரெட் பண்ணனும்னு சொன்ன தானே? அதுல கான்சென்ட்ரேட் பண்ண வை… இத பத்தி யோசனை குறைஞ்சிடும்" என்று சொன்னான். அவனும் அதற்கு ஆமோதிக்க தலையாட்டி விட்டு அடுத்த ஷாட்டுக்கு ஆயத்தமாகி விட்டான்.