ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

யூதாஸின் முத்தம் - கதை

Status
Not open for further replies.

வினோ

New member
Wonderland writer
5- அதர்மப் போர்?

“….. (மஹாபாரத போர்க்களத்தில்) பிதாமகன் பீஷ்மன் மரணப்படுக்கையில் இருந்தபோது, கிருஷ்ணனைக் கேட்டான், ‘கண்ணா, இந்தப் போரை உன்னால் தடுத்திருக்க முடியாதா, நீ நினைத்திருந்தால் எதுதான் முடியாது?’ என்று.
அதற்கு கிருஷ்ணன் சொன்னான், ‘அரை நிர்வாணத்துடன் ஒரு பெண் உன்னிடம் நியாயம் கேட்டபோது உன்னால் என்ன செய்ய முடிந்தது? .....இதைத் தவிர வேறு தர்மம் எனக்குத் தெரியாது.’”

- கிருஷ்ணா கிருஷ்ணா

-------------

"நானும் அவ ஏறுன பஸ்-ல ஏறிட்டேன். நான் கொலை பண்ண விஷயம் இப்போ போலீஸ்க்கு தெரிஞ்சுருக்கலாம். என்னைய தேடிட்டு கூட இருக்கலாம். ஆனா, வேற யாருக்கும் இன்னும் தெரியாது.

நான் பஸ்-ல ஏறி உட்காந்ததும், என் மனசு அந்த முதல் கொலைய பத்தியேதான் நினைச்சுக்கிட்டு இருந்தது. அவகிட்ட எப்படி பேசுறது? என்ன பண்ணனும்? எதையும் என்னால யோசிக்க முடியல.

நான் பண்ணுன அந்த முதல் கொலை மட்டும் தான், என் மனச முழுசா ஆக்ரமிச்சு, நான் இந்த உலகத்த சேர்ந்தவனே இல்லங்குற மாதிரி ஆக்கிடுச்சு.

சார், நான் உங்கள கேட்குறேன், கொலை செஞ்சா தப்பா சார்?" என்று அவர் கண்களையே பார்த்தான்.

"சட்டப்படி தப்பு" என்று சின்னதாய் முடித்துக்கொண்டார். அதற்கு மேல், அவருடைய போலீஸ் வேலை அவரை எதுவும் சொல்ல அனுமதிப்பதில்லை.

"அவனும் சட்டப்படி நிறைய தப்பு பண்ணுனான். ஏன் சார் அவன மட்டும் சட்டம் தண்டிக்கல?" என்ற அடுத்த கேள்வியை அர்ஜீனன் தொடுக்கும் கணை போலத் தொடுத்தான்.

"இது ஜனநாயக நாடு.." என்று அவர் ஆரம்பிக்கும்போதே அவன் தடுத்தான்.

"நான் கேட்ட அந்த கேள்விக்கு, பதில் கேள்வியோ அல்லது பதிலோ இல்ல சார். அது உங்களுக்கே தெரியும். இருந்தாலும், நான் செஞ்ச கொலைய நியாயப்படுத்த வரல. நான் செஞ்சதும் தப்புதான் சார்" என்றான்.

அந்த அதிகாரியால் அவன் மனதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

"அவன் சட்டப்படி தப்பு செஞ்சான், அவன சட்டம் தண்டிக்கல. அதனால நான் அவன கொலை பண்ணுனேனு நியாயப்படுத்த முடியும். ஆனா, நான் அத விரும்பல சார். நான் செஞ்சதும் தப்புதான். சட்டப்படி நானே தண்டனைய ஏத்துக்கனும். என் மனசு இதத்தான் சொல்லிக்கிட்டே இருந்தது." என்று அவன் கூறும்போது, அந்த அதிகாரி அவன் கைகளைப் தொட்டார். அவன் பேச்சை நிறுத்தி அவர் கண்களைப் பார்த்தான்.

அவர் ஒரு நண்பன் போல பேச ஆரம்பித்தார். அவனை சகஜமாக்க விரும்பினார். "இன்னும் ஏன் கொலையப்பத்தி நினைச்சு மனச வருத்திக்குற? தண்டனைய ஏற்கனவே அனுபவிச்சுட்ட. இன்னைக்கு உனக்கு விடுதலை. எல்லாத்தையும் விடு. உன் காதல பத்தி சொல்லு. உன்னோட சிறை அறையில எழுதி வச்சுருக்கியே ஒரு கவிதை......" என அக்கவிதையை யோசித்துப் பார்த்து கூற முயன்றார்.

அவனே கூறினான்,
"கனவுகளைக் கொல்லாத விடியல்
எப்போது வரும்?
பாதியில் முடிந்த கனவுகளின் மீதி
எப்போது வரும்?" என்று விரக்தியில் புன்னகைத்தான்.

பின்பு, தான் சிறையின் சுவர்களில் எழுதியது அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும் அவர் தன்னை ஏதும் செய்யாமல் இருந்ததை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தான்.

அவன் மீண்டும் ஆரம்பித்தான். அவனால் காதலைப் பற்றி தற்போது கூற இயலாதவன் போல, மீண்டும் தான் செய்த முதல் கொலையைப் பற்றியும், அதை செய்து முடித்தபின் அவன் சந்தித்த மனப் புலம்பல்கள் பற்றியுமே பேசினான். அவன் ஆன்மாவால் அக்கொலையை எவ்வகையிலுமே நியாயப்படுத்த முடியவில்லை.

"இங்க எல்லாரும் தப்பு செஞ்சுட்டு அத பல வழி-ல நியாயப்படுத்துறாங்க சார். ஆனா, அப்படி நியாயப்படுத்துதல் இருக்ககூடாது-னு நினைக்குறேன் சார். நியாயத்துக்காகவே செஞ்சாலும் தப்பு தப்புதான் சார். தப்பால எப்பவுமே சரி ஆகவே முடியாது. சரிசெய்யுறதுக்கு ஒரே வழி, அதுக்கான சரியான தண்டனை மட்டும் தான்.

அதத்தான், நான் திருப்பித் திருப்பி சொல்ல முயற்சி பண்ணுறேன். மகாபாரதப்போர் தப்பு-னு, அத ஆரம்பிச்சு வைக்குற கிருஷ்ணனே சொல்லுறான். அதுவும், அந்த போர் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே சொல்லுறான். அந்த போர் தர்மத்த காப்பத்துறதுக்காவே நடந்தாலும், அதத் தப்பு-னு தான் கிருஷ்ணன் சொல்லுறான்." என்றான் அவன் எங்கோ பார்த்துக்கொண்டே.

மீண்டும் அவர் கண்களை ஊடுவிச் சொன்னான், "கிருஷ்ணன் போர் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, தன்னோட நண்பன் உத்தவன கூபட்டு, நீ இங்க இருக்காதனு சொல்லுறான். அதுக்கு உத்தவன், நான் இந்த போர பாத்துட்டு போறே-னு சொல்லுறான். அதுக்கு கிருஷ்ணன் என்ன சொன்னானு தெரியுமா சார்?" என்று மேலும் அவர் கண்களை ஊடுருவினான்.

அவர் அசைவற்று அவனை அறியாமையில் அதிகமாகப் பேசும் ஒரு சிறு பிள்ளையைப் போன்றே பார்த்தார்.

"கிருஷ்ணன் சொல்லுறான், உத்தவா, நீ ரொம்ப நல்லவன். அதனால சொல்லுறேன், போரே ஒரு கேவலாமான செயல். போர்-ல தர்மப் போர், அதர்மப் போர்-னு எதுவுமே இல்ல. போரே, ஒரு அதர்மச் செயல்-னு சொல்லுறான். கிருஷ்ணன் மறைமுகமா சொல்லவர்றது, அஹிம்சைய-னு நான் புரிஞ்சுக்கிறேன். ஆனா அந்த அஹிம்சைக்கு சில விலைகள் கொடுக்க வேண்டி இருக்கு. அந்த விலைதான் அந்த குருஷேரப் போர்-னு நான் புரிஞ்சுக்கிறேன்.
உண்மை எப்படி-னு தெரியல. நான் புரிஞ்சது இதத்தான்.

ஆனா, கடைசில அதற்கான, பழியையும், தண்டனையையும் ஏத்துக்கிறான் கிருஷ்ணன். நானும், நான் செஞ்ச கொலைய ஏத்துக்கிட்டுதான் சார் ஆகனும். இல்லைனா என் ஆன்மாவே என்னைய கொன்னுடும்-னு தோணிக்கிட்டே இருந்துச்சு சார். அதனால, அவகிட்ட என்ன பேச? எப்படி பேச-னு கூட என்னால, அந்த சமயத்துல யோசிக்க முடியல சார்."

அந்த அதிகாரி தற்போது ஏதோ ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தது போல இருந்தது. அதனால், அவன் சற்று பேச்சை நிறுத்தி, " என்ன யோசிக்கிறீங்க சார்?" என்று மட்டும் கேட்டான்.

"என்னால இதப் புரிஞ்சிக்க முடியல. கிருஷ்ணன் போர் ஒரு அதர்மச் செயல்னு சொல்லுறான். அப்புறம் எதுக்கு அவன் அந்த யுத்தத்த ஆரம்பிக்கனும்? தான் செய்யுறது தப்பு-னு தெரிஞ்சும் ஏன் பண்ணனும்?" என்று கேட்டார் அர்த்தப் பார்வையில்.

"அதப்புரிஞ்சிக்க நானும் ரொம்பவே போராடுனேன் சார்......." என்றவனை சட்டென இடைமறித்தார் அந்த அதிகாரி.

"சரி, நீ கொலை செஞ்சது தப்பு-னு உனக்கே தெரியும்-னு சொல்லுற. அத செஞ்சுட்டு ரொம்பவே வருத்தப்பட்டேன்னும் சொல்லுற. அப்புறம் ஏன் இரண்டாவது கொலைய பண்ணுன? அதுவும் எனக்கு சுத்தமா புரியல?" என்றார் குழம்பியபடியே.

"சிம்பிள் சார். நான் அவ பின்னாடி போகும்போது எனக்கு தெரியாதே, நான் இன்னொருத்தன அவளுக்காக கொல்லப் போறேனு. நாம எல்லாருக்காகவும் கொலை பண்ணுறது இல்ல சார். ஷி டெசர் இட் (She deserve it)." என்று அவருக்கு திருப்தி இல்லாத பதிலை கூறினான்.

திடீரென தொலைபேசி ஒலித்தது. அந்த அதிகாரி பேசி முடித்தவுடன், வேகவேகமாக கிளம்ப ஆரம்பித்தார்.

- முத்தம் கொடுக்கப்படும்
 

வினோ

New member
Wonderland writer
6 – முரண்பாடு

“மனிதர்களின் பொதுவான கற்பனைக்கு வெளியே பிரபஞ்சத்தில் கடவுளர் யாரும் இல்லை, எந்த நாடும் இல்லை, எந்தப் பணமும் இல்லை, எந்த மனித உரிமையும் இல்லை, எந்தச் சட்டமும் இல்லை, எந்த நியாயமும் இல்லை.”

- சேப்பியன்ஸ் (யுவால் நோவா ஹராரி)

------------------

"நான் உடனே கமிஷனர் ஆபிஸ்-க்கு போகனும்" என்று அவனைப் பார்த்து கூறினார்.

சில பைல்களை எடுத்துக் கொண்டு, ஒரு ஏட்டையாவை அழைத்து அவனை விடுவித்துவிட சொன்னார். பின் அவனைப் பார்த்தார். "நீ கிளம்பு. உனக்காக நீ கொலை செய்யல. இருந்தாலும் அது குற்றம். அதுக்கான தண்டனை அனுபபிச்சாச்சு. இனி இதப்பத்தி நினைச்சு கவலைப்படாத. அவள தேடி கண்டுபிடி. போய் ஒரு வேலையப் பாரு. அடிக்கடி என்ன வந்து பாரு. நான் என்னால முடிஞ்ச உதவியப் பண்ணுறேன்." என்று கூறிக் கொண்டே வெளியேற கிளம்பினார்.

அவன் எழுந்து நின்றான். பிறகு ஓர் தயக்கத்துடன், "சார், நான் உங்ககிட்ட இதக் கேட்டதில்ல. நான் உள்ள வந்த கொஞ்ச நாள்-ல இருந்தே, என்ன நீங்க ரொம்ப நல்லாவே பாத்துக்கிட்டீங்க. நான் இரண்டு கொலை பண்ணு-ன குற்றவாளி-னு தெரிஞ்சும் என்ன ஒரு குற்றவாளியா நீங்க நடத்துனதே இல்ல. ஏன் சார்?" என்றான்.

அவர் ஏதும் பேசாமல் அமைதியானார். பின்பு, அவனை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளை வேகவேகமாக அவரே முடித்துக் கொடுத்தார். போலீஸ் மனது வைத்தால் பலமாத வேலைகள் கூட, சில நிமிடங்களில் முடிந்துவிடும் தான் போல.

"வா என்கூட." என்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

இருவரும் வேகவேகமாக நடந்து காரில் ஏறிக்கொண்டனர். அவன் கையில் ஒரு கேரி பேக், அதில் ஒரு துணி மட்டும் இருந்தது.

சில நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. பின்பு அவரே ஆரம்பித்தார்.

"நான் லஞ்சம் வாங்குறது என் பையனுக்கு பிடிக்காது. அதுவும் ரோட்டு ஓரத்துல, தள்ளுவண்டி கடைய போட்டு, வீடு இல்லாம, வெள்ளம் மழை வந்தா ஒதுங்க ஒரு இடம் இல்லாம வாழுறவங்க கிட்ட லஞ்சம் வாங்குறது சுத்தமா புடிக்காது. இப்போ நான் எங்கயும் லஞ்சம் வாங்குறது கிடையாது" என்றார் ஒரு அசட்டு சிரிப்புடன்.

அவர் தற்போது காவல் அதிகாரியாய் இல்லாமல் ஒரு தகப்பனாக மாறியதை இவனும், அந்த வண்டியை ஓட்டிச் சென்ற போலீசும் உணர்ந்தனர்

மீண்டும் தொடங்கினார், "நான்.......இல்ல... நான் லஞ்சம் வாங்குற வச்சே நிறைய சண்ட வரும். என்ன எதுத்து பேசுவான். மத்த வீட்டு போலீஸ்காரன் மகன் மாதிரி அவன் கிடையாது. வெளில அவன் இப்படி பேசுனது வருத்தமா இருந்தாலும், உள்ளுக்குள்ள அவன நினைச்சு கொஞ்சம் பெருமையாவும் இருந்துச்சு.

ஒரு நாள் ரொம்ப நேரம் விடாம மழை பெய்ஞ்சுகிட்டு இருந்துச்சு. நான், என் பொண்ணு, என் மனைவி மூணு பேரும் ஒன்னா உக்கார்ந்து சூடா டீக்குடிச்சிட்டு, சீட்டு விளையாடிட்டு இருந்தோம். என் பையன கூப்டோம் அவன் வரல. ஒரு ஓரமா மழையையே வெறிச்சு பாத்துட்டு இருந்தான். அப்போ ஒரு கவித எழுதுனான். அது.....

"நான் மிரண்டு கொண்ட ஒரு மழையைக் கண்டு,
நீங்கள் இரசித்து கொண்டிருக்கலாம்.
முரண்பாடுகள் இருப்பினும்,
அது தவிர்க்க முடியாதது.
மழை
அனைத்து ஜீவன்களையும்,
அனைத்து சமயங்களிலும்,
ஆனந்தப்படுத்துவதில்லை.
அப்படி ஒரு சமயத்தில் உதித்ததே
இந்த முரண்பாடு"

அதோட அர்த்தம் என் பொண்ணு சொல்லி தான் எனக்கு புரிஞ்சது. அவன் உலகமே வேற மாதிரி இருந்தது. ஒரு போலீஸ்காரன் பையனு சொன்னா யாருமே நம்பமாட்டாங்க. அவன் காசு, பணம் எதையும் விரும்பல. அவன் மத்தவங்களுக்காக ரொம்பவே துயரப்பட்டான்.

முரண்பாடு. அந்த கவிதைக்கு தலைப்பு. இந்த சமூகத்துல உள்ள நிறைய பேருக்கு முன்னாடி அவன் முரண்பட்டு இருந்தான். எங்களுக்குளாம் அது கஷ்டமா இருந்துச்சு.

என்னோட பொண்ணு அவன விட ஒரு வயசு தான் சின்னவ. அவ அந்த மழைய இரசிச்சுக்கிட்டு இருந்தா. சத்தமான இடி, கண்ண குருடாக்குற மழை. அவளுக்கு அது ரொம்பவே புடிச்சிருந்துச்சு.

அவன் தங்கச்சி மேல ரொம்ப பாசமாவே தான் இருந்தான். ஆனாலும், அடிக்கடி அவங்களுக்குள்ள வர்ற முரண்பாடு அந்த மழைலையும் வந்துச்சு.

என் பையன் சொன்னான், ‘இந்த மழைய பணக்காரங்க மட்டும் தான் இரசிக்குறாங்க. மழைல ஒழுகாத வீட்டுக்கு உள்ள இருக்குற எல்லாருமே பணக்காரங்க தான். அவங்கதான் இத இரசிப்பாங்க. ஆனா, ரோட்டு ஓரமா, ஒரு கூட்டம் இருக்குதே, அவங்க இதல்லாம் இரசிக்க மாட்டாங்க. எப்படி அவங்களால இத இரசிக்க முடியும்? வீட்டுக்குள்ள வெள்ளம் வரும் போது, இளையராஜா பாட்டு கேட்டுட்டு, சூடா பஜ்ஜி சாப்டுட்டு இருப்போமா?’-னு கேட்டான். எங்களால எதுவும் பேச முடியல. பேசியும் எதுவும் அவன் ஒத்துக்கப்போறதுமில்ல" என்று கொஞ்சம் அமைதியானார்.

கமிஷனர் ஆபீஸை நோக்கி வேகமாக பாய்ந்து கொண்டிருந்தது அவர்களது வாகனம். ரோட்டோரம் இருக்கும் சின்ன சின்ன குடிசைகளைப் பார்த்துக்கொண்டே சென்றனர். அவன் ஏதும் பேசாமல், அந்த அதிகாரியையே பார்த்து கொண்டிருந்தான்.

மீண்டும் அவர் அந்த கவிதையை முணுமுணுத்தார்.

"நான் மிரண்டு கொண்ட ஒரு மழையைக் கண்டு,
நீங்கள் இரசித்து கொண்டிருக்கலாம்.
முரண்பாடுகள் இருப்பினும்,
அது தவிர்க்க முடியாதது.
மழை
அனைத்து ஜீவன்களையும்,
அனைத்து சமயங்களிலும்,
ஆனந்தப்படுத்துவதில்லை.
அப்படி ஒரு சமயத்தில் உதித்ததே
இந்த முரண்பாடு"

கவிதையை முணுமுணுத்து, பின்பு பேச ஆரம்பித்தார், "அவன் சொன்னது உண்மைதான். மழை எல்லா சமயத்துலயும், எல்லாரையும் ஆனந்தப்படுத்துறது இல்லையே. அவன் இந்த சமுதாயத்தவிட்டு ரொம்ப முரண்பட்டு இருந்தான். நிறைய விஷயங்களுல. அது சரியா? தப்பா? தெரியல. ஆனா, ஒரு அப்பாவா இருந்து பாக்கும் போது, அது கஷ்டமா இருந்துச்சு.” என்று சட்டென பேச்சை நிறுத்தினார்.

அவர் குரல்கள் தழுதழுக்க, “இப்போ அவன் எங்ககூட இல்ல. வீட்ட விட்டு போய்ட்டான்.” என்று மீண்டும் அமைதியாகி உடனேயே பேச ஆரம்பித்தார்.
“அவன் ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதுக்கு பிறகு வாழ்க்கையோட நிதர்சனம் புரியும்-னு நினைச்சேன். எல்லாரும் இருந்தும் தனியாவே இருக்குறதால இப்படி இருக்கான்னு நினைச்சேன். பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம். ஆனா, அதுக்குள்ள எங்கள விட்டுட்டு போய், எங்கயோ தனியா இருக்கான்.

அவன் நல்லவன் தான். ஆனா, இந்த சமுதாயத்துல வாழுறதுக்கு அது மட்டும் போதாது. சரியா?.. எத்தன கேஸ் பாக்குறேன். கொஞ்சம் தந்திரமும் வேணும்ல. இதெல்லாம் நினைச்சா, எப்படி பொழைக்கப் போறானோனு பயமா இருக்கு.

மேன் இஸ் எ சோஸியல் அனிமல் (Man is a social animal). மனுசன்னா சேர்ந்து வாழனும். இல்லைனா, அவன் மிருகமாகிடுவான். மிருகமானப் பிறகு இந்த சமுதாயம் அவன நிம்மதியா இருக்கவிடாது. அவன் இந்த சமுதாயத்துக்காகதான் பேசுறானு கூட அவங்க நினைக்கமாட்டாங்க. அவன் நல்ல மிருகம்னு எங்களத் தவற வேர எத்தன பேருக்கு தெரியும்?

(பெருமூச்சுடன்)....போய்ட்டான். தங்கச்சியோட கல்யாணத்துக்கு கூட வரல." என்று மீண்டும் அமைதியானார். அவர் கண்களில் நீர் கேர்த்துக் கொண்டு நின்றது.

இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், அமைதியை மட்டுமே பற்றிக்கொண்டான்.

அவர் மீண்டும் சாலையைப் பார்த்துக் கொண்டே, "நீ ஜெயிலுக்கு வந்த புதுசுல, ஜெயிலுக்கு உள்ள நடந்த ஒரு கலை நிகழ்ச்சில ஒரு கவிதை சொன்ன நியாபகம் இருக்கா?" என்று அவனைக் கேட்டார்.

அவன் மூன்று முறை கவிதை சொல்லி இருக்கிறான். எனவே என்ன கவிதை என்று அவனுக்கு நியாபகத்தில் இல்லை.

"சாரி சார். சரியா நியாபகம் இல்ல" என்றான்.

ஆனால் அவர் அதை நன்றாக நியாபகம் வைத்திருந்தார். அதை அவனிடம் கூறினார்.

"நான் இரசித்ததெல்லாம்,
நீர் இல்லாமல் மழை,
காற்று இல்லாமல் சூறாவளி,
அலைகள் இல்லாமல் சுனாமி,
அவள் இல்லாமல் எங்கள் திருமணம்.
கிட்டத்தட்ட அனைத்தும் சாத்தியமாயிற்று,
என் கற்பனையில்.
அது எவரையும் இம்சித்ததேயில்லை என்பதே,
இரசனையின் உச்சக்கட்ட மகிழ்ச்சி."

அவன் அவரின் ஞாபகத் திறனை ஆச்சரியமாகப் பார்த்தான். எழுதிய அவனுக்கே அது சரியாக நியாபகமில்லை. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருந்தது.

அவர் தொடர்ந்து பேசினார், "உன்னோட இரசனையும், என் பையனோட இரசனையும் ஒன்னாவே இருந்த மாதிரி இருந்துச்சு. நீர் இல்லாமல் மழை பெய்ஞ்சுருந்தா, அவனும் மழைய இரசிச்சிப்பானோ-னு யோசிச்சு பாப்பேன். யாரையுமே இம்சை பண்ணாத அந்த கவிதையோட அர்த்தம், எனக்கு என் பையன நியாபகப்படுத்திட்டே இருந்துச்சு. அவனுக்கும் உன் வயசு தான் இருக்கும். அதான் உன் மேல கொஞ்சம் அக்கறை. நீ நல்லவன் தான். கொலை செய்ற எல்லாருமே கெட்டவங்க இல்ல. நான் நிறைய கேஸ் பாத்துருக்கேன். ஆனா, சமூகமா வாழும் போது, அதுக்கான தண்டனைய ஏத்துக்கிட்டு தான ஆகனும்" என அவனைப் பார்த்து விரக்தியில் சிரித்தார்.

அவன் வாயடைத்துப் போனான். பேச வார்த்தையே அவனுக்கு வரவில்லை. தன் மகனைப் போல பார்த்தார் என்பதில் அவனுக்கு பேரானந்தம். பின் தயங்கியபடியே சந்தேகத்துடன் கேட்டான், "நான் வெளிய வந்ததுல உங்களோட பங்கு இருக்குதோ?"

அந்த அதிகாரி புன்னகைத்தார். "உன்னோட நன்னடத்தை தான் முழுக்காரணம். என்னோட முயற்சிக்கு காரணமும் கூட அந்த நன்னடத்தை தான்." என்று அமைதியானார்.

வாகனம் கமீஷ்னர் ஆபீஸை எட்டியபோது, அவனை இறக்கிவிட்டார். " இனி நல்லது தான் நடக்கும். கண்டிப்பா என்ன உதவி வேணும்னாலும் கேளு. நான் இருக்கேன். மறக்காம அவளையும் தேடி கண்டுபிடி" என்று புன்னகைத்துக் கொண்டே விடைபெற்று நகர்ந்தார்.

‘உனக்கு நான் இருக்கிறேன்' என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. அது ஒரு மந்திரச் சொல். பலருக்கு அது கிடைப்பதே இல்லை. சிலர் அதை கண்டுகொள்வதும் இல்லை. அலட்சியம் என்பது அதற்கு காரணம். வாழ்வின் இக்கட்டான காலக்கட்டத்தில் மட்டுமே இது புரியக்கூடும்.

அவர் போன பின்பும், அவன் கமிஷனர் ஆபிஸுக்கு வெளியே நின்றான், அவ்விடம் விட்டு செல்ல மனமில்லாமல். அவன் நிற்பதை அவர் திரும்பிப் பார்த்தார். சிரித்தார். கைகளை காட்டினார்.

அவனுக்கு தன் வீட்டை பற்றிய நியாபகம் திடீரென வர, குபீரென வியர்த்தது.

அப்பா, அம்மா, தங்கை... அவனை இந்த ஏழு வருடத்தில் ஒருமுறை கூட பார்க்க வராதது அவன் கற்பனையை எங்கெங்கோ கொண்டு சென்றது. என்னை ஒதுக்கிவிட்டார்களோ? இப்போது எப்படி இருக்கிறார்கள்? நான் செய்த கொலை அவர்களை ரொம்பவே பாதித்திருக்குமோ? என்று பல கேள்விகளுடன் அவர்களைப் பார்க்க ஓடினான்...


- முத்தம் கொடுக்கப்படும்
 

வினோ

New member
Wonderland writer
7 - தேவதூதன் வந்தான்

“கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை கூட்ட முடியுமா?”

- மத்தேயு 6:27

--------------------------

வீட்டின் நினைவு வந்து, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ எனப் பார்க்க ஓடினான். தான் செய்த கொலை அவர்களை நிலைகுலையச் செய்திருக்கும். தனது ஏழு வருட ஜெயில் வாசமும், குடும்பத்தின் வறுமையும், மேலும் அவர்களை அழுத்தியிருக்கும். மூச்சு திணறலால் அவதிப்பட்ட தங்கையின் நிலைமை என்ன ஆயிற்றோ? என்ற எண்ணம் அவன் உடலின் எடையை அதிகரிக்கச் செய்து, ஒரு தேவாலயத்தின் வாசலிலேயே அமர்ந்துவிடச் செய்தது.

இப்போது அவனுக்கு அவளைத் தேட வேண்டும் என்ற எண்ணம் வரவேயில்லை. குடும்பம் என்ன நிலைமைக்கு உள்ளானதோ என்ற துக்கம் அவனை நடக்கமுடியா பிணமாக்கியது.

ஒரு பிணம் தேவாலயத்தின் முன் கிடந்ததைப் போலக் கிடந்தான் உணர்வற்று. கழுகுகள் தேவாலயத்தின் புறாக்களை வேட்டையாடக் காத்திருந்தன. ஒருவேளை இவன் தன் தலையைத் தூக்காமலே இருந்திருந்தால், கழுகுகள் இவனைப் பிணம் என்றே நினைத்து கொத்தித் தூக்கியிருக்கும்.

தூரத்தில் ஒரு பெண் நடந்து வருவதைப் பார்த்தான். அவளாக இருக்குமோ என்ற சந்தேகம் மேலோங்கியது. அவன் உடலும் அனிச்சையாக மேலெழும்பியது. அது அவள் தானா?

அருகில் வரவர அவன் இதயம் பலவீனமாகி துடித்துக் கொண்டிருந்தது. அவளுக்காக ஒரு கொலையே செய்திருக்கிறான். ஆனால், அது அவள் அல்ல.

சுற்றிச் சுற்றிப் பார்த்தான் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று. தேவாலயத்தின் சுவரில் உள்ள வாசகம் ஒன்று கண்ணில் பட்டது.

"உண்மையில், அவர் [கடவுள்] நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை."

- அப்போஸ்தலர் 17:27

அவள் ஏன் தன்னை ஜெயிலில் வந்து பார்க்கவே இல்லை என்பதைப் பலமுறை சிந்தித்து சோர்ந்து போயிருந்தான். அவளுக்காகதானே இரண்டாவது கொலை செய்தான். அது அவளுக்கும் தெரியும் தானே. மீண்டும் அது தன் நியாபகத்திற்கு வர, அவளைப் பற்றிய நினைவில் மூழ்கிப்போனான். தேவாலயத்தின் புறாக்கள் அமைதியாகின.

இன்பமான அதேசமயம் மோசமான, அவளைப் பார்த்த அந்த இரவை தன் யோசனையில் ஓடவிட்டான். அவள் பின்னாலேயே பேருந்தில் ஏறி இருந்தான். அவளிடம் பேச ஆரம்பித்த நொடியை யோசித்துப் பார்த்தான்.

"நைட்டு கொஞ்சம் வேல இருக்கு. என்னால அவுங்க கல்யாணத்துக்குலாம் போக முடியாதும்மா. நீ போ" என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

வேலையே கதியென இருப்பவள் போலிருந்தது அவள் பேசும் தொனி. ஆனால், அவள் நிறையவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு இப்போதும் தெரியாது.

முதல் கொலையின் தாக்கத்திலிருந்தும், போலீஸ் தன்னை தேட ஆரம்பித்திருக்கலாம் என்ற ஊகத்திலிருந்தும் கொஞ்ச கொஞ்சமாக விடுபட்டு, அவளிடம் எப்படி பேசுவது என யோசிக்க ஆரம்பித்தான். இப்போதும் கூட அவனுக்குத் தெரியாது, தான் மீண்டும் ஒரு கொலை செய்யப்போகிறேன் என்பதும், செய்யப்போகும் இரண்டாவது கொலையை அவளுக்காகத் தான் நிகழ்த்தப் போகிறான் என்றும்.

அவள் பேருந்தின் வலப்புறம் அமர்ந்திருக்க, இவன் இடப்புறம் அமர்ந்திருந்தான். அவளிடம் பேச அவளை நோக்கி முகத்தை திருப்பினான். அவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 128-ஐ தாண்டியது.

தன் குரலைச் சரி செய்து கொண்டு, "நீங்க போஸ்டர் ஒட்டுறீங்க. உங்க வீட்டுல இந்த வேலை பாக்குறதுக்கு ஒன்னுமே சொல்லலையா?"

அவளை மேலும் இந்த கேள்வி சங்கடப்படுத்துமோ என பின்புதான் யோசித்தான்.

"இல்ல" என்றவள் குரலில் சோகம் படியாமலில்லை.

"நைட்டு எவ்வளவு நேரம் ஒட்டுவீங்க?"

"12 மணி ஆகிடும்."

பேருந்தின் வேகத்தில், காற்று இருவரின் முகத்தையும் குளிர்வித்தது. அவளுக்கு இருக்கும் பிரச்சனையில், யாரோ ஒரு முகம் தெரியாத ஆளிடம் பேச தயக்கப்படவே செய்தாள். ஆனால், தன்னிடம் இருக்கும் பாரத்தை அவன் மீது போட்டுவிடலாம் என நினைத்தாளோ என்னமோ, தடையில்லாமலே பேசினாள்.

"அப்புறம், எப்டி தனியா வீட்டுக்கு போவீங்க?"

"போய்ருவேன், ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடக்கனும்" என்றாள் அவனைப் பார்க்கமலே.

அவனுக்கு, இவளிடம் பேச பிடித்திருந்தது. ஆடம்பரமான பேச்சு அவளிடம் இல்லை என்பதால். மேலும், தான் செய்த கொலையை, அதனால் ஏற்பட்ட பதட்டத்தை மறக்க இந்த பேச்சு உதவியது.

மீண்டும் என்ன பேச எனத் தெரியாமல் முழித்தான். ஆனால் இப்போது அவளே பேசினாள்.

"வேலை கிடைக்கலயோ?. இப்போ என்ன பண்ணீட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள்.

"சும்மாதான் இருக்கேன். ஒரு கொலையும் பண்ணீருக்கேன்" என்று கிண்டலாக சிரித்தான்.

"ஓஹோ, நானுங்கூட கூடிய சீக்கரத்துல ஒரு கொலய பண்ணத்தான் போறேன்" என்றாள் அவனைப் பார்த்து கொஞ்சம் சிரித்துக் கொண்டே. ஆனால் அவன் ஏற்கனவே ஒரு கொலை பண்ணியிருந்தான்.

தன்னைதான் சொல்கிறாளோ என்றெண்ணி, "சீக்கிரம் பண்ணுங்க. மோட்சமாவது கிடைக்கும்" என்றான் அகலமாக சிரித்தவாரே.

"நான் உங்கள சொல்லல. இது வேற."

"வேறன்னா?"

"ஒரு பொறுக்கி அவன்."

"போட்டுத்தள்ளீரட்டுமா?" என்றான் குறும்பாக.

"நிம்மதியா இருப்பேன். அதான் கடவுள் உங்கள என்கிட்ட அனுப்பி வச்சிருக்காருன்னு நினைக்கேன்"

"ஆமா, நான் தான் தேவகுமாரன்." எனச் சிரித்தான்.

"பாத்து.. சிலுவைல அறைஞ்சுடப் போறாங்க. மோசமான உலகம்."

அவள் முகத்தில் இப்போது தான் உணமையான புன்னகையைப் பார்த்தது போல உணர்ந்தான்.

"என்ன சிலுவைல அறைஞ்சாலும் பரவாயில்ல. சிலுவை மேலும் புனிதமாகிடும்" என்று கவித்துவமாகச் சொன்னான்.

"உண்மையாவே உங்கள சிலுவைல அறஞ்சுடுவான். மோசாமான ஆள் அவன்" என்றாள் தீவிரமாக.

"உண்மையாவா சொல்லுறீங்க?"

"ஆமா. அவன்ட்ட கந்துவட்டிக்கு பணம் வாங்கி, இப்போ அவனோட கொடும தாங்க முடியல. எத்தன பேரு அவதிப்படுறாங்கன்னு தெரியுமா?. அவன் செத்தாதான் இனி நிம்மதி. அந்த அளவுக்கு என்ன யோசிக்க வச்சுட்டான். இந்த மனுசங்க ஏந்தான் இப்படி இருக்காங்களோ? என்னோட கனவு........" என அவள் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு போலீஸ் வாகனம் பேருந்தை தொடர்ந்து வந்தது.

போலீஸ் வாகனத்தின் அலறல் சத்தம் கேட்டதும் இவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. போலீஸ் வாகனம் பேருந்தை முந்தி வேகமாக வந்தது. தற்போது இவனது இதயத்துடிப்பு நிமிடத்திற்கு சுமார் 150-ஐ தொட்டிருக்கும். உடலெல்லாம் வியர்த்து ஒழுகியது. அவள் இதைப் பார்த்ததும் “என்ன ஆச்சு?” என்று கேட்டாள். ஆனால் அவனுக்கு அவள் கூறியது காதிலே விழவில்லை. திடீரென மழை பெய்யவும் தொடங்கியது.

- முத்தம் கொடுக்கப்படும்
 

வினோ

New member
Wonderland writer
8 - குருதட்சணை

"அவர்களின் வாழ்க்கையெல்லாம் வரம்
எனப் போற்றுகையில்,
ஏனையவர்களின் வாழ்க்கை சாபம்
என்றுதானே சொல்லாமல் தூற்றிச் சொல்கிறது.

வரத்திற்கும் சாபத்திற்கும் இடையே ஏதேனும் ஒரு நடுநிலை உள்ளதா?

அப்படி ஒரு நடுநிலை தன்னில்,
என் வாழ்க்கை அமைந்திடாதா?"

-------------------

போலீஸ் வாகனம் பேருந்தை முந்திக் கொண்டுச் சென்ற அடுத்த சில விநாடிகளில் ஆம்புலன்ஸ் ஒன்று பேருந்தை முந்திச் சென்றது. போலீஸ் வாகனம் நில்லாமல் சென்றது. அவன் சற்று நிம்மதியடைந்தான். வியர்வை முகத்தை தொப்பலாக நனைத்திருந்தது.

அவள் இதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

"என்ன ஆச்சு?" என்று சந்தேகப் பார்வையை அவன் மீது படரவிட்டாள்.

அவன், தன் சட்டையினால் முகத்தைத் துடைத்தான்.

"ஒன்னுமில்ல"

பலமாக மூச்சு வாங்கியது. மூச்சின் சத்தம் அவளை மேலும் சந்தேகமடையச் செய்தது.

"பாத்தா அப்படி தெரியலயே?" என்றாள் மீண்டும் சந்தேகத்துடன்.

"இல்ல. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நீ என்ன சொல்லிட்டு இருந்த? அவன் என்னயும் சிலுவைல அறைஞ்சிடுவான்னு சொன்னீல." என்று சகஜமானான்.

ஆனாலும் அவனுக்குள் தற்போது அவன் செய்த அந்த கொலை மீண்டும் தலைதூக்கியது. தான் செய்த கொலைக்கு ஒருபுறம் நியாயம் சொல்லிக்கொண்டாலும், மறுபுறம் அதைக் குற்றம் என்றே குறைபட்டுக் கொண்டான்.

"ஆமா. அவன்ட்ட கந்துவட்டிக்கு பணம் வாங்கிட்டு குடுக்க முடியல. ரொம்ப கேவலமா நடந்துக்குறான் வரவர. ஏந்தான் இந்த மனுசங்க இப்படி இருக்காங்களோனு சொன்னேன்" என்று தனது பிரச்சனையினில் மூழ்கிப் போனாள்.

"அத ஒன்னும் பண்ண முடியாது. உன்ன யாரு கந்துவட்டிக்கு பணம் வாங்க சொன்னா?" என்றவன் சற்று யோசித்து, "சரி உன் நிலைமைல இருந்தா, ஒருவேளை நானும் வாங்கிருப்பனோ, என்னவோ."

"அவன் என்ன வரம் பண்ணானோ, கொடுக்குற நிலைமைல இருக்கான். நாங்க என்ன சாபம் வாங்கிட்டு வந்தமோ, வாங்குற நிலைமைல இருக்கோம்."

"இதுக்கு ஏன் இப்படி வரம், சாபம்னு சொல்லிட்டு இருக்க?"

"எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. எனக்கும் அது தொத்திகிடுச்சு" எனச் சிரித்தாள்.

"வரம் வாங்கிட்டு வர்ரவன் கந்துவட்டிக்கு விட்டா பிழைப்பான்?" என்றான் பேருந்தின் வெளியே பார்த்துக் கொண்டே.

"அதான. வரமோ, சாபமோ... அதப்பத்தி பேசுறதால எதுவும் ஆகிடப்போகுதா?. போஸ்டர் ஒட்டுனாதான் காசு. அவனெல்லாம் கடவுளே வந்தாக் கூட ஒன்னும் கேட்கமாட்டாரு." என்றாள் விரக்தியில்.

"ஆமா ஆமா. இவனுங்கல்லாம் மறக்காம கடவுளுக்கு கமிஷன் குடுத்துறுவாங்களே. அதனால அவரு இவனுங்கள மாதிரி ஆளுங்கள கேக்கமாட்டாரு"

"இவன் கமிஷன்லாம் குடுக்கமாட்டான். கஞ்சப்பய. சர்ச்சுக்கு போய் ஓசில பாவமன்னிப்பு வாங்கிட்டு வந்துருவான்."

"ஓ இவன் கிறிஸ்ட்டியனா?"

"இல்ல. இந்து. கோயிலுக்கு போனா காணிக்கை போடனும்னு கிறிஸ்டியனா மாறிட்டான். கஞ்சப்பய."

"அப்போ சர்ச்ல காணிக்கைலாம் இல்லைனு நினைக்கியா? சர்ச்சுக்குள்ளயும் உண்டியல் இருக்கு."

"காணிக்கைலாம் இருக்கு. தெரியல ஏன் மாறுனானு. நான் சும்மா சொன்னேன். அவன் கஞ்சன். காசிக்குப் போய் பாவத்த கழிச்சா செலவாகும்ல. சர்ச்சுல ஈசியா பாவத்துக்கு மன்னிப்பு கிடைக்கும்னு படத்துல பாத்துருக்கேன். அதனால இருக்குமோனு சொன்னேன்." பின்பு அவனது கண்களை நோக்கியவாறு "உன்ன சிலுவைல அறைஞ்சப் பிறகு கூட அவனுக்கு ஈசியா பாவமன்னிப்பு கிடைச்சிடும்" என்றாள் சிரித்துக்கொண்டே.

"ஓ... ஈசியா பாவமன்னிப்பு கிடைக்குறதல்லாம் மத அரசியல். அது எதுக்கு நமக்கு? அடுத்த வேள சோத்துக்கே வழியில்ல. உனக்குனாலும் போஸ்டர் ஒட்டுற வேலை இருக்கு. எனக்கு இந்தமாதிரி வேலையப் பாக்க கொஞ்சம் கெளரவக் கொறச்சல்" என்றான் பெருமூச்சுடன்.

"அப்டியில்ல. அவன போட்டுத்தள்ளிட்டு நானும் கேட்டா எனக்கும் பாவமன்னிப்பு கிடைக்கும்ல." எனச் சிரித்தாள்.

"கிடைக்கும். ஆனா, ஜெயிலுல." என இவனும் சேர்ந்து சிரித்தான்.

அவள் இறங்கும் நிறுத்தம் வந்தது. இவனும் இறங்கிக்கொண்டான். சுற்றிலும் யாருமே இல்லை. இவர்களைத் தவிர யாரும் இறங்கவும் இல்லை. பேருந்து தூரம் சென்றபின், ஒரே அமைதி. மயானத்தில் கூட அப்படி ஒரு அமைதி இருக்காது. மழையும் சற்று ஓய்ந்திருந்தது. மேகமூட்டம் விண்மீன்களை மறைத்து வைத்தது.

பையினில் வைத்திருந்த போஸ்ட்டரையும், பசையையும் வெளியே எடுத்து வைத்தாள். இப்போது அவளிடம் எந்த தயக்கமும் இருக்கவில்லை. இவனிடம் பேசிக்கொண்டே போஸ்டரை எடுத்து, பசையைத் தடவ ஆரம்பித்தாள். அவள் ஒருபோதும் இவ்வாறு சந்தோஷமாக போஸ்டரை எடுத்து ஒட்டியதில்லை. தற்போது, ஏனோ இனம்புரியா சந்தோஷம் தொற்றிக்கொண்டது. அது நிச்சயம் காதல் அல்ல. அதையும் தாண்டிய ஏதோ ஒன்று.

"ஏன் உங்க வீட்டுல வேற யாரும் வேலைக்கு போகலையா?" என்று இவன் ஆரம்பித்தான்.

"அம்மா போறாங்க. பூ விக்கிறாங்க. கோயில் வாசல்ல. தங்கச்சி படிக்குறா. ஏழாவது போறா. அப்பா இல்ல. எங்க போனாருனு தெரியல." எனச் சாதாரணமாகச் சொன்னாள்.

அவன் இதற்கு எதுவும் பேசக்கூடாது என்பது போல, அமைதியாய் நின்றான். பிறகு, தனக்கு போஸ்டர் ஒட்ட கற்றுக்கொடுக்குமாறு அவளிடம் கேட்டான். அவள் சிரித்துக்கொண்டே அருகில் அழைத்தாள்.

"இந்தப் போஸ்ட்டர பிடி. பசையை அதிகமா எடுக்காத. கொஞ்சமா எடு. போஸ்ட்டர இரண்டா மடக்கி பிடி. பின்னாடி பக்கமா மடக்கு. பசைய தடவனும். இது சின்ன போஸ்டர். முழுசாலாம் பசைய தடவ வேணாம். எல்லா முனைலயும் தடவு. கடைசியா நடுவுல கொஞ்சம் தடவு. போதும் போதும்.." என தனக்குத் தெரிந்த வித்தையை சொல்லிக் கொடுத்தாள்.

அவனும் ஆர்வமாக நான்கைந்து போஸ்டர்களை எடுத்து ஒட்டினான். அடுத்த போஸ்டரை எடுக்கும்போது அவள் தடுத்துவிட்டாள்.

"மொதல்ல, அங்க ஏற்கனவே இருக்குற போஸ்டர மட்டும் கிழி. எடுத்த உடனே ஒட்டிட்டா எப்படி? தொழில கீழ இருந்து கத்துக்கனும்" என்றாள் திடீரென ஒரு மேலதிகாரி போல.

அவனுக்கு இதற்கு முன்னால், கோயம்பத்தூரில் பார்த்த வேலை நியாபகத்திற்கு வந்தது. இஞ்சினியரிங் முடித்து கம்பெனி சேர்ந்த புதிதில், இயந்திரங்களைத் துடைக்கவிட்டது நியாபகத்திற்கு வந்தது. ஒரு மாதத்திற்கு பிறகே இயந்திரத்தில் வேலை செய்ய அனுமதித்தனர். அதுவரை இயந்திரங்களைத் துடைப்பது மட்டும் தான் அவன் வேலை.

"முடிவே பண்ணீட்டியா?. இது தான் உன் தொழில்னு." என்று கேட்டான்.

"இல்ல இல்ல. இப்போதைக்கு இது. வேற பாத்துட்டு இருக்கேன். அப்பறம், உனக்கு இப்போ தொழில் கத்துக் கொடுத்துருக்கேன், அதுக்கு குருதட்சனை என்ன குடுக்கப்போற?" என்று கிண்டலாக கேட்டாள் போஸ்ட்டரில் பசையை தடவிக் கொண்டே.

"நீ குருதட்சனை கேப்பனு தெரிஞ்சுருந்தா, ஏகலைவன் மாதிரி தூரத்துல இருந்து நீ ஒட்டுறதப் பாத்து, நானே கத்துக்கிட்டுருப்பேன்." என்று சிரித்தான்.

"ஏகலைவனா? யாரு அவன்?"

"அவனும் நம்மள மாதிரிதான். ஒரு பாவப்பட்ட பிறவி."

இவன் பழைய போஸ்டரை கிழித்துக் கொண்டிருந்தான்.

"பழைய போஸ்டர கிழிக்கும்போது பாத்து கிழி" என்றாள் போஸ்டர் ஒன்றை ஒட்டிக்கொண்டே.

"ஏன்?"

"அந்த போஸ்டர ஒட்டுனவங்க, இல்லனா விளம்பரக்காரங்க ஒருவேள பாத்தாங்கன்னா, பிரச்சனை பண்ணுவாங்க. அதான்."

"இந்த நைட்டுல யாரு பாக்கப் போறா?. சரி.. ஒருவேள நீ ஒட்டுன போஸ்டர, வேற யாராவது கிழிக்கிறத பாத்தா, நீ என்ன பண்ணுவ?"

அவனை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் இயலாமை மட்டுமே இருந்தது. பின் ஒரு போஸ்டரை எடுத்து பசையை தடவிக்கொண்டே, "என்னால என்ன பண்ண முடியும்? அப்படியே அமைதியா போக வேண்டியதுதான்." என்றாள் சிரித்துக்கொண்டே.

இவன் மனதில், அவளுக்கு ஏதாவது உதவலாமா என்றே தற்போது எண்ணங்கள் ஓடியது. தன்னால் அவளுக்கு என்ன செய்ய முடியும் என யோசனையில் ஆழ்ந்தான். அந்த இடம் அமைதியாகவே இருந்தது. மனதில் மட்டும் அமைதி இல்லை. போலீஸ் எந்த நேரமும் அவனை பிடிக்கலாம்.

அந்த கந்துவட்டிக்காரனை எதாவது செய்யலாமா? என யோசித்தான். முதல் கொலையை நியாயத்திற்காகவே செய்திருந்தாலும், அது தவறு என்றே நினைத்து பின்னர் வருந்தினான்.

குழப்பம் அவனை சூழ்ந்துகொண்டது. இருள் அவர்கள் இருவரையும் ஏற்கனவே சூழ்ந்திருந்தது. அந்த இருளின் ஒரு மூலையிலிருந்து, டீ விற்கும் தாத்தா ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

"இரண்டாவது கொலைய பண்ணனுமா? அவன் மோசமானவன் தான? கொலை பண்ணுறது தப்பு தான். இருந்தாலும், நல்லவனையா பண்ணுறேன்? அதுக்குள்ள போலீஸ் பிடிச்சிருச்சுன்னா?" என குழம்பிப்போனான்.

திடீரென அவளைப் பார்த்து "உனக்கு குருதட்சனை நான் குடுக்குறேன்" என்றான்.

"என்ன?" என்றாள் ஆவளுடன்.

ஆனால் அவள் அவனிடம் பணமோ, பொருளோ எதிர்பார்க்கவே இல்லை. அவளது அந்த ஆவளில், அவனுடன் இன்னும் ஒரு பத்து நிமிடப் பேச்சு போதுமானதாக இருந்தது.

"பக்கத்துல எதுவும் சர்ச் இருக்கா?" என்று கேட்டான்.

அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

இவன் தீர்மானித்தான்.

- முத்தம் கொடுக்கப்படும்
 

வினோ

New member
Wonderland writer
9 – உன் கடவுளைக் கொன்றுவிட்டேன்

“இரப்பவர்க்கு ஈய வைத்தார்,
ஈபவர்க்கு அருளும் வைத்தார்,
கரப்பவர்தங்கட்கு எல்லாம் கடு
நரகங்கள் வைத்தார்.”

- திருநாவுக்கரசர்

--------------

“சர்ச்…… இருக்கு. ஆனா கொஞ்சம் தூரம். நான் வீட்டுக்கு போற வழி. ஏன் கேட்குற?”

“பாவமன்னிப்பு வாங்க”

“உன்ன பாத்தா கிறிஸ்டீன் மாதிரி தெரியலையே”

“எப்டி? மூஞ்சுல எதுவும் எழுதி ஒட்டிருக்கா?”

“இல்ல. சர்ச் எங்க இருக்குன்னு கூட தெரியல. அதான்..”

“தெருவுக்கு தெரு சர்ச் இருக்கு. எல்லாத்தையுமா தெரிஞ்சு வச்சுக்க முடியும்?” என்று கண்களைச் சிமிட்டி சிரித்தான்.

“சரி எதுக்கு பவமன்னிப்பு?” என்றாள் தன்னுடைய பையை மூடிக்கொண்டே.

“கொலை பண்ணப் போறேம்ல. நீ சொன்ன அந்த கந்துவட்டிக்காரன” அவள் சிரித்தாள்.

“ஆமா அவன் பேரு என்ன?” என்று கேட்டான்.

“வேலுச்சாமி. (பெருமூச்சுடன்) சரி விடு. அவன ஏன் நியாபகப்படுத்துற? அவனுக்கு ஏற்கனவே நிறைய எதிரிங்க இருக்காங்க.” என்று பேச்சை நிறுத்தி சுற்றி ஒருமுறைப் பார்த்தாள். தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் போவது தெரிந்தது. அந்த மோட்டார் சைக்கிள் இன்னும் கொஞ்சம் மறைந்து விட்டால் அந்த ரோடு அனாதை தான். “உனக்கு தெரியுமா?” என்று திடீரென மெதுவாகக் கேட்டாள்.

யாருமே இல்லை என்றாலும் அவள் ஏன் இப்படி மெதுவாக பேசுகிறாள் என்பது புரியாமல், “என்ன?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“எங்க பக்கத்து தெருவுல பெரிய
மாரியம்மன் கோயில் ஒன்னு இருக்கு. வருசா வருசம் திருவிழா ஏப்ரல் மாசம் நடக்கும். போன வருசம் அதுல வச்சு அவன தீத்துக்கட்ட பாத்தாங்க. தப்பிச்சுட்டான்.” என்று இரகசியம் பேசும் தொனியில் கூறினாள். அவளிடம் சிறிது வருத்தம் தென்பட்டதையும் இவன் கவனித்தான்.

“யாரு அவனப் போடப்பாத்தது?” என்று அவன் கேட்டபோது, அவன் முகம் தீவிரமாக இருந்தது.

“முகேஷ்”

முகேஷ் என்றவுடன் இவன் எதையோ யோசனையில் கொண்டுவர முற்ப்பட்டான்.

“முகேஷும் முன்னாடி வேலுச்சாமியோட ஆளு தான். வேலுச்சாமிக்கு ரொம்ப நம்பிக்கையானவன். ஆனா பதவிக்கு ஆசப்பட்டு வேலுச்சாமிய ஒரு கேஸ்ல வேலுச்சாமிய காட்டிக்குடுத்துட்டான். அதனால அவனுக்கு யூதாஸ்னு ஒரு பட்டப் பேரு கூட இருக்கு.” எனக்கூறி சிரித்தாள்.

“யூதாஸா? யூதாஸ்னா என்ன அர்த்தம்?” எனக் கேட்டான்.

“நீ கிறிஸ்டின் இல்லையா?” என சந்தேகத்துடன் கேட்டாள்.

“இல்ல. சொல்லு..”

“அதாவது யூதாஸ் தான் இயேசுவ காட்டிக்குடுத்தவன். அது ஒரு இன்ட்ரஸ்டிங்கான ஸ்டோரி. அவன் இயேசுவ எப்படி காட்டிக்கொடுப்பானு தெரியுமா?” எனக்கூறி சிரித்தாள்.

“எப்டி?” என தன் புருவத்தை சுருக்கி சிரித்துக்கொண்டே கவனமாக கேட்டான்.

“நான் யார முத்தம் குடுக்குறேனோ அவரு தான் இயேசு-னு, இயேசுவ பிடிக்க வந்தவங்க கிட்ட சொல்லிட்டு, இயேசு கிட்ட போய் ஒரு முத்தம் குடுப்பான். உடனே காவக்காரங்கல்லாம் வந்து இயேசுவ பிடிச்சு, சிலுவைல அறஞ்சுருவாங்க.”

“ஓ..” என்று மட்டும் கூறினான்.

“ஆனா, யூதாஸ் அடுத்த நாள் தற்கொலை பண்ணிக்குவானாம்.”

“ஏன்?”

“காட்டிக்குடுத்துட்டதால மனசு சரியில்லாம”

“ஓ..”

கொஞ்சநேரம் இருவரும் பேசவில்லை. இவன் எதையோ யோசிப்பது போல் இருந்தது. அதைக் கவனத்தவள், “என்னாச்சு?” என்றாள்.

“ஒன்னுமில்ல, காட்டிக்குடுக்க வந்தவன் தூரத்துல இருந்தே சொல்லிருக்கலாம். ஏன் யூதாஸ் இயேசுவுக்கு முத்தம் குடுத்து காட்டிக் குடுக்கனும்?”

“ம்ம்ம்ம்….” அவள் யோசித்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.

“என்ன பொறுத்தவரைக்கும் யூதாஸ் கெட்டவனா தெரியல. ஏதோ ஒரு சூழ்நிலைல சிக்கிருப்பான். அதனால காட்டிக்குடுத்துருப்பான். சூழ்நிலை தான மனுசங்கள தீர்மானிக்குது” எனக்கூறும் போதே இவன் தான் செய்த முதல் கொலையை மனதில் ஓடவிட்டான். மனம் பாரமாகியது.

“என்ன இருந்தாலும் காட்டிக்குடுக்குறது தப்பு தான” என்றாள் இவள்.

“ஒருவேளை இயேசுவுக்கு குடுத்த முத்தம், தன்னொட அன்போட வெளிப்பாடாக் கூட இருக்கலாம்ல. அடுத்த நாள் அவன் தற்கொலை கூட பண்ணிக்கிட்டான்னு சொல்லுற. அதான் யூதாஸோட முத்தம் எனக்கு சாதாரணமாத் தெரியல. அந்த முத்தத இயேசு மேல உள்ள காதலோட அடையாளமா பாக்குறேன், யூதாஸ் கேக்க நினைக்குற மன்னிப்போட அடையாளமா அந்த முத்தத்த நான் பாக்குறேன். காதலும், மன்னிப்பும் தான் யூதாஸோட அந்த முத்தமா இருந்திருக்கும். இது இயேசுவுக்கு மட்டும் தான் புரிஞ்சிருக்கும்.” என உணர்ச்சிப்பூர்வமாக பேசினான்.

“தெரியல. ஆனா, வேலுச்சாமி இயேசுவும் இல்ல, அதனால முகேஷ் யூதாஸும் இல்ல. இரண்டுபேருமே திருடனுங்க. இருந்தாலும், வேலுச்சாமிட்ட கடன் வாங்குன எல்லாரும் முகேஷ ஒரு கடவுளா தான் பாத்தோம்.” என்று அசட்டு சிரிப்பு சிரித்தாள்.

“முகேஷ கடவுளா பாத்திங்களா?” என்று இவனும் சிரித்தான்.

“ஆமா, ஆபத்துல உதவுறவன் கடவுள் தான.” என்றாள் மீதமுள்ள போஸ்டர்களை எண்ணியபடியே.

அப்போது அவனுக்கு ஒரு சிறு தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது. ‘அப்போ நான் கடவுளா? என்று உள்ளுக்குள் யோசித்தான்
திடீரென இவன் ஏதோ சிந்தித்தவாறே, “முகேஷ் என்ன பண்றான்? இவனும் கந்துவெட்டியா விடுறான்?” என்று கேட்டான்.

“அது இல்ல. இவன் கவர்ன்மெண்ட் காண்ட்ரெக்ட்லாம் எடுப்பான். ரோடு போட, தண்ணி டேக்ங் கட்ட. கட்சிக்குள்ள ஆளு இருக்கு. பொண்ணுங்க விஷயத்துல அப்டி இப்டினு இருப்பான். வேலுச்சாமிய மாதிரியேன். ஆனா, இவன் என்னைக்காவது மறுபடியும் வேலுச்சாமிய போட்டுத்தள்ள வருவான்ற நம்பிக்கை இருக்கு” என்று சிரித்துக்கொண்டே, தனது பையை முதுகில் போட்டுக் கொள்ள ஆயத்தமானாள்.

அவள் பையை முதுகில் போடும் முன், இரண்டு தட்டு தட்டி தூசியை கிளப்பிவிட்டாள். அதை பார்த்த அவன், இந்த பை அவள் பரம்பரை சொத்தாக இருக்குமென்று நினைத்தான். அவ்வளவு தூசி வந்தது.

“சரி. நான் கிளம்புறேன்.” என்று பெருமூச்சுவிட்டு அவனைப் பார்த்து சிரித்தாள்.

“அவனோட வீடு எங்க இருக்கு?” என்று கேட்டான் சாதரணமாக.

“எங்க தெருவுக்கு அடுத்த தெரு. மாரியம்மன் கோவில் சொன்னேன்ல, அதுக்கு பக்கம்.” என்று சொல்லிவிட்டு, “சரி. நான் கிளம்பனும். லேட் ஆகுது” என்று அவன் தலையசைவுக்கு காத்திருந்தாள்.

“ஆமா, உன் பேரு என்ன?” என்று கேட்டபோது அவனுக்கு இந்த உரையாடலை கொஞ்சம் நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

“சுபத்ரா. ஆனா வீட்ல மாரி-னு கூப்டுவாங்க. பூட்டி ஆச்சி பேரு” என்று கூறி சிரித்தாள். “உம் பேரு?”

“விநாயக மூர்த்தி. மூர்த்தினு கூப்டுவாங்க.” என்று அவன் கூறியவுடன், அவள் தன் புருவங்களை சுருக்கி, “நீ உண்மையாவே கிறிஸ்டியன் இல்லையா?” என்று மீண்டும் கேட்டாள்.

“ஏன் மறுபடியும் மறுபடியும் கேக்குற. நான் எப்போ அப்படி சொன்னேன்?”

“அப்றம் எப்டி உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கும்.. அப்பம் கூட கிடைக்காது” என்றாள் நக்கலாக.

“அதெல்லாம் எங்காளு விநாயகர் பாத்துக்குவாரு.. சரி. அவன் வீடு எங்க இருக்குனு காட்டுறியா?”

“யாரு வீடு?”

“வேலுச்சாமி?”

“ஏன்?”

“கொஞ்சம் காசு தேவப்படுது.”

“ஐய்யோ, உனக்கு வேற ஆளே கிடைக்கலயா கடன் வாங்க?” என்றாள் விளையாட்டாக.

“இல்ல……” என்று சில நொடிகள் யோசித்து அவள் கண்களைப் பார்த்தான். அவன் முகத்தின் தீவிரம் அவள் முகத்தையும் கலவரப்படுத்தியது.

“என்னாச்சு?” என்று கொஞ்சம் தடுமாற்றத்துடன் கேட்டாள்.

“நான்.... இல்ல. இல்ல ஒன்னுமில்ல” என்று மழுப்பலாகக் கூறினான்.

“சும்மா சொல்லு” என்றாள் எதையோ எதிர்பார்த்தவளாக.

“இல்ல..... நான்... நான் அவன கொன்னுட்டா உனக்கு உள்ள பெரிய பிரச்சன எல்லாம் தீந்துரும்ல?” என்றான் அதே தீவிரத்துடன்.

ஆனால் அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. விளையாட்டாக கேட்கிறானோ என்ற சந்தேகமும் இருந்தது.

“விளையாடாத”

“உண்மையாவே கேட்குறேன். அவன் போய்ட்ட எல்லா பிரச்சனையும் தீந்துரும்ல” என்று அவள் கண்களையே பார்த்தான்.

ஆனால், அவளுக்கு இந்த இடத்தில் மேலும் நிற்க பிடிக்கவில்லை. வேகமாக பின்னால் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவன் அப்படியே நின்று அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் கண்கள் கலங்கியிருந்தது, இவனுடையதும் தான்.

அவளின் குறுக்கே எங்கிருந்தோ தாவிக்குதித்து வந்த இரண்டு நாய்கள் சண்டையிட்டு கொண்டது. அவள் சற்று விலகி முன்னேறிக் கொண்டே இருந்தாள். வாழ்க்கையிலும் இதையே தான் இவள் இதுவரை சந்தித்தாள். பல நாய்கள் இவளுக்கு முன்னால் சண்டையிட்டுக் கொண்டது, இன்னும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இவள் தன் குடும்பத்தின் கடன்களில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.
இவன் அதில் ஒரு முக்கியமான நாயை அடித்துவிரட்ட வந்தவன் என்பதை அவள் உணராமலில்லை. ஆனால், நாயுடன் சண்டை போடுவதால் அவனும் நாய் என்று தானே அர்த்தம். அதை அவள் விரும்பவில்லை. பார்ப்பதற்கு நல்ல பையன் போல இருக்கிறான் என்று அவள் நினைத்தாள்.

“சுபத்ரா நில்லு.” என்று ஓடி அவளை அடைந்தான்.

“மாரி…” என்று மீண்டும் அழைத்தான்.
அவள் சட்டென்று திரும்பினாள்.

“நீ என்ன சொல்றேன்னு புரியுதா? வாழ்க்கைய வீணாக்காத. இன்னும் ரெண்டு மூனு வருசத்துல கடன அடச்சுருவேன். அவன கொன்னுட்டா எல்லாம் முடிஞ்சிரும்னு நினைக்கிறியா?”

“ஆனா உனக்கு தொந்தரவு இருக்காதுல.”

“யாருடா நீ? எனக்காக யோசிக்க” என்று திடீரென கடுமையானாள்.

காலங்காலமா அடங்கிப் பேசியே பழக்கப்பட்ட அவளுக்கு, இந்த அதிகாரப் பேச்சு குற்ற உணர்ச்சியை தந்தது.
அவளது கோபத்தை கண்டதும் அவனுக்கு பேச்சே வரவில்லை. எதுவும் பேசமுடியாமல் வாயடைத்து போனான். அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது. தன் கல்லூரி சீனியர் பெண் ஒருத்திக்காக ஏற்கனவே ஒரு கொலை செய்தான். ஆனால் அவளுக்காக தான் அந்த கொலை நடைபெற்றது என்று அவளுக்கே தெரியாது. அது ஒரு ஓரத்தில் அவனுக்கு உறுத்தியது. அந்த சீனியர் பெண்ணிடம் சென்று “உனக்காகத் தான் கொலை செய்தேன்” என சொல்லச் சொல்லி ஆழ்மனம் உந்தித் தள்ளியது. தனது சொல்லப்படாத காதலை அது நிரூபிக்கும் என்பதாலோ என்னமோ.

ஆனால், அவன் வெளி மனமோ அதை தடுத்துகொண்டிருந்தது. மொத்தத்தில் இதை எண்ணும்போதெல்லாம் வதைபட்டுக் கொண்டிருந்தான். அதனால்தான் இந்தக் கொலையை இவளிடம் சொல்லிவிட்டு செய்ய வேண்டும் என்ற விருப்பம் இவனையறியாமலேயே வெளிப்பட்டுவிட்டது. இவளின் கருணையோ அல்லது காதலோ கிடைக்கும் என்பது உள்மன எதிர்பார்ப்பு. இதை எண்ணிப் பார்க்கும் போது, அவனுக்கே தன்னை நினைத்து எரிச்சலாக வந்தது.

இருவருமே அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் நின்றனர். சுற்றிலும் இருட்டு. குளிர்ந்த காற்று அவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர அவர்களையே சுற்றிச் சுற்றி வந்தது.
இவன் தன் மெளனத்தை விட்டு வெளியேறினான். “இங்க பாரு மாரி, என்ன போலீஸ் தேடுது.”

அவள் வேகமாக அவன் முகத்தை பார்த்தாள். அவன் முகம் வியர்க்க ஆரம்பித்தது.

“உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. எனக்கு தேவையெல்லாம் அந்த கந்துவட்டிக்காரன் யாருங்குறது மட்டும் தான்.”

“உன்ன போலீஸ் தேடுதா? ஏன்?”

“ஏன்னா...” என்று கண்களை தரையை நோக்கி ஓடவிட்டான்.

“சொல்லு ஏன் தேடுது?” என்று மீண்டும் கடுமையானாள்.

அவளை பார்க்காமலேயே “ஏன்னா நான் உன் கடவுள கொன்னுட்டேன்.” என்று தன் கண்களை மூடினான்.

“புரியல”

“உன்னோட கடவுள் முகேஷ நான் கொன்னுட்டேன்.” என்றவுடன் இவன் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தது.

இவனுடைய பதற்றம், இப்போது அவளையும் தொற்றிக் கொண்டது.

அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே..

- முத்தம் கொடுக்கப்படும்
 
Status
Not open for further replies.
Top