இந்த பூமி பாவ புண்ணியங்களால் ஆனது. ஒரு நல்ல செயல் இன்னொரு நல்ல செயலுக்கு வழிவகுக்கிறது. ஆனால், ஒரு பாவமோ இன்னொரு பாவத்தில் பழி தீர்க்கும்.
நம் வாழ்க்கை இன்று மோசமாக இருக்கலாம். கஷ்டங்களில் நாம் உழன்று கொண்டிருக்கலாம். நம் குணங்கள் ஒரு கொடிய மிருகத்தை போல இச்சமயம் இருக்குமாயின், நாம் மீண்டும் நன்னிலையை அடையும் போது அக்கொடிய குணங்களுக்கு யார் பொறுப்பு?
சார்பியல் கொள்கைப்படி, ஒருவர் ஒளியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பயணித்தால் அவர் கடந்தகாலத்திற்குள் சென்றுவிடுவார். அப்படிக் கடந்தகாலத்திற்குள் சென்று அவர் அதை மாற்றும் பட்சத்தில், அது பெரும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
- ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் (ஸ்டீபன் ஹாக்கிங்)
---------------------
"கனவுகளைக் கொல்லாத விடியல்
எப்போது வரும்?
பாதியில் முடிந்த கனவுகளின் மீதி
எப்போது வரும்?" என்று அந்த சின்ன சிறை அறையில் அடுப்புக் கரியால் ஓர் ஓரத்தில் சிறியதாக எழுதப்பட்டிருந்தது. சிறையின் சுவற்றில் எழுதுவது, கிறுக்குவது என்பது குற்றமாகும். கண்டுபிடிக்கப்பட்டால் தோலை உறித்துவிடுவார்கள்.
அவன் அடைக்கப்பட்டிருந்த சிறையின் கதவு திறக்கப்பட்டது. கம்பீரமாய் வந்து நின்ற அதிகாரியின் முகத்தை பார்த்தான். விஷயத்தை ஊகித்துக்கொண்டு மெதுவாகச் சிரித்தான்.
அந்த அதிகாரியின் முகம் சற்று தடித்து இருந்தது. முகத்தின்மேல், மீசை மட்டும் அடர்த்தியாக, அதேசமயம் முடியின் முனைகள் முட்களைப் போல் கூராக இருந்தது. கண்கள் சற்று நீள் உருண்டையாக, இமையையும் தாண்டி எட்டிப் பார்ப்பது போல் இருந்தது.
"இந்த உலகத்த சந்திக்கப் போற நேரம் வந்துருச்சா சார்?" என்றான் எதையோ இழந்த ஏக்கத்தில். ஆனால், அவன் முகத்தில் சிரிப்பு இருந்தது. கூடவே, முகத்தில் இருந்த மூன்று தழும்புகளில், இடப்பக்க புருவத்திற்கு மேல் இருந்த மிகப்பெரிய தழும்பு மட்டும் துடிப்பது போல் இருந்தது. மீதமுள்ள இரண்டு தழும்புகளும் இடது பக்க கன்னத்தில் இருந்ததால் சற்று சுருங்கியது. மூன்று தழும்புகளுக்கும் வயது சுமார் 7 வருடங்கள்.
"வெளிய போய் என்ன பண்ணப் போற தம்பி?" என்று பரிவுடன் கேட்டார் அந்த கம்பீர மனிதர்.
"வாழவா சார் வழியில்ல" என்று வேதனை பொங்க வெற்றுப் புன்னகையில் எழுந்தான். இந்த வார்த்தை அவனது கடந்தகாலத்தின் படிப்பினை போல் தோன்றியது அந்த அதிகாரிக்கு.
"ஏன் சார், சில கனவு மட்டும் அடிக்கடி வர்றதே இல்ல?"
பதில் ஏதும் பேசாமல் அவர் சிரித்தார். அவனோ தன் பார்வையை எங்கேயோ வைத்துக் கொண்டு, "அவள முதல்ல போய் பாக்கணும் சார்" என்றான்.
"அவளா?" என்று தன் கண்களை சந்தேகத்துடம் குறுக்கினார்.
"ம்ம்" என்று பெருமூச்சுடன் சிறை அறையை விட்டு வெளியே வந்தான்.
"யாரு அது?" என அவர் கேடக, "தெரியாது சார்" என்றான் அவன்.
"தெரியாதா? இல்ல.... நீ சொன்னா எதாவது உனக்கு உதவலாமேனு தான் கேட்டேன்"
"உங்களால, எனக்கு உதவ முடியாம போச்சே சார். சத்தியமா எனக்கு தெரியாது" என்று கூறும்போதே, சிறை அறையின் எதிரே இருந்த மரத்திற்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த சககைதியை பார்வையால் கூப்பிட முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"அட்ரஸ்? (Address)"
வெற்றுப் புன்னகையுடன், "தெரியாது சார்".
"அப்புறம் எப்படி??"
"தொலைஞ்ச இடத்துல....." என்று பாதியில் பேச்சை நிறுத்தி அவரை நேருக்கு நேர் பார்த்து, மீண்டும் ஆரம்பித்தான். "நான் தொலைஞ்ச இடத்துல தேடப் போறேன்"
இதைக் கூறும் போது, அவன் நினைவுகள் ஏழு வருடங்கள் பின்னோக்கி பயணித்திருந்தது. மனதில் பழைய காட்சிகள் ஓட ஆரம்பித்தது. அவளிடம் கூறியது நினைவில் வந்து நின்றது. “இந்த உலகமே உன்ன வெறுக்கும் போதும் நீ உடஞ்சு போய்றாத. நீ இத மட்டும் நல்லா நியாபகம் வச்சிக்கோ.. நான் உனக்காக எப்பவும் இருப்பேன்கிறத…..”
இந்த வரிகளை மீண்டும் மீட்டெடுத்து, அவளுக்கு கொடுத்த இந்த வாக்குறுதியை பத்திரப்படுத்திக் கொண்டான். நிகழ்காலத்திற்கு வந்தான். அந்த அதிகாரியிடம் கேட்டான்.
சிறை கொசுக்களின் உழைப்பால் கிடைத்த சின்ன சின்ன கொப்புளங்களை அவ்வப்போது தடவிக்கொடுத்துக் கொண்டான்.
"சார், நம்ம எதுக்காக சார் வாழுறோம்? சாப்புட? இல்ல தூங்க? இல்ல வேல செய்ய? எதுக்காக சார்?"
"தெரியலப்பா. ஆனா, நான் என் குடும்பத்த காப்பாத்த வாழுறேனு சொல்லலாம்."
"ம்ம்.. அதான சார் அவ. அவளும் அப்படி தான்" என்று கூறியவாறே, தனது மூன்று நாள் தாடியை வலது உள்ளங்கையால் தடவினான். அடிக்கடி இப்படி தடவிப்பார்ப்பது அவனது வழக்கம். தழும்புகளால் தன் முகம் சீரழந்துவிட்டது என எண்ணியதாலும், சவரம் செய்யும் நாள் தவிர சிறைவாசத்தில் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க முடியாமல் போனதாலும், முகத்தை தடவித் தடவிப் பார்த்து இந்தப் பழக்கம் வந்துவிட்டது.
"புரியல" என்றார் ஆர்வத்துடன்.
"பிப்ரவரி 12, 2013. அப்போ தான் சார் அவளப் பாத்தேன்." என்று ஒரு பெருமூச்சு விட்டான். இதுவரை யாருடமும் சொல்லாத ஒன்றை சொல்ல ஆரம்பிப்பவன் போல இருந்தது அவன் விட்ட பெருமூச்சு.
திடீரென தூரத்தில் இருந்து ஒரு ஏட்டைய்யாவின் குரல், "சார், அந்த கட்சிக்காரன் மறுபடியும் மறுபடியும் கால் பண்ணுறான் சார். உங்ககிட்ட தான் பேசுவானாம்."
"வர்ரேன் இருய்யா" அவரின் கம்பீரமான குரல், அந்த தூரத்தைப் பார்த்து கர்ஜித்தது. பின் அமைதியாக, "நீ போய் குளிச்சிட்டு, என் ரூம்க்கு வா. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன விடுதலை பண்ணீருவோம்” எனறு கிளம்பினார்.
அவனுக்கு இது தெரிந்தது தான் என்றாலும், கண்கள் சற்று ஆனந்தத்தில் கலங்கியது. இதயம் படபடத்தது. அவளைப் பார்க்கப் போறோம் என்ற எண்ணம் அவனை என்னவோ செய்தது. எவரெஸ்ட் உச்சியையே அடைந்த ஆனந்தத்தை, அதன் குளிர்ச்சியை அனுபவித்தான். அதனாலோ என்னவோ, அவன் முகத்தில் இருந்த மூன்று தழும்புகளும் சற்று துடித்தது. அவர் அவனை விட்டு வெகுதூரம் சென்ற பின்னும், அவன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அப்படியே உறைந்து போய் நின்றான்.
"தம்பி," என்று தூரத்திலிருந்து அவர் குரல் மிருதுவாக ஒலித்தது. மீண்டும், நிகழ்காலத்திற்கு வந்தான். குளிக்கும் இடம் நோக்கிச் சென்றான்.
குளித்துவிட்டு தன் உடைகளை மாட்டிக் கொண்டே சிறை அறையைக் கடந்து வந்தான். அவன் திரும்பி வர விரும்பாத இடம்தான் இச்சிறை.
சில சமயம், எதாவது சக்தியிருந்தால் இறந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் மாற்றிவிட்டால் என்ன என்று அவனுக்கு தோன்றும். ஆனால் அதன் விளைவுகள் மோசமாகவே இருக்கும் என நிதானப்படுத்திக் கொண்டான் அல்லது அதை செய்ய தன்னிடம் எந்த சக்தியும் இல்லை என எரிச்சல் அடைந்தான்.
தான் செய்தது சரியா? தவறா? என்ற அவனின் கேள்விக்கு, இந்த ஏழு வருடங்களை கடந்து பின்பும் விடை கிடைக்கவில்லை. சில சமயம் நியாமா? அநியாயமா? எனவும் யோசிப்பான். சிலசமயம், இது போன்ற கேள்விகள் மனித மூளைக்கும் அப்பாற்ப்பட்டதாகவே அவனுக்குத் தோன்றியது.
தன்னுடைய சிறை அறையைக் கடந்தவன் மீண்டும் திரும்பி அந்தச் சிறை அறையைப் பார்த்தான். அவனின் கனவுகள் இன்னும் இந்த சின்ன அறைக்குள்ளேயே சுற்றி திரிந்து கொண்டிருப்பதை தன் அகக்கண்களால் பார்க்க முடிந்தது. அந்த அறைச்சுவரின் ஒவ்வொரு செங்கலிலும், அந்தச் செங்கல்லின் ஒவ்வொரு துகளிலும் அவன் கனவுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
‘அவள் இல்லாத கனவு' என்றே ஒன்று இல்லை. ஆனால், எதுவும் முழுமை பெற்றதில்லை. ‘மீதி கனவு எப்போது வரும்?’ என்ற கேள்வியுடனே அவன் நாட்கள் தினமும் ஆரம்பித்து முடிகிறது.
"அவள் இல்லாத கனவு??" என்று தன் புருவங்கள் சுருங்க, அந்த கம்பீரமான சிறை அதிகாரி கேட்டார்.
"இது ஒன்னும் அதிகமா ஏத்திலாம் சொல்லல. என் வயசு என்ன சார்? 30 தான் ஆகுது. 23-வது வயசுல இங்க வந்தேன். 23 வருஷத்துல பாதி வருஷம் தூங்கிட்டு இருந்திருப்பேன். மீதம் ஒரு 11 வருஷம்னு வச்சிக்கோங்க. அதுல 5 வருஷம் விவரம் தெரியாது எனக்கு. மீதம் 6 வருஷம்.. இதுல நான் ஸ்கூல், காலேஜ், அதுபோக விளையாண்டதுனு என்னோட நினைவுகளே இவ்வளவு தான். நான் இந்த சிறைக்கு கொண்டு வந்ததே, இந்த 6 வருஷத்துல நடந்த முக்கியமான நினைவுகள மட்டும் தான். அதுல ரொம்ப முக்கியமான விஷயம் அவ தான் சார். டெய்லி, எதாச்சும் ஒரு கனவுல வந்துருவா"
"முக்கியமான பொண்ணுனு சொல்லுற, ஆனா அவ அட்ரஸ் எதுவுமே உனக்கு தெரியல. எதுவோ மறைக்குற மாதிரி இருக்கே." என்றார் அந்த அதிகாரி சற்று புன்னகையுடன். "சும்மா சொல்லு" என்று கூறி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"நான் தான் கொலை செஞ்சேன்னு ஒத்துக்கிட்டவன் சார். இத மறைச்சு என்ன ஆகப் போகுது?"
"ம்ம்ம்.. சரி தான். ஆனா முக்கியமான பொண்ணு....ம்ம்ம்....."
"நான் தான் கொலை செஞ்சேன்னு ஒத்துக்கிட்டதே அவளுக்காக தான் சார். பாவம்......." என்றவனை இடைமறித்து, "அப்போ அந்த கொலைய செஞ்சது அந்த பொண்ணா?" என்று சற்று கடினமானார்..
இவன் சிரித்தான். கன்னத்திலுள்ள தழும்புகள் சுருங்க, "என்ன இருந்தாலும் நீங்க போலீஸ். கொலை அப்படிங்கிற பாய்ண்ட் ஆப் வியூவ்ல இருந்தே பாக்குறீங்க. இது காதல் சார். முழுசா சொன்னாக் கூட சில சமயம் புரியாது. நான் இன்னும் சொல்லக் கூட இல்லயே" என்று தன் வலது உள்ளங்கையால் தாடியைத் தடவினான்.
"புரியல. கொலைய யாரு செஞ்சது? அவளா? இல்ல அவளுக்காக நீ செஞ்சியா?"
அவன் முகம் சுருங்கியது. சற்று தயக்கத்துடன், "நான் வர்ரேன் சார்.. சாரி, நான் போறேன் சார்" என்று எழுந்தான்.
"எங்கிட்ட கூட சொல்லமாட்டியா தம்பி" என்றார் அக்கறையுடன். இந்த அக்கறை மற்றும் உரிமைக்கு அர்த்தம் அவனுக்குத் தெரியாது. அவரின் கடுமையான குணத்திற்கு இவன் மட்டுமே விதி விலக்காக இருந்திருக்கிறான். அது ஏன் என்று சில சமயம் யோசித்ததும் உண்டு.
"…….மேம்போக்கான மனிதர்கள்தான் தம் குறுகிய சொந்தத் துயரங்களில் மூழ்கி, மற்றவர்களின் துயரைப் பற்றிக் கவலைப் படாமல் இருப்பவர்கள்……”
- ஒரு யோகியின் சுயசரிதம்
-------------------
"பிப்ரவரி 12, 2013, பஸ் ஸ்டாண்ட்ல நான் உட்காந்துட்டு இருந்தேன். நைட் 9 மணி இருக்கும். காத்தே இல்ல. உடம்பெல்லாம் வியர்த்து வழிஞ்சுட்டு இருந்துச்சு. கூட்டமும் கூட அதிகமா இருந்துச்சு.
எல்லாருக்குமே வியர்த்து கொட்டிட்டு தான் இருந்துச்சு. லைட்டு வெளிச்சத்துல எதுக்காகவோ காத்துக்கிட்டு இருந்தேன். அப்போதான் அவள பாத்தேன். ஆனா பின்னாடி ஒரு நாள் தான் தோணுச்சு ஒருவேள நான் அவளுக்காக தான் காத்திக்கிட்டு இருந்திருப்பேனோனு..
கைல ஒரு பேப்பர மடக்கி வச்சுருந்தா. இன்னொரு கைல என்னமோ இருந்தது. அத அந்த பேப்பரோட ஓரத்துல தடவிட்டு இருந்த மாதிரி இருந்தது. அவளோட கலர் மங்கிய பச்சை கலர் சுடிதார், முதுகுல கருப்பு கலருல வெளுத்து போன ஒரு சின்ன பை, மெலிஞ்ச குள்ளமான உயரம், காலேஜ் போற பொண்ணுனு நினைச்சேன்.
ஒரு இரும்புத் தூணுக்கு முன்னாடி போய் திரும்பி நின்னா. என்ன பண்ணுறானு பாக்க முடியல. ஆனா, அது வரைக்கும் எனக்கு அவ மேல, எந்த ஒரு ஈடுபாடும் இல்ல. சும்மா ஒரு நிகழ்வ நான் வேடிக்க பாத்துட்டு இருந்தேன் அவ்வளோ தான்.
பஸ் ஸ்டாண்டுல இருந்தோம்னா, நாம வேடிக்கை பாப்போமே, கடலை விக்குற வண்டிய, அத விக்குற அண்ணன, இல்ல அத வாங்குறவங்கள, கொஞ்ச தூரத்துல பஸ்ல ஏற முடியாம ஏறுற பாட்டிய, பக்கத்துல இருக்குற ஒருத்தங்க கிட்ட கை நீட்டி பிச்ச கேக்குற தாத்தாவ, பிஸ்க்கட், தண்ணீர் பட்டில் விக்குற சின்னப் பையன, பர்பி, கடலைமிட்டாய் விக்குற கண் இல்லாத நடு வயது மனிதர, எரிஞ்சு விழுற கணவன, பதிலுக்கு பணிஞ்சு போகுற மனைவிய, நம்மல பாக்காதா, அப்படி பாத்தா பயமுறுத்தலாம்னு நம்ம எதிர்பாத்து, பார்த்துட்டு இருக்குற கை குழந்தையனு, சாதாரணமான மாதிரி தான் அவளையும் பார்த்தேன்.
கொஞ்சம் அந்த தூண விட்டு விலகி போனப் பிறகுதான் பாத்தேன், அவ கையில மடக்கி வச்சுருந்த பேப்பர் அவ கையுல இல்ல, ஆனா, அந்த தூணுல ஒட்டி இருந்துச்சு. அதுல போட்டுருந்துச்சு, "வேலைக்கு ஆட்கள் தேவை....."
ஒரு பொண்ணு இந்த வேலைய பாக்குறாளா?-னு எனக்கு ஆச்சரியம் சார். அது குறையுறதுக்கு முன்னாடி, அவளயே பாத்துட்டு இருந்தேன். அங்க ஒரு பையன் கிட்ட போய் இன்னும் இரண்டு பேப்பரையும், கொஞ்சம் பசையையும் வாங்குனா.
அவ அந்த பசைய, பேப்பருல தடவுற விதமே வித்தியாசமா இருக்கும். அந்த பேப்பர இரண்டா மடக்கி, அதோட ஓரத்துல, சாப்பாட எப்படி நம்ம அஞ்சு விரலால எடுப்போமோ, அதே மாதிரி கைய பேப்பர் மேல வச்சு, பசைய தடவுறா. அப்படியே சுத்தி, யாராவது தன்ன பாக்குறாங்களானு பாக்குறா. இரண்டுமே ஒரே நேரத்துல நடந்துச்சு. அப்படியே தயங்கித் தயங்கி போகுற மாதிரி இருந்துச்சு அவ அத ஒட்டுறதுக்காக நடக்க ஆரம்பிச்சது.
அப்போ தான் அவளோட முகமும், வியர்த்து இருந்தத பார்த்தேன். நைட்டு லைட்டு வெளிச்சத்துல, அவளோட முகம் வெள்ளையா மாறி இருந்துச்சு. ஆனா, அவ கருப்பு கலரு. வியர்வை முகம் முழுக்க பரவி இருந்ததால, லைட்டு வெளிச்சம் பட்டு வெள்ளையா தெரிஞ்சா. நான் அவள பாக்குறத அவ பாத்துட்டு தலைய குணிஞ்சு, அவ நடக்குறத, அவளே பாக்குற மாதிரி நடந்தா.
பக்கத்துல ஒரு பொண்ணுங்க கூட்டம் பேசி சிரிச்சுட்டு இருந்துச்சு. அதுக்கு பக்கத்துல ஒரு பசங்க கூட்டம் அந்த பொண்ணுங்க கூட்டத்த கமெண்ட் பண்ணீட்டு இருந்துச்சு. அந்த பொண்ணுங்க கூட்டமும் அந்த பசங்க கூட்டத்த கமெண்ட் பண்ணி தான் சிரிச்சுட்டு இருந்தாங்க. ஆனா, அது அந்த பசங்களுக்கோ, அல்லது சுத்தி இருக்குறவங்களுக்கோ கூடத் தெரியாது. ஏன்னா, நம்ம கலாச்சாரத்துல இதெல்லாம் நடக்காதுங்குற நம்பிக்கை. ஆனா, எல்லாரும் சமம் அப்படிங்கிறத நோக்கி ஒரு சமூகம் போகும் போது, இதெல்லாம் நடக்கும். இது தப்பும் இல்ல. சரியும் இல்ல. இதுவும் ஒரு நிகழ்வு.
நான், பசங்க கூட்டத்துக்கும், பொண்ணுங்க கூட்டத்துக்கும் இடைல இவள மட்டும் தான் பாத்துட்டு இருந்தேன். தன்னோட கடமைய எல்லாருக்கு முன்னாடியும் செஞ்சுட்டு இருந்தா. நான் இந்த மாதிரி வேலைய நிச்சயமா செய்ய மாட்டேன் சார். போஸ்டர் ஒட்டுறது, அதுவும் எல்லாருக்கும் முன்னாடி.... நினைச்சுக் கூட பாக்க மாட்டேன்.. நீங்களே நினைச்சு பாருங்க சார், போஸ்டர் ஒட்டுவீங்களா சார் நீங்க? ஆனா, அத அந்த பொண்ணு பண்ணீட்டு இருந்தா. அதுவும் நைட் 9 மணிக்கு. போஸ்டர ஒட்டிட்டு மறுபடியும் என்ன பாத்தா. நான் அவளயே தான் பாத்துக்கிட்டே இருந்தேன். மறுபடியும் தரைய பாத்தா.
ஒருவேள, அவ கூச்சப்பட்டு தரையப் பாத்துருக்கலாம். மோசமான சில நேரங்கள்ள மனுசங்கள பாக்குறதுக்கு, மண்ணப் பாத்துட்டு போய்றலாம் சார். அதத்தான் அவளும் செஞ்சா. நான் அவள பாத்ததுல, என்கிட்ட இருந்து கொஞ்சம் பரிதாபத்த அவ பாத்துருக்கலாம். அவளுக்கு அந்த பரிதாபம் தேவப்படல. ஏன்னா, அது அவளுக்கு, அவளோட பொருளாதாரத்த பூர்த்தி செய்யப்போறது இல்ல. இன்னும் சொல்ல போனா, அவளுக்கு கிடைச்ச இந்த வேலைக்கு, என்னோட பரிதாபப் பார்வை ஒரு தடையா கூட இருக்கலாம்.
அங்க வெட்டியா அரட்டை அடிச்சிட்டு இருக்குற பொண்ணுங்கள மாதிரி, நிறைய பொம்மைகளுக்கு நடுவுல, ஒரு பொம்மைய கட்டி புடிச்சுட்டு நிம்மதியா தூங்கனுங்குற ஆசை அவளுக்கும் இருந்துருக்குமோனு தோணுச்சு. சுத்தி நிக்கிற பொண்ணுங்க அப்றம் பசங்க கூட்டத்த பாத்துட்டு, அவளும் இப்படிலாம் நின்னு பேச நேரம் இல்லையேனு ஏங்கிட்டு இருப்பாளோனு தோணுச்சு. சுத்தி நிக்குற எல்லாரும், இவ போஸ்டர் ஒட்டுறத பாத்துட்டு, ஒரு பொண்ணு இந்த மாதிரி ஒரு வேலை பாக்குறத பாத்தா பாவமா இருக்குனு பரிதாபப்படுவாங்களோனு அவ நிச்சயம் நினைச்சிருக்கலாம்.
அவளோட இந்த ஏக்கம், மத்தவங்களோட பரிதாப பார்வை எல்லாமே அவளோட கடமைய பாதிக்கும்னு அவளுக்குத் தெரியும். எல்லாத்தையும் அவ தன்னோட மனசுக்குள்ள வச்சு பூட்டி, அந்த மனச அவளே கண்டுபிடிக்க முடியாத தூரத்துல வீசிருப்பான்னு மட்டும் நான் நினைச்சுக்கிட்டேன். இல்லைனா, ஒரு பொண்ணு எப்படி சார் போஸ்டர் ஒட்டிட்டு இருப்பா?."
போலீஸ் அதிகாரி ஒருவர் திடீரென குறுக்கிட்டார். "சார், இவன விடுதலை பண்ணுறதுக்கான டாக்குமெண்ட் எல்லாம் ரெடி சார்."
"கொஞ்ச நேரத்துல கூப்டுறேன். அத இங்க வச்சிட்டு போ" என்று வந்த அதிகாரியை ரூமுக்கு வெளியே இருக்கச் சொன்னார் அந்த கம்பீரமான போலீஸ்.
"அவ கூச்சப்பட்டுருப்பான்னே வச்சுக்குவோம்...." என்று அந்த அதிகாரி கூறும் போதே இவன் இடைமறித்தான், "வச்சுக்குவோம் இல்ல. அப்படித்தான் சார்"
"அவ சொன்னாளா உன்கிட்ட?"
"இல்ல சார்"
"அப்பறம் எப்படி நீ சொல்லுற?"
"ஏன்னா நானும் அனுபவப்பட்ருக்கேன் சார்.. நான் எஞ்சினியரிங் (Engineering) முடிச்சுட்டு ஒரு கம்பெனில 8000 ரூவாக்கு வேல பாத்தேன். எல்லாரும் கேட்டாங்க, ஏம்பா, எஞ்சினியரிங் படிச்சுட்டு இந்த வேலையெல்லாம் பாக்குறேனு?. பரிதாபப்பட்டாங்க. எனக்கு அது புடிக்கல."
"எது? வேலையா? இல்ல, பரிதாபப்பட்டதா?"
"இரண்டுமே. ஆனா, கிடைச்ச வேலைய பாத்துட்டு இருந்தேன். எப்படியாவது முன்னேறிடலாம்னு நம்பிக்கையும் இருந்துச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் மாறிடும்னு நினைச்சேன். ஆனா, இந்த வார்த்தை என்ன தொடர்ந்து அங்க வேல பாக்க விடல. எவ்வளோ, கொடுமையான வார்த்தை சார் அது. " ஏம்பா, எஞ்சினியரிங் முடிச்சுட்டு இந்த வேலையெல்லாம் பாக்குற?" அவங்களோட பரிதாபமான இந்த வார்த்தை, ரொம்ப கொடூரமானதுனு அவங்களுக்கே தெரியாம கூட இருக்கலாம் சார். ஆனா, அது கொடூரமான வார்த்தை."
"ம்ம். புரியுது..."
"அதான், வேலைய விட்டுட்டேன். நான் ஜெயில்ல இருக்குறதுக்கு அந்த வார்த்தைகள் தான் காரணம்னு சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க, ஆனா அதுவும் உண்மை தான்."
"பரிதாபப்படவே கூடாதுன்னு சொல்லுறியா?? மனுசனால மட்டுமே முடிஞ்ச ஒரு நல்ல உணர்ச்சி அதுன்னு நான் சொல்லுவேன்." என்றார் போலீஸ் அதிகாரி.
"இல்லனு நான் சொல்லுவேன். பரிதாபப்பட வேணாம் சார்"
"அப்புறம்? என்ன பண்ணனும்?"
"என்கிட்ட கேட்டா, முடிஞ்சா உதவி பண்ணுங்க, ஆனா பரிதாபம் மட்டும் படாதிங்க. அது ரொம்ப மோசமான ஆயுதம்னு சொல்லுவேன். அது மனுசன மிருகமாக்குற ஒரு ஆயுதம். தன்ன தாழ்வா நினைச்சு, இவங்கல்லாம் பரிதாபப்படுறாங்களோனு ஒரு எண்ணம் வந்துருச்சுனா, அவன் எப்போ வேணாலும் மிருகமா மாறிடலாம். அதனால, அவ மேலப் பரிதாபப்படல. ஆனா, ஆச்சரியப்பட்டேன். ஒருவேளை நான் பரிதாபப்பட்டேன்னு நினைச்சுருப்பாலோனு சந்தேகமும், குற்ற உணர்ச்சியும் எனக்குள்ள வந்துருச்சு. நான் அப்படி எதுவும் பண்ணலைனு அவளுக்கு புரிய வைக்கனும்னு நினைச்சேன்."
"நான் உன் மேலப் பரிதாபப்படலைனு அவகிட்ட போய் சொல்லியிருப்ப. சரியா?" என்று வெற்றிகரமாக நகைச்சுவை ஒன்று செய்துவிட்டதாக அவராகவே எண்ணிக்கொண்டு வெற்றிப் புன்னகை புரிந்தார் அந்த மிரட்டலான அதிகாரி.
"இல்ல சார்....."
"அப்படின்னா என்ன பண்ணுன?" என்று அவன் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார்.
“நான் ஒருவரையும் கொலை செய்ததில்லை. அது உண்மைதான். எனக்கு அதைச் செய்வதற்குத் துணிச்சலில்லை என்பதுதான் காரணமே தவிர, விருப்பமில்லை என்பதல்ல.”
- எடுவர்டோ கலியானோ
-------------
"அவ மறுபடியும், சில போஸ்டர்கள வாங்க அந்தப் பையன் கிட்ட போனா. அவனோட வயசும் கிட்டத்தட்ட 23 தான் இருக்கனும். அப்படி தான் இருந்தான். ஒல்லியா, சாப்பாட்டுக்கே வழியிலாதவன் மாதிரி மூஞ்செல்லாம் ஒடுங்கிப் போயி, கடவுள் அலட்சியமா படைச்ச ஒரு உதிரிப் படைப்பு மாதிரி இருந்தான். அந்த தூணுல 3 போஸ்டர் இப்போ ஒட்டி இருந்தா. இன்னும் ஒட்டுறருக்கு, பழைய போஸ்டர்கள எல்லாம் கிழிச்சும் வச்சுருந்தா.. அந்த நேரத்துல நான் அந்த தூண் பக்கம் போய் நின்னேன். அவ ஒட்டியிருந்த போஸ்டர படிக்கிற மாதிரி நடிச்சிட்டு இருந்தேன். கிட்ட வந்தா.
என்னோட முகம், போஸ்டர பார்த்து இருந்தாலும், என்னோட மனசு அவ பக்கமா திரும்பி இருந்தது. அவ இப்போ என்ன நினைக்குறானு, என்னோட மனசு அதுவாவே கற்பனையா ஒரு விஷயம் சொன்னது.
நான் ஸ்கூல்ல (School) படிக்கிறப்போ இப்படி தான் என் மனசு அடிக்கடி ஒரு பொண்ண பாக்கும் போதுலாம் பேசுச்சு. அடிக்கடி, அந்த பொண்ணு என்ன தான் பாக்குறானு என் மனசு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருந்துச்சு. நானும் நம்ப ஆரம்பிச்சுட்டேன். ஒரு நாள் நான் அவகிட்ட போய் என் காதல சொல்லப் போனப்போ, அவ பதிலக் கேட்டு என் மனசே சுக்குநூறாகிடுச்சு. என் மனசுக்கு இது தேவ தான். ஏன்னா என்கூடவே இருந்துட்டு என்னையே சில பொய்கள நம்ப வச்சுருச்சுல்ல. ஆனா, அந்த மனசு உடைஞ்சதுக்கு நானும் சேர்ந்து தான் அழுதேன். நம்ம மனச கண்ட்ரோல்(control) பண்ண, நாமளும் சேர்ந்து அழ வேண்டியது அவசியம் தான.. அதுக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். இருந்தாலும், அத சமாதானபடுத்த முடியல. பல நாட்கள் தூக்கமே இல்ல. நிம்மதியும் இல்லாம இருந்தேன். அது ஒரு காலம் சார்.
அதனால, இந்த தடவ பொய் சொல்லாதுனு நம்புனேன். இப்போ சொல்லுச்சு, அவ தன்னோட கையில போஸ்டர வச்சுக்கிட்டு, என்ன தான் பாக்குறாளாம். ஆனா உண்ம அது இல்ல. அவ அவளோட வேலைய மட்டும் தான் பாத்துட்டு இருந்தா. ஹார்மோன்கள் விஷயம்னு வந்துட்டா, இந்த மனசு சொல்லுறத நம்பவே கூடாதுனு மறுபடியும் தெரிஞ்சுக்கிட்டேன் சார். ஆச்சரியம் என்னனா, மனசு எப்பவுமே நமக்கு சாதகமா தான் பேசும். ஆனா, நிஜம் நமக்கு எதிரா இருக்கும்.
இப்போ இன்னும் அதிகமா தயங்கி தயங்கி போஸ்டர ஒட்டிட்டு இருந்தா. நான் அவள முதல் முறையா கூப்பிட்டேன். பேரு தெரியல. ஆனாலும் இன்னும் கொஞ்சம் பக்கத்துல போய் நின்னு, "ஹலோ"-னு சொன்னேன்.
அவ திரும்பி பாத்தா. கையில மடிச்சு வச்சுருந்த இரண்டு போஸ்டர் இருந்தது. கொஞ்சம் தர்ம சங்கடமா எனக்கு இருந்தது. எனக்கு ஒரே விஷயம் தான் அவகிட்ட சொல்லனும். இல்ல இரண்டு விஷயம். ஆனா, இரண்டாவது விஷயம் இன்னும் கொஞ்ச நேரத்துல தான் உதயமாகபோகுது. அதனால இப்போதைக்கு ஒரு விஷயம் தான் அவகிட்ட சொல்ல வேண்டி இருந்தது. அது, நான் அவ மேல பரிதாபப்படலைனு மறைமுகமா சொல்லனும்"
" இரண்டாவது விஷயம் காதலா??" எனக் கேட்டார் அந்த காவல்துறை அதிகாரி.
"இப்போவே நான் சொல்லனுமா?" என்றான் புன்னகையுடன்.
"சரி, உனக்கு தோணும் போது சொல்லு. நீ ஹலோ- னு சொன்ன, அவ என்ன பண்ணுனா?"
"திரும்பி பாத்து, எஸ் (yes)னு சொன்னா"
"எங்க ஊருலயும் நோ (No)-னு சொல்லமாட்டாங்க. யெஸ் (yes)-னு தான் சொல்லுவாங்க" என்றார் பல் தெரிய..
"சிரிக்காதிங்க சார். இந்த உலகத்துலயே ரொம்ப கஷ்டமான விசயம், காரணமே இல்லாம ஒரு பொண்ணுக்கிட்ட போய் பேசுறது தான்" என்றான் புருவங்களை உயர்த்தி.
பதிலுக்கு அந்த அதிகாரி, "அப்போ காரணம் இருந்தா ரொம்ப சுலபமா பேசிருப்ப? அப்படித்தான?"
"காரணம் இருந்தா, இன்னும் ரொம்ப கஷ்டம் சார்.” என்று சிரித்தபடி தொடர்ந்தான். "அவ யெஸ்-னு (yes) சொல்லிட்டு என்னப் பாக்கும் போது அவ கண்ணுல எதோ தயக்கம்.. இல்ல வலி... இல்ல அவமானமா? இல்ல ஏதோ ஒன்ன நான் பாத்தேன் சார்.
‘என்ன வேணும்?’ அப்படினு அடுத்த வார்த்தையை ரொம்ப சாந்தமா உச்சரிச்சா. அத கேட்ட உடனே, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. கொஞ்சம் இருந்த தைரியமும் எகிறி குதிச்சு ஓடிருச்சு. இப்போ, நானும் என் பயமும் மட்டுந்தான் அங்க நின்னுட்டு இருந்தோம். "உங்க கம்பெனில எஞ்சினியரிங் படிச்சவங்களுக்கு வேல குடுப்பிங்களா??" என்றேன் அப்பாவித்தனமாக. "இருக்கும், இந்த நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க" என்றாள் ஒட்டியிருந்த போஸ்டரை கை காட்டியபடி.
"நான் இதுமாதிரி பல போஸ்டர பாத்துருக்கேன். போன் பண்ணியும் கேட்டிருக்கேன். ஆனா, எல்லாருமே ஏமாத்துக்காரங்களாத்தான் இருந்துருக்காங்க. யாருமே வேலை வாங்கி குடுக்கல. காசு மட்டும் கேட்டாங்க”-னு அவகிட்ட சொன்னேன்.
அவ முகம் கொஞ்சம் சோகமயமாயி இருண்டு போயிருச்சு. நான் மறுபடியும் பேசத் தொடங்குனேன்.
“பல தடவ இந்த மாதிரி போஸ்டர எல்லாம் கோவத்துல கிழிச்சும் போட்ருக்கேன். இது எதுவுமே உண்மை இல்லைனு தோணுச்சு. அதான் கிழிச்சு போட்டேன். எல்லாருமே, காசு கேட்டாங்க. அது மட்டும் இல்ல. இரண்டு வாரத்துல இருந்து மூணு மாசம் வரைக்கு டைம் கேட்டாங்க. அதுக்குள்ள கிடைச்சுரும்னு நம்பிக்கையா சொன்னாங்க. ஆனா, எல்லாரும் கடைசில கைய விரிச்சிட்டாங்க.
என்னோட மூணு மாசம் போச்சு. அதுவும் நாலு தடவ போச்சு. மொத்தம் ஒரு வருஷம்” என்று சொன்னவுடனே, ஏன் நான் இப்படி சொன்னேன்னு என்ன நானே திட்டிக்கிட்டேன். அவள நான் குறை சொல்றேனோனு தோணுச்சு. அது எனக்கு இன்னும் குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. நான் அவமேல பரிதாபப்படலைனு இப்போ புரிஞ்சிருக்கும் அவளுக்கு. ஆனாலும் அவ எதோ குற்றம் செய்றத மாதிரி குற்றம் சொல்லிட்டேனு என்ன நானே குற்றம் சாட்டிக்கிட்டேன் இப்போ.
இருந்தாலும், சமாளிக்க ஆரம்பிச்சேன். ‘நான் கிழிச்ச போஸ்டர்ல நீங்க ஒட்டுனது எதுவும் இருக்காதுனு நம்புறேன். உங்களுக்கு நேரடியா, கம்பெனில ஆள் எடுக்குறவங்கள தெரியுமா?’ அப்படினு கேட்டேன். உடனே அவ கொஞ்சம் கூட தாமதிக்காம, ‘தெரியாது'-னு சொன்னா.
‘அப்புறம் எப்படி இதெல்லாம் ஒட்டுறீங்க?’ என்று கேட்டேன் அவளுக்கு ஆதரவு அளிக்கிற மாதிரி. ‘இந்த வேலை தான் கிடச்சது செய்யுறேன்' அப்டினு சொன்னா முகமெல்லாம் சுருங்க. பிறகு என்ன பாத்து, எதுவும் சொல்ல முடியாத மாதிரி மறுபடியும் அத ஒட்ட போய்ட்டா. ஒரு போஸ்டரை எடுத்து, வித்தியாசமாக பசையை தடவி அத ஒட்டிட்டு, திரும்பி மறுபடியும் என்ன பாத்தா.
நானும் அவளையே தான் பாத்துட்டிருந்தேன். அவ பாத்தவுடனே, நானும் கொஞ்ச நேரம் பாத்துட்டு, சின்ன போலியா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு முகத்த வேற ஒரு பக்கம் மெதுவாக திருப்பிக்கிட்டேன்.
மறுபடியும் அந்த ஆச்சரியப் பெண்மனியை எப்படிப் பாக்குறதுனு தெரியாம ஒரு ஓரமா நின்னு முழிச்சிட்டு இருந்தேன்.
மனம் இப்போ குற்ற உணர்ச்சியில கொதிச்சிட்டு இருந்துச்சு. நான் அவ மேல பரிதாபப்படலைனு மறைமுகமாக சொல்ல தான் போனேன். ஆனா, இப்போ அவள குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிட்டேனோ?- னு எனக்குள்ளேயே குமுறிக்கிட்டிருந்தேன்.
அவ கையில வச்சிருந்த, கடைசி போஸ்டரையும் ஒட்டி முடிச்சா.. பிறகு, அந்த பையன் பக்கத்துல போய், சில போஸ்டர்களை கையில வாங்குனா. அதில குறைஞ்சது ஒரு ஐம்பது போஸ்டராவது இருக்கும். அவளோட முதுகுப் பையக் கழட்டி முன்னால உள்ள திண்டில வச்சா. அந்த பையோட ஜிப்பை திறந்தா. அந்த போஸ்டர்களை எல்லாம், அவ பையிக்குள்ள வைக்குறதுக்கு முன்னாடி என்னைய திரும்பி பாத்தா.
நானும் அவளையே தான் பாத்துட்டிருந்தேன். என்னைய பாத்தவுடனே, போஸ்டர்கள அவளோட பையிக்குள்ள வைக்க தயங்குனது மாதிரி கொஞ்சம் நிறுத்திட்டா.
நான் இப்போ மிகப் பெரிய சங்கடத்துல சிக்கிட்டேனு மட்டும் புரிஞ்சது. நான் இப்போ அவள பாத்துக்கிட்டே இருக்கவா? இல்ல என் முகத்த திருப்பிக்கவா?
சார், என் மனசு வழக்கம் போல கற்பனை பண்ண ஆரம்பிச்சது.
இப்போ, நான் அவளை பார்த்துக்கிட்டே இருந்தா, அவ என்ன நினைப்பா??
ஒருவேளை அவ இப்படி நினைச்சுருக்கலாம், "இதெல்லாம் ஏமாத்து வேலைனு ஒருத்தன் சொல்லியும், மறுபடியும் இந்த போஸ்ட்டற ஒட்ட போறோமேனு நினைச்சு அவ கஷ்ட்டப்பட்டுருக்கலாம்" என் மனசு இத நினைச்சுப் பார்த்தவுடனே, மூஞ்ச திருப்பிடுறது தான் நல்லதுனு நினைச்சேன். ஆனா அதுக்கும் மனசு வரல."
"ஏன்?" என்றார் அந்த அதிகாரி
"ஏன்னா, இப்போ நான் அவளை பாக்காம மூஞ்ச திருப்பிக்கிட்டா அவ என்ன நினைப்பா? ஒரு வேளை இப்படி நினைச்சுருப்பா, "இவளெல்லாம், திருத்தவே முடியாது, இவளும் ஏமாத்தி பிழைக்குற கூட்டம்-னு அவன் நினைச்சுட்டான். அதான் மூஞ்ச திருப்பிக்கிட்டான்"
சார் உங்களுக்கு புரியுதா?, அவ மனசு என்ன நினைக்கும்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்..
இப்போ நான் என்ன தான் பண்ணுறது? ச்சே. அந்த நிலைமைய இப்போ நினைச்சு பாத்தாகூட மனசெல்லாம் பதறுது சார்".
"புரியுதுப்பா" என்றார் அந்த அதிகாரி.
"இப்போ, பரிதாபத்துல இருந்து தப்பிச்சு, குற்ற உணர்ச்சில அவள தள்ளிட்டேன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன். ஒரு வேலை அது உண்மையாக் கூட இருக்கலாம். நான் என் மேலேயே கோபப்படுறத தவற, வேற என்ன பண்ணனும்னு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன் சார். ஒரு அப்பாவி பொண்ணுகிட்ட, இப்படி பேசிடேம்னு நினைச்சு கஷ்டமா இருந்துச்சு.. இவ என்ன பண்ணுவா?? இந்த வேலை தான் கிடைச்சதுனு சொல்லுறா. அவ மேல எப்படி தப்பு சொல்ல முடியும். நான் தப்பு சொல்லவும் வரல.
என்னோட மனசுல சேத்து வச்சத என்ன அறியாமயே கொட்டிடேன். ஒருவேள அவ நான் சொன்னத நினைச்சு, குற்ற உணர்ச்சில இருப்பாளோனு மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருந்துச்சு. என் கண்ணும் கலங்க ஆரம்பிச்சுருச்சு. அவ அந்த போஸ்டர அப்படியே பையுக்குள்ள வச்சுருந்தா கூட இப்படி நான் நினைச்சுருக்க மாட்டேன் சார். அவ என்ன ஒரு மாதிரி பாத்தா சார். என் கண்ணுலாம் ரொம்பவே கலங்கிருச்சு."
"சரி இப்போ, அவ என்ன பண்ணுனா?"
"குற்ற உணர்ச்சிக்கு அவள தள்ளிட்டேனோனு, என் மனசு குற்ற உணர்ச்சில இருந்தது சார். நம்ம டாக்டர். இராதாகிருஷ்ணன் சொன்னது உண்மை தான் சார், ‘உன்னை நீ நேசிப்பது போல், உனக்கு அடுத்து இருப்பவனையும் நேசி. உன்னிலிருந்து அடுத்தவன் வேறானவன் என ஒரு மாயை உங்களை நினைக்க வைக்கிறது.’
நானும் அவளும் வேற இல்லைனு அப்போ எனக்கு தோணுச்சு சார். ஏன்னா, அவ நினைக்கிறது எனக்கு புரியுற மாதிரி இருந்துச்சு. நமக்கு தோணும்ல சார். அவங்க என்ன நினைப்பாங்க, இவங்க என்ன நினைப்பாங்கனு. காரணம், நம்ம எல்லாம் ஒன்னு தான் சார். இப்போ கூட நீங்க என்ன நினைக்குறீங்கனு என்னால புரிஞ்சுக்க முடியுது சார்."
"அப்படியா!! சரி, நான் என்ன நினைக்குறேன்?. சொல்லு பாப்போம்." என்று அவர் பார்வையை அவன் மீது ஓடவிட்டார்.
"கொலைய நான் பண்ணுனேனா, இல்லை அவ பண்ணுணாலா-னு இவன் சொல்லுவானா, இல்ல சொல்லம முடிச்சுருவானானு தான யோசிச்சுட்டு இருக்கீங்க?"
அவர் இதைக் கேட்டு சத்தமாக சிரித்தார். "டாகடர். இராதாகிருஷ்ணன் சொன்னத நானும் நம்புறேன்பா" என்றார் சிரிப்பை நிறுத்திக் கொண்டே. "சரி.. கடைசியா, நீ என்ன தான் பண்ணுன? அவள பாத்துக்கிட்டே இருந்தியா? இல்ல, முகத்த திருப்பிக்கிட்டியா??"
அவன் ஒரு பெருமூச்சு விட்டான். "அதுக்குள்ள இன்னொரு பிரச்சனை வந்துருச்சு சார்" என்று அந்த அதிகாரியை சோர்வுடன் பார்த்தான்.
அவர் என்ன என்பது போல கூர்மையாக கவனித்தார்.
"அவ போக வேண்டிய பஸ் வந்திருச்சு சார்.. இப்போ பிரச்சனை அவள பாக்கவா? இல்லனா முகத்த திருப்பிக்கவா? இல்ல. நான் அப்படியே அங்கயே உட்காரவா? இல்ல அவ பின்னாடியே போகவானு?"
அந்த அதிகாரி மீண்டும் சத்தமிட்டு சிரித்தார். சிரிப்போடு இருமலும் சேர்ந்து கொண்டது.
"சரி அவ பின்னாடி போனியா?" என இருமிக்கொண்டே கேட்டார்.
"போகாம இருந்திருந்தா, நான் பண்ணுன இரண்டு கொலைல, ஒரு கொலை கொறஞ்சிருக்கும்" என்று முகத்தை உக்கிரமாக்கி அந்த அதிகாரிக்கு பின்னால் இருக்கும் சுவரைப் பார்த்தான். அவன் முகத்தின் மூன்று தளும்புகளுமே துடிக்க ஆரம்பித்ததை அந்த அதிகாரியால் பார்க்க முடிந்தது.
“…..நான் இப்போது உலகத்தை அழிக்கின்ற காலனாக மாறியுள்ளேன்……”
- பகவத் கீதை
-----------------
அந்த இடம் சட்டென நிசப்தமானது. இரவில் நரிகள் ஊலையிடுவதற்கு முன்னால் இருக்குமே ஒரு நிசப்தம், அப்படியொரு நிசப்தம் அது. அவன் கண்கள் கோபத்தையும், அதே நேரத்தில் இயலாமையையும் வெளிப்படுத்தியது.
"நான் ஏற்கனவே ஒரு கொலைய பண்ணீட்டு வந்துதான் சார், அந்த பஸ் ஸ்டாண்ட்ல உட்கார்ந்திருந்தேன்.” என்று அவன் கூறியவுடன் அவர் ஒன்றும் புரியாதது போலப் பார்த்தார்.
‘அப்படியென்றால் அவன் முதல் கொலையை எதற்காக செய்தான்?’ என்ற கேள்வி அந்த அதிகாரியினுள் எழுந்தது. அவரது போலீஸ் மூளை இரண்டு கொலை, அதுல…. என சிந்திக்க ஆரம்பித்தது. ஆனால் அவன் முன்பிருந்தது போலவே தொடர்ந்தான்.
“ஒரு கொலைய பண்ணிட்டு, என்ன செய்யனும்-னு தெரியாம உடம்பெல்லாம் நடுங்கீட்டு இருந்தது. போலீஸ் என்னைய நிச்சயமா கண்டுபுடிச்சிரும். ஏன்னா, கண்டுபுடிக்க முடியாத மாதிரி கொலை செய்யுற அளவுக்கு நான் அறிவாளி இல்ல.
நான் திட்டம் போட்டு இந்த கொலைய பண்ணவும் இல்ல. எல்லாமே, என் கை நடுக்கத்துலயே முடிஞ்சிருச்சு. கண்ண திறந்துபாத்தா, கத்தி அவனோட நெஞ்ச பிளந்து உள்ளபோயிருந்துச்சு. சொல்லப்போனா அந்த கொலைய செய்றதுக்கு என்கிட்ட துணிச்சல் கூட கிடையாது. ஆனா, எப்படியோ பண்ணீட்டேன் சார்." என்று பெருமூச்சுடன் அமைதியானான்.
அந்த அதிகாரி வாயவே திறக்கவில்லை. ஆனால் அவர் தன் மனதுக்குள் நினைத்தார். ‘இந்த இரண்டு கொலைகளுக்கும் இவன் தண்டனை அனுபவித்துவிட்டான். இனி ஏன் இந்த கொலையை பற்றி அவனிடம் கேட்டு, அவனை உணர்ச்சிவசப்பட வைக்க வேண்டும்?’ அதனால், சற்று இந்தப் பேச்சை திசைதிருப்ப முயன்றார். அவன் சொல்லிக்கொண்டிருந்த அந்த காதல் கதையை நோக்கி திசைதிருப்ப வேண்டுமென நினைத்து, "அவ போய் பஸ்ல ஏறிட்டா. நீ அவ பின்னாடி போயி பஸ்ல ஏறுனியா?, இல்லையா?. அத சொல்லவே இல்லயே." என்றார் சற்று சிரித்து கொண்டே.
ஆனால் இவன் விடுவதாய் இல்லை. மீண்டும் உணர்ச்சிப் பெருக்கில் அந்த கொலையை தொடர்ந்தான்.
“எனக்கு அவன் பண்ணுன வேலைக்கு, அவன கொல்லனும் போல இருந்துச்சு. அவன மட்டும் இல்ல. அவன மாதிரியே, நிறைய பேரு இருக்காங்க. ஆனா, அத செய்ய துணிச்சல் சுத்தமா கிடையாது.
இருந்தாலும், எப்படி அந்த கொலைய நான் செஞ்சேன்? யோசிச்சு பாத்தேன். எங்க தப்பு நடந்துச்சு?. மறுபடியும் மறுபடியும் யோசிச்சு பாத்தேன். கொலைய பண்ணுன அந்த ஒரு நிமிஷத்த யோசிச்சேன். இதுதான் அந்த நிமிஷத்துல என் மனசுல ஓடிட்டு இருந்துச்சு. இந்த கொலைய பண்ணீட்டா, வாழ்க்கையே போய்ரும்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது. அதனால துணிச்சல் அப்பகூட வரவே இல்ல. அவன் எதிருல நிக்கிறான். யோசிக்க நேரம் இல்ல. யோசிச்சுக்கிட்டே நின்னா, எனக்கும் என்ன வேணும்னாலும் ஆகலாம்.
இந்த மாதிரி துணிச்சல் இல்லாத, ஆனா ஆபத்தான நேரத்துல, நம்ம மூளைக்குள்ள ஒரு அவரசர நிலை உருவாகும். என் மூளைகுள்ளையும் அப்போ உருவாகிருச்சு. திடீருனு என்னோட மூளை, என்னோட கைக்கு ஒரு கட்டளை அனுப்புச்சு. அது என்னனா, "அவன குத்து". இரண்டாவது கட்டளை "அவன சீக்கிரம் குத்து". இதே மாதிரி ஒரு.... (அவன் முகம் ஒரு ஆன்மீக தத்துவத்தை விளக்கும் கடவுள் நம்பிக்கையாளன் முகத்தைப் போல, மிகத்தீவிரமாக இருந்தது) ஒரு பத்து கட்டளை என்னோட மூளை, என் கைக்கு மட்டுமே அனுப்பிருச்சு.
மூளையோட அடுத்த கட்டளை என்னோட காலுக்கு. " ஓடத் தயாரா இரு". ஆனா, இந்த கட்டளைய இன்னும் அனுப்பல. மூளை அனுப்ப தயார வச்சுருந்தது.
எப்பவுமே நம்ம மூளை கொடுக்குற கட்டளைய , மூளையே மறுபடியும் மறுபரிசீலனை செய்யும். ஆனா, அவசர நிலை-ல அது பெரும்பாலும் நடக்குறது இல்ல. அதனால, கட்டளை வந்த அடுத்த நொடி, என்ன அறியாமலே என்னோட கை, கத்திய அவனோட நெஞ்சுல புதைச்சுருச்சு. புதைச்ச கத்திய உருவி, மறுபடியும் ஒரு குத்து. இப்படியே நாலஞ்சு தடவ, உருவி உருவிக் குத்துனேன்.
அவன் கத்துனான். வலியில துடிச்சான். சார், நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் வலி அப்படிங்குறது ஒன்னுதான் சார். உடல் வலிய சொல்லுறேன். மனசப் பத்தி அப்போ யோசிக்கல. ஆனா, அடுத்தவனுக்கும் வலிக்கும்னு தெரிஞ்சும் ஏன் சார் தப்பு பண்ணுறாங்க?? கண்டிப்பா அந்த நொடியில அவனோட வலிய மட்டும் இல்ல, அவன் மத்தவங்களுக்கு செஞ்ச கொடுமையோட வலியவும் சேத்து அனுபவிச்சிருப்பான்.
என் மூளையோட அடுத்த கட்டளை என் காலுக்கு. "ஓடு". கணணுமுன்னு தெரியாம, அந்த இடத்தவிட்டு ஓடிட்டேன். எங்க போறது வீட்டுக்கா?? இல்ல போலீஸ் ஸ்டேசனுக்கா? இல்ல எங்கயாச்சுமா?? எதுவுமே இல்ல. ஓடனும் அவ்வளவுதான்.
முதல்ல ஓடி, இரயில்வே ஸ்டேசன் போய்ட்டேன். அப்புறம் தான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேன்.
பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பிறகு பயம் மட்டும் தான் இருந்துச்சு சார். அந்த பயத்தோட இன்னொன்னும் சேர்ந்திடுச்சு. அது ஒரு கேள்வி. ஒரே கேள்வி. "இனி என் வாழ்க்கை என்ன ஆகப் போகுது??"
யாருக்காக இந்த கொலைய பண்ணுனேனோ, அவங்க நிம்மதியா இனி இருப்பாஙக. அந்த ஒரு சந்தோஷத்த தவிர வேற எதுவுமே எனக்கு சந்தோஷப்படுறதுக்கு இல்ல. (விரக்தியில் சிரித்தான்)
ஆனா, அந்த கொலைய நான் அவங்களுக்காக தான் செஞ்சேன்னு, அவங்களுக்கே தெரியாது. (அவன் கண்களில் தற்போது ஈரப்பதம் அதிகமானது. எப்போது வேண்டுமானாலும் கண்ணீர் மழைப் பொழியலாம் என்பது போல இருந்தது) அந்த கொலைய நான் ஒரு பொண்ணுக்காக செஞ்சேன். காலேஜ்-ல சீனியர். சீனியரா இருந்தாலும், அவங்கள நான் காதலிச்சேன்.
ஆனா, அவங்க கிட்ட நான் சொல்லவே இல்ல. இப்ப வரைக்கும் கூட என் காதல அவங்ககிட்ட நான் சொல்லல. சொல்லப்போனா......(இதைக் கூற ஆரம்பிக்கும் போது அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது.) சொல்லப்போனா...... (அவன் வார்த்தைகள் தடுமாற ஆரம்பித்தது) நான்.... நான் யாருனுகூட அவங்களுக்கு தெரியாது சார். (வெடித்து அழுதான்). ஆனா, அவங்களுக்காகத் தான் நான் முதல் கொலைய பண்ணுனேனு சொன்னா நம்பமுடியுதா சார் உங்களுக்கு?
நான் யாருனுகூட அவங்களுக்கு தெரியாதப்போ, நான் இத அவங்களுக்காகத்தான் செஞ்சேனு மட்டும் தெரியவா போகுது. அந்த பொண்ணு நிம்மதியா இருக்கனும் சார். அவ்வளவு தான் என் எதிர்பார்ப்பே. இந்நேரம் அவங்க நிம்மதியா, தன்னோட குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக்கிட்டு, விளையாடிகிட்டு இருக்கலாம். அதுக்குதான் சார் பண்ணுனேன். (கண்ணீர் அருவியைப் போலத் தொடர்ந்து வழிந்தோடியது)
கொலைய பண்ணீட்டு, உனக்காகத்தான் நான் கொலை செஞ்சேன்னு, அவங்க முன்னாடிப்போய் நின்னு அவங்கள கஷ்டபடுத்த விரும்பல சார். அவங்ககிட்ட நான் எதையும் எதிர்பாக்கவும் இல்ல சார். அவங்களோட சந்தோஷத்த தவர.
(இருந்தாலும் அவன் ஆழ்மனது, அவளிடம் உனக்காத்தான் இந்தக் கொலையை செய்தேன் என சொல்லச் சொல்லி அணத்தியது. மனிதர்கள் எதையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்வதில்லையே. ஆனால் இவன் எதிர்ப்பார்ப்பு, அவளின் கருணையான பார்வையாக மட்டுமே இருந்தது. எனினும் அவன் வெளிமனது சொல்ல விடாமல் தடுத்தது.)
அவன் செத்துட்டான். இனி அவனால எந்த பிரச்சனையும் வராது-னு அந்த பொண்ணு நினைக்குறப்போ, அவளுக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம் வராமையா போய்ரும்?. கண்ணுக்கே தெரியாம அழிவுநிலை-ல இருந்த என்னோட காதல், அப்படியொரு சந்தோஷத்த அவளுக்காக கொடுத்துட்டு அழிஞ்சு போனதா நினைச்சு கொஞ்சம் நிம்மதியடைஞ்சேன் சார்.”
அந்த அதிகாரி அவன் மனநிலைய உணர முற்பட்டு கலங்கித்தான் போனார். அவனை சமாதானப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வர எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவருக்கு தெரியவில்லை. அதற்குள் அவன் மீண்டும் ஆரம்பித்தான்.
“ஆனாலும், இன்னொரு பக்கம் பாத்தா, நான் தப்பு பண்ணிட்டேனோ?, இல்லைனா, அவசரப்பட்டுட்டேனோ?, அடுத்தவேளை சோத்துக்கே வழியில்லையே-னு கதறிட்டு இருந்தேன்.
குடும்பத்த வேற பாத்துக்கணும். எஜுக்கேசன் லோன் (Education loan), வெளில கொஞ்சம் கடன், வேலையில்ல, இதோட சேத்து ஒரு கொல. அப்பா....... மொத்தம் எவ்வளவு பிரச்சனை-னு நினைச்சு பாத்தா, வாழ்க்கையே பிரச்சனை-னு தான் தோணுச்சு. "வாழ்க்கை, எனக்கு எவ்வளோ பெரிய முடிச்ச போட்டுவச்சுருக்கு-னு பாத்தீங்களா சார்?"
இரண்டே வழிதான் சார் அப்போ எனக்கு தெரிஞ்சது. ஒன்னு, கொஞ்ச நேரம் நான் செஞ்சத நினைச்சு அழுதுட்டு பிறகு சாவுறது. இரண்டாவது உடனே சாவுறது. வேற வழியே தெரியல.
ஆனா, வேற வழியே இல்லை-னு நாம நினைக்கிறப்போ கூட, எதாச்சும் ஒரு மங்கலான பாதை இருக்கும்னு அப்போ நினைச்சுகூட பாக்கல சார்.
அப்படியொரு மங்களான பாதை தான் சார் அவ. நான் பஸ்டாண்டுல பாத்தேனே, அந்த பொண்ண சொல்லுறேன். எல்லா மங்களான பாதையும், நாம முன்னால போகப் போக தான தெளிவாகும்.
முதல்ல மங்களா தெரிஞ்ச அவ, போகப்போக ரொம்ப தெளிவா தெரிஞ்சா. எனக்கும் எல்லாம் தெளிவா தெரிய ஆரம்பிச்சது. நான் அவளோட உருவத்த சொல்ல-ல. அவ வாழ்க்கைய சொல்லுறேன்.
ஏன்னா, நான் பஸ்டாண்ட்ல பாத்தப்போ, படிச்ச யாருமே செய்ய தயங்குற வேலைய அவ பாத்துக்கிட்டு இருந்தா. அதுவும் ஒரு பொண்ணு. நைட்டு (night) நேரம். பஸ் ஸ்டாண்டு பஸ் ஸ்டாண்டா, போஸ்டர் ஒட்டிக்கிட்டு இருந்தா.
அன்னைக்கு அவ பின்னால நான் போகாம இருந்திருந்தா, இந்நேரம் நான் செத்து ஏழு வருஷம் ஆகிருக்கும்." என அவரை ஒருபார்வை பார்த்துவிட்டு பின் தலையைக் குணிந்தான்.
தலையைக் குணிந்தபடியே, "நான் போனேன் சார்." என்றான்.
அவர் என்ன என்பது போல பார்த்தாரே தவிர, எதுவும் பேசவில்லை.
மீண்டும் இவன் தொடர்ந்தான், "நீங்க கேட்டீங்களே, அவ பின்னாடி போனியா? இல்லையா? அப்படினு... நான் போனேன் சார்.
போன பின்னாலதான் தெரிஞ்சது, அவளோட வாழ்க்கை என் வாழ்க்கைய விட எவ்வளோ பெரிய முடிச்சு போட்டு, எவ்வளவு சிக்கலானதா இருந்தது-னு." என்று அமைதியாகி மீண்டும் தொடர்ந்தான்.
“வாழ்க்கை நமக்கு போட்டதுதான் அவிழ்க்கமுடியாத பெரிய முடிச்சுனு நாம நினைக்கிறப்போ, வாழ்க்கை அதவிட ஒரு பெரிய, அதவிட கஷ்டமான முடிச்ச வேற ஒருத்தர் வாழ்க்கைல போட்டு, நம்ம கண்ணு முன்னால காட்டிட்டு போகுது. அத பாக்கும்போது, நமக்கு இருக்குறதுலாம் ரொம்ப பெரிய பிரச்சனை இல்லைனு சிலசமயம் தோணும்.
அன்னைக்கு அவகிட்ட பேச ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே கொஞ்சம் தோணுச்சு சார். ஆனா, அவக்கிட்ட பேச ஆரம்பிக்குறதுக்கு ரொம்ப சிரமப்பட்டேன். எவ்வளவு சிரம்மம்-னா, கொலையக்கூட ரொம்ப சுலபமா பண்ணிட்டேன்னு தோணுற அளவுக்கு." என்று சிரித்தான்.
அந்த அதிகாரி குறுக்கிடாமல் வெறும் பற்களைக் காட்டி சிரித்துவிட்டு காத்திருந்தார் அவன் அடுத்த வார்த்தைகளுக்கு...