ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

'யாவும் நின் யாத்ரனாய்..' - கதைத் திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
'யாவும் நின் யாத்ரனாய்..' - கதைத்திரி
 

Attachments

  • Untitled Design_2-2.jpg
    Untitled Design_2-2.jpg
    216.2 KB · Views: 0
யாவும் நின் யாத்ரனாய்

EPISODE 01






ஹோமகுண்டத்தின் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, அதற்கு போட்டியாக அந்த ஊர் தெய்வ சிலையின் முன்னே நின்றிருந்தவனின் மனமும் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.



விட்டால் கொன்றே விடுவேன் எனும் தோரணையில் முகம் சிவக்க கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு யாத்ரன் நின்றிருந்த விதத்தைப் பார்த்ததும் எதிரில் நின்றிருந்த ஜான்சியின் முதுகுத்தண்டு பயத்தில் சில்லிட்டது.



'கடவுளே...' என்று இருக்கும் அத்தனை கடவுள்களையும் தன் துணைக்கு அவள் நாட, அவன் விழிகளில் குறும்புத்தனத்தையும் அக்கறையையும் பார்த்து பழகியவளுக்கு இந்த வெறுப்பும் கோபமும் என்னவோ புதிதுதான்.



ஆனால், பாவம்.. சற்று சுயநலமாக யோசிக்க வேண்டிய நிலை அவளுக்கு.



புரோகிதர் மந்திரங்களை சொல்லிக்கொண்டே கருப்புமணிகள் கோர்க்கப்பட்ட அந்த மாங்கல்யத்தை அவனிடம் நீட்ட, சுற்றியிருந்த ஊர் மக்களின் முகத்தில் மருந்துக்கும் புன்னகையில்லை.



மாறாக, விழிகளில் கோபம் மிதக்க, பாறை போல் இறுகிப் போயிருந்தது அத்தனை பேரின் முகமும்.



எந்த மேளதாள சத்தங்களும் இல்லை. வெறுமென புரோகிதரின் மந்திரங்கள் மட்டுமே அந்த இடத்தை நிரப்பின.



கையிலிருந்த மாங்கல்யத்தை பார்த்துவிட்டு சுற்றி ஒரு பார்வைப் பார்த்தவன் வேறுவழியில்லாமல் அவள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டிவிட்டான்.



அவர்கள் மீது பூக்களோ அர்ச்சதைகளோ தூவப்படவில்லை. ஆனால், பெண்ணவளின் மனம் விடுதலை அடைந்த சந்தோஷத்தில் மிதந்துக்கொண்டிருந்தது.



ஆனால், அந்த மகிழ்ச்சி சில கணங்கள்தான்.



சிறு சந்தோஷத்தோடு விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தவளின் மொத்த புன்னகையும் யாத்ரனின் விழிகளில் தெரிந்த ஆக்ரோஷத்தைப் பார்த்ததும் அப்படியே வாடிப்போக, அந்த நொடி அவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.



'இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கி விட்டேனே...'



ஒன்றரை மாதத்திற்கு முன்,



கலாச்சாரத்துக்கு பேர் போன இடங்களில் ஒன்றான ராஜஸ்தானிலுள்ள ஒரு கிராமத்தில்...



"சுபாஷ் ஐயா வெளியில வாங்க.. இப்போவே நாம இதுக்கு ஒரு முடிவு எடுத்தாகணும், வெளியில வாங்க.."



வயிறு முட்ட மதிய உணவை உண்டுவிட்டு உறங்கப் போன சுபாஷின் காதில் கிராம மக்களின் கத்தல் கேட்க, 'மனுஷன் கொஞ்சநேரம் நிம்மதியா இருந்துர கூடாது' என்று முணங்கிக்கொண்டே வாசலை எட்டிப் பார்த்தார் அவர்.



வழக்கமாக நடப்பதுதான்.



இருந்தாலும் இன்று என்னவாக இருக்குமென்ற யோசனையோடு வாசலிலிருந்த அவரின் பார்வை பக்கத்திலிருந்த மனைவி அர்ச்சனாவின் மீது பதிய, பதிலுக்கு அவரின் பார்வையோ அங்கு பூட்டியிருந்த ஒரு அறைக்கதவின் மீது பாவமாக பதிந்தது.



சுபாஷோ எரிச்சலாக விழிகளை சுழற்றியவாறு வாசலில் நின்றிருந்த கிராமத்தாற்களின் முன்னே சென்று நிற்க, அந்த ஊர் பெரியவரான கணபதி அவரை அதிருப்தியோடு ஒரு பார்வைப் பார்த்தார்.



"இங்க பாரு சுபாஷ், உன் மேல எங்களுக்கு பெரிய மரியாதை இருக்கு.. ஆனா உன் பொண்ணு உன் மரியாதைய மட்டுமில்ல நம்ம ஊர் மரியாதையையும் சேர்த்து கெடுத்துருவா போல! மறுபடியும் அந்த பள்ளிகூடத்துக்கு பக்கம் அவள பார்த்தேன்னு வை... நானும் மத்த ஊர்காரங்களும் ரெண்டு பௌர்ணமி வரைக்கும்லாம் பொறுத்துட்டு இருக்க மாட்டோம். புரியும்னு நினைக்கிறேன்"



என்று அவர் மிரட்டலாக சொல்ல, அவர்களின் முன்னே கோபத்தை அடக்கியவாறு தலை குனிந்துக்கொண்டார் சுபாஷ்.



சுற்றியிருந்தவர்களோ ஏதோ வேடிக்கை பொருள் போல் தத்தமது வீட்டு வாசல்களிலிருந்து நடப்பதை கிசுகிசுத்தவாறு பார்த்துக்கொண்டிருக்க, அவருக்கு அவமானத்தில் முகமே கறுத்துவிட்டது.



"இந்த ஒரு தடவை மன்னிச்சிக்கோங்க, நான் சொல்லி புரிய வைக்கிறேன். அதுமட்டும் இல்லாம இன்னும் ரெண்டு பௌர்ணமி வரைக்கும்தானே..." என்று அவர் தயக்கமாக இழுக்க, "சொல்லி புரிய வை!" என்று கறாராக சொல்லிவிட்டு ஊர் மக்களோடு அங்கிருந்து நகர்ந்தார் கணபதி.



அவர் சென்ற அடுத்தநொடி வீட்டு வாசலில் பாதியாக உடைந்துக் கிடந்த கம்பை கையிலெடுத்தவர் விறுவிறுவென உள்ளே செல்ல, பூட்டிய அறைக்குள் பதற்றமாக நின்றிருந்தாள் ஜான்சி.



இது அத்தனையும் அவள் எதிர்பார்த்ததுதான். பயத்திலும் பதற்றத்திலும் அவள் நடுங்க, உடல் வியர்வையில் குளித்திருந்தது.



நெற்றி வியர்வையை அவள் புறங்கையால் துடைக்கவும், அறைக்கதவை தடாரென திறந்துக்கொண்டு சுபாஷ் உள்ளே வரவும் சரியாக இருக்க, அடுத்து நடந்ததை சொல்லவா வேண்டும்!



கொஞ்சமும் பாவம் பார்க்காமல் அடி வெளுத்தெடுத்தார் அவர்.



"மறுபடியும் இந்த மாதிரியான காரியத்த பண்ணி என் மானத்த வாங்கணும்னு நினைச்சேன்னா அவங்க சொன்ன மாதிரி ரெண்டு பௌர்ணமி வரைக்கும் வரைக்கும்லாம் உன்ன விட்டு வைக்க மாட்டேன், புரியுதாடீ!"



என்று மீண்டும் ஆத்திரம் தீருமளவிற்கு இரண்டடி அடித்துவிட்டு செல்ல, விழிகளில் கண்ணீரோடு அறைக்குள் நுழைந்தார் அர்ச்சனா.



ஜான்சியோ உடல் முழுக்க தழும்போடு சுவற்றோடு ஒன்றி கால்களை கட்டிக்கொண்டு வலியில் அழுதுக்கொண்டிருக்க, மகளின் பக்கத்தில் சென்றமர்ந்த அர்ச்சனாவிற்கு அவளை அணைத்து தன்னோடு அணைப்பதை தவிர வேறு என்ன செய்து அவளை தேற்றுவதென்று தெரியவில்லை.



"நா.. நான் என்னம்மா தப்பு பண்ணேன், பள்ளிக்கூடத்துக்கு போய் அவனுங்க படிக்கிறத ஒளிஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தேன். அது தப்பா.. அதுக்கு போய் இப்படி அடிக்கிறாரு. இதுக்கு என்னை கொன்னுடலாமே ம்மா!"



என்று விம்மி விம்மி அழுதவாறு அவள் பேச, கண்ணீரைத் துடைத்த அர்ச்சனாவின் இதழ்கள் விரக்தியாகப் புன்னகைத்தன.



"பொண்ணுங்கள பள்ளி கூடத்துக்கு அனுப்ப கூடாதுன்றது இந்த ஊர் வழக்கம். உன் அப்பாவ மீறி என்னாலயும் பேச முடியாது. உனக்கே நல்ல தெரியும், தமிழ்நாட்டுல இருந்து வந்தவன்னு என் பேச்ச உன் அப்பா மட்டுமில்ல இந்த ஊர்காரங்க கூட கண்டுக்க மாட்டாங்க. அதுமட்டுமில்லாம..."



என்றவரின் வார்த்தைகள் அப்படியே நிற்க, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துக்கொண்டாள் ஜான்சி.



கண்ணீரை அழுந்தத் துடைத்துவிட்டு, "அதுல எனக்கு பெருமைதான்ம்மா" என்று இறுகிய குரலோடு சொன்ன மகளை அழுகையோடு அணைத்துக்கொண்டார் அர்ச்சனா.



அடுத்தநாள், வழக்கம் போல் அம்மாவோடு சேர்ந்து மொத்த வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு அந்த ஒரு வீட்டின் முன்னே சென்று நின்றாள் ஜான்சி.



"ஏய் ருக்கு.. அடியே ருக்கு..." என்று இடுப்பில் கைக்குற்றி அவள் கத்த, மாவு பிசைந்துக்கொண்டிருந்த அவளின் உயிர்தோழி ருக்மணியோ அப்படியே செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டு கைகளைக் கூட கழுவாமல் அவளெதிரே பாய்ந்து வந்து நின்றாள்.



கன்னத்திலும் ஆடையிலும் மாவு ஒட்டியிருக்க, தோழியை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்தவள், "இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு" என்று பின்னால் நின்று முறைத்துக்கொண்டிருந்த ருக்மணியின் தாய் வனஜாவை எட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு சொல்ல, அலட்சியமாக தோளைக் குலுக்கினாள் மற்றவள்.



"என்னடீ ஜான்சி ராணி, புது டாட்டூவா?" என்று ருக்மணி அவளின் கைகளிலிருந்த அடியின் தழும்பை பார்த்துக் கேட்க, "உனக்கு சிரிப்பா இருக்குல்ல!" எனக் கேட்டு தோழியை முறைத்துப் பார்த்தாள் அவள்.



"அதை விடு ஜானு! என்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அன்னைக்கு கல்யாணம் பண்ணாங்கல்ல சீதா அக்கா, ஃபர்ஸ்ட் நைட்ல என்ன நடந்துச்சுன்னு எனக்கு சொல்றேன்னு சொன்னாங்க. நீயும் வர்றீயா..." என்று ருக்மணி விழிகள் மின்ன ஆர்வத்தோடு கேட்க, வாயைப் பிளந்தவாறு உடனே சுற்றிமுற்றிப் பார்த்தவள், "நெசமாதான் சொல்றியா ருக்கு, அய்யோ... அப்படி அந்த ராத்திரி என்னதான் நடக்கும்னு தெரிஞ்சுக்க எனக்கும் ஆர்வமாதான் இருக்கு. ஆனா..." என்று தயக்கத்தோடு இழுத்தாள்.



"ஆனா என்னடீ?" என்று மற்றவள் ஹஸ்கி குரலில் கேட்க, "இல்ல... அதான் நமக்கே தெரியுமே, அப்பறம் எதுக்கு?" என்று கேட்ட தோழியை முறைத்துப் பார்த்தாள் ருக்மணி.



"இருந்தாலும் அனுபவசாலிங்க கிட்ட கேட்டு தெரிஞ்சு வச்சுக்குறது நமக்கு நல்லதுதானே ஜானு, படிப்பறிவுதான் இல்ல, இதையாச்சும் கத்துக்குவோம். ஒன்னு தெரியாத தத்தின்னு நம்ம புருஷனுங்க சொல்லிர கூடாது பாரு. நாளைக்கு மதியம் சாப்பிட்டதும் சீதா அக்கா வீட்டுக்கு வந்துரு..." என்று ருக்மணி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அவளின் தாய் விளக்குமாறோடு வருவதற்கு தயாராக உடனே உள்ளே ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள் அவள்.



ஆனால், இடுப்பில் கைக்குற்றி தரையை வெறித்தவாறு அப்படியே நின்றிருந்த ஜான்சியின் மனதிற்குள் தன்னை மீறிய ஒரு கேள்வி எழுந்தது.



"நிஜமாவே நமக்குன்னு எவனாச்சும் இருப்பானா என்ன, ஒருவேள... இந்த ஊர்காரனா இருப்பானோ! அய்ய..." என்று தீவிரமாக யோசித்தவள் பின் என்ன சிந்தித்தாளோ!



"க்கும்! நமக்கு நடந்துட்டாலும்..." என்று தனக்குத்தானே நொடிந்துவிட்டு அங்கிருந்து வீட்டை நோக்கிச் செல்லும் அதேநேரம் இரவின் இருளைக் கிழித்துக்கொண்டு மின்னிக்கொண்டிருந்தது டுபாய் மாநகரம்.



அங்கு டீஜே பாடலின் ஒலி காதைக் கிழிக்க, அதை ரசித்துக் கேட்டவாறு தன்னோடு உரசும் இரு பெண்களை மேலும் தன்னோடு நெருக்கிக்கொண்டு உடலை வளைத்து ஆடிக்கொண்டிருந்தான் யாத்ரன்.



"யூ ஆர் சோ ஹோட், லெட்ஸ்..." என்று அவனை அணைத்துக்கொண்டு நடனமாடிய ஒருத்தி அவன் கன்னத்தை வருடியவாறு ஹோட்டல் ரூமுக்கு அழைக்க, இரு கைகளை உயர்த்தியவாறு சிரித்துக்கொண்டே அவளை விட்டு விலகி நின்றவன், "நொட் இன்ட்ரஸ்டட்" என்றுவிட்டு நகர்ந்து மதுபானங்கள் வைக்கப்பட்டிருக்கும் பார் பகுதியை நோக்கிச் சென்றான்.



"டியூட்..." என்று கத்திக்கொண்டு அங்கு மதுவை அருந்தியவாறு இருந்த வரதனின் அருகே அமர்ந்தவன், அவன் கையிலிருந்த மது க்ளாஸை பிடுங்கி முழுதாக வாயில் சரிக்க, அவனோ தன் தோழனை முறைத்துப் பார்த்தான்.



"இவன..." என்று வரதனோ பற்களைக் கடித்துக்கொண்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பார்க்க, "யூ நோ வாட் டியூட்! அந்த பொண்ணு என்னை ரூமுக்கு கூப்பிடுறா, பட்... ஐ அம் நொட் இன் தட் மூட் என்ட் இப்போலாம் நான் குத்தகனா இருக்கேன்னா பாரேன்" என்றான் காலரை தூக்கி விட்டுக்கொண்டு.



"முருகா..." என்று மேலே பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்ட வரதனுக்கு 'நம்ம மொழிய இப்படி கொல்றானே.. பேசாம இவன கொன்னுடலாமா' என்றுதான் நினைக்கத் தோன்றியது.



"அது உத்தமன்டா பரதேசி! அந்த வர்டே வாயில வருதில்ல, இதுல சார் உத்தமனாம்" என்று அவன் நொடிந்துக்கொள்ள, "ஆத்தீ சாரி மச்சா! நான் தமிழ்ல கொஞ்சம் வீக்குன்னு உனக்கு தெரியாதா என்ன ஹிஹிஹி..." என்று அப்பட்டமாக அசடுவழிந்தான் யாத்ரன்.



டுபாய் தலைநகரத்திலேயே பிறந்து வளர்ந்தவன் நிஜமாகவே தமிழில் சற்று அரைகுறைதான். தந்தையை இழந்த இரண்டு வயது குழந்தையான யாத்ரனோடு டுபாய்க்கு குடிபெயர்ந்த அவனுடைய தாய் விதுஷா டுபாயிலிருந்த ஒருவரை மறுமணம் செய்திருக்க, இப்போது அரசாங்கத்தில் ஒரு உயர் பதவியில் இருக்கின்றனர் அவனுடைய பெற்றோர்கள் இருவரும்.



அதனாலேயே ஆங்கிலமும் அரபு மொழியும் மட்டுமே அவனுடைய வாழ்க்கையில் அதிகம் தாக்கம் செலுத்தியிருக்க, இப்போது சில வருடங்களாகத்தான் வேலைக்காக டுபாய்க்கு வந்திருக்கும் வரதனுடைய நட்பு கிடைத்ததிலிருந்து தமிழை நன்றாக பேச கற்றுக்கொண்டான் அவன்.



கிட்டத்தட்ட பப்பிலிருந்து வெளியே வர நடுராத்தியே ஆகிவிட்டது.



"போலீஸ்கிட்ட மாட்டிக்காம ரூமுக்கு போய் சேர்ந்தா போதும், காளியம்மா நீதான்ம்மா எங்கள காப்பாத்தணும்" என்று தலைக்கு மேல் கையை உயர்த்தி வரதன் வேண்டிக்கொள்ள, சிரிப்பை அடக்கியவாறு அவனைப் பார்த்த யாத்ரன், "போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டா என் டாடிதான் வரணும், உன் காளியம்மா கெடையாது" என்றான் கேலியாக.



"வாயில போட்டுக்கோ! அப்படியெல்லா சொல்லக் கூடாது, கடவுள் கண்ண குத்திரும்" என்ற மற்றவன், "டேய் டேய் அந்த பக்கமா போகாத. என் வாஸ்துபடி கொஞ்சநாளைக்கு இந்த பக்கமாதான் போகணுமாம். அம்மா சொன்னாங்க" என்று அவன் ஒரு திசையைக் காண்பிக்க, அவனை வெட்டவா குத்தவா என்ற ரேஞ்சில் ஒரு பார்வைப் பார்த்தான் யாத்ரன்.



"அடிங்க... ஒரேயடியா என்னை மேல அனுப்பாம உன் நாட்டுக்கு போய் சேர மாட்ட போல! உன் மூட... மூட.. வாட்எவர் அதுல தீய வைக்க..." என்று மூச்சு கூட விடாமல் அவன் கத்திக்கொண்டே போக, "மூடநம்பிக்கைன்னு சொல்லாத! என்ட், யூ நோ வாட்? நிறைய பேர் ப்ரேக்அப் ஆனா சரக்கடிப்பான் இல்லன்னா வாழ்க்கையில பிரச்சனைன்னா சரக்கடிப்பான். ஆனா நான்... உன் கூட ஃப்ரென்டானதுக்கு தினமும் குடிச்சிட்டு இருக்கேன்" என்று பதிலுக்குக் கத்தினான் வரதன்.



யாத்ரனோ இதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லையென்பது போல விசிலடித்தவாறு வர, இருவரின் நல்ல நேரமோ என்னவோ, போலீஸிடம் சிக்காமல் வரதன் தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தனர்.



அப்போதுதான் கட்டிலின் மேலே இருந்த சூட்கேஸை கவனித்த யாத்ரனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.



"எங்க கெளம்புற?" என்று அவன் புரியாமல் கேட்டதும், கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவாறு, "ஊருக்கு போறேன்டா, அம்மாவ பார்த்து ரொம்ப வருஷமாச்சு. கம்பனிலதான் டிக்கெட் போட்டு கொடுத்தாங்க. இதை நானே எதிர்பார்க்கல. மொதல்லயே உன்கிட்ட சொல்லியிருக்கணும், சாரி மச்சி!" என்று தயக்கமாக இழுத்தான் மற்றவன்.



"ஓஹோ... எப்போ ஃப்ளைட்?" என்று யாத்ரன் கேட்க, "இன்னும் டூ டேய்ஸ்லடா" என்று தோழன் சொன்னதும் எதையோ யோசித்தவாறு அலைப்பேசியை நோண்டியவனை குறுகுறுவென ஒரு பார்வைப் பார்த்தான் வரதன்.



"என்னாச்சுடா?" என்று அவன் யாத்ரனை உற்றுப் பார்த்தவாறுக் கேட்க, "சடன் வர்க், ஐ ஹேவ் டூ கோ. என்ட் சீ யூ டியூட்! அட்வான்ஸ் ஹேப்பி ஜர்னி" என்றுவிட்டு யாத்ரனோ வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.



போகும் அவனை விழிகளை சுருக்கி கேள்வியாகப் பார்த்திருந்த வரதனுக்கு உள்ளுக்குள் குழப்பம் சூடிக்கொண்டது.



"என்ன எலி அம்மணமா ஓடுது, என்னவா இருக்கும்?" என்று தீவிர முகபாவனையோடு அவன் யோசித்துக்கொண்டிருக்க, வரதனின் வீட்டிலிருந்து வெளியே வந்தவன் சுற்றிமுற்றி கோபமாகப் பார்த்தான்.



சட்டென அவனுடைய பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி நிற்க, இத்தனைநேரம் அவனுக்காகவே காத்திருந்தவன் போல தன் வண்டியில் காத்திருந்த ஒருவன் யாத்ரனின் பார்வை பதிந்ததும் வேகமாக வண்டியை உயிர்ப்பித்து அங்கிருந்து நகர்ந்தான்.



போகும் அந்த காரை விழிகள் சிவக்க இவன் பார்த்துக்கொண்டு நிற்க, இங்கு தரையில் பாயை விரித்து சாய்ந்துக்கொண்டிருந்த ஜான்சிக்கு ஏனோ இன்று உறக்கம் வந்தபாடில்லை.



எழுந்து சென்று ஒரு க்ளாஸ் தண்ணீரை மடமடவென அருந்தியவள் தந்தைக்கு கேட்காதவாறு மெல்ல ஜன்னல் கதவைத் திறந்து வானத்திலுள்ள நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்தாள்.



அவளுடைய பார்வை கேலண்டரில் அவள் குறித்து வைத்திருக்கும் நாட்களின் மீது பதிய, விரல்களால் எதையோ எண்ணி ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.



ஏனோ என்றும் இல்லாமல் இன்று அவளுடைய மனம் தள்ளாட, அந்த வீட்டிற்குள் இருப்பதே அவளுக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது.



விழிகளிலிருந்து கசிந்த விழிநீர் கன்னத்தை தொடும் முன்னே வேகமாக அதை துடைத்துக்கொண்டவள் அந்த நட்சத்திரங்களை வெறித்துப் பார்க்க, அதே வலியை விழிகளில் பிரதிபலித்தபடி காரில் சாய்ந்தவாறு வானத்தை தான் வெறித்துப் பார்த்திருந்தான் யாத்ரன்.



**********

படிச்சுட்டு மறக்காம உங்க கமென்ட்ஸ்ஸ சொல்லுங்க..


என்ட் என்னோட மூன்று ஆன்டி ஹீரோ கதைகளான

தஷுரி

ரதியின் ரணதீரன்

கனவுகள் கனலாய் மாறுமா



இந்த கதைகள Papr space Website appல April மாதம் வரைக்கும் ஃப்ரீயா படிக்கலாம்.. சோ மறக்காம ரீட் பண்ணிக்கோங்க..

Here's the link 👇

https://papr.space/sheha-zaki/696e0bb131a61076ffe69ad4
 
Status
Not open for further replies.
Top