ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மௌன யுத்தம் (fan fiction) - கதை திரி

Status
Not open for further replies.

sana sana

Member
Wonderland writer
மௌன யுத்தம் fan fiction 5


அன்றிலிருந்து கிரிதரன் செல்வத்தை முறைப்பதும் அவன் கிரிதரனுக்கு தெரியாமல் சிரிப்பதும் வழக்கமாக இருந்தது. முதலில் கிரிதரன் செல்வத்தை நம்பவில்லை. எப்போது வெளியே சொல்வானோ? என்ற பதட்டத்துடன் கண்காணித்துக் கொண்டே தான் இருந்தான்.

ஆனால் போகப்போன செல்வத்தின் மீதான அவனது பார்வை மாறியது. அவனை சட்டை இல்லாமல் பார்த்து விட்டு தன்னை அறியாமல் ரசிக்கவும் ஆரம்பித்து விட்டான்.

அப்போது மீண்டும் ஒரு முறை மித்ரா அவனிடம் சண்டை பிடித்தாள். அவளும் என்ன தான் செய்வாள்? கேட்பவர்கள் எல்லோரும் அவளிடம் தானே குழந்தையை பற்றிக் கேட்கின்றனர்.

கணவனை பற்றிய உண்மையை சொல்லவும் முடியாமல் வாழவும் முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருக்க அதைப்பற்றி கிரிதரன் கவலைப்பட்டால் தானே?

உண்மையை வெளியே சொன்னால் கிரிதரன் அவளை கொல்லவும் தயங்க மாட்டான். ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. வாழ்க்கை நரகமாக கிரிதரனிடம் சண்டை போட்டுக் கொண்டு அவளுடைய பிறந்த வீட்டுக்குச் சென்று விட்டாள்.

அவள் மீது இருந்த கோபத்தில் மீண்டும் மதுவை எடுத்தான் கிரிதரன். செல்வத்திடம் உளறிய பிறகு குடிக்கவே கூடாது என்ற உறுதியில் இருந்தவன் தளர்ந்து போய் அன்று குடித்தான்.

"அறைக்கு யாரையும் அனுப்பாதே" என்று கட்டளை இட்டு கதவை பூட்டிக் கொண்டான்.

ஆனால் செல்வம் சத்தமில்லாமல் சென்று கதவை தட்ட போதையில் கதவை திறந்து விட்டான். அவனுக்கு தன்னை மறக்காமல் இருக்கும் கிரிதரனை பிடித்து விட்டது. அவனோடு பேச நினைத்தான்.

அவன் மனதில் திவ்யராஜ் எப்படி முதல் காதலாக மாறினான் என்ற விசயத்தை அறிந்து கொள்ள முனைந்தான். தூண்டித்துருவி கேட்கவில்லை என்றாலும் கிரிதரன் தானாகவே உளறினான்.

திவ்யராஜின் உடல் கருகிப்போய் வந்ததை பார்த்து விட்டு இரண்டு வாரமாக கிரிதரன் அழுதிருக்கிறான். அதன் பிறகு யாரோடு பழகினாலும் அவனுக்குள் இருந்த திவ்யராஜை தான் தேடியிருக்கிறான். கிடைக்கவே இல்லை.

பெண்களின் மீது ஏற்படாத ஈர்ப்பும் எல்லோரிடமும் திவ்யராஜை தேடி ஓய்ந்து போகும் அவனது மனமும் அவனுக்கு உணர்த்தியது ஒன்று தான்.

ஆறு வயதில் இறந்து போன திவ்யராஜ் அவன் மனதில் மட்டும் காதலாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதை உணர்ந்து கொண்டாலும் இறந்தவனை மீட்டு வந்து வாழவா முடியும்? குடித்து விட்டு புலம்பத்தான் முடிந்தது.

அவனது மனக்கதவை திறந்த போது செல்வத்துக்கு கண் கலங்கி இருந்தது. அவனை இவ்வளவு தூரம் ஒருவன் நேசிப்பான் என்று எதிர்பார்க்கவே இல்லையே.

தகுதி இல்லாத ஒன்று தான். நாடும் மக்களும் ஏன் உலகமே இதை ஏற்காது தான். துச்சமாக தூற்றத்தான் செய்வார்கள். பழிப்பார்கள். சபிப்பார்கள். அவமானப்படுத்துவார்கள். இன்னும் என்ன எல்லாம் நடக்கும் என்று செல்வத்துக்கு தெரியும்.

ஆனால் அத்தனையும் புத்திக்குத்தான். மனதிற்கு இல்லையே. அது தன்னை நேசிப்பவன் மீது உருகத்தான் செய்தது. அவன் ஒரு ஆண் என்று பார்க்கவில்லை. அவன் காதல் செல்வத்தின் கண்ணையும் மறைக்க தான் செய்தது.

கிரிதரன் திவ்யராஜ்ஜை பற்றி புலம்புவதை கேட்க கேட்க இதமாக இருந்தது. அவனை பேசவிட்டு அத்தனையும் கேட்டுக் கொண்டு அவன் தூங்கியதும் சத்தமில்லாமல் சென்று விட்டான்.

அடுத்த நாள் கிரிதரன் செல்வத்தை முறைத்தானே தவிர அன்று போல் கேள்வி கேட்கவில்லை. அவனை முறைத்துக் கொண்டே அவன் சென்று விட செல்வத்தின் இதழ்கள் விரிந்து புன்னகைத்தது.

வந்த வேலையை கூட மறந்து போய் அவன் கிரிதரனை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.

இருவரும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க அப்போது தான் அதுவும் நடந்தது.

இரவு நேரம் செல்வத்தின் அறையைத்தேடி வந்தான் கிரிதரன். அவனிடம் கார் சாவி இருந்தது. சர்விசுக்கு போன காரை அவன் தான் எடுத்து வந்திருந்தான். சாவியை வாங்க வந்த கிரிதரன் வெறும் ஸார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்த செல்வத்தின் மீது பார்வையை படர விட்டான்.

"இந்தாங்கய்யா" என்று அவன் கொடுத்த சாவியை வாங்காமல் அவன் கையைப்பிடித்துக் கொண்டவன் "இப்படி தான் தினமும் தூங்குவியா?" என்று கேட்டான்.

தன்னைத்தானே குனிந்து பார்த்தவன் "ஆமா.." என்றான்.

கிரிதரனின் பார்வை தன்னில் வேறு விதமாக படிவது புரிய மீசையை கடித்து இழுத்து வேறு பக்கம் பார்த்தான்.

"நான் வெளிய போறேன். கிளம்பி வா" என்ற கிரிதரன் அவன் பேச வந்ததை கவனிக்காமல் கிளம்பி விட்டான்.

'இந்த நேரத்துலயா?' என்று குழப்பமாக இருந்தாலும் செல்வம் கிளம்பிச் சென்றான்.

காரை செல்வத்தை ஓட்ட சொல்லி விட்டு கிரிதரன் அருகே அமர்ந்து கொண்டான்.

"எங்கயா போகனும்?"

"ஊர விட்டு வெளிய போ"

"போயி?"

"போ சொல்லுறேன்"

அதற்கு மேல் எதைக்கேட்க? காரை எடுத்து விட்டான்.

ஊரை தாண்டி நெடுஞ்சாலையில் கார் ஓடிக் கொண்டிருந்தது. கிரிதரனின் பார்வை நொடிக்கொரு முறை செல்வத்திடம் படிய ஆரம்பித்தது. நடு சாலையில் வந்து கொண்டிருக்க "கார ஓரமா நிறுத்து" என்றான்.

செல்வமும் நிறுத்தி விட அவனது சட்டைக்காலரை பிடித்து தன் பக்கம் திருப்பினான் கிரிதரன்.

"இங்க பாரு.. நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. என்ன பத்தி உனக்கு தெரியும். உன்ன எனக்கு பிடிச்சுருக்கு"

செல்வம் சட்டையிலிருந்த கையை பார்த்து விட்டு "அதுக்கு?" என்றான் அவன்.

"அதுக்குனா? உனக்கு சம்மதமானு மட்டும் சொல்லு"

செல்வம் திரும்பி இருள் நிறைந்த சாலையை சில நிமிடங்கள் பார்த்தான்.

"அந்த செத்து போன பையன்?"

"அவன பத்தி பேசாத"

"அவன் தான உங்க காதல்? அதுவும் முதல் காதல்"

"இப்பவும் இல்லனு சொல்லவே இல்லையே. இப்பவும் அவன் தான் என் உயிர் காதல் எல்லாம். ஆனா... ம்ச்ச்"

"ஆனா என்ன? என்ன போய் ஏன் பிடிக்குது?"

"தெரியலடா.. தெரியல.. எல்லாரு கிட்டயும் என் ராஜ்ஜ தேடி தேடி தோத்து போவேன். உன்ன விட அழகான பசங்கள கூட பார்த்துருக்கேன். ஆனா யாரையும் எனக்கு பிடிக்கவே இல்ல. உன்ன போய் ஏன் பிடிக்குதுனு எனக்கு தெரியலடா. என்னடா பண்ண என்ன?"

கிரிதரன் சட்டையை பிடித்துக் கேள்வி கேட்க செல்வத்திடம் பதிலே இல்லை. கிரிதரன் ஒரு முறை முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டான்.

"இப்ப உனக்கு ஓகேவா இல்லையா? அத மட்டும் சொல்லு" என்று பெருமூச்சு விட்டு கேட்டான்.

"அந்த திவ்யராஜ் உங்க முதல் காதல்னா நான் உங்களுக்கு எத்தனையாவது காதல்?"

செல்வம் புருவம் தூக்கி கேட்க கிரிதரனுக்கு கோபம் தான் வந்தது.

"இப்ப எதுக்கு இத கேட்குற நீ? நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. நோ னா கூட நேரா சொல்லிட்டு போ"

"எனக்கு தெரியனும். என் மேல லவ்வா? இல்ல ஜஸ்ட் லஸ்ட்டா? அத சொல்லுங்க. அப்ப தான் நான் முடிவெடுக்க முடியும்"

"லஸ்ட்னு சொன்னா?"

"உங்க பொண்டாட்டி கிட்ட போங்கனு சொல்லுவேன்"

அவனது சட்டையை பிடித்து அருகே இழுத்தவன் "கிண்டல் பண்ணுறல?" என்று சீறினான்.

"உண்மைய தான் சொல்லுறேன் ஐயா. நீங்க லவ் பண்ணுறது ஒருத்தன. அவன என் கிட்ட தேடுறதுக்காக என்ன யூஸ் பண்ணிக்கிட்டா அப்ப என் மனசு? அதுவும் இருக்குல?"

"எனக்கு உன்ன பிடிச்சு இருக்குடா.. என் ராஜ்க்கு அப்புறம் எனக்கு உன்ன தான் பிடிச்சுருக்கு. ஆனா ராஜ் இடத்துக்கு வர ஆசைப்படாத. கிடைக்காது"

செல்வத்தின் முகத்தில் சிரிப்பு மலர கிரிதரனை பார்த்து கண்ணடித்தான்.

"என்ன?"

"இதுக்கு மேல எதுவும் வேணாம்."

"வேணாம்னா?"

"எனக்கு அந்த திவ்யராஜ் இடம் வேணாம். இப்ப இருக்க இடமே போது
ம்"

"சோ உனக்கு ஓகே?"

"ம்ம்"

அங்கு தொடங்கியது அவர்களது உறவு. பெயரில்லாத பெயரிட விரும்பாத ஒரு உறவு.

யுத்தம் தொடரும்.
 

sana sana

Member
Wonderland writer
மௌன யுத்தம் fanfiction 6

அன்றிலிருந்து வந்த வேலையைக்கூட மறந்து விட்டு கிரிதரனுடன் உண்டான உறவில் தன்னை மறந்திருந்தான் செல்வம். விசயம் மித்ராவிற்கு தெரியவர அவள் சண்டை போட்டாள்.

வேலைக்காரனை விட அவள் குறைந்தவளா? என்ற ஆதங்கம் அவளுக்கு. அவர்களது சண்டை செல்வம் கிரிதரன் உறவை அதிகம் பாதிக்கவில்லை.

செல்வம் மித்ராவை கண்டு கொள்ளவில்லை. அவளும் செல்வத்தை எவ்வளவோ மிரட்டி வீட்டை விட்டு துரத்த தான் பார்த்தாள். ஆனால் எதற்கும் கிரிதரன் விடவில்லை.

தன் வேலையை மறந்து விட்டு செல்வம் சுற்ற ஒரு நாள் முகத்தில் வெந்நீரை கொட்டியது போல் அடித்து எழுப்பினார் நந்தகோபாலன்.

நந்தகோபாலனிடம் செல்வம் அதிகம் பேசுவது இல்லை. அவரை பார்த்தாலே வெறுப்பு எழ எங்கே தன்னைத்தானே காட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவரிடம் பேசுவதே இல்லை.

வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது நந்தகோபாலனின் அறையை கடக்கும் போது உள்ளே இருந்த தயாநிதியும் நந்தகோபாலனும் பேசிக் கொள்வது காதில் விழுந்தது.

எல்லாம் அந்த சொத்தை பற்றித்தான். என்ன தான் சொத்து அவர்களிடம் இருந்தாலும் உரிமையாளர்கள் இறந்து விட்டாலும் அதை முழுமையாக அவர்களால் உரிமை கொண்டாட முடியவில்லை.

கிட்டத்தட்ட காப்பாளர்கள் போலத்தான் இருந்தனர். அந்த சொத்துக்களை அவர்கள் குடும்ப வாரிசுகள் காக்கலாமே தவிர அதை ஆள முடியாது. அது நந்தகோபாலனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. தயாநிதியிடம் சொல்லவில்லை.

சொத்தைப்பற்றி தயாநிதி பேச நந்தகோபாலன் எதையோ சொல்லி மழுப்ப அது எல்லாம் காதில் வாங்கிய செல்வம் வெகுண்டு போனான்.

யார் சொத்தை யார் பங்கிடுவது? இதற்கு மேல் இவர்களை விட்டு வைக்க கூடாது என்று முடிவு செய்து விட்டான்.

நேரடியாக நந்தகோபாலனை கொல்வதை விட அவனது வாரிசுகளை ஒவ்வொன்றாக அழித்து விட வேண்டும் என்று முடிவு செய்தான்.

கிரிதரனை அவனால் இப்போது எதுவும் செய்ய முடியாது. அவனை விட்டு விட்டு மற்றவர்கள் பக்கம் பார்வையை திருப்பினான்.

கார்த்திக் பயங்கர புத்திசாலி என்று புரிந்து கொண்டவன் அவனை விட்டு விட்டு அடுத்ததாக இருந்த வரதனிடம் வந்தான். அவனுக்கு அப்போது தான் திருமணம் ஆகியிருந்தது.

குழந்தை வேறு உண்டாகி கலைந்து போன வருத்தத்திலும் கோபத்திலும் இருந்தவனுக்கு செல்வம் போதை மருந்தை பழக்கி விட்டான்.

முதலில் இதை கிரிதரனிடம் இருந்து மறைத்து விட்டான். ஆனால் வரதனிடம் அடிக்கடி செல்வம் தனியாக பேசுவது கிரிதரனை பொறாமைப்பட வைக்க நேரடியாக கேட்டு விட்டான்.

வரதன் தான் ஆசைப்பட்டு கேட்டதாகவும் அதை வாங்கிக் கொடுத்ததாகவும் கூறினான். அவன் தான் பழக்கி விட்டான் என்பதை மறைத்து விட்டான்.

இதற்கிடையே மித்ராவிற்கும் சாரதிக்கும் இடைய பெயரில்லா ஒன்று உருவாக அதை செல்வத்தின் பேச்சால் கிரிதரன் கண்டும் காணாமல் விட்டு விட்டான்.

ஒரு பக்கம் வரதன் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருக்க மறு பக்கம் மதனையும் குறி வைத்தான் செல்வம். அவன் கண்ணுக்கு விடும் மருந்தில் அமிலத்தை கலந்து பார்வையை போக வைத்தான்.

மகன்களின் மாற்றத்தில் நந்தகோபாலன் ஒன்றும் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால் வீட்டில் ஒரு சோகமும் வருத்தமும் சூழ்ந்தது.

மதனின் பார்வை போனது எல்லோருக்குமே வருத்தமாக இருக்க அதுவே அப்போது செல்வத்துக்கு திருப்தியாக இருந்தது.

இன்னும் எதாவது செய்யலாம் என்று யோசித்து யோசித்து நாட்களை கடத்திக் கொண்டிருக்க சினேகனிடம் இருந்து செய்தி வந்தது.

அவரது வெளிநாட்டு வாழ்வை முடித்துக் கொண்டு தாய் நாடு திரும்பப் போவதாக. இதற்கு மேல் நேரமில்லை. இங்கிருப்பவர்களை அழித்து விட்டு கிளம்ப வேண்டியது தான் என்று முடிவு செய்தான்.

நந்தகோபாலன் போட்டுக் கொள்ளும் இன்சுலின் மருந்தை மாற்றி வைக்க சத்தமில்லாமல் அவர் உயிர் பிரிந்தது. ஆனால் அதன் பிறகு சோதனை ஆரம்பித்தது. இல்லை மௌனமாய் ஒரு யுத்தம் ஆரம்பித்தது.

நந்தகோபாலன் செத்து போனால் சாதாரண மரணம் என்று விடாமல் மாரி அவனை தூண்டித்துருவ அவன் கழுத்தை நெறித்துக் கொள்ளும் படி ஆனது.

அவனை கிணற்றில் போட்டு மூடி விட்டு வந்தால் தயாநிதி லேகாவை இழுத்துக் கொண்டு சென்று பேஸ்மண்ட்டில் அடைத்தான். அதை பார்த்தாலும் பார்க்காதது போல் இருந்து விட்டான் செல்வம். அவனுக்குத்தேவை இந்த குடும்பம் அழிய வேண்டும். அது எப்படி அழிந்தால் என்ன?

நல்லவர் கெட்டவர் என்று பார்க்க அவனுக்கு நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. அதற்கு பதிலாக அவர்களை வரிசையாக கொன்று விட்டு கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து விட்டான்.

அந்த நேரத்தில் அடுத்ததாக கார்த்திக்கின் மரண செய்தி வர செல்வத்திற்கு நிம்மதியாய் இருந்தது. வீட்டிலிருக்கும் அதி புத்திசாலி என்றால் அது கார்த்திக் தான். அவன் செத்து விட்டது செல்வத்துக்கு யானை பலத்தை கொடுத்தது.

செல்வம் அடுத்ததாக சாரதியை குறி வைத்துக் காத்துக் கொண்டிருந்த நேரம் எங்கிருந்தோ வந்து முளைத்தாள் ஹன்சா. மாரியின் இடத்துக்கு வந்து சேர்ந்தான் ரத்னா. டிடெக்டிவ் என்ற பெயரில் வந்த சௌந்தர்யா கூட செல்வத்தின் கொலை பட்டியலில் இருந்தாள் தான். எதையாவது கண்டு பிடித்து விட்டால் உடனே அவளை கொன்று விட வேண்டும் என்று நினைத்திருந்தான்.

ஆனால் அவர்களது சந்தேகம் அவன் பக்கம் வரவில்லை. தயாநிதி பக்கம் தான் திரும்பியது. அதை சாதகமாக வைத்து சாரதியின் ஸ்டீராய்ட் மருந்தை மாற்றினான்.

சாரதி போனதோடு விசயம் முடியாமல் யுத்தம் தொடரத்தான் செய்தது. ஹன்சாவிற்கு மித்ரா சாரதியிடையே இருந்த உறவு தெரிந்து போக மித்ராவிற்கு அவமானமாக இருந்தது.

கிரிதரனின் சட்டையை பிடித்து சண்டை போட்டாள். அவளது சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செல்வம் அவள் எல்லோரிடமும் சொல்லி விடுவாள் என்று கண்ணை காட்ட கிரிதரன் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று போட்டான்.

அவன் கொல்லும் வரை செல்வம் அமைதியாக நின்று வேடிக்கை தான் பார்த்தான். அவனுடைய வேலையை கிரிதரன் செய்கிறானே? பிறகென்ன வேண்டும் அவனுக்கு?

மித்ராவே எழுதியது போல் தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி வைத்த செல்வம் அவளை தூக்கி தொங்க விட்டு விட்டு கையை உதறிக் கொண்டு சென்று விட்டான்.

அதன் பிறகு சில நாட்கள் பொறுமை காக்க முடிவு செய்தான் செல்வம். உடனே எல்லோரும் இறந்தால் சந்தேகம் வந்து விடும் என்று அவன் பொறுமை காக்க நினைத்தால் காலம்‌ விடவில்லை.

சினேகன் சீக்கிரமே திரும்பி வருவதாக இருக்க அவன் எப்படியாவது இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

ஹன்சா சவுந்தர்யா தேடிக் கொண்டிருந்த விசயத்துக்கு தானே துருப்பைக் கொடுத்தான். தயாநிதி சிறை செல்வான் என்று பார்க்க அவனோ தற்கொலை செய்து கொண்டான்.

கிரிதரனால் ஒரு கொலை மிச்சம் என்றால் தயாநிதி செத்ததால் அடுத்த கொலையும் மிச்சம்.

அன்று இரவு மீண்டும் எல்லோருக்கும் டீ யில் தூக்க மாத்திரையை கலந்து கொடுக்க முடிவு செய்தான்.

நந்தகோபாலனை கொல்லும் போதும் சாரதியை கொல்லும் போதும் இரவு எல்லோருக்குமே தூக்க மாத்திரையை கொடுத்து விடுவான். வேலை சுலபமாக முடிந்து போகும் என்று.

அன்றும் அவன் கொடுத்திருக்க ஹன்சா மட்டும் குடிக்கவில்லை. ஆனால் அவள் அறியும் முன்பே ஊர்வசியின் உயிரும் பிரிந்தது.

அடுத்தடுத்து வீட்டில் நடந்த இறப்புகளும் மர்மமான நிகழ்வுகளும் ஹன்சாவை மேலும் மேலும் தூண்டி விட அவள் சொத்து விசயத்தை ஆராய்ந்தாள். அதில் நந்தகோபாலனுக்கும் தயாநிதிக்கும் எந்த சொத்துமே இல்லை. எல்லாம் யாரோ ஒரு அருணாச்சலத்தின் பெயரில் இருந்தது. அந்த சொத்துக்கு காவல் தான் காத்துக் கொண்டிருந்தனர் இவர்கள். இதில் இன்னும் பல குளறுபடிகள் இருப்பது புரிந்தது.

இது நிச்சயம் பழிவாங்கல் தான் என்று ஹன்சா புரிந்து கொண்ட போதே ஊர்வசி இறந்து போயிருந்தார். ஆனால் அடுத்த கொலையை செல்வம் செய்யும் முன் ஹன்சா அவனை கண்டு பிடித்து விட்டாள்.

என்றும் போல் அன்றும் தூக்க மருந்தை போட்டு எல்லோரையும் தூங்க வைக்க செல்வம் முயற்சித்திருக்க அது பழிக்கவில்லை.

ஆனால் இன்று எப்படியாவது மதனை கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தவன் நேரடியாக களத்தில் குதித்தான்
.

மௌனமாய் நடந்த யுத்தம் பகிரங்கமாக அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்தன.

யுத்தம் தொடரும்.
 

sana sana

Member
Wonderland writer
மௌன யுத்தம் fan fiction 7

அன்று இரவு எப்படியாவது மதனை கொன்று விட நினைத்து ஊசியை செலுத்தும் போது அவன் பதிலுக்கு தாக்கி தட்டி விட்டு கத்தி விட செல்வத்திற்கு அப்போது ஓடுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை. ஓடி மறைந்து உடையை மாற்றிக் கொண்டவன் தோற்றுப்போன எண்ணத்துடன் சில நிமிடங்கள் நின்றிருந்தான்.

இனி இந்த வீட்டில் எல்லோரும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள். அவனால் ஒன்றுமே செய்ய முடியாது. அது கோபத்தை ஏற்படுத்த தன்னிடமிருந்த கத்திகளை பார்த்தான். எல்லாம் உயிரைக்குடிப்பவை தான்.

இங்கிருந்து தப்பிக்கும் போது தேவைப்படும் என்று வைத்திருந்தவை. இப்போது அத்தனையையும் எடுத்து உடைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.

மதன் மட்டும் அவனை பார்த்து இருந்தால் இங்கிருந்து தப்பித்துச் சென்று விட வேண்டும். அதற்கு இந்த கத்திகள் உதவும். எத்தனை பேரை கொன்றாலும் சரி தப்பிப்பது என்ற முடிவுக்கு வந்தவன் அதற்காக ஆயத்தமாகிக் கொண்டான்.

ஆனால் தன்னை உடனே காட்டிக் கொள்ளாமல் வெளியே நல்லவன் போல் வந்து நிற்க மதன் அவனை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் ஹன்சா கண்டு பிடித்து விட்டாள்.

சொந்த பெயரை சொல்லி அவள் அழைத்ததும் ஒரு நொடி உரைந்து போனான். ஆனால் அடுத்த நொடி தன்னிடமிருந்த கத்தியை எடுத்து அருகே நின்றிருந்த கிரிதரனின் கழுத்தில் இறக்கி விட்டான்.

ஹன்சா திவ்யராஜ் என்று அழைத்ததும் உடனே செல்வம் நின்றதும் கிரிதரனை அதிர வைத்திருக்க அடுத்தாக கழுத்தில் இறங்கிய கத்தி அவனது மனதை மொத்தமாய் உடைத்து விட்டிருந்தது.

யாரை திரும்ப பார்க்கவே முடியாது என்று புலம்பினானோ? யார் மீது அதிக பாசம் வைத்திருந்தானோ அவன் கண் முன்னால் நிற்கிறான். அதுவும் அவன் வீட்டில் இருந்த எல்லோரையும் கொன்று விட்டு அவனையும் குத்தி விட்டு. இதை விட மரணம் ஒன்றும் பெரிதல்லவே. அவனுக்குள் இருந்த திவ்யராஜின் சிறுவயது பிம்பம் கண் முன்னால் வந்து போனது.

இறந்து போனதாக நினைத்து புலம்பிய நாட்கள் நினைவில் வந்தது. அவனை தேடி அலைந்த நினைவுகள் கண்ணோரம் நீரை சுரக்க வைத்தது. கழுத்தில் இறங்கிய கத்தி கூட வலிக்கவில்லை. திவ்யராஜ்ஜின் துரோகம் வலித்தது. இறந்து போகத்தான் போகிறோம் என்ற நிலையில் அவன் கேட்ட மன்னிப்பை கூட ஏற்றுக் கொள்ளத்தான் அவனது மனம் விரும்பியது.

பார்க்க கிடைக்காத ஒருவன் பார்க்க கிடைத்திருக்கிறான். ஆனால் எப்போது? உயிர் பிரியும் போது. ஒன்று அவன் இறந்து போக வேண்டும். இல்லையென்றால் திவ்யராஜ் செத்ததாகவே தான் இருக்க வேண்டும். இது தான் அவர்களுக்கு எழுதிய விதி போலும்.

ஆனால் கடைசி விருப்பமாக திவ்யராஜை பார்த்த நிம்மதி கிடைக்க அவனை பார்த்தபடியே உயிரை விட்டிருந்தான் கிரிதரன்.

கத்தியை இறக்கும் போது கிரியின் அதிர்ந்த பார்வையை திவ்யராஜ்ஜால் ஜென்மத்துக்கும் மறக்கவே முடியாது. அந்த கண்ணில் எத்தனையோ உணர்வுகளை பார்த்திருக்கிறான். முதல் முறையாக அவன் மீது வெறுப்பை பார்த்தான்.

அவனுக்காக மனைவியை கூட கொன்றவனை தன் கையால் கொன்று விட்டது திவ்யராஜ்ஜை உலுக்கி இருந்தது. அவன் வாயால் துரோகி பட்டம் கிடைத்த போது உள்ளே சுருக்கென தைத்தது.

ஆனால் உண்மையில் திவ்யராஜ்ஜின் மீது அவன் கொண்ட அன்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று தான் அவனை கொன்று விட்டான்.

தன் சுயரூபம் தெரிந்தால் மனதில் கோவில் கட்டி வைத்திருந்த திவ்யராஜை குப்பைக்குத்தள்ளி விடுவான் கிரிதரன். பெயரைக்கேட்டு அவன் இன்னார் தான் என்று அவன் உணரும் போது அவனுக்கு மரண சாசனத்தை எழுதி விட்டான் திவ்யராஜ்.

ரத்தம் சொட்ட அவனையே வெறித்துக் கொண்டிருந்த கிரிதரனை பார்த்து தொண்டை அடைத்தது. விழுங்கிக் கொண்டான். அவனை மறக்காமல் அவன் குடும்பத்தை மறக்காமல் வாழ்ந்த ஒரே பிறவி கிரிதரன். அவனை கொல்வது என்பது திவ்யராஜ்ஜால் கூட முடியாத காரியம் தான். எத்தனையோ நாட்கள் அவன் அருகில் இருந்த போது ஊசியை எடுத்து குத்தியிருந்தால் கிரிதரன் புதைக்கப்பட்ட இடத்தில் மரமே முளைத்திருக்கும்.

அவனை கொல்லவே கூடாது. மற்றவர்களை அழித்து விட்டு அவனை மட்டும் இங்கிருந்து அழைத்துச் சென்று விடும் ஆசையில் தான் இருந்தான். ஆனால் இருவரின் விதியும் வேறு மாதிரி இருந்ததே. ஒருவன் கையால் தான் மற்றவன் மரணம் என்று எழுதப்பட்டதை மாற்ற வழி இல்லை.

கிரிதரனின் கழுத்திலிருந்து வந்த ரத்தம் தரையில் ஓட ஆரம்பிக்க அதை பார்த்ததுமே திவ்யராஜ் மூர்க்கமானான்.

சிறு வயதில் காருக்குள் ரத்த வெள்ளத்தில் துடித்த காட்சிகள்.. ரத்தத்தை கண்டாலே பதட்டமடையும் நினைவுகள் எல்லாம் வந்து போக அவனது துக்கம் கூட அப்போது காணாமல் போனது.

அங்கிருந்த அத்தனை பேரையும் முறைத்தான். ஒவ்வொருவரையும் கொன்று குவிக்கும் ஆத்திரம் வந்தது. தானாகவே தான் செய்தவற்றை எல்லாம் வெறிப்பிடித்தது போல் கூறினான்.

ஒவ்வொருவரையும் கொன்று விட வேண்டும் என்று கத்தியை ஓங்கியவனை தடுத்து நிறுத்தினான் கார்த்திக். செத்துப்போனதாய் நினைத்துக் கொண்டிருந்த கார்த்திக் உயிரோடு இருந்தது முதல் அதிர்ச்சி. ரத்னா காவல் அதிகாரி என்பது அடுத்த அதிர்ச்சி.

ஏற்கனவே மூர்க்கமாகி தன்னிலையில் இல்லாதவனை அடக்குவது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அவனுக்கே தெரியாமல் அந்த வீட்டில் நடந்ததை எல்லாம் அறிந்து கொண்டவனுக்கு பழி வெறி மட்டும் தீரவே இல்லை.

கிரிதரனின் உடலை பார்க்க பார்க்க மேலும் வெறி வர அத்தனை பேரையும் அழித்து விடும் சபதம் எடுத்துக் கொண்டு தான் சென்றான்.

மூர்க்கமாக இருந்தவனை தூக்கிக் கொண்டு சென்று சிறையில் அடைத்து வைத்தனர். அங்கு அடைந்து கிடந்தவனுக்குள் மீண்டும் மீண்டும் கிரிதரனின் நினைவுகள்.

திவ்யராஜ் செத்ததை நினைத்து அழுதவனை தன் கையால் கொன்று விட்டது குற்ற உணர்வை கொடுத்தது. கடைசியாக ஒரு முறை கிரிதரனுக்காக கண்ணீர் வடித்தான்.

அதன் பின்பு விசாரனை என்ற பெயரில் எத்தனையோ அடிகள்.. துன்புறுத்தல்கள்.. இன்னல்கள்.. தான் யார் என்ற விவரத்தை மட்டும் சொன்னவன் சினேகனை உள்ளே வரவிடவில்லை.

அவர் வெளிநாட்டிலிருந்து இன்னும் வரவில்லை. இன்னும் மூன்று மாதங்களில் வந்து விடலாம். அதற்குள் எதாவது செய்து தப்பித்து விட நினைத்தான்.

அவனுக்கு சைக்கோ பட்டமும் கிடைத்தது. ஐந்து கொலைகளை செய்தவன் என்பதால் கடுங்காவலில் தான் இருந்தான்.

காவல் பலமாக இருக்க பல திட்டம் போட்டாலும் செயல்படுத்த முடியவில்லை.

ஒரு பக்கம் அரண்மனையில் காட்சிகள் மாற ஆரம்பித்தது. காதலித்தவர்கள் திருமணத்தை முடித்துக் கொண்டனர்.

ஹன்சா சொத்தில் இருந்த விவகாரங்களை சொன்னதும் அந்த சொத்தே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

எல்லாவற்றையும் திவ்யாரஜுக்கு கொடுத்து விட முடிவு செய்து விட்டு அரண்மனையை விட்டு கிளம்பினர்.

மறுபக்கம் தப்பிக்கும் நேரம் பார்த்துக் கொண்டிருந்த திவ்யராஜுக்கு வாய்ப்பு கிடைக்க உடனே தப்பியிருந்தான். எல்லோரும் அரண்மனையில் இருப்பார்கள் என்று நினைத்து வர அத்தனை பேரும் பேருந்தில் ஒன்றாய் அங்கிருந்து கிளம்பியது தெரிய வந்தது.

உடனே கார்த்திக்கை அழைத்து மிரட்டியவன் தலையில் தொப்பியை போட்டுக் கொண்டு யார் கண்ணிலும் படாமல் மறைந்து போனான்.


மீண்டும் ஒரு முறை மௌனமாய் யுத்தம் செய்ய தயாராகி இருந்தான் திவ்யராஜ்.

முற்றும்.
 
Status
Not open for further replies.
Top