மௌனம் 1
முழு அலங்காரத்துடனும் எழில் கொஞ்சும் வனப்புடனும் மணமேடையில் அமர்ந்திருந்த வாசுகியின் முகத்தில் மருந்துக்கு கூட சந்தோசம் இல்லை.
கல்லை விழுங்கியது போல அமர்ந்திருந்தாள். அதற்கு அப்படியே நேர் எதிர் சந்தோசத்துடன் இன்முகமாக அவள் அருகில் அமர்ந்து இருந்தான் அர்ஜுன்.
'எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை' என்று பெற்றோர் தொடக்கம் மாப்பிள்ளை வரை அனைவரிடமும் கூறி விட்டாள். இருந்தும் அவளது பேச்சுக்கு செவி சாய்க்க அங்கு ஒருவரும் இல்லை.
எளியவரின் பேச்சை சபை ஏற்காது என்பது போல அவளது வார்த்தைக்கும், மனதுக்கும் மதிப்பளிக்க அங்கு ஒருவரும் இல்லை.
பெண்ணாக பிறந்தால் பிரலயங்களை தாண்டி தான் வாழ்க்கை என்பது எந்த அளவுக்கு உண்மை என்றதை இப்போது தான் உணர்ந்து கொண்டாள் வாசுகி.
முகூர்த்தநேரம் நெருங்கியது... மனதில் ஒரு படபடப்பு? அந்த பதட்டம் மாறாமல் தன் அருகில் அமர்ந்திருந்த அர்ஜுனை பார்த்தவள் 'இது வேண்டாம் இந்த கல்யாணம் வேண்டாம்... நிறுத்திடுங்க' என்று கண்களால் கெஞ்சினாள். அவளது விழிமொழி அவனுக்கும் புரிந்தது! ஆனால் அதற்கெல்லாம் மதிப்பளித்து அவளை விட்டு விலகி செல்லும் குணம் கொண்டவன் இல்லையே இந்த அர்ஜுன்.
அவளை பார்த்து ஏளனமாக இதழ் வளைத்து சிரித்தவன் "முடியாது" என்று அழுத்தமாக உரைக்க, அவளது முகம் வெளிறி போனது.
அந்நேரம் ஐயர் "கெட்டி மேளம்" என்று கூற, எதையோ சாதித்த நிம்மதியில் முகம் கொள்ளா புன்னகையுடன் வாசுகியின் கழுத்தில் தாலியை கட்டி, அவளை தன்னவள் ஆக்கிக் கொண்ட அர்ஜுன் "வேலை முடிந்தது" என்பது போல கண்களை மூடி திறந்தான்.
மங்களநாண் கழுத்தில் ஏறிய மறுநொடி, அவளது கண்கள் கண்ணீரை உதிர்த்தது... 'இது இயல்பான ஒன்று' என்று அங்குள்ளவர்கள் எண்ணியிருக்கலாம்? ஆனால் அது அப்படி அல்ல என்பதை அவளும் அவனும் மட்டுமே அறிவர்?
அவனா? யார் அவன்? அர்ஜுனா இல்லை இவன் நிலன் விக்ராந்த்.
சபை நடுவே இமை மூடி கண்ணீரை உள்ளிழுக்க போராடியவள், தனக்கு நேர் எதிரில் எந்த வித உணர்வுமின்றி நின்று கொண்டு அட்சதை தூவிய நெடியவனை ரௌத்திரம் பொங்க பார்த்தாள்.
அக்கணம் அவள் விழி விளிம்பில் நழுவி ஓடிய கண்ணீர், அவனை குற்றம் சாட்டியது. அந்த கண்ணீருக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால், ஒன்று அவனை எரித்திருப்பாள், இல்லை அதில் தானே எரிந்திருப்பாள்.
அட்சதை தூவிய அடுத்த நொடி சுவடு இல்லாமல் அங்கிருந்து சென்றிருந்தான் நிலன். பெண்ணவள் வடித்த கண்ணீருக்கு காரணம் சொல்லி சமாளிக்கலாம்... ஆண் அவன் வடிக்கும் கண்ணீருக்கு எவரிடம் காரணம் சொல்லி என்ன மாற போகிறது? என்று எண்ணினானோ என்னவோ உள்ளம் குமுறிய போதும், கண்கள் கண்ணீரை வார்க்காமல் உணர்விழந்து இருந்தது.
நடந்து வந்தவனை நோக்கி வந்த பலரும் மைக்கை தூக்கிக் கொண்டு அவனிடம் பேட்டி எடுக்க முயற்சிக்க... யாரையும் பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தான் நிலன். எங்கு நின்று ஒரு வார்த்தை பேசினாலும் அடக்கி வைத்த உணர்வுகள் வெளிப்பட்டு கண்ணீர் வழிந்து விடுமோ என்று கட்டுப்படுத்திக் கொண்டு வாகனம் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்து காரில் ஏறிக்கொண்டான்.
மூச்சு விட முடியவில்லை? இதயம் படபடக்க ஆரம்பித்தது! இப்படியே விட்டால் இருதயம் தன் இயக்கத்தை நிறுத்திவிடுமோ என்று அச்சம் கொண்டவன், நடு வழியில் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஆழ்ந்து பெரும் மூச்சுக்களை எடுத்தான்.
இன்னும் மன அவஸ்த்தை தீரவில்லை... உடனே அலைபேசியை எடுத்தான்... "மகிழ் வதனி" என்ற எண்ணிற்கு அழைத்தான்.
அங்கு யானையிடம் மாட்டியா சிறு எலி போல, ஒரு முரடனின் பிடியில் சிக்கி தவித்த அந்த கிளி, அழைப்பு சத்தம் கேட்டு அவனை தன்னில் இருந்து பிரித்து தள்ள முயற்சித்து அழைப்பை ஏற்க பார்த்தது... அவனோ அவளை விடும் எண்ணம் இல்லாமல் இருக்க... தொடர் அழைப்புகள்... நம்பரை பார்த்து விட்டாள்?! அழைத்தது நிலன் என்று தெரிந்ததும், தன் மீதிருந்தவனை மூர்க்கத்தனமாக பிடித்து கீழே தள்ளினாள்... குடிபோதையில் அவனோ கீழே விழுந்து விட, அடுத்த நொடி கோவத்தில் அவளை அடிக்க பாய்ந்தான்... புடவையை சரி செய்து கொண்டவள், "ஏய்" என்று அடி தொண்டையில் இருந்து ஒரு குரல் கொடுக்க... போதையின் பிடியில் இருந்தவன் அடங்கி போனான்! உடனே அவனது குரல் குழைவாக ஒலிக்க... "பணம் தானே வேணும், இரு வரேன்" என்று கூறிவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் மகிழ் வதனி.
"ம்ம்ம் சொல்லுங்க எதுக்கு இந்த நேரத்தில் போன் பண்ணியிருக்கீங்க?" என்று அவள் கேட்க...
"உன்னை பார்க்கணும்... உடனே என் வீட்டுக்கு வா" என்றான் நிலன்.
"இப்போ என்னால வர முடியாது" என்று அறையின் ஒரு மூலையில் படுத்து உறங்கி கொண்டிருந்த இரண்டு வயது குழந்தையை பார்த்தபடி சொன்னாள்.
"சரி" என்றவன் அவளது பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பை துண்டிக்க... இவளுக்கு மனதில் சிறு நெருடல்? உடனே ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு அவன் இல்லம் நோக்கி கிளம்ப தயாரானாள்.
அந்நேரம் கட்டிலில் கிடந்தவனோ அவளது கரம் பற்றி தகராரில் ஈடுபட்டான்... "ஏய் கையை விடு" என்று ஒரு சிறு கத்தியை கொண்டு அவனை சமாளித்தவள், தன் பையில் இருந்த பணத்தை எடுத்து அவன் முகத்தில் விட்டெரிந்து விட்டு, உறங்கிக் கொண்டருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு நிலன் இல்லம் நோக்கி பயணித்தாள்.
*****
துரோகத்தையும் ஏமாற்றத்தையும் தாங்க முடியாமல் தடுமாறி போன நிதன், போதை தலைக்கேறி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.
அக்கணம் அவனது வீட்டுக்குள் நுழைந்த மகிழ் வதனி, தன் கையில் இருந்த குழந்தையை சோபாவில் படுக்க வைத்து விட்டு "என்ன விஷயம்?" என்று கேட்டபடி அவன் அருகில் வந்து நின்ற கணம், அவளை அணைத்துக் கொண்டான் நிலன்.
இவ்வளவு நேரம் அவன் கண்களில் தேக்கியிருந்த கண்ணீர் இப்போது அவளது தோள்களை நனைத்தது. உணர்ச்சியின் பிடியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் அவன் அணைப்பு இறுகிகொண்டே போக, உடனே அவனை பிடித்து தள்ளி விட்டு.
"என்ன ஆச்சு உனக்கு?" என்று கேட்டாள்.
"ஐயம் சாரி" என்றபடி நிதானத்துக்கு வந்தவன், தன் செயலை எண்ணி உண்மையாக வருத்தப்பட்டான்.
"சரி விடுங்க" கட்டி அணைத்ததும் கற்பு பறிபோய் விட்டது என்று கூச்சலிடும் நிலையிலோ, இல்லை சலன பட்டு காதல் வயப்படும் நிலையிலோ இப்போது அவள் இல்லை.
"என்னயிருந்தாலும் நான் அப்படி பண்ணியிருக்க கூடாது, ஏதோ மனசு சரியில்லாமல் அப்படி பண்ணிட்டேன் சாரி" என்றவன் தன் கரத்தை சுவரில் ஓங்கி அடித்தான். அதன் விளைவாக கை முட்டியில் காயம் ஏற்பட, வலியில் கரத்தை உதறிக் கொண்டான்.
"ஐயோ ஏன் இப்படி பண்ணுறீங்க? நான் தான் அதெல்லாம் ஒன்னுமில்லைன்னு சொல்லிட்டனே" என்று பதறியவள் அவனது கரத்தை தொட போகவும், "இல்லை வேண்டாம்" என்று அவளிடம் இருந்து விலகிக் கொண்டான்.
"ரொம்ப பண்ணாதீங்க... காயம் பெருசா இருக்கும் போல கையை கொடுங்க" என்றவள் அவனது கரத்தை பிடித்து பரிசோதிக்க, அவளை இயலாமையுடன் பார்த்தவன்,
"மன்னிச்சிடு நானும் மத்தவங்களை போலவே உன்னை" என்று சொல்ல வந்தவன் மீதி வார்த்தையை அப்படியே விழுங்கிக் கொள்ள, அவனது கண்களை பார்க்க முடியாமல் இமை தாழ்த்திக் கொண்டவளின் இதழ்கள் விரக்தியாக வளைந்து கொண்டது.
வண்ணத்து பூச்சியாக வாழ நினைத்தவளுக்கு விதி பரிசளித்தது என்னவோ விட்டில் பூச்சியின் வாழ்க்கையை தான்.
இனி நடந்ததை நினைத்து அழுது புலம்பி மட்டும் என்ன மாற போகிறது? எல்லாம் அழிந்து விட்டது. எல்லாவற்றையும் இழந்து விட்டாள். உயிர் மட்டுமே இன்னும் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கிறது... அதுவும் எதுவுமறியாத அந்த சிறு பிள்ளைக்காக...
தொலைத்த இடத்தில் தேடி கிடைக்க நிம்மதியும் சந்தோஷமும் ஒன்றும் பொருள் இல்லையே... அனைத்தையும் இழந்த பின்பும் ஓட வேண்டியது விதியின் கட்டளை என்ன செய்ய முடியும்?
"அவன் ஏன் இப்படி பண்ணான்? என்னால நடந்த எதையும் நம்பவே முடியல... மனசு ரொம்ப பாரமா இருக்கு" என்று முதல் முறை தன் மனதில் உள்ளதை அவளிடம் புலம்பி தீர்த்தவன், சோர்ந்து போய் இருக்கையில் தலை சாய்த்தான்.
அவனது உடல் காயத்திற்கு அவளால் மருந்திட முடிந்தது, ஆனால் உள்ளத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆறுதல் சொல்ல கூட அவளுக்கு வழியில்லை.
"ஏன் எதுவும் பேச மாட்டிங்குற? அவன் எனக்கு பண்ணது துரோகம் தானே? நீயே சொல்லு"
அவளிடம் பதில் இல்லை...
"உன்கிட்ட தான் கேட்குறேன்"
"உங்க ப்ரெண்ட பத்தி உங்களுக்கு தெரியாதா?" என்று ஒரு வார்த்தையில் அவனுக்கான பதிலை கூறியவள், "அப்போ நான் கிளம்புறேன், எதையும் யோசிச்சு மனசை குழப்பிக்காதீங்க, உங்களுக்கு பிடிச்சாலும் பிடிக்கலனாலும் வாசுகி இப்போ அர்ஜுனோட மனைவி அதை மறந்துடாதீங்க, அது தான் உங்க எல்லார் வாழ்க்கைக்கும் நல்லது" என்றவள் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றாள். செல்லும் அவளை மௌனமாக பார்த்தவனின் மனதில் ஆயிரம் கேள்விகள், அதற்கான விடையை சொல்ல வேண்டியவனோ தனது முதலிரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தான்.
*****
முதலிரவு அறைக்குள் நுழைந்த வாசுகியை கட்டிலில் அமர்ந்தவாறே நிமிர்ந்து பார்த்த அர்ஜுன் "வா வாசுகி" என்று சொல்ல... அவள் முகமோ பிடித்தமின்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
"என்னை உனக்கு பிடிக்காதுன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்! சோ ஒவ்வொரு முறையும் இப்படி முகத்தை சுளிச்சு உன் விருப்பத்தை காட்டணும்ன்னு அவசியம் இல்லை" என்றவன் எழுந்து வந்து அவளது கரத்தை பிடிக்க... அவனை அணல் பார்வை பார்த்தாள் வஞ்சியவள்.
"ப்ச் இந்த பார்வை இன்னுமே கிக்கா இருக்கு" என்றவன் அவளது கரத்தை பிடித்து ஒரு சுற்று சுற்றிவிட, அவள் கையில் இருந்த பால் சொம்பு கிழே விழுந்தது. அந்த சத்தத்தில் அவளது உடலில் மெல்லிய நடுக்கம் ஏற்பட, உடனே அவளை பின்னிருந்து கட்டிக் கொண்டான்.
"இப்படி பால் சொம்பையே சரியா பிடிக்க தெரியாத நீ நாளைக்கு கத்தியை எடுத்து எப்படி கொலை பண்ணுவ?" என்று கேட்டவன் அவளது தோள் வளைவில் முகம் புதைக்க, தடுமாறி போனவள் அவன் முகத்தை திருப்பி பார்க்க, புருவம் உயர்த்தியவன் "ரொம்ப யோசிக்காத என்னோட அடுத்த படத்தில உன்னை நடிக்க வைக்கலாம்னு இருக்கேன் அதுல நீ ஒரு கொலைகாரி அதான் அப்படி சொன்னேன்" என்றபடி இதழ் கொண்டு மென்மையாக அவள் கழுத்தில் கடிக்க... அருவருத்து போனவள் அவனிடத்தில் இருந்து விலக பார்த்தாள்.
சலித்துக் கொண்டவன் "நீ என்ன டிராமா பண்ணாலும் போராட்டம் பண்ணாலும் இன்னிக்கு நமக்குள்ள நடக்க வேண்டியது நடந்தே தீரும்... இல்லை என்னால முடியாது அப்படி இப்படின்னு ஏதாவது சோக கீதம் பாடினன்னுவை நேரா உன் அம்மா கிட்ட போயி 'என்னை பிள்ளை வளர்த்து வச்சியிருக்கீங்க? புருசனுக்கு ஒத்துழைக்க மாட்டிக்குறான்னு பஞ்சாயத்து வைப்பேன்... அது உனக்கு ஓகேன்னா தரலாமா... தள்ளி நில்லு" என்றவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசவில்லை மனதை கல்லாக்கிக் கொண்டு உயிரற்ற ஜடமாக கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள்.
"ம்ம்ம் குட்" என்று அவளை மெச்சுதல் பார்வை பார்த்தவன், அவளிடம் சங்கமிக்க முன்னேற, பெண்ணவளின் கண்களில் உவர் நீர் சுரந்தது. அது எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல அவளில் தன் தேடலை தொடங்கியவன் "விக்ராந்த்" என்று அவள் கூறிய ஒரு வார்த்தையில் கண்களை மூடி திறந்து அவள் மீதிருந்து எழுந்து கொண்டான் அர்ஜுன்.
கணவன் தொட்டு தழுவும் வேளையில் வேறு ஒரு ஆடவனின் பெயரை உதிர்த்த கன்னியின் மனநிலையை என்னவென்று கூறுவது?