இதே சமயம், யுகேந்திரன் இருந்ததால் என்னவோ நிலைமை சட்டென இயல்பாகி விட்டது...
கார்த்திகேயனும் யுகேந்திரன் சொன்ன போல கேக் வாங்கி வந்திருக்க, கார்த்திகேயன், யுகேந்திரன், தனஞ்செயன் என மூவரும் அந்த இடத்தை நேர்த்தியாக மீண்டும் மாற்றி இருந்தார்கள்.
கேக் என்பதை தாண்டி அவள் மனதை அல்லவா உடைத்து விட்டாள்.
சிவாங்கியோ, "அழுதுட்டே இருக்காதடி, மேக்கப் எல்லாம் கலைஞ்சிடுச்சு பாரு" என்று சொல்லி டிஸ்ஸுவினால் முகத்தை துடைத்து விட்டாள்.
எல்லாமே ஏற்பாடு செய்து, கேக்கில் மெழுகு திரியையும் ஏற்றிய யுகேந்திரனோ, "தர்ஷி எல்லாம் ரெடி, கேக் கட் பண்ண வா" என்று அழைக்க, அவளுக்கு பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும், அடுத்தவர் மனதை முறிக்க கூடாது என்று கண்களை துடைத்தபடி எழுந்து சென்றாள்...
எல்லாருக்கும் மீண்டும் குதூகலம் தொற்றிக் கொள்ள, "ஹாப்பி பேர்த் டே டூ யூ" என்று பாட ஆரம்பித்து விட்டார்கள்...
முகம் சோர்ந்து இருந்த தர்ஷனாவுக்கும் சுற்றி எல்லாரும் புன்னகைத்ததும் அதே புன்னகை தொற்றிக் கொண்டது...
ஆராதனா உடைத்து விட்டு செல்வதை எல்லாம் சரி செய்தே பழகி விட்டான் இந்த யுகேந்திரன்...
அவள் தவறுகளை திருத்தி எழுதுபவன் அவன் தான்...
அன்றும் சரி இன்றும் சரி...
மீண்டும் அந்த இடம் கலகலப்பாக மாற, தர்ஷனாவும் மென் புன்னகையுடன் கேக்கை வெட்டி, தாய், தந்தை, அன்பரசி, சிவாங்கி, யுகேந்திரன் என்று எல்லாருக்கும் ஊட்டினாள்...
யுகேந்திரனும், "உனக்கு என்ன கிஃப்ட் வாங்கி இருக்கேன் தெரியுமா?" என்று கேட்டபடி பரிசை நீட்ட, அவளும், "என்ன மாமா?" என்று சிரித்தபடி கேட்டுக் கொண்டே அதனை பிரிக்க, "சீக்கிரம் பிரி டி, ரொம்ப எக்சைட்டிங் ஆஹ் இருக்கு" என்றபடி சிவாங்கியும் அருகே வந்து நின்று விட்டாள்...
பரிசை பிரித்த தர்ஷனாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, அப்படி ஒரு பூரிப்பு...
நிறைய நாட்களாக அவள் கேட்டுக் கொண்டு இருந்த லேப்டாப் அது...
எப்போதுமே ஆராதனாவுக்கும் தர்ஷனாவுக்கும் லேப்டாப்பில் சண்டை தான் வரும்...
அதனால் எப்போதுமே, "அவ லேப்டாப்பை தரவும் மாட்டேங்குறா, எனக்கு தனியா ஒன்னு வாங்கி கொடுங்கம்மா" என்று கேட்டுக் கொண்டே இருப்பாள்.
அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் யுகேந்திரனுக்கும் இது தெரியும்...
கல்லூரிக்கு சேர போகின்றாள் கண்டிப்பாக லேப்டாப் அதிகம் தேவைப்படும் என்று உணர்ந்தவன், புதிதாக வாங்கியும் வந்து விட்டான்...
அவள் இதழ்கள் தாராளமாக விரிய, "தேங்க்ஸ் மாமா, எதிர்பார்க்கவே இல்லை" என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டாள்.
"இனி உன் அக்கா கூட போய் சண்டை எல்லாம் போடணும்னு இல்லை" என்று அவனும் கண் சிமிட்டி சொல்லிக் கொண்டான்.
இதனை எல்லாம் கதவில் காது வைத்து, அழுகையுடன் கேட்டுக் கொண்டு இருந்தாள் ஆராதனா...
ஆத்திரமாக வந்தது...
ஏற்கனவே ஹாலுக்குள், அவள் இல்லாமல் கேக் வெட்டிய கடுப்பு...
அதுவும் யுகேந்திரனின் குரல், "ஹாப்பி பேர்த் டே டூ யூ" என்று பாடிய கணம், அவன் குரல் வளையை பிடித்து நெரித்து விடலாமா? என்று தோன்றும் அளவுக்கு ஆத்திரமாக இருந்தது...
இதில் லேப்டாப் வேறு வாங்கி கொடுத்து இருக்கின்றான்...
'லேப்டாப் எல்லாம் வாங்கி கொடுத்து, என் தங்கச்சியை மடக்க நினைக்கிறியா ராஸ்கல்' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டவளுக்கு, இன்னும் ஆத்திரத்தில் அழுகை வந்தது...
அதுவும் இப்போது அவளை யாருமே ஏன் என்று கவனிக்கவில்லை, பெயருக்கு கூட கேக் வெட்டும் போது அழைக்கவில்லை...
ஜீரணிக்கவே முடியவில்லை...
தனது முக்கியத்துவம் பூச்சியமாக இவன் தானே காரணம் என்று நினைத்த ஆராதனாவுக்கு யுகேந்திரன் மேல் வன்மம் இன்னும் மேலிட்டது தான் மிச்சம்...
அதனை தொடர்ந்து, எல்லாரும் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்கள்...
கார்த்திகேயனோ, "என்னடா ஆராதனா இவ்ளோ கோபப்படுறா?" என்று கேட்க, தனஞ்செயனோ, "நம்ம யுகன் மேல லவ்வாம்" என்று கிண்டல் செய்ய, யுகேந்திரனோ சிரித்துக் கொண்டே, "அவ காதுல விழுந்தா உன்னை செருப்பை கழட்டி அடிப்பா" என்று சொல்லிக் கொண்டான்.
வீடு பழையபடி மாறினாலும் ஆராதனா வெளியில் வரவே இல்லை. கட்டிலில் படுத்துக் கொண்டே விம்மி அழுதது தான் மிச்சம்...
அதற்காக யாரும் அவளை கண்டு கொள்ள கூடாது என்றெல்லாம் நினைக்கவில்லை...
அவள் உச்சகட்ட கோபத்தில் இருப்பாள் என்று தெரியும்...
அக்கணத்தில் அவளை கையாள முடியாது...
கண்டிப்பாக எரிந்து விழுவாள்...
அதனாலேயே விலகி நின்றார்கள்...
வந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று இருக்க, இறுதியாக அன்பரசியும் சிவாங்கியும் யுகேந்திரனுடன் புறப்பட்டு விட்டார்கள்...
யுகேந்திரன் அருகே சிவாங்கி அமர்ந்து இருக்க, பின்னால் தான் கார்த்திகேயன், தனஞ்செயன் மற்றும் அன்பரசி அமர்ந்து இருந்தார்கள்.
அன்பரசிக்கு இன்னும் மனம் ஆறவே இல்லை.
"அவ என்ன பேச்சு எல்லாம் பேசுனா தெரியுமா? பொண்ணா அவ?" என்று சீற, தனஞ்செயனோ, "அப்படியே உங்க மருமகளா கொண்டு வரலாமே ஆன்டி" என்று கலாய்க்க, "டேய்" என்று அவனுக்கு சிரித்துக் கொண்டே திட்டினான் யுகேந்திரன்...
"டேய் யுகா, அப்படி ஒரு எண்ணம் இருந்தா, அத ரேசர் வச்சு அழிச்சிடு, அவ மட்டும் என் வீட்டு மருமகளா வந்தா, நான் கடிதம் எழுதி வச்சுட்டு ஓடி போயிடுவேன் பார்த்துக்கோ" என்று சொல்ல, சிவாங்கி சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
யுகேந்திரனோ, "ஐயோ அம்மா, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, இவனுங்க சும்மா கலாய்ச்சிட்டு இருக்கானுங்க" என்று சொன்னவன், "டேய் தனா, கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்க மாட்டியா? எவ்ளோ பயப்படுறாங்க பாரு" என்றான்.
கார்த்திகேயனும், "தனா சும்மா இரு டா, ஆரா பேரை கேட்டாலே ஆன்டி நடுங்குறாங்க பாரு" என்று சொல்ல, தனஞ்செயனும், "ஜாலியா இருக்கு ல" என்றான்.
அன்பரசியோ, "ஆனா ஒன்னுடா, அந்த கேக்கை தூக்கி அடிச்சதை பார்த்து நான் கதி கலங்கியே போய்ட்டேன், என்ன தான் கோபம் இருந்தாலும், இப்படியா நடந்துக்கிறது?" என்று கேட்க, யுகேந்திரனோ, "சரி விடுங்கம்மா, என் மேல தானே கோபம்" என்றான் நிதானமாக.
"கோபப்படுற அளவுக்கு நீ என்னடா பண்ணுன? சும்மா இருக்கிற உன் மேல எதுக்கு இவ்ளோ வன்மம் அவளுக்கு... பையனா பிறந்தது குத்தமா என்ன?" என்று அன்பரசி கேட்க, தனஞ்செயன், "ஆராவை சமாளிக்க ஒரே வழி இருக்கு ஆன்டி" என்றான்.
அவரும் சீரியசாக, "என்னடா?" என்று கேட்க, "நாளைக்கே ஆபரேஷன் பண்ணி, யுகேந்திரனை யுகேந்தினியா மாத்துறோம், அவ பிரச்சனை அது தானே?" என்று கிண்டல் செய்ய, "அடிங்" என்று யுகேந்திரன் திட்ட, எல்லாருக்கும் அங்கே சிரிப்பு தான்.
எல்லாரும் கல கலவென இருப்பவர்கள் தான்...
அதுவரை இருந்த அழுத்தம் இப்போது மொத்தமாக குறைந்து இருந்தது...
அதுவும் தனஞ்செயன் குசும்பு பிடித்தவன், சிரித்து கலாய்த்து தள்ளி விடுவான்.
அவன் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது, அதனால் தான் என்னவோ, சிவாங்கிக்கு அவன் மீது ஒரு ஈர்ப்பு இயல்பாகவே தோன்ற ஆரம்பித்து இருந்தது...
முதல் எல்லாம், "தனா அண்ணா" என்று அழைப்பவள், இப்போது, "அண்ணா" என்று அழைக்க முடியாது என்பதாலேயே அவனை பெயரை சொல்லி அழைப்பதை நிறுத்தி கொண்டாள்.
அவனுக்கு யுகேந்திரனின் தங்கை சிவாங்கி என்பதை தாண்டி எந்த உணர்வும் இல்லை...
இப்படியே கல கலப்பாக வண்டியை ஓட்டி வந்த யுகேந்திரன், கார்த்திகேயன் மற்றும் தனஞ்செயனை அவரவர் வீட்டில் விட்ட பின்னர், தனது வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
அவர்கள் நிலை இப்படி என்றால் ஆராதனாவின் வீடு மயான அமைதியாக இருந்தது...
பூனைக்கு மணி கட்டுவது யார் என்கின்ற ரீதியில் ஆராதனாவின் அறைக்குள் செல்ல பயந்து கொண்டே நின்று இருந்தார்கள் எல்லாரும்...
தர்ஷனா உடை மாற்ற கூட அறைக்குள் செல்லவில்லை.
இருவரும் ஒரே அறை தானே...
"அம்மா, நீங்க போய் ஃபெர்ஸ்ட் ஆஹ் பேசுங்க" என்றாள் தர்ஷனா.
"சும்மா போடி, உன் அக்கா தானே, நீயே போய் பேசு" என்று அவர் நழுவ, "அப்பா நீங்களாச்சும்" என்று வடிவேலை பார்த்து தர்ஷனா கேட்க, "எனக்கு தூக்கமா வருது" என்றபடி அவரும் அறைக்குள் நழுவி விட்டார்...
தர்ஷனாவுக்கு ஒரு பக்கம் பயம் இருந்தாலும், அவளை ஒதுக்கி வைத்த குற்ற உணர்வும் இருந்தது...
தயங்கி தயங்கி கதவை திறந்து கொண்டே உள்ளே செல்ல, அப்போது தான் குளித்து விட்டு வந்த ஆராதனாவோ எதுவும் பேசாமல், தர்ஷனாவை ஒரு கணம் அழுத்தமாக பார்த்து விட்டு, கண்ணாடி முன்னே சென்று முகத்துக்கு க்ரீம் போட ஆரம்பித்து விட்டாள்.
கொலை வெறியில் இருக்கின்றாள் என்று தெரிந்தது...
ஆராதனா தான் முறைக்கு மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும்...
ஆனால் இங்கே பயந்து கொண்டே இருந்தது என்னவோ தர்ஷனா தான்...
தயங்கி தயங்கி, அவள் பின்னே வந்து நின்றவள், "ஆரா" என்றாள்.
அவள் பதில் சொல்லாமல் க்ரீமை போட்டுக் கொண்டே இருக்க, "சாரிடி" என்றாள்.
மன்னிப்பு கேட்க வேண்டியவளை விட்டு இவள் கேட்டுக் கொண்டு இருந்தாள்...
கண்ணாடியூடு ஆராதனா முறைத்து பார்த்து விட்டு க்ரீமை போட, "உன்னை கூப்பிட பயமா இருந்திச்சு" என்று அவள் தோளில் தர்ஷனா கையை வைக்க, அதனை தட்டி விட்டபடி எரிச்சலுடன் அவளை நோக்கி திரும்பியவள், "உனக்கு என்ன விட அவன் தான் முக்கியம் ல, காலைல இருந்து கால் வலிக்க உனக்கு எல்லாம் பண்ணுனேன் டி, ஆனா அவன் வந்தா தான் கேக் வெட்டுவேன்னு சொல்ற, அவன் இல்லாம உன்னால கேக் வெட்ட முடியாது, ஆனா நான் இல்லாம பேர்த் கொண்டாடி முடிச்சிட்ட தானே... சரியான சுயநலவாதி நீ" என்று சொல்ல, தர்ஷனாவுக்கு கண்ணீர் பொங்கிக் கொண்டே வந்தது...
"அப்படி எல்லாம் இல்ல ஆரா, நீயும் பண்ணுனது தப்பு தானே" என்றாள்.
"என்னடி தப்பு? என்ன தப்பு?" என்று ஆராதனா எகிறிக் கொண்டே செல்ல, பயந்து கொண்டே பின்னால் சென்றாள் தர்ஷனா...
அழுகை ஒரு பக்கம், எப்படி ஆராதனாவின் கோபத்தை சமாளிப்பது என்றும் புரியவில்லை...
"சாரி ஆரா, நான் என்ன பண்ணுறது?" என்று கேட்க, அவளை முறைத்து விட்டு, விறு விறுவென சென்று கட்டிலில் அமர்ந்து அவளை ஏறிட்டு பார்த்தவள், "அவனை லவ் பண்ணுறியா என்ன?" என்று கேட்டாள்.
"என்ன ஆரா இப்படி எல்லாம் பேசுற?" என்று தர்ஷனா தடுமாற, "அப்புறம் எதுக்கு அவன் உனக்கு லேப்டாப் தந்தான்?" என்று கேட்டாள்.
"அத மாமா கிட்ட தான் கேக்கணும்" என்று சொன்னவளை முறைத்து விட்டு, "குளிச்சிட்டு வந்து படு, செம கோபமா இருக்கேன், தூங்கி எழுந்தா ஓகே ஆயிடுவேன்" என்று சொல்லி விட்டு அவள் படுத்துக் கொள்ள, தர்ஷனா பெருமூச்சுடன் டவலை எடுத்துக் கொண்டே குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு வந்தவள், ஆராதனா அருகே படுத்துக் கொண்டே, அவளை பின்னால் இருந்து தர்ஷனாஅணைத்துக் கொள்ள, "இப்படி கட்டி பிடிக்க மட்டும் நான் வேணும், மிச்ச எதுக்கும் நான் வேணாம் ல?" என்று கேட்டாள் ஆராதனா...
கேட்கும் போதே அவளுக்கு அழுகை வந்தது...
அகங்காரம், கோபம், ஆணவம் என்று எல்லாவற்றுடனும் சேர்த்து, பாசமும் நிறையவே இருந்தது அவளுக்கு...
"அப்படி எல்லாம் இல்ல ஆரா" என்று தர்ஷனா சொல்ல, "பேசாதடி, கோபமா வருது" என்றாள் ஆராதனா...
உடனே தர்ஷனா சட்டென அவளை சுற்றி இருந்த கையை விலக்க, அவளது கையை இழுத்து, மீண்டும் தன்னை அணைக்க வைத்தவள், "கட்டி பிடிச்சுக்கோ, நானும் சாரி, உன் கேக்கை அப்படி பண்ணி இருக்க கூடாது..." என்று சொல்லிக் கொண்டே படுக்க, இப்போது மென் சிரிப்புடன், அவளை இறுக அணைத்துக் கொண்டே தூங்கிப் போனாள் தர்ஷனா...
இப்படி தான் எபோதாதாவது சண்டை போடுவார்கள்.
தர்ஷனா போட மாட்டாள், ஆராதனா தான் ஏதாவது ஒரு விஷயத்துக்கு எரிந்து விழுவாள்.
எல்லாம் முடிய சரியாகி விடுவாள்...
அடுத்த நாள் எதுவும் நடக்காத போலவே நாள் நகரும்...
தர்ஷனாவும் ஆராதனா பேசுவதை எல்லாம் தலைக்குள் எடுத்துக் கொள்வதில்லை என்பதால் என்னவோ அவர்கள் உறவு அழகாக தான் நகர்ந்து கொண்டு இருக்கும்...
அடுத்த நாள் காலையில் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்த ஆராதனா மற்றும் தர்ஷனாவை பார்த்து விட்டு சமயலறைக்குள் நுழைந்த வடிவேலா, "நேத்து இவங்க தான் அடிச்சுக்கிட்டாங்களா?" என்று கேட்க, தேவி சிரித்துக் கொண்டே, "எப்போவும் அப்படி தானேங்க" என்று சொல்லி அவருக்கு காஃபியை கொடுத்து விட்டு, ஹாலுக்குள் சென்று ஆராதனா மற்றும் தர்ஷனாவிடம் காஃபியை நீட்டியவர், "ஆரா, வீட்டு வேலை கொஞ்சம் செய் டி, புகுந்த வீட்ல இப்படியே இருந்து என் மானத்தை வாங்கிடாதே" என்று வாயை விட்டு விட்டார்.
தர்ஷனாவோ, "அம்மா, ஏன் மா? இனி உங்கள யாராலயும் காப்பாத்த முடியாது" என்று கிண்டலாக சொல்லி விட்டு அறைக்குள் நுழைய, 'அவசரப்பட்டு வாயை விட்டுட்டோம் போல' என்று தேவி நினைத்து முடிக்க முதலே, "ஓஹோ, அப்போ உங்க மானம் நான் வீட்டு வேலை செய்யுறதுல தான் தங்கி இருக்கா?" என்று ஆரம்பித்தாள் ஆராதனா.
"அப்படி இல்லம்மா, இதெல்லாம் பொண்ணுன்னா பண்ண தானே வேணும்" என்று அவர் சொல்ல, "நேத்து இதெல்லாம் யார் பண்ணுனா?" என்று அடுத்த கேள்வி அவளிடம் இருந்து...
"ஏதாவது விசேஷம்னா பண்ணுற, தினமும் யார் பண்ணுறது?" என்று கேட்க, "ஏன் புகுந்த வீட்ல ஒருத்தன் புருஷன் னு இருப்பான் ல, அவன் பண்ணட்டும்" என்றபடி காஃபியை குடிக்க, "இது ஒன்னும் வெளிநாடு இல்ல" என்று தேவி சொன்னார்.
அவளோ தேவியை பார்த்து விட்டு அங்கே அமர்ந்து இருந்த வடிவேலை பார்த்துக் கொண்டே, "இந்த ஆம்பிளைங்களை ட்ரெயின் பண்ணனும் அம்மா, அந்த கைங்கரியம் உங்களுக்கு இல்லை, அது உங்க தப்பு, அப்பா ஹெல்ப் பண்ணலேன்னா நீங்க சாப்பாடு கட் பண்ணி இருக்கனும், நாலு நாளுல அவரே வந்து ஹெல்ப் பண்ணி இருப்பார், இங்க பொண்ணுங்க தான் சமைக்கணும், வேலை பார்க்கணும்னு எந்த அவசியமும் இல்லை... ஆம்பிளைங்க வேலை பார்த்தா அவங்க கைரேகை ஒன்னும் தேய்ஞ்சிடாது... இன்ஃபேக்ட் அவங்க ஃபிசிக்கலி நம்மள விட ஸ்ட்ராங், எல்லா வேலையும் தனியாவே பார்க்கலாம், இந்த பொண்ணுங்க அடங்கி போறதால தான், வீக் பெர்ஸனாலிடின்னு அந்த காலத்துல இருந்தே பொண்ணுங்கள அடக்கி அடிமையா வச்சு இருக்காங்க" என்று சொல்ல, வடிவேலோ, "அம்மா தேவி, அந்த காய் கறியை கொடும்மா, வெட்டி கொடுக்கிறேன்" என்று சொல்ல, ஆராதனா சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
தேவியோ, "தெரியாம பேசிட்டேன் மா, விடு, இதெல்லாம் நீ வக்கீல் ஆன அப்புறம் கோர்ட் ல பேசிக்கோ" என்று சொல்லி விட்டு செல்ல, அவளும் மென் சிரிப்புடன் காஃபியை குடித்து முடித்தவள், 'இன்னைக்கு சட்டர்டே, லைப்ரரிக்கு கிளம்புவோம்' என்று நினைத்தபடி குளித்து ஆயத்தமானாள்...
கிளம்பும் போதே, "அக்கா, இந்த நாவலை ரிட்டர்ன் பண்ணிடு" என்று தர்ஷனா நாவலை நீட்ட, அதனை வாங்கிய ஆராதனாவும், "சரிடி" என்று சொல்லிக் கொண்டு லைப்ரரிக்கும் வந்து விட்டாள்...
லைப்ரரியில் புத்தகத்தை புரட்டிக் கொண்டே திரும்பிய சமயம் தான் அவனில் மோதப் போனாள்.
சட்டென தடுமாறி அவனும் அவளும் சுதாரித்துக் கொண்டே, "சாரி" என்றார்கள் ஒரே நேரத்தில்...
அப்போது தான் அவனை பார்த்தாள்.
அவன் தான் நிரஞ்சன்...
பார்க்கவே ஈர்த்தெடுக்கும் தோற்றம் அவனுக்கு...
ஆறடி ஆண்மகன்...
கவர்ந்திழுக்கும் சிரிப்பு...
அதே சிரிப்புடன், "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேம்" என்றான்.
பேச்சில் ஒரு அமைதியும் வார்த்தைகளில் ஈர்ப்பும் இருந்தது...
ஏனோ பெண்ணவளுக்கும் அவனை பார்த்ததுமே பிடித்து விட்டது...
அவன் தோற்றமா? சிரித்த முகமா? ஈர்க்கும் பேச்சா? என்று தெரியவில்லை...
பெண்களை ஈர்த்தெடுக்கும் வித்தையை கற்றுக் கொண்டவன் அவன் போலும்...
இவளை ஈர்த்து இருந்தான்.
எல்லோரிடமும் எகிறி பாயும் பெண்ணவளோ, "தேங்க்ஸ்" என்றாள்.
அவள் கையில் இருந்த சட்ட புத்தகத்தை பார்த்துக் கொண்டே, "லா காலேஜ் ஆஹ் படிக்கிறீங்க?" என்று கேட்க, அவளும் ஆம் என்று தலையாட்டினாள்.
"வாவ், நானும் லாயர் தான் இப்போ என் அப்பா கிட்டயே ஜூனியர் ஆஹ் இருக்கேன்" என்றாள் கண்களை சிமிட்டி.
இப்போது மொத்தமாக விழுந்தே விட்டாள்.
அதுவும் அவனும் லாயர் என்று சொன்னதுமே அவள் விழிகளில் அப்படி ஒரு பூரிப்பு.
"நிஜமாவா? உங்க அப்பா பேர் என்ன?" என்று கேட்க, அவனோ, "கிரிமினல் லாயர் ஜெயராஜ்" என்றான்.
"வாவ், ஜெயராஜ் சாரோட பையனா நீங்க? அவர் எங்களுக்கு ஸ்பீச் கொடுக்க வந்திருக்கார்" என்று அவன் மீது மரியாதையும் சேர்ந்து கொண்டது...
பேசிக் கொண்டே நட்பை வளர்த்துக் கொண்டார்கள்.
அலைபேசி எண்ணையும் பரிமாற்றிக் கொண்டார்கள்...
பாடம் சம்பந்தமாக சந்தேகங்களை கேட்கின்றேன் என்று அவனிடம் இன்னுமே நெருங்கிக் கொண்டாள்.
அவர்கள் நட்பு வளர்ந்த சமயம், சிவாங்கி மற்றும் தர்ஷனா பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து இருந்தார்கள்.
இப்படி எல்லாருமே மும்முரமாக இருந்ததால் என்னவோ பெரிதாக ஆராதனாவின் இந்த நட்பை யாரும் உன்னிப்பாக கவனிக்கவில்லை...
அடுத்த அடுத்த வருடங்களில் அவர்களது நட்பு காதலாகவும் மாறியது...
இப்போதெல்லாம் அவனுடன் காரில் சேர்ந்து சுற்றவும் ஆரம்பித்து இருந்தாள்... படிப்பையும் முடித்து இருந்தாள்.
வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று அவள் தீர்மானிக்க வேண்டிய தருணம் அது...
நிரஞ்சனுக்கும் அவளுக்குமான உறவு அணைப்பு முத்தம் என்று மேலும் நெருங்கி இருந்தது...
இப்படியான ஒரு நாள் அவர்கள் வண்டி ட்ராஃபிக் சிக்னலில் நின்று இருக்க, அவர்கள் வண்டிக்கு அருகே தான் யுகேந்திரனின் வண்டியும் வந்து நின்றது...
எதார்த்தமாக திரும்பி பார்த்தவனின் புருவம் சுருங்கியது...
அங்கே நிரஞ்சனின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டு இருந்தது ஆராதனா...
சட்டென பார்வையை திருப்பிக் கொண்டவன், கண்களை மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டான்...
மீண்டும் அந்த காரின் சொந்தக்காரனான நிரஞ்சனை ஒரு கணம் அழுத்தமாக பார்த்து விட்டு, வண்டியை வேகமாக கிளப்பி இருந்தான்...
அவன் தலைக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக் கொண்டு இருந்தன...
நிரஞ்சனை அவனுக்கு நன்றாகவே தெரியும்... அவனுடன் ஸ்கூலில் படித்தவன் தான்...
பெரிதாக பழக்கம் இல்லை என்றாலும் தெரிந்த முகம் தான்...
ஏதோ சரி இல்லை என்று தோன்றியது...
அன்று அலுவலகம் வந்தவன், நேரே வந்தது என்னவோ தனஞ்செயனிடம் தான்.
அவனும், "வாடா" என்று அழைக்க, அவனுக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தவனோ, "டேய், நம்ம காலேஜ் படிக்கும் போது, நம்ம கூட படிச்ச பையன் திவாகரோட தங்கச்சி சூசைட் பண்ண போனா தானே" என்று ஆரம்பிக்க, "டேய் என்னாடா ரொம்ப பழைய கதை எல்லாம் கேக்கிற?" என்றான் தனஞ்செயன்.
"பச், சொல்லுடா" என்று கேட்க, "ஆமா, அவன் கூட ஒரு மாசம் காலேஜ் வராம நின்னான் ல?" என்று கேட்க, "ம்ம், அந்த பொண்ணுக்கு லவ் ஃபெயிலியர், ப்ரெக்னன்ட்ன்னு ஏதோ கதை வந்துச்சுல்ல?" என்று கேட்க, தனஞ்செயனோ, "டேய், அதெல்லாம் ரொம்ப சென்சிடிவ், அந்த பொண்ணு கல்யாணம் பண்ணி, புள்ள குட்டியோட இருக்கா, இப்போ போய் இதெல்லாம் பேசிட்டு இருக்க?" என்று கேட்க, "ஐ க்னோ, எனக்கு விஷயம் மட்டும் கொஞ்சம் தெளிவா சொல்றியா? மறந்திடுச்சு, திவா உன் ரூம் மேட் ஆஹ் தானே இருந்தான்?" என்றான்.
அவனுக்கு ஒரு விஷயத்தை எடுத்து பேச முதல், அதனை உறுதி படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது...
தனஞ்செயனும், "ம்ம், அந்த பொண்ணு, ஃபேமஸ் கிரிமினல் லாயர் ஜெயராஜ்ஜோட மகன் நிரஞ்சனை தான் லவ் பண்ணிட்டு இருந்தா... அதுவும் ஸ்கூல் படிச்சிட்டு இருந்த பொண்ணு... இந்த நாய் அவளை நாசம் பண்ணி, ப்ரெக்னன்ட் ஆகி, அப்புறம் அவங்க அப்பா காசை கொடுத்து சமாளிச்சு இருந்தார், அவரை மீறி எதுவும் பண்ணவும் முடியல, சோ அவங்க ஊரை விட்டே போய்ட்டாங்க, அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன், உன் கிட்ட கூட சொன்னேன் ல" என்று சொல்ல, "ம்ம், அது நிரஞ்சன் தானே" என்று மீண்டும் உறுதி படுத்திக் கொள்ள கேட்டான்.
"ம்ம் அவன் தான், நம்ம கூட ஸ்கூல் ல படிச்ச அதே நிரஞ்சன் தான்... அப்போவே பொண்ணுங்க கிட்ட ஒரு மாதிரி... ஆனா பாரேன் அவனோட இந்த விஷயம் கொஞ்சமும் கசியவே இல்லையே... அப்படியே மூடி மறைச்சாச்சு... இனி பேசுனா, அந்த பொண்ணு லைஃப்பும் போயிடும்" என்று சொல்ல, பெருமூச்சுடன், "ஓகே" என்றபடி எழுந்து கொண்டான்.
அவன் முகம் இறுகி இருப்பதை பார்த்த தனஞ்செயனோ, "ஏதும் இஸ்ஸு ஆஹ்?" என்று கேட்க, "நோ நோ நத்திங்" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்த யுகேந்திரனுக்கு தலை விண் விண்ணென்று வலித்தது...
இந்த ஆராதனாவை புத்திசாலி என்று அல்லவா நினைத்து இருந்தான். எங்கே கொண்டு விழுந்து இருக்கின்றாள்...
கோபம், ஆத்திரம் என்று என்னென்னவோ உணர்வுகள்...
அவன் வீட்டு பெண்ணவள், இப்படியே விட்டு விடவும் முடியாது, இந்த பொறுக்கியிடம் இருந்து மீட்டாக வேண்டும்...
எங்கே இருந்து ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை...
அவன் சொன்னால் அவள் கேட்கவும் மாட்டாள்.
அவனை கண்டாலே எரிந்து விழுவாள்...
அதுவும் கடைசியாக தர்ஷனாவின் பிறந்த நாளில் நடந்த பிரச்சனையின் பின்னர் அவளை சந்திப்பதையே குறைத்து இருந்தான்.
அவள் வாழ்க்கை அவள் பார்த்துக் கொள்ளட்டும் என்று எல்லாம் விட்டு விட முடியாது அல்லவா?
இது சின்ன விஷயமும் இல்லை...
பெண்கள் விஷயத்தில் நிரஞ்சன் எவ்வளவு கேவலமானவன் என்று தெரியும்...
திருமணம் முடித்தால் கூட அவனுடன் சந்தோஷமாக அவளால் வாழ்ந்து விட முடியுமா என்ன?
வாய்ப்பே இல்லை...
இந்த வாழ்க்கை அவளுக்கு வேண்டாம் என்று அவனே முடிவெடுத்துக் கொண்டான்.
என்ன தான் அவளுடன் எதுவும் சரியாக போவதில்லை என்றாலும் அவன் வீட்டு பெண்ணை அவன் தானே பாதுகாத்தாக வேண்டும்...
முதலில் அவளுடன் தான் பேச வேண்டும்...
இதனை வீட்டுக்கு கொண்டு சென்றால் பெரிய பூதாகரமான பிரச்சனையாகி விடும்...
அவளும் எகிறி பாய்ந்து பிரச்சனைக்கு வருவாள்...
நிதானமாக கையாள வேண்டும் என்று நினைத்தவன், அலைபேசியை எடுத்து, அவள் எண்ணை தேடி எடுத்தான்...
அவள் எண் அலைபேசியில் இருக்கும், ஆனால் ஒரு மெசஜ் ஒரு கால் என்று எதுவும் அவன் இதுவரை அனுப்பியது இல்லை...
இன்று ஒரு மேசேஜ் அனுப்பினான்.
"ஹாய், ஆரா, திஸ் இஸ் யுகேந்திரன்... உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... தனியா மீட் பண்ணலாமா?" என்று குறுஞ்செய்தியை தட்டி விட்டான்...
அவனிடமாவது அவள் அலைபேசி எண் இருந்தது...
அவளிடம் அவன் அலைபேசி எண் கூட இல்லை...
அவனது குறுஞ்செய்தியை யோசனையாக பார்த்துக் கொண்டே, 'இவன் எதுக்கு என்னை மீட் பண்ண கூப்பிடுறான்?' என்று முணுமுணுத்தபடி, "என்ன விஷயம்?" என்று பதில் அனுப்பினாள்...
"நேர்ல தான் பேசணும்" என்று அவனிடம் இருந்து பதில் வர, "ஐ டோன்ட் வாண்ட் டு மீட் யூ" என்று முகத்தில் அடித்த போல அவளிடம் இருந்து பதில் வந்தது...
அதனை பார்த்தவனுக்கு சுர்ரென்று ஆத்திரம் வந்தது...
ஆனால் அவனது கோபத்தை அலட்சியத்தில் காட்ட அவன் விரும்பவில்லை...
"ப்ளீஸ் இட்ஸ் அர்ஜன்ட்" என்று அனுப்பினான்.
அவன் இப்படி இறங்கி பேசுவது அவளுக்கு ஆச்சரியமாக இருக்க, 'அப்படி என்ன விஷயமா இருக்கும்? போய் தான் பாத்திடுவோம்' என்று நினைத்தபடி, "ஓகே, ஈவினிங் வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற காஃபி ஷாப் ல மீட் பண்ணலாம்" என்று பதில் அனுப்பி இருக்க, "தேங்க்ஸ்" என்று அனுப்பியவனுக்கு இப்போது தான் மூச்சே வந்தது...
சந்திக்க வைப்பதற்கே இந்த பாடு பட வேண்டி இருந்தது...
அவள் காதலை முறிக்க வைக்க, தலையால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்ற யோசனையும் அவனுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது...