மழை 23
வளைகாப்புக்கு அனைவர்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது...
நரேன் நேரிலேயே வந்து வசிஷ்டனிடமும்,பாரதியிடமும் சொல்லி விட்டுச் சென்றான்...
அவன் செல்லும் வரை பாரதியின் இதயம் படபடத்துக் கொண்டே இருந்தது...
ஆனால் அவள் எதிர்பார்த்த போல வசிஷ்டன் நரேனுடன் இறுக்கமாக இருக்கவில்லை...
அதே நேரம் சிரித்து சிரித்தும் பேசவில்லை...
வெகு இயல்பாக சாதாரணமாக இருந்தான்.
நரேன் சென்றதுமே அறைக்குள் வந்த வசிஷ்டனிடம், "அதிசயமா இருக்கு" என்றாள் பாரதி...
"என்ன அதிசயம் கண்ட?" என்று வசிஷ்டன் கேட்டுக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் போனுடன் அமர, "அண்ணா கூட சாதாரணமா பேசுறீங்க" என்று நமட்டு சிரிப்புடன் கேட்டாள்.
"சண்டை போடணும்னு ஆசைப்படுறியா?" என்று வசிஷ்டன் கேட்க, "ச்ச ச்ச சும்மா கேட்டேன்" என்றாள் அவள்...
"ம்ம்" என்ற பதிலுடன் முடித்துக் கொண்டான் அவன்.
இப்படியே நாட்கள் நகர, வசுந்தராவின் வளைகாப்பு நாளும் வந்து சேர்ந்தது...
வளைகாப்பு நிகழ்வுக்கு செல்லும் பொருட்டு, குளித்து விட்டு வந்த வசிஷ்டனின் கையில் புடவையின் முனையை திணித்தாள் பாரதி...
அவனோ அவளை புரியாமல் பார்க்க, "எனக்கு புடவை கட்ட தெரியாது. அம்மா தான் கட்டி விடுவாங்க" என்றாள்...
"இப்போ என்ன கட்டி விட சொல்றியா?? எனக்கும் தெரியாது" என்றான்.
"ஹெலோ ஹெல்ப் பண்ண சொன்னேன்" என்று அவள் சொல்ல அவனோ அவளை முறைத்து பார்த்தான்...
அவன் கையை பிடித்து உயர்த்தி விட்டவள், "வாத்தியார் கை சாக் பீஸை தான் பிடிக்கணும்னு இல்லை... பொண்டாட்டி புடவையையும் பிடிக்கலாம் தப்பில்ல" என்றபடி புடவைக்கு ப்ளீட்ஸ் எடுக்க ஆரம்பித்து விட்டாள்...
அதற்கும் அவனிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது...
அவள் புடவை கட்ட ஆரம்பிக்க அவனோ புடவையை தூக்கிக் கொண்டே எங்கோ பார்த்தபடி நின்றான். அவன் நின்ற தோரணை அவளுக்கு சிரிப்பாக இருந்தது...
எப்படிப்பட்டவன் அவன்... அவனையே முந்தானையை பிடிக்க வைத்து விட்டாள் அல்லவா அவள்...
"ரொம்ப கண்ணியமானவரோ? என்னை பார்த்து பேச மாடீங்களோ?" என்று கேட்டாள் அதற்கும் பதில் இல்லை...
"என்ன தான் விறைப்பா இருந்தாலும் கடைசில பொண்டாட்டி முந்தானையை புடிச்சு தான் ஆகணும்" என்றாள்...
இப்போது அவளை சட்டென திரும்பி பார்த்தவன், "டபிள் மீனிங் ல கலாய்க்கிறியாடி" என்றான்.
"இல்லையே எல்லாம் சிங்கிள் மீனிங் தான்" என்றாள் கண்களை சிமிட்டி...
புடவையை உடுத்தி முடிந்ததுமே நகர போனவனின் கையை பிடித்தவள், "குனிய முடியல... இந்த பிளீட்சை சரி பண்ணி விடுங்க" என்றாள்...
அவளை முறைத்துக் கொண்டே மண்டியிட்டான்...
"நெஞ்சை நிமிர்த்திட்டு போனாலும் கடைசில" என்று ஆரம்பிக்க, அவள் புடவையை சரி செய்தபடி அவளை ஏறிட்டு பார்த்தான் அவன்... கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்...
"பொண்டாட்டி முன்னாடி மண்டியிடணும் அதானே" என்று கேட்டுக் கொண்டே புடவையை சரி செய்ய, அவளோ, "நான் ஒண்ணும் சொல்லலப்பா" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்...
அவளை பார்த்துக் கொண்டே எழுந்தவன், "ரொம்ப தான் பேசுற" என்று சொல்ல, அவளோ, "பழகிடுச்சு" என்றாள் கண்களை சிமிட்டி...
அவனோ மேலும் பேசாமல் வேட்டி சட்டை அணிந்து ஆயத்தமானான்...
"ப்பா" என்றாள்.
"என்ன?" என்று கேட்டுக் கொண்டே ஷேர்ட்டின் பட்டன்களை போட, "வேஷ்டில செமயா இருக்கீங்க" என்று சொன்னாள் அவனை ரசனையாக பார்த்தபடி...
அவன் நன்றி கூட சொல்லவில்லை...
வாட்ச்சை எடுத்து கையில் கட்டினான்.
"ஒரு தேங்க்ஸ் இல்லையா?" என்று கேட்க, அவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே, "தேங்க்ஸ்" என்றான் கடமைக்கு...
"இதுக்கு சொல்லாமலே இருந்து இருக்கலாம்" என்று இதழ்களை சுளித்துக் கொண்டே சொன்னவளோ, "நான் எப்படி இருக்கேன்?" என்று கேட்டாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "ம்ம்... குட்" என்றான்...
அவளோ அவனை முறைத்து விட்டு, "உங்க கிட்ட கேட்டது என் தப்பு தான்" என்று சொல்லிக் கொண்டே அவனுடன் புறப்பட்டாள்...
அவனும் பாரதியும் ஒரு வண்டியில் வர, கோமளாவும், ராஜசேகரனும் இன்னொரு வண்டியில் வந்தார்கள்...
போகும் வழியில், "ஒரே கார்ல போய் இருக்கலாம்ல" என்று பாரதி கேட்க, "ஒவ்வொருத்தங்களுக்கும் பிரைவசி இருக்குல்ல" என்றான் வசிஷ்டன்...
'க்கும்... நல்ல குடும்பம்' என்று மனதுக்குள் திட்டிய பாரதிக்கு வீடு நெருங்க நெருங்க முகத்தில் அப்படி ஒரு பரவசம்...
அது வசிஷ்டனின் கண்ணில் இருந்தும் தப்பவில்லை...
வீடு வந்ததுமே, வசிஷ்டனை கவனிக்காமல் முதலில் இறங்கி உள்ளே ஓடி விட்டாள்.
அவனோ பெருமூச்சுடன் காரில் இருந்து இறங்க, லக்ஷ்மி தான் வாசலில் நின்று, "வாங்க மாப்பிள்ளை" என்று அழைக்க, ஒரு தலையசைப்புடன் உள்ளே நுழைந்துக் கொண்டான்...
நரேனும் அவனுக்கு கையை குலுக்கி வரவேற்க, அவனும் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்...
இப்படியே அனைவரும் வந்து சேர்ந்ததும் நிகழ்வும் ஆரம்பானது...
பாரதி வசிஷ்டன் அருகே இருக்க கூட இல்லை...
உறவினர்கள், நண்பர்கள் என்று அங்கே இருப்பவர்கள் மத்தியில் அமர்ந்து கல கலவென பேச ஆரம்பித்து விட்டாள்.
வசிஷ்டன் நாடியை நீவியவாறு அவள் சிரிப்பு, தொடக்கம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தான்...
நிகழ்வு ஆரம்பமானதுமே வசுந்தரா மேடிட்ட வயிற்றுடன் வந்து அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தாள்.
நரேன் அவள் கன்னத்தில் சந்தனம் பூசி, நிகழ்வை ஆரம்பித்து வைத்தான்...
வசுந்தரா இதழ்களில் அப்படி ஒரு புன்னகை...
அது வசிஷ்டனுக்கே ஆச்சரியம் தான்...
அவளுக்கு இப்படி மனம் விட்டு சிரிக்க தெரியும் என்று அவனுக்கு அன்று தான் தெரியும்...
நிகழ்வுகள் நடந்துக் கொண்டு இருந்த போது, வசிஷ்டனின் போன் அலறியது...
எடுத்தது என்னவோ பாரதி தான்...
அவனோ பாரதியை தேடிக் கொண்டே போனை காதில் வைக்க, "பால்கனி பக்கம் கொஞ்சம் வர்றீங்களா?" என்று கேட்டாள்.
அவனும், "ம்ம்" என்று சொன்னவன் போனை பாக்கெட்டில் வைத்து விட்டு அவளை தேடிச் சென்றான்...
அவனுக்காக அவள் காத்துக் கொண்டு நின்று இருக்க, அவனும் "என்னடி?" என்று அவள் அருகே வந்து நின்றபடி கேட்டான்...
"எனக்கும் சேர்த்து இங்கயே வளைகாப்பு வைக்க அம்மா ஆசைப்படுறாங்க... ஆனா நீங்க தனியா செய்வீங்களோன்னு ஒரு சந்தேகம் அவங்களுக்கு... ஆனா நீங்க தான் கஞ்சூஸ் ஆச்சே... அது அவங்களுக்கு தெரியாதுல்ல" என்று சொல்ல, அவளை முறைத்துப் பார்த்தான்...
"சாரி சாரி" என்றாள் அவள்...
"உனக்கு செய்ய மாட்டேன்னு நீ நினைக்கிறியா?" என்று கேட்டான்...
"நூறு ரூபாய்க்கே கணக்கு கேக்குற ஆள் நீங்க... இவ்ளோ செலவு பண்ணுவீங்களா?" என்று கேட்டாள்.
சுர்ரென்று அவனுக்கு கோபம் வந்தது. அடக்கிக் கொண்டே, "பண்ணுவேன்" என்றான் அழுத்தமாக...
அவளோ திரு திருவென விழித்துக் கொண்டே, "எதுக்கு அநாவசிய செலவு?" என்றாள்.
அவனோ, "உனக்கு வளைகாப்பு இங்க செய்ய ஆசைன்னா நேரடியா சொல்லு" என்றான்...
அவளோ தயக்கமாக, "எனக்கு இங்க செய்ய தான் பிடிச்சு இருக்கு... கல கலன்னு இருக்குல்ல" என்றாள்.
பெருமூச்சுடன், "ம்ம்... ஓகே" என்று சொல்லிக் கொண்டே புறப்பட ஆயத்தமாக, அவன் கையை பிடித்தவள், "கோபம் இல்லையே" என்றாள்.
"நோ" என்றான் ஒற்றை வரியில்...
"நான் நம்பமாட்டேன்" என்றாள்.
"சரியான இம்சை நீ" என்றான் கடுப்பாக...
அவளோ, "பார்த்தீங்களா? உங்களுக்கு என் மேல கோபம்... அதான் இப்படி பேசுறீங்க" என்றாள்.
அவனோ நெற்றியை நீவிக் கொண்டே, "கோபமில்லை... சொன்னா கேளு" என்றவனிடம், "அப்போ ஒரு கிஸ்" என்றாள் கண்களை சிமிட்டி...
சுற்றும் முற்றும் பார்த்தவன், "இங்கேயா?" என்று அதிர்ந்து கேட்க, "யாரும் இல்லை, யாரும் வர மாட்டாங்க, தைரியமா பண்ணலாம்" என்றாள்.
"என்னால முடியாது" என்றவனிடம், "அப்போ என் மேல கோபம் தானே" என்றாள் அவள் மீண்டும்... எரிச்சலாகி விட்டது அவனுக்கு...
"யாரும் வந்தா என்ன பண்ணுறது?" என்று கேட்க, அவளோ, "கன்னத்துல தானே..." என்றபடி கன்னத்தை அவனிடம் காட்டினாள்.
அவனோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் அவள் இதழ்களில் இதழ் பதித்து இருந்தான்...
இதனை எதிர்பாராதவள் விழிகள் விரிந்துக் கொள்ள, அவளோ வேகமாக அவன் மார்பில் கையை வைத்து தள்ளினாள்...
வழமையாக இதழ் அணைப்பில் மயங்கி இருப்பவள், இன்று தள்ளுவது அவனுக்கு விசித்திரமாக இருக்க, சட்டென விலகிக் கொண்டே, "என்னடி?" என்றான்...
"கன்னத்துல தானே கொடுக்க சொன்னேன்... இப்போ எதுக்கு இங்க கிஸ் பண்ணுனீங்க?" என்று எகிறினாள்.
அவனுக்கு புதிதாக இருந்தது...
"இப்போ என்னாச்சு? எதுக்கு இப்படி குதிக்கிற?" என்று கேட்டு முடிக்கவில்லை...
"அக்கா நான் ஒண்ணும் பார்க்கல... ஆனா நீங்க சொன்ன போல போட்டோ எடுத்துட்டேன்" என்றபடி காலேஜ் படிக்கும் வயதுடைய பெண் ஒரு கையால் கண்களை மூடிக் கொண்டே போனை கொண்டு வந்து நீட்ட, "ஷீட்" என்றபடி வசிஷ்டன் மறுபக்கம் திரும்பிக் கொண்டான்...
அவளிடம் போனை வாங்கிய பாரதியோ, "போடி" என்று அவளை துரத்த, அந்த பெண்ணும் சிரித்தபடி ஓடிச் சென்று விட்டாள்.
அவள் சென்றதுமே பாரதியை முறைத்துப் பார்த்த வசிஷ்டன், "என்னடி பண்ணி வச்சு இருக்க?" என்று பற்களை கடித்துக் கொண்டே கோபமாக கேட்டான்...
அவளோ, "நீங்க எனக்கு கிஸ் பண்ணுற போல ஒரு போட்டோ கூட இல்லை... கூப்பிட்டாலும் வர மாட்டீங்க... அது தான் இப்படி ஒரு பிளான் பண்ணுனேன்... ஆனா நீங்க" என்று சிணுங்க, "பண்ணுறதெல்லாம் நீ பண்ணிட்டு என் மேலயே பழி போடுறியா?" என்று அவன் மாறி எகிறிய நேரம், "பாரதி" என்று அழைத்தார் லக்ஷ்மி.
"வரேன்மா" என்றவள் அவனை பார்த்து விட்டுச் செல்ல, அவனோ அவளை தான் வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்று இருந்தவனுக்கு சபை நடுவே செல்ல கூச்சமாக இருந்தது...
அனைத்திலும் கண்ணியம் கட்டுப்பாடு, நேர்த்தி என்று இருப்பவன்...
அவனால் இந்த விஷயத்தை ஜீரணித்து கடந்து போக முடியவே இல்லை...
சங்கடத்துடன் நிறைய நேரம் அப்படியே பால்கனியின் கம்பியை பிடித்துக் கொண்டே நின்றவனோ, "இடியட்" என்று பாரதிக்கு திட்டிக் கொண்டான்.
அந்த நேரம் பார்த்து, "வசி" என்று வசுந்தரா அழைக்க, அவனோ பெருமூச்சுடன் வேறு வழி இல்லாமல் தயங்கி தயங்கி தான் சபைக்குள் நுழைந்தான்...
யார் சிரித்தாலும் அவனுக்கு தன்னை பார்த்து சிரிப்பது போலவே ஒரு மாயை...
இறுக்கமாகவே முகத்தை வைத்துக் கொண்டே வர, அங்கே போட்டோ எடுத்த பெண்ணும் அவள் தோழிகளும் ரகசியம் பேசி சிரித்துக் கொண்டார்கள்...
அவனுக்கு அப்பட்டமாக தெரிந்தது தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று...
அவர்கள் பக்கம் மறந்தும் திரும்பவே இல்லை...
பாரதி இப்போது வளைகாப்புக்காக நாற்காலியில் அமர்ந்து இருந்தாள்.
"வசி" என்று நரேன் கையை காட்டி சடங்கை ஆரம்பிக்கச் சொல்ல, அவனும் அவள் அருகே வந்தவன் அவளை முறைத்துக் கொண்டே அவள் கன்னத்தில் சந்தனத்தை பூச, "கொஞ்சம் சிரிச்சா தான் என்னவாம்" என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்...
அதற்கும் ஒரு முறைப்பு தான் அவனிடம் இருந்து…
அவன் வளையலை அவள் கையில் போட்ட நேரம், அவளோ சந்தனத்தை எடுத்து அவன் கன்னத்தில் யாரும் எதிர்பார்க்காத நேரம் பூசி இருக்க, அங்கே இருந்தவர்கள் சிரித்து விட்டார்கள்...
நரேனோ, 'ரொம்ப தான் தைரியம் இவளுக்கு' என்று நினைத்துக் கொண்டே சிரித்தான்...
அவளை விழி விரித்து வசிஷ்டன் பார்க்க, அவளோ கண்களை சிமிட்டி சிரித்துக் கொண்டாள்.
"படுத்துறா" என்று முணுமுணுத்துக் கொண்டே அவள் கையில் காப்பை அணிவித்தவன் முன்னே நரேன் டிஸ்ஸுவை நீட்ட, அதனை வாங்கி கன்னத்தை துடைத்துக் கொண்டே அவளை அழுத்தமாக பார்த்தான்... அவளோ சிரித்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
அவனை தொடர்ந்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவேற, புறப்படும் நேரமும் வந்தது...
பாரதிக்கோ கிளம்புவதற்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை...
வசிஷ்டனிடம் கேட்கவும் தயக்கம்...
தயங்கி தயங்கி அவனிடம் வந்தவள், "கொஞ்சம் பேசணும், பால்கனிக்கு வர்றீங்களா?" என்று கேட்டாள்.
"மறுபடியுமா?" என்று அவன் அதிர்ந்து கேட்க, அவளோ, "ஐயோ அதுக்கு இல்லை" என்றாள்.
"இங்கயே சொல்லு" என்றான்... சுற்றி பார்த்து விட்டு, "இன்னைக்கு இங்கயே நிற்கட்டுமா?" என்று கேட்டாள்.
அவன் முகம் எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை...
"உன் விருப்பம்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்...
ஆனால் அவன் பிடித்தமின்மை அவனது நடவடிக்கையில் அப்பட்டமாக தெரிந்தது...
அவளை தடுக்க அவனுக்கு விருப்பமில்லை...
ஆனாலும் அவளை அணைக்காமல் அவனால் தூங்கவும் முடியாது...
"என் கூட வந்திடு" என்று சொல்ல மனம் விரும்பினாலும் வாய் விட்டு சொல்ல அவன் ஈகோ தடுக்க, அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு ஏனையோரிடம் தலையசைத்தவன் காரில் ஏறி விட்டான்...
கோமளாவும், ராஜசேகரனும் வந்த கார் புறப்பட்டு இருக்க, வாசலில் நின்று அவன் காரையே பார்த்துக் கொண்டு நின்ற பாரதி என்ன நினைத்தாளோ தெரியவில்லை, "அண்ணா நான் கிளம்புறேன்" என்று சொன்னவள் அவசரமாக சென்று காரில் ஏற நரேனோ சத்தமாக சிரித்து விட்டான்.
பக்கத்தில் நின்ற வசுந்தராவோ, அவனுக்கு கிள்ளியவள், "சும்மா இருடா" என்று சிரித்தபடி தான் சொல்லிக் கொண்டாள்.
காரில் ஏறி அமர்ந்தவளை விசித்திரமாக பார்த்த வசிஷ்டனோ, "நிற்கலையா நீ?" என்று கேட்க, அவளோ, "நீங்க பாவம்னு வந்தேன்" என்றாள்.
"நான் என்ன பாவம்?" என்று அவன் கேட்டான்.
"நீங்க சொல்லலன்னாலும் உங்க மூஞ்சு சொல்லுது" என்றாள்.
"என்ன சொல்லுது?" என்று அவன் கேட்டுக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்ய, "என்னை வீட்டுக்கு வர சொல்லுது" என்றாள்.
"அப்படி எல்லாம் இல்லையே... நீ கிளம்பு... நீ வந்தா என்ன வரலைன்னா எனக்கு என்ன?" என்று கேட்க, அவனை முறைத்தவள், "அப்போ நான் கிளம்புறேன்" என்று கார் கதவை திறக்க கையை வைக்க, அவள் கையை எட்டி பிடித்தவன், "ஒண்ணும் தேவல... சீட் பெல்ட்டை போடு" என்று சொல்லிக் கொண்டே காரை கிளப்ப, அவளோ அடக்கப்பட்ட சிரிப்புடன் சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டாள்.
அவன் மௌனமாகவே கார் ஓட்டிக் கொண்டு வர, கையில் இருந்த போனை எடுத்து சற்று முன்னர் எடுத்த புகைப்படத்தை பார்த்த பாரதியோ, "ப்பா, என்ன ஒரு லிப்லாக்" என்று சொல்ல, அவளை திரும்பி முறைத்துப் பார்த்தான் வசிஷ்டன்...
"நிஜமா தான் சொல்றேன்" என்றபடி போனில் இருந்த புகைப்படத்தை அவனை நோக்கி காட்டினாள். கடுப்பாகி போனை ஒற்றைக் கையால் பறிக்க, அவளோ, "அழிச்சுடாதீங்க" என்றாள் பதட்டமாக...
அவளை முறைத்துக் கொண்டே போனை அவனது ஷேர்ட் பாக்கெட்டில் வைத்தவன், "என்னை ரொம்ப சங்கடப்படுதுற" என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்ட அவளோ சத்தமாக சிரித்துக் கொண்டாள்...