பிரம்மா 9
ராஜ்ஜோ உடைகளை அவனது அலுமாரிக்குள் வைத்து விட்டு, அந்த கதவில் இருந்த சாவியை திருக, எலெக்ட்ரிக் கார்ட்டை உள்ளே வைக்கும்படி கேட்டு இருந்தது. ராஜ்ஜும் "எப்படி?" என்கின்ற ரீதியில் காயத்ரியை பெருமிதமாக பார்த்தவன் கார்ட்டை வைத்து விட, உள்ளே கார்ட் இழுத்தெடுக்கப்பட கதவோ திறந்து கொண்டது. அப்போதும் கூட காயத்ரி "எனக்கு என்னவோ தப்பா இருக்கிற போல தோணுது ராஜ், இவ்ளோ ஈஸி அக்சஸ் வைக்கிற ஆள் இல்ல அவன்" என்று சொல்ல, ராஜ்ஜோ "எல்லாத்துக்குமே பயப்படாம சும்மா இரு" என்றவன் "நீயும் வா" என்று அழைத்தான். அவளோ "இல்ல நான் வரல நீ வேணும்னா போ" என்று சொல்ல, அவனும் "போடி" என்று திட்டி விட்டு உள்ளே நுழைந்த அடுத்த கணம் கதவு சட்டென்று மூடிக் கொண்டது. உள்ளே நுழைந்த ராஜ் அங்கிருந்த அமைப்புகளைப் பார்த்து அதிர்ந்து தான் போனான். ஒரு நிற்கக் கூடியளவு ஆளுயர கண்ணாடிப் பெட்டிகளும் நிறைய வைத்திய உபகரணங்களும் இருக்க, அவனுக்கோ திடீரென மூச்செடுக்க முடியாமல் போனது. ஆம் அந்த அறைக்குள் எந்த வித ஆக்சிஜன் சப்லயும் வழங்கப்பட வில்லை. நுண்ணங்கிகள் கூட உயிர்வாழ முடியாத அந்த காற்றோட்டம் இல்லாத அறையில் அவனால் எங்கனம் இருக்க முடியும்? ஓடிச் சென்று கதவை திறக்க முற்பட்டால் கதவு மூடி இருந்தது. மேலும் அதை திறக்க அவனிடம் கரு விழி அடையாளம் கேட்க, சித்தார்த்தின் கரு விழிகளுக்கு மட்டும் திறக்கப்படும் அந்த கதவு அவன் கருவிழிகளை ஸ்கான் பண்ணி விட்டு "access denied" என்று சொன்னது. அவனுக்கோ தான் இப்படியே இருந்தால் இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவோம் என்று உணர்ந்து கதவை வேகமாக தட்ட, வெளியே இருந்த காயத்திரியும் பதறி போனாள். அவளும் "ராஜ் என்ன ஆச்சு? கதவை திறந்து வாடா" என்று சத்தமாக கத்தி கதவை திறக்க முற்பட்ட போதிலும் கதவை திறக்கவே முடியவில்லை அவளால். ராஜ்ஜோ அருகே இருந்த ஆக்சிஜன் சப்ளை என்னும் உபகரணத்தை ஆன் பண்ண எத்தனிக்க அதுவோ கை விரல் அடையாளம் கேட்டது. அதுவும் சித்தார்த்தின் கை விரல் அடையாளம் தான். அவனுக்கோ அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் போக சட்டென சுருண்டு விழுந்து இருந்தான்.
அதே சமயம், வெளியே நின்று இருந்த காயத்ரியோ ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அறிந்து ஓடி வெளியே சென்று அங்கிருந்த சி சி டி வி முன்னால் நின்று "சார் சார், ராஜ் அந்த மெட்டல் ரூம்ல மாட்டிகிட்டான்" என்று நண்பனுக்காக பேசிய போது அவளையும் மீறி அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. ராஜ் ஆக்ரோஷமாக தட்டிய பிறகு தான் எந்த சத்தமும் அவளுக்கு கேட்கவில்லை அல்லவா? சித்தார்த் சொன்ன போல அவள் சிறந்த போலீசாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிறந்த நண்பி அல்லவா? சித்தார்த்தோ அப்போது தான் அடுத்த நாள் செய்ய இருக்கும் ப்ரேசெண்டேஷனை பார்த்து முடித்து விட்டு சாய்ந்து அமர்ந்தவன் முன்னே இருந்த டி.வியைப் பார்த்துக் கொண்டே காபியை வாயில் வைக்க, அதில் தெரிந்தது என்னவோ காயத்ரி கண்ணீருடன் கை கூப்பி பேசும் காட்சி தான். சத்தங்களோ மியூட்டில் இருக்க, அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன் "G 24 சி.சி.டி.வி யோட மைக்கை அன் மியூட் பண்ணுங்க" என்று சொல்லிக் கொண்டே எழ அவளோ "ராஜ் மெட்டல் ரூம்ல மாட்டிகிட்டான் சார், ப்ளீஸ் ஹெல்ப்" என்று கண்ணீருடன் சொல்ல, "ஷீட்" என்றபடி அங்கிருந்து அதி உயர் வேகத்தில் தனது அறையை நோக்கி ஓட ஆரம்பித்து இருந்தான் அவன்.
லிப்ட்டைக் கூட அவன் பயன்படுத்தாமல் படியால் பாய்ந்து தான் இறங்கிச் சென்றான். அவன் வேகம் கண்டு மிரண்ட அவனது காவலாளிகளும் அவனைப் பின் தொடர, ஓடிச் சென்றவனின் வைட் கோர்ட் அங்கிருந்த சுவரில் அழகுக்காக அமைக்கப்பட்டு இருந்த கூரிய அலங்காரத்தில் மாட்டிக் கொள்ள, அவனோ பொறுமை இன்றி ஓடியதில் அந்த கூர் அவனது வலது தோள் பட்டையில் கிழித்து இருந்தது. அவனோ கோர்ட்டைக் கழட்டி எறிந்து விட்டு வேகமாக சென்று தனது அறைக்குள் நுழைந்தவன் அந்த இரும்புக் கதவை ஆபத்தில் திறப்பதற்காக ரகசியமாக தள்ளி அமைக்கப்பட்டு இருந்த கை விரல் அடையாளத்தில் தனது பெருவிரலை வைக்க, இரும்புக் கதவு தானாக திறந்து கொண்டது. காயத்ரிக்கோ அவன் வந்தது நிம்மதியாக இருந்தாலும் நண்பனுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாது என்று மனம் வேண்டிக் கொண்டே இருக்க, அவன் வேகத்தை விழி விரித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். உள்ளே அவன் நுழைந்ததுமே மீண்டும் அந்த கதவு தானாக மூடப்பட "ஐயோ சார்" என்று பதறியவள் கதவை தட்டினாள். சித்தார்த்தோ அங்கே சுருண்டு விழுந்து இருந்தவனை கையில் தூக்கிக் கொண்டு கதவடியில் வர, அவன் கருவிழிகளின் அடையாளத்தைக் கண்டு கொண்ட கதவும் தானாக திறந்து கொண்டது. ஆம் அங்கு யார் வேண்டும் என்றாலும் உள்ளே நுழையலாம் ஆனால் உயிருடன் வெளியேற சித்தார்த்தினால் மட்டுமே முடியும்.
அவன் கையில் ராஜ்ஜைத் தூக்கிக் கொண்டே வெளியே வந்ததுமே அவன் அருகே சென்றவள் "ராஜ் ராஜ்" என்று அவன் கன்னத்தைத் தட்ட அவனோ எழும்புவதற்கான அறிகுறியே இல்லாமல் தான் இருந்தான். அவனை கீழே வைத்த சித்தார்த் கொஞ்சமும் தாமதிக்காது அவன் மார்பில் இரு கைகளையும் வைத்து அழுத்த, பக்கத்தில் இருந்த காயத்ரியோ "ஐயோ செத்துட்டானா?" என்று பதற , சித்தார்த்துக்கோ அவள் அழுகை இடைஞ்சலாக இருக்க "ஷட் அப் , ஹீ இஸ் நாட் டெட்" என்று சீறியவன் அவனுக்கு முதலுதவி மூலம் அவனது நுரையீரலுக்குள் தன்னுடைய மூச்சை நிரப்பியவன் மீண்டும் மீண்டும் இதயத்தை அழுத்தினான். காயத்ரியோ கண்ணீர் வழிய அவன் சீறலுக்கு அடங்கி வாயை மூடிக் கொண்டே அமர்ந்து இருக்க, சித்தார்த்தின் மனமோ "நான் உன்ன சாக விட மாட்டேன்" என்று தான் சொல்லிக் கொண்டு இருந்தது. அவன் செய்த முயற்சி வீண் ஆகாமலே அவன் மார்பில் கை வைத்து அழுத்திய அழுத்தத்தில் ராஜ் ஒரு அதிர்வுடன் கண் விழித்துக் கொள்ள, அப்போது தான் சித்தார்த்துக்கே மூச்சு வந்தது. ராஜ்ஜோ அதிர்ச்சியுடன் எழுந்து அமர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு முன்னே மண்டியிட்டு அமர்ந்து தன்னையே அனல் தெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்த சித்தார்த்திடம் "சார்" என்று ஆரம்பித்து அடுத்த கணமே அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான் சித்தார்த். ராஜ்ஜோ கன்னத்தைப் பொத்தியபடி அவனை நிமிர்ந்து பார்க்க "இப்போ செத்து இருப்ப" என்று சீறியவன் மேலும் "உனக்கு கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா? இவ்ளோ ஈஸியா உள்ளே போக முடியும்னா ஏதாவது ட்ராப் இருக்கும்னு நீ யோசிக்க மாட்டியா? இவ்ளோ ஈஸி அக்சஸ் வச்சு இருக்க நான் என்ன முட்டாளா? அங்க யார் வேணும்னாலும் உள்ள போகலாம். ஆனா உயிரோட இந்த சித்தார்த்தால மட்டும் தான் வெளிய வர முடியும்.. இடியட்" என்று சீற பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து இருந்தான் ராஜ். சித்தார்த்தோ பெருமூச்சுடன் வெளியே நின்ற காவலாளிகளிடம் "இவனை பெர்ஸ்ட் எய்ட் ரூமுக்குள்ள கொண்டு போய் ரெஸ்ட் எடுக்க வைங்க" என்று சொல்லி விட்டு அங்கே அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்த ராஜ்ஜையும் காயத்ரியையும் பார்த்தவன் "எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணுனா மட்டும் பிடிக்காது... உங்க ரெண்டு பேரையும் நம்பி உள்ளே விட்டா உங்க போலீஸ் புத்தியை காட்டிடீங்க தானே" என்று சொல்ல, ராஜ்ஜோ "சாரி சார்" என்று இழுக்க, "என் கண் முன்னாடி நிற்காம கிளம்பு" என்று சொன்னவன் தனது முழு உயரத்துக்கு எழுந்து நின்று இடையில் கை வைத்து "ஊப் " என்று ஊதினான்.
அவன் சென்ற பிறகும் கூட காயத்ரி அப்படியே நின்று இருக்க, அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "உன் கிட்ட தனியா சொல்லணுமா?" என்று கேட்க அவளோ அவனை ஆழப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த பெர்ஸ்ட் எய்ட் பாக்ஸை திறக்க, அவனோ "உன்னை வெளிய போக சொன்னேன். இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கேட்க கையில் மருந்துடன் வந்தவள் அவனிடம் "ஷேர்ட்டை கழட்டுங்க" என்றாள். அவனோ "வாட்?" என்று புருவம் சுருக்கி கேட்க " கைல காயம்" என்று அவன் தோள் பட்டையில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்த காயத்தைக் காட்ட அவனோ "பச், நான் அத பார்த்துகிறேன் நீ கிளம்பு" என்று சொன்னான். அவளுக்கு எங்கே இருந்து தைரியம் வந்ததோ அவனை நெருங்கி அவன் ஷேர்ட் பட்டனில் கையை வைக்க அவனோ அதிர்ச்சியுடன் "வாட் ஆர் யூ டூயிங்?" என்று கேட்டபடி அவள் கையை தட்டி விட்டவன் "ப்ளீஸ், நான் ரொம்ப கோபமா இருக்கேன். என்னை சீண்டாம கிளம்பு" என்றான் அழுத்தமாக.
அவளோ "நான் மருந்து போட்டுட்டு போறேன்.. தனியா உங்களுக்கு போட முடியாது" என்று சொல்ல, அவளை முறைத்தவன் "என்ன பயம் விட்டு போச்சா?" என்று கேட்க அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தவள் "தன்க் யூ சோ மச், எங்க ராஜ் செத்துடுவானோன்னு பயந்துட்டேன்.. இதே இடத்துல வேற யாரும் இருந்தா நாங்க பண்ணுன நம்பிக்கை துரோகத்துக்கு என்ன பண்ணி இருப்பாங்கன்னு தெரியல, பட் நீங்க" என்று சொல்லும் போதே கண்களில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிய அவளை அவன் விசித்திரமாக பார்த்தவன் "ஓகே பைன் ..நீ இப்போ கிளம்பு" என்றான் மென் குரலில். அவள் கண்ணீரைப் பார்த்த பிறகு அவனாலும் எங்கனம் தனது கோபத்தைக் காட்ட முடியும்? அவளோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "மருந்து போட்டுட்டு கிளம்புறேன்" என்று சொல்ல, "ரொம்ப பிடிவாதம்டி உனக்கு" என்று சொன்னவன் தனது ஷேர்ட்டைக் கழட்ட, அவளோ அவனுக்கு பக்கவாட்டாக வந்தவள் அவனது தோள் பட்டையில் இருந்த காயத்துக்கு மருந்தைப் போட்டாள். இருவரும் தொட்டு விடும் தூரத்தில் இருக்க, காயத்தில் மருந்திட்டுக் கொண்டே "நாங்க இன்னைக்கு நடந்துக்கிட்டது தப்பு தான், ஐ ஆம் சாரி" என்று சொல்ல, அவனோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே "ம்ம்" என்று சொன்னான். அவன் காயத்துக்கு மருந்து போட்டு முடிய, அதில் இதழ் குவித்து ஊதியவள் "எரியுதா?" என்று அவன் விழிகளைப் பார்த்துக் கேட்டாள். அவனுக்கு இதெல்லாம் ஒரு வலியே இல்லை அல்லவா? அதனாலேயே அவள் கேட்டதும் அவன் இதழ்கள் விரிய இல்லை என்று தலையாட்டியவன் "இப்போவும் சொல்றேன்.. நீ வேர்ஸ்ட் போலீஸ்" என்று சொல்ல, அவன் விழிகளுடன் விழிகள் உரசிக் கொள்ள, "ஆனா சிறந்த மகள், நண்பி, மனைவி அண்ட் தாயா இருப்பேன்.. அப்படி தானே" என்று கேட்க அவனோ "ம்ம்" என்று சொன்னான். இருவர் மனதிலும் ஒரு புது வித உணர்வு அந்தக் கணத்தில் உருவாகி இருக்க, அவளோ இன்று அவன் சொன்னதற்காக கோபப்படாமல் "தன்க் யூ" என்று சொல்லிக் கண்களை சிமிட்டி விட்டு செல்ல, அவளது முதுகைப் பார்த்தவன் இரு பக்கமும் தலையாட்டி சிரித்துக் கொண்டான். இருவர் மனதிலும் காதல் இப்போது சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து இருக்க, அதை வெளிப்படுத்தும் நாளுக்காக இருவரும் காத்துக் கொண்டு இருந்தார்கள்..
அன்று ஒரு இதமான உணர்வுடன் இருவரின் நாட்களும் நகர, அடுத்த நாள் கருத்தரங்குக்கு கிளம்பி இருந்தான் சித்தார்த். அவன் முகத்தைப் பார்க்காமல் ஒரு வித வெறுமை காயத்ரிக்கு உண்டாக, காதல் என்றால் எப்படி இருக்கும்? என்று உணர்ந்தவள் அவன் மீதான காதலையும் உணர்ந்து இருந்தாள். ஆனால் அவர்களுக்கு இடையில் அஜய் என்கின்ற ஒருவன் இருக்கின்றான் என்று சித்தார்த்திடம் அக்கணம் சொல்லாமல் விட்டதனால் உண்டாக இருக்கும் விளைவை அவள் அப்போது அறிந்து இருக்கவில்லை. அறிந்திருந்தால் அப்போதே சொல்லி இருப்பாளோ என்னவோ?