soniyaravi
Member
Super❤
Super and intresting sisபிரம்மா 7
அறைக்குள் நுழைந்தவனோ கண்ணாடியின் முன்னே நின்று தன்னை ஆழ்ந்து பார்த்தான். வாழ்க்கையில் ஆராய்ச்சி என்றே நாட்களைக் கடத்தியவனுக்கோ பெண்கள் மீது ஈடுபாடு என்பதே இல்லை. தனது வாழ்க்கையையே விஞ்ஞானத்துக்காகவும் சமூகத்துக்காகவும் அர்ப்பணித்தவனுக்கு ஆண்களும் பெண்களும் என்னவோ சமம் தான். தன்னிடம் வேலை செய்யும் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் அவன் பார்வை என்னவோ ஒன்று தான்.
அவன் திறமையை பார்த்தும் கம்பீரமான தோற்றதைப் பார்த்தும் அவனிடம் வேலை செய்யும் பெண்களுக்கும் கல்வி கற்கும் மாணவிகளுக்கும் கூட ஒரு வித ஈர்ப்பு அவன் மீது இருந்தாலும் அவனின் அழுத்தமும் அனலும் அவனிடம் அவர்களை நெருங்க விடவில்லை. யாரும் சந்தேகம் என்று கேட்டால் கூட வெட்டு ஒன்று துண்டு இரண்டாக விளக்கத்தைக் கொடுப்பவன் ஆணோ பெண்ணோ அவனது எல்லையை மீறி அவனிடம் நெருங்க யாரையுமே விடுவதும் இல்லை. அவன் இறுக்கமும் அவர்களுக்கு அந்த தைரியத்தைக் கொடுப்பது இல்லை.
அப்படிப்பட்டவனுக்கு காயத்ரியுடனான அனுபவம் முற்றிலும் புதிது. அவள் தப்பிச் செல்ல எத்தனித்த கோபத்தில் தான் அவளை பீட்டரை வைத்து சீண்டினான். ஆனால் அதற்கான விளைவு அவன் முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று அல்லவா? கண்ணாடியில் தன்னைப் பார்த்தவனுக்கு இப்போதும் கூட அவள் தனது முகத்தில் ஷேர்ட்டை எறிந்ததும் கண்ணீருடன் அழுததுமே நினைவு வர, கண்களை மூடித் திறந்து தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டவன் தனது அலுமாரியைத் திறந்து ஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு மீண்டும் ஆய்வுகூடம் நோக்கி புறப்பட்டான்.
முதன் முறை பெண்மையின் மென்மையையும் பெண்ணின் உணர்வுகளையும் கண் கூடாக காண்கிறான். தான் செய்ததை நினைக்கும் போதே மனதில் பாரம் தானாக ஏறிக் கொள்ள, ஒரு வித இறுக்கத்துடனேயே தனது அறைக்குள் இருந்து வெளியே வந்தான். அவளோ கதவில் சாய்ந்து நின்று அப்போது வரை அழுது கொண்டு இருக்க, அக்கணத்தில் அவள் அறையை தாண்டி சென்ற சித்தார்த்தோ சங்கடத்துடன் கதவைத் தட்ட போனவன் ஒரு கணம் யோசித்து, அவளை மீண்டும் சங்கடப்படுத்த விரும்பாதவனாக கையை மென்மையாக வைத்து கதவை வருடிக் கொண்டான். அவன் வருடலின் மறுபக்கமோ சாய்ந்து நின்றவளது விம்மல் அவன் காதில் அக்கணம் விழ, கண்களை மூடி ஆழ்ந்த பெருமூச்சு எடுத்தவன் விறு விறுவென அங்கிருந்து அகன்றான்.
நேரே ஆய்வுகூடத்துக்கு சென்றவனை அங்கிருந்தவர்கள் சற்றே வித்தியாசமாகத் தான் நோக்கினார்கள். அவர்களது விழிகள் கூட அவன் அணிந்து வந்த ஷேர்ட்டில் பட்டு மீண்டது. அவர்களது பார்வையின் மாற்றத்தை அவன் உணர்ந்தாலும், அதை பொருட்படுத்தாமல் "ஓகே ஷால் வீ ஸ்டார்ட்?" என்று கேட்டபடி அவர்கள் செய்ய வேண்டிய ஆராய்ச்சி பற்றி விரிவுரையை விளக்க ஆரம்பித்தான். அவனோ முன்னால் இருந்த கண்ணாடிப் பெட்டியில் இருந்த எலியை கையில் ஏந்தி அதில் உண்டான மாற்றங்களைப் பற்றி பேச ஆரம்பித்த கணத்தில், அவனை சுற்றி இருந்த விஞ்ஞானிகளில் ஒருவன் "உள்ள அப்படி என்ன தாண்டா நடந்து இருக்கும்?" என்று ஒரு ஆர்வ மிகுதியில் சற்றே சத்தமாக பேசி விட,அதுவோ அவர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருந்த சித்தார்த்தின் காதில் தெளிவாக விழுந்தது.
ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவன் சட்டென அவனை நோக்கி திரும்பிப் பார்க்க, பொசுக்கும் அவனது அனல் விழிகளை பார்த்த அந்த விஞ்ஞானியின் இதழ்களோ கப்பென்று மூடிக் கொள்ள, அந்த ஏ.சி யிலும் அவனுக்கு பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது. சித்தார்த்தோ அதிகமாக ஒன்றும் பேசவில்லை. அவனை அழுத்தமாகப் பார்த்து சொடக்கிட்டவன் "அவுட்" என்று சொல்லி விட்டு மீண்டும் விளக்கவுரையை ஆரம்பிக்க அவனோ "சாரி சார்" என்று தயக்கமாகக் கூறினான்.
அவனுக்கு ஏற்கனவே மனதில் இருந்த அழுத்தத்துக்கு அவன் இவ்வளவு பொறுமையாக நடந்து கொண்டதே பெரிய விடயமாக இருக்க, அதை உணராத அந்த விஞ்ஞானி மன்னிப்பு வேறு கேட்டு அவனை வெறுப்பேற்ற அவனுக்கு சற்று முன்னர் இருந்த பொறுமை எங்கோ பறந்து போனது. ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தவன் "ஐ செட் யூ டு கோ அவுட்" என்று அந்த அறையே அதிரும் வண்ணம் சீற, அவனது கையில் இருந்த எலி கூட அவன் கர்ஜனையில் பாய்ந்து ஓடியது. அவன் அவ்வளவு சத்தம் போட்டு பேசுவது இன்று தான் முதல் முறையாக, அந்த விஞ்ஞானியோ "சாரி சார்" என்று சொல்லி விட்டு அவனை மேலும் அழுத்தம் ஆக்க விரும்பாமல் வெளியேறி இருந்தான்.
அவனோ "ஷீட்" என்று நெற்றியை நீவி விட்டு "ஐ ஆம் சாரி" என்று அடுத்தவர்களிடம் சொன்னவன் "கெட் ஹிம்" என்று அந்த எலியைக் காட்டி சொல்லிக் கொண்டே கையை நீட்ட, அங்கிருந்த ஒருவன் அந்த எலியைப் பிடித்துக் கொடுத்தான். அவனோ ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டே ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்து இருந்தான்.
அவனோ ஆக்கத்தில் ஈடுபட்டு இருக்க, அவனை அழிக்க ஒருவன் மும்முரமாக ஈடுபட்டு இருந்தான். அவன் வேறு யாரும் அல்ல நரேன் தான். தனது ஆராய்ச்சி அறையில் இருந்த இருக்கையில் சாய்ந்து இருந்தவறே யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு மனம் முழுதும் சித்தார்த்தின் எண்ணம் தான் நிறைந்து இருந்தது. அவனால் சித்தார்த்தின் வெற்றியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இன்றும் சித்தார்த்துடன் உண்டான சண்டையின் போது அவன் அடித்த அடியில் இவன் இதழ் வெடித்து அதில் தையல் போட்ட இடத்தில் உண்டான தடம் அப்படியே இருக்க, அதனை கை கொண்டு வருடியவனோ "உன்னை சும்மா விடமாட்டேண்டா" என்று கர்ஜித்துக் கொண்டபடி அடுத்து அழைத்தது என்னவோ பிரசாத்துக்கு தான். ஆம் இவன் சொல்லித் தான் பிரசாத்தும் தன்னிடம் வேலை செய்பவர்களை சித்தார்த்திடம் அனுப்பியதே. பிரசாத்தோ போன் நம்பரைப் பார்த்ததுமே "ஐயோ எடுத்து நமக்கு திட்ட போறானே, இப்போ என்ன பண்ணுறது?" என்று யோசித்துக் கொண்டே போனை எடுக்க மறுமுனையில் இருந்த நரேன் "என்ன பண்ணி வச்சு இருக்க மேன் ? அவனை பத்தி அவ்ளோ தகவல் கொடுத்ததும் உன்னால ஒண்ணும் பண்ண முடியலையா?" என்று சீறினான். நரேனிடம் பணத்துக்கு விலை போன காரணத்தினால் என்னவோ அவன் திட்டுவதை எல்லாம் கேட்க வேண்டிய கட்டாயம் பிரசாத்துக்கு. அடுத்த கணமே "இல்ல சார், நானும் அதுக்கு தான் டிபார்ட்மெண்ட்ல இருந்து நாலு பேரை அனுப்பி இருந்தேன். ஆனா யாருமே திரும்பி வரல. சித்தார்த் போட்டு இருப்பானோன்னு பயமா இருக்கு. அவர்கள் பத்தி டிபார்ட்மெண்ட்ல கூட என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். லாஸ்ட் ஆஹ் போன பொண்ணோட அப்பா வேற பெரிய பதவில இருக்கிற போலீஸ்காரர். கட்டிக்க போறவனும் வருஷா வருஷம் மெடல் வாங்குறவன். ரெண்டு பேரையும் நினச்சா எனக்கு பயமாவே இருக்கு" என்று சொல்ல, சற்றே யோசனையாக கண்களை மூடித் திறந்த நரேன் "அவன் அப்படி எல்லாம் போடக் கூடிய ஆள் இல்லையே. அவன் கோபக்காரன் தான். ஆனா கொலை பண்ணுற அளவுக்கு கெட்டவன் இல்ல.. கண்டிப்பா ஏதும் வேலைக்கு வச்சு இருப்பான்" என்று அவனை பற்றி நன்கு அறிந்த நரேனோ சரியாகக் கணித்து இருந்தான்.
பிரசாத்தோ "இப்போ என்ன பண்ணுறது சார்?" என்று கேட்க அவனோ "உன்னை நம்பி ஒண்ணும் பயன் இல்ல, நான் பண்ண வேண்டியத பண்ணுறேன்.." என்று சொல்லி விட்டு போனை வைத்தவன் "அவன அரெஸ்ட் பண்ணுறது எல்லாம் வேலைக்கு ஆகாது.. இந்த போலீஸ் எல்லாம் பார்த்து அவன் கொஞ்சமும் பயப்பட மாட்டான். அவன மொத்தமா போடணும்.. அதுவும் என் கண் முன்னாடி" என்று வன்மமாக சொல்லிக் கொண்டான்.
அதே சமயம், வரவிருக்கும் விஞ்ஞானிகள் பற்றிய தரவை அஜய்யின் மேசையில் வைத்து இருந்தாள் ஷாந்தி. அதனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவனோ நேரத்தைப் பார்த்து விட்டு அவளிடம் திரும்பியவன் " டைம் ஆச்சே இன்னும் நீ கிளம்பலையா?" என்று கேட்க அவளோ "இல்ல சார், இந்த லிஸ்ட் கலெக்ட் பண்ணி வர லேட் ஆயிடுச்சு. இனி கிளம்ப தான்" என்று சொன்னாள். அவனோ "சரி வா, நானும் வீட்டுக்கு தான் கிளம்புறேன் உன்னை கொண்டு விட்டுட்டு போறேன்" என்று சொல்லிக் கொண்டே அவள் கொடுத்த விபரத்தையும் எடுத்துக் கொண்டே கிளம்பியவன் ஜீப்பில் ஏறினான். அன்று அவனது ட்ரைவரும் லீவில் இருக்க, அவன் தான் வண்டி ஓட்ட வேண்டிய நிலைமை உண்டானது.
அவனோ ஜீப் அருகே சென்று அதனை திறந்து கொண்டு உள்ளே ஏறியவன் "முன்னால ஏறு" என்று சொல்ல, அவளும் அவன் அருகே ஏறி அமர்ந்து கொண்டாள். அவளுக்கும் மனதெல்லாம் வெறுமை மட்டுமே குடி கொண்டு இருக்க, அஜய்க்கோ தன்னவளை பிரிந்த ஒரு சோர்வு முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. ஆனாலும் அவள் நினைவுகளை ஒதுக்கியவனாக வேறு விடயத்தில் கவனம் செலுத்த யோசித்துக் கொண்டே "ஷாந்தி, உனக்கு ஆட்சேபனை இல்லன்னா உன் கிட்ட பர்ஸனலா ஒரு கேள்வி கேட்கலாமா?" என்று கேட்டான். அவளுக்கோ அவன் இப்படி கேட்டது அதிர்ச்சி தான். அலுவலக விடயத்தை தவிர்த்து அவளிடம் அதிகம் பேசுபவன் அல்ல அவன். இன்று அவனோ தனது அழுத்தத்தை குறைக்கும் பொருட்டு அவளிடம் இறுக்கம் தளர்ந்து நட்பாக பேச நினைத்தவன் இப்படி அவளிடம் கேட்டிருக்க, அவளோ சற்றே அதிர்ச்சியானாலும் அதனை வெளிக் காட்டாமல் "ம்ம் கேளுங்க சார்" என்று சொன்னாள்.
அவனோ "நீ இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?" என்று கேட்க அவளுக்கோ தொண்டை அடைத்துக் கொண்டே வந்தது. அவள் மனதில் தான் எல்லை இல்லாத சோகங்கள் நிறைந்து இருக்கின்றது அல்லவா? அதனை அவனிடம் சொன்னாலும் குற்றம், சொல்லவில்லை என்றாலும் வலி, என்று நினைத்தவள் அமைதியாக இருக்க, அவனோ "ஏதும் காதல் தோல்வியா?" என்று கேட்டான். அவளோ பெருமூச்சுடன் "அப்படியும் சொல்லலாம் சார்" என்று சொல்ல, அவனோ "இதெல்லாம் கடந்து வரணும் ஷாந்தி. வாழ போற ஒரு வாழ்க்கையை பிடிச்ச போல வாழ பழகிக்கோ.." என்று சொன்னான். அவளோ தொண்டை வரை வந்த வலியை விழுங்கிக் கொண்டே "ட்ரை பண்ணுறேன் சார்" என்று சொல்ல, அவனோ "அப்போ நானே உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்கவா?" என்று கேட்க சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு மனதில் ஊசியால் குத்துவது போன்ற வலி. இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக் கூடாது என்று நினைத்தவளுக்கு அவன் மீது கொண்ட பைத்தியகாரத் தனமான காதலை நினைத்து தன் மீதே கோபம் வர, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னைக் கட்டுப்படுத்தியவள் "ஒன்னும் வேணாம் சார், என்னோட வீடு வந்திடுச்சு, நான் இறங்கிக்கிறேன்" என்று சொல்ல அவன் ஜீப்பை சட்டென நிறுத்தினான். உடனே ஜீப்பில் இருந்து இறங்கியவள் அவனைப் பார்க்காமலே விறு விறுவென தனது வீட்டை நோக்கி நடக்க, அவளது முதுகை யோசனையுடன் பார்த்து விட்டு தோள்களை உலுக்கியவனின் ஜீப் அவனது வீட்டை நோக்கி வேகமாக பயணித்தது.
இதே சமயம், சித்தார்த் மற்றும் காயத்திரியின் இரவு தூக்கம் இன்றியே கடந்து இருக்க, அடுத்த நாள் விரைவாக எழுந்த சித்தார்த் தனது வேலையைப் பார்க்க ஆய்வுகூடத்துக்கு கிளம்பி விட்டான். அவள் அறையைக் கடக்கும் போது அவனையும் அறியாமல் அவன் பாதம் ஒரு கணம் நின்று பயணித்தது. அவளோ அப்போது தான் எழுந்து நிலத்தில் அமர்ந்தவளுக்கு முகம் எல்லாம் அழுதழுதே சிவந்து போய் இருந்தது. அழுதபடியே நிலத்தில் தூங்கி இருந்தவளோ தான் அணிந்து இருந்த ஷேர்ட்டைப் பார்த்த கணம் மீண்டும் அவன் முன்னே தான் நின்ற நிலை தான் நினைவுக்கு வர உடலால் கூசிப் போனாள். என்ன தான் அவன் அவளது விழிகளை மீறி எதனையும் பார்க்கவில்லை என்று சாதித்தாலும் அவளால் அவ்வளவு சீக்கிரம் அதனைக் கடந்து விட முடியுமா என்ன? திருமணம் செய்ய இருக்கும் அஜய்யின் கரத்தைக் கூட அவள் பற்றியது இல்லை.. அப்படிப்பட்டவளுக்கு தான் இப்படி அவன் முன்னே நிற்க வேண்டி வந்து விட்டதே என்கின்ற வலியும் , அதற்கு காரணமாக அவன் மீது கொலை வெறியும் தோன்றிய போதிலும் அதனை எப்படி காட்டுவது என்று தான் அவளுக்கு தெரியவே இல்லை. மீண்டும் கண்களில் கண்ணீர் பொங்க, அவள் மனமோ "இன்னும் எத்தனை நாளைக்கு அதனையே நினச்சு அழ போற?" என்று அவளிடம் கேட்டது.
அடுத்த கணமே கண்ணீரைத் துடைத்துக் கொண்டே எழுந்தவள் குளித்து விட்டு வந்த போதிலும் அவளால் நிலை கொள்ளவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவனுடன் அந்த அறையில் உண்டான நினைவுகள் தான் வர, தலையைப் பிடித்துக் கொண்டவள் அதனை மறக்க முயன்று தோற்றுப் போனாள். அக்கணம் அவளது அறைக் கதவு தட்டப்பட , கதவை திறந்த போது அங்கே நின்ற காவலாளியோ "சீக்கிரம் வேலைக்கு வர சொல்லி சார் சொன்னார்" என்று சொல்ல, "ம்ம் வரேன்" என்று சொன்னவள் மனமோ "கொஞ்சம் கூட இரக்கமே இல்லாதவன்" என்று தான் நினைத்துக் கொண்டது. அடுத்த கணமே அவனுடன் ஆய்வுகூடத்துக்கு சென்றவளுக்கு அவனை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைத்ததுமே உடல் கூசிப் போனது.
ஆனாலும் அமைதியாக சென்றவள், உள்ளே நுழைந்ததுமே தலையைக் குனிந்தபடி நிற்க, போன் பேசிக் கொண்டு இருந்தவன் "ஓகே ஐ வில் கால் யூ பெக்" என்று சொல்லி போனை வைத்து விட்டு முன்னால் நின்றவளை ஏறிட்டுப் பார்த்தான். அவள் குனிந்து இருந்த தலையைப் பார்த்தவனுக்கு மனதின் ஓரத்தில் ஒரு குற்ற உணர்வு தோன்றினாலும் அவளை இயல்புக்கு கொண்டு வரத் தான் அவன் நினைத்து இருந்தான். முதலில் அவளுக்கு இன்று ஓய்வு கொடுக்கலாம் என்று நினைத்து இருந்தவன் மீண்டும் ஆழமாக யோசித்த போது அது முட்டாள் தனமான முடிவாக தான் பட்டது. அழுத்தம் உடையவர்களுக்கு தனிமை எப்போதும் ஆபத்து தான் என்று உணர்ந்தவன் அவள் அந்த நினைவை மறக்கும் அளவுக்கு தொடர்ச்சியாக வேலை கொடுக்க வேண்டும் என்று நினைத்துத் தான் அவளை அழைத்து இருந்தான். அவள் உள்ளே வந்ததுமே அங்கிருந்தவர்கள் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் சித்தார்த்துக்கு பயந்து யாருமே வாய் திறக்கவில்லை.
சித்தார்த்தோ அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே "என்ன சாப்பிடுற?" என்று கேட்க அவளோ குனிந்து கொண்டே "எதுன்னாலும் ஓகே" என்று சொன்னவள் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவனோ "கேள்வி கேட்டா கண்ணை பார்த்து பதில் சொல்லு, எப்போ பார்த்தாலும் கோழை போல குனிஞ்சுட்டே பதில் சொல்லாதே. போலிஸ்ன்னு வெளிய சொன்னா காரி துப்புவாங்க.. உனக்கே இது அசிங்கமா இல்லையா?" என்று கேட்க அவளுக்கோ கோபம் உச்சத்தில் வந்தது. செய்வது எல்லாம் செய்து விட்டு அவளுக்கு வாய்க்கு வந்தபடி திட்ட வேறு செய்கிறான் அல்லவா? விலுக்கென நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தவள் "வழமையா என்ன கொடுப்பீங்களோ அதையே கொடுங்க" என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பதில் சொல்ல, அவன் இதழ்கள் தோன்றிய புன்னகையை அடக்கிக் கொண்டே இருக்க, அவனோ சற்று இறுகிய குரலில் "ஓகே போய் சாப்பிட்டு வா, நிறைய வேலை இருக்கு.. பார்க்கணும்" என்று சொன்னான்.
அவளோ அமைதியாக செல்ல முற்பட அவனோ "என்ன வேலைன்னு கேட்க மாட்டியா?" என்று கேட்டான். அவளோ அவனை ஏறிட்டுப் பார்த்து "என்ன வேலை கொடுத்தாலும் பண்ணுவேன்" என்று சொல்ல, அவனோ "பீட்டரை பார்த்துகிற வேலை தான்" என்று அவளையே பார்த்துக் கொண்டு அவன் சொல்ல, இப்போது அவன் தலையில் கல்லைப் போடலாமா என்று கூட யோசித்தாள் அவள். அவனை முறைத்துக் கொண்டே "தாராளமா பார்த்துப்பேன்.. ஆனா இன்னைக்கு தான் பீட்டருக்கு கடைசி நாளா இருக்கும் பரவாயில்லையா?" என்று கேட்க அவனுக்கு வாய்விட்டு சிரிக்க தோன்றினாலும் அதை அவளுக்காக கட்டுப்படுத்திக் கொண்டே "அந்தளவுக்கு தைரியம் இருக்கா?" என்று கேட்டான். அவளோ "அந்தளவுக்கு கொலை வெறி இருக்கு" என்று சொல்லி விட்டு சாப்பிட வெளியேறி விட, அவன் இதழ்களோ இப்போது மெலிதாக விரிந்து கொண்டன. அவள் மௌனமாக இருப்பதையும் அமைதியாக இருப்பதையும் கண்ணீரில் கரைவதையும் அவன் முற்றாக வெறுத்து இருக்க, அவளை எப்படி பேச வைப்பது என்று தெரியாமல் அவன் செய்த செயலே இது. அவள் அழுவதை விட அவனுடன் கடுப்பாகி பேசுவது அவனுக்கு பிடித்து இருந்தது. அவள் அழுகையை முற்றாக வெறுத்தவனுக்கு அவள் இதழ்களில் புன்னகையை வர வைக்க முடியாவிட்டாலும் கண்ணீரை வர வைக்க கூடாது என்று தான் நினைத்து இருந்தான். அதனாலேயே அவளை சீண்டி, பேச வைத்து, அவள் மனதில் இருந்த அழுத்தத்தை குறைக்க நினைத்து இருந்தான். அமைதியாக இருக்கும் போது தான் நமது மனதில் அழுத்தமும் வலியும் அதிகமாக இருக்கும். அதே சமயம், அந்த அமைதியை உடைத்து விட்டால் ஒரு நிம்மதி தானாக வந்து விடும் அல்லவா?
ஆம் அவன் எதிர்பார்த்த போலவே அவளும் இப்போது அவனுக்கு மனதுக்குள் "பீட்டரைப் பார்த்துக்கணுமாம் பீட்டரை..., அந்த பீட்டருக்கு முதலில விஷம் வச்சு போட்டு தள்ளுறேன்.. எல்லாத்துக்கும் அந்த பாழா போன பீட்டர் தான் காரணம்.. இந்த வளர்ந்து கெட்டவனோட பெயர் தான் சயின்டிஸ்ட்.. மனுஷனா அவன்?" என்று திட்டிக் கொண்டே சாப்பிட்டாள்.